மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

6.11.15

சீனியர்களுக்காக சுஜாதா அசத்தலாக எழுதியது


சீனியர்களுக்காக சுஜாதா அசத்தலாக எழுதியது

எழுத்தாளர் சுஜாதா - 'கற்றது பெற்றதும்'
(சீனியர் சிடிசன்களுக்கு அர்ப்பணம்)

தனது ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு 'கற்றது பெற்றதும்' பகுதியில் சுஜாதா அவர்கள் எழுதியது:

"மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது . இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன். மெரீனாவில் நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் பெரும் பாலும் என்னைவிட சின்ன வயசுக்காரர்களாகத் தெரிகிறார்கள். ஒரு தாத்தா மாட்டினார். நிச்சயம் என்னைவிட மூத்தவர். சிமென்ட் பெஞ்சில், என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்.

"யு ஆர் எ ரைட்டர்! எனக்கு எத்தனை வயசு சொல்லுங்க, பார்க்கலாம்!" என்று கண் சிமிட்டலுடன் கேட்டார். நான் யோசித்து, ''கட்டை விரலால் மூக்கைத் தொடுங்கோ" என்றேன்.

"எதுக்குப்பா?"

"தொடுங்களேன்!"

சற்று வியப்புடன் தொட்டார்.

"மத்த விரல்களை றெக்கை மாதிரி அசையுங்கோ!" என்றேன். ''இதிலிருந்து கண்டுபிடிச்சுட முடியுமா, என்ன? என்று, விரல்களைச் சொன்னபடி அசைத் தார்.

"ரெண்டு கையையும் பரப்பி, ஏரோப்ளேன் மாதிரி வெச்சுண்டு ஒரே ஒரு தடவை லேசா குதிங்கோ. பாத்து... பாத்து..."

"இது என்னப்பா ட்ரிக்கு?" என்று அப்படியே செய்தார்.

"உங்களுக்கு இந்த மே பன்னண்டு வந்தா எண்பத்தோரு வயசு!" என்றேன். அசந்து போய், "கை குடு. எப்படிப்பா இத்தனை கரெக்டா சொன்னே?"

"ஒரு ட்ரிக்கும் இல்லை, சார்! நேத்திக்குதான் இதே பெஞ்சில், இதே சமயம் வந்து உட்கார்ந்து, உங்க வயசு, பர்த்டே எல்லாம் சொன்னீங்க. மறந்துட்டீங்க!" என்றேன்.

தாத்தா மாதிரி அத்தனை மோசம் இல்லை என்றாலும், எனக்கும் சமீபத்திய ஞாபகங்கள் சற்றே பிசகுகின்றன. ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குச் சென்றால், எதற்காக வந்தோம் என்பது மறந்தே போகிறது. பெயர்கள் ஞாபகம் இருப்பதில்லை. ஆந்தைக்கு இங்கிலீஷில் என்ன என்று சட்டென நினைவு வருவதில்லை. 'படையப்பா'வில் ரஜினிக்கு முன்னால் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாரே... அந்த நடிகையின் பெயர் என்ன என்று ஒரு நாள் அதிகாலை கண் விழித்ததும், ஒரு மணி நேரம் யோசித்தேன், கிட்டவில்லை.

மனைவி எழக் காத்திருந்து அவளிடம் கேட்டேன். "ரம்யா கிருஷ்ணன்" என்றாள். இம்மாதிரி, நியூரான்கள் களைத்துப் போவது தெரிகிறது. ஆனால், நீண்ட நாள் ஞாபகங்கள் பத்திரமாக இருக்கின்றன. அது மூளையில் வேறு பேட்டை போலும்! கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன், சின்ன வயசில் கோயமுத்தூரில் அம்மா\அப்பாவுடன் ஜட்கா வண்டியில் "ஜகதலப்ரதாபன்" சினிமா போனது, ஒண்ணாம் கிளாஸ் டீச்சருக்கு ஆனந்த விகடனும், அமிர்தாஞ்சனும் கொண்டு போய்க் கொடுத்தது, பள்ளி மணியை அகாலமாக அடித்தது, எனக்குத் தம்பி பிறந்தது... இதெல்லாம் தெளிவாக ஞாபகம் உள்ளது. ஸ்ரீரங்கத்துக் கதைகள் அனைத்தும் என் நீண்ட நாள் ஞாபகங்களின் வடிவம்தான்!

டெல்லியில், பெட்ரோல் எழுபத்தைந்து பைசாவும், பால் ஐம்பத்தைந்து பைசாவும் கொடுத்து வாங்கி தாராளமாக வாழ்ந்தது, என் முதல் கதை, முதல் நாவல் பிரசுரமானது, எஸ்.ஏ.பி'யின் கடிதக் குறிப்பு எல்லாம் ஞாபகம் உள்ளது. ரம்யா கிருஷ்ணன் போன்ற மேட்டர்தான் சட்டென்று வழுக்கிவிடுகிறது.

மெரீனாவில், ஷார்ட்ஸ் ஸ்னீக்கரில் ஓடும் இளைஞர்களைப் பார்த்து முன்பு பொறாமைப்படுவேன். இப்போது புன்னகைக்கிறேன். பொதுவாகவே, பொறாமைப்படுவதற்கான விஷயங்களும், அதட்டிச் சொல்வதற்கான விஷயங்களும் குறைந்து வருகின்றன.

ஹிந்துவின் "ஆபிச்சுவரி" பார்க்கையில், இறந்தவர் என்னைவிட சின்னவரா, பெரியவரா என்று முதலில் பார்ப்பேன். சின்னவராக இருந்தால், 'பரவால்லை... நாம தப்பிச்சோம்!' என்றும், பெரியவ ராக இருந்தால் கழித்துப் பார்த்து, 'பரவால்லை... இன்னும் கொஞ்ச நாள் இருக்கு என்றும் எண்ணுவேன். எதிர்காலம் என்பதை இப்போதெல்லாம் வருஷக் கணக்கில் நினைத்துப் பார்ப்பது இல்லை. மாதக் கணக்கில்... ஏன், உடம்பு சரியில்லாமல் இருக்கும்போது வாரக் கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது. Today I am alright, thank God!

ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த போது, ஏரோப்ளேன் ஓட்டவும், கித்தார் வாசித்து உலகை வெல்லவும், நிலவை விலை பேசவும் ஆசைப்பட்டேன். நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படியாகத் திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப் பட்டு, எழுபது வயதில் காலை எழுந்தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன். வாழ்க்கையே இவ்வகையில் progressive compromises (படிப்படியான சமரசங்களால் ஆனது).

இன்றைய தினத்தில், என் டாப்டென் கவலைகள் அல்லது தேவைகள் என்றால்... முதலிடத்தில் உடல் நலம், மனநலம், மற்றவருக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பது, தெரிந்தோ தெரியாமலோ யார் மனதையும் புண் படுத்தாமல் இருப்பது, இன்சொல், அனுதாபம், நல்ல காபி, நகைச்சுவை உணர்வு, நான்கு பக்கமாவது படிப்பது, எழுதுவது போன்றவை பட்டியலில் உள்ளன".
சுஜாதா - நன்றி: ஆனந்த விகடன்
===============================================
 படித்தேன். பிடித்திருந்தது. உங்களுக்காகப் பதிவிட்டுள்ளேன். நீங்கள்
சீனியர் கணக்கில் இல்லையா? என்று கேட்காதீர்கள். மனதால் நான் என்றும் ஜூனியர்தான் (இளைமையானவன்தான்) சாமிகளா? 2.11.2015 அன்று வெளியான பிரியாமணி பதிவைப் பாருங்கள் தெரியும்!

அன்புடன்,
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

14 comments:

  1. அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
    தங்களின் 2001 வது பதிவு இது! இன்று தங்களின் பிறந்த நாளோ?1. ஒரு வேளை அப்படியாயின் எங்களின் உளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்!!,அப்படியில்லை எனினும், என்றும் இளமையும் துடிப்பும் நிறைந்த தங்களின் மனம்,எழுத்து,மனநலம், உற்சாகம்(தனக்கு மட்டுமின்றி, அனைவருக்கும் அளிக்கும்),வல்லமை,சீனியாரான பின்னரும், வாரியார் சுவாமிகளின் வாழ்த்தை இன்றளவும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் தண்மை - தங்களின் இன்றைய பதிவில் மிளிர்கின்றதே!!!!........
    வாழ்க தங்கள் நலம்! வளர்க தங்களின் பண்பட்ட இறைத்தொண்டு!!!!!.
    அன்புடன்,
    -பொன்னுசாமி.
    குறிப்பு: கடந்த 27,ஏப்ரல் 2015ல் நானும் சீனியர் சிடிசனாகிவிட்டேன்!!!!!!.-:))))))...

    ReplyDelete
  2. ஆசிரியருக்கு வணக்கம் .
    அய்யா ,
    சுஜாதாவின் கணக்கில் நான் சீனியர் ஆக
    இருந்தாலும் வகுப்பறையில் நான் ஜூனியர்தான். ஆகவே வாத்தியாரின் அனைத்து பதிவுகளையும் நான் விரும்பி
    படிக்க முடிகின்றது .
    ௮ன்புடன் அரசு .

    ReplyDelete
  3. வாத்தியார் அவர்களுக்கு வணக்கம் .
    சுஜாதாவின் எழுத்து வழக்கம் போல் அருமை .முதலில் நகைச்சுவை .நம் கவனத்தை இழுத்து பின் சொல்ல வந்த விஷயத்தை பொட்டில் அடித்தாற்போல் சொல்லி விட்டார் . Vintage சுஜாதா .
    தங்கள் ரசனை அதுவும் வழக்கம் போல் அருமை . நல்ல விஷயத்தை ரசிப்பதும் ரசித்ததை நம்மோடு பகிர்வதும் வாத்தியாரின் சிறப்புக்களில் ஒன்று .
    "காலையில் எழுந்து சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன் " உண்மை வயதானால் Arthritis எனும் மூட்டு வலி வந்து விடுகிறது . Western toilet இல்லாவிட்டால் இன்னும் கொடுமை . வாடகை வீட்டில் வசித்தால் மாற்றிக்கொள்ளவும் முடியாது . Adapter( ஸ்டூலையோ chair ஐயோ நடுவில் ரௌண்டாக வெட்டி உபயோகப்படுத்துவது ) வைத்துக்கொள்ள சிலர் மனம் ஒப்புக்கொள்ளாது . அப்படி வைத்துக்கொண்டாலும் அதை உபயோகப்படுத்திய பின் கழுவி வைத்தால் வீட்டில் உள்ள சிறுவர்கள் அதை தாண்டி சென்றால் மூச்சை இழுத்துக்கொண்டு அருவெறுப்பாக தாண்டி செல்வதை பார்க்கும் போது மனம் படும் வேதனை அனுபவித்தால் தான் புரியும் . இது பற்றி மற்றவர்களிடம் பேசவும் அசிங்கப்படுவர் .பிள்ளைகள் இதை உணர்ந்து கடமையாற்ற வேண்டும் . - சுதர்சன் குமார் .

    ReplyDelete
  4. சீனியரிக்குகான தகுதிகள் :
    1. 24 மணி நேரத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் தூங்குவது .
    2. மற்றவர்களிடம் பழய விஷயத்தை பேசுவது
    3. அப்போ அப்போ ஞாபக மறதி ஏற்படுவது .
    4. என்னால் மற்றவர்களுக்கு தொந்திரவு எற்பட கூடாது என்று பொலம்புவது .
    5. தன்னை போன்ற மற்ற சீனியர்களுடன் சரிபார்த்துகொள்வது .
    6. உடம்பு முடியாதிருக்கும் பொழுது இன்னும் எத்தனை நாள் உலகில் இருக்க வேண்டும் என்று பொலம்புவது .

    ஆனால் செய்யவேண்டியது :

    இறைவனை எப்பொழுதும் நினைத்து கொண்டு இருப்பது
    இறைவனுக்கு நன்றி கூறுவது இந்த உலகில் பிறந்ததற்கு
    தன் கையால் தானம் செய்வது.

    ReplyDelete
  5. ஐயா வணக்கம்
    அறிவியலையும் நடைமுறை வாழ்க்கையும் மிக எளிமையாக அவருக்கே உரிய பாணியில்

    ///நியூரான்கள் களைத்துப் போவது தெரிகிறது///
    //அது மூளையில் வேறு பேட்டை போலும்!//
    சொல்லி புரிய வைக்கிறது அவருக்கு நிகர் அவரே !
    கண்ணன்.

    ReplyDelete
  6. anbudan vathiyaar aayvukku vanakkam

    arumai..ranga rajan [sujatha] sir biography.

    my co.brother's sambanthi named his sons ..ganeshkumar and vasanthkumar...both are sujatha's novel dedectives.....

    ReplyDelete
  7. ////Blogger siva kumar said...
    உள்ளேன் ஐயா////

    வருகைப் பதிவிற்கு நன்றி சிவகுமார்!

    ReplyDelete
  8. /////Blogger GOWDA PONNUSAMY said...
    அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
    தங்களின் 2001 வது பதிவு இது! இன்று தங்களின் பிறந்த நாளோ?1. ஒரு வேளை அப்படியாயின் எங்களின் உளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்!!,அப்படியில்லை எனினும், என்றும் இளமையும் துடிப்பும் நிறைந்த தங்களின் மனம்,எழுத்து,மனநலம், உற்சாகம்(தனக்கு மட்டுமின்றி, அனைவருக்கும் அளிக்கும்),வல்லமை,சீனியாரான பின்னரும், வாரியார் சுவாமிகளின் வாழ்த்தை இன்றளவும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் தண்மை - தங்களின் இன்றைய பதிவில் மிளிர்கின்றதே!!!!........
    வாழ்க தங்கள் நலம்! வளர்க தங்களின் பண்பட்ட இறைத்தொண்டு!!!!!.
    அன்புடன்,
    -பொன்னுசாமி.
    குறிப்பு: கடந்த 27,ஏப்ரல் 2015ல் நானும் சீனியர் சிடிசனாகிவிட்டேன்!!!!!!.-:))))))...////

    இல்லை. என்னுடைய பிறந்த நாள் பிப்ரவரி மாதம் வரும். உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி பொன்னுச்சாமி அண்ணா!
    சீனியர் சிட்டிசன்களுக்கு ரயில் கட்டணத்தில் சலுகை உண்டு. அதுபோல ரயில் பயண முன் பதிவுகளில் இடஒதுக்கீடும் உண்டு. வேறு என்னென்ன இருக்கிறது என்று தெரியவில்லை!

    ReplyDelete
  9. ////Blogger ARASU said...
    ஆசிரியருக்கு வணக்கம் .
    அய்யா ,
    சுஜாதாவின் கணக்கில் நான் சீனியர் ஆக இருந்தாலும் வகுப்பறையில் நான் ஜூனியர்தான். ஆகவே வாத்தியாரின் அனைத்து பதிவுகளையும் நான் விரும்பி படிக்க முடிகின்றது .
    ௮ன்புடன் அரசு ./////

    அனைத்தையும் விரும்பிப் படிப்பதற்கு மனசு இருந்தால் போதுமே சாமி! ஜூனியர், சீனியர் என்ற பாகுபாடு எல்லாம் தேவைப்படாது.

    ReplyDelete
  10. ////Blogger J Sudarsan Kumar said...
    வாத்தியார் அவர்களுக்கு வணக்கம் .
    சுஜாதாவின் எழுத்து வழக்கம் போல் அருமை .முதலில் நகைச்சுவை .நம் கவனத்தை இழுத்து பின் சொல்ல வந்த விஷயத்தை பொட்டில் அடித்தாற்போல் சொல்லி விட்டார் . Vintage சுஜாதா .
    தங்கள் ரசனை அதுவும் வழக்கம் போல் அருமை . நல்ல விஷயத்தை ரசிப்பதும் ரசித்ததை நம்மோடு பகிர்வதும் வாத்தியாரின் சிறப்புக்களில் ஒன்று .
    "காலையில் எழுந்து சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன் " உண்மை வயதானால் Arthritis எனும் மூட்டு வலி வந்து விடுகிறது . Western toilet இல்லாவிட்டால் இன்னும் கொடுமை . வாடகை வீட்டில் வசித்தால் மாற்றிக்கொள்ளவும் முடியாது . Adapter( ஸ்டூலையோ chair ஐயோ நடுவில் ரௌண்டாக வெட்டி உபயோகப்படுத்துவது ) வைத்துக்கொள்ள சிலர் மனம் ஒப்புக்கொள்ளாது . அப்படி வைத்துக்கொண்டாலும் அதை உபயோகப்படுத்திய பின் கழுவி வைத்தால் வீட்டில் உள்ள சிறுவர்கள் அதை தாண்டி சென்றால் மூச்சை இழுத்துக்கொண்டு அருவெறுப்பாக தாண்டி செல்வதை பார்க்கும் போது மனம் படும் வேதனை அனுபவித்தால் தான் புரியும் . இது பற்றி மற்றவர்களிடம் பேசவும் அசிங்கப்படுவர் .பிள்ளைகள் இதை உணர்ந்து கடமையாற்ற வேண்டும் . - சுதர்சன் குமார் //////.

    உண்மைதான். உங்கள் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. //////Blogger Chandrasekaran Suryanarayana said...
    சீனியரிக்குகான தகுதிகள் :
    1. 24 மணி நேரத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் தூங்குவது .
    2. மற்றவர்களிடம் பழய விஷயத்தை பேசுவது
    3. அப்போ அப்போ ஞாபக மறதி ஏற்படுவது .
    4. என்னால் மற்றவர்களுக்கு தொந்திரவு எற்பட கூடாது என்று பொலம்புவது .
    5. தன்னை போன்ற மற்ற சீனியர்களுடன் சரிபார்த்துகொள்வது .
    6. உடம்பு முடியாதிருக்கும் பொழுது இன்னும் எத்தனை நாள் உலகில் இருக்க வேண்டும் என்று பொலம்புவது .
    ஆனால் செய்யவேண்டியது :
    இறைவனை எப்பொழுதும் நினைத்து கொண்டு இருப்பது
    இறைவனுக்கு நன்றி கூறுவது இந்த உலகில் பிறந்ததற்கு தன் கையால் தானம் செய்வது./////

    உங்களின் பின்னூட்டத்திற்கும், கருத்துப் பகிர்விற்கும், நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. ////Blogger lrk said...
    ஐயா வணக்கம்
    அறிவியலையும் நடைமுறை வாழ்க்கையும் மிக எளிமையாக அவருக்கே உரிய பாணியில்
    ///நியூரான்கள் களைத்துப் போவது தெரிகிறது///
    //அது மூளையில் வேறு பேட்டை போலும்!//
    சொல்லி புரிய வைக்கிறது அவருக்கு நிகர் அவரே !
    கண்ணன்./////

    ஆமாம். நான் அவருடைய தீவிர வாசகராக இருந்தவன். இருப்பவன். நன்றி கண்னன்.

    ReplyDelete
  13. /////Blogger hamaragana said...
    anbudan vathiyaar aayvukku vanakkam
    arumai..ranga rajan [sujatha] sir biography.
    my co.brother's sambanthi named his sons ..ganeshkumar and vasanthkumar...both are sujatha's novel dedectives...../////

    நல்லது. தகவலுக்கு நன்றி கணபதியாரே1

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com