Astrology: நாளும், கோளும் நம்மை என்ன செய்யும்?
நாள் என்பது நட்சத்திரங்களையும் கோள் என்பது நவக்கிரகங்களையும் குறிப்பதாகும். இறைபக்தி மிகுந்தவர்களுக்கு அவைகளால் எந்தத்
துன்பமும் ஏற்படாது என்பது செய்தி. அதை வலியுறுத்திச் சொல்லும் விதமாகக் கந்தரலங்காரத்தில் ஒரு பாடல் உள்ளது. அதைக் கீழே கொடுத்துள்ளேன்.
நாளென் செயும், வினைதான் என் செயும் எனை நாடி வந்த
கோளென் செயும், கொடுங்கூற்று என் செயும் குமரேசர் இரு
தாளும், சிலம்பும் சதங்கையும், தண்டையும் சண்முகமும்
தோளும், கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே”
- அருணகிரியார் அருளிய கந்தர் அலங்காரப் பாடல்களில் ஒரு
முக்கியமான பாடல் இது!
நல்லவனுக்கு நாளும் கோளும் எவ்வித தீங்கும் செய்யாது
என்பதையே அவர் அப்படி குறிப்பிடுகிறார். அருணகிரிநாதர்,
நாளென்செயும் வினைதான் என்செயும் எனை நாடி வந்த கோள்
என் செய்யும் என்று அடித்துச் சொல்கிறார். முருகன் அருள் முன்,
கிரகங்கள் வலிமை இழந்து போகும் என்பதே அதன் பொருள்.
சரி, நாளையும் கோளையும் நாம் பார்க்க வேண்டாமா?
பார்க்க வேண்டும்.
நாமென்ன அருணகிரியார் போல, அல்லது குமரகுருபரர் போல
முழுமையாக முருகனருள் பெற்றவர்களா? முருகனை நேரில் சந்தித்தவர்களா? இல்லையே! நாம் முருக பக்தர்கள் என்பது
மட்டுமே உண்மை. மற்றபடி நாம் சாதாரண மனிதர்கள்தான்.
நம் ஜாதகப்படிதான் நம் வாழ்க்கை!
Lord Muruga will give us withstanding power.
தாக்குப்பிடிக்கும் சக்தியைக் கொடுப்பார்!
எல்லோருக்குமே இறையருள் கிடைத்துள்ளதா? இறையருள்
கிடைத்தவர்கள் கோடியில் ஒருவரே! அவர்களை நாம் மகான்கள்
என்கிறோம்.
திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்?
அவைகள் சுப நாட்கள் என்பதால் அவற்றைத் தேர்வு செய்து
அதில் செய்கிறார்கள். ஒரு ஆண்டில் 55 முதல் 60 நாட்கள் வரைதான்
முகூர்த்த நாட்கள் இருக்கும். மற்ற நாட்கள் எல்லாம் சுப நாட்கள் இல்லை.
எந்த முகூர்த்த நாளாவது செவ்வாய்க்கிழமை அல்லது சனிக்கிழமை
யில் வருகிறதா, பாருங்கள்? வராது. அதாவது எந்தத் திருமணமாவது செவ்வாய்க் கிழமை அல்லது சனிக்கிழமைகளில் செய்கிறார்களா
என்று பாருங்கள். செய்ய மாட்டார்கள். அவைகள், அதாவது அந்த
இரண்டு கிரகங்களுக்கு உரிய நாட்களும் திருமணங்களுக்கு ஆகாத நாட்களாகும்.
ராகுகாலங்களில், கேது காலங்களில் (எமகண்டங்களில்)
சுப காரியங்களைச் செய்ய மாட்டார்கள். முகூர்த்த நாட்களில்கூட
அந்த நேரத்தைத் தவிர்த்து விடுவார்கள்.
ஏன்? அந்த நேரத்தில் செய்தால், செய்யும் காரியம் முழுமை பெறாது.
உங்கள் மொழியில் சொன்னால் ஊற்றிக் கொண்டுவிடும். அதே போல அஷ்டமியன்று (எட்டாவது திதியன்று) எந்த சுபகாரியங்களையும்
செய்ய மாட்டார்கள்.
திருமணம் மட்டும்தான் சுபகாரியமா? வீடு வாங்குதல், பிறந்த
குழந்தையை அதன் பாட்டி வீட்டில் இருந்து (அதாவது அது பிறந்த
வீட்டில் இருந்து) நம் வீட்டிற்கு முதன் முதலில் அழைத்து வருதல்
போன்று பலவிதமான சுபகாரியங்கள் நம் வாழ்க்கையில் உள்ளன.
அனுபவப் பட்டவர்களுக்கு அதெல்லாம் தெரியும்.
சரி, எததெற்கு நாளையும் நேரத்தையும் பார்க்க வேண்டாம்?
சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் தினசரி வேலைக்குச் செல்வதற்கு
அதை எல்லாம் பார்க்க வேண்டாம். பசிக்கும்போது சாப்பிட
வேண்டியதுதான். கண் அயர்ச்சி கொள்ளும்போது தூங்க
வேண்டியதுதான். குறிப்பிட்ட நேரத்தில் தினமும் பணிக்குச்
செல்ல வேண்டியதுதான்.
அதுபோல தண்ணியடிக்கும் பழக்கம் இருப்பவர்கள், டாஸ்மாக்
கடைக்குப் போவதற்கெல்லாம் நேரம் காலம் பார்க்க வேண்டாம்.
செட் சேர்ந்தால், அதாவது தோழமைகள் அழைத்தால் போக
வேண்டியதுதான்!
தந்தை இறந்துவிட்டால்,ஒரு ஆண்டிற்கும், தாய் இறந்துவிட்டால்,
ஆறு மாதங்களுக்கும், மனைவி இறந்துவிட்டால்,மூன்று
மாதங்களுக்கும் சுபகாரியங்களைச் செய்யக்கூடாது!
அதுபோல ஜென்ம நட்சத்திரத்தில் (அதாவது ஒருவருடைய
பிறந்த நட்சத்திரத்தன்று) அவருக்கு திருமணத்தை செய்யக்கூடாது.
இது ஆண், பெண் இருவருக்குமே பொருந்தும். அது சுபநாளாக
இருந்தாலும், அந்த நாளின் நட்சத்திரத்தையும் பார்க்க வேண்டும்.
கூடாத நாட்களையும், ஆகாத நட்சத்திரங்களையும் பட்டியலிட்ட பாடல் ஒன்று உள்ளது. அதைக் கீழே கொடுத்துள்ளேன்.
ஆதிரை பரணி கார்த்திகை
ஆயில்யம் முப்பூரங் கேட்டை
தீதிரு விசாகஞ் சோதி
சித்திரை மகமீ ராறும்
மாதங் கொண்டார் தாரார்
வழிநடைப் பட்டார் மீளார்
பாய்தனிற் படுத்தார் தேறார்
பாம்பின் வாய்த் தேரைதானே!
பாடலுக்கான விளக்கம்:
1. பரணி
2. கார்த்திகை
3. திருவாதிரை
4. ஆயில்யம்
5. மகம்
6. பூரம்
7. சித்திரை
8. சுவாதி
9. விசாகம்
10. கேட்டை
11. பூராடம்
12. பூரட்டாதி
ஆகிய 12 நட்சத்திர நாட்களிலும் நம்மிடம் கடன் வாங்கிச் சென்றவர்கள் திருப்பித் தரமாட்டார்களாம். நெடுந்தூரப் பயணம் சென்றவர்கள் (உரிய நேரத்தில்) திரும்ப மாட்டார்களாம்.நோயில் படுத்தவர்கள் குணமாகித் திரும்புவதும் தமதமாகுமாம்
”என்னிடம் பணம் வாங்கிச் சென்ற கடன்காரன் எப்படித் திருப்பித்
தரமாட்டான்? சட்டையைப் பிடித்து அல்லது கழுத்தில் துண்டைப்
போட்டுப் பிடித்து திருப்பி வாங்கிவட மாட்டேனா?” என்று
தெனாவட்டாக யாரும் கேட்காதீர்கள். உங்களிடம் கடன் வாங்கிச்
சென்றவன் நன்றாக இருந்தால் தானே சுவாமி உங்களுக்குத் திரும்பத் தருவான். அதே நட்சத்திர நீயூட்டன் விதி அவனுக்கும் உண்டல்லவா?
கெட்ட நாளில் வாங்கிய அவன் கெட்டுப் போய் இருந்தால் என்ன
செய்வீர்கள்? . செலவு கணக்கில் எழுத வேண்டியதுதான்.
அதை நினைவில் வையுங்கள்!
அன்புடன்,
வாத்தியார்
====================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!