மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
Please write to Vaaththiyar
திருமணப் பொருத்தம்
Marriage Matching
My Phone Number and whatsApp number
My email ID
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?
வாத்தியாரின் அடுத்த புத்தகம்

தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
22.3.21
காலோடு கால்பின்னி எப்போது - யாருக்காக ஆடியது ?
9.2.21
மதுவின் தீமைகளை பாட்டாக எழுதிய கவியரசர்!!!!
மதுவின் தீமைகளை பாட்டாக எழுதிய கவியரசர்!!!!
*கண்ணதாசன் தான் வேண்டும் அழைத்து வாருங்கள்: எம்ஜிஆர் போட்ட கட்டளை: நடுங்கியது படக்குழு..*
மக்கள் திலகம் எம்ஜிஆருக்கும், கவியரசர் கண்ணதாசனுக்கும் சில ஊடல்கள் இருந்தது. இந்த நேரத்தில் எம்ஜிஆர் உறுதியாச் சொன்னார்.
“இந்தப் பாடலை கண்ணதாசன்தான் எழுத வேண்டும். அவரால் மட்டுமே நான் நினைப்பதை வரிகளாகக் கொண்டு வர முடியும்.” – எம்.ஜி.ஆரின் இந்த திடமான வார்த்தைகளைக் கண்டு சுற்றி இருந்த படக் குழுவினர் திகைத்துப் போனார்கள் .
“சங்கே முழங்கு” என்ற படத்திற்கான பாடல் அது..!
மதுவின் தீமைகளை விளக்கி கதாநாயகன் எம்.ஜி.ஆர். பாடுவதாக வரும் பாடல் ;
அதை , மதுவிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் கண்ணதாசனைக் கொண்டு எழுதச் சொன்னால் எப்படி ..?
சரி .. எம்.ஜி.ஆர். சொன்னால் சொன்னதுதான்..! வேறு வழி இல்லை..! படக் குழுவினர் கண்ணதாசனிடம் சென்று சொன்னார்கள் .
சிரித்தார் கண்ணதாசன்.
சில காலம் முன் அவர் எழுதி இருந்த ஒரு கவிதை : "ஒரு கையில் மதுவும் ஒரு கையில் மாதுவும் சேர்ந்திருக்கின்ற வேளையிலே
என் ஜீவன் பிரிய வேண்டும் - இல்லையென்றால் என்ன வாழ்க்கை நீ வாழ்ந்தாயென்றே எனை படைத்த இறைவன் கேட்பான்..”
புரிந்து கொண்டார் கண்ணதாசன் !
மதுவினால் ஒரு மனிதன் படும் அவஸ்தைகளை மதுப் பழக்கம் இல்லாத ஒருவனால் , அனுபவித்து எழுத முடியாது .
எனவேதான் மதுக் கோப்பைக்குள் குடி இருக்கும் தன்னை தேர்ந்தெடுத்து இந்தப் பாடலை எழுத அழைக்கிறார் எம்.ஜி.ஆர்.
கண்ணதாசனுக்கு தெளிவாக தெரிந்து போனது தயாரானார் கண்ணதாசன்.
*“சிலர் குடிப்பது போலே நடிப்பார்*
*சிலர் நடிப்பது போலே குடிப்பார்”*
கோப்பையிலிருந்து வழியும் மதுவாக ,பொங்கி வந்து விழுந்தன வார்த்தைகள்..!
*“மதுவுக்கு ஏது ரகசியம் ?*
*அந்த மயக்கத்தில் எல்லாம் அவசரம்*
*மதுவில் விழுந்தவன் வார்த்தையை*
*மறுநாள் கேட்பது அவசியம் !”*
“ஆஹா..” என்றார் எம்.ஜி.ஆர்.
அடுத்து கண்ணதாசனிடமிருந்து வழிந்த வார்த்தைகள் :
*“அவர் இவர் எனும் மொழி*
*அவன் இவன் என வருமே”*
கூர்ந்து கவனித்தார் எம்.ஜி.ஆர்.
கண்ணதாசன் அடுத்து சொன்ன வரிகள் :
*“நாணமில்லை வெட்கமில்லை*
*போதை ஏறும் போது*
*நல்லவனும் தீயவனே*
*கோப்பை ஏந்தும் போது”*
“சபாஷ்..!”-பரவசப்பட்டுப் போனார் எம்.ஜி.ஆர். இதை
விட மதுவின் தீமைகளை எவரால் சொல்ல இயலும்..?
கண்களை மூடியபடி கண்ணதாசன் யோசித்தார்..மதுவின் தீமைகளை சொல்லி விட்டோம். எம்.ஜி.ஆருக்கு ஏற்றபடி சில பாஸிடிவ் விஷயங்களை சொல்ல வேண்டாமா..?
“எழுதிக் கொள்ளுங்கள்” என்ற கண்ணதாசன் உதடுகளிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள் :
*“புகழிலும் போதை இல்லையோ*
*பிள்ளை மழலையில் போதை இல்லையோ*
*காதலில் போதை இல்லையோ*
*நெஞ்சின் கருணையில் போதை இல்லையோ*
*மனம் மதி அறம் நெறி
தரும் சுகம் மது தருமோ ?*
*நீ நினைக்கும் போதை வரும்*
*நன்மை செய்து பாரு*
*நிம்மதியை தேடி நின்றால்*
*உண்மை சொல்லிப் பாரு !”*
சொல்லி முடித்து விட்டுப் புறப்பட்டுப் போய் விட்டார்
கண்ணதாசன்.
படக் குழுவினரை ஏறிட்டுப் பார்த்தார் எம்.ஜி.ஆர். “என்ன..? கவிஞரை நான் ஏன் அழைத்தேன் என்று இப்போதாவது தெரிகிறதா..?”
ஆம் .. யாரிடம் எதை எப்படி கேட்டு வாங்க வேண்டும் என்ற வித்தை எம்.ஜி.ஆருக்கு தெரிந்திருந்தது ;
சரி .. இப்படி எந்தச் சூழ்நிலையானாலும் அதற்கேற்ற பாடல் எழுதும் இந்த வித்தை ..அது எங்கிருந்து வந்தது கண்ணதாசனுக்கு ..?
இதோ.. அதை கண்ணதாசனே சொல்லி இருக்கிறார் :
“வட்டிக் கணக்கே
வாழ்வென் றமைந்திருந்த
செட்டி மகனுக்கும்
சீர்கொடுத்த சீமாட்டி!
தோண்டுகின்ற போதெல்லாம்
சுரக்கின்ற செந்தமிழே
வேண்டுகின்ற
போதெல்லாம்
விளைகின்ற நித்திலமே
உன்னைத் தவிர
உலகில்எனைக் காக்க
பொன்னோ பொருளோ
போற்றிவைக்க வில்லையம்மா!
என்னைக் கரையேற்று
ஏழை வணங்குகின்றேன்!”
ஆஹா..!
*வாழ்க கண்ணதாசன் புகழ் !
வளர்க அவர் தாலாட்டிய தமிழ் !!*
*நன்றி: எழுத்தாளர் :* *Vallam John*
-------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
====================================
4.2.21
அபூர்வமான திரைப்படம்!
அபூர்வமான திரைப்படம்!
அபூர்வ ராகங்கள் திரைபடத்தில் கேள்வியின் நாயகனே!!! என்னும் தமிழ் பாடலின் சிச்சுவேஷனை எத்தனை அழகாக கவிஞர் மற்றும் மெல்லிசை மன்னருடன் இணைந்து உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் என்று பாருங்கள்?!!!
மேடையில் பாடிக்கொண்டிருக்கும் பைரவி வயதில் இளையவரான பிரசன்னா தன்னை மணக்க நினைப்பது வெட்கம் கெட்ட செயல் என்பதை பலம் பொருந்திய வார்த்தைகளில் விளக்குவதைப் பாருங்கள்.
பசுவிடம் கன்றுவந்து பாலருந்தும் - கன்று
பாலருந்தும் போதா காளை வரும்?
சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கம் - கொஞ்சம்
சிந்தை செய்தால் உனக்கு பிறக்கும் வெட்கம்
தாலிக்கு மேலுமொரு தாலி உண்டா?
வேலிக்கு இன்னொருவன் வேலி உண்டா?
கதை எப்படி? அதன் முடிவெப்படி?
இப்படி பைரவியின் முடிவைக் கேட்டதும் மேடையில் மிருதங்கம் வாசித்துக் கொண்டிருந்த பிரசன்னா சினத்துடன் பாதிப்பாடலில் எழுந்து போய் மறைவில் நின்று கொள்வார்,
இப்போது பல வருடங்களாக பைரவியை நிர்கதியாக தவிக்க விட்டுப்போன ரஜினி அங்கே அரங்கத்தின் பால்கனியில் வெளிப்படுவார், ”உன்னை ஏமாற்றிச் சென்றவன் இங்கு வந்திருக்கிறேன், உன் தரிசனம் தேடி,உன் மன்னிப்பை நாடி _பாண்டியன் என்று சீட்டு எழுதி ஒரு சிறுமியிடம் தந்து விடுவார்.
தலைவன் திருச்சானூர் வந்துவிட்டான் - மங்கை
தரும தரிசனத்தை தேடுகின்றான்,தேடுகின்றான்,தேடுகின்றான்,
அலமேலு அவன் முகத்தை காண்பாளோ? மங்கை
அவனோடு திருமலைக்குச் செல்வாளோ?
செல்வாளோ? செல்வாளோ?
என்று உணர்ச்சிவசப்பட்டு உடைவார் பைரவி.
பாண்டியன் செய்த தவற்றையெல்லாம் சடுதியில் மன்னித்தவர் ,அவரைக் காண மிகுந்த ஆவல் கொள்வதை பாடல் வரிகளில் இதை விட அழகாக வெளிப்படுத்த முடியுமா?
இப்போது உடைந்து குரல் பிசகும் பைரவியின் மகள் வந்து அப்பாடலை தொடர்வதைப் பாருங்கள்.இப்போது பாடலின் டெம்போ எதிர்பாராத திசையில் மாற்றம் பெறுவதைப் பாருங்கள்,அதன் பாடல் வரிகளைக் கவனியுங்கள்.ஆறு மாதம் காணாத தாய் மகளின் சம்பாஷனையைக் கேளுங்கள்,
ஒரு கண்ணும் மறு கண்ணும் பார்த்துக்கொண்டால்
பார்த்துக்கொண்டால்...அவை
ஒன்றோடு ஒன்று சொல்லும் சேதி என்ன?
இரு கண்ணும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டால் - அவை
இரண்டுக்கும் பார்வையிலே பேதமென்ன?
பேதம் மறைந்ததென்று கூறு கண்ணே
நமது பேதம் தனை மறந்து நடக்கும் முன்னே
கண்ணே உன் காலம் சென்ற கதை என்ன?
உன்னைக் காணப் பிழைத்திருந்தேன் வேறு என்ன?
உடல் எப்படி?
முன்பு இருந்தாற்படி...
மனம் எப்படி?
நீ விரும்பும்படி...
இப்போது பால்கனியில் நிற்கும் பாண்டியனுக்கு தாய் மகளின் தரிசனமும் கிடைத்தாயிற்று, பிடிவாதக்கார மகள் தன் மாற்றுக்கருத்து கொண்ட தாயிடமும் இணைந்தாயிற்று, இப்போது மேஜரின் அருகே இருக்கும் இருக்கை ஜெயசுதா மேடையில் சென்று அமர்ந்ததால் காலியாக இருக்கிறது. இப்போது பாடலின் மந்திர வரிகளால் அங்கே மேஜரின் மகன் பிரசன்னா மேடையிலிருந்து இறங்கிச் சென்று அங்கே அந்த இருக்கையில் அமரும் அதிசயத்தைப் பாருங்கள்.
பழனி மலையிலுள்ள வேல் முருகா - சிவன்
பல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா
பிடிவாதம் தன்னை விடு பெருமுருகா - கொஞ்சம்
பிரியத்துடன் பக்கத்திரு முருகா
திருமுருகா...திருமுருகா...
இவ்வரியைக் கேட்டபின்னர் கமல் மேடைப் படியிறங்கி வந்து பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருக்கும் அப்பாவின் அருகே கடக்க எண்ணி முடியாமல் அப்பா அன்புக்குக் கட்டுப்பட்டு அமரும் அதிசயத்தைப் பாருங்கள். அங்கே தந்தை மகனுடன் கைகோர்த்து ஆனந்தப்படுவதுடன் பாடல் முடிவடையும். என்ன ஒரு பாடல்?!!! இந்தப் பாடலுக்கு யாரேனும் சிகரட் பிடிக்க எழுந்து போயிருப்பரா? என்பது சந்தேகமே!!!
இந்த பாடல் காட்சி வேறு யாருடைய கையில்லாவது கிடைத்திருந்தால் இந்த கிளைமைக்ஸ் காட்சிக்கு பத்து பதினைந்து காட்சிகள் தேவைப்பட்டிருக்கும் ...
அத்தனை காட்சிகளுக்கும் உண்டான சாரத்தை வெறும் ஏழு நிமிட பாடலுக்குள் உள்ளடக்கிய கவியசரை நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது ...
யாரு உனக்கு அப்பன்
போன்ற இலக்கிய தரமான பாடல்களும், ஹீரோ பில்டப் பாடல்களுமே நிறைந்திருக்கும் இக்கால பாடல்களை நினைத்தால்
வேதனையாகவும் இருக்கிறது ...🙄
==============================================
படித்ததில்
பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
15.11.18
கவியரசரின் பாடல்கள் கற்றுத்தந்தவை!!!!
கவியரசரின் பாடல்கள் கற்றுத்தந்தவை!!!!
திரைப் பாடல்களில் வாழ்க்கைக் கலையைக் கற்றுத் தந்த கவியரசர்....
காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலினின் மேலே*
எவ்வளவு நாகரிகமான , நாசுக்கான , மென்மையான வரிகள் ...
இப்படியெல்லாம் கூட எழுத முடியுமா இந்த காலத்தில் என்று மலைக்க வைக்கும் வார்த்தைகள் ...
அந்த வரிகள் மென்மையாக இருந்தும் பார்க்கும் பார்வையில் ஒருவர் கொச்சை படுத்தி இருக்கலாம் ...
காம கணைகளை கண்கள் மூலம் அள்ளி வீசி இருக்கலாம் ...
ஆனால் நம்மவர் கண்ணதாசன் வரிகளுக்கு அமரத்துவம் வாங்கி கொடுத்தார் ...
அதை சொல்லும் விதம் , அதில் அடங்கியுள்ள பெருமை , ஆண்மை என்ற கர்வம் அதே சமயத்தில் பெண்மையை மதிக்கும் பார்வை
, அவள் அதற்கு என்ன பதில் சொல்லப்போகிறாள் என்று கண்களில் தேக்கும் ஏக்கம் எல்லாமே அரை நொடியில் ...
*அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே*
நானும் உனக்கு சற்றும் இளைத்தவள் அல்ல ...
நீயோ எனக்கு உன் பரிசை பரந்து விரிந்து இருக்கும் இந்த கட்டிலின் மேலே தந்தாய் ...
அதற்கு நான் உயிர் கொடுத்தேன் உடல் கொடுத்தேன் , பேசும் சக்தி கொடுத்தேன் , பரிசு ஒரு சின்ன தொட்டிலுக்குள் அடங்கி
விட்டது என்று எண்ணாதே ...
அந்த பரிசுக்கு விலை ஏதும் இல்லை என்கிறாள் துணைவி ...
நாணம் ஒரு புறம் பெருமை ஒரு புறம் அதே உணர்ச்சிகளில் அந்த பரிசை பார்க்கிறாள் ...
அந்த பரிசும் அவர்கள் இருவரையும் பார்த்து சிரிக்கிறது ...
பெண்மையை மதிக்கும் ஒருவனுக்கும் ஆண்மையை ஆதரிக்கும் ஒரு பெண்ணுக்கும் பரிசாக வந்ததை எண்ணி பெருமை படுகிறது
முழு பாடலை அலச வேண்டிய அவசியம் இல்லை ... இந்த இரண்டு வரிகள் போதும் ...
எங்கிருந்தோ என் நினைவுகளை தொந்தரவு செய்ததைப்போல் சில பாடல் வரிகள் காற்றில் இருக்கும் அசுத்தத்துடன் பறந்து
வந்தன ...
கல்யாணம் தான் பண்ணிக்கிட்டு .... பிள்ளை குட்டி பெத்துக்கிட்டு .
கைகள் என்னை கேட்காமல் ஓடிச்சென்று என் இரு காதுகளையும் பொத்திக்கொண்டன ...
கண்கள், தான் சேர்த்து வைத்த உப்பு நீரை கீழே கொட்டிக்கொண்டிருந்தன ...
வாய் மட்டும் ... அந்த நாளும் வந்திடாதா என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தன ....😰😰
----------------------------------------------------------------------
2
அந்த காலத்திலேயே கண்ணதாசன் ஒரு தீர்க்கதரிசனத்தோடு internet and online shopping பத்தி ஒரு பாட்டு எழுதி இருக்கார்.
தேடினேன் வந்தது - Google search
நாடினேன் தந்தது - Amazon / online shops
வாசலில் நின்றது - UBER / SWIGGY / ZOMOTO
வாழ வா என்றது - Matrimony dot com🌹
--------------------------------------------------------------------
படித்து பரவசப்பட்டது!
அன்புடன்
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
4.10.18
நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை வழங்கியவர் கவியரசர் கண்ணதாசன்!!!!
நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை வழங்கியவர் கவியரசர் கண்ணதாசன்!!!!
நமது தலைமுறையினர் ஒவ்வொருவருக்கும் எல்லாச் சூழ்நிலைகளுக்கும் ஏற்றவாறு பாடல்கள் புனைந்தவர் கவியரசர்,
கண்ணதாசன் ஆவார்
அரசியல் சூழ்நிலையால் மத்திய அமைச்சர் பதவியை இழந்து சென்னை வந்துசேர்ந்த டி. டி. கிருஷ்ணமாச்சாரியைத் தேற்றிய பாடல் கண்ணதாசனின், "போனால் போகட்டும் போடா".
மனம் வெறுத்துப்போய் ஊருக்குத் திரும்ப முடிவுசெய்த கவிஞர் வாலியை மீண்டும் கோடம்பாக்கம் வரச்செய்த கவியரசரின் பாடல்,
"மயக்கமா கலக்கமா, மனதிலே குழப்பமா? உனக்கும் கீழே உள்ளவர் கோடி நனைத்துப் பார்த்து நிம்மதி நாடு".
கம்பரின் வரிகளை எடுத்தாண்ட பாடல், "தோள் கண்டேன் தோளே கண்டேன்".
பட்டினத்தாரின் பாடலான, "அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே" என்ற வரிகளின் சாரத்தை எளிதாக்கி, "வீடுவரை உறவு வீதிவரை
மனைவி காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ" என்று பட்டிக்காட்டுப் பாமரனுக்கும் உலகியல் நடைமுறைத் தத்துவத்தைப் பிழிந்து வழங்கினார் கண்ணதாசன்.
"அண்ணன் என்னடா தம்பியென்னடா அவசரமான உலகத்திலே", தமது அண்ணன் பொருளுதவி செய்ய மறுத்தபோது வந்த
பாடல்.
இசையமைப்பாளர் விஸ்வநாதனும் கண்ணதாசனும் விழியும் இமையும்போல, கண்ணும் கருத்தும்போல, உடலும் உயிரும்போல
பரஸ்பரம் வாழ்ந்தனர் என்றால் மிகையாகாது. அந்த விஸ்வநாதன் பிறந்தநாளும் கவியரசரின் பிறந்தநாளும் ஒன்றே! 24-06-1928.
என்னே இயற்கையின் விந்தை!
விஸ்வநாதன் கவிஞரைச் சாடியது வேறொருவர் மூலம் கேள்விப்பட்டு ஆவேசத்தில் உதித்த பாடல், "சொன்னது நீதானா சொல் சொல் என்னுயிரே".
"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை", என்று தான் இறப்பதற்கு ஏறத்தாழ இருபது
ஆண்டுகளுக்கு முன்பே எழுதிப் பாடி நடித்த சுயஆசிகவி கண்ணதாசன் என்றும் அமரத்துவம் பெற்று தமிழ் உள்ளவரை வாழுவார் என்பதில் ஐயம் சிறிதுமில்லை!
காமராசருக்குத் தூது: அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்னை சேரும் நாள் பார்க்கச் சொல்லடி". பாடலைக்கேட்ட
பெருந்தலைவர் கண்ணதாசனை நேரில் வந்து சந்திக்குமாறு சொன்னது வரலாறு.
பாரதப் பிரதமர் நேரு மறைந்தபோது, "சாவே உனக்கொருநாள் சாவுவந்து சேராதா", என்று உலகையே அழவைத்தார் மனிதநேயக்
கவிஞர்.
பகுத்தறிவு இயக்கம் என்று சொல்லிக்கொண்டு இருந்த கூடாரத்தில் இருந்து வெளியேறிக் காஞ்சிப் பெரியவர் சந்திரசேகர
சரஸ்வதி மகாசந்நிதானம் அவர்களை வணங்கியபோது பெரியவர், "இப்படியே சினிமாவுக்கே எழுதாதே கண்ணதாசா. உன்
மதப்பெருமையை உலகறிய உனது ஆற்றுப்பிரவாக் கவிதைநடை உதவட்டும்", என்று பணித்தார். அந்த விதையே "அர்த்தமுள்ள
இந்து மதம்" என்ற பத்து விழுதுகள் கொண்ட ஆலமரமாக விளைந்தது.
தனது மதத்தையும் தாண்டி இயேசு காவியம் இயற்றிய உண்மையான மதச் சார்பற்ற பெரியமனிதன் மகாகவிஞர் கண்ணதாசன்
பாவமன்னிப்பு படத்தில் வரும் ரஹீம் என்ற இஸ்லாமியர் வேடத்தில் சிவாஜி பாடிய பாடல், "எல்லோரும் கொண்டாடுவோம்.
அல்லாவின் பெயரைச் சொல்லி நல்லோர்கள் வாழ்வையெண்ணி" என்ற பாடலில் வரிக்கு வரி பிரணவ மந்திரமான "ஓம்.....ஓம்",
என்ற சொல்லில் முடியுமாறு எழுதிய மதஒற்றுமையுணர்வு இன்று நினைத்தாலும் புல்லரிக்கின்றது.
இப்படி காலம், மதம், போன்ற இன்னும் என்னென்ன பரிமாணங்கள் உண்டோ அத்தனை இடங்களிலும் நிறைந்து அழியாது
நிலைத்து நிற்கும் கவியரசர் புகழ் என்றும் மாறா இளமையுடனும் புதுமையுடனும் என்றும் விளங்கும். இன்று கவியரசரின் அத்தனை இயல்களும் ஆராய்ச்சி மாணவர்களின் ஆய்வுக் களமாக உள்ளது.
வாழ்க வளர்க கவியரசர் புகழ்.
வாழ்க வளர்க மெல்லிசை மன்னர் புகழ்.
-------------------------------------------------------
படித்ததில் பிடித்தது.
அன்புடன்
வாத்தியார்
=====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
19.4.18
Cinema நெஞ்சைத் தொட்ட பாடல்!
நெஞசைத் தொட்ட பாடல்!
*"பொட்டு வைத்த முகமோ....." பெண்ணின் முகத்திற்கு இன்னும் வசீகரத்தை கொடுப்பது பொட்டு என்று சொல்லாமல்
சொல்கிறார் கவிஞர்!
கவிஞர் கண்ணதாசன் இயற்றி, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசையமைப்பில் எஸ்.பி.பாலு & பி.வசந்தா பாடிய ஒரு
அருமையான பாடல். ஹரிகாம்போதி ராகத்தில் அமைந்த இப்பாடல் மலை பிரதேசத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது*
*பாடலில் சிவாஜிக்கு எஸ்.பி.பி. பாட, ஜெயலலிதாவிற்கு வசந்தா ஹம்மிங் பாடினார். சிறுவயது முதலே பரதம் முதலிய நடனப்
பாணிகளைப் பயிற்சி செய்திருந்த ஜெயலலிதா, பாரம்பரிய நடனம் பரிமளித்த இந்த பாடலில் உயர்ந்து நின்றார். படத்தில் ‘பொட்டு
வைத்த முகமோ’ பாடலுக்கு பாலுவின் குரலுக்கு ஏற்ப தன் நடிப்பு ஸ்டைலை மாற்றிக் கொண்டு நடிகர் திலகம் நடித்திருப்பதைப்
பார்த்து வியந்தார் பாலு. அதற்குப் பிறகு நடிகர் திலகத்திற்கு பல பாடல்களைப் பாடக்கூடிய வாய்ப்புகள் எஸ்பிபிக்குக் கிட்டியது.*
*நடிகர் திலகத்திற்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய முதல் பாடல் .இந்தப் பாடலில் பி.வசந்தாவின் ஹம்மிங் குரல் அற்புதமாக
இழைந்தது...ஹம்மிங் ராணி’யாகப் பயன்படுத்தும் ஒரு போக்கை மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் ஆரம்பித்து அதையே
வசந்தாவின் முத்திரையாகக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். இந்தப் பாடலில் தனக்கு பி.வசந்தா பின்னணிப் பாடினார்
என்பதை நினைவில் வைத்துக்கொண்டு அவருக்குப் பின்னாளில் கலைமாமணி விருதை வழங்கினார் ஜெயலலிதா...மிகப் பெரிய
நட்சத்திரப் பாடகியாக பரிணமிக்கவிட்டாலும், இந்த ஆந்திர குயில் பல மொழிகளில் பல நல்ல பாடல்களைப் பாடி, நிறைவான
குடும்பத்தலைவியாக இருப்பவர.*
*இயற்கையை வர்ணிக்கும்போது பெண் போல் இருப்பதாக சொல்கிறார்.... கண்ணதாசன் கற்பனையில் மாலை நேரத்து அழகை... பெண்ணை போல் என்று வர்ணிக்கிறார்... இந்த பாடல் ஒலிப்பதிவு செய்த அன்றே இரவில் அகில இந்திய வானொலியில் சுடச்சுட ஒலிப்பரப்பினார்களாம். "தரையோடு வானம் விளையாடும் கோலம் ... இடையோடு பார்த்தேன் விலையாகக் கேட்டேன் " போன்ற வரிகளில் ஆன்மாவின் காதலை கசியவிட்டிருப்பார் கண்ணதாசன். கேட்டு ரசியுங்கள். இதோ உங்களுக்காக!*
*கருவூட்டம்: சுந்தர சீனிவாசன்*
┈━❀••🌿🍁🌺🍁🌿
*பாடல் வரிகள்:*
பொட்டு வைத்தமுகமோ
கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சரமோ
அந்தி மஞ்சள் நிறமோ
அந்தி மஞ்சள் நிறமோ
பொட்டு வைத்த முகமோ
ஆஆஆ... கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சரமோ
அந்தி மஞ்சள் நிறமோ
அந்தி மஞ்சள் நிறமோ
தரையோடு வானம் விளையாடும் கோலம்
தரையோடு வானம் விளையாடும் கோலம்
இடையோடு பார்த்தேன் விலையாகக் கேட்டேன்
இடையோடு பார்த்தேன் விலையாகக் கேட்டேன்
செவ்வானம் போலே புன்னகைப் புரிந்தாள்
புன்னகைப் புரிந்தாள்,,,,,
(பொட்டு வைத்த..)
ஆஆஆஆஆஆஆ.....
மறுவீடு தேடி கதிர் போகும் நேரம்
மறுவீடு தேடி கதிர் போகும் நேரம்
மணமேடை தேடி நடை போடும் தேவி
பொன் ஊஞ்சல் ஆடி என்னுடன் கலந்தாள்
லலாலலாலலாலலா
என்னுடன் கலந்தாள் லலாலலாலலாலலா
ஆஆஆஆஆஆஆஆ. ஹொஹொஹொஹோ
மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று
மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று
கலைத்தோட்ட ராணி கை வீசி வந்தாள்
ஒளியாகத் தோன்றி நிழல் போல் மறைந்தாள்
லலாலலாலலாலலா
நிழல் போல் மறைந்தாள். லலாலலாலலாலலா
பொட்டு வைத்த முகமோ ஓஓஓஓஓ.
கட்டி வைத்த குழலோ ஓஓஓஒ…..
பொன்மணிச் சரமோ
அந்தி மஞ்சள் நிறமோ லலாலலாலலாலலா
அந்தி மஞ்சள் நிறமோ லலாலலாலலாலலா
┈┉❀••🌿🍁🌺🍁🌿
🎬 :சுமதி என் சுந்தரி-1971
🎻 : எம்.எஸ்.வி
🖌: கண்ணதாசன்
🎤 :SPB& பி.வசந்தா
👥 : சிவாஜி & ஜெயலலிதா
┈━❀••🌿🌺🌿••┉┈
ஆக்கம்: இசைப் பாயணத்தில் சுந்தர சீனிவாசன்
----------------------------------------------------------
கேட்டதில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
===========================
பாடலின் காணொளி வடிவம்:
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
24.6.16
கவிதை: கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பிறந்த தினத்தில் அவரை நினைவு கூறுவோம்!!
அவரை நினைவு கூறுவோம்!!
ஜூன் மாதம் 24ம் தேதி கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பிறந்த தினம்!
எண்ணற்ற தமிழர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் கவியரசர் கண்ணதாசன்.
அறிமுகம் தேவையில்லாத தமிழர்களில் அவரும் ஒருவர்!
அவரைத் தெரியாது என்று சொல்பவன் தமிழனே அல்ல!
தான் படித்ததையெல்லாம் பாட்டாக்கியவர் அவர்
தன் அனுபவத்தையெல்லாம் எழுத்தாக்கியவர் அவர்!
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, ஒரு கோல மயில் என் துணையிருப்பு என்று தன்னைப் பற்றிய உண்மைகளை வெளிப்படையாகச் சொன்னவர் அவர்
என்னைப்போல் வாழாதீர்கள். என் எழுத்துக்களைப்போல் வாழுங்கள் என்று தன்மையாகச் சொல்லிவிட்டுப் போனவர் அவர்!
உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக' என்று சொல்லி உற்சாகப் படுத்திவிட்டுப்போனவர் அவர்!
சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு, தென்றலே உனக்கேது சொந்தவீடு' என்று சுதந்திர உணர்வை உண்டாக்கியவர் அவர்!
ஆலயமணியின் ஓசையைக் கேட்க வைத்தவர் அவர்!
வண்ண வண்ணப் பூவில் காயை வைத்தவனைக் காட்டியவர் அவர்!
ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத முருகனா நீ' என்று ஆண்டியின் கதைக்குப் பாட்டெழுதி அசரவைத்தவர் அவர்.
ஆறு மனமே ஆறு, அந்த ஆண்டவன் கட்டளை ஆறு என்று ஆண்டவனின் கட்டளையைச் சொன்னவர் அவர்!
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது, வல்லவன் வகுத்ததடா' என்று சொல்லி விட்டுச் சென்றவர் அவர்.
அவனைக் கண்டால் வரச் சொல்லடி, அன்றைக்குத் தந்ததைத் தரச் சொல்லடி' என்று கண்ணனை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியவர் அவர்!
ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்' என்று காதலுக்கு பொருள் சொல்லி விட்டுப் போனவர் அவர்!
மண்பார்த்து விளைவதில்லை, மரம் பார்த்துப் படர்வதில்லை என்று கன்னியரைப் பூங்கொடிகளுக்கு உவமையாகச் சொன்னவர் அவர்.
சொல்லலெல்லாம் தூய தமிழ்ச் சொல்லாகுமா? சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா என்று மங்கையரின் மேன்மையைச் சொன்னவர் அவர்!
பெண்ணாகப் பிறந்து விட்டால் கண்ணுறக்கம் இரண்டு முறை' என்று பெண்களின் துயரத்தை விளங்க வைத்தவர் அவர்
மனிதன் மாறிவிட்டான், மதத்தில் ஏறிவிட்டான், என்று இன்றைய மனிதனின் நிலைப்பாட்டைச் சொல்லி விட்டுப் போனவர் அவர்!
சின்ன மனிதன், பெரிய மனிதனின் செயலைப் பார்த்து சிரித்துவிட்டுப் போனவர் அவர்!
ஒன்று எங்கள் ஜாதியே, ஒன்று எங்கள் நீதியே, உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களேயென்று உழைப்பை மேன்மைப் படுத்தியவர் அவர்!
மாபெரும் சபையினில் நீ நடந்தால் மாலைகள் விழ வேண்டும், ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று பலர் போற்றிப் புகழ வேண்டும் என்று தனிமனித உயர்விற்கும் நேர்மையான வாழ்விற்கும் வழி சொல்லிவிட்டுப்போனவர் அவர்.
வீடுவரை உறவு, வீதிவரை மனைவி' என்று நிலையாமைத் தத்துவத்தைச் சொன்னவர் அவர்.
போனால் போகட்டும் போடா, இந்தப் பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா என்று வாழ்க்கையை வரிகளாக்கியவர் அவர்!
"இது நமக்காக எழுதிய பாடல்" என்று பலரையும் மகிழ்வு கொள்ளும்படி அல்லது உருகிப்போகும்படி எண்ணற்ற அற்புதமான பாடல்களை எழுதியவர் அவர்!
அவருடைய புகழ் வாழ்க! அவரைப்பற்றிய நினைவுகள் வளர்க!
---------------------------------------------------------------
பிறந்த நாளிற்கு வந்தவர்களை சும்மா அனுப்பலாமா? இனிப்பைப் பாட்டாகக் கொடுத்திருக்கிறேன். பாடல் வரிகள்
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது
(ஒளிமயமான)
நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த
நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்
நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த
நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்
மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றால்
வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க என்றவர் பாடுகின்றார்
(ஒளிமயமான)
குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள்
கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக
குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள்
கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக
மங்கலச் செல்வி அங்கயர்க்கண்ணி திருமகளே வருக
வாழும் நாடும் வளரும் வீடும் மணம்பெறவே வருக
(ஒளிமயமான)
====================================================================
2
நாத்திகம், பகுத்தறிவு பற்றி கவிஞர் கண்ணதாசன்.
ஈ வே ரா சேலத்தில் நடத்தியது போல் சென்னையிலும் ஒரு ஆபாச ஊர்வலம் நடத்த முயன்ற போது கண்ணதாசன் அவர்களால்
எழுதப்பட்ட கட்டுரை இது. இதைத் தொடர்ந்து அந்த ஆபாச ஊர்வலம் கைவிடப்பட்டது.
(கவிஞர் கண்ணதாசனின் எண்ணங்கள் ஆயிரம் என்ற நூலிலிருந்து!)
நான் ஒரு இந்து. இந்து என்பதில் நான் பெருமைப்படுகிறேன்.
நான் எல்லா மதத்தினரையும் மனமார நேசிக்கிறேன்; ஆனால் இந்துவாகவே வாழ விரும்புகிறேன்.
நான் கடவுளை நம்புகிறேன்; அவனைக் காட்டியவனைப் போற்றுகிறேன்;
அந்தக் கடவுளைக் கல்லிலும், கருத்திலும் கண்டு வணங்குகிறேன்.
ஆன்மா இறைவனோடு ஒன்றிவிடும்போது, அமைதி இருதயத்தை ஆட்சி செய்கிறது.
நாணயம், சத்தியம், தர்மம் இவற்றின் மீது நம்பிக்கை பிறக்கிறது.
நேரான வாழ்க்கையை இருதயம் அவாவுகிறது. பாதகங்களை, பாவங்களை கண்டு அஞ்சுகிறது.
குறிப்பாக ஒரு இந்துவுக்குத் தன் மத அமைப்பின் மூலம் கிடைக்கும் நிம்மதி, வேறு யாருக்கும் கிடைப்பதில்லை.
கடைசி நாத்திகனையும், அது ஆத்திகன் என்றே அரவணைத்துக் கொள்கிறது.
என்னை திட்டுகிறவன்தான் அடிக்கடி நினைத்துக் கொள்கிறான்; ஆகவே அவன்தான் முதல் பக்தன்” என்பது இறைவனின் வாக்கு.
இந்து மதத்தைப்போல் சகிப்புத்தன்மை வாய்ந்த மதம் உலகில் வேறு எதுவும் இல்லை .
நீ பிள்ளையாரை உடைக்கலாம்;
பெருமாள் நாமத்தை அழிக்கலாம்;
மதச்சின்னங்களை கேலி செய்யலாம்;
எதைச் செய்தாலும் இந்து சகித்துக் கொள்கிறான்.
ஏதோ பரம்பரையாகவே பகுத்தறிவாளனாகப் பிறந்தது போல் எண்ணிக் கொண்டு, பாத்திரத்தை நிரப்புவதற்காகவே சாஸ்திரத்தைக் கேலி செய்யும் பகுத்தறிவுத் தந்தைகள் இஸ்லாத்தின் மீதோ, கிறிஸ்துவத்தின் மீதோ கை வைக்கட்டும் பார்க்கலாம்.
கடந்த நாற்பது வருசங்களில் ஒரு நாளாவது அதற்கான துணிவு ஏற்பட்டதாக தெரியவில்லையே!
பாவப்பட்ட இந்து மதத்தை மட்டுமே தாக்கித் தாக்கி, அதை நம்புகிற அப்பாவிகளிடம் ‘ரேட்டு ‘ வாங்கிச் சொத்துச் சேர்க்கும் ‘பெரிய ‘ மனிதர்களைத்தான் நான் பார்த்திருக்கிறேன்.
அவர்கள் பேசுகிற நாத்திக வாதம், அவர்கள் ‘குடும்பம் நடத்தும் வியாபாரம்’ என்பதை அறியாமல், வாழ்கையையே இழந்து நிற்கும் பல பேரை நான் அறிவேன்.
பருவ காலத்தில் சருமத்தின் அழகு மினுமினுப்பதைப் போல், ஆரம்ப காலத்தில் இந்த வாதத்தைக் கேட்டு ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்.
நடிகையின் ‘மேக் அப்’ பைக் கண்டு ஏமாறுகிற சராசரி மனிதனைப்போல், அன்று இந்த வாதத்தைக் கேட்டு ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்.
அந்த கவர்ச்சி எனக்கு குறுகிய காலக் கவர்ச்சியாகவே இருந்தது இறைவனின் கருணையே!
என்னை அடிமை கொண்ட கண்ணனும், ராமனும் இன்று சந்திர மண்டலத்துக்குப் பயணம் போகும் அமெரிக்காவையே அடிமைக்கொண்டு, ஆன்மீக நெறியில் திளைக்க வைத்திருக்கிறார்கள்.
அமெரிக்காவை விடவா ஈரோடு பகுத்தறிவில் முன்னேறிவிட்டது?
வேண்டுமானால் ‘பணத்தறிவில்' முன்னேறிவிட்டது என்று சொல்லலாம்.
ஆளுங் கட்சியாக எது வந்தாலும் ஆதரித்துக் கொண்டு, தன் கட்சியும் உயிரோடிருப்பதாகக் காட்டிக் கொண்டு, எது கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு வாழ்கையை சுகமாக நடத்துவதற்கு, இந்த நாத்திக போலிகள் போட்டிருக்கும் திரை, பகுத்தறிவு!
உலகத்தில் நாத்திகம் பேசியவன் தோற்றதாக வரலாறு உண்டே தவிர,வென்றதாக இல்லை.
இதை உலகமெங்கும் இறைவன் நிரூபித்துக் கொண்டு வருகிறான்.
அவர்கள் எப்படியோ போகட்டும்.
இந்த சீசனில் வாழ்ந்து கொண்டிருக்கும் சில மனிதர்கள் கோவில்களுக்கு முன்னால் பகுத்தறிவு விளையாட்டு விளையாடிப் பார்க்கலாம் என்று கருதுகிறார்கள். இதை அனுமதித்தால், விளைவு மோசமாக இருக்கும்.
நம்பிக்கை இல்லாதவன் கோவிலுக்கு போக வேண்டாம். நம்புகிறவனை தடுப்பதற்கு அவன் யார்?
அப்பாவி இந்துக்கள் பேசாமல் இருக்க இருக்கச் சமுதாய வியாபாரிகள் கோவிலுக்கு முன் கடை வைக்க தொடங்குகிறார்கள்
.
வெள்ளைக்காரனின் கால்களை கட்டிப்பிடித்துக் கொண்டு ‘போகாதே போகாதே என் கணவா ‘ என்று பாடியவர்களுக்கு நாட்டுப் பற்று எங்கிருந்து வரும்?
நாட்டு பற்று இல்லாதவர்களுக்கு தெய்வப் பற்று எங்கிருந்து வரும்?
தெய்வப் பற்று இல்லாதவர்களுக்கு நாணயம், நேர்மை இவற்றின் மீது நம்பிக்கை எங்கிருந்து வரும்?
இந்த நாலரை கோடி (அன்று) மக்களில் நீங்கள் சலித்துச் சலித்து எடுத்தாலும், நாலாயிரம் நாத்திகர்களைக் கூட காண முடியாது.
பழைய நாத்திகர்களை எல்லாம் நான் பழனியிலும், திருப்பதியிலும் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்! ஆகவே இந்த காரியங்களுக்கு யாரும் துணை வர மாட்டார்கள்.ஆனால் இதை அனுமதித்தால் விளைவுகள் மோசமாக இருக்கும்
ஆக்கம்: கவியரசர் கண்ணதாசன்
=========================================
அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!