மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label குட்டிக் கதைகள். Show all posts
Showing posts with label குட்டிக் கதைகள். Show all posts

13.8.20

வாழ்க்கை ரகசியத்தை உணர்த்த ஒரு எருமைக் கதை!!!!

வாழ்க்கை ரகசியத்தை உணர்த்த ஒரு எருமைக் கதை!!!!

ஒருநாள் எருமைக்கு அசாத்திய கோபம் வந்தது.

கோபத்தை தீர்த்துக் கொள்ள அது நேரடியாய்ப் போய் நின்ற இடம் கைலாயம். கழுத்தில் பாம்பு படமெடுத்து நிற்க தியானத்தில் அமர்ந்திருந்த சிவன் மெல்லக் கண் திறந்தார்.

வந்திருப்பது எருமை என்று மட்டுமல்ல ஏன் வந்திருக்கிறது என்ற காரணமும் அவருக்குத் தெரியும்.

ஆயினும் சுற்றியிருக்கும் பூத கணங்களும் தெரிந்து கொள்ளட்டுமே என்ற எண்ணத்தில்,

வந்தாயா எருமையே! வா, வா எப்படி இருக்கிறாய்? என்றார்.

எருமைக்கு கோபம் தீர்ந்தபாடில்லை.

முக்காலமும் உணர்ந்த ஐயனே! நீர் அறியாததா? எனது நலம்?! ஆயினும் நீங்கள் கேட்டதன் பின் பதிலுரைக்காமல் இருத்தல் தகுமோ!

அதனால் சொல்லித்தான் தீர வேண்டும். எம்பெருமானே!

எங்களை ஏன் இப்படிப் படைத்தீர்கள். பூலோகத்தில் மானுடர்கள் எங்களைச் சுத்தமாக மதிப்பதே இல்லை.

நாளும் அவர்களது பொல்லாச் சொற்களில் மாட்டிக் கொண்டு அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கிறோம் நாங்கள்.

சேற்றில் புரளும் எருமைகளே! மந்த புத்தி எருமைகளே! எருமை மாட்டில் மழை பெய்தார் போல, எருமை போல அசையா ஜென்மமே, சூடு, சொரணை இல்லாத எருமைகளே!

என்று எப்படியெல்லாம் மானுடர்கள் எங்களைத் திட்டித் தீர்க்கிறார்கள் தெரியுமா?

நினைத்தால் கோபத்திலும், ஆத்திரத்திலும் மனம் புழுங்கிச் சாகிறது.

நாங்கள் அப்படியென்ன பாவம் செய்தோம்? இப்படி ஒரு பெயர் வாங்க?!

எம்பெருமான் தமக்குள் புன்னகைத்துக் கொண்டவராக எருமையை நோக்கி இப்படிச் சொன்னார்...

என்னைக் கூட சுடுகாட்டில் ஆடுபவன், பிணம் எரித்த சாம்பல் பூசித் திரிபவன், கபால ஓட்டில் பிச்சையெடுப்பவன் என்று மானுடர்களில் பலர் சொல்வதுண்டு என்றார்.

எருமை அவரது பகடியைக் கவனித்தது போலத் தெரியவில்லை.

ஐயனே... உங்கள் அருமை அறியாதவர்கள் கிடக்கிறார்கள் அவர்களை விடுங்கள்...

எங்களுக்கு ஆறாத மற்றொரு ரணம் உண்டு. பசுக்களுக்கும், எங்களுக்கும் என்ன பெரிய வித்யாசம்?

அவை தரும் பாலும் வெண்மையாகத்தான் இருக்கிறது. நாங்கள் தரும் பாலும் வெண்மையாகத் தான் இருக்கிறது.

ஆனால், இந்த மட மானுடர்கள் அவைகளை மட்டும் புனிதம் என்ற பெயரில் போற்றிப் புகழ்கிறார்கள்.

கோமியத்தைப் பிடித்து வீட்டு மூலை, முடுக்கெல்லாம் தெளித்து பரிமள வாசம் என்று மெச்சிக் கொள்கிறார்கள்.

ஆனால், எங்களை என்னடாவென்றால் வீட்டுக்குள் நுழையவே விடுவதில்லை.

எப்போது பார்த்தாலும் மந்த புத்தி எருமை என்று கரித்துக் கொட்டுகிறார்கள்.

இதிலிருந்து நாங்கள் விடுபட வேண்டும். நாங்களும் பசுக்களுக்கு இணையாக மதிக்கப்பட வேண்டும்.

பரம்பொருளான உங்களால் முடியாதது உண்டா?! எங்களை தயவு செய்து பசுக்களுக்கு இணையாக மாற இக்கணமே வரமளியுங்கள்.
- என்று சிவனிடம் கோரிக்கை வைத்தது எருமை.

இதழ்களில் நெளியும் புன்னகையுடன், சாந்த ஸ்வரூபியாக எருமை சொன்னதைச் செவி மடுத்த ஈசன்...

அதைக் காத்தருளும் அபய முத்திரையுடன் எருமையை ஆசிர்வதித்து.
எருமையே பிரம்மன் படைப்பில் அனைத்து உயிர்களும் சமமானவையே.

ஒன்றில் உயர்வும் பிறிதொன்றில் தாழ்வும் எப்போதும் இல்லை.

உன் கோரிக்கை நியாயமானது தான்.

ஆதலின் அதை நிறைவேற்ற நான் முயற்சிக்கிறேன்.

அதற்கு முன்பு நீ எனக்கொரு உறுதிமொழி அளிக்க வேண்டும். அளித்தால் நான் உன்னை பசுக்களுக்கு இணையாக மானுடர் மதிக்கும் படியாகச் செய்வேன் என்றார்.

எருமைக்கு ஒரே சந்தோசமாகி விட்டது.
உத்தரவிடுங்கள் எம்பெருமானே... என்றது.

ஈசன் சொன்னார்...

பூலோகத்தில் பசுக்களுக்கு இணையாக மதிக்கப்பட வேண்டும் என்ற உனது விருப்பத்தை நான் நிறைவேற்ற வேண்டுமெனில்,

நீ இன்று முதல் சேற்றில் புரளும் உன் இன்பத்தைக் கைவிட வேண்டும்.

சொந்த ஆசையிலோ அல்லது சூழ்நிலை காரணமாகவோ கூட நீ இனி எப்போதும் சேற்றில் அமிழ்ந்து புரளக்கூடாது. இந்த உத்தரவாதம் மட்டும் அளித்தாயானால் நாளை முதல் பூலோகத்தில் எருமைகளும், பசுக்களும் ஒரே விதத்தில் மதிக்கப்பட வேண்டும் என்று நான் வரமளிக்கிறேன்' என்றார்.

எம்பெருமானின் கருணையில் முகம் பூரித்தாலும் எருமைக்கு அவர் கேட்ட உத்தரவாதம் நடு மண்டையில் கல்லைத் தூக்கிப் போட்டாற் போலிருந்தது.

அது ஒரு நொடி திகைத்து நின்றது. பின் எம்பெருமானை நோக்கி;
சர்வேஸ்வரா, நீங்கள் கேட்கும் உறுதிமொழியை என்னால் தர இயலாது. மானுடர்களின் மதிப்பு, மரியாதைக்காக என்னால் எனது சிற்றின்பத்தைப் பலி கொடுக்க முடியாது.

சேற்றில் புரள்வது எருமைகளான எங்கள் இனத்திற்கு கோடானு கோடி இன்பங்களில் ஒன்று.

அதைத் தாரை வார்த்து விட்டு பசுக்களுக்கு இணையாக மதிக்கப்பட்டு நாங்கள் பெறப்போவது ஏதுமில்லை.

என் கோபத்தின் மீதே எனக்கிப்போது கோபம் வருகிறது. உங்கள் ஆசி போதும். எனக்கு வரம் ஏதும் வேண்டாம்' என்று சொல்லி புறமுதுகிட்டு ஓடிப் போனது.

நடந்தது அத்தனையையும் கவனித்துக் கொண்டிருந்த நந்தி தேவரும், பூத கணங்களும் எம்பெருமானின் அருகில் அணைந்து; மகாதேவரே! எருமையின் கோரிக்கையில் தவறென்ன? என்றார்கள்.

ஜடைமுடியில் உச்சிப் பிறைநிலா பளீரென ஒளி விட... மந்தகாசப் புன்னகையுடன் அவர்களை நோக்கிய மகா நீலகண்டர்...

கோரிக்கையில் தவறில்லை நந்தி...

 அந்தக் கோரிக்கையை அடைவதற்கான முயற்சியில் தான் தடை. எருமை முடிவெடுத்து விட்டது சேற்றில் புரள்வது தான் தனக்கு இன்பம் என.
அப்படி இருக்கையில் மானுடர்கள் அதை குளிப்பாட்டி பூஜித்து நடு வீட்டில் கொண்டு வைக்க நினைத்தாலும் அதன் நினைவெல்லாம் சேற்றைத் தேடிக் கண்டடைவதாகத் தான் இருக்கும்.

நினைவில் எப்போதும் சேற்றைத் தேடும் எருமையை மானுடர் எப்படி பூஜிப்பர்? எருமை சேற்றைக் கைவிட முடியாததோடு தமக்கு நிஜமான இன்பம் மானுடர்களின் மரியாதையில் இல்லை என்பதையும் கண்டு கொண்டது.

*இது தன்னையறிந்த நிலை. இந்த நிலையை மனிதர்கள் அடைவார்களாயின் அவர்களுக்குள் போட்டி பொறாமை என்பதே இல்லாமல் நீங்கி விடும்.*

*வாழ்வின் ரகசியம் இது தான்.*

*ஒவ்வொரு மனிதனும் தன்னைத் தானறிந்து செயல்பட்டால் அதற்குண்டான வெற்றிக்கும், தோல்விக்கும் தானன்றி வேறெவரும் காரணமில்லை என்பதையும் உணர்வார்கள்.*

*அதோடு வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டுமெனில் எதையாவது தியாகம் செய்தே தீர வேண்டும் என்பது எழுதப்படாத விதி.*

அந்த தியாகத்தைச் செய்து வாழ்வின் அடுத்த படிக்கு முன்னேற எருமைக்கு மனமில்லை.

அதனால் அது தனது வழக்கமான நிலையிலேயே நீடிக்கிறது என்றும் ஈசன் பகர்ந்தார்.

இனிமேல் அதற்கு தன்னைப் பற்றிய சுயமதிப்பீட்டில் மனக்குறை இருக்காது என்று மென்னகையுடன் நிஷ்டையில் ஆழ்ந்து போனார் மூவுலகையும் பரிபாலிக்கும் எம்பெருமான் ஈசன்..
---------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!!!
அன்புடன்
வாத்தியார்
==========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2.5.19

சீனர் சொன்ன தத்துவக் கதை!


சீனர் சொன்ன தத்துவக் கதை!

*சீன அதிபர் சொன்ன தத்துவக் கதை.*..

``சிறு வயதில் நான் மிகுந்த சுயநலக்காரனாக இருந்தேன். நல்ல பொருள் எதுவாக இருந்தாலும், எது கிடைத்தாலும், அதை நானே கைப்பற்றிக் கொள்வேன்.

இந்தக் குணத்தின் காரணமாகவே, மெதுவாக எல்லோரும் என்னை விட்டு விலக ஆரம்பித்தார்கள்.

ஒரு கட்டத்தில் எனக்கு நண்பர்களே இல்லாமல் போய் விட்டார்கள். நானோ என் மீது தவறு இருக்கிறது என்றே நினைக்கவில்லை;

மற்றவர்களைக் குறை சொல்லிக் கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் என் அப்பா எனக்குக் கற்றுக் கொடுத்த மூன்று வாக்கியங்கள் தாம்  வாழ்க்கையில் எனக்கு உதவியாக இருந்தன.

ஒருநாள் அப்பா, இரண்டு அகலமான பாத்திரங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார்.

அந்த இரண்டையும் சாப்பாட்டு மேஜை மேல் வைத்தார். ஒரு பாத்திரத்திலிருந்த நூடுல்ஸின் மேல் மட்டும் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது;

இன்னொன்றின் மேல் முட்டையில்லை. அப்பா என்னிடம் கேட்டார்... `கண்ணு... உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே எடுத்துக் கொள்!’ என்றார். அந்த நாட்களில் முட்டை கிடைப்பது அரிதாக இருந்தது.

புத்தாண்டின் போதோ, பண்டிகைகளின் போதோ தான் எங்களுக்குச் சாப்பிட முட்டை கிடைக்கும். எனவே, நான் முட்டை வைத்திருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை எடுத்துக் கொண்டேன்.

நாங்கள் சாப்பிட ஆரம்பித்தோம். என்னுடைய புத்திசாலித்தனமான முடிவுக்காக எனக்கு நானே என்னைப் பாராட்டிக் கொண்டேன். முட்டையை ஒரு வெட்டு வெட்டினேன். என் தந்தை அவருடைய கிண்ணத்தை எடுத்து சாப்பிட ஆரம்பித்த போது எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அவருடைய கிண்ணத்தில் நூடுல்ஸுக்கு அடியே இரண்டு முட்டைகள் இருந்தன.

அதைப் பார்த்து விட்டு நான் மிகவும் வருத்தப்பட்டேன். அவசரப்பட்டு நான் எடுத்த முடிவுக்காக என்னை நானே திட்டிக் கொண்டேன். அப்பா மென்மையாகச் சிரித்தபடி என்னிடம் சொன்னார்...

`மகனே நினைவில் வைத்துக் கொள்... உன் கண்கள் பார்ப்பது உண்மையில்லாமல் போகலாம். மற்றவர்களுக்குக் கிடைப்பதை நீ அடைய வேண்டும் என நினைத்தால் இழப்பு உனக்குத் தான்.’’

அடுத்த நாளும் என் அப்பா இரண்டு பெரிய கிண்ணங்கள் நிறைய நூடுல்ஸ் சமைத்துக் கொண்டு வந்து சாப்பாட்டு மேஜையில் வைத்தார்.

முதல் நாளைப் போலவே ஒரு கிண்ணத்திலிருந்த நூடுல்ஸின் மேல் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது; இன்னொன்றில் இல்லை. அப்பா என்னிடம் கேட்டார்... `

மகனே... உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே தேர்ந்தெடுத்துக் கொள்!’ இந்த முறை நான் கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசித்தேன். முட்டை வைக்கப்படாத கிண்ணத்தை எடுத்துக் கொண்டேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது.

நூடுல்ஸை அள்ளும் குச்சியால், கிண்ணத்துக்குள் அடிவரை எவ்வளவு துழாவிப் பார்த்தும் ஒரு முட்டை கூடக் கிடைக்கவில்லை. அன்றைக்கும் அப்பா சிரித்தபடி சொன்னார்...

மகனே... எப்போதும் அனுபவங்களின் அடிப்படையிலேயே ஒன்றை நம்பக் கூடாது.

ஏனென்றால், சில நேரங்களில் வாழ்க்கை உன்னை ஏமாற்றக் கூடும், தந்திரத்தில் விழ வைக்கும். இதை ஒரு பாடமாக எடுத்துக் கொள். இதை எந்தப் பாடப்புத்தகங்களிலிருந்தும் கற்றுக் கொள்ள முடியாது.’

மூன்றாவது நாள், அப்பா மறுபடியும் இரு பெரிய கிண்ணங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார். இரு கிண்ணங்களையும் மேஜையின் மேல் வைத்தார்.

வழக்கம் போல ஒரு கிண்ணத்திலிருந்த நூடுல்ஸில் முட்டை; மற்றொன்றில் இல்லை. அப்பா கேட்டார்... மகனே நீயே தேர்ந்தெடுத்துக் கொள். உனக்கு இவற்றில் எது வேண்டும்?’ இந்த முறை அவசரப்பட்டு கிண்ணத்தை எடுத்து விடாமல் நான் பொறுமையாக அப்பாவிடம் சொன்னேன்...

அப்பா நீங்கள் தான் இந்தக் குடும்பத்தின் தலைவர். நீங்கள் தான் நம் குடும்பத்துக்காக உழைக்கிறீர்கள். எனவே, முதலில் நீங்கள் உங்களுக்கான கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மற்றதை நான் எடுத்துக் கொள்கிறேன்’ என்றேன்.

 அப்பா என் கோரிக்கையை நிராகரிக்கவில்லை. முட்டை இருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை எடுத்துக் கொண்டார். நான் எனக்கான நூடுல்ஸைச் சாப்பிட ஆரம்பித்தேன்.

நிச்சயமாக இந்தப் பாத்திரத்தில் முட்டை இருக்காது என்று தான் நினைத்தேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. கிண்ணத்தின் அடியில் இரண்டு முட்டைகளிருந்தன.

அப்பா கண்களில் அன்பு கனிய என்னைப் பார்த்தார். பிறகு புன்முறுவலோடு சொன்னார்... மகனே, நினைவில் வைத்துக் கொள். மற்றவர்களுக்கு நீ நல்லது நினைக்கும் போதெல்லாம், உனக்கும் நல்லதே நடக்கும்!’

அப்பா சொன்ன இந்த மூன்று வாசகங்களை, வாழ்க்கைப் பாடங்களை எப்போதும் நான் நினைவில் வைத்திருக்கிறேன். அதன்படி தான் நான் செயலாற்றுகிறேன்.

உண்மையைச் சொல்லப் போனால், நான் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறேன்.
--------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
============================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1.5.19

குட்டிக்கதை: கடைசி இலை!!!


குட்டிக்கதை: கடைசி இலை!!!

*“கடைசி இலை’*

என்பது ஓர் ஆங்கிலக் கதையின் தலைப்பு.

இதன் கதாநாயகன் ஒரு நோயாளி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேருகிறான்.

அவன் மனதில் அணுவளவு கூட தாம் குணமடைவோம் என்ற நம்பிக்கையில்லை. இதனால் மனமும் பாதிக்கப்பட்டு விட உட்கொள்ளும் மருந்தினால் எவ்வித நன்மையும் ஏற்படவில்லை.

ஆனால் அவனைப்  பேணும் செவிலிப் பெண் மட்டும் நம்பிக்கையுடன் அவனை எப்போதும் ஊக்கப்படுத்தி  கொண்டே இருக்கிறாள்.

அவனது அறையின் வெளியில் ஒரு மரம் தனது இலைகளை  தினமும் உதிர்த்து  கொண்டே வருகிறது. அந்தக் காட்சி அவனை மிகவும் பாதித்தது.

அதைச் சுட்டிக் காட்டி அதைப்போல தானும் செத்துக் கொண்டிருப்பதாக புலம்ப ஆரம்பிக்கிறான்.

மரத்தின் ஓர் இலையை தவிர அனைத்து இலைகளும் உதிர்ந்து போகின்றன.

அந்தக் கடைசி இலை விழும் போது தானும் இறந்து விடுவோம் என அஞ்சுகிறான்.

சோகத்தின் பிள்ளையாய் மாறிக் கொண்டே வருகிறான்.

செவிலி எவ்வளவு தைரியம் சொல்லியும் அவன் நம்பவில்லை.

நாளைக் காலை கடைசி இலை உதிரும் போது தானும் உதிர்வோம் என்றே நம்பினான்.

பொழுது விடிந்தது. என்ன ஆச்சரியம்! அந்த ஒற்றை இலை உதிரவில்லை.!

இதைக் கண்டதும் அவனுக்கு மகிழ்ச்சி பிறந்து விட்டது.

நம்பிக்கை விதை முளை விட்டது. அந்த ஒற்றை இலை போல் தானும் வாழலாம் என எண்ண ஆரம்பித்து விட்டான்.

மருத்துவரோடும், மருந்துகளோடும் நன்கு ஒத்துழைத்தான். விரைவில் குணமடைந்தான்.

அவன் வீட்டுக்குச்  செல்லும் நாள் வந்தது. செவிலி வந்து அவனை மரத்தருகில் அழைத்துச் சென்றாள். அந்த ஒற்றை இலையை  பறித்து அவனிடம் தந்தாள்.

அது வெறும் துணியில் வரையப்பட்ட செயற்கை இலை என்பது தெரிகிறது.

அதை அந்தச் செவிலி, மரத்தின் கடைசி இலை உதிர்வதற்கு முன் ஓர் ஓவியனைக் கொண்டு வரைந்த இலையை மரத்தில் பொருத்தியிருந்தாள். அது அவனது நம்பிக்கையை வளர்க்கும் கருவியாகி வெற்றி பெற்றது.

பார்த்தீர்களா! நம்பிக்கை என்னென்ன செய்கிறதென்று! திடமான உள்ளமும், தன்னம்பிக்கையும் இருந்தால், உடலென்ன, உலகையே வென்று காட்டலாம்.

இதை உண்மையென்று நம்புங்கள். உடலும், உள்ளமும் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளவை.

ஆம், நண்பர்களே,

சிறு நம்பிக்கைத் தூறல் பட்டாலே போதும். செடிகளும், பூக்களும் பூத்துக் குலுங்க ஆரம்பித்து விடும்.!
------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.10.18

என்ன நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும்!


என்ன நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும்!

எதுவும் நடக்கும் - படித்ததில் சுவைத்த சிந்தனைக் கதை

ஒரு வீட்டில் ஒரு எலி தனது இரவு நேர இரையை தேடப் புறப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது வளையை விட்டு மெள்ள
தலையை உயர்த்திப் பார்த்தது.

வீட்டின் எஜமானனும், எஜமானியும் ஒரு பார்சலைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள்.

‘ஏதோ நாம் சாப்பிடக்கூடிய பொருள் தான் உள்ளே இருக்கும்!’ என்று ஆவலோடு பார்த்தது அந்த எலி.

அவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப்பொறி அதைப் பார்த்ததும் எலிக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது.

உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது ‘பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார் எனக்கு பயமாக இருக்கிறது’ என்று.

அதைக் கேட்ட கோழி விட்டேற்றியாகச் சொன்னது ‘உன்னைப் பொறுத்தவரை கவலைப்பட வேண்டிய விஷயம் தான்.
நல்லவேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை’ என்று.

‘உடனே அது பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் அதே விஷயத்தைப் போய்ச் சொல்லியது வான்கோழியும் அதே பதிலைச்
சொல்லியதோடு ‘நான் எலிப்பொறியை யெல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்’ என்றது.

மனம் நொந்த எலி அடுத்து பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே விஷயத்தைச் சொல்லியது.

ஆடும் அதே பதிலைச் சொல்லியது. அது மட்டும் அல்ல ஆடு, அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை ‘எலிப்பொறியை பார்த்து என்னையும் பயப்படச் சொல்கிறாயா?’ என்று நக்கலும் அடித்தது.

அன்று இரவு எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு பண்ணையாரும் அவர் மனைவியும் தூங்கப் போயினர்.

ஒரு அரை மணி நேரத்தில் டமால் என்றொரு சத்தம்.

எலி மாட்டிக்கொண்டு விட்டது என்று பண்ணையார் மனைவி ஓடிவந்து எலிப்பொறியைத் கையில் தூக்கினாள் ‘ஆ’ எனக்
கத்தினாள்.

எலிக்கு பதிலாக பாதி மாட்டியிருந்த பாம்பு ஒன்று எஜமானியம்மாளைக் கடித்து விட்டது எஜமானியம்மாளை உடனே
ஆஸ்பத்திரிக்கு எடுத்துக் கொண்டு ஓடினார்கள். விஷத்தை முறிக்க இன்ஜெக்சன் போட்ட பின்னும் பண்ணையார் மனைவிக்கு
ஜுரம் இறங்கவேயில்லை.

அருகில் இருந்த ஒரு மூதாட்டி ‘பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு ‘சிக்கன் சூப் வைத்துக்கொடுத்தால் நல்லது’ என்று
யோசனை சொன்னாள்.

கோழிக்கு வந்தது வினை.

உடனுக்குடன் கோழி அடித்து சூப் வைக்கப்பட்டது. கோழி உயிரை விட்டது. அப்போதும் பண்ணையார் மனைவியின் ஜுரம்
தணியவில்லை. உறவினர்கள் சிலர் வந்தார்கள்.

அவர்களுக்குச் சமைத்துப்போட வான் கோழியை அடித்தார்கள். வான்கோழியும் உயிரை விட்டது.

சில நாட்களில் பண்ணையாரம்மாவின் உடல் நலம் தேறியது.

பண்ணையார் மனைவி பிழைத்ததைக் கொண்டாட ஊருக்கே விருந்து வைத்தார்.

இந்த முறை ஆட்டின் முறை. விருந்தாக ஆடும் உயிரை விட்டது.

நடந்த அத்தனை நிகழ்வுகளையும் எலி வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது.

பண்ணையார் மனைவியின் பாம்புக் கடிக்குக் காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார் பண்ணையார்.
இப்போது எலி தப்பித்து விட்டது.

நீதி ::--

அருகில் இருப்பவர்கள் தனக்கொரு பிரச்சினை என்று வந்தால் ‘என்ன’ என்றாவது கேளுங்கள். ஏனென்றால் யாருக்கு என்ன
பிரச்சினை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது.

அடுத்தது அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம். அடுத்த முறை நம்முடையதாகவும் இருக்கலாம்

என்ன நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும்!
----------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.8.18

இறைவனிடம் என்ன கேட்க வேண்டும்?


இறைவனிடம்  என்ன கேட்க வேண்டும்?

குட்டி கதை

ஒரு "ராஜா" தன் மந்திரியை எப்போதும் சிற்றரசர்களிடமிருந்து கப்பம் வசூலித்து வர அனுப்புவார்.

திரும்பும் போது ஒரு அடர்ந்த காட்டை கடந்து வரவேண்டும்.

மந்திரி கூட நான்கு காவல்காரகளையும் அழைத்துச் செல்வார்.

ஒரு முறை அவர் திரும்ப மிக நேரமாகி விடுகிறது.

காட்டு வழியே வரும்போது திருடர்கள் வந்து வழிமறிக்கிறார்கள்.

மந்திரியும் காவலர்களும் வந்திருக்கும் கூட்டத்தைப் பார்த்து திகைத்து இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டு நின்று விடுகிறார்கள்.

எங்கிருந்தோ "ஆறு இளையர்கள்" வந்து அவர்களை காப்பாற்றுகிறார்கள்.

மந்திரியுடன் ஆறு இளையர்களும் "ராஜாவிடம்" வருகிறார்கள்.

"ராஜாவும்" மிகவும் சந்தோஷமடைந்து இளையர்களிடம்,

”உங்களுக்கு எது வேண்டுமானாலும் கேளுங்கள் தருகிறேன்” என்று கூறுகிறார்.

"முதல்" இளைஞன் பண வசதி வேண்டும் என்று கேட்கிறான்.

"இரண்டாவது" இளைஞன் வசிக்க நல்ல வீடு வேண்டும் என்று கேட்கிறான்.

"மூன்றாவது" இளைஞன் தான் வசிக்கும் கிராமத்தில் சாலைகள சீர் செய்ய வேண்டும் என்று கேட்கிறான்.

"நான்காவது" இளைஞன் தான் விரும்பும் செல்வந்தரின் மகளை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்கிறான்.

"ஐந்தாவது" இளைஞன் தன் குடும்பத்தினர் இழந்த மிராசுதார் என்ற பட்டம் மறுபடி வேண்டும் என்று கேட்கிறான்.

அனைத்தையும் தருகிறேன் என்று சொன்ன "ராஜா",

"ஆறாவது" இளைஞனைப் பார்த்து “உனக்கு என்ன வேண்டும்” என்று கேட்கிறான்.

இளைஞன் சற்று தயங்குகிறான்,

"ராஜா" மீண்டும் கேட்க இளைஞன் கூறுகிறான்,

"அரசே எனக்கு பொன், பொருள் என்று எதுவும் வேண்டாம்.

வருடம் ஒருமுறை நீங்கள் ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் என்னுடன் இருந்தால் போதும்” என்று சொன்னான்.

"ராஜாவும்" இவ்வளவுதானா என்று முதலில் கேட்டான்.

பிறகுதான் இளைஞனின் கோரிக்கையில் ஒளிந்து இருந்த உண்மையை. தெரிந்து கொண்டான்...

ஆம்.

"ராஜா" அவன் வீட்டில் போய் இருக்க வேண்டுமென்றால், அவன் வீடு நன்றாக இருக்க வேண்டும். அந்த ஊருக்கு செல்லும் சாலைகள் நன்றாக இருக்க வேண்டும். வேலைக்காரர்கள் வேண்டும். அவனுக்கும் ஒரு தகுதி இருக்க வேண்டும். சொல்லப் போனால் முதல் "ஐந்து" இளைஞர்களும் கேட்து எல்லாம் இவனுக்கும் இருக்க வேண்டும். என்று தன் மகளையே திருமணம் செய்து கொடுத்தார் ,

என்று . . . ,இந்தக் கதையை முடித்தார் பேச்சாளர்.

இந்தக் கதையில் கூறிய "ராஜாதான்" அந்த "இறைவன்".

பொதுவாக எல்லோரும் "இறைவனிடம்"கதையில் கூறிய , முதல் "ஐந்து" இளைஞர்களைப் போல், தனக்கு வேண்டியதைக் கேட்பார்கள்.

கடைசி இளைஞனைப் போல் "இறைவனே"நம்மிடம் வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்தால் ,மற்றவை எல்லாம் தானாக வந்து சேரும் என்பதற்கு, எடுத்துக் காட்டாக இந்தக் கதையைக் கூறினார்!!!
---------------------------------------
படித்ததில் பிடித்தது.
அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2.7.18

Humour: நகைச்சுவைக் கதை: கணக்கு வாத்தியாரும் செக்கு மாடும்!


நகைச்சுவைக் கதை:  கணக்கு வாத்தியாரும் செக்கு மாடும்!

மாத இதழ் ஒன்றிற்காக அடியவன் எழுதிய குட்டிக் கதை. நீங்கள் படித்து மகிழ்வதற்காக அதை இன்று வலையில் ஏற்றியுள்ளேன்

அன்புடன்
SP.VR. சுப்பையா
--------------------------------------------------------------------------------

செக்கு என்றால் என்னவென்று தெரியுமா?

எனக்கும் என் வயதை ஒத்த பெரியவர்களுக்கும் தெரியும்.

இந்தத் தலைமுறையினருக்குத் தெரியாதுதான். ஆகவே செக்கின் படத்தைக் கீழே கொடுத்துள்ளேன். தெரியாதவர்கள் பார்த்துத் தெரிந்து கொள்ளூங்கள்!.

எங்கள் ஊரில் அந்தக் காலத்தில் எல்லோருமே செக்கில்தான் எண்ணெய் வாங்குவார்கள். நல்லெண்ணெய். (எள் எண்ணெய்) அப்போது (1957ல்) ஒரு லிட்டர் எண்ணெயின் விலை ஒரு ரூபாய்தான்

ஒரு ஜாடி 18 லிட்டர் எண்ணெய் பிடிக்கும். மொத்தமாக வாங்கினால் செக்கு வைத்திருப்பவரே தங்கள் வேலையாளின் மூலம் வீட்டிற்கே கொண்டுவந்து ஜாடி நிறைய ஊற்றிவிட்டுப் போவார். நுரை பொங்க பார்ப்பதற்கே ரம்மியமாக இருக்கும்.வீட்டில் சமையலுக்கு மட்டுமல்ல, எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கும் அதே நல்லெண்ணய்தான்!

சமயத்தில் தீர்ந்துபோய் அவசரத்திற்கு இரண்டு அல்லது மூன்று லிட்டர்கள் எண்ணெய் வேண்டுமென்றால் நாம்தான் போய் வாங்கிக் கொண்டு வர வேண்டும். நான் பலமுறை செக்கடிக்குப் போயிருக்கிறேன். போகும்போது, அங்கே சற்று நேரம் நின்று அதை வேடிக்கை பார்த்துவிட்டு வந்திருக்கிறேன்.பாவம் செக்கு மாடுகள். ஒரே வட்டத்திற்குள் திரும்பத் திரும்ப சுற்றிகொண்டிருக்க வேண்டியதுதான். அதனால்தான் அந்தக் காலத்தில் பெரியவர்கள், தங்கள் வீட்டில் உள்ள பெண்டாட்டிதாசர்களை, “செக்கு மாடாட்டம் பெண்டாட்டியையே சுற்றி வந்து கொண்டிருக்கிறான்” என்று கடிந்து கொள்வார்கள்.

இப்போது ஒரு லிட்டர் நல்லெண்ணையின் விலை ரூ.240:00. 56 ஆண்டுகளில் 240 மடங்கு விலை ஏறியுள்ளது.கடலை எண்ணெய், சன் ப்ளவர் ஆயில், ரிபைண்ட்ஆயில், பாமாயில் எல்லாம் பின்னால் வந்தவை. அதை நினைவில் வையுங்கள்.

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை இது. சண்முகம் செட்டியார் பள்ளிக்கூடம் ஒன்றில் கணக்கு  வாத்தியாராகப் பணி செய்து கொண்டிருந்தார். அத்துடன் தமிழ் அறிவும் மிக்கவர். சங்க இலக்கியங்களில் இருந்து சமகால இலக்கியம்வரை புரட்டி எடுத்துவிடுவார்.

அதிகாலையில் எழுந்தவர், காலைக் கடன்களை எல்லாம் முடித்துவிட்டு, ஆச்சி போட்டுக்கொடுத்த சீனூஸ் ஃபில்டர் காப்பியைச் சாப்பிட்டு விட்டு, அன்றைய நாளிதழில் மூழ்கியிருந்தார்.

ஆச்சி வந்து தோள்களைத் தொட்டவுடன்தான் தன்னிலைக்கு வந்து நிமிர்ந்து பார்த்தார்.

”எண்ணெய் தீர்ந்து போச்சு, சானா ஊரணி செக்கடிக்குப் போயி எண்ணெய் வாங்கிட்டு வாங்க” என்று சொன்னதோடு, ஒரு தூக்குப் பாத்திரத்தையும் பக்கத்தில் வைத்தார்.

“நான் போகமுடியாது. வேணும்னா நீ போய் வாங்கிக்கிட்டு வா”

“ஏன் போக முடியாது? பக்கத்திலதானே இருக்கு”

”எங்க பள்ளிக்கூடத்துப் பயலுக எவனாவது பார்த்தான்னா நாளைக்கே ஒரு புது பட்டப்பெயரை வைத்துவிடுவான்கள்!”

”இப்பவே உங்களுக்குப் பள்ளிக்கூடத்தில நாலு பெயர் இருக்காம்ல. அதோட ஒன்னு கூடுனா தப்பில்லை. போய் வாங்கிட்டு வாங்க! வாங்கிட்டு வந்தாத்தான் பூரி மசால். உங்களுக்குப் பிரியமான பலகாரம். இல்லைன்னா கோதுமை தோசைதான். யோசித்து முடிவு பண்ணுங்க!”

சொல்லிவிட்டு ஆச்சி வளவு நடைக்குள் போய்விட்டார்கள்.

வேண்டா வெறுப்பாக கிளம்பிய செட்டியார், பத்து நிமிட நடையில் செக்கடிக்கு வந்து சேர்ந்தார்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. பூரி மசால்ன்னா ருசித்துச் சாப்பிடலாம். சாப்பிட்டுவிட்டு ஆசை தீர பகலில் ஒரு மணி நேரம் தூங்கலாம்!

அவர் அங்கே வந்தபோது செக்கின் உரிமையாளர் உலகநாதன் செக்கில் அரைத்துக்கொண்டிருந்தார்.

இவரைப் பார்த்தவுடன். அந்த வேலையை விட்டுவிட்டு, முன்புறம் இருந்த அறைக்கு வந்தார். அதை அறை என்று சொல்ல முடியாது. 10 x 6 ல் கூறை வேய்ந்த இடம். ஒரு நீண்ட பெஞ்ச். அதன் மீது எவர்சில்வரிலான எண்ணெய் டிரம். மற்றும் சிறிய கல்லாப்பெட்டி. முன்புறம் மூங்கில் தட்டியிலான தடுப்பு.

”என்ன அப்பச்சி வேண்டும்?” என்று கேட்டார்

“இந்தப் பாத்திரம் என்ன அளவு பிடிக்குமோ அந்த அளவு எண்ணெய் ஊற்றப்பா” என்றார

“நான்கு லிட்டர் பிடிக்கும் அப்பச்சி” என்று சொல்லிக்கொண்டே, கனத்த குரலில்,கையைத் தட்டியவாறு ”இந்தா...இந்தா... ஓடுறா” என்று குரல் கொடுத்தார்

உடனே ஜல் ஜல் என்ற சலங்கை ஒலியுடன் உட்புறம் மாடு ஓடும் சத்தம் கேட்டது.

செட்டியார் ஆரவத்துடன் கேட்டார்: “இப்போது என்ன செய்தாய்? உள்ளே மாடு ஓடும் சத்தம் கேட்கிறதே?”

”அப்பச்சி, மாட்டை வைத்து எண்ணெய் ஆட்டும் வேலையை நான்தான் செய்ய வேண்டும். அதே போல இங்கே வியாபாரத்தையும் நானேதான் கவனிக்க வேண்டும். தனித்தனியாக ஆட்களைப் போடுவதற்கெல்லாம் வசதி பத்தாது. ஆகவே இரண்டு வேலைகளையும் நானேதான் செய்கிறேன். நான் இங்கே வந்தால் மாடு நின்று விடும். அதனால் குரல் கொடுத்தால், நான் இருப்பதாக நினைத்துக்கொண்டு மாடு ஒட்டம் எடுக்கும். ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளும் நடக்கும்”

“மாடு ஓடுகிறது என்று எப்படித் தெரியும்?”

”அதுதான் அதன் கழுத்தில் மணி ஒன்றைக் கட்டியிருக்கிறேனே. அந்த சப்தத்தில் இருந்து தெரியும்”

”கெட்டிக்காரனப்பா நீ...உன்னைப்போல எல்லோரும் பாடுபட்டால், இந்தியா அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஜப்பானாக மாறிவிடும்”  என்று பாராட்டியவர், அவனிடம் எண்ணையை வாங்கிக்கொண்டு அதற்கு உரிய காசையும் கொடுத்துவிட்டுத் திரும்பி வீட்டை நோக்கி நடக்க எத்தனித்தார்.

அவன் காசை வாங்கி எண்ணிச் சரிபார்த்துக் கல்லாப்பெட்டியில் போட்டு விட்டு, படலின் கதவைத் திறந்து கொண்டு, செக்கு இருக்கும் பகுதிக்குச் செல்ல முயன்றான்.

அதற்குள் சட்டென்று திரும்பி வந்த செட்டியார், அவனிடம் சொன்னார்: “உலகநாதா, ஒரு சந்தேகம் கெட்கலாமா?” என்றவர் தொடர்ந்து கேட்டார்:

“மாடு ஓடினாலும் மணிச் சத்தம் கேட்கும். நின்று கொண்டே கழுத்தை ஆட்டினாலும் மணிச் சத்தம் கேட்கும். மாடு ஓட்டம் எடுக்காமல் நின்று கொண்டே கழுத்தை அசைத்து, ஓசை எழுப்பி, உன்னை ஏமாற்றினால், அது உனக்கு எப்படித் தெரியும்?”

வகுப்பில் ஏமாற்று வேலை செய்யும் பல பையன்களைப் பார்த்த அனுபவத்தில் அவர் அப்படிக் கேட்டார்

“மாடு அப்படி எல்லாம் செய்யாது அப்பச்சி!” என்று அவன் பதில் உரைத்தான். இவர் விடவில்லை.

தொடர்ந்து கேட்டார்

“செய்யாது என்று எப்படிச் சொல்கிறாய்?”

“இல்லை அப்பச்சி. மாடுகளோடு எனக்கு 20 வருஷ பழக்கம் உண்டு. அவைகள் அப்படிச் செய்யாது!”

“அதைத்தான் எப்படி என்று கேட்கிறேன்”

”மாடு உங்களைப் போல படிக்கவில்லை. படித்தால்தான் புத்தி அந்தமாதிரி கோண வேலைகளைச் செய்யும். அதனால்தான் சொல்கிறேன்”

செவிட்டில் அறைந்ததைப் போன்று இருந்தது. ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு செட்டியார் வீட்டிற்குத் திரும்பிவிட்டார்

கதையை நகைச்சுவையாக மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். வேறு சிந்தனை வேண்டாம்!
   **********************************************************               
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.6.18

ஓஷோ சொன்ன குரங்குக் கதை!


ஓஷோ சொன்ன குரங்குக் கதை!

சுவாங்தஸூவுக்கு மிகவும் பிடித்த கதை இது.

ஒரு குரங்கு வளர்ப்பவன் குரங்குகளுக்கான உணவு திட்டத்தை குரங்குகளிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.

காலையில் மூன்று ரொட்டி,மாலையில் நான்கு ரொட்டி.அப்போழுது மாலை நேரம் என்பதால் எல்லா குரங்குகளும் ஒத்துக்கொண்டன.

சில நாட்கள் போனது.ஒரு நாள் காலை நேரத்தில் எல்லாக்குரங்குகளும் புரட்சி செய்தது.எங்களுக்கு காலையில் மூன்று போதாது.

குரங்கு வளர்ப்பவன் சொன்னான் அப்படியென்றால் காலையில் நான்கு மாலையில் மூன்று.

குரங்குகளுக்கு சந்தோசம் தங்களுடைய புரட்சி வெற்றியடைந்ததாக திருப்தியடைந்தது.எல்லா குரங்குகளும் ஒத்துக்கொண்டன.

குரங்கு வளர்ப்பவன் சிரித்துக்கொண்டான்.ஏனென்றால் அவனுக்கு தெரியும் எப்படி இருந்தாலும் மொத்தம் ஏழுதான் என்று.

இதன் அடிப்படைதான் மனிதனின் மனது.

இந்த குரங்கு மனங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்துதான் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கிறது.

பிறகு புரட்சி செய்து வேறு ஒரு ஆட்சி கொண்டுவருகிறது.

ஆனால் நான் சொல்கிறேன் ஆட்சியாளர்கள் மாறலாம் ஆட்சி மாறாது.மொத்தம் ஏழுதான்.

ஆனால் உங்கள் குரங்கு மனம் ஆட்சி மாற்றம் செய்துகொண்டேயிருக்கும்.
குரங்குகள் ஏமாற்றப்பட்டுக்கொண்டேயிருக்கும்.
குரங்கு வளர்ப்பவனை ஏமாற்றுவதாக நினைத்துக்கொண்டு

__ஓஷோ.
 
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
----------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.6.18

கடைசிவரை பற்றை ஏன் விடமுடியவில்லை?


கடைசிவரை பற்றை ஏன் விடமுடியவில்லை?

"தென்கச்சி சுவாமிநாதன் சொன்ன கதை" 
             
கோயில் வாசலில் உள்ள பெட்டிக்கடையில், பக்திப் பழமாக உட்கார்ந் திருப்பார் ஒருவர். அவர், 'எனக்கு ஆசையே இல்லை.
 பந்தங்களில் இருந்து விடுபட நினைக்கிறேன். இன்னும் அதற்கான வேளை வரவில்லை!' என்றபடியே இருப்பார்.

ஒருநாள்! கோயிலுக்கு வந்த சந்நியாசியிடமும் இதையே சொல்லிப் புலம்பினார் அந்த ஆசாமி.

இதைக் கேட்டதும், ''நீ சரின்னு சொன்னா இப்பவே உன்னை அழைச்சிக்கிட்டுப் போயிடுறேன். என்ன சொல்றே?'' - கேட்டார் சந்நியாசி.

''நானும் இதைத்தான் நினைச்சேன். ஆனா, வீட்ல விவரம் தெரியாத வயசுல புள்ளைங்க இருக்கறப்ப, எப்படி விட்டுட்டுப் போறதுன்னுதான் ஒரு யோசனை.  அவங்களுக்கு கல்யாணம் காட்சின்னு ஆயிட்டா... அப்புறம் நிம்மதியா கிளம்பிடலாம்!'' என்றார் ஆசாமி.

சிரித்தபடியே கிளம்பிச் சென்றார் சந்நியாசி.

ஆண்டுகள் ஓடின!

ஒருநாள்... கோயிலுக்கு வந்தார் சந்நியாசி! அதே சந்நியாசி; அதே பெட்டிக்கடை; அதே ஆசாமி!
''எனக்கு ஆசையே இல்லை.  பந்தங்களிலிருந்து விடுபட விரும்பறேன். ஆனா, இன்னும் அதற்கான வேளை வரலை'' - அதே புலம்பல்.

சந்நியாசி மெள்ள புன்னகைத்தபடி, ''சரி... இப்பவாவது புறப்படேன்!'' என்றார்.
''பிள்ளைங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டேன். பேரப் பிள்ளைங்களையும் கண்ணாலே பார்த்துட்டா. என் கவலையெல்லாம் தீர்ந்துடும்!'' என்று விவரித்தார் நம்ம ஆள்!

சில ஆண்டுகளுக்குப் பிறகு, சந்நியாசி வந்தார்.

''எனக்கு ஆசையே இல்லை...''- வழக்கம்போல் கேட்டது குரல்!

''இப்போதாவது வருகிறாயா?''- இது சந்நியாசி.

''கோர்ட்ல கேஸ் இருக்கு. வழக்கு முடிஞ்சிட்டா வந்துடலாம்''- பதிலுரைத்தார் ஆசாமி. வழக்கமான புன்னகையுடன் கிளம்பினார் சந்நியாசி.

ஆண்டுகள் பல கழிந்தன. மீண்டும் வந்தார் சந்நியாசி. ஆனால், அந்த ஆசாமியைக் காணோம். கடையில் இருந்தவரிடம் நம்மவர் குறித்து விசாரித்தார் சந்நியாசி.

கடையில் இருந்தவர், ''சாமி... எங்க அப்பாதான் அவரு. 'எல்லா பந்தங்களையும் விட்டுட்டு உங்ககூட வந்துடணும்னு சொல்லிகிட்டே இருந்தாரு, போன வருஷம் ஒருநாள்... நெஞ்சு வலின்னவரு, பொட்டுனு போயிட்டாரு. அப்பா இந்நேரம் உயிரோட இருந்திருந்தா, நிச்சயம் உங்க கூட வந்துருப்பாரு சாமீ...''- கவலையுடன் சொன்னார் நம்மவரின் மகன்.

இதைக் கேட்ட சந்நியாசி, ''உங்க அப்பன் எங்கேயும் போயிடலே. இங்கதான் இருக்கான். அதோ... அங்கே பார்... அதென்ன?''

''அது நாய்... இங்கேதான் சுத்திக்கிட்டிருக்கு!''

''அதான் உங்க அப்பன். இப்ப பாரு'' என்றவர், கையைத் தட்டினார்.

அந்த நாய் வாலாட்டியபடியே ஓடி வந்தது. நாயின் தலையைத் தட்டினார்.

உடனே அது, ''எனக்கு ஆசையே இல்லே...'' என பேசத் துவங்கியது.

''அடேய்... என்னோட வந்துடறியா?'' - சந்நியாசி கேட்டார்.

''சாமி! ஏராளமா சொத்து சேத்து வச்சுட்டேன். பிள்ளைங்க அதை சரியா காப்பாத்துவாங்கன்னு தோணலீங்க.   கடையை சரியா பூட்டாமே போயிட றாங்க. அதுதான் நாயா பிறந்து காவல் காத்துக்கிட்டு கிடக்கிறேன்!''- இப்படி நாய் சொன்னதும், 'கடகட'வெனச் சிரித்தார் சந்நியாசி.

இந்த கதை நமக்கும் பொருந்தலாம்!!!!

படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.5.18

சிறிய பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது?

சிறிய பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது?

சிறிய பிரச்சினைகள் - புத்த துறவி ஒருவர் சொன்ன ஒரு அருமையான கதை

இதில் புதைந்துள்ள உண்மையை நாம் புரிந்து கொண்டு மனதில் நிறுத்தி விடவேண்டும். அதன் பிறகு நமது வாழ்கையின் மகிழ்ச்சியை குவிக்கிறோமோ இல்லையோ, துயரங்களை கணிசமாக குறைக்கலாம்.

ஒரு பெரிய சக்ரவர்த்திக்கு ஓரே ஒரு மகள். அதாவது ராஜகுமாரி. இந்த சிறுமி விளையாடும் போது கண் ஒன்றில் மண் புகுந்தது. கண் சிவந்ததோடு, வீங்கவும் தொடங்கியது. போதாத குறைக்கு, சிறுமியோ தன் கண்ணை கசக்கியவாறு அழுதுவந்தாள். அரண்மனை மருத்துவர் வந்து பரிசோதித்தார்.

மருந்து தயாரித்து சிறுமியின் கண்ணில் இட முயற்சிக்கும் போது, இந்த சிறுமி ஒத்துழைக்கவில்லை. கண்ணை கசக்கியும் அழுதும் தொடர்ந்ததால் காயம் பெரியதானது.

அரசருக்கு தன் மகள் காயம் பெரிய வருத்தம் தந்தாலும் மகள் விருப்பத்தை மீறி கட்டாயப்படுத்துவதை மன்னர் விரும்பவில்லை.

அரண்மனை மருத்துவர் தனது இயலாமையை தெரிவித்து கழண்டு கொண்டார். சிறுமி அழுவதும் கண்களை கசக்குவதும் தொடர்ந்ததால் காயமும் எளிதாக ஆறுவதாக இல்லை.

இந்த செய்தியை அறிந்த பெரியவர் ஒருவர், மருத்துவரல்லாத ஒரு வைத்தியர். இந்த நோயை மருந்து இல்லாமலேயே குணப்படுத்த முன்வந்தார். அரசரும் ஒப்புக்கொண்டார்.

இதை தொடர்ந்து பெரியவர் சிறுமியை பரிசோதித்தார். உதட்டை பிதுக்கினார். பின், அரசரைக்கண்டு தனியாக பேச வேண்டுமே என்றார்.

சிறுமி உள்பட அனைவருக்கும் ஒரு சஸ்பென்ஸ். மன்னர் வந்தார். மன்னரிடம் ஏதேதோ பெரியவர் விளக்கினார்.

பின் சிறுமியும் கேட்கும்படியாக, அரசரிடம் விளக்கம் தந்தார். இந்த கண்ணில் உண்டான காயம் மிக விரைவில் குணமாகிவிடும் இது பெரிய விஷயமில்லை.

ஆனால், நான் கவலைப்படுவது அதற்காக இல்லை. இந்த பெண்ணுக்கு வால் ஒன்று முளைக்க இருக்கிறது. அது வளர்ந்தால், சுமார் முப்பது அடிவரை வளரும். அதன் பின் என்னாகுமோ எனக்கு தெரியவில்லை. அதுவும் பெரிய ஆபத்தில்லை.

சில நாட்களுக்கு கவனமாக இருக்க வேண்டும். சிறிது வால் தோன்றியதும் எனக்கு உடனடியாக அறிவித்து விடவேண்டும். அதற்கு மிக சிறந்த மருந்து ஒன்று உண்டு.

அதைக்கொண்டு வால் வளராமல் செய்துவிடலாம், எவ்வளவு விரைவில் எனக்கு தகவல் கிடைக்கிறதோ, அவ்வளவு வேகமாக வால் பெரிதாகாமல் தடுக்கலாம் என்கிறார்.

வாலுள்ள பெண்ணா? சிறுமி, ராஜகுமாரிக்கு பயம் தோன்றியதில் வியப்பில்லை. படுக்கை அறையிலிருந்த இந்த சிறுமி வெளியே வரவில்லை. வால் முளைத்ததா என்று அறிவதிலேயே கவனமாக இருந்தாள்.

கண் வெகுவிரைவிலேயே குணமானது. மருத்துவரல்லாத வைத்தியர், சிறுமியை பரிசோதித்து, வால் முளைப்பதற்கான அறிகுறிகள் மறைந்து விட்டதாக கூறினார்.

 எல்லாமே நல்லபடியாக முடிந்தது. அரசரும் பொன்னும் பொருளும் அள்ளித்தந்து வைத்தியரை பாராட்டினார். .

இந்த கதை சொல்லும் மிக முக்கிய வாழ்க்கைப்பாடங்கள் என்ன? மருத்துவர் வெற்றி அடைந்தது எப்படி ? இந்த பெண்ணின் கவனத்தை கண்ணிலிருந்து கழட்டி வால் முளைக்கும் என்று பயமுறுத்தி கதை ஒன்றை கட்டி, இல்லாத ஒன்றில் மாத்தி விட்டார் அல்லது திருப்பினார் இந்த வைத்தியர், கண் தானாக சரியாகியது.

இதை இருகோடுகள் தத்துவம் எனவும் சொல்லலாம். அதாவது சிறிய பிரச்சனைகளை ஒரு பெரிய பிரச்சனை இடம் தெரியாமல் அழித்துவிடும்.

 நாம் தினம்தோரும் சந்திக்கும் எந்த ஒரு பிரச்சனையும் உண்மையாகவே கடுமையானவை இல்லை. ஆனாலும் அதைமட்டுமே நாம் தீவிரமாக உற்று கவனிக்கும் போது, அது அசுர உரு எடுத்து நம்மை பயமுறுத்துகிறது. அதே சமயம் நம் கவனம் திருப்பப்பட்டாலோ, அதே பிரச்சனைகள் நம்மை துன்புறுத்துவது இல்லை.

மனிதன் தன் பிரச்சனைகளிலிருந்து நிரந்தர விடுதலை பெற, ஞானிகள் கண்டுபிடித்து சொன்ன வழி, மனதை தான், தனது என்பதிலிருந்து கழற்றி கடவுள் சமுதாயம் என்பதில் மாற்றிவிட வேண்டும்!.

சுய நலத்தை கழற்றி வைத்துவிட்டு பொதுநல சேவை, சமூக சேவை என்று இறங்கிவிட்டால், நமது பிரச்சனைகள் மற்றவர் பிரச்சனைகள் முன்னால் சிறியதாகமாற, ஒளிந்து ஓடிவிடும்.

இதனால் இரண்டு மிகப்பெரிய லாபம், நமது கவலைகளும் பிரச்சனைகளும் இடம் தெரியாமல் ஓடிவிடும். அதோடு, நமக்கு மட்டுமில்லை நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் நம்மால் நன்மைதானே?
-----------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=============================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.12.17

குட்டிக்கதை: ஊக்குவிப்பதில் உள்ள நன்மை!


குட்டிக்கதை: ஊக்குவிப்பதில் உள்ள நன்மை!

கிராமத்தில் கொல்லன்  ஒருவன் வாழ்ந்து வந்தான்...

இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான்.

அவனுக்கு அன்பும், அழகும் நிறைந்த மனைவி இருந்தாள்.

அவன் வாழ்க்கை உழைப்பும், காதலும், ஊடலுமாக மகிழ்ச்சி வெள்ளமாய் ஒடிக் கொண்டிருந்தது.

எல்லாக் கதைகளிலும் வழக்கமாக வருவது போல் நம்ம கொல்லன் வாழ்க்கையிலும் சோதனை காலம் வந்தது.

நவநாகரீக காலத்தின் துவக்கமாய் இருந்த நேரம் அது. கொல்லப் பட்டறை தொழில் நலிவுற்றது.

வருமானம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்து அன்றாட உணவுக்கே வறுமை என்ற நிலை வந்து விட்டது.

கொல்லனுக்கோ ஊடலிலும், காதலிலும் கூட நாட்டம் இல்லாமல் விரக்தி மனதில் குடி கொண்டது. சோகமே உருவாகி விட்டான்.

ஒரு நாள் மாலை வேளையில் மனைவியின் மடியில் தலை சாய்த்து வானத்து நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டிருந்தான்.

மனதில் எதிர்காலம் குறித்த கவலைகள் எழுந்து கண்ணீர் துளிகளாய் கரைந்தோடியது.

அதைக் கண்ட மனைவி தழுதழுத்து ஆறுதலாய் பேசினாள்.

"ஐயா எஞ்சாமி எதுக்கு கலங்குதீக,

இந்த தொழில் இல்லைன்னா என்ன, பக்கத்து காட்டுல போய் விறகு வெட்டி அதை அக்கம் பக்கத்து கிராமத்துல வித்தா நாலு காசு கிடைக்குமே. அதை வெச்சு ராசாவாட்டம் வாழலாமே" என்றாள்.

புது நம்பிக்கை, புது உற்சாகம் உள்ளத்தில், கொல்லன் விறகு வெட்டியாக ஆனான்,

அந்தத் தொழிலில் ஓரளவு வருமானம் கிடைத்தது.

வீட்டில் தினமும் சோளக்கஞ்சி, கொள்ளுத் துவையல் கூடவே மனைவியின் சிரித்த முகமும் கனிவான கொஞ்சலும் அவனுக்கு ஒரளவு மகிழ்ச்சியை தந்தாலும், சற்றே சோகமும் இழையோடி இருந்தது.

ஒரு நாள் ஊடலும் ,சரசமுமாய் இருந்த வேளையில் மனைவி கேட்டாள்.

 "மாமோய்,,, இன்னும் ஒங்க மனசுல ஏதோ சோகமிருக்காப்ல தெரியுதே ! என்ன அது?".

விறகு வெட்டியான நம்ம கொல்லன் சொன்னான்.

"பட்டறைத் தொழில் நல்லாயிருந்த காலத்தில் நம்ம வீட்டில் தெனந்தெனம் நெல்லுச்சோறும் கறிக் கொழம்புமாய் இருக்கும்.

இப்போ இப்படி வயித்தக்கட்டி வாழுறோமே, அதுதானடி குட்டிம்மா மனசுக்கு என்னவோ போல இருக்கு.

இப்படி விறகு சுமந்துகிட்டு ஊர் ஊரா சுத்தினால் கிடைக்கிற வருமானம் நமக்கு நல்லபடியா வாழ பத்தலையே"
என்றவனுக்கு கண் கலங்கவும் தவித்துப் போனாள் அவள்.

 "வேணாஞ்சாமி வேணாம், நீங்க ஏங் குலசாமி, கண்ணு கலங்காதீக,

என்னோட நகை நட்ட வித்தா கொஞ்சம் காசு கிடைக்குமே அதை மூலதனமா போட்டு நாம ஒரு விறகு கடை வச்சிரலாம்.
காட்டுல விறகு வெட்டுற ஜனங்களுக்கு கூலி கொடுத்து விறகு வாங்கிப் போடுவோம்.கடைன்னு ஆயிட்டா எந்த நேரமும் ஜனங்க விறகு வாங்க வருவாக, நமக்கு நல்லபடியா வருமானம் கிடைக்கும் என்றாள்.

மீண்டும் புத்துணர்ச்சி நமது கொல்லனின் உள்ளத்தில், விறகு வெட்டியானவன் விறகுக்கடை முதலாளியாக ஆனான்.

வருமானம் பெருகியது, அப்புறமென்ன வீட்டில் கறிசோறுதான்.

ஆனால் வாழ்க்கை அடுத்தடுத்த சோதனைகளை ஏற்படுத்தாமல் விட்டு விடுமா என்ன...

வந்தது கெட்ட நேரம், விறகு கடையில் தீ விபத்து!...அத்தனை முலதனமும் கரிக்கட்டையாகி விட்டது.

தலையில் அடித்துக் கொண்டு அழுதான் விறகு கடை முதலாளி.

நண்பர்கள் பலரும் வந்து ஆறுதல் சொன்னார்கள், கலங்காதே நண்பா மறுபடியும் விறகு வெட்டி வாழ்க்கை நடத்து.
எதிர்காலத்தில் எதாவது நல்லது நடக்கும் என்றார்கள்.

மனைவி வந்தாள்...

கணவனின் கண்ணீரை துடைத்தாள்.

அவன் தலை சேர்த்து நெஞ்சோடு கட்டி அணைத்தாள்,

கண்ணீர் மல்க சொன்னாள்;

"இப்போ என்ன ஆயிடுச்சுனு எஞ்சாமி அழுதீக,  விறகு எரிஞ்சு வீணாவா போய்ட்டு,  கரியாத்தானே ஆகியிருக்கு,

நாளையில் இருந்து கரி வியாவாரம் பண்ணுவோம்" தன் தலை நிமிர்த்தி அவளின் முகம் பார்த்தவனுக்கு மீண்டும் வாழ்வில் ஒளி தெரிந்தது.

ஊக்குவிக்கவும் உற்சாகப் படுத்தவும் ஆட்களிருந்தால் கோமா ஸ்டேஜ்ல இருக்கவன் கூட ஒலிம்பிக் ஓட்ட பந்தயத்தில் ஜெயிப்பான்.

ஊக்குவிக்கறவனை ஊக்குவிக்க ஆளிருந்தால் தேக்கு விப்பான்.
    - கவிஞர் வாலி

சதா உதாசினப் படுத்தி கொண்டிருந்தால் ஆரோக்கியமா இருக்கறவனுக்கும் குளுகோஸ்தான் போடணும்.

ஆற்றில் வெள்ளம் வந்து தண்ணீர் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் போது கரையை கடக்க எதிர் நீச்சல் அடிக்க கூடாது.
ஆற்றோட வேகத்துக்கு தகுந்த மாதிரி கரையை அதோட போக்குல போய் கடந்து தான் கரையேறனும்.

அருமை கணவனின் மனைவிமார்களே...உங்கள் கணவனின் வெற்றி எந்த வயதிலும் உங்கள் கையில்.

முதலில் மனைவிமார்களான நீங்க தளராமல் இருக்கணும்.

எதுவும் நம்மால் முடியும்.
------------------------

படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=============================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.10.17

குட்டிக்கதை: விறகு வெட்டியும் கடவுளும்!


குட்டிக்கதை: விறகு வெட்டியும் கடவுளும்!

ஒரு ஊரில் ஒரு ஆள் இருந்தான் . அவனுக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம் . அடிக்கடி கோவிலுக்கு போவான்.கடவுளை வேண்டிக்கொள்வான் .அதுக்குப்பிறகு காட்டிற்குச் செல்வான்’ .விறகு வெட்டுவான் .அதைக் கொண்டுகிட்டு பொய் விற்பனை செய்வான் .

ஓரளவுக்கு வருமானம் வந்தது . அதை வைத்துக் கொண்டு நிம்மதியாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தான் .

ஒரு நாள் அது மாதிரி அவன் காட்டுக்கு போகும் போது அங்கே ஒரு நரியைப் பார்த்தான் .

அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை . எதோ விபத்துல இழந்துவிட்டது போல் இருக்கு ! அது பாட்டுக்கு ஒரு மரத்தடியில உட்கார்ந்திருந்தது.

அதை இவன் பார்த்தான் அப்பொழுது இவன் மனதில் ஒரு சந்தேகம் எழுந்தது. " இந்த நரிக்கு ரெண்டு காலும் இல்லை ... அப்படி இருக்கறப்போ இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியை போக்கி கொள்ள முடியும் ?"  என்று யோசிக்க ஆரம்பித்தான்

அப்படி அவன் யோசித்துக் கொண்டிருக்கும்போது அந்தப் பக்கமாக ஒரு புலி வந்தது . அதைப் பார்த்த உடனே இவன் ஓடிப் போய் ஒரு மரத்திற்குப் பின்னால் ஒளிந்து கொண்டான். அத்துடன் என்ன நடக்கிறது என்று கவனிக்க ஆரம்பித்தான். அந்தப் புலி ... ஒரு பெரிய மானை அடித்து இழுத்துக் கொண்டு வந்தது ... அதைச் சாப்பிட்டது ...சாப்பிட்டது போக மீதியை அப்படியே, அங்கேயே போட்டுட்டுப் போய்ட்டது

புலி போனதுக்குப் பிறகு, கால் இல்லாத அந்த நரி மெதுவாக நகர்ந்து வந்து ... மிச்சமிருந்ததை சாப்பிட்டது .. திருப்தியாகவும் போய்ட்டது !

இவ்வளவையும் மரத்திற்குப் பின்னால் நின்று பார்த்துக்கொண்டிருந்த நம்ம ஆசாமி  யோசிக்க ஆரம்பிச்சான்

" இரண்டு காலும் இல்லாத ஒரு வயதான நரிக்கே ஆண்டவன் சாப்பாடு போடுகிறான் . அப்படி இருக்கிறப்போ .. தினமும் கோவிலுக்கு போய் சாமி கும்பிடற நமக்கு சாப்பாடு போடாம விட்டிருவானா ? நமக்கு கடவுள் பக்தி வேற அதிகம் , நாம எதுக்கு அனாவசியமா வெய்யில்லையும் மழையிலையும் கஷ்டப்படனும் ..? எதுக்காக வேர்வை சிந்தி விறகு வெட்டணும் ...? ” என்றெல்லாம் யோசித்தான்..

அதற்குப் பிறகு அவன் காட்டுக்கே போகவில்லை!.
கோடலியை தூக்கி எறிந்தான்.
பேசாமல் ஒரு மூலையிலே உட்கார்ந்து விட்டான் .
அவ்வப்போது கோவிலுக்கு மட்டும் சென்று வருவான் .

" கடவுள் நம்மைக் காப்பாத்துவார்  ...அவர் நமக்கு வேண்டிய உணவைக் கொடுப்பார் "- என்று அவன் நம்பினான் , ஒரு நாள் கண்ணை முடிக்கொண்டு .
கோயில் மண்டபத்தில் ஒரு தூணில் சாய்ந்து  உட்கார்ந்துவிட்டான் .

ஒவ்வொரு நாளும் போய்க் கொண்டே இருந்தது ... சாப்பாடு மட்டும் வந்த பாடில்லே !

இவன் பசியால வாடிப் போனான் . உடம்பு இளைத்துப் போய்விட்டது. எலும்பும் தோலுமாக ஆகிவிட்டான் .

ஒரு நாள் ராத்திரி நேரம் . கோயிலில் யாருமே இல்லை. இவன் மெதுவா கண்ணைத் திறந்து கடவுளை பார்த்தான் ...

" ஆண்டவா ... என்னுடைய பக்தியிலே உனக்கு நம்பிக்கை இல்லையா .....?  நான் இப்படியே பட்டினி கிடந்தது சாக வேண்டியது தானா ? காட்டில் அந்த நரிக்கு புலி மூலமாகச்  சாப்பாடு போட்டாயே! அதைப் பார்த்து விட்டுத் தானே இங்கே வந்தேன் ... என்னை இப்படித் தவிக்க விட்டு விட்டாயே ... இது நியாயமா ?"..- என்று புலம்பினான்

அப்போது கடவுள் மெதுவாகக் கண்ணை  திறந்து சொன்னாராம்

" முட்டாளே ! நீ பாடம் கற்று கொள்ள வேண்டியது நரி கிட்ட இருந்து இல்லை ! புலி கிட்ட இருந்து ! ” என்றாராம்!! .
-------------------------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.9.17

குட்டிக்கதை: எதிலும் பாதிக்கப் படாமல் இருப்பது எப்படி?


குட்டிக்கதை: எதிலும் பாதிக்கப் படாமல் இருப்பது எப்படி?

மஹாராஸ்டிர மாநிலத்தில் ஏகநாதர் என்ற ஞானி வாழ்ந்து வந்தார். அவர் முகத்தில் எப்போதும் அமைதியும்,  புன்னகையும் தவழும். அவரை நீண்ட நாட்களாகக் கவனித்து வந்த ஒரு மனிதருக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் பல ஆன்மிகவாதிகளைப்  பார்த்திருக்கிறார். ஆனால் இந்த அளவு தொடர்ந்து அமைதியாக இருக்க முடிந்த ஆட்களைப் பார்த்ததில்லை. ஒரு முறை அமைதியாக இருக்க முடிந்த நபர்  இன்னொரு முறை அமைதியாக இருப்பதில்லை. இப்படி எதிலேயும் பாதிக்கப்படாமல் தொடர்ந்து அமைதியாக இருக்க முடிவது என்றால் அதில் ஏதோ ரகசியம் அல்லது சூட்சுமம் இருக்க வேண்டும் என்று நினைத்தார்.

ஒரு நாள் அதை அவர் ஏகநாதரிடம் சென்று கேட்டே விட்டார். “சுவாமி உங்களால் எப்படி  இப்படி அமைதியாக, எதிலும் பாதிக்கப்படாமல் இருக்க முடிகிறது? இப்படி முடிவதன் ரகசியம் என்ன?”

ஏகநாதர் அவரையே உற்றுப் பார்த்து விட்டு ”நீ உன்  கையைக் காட்டு” என்றார்.

அந்த மனிதரும் தன் கையை நீட்டினார்.

அவரது ரேகைகளை ஆராய்ந்த ஏகநாதர் “உனக்கு இன்னும் ஏழு நாட்கள் ஆயுள் தான்  பாக்கி இருக்கிறது”

அந்த மனிதருக்கு அதிர்ச்சி. ஏதோ கேட்க வந்து ஏதோ கேட்க நேர்ந்ததே என்று மனம் நொந்தார். ஏகநாதரின் அமைதியின் ரகசியம்  தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை விட அதிகமாய் சுயபச்சாதாபம் அவருக்குள் வந்தது. ஞானிகள் எக்காலத்தையும் அறிய வல்லவர்கள் என்பதால் அவருக்கு  ஏகநாதர் சொன்னதில் எந்த சந்தேகமும் இல்லை. அவசரமாக வீட்டுக்குச் சென்றார். மனைவி மக்களிடம் தகவலைச் சொன்னார். குடும்பம் அழுதது.  அவரும் வருத்ததில் ஆழ்ந்தார். ஆனால் அழுது புலம்பி எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்ந்த அந்த மனிதர் வருத்தத்தை எல்லாம் சீக்கிரமே மூட்டை  கட்டி வைத்து விட்டு சாவதற்குள்
செய்து முடிக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்ய ஆரம்பித்தார்.

ஏகநாதர் சரியாக ஒரு வாரம்  கழித்து அந்த மனிதரை அவர் வீட்டில் சந்தித்தார். அந்த மனிதர் மிகுந்த அமைதியுடன் இருந்தார். ”நான் செய்ய வேண்டியதை எல்லாம் செய்து விட்டு  மரணத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.”

ஏகநாதர் சொன்னார். “நீ இப்போது எந்த மனநிலையில் இருக்கிறாயோ அதே மனநிலையில் நான் என்றும்  இருக்கிறேன் மகனே. மரணம் வரும், எல்லாம் முடிந்து போகும் என்ற உண்மையை உணர்வதால் கிடைக்கும் அமைதியே அலாதியானது. அதற்குப் பிறகு  எதுவும் பெரிய விஷயமாகத் தோன்றுவதில்லை. எதுவும் அதிகமாக பாதிப்பதில்லை. இதைச் சொன்னால் புரியாது, அனுபவத்தில் மட்டுமே உணர முடியும்  என்பதற்காகத் தான் நான் உன் கேள்விக்குப் பதிலாக உன்னிடம் ஏழுநாட்கள் மட்டுமே ஆயுள் பாக்கி உள்ளது என்றேன். உண்மையில் உனக்கு தீர்க்காயுள்  இருக்கிறது. நீ நீண்ட காலம் வாழ்வாய்” என்று சொல்லி விட்டு வாழ்த்தி விட்டு சென்றார்.

ஏகநாதர் சொன்னது உண்மையே. மரணம் என்னேரமும் வரலாம் என்று தத்துவம் பேசுகிறோமே ஒழிய, அந்த உண்மை நம் அறிவிற்கு எட்டுகிறதே ஒழிய, அது நம் ஆழ்மனதிற்கு எட்டுவதில்லை.

வாழ்ந்த காலத்தில் எப்படி  உயர்ந்தோமோ, எப்படி தாழ்ந்தோமோ அதெல்லாம் மரணத்தின் கணக்கில் இல்லை. மரணம் போன்ற சமத்துவவாதியை யாராலும் காண்பதரிது.  இருப்பவன்-இல்லாதவன், உயர்ந்தவன்-தாழ்ந்தவன், ஆள்பவன்-ஆண்டி
போன்ற பேதங்கள் எல்லாம் மரணத்திடம் இல்லை. எல்லோரையும் அது பேதமின்றி  அது கண்டிப்பாக அணுகுகிறது.

அது போல மரணத்தைப் போல மிகப் பெரிய நண்பனையும் காணமுடியாது. நம் தீராத பிரச்னைகள் எல்லாவற்றையும் ஒரே  கணத்தில் தீர்த்து விடுகிறது.

ஆதி அந்தம் இல்லாத கால விஸ்தீரணத்தில் நாம் வாழும் காலம் ஒரு புள்ளியளவும் இல்லை. நம் காலமே ஒரு புள்ளியளவும் இல்லை என்கிற போது அந்தக் காலத்தில் வாழும் உயிரினங்கள் அடையாளமென்ன, அந்த கோடானு கோடி உயிரினங்களில் ஒரு இனமான மனித  இனத்தின் அடையாளமென்ன, அந்த பலகோடி மனிதர்களில் ஒரு தனி மனிதனின் அடையாளம் என்ன?

இப்படி இருக்கையில் வெற்றி என்ன, தோல்வி  என்ன? சாதனை என்ன? வேதனை என்ன? எல்லாம் முடிந்து போய் மிஞ்சுவதென்ன? எதுவும் எத்தனை நாள் நீடிக்க முடியும்? இதில் சாதித்தோம் என்று  பெருமைப்பட என்ன இருக்கிறது? நினைத்ததெதுவும் நடக்கவில்லை என்று வேதனைப்பட என்ன இருக்கிறது? இதை வேதாந்தம், தத்துவம் என்று  பெயரிட்டு அலட்சியப்படுத்த வேண்டாம். இது பாடங்களிலேயே மிகப்பெரிய பாடம்.

வாழ்க்கையில் உங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தை சிறப்பாக  வாழுங்கள். செய்வதை எல்லாம் கச்சிதமாகச் செய்யுங்கள். ஆனால் அந்த பாத்திரமாகவே மாறி என்றைக்கும் நிரந்தரமாக இருப்பது போல பாவித்து  விடாதீர்கள். நீங்களே நிரந்தரமல்ல என்கிற போது உங்கள் பிரச்சினைகளும் நிரந்தரமல்ல அல்லவா? இருந்த சுவடே இல்லாமல் போகப்போகும்  வாழ்க்கையில் வருத்தத்திற்கு என்ன அர்த்தம் இருக்கிறது? வெறுப்பிற்கும், கோபத்திற்கும், பேராசைக்கும், சண்டைகளுக்கும் என்ன அர்த்தம் இருக்கிறது?

நாம் வழிப்போக்கர்கள். அவ்வளவே. வந்தது போலவே இங்கிருந்து ஒருநாள் சென்றும் விடுவோம். அதனால் இங்கு இருக்கும் வரை, முடிந்த வரை  எல்லாவற்றையும் முழு மனதோடு செய்யுங்கள்.

இது வரை சொன்ன பாடங்களைப் படித்துணர்ந்து சரியாகவும் முறையாகவும் வாழும் போது வாழ்க்கை  சுலபமாகும், நாமாக விரித்துக் கொண்ட வலைகளில் சிக்கித் தவிக்க நேராது. அது முடிகிறதோ, இல்லையோ அதற்குப் பின் வருவதில் பெரிதாக மன
அமைதியிழந்து விடாதீர்கள். ஏனென்றால் எல்லாம் ஒரு நாள் முடியும்!

படித்ததில் மனதைக் கவர்ந்த்து.
அன்புடன்
வாத்தியார்
========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.8.17

குட்டிக்கதை:: கங்கா தேவி தந்த தங்க வளையல்!


குட்டிக்கதை:  கங்கா தேவி தந்த தங்க வளையல்!

கரையில் செருப்பு ரிப்பேர் செய்யும்  ஒரு நல்ல  கிழவன்.  தினமும் கங்காமாதாவை தூர இருந்து கண்ணால் பார்த்து வணங்குவதோடு சரி. தண்ணீரை தொட்டால் கொன்று விடுவார்களே. தீட்டு பட்டுவிடுமாம்.  சர்வ பாபங்களையும் போக்கும் கங்கை அந்த தாழ்ந்த வகுப்பு மனிதன் தீண்டினால் புனிதம்  கெடுமாம்.  இப்படியெல்லாம் இருந்திருக்கிறார்கள் அந்த காலத்தில்.

ஒரு பண்டிதர் தினமும் மந்திரங்கள் ஜபித்துக் கொண்டே வருவார். கங்கையில் இறங்கி நீராடுவர். அனுஷ்டானங்கள் முடிந்து வெளியே வருவார்.  ''எவ்வளவு பாக்கியசாலி அவர்''  என்று அவரை தூர இருந்தே  இரு கரம் கூப்பி  கிழவன் வேண்டுவான்.

அவனைப் பார்த்தாலே  தூர நகர்வார் அவர்.  அவனோடு பேசுவார்.  ஒருநாள்  அவரது செருப்பு அறுந்து விட்டது. அதை கிழவனிடம் கொடுத்து ரிப்பேர் செய்யச் சொன்னார்.  நன்றாக  ரிப்பேர் செய்து கொடுத்தான்.

அவனருகே  ஒரு அணா  காசை விட்டெறிந்தார். அருகே வந்து தரமுடியாதே. அவன்  வணங்கி  ''சுவாமி நான் உங்களிடம் காசு வாங்க மாட்டேன்.  நீங்கள் கங்கா மாதாவை அனுதினமும்  வணங்கி மந்திரங்கள் ஜெபிப்பவர். உங்களுக்கு ஏதோ என்னாலான ஒரு சிறிய உதவி செய்தது என் பாக்யம்''.

உன் காசு எனக்கு வேண்டாம். இதை என்ன செய்வது?  நீ எனக்கு இலவசமாக சேவை செய்தால் அதை நான் ஏற்க முடியாது என்கிறார்  அந்த பண்டிதர்.

ஐயா  இந்த ஏழைக்கு  ஒரு உதவி நீங்கள் செய்வீர்களா?   இதோ இந்த கங்காமாதாவை அனுதினமும்  வணங்குகிறேன் என்னால்  ஒன்றும் செய்ய இயலவில்லை.  நான் அளித்த காணிக்கையாக  நீங்களே  அதை அவளுக்கு சமர்ப்பிக்க முடியுமா.?

என்ன சொல்கிறாய். இந்த ஓரணாவை  கங்கையில் நீ அளித்ததாக நான் எறிய வேண்டும் அவ்வளவு தானே? சரி

பண்டிதர் கங்கையில் இறங்கினார் வணங்கினார். மந்திரங்கள் ஜெபித்தார். அம்மா கங்கா தேவி, இதோ இந்த ஓரணா கரையில் இருக்கும் செருப்பு தைக்கும் கிழவன் உன்னிடம் சமர்ப்பிக்க சொன்னது. ஏற்றுக்கொள் என்று சொல்லி காசை எறிந்தார்.

நுங்கும் நுரையுமாக  ப்ரவாஹமாக ஓடிக்கொண்டிருந்த கங்கையிலிருந்து ஒரு அழகிய  கை  வெளியே தோன்றி அவர் வீசிய ஓரணா காசை ஆர்வமாக  அன்பாக  பெற்றுக் கொண்டது.  கங்கையின் முகம் தோன்றியது.  பேசியது.

 பண்டிதரே, எனக்கு மிக்க மகிழ்ச்சி, இதோ இந்த பரிசை நான் கொடுத்ததாக அந்த கிழவரிடம் கொடுங்கள் என்று கங்கா தேவி ஒரு அழகிய கண்ணைப் பறிக்கும் வைர, நவரத்னக் கற்கள்  பதித்து  ஒளிவீசிய   தங்க வளையலை, கொடுத்தாள். பண்டிதன் அசந்து போனான். ஆச்சர்யத்தில்  நடுங்கினான்.

அதை தனது மேல் துண்டில் பத்திரமாக  முடிந்து வைத்து கொண்டான். கிழவினிடம் ஒன்றுமே அது பற்றி சொல்லவில்லை. வீட்டிற்கு போய் மனைவிடம் '' கமலா, இதோ பார்த்தாயா,  நான் எதற்குமே  பிரயோஜனம் இல்லை, ஏட்டுச்  சுரைக்காய் என்பாயே''  இன்று என்ன நடந்தது தெரியுமா உனக்கு?

''என்ன பெரிதாக சாதித்து விட்டீர்கள்?  உங்களை போல் உதவாக்கரைகளுடன் பேசிவிட்டு  தேங்காய் மூடி வாங்கி கொண்டு வந்திருப்பீர்கள். சீக்கிரம் கொடுங்கள். இன்றைய பொழுது துவையலிலாவது கழியட்டும். '' என்றாள்  மனைவி.

''அசடே,   இதைப் பார்.  என் வேதத்தை மதித்து கவுரவித்து அதால்  பெற்றது.    உனக்காக  நான் சம்பாதித்தது'' என்று  கங்காதேவி தந்த வளையலை தந்தான் பண்டிதன்.  கமலாவுக்கு தன்னையோ,  தன் கண்களையோ  நம்ப முடியவில்லை.   கையில் போட்டு அழகு பார்த்தாள்.  மின்னியது. கண் கூசியது.  என்ன ஒருவளையல்  தானா?  இன்னொன்று?''

''அடுத்த முறை கங்கையை கேட்டு  வாங்கி தருகிறேன்''   என்று சமாளித்தான் பண்டிதன். இந்த ஒன்று எதற்கும் உதவாதே . நாமோ ஏழைகள். திருடர்கள் கொள்ளையர்களால் இதனால் உயிர் போனாலும் போகலாம்.  எனவே அவன் மனைவி கெட்டிக்காரி என்ன சொன்னாள்?

''இதோ பாருங்கோ, இந்த ஒண்ணை  வச்சுண்டு என்ன பிரயோஜனம். அடுத்த வேளை  சாப்பாட்டுக்கு வழியில்லாமல் அழகான ஒத்தை வளை கையில் போட்டுக் கொண்டு அலைந்தால்  எல்லாரும் சிரிப்பார்கள். பேசாமல் இதை ராஜாவிடம் கொடுத்துவிட்டு ஏதாவது காசு கொடுத்தால் வாங்கி வாருங்கள். கொஞ்சகாலம் நிம்மதியாக  சௌகர்யமாக வாழலாம்.

ராஜாவிடம் சென்றான். கொடுத்தான். ராஜா  வாங்கி பார்த்து மகிழ்ந்தான். ஒரு பை  நிறைய பொற்காசுகள் கொடுத்தான். ராணியிடம் ஆசையோடு அந்த வளையலை கொடுத்தான்.  மிக்க மகிழ்ச்சி அந்த ராணிக்கு. அவள் கைக்கு அது பொருத்தமாக அமைந்தது. அப்போது தான் அவளுக்கு தோன்றியது. ''இன்னொன்று எங்கே?''

ராஜாவிடம் ''இன்னொன்றும் வேண்டுமே எங்கே''  என்று கேட்டாள் . ராஜா ஆட்களை அனுப்பி பண்டிதனை அழைத்து வர செய்தான்.

''ஹே  ப்ராமணா. இன்னொரு வளையல் எங்கே? ஏன் அதை தரவில்லை? வீட்டில் வைத்திருந்தால் கொண்டு வந்து உடனே கொடு. ராணி கேட்கிறாள்''

பிராமணன் தயங்குவதை பார்த்த ராஜாவுக்கு கோபம் வந்தது.  ''என்ன விளையாடுகிறாயா என்னிடம். இன்னும்  ரெண்டு மணிநேரத்தில் இன்னொரு வளையலுடன்  நீ வரவில்லை என்றால் உன் உயிர் உனதல்ல .ஜாக்கிரதை''  என்றான்.  ராஜாவின்  கட்டளை பண்டிதனுக்கு  எம பயத்தை தந்ததால் ஓடினான்.

எங்கே?  கங்கைக்கரைக்கு.

அந்த கிழவன் வழக்கம்போல் அதிகாலையில்  கங்கைக் கரைக்கு  தூர நின்று இரு கரம் கூப்பி  கண்களை மூடி கங்கையை வணங்கினான். அருகிலே தேங்கி நின்ற நீரில் கொஞ்சம் எடுத்து தலையில் ப்ரோக்ஷணம் பண்ணிக்கொண்டான். அது தான் அவனுக்கு கங்காஜலம். செருப்பு தைக்க தேவையான ஜலத்தை ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொண்டு அமர்ந்தான்.

திடீரென்று தன முன்னே  பண்டிதன் ஓடிவந்து நின்றதும் வணங்குவதும் அவனுக்கு  ஏதோ ஒரு அதிர்ச்சியை தந்தது.

''சாமி  நீங்க என்ன செய்றீங்க?"' என்ன ஆச்சு உங்களுக்கு?  நான் தானே  உங்களை எப்போவும் வணங்கறது?''

''என்னை மன்னிச்சுடுப்பா.  நான்  துரோகி.  கங்கா மாதா உனக்கு கொடுத்த  பரிசை திருடி வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போனவன்  அதை வித்து ராஜாகிட்ட நிறைய பணம் வாங்கினேன். இப்போ என் உயிரே காற்றிலே ஊசல் ஆடுது என்று விஷயத்தை சொன்னான் பண்டிதன்.

''ஆஹா அப்படியா. நமக்கு  யார்  உதவி செய்வாங்க இப்போ ?  எப்படி  இன்னொரு வளையல் கிடைக்கும்?  கங்காமாதாவையே கேட்போம்.

கிழவன் கண்ணை மூடினான்.  தனக்கு எதிரே இருந்த அழுக்கு பாத்திரத்தில் நிரம்பிய நீரை வேண்டினான்.  அம்மா கங்கா  நீ எனக்கு பரிசாக ஒரு வளை  கொடுத்ததற்கு  நான் எத்தனையோ ஜென்மம் கடமைப் பட்டிருக்கிறேன் தாயே.  பாவம் இந்த பண்டிதரின் உயிரைக் காப்பாத்து தாயே. இன்னொரு வளையலும் தா. அவர் பிழைக்கட்டும்'' என்று  தனது கையை அந்த ஜலத்தில் விட்டான்.

மீண்டும்  பிரகாசமான தங்க வைர கற்கள் பதித்த இன்னொரு வளையல் அந்த கிழவனின் அழுக்கு பாத்திரத்திலிருந்து தோன்றியது.

அப்புறம் என்ன நடந்ததா??

பண்டிதன் ராஜாவிடம் அதை எடுத்து போகவில்லை. தனது உயிரைப் பற்றி கவலைப் படவில்லை. வீடு, கமலா  எல்லாவற்றையும் மறந்தானா , துறந்தானா எதுவோ ஒன்று.   அங்கேயே  கிழவனின் கால்களை  கெட்டியாக பிடித்துக்கொண்டு  கண்ணீரால் அவற்றை நனைத்து அபிஷேகம் செய்தான். சீடனாக அருகில் அமர்ந்தான். விஷயம் பரவியது. ராஜாவும் அவன் மனைவியும் ஓடி வந்தார்கள். கிழவனை வணங்கினார்கள். அரண்மனைக்கு கூப்பிட்டார்கள்.

என் கங்காமாதா தரிசனம் ஒன்றே போதும் என்று அவர்களை திரும்பி வணங்கினான் கிழவன்.
-------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
==========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.5.17

நமது சுக துக்கங்களை எவை முடிவு செய்கின்றன?


நமது சுக துக்கங்களை எவை முடிவு செய்கின்றன?

ஒரு கிராமத்தில் சாம்பசிவம் என்ற ஒரு அந்தணர் வசித்து வ்ந்தார். சிறு
வயது முதலே வேதம் புராணம் முதலிய சாஸ்திரங்கள் பலவும் கற்று
சிறந்த மனிதராய் திகழ்ந்தார்.அவர் எவ்வளவுதான் கற்றவராகவும் மற்றவருக்கு உபதேசிப்பவராகவும் இருந்தாலும் அந்த ஊரில் அவருக்கு மரியாதை இருந்ததே ஒழிய செல்வத்தைக் கொடுப்பவர் யாருமில்லை.

அவர் செய்யும் தொழிலுக்கு ஏற்றபடி செல்வத்தைக் கிள்ளிக் கொடுத்தார்களே அன்றி அள்ளிக் கொடுக்கவில்லை.அதனால் நிறைந்த செல்வத்தை அவரால் சேர்க்க இயலவில்லை. அவரது மனைவியும் இவரை கையாலாகாதவர் என ஏளனமாகப் பேசி வந்தாள்.

அதே ஊரில் தனபாலன் என்ற ஒரு வியாபாரி வாழ்ந்து வந்தார். அவர் பெயருக்கு ஏற்றசெல்வ வளம் மிக்கவராகத் திகழ்ந்தார்.அவரது நிலையைச் சொல்லிக் காட்டி சாம்பசிவத்தின் மனைவி செல்வத்தைச் சேர்க்கும்
வழியைப் பின்பற்றும்படி கூறிவந்தாள்.

அதனால் சாம்பசிவம் அடுத்த ஊருக்குச் சென்று பணம் சம்பாதித்து வருவதாகக் கூறிப் புறப்பட்டார்.

அதேநாளில் தனபாலனும் தன் வியாபாரத்தின் நிமித்தமாகத் தன் வண்டியில் ஏறிக்கொண்டு அடுத்த ஊருக்குப் புறப்பட்டார்.இருவரும் ஒரே பாதையில் போய்க்கொண்டு இருந்தனர்.தனபாலனின் வில் வண்டி ஜல்ஜல் என்று ஓடிக்கொண்டு இருந்தது. ஆனால் சாம்பசிவமோ வேர்க்கவிறு
விறுக்க நடந்து போய்க்கொண்டு இருந்தார்.

இந்த இருவரின் நிலையையும் வைகுண்டத்திலிருந்த மகாலட்சுமி தாயார் பார்த்தாள். பின்அருகே சயனத்திலிருந்த வைகுண்ட நாயகனான நாராயணனைப் பார்த்தாள்.

கண்களை மூடிப் படுத்திருந்த அந்த மாயக் கண்ணன் புன்னகை புரிந்தார்.

அவரது புன்னகையைக் கண்டு பொறுக்காத லக்ஷ்மி "சுவாமி, இது என்ன
அநீதி. சதா வேதம் ஓதிக்கொண்டு உங்களையே ஸ்மரித்துக் கொண்டு இருக்கும் இந்த அந்தணருக்கு ஏன் இந்த நிலை?அவருக்கு செல்வ
வளத்தைத் தரக்கூடாதா?"என்றாள் சற்றே கோபத்துடன்.

அதே புன்னகையுடன் நாராயணர்"என்ன லக்ஷ்மி நீதானே தனத்துக்கு
அதிபதி?செல்வத்தை அள்ளிக் கொடுக்கவேண்டியதுதானே?" என்றார்
கள்ளச் சிரிப்போடு.

"நானே கொடுக்கிறேன் சுவாமி" என்றவளைத் தடுத்தார் நாராயணர்.

"லக்ஷ்மி, அவனுக்கு இந்த ஜன்மாவில் செல்வத்தை அனுபவிக்கும் பேறு இல்லை.நீ கொடுத்தாலும் அதை அவன் அனுபவிக்க மாட்டான்."

"கொடுப்பவள் தனலட்சுமி சுவாமி.அவனுக்கு செல்வம் எப்படி சேருகிறது என்று பாருங்கள்."என்றவளைப் பார்த்துப் புன்னகைத்த நாராயணர்,

"சரி. உன் விருப்பப் படியே அவனுக்கு செல்வம் கொடு. ஆனால் இரண்டு முறைதான் கொடுக்கவேண்டும்." என்று அனுமதியளித்தார்.

மகாலக்ஷ்மியும் மிகவும் மகிழ்ச்சியுடன் தன் கையிலிருந்து ஒரு பொன் மூட்டையை அந்த அந்தணர் சாம்பசிவம் நடக்கும் வழியில் போட்டாள். எப்படிப்பணம் சம்பாதிப்பது என்ற எண்ணத்துடன் போய்க் கொண்டிருந்த சாம்பசிவத்துக்கு திடீரென்று ஒரு எண்ணம் தோன்றியது.நமது
ஐம்புலன்களும் நன்றாக இருக்கும் போதே நம்மால் விரைவாக நடக்க இயலவில்லையே கண்ணில்லாதவர்கள் எப்படி நடப்பார்கள்? நாமும் கண்ணில்லாமல் நடந்து பார்ப்போம் என்ற எண்ணத்துடன் தன் இரு கண்களையும் மூடிக்கொண்டு நடந்தான் சாம்பசிவம்.

அதே சமயம் தன் கையிலிருந்த பொன் மூட்டையை அவன் முன் போட்டாள் மகாலட்சுமி.கண்களை மூடிக்கொண்டு நடந்த சாம்பசிவம் அந்த மூட்டையைத் தாண்டிச் சென்று தன் கண்களைத் திறந்தான். "அப்பாடா, கண்ணில்லாமல்நடப்பது ரொம்ப கஷ்டம்தான். ஆண்டவா எனக்கு நல்லபடியாகக் கண் கொடுத்திருக்கும் உனக்கு கோடானு கோடி நன்றிப்பா" என்று இரு கை கூப்பி வணங்கிவிட்டு நடந்தான்.

வைகுண்ட நாராயணன் சிரித்தார்."என்ன தேவி, உன் பக்தன் நீ கொடுத்த தனத்தை ஏற்கவில்லை போலிருக்கிறதே."

"சுவாமி, இன்னொருமுறை முயற்சித்துப் பார்க்கிறேன்."

"சரி.உன் விருப்பம்."என்று அனுமதி அளித்தார் இறைவன்.

இம்முறை அவன் கண்களில் படும்படி அந்த திரவிய மூட்டையை அவன் நடக்கும் பாதையில் போட்டாள் தேவி.

தன் முன் கிடக்கும் அந்த மூட்டையைக் கையில் எடுத்தான் அந்த ஏழை பிராம்மணன்.மகாலட்சுமி மனம் மகிழ்ந்தாள்.

நாராயணனை சற்றே கர்வத்துடன் பார்த்தாள்.இப்போதும் இறைவன் புன்னகைத்தார்.

"லக்ஷ்மி என்ன நடக்கிறது என்று பார்.உன் விருப்பம் நிறைவேறினால் எனக்கும் மகிழ்ச்சியே.என்ன செய்வது.அவன் கர்மபலனை அவன்தான் அனுபவிக்க வேண்டும்."என்றார் பெருமூச்சுடன்.அதேசமயம் கையில்
எடுத்த செல்வத்தைப்பிரித்துப் பார்த்த சாம்பசிவம் அச்சமும் ஆச்சரியமும் கொண்டான். மக்கள் அதிகம் நடமாடாதஅந்தப் பாதையில் யார் இந்த மூட்டையைப் போட்டிருப்பார்?யாரேனும் தேடிவருவார்களா என்று
அங்கேயே காத்திருந்தான்.

அப்போது சாம்பசிவத்துக்கு முன்னாலேயே அடுத்த ஊர் சென்று அடைந்த தனபாலன் தன் வியாபாரத்தை முடித்துக் கொண்டு திரும்பிக் கொண்டு இருந்தான்.அங்கே அமர்ந்திருந்த சாம்பசிவனைப் பார்த்துஏன் இங்கேயே தங்கிவிட்டாய்? என்று விசாரிப்பதற்காக வண்டியை மெதுவாக விடச் சொன்னான்.தான் தவறவிட்ட திரவியத்தைப் பற்றிக் கேட்கத்தான் வந்துள்ளான் என நினைத்த சாம்பசிவம் தன்னிடமிருந்த மூட்டையைக் கொடுத்து ஐயா, தாங்கள் தவறவிட்ட மூட்டை இதுதானா?நீங்கள் வருவீர்கள் என்றுதான் காத்திருந்தேன். இந்தாருங்கள் உங்கள் செல்வம்" என்று அந்த மூட்டையை தனபாலனிடம் கொடுத்தான்.

தனபாலனும் அதைப் பெற்றுக் கொண்டு விரைந்து ஊர் வந்து சேர்ந்தான்.மிகுந்த நல்ல காரியம் செய்து விட்டது போல் சாம்பசிவனும் மகிழ்ச்சியுடன் தன் பயணத்தைத் தொடர்ந்தான்.

நாராயணன் "பார்த்தாயா தேவி தனலக்ஷ்மியே கொடுத்தாலும் அந்த
செல்வம் அவனைச் சேரவில்லை பார்.இது அவனது பூர்வ ஜன்மவினை."என்றார் அதே புன்னகையோடு.

இப்போது மகாலட்சுமி நாராயணனைப் பார்த்து "நானே நினைத்தாலும் ஒருவனைச் செல்வந்தனாக ஆக்க முடியாது அவரவர் செய்த புண்ணியங்களும் பாவங்களுமே அவர்களின் சுக துக்கங்களை முடிவு செய்கின்றன என்பதைப் புரிந்து கொண்டேன் சுவாமி."என்று கூறித் தலைவணங்கி நின்றாள்.

நாமும் எத்தனை பிறவி எடுத்தாலும் அத்தனை பிறவிகளிலும்
நன்மையே நினைப்பவர்களாக இருக்க வேண்டும் என்ற உண்மையைப்
புரிந்து கொண்டு வாழவேண்டும்.

தெய்வீகத்தை உணர்ந்து நடக்க வேண்டும்!!!

படித்தேன: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1.5.17

குதிரையை விரட்டுங்கள் என்று எதற்காகச் சொன்னார் துறவி?


குதிரையை விரட்டுங்கள் என்று எதற்காகச் சொன்னார் துறவி?

குதிரையை விரட்டுங்கள்!!!!

துறவி சொன்ன அறிவுரை.......!!!

ஆன்மிக பூமி நம் நாடு. நம் நாட்டில் தான் ஞானிகள் அதிகம் உண்டானார்கள் ,வந்தார்கள் ,தங்கினார்கள் ,அடக்கம்
ஆனார்கள் என்று நமக்கு தெரிந்த விவரம் தான் .

இப்படி ஆன்மிக பயணம் நம் நாட்டில் நடந்து கொண்டே இருக்கும் .

இந்த ஆன்மிக பயணம் ஏன்....???

ஒரு சின்ன கதை

துறவி  ஒருவர் ஒரு ஊருக்கு சென்றார்.

பலர் வந்து அவரை தரிசித்து ஆசி பெற்று சென்றனர்.

இளைஞன் ஒருவன் வந்தான்

"சாமி எனக்கு ஒரு சந்தேகம் ” உங்களைப் போன்று பல ஞானிகளும் பெரியோர்களும் வந்து மனித குலத்திற்கு பல அறிவுரைகள் சொல்லியுள்ளனர். ஆனால் இன்றும் மனிதன் தீய வழியில் தான் செல்கிறான் , உங்களைப் போன்றவர்களின் அறிவுரைகளால் என்ன
பயன்......??? என்று கேட்டான்.

துறவி  அவனிடம் சொன்னார்......

தம்பி நான் இன்னும் சில நாட்கள் இங்கே தான் தங்கி இருப்பேன், நான் இந்த ஊரை விட்டு செல்லும் பொழுது நீ  கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறேன் , அதற்கு முன் ஒரு வேலை செய். "ஒரு குதிரையை கொண்டு வந்து இந்த கோயில் மண்டபத்தில் கட்டி வை.
நான் ஊரைவிட்டு செல்லும் வரை குதிரை அங்கே கட்டி இருக்கட்டும். தினமும் இரவு அதற்கு உணவு வைத்து விடு" என்று சொல்லி விட்டு அருகில் உள்ள சத்திரத்துக்கு சென்றார்.

மறுநாள் காலை துறவி  அந்த கோயில் மண்டபத்திற்கு வந்தார்.

அப்பொழுது அந்த இளைஞன் அந்த குதிரையை சுத்தி இருந்த சாணத்தையும், அது மிச்சம் வைத்த உணவு  குப்பைகளையும் சுத்தப்படுத்திக் கொண்டு இருந்தான்.

இவ்வாறு நான்கு நாட்கள் தொடர்ந்து நடந்தன.

அடுத்த நாள் காலை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த இளைஞர் கிட்டே வந்தார் துறவி. இன்று சுத்தப் படுத்தினாலும் இந்த
இடத்தை குதிரை மீண்டும் மீண்டும் அசுத்தம் செய்து
விடுகின்றதே பிறகு ஏன் தேவை இல்லாமல் சுத்தம் செய்கிறாய்.......??? என்று கேட்டார்.

அதற்கு அவன்,    "என்ன சாமி எல்லாம் தெரிஞ்ச நீங்க இப்படி கேட்கறீங்க.....??? திரும்ப திரும்ப அசுத்தம் ஆவுதுனு
சுத்தப்படுத்தாம இருக்க முடியுமா....???

இதை கேட்ட துறவி  அப்போது சொன்னார்  "தம்பி அன்று நீ என்னிடம் கேட்ட கேள்விக்கு இதுதான் பதில்.

நீ இப்போது செய்யும் வேலையைத் தான் நானும் செய்கிறேன் , அசுத்தமான இடத்தை நீ மீண்டும் மீண்டும் சுத்தம்
செய்வது போல் , மனிதர்களை நல்வழி படுத்தும்  செயலை பெரியோர்கள் இடைவிடாமல் செய்வார்கள்.

இளைஞன் கேட்டான்” சாமி இதற்கு நிறந்தர தீர்வு என்ன....???

அவர் உடனே அங்கு கட்டி இருந்த குதிரையை அவிழ்த்து விட்டு விரட்டினார், பின்பு அந்த இளைஞனைப் பார்த்துக்  கேட்டார்

“இனி இந்த இடம் அசுத்தம் ஆகுமா......???

ஆகாது சாமி. என்றான்

துறவி  கூறினார் ” உன் கேள்விக்கு இதான் பதில்.

நீ செய்த வேலையைப் போல் நாங்கள் மீண்டும் மீண்டும் சுத்தப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.

இப்பொழுது நான் செய்த வேலையைப் போல் என்று மனிதன் தன்னிடம்  இருக்கும் தீய எண்ணம் என்ற  குதிரையை வாழ்வில் இருந்து விரட்டி விடுகிறானோ,  அப்பொழுதே எங்களின் சுத்தப் படுத்தும் கடமை முடிந்து விடும், அன்று வரை மனிதனை
நன்னெறி படுத்துவது ஆன்மிகத்தின் கடமை என்றார்........!!!
------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.3.17

பிரச்சினை எப்போது வருமென்று தெரியுமா?

பிரச்சினை எப்போது வருமென்று தெரியுமா?

ஒரு வீட்டில் எலி தனது இரவு நேர இரைதேடப் புறப்பட்டுக் கொண்டிருந்தது.

எலி வலையை விட்டு தலையை உயர்த்திப்பார்த்தது.

வீட்டின் எஜமானனும் எஜமானியும் ஒரு பார்சலைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள்.

ஏதோ நாம் சாப்பிடக்கூடிய பொருள்தான் உள்ளே இருக்கும் என்று ஆவலோடு பார்த்தது எலி.

அவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப்பொறி.

அதைப்பார்த்ததும் அந்த எலிக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது.

உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது "பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார். எனக்கு பயமாக இருக்கிறது."

கோழி விட்டேற்றியாகச் சொன்னது" உன்னைப் பொறுத்தவரை கவலைப்பட வேண்டிய விஷயம்தான்.நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை."

உடனே அது பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் அதே விஷயத்தைப் போய்ச் சொல்லியது. வான்கோழியும் அதேபதிலைச் சொல்லியதோடு "நான் எலிப்பொறியயெல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்." என்றது.

மனம் நொந்த எலி அடுத்து பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே விஷயத்தைச் சொல்லியது. ஆடும் அதேபதிலைச் சொல்லியது. அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை "எலிப்பொறியை பார்த்து என்னையும் பயப்படச் சொல்கிறாயா?" என்று நக்கலும் அடித்தது.

அன்று இரவு எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு பண்ணையாரும் அவர் மனைவியும் தூங்கப் போயினர்.

ஒரு அரை மணி நேரத்தில் " டமால் " என்றொரு சத்தம்.

எலி மாட்டிக்கொண்டுவிட்டது என்று பண்ணையார் மனைவி ஓடிவந்து எலிப்பொறியைத் கையில் தூக்கினாள்.

எலிக்கு பதிலாக பாதி மாட்டியிருந்த பாம்பு ஒன்று எஜமானியம்மாளைக் கடித்து விட்டது.

எஜமானியம்மாளை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக் கொண்டு ஓடினார்கள். விஷத்தை முறிக்க இன்ஜெக்சன் போட்ட பின்னும் பண்ணையார் மனைவிக்கு ஜுரம் இறங்கவேயில்லை.

அருகில் இருந்த ஒரு மூதாட்டி "பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு "சிக்கன் சூப் வைத்துக்கொடுத்தால் நல்லது" என்று யோசனை சொன்னாள்.

கோழிக்கு வந்தது வினை. கோழி அடித்து சூப் வைக்கப்பட்டது. கோழி உயிரை விட்டது.

அப்போதும் பண்ணையார் மனைவியின் ஜுரம் தணியவில்லை.

உறவினர்கள் சிலர் வந்தார்கள்.அவர்களுக்குச் சமைத்துப்போட வான்கோழியை அடித்தார்கள். வான்கோழியும் உயிரை விட்டது.

சில நாட்களில் பண்ணையாரம்மாவின் உடல் நலம் தேறியது.

பண்ணையார் மனைவி பிழைத்ததைக் கொண்டாட ஊருக்கே விருந்து வைத்தார்.

இந்த முறை ஆட்டின் முறை.

விருந்தாக ஆடும் உயிரை விட்டது.

நடந்த அத்தனை நிகழ்வுகளையும் எலி வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது.

பண்ணையார் மனைவியின் பாம்புக்கடிக்குக் காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார்.

எலி தப்பித்து விட்டது. அப்பாடா...

நீதி :- அருகில் இருப்பவர்கள் தனக்கொரு பிரச்சினை என்று வந்தால் "என்ன" என்றாவது கேளுங்கள்.

ஏனென்றால் யாருக்கு என்ன பிரச்சினை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது.

அடுத்தது அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம்.

அடுத்த முறை நம்முடையதாகவும் இருக்கலாம்......

அடுத்தவருக்கு முடிந்தவரை உதவிடுங்கள்
-------------------------
படித்தேன் பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.1.17

மேட்டரில் எது முக்கியம் புரிதலா - தெளிதலா?


மேட்டரில் எது முக்கியம் புரிதலா - தெளிதலா?

ஒருவர் தினமும் கோவிலுக்கு உபன்யாசம் கேட்பதற்காகச் சென்று வந்து கொண்டிருந்தார்.

அதனால் வீட்டுக்கு வர கொஞ்சம் லேட் ஆகவும் ஆனது.

அப்படி ஒரு இரவு அவர் வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தபோது வெறுப்பாகிப் போன அவரது மனைவி, " அப்படி என்ன தான் உபன்யாசத்துலே கொட்டிக் கிடக்கு......??? ஒரு நாளை போல இவ்வளவு லேட் ஆக வீட்டுக்கு திரும்பி வரேங்களே. டெயிலி அங்க போயிட்டு வாறீங்களே, உங்களுக்கு என்ன புரிந்தது சொல்லுங்க " என்று கேட்டார்.

அதற்கு அந்த மனிதர்." எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனா, போயிட்டு கேட்டு வருவது நன்றாகவே இருக்கு" என்றார்.

கோபமடைந்த மனைவி, " முதல்ல வீட்டில இருக்கிற சல்லடையில் கொஞ்சம் தண்ணீர் வீட்டுக் கொண்டு வாங்க" என்றார்.

அவரும் சல்லடையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வீடு முழுதும் சிந்தியபடியே வந்தார்.

மனைவியிடம் வந்த போது தண்ணீர் இல்லாமல் வெறும் சல்லடை மட்டுமே இருந்தது.

உடனே மனைவி," தினமும் லேட்டா வரீங்க. கேட்டா, உபன்யாசத்துக்குப் போனேன் எங்கறீங்க...... என்ன சொன்னாங்கன்னு கேட்டா.....
ஒன்னும் தெரியல்லேன்னு சொல்லறீங்க.நீங்க உபன்யாசம் கேட்கப்போற லட்சணம் இதோ இந்த சல்லடையில் ஊத்தின தண்ணீ மாதிரித் தான்..எதுக்கும் பிரயோஜனம் கிடையாது", என்று கொட்டித் தீர்த்தாள்.

அதுக்கு அந்த மனிதர் சொன்ன பதில் தான் கதையின் நீதியாக அமைய போகிறது...

"நீ சொல்லறது சரிதான். சல்லடையில் தண்ணீ வேணா நிரப்ப முடியாம போகலாம். ஆனா, அழுக்கா இருந்த சல்லடை இப்போ பாரு.. நல்லா சுத்தமாயிடுச்சு. அதுபோல, உபன்யாசத்தில சொல்ற விஷயம் வேணா எனக்குப் புரியாமலிருக்கலாம். ஆனா, என்னோட மனசில இருக்கிற அழுக்கையெல்லாம் படிப் படியாக அது அகற்றுவதை என்னால் நன்கு உணர முடிகிறது", ன்னு சொன்னார்.

"புரிதலை விட தெளிதலே எப்பவும் முக்கியம்"
------------------------------------------------------
படித்தேன்.பகர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.1.17

தர்மதேவதை உலகைவிட்டு ஏன் போனாள்?

தர்மதேவதை உலகைவிட்டு ஏன் போனாள்?

🌷மகாபாரதத்தின் இறுதிக்கட்டம். பீஷ்மர் அம்புப் படுக்கையில் மரணத்தை எதிர்நோக்கிப் படுத்திருக்கிறார். கர்ணனும் வஞ்சனையால் கொல்லப்படுகிறான். குந்திதேவி கர்ணனை மகனே என்றழைத்து துக்கம் அனுஷ்டிக்கிறாள். கர்ணனுடைய மனைவியும் அவன் உடல்மேல் விழுந்து கதறுகிறாள். இவர்களோடு இன்னொரு பெண்மணியும் கர்ணனுக்காக அழுதாள். அதைக் கண்ட தருமபுத்திரர் கிருஷ்ணனைப் பார்த்து, ""இவள் யார்? இவள் ஏன் அழுகிறாள்?'' என்று கேட்டார். அதற்கு கிருஷ்ணர், ""இவள் தர்ம தேவதை. இனி உலகில் தர்மமே இருக்கப் போவதில்லை.

தர்மம் செய்வதற்கென்றே பிறந்தவன் கர்ணன். அவனே போய்விட்ட பிறகு பூமியில் எனக்கென்ன வேலை என்று உலகை விட்டுப்போகிறாள் அவள்'' என்றார்.தர்மபுத்திரரைப்பயம் சூழ்ந்து கொண்டது.

🌷காரணம்- பாண்டவர்களுடைய பேரனான ஜெனமேஜெயன் ஆளும்போது இந்த நாட்டில் தர்மம் இருக்காதாஎன்கிற பயம்தான் அது. ""தர்மம் மீண்டும் செழிக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?'' என்று பரந்தாமனை தர்மர் கேட்க, பரந்தாமனோ ""அம்புப் படுக்கையில் படுத்திருக்கும் பீஷ்மரைக் கேள்; அவர் சொல்வார்'' என்றார்.

பீஷ்மரும் தர்மதேவதை உலகை விட்டுச் சென்றதால் ஏற்படப் போகும் அவலங்களைச் சொல்கிறார்:""இனி உலகம் செழிப்புற்று விளங்காது. தேசங் கள் ஒவ்வொன்றும் அநியாயமாகச் சண்டையிட்டு அழியும். அரசர்கள் நீதிமான்களாக இருக்க மாட்டார்கள். அவர்களிடம் பணிபுரியும் அமைச்சர்கள் முதல் பணியாட்கள் வரை ஊழல் செய்து, மக்களை வாட்டி தவறான வழியில் தனம் சேர்ப்பார்கள். அரசனிடம் நல்ல வற்றிற்கு நீதி கிடைக்காது. குருமார்கள் தங்கள் சீடர்களுக்கு ஒழுங்காகப் பாடம் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள்; சீடர் களும் ஒழுங்காகப் படிக்க மாட்டார்கள். படித்தவன் சூதும் வாதும் செய்வான். மழை பொழியாது; நிலங்கள் விளைச்சலைக் கொடுக்காது; பஞ்சமும் பட்டினியும் தலைவிரித்தாடும். கணவன்மார்கள் தங்கள் மனைவியைச் சரிவர காப்பாற்ற மாட்டார்கள்; மனைவிமார்களும் பதிவிரதையாக இருக்க மாட்டார்கள். அவர்களின் குழந்தைகள் தவறான வழியில் நடக்கும்...

🌷''இப்படி பீஷ்மர் சொல்லச் சொல்ல பாண்டவர்கள் பயந்தார்கள். இதிலிருந்து தங்கள் சந்ததியினர் தப்பிப்பது எப்படி என்று கேட்டார் கள். ""அதை ஸ்ரீ கிருஷ்ணனே சொல்லுவார்'' என்று பீஷ்மர் கை காட்ட, கிருஷ்ணனோ, ""நீங்கள் பிதாமகர். நான் சொல்லுவதைவிட உங்கள் நாவிலிருந்தே நல்ல வார்த்தைகள் புறப்படட்டும்'' என்று சொன்னார்.

அப்போது புறப்பட்டவைதான் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர நாமம். அதாவது, எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனை ஆயிரம் பெயர் சொல்லி அர்ச்சித்து அவன் மனம் குளிர வேண்டினால் தர்மம் மீண்டும் தழைக்கும் என்பதுதான் விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் மகிமை.பகவானுக்கு ஆயிரம் பெயர்கள் உண்டா என்று நாம் வியப்படையலாம்.

🌷சாதாரண மனிதனாகிய நமக்கே பாலசுப்பிரமணியன் என்று பெயர் வைத்தால், பாலா, பாலு,சுப்பிரமணி, சுப்பி, மணி, மணியன் என்று பல பெயர்களால்அழைக்கும்போது, பகவானுக்கு ஆயிரம் பெயர்கள் இருக்காதா என்ன? இந்த ஆயிரம் பெயர் களைச் சொல்லி, பகவானை வேண்டினால் கொஞ்சமாவது தர்மம் பிழைக்கும் என்பது பீஷ்மர் வாக்கு.

🌷உடனே பார்வதிதேவிக்குச் சந்தேகம் வந்து விட்டது. அவள் சர்வேஸ்வரனான தன் கணவனைப் பார்த்து, ""சுவாமி, இது எப்படி சாத்தியமாகும்? ஆயிரம் நாமங்கள் சொல்லி அதனால் தர்மம் தழைக்கும் என்றால், அந்த நாமங்களை பண்டி தர்களால் சொல்ல முடியலாம்; படித்தவர்களால் சொல்ல முடியலாம். ஆனால் படிக்காத ஒருவன் தர்மம் தழைக்க வேண்டும் என்பதற்காக ஆயிரம் பெயர்களை நினைவில் வைத்துக் கொண்டு சொல்ல முடியுமா?'' என்று கேட்டாள்.ஈஸ்வரன் புன்னகைத்தார்.""தேவி... நீ சொல்வது சரிதான். ஏதுமறியாத ஒருவன் ஆயிரம் பெயர் சொல்லி திருமாலை வேண்டுவது நடக்காத காரியம்தான். ஆனால் அதற்கும் ஓர் வழி உண்டு.

🌷"ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமேஸஹஸ்த்ர நாம தந்துல்யம் ராம நாம வரானனே'-இப்படி மூன்று முறை சொன்னால் போதும். சஹஸ்ர நாமம் சொன்ன பலனை அடையலாம்'' என்று பார்வதிதேவியின்சந்தேகத்தை நிவர்த்தி செய்தார் ஈஸ்வரன்.சரி;
இப்படிச் சொல்வதால் நமக்கு என்ன பலன் கிடைக்கும்? என்று கேட்கலாம். மரா... மரா... மரா... என்று சொல்லியே ராமநாமத்தை உச்சரித்த வேடனும் திருடனுமாக இருந்தவனே வால்மீகி மகரிஷியாக உயரவில்லையா? அது தான் ஸ்ரீராம நாம மகிமை.

 மேலும் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அனைவரும், அனைத்து இனத்தைச் சேர்ந்தவர்களும்சொல்லலாம். முழு மனதோடு பகவானைச் சரணாகதி அடைந்தால்பலன்களை அவன் தருவான். பேய், பிசாசுகள் அண்டாது. வியாதிகள் அணுகாது. வைத்தியர்கள் கைவிட்ட தீராத நோயும் தீரும். சுகப்பிரசவம் சரியாக நேரும். நோயாளிகளின் காதருகே அவர்கள் மனம் கேட்கும்படியாக சஹஸ்ர நாமப் பாராயணம் செய்வது மிக மிக உத்தமம். மேலும் தர்மங்களும் தழைக்கும்.

🌷ஸ்ரீஆதிசங்கர பகவத் பாதர், ஸ்ரீராமானுஜர், ஸ்ரீதேசிகன், ஸ்ரீமத்வாச்சாரியார், ஸ்ரீராகவேந்திரசுவாமிகள் போன்ற மகான்கள் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர நாமத்திற்கு மிக அருமையான பாஷ்யங் கள் (பதவுரை- பொழிப்புரை) எழுதியிருக்கிறார் கள். இதிலிருந்தே இதனுடைய பெருமையை அறியலாம். சமஸ்கிருத மொழியைச் சரியாக உச்சரித்துச் சொல்ல வேண்டும்.இல்லையேல் பாரத ரத்தினமாய் விளங்கிய எம்.எஸ். சுப்பு லட்சுமி அவர்கள் இசைத்த ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர நாம ஒலிநாடாவையோ குறுந்தகட்டையோ தினமும் காலையில் நமது வீடுகளில் ஒலிக்கச் செய்வதன் மூலம் நாம் சகல சௌபாக்கியங்களுடன் வாழலாம். பலருடைய வாழ்விலும் இப்படிக் கேட்டு நன்மைகள் விளைந்திருக்கின்றன.

🌷"பரித்ராணாய ஸாதுநாம் விநாசாய ச துஷ்க்ருதாம் !!தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே !!🌷

அனைவரும் விஷ்ணு சகஸ்ரநாமத்தை பாராயணம்செய்து விஷ்ணுவின் அருளை பெறுவோமாக .

படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.12.16

குட்டிக்கதை: மகிழ்ச்சியும் மன அமைதியும் ஒரு சேர எப்போது கிடைக்கும்?


குட்டிக்கதை: மகிழ்ச்சியும் மன அமைதியும் ஒரு சேர எப்போது கிடைக்கும்?

ஒரே தெருவில் ஒரு செருப்பு விற்கும் தொழிலாளியும், ஒரு செல்வந்தரும் இருந்தனர்.

செருப்புத் தொழிலாளி தினமும் தான் செருப்புக் கடையின் ஓரத்தில் பெருமாள் படம் ஒன்றை வைத்து அதை வணங்கி வந்தார். *செல்வம்* இல்லாவிட்டாலும் *சந்தோசமும் மன அமைதியுடனும்* இருந்தார்.

செல்வந்தரோ தினமும் காலையில் குளித்துவிட்டு, பல மணி நேரம் பூஜை புனஸ்காரம் எல்லாம் செய்வார். பல தலைமுறைக்கு காணும் செல்வம் இருந்தும் நிம்மதியின்றி வாழ்ந்து வந்தார்.

ஒரு நாள் நாரத முனிவர் விஷ்ணுவைப் பார்த்து *”அந்தச் செல்வந்தர் மிகுந்த பக்திமானாக இருக்கிறார்; தினமும் உங்களுக்குப் பல மணி நேரம் பூஜை எல்லாம் செய்கிறார். அவர் நிம்மதியாய் வாழ, ஏதாவது செய்யக்கூடாதா?”* என்றார்.

*விஷ்ணுவும்* அதற்குச் சம்மதித்துவிட்டு *நாரதரை* பூலோகத்துக்கு அனுப்பினார்.

போகும்போது நாரதரைப் பார்த்து, *“நீங்கள் கீழே சென்று, ‘நான் நாரயணனிடமிருந்து வருகிறேன்"* என்று செல்வந்தரரிடம்
சொல்லுங்கள்.

அவர் *‘தற்பொழுது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?’* என்று கேட்பார்.

அதற்கு நீங்கள் *‘நாராயணன் தற்போது ஓர் ஊசியின் காது வழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருக்கிறார்’* என்று பதில் சொல்லுங்கள்” என்று சொல்லி அனுப்பினார்.

*”அப்படியே அந்தச் செருப்பு தைக்கும் தொழிலாளியையும் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள்”* என்று சொல்லி அனுப்பினார் விஷ்ணு.

நாரதரும் முதலில் அந்தச் செல்வந்தரின் வீட்டுக்கு சென்றர். பூஜை எல்லாம் முடித்துவிட்டு வந்த செல்வந்தர், நாரதரிடம், *“நீங்கள் யார்?”* என்று கேட்க, நாரதர் தான் நாரயணரிடமிருந்து வருவதாகச் சொல்கிறார். அதற்கு அந்தச் செல்வந்தர் *“தற்போது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?”* என்று கேட்க, நாரதரும், *நாராயணன், ஒர் ஊசியின் காதுவழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருப்பதை பார்த்தாகச் சொல்கிறார்.* அதற்கு அந்த செல்வந்தர் *“அது எப்படி முடியும்? இது என்ன நடக்கிற காரியமா?”* என்று கேட்டார்.

நாரதர் அடுத்தது அந்தச் செருப்புத் தொழிலாளியைப் பார்க்கச் சென்றார். அவரிடமும் இதே சம்பாஷணை நடைபெற்றது. ஆனால் கடைசி பதிலுக்கு அந்தச் செருப்புத் தைக்கும் தொழிலாளி, *“இதில் என்ன விந்தை? ஒரு பெரிய ஆலமரத்தை சின்ன விதையில் அடக்கியவர், பிரபஞ்சத்தை தன் வாயில் காண்பித்தவர், அவருக்கு யானையை ஊசியில் நுழைப்பது என்ன பெரிய விஷயமா?”* என்று பதில் சொன்னார்.

அவர்கள் இருவரும் சொன்ன பதிலை *நாராயணனிடம்* வந்து சொன்னார்

கடவுள் பக்தி என்பது, பூஜை, புனஸ்காரங்கள் செய்வது மட்டுமில்லை. இறைவனின் பாதத்தை பூரண நம்பிக்கையுடன், நீயே சரணம் என்று
பற்றுவதே *”உண்மையான பக்தி”* இப்பொழுது தெரிகிறதா? *ஏழையின் நிம்மதிக்கு காரணம் என்று பதிலளித்தார் நாராயணன்.*

காந்தக் கல்லோடு எப்படி ஊசி போய் ஒட்டிக்கொள்கிறதோ, நதியானது மகா சமுத்திரத்தில் கலந்து விடுகிறதோ… அது போல், கடவுளுடன் நமது மனமும் கலந்துவிட வேண்டும். நமக்கு அனுக்கிரஹம் செய்கிற, பரமாத்வினிடத்தில், தன்னை அறியாமல் போய் நிற்க வேண்டும். *அதற்கு காரணமே இருக்கக் கூடாது.* காரணம் என்று வந்தால் அது *வியாபாராமாகிவிடும்.*

*இறைவனிடம் எதைக்கேட்டாலும் அது வியாபாரம் தான்!*

ஏதோ ஒன்றுக் கொன்று கொடுப்பது போல, செல்வத்தைக் கொடு, பக்தி செய்கிறேன், என்று *இறைவனிடம் பரிமாறிக் கொள்வதனால் வியாபாரமாகி விடும்.*

அப்படியில்லாமல் எதையுமே நினைக்காது, பெருமாளிடத்தில் போய் சேருவதையே நினைத்து தன்னை அறியாமல் ஓடுகிற சித்த விருத்தி
இருக்கிறதே, அதற்கு தான் *பக்தி* என்று பெயர். 🙏
====================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.10.16

அசத்தலான குட்டிக் கதைகள்!


அசத்தலான குட்டிக் கதைகள்!

1
தனது மாணவர்களுக்கு ஆசிரியை ஒருவர் கூறிய ஒரு கதை:*
"ஒரு கப்பலில் ஒரு தம்பதி பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது கப்பல் கவிழும் அபாயமான கட்டத்தில், ஒரேயொருவர் தப்பிக்க வசதியான படகு ஒன்று மாத்திரமே இருக்கிறது.
மனைவியை பின்னே தள்ளி விட்டு கணவன் மட்டும் அந்தப் படகில் தப்பிச்செல்கிறார். கவிழும் கப்பலின் அந்தரத்தில் இருந்தவாறு தப்பிச் செல்லும் கணவனை நோக்கி மனைவி சத்தமாக....
இந்த இடத்தில் என்ன சொல்லியிருப்பார்???" என்று மாணவர்களை நோக்கி ஆசிரியை கேட்டார்.
எல்லா மாணவர்களும் பல வகையான பதில் தரும் போது ஒரு மாணவன் மட்டும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.....
"ஏம்பா நீ அமைதியா இருக்க......"
'நம்ம கொழந்தைய பத்திரமா பாத்துக்கங்கன்னு சொல்லிருப்பா டீச்சர்'
"எப்பிடிப்பா கரெக்டா சொல்ற, ஒனக்கு முன்னாடியே இந்த கதை தெரியுமா?"
'இல்ல டீச்சர், எங்கம்மாவும் சாவுறதுக்கு முன்னாடி அப்பாக்கிட்ட இதையேதான் சொன்னாங்க...'
பலத்த மௌனத்திற்கு பிறகு ஆசிரியை கதையை தொடர்ந்தார்.
தனி ஆளாக அவர்களது பெண்ணை அந்த மனிதன் வளர்த்து வந்தார். அவரின் மரணத்தின் பின்னர் பல வருடங்கள் கழித்து அந்தப் பெண் தனது தந்தையின் டைரியைப் பார்க்க நேர்ந்தது. தாய்க்கு உயிர் கொல்லி நோய் இருந்திருப்பது அப்போதுதான் அவளுக்கு தெரிய வந்தது. கப்பல் கவிழ்ந்த சம்பவத்தை அப்பா இவ்வாறு எழுதியிருந்தார்.
' உன்னோடு நானும் கடலின் அடியில் சங்கமித்திருக்க வேண்டும்... நம் இருவரின் மரணமும் ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். நான் என்ன செய்ய, நமது பெண்ணை வளர்த்தெடுக்க நான் மட்டுமே தப்ப வேண்டியிருந்தது'.
கதையை இதோடு முடித்து விட்டு அந்த ஆசிரியை கூறினார்:
'வாழ்க்கைல நல்லது கெட்டது எல்லாமே நடக்கும். எல்லாத்துக்கும் காரணம் இருக்கும் ஆனா சில நேரங்கள்ல நம்மளால புரிஞ்சிக்க முடியாமல் போகலாம்.
அதனால நாம ஆழமா யோசிக்காமலோ, சரியா
புரிஞ்சிக்காமலோ யார் மேலயும் முடிவுக்கு வந்துடக்கூடாது.'
*நாம் நண்பர்களோட ரெஸ்டாரண்ட் போனா, ஒருத்தன் காசு கொடுக்க முன்வந்தா அவன் பணக்காரன் என்று அர்த்தமில்ல, பணத்த விட நம்ம நட்பை அதிகமா மதிக்கிறான்' னு அர்த்தம்.
*'முதல்ல மன்னிப்பு கேக்கிறாங்கன்னா அவங்க தப்பு பண்ணிருக்காங்கன்னு அர்த்தமில்ல, ஈகோவ(Ego) விட நம்ப உறவை மதிக்கிறாங்க' னு அர்த்தம்.
'நம்ம கண்டுக்காம விட்டாலும் இருந்திருந்து நமக்கு கால் பண்றாங்கன்னா அவங்க வேல வெட்டி இல்லாம இருக்காங்கன்னு அர்த்தமில்ல, நம்ம அவங்க மனசில இருக்கோம்னு அர்த்தம்'.
பின்னொரு காலத்தில நம்ம புள்ளங்க நம்மகிட்ட கேட்கும்,,,,,
'"யாருப்பா அந்த போட்டோல இருக்கிறவங்கல்லாம்???"'
ஒரு கண்ணீர் கலந்த புன்னகையோட நாம சொல்லலாம் ' அவங்க கூடத்தான் சில நல்ல தருணங்கள  கழிச்சிருக்கோம்'.
*#வாழ்க்கை #குறுகியது, ஆனா #அழகானது.*
*படித்ததில் பிடித்தது...*
===================================
2
ஆண்கள் கவனத்திற்கு:
(மனைவியுடன் பொது இடங்களுக்கு செல்லும்போது உஷார்.)
ஒரு கணவனும் மனைவியும் லிப்ட் ல 10 வது மாடியிலிருந்து கீழே வந்து் கொண்டிருக்கிறார்கள். 5வது மாடியில் அழகான இளம்பெண் ஒருத்தி லிப்ட் ல ஏறி அந்த கணவன் பக்கத்தில் நிற்க, அவன் அவளின் அழகில் மயங்கி ஜொள் விடுகிறான். சிறிது நேரத்துக்குப்பின் அவள் இவனது கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு \"இனி இப்படி செய்தால் செருப்பு பிஞ்சிரும்\" னு சொல்லிட்டு அவனிடமிருந்து விலகி நிற்கிறாள். இவனுக்கோ தன் மனைவி முன்னிலையில் அடிவாங்கிய அவமானம். லிப்ட் ல இருந்து இறங்கி வெகுநேரமாகியும் மனைவியிடம் பேச வெட்கி வாயடைத்தான். வீட்டிற்கு நடக்கிறார்கள்.

மனைவி : ஏங்க அதையே நினைச்சிகிட்டு. விடுங்க. ஏதாவது பேசிட்டு வாங்க.
கணவன் : இல்லடி, நான் லிப்ட் ல...
மனைவி : அட, அத தான் விடுங்க னு சொன்னேன். நீங்க ஜொள் விடுறத பொறுக்காம நான்தான் அவ இடுப்பைக் கிள்ளுனேன்.
கணவன் : (அடிப்பாவி.. சண்டாளி..😳😳😠😡)  மகிழ்ச்சி 😂
====================================
3
நியூயார்க்கில் மாநகரில், ஒரு தமிழரும் , அமெரிக்கரும் சாக்லெட் கடைக்குள் நுழைந்தனர்.

அனைவரும் பிஸியாக இருந்த நேரம் அமெரிக்கர் 3 சாக்லெட் பார்களை யாருக்கும் தெரியாமல் எடுத்து தனது பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டார்.

சிறிது நேரம் கழித்து இருவரும் கடைக்கு வெளியே வந்தனர்.

அமெரிக்கர் தான் யாருக்கும் தெரியாமல் எடுத்த 3 சாக்லெட் பார்களையும் தனது பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்து தமிழனிடம் காட்டி

“நாங்கெல்லாம் யாரு! அப்பவே நாங்க அப்படி..! யாருக்கும் தெரியாம 3 சாக்லெட் பார்களை எடுத்து கொண்டு வந்துட்டேன் பார்த்தியா?”என்று பெருமை அடித்ததோடு மட்டுமில்லாமல், “உன்னால இதைவிட பெரிசா ஏதாவது செய்ய முடியுமா?” என்று சவால் வேறு விட்டார் . தமிழனிடம் .

விடுவாரா நம்ம தமிழன் “உள்ள வா… உனக்கு உண்மையான திருட்டுன்னா என்னனு காட்டுறேன்னு”, சொல்லி அமெரிக்கரை சாக்லெட் கடையின் உள்ளே அழைத்துச் சென்றார்.

விற்பனை கவுன்டரில் இருந்தவரிடம் சென்ற தமிழன் கேட்டார், ஒரு மேஜிக் காட்டுறேன் பார்க்கிறியா?..

கடைக்காரரும் சரியென்று தலையாட்ட, கவுண்டரில் இருந்து 1 சாக்லெட் பார் எடுத்து, அதனை தின்று முடித்தார்.

அடுத்து இன்னொரு சாக்லெட் பார் எடுத்து அதனையும் தின்று தீர்த்தார்.

பிறகு 3 வதாக ஒரு சாக்லெட் பார் எடுத்து அதனையும் தின்று முடித்துவிட்டு கவுன்டரில் இருந்த கடைக்காரரை ஏறிட்டுப் பார்த்தார்.

கவுன்டரில் இருந்தவர், ” எல்லாம் சரி. இதில் மேஜிக் எங்கே இருக்கிறது?.”

தமிழன் அமைதியாக பதில் அளித்தார், ”என்.ஃப்ரெண்டோட பாக்கெட்ல செக் பண்ணிப்பாரு… நான் சாப்பிட்ட 3 சாக்லெட் பாரும் இருக்கும்…’

சம்பார் சாப்பிட்டாலும் நம்ம ஆளு மூளைக்காரந்தாண்டா!!

படித்து ரசித்தது,
=======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!