
வித்தைக் குறைபாடுகள் நீங்கி வெற்றிபெற என்ன செய்யவேண்டும்?
நவக்கிரஹ ஸ்தலங்கள். புதன் கிரகத்திற்கான கோவில்!
அருள்மிகு ஸ்வேதாரண்யேஸ்வரர் ஆலயம், திருவெண்காடு.
(சீர்காழி அருகில் உள்ளது)
கும்பகோணத்தில் இருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்தத் திருத்தலம்! சீர்காழியில் இருந்து தென்கிழக்கு திசையில், பூம்புகார் செல்லும் சாலையில் பத்துக் கிலோ மீட்டர் தூரம்.
இந்தத் திருக்கோவிலில் உறையும் சிவனாரின் பெயர் ஸ்வேதாரண்யேஸ்வரர். அம்பிகையின் பெயர் பிரம்ம வித்யாம்பிகை. புதன் கிரகத்திற்கு இக்கோவிலின் உள்ளே தனி சந்நிதானம் உள்ளது.
அகோரமூர்த்தி, நடராஜர், துர்கை, காளி தேவி, அஷ்டலெட்சுமி ஆகிய வடிவங்களில் உறையும் தெய்வங்களும் இங்கே உள்ளார்கள். பக்தர்கள் வணங்கி மகிழலாம்.
சிதம்பரத்திற்கு முன்பாகவே இத்தலத்தில் நடராஜர் ஹஸ்த நடனம் புரிந்தார் என்பது வரலாறு! அதனால் இத்தலத்திற்கு ஆதி சிதம்பரனார் ஆலயம் என்னும் பெருமையும் உண்டு!
இந்தப் பகுதி துவக்கத்தில் வெள்ளைக்காடாக - வெண் மலர்கள் சூழ்ந்த காடாக இருந்திருக்கிறது. அதனால்தான் இத்தலத்திற்குத் திருவெண்காடு என்னும் பெயர் ஏற்பட்டுள்ளது.
மனிதன் காடுகளை எல்லாம் விறகாக்கி, சமையல் செய்வதற்குப் பயன் படுத்தி அழித்து விட்டதால், காடுகள் மறைந்து விட்டன. இயற்கை எரிவாயு, கேஸ் சிலிண்டர்கள், எரிவாய் அடுப்புக்களை எல்லாம் முன்பே கண்டு பிடித்திருந்தால் பல காடுகள் தப்பித்திருக்கும். இன்றிருக்கும் குளோபல் வார்மிங் அவல மெல்லாம் இருந்திருக்காது.
ஸ்தல விருட்சம் ஆலமரம். வில்வ மரமும், கொன்றை மரமும் உள்ளன. அக்னி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என்னும் 3 குளங்கள் இங்கே உள்ளன. நீராடி மகிழலாம்.
சிவனாரும், அம்பிகையும் இங்கே மூன்று வடிவங்களில் உள்ளனர். மூன்று ஸ்தல விருட்சங்கள் உள்ளன. மூன்றுவகையான தீர்த்தக்குளங்களும் உள்ளன. அதுதான் இக்கோவிலின் முக்கிய சிறப்பு. அத்துடன் நவக்கிரகங்கள் எல்லாம் ஒரு வரிசையில் அமையப்பெற்றுள்ளன என்பதும் கூடுதல் சிறப்பாகும்!
தலவரலாறு:
தல வரலாறு சற்று ரீலாகவும், தலை சுற்றும்படியாகவும் உள்ளது. வரலாற்றை எல்லாம் கேள்வி கேட்க முடியாது. ஏன் கேட்க முடியாது என்றால் பதில் சொல்ல ஆளில்லை. ஆகவே ஆராயக்கூடாது. முடிந்தால் நம்ப வேண்டும். இல்லா விட்டால் கண்டுகொள்ளாமல் விட்டுவிடவேண்டும். கண்டு கொள்ளாமல் விடுவது நமக்குப் பழக்கமான ஒன்று. ஆகவே தகவலுக்காக மட்டும் அதைத் தெரிந்து கொள்வோம்.
அந்த மனநிலையோடு இப்போது மேலே படியுங்கள்!
புதபகவான், சந்திரனுக்கும், தாரணிக்கும் பிறந்தவர். இந்தத் தாரணி குரு பகவானின் மனைவி. சிவனாரும், பிரம்மாவும் இந்த முறையற்ற தொடர்பிற்கு ஆட்சேபம் தெரிவித்து, தாரணியைத் திருப்பி அனுப்பி வைத்தார்களாம். சிறு வயதில் தன் தாய் யாரென்பது தெரியாமல் வளர்ந்த புதபகவான், பின்னால் தகவல் தெரிந்த போது தன் தந்தையார் மீது கடும் கோபம் கொண்டாராம். அத்துடன் தன்னுடைய இழிபிறப்பு அவலம் நீங்க கடும்
தவமிருந்து, சிவனின் ஆசி பெற்று, அவலம் நீங்கி அமைதியுற்றாராம்.
---------------------------------------------------------------------------------------------------
ஆக்க வேலைகளுக்கு அதிபதியான பிரம்மா (the creator of all life) இந்தத் தலத்தில்தான் அம்பிகையின் முன் தவமிருந்து ஞானம் பெற்றாராம் (attained knowledge) அதானால்தான் இங்கே உறையும் அம்பிகைக்கு பிரம்ம வித்தியாம்பிகை என்ற பெயர் ஏற்பட்டது.
கல்வி மற்றும் வித்தைகளில் தேர்ச்சி பெறத் திணறும் குழந்தைகளை இத்தலத்திற்குக் கூட்டிக்கொண்டு போய் இறைவியை வணங்கச் செய்வது நன்மையளிக்கும்!
காசிக்கு இணையான சிவ ஸ்தலம் இது. அந்தக் காலத்தில், காசிக்குச் சென்று வரமுடியாதவர்கள், இங்கே சென்று வந்தார்களாம்.
திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நல்வராலும் பாடல் பெற்ற ஸ்தலம் இது! அத்துடன் பட்டினத்தார் முக்திபெற்ற ஸ்தலமும் இதுதான். அதை மனதில் கொள்க!
------------------------------------------------------------------------------------------------------
அகோரமூர்த்தி வடிவாக இக்கோவிலில் இருக்கும் சிவனின் கதை! (கதை என்று குறிப்பிட்டு இருப்பதைக் கவனிக்கவும்):
முன்னொரு காலத்தில் மருதுவாசுரன் என்னும் அசுரனை அழிக்க, சிவன் அகோரமூர்த்தி என்னும் தடாலடி வடிவம் எடுத்தாராம். இந்த மருதுவாசன் நல்லபிள்ளையாக பிரம்மாவிடம் வரம் பெற்றவன், பிறகு நம் திரைப்பட
வில்லன்களைப்போல, தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் பலவிதமான இடையூறுகளை ஏற்படுத்தத் துவங்கினானாம். அவர்கள் சென்று தங்கள் நிலைமையைச் சிவனாரிடம் சொல்லி மூக்கால் அழுக, சிவன் அவர்களைத்
திருவெண்காடு சென்று அங்கே வேற்று உருவில் மறைந்து வாழும்படி பணித்தாராம். அங்கேயும் மருதுவாசனின் ஆட்டம் தொடர, சிவன் தன் நந்தியை அனுப்பி, அவனைச் சாய்த்துவிட்டு வரும்படி பணித்தாராம். நந்தியார்
அந்த அசுரனைத் தோல்வியுறச் செய்து, விரட்டி அடித்துவிட்டு, தேவர்களையும், ரிஷிகளையும் காப்பாற்றினாராம்.
தோல்வியுற்றவன், மீண்டும் கடும்தவம் புரிந்து, அதுவும் சிவனிடமே கடும் தவம் புரிந்து, திரிசூலத்தைப் பெற்றானாம். பெற்றவனுக்கு மீண்டும் புத்தி பேதலிக்க, தன்னைத் தாக்கி நிலைகுலையச் செய்த நந்தியாரை, அத்திரிசூலத்தை வைத்துக் காயப் படுத்தினானாம். கடும் கோபமுற்ற சிவனார், அகோர மூர்த்திவடிவம் எடுத்து, அசுரனை அழித்தாராம்.
அசுரனால் ஏற்பட்ட காய வடுக்கள், இத்தலத்தில் உள்ள நந்தியின் மேல் இன்றும் இருப்பதைக் காணலாம்.
இக்கதையின் சாரம்சம் என்னவென்றால், எதிரிகளால், தொல்லைகளுக்கு உள்ளாகும் பக்தர்கள், இத்தலத்தில் பிரார்த்தனை செய்தால், எதிரிகளின் தொல்லைகள் காணாமல் போய்விடும். அதாவது இருக்காது. எதிரிகளே
இல்லாமல் போய்விடுவார்கள் என்பது நம்பிக்கை!
-------------------------------------------------------------------------------------------------------.
பிள்ளை இடுக்கு அம்மன்:
பிள்ளையை எடுக்கிய அம்மன் என்று பொருள் கொள்க! ஒருமுறை திருஞான சம்பந்த சுவாமிகள், இத்தலத்திற்கு வந்தபோது, அப்பகுதி மொத்தமும் சிவனார் வடிவத்தையே கண்ணுற, அவற்றைத் தன் காலடியால், கடந்து, அல்லது தாண்டிச் சென்று கோவிலின் உட்புறம் உறையும், சிவனாரை எப்படி வணங்குவது என்று கலங்கி நிற்க, பெரியநாயகி அம்மன் அவருக்கு உதவ முன் வந்தாராம்.
அம்மையே, அவர்முன் தோன்றி, அவரைப் பிள்ளையாக்கித் தன் இடுப்பில் ஏற்றிக்கொண்டு சென்று சுவாமியைத் தரிசிக்க வைத்தாராம். அதனால் இக்கோவிலில் உறையும் பெரியநாயகி அம்மனுக்கு, பிள்ளை இடுக்கி அம்மன்
என்னும் பெயரும் உண்டு. பிள்ளையை எடுக்கியவடிவில் அம்மனுக்கு இங்கே உருவச்சிலையும் உண்டு. அதுவும் இக்கோவிலின் தல வரலாறு. ஆகவே அதையும், நம்புங்கள். அல்லது நம்பாமல் விடுங்கள். அது உங்கள் விருப்பம்.
-------------------------------------------------------------------------------------------------------
மெய்கண்டாரின் கதை:
அச்சுதகாளப்பர் என்னும் சிவபக்தருக்கு, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தபோது, தனது குருவின் அறிவுரைப்படி, இத்தலத்தில் உறையும் ஸ்வதாரண்யேஸ்வரரை, மூன்று தீர்த்தங்களிலும் நீராடி, பின் பிரார்த்திக்க,
இறையருளால், குழந்தை வரம் பெற்றாராம். அத்துடன் அக்குழந்தைக்கு மெய்கண்டார் என்றும் பெயரிட்டாராம்.
அந்த மெய்கண்டார்தான் பின்னாளில் ’சிவஞானபோதம்’ என்னும் அற்புத நூலை எழுதினாராம்.
இக்கோவிலுக்குச் சென்று பிரார்த்திக்கும் பக்தர்களுக்குக் குழந்தை பாக்கியம் ஏற்படும் என்பது இக்கதையின் சாராம்சம்,
--------------------------------------------------------------------------------------------------------
அதுபோல ஒருமுறை துர்வாச முனிவரால் ஏற்பட்ட சாபம் நீங்க, இந்திரன், இத்தலத்தில்தான் பிரார்த்தனை செய்தான் என்னும் உபகதையும் உண்டு. பதிவின் நீளம் கருதி அதைக் கொடுக்கவில்லை
---------------------------------------------------------------------------------------------------------
முக்கியமான செய்திக்கு வருவோம். புத பகவான்தான், கல்வி, அறிவு, பன்மொழித்திறமை ஆகியவற்றிற்கு அதிபதி. ஜாதகத்தில், புதன் நீசமடைந்திருந்தாலும், அல்லது மறைவிடங்களில் இருந்தாலும், வித்தைக் குறைவு. அக்குறைபாடு உடையவர்கள், குறிப்பாகக் குழந்தைகளை இத்தலத்திற்குக் கூட்டிக்கொண்டு வந்து பிரார்த்தனை செய்தால், அக்குறைபாடுகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
புதன்கிழமை உகந்த நாள். பச்சை வண்ணம் உகந்த நிறம். பாசிப்பயறு உகந்த தாண்யம். நவரத்தினங்களில் பச்சைக்கல் உகந்தது. இங்கே வந்து செல்ல முடியாதவர்கள், வீட்டில் இருந்தவாறு, புதன்கிழமையன்று, உபவாசம்
இருந்து மேற்கூறியவற்றை வைத்து வழிபடலாம்.
புதன்கிழமைகளில், இக்கோவிலில் விஷேச பூஜைகள் உண்டு. வழிபாடுகள் உண்டு. ஆண்டுக்கொருமுறை நடைபெறும் பிரம்மோத்சவ விழா மாசி மாதம் நடைபெறும்
அன்புடன்
வாத்தியார்
மேலதிகத்தகவல்:
Mercury is the lord to bless with good education, knowledge, eloquence, music, astrology, mathematics, sculpture, medicine, scholarship in languages. A temple for Chandra (moon) the father of Mercury is just opposite to the Mercury with Chandra Pushkarani theertha. If mercury is not favourably placed in a horoscope, the native may not have children. Also he/she will have nervous debility and lack of knowledge. They have to propitiate Lord Mercury. இசைக்கலைஞர்களும் மேன்மை பெற வழிபட வேண்டிய ஸ்தலம் இது.
வாழ்க வளமுடன்!