மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label சிறுகதைகள். Show all posts
Showing posts with label சிறுகதைகள். Show all posts

28.7.21

Short Story சாமியார் சம்சாரியான கதை!


Short Story சாமியார் சம்சாரியான கதை!               

சாமியார் சம்சாரியான கதை!                  

ஆவுடையப்பன்.

நமது நாயகரின் பெயர் அதுதான். வயது 51. கதை நடந்த காலம் 1921ம் ஆண்டு. நெல்லையப்பரும், காந்திமதி அம்மனும் ஆட்சி செய்யும் திருநெல்வேலியை சொந்த ஊராகக் கொண்டவர் அவர்.

அந்தக் காலத்தில் திருநெல்வேலி அமைதியாகவும், அற்புதமாகவும் இருக்கும். பரபரப்பு இல்லாமல் இருக்கும். ஒருமுறை சென்றவர்களுக்கு அந்த ஊரைவிட்டுத் திரும்பிவர மனமிருக்காது. எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று வயல் வெளிகளும், வாகை மரங்களும் சூழ்ந்த ஊர் அது.

பல இடங்களில் வீடுகளுக்குப் பின்னால் தண்ணீர் ஓட்டத்துடன் கூடிய வாய்க்கால்கள் இருக்கும். வீட்டுக்காரர்களே படிகளைக் கட்டி வைத்திருப்பார்கள். வீட்டுப் பெண்கள் எல்லாம் பாத்திரங்களைக் கழுவிச் சுத்தம் செய்வதற்கும், துணிகளைத் துவைப்பதற்கும், ஏன் குளிப்பதற்கும் அந்த வாய்க்கால் நீரைத்தான் பயன் படுத்துவார்கள். நீர் ஓட்டத்துடன் இருந்ததால் சுத்தமாக இருக்கும்.

ஆவுடையப்பரின் வீடு, தெற்குப் புதுத் தெருவில் இருந்தது. வாகையடி முக்கில் இருந்து கிழக்கு திசையில் இருக்கும். பூர்வீக வீடு. பெரிய வீடு.

திருநெல்வேலிக்கு அருகில் மேலப்பாளையம் கிராமத்தில், தாமிரபரணி ஆற்றையொட்டிய பகுதிகளில் அவருக்கு நிறைய விளை நிலங்கள் இருந்தன.ஆறு கிலோமீட்டர் தொலைவுதான். அவருடைய தந்தையார் காலத்தில் அவர்களே விவசாயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆவுடையயப்பர் தலையெடுத்ததும் நிலைங்களைப் பிரித்து குத்தகைக்குக் கொடுத்துவிட்டார். அவருக்கு விவசாயத்தில் ஆர்வம் இல்லாமல் போனதுதான் அதற்குக் காரணம். அந்தக் காலத்தில் மனிதர்கள் தர்மத்திற்குக் கட்டுப்பட்டு நடந்ததால், குத்தகைக்காரர்களே நெல், பணம் என்று குத்தகைத் தொகையை ஒழுங்காகக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். வாழ்க்கை பணக்கஷ்டமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தது.

கர்மகாரகன் எல்லாக் கதவுகளையுமே திறந்து விட மாட்டான். ஒரு கதவைத் திறந்து விட்டால், இன்னொரு கதவை அடைத்து வைத்திருப்பான். அந்த நியதியின்படி, ஆவுடையப்பருக்கு பணம்வரும் வழியைத் திறந்து விட்டவன், நிம்மதி மற்றும் மகிழ்ச்சி3 வரும் வழியை அடைத்து வைத்துவிட்டான்.

மனிதர் அனுதினமும் நிம்மதியில்லாமல் தவிர்த்தார். அதற்குக் காரணம் அவருக்கு இரண்டு மனைவிகள் 12 பிள்ளைகள். விடிந்தால், எழுந்திரித்தால் சண்டை சச்சரவுகள். அவருக்கு அக்கா, தங்கை என்று இரண்டு சகோதரிகளே மனைவிகளாக வாழ்க்கைப்பட்டிருந்தார்கள்.

அவருக்கு முதல் திருமணமாகி, ஐந்தாண்டுகளுக்குக் குழந்தையே பிறக்காததினால், அவருடைய மாமனாரே உவந்து தனது அடுத்த மகளையும் அவருக்குக் திருமணம் செய்து வைத்தார். இருதாரச் சட்டம் எல்லாம் இல்லாத காலம் அது!

அதில் வேடிக்கை என்னவென்றால், இறையருளால் அவருக்கு இரண்டாவது திருமணம் நடந்ததற்கு மறு ஆண்டே, இரண்டு மனைவிகளும் உண்டாகி இருந்தார்கள். இருவருக்குமே அடுத்தடுத்து ஆண் குழந்தைகளைப் பெற்றுக் கொடுத்தார்கள். அந்த சமயத்தில் ஆவுடையப்பர் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

தாமிரபரணி ஆற்றின் நடுவில் இருக்கும் குறுக்குத்துறை முருகனின் அருள் என்பார் அதை!

அடுத்தடுத்து பத்து ஆண்டுகளுக்குள் அவருக்குப் பன்னிரெண்டு பிள்ளைகள் பிறந்துவிட்டன.

மனைவிகள் இருவரும் அவருக்குப் போட்டி போட்டுக் கொண்டு சமையல் செய்து பறிமாறினார்கள். இருவருமே கிராமத்துப் பெண்களாதலால் அற்புதமாகச்  சமையல் செய்வார்கள். நெல்லைப் பிரதேசத்தின் பாரம்பரிய உணவுகளான கூட்டாஞ்சோறு, உளுந்தஞ்சோறு, வடைகறி தோசை, உளுந்தங்களி என்று அசத்திவிடுவார்கள்.

ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்த சகோதரிகளுக்குள், பின்னால் பிள்ளைகளை வைத்தும், பணத்தை வைத்தும் பல பிரச்சினைகள் வந்துவிட்டன! உங்களுடைய நாத்தச் சண்டைகளை என்னிடம் கொண்டு வராதீர்கள் என்று சொல்லித் தப்பித்து வந்தார். இருவரையும் தனித்தனியாக வெவ்வேறு வீடுகளில் வைக்கும்படி உறவினர்கள் அவருக்கு யோசனை சொன்னார்கள். அது நிறைவேறவில்லை.சின்னவளை அனுப்பச் சொல்லிப் பெரியவளும், அந்தக் களவாணியையே அனுப்புங்கள் என்று சின்னவளும் சொல்லி, வீட்டை  விட்டுப் போக மறுத்துவிட்டார்கள்.

வீட்டின் மேல் பகுதியில் ஒரு பெரிய அறை காலியாக இருந்தது. பகல் நேரங்களில் அவருடைய நண்பர்கள் வந்து விடுவார்கள். தினமும் சீட்டாட்டம் நடக்கும். பாயிண்டிற்கு காலணா என்று நிர்ணயித்து ஆடுவார்கள். யாருக்கும் அதில் பெரிய நஷ்டமோ அல்லது லாபமோ இருக்காது. வந்து சென்றவர்கள் எல்லோருமே செல்வந்தர் வீட்டு வாரிசுகள் என்பதால், அதையே மும்மரமாகச் செய்து கொண்டிருந்தார்கள்.

தாமிரபரணி ஆற்றைப்போல காலம் சுறுசுறுப்பாக ஓடியதில் 20 ஆண்டுகள் போனதே தெரியவில்லை. ஆவுடையப்பருக்கும் வயது ஐம்பதைக் கடந்தது. அவருடைய மகன்களில் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டிய நேரம் வந்தது. அத்துடன் அவருடைய வீட்டில் சண்டை வடிவில் பூகம்பமும் வந்தது.

அவருடைய தங்கை மகள் அலம்பிவிட்ட மொசைக் தரையைப் போல பளிச் சென்று அழகாக இருப்பாள். அத்துடன் அவளுக்கு பத்து ஏக்கர் பூமியும், 100 பவுன் நகையும் சீர்வரிசையாக வர இருந்தது. யாருக்குத்தான் அதை இழக்க மனம் வரும்? அதை வைத்து வீட்டில் ஆவுடையப்பரின் மனைவிகள் இருவருக்கும் பெரிய சக்களத்தி சண்டை. கடைசியில் கைகலப்பில் முடிந்தது. ஆவுடையப்பர்தான் இருவரையும் பிரித்து விட்டார். பெரியவளைக் கிராமத்திற்குப் போய் 10 நாட்கள் இருக்கும்படி கேட்டுக் கொண்டார். அதற்கு அவள் செவிசாய்க்கவில்லை. தங்கை மகளை யாருக்குக் கட்டினாலும் பொல்லாப்பு என்பதனால், தன் தங்கையிடம், “உன் மகளை வெளியே கட்டிக்கொடுத்துவிடுஎன்று அவர் சொல்லி விட்டார்.

அது வீட்டினருக்குத் தெரிந்தபோது, வீட்டில் பெரிய கலவரமாகிவிட்டது. ஆளாளுக்கு அவருடன் சண்டைக்கு வந்து விட்டார்கள். வாய் வார்த்தைகள் முற்றிய நிலையில், அவருடைய மூத்த மகன் யாரும் எதிர்பார்க்காத செயலைச் செய்துவிட்டான். செய்யக்கூடாத செயலைச் செய்துவிட்டான். ஆமாம், தன் தந்தையை ஓங்கி அறைந்ததோடு, பிடித்துக் கீழேயும் தள்ளி விட்டு விட்டான். அவன் ஆத்திரம் அவனுக்கு. ஆத்திரத்தில் புத்தி வேலை செய்யாது என்பது உண்மையாகிவிட்டது.

கீழே விழுந்த அவருக்கு இடுப்பில் அடிபட்டுவிட்டது. அத்துடன் பலத்த அதிர்ச்சிக்கும் ஆளாகிவிட்டார். எழுந்து நிற்கவே சில மணித்துளிகள் ஆகிவிட்டது. அதற்குள் வீட்டினர் போட்ட காட்டுக் கூச்சலில் தெருவே, அவர்கள் வீட்டின் முன்பாகக் கூடி விட்டது. எதிர் வீட்டுக்காரர் வந்து அனைவரையும் சமாதானம் செய்தார்.

அப்போதுதான், அந்தக் கணத்தில்தான் ஆவுடையா பிள்ளை முடிவு செய்தார். தனக்கு மதிப்பில்லாத அந்த வீட்டில் இனிமேல் இருக்கக்கூடாது என்று முடிவு செய்ததோடு, அதைச் செயல்படுத்தவும் செய்தார்.

என்ன செய்தார்?

தனக்கு மதிப்பில்லாத வீட்டில் இனிமேல் இருக்கக்கூடாது என்று முடிவு செய்த ஆவுடையா பிள்ளை, அதைச் செயல் படுத்தும் முகமாகக் களத்தில் இறங்கினார். தன் நில புலன்களை இரண்டு பங்காக்கித் தன் மனைவிகள் இருவர் பெயருக்கும் எழுதி அதைப் பதிவு செய்து அவர்களிடம் கொடுத்ததோடு, தன் பங்கிற்காக வங்கியில் இருந்த மூன்று லட்ச ரூபாய்கள் பணத்தைத் தன் பாதுகாப்பிற்காக வைத்துக் கொண்டார். மூன்று லட்ச ரூபாய்கள் என்பது அந்தக் காலத்தில் மிகப் பெரிய தொகை.

பத்து நாட்கள் மெளனம் காத்துப் பொறுமையாக இருந்தவர், ஒரு நாள் கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு, வீட்டைவிட்டுக் கிளம்பி விட்டார். தூர தேசங்களுக்குச் செல்வதாகவும், திரும்பி வரமாட்டேன் - என்னைத் தேட வேண்டாம் என்றும் எழுதி வைத்தவர், தான் வளர்ந்து ஆளாகிய நெல்லையை விட்டுக் கிளம்பி விட்டார்.

சாமியாராகி ஏதாவது மடத்தில் சேர்ந்து தங்கிவிடலாம் என்று நினைத்தார். ராமகிருஷ்ணா மடத்தில் சேர்ந்து விடலாம் என்று முதலில் நினைத்தார்.

அங்கெல்லாம் சுகமாக இருக்க முடியாது. உழைக்க வேண்டும். இறைவனைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டு மக்களிடம் இறையுணர்வை முழுமையாக்க வேண்டும். மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும். அங்கேயுள்ள சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும். யோசிக்க யோசிக்க மலைப்பாக இருந்தது. ஆகவே அந்த நினைப்பைக் கைவிட்டார்.

திருச்செந்தூர் சென்று சண்முகநாதனை வழிபட்டவர், அங்கேயே ஒரு விடுதியில் தங்கி விடலாம் என்று நினைத்தார். ஆனால் நெல்லை மாவட்டத்துக்காரர்கள் அடிக்கடி வந்துபோகும் இடமாதலால், தன்னை அறிந்தவர்கள் மூலம், தான் அங்கே இருப்பதை அறிந்து தன் வீட்டினர், தன்னைத் தேடிவரும் அபாயம் உண்டு என்று நினைத்தவர், திருச்செந்தூரைவிட்டுக் கிளம்பிவிட்டார்.

கிளம்புமுன், காவி வேஷ்டியும், காவித்துண்டும் வாங்கி முருகன் சந்நிதானத்திலேயே வைத்து, வணங்கி, உடுத்திக்கொண்டார். சுமார் ஒரு மாத காலம் சவரம் செய்யப்படாத முகத்துடன் பார்ப்பதற்கு அசல் சாமியாரைப் போலவே தோற்றமளித்தார். ஆண்டவன் கட்டளை திரைப்படத்தில்ஆறு மனமே ஆறு, அந்த ஆண்டவன் கட்டளை ஆறுஎன்று பாடிக்கொண்டு, திருச்செந்தூர் கோயிலின் முன்பாக நிற்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் போலவே அவர் தோற்றமளித்தார்.

தஞ்சை மாவட்டத்தில் நிறையக் கிராமங்களும், கோவில்களும் இருப்பதால் அங்கே ஒரு ஊருக்குச் சென்று தங்கிவிடலாம் என்று முடிவு செய்து, கடைசியில் நாகபட்டிணம் அருகில் உள்ள சிக்கல் என்ற ஊருக்கு வந்து சேர்ந்தார். முருகப் பெருமான் சிங்காரவேலனாக உறைந்திருக்கும் ஊர் அது. சுற்றுப்புறம் பச்சைப் பசேல் என்று பசுமையாக இருந்தது. அங்கேயே தங்கிவிட முடிவு செய்தார்.

சூரனை அழிக்க புறப்பட்ட முருகனுக்கு சிவனும், பார்வதியும் ஆயுதம் கொடுத்த ஸ்தலம் அது. பார்வதி தேவி முருகனுக்கு வேல் கொடுத்தார். தாயிடம் இருந்து வேல் பெற்ற முருகன் சிங்கார வேலன் என்றழைக்கப்பட்டார். அந்த நிகழ்வு நடந்த இடம் சிக்கல் என்ற தலமாகும். சிறப்பு மிகுந்த அந்த ஸ்தலம் பழைய தஞ்சை மாவட்டத்தில், இப்போதைய நாகை மாவட்டத்தில், நாகை - திருவாரூர் வழித்தடத்தில் நாகையில் இருந்து சுமார்  8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

உண்மையில் இத்தலம் நவநீதிஸ்வரரை  மூலவராகக்  கொண்ட சிவாலயமாகும். இத்தலத்தில் வசிஷ்ட முனிவர், காமதேனுவின் வெண்ணையால் சிவலிங்கம் அமைத்து வழிபட்டார். பிறகு அந்த லிங்கத்தை எடுக்க முயன்றார். ஆனால் அந்த லிங்கம் எடுக்க முடியாதபடி  சிக்கிக் கொண்டது. அதன் காரணமாக இந்த ஊருக்கு சிக்கல் என்ற பெயர் ஏற்பட்டதாம்.

தன் சிக்கல்களை மறப்பதற்கு சிக்கல்தான் சரியான ஊர் என்று முடிவு செய்தவர், கோயில் தர்மகர்த்தாவைப் பார்த்துப் பேசித் தன்னை அறிமுகம் செய்து கொண்டதோடு, தான் அந்த ஊரிலேயே தங்க இருப்பதாகவும், தனக்கு ஒரு சிறு வீடு ஒன்றைப் பிடித்துத் தருமாறு கேட்டுக் கொண்டார்.

சற்று யோசனையில் ஆழ்ந்த தர்மகர்த்தா, கடைசியில் தீர்க்கமாகப் பதில் சொன்னார்: இது சின்ன கிராமம். இங்கே உள்ள மக்கள் கட்டுப் பெட்டியானவர்கள், சாமியார்களுக்கும், பிரம்மச்சாரிகளுக்கும் வீட்டை வாடகைக்குத் தரமாட்டார்கள். வேண்டுமென்றால் ஒன்று செய்யுங்கள். கிராமத்திற்கு ஒதுக்குப்புறத்தில் பத்து ஏக்கர் பூமி ஒன்று வீட்டுடன் விலைக்கு வருகிறது. உங்களிடம்தான் பணம் இருக்கிறது என்கிறீர்களே, அதை சல்லிசாக வாங்கித் தருகிறேன். நீங்கள் அங்கேயே தங்கிக் கொள்ளலாம்என்றார்.

அப்போதெல்லாம் ஏக்கர் ஐநூறு ரூபாயிற்கே கிடைக்கும். பவுன் பதிமூன்று ரூபாய்க்கு விற்ற காலம் அது. ஆவுடையாபிள்ளை சரி என்று தன் சம்மதத்தைச் சொல்ல, எல்லாம் மளமளவென்று நடந்தன. ஓட்டு வீடுதான். பின்பக்கம் கிணற்றுடன் செளகரியமாக இருந்தது. அத்துடன் பின்பக்கம் தென்னை மரங்களுடன் கூடிய நெல்வயல்.

தர்மகர்த்தா, நாகபட்டிணத்திற்கு ஆள் அனுப்பி, அவருக்கு வேண்டிய கயிற்றுக் கட்டில், பாய், தலையணை, உட்காரும் மர நாற்காலி, அவசியமான தட்டுமுட்டுச் சாமான்கள் அனைத்தையும் வாங்கிக் கொடுத்து உதவினார்.

மூன்று நாட்கள் தர்மகர்த்தாவின் வீட்டில் தங்கியிருந்தவர், நான்காம் நாள் தன் சொந்த வீட்டில் பால் காய்ச்சிக் குடியேறினார்.

சில மாதங்களுக்குள்ளாகவே தனக்கு ஏற்படப் போகின்ற சிக்கல் என்னவென்று தெரியாமலேயே அங்கே குடியேறினார்.

என்ன சிக்கல்?

தொடர்ந்து படியுங்கள்!

சிக்கல்களும், சந்தோஷங்களும் சொல்லிவிட்டு வருவதில்லை. நாம் செய்யும் செயல்களின் விளைவுகளே அவைகள். திணை விதைத்தால் திணை விளையும், விணை விதைத்தால் விணைதான் விளையும்.

ஆவுடையா பிள்ளைக்குப் புது வீட்டில் தனிமைதான் பெரிய குறையாக இருந்தது. அதனால் பாதி நேரத்தைக் கோயில் வளாகத்திலேயே கழித்தார்.சின்ன ஊர் என்பதால் கோயிலுக்கு வருபவர்கள் எல்லாம் அவருக்குப் பழக்கமாகி விட்டார்கள்.

அந்தக் காலத்தில் எல்லாக் கோயில்களிலும் மடப்பள்ளி இருந்தது. இருந்தது மட்டுமல்ல, அதில் காலையில், பிரசாதம் செய்து இறைவனுக்குப் படைப்பதோடு, கூடுதலாகச் செய்து கேட்கும் பக்தர்களுக்கு, விலைக்கும் கொடுப்பார்கள். பெரும்பாலும் சம்பாசாதம், வெண்பொங்கல் அல்லது புளியோதரை போன்ற சாதங்கள்தான் பிரசாதமாக இருக்கும்.

அவற்றுள் சம்பா சாதம் சூப்பராக இருக்கும். சிவ ஆலயங்களில் சிவனுக்கு உகந்த பிரசாதமாக, சம்பா சாதத்தைத்தான் வடித்து நிவேதனமாகப் படைப்பார்கள். அரிசியைக் களைந்து, தண்ணீர், உப்புச் சேர்த்து உதிரியாக வடித்து, பெரிய இருப்புச் சட்டியில், நெய் விட்டு, சூடானதும் மிளகுத் தூள், சீரகத் தூள்கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, அதைச் சாதத்தில் கொட்டிக் கிளறிவிடுவார்கள். அதுதான் சுவையான சம்பாசாதப் பிரசாதம் ஆகும். சிதம்பரம் நடராஜர் கோயிலின் நித்தியப் பிரசாதம் அது!. ஒரு நபர் சாப்பிடக்கூடிய சாதத்தின் அன்றைய விலை ஒரு அணா. ஆவுடையா பிள்ளைக்குக் காலைப் பலகாரம் கோயில் பிரசாதத்தில் முடிந்து விடும். மதிய உணவை உள்ளூரில் இருந்த சைவப் பிள்ளைமார் வீட்டுக்காரர்கள் செய்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.  இட்லி , சாம்பாருடன் அவர்களே இரவு உணவையும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

தலைச் சுமையாகக் கூடையில் பாத்திரம் வைத்துப் பால் கொண்டுவந்து விற்கும்  பெண்மணியிடம் இருந்து ஒரு உழக்குப் பாலை வாங்கி வைத்துக் கொள்வார். வேண்டும்போது, காப்பி அல்லது டீ போட்டுக் குடித்துக் கொள்வார். விறகு அடுப்பு. அடுப்பைப் பற்றவைத்து காப்பி அல்லது டீ போடுவதும், பாத்திரங்களைக் கொண்டுபோய்க் கிணற்றடியில் போட்டுக் கழுவதும்தான் சற்றுக் கடுமையான வேலையாக அவருக்குத் தோன்றியது. டீக்கடை, பெட்டிக்கடை எல்லாம் அந்தக் கிராமத்தில் இல்லாத காலம் அது!

அப்படியே பத்து நாள் பொழுது ஓடிவிட்டிருந்தது. அதற்குப் பிறகுதான் பிரச்சினை ஆரம்பித்தது.

ஆள் நடமாட்டம் இருப்பது தெரிந்து, பக்கத்து வயல்களில் இருந்து எலிகள் வர ஆரம்பித்துவிட்டன. வந்த எலிகள் சும்மா இருக்காமல் வீட்டில் இருந்த கெளபீணம், வேஷ்டி, துண்டுகள் எல்லாவற்றையும் கடித்துக் குதறிவிட்டுப் போயிருந்தன.

எலிகள் மட்டும் அல்ல, இரண்டொரு சமயம் பாம்பும் வர ஆரம்பித்துவிட்டது. ஆவுடையா பிள்ளைக்குப் பழக்கமில்லாத சமாச்சாரங்கள் அவைகள்.

கோவில் தர்மகர்த்தாவிடம் அதைக் குறையாகச் சொல்லி, என்ன செய்யலாம் என்று கேட்டபோது, அதற்கு அவர் ஒரு தீர்வைச் சொன்னார். ஒரு பூனையை வாங்கிக் கொடுத்து, அதை வைத்துக் கொள்ளச் சொன்னார்.

வந்த பூனைக்கு நேரம் சரியில்லை போலிருக்கிறது. வந்த இரண்டாவது நாளே வீட்டிற்குப் பின்பக்கம் இருந்த தோட்டத்தில், நாகப் பாம்புடன் அது போராடிய போது, நாகப்பாம்பு அதைப் போட்டுத் தள்ளிவிட்டுப் போய்விட்டது.

மீண்டும் ஒரு பூனையைப் பிடித்துக் கொடுத்த தர்மகர்த்தா, கூடவே நாய் ஒன்றையும் வாங்கிக் கொடுத்தார். ஆனால் அவை இரண்டும் அதிசயமாக ஒன்றுக் கொன்று ஒற்றுமையாக இருந்தன. எலிக்காகப் பூனை. பாம்பிற்காக நாய்.

அவைகளுக்கு உணவு, பால் ஆகியவற்றிற்கும் அவர் ஏற்பாடு செய்தார். இப்போது சற்றுப் பாதுகாப்பாக இருந்தது.

இப்போது ஒரு உழக்குக்கிற்குப் பதிலாக 4 உழக்குப் பால் வாங்க வேண்டியதாக இருந்தது. காசைப் பற்றிய கவலை இல்லாததால் வாங்கத் துவங்கினார். அவை இரண்டையும் பராமரிப்பதிலும் சற்றுப் பொழுது கழிந்தது.

ஆனால் பால் ஊற்றும் பால்கார அம்மணி சில நாட்கள் வராமல் விட்டு, அவரைத் திண்டாட வைத்தாள். அதற்கும் ஒரு தீர்வைச் சொல்லி, தர்மகர்த்தா குறைந்த விலையில் ஒரு பசுமாட்டைக் கன்றுடன் வாங்கிக் கொடுத்தார். அவற்றிற்குத் தீவனப் பயிர்களான வைக்கோல், சோளத்தட்டை, புண்ணாக்கு, கழனித் தண்ணீர் என்று வேலைப் பளு சற்று அதிகரித்தது. அத்துடன்  மாட்டைக் கழுவிக் குளிப்பாட்டுவது, மாட்டுக் கொட்டகையில் சாணத்தை அள்ளித் தரையைச் சுத்தம் செய்வது போன்ற வேலைகளும் ஏற்பட்டன.

அதற்கு என்னடா செய்யலாம்? என்று அவர் நொந்துபோனபோது, தர்மகர்த்தா அதற்கும் ஒரு தீர்வைச் சொன்னார்.

பக்கத்து கிராமத்தில் இருந்து தெரிந்த பெண் ஒருத்தியைக் கூட்டிக் கொண்டு வந்து காட்டி, “இன்று ஒரு நாள் வேலை செய்யச் சொல்லிப் பாருங்கள், உங்களுக்குப் பிடித்தால், இந்தப் பெண்ணை வேலைக்கு வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்என்றார்.

வந்த பெண் அம்சமாக இருந்தாள். வயது 28 இருக்கும். சற்று விளக்கமாகச்  சொல்ல வேண்டும் என்றால், கல்யாணப் பரிசு படத்தில் வரும் நடிகை சரோஜாதேவியைப் போன்று இருந்தாள். கறுப்பு நிறம்தான் ஆனால் ஈர்க்கும் விதமாக வசீகரமாக இருந்தாள். அத்துடன் சுறுசுறுப்பாகவும் இருந்தாள். ஒரே ஒரு சோகம். அவள் விதவைப் பெண். திருமணமான மறு ஆண்டிலேயே தன்னுடைய கணவனைப் பறிகொடுத்தவள். குழந்தை இல்லை. தன் அன்னையோடு தங்கியிருக்கிறாள். காலையில் 7 மணிக்கு வந்தால் மாலை 6 மணிவரைக்கும் வேலை பார்க்கிறேன்  என்றாள். அவளுடைய கிராமம் பக்கத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. கூலி வேலைக்குத்தான் சென்று கொண்டிருக்கிறாளாம்.

பெயரைக் கேட்டார். கண்ணம்மாஎன்று சொன்னாள்.

இனி கூலி வேலைக்கெல்லாம் நீ செல்ல வேண்டாம். இங்கே வந்து வேலைகளைப் பார். வேண்டிய சம்பளத்தை நான் தருகிறேன் என்று ஆவுடையா பிள்ளை சொல்லிவிட்டார்.

காலையில் காப்பி போட்டுக் கொடுப்பதில் துவங்கி, மூன்று வேளைக்குமான சமையலையும் அவளே செய்து கொடுத்தாள். வீட்டையும், வீட்டிலுள்ள மற்ற ஜீவன்களையும் அவளே பார்த்துக் கொள்ளத் துவங்கினாள்.

ஒரு மாதம் சென்றது. கிட்டத்தட்ட ஒரு மனைவி செய்வதைப் போன்று எல்லா வேலைகளையும் அவள் ஈடுபாட்டுடன் செய்ததால், ஆவுடையா பிள்ளைக்கு அவளை மிகவும் பிடித்துப் போய்விட்டது.

அத்துடன், எல்லாம் அப்படி சுமூகமாகவே நடந்து கொண்டிருந்தால் கதையில் என்ன சுவாரசியம் இருக்கப்போகிறது?

விதி எப்போதும் எதிரணியில்தான் விளையாடும். விதி தன் ஆட்டத்தைத் துவங்கியது. ஆவுடையா பிள்ளையைக் கண்ணம்மாவிடம் நெருக்கிக் கொண்டு சென்றது.

கண்ணம்மா நடுக்கட்டில் வேலை செய்யும்போது, கட்டிலில் அமர்ந்தவாறு அவளுடைய அழகை ரசிக்கத் துவங்கினார்.

ஒரு கவிஞன் கவிதையொன்றில் நச்சென்று குறிப்பிட்டதைப் போல நடக்கத்துவங்கியது.

 

அவள் குனிந்து, நிமிர்ந்து

வீட்டைக் கூட்டினாள்

வீடு சுத்தமானது

மனம் குப்பையானது!

 

ஆவுடையா பிள்ளையின் மனம் குப்பையாகிப் போனது. ரசனை உணர்வு காம உணர்வாக மாறியது.

ஒரு அடை மழை நாளில், வேலைக்கு வந்த அவள் திரும்பிப் போக முடியாமல், அன்று இரவு ஆவுடையா பிள்ளையின் வீட்டில் தங்கும்படியானது.தங்கியவளைத் தாரமாக்கித் தன் இச்சைகளைத் தீர்த்துக் கொண்டுவிட்டார் ஆவுடையா பிள்ளை. கண்ணம்மாவும், ஏழு ஆண்டுகளாக உள்ளே உறங்கிக் கொண்டிருந்த விரகதாபத்திற்கு தன்னைப் பலி கொடுத்து விட்டாள்.

அந்தப் பாவ உணர்வு தொடர இருவரும் அந்நியோன்யமானார்கள். அந்த அந்நியோன்யம் மூன்றே மாதங்களில் கண்ணம்மா கர்ப்பமடைந்ததில் வந்து திகைப்புடன் நின்றது.

அதற்குப் பிறகு?

அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் முக்கியமில்லை. விஷயம் ஊர் முழுக்கத் தெரிய, பஞ்சாயத்தை வைத்துக் கண்ணம்மாவை, ஆவுடையா பிள்ளைக்கே திருமணம் செய்து வைத்துவிட்டார்கள்.

ஆவுடையா பிள்ளையாவின் சந்நியாசம் அதிரடியாக முடிவிற்கு வந்தது. அவர் மீண்டும் சம்சாரியானார்.

எல்லோரும் சாமியாராக, துறவியாக  முடியுமா? அதற்குக் கொடுப்பினை வேண்டும்!

துறவு என்றால் எல்லாவற்றையும் துறக்க வேண்டும். முதலில் ஆசைகளைத் துறக்க வேண்டும். மனச் சலனங்களைத் துறக்க வேண்டும். மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை அறவே கூடாது. ஆவுடைய பிள்ளை துறவறம் பூண நினைத்தவருக்குப் பணம் எதற்கு?

ஊரை விட்டுக் கிளம்பியவர் பெரும்தொகையை வைப்புநிதியாக உடன் கொண்டு வந்தது முதல் தவறு. மடங்களில் சேராமல் வீட்டைப் பிடித்துத் தங்கியது இரண்டாவது தவறு. எலிக்குப் பூனை, பாம்பிற்கு நாய், பிறகு பாலுக்காக பசுமாடு, பிறகு அவற்றைக் கவனிக்க வேலைக்காரப் பெண் என்று அடுக்கடுக்காகத் தவறான செய்கைகளைச் செய்தது, தொடர்ந்து மீளமுடியாத நிலைக்குப் போன தவறுகளாகும். அதற்கு ஈடாகத்தான் துறவறத்தையே அவர் பலிகொடுக்க நேர்ந்தது.

என்ன இன்னொரு பெண்ணும் இங்கே அவர் வாழ்க்கையில் குறுக்கிடாமல் இருக்க வேண்டும். சிக்கல் சிங்கார வேலன்தான் அதற்கு அருள் புரிய வேண்டும்!

ஒரு தவறுக்கு, அந்தத் தவறை மறைக்க முயன்று அடுத்தடுத்து செய்யும் தவறுகளுக்காக சாமியார் பூனை வளர்த்த கதை என்று இந்தக் கதையை என் தந்தையார் சொல்வார்கள்

அவர்கள் சொன்னது 10 வரிக் கதைதான். அதை நான் எனது நடையில் விரிவு படுத்தி எழுதியிருக்கிறேன்

கதைகளைப் படித்து ரசித்தமைக்கு நன்றி. வணக்கம்

அன்புடன்

வாத்தியார்

========================================


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.4.21

எல்டொராடோ - சுஜாதா அவர்களின் மற்றுமொரு சிறுகதை!


எல்டொராடோ - சுஜாதா அவர்களின் மற்றுமொரு சிறுகதை!

கதவு திறந்து மன்னிக்கு அவனை அடையாளம் தெரிந்து கொள்ள சிரமமாக இருந்தது. தெரிந்ததும் திடுக்கிட்டாள் திணறி எச்சில் விழுங்கி 'நீங்களா? எப்ப வந்தேள்?"
"இப்பதான், நேர வரேன், அப்பா எப்படி இருக்கா?"
"அம்மா, அம்மா யார் வந்திருக்கா பாருங்கோ."
"யாருடி?"
"பரத்"
"பரத்தா?"
யாரு? பரத்தா?"
“என்னது? பரத்தா!" மூலைக்கு மூலை ஆச்சர்யக் குரல்கள் ஒலித்தன.
ரேடியோ நிறுத்தப்பட்டது. பிள்ளைகளின் படிப்பு ரத்து செய்யப்பட்டது.
அம்மா, பெரிய அண்ணா, அண்ணா, அக்கா, மன்னிகள் குழந்தைகள் எல்லோரும் ஹாலில் ஒரு அரை வட்ட விரோத விழாப் போல் வந்து சேர்ந்துகொண்டு, அவனைச் சுற்றிப் பார்வை வியூகம் அமைத்தார்கள்
சின்ன மன்னிதான் "வா பரத்" என்றாள். எப்படி மாறிவிட்டாள்! எங்கே அந்த அழகான மணப்பெண்?
"என்னடா, எங்கே வந்தே?" அம்மா
"அப்பாவைப் பார்க்க வந்தேம்மா எப்படி இருக்கார்?"
"இத்தனை நாளா இல்லாம இப்ப வந்தாயா? ஏன் என்னைப் பார்க்க வரக்கூடாதா? எத்தனை வருஷமாச்சு!"
"அப்பா உடம்பு ரொம்ப மோசமா இருக்குன்னு கேள்விப்பட்டேன்"
"ஏண்டா, எந்த மூஞ்சியை வெச்சுண்டு விசாரிக்கறே! துப்புக் கெட்டவனே ! ஒரு கடுதாசி உண்டா? இப்ப திடீர்னு எதுக்காக வந்ததிக்கறே? எதுக்காகடா?"
"இல்லைம்மா, அம்பி அய்யர் சொன்னதைப் பார்த்தா அப்பாவை ஒரு வேளை இனிமே பார்க்க முடியாம போய்டுமோன்னு பயம் வந்துடுத்து.”
"பார்த்து இப்ப என்ன கிழிக்கப் போற?'
"ஏன்னா ? வந்தவரை...''
"சும்மாருடி! இது எங்க குடும்ப விஷயம். ப்ராடிகல் சன் வந்திருக்கான்" என்றார் அண்ணன்
"ஏண்டா, பார்க்க என்ன தகுதி இருக்கு உனக்கு?"
"ஏன் பார்க்கக் கூடாதா?" என்றான் விரோதமாக
"ஏய் பசங்களா எல்லோரும் உள்ள போங்கோ."
"மகன்ங்கிற தகுதிதான் அண்ணா ."
"மகன்! ஆஹா! பெரிசா வந்துட்டான். எத்தனை நாள் அவருக்கு சோறு போட்டே?."
"இதையெல்லாம் அப்புறம் பேசலாம். எனக்கு அப்பாவை பார்க்கணும், அவ்வளவுதான்"
"கூடாது. முடியாது. இந்த வீட்டில நுழையறதுக்கு உனக்கு அருகதை இல்லை. அப்படியே வெளில போ"
"இந்த வீடு உன்னுதா அண்ணா?"
"பார்த்தியாம்மா. வந்த உடனே என்ன கேள்வி கேக்கறான் ?
"எட்டு வருஷமா ஏண்டா வரலை? அதுக்கு பதில் சொல்"
"இந்த வீடு இன்னும் நம் அப்பாதுதானே, இதில் நுழைய எனக்கு உரிமை இருக்கு"
"இவன் அப்பாவைப் பார்க்க வரலைம்மா. கிழவன் மண்டையைப் போட்டுறப் போறார்னு சொத்தில் பங்கு வந்திருக்கான்"
"ஏண்டா கடன்காரா! எப்படி நீ வரப்போகும்? -பெத்த தாயார்க்கு ஒரு லெட்டர் போட்டியா?"
"அதுக்கெல்லாம் என்ன காரணம்ங்கறது எல்லோருக்கும் தெரியுமே"
"தெரியும் பேப்பர்ல சந்தி சிரிச்சுதே..."
"சொத்துக்குத்தாம்மா வந்திருக்கான்..."
"இதோ பார் ஸ்ரீதர். அனாவசியமா சண்டைக்கு காலைப் பிராண்டாதே! எனக்கு சொத்தும் வேண்டாம் ஒரு எழவும் வேண்டாம். அப்பாவைப் பார்க்க அனுமதிச்சாப் போறும். எங்க படுத்திண்டிருக்கார்?"
"அப்படியே சுபாவம் மாறாம இருக்கான்."
'இருந்துட்டுப் போறேன். முட்டாத்தனமாக நடந்துக்காதீங்கோ என்ன சொன்னாலும் ஏசினாலும் நான் அப்பாவைப் பார்த்துட்டுத் தான் இந்த இடத்தை விட்டுப் போகப் போறேன். அனாவசியத் துக்கு இந்த இடத்தில் சண்டையோ மூர்க்கத்தனமோ வேண்டாம். ஒரு நண்பன், இல்லை பார்வையாளனா நினைச்சுக் கங்கோ...... . எங்கே அவர்?"
"உன்னை இப்ப அவர் பார்த்தா அடையாளம் கண்டுப்பார்னு நினைக்கிறயா?"
"ஏன்? மயக்கமா?"
"இல்லை . மூஞ்சில காறித் துப்புவார்."
'துப்பமாட்டார். நிச்சயம் என்னை அவருக்கு ஞாபகம் இருக்கும். எட்டு யுகமானாலும் ஞாபகமிருக்கும்!"
"கிழத்துக்கு நேத்திக்கு நடந்தது இன்னிக்கு நினைவில்லை.....ஞாபகம் இருக்குமாம்!"
"சரிம்மா; இவனோட என்ன ரோதனை? கல்லுளி மங்கன் மாதிரி போகமாட்டான். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு......கூடப் பிறந்த தோஷத்துக்காக காட்டிட்டு வீட்டை விட்டு விரட்டிடலாம். ஏய் சின்னி , வாடி இங்கே. இது யார் தெரியுமா... சி...த்... தப்...பா... அழகான சித்தப்பா, அழைச்சுண்டு போய் தாத்தா ரூமை காட்டு"
சின்னியின் பின் மௌனமாக நடந்தான். மாடிப்படி ஏறித் திரும்பும்போது அத்தனை கண்களும் அவனைக் குத்தித் துளைப்பதை உணர்ந்தான்
எட்டு வருஷமாக விட்டுப்போன உறவு, ஒரு கடிதமில்லை விசாரிப்பில்லை கல்யாண அழைப்பில்லை எங்கே இருக்கிறான் என்கிற சங்கதி இல்லை. சினிமா என்றோ, டிராமா என்றோ கல்கத்தா என்றோ, காசி என்றோ, பணக்காரன் என்றோ கடனில் முழ்கிவிட்டான் என்றோ, பொண்டாட்டி ஓடிப்போய் கிறிஸ்துவப் பெண்ணை வைத்துக் கொண்டிருக்கிறான் என்றோ கேள்விப்பட்டிருப்பார்கள்......எட்டு வருஷ வெட்டுக்குப் பிறகு வதந்திகளிலிருந்து வடிவெடுத்திருக்கிறான். எப்படி ஒட்டுவார்கள்?
"சித்தப்பாவா நீ" என்றாள் சின்னி.
"ஆமாம்".
மெதுவாக அந்த மாடி அறையை அணுகினார்கள்
"எந்த ஊர்?'
"ஏதோ ஊரு"
"சித்தி வரலியா"
"இல்லை"
'செத்துப் போய்ட்டாளா?"
"இல்லை"
"என்ன வேலை பண்றேள்?"
"அலையறேன்"
"எதுக்கு?"
“ஜெயிலுக்குப் போயிருந்தேன்னு சொன்னாளே, அந்த சித்தப்பாவா, நீ?"
"ஏய் சின்னி! பேசாம ரூமைக் காட்டிட்டு திரும்பி வா..."
சின்னி கதவைத் திறந்து, "உள்ள போங்கோ. தாத்தா தூங்கிண்டிருப்பார்” என்று சொல்லிவிட்டு விலகினாள்,
உள்ளே டெட்டால் வாசனையடித்தது. ஏறக்குறைய இருட்பாக, சைபர் வாட் நியான் ஒளியில் தரையில் ஒரு போர்வைக் குவியல் தெரிந்தது
சுவரில் தடவி விளக்குப்போட்டு அதை அணுகினான். குனிந்து மெல்ல விலக்கினான். அதிர்ந்து போனான்,
'மை காட்! இது அப்பா இல்லை. நான் பார்த்த அப்பா பாதி! சுருங்கிப் போய்விட்டார். கண்கள் இருட்டுப் பொத்துகளாக மூடி, கன்னங்கள் ஒட்டிப்போய், கை நரம்புகளும் மார்பு எலும்புகளும் தெரிய......பிராணன் ?
"அப்பா" பதில் இல்லை.
சற்று நேரம் அவரைப் பார்த்துக் கொண்டு அழுதான். மன வெளிச்சத்தில் சட் சட் என்று அந்த மனிதரின் ஞாபக பிம்பங்கள் மாறின.
"அப்பா, அப்பா..."
படுக்கையருகில் உட்கார்ந்து நெற்றியைத் தொட்டான். சூடு அந்த கையெலும்பை எடுத்துத் தன் கன்னத்தில் வைத்துக் கொண்டான். அழுகை பீறிட்டது.
"அப்பா..."
சட்டென்று கனவுச் சங்கிலியிலிருந்து விடுதலை பெற்றவர் போல் சிலிர்த்துக் கண் விழித்தார்.
"யாரு?"
"நான்தாம்பா, பரத் வந்திருக்கேன்"
மெல்லத் தலை நகர்த்தி அவனைப் பார்த்தார்.
'பரத்தா?... பரத்தா?... என் மூணாவது பையனா?"
"ஆமாம்ப்பா ஆமாம்"
"நீதானா!" என்ன கிணற்றுக் குரல் அது! எட்டு வருஷத்துக்கு முந்தைய ஒலி முழக்கம் எங்கே...?
"நான் தாம்பா.."
'சௌக்கியமா இருக்கியா?"
"இருக்கேம்பா!"
"ரொம்ப நாளா காணோம்..."
"வந்துட்டேம்பா!"
"தெரியும். நீ வருவேன்னு தெரியும் சாப்பிட்டியா?'
"இல்லப்பா"
"சாப்ட்டுறு. ராட்சசிகள்ளாம் அப்புறம் இல்லைன்னுடுவா. மூணு ராட்சசி.....நாலு ராட்சசி"
"என்னப்பா உனக்கு உடம்பு..."
"களைப்புப்பா! அலுப்பு... போறும் நிஜமாவே பரத்தா...?' அந்தக் கரம் சிரமப்பட்டு மேல் வந்து அவன் தலை மயிரைக் கலைத்து, "பரத் உனக்குத்தான்... உனக்குத்தான் சரியாவே எதும் செய்யலை..." கிழவரின் கண்கள் கலங்கின
"அதெல்லாம் இல்லப்பா"
"என்னைப் பாரு சீக்கிரம் செத்துப் போய்டுவேனா? சீக்கிரம் போய்ட்டா தேவலாம்..."
"இல்லப்பா, தேவலையாய்டும்"
'உன்னைப்பத்திதான் சதா நினைப்பு"
"எனக்கும்ப்பா"
"கிட்ட வா" கிழவர் மெல்ல, யோசித்து யோசித்து, மிக மெலிந்த குரலில் பேசினார்.
"இந்த ரூமைப் பாரு சுடுகொடு மாதிரி இல்லை என்னை இதில் போட்டு அடைச்சுட்டு எல்லாரும் கீழயே இருக்கா அஞ்சு நிமிஷம் பேச ஆளில்லை. நாக்கு செத்துப் போச்சு. ஆரஞ்சுப்பழம் வாங்கிக் கொடுனு ஒரு வாரமா சொல்லிண்டிருக்கேன். இங்க வேற யாரும் இல்லையே...?
"இல்லைப்பா!"
"பழம் எல்லாம் கீழே வெச்சிண்டிருக்கா. அவாளே சாப்படறா..... உங்கம்மா, மூத்த ராட்சசி, என்னை வந்து பார்த்து மூணு நாளாச்சு, எல்லாரும் காத்திண்டிருக்கா பரத்..."
"அதெல்லாம் இல்லைப்பா, சரியாய்டும்".
"ஆரஞ்சுப்பழம் வாங்கித் தரயா"
'தரேன்ப்பா "
"இத பார் மருந்து.. இதில் விஷம் கலந்திருக்கா, குடிக்கமாட்டேன்"
"அப்படி எல்லாம் செய்யமாட்டாப்பா."
"எல்லாரும் காத்துண்டிருக்கா.. நீ எந்த ஊர்ல இருக்கே?"
"ஏதோ ஊர்ப்பா. ஸ்திரமா எதும் இல்லை ."
வீட்டில் இருக்கயா?
"இல்லை, ரூம்ல..."
எனக்கு இடம் இருக்குமா, என்னை அழைச்சுண்டு போறியா?"
"சரிப்பா"
"இப்ப போகலாமா"
"இல்லை, நாளைக்கு கார்த்தலை..."
"இப்பவே போகவேண்டாமா?'
"தூங்கிட்டு நாளைக்கு கார்த்தலை போகலாம்."
"என்னை இந்த சுடுகாட்டில் இருந்து அழைச்சுண்டு போயிடறியா?"
"சரிப்பா"
அவர் முகத்தில் சாந்தம் தெரிந்தது
"நீ பேசு"
அவர் முன் சாய்ந்து "அப்பா” என்றான் தலையைக் கோதிவிட்டு
*அப்பா நானும் நீயும் கிரிக்கெட் ஆடுவோமே, ஞாபகம் இருக்கா ?"
ஞாபகம் புன்னகையாக மலர்ந்தது
"ரெண்டுபேரும் ஒரே டீம்ல மாட்ச் ஆடியிருக்கோம். நீ பத்தொம்பது அடுச்சுட்டு ரன் அவுட் ஆயிட்டே. எனக்கு ஏற்ப உன்னால ஓட முடியலே. ஸாரிப்பா, அது ராங்கால், அது என் தப்பு...."
"சொல்லு..."
"சின்ன - வயசில அய்யன் வாய்க்கால்ல நீஞ்ச கத்துக் குடுத்தியே. தொபுக்கடீர்னு தள்ளிவிட்டுட்டு மூச்சுத் திணற வெப்பியே; அப்புறம் கொய்யாக்கா அடிச்சு சாப்பிடுவோமே அம்மாவுக்குத் தெரியாம உனக்கு பர்க்லி சிகரெட் வாங்கிண்டு வருவேனே. ரெண்டு பேரும் கவட்டை கட்டி குருவி அடிப்பமே எவ்வளவு தூரம் ட்ரெக்கிங்... போவோம்... பாண தீர்த்தத்தில் பாறைல படுத்துண்டு நட்சத்திரத்துக்கு எல்லாம் புதுசா பேர் வெப்பியே! சுள்ளி பத்த வெச்சு சட்டில சமைப்பமே..."
ஒவ்வொன்றாக ஒவ்வொன்றாகச் சொன்னான்.
தந்தை மகன் இருவருக்கும் இருந்த உணர்ச்சிபூர்வமான பிணைப்பு, சிநேகிதம் கையோடு கை அழுத்திய பலப்பரீட்சை,
நீண்ட நீண்ட நடைப் பயணங்கள், பறவைக் குரல்கள், மண் வெளியில் தியாகராஜர், துரத்தல், ஓட்டம், பிடிப்பு, ரகசியப்பரிவர்த்தனை, நிறுத்தி உட்காரவைத்து மரத்தடியில் அருணாசலக் கவிராயரின் ராமநாடகக் கீர்த்தனைகள், ஆலிஸ் இன் ஒண்டர்லாண்ட்...
"பரத்" என்று அவன் கையைப் பிடித்தார். "நானும் நீயும் ஒண்ணு..."
'அப்பா! எல்டொராடோவைப் பத்தி சொல்லுவியே, ஞாபகம் இருக்கா? அதைத் தேடிண்டு தான் நான் போனேம்பா. கற்பனைத் தங்கம்னு தெரியாம தூரத்திலேயே பளிச்னு காட்டிட்டிருந்ததை நோக்கி ஓடினேன்ப்பா"
"நானும்தான் அதையே தேடினேன்" என்றார்
"அப்பா உன்னை முதல்ல சரசுவோட பார்த்தப்ப எனக்கு அப்படியே சகலமும் ஸ்தம்பிச்சுப் போச்சு. ரொம்ப நாள் கழிச்சுத்தான் எனக்கு ஏன்னு புரிஞ்சுது. ஆனா அதைப்பத்தி நான் ஒருத்தர்கிட்ட ஒரு வார்த்தை பேசலியே! இன்னிவரைக்கும்...சொன்னதில்லையே!"
"அந்த சம்பவத்துக்கப்புறம் உனக்கும் எனக்கும் உறவுல பிளவு வந்துடுத்து....... அன்னியோன்யம் வெட்டுப்பட்டுடுத்து..."
"நீ என்னைப் பார்த்து, நான் உன்னை பார்த்து பயப்பட ஆரம்பிச்சோம், என் மனசுல உன்ன பத்தி இருந்த இமேஜ் கலைஞ்சு போயி நாம் ரெண்டு பேரும் அப்பவே பிரிய ஆரம்பிச்சுட்டோம். அதுக்கப்புறம் எத்தனையோ நடந்து போயி, நான் விலகிப் போய், ஊர் ஊரா அலைஞ்சு...உறவு விட்டுப்போயி,கல்யாணம் பண்ணிண்டு, பெண்டாட்டியைப் பிரிஞ்சு போய்......வேண்டாம்பா......
அதையெல்லாம் அழிச்சுடலாம்பா ......சரசு வரைக்கும் விரசமில்லாம இருக்கு அதோட போதும். அதுக்கப்புறம் எல்லாத்தையும்....."
அப்பா தலையை ஆட்டினார். "அதுவும் இருக்கட்டும்" என்றார்.
'பரத் கிட்ட வா.."
அவன் வந்தான். "நாளைக்கு கார்த்தால என்னை அழைச்சுண்டு போறியா அந்த இடத்துக்கு-"
"சரிப்பா ."
"எத்தனை மணிக்கு வண்டி?"
"சீக்கிரமே கிளம்பிடலாம்பா.."
"என்னால நடக்க முடியாது..."
"உன்னை அப்படியே தூக்கித் தோள்மேல வெச்சுண்டு போயிடறேம்பா..நீ என்னைத் தூக்கிண்டு போவியே அது மாதிரி....."
"எனக்குத் தேவலை ஆய்டுமா?"
"நிச்சயம் ஆயிடும்பா"
"தேவலையானதும் கண்ணாடி மாத்திக்கொடு. என்ன?"
'சரிப்பா"
"ஒரு சின்ன டிரான்சிஸ்டர் வாங்கிக் கொடுத்துடு"
"சரிப்பா"
"ஹெமிங்வேயோட கிலிமஞ்சாரோ படிச்சுக்காட்டு"
"சரிப்பா"
'மார்க்கஸ் அரேலியஸ், திருவாசகம், அப்புறம் பவிஷ்ய புராணம், டாஸ்டாயவ்ஸ்கி, கோஸ்லர், ரஸ்ஸல்....."
'எல்லா,.."
"இதோ பாரு, அந்த தடி ரெண்டு வேஷ்டி, ரெண்டு பனியன், அதான் என்னுது. செருப்பு கூடக் கிடையாது. இப்பவே எடுத்துண்டுடு".
'நான் வாங்கித்தரேம்பா."
"நிறைய நடக்கணும்" அவர் முகத்தில் இப்போது தேஜஸ் தெரிந்தது. உதட்டில் புன்னகையுடன் அவனை மிக அருகி அழைத்து கண் சிமிட்டலுடன், 'பரத் உங்கிட்ட ஒரு ரகசிய சொல்லணும். அவா ஒருத்தருக்கும் தெரியாது."
"என்னப்பா?"
சொன்னார்
ராத்திரி முழுவதும் அவர் அருகிலேயே உட்கார்ந்து அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். மூன்று மணி சுமாருக்கு அப்பா இறந்து போயிருந்ததை உணர்ந்தான். தூக்கம் போலத்தான் படுத்திருந்தார். உதட்டில் புன்னகை ஸ்திரமாக இருந்தது.
பரத் ஓரத்தில் ஒதுங்கி நிற்க, ஒவ்வொருவராக வந்து ஆர்ப்பாட்டமாக அழுதார்கள். அதன்பின் சுரத்துக் குறைந்து அழுதார்கள். அதன் பின் மௌனமாக...
"வந்தான், முடிச்சுட்டான்! இவனைப் பார்த்த அதிர்ச்சியிலே உயிர் போய்டுத்து !!. எதுக்காக இப்படி திடீர்னு வரணும்?'
"அண்ணா ஒரு விஷயம். தனியா வாயேன்"
"என்ன?"
"போறதுக்கு முன்னால அப்பா எங்கிட்ட சொன்னார். வீட்டையும் நிலத்தையும் என் பேரில் எழுதி வெச்சிருக்கறதா..... காரியம் எல்லாம் முடிஞ்சப்புறம் இந்த அட்ரஸ்க்கு எழுது. எல்லாத்தையும் மாத்தி சாஸனம் பண்ணிக் கொடுத்துடறேன்..."
"பரத், எங்க போற ?'
திரும்பிப் பார்க்காமல் நடந்தான்.
=====================================
இந்தச் சிறுகதையை எவ்வளவு முறை படித்திருப்பேன் என்று நினைவில்லை. நான் அவ்வளவு எமோஷனலான ஆள் இல்லை. சட்ரென்று கலங்குவது, உணர்ச்சி வசப்படுவது.....இதெல்லாம் அதிகம் கிடையாது.
இருந்தும் ஒவ்வொரு முறை இதைப் படிக்கும் போதும் நிறையவே கண் கலங்கியிருக்கிறேன். அதுதான் சுஜாதாவின் எழுத்தின் சக்தி
-------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.4.21

தேர்தல் நேரத்திற்கு பொருந்தும் கதை!


தேர்தல் நேரத்திற்கு பொருந்தும் கதை!

*படித்ததில் பிடித்தது*

*தேர்தல் நேரத்திற்கு பொருந்தும் சுட்ட கதை.*

*ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார். அவருக்கு ஒரு மந்திரி. இவங்க ரெண்டு பேரும் ஒரு நாள் மாலை நேரம்  நடைபயிற்ச்சி  போனாங்க.  ஒரு ஆத்தங்கரை ஒரமா போயிட்டு இருந்தாங்க.*

*அப்போ அங்கே  ஒரு கொடியில வெள்ளரிக்காய் காய்ச்சு தொங்குவதை  பார்த்த ராஜா...  "மந்திரி அந்த வெள்ளரிக்காய பறிச்சுட்டு வா சாப்பிடலாம்"*  *ன்னு சொன்னார்.*

*மந்திரி பறிக்க போனார்.  அங்கே உக்கார்ந்து இருந்த ஓரு குருடன் சொன்னான்.  ஐயா அது வெள்ளரிக்காய் இல்ல. அது குமட்டி காய். அது தின்னா வாந்தி தான் வரும்.* 

*ராஜா சொன்னார்.  யோவ் மந்திரி.!!  அத பறிச்சு சாப்பிடு.  வாந்தி வருதான்னு  பாக்கலாம்.* 

*வேற வழி இல்லாம மந்திரி சாப்பிட்டார். உடனே மந்திரிக்கு குமட்டிக்கிட்டு ஒரே வாந்தி.*

*ராஜா கேட்டார்.  யோவ்.!! கபோதி..!! இதுக்கு என்ன தீர்வு.? ன்னு.*

*அந்த குருடன் சொன்னான். அது  பக்கத்துல ஒரு கை மாதிரி பச்சை இலை இருக்கும். அத கையில கசக்கி மந்திரி வாயில விட்டா வாந்தி நிக்கும் ன்னு.*

*ராஜாவும்  அப்படியே பண்ண...  மந்திரிக்கு வாந்தி நின்னு போச்சு. மந்திரிக்கு போன உசுரு திரும்பி வந்தது.*

*ராஜா குருடனை  பார்த்து கேட்டார். உனக்கு தான் கண் தெரியாதே.?  எப்படி சரியா தீர்வு சொன்னாய்.?  குருடன் சொன்னான். ராஜா..!!  இந்த நாட்ல எங்கேயும் பஞ்சம் பசி பட்டினி.  அப்படி இருக்கும் போது எவனாவது வெள்ளரி பிஞ்ச விட்டு வச்சிருப்பானா.? எப்பவும் இயற்கை ஒரு நோய் கொடுக்கற காய குடுத்தா இறைவன் பக்கத்துலயே  ஒரு மாற்று மருந்து வெச்சிடுவார்.*

 *ராஜாவுக்கு சந்தோஷம்.*
*இந்தா ஒரு டோக்கன். என் அரண்மனையில கிழக்கு வாசலுக்கு போ. பட்டை சாதம் குடுப்பாங்க. சாப்பிட்டு ஜாலி யா இரு. சொல்லிவிட்டு ராஜா போய்ட்டார்.*

 *கொஞ்ச நாள் கழித்து ஒரு வெளியூர் வியாபாரி ராஜா கிட்ட வந்தான்.  ராஜா என்கிட்ட வைரம் நிறைய இருக்கிறது. வாங்குறீங்களா ன்னு கேட்டான்.*

*இது ஒரிஜினலா போலியா ன்னு எப்படி தெரிஞ்சுக்கறதுன்னு ராஜாவுக்கு குழப்பம்.  மந்திரிய கூப்பிட்டார்.*

*ஏற்கனவே ஒரு தடவை வாந்தி எடுத்த அனுபவம் இருந்ததால...*
*வைரத்தை  முழுங்கித்தொலைக்க  சொன்னா என்ன பண்றதுன்னு பயந்துட்டு  தெரியாதுன்னு ட்டார்.*

*ராஜா சொன்னார்.  மந்திரி.!!  போய் அந்த கபோதிய கூட்டிட்டு வா.  அவன்தான் காரண காரிய தோட கரெக்டா சொல்லுவான்.*

*மந்திரி போய் அந்த குருடன கூட்டிட்டு வந்தார். ராஜா சொன்னார்.  டேய் இது ஒரிஜினல் வைரமா.?  போலி வைரமா.?  இல்லன்னா ரெண்டும் கலந்து  இருக்கா ன்னு பார்த்து சொல்லு.*

*அந்த குருடன் அந்த மொத்த வைரத்தையும் எடுத்து மத்தியான வெயில்ல கொண்டு போய் வெச்சான். கொஞ்ச நேரம் கழித்து அதை  கையில எடுத்து பிரிச்சு....  ராஜா இதெல்லாம் வைரம். மற்றது எல்லாம் கண்ணாடி ன்னு பிரிச்சு கொடுத்துட்டான்.*

 *வியாபாரியும் எதோ தெரியாம நடந்துடுச்சு ன்னு சொல்லி எல்லா வைரத்தையும் இனாமா கொடுத்துட்டு நழுவிட்டான்.*

*ராஜாவுக்கு ஆச்சர்யம்.*
*எப்படிப்பா  கண்டு பிடிச்ச.? விவரமா சொல்லு.?*

 *குருடன் சொன்னான்.*
 *ராஜா.!!  வெயில்ல வைரம் சூடாகாது. ஆனா கண்ணாடி சூடாகும். அதனால சூடானது எல்லாம் கண்ணாடின்னும் சூடு ஆகாதது எல்லாம் வைரம் ன்னும் பிரிச்சேன்.*

 *ராஜா சந்தோஷமா பாக்கெட் ல கைய விட்டு ஓரு டோக்கன் எடுத்து குருடன் கிட்ட குடுத்து போடா மேற்கு வாசலுக்கு. டோக்கன  குடுத்து பட்டை  சாதம் வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இரு ன்னு சொல்லி அனுப்பி வச்சார்.*

*இப்படியே  கொஞ்ச நாள் போச்சு. ராஜா தன் மகனுக்கு கல்யாணம் பண்ண வரன் தேட ஆரம்பிச்சார். பக்கத்து ஊர்ல இருந்து எல்லாம் இளவரசி குடுக்க ரெடியா இருந்தாங்க. ராஜாவுக்கு குழப்பம்.*
*யாரை தேர்ந்து எடுப்பதுன்னு. மந்திரிகிட்ட  கேட்கிறார். எல்லா பொண்ணுமே  நல்லா இருக்குன்னு பயந்து கிட்டே மந்திரி  சொல்றார்.*

 *ராஜா பார்த்தார்.*
 *கூப்புடுங்கடா  அந்த கபோதிய.*
 *குருடன் வந்தான்.*
 *ராஜா குருடன் கிட்ட சொன்னார்.  என் மகனுக்கு கல்யாணம் பண்ண பொண்ணு பார்க்குறேன்.  எந்த ராஜா வோட குமாரி சரியா இருக்கும்ன்னு காரண காரியத்தோட தெளிவா சொல்லு.*

*குருடன் சொன்னான்.*
 *ராஜா..!! அடுத்த நாட்டை விட்டுட்டு அதுக்கு அடுத்த நாட்டு ராஜாவோட  பொண்ண பாருங்கன்னான். அந்த ராஜா உங்க சம்பந்தி ஆயிட்டா  பக்கத்து நாட்டு ராஜா உங்க ரெண்டு பேருக்கும் நடுல இருப்பான். அப்போ எல்லை பிரச்சினை வராது. பொண்ண குடுத்ததால அந்த இடைப்பட்ட பகுதில பிரச்சினை வராம பார்த்துப்பான்.*

 *ராஜாவுக்கு ஒரே குஷி.*
*சபாஷ்.!! இந்தா  டோக்கன்.  அரண்மனையின் வடக்கு வாசலுக்கு போடா. பட்டை சாதம் குடுப்பாங்க. வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இரு அப்படின்னார்.*

 *குருடனும் போய்ட்டான்.*

*கொஞ்ச நாள் போச்சு. ஒரு நாள் ராஜா அந்த குருடன தன்னோட அந்தரங்க ஆலோசனை அறைக்கு  வர சொன்னார்.*

*டேய்.!!*
*நான் ஒன்னு  கேட்பேன். சரியா காரண காரியதோட சொல்லனும்.  அப்படின்னார். குருடனும் சரின்னான். இந்த ஊர்ல  எல்லோரும் என்னைய

ிச்சைகாரனுக்கு பிறந்த பய அப்படின்னு சொல்றாங்க. இதுக்கு நீ என்ன சொல்ற.?  சரியா சொல்லனும் என்றார்.*

 *குருடன் அமைதியா இருந்தான்.*
 *பதிலே பேசல.*

*ராஜா திரும்ப கேட்டார்.*

*குருடன் அமைதியா  சொன்னான்.*

 *ராஜா நீங்க திரும்ப திரும்ப கேட்கறதால சொல்றேன்.*

 *நெசமா நீங்க பிச்சை காரனுக்கு பிறந்தவன் தான். அதுல சந்தேகமே வேணாம்  அப்படின்னான்.*

 *ராஜாவுக்கு தூக்கி வாரிப்போட்டது. ரொம்ப வருத்தம். ஏன்டா என்னய பார்த்தா இப்படி கணிச்சே..?? ன்னு வருத்தமா கேட்டார்.*

*ராஜா...*
*முதல்ல குமட்டி காய பத்தி சொன்னேன். நீங்க சந்தோஷம் ஆயிட்டீங்க. ஆனா குடுத்தது பட்டை சாதத்துக்கு  இலவச டோக்கன்.*

 *நிஜமான ராஜாவா இருந்தா கையில இருந்த மோதிரத்தை கழட்டி குடுத்து இருப்பார்.*

 *அப்புறம் கோடி கணக்குல வைரம் கிடைக்க வழி செஞ்சேன். நிஜமான ராஜாவா  இருந்தா கழுத்துல இருந்த வைர மாலைய குடுத்து இருப்பார்.*
 *ஆனா நீங்க குடுத்தது பட்டை  சாத டோக்கன்.*

 *மூன்றாவது... ஒரு ராஜ்ஜியமே உங்க கைகுள்ள வருவதற்கு வழி சொன்னேன்.  உண்மையான  ராஜாவா இருந்தா நாலு கிராமத்த எழுதி  குடுத்து இருப்பார்.*
 *நீங்க குடுத்தது வடக்கு வாசல் பட்டை  சாத டோக்கன்.*

*ஆக....  சோத்தை தாண்டி உங்க எண்ணம் போகல. உலகத்துலேயே பெரிய விசயம் சோறுன்னு முடிவு பண்ணிட்டீங்க. இதுல இருந்து தெரியல.?*  
*நீங்க பிச்சைக்காரனுக்கு பிறந்தவன்னு.?  ஏன்னா உங்க புத்தி டோக்கனோடவும் பட்டை சாதத்தோட வும்  முடிஞ்சு போச்சு. அதுக்கு மேல போகல என்றான்.*
*மன்னர் வெட்கி தலைகுனிந்தார்.*

*அந்த குருடனிடம் இருந்த மதிநுட்பம்  தேவையான நிலைமைல தான் இப்ப நாம இருக்கோம்.*

*தெளிவான முடிவெடுத்து வாக்களிப்போம்.👍*
----------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=======================================
தேர்தல் நேரத்திற்கு பொருந்தும் கதை!

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!