Astrology: Popcorn Post: சகல நன்மைகளையும் தரும் சந்திர மகா திசை!
Popcorn Post 55
29.9.2014
குருவைப் போலவே சந்திரனும் சுபக் கிரகம். அத்துடன் நம் நட்சத்திரம்
மற்றும் ராசிக்கு அதிபதி சந்திரன். அவருடைய மகா திசை பல
விதங்களிலும் நன்மையானதாக இருக்கும்.
உடனே உங்களில் சிலர், என்னடா, நமக்கு சில நன்மைகள்தானே
கிடைத்தது - சகல விதங்களிலும் நன்மைகள் எல்லாம் கிடைக்க
வில்லையே என்று நினைக்க வேண்டாம். கேட்க வேண்டாம்.
அவரவருடைய ஜாதகத்தைப் பொறுத்து அந்த நன்மைகளின்
அளவு மாறுபடும். ஜாதகத்தில் சந்திர பகவான் ஆட்சி அல்லது
உச்சம் பெற்று இருக்கும் நிலைமையில் அத்துடன் அவர் கேந்திர திரிகோணங்களில் இருக்கும் நிலைமையில், அவருடைய தசா
புத்தி நடக்கும் காலங்கள் அந்த நன்மைகள் உண்டாகும். அனுபவித்தவர்களுக்குத்தான் அது தெரியும்.
இன்று சந்திர மகாதிசையின் பலன்களைப் பற்றிப் பார்ப்போம்!
ஜாதகத்தின் பலன்களை சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலத்தில்தான் பெறமுடியும். திருமணம் என்றாலும் சரி மரணம் என்றாலும் சரி சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலங்களில்தான் நடக்கும்.
மகாதிசைகளும் (Major Dasas) அதன் புத்திகளும் (sub Periods) ஒரு ஒழுங்கு முறையில் வந்து போகும். ஆகவே அவை வரும்வரை பொறுத்திருக்க வேண்டியதுதான். நம் அவசரத்திற்கெல்லாம் ஒன்றும் ஆகாது.
மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில்
பிறந்தவர்களுக்கு சந்திர மகாதிசை அநேகமாக வராது. சுமார்
100 ஆண்டுகாலம் வாழ்ந்தால் வரலாம். அதுபோல வேறு சில நட்சத்திரக்காரர்களுக்கும் வராது.
அவர்கள் வருத்தப்பட வேண்டாம். ஒவ்வொரு மகாதிசையிலும்
சந்திர புத்தி வரும் அல்லவா? அவற்றை எல்லாம் கூட்டிப் பாருங்கள். மொத்தம் 3,600 நாட்கள் (10 ஆண்டுகள்) வரும். அப்போது சந்திரன்
உரிய பலன்களைத் தருவார். மொத்தக் கணக்கு சரியாக இருக்கும்.
சரி சந்திர மகா திசையில் எல்லா ஆண்டுகளுமே சுகமாக இருக்குமா
என்றால், அதில் வரும் சுயபுத்தி, குரு புத்தி, புதன் புத்தி, சுக்கிர புத்தி, ஆகியவைகள் (சுமார் 5 ஆண்டு காலம்) நன்றாக இருக்கும். எப்போது
நன்றாக இருக்கும்? அந்த 4 கிரகங்களும் ஜாதகத்தில் கேந்திர, அல்லது திரிகோண அதிபர்களாக இருந்து நல்ல இடத்தில் இருந்தால் வரும்.
அதை விட்டு அவர்கள் 6, 8 12ஆம் இடங்களில் இருந்தாலோ அல்லது குருபகவானுக்கு 6, 8 12ல் அமர்ந்திருந்தாலோ, அதவது அஷ்ட சஷ்டம நிலைமை போன்ற அமைப்பில் இருந்தாலோ முழுமையான பலன்கள் இருக்காது.
சந்திர மகாதிசைக்கு உரிய காலத்தை ஒரு அட்டவணை மூலம்
கீழே கொடுத்துள்ளேன்!
உதாரணத்திற்கு சந்திர மகாதிசையின் துவக்க புத்தியான அதன் சுய
புத்திக்கு உரிய பலனை ஒரு பாடல் மூலம் விளக்கியுள்ளேன்
சொல்லவே சந்திர திசை வருஷம் பத்தில்
சுகமுடைய சந்திர புத்தி மாதம்பத்து
நில்லவே யதனுடைய பலனைச் சொல்வோம்
நிகரில்லா மன்னருடன் மகிழ்ச்சியாகும்
சொல்லவே சுயம்வரங்கள் நாட்டிவைத்து
சுகமான கல்யாணம் ஆகும்பாரு
வெல்லவோ சத்துருவை ஜெயிக்கலாகும்
வேணபடி நிதிசேரும் விபரந்தானே!
நிதி சேரும் என்றிருக்கிறதே - அது போதாதா நமக்கு! எல்லா
வகையிலும் பயன் உண்டாகும் என்று எடுத்துக்கொள்ளுங்கள்.
உடன் தெய்வ வழிபாட்டையும் செய்தீர்கள் என்றால் கிடைக்கும்
பலன்கள் நிலைக்கும் தன்மை உடையதாக ஆகிவிடும்!
நன்மைகளும் தீமைகளும் கலந்ததுதான் மகாதிசைகள். அதையும்
மனதில் வையுங்கள்!
அன்புடன்,
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!