நெகிழ வைத்த புராணக் கதை1
இராவண வதம் முடிகிறது. தேவர்கள் பூமாரி பொழிகின்றனர். அப்போது அங்கே
தசரதன் தோன்றுகிறார். இராமனைக் கட்டித் தழுவிக் கொள்கிறார்.
“உன்னை வனவாசம் அனுப்ப வேண்டி இருந்ததே என்கிற வருத்தம், உயிர் போன பின்னும், என்னைத் துளைத்துக் கொண்டே இருந்தது. இன்றுதான்
அது தீர்ந்தது. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். வேண்டிய வரம் ஒன்றைக் கேள் !" என்கிறார்.
ராமர் வரம் எதுவும் தேவையில்லை என்கிறார். இல்லை !
நீ கேட்டுத்தான் ஆக வேண்டும் என்கிறார் தசரதன்.
“ஆயினும் உனக்கு அமைந்தது ஒன்று கேள் !”
என்று தசரதன் சொல்கிறார். ஆயினும் என்கிற வார்த்தை பிரயோகம் முதலில் இராமர் மறுத்தார் என்பதை சுட்டுகிறது. இப்போது ராமர் வரம்
கேட்கத் தயாராகிறார்.
என்ன வரம் கேட்கப் போகிறார்?
அதற்கு முன் ஒரு Flashback....
பரதன் அரசாள வேண்டும்....இராமர் வனம் புக வேண்டும்.... என்று கைகேயி வரங்களைக் கேட்கவே தசரதன் மிகவும் நொந்து போகிறார். வேறு வழியில்லாமல் வரங்களைக் கொடுத்து விட்டு, குலகுரு வசிட்டனை நோக்கி, “இனிமேல் இந்தப் பாவி கைகேயி என் மனைவி அல்லள். அரசாளப் போகும் பரதனும் என் மைந்தன் அல்லன். என் மறைவுக்குப் பிறகு இறுதி காரியங்கள் செய்யும் உரிமையையும் பரதன் இழக்கிறான் !" என்று தசரதன் சொல்லி விட்டு மாண்டு போகிறார். இப்படித் தன் தந்தையார்
சொல்லி விட்டது இராமன் மனதில் முள்ளாகத் தைத்துக் கொண்டிருக்கிறது !
இப்போதோ,
இத்தனை ஆண்டுகள் கழித்து, தசரதன் ஒரு வரம் தருகிறேன் ! என்று சொல்கிறார்.
இராமர் என்ன நினைக்கிறார்? கைகேயி மற்றும் பரதனை மன்னித்து முறையே தன் மனைவி என்றும், மகனென்றும் தசரதன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்க நினைக்கிறார் !
இந்த நினைவோடு ராமர் தசரதனைப் பார்த்து,
“தீயள் என்று நீ துறந்த...”
என்று ஆரம்பித்து விடுகிறார். இதற்கு பிறகு
என்ன சொல்லைப் போடுவது? தீயவள் என்று...நீ துறந்த கைகேயி என்று சொல்ல முடியாது.
தன் தாயை பெயர் சூட்டி ராமன் அழைக்க மாட்டான்.
சரி ! தீயள் என்று நீ துறந்த
உன் மனைவி என்று போடலாமா ? இல்லை ! அதுவும் இயலாது ! ஏனென்றால் ஏற்கனவே தசரதன் கைகேயி...என் மனைவி அல்லள்.. என்று சொல்லி இருக்கிறார். .
சரி ! அதுவும் வேண்டாம் !
தீயள் என்று நீ துறந்த
பரதனின் தாய் என்று சொல்லலாமா ? என்றால்
அதுவுமே இயலாது. காரணம்.... பரதன் என் மகனே அல்லன் என்றும் தசரதன் முன்னரே சொல்லி விட்டார்.
கைகேயி, மனைவி, பரதனின் தாய் என்ற சொற்கள் எதையும் பயன்படுத்த முடியாது. வேறு எந்த சொல்லைப் போட முடியும் ராமன்? இந்தத் திகைப்பு
நமக்கு ஏற்படலாம்.
ஆனால் இங்குதான் ஜொலிக்கிறார் கவிச்சக்ரவர்த்தி. பெரிய குழப்பத்திலும் அற்புதமான ஒரு முடிவை எடுக்கிறார் !
இராமன் பகை கொள்ளாப் பண்பினன் !
ஆதலின் கைகேயியைச் சுட்டத் தயக்கமின்றி இராமன் போடும் சொல் ..... “தெய்வம்” என்பதாகும்.
“தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும்” என்று
இராமன் சுட்டுகிறான் !
*ஆயினும் உனக்கு அமைந்தது
ஒன்றுரை என, அழகன்
தீயள் என்று நீ துறந்த என்
தெய்வமும் மகனும்
தாயும் தம்பியும் ஆம் வரம்
தருக’ எனத் தாழ்ந்தான்......
என்று சொல்கிறார் கவிச்சக்ரவர்த்தி கம்பன்.
இராமர் அப்படி சொன்ன உடன்
" வாய் திறந்து எழுந்து ஆர்த்தன
உயிரெலாம் வழுத்தி ” என்றும் முடிக்கிறார் கம்பன். உலகமே இராமரை வாழ்த்தியதாம் ! உயிர்களெல்லாம்
வாழ்த்தினவாம் !
எப்பேர்ப்பட்ட உயர்ந்த பண்பாட்டினை எவ்வளவு சுவையாக சொல்லி சென்றிருக்கிறார் கம்பன் ?
ராமாயணக் கதை நமக்கெல்லாம் தெரியும். இந்தியாவில் இருக்கும் ஹிந்துக்கள் அல்லாத
பிற மதத்தினருக்கு கூட கதை தெரியும் ! ஆனால் இது மாதிரி நுணுக்கமான இடங்களை ரசிப்பது நம் கம்பனைப் படிக்கும் போது மட்டுமே !
எப்பேர்ப்பட்ட இடம் இது அல்லவா? தெய்வம் என்கிற சொற்ப்ரயோகம் எவ்வளவு உன்னதமானது? யாராவது இப்படி ஒரு சொல்லை அந்த இடத்தில் எதிர்பார்ப்போமா? அதுதான் கம்பன்...!!
ஸ்ரீ ராம ஜெயம் !!!
---------------------------------------------------
படித்து நெகிழ்ந்தது
அன்புடன்
வாத்தியார்
==============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!