மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 61 - 70. Show all posts
Showing posts with label Lessons 61 - 70. Show all posts

27.4.08

சனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம் - நிறைவுப் பகுதி




=========================================================
ஜோதிடக் கட்டுரைகள் - பகுதி 1

உட்தலைப்பு: சனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம் - நிறைவுப் பகுதி

முந்தைய பகுதிகள் இங்கே!

-----------------------------------------------------------------------------------------
ஒருநாள் அரண்மனையில் நடந்த அதிரடி நிகழ்வில், ஆசிரியர், மன்னரின்
ஆதீதகோபத்திற்கு ஆளாக, கோட்டையில் இருந்த நமது ஆசிரியர், பாதாள
சிறைக்குப்போகும்படி ஆகிவிட்டது என்று முன் பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

அப்படி என்ன நடந்தது?

அரசசபையில் ஒரு விவாதம் நடந்தது. பிறப்பிற்கு, நாளையும் நட்சத்திரத்தையும்
அடையாளப் படுத்திவைக்கிறோம், இறப்பிற்குத் திதியை மட்டுமே அடையாளப்
படுத்தி வைக்கிறோம். இறப்பிற்கும் ஏன் நட்சத்திரத்தைப் பிரதானப்படுத்து
வதில்லை. இதுதான் மன்னரின் கேள்வி. அதை வைத்து விவாதம் நடந்து
கொண்டிருந்ததது.

அதாவது இன்று 28.4.2008 சர்வதாரி ஆண்டு சித்திரை மாதம் 16ஆம் தேதி
திங்கட்கிழமை உத்திராடம் நட்சத்திரம் என்றுதான் இன்று பிறக்கும் ஒரு குழந்தை
யின் பிறப்பு முன்னிறுத்தப்படும். அதே நேரம் இன்று இறக்கும் ஒருவரை சித்திரை
பெளர்ணமிக்குப் பிறகு வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் மரணமானவர் என்று
தான் சொல்வார்கள்.

கொண்டாடுவதற்கும், ஜாதகம் கணிப்பதற்கும், வாழ்க்கைப் பலாபலன்களுக்கும்
நட்சத்திரம் எடுத்துக் கொள்ளப்படும். ஆனால் மரணத்திற்கும், மரணத்தை நினைவு
கூர்ந்து இறந்தவருக்கு உரிய சடங்குகளைச் செய்வதற்கும் திதிதான் பிரதானமாக
எடுத்துக்கொள்ளப்படும். அதுதான் வழக்கத்தில் உள்ளது.

நட்சத்திரங்கள் 27தான். ஆனால் திதி 30. (Thithi is the distance between Sun and
Moon in transit. when both are in the same degree, it is Amaavasai and if both
are exactly in the opposite side it is called as Full Moon Day or Pournami)

திதியைப் பற்றிய மேல் விவரங்களுக்கு இங்கே சொடுக்கிப் பாருங்கள்

இதுபற்றி நமது த்ரைவேதி வாத்தியார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விளக்கம்
சொல்லியும், காதில் சரியாக வாங்கிக் கொள்ளாத மன்னன், ”ஏன் நட்சத்திரத்தை
எடுத்துக்கொண்டால் என்ன தப்பு?” என்று கேட்க, எரிச்சலுக்கும் கோபத்திற்கும்
உள்ளான வாத்தியார்,மன்னனை நோக்கிச் சட்டென்று,” போடா முட்டாள்!” என்று
கூறி அனைவரையும் திகைக்க வைத்துவிட்டார். அதோடு படு வேகமாக எழுந்து
அரசசபையை விட்டு வெளியேறியும் விட்டார்.

இதை சற்றும் எதிர்பார்த்திராத மன்னரும், திகைத்து நிற்க, முதன் மந்திரிதான்,
பேச்சைத்துவக்கி, சபையின் இறுக்கத்தைக் குறைத்தார். அதோடு போட்டும் கொடுத்தார்.

“அரசே, அவர் என்னதான் அரசவைக் குருவாக இருந்தாலும், உங்களை, முட்டாள்
என்று சொன்னது மாபெரும் தவறு. அவரை அப்படியே விடுதல் ஒரு மோசமான
முன்னுதாரணமாகிவிடும். அவரை நீங்கள் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.”

அதன்படி அரசரும் உத்தரவு இட, சேனாதிபதி, தன்னுடைய வீரர்களுடன் சென்று,
நமது வாத்தியாரைப் பிடித்து, விசாரனை ஏதுமின்றி, நேரடியாக பாதாள சிறையில்
போட்டுவிட்டார்கள்.

பாதாளசிறை என்பது கொடிய குற்றங்களுக்கான சிறை. நகரின் எல்லையில் ஒரு
மலையடிவாரத்தில் அது இருந்தது. உள்ளே உள்ளவர்களை வெளியில் இருக்கும்
யாரும் சென்று பார்க்க முடியாது. பூமிக்கடியில் உள்ள குகைகள் போன்ற அறைகளில்,
கைதிகள் தங்க வைக்கப்படுவார்கள். காலையில் ஒரு மணி நேரம் அனைவரும்
மலையடிவாரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நதிக்கரைக்குக் கூட்டிக் கொண்டு வரப்
படுவார்கள், காலைக்கடன்கள், சிரமபரிகாரங்கள் முடிந்தபின், உணவளிக்கப்பட்டு,
குகைக்குள் அனுப்பப்பட்டு விடுவார்கள். அதுபோல மாலை ஒருமுறையும் அவர்கள்
வெளிக்காற்றைச் சுவாசிக்கலாம். உள்ளே சென்றவன் வெளியே வந்ததாகச்
சரித்திரம் இல்லை. ஆட்சியோ இல்லை. மன்னனோ மாறினால் ஒரு வாய்ப்பு உண்டு.
அவ்வளவுதான்

உள்ளே சென்ற நமது வாத்தியார் நொந்து நூலாகி விட்டார். ஒவ்வொரு தினமும்,
இரண்டுமுறை குளித்து சந்தியாவந்தனம் செய்து சூரிய நமஸ்காரம், பூஜை எல்லாம்
செய்பவர் ஒன்றையும் செய்யும் மனமில்லா நிலைக்குத் தள்ளப்பட்டார். குகையில்
கிரிமினல்களோடு, கிரிமினல்களாகப் படுத்துக்கொள்ள வேண்டுமென்றால் எப்படி
இருக்கும். அதிகமாக சொல்ல விரும்பவில்லை. நீங்களே கற்பனை செய்து
கொள்ளுங்கள்.

இப்படியே நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தன. 90 நாட்கள் ஆயிற்று.

தொன்னூற்றொன்றாம் நாள் அதிகாலை, எழுந்து அமர்ந்ததும், வாத்தியாரின் கண்களில்
எதிரே தெரிந்த நபர், பலத்த ஒளி, மற்றும் ஒலியுடன் தன்னை வெளிப்படுத்திக்
கொண்டதோடு, பேசவும் துவங்கினார்.

அவர் யாரென்று சொல்லவும் வேண்டுமா? நமது சனீஸ்வரன்தான் அவர்!

“குருவே, என்ன மிகவும் நொந்து போய்விட்டீர்களா?” என்று சனீஸ்வரன் கேட்கவும்,
குருவின் கண்கள் பேசத்திரானியின்றி, கலங்கியிருந்தன!

“கவலைப்படாதீர்கள், எல்லாம் இன்னும் இரண்டு நாழிகை நேரத்திற்குள் சரியாகிவிடும்.
அன்று நடந்த விவாதத்தில், உங்கள் நாக்கில் நுழைந்து, மன்னனை முட்டாள் என்று
அடியேன்தான் உங்களைச் சொல்ல வைத்தேன். இந்தத் துயரான நிலையும் அதனால்
உங்களுக்கு ஏற்பட்டது. அஷ்டமச் சனியாக 30 மாதங்கள் உங்களைப் பிடித்துக்
துயரங்களைக் கொடுக்க வேண்டிய நான். உங்களுக்களித்த வாக்கின்படி அதை
மூன்று மதங்களுக்குச் சுருக்கியதால்தான் இந்தப் பாதாளச் சிறை வாழ்வு. இப்போது
மன்னரின் முன் தோன்றி நான் அதைச் சரி பண்ணிவிடுகிறேன். பழையபடி உங்கள்
வாழ்க்கை முன்போல கெளரவத்தோடும் புகழோடும் இருக்கும்.மீண்டும் வேறு ஒரு
சந்தர்ப்பத்தில் உங்களைச் சந்திக்கிறேன்” என்று சொல்லிய சனீஸ்வரன் ஆசிரியரின்
கைகளைப் பிடித்துக் குலுக்கி வணங்கிவிட்டு மறைந்தார்.

அந்த ஷணமே மன்னரின் எதிரில் தோன்றி, நடந்ததை மன்னனுக்கு விளக்கி,
ஆசிரியருக்கு விடுதலை வாங்கிக் கொடுத்ததோடு, மன்னருக்குக் காட்சி கொடுத்
தமையால் ஆசிரியரின் செல்வாக்கு அரண்மனையில் மேலும் ஒருபடி உயரவும் வழி
வகுத்துவிட்டுப் போனார் சனீஸ்வரன்
---------------------------------------------------------------------------------------------------
கதை அவ்வளவுதான்.

இந்தக் கதையின் நீதிக்கு வருவோம். அதைச் சொல்வதற்குத்தானே
இத்தனை Build Up கொடுத்து, Suspense கொடுத்துக் கதையை உங்களுக்குச்
சொல்லியிருக்கிறேன்,

நமக்கு நல்ல நேரம் நடக்கிறது என்றால் நமது சொல், செயல் என்று எல்லாமே நல்லதாக
இருக்கும். நமக்குக் கெட்ட நேரம் நடக்கிறது என்றால், நமது சொல், செயல்
எல்லாமே கெட்டதாக, நமக்குத் தீமை பயப்பதாக இருக்கும்.அது தவிர்க்க முடியாதது.

சரி, அதிலிருந்து விடுபட முடியுமா?

விடுபட முடியாது. அதுதான் விதியின் வலிமை. விதி என்பது விதிக்கப்பட்டதாகும்.
அதன் விளைவுகளைத் தங்குவதற்கு வேண்டிய சக்தியை இறைவழிபாட்டின் மூலம்
நாம் பெறலாம். The Almighty will give you standing power!

அதற்கும் ஒரு நீண்ட கதை இருக்கிறது. வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அதைச்
சொல்கிறேன்.
--------------------------------------------------------------------------------------------------
வள்ளுவப் பெருந்தகையார் தன்னுடைய குறுகத்தெரித்த குறளில் கூறியுள்ள
வற்றில் இது சம்பந்தப்பட்ட இரண்டு குறள்களை உங்கள் பார்வைக்காகக்
கீழே கொடுத்துள்ளேன்

ஊழ் = விதி = விதிக்கப்பட்டது = Destiny

1.
“பேதைப் படுக்கும் இழவுஊழ் அறிவுஅகற்றும்
ஆகல்ஊழ் உற்றக்கடை”
----------குறள் எண் 372 - ஊழ்' அதிகாரம்

பொருள் போவதற்குக் காரணமான தீய ஊழ் வந்துற்ற போது
(ஒருவன் எவ்வளவு பேரறிஞனாகயிருந்தாலும் அவனை அது)
பேதையாக்கும். இதற்கு மாறாக பொருள் சேர்வதற்குக் காரணமான
நல்ல ஊழ் வந்துற்ற போது (ஒருவன் எவ்வளவு பேதையாகயிருந்தாலும்
அவனை அது) பேரறிஞனாக்கும்.

2.
”நல்லவை எல்லாஅம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு”
----------குறள் எண் 375 - ஊழ்' அதிகாரம்

செல்வத்தைத் தேடுவதற்கு, தீயஊழ் வந்துற்ற போது நல்லவை எல்லாம்
தீயவையாகிப் பயன்படாது போகும். நல்ல ஊழ் வந்துற்ற போது தீயவை
எல்லாம் நல்லவையகிப் பயன்படும்
-----------------------------------------------------------------------------------------
தொடர்ந்து ஐந்து இதழ்களாக வாசித்து மகிழ்ந்தும், பின்னூட்டம் இட்டும்
பாராட்டிய அத்தனை நல் உள்ளங்களுக்கும் சனீஸ்வரனின் அருள்
கிடைக்கட்டும்

(நிறைவுற்றது)

அன்புடன்
சுப்பையா வாத்தியார்

25.4.08

சனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம் - பகுதி 5

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜோதிடக் கட்டுரைகள் - பகுதி 1

உட்தலைப்பு: சனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம் - பகுதி 5

முந்தைய பகுதிகள் இங்கே!

-----------------------------------------------------------------------------------------

“குருவே, உங்களுக்கு நான் தட்சணை (காணிக்கை) கொடுக்க விரும்புகிறேன்.
என்ன வேண்டும் கேளுங்கள்” என்று சனீஸ்வரன் சொல்லவும், “எனக்கு ஒன்றும்
வேண்டாம். பொருட்கள் மீது எனக்கு ஆசை இல்லை” என்று தலைமை ஆசிரியர்
தீர்க்கமாகப் பதில் சொல்ல, “பொருட்கள் வேண்டாம். வரமாக ஏதாவது கேளுங்கள்;
தருகிறேன்!” என்றார் சனீஸ்வரன்.

நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம். நீ தானே ஆயுள்காரகன் அதனால்
ஆயிரம் ஆண்டுகள் நான் வாழ்வதற்கு அருள் செய்துவிட்டுப்போ என்று சொல்லி
யிருப்போம்.

சற்று யோசித்த ஆசிரியர், அருமையான வரம் ஒன்றைக் கேட்டார்.

தலைமை ஆசிரியர் கேட்ட வரம் இதுதான்:

“என் ஜாதப்படி எனக்கு ஆயுள் 83 ஆண்டுகள். எனக்கு இப்போது 42 வயது ஆகிறது.
என் வாலிப வயதில் ஏழரை ஆண்டுச் சனியாக - அதுவும் மங்கு சனியாக நீ வந்து
என்னைப் பிடித்து ஆட்டியதால், எனக்குத் திருமண வாழ்க்கையே இல்லாமல் போய்
விட்டது. ஆனால் எனக்கு ஒரு நன்மையும் கிடைத்தது. வருடம் 100 செல்வங்களுக்கு
உயர் கல்வி போதிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் இனி வரும் காலத்தில்
எந்தவிதத் துயரமும் இன்றி இருக்க விரும்புகிறேன். ஆதலால் வருங்காலத்தில்
எக்காரணம் கொண்டும் அல்லது எந்த நியதிப்படியும் நீ வந்து என்னைப் பிடிக்கவே
கூடாது. அதுதான் நான் விரும்பிக்கேட்கும் வரம். அதைத் தந்தருள்க சனீஸ்வரரே!”
-------------------------------------------------
சனி அதை வழங்கினாரா? இல்லையா?

ஆசிரியரின் வாழ்வில் நடந்தது என்ன?

அதைத்தான் இந்தப் பதிவில் நாம் பார்க்கப்போகிறோம்.

சிலர் நினைக்கலாம் என்னடா, தலைமை சுயநலமாகத் தனக்குப் பயன்படும்படியாக
வரம் ஒன்றைக் கேட்டிருக்கிறாரே என்று!

தலைமை அசிரியர் தன்னைக் கல்விக்காக அர்ப்பணித்துக் கொண்டவர் என்று முன்பே
சொல்லியிருக்கிறேன். தன்னை ஒன்றிற்காக அர்ப்பணைத்துக் கொண்டவரிடம்
எப்படி சுயநலம் இருக்கும்?

தன்னுடைய கல்விப்பணிக்கு எந்தவிதக் கெடுதலும் வந்துவிடக்கூடது என்ற பொது
நோக்கிலேதான் அந்த வரத்தை அவர் கேட்டார்.

சற்று புன்னகைத்த சனீஸ்வரன், மெல்லிய குரலில் சொன்னார்,”குருவே! தர்மத்தைப்
போதிக்கும் நீங்களா இப்படிக் கேட்பது? உரிய நேரத்தில் ஒவ்வொருவரையும் பிடித்து,
அவர்களை பலவித சோதனைக்கு உள்ளாக்கி அவர்களுடைய கர்மவினைகளை
நிறைவேற்ற வைப்பதும், அவர்களை நல்வழிப் படுத்துவதும் எனது தர்மம். அதை நான்
எப்படி உங்கள் ஒருவருக்காக விட்டுக் கொடுப்பது? அது தர்மத்தை மீறும் செயலல்லவா?
ஒவ்வொரு சுற்றிலும் - அதாவது ஒவ்வொரு முப்பது ஆண்டுகளிலும், நான் ஏழரைச்
சனியாக (12ம் வீடு, 1ம் வீடு, 2ம் வீடு) ஏழரை ஆண்டுகளும், அஷ்டமத்துச் சனியாக
(8ம் வீடு) இரண்டரை ஆண்டுகளும், கேந்திரச் சனியாக (4ம் வீடு) இரண்டரை
ஆண்டுகளும்,அர்த்தாஷ்ட சனியாக (7ம் வீடு) இரண்டரை ஆண்டுகளும், ஆக மொத்தம்
15 ஆண்டுகள் ஒருவரைப் பிடிப்பது வழக்கம். அதேபோல சுற்றில் மீதம் உள்ள 15 ஆண்டுகள்
அவரை விட்டு விலகி இருப்பதும் வழக்கம். அது என்னுடைய தலையாய பணி. அதை
நான் யாருக்காகவும் செய்யாமல் இருக்க முடியாது. ஆனால் நீங்கள் கெட்டுக் கொண்ட
படியால் உங்களுக்கு என்னால் ஒரு சலுகை தர முடியும். ஒவ்வொரு இரண்டரை ஆண்டு
கால கட்டத்தில் மொத்தம் 30 மாதங்களும் உங்களைப் பிடிக்காமல் வெறும் மூன்று
மாதங்கள் மட்டும் உங்களைப் பிடிக்கிறேன். ஆனால் அந்த 30 மாதங்களும் நீங்கள்
பட வேண்டிய வேதனைகளை, துன்பங்களை ஒட்டு மொத்தமாக அந்த மூன்று மாதங்களில்
அனுபவித்தாக வேண்டும். அதற்குச் சம்மதமா?” என்றார்

அதாவது தினம் 3 ஸ்பூன்கள் கசப்பு மருந்தை, 3 spoons x 30 days x 30 months = 2,700 spoons
குடிக்க வேண்டிய மருந்தைத் தினம் பத்து மடங்காக - அதாவது 30 spoons மருந்தாக
3 மாதங்களில் நீங்கள் குடிக்க வேண்டியதிருக்கும், அதற்குரிய உபாதைகளும் வலிகளும்
இருக்கும் - சம்மதமா? என்று கேட்டார்

ஆசிரியரும் சட்டென்று யோசித்து விட்டுச் சலுகைப்படியே செய்யுங்கள் என்று சொல்லிவிட்டார்.

“அப்படியே ஆகட்டும், வருகிறேன்!” என்று சொல்லிய சனீஸ்வரர், அங்கே ஒரு பெரிய ஒளியை
உண்டாக்கிவிட்டு ஷணத்திலே மறைந்து விட்டார்.
----------------------------------------------------------------------------------------------------
இரண்டே நாட்களில், ஆசிரியரின் புகழ் நாடு முழுவதும் பரவி விட்டது.சும்மா பரவவில்லை.
கச்சா முச்சா என்று பரவி விட்டது. எல்லா இடங்களிலும் அவரைப் பற்றிய பேச்சாகவே
இருந்தது.

நாளுக்கு நாள் வண்டி கட்டிக்கொண்டு அந்தப் பள்ளியைப் பார்க்கவரும் கூட்டம்
அதிகரித்துக் கொண்டே போனது. நித்தமும் திருவிழாவாகிவிட்டது.

அத்தனை பேர்களையும் சமாளித்து அனுப்புவது பெரும்பாடாக இருந்தது. வந்தவர்கள்
வாத்தியாரை ஒருமுறையாவது பார்த்துவிட்டுப்போக விரும்பினார்கள்.

பள்ளி வாயிலேயே ஒரு மேடை போட்டு, பகலில் மணிக்கு ஒரு முறை காட்சி கொடுத்து,
இரண்டுவார்த்தை பேசி, வாத்தியார் வந்தவர்களைத் திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தார்.

அந்த நாட்டை அப்போது ஆண்டு கொண்டிருந்த மன்னரின் காதிலும் செய்தி விழுந்தது.
வியப்படைந்த அவர் ஆசிரியரைப் பார்க்க விரும்பினார். அதோடு சனீஸ்வரனே வந்து
படித்த அந்தப் பள்ளியையும் பார்க்க விரும்பினார். உடனே தனது பரிவாரங்களுடன்
புறப்பட்டுப் பள்ளிக்கு வந்து சேர்ந்து விட்டார்.

மற்றவர்களை அனுபியதைப்போல, வாசலில் இருந்த மேடையிலேயே இரண்டு வார்த்தைகள்
பேசி மன்னரைத் திருப்பி அனுப்பிவிட முடியுமா என்ன?

மன்னருக்கு, பள்ளி வளாகத்தில் தடபுடலாக வரவேற்பு அளிக்கப்பெற்றது. பள்ளியைச்
சுற்றிப் பார்த்த மன்னர் அதன் ரம்மியமான சூழலைப் பார்த்து மனம் மகிழ்ந்து விட்டார்.
அதோடு பள்ளி நூலகத்தில் இருந்த ஏராளமான ஏட்டுச் சுவடிகளையும் பார்த்துத் திகைத்து
விட்டார். தலைமை ஆசிரியரின் கம்பீரமான தோற்றம்தான் எல்லாவற்றையும் விட
அவரை அதிகமாக அசத்தியது.

ஒருமணி நேரத்திற்கும் அதிகமாக அவருடன் பேசிக்கொண்டிருந்த மன்னர்,”நீங்கள்
பணி செய்ய வேண்டிய இடம் இதுவல்ல - என்னுடன் வாருங்கள் - இன்று முதல் இந்த நாட்டின்
குரு நீங்கள்தான். உங்கள் சேவை இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் பயன்பட வேண்டும்”
என்று கோரிக்கை வைத்தார்.

வேறு யாராவது என்றால் வெறும் உத்தரவிலேயே அது முடிந்துவிடும். ஆனால் தானே
தேடிவந்ததால், உத்தரவு இன்றி கோரிக்கையாக அதை மன்னர் பெருமான் முன்வைத்தார்.

ஆனால் நம் தலைமை ஆசிரியர் அதற்கு புன்முறுவலுடன் மறுத்து விட்டார். தனக்கு அந்த
ஆசிரியப் பணியே போதும் என்றும், வேறு எதுவும் தனக்கு ஆத்ம திருப்தி அளிக்காது
என்றும் கூறிவிட்டார்.

எதுவும் மறுக்கப்படும் போது அல்லது கிடைக்காத போது, வேகமும், ஆர்வமும் இரண்டு
மடங்கு வந்து விடுமல்லவா? அதுபோல மன்னருக்கும் வந்து விட்டது.

“நீங்கள் மதகுரு மட்டுமல்ல! கல்வி மந்திரியும் நீங்கள்தான். இதுபோல நூறு பள்ளிக்
கூடங்களை நாடு முழுவதும் ஏற்படுத்துங்கள் அதற்கு வேண்டிய நிதி உதவிகளை நான்
செய்கிறேன். வேண்டிய மற்ற வசதிகளையும் செய்து தருகிறேன். பண்டிதர்களைப் பிடித்து,
அவர்களுக்குக் குறுகிய காலத்தில் பயிற்சியும் கொடுத்து பள்ளிகளை முன் நின்று
நீங்களே நடத்துங்கள்” என்றெல்லாம் சொல்லி ஒரு வழியாக ஆசிரியரை ஒப்புக்கொள்ள
வைத்து விட்டார்.

ஆசிரியரும், மன்னருடன் புறப்பட்டுச் சென்றார். தலைநகரில் அவருக்கு எல்லா
மரியாதைகளும் கிடைத்தது. அரச சபையில் மன்னருக்கு அருகில் அமரும் வாய்ப்பும்
கிடைத்தது. அவர் தங்குவதற்கு பெரிய தோட்டத்துடன் கூடிய குட்டி அரண்மனை
ஒன்றும் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது.

நூறு இடங்களைத் தெரிவு செய்து அதே போன்று உயர் கல்வி போதிக்கும்
பாடசாலைகளும் துவங்கப்பெற்றன. அரசர் நம் ஆசிரியரைக் கலந்து ஆலோசிக்காமல்
எதுவும் செய்வதில்லை.

இப்படியே காலச் சக்கரத்தின் சுழற்சியில் இரண்டு ஆண்டுகள் போனதே தெரியவில்லை.

எல்லாம் வழக்கப்படியே நடந்தால் வாழ்க்கையில் சுவாரசியம் ஏது? கதையில்தான்
சுவாரசியம் ஏது?

ஒருநாள் அரண்மனையில் நடந்த அதிரடி நிகழ்வில், ஆசிரியர், மன்னரின் ஆதீத
கோபத்திற்கு ஆளாக, கோட்டையில் இருந்த நமது ஆசிரியர், பாதாள சிறைக்குப்
போகும்படி ஆகிவிட்டது.

என்ன நடந்தது அன்று?

ஆசிரியருக்குக் கைகொடுக்க, அவருடைய சீடன் சனீஸ்வரன் வந்தானா?

அடுத்த பதிவில் பார்ப்போம்!

(தொடரும்)

---------------------------------------------------------------------

12.4.08

உண்மைத்தமிழர் எங்கிருந்தாலும் வகுப்பிற்கு வரவும்!

உண்மைத்தமிழர் எங்கிருந்தாலும் வகுப்பிற்கு வரவும்!

முன் பதிவின் தொடர்ச்சிப் பதிவு இது: அதன் சுட்டி இங்கே!

அந்தப் பதிவைப் படித்துவிட்டு, இதைப் படிக்கவும்!
--------------------------------------------------------------------------
/////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
வாத்தியாரே.. குரு கேட்டது "உங்களைப் போனற ஒழுக்கமான, அடக்கமான
சீடர்களை நீங்கள் பிடிக்கவே கூடாது" என்ற வரமா..?
ஏனெனில் என் கதையில் இது அப்படியே உல்டாவாகிவிட்டது. அதுதான்
அழுத்தமாகச் சொல்கிறேன்.
எதுவாக இருந்தாலும் இன்றைக்கே சொல்லிவிட்டுப் போங்கள்..
21-வரையெல்லாம் சஸ்பென்ஸ் தாங்காது.. சொல்லிட்டேன்../////

உங்களைப் போலவே பலர், சார், 21ம் தேதிவரையெல்லாம் சஸ்பென்ஸ் தாங்காது,
விடையைச் சொல்லிவிட்டுபோங்கள் என்கிறார்கள்.

சரி நானும் பல (100க் கணக்கில்) சஸ்பென்ஸ் கதைளைப் படித்திருப்பதால் சஸ்பென்ஸில்
பிடிபட்டுவிடும் அவஸ்தை தெரியும் ஆகவே, விடையை மட்டும் சொல்லி விட்டுப் போகிறேன்.
மற்றது எதையும் கேட்காதீர்கள்!

முழுக்கதையையும் இப்போது சொல்ல முடியாது. மிகவும் நீளமானது.
மேலும், இப்போது தட்டச்ச நேரமில்லை!

தொடரைத் தொடர்வது எப்படி?
அது இன்னும் பத்துப் பக்கங்களுக்கு (A4 Size Paperல்) வரும்

ஆகவே இப்போது சஸ்பென்சை மட்டும் உடைத்துவிட்டுப் போகிறேன்.
மற்றவை நான் திரும்பி வந்த பிறகு.
-----------------------------------------------
விடை:

தலைமை ஆசிரியர் கேட்ட வரம் இதுதான்:

“என் ஜாதப்படி எனக்கு ஆயுள் 83 ஆண்டுகள். எனக்கு இப்போது 42 வயது
ஆகிறது. என் வாலிப வயதில் ஏழரை ஆண்டுச் சனியாக - அதுவும் மங்கு சனியாக
நீ வந்து என்னைப் பிடித்து ஆட்டியதால், எனக்குத் திருமண வாழ்க்கையே
இல்லாமல் போய்விட்டது. ஆனால் எனக்கு ஒரு நன்மையும் கிடைத்தது.
வருடம் 100 செல்வங்களுக்கு உயர் கல்வி போதிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
ஆனால் இனி வரும் காலத்தில் எந்தவிதத் துயரமும் இன்றி இருக்க விரும்புகிறேன்.
ஆதலால் வருங்காலத்தில் எக்காரணம் கொண்டும் அல்லது எந்த நியதிப்படியும்
நீ வந்து என்னைப் பிடிக்கவே கூடாது. அதுதான் நான் விரும்பிக்கேட்கும் வரம்.
அதைத் தந்தருள்க சனீஸ்வரரே!”
-------------------------------------------------
சனி அதை வழங்கினாரா?இல்லையா?

ஆசிரியரின் வாழ்வில் நடந்தது என்ன?

இதுபோன்று இன்னும் சில சுவையான விஷயங்கள் உள்ளன!

அதையெல்லாம் இப்போது சுருக்காகச் சொல்லி ஒரு நல்ல நீதிக் கதையை நான்
சாகடிக்க விரும்பவில்லை உண்மைத்தமிழரே!

ஆகவே பொறுத்திருங்கள்!

அன்புடன்
வாத்தியார்

சனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம் - பகுதி 4

========================================================

ஜோதிடக் கட்டுரைகள் - பகுதி 1

உட்தலைப்பு: சனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம் - பகுதி 4

முந்தைய பகுதிகள் இங்கே!
-------------------------------------------------------------------------
கதையில் இரண்டு க்ளைமாக்ஸ் காட்சிகள்.
இப்போது முதல் க்ளைமாக்ஸ் காட்சி!
---------------------------------------------------------------------------
சனீஸ்வரன் எல்லாப் பாடங்களையும் கற்றுத் தேர்ந்தார்

ஆர்வமும், முயற்சியும், தன்முனைப்பும், ஈடுபாடும் இருந்தால் எதுதான் வராது?

அதுவும் கற்க வந்தது சாதாரண மனிதப் பிறவியா? அல்ல!
வந்தது சனி பகவான். ஆகவே அவர் ஜஸ்ட் லைக் தட் என்னும்படியாக
அனைத்திலும் தேறினார். எடுத்த மதிப்பெண்கள் அனைத்துப் பேப்பர்களிலும்
100/100

ஒரு வெள்ளிக்கிழமை காலை நேரத்தில், தலைமை ஆசிரியர், சனீஸ்வரனை
அழைத்து, ”இன்றுடன் உன்னுடைய பள்ளி வாழ்க்கை முடிகிறது. வேதங்களில்
நீ என் அளவிற்கு விஷய ஞானமுள்ளவனாக ஆகிவிட்டாய்.

ஒருவன் தான் கற்றுக் கொண்டதை மற்றவர்களுக்கும் அறியத் தர வேண்டும்
ஆகவே, இங்கே கற்றுக் கொண்டவைகளை, நேரம் கிடைக்கும்போது அல்லது
நேரம் வரும்போது, மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுப்பாயாக!

நீ நாளை அதிகாலையில் இங்கிருந்து புறப்பட்டுச் செல்லலாம்” என்று சொன்னார்

அத்துடன், அந்த அற்புத மாணவனைப் பாராட்டும் விதமாக, ஒரு Fairwell
பார்ட்டிக்கும் ஏற்பாடு செய்திருந்தார். குருகுலத்தில் இருந்த அத்தனை பேரும்
அதில் கலந்து கொண்டு, ‘அரவிந்தசாமி' வடிவத்தில் இருந்த சனி பகவானைப்
பாராட்டி மகிழ்ந்தார்கள்.
----------------------------------------------------------------------------------
சனிக்கிழமை அதிகாலை!

விடைபெறும் நேரம்!

சனி பகவான், தான் குறிபெடுத்திருந்த ஓலைச் சுவடிகளையெல்லாம்,
பள்ளி நூலகத்திற்கே பரிசாகக் கொடுத்து விட்டதால், ஒன்றையும் எடுத்துக்
கொள்ளவில்லை.

கல்லில் பதிந்த எழுத்துக்களாக வேதங்கள் எல்லாம் அவர் மனதில்
பதிந்துவிட்ட பிறகு ஓலைச் சுவடிகள் எதற்கு?

தலைமை ஆசிரியரின் அறை இருந்த அரங்கத்தின் வாயிலில் அனைவரும்
கூடி நிற்க, தன் இருகரங்களையும் கூப்பி அனைவரிடமும் விடை பெற்றார்

அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது.

என்றும் இல்லாத வழக்கமாக, பெரிய வெள்ளித்தட்டு ஒன்றில் ஒரு செட்
வேட்டி, துண்டுடன், பழங்கள், வெற்றிலை, பாக்கு, வைத்து, தலைமை
ஆசிரியர், ஆசீர்வதித்து, பரிசாகக் கொடுக்க, சனீஸ்வர பகவான், அவர்
காலில் விழுந்து வணங்கி, அதைப் பெற்றுக் கொண்டார்.

அப்போது அவருடைய கண்கள் கலங்கிவிட்டன!

எப்போதுமே, அவருடைய கண்களைப் பார்த்தே, அதில் தெரியும் தீட்சண்யமான
பார்வையைப் பார்த்தே, மயங்கிப் பழகி விட்ட தலைமை, அதையும் பார்த்தார்.

பார்த்துத் திடுக்கிட்டதோடு, கேட்கவும் செய்தார்

”என்ன தம்பி, பிரிவு உன்னைக் கலங்க வைக்கிறதா?”

“இல்லை அய்யா, இதுவரை, ஒரு உண்மையை நான் உங்களிடம் மறைத்து
விட்டேன். அதைச் சொல்லாமல் போக என் மனம் மறுக்கிறது. ஆகவே
அதைச் சொல்லிவிட்டுச் செல்ல அனுமதி கொடுங்கள்”

“நானும் அதை எதிர் பார்த்தேன். முதலில் நீ சொல்லவந்ததைச் சொல்,
பிறகு நான், எதிர்பார்த்ததைச் சொல்கிறேன்” என்று தலைமை ஆசிரியர்
சொல்ல, சனீஸ்வரன் தொடர்ந்து பேசினார்.

“அய்யா, நான் அந்தணன் அல்ல!”

“அதை நான் அறிவேன்”

“நான் நாட்டார் இனத்துப் பையனும் அல்ல!”

“அதையும் நான் அறிவேன்”

“எப்படி அறீந்தீர்கள் அய்யா?” என்று சனீஸ்வரன் கேட்க, தலைமை ஆசிரியர்
சொன்ன பதிலைப் பதிவின் நீளம் கருதி சுருக்கமாகச் சொல்கிறேன்.

சனீஸ்வரன் அங்கே வந்து சேர்ந்தபோது அவருக்கு எந்த சந்தேகமும் இல்லை!
ஆனால் உதவி ஆசிரியர்களில் ஒருவர், சனீஸ்வரனைப் 'Born Genius' என்று
வர்ணித்துப் பாடம் நடுத்துவது வேஸ்ட் என்று புகார் செய்தபோதுதான் அவருக்குச்
சந்தேகம் வந்தது.

உடனே பரபரப்பாகி, அங்கே வரும்போது சனீஸ்வரன் கொண்டு வந்து கொடுத்திருந்த
ஆரம்பப் பள்ளிக்கூடச் சான்றை எடுத்துப் பார்த்தார். அது பனை ஓலையில்
எழுதப்பெற்றிருந்த சான்றிதழ்தான் என்றாலும், பளபளத்தது. அதைத்தன் விரல்களால்
மடக்கிப் பார்த்தார். மடக்க வரவில்லை. முனையில் சற்று ஒடித்துப் பார்த்தார் ஒடிக்கவும்
வரவில்லை. கத்தியை எடுத்துக் கீறிப் பார்த்தார். கீறல்கள் பதியவும் இல்லை.

அப்போதுதான் ஒரு முடிவிற்கு வந்தார். அது சாதாரணமாகப் பூமியில் விளையும்
பனை மரத்து ஓலையல்ல. சக்திவாய்ந்த வேறு இடத்தில், நமது கண்ணிற்கிற்குப்
புலப்படாத இடத்தில் விளைந்த ஓலையாக இருக்கக்கூடும், அதோடு இதைக்
கொண்டுவந்த மாணவனும் அதீத சக்தி வாய்ந்தவனாகவும் இருக்க வேண்டும் என்றும்
முடிவு கட்டினார். அவன் சொன்னாலன்றித் தன்னால் ஒன்றையும் கண்டுபிடிக்க
முடியாது என்றும் முடிவு செய்தார். அதோடு பொறுமையாக இருப்போம், போகும்
போது எப்படியும் தன்னைப் பற்றி அவன் சொல்லிவிட்டுத்தான் போவான் என்ற
நம்பிக்கையும் கொண்டிருந்தார். இதுதான் அவர் அறிந்திருந்ததின் சுருக்கம்

இப்போது ஆசிரியரின் முறை! அவர் கேட்டார்.

“தம்பி, நீ யார் என்பதைத் தெரிந்து கொள்ள நானும் ஆவலாக இருக்கிறேன்.
ஆகவே சொல்!” என்றார்

உடனே சனி பகவான் சொன்னார்,”அய்யா, நான் யார் என்பதைச் சொன்னால்
நீங்கள் அதிர்ச்சியடைக்கூடும். ஆகவே அதிர்ச்சி ஏற்படாமல் பார்த்துக்
கொள்ளுங்கள்.”

”நான் அதிர்ச்சியடைய மாட்டேன். எதுவாக இருந்தாலும், நீ தைரியமாகச் சொல்!”

உடனே சனீஸ்வரன் சொன்னார்.”அய்யா நான்தான் சனீஸ்வரன்!”

தலைமை, உடனே புன்னகைத்துவிட்டுச் சொன்னார்,”இதற்காவது நீ உண்மையான
சான்றைக் கொடுப்பாயா?”

அடுத்த நொடியில், சனிஸ்வரன் தன் உண்மையான உருவத்தைப் பத்து மடங்கு
பெரிதாக்கி, தன் காக வாகனத்துடன் அங்கே எழுந்தருளி, தலைமை ஆசிரியர்

உட்பட அனைவருக்கும் அற்புதமாகக் காட்சி கொடுத்தார்.


அத்தனை பேரும் பரவசத்தில் மெய்மறந்து போனார்கள்.

அதற்குப் பிறகு நடந்தது என்ன?

அது இதுவரை நடந்தது எல்லாவற்றையும் விடச் சுவையானது!

”நான் வணங்கும் சர்வேஸ்வரா! என்ன அற்புதம் இது? கர்மகாரகன் சனீஸ்வரனையே
என்னிடம் அனுப்பிப் பாடம் படிக்கவைத்து, எனக்கு பெருமை சேர்த்தது உன்
திருவிளையாடலா? அல்லது எதிரே நிற்கும் சனீஷ்வர பகவானின் திருவிளையாடலா?
அது எப்படியிருந்தாலும் பரவாயில்லை! உன் காட்சியாவது பல மெய்யடியார்களுக்குக்
கிடைத்திருக்கிறது! ஆனால் சனீஷ்வரனின் காட்சி யாருக்குக் கிடைத்திருக்கிறது?
நான் மிகவும் பாக்கியம் செய்தவன். அந்தப் பாக்கியத்தின் பலனையெல்லாம் இதோ
இங்கே காட்சி கொடுக்கும் சனீஷ்வரனுக்கே சமர்ப்பிக்கிறேன்” என்று பலத்த
குரலில் பலரும் கேட்கச் சொல்லிய, தலைமை ஆசிரியர் சனீஷ்வரனின் காலில்
விழுந்து வணங்க எத்தனித்தார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் தன்னுடைய பள்ளிக்கூட ‘அரவிந்தசாமி' உருவத்திற்கு
மாறிவிட்ட சனீஸ்வரன், ஆசிரியரைத் தடுத்து நிறுத்திவிட்டான்.

“அய்யா, இப்போது நீங்கள் என்னுடைய குரு. நான் உங்களுடைய சீடன். ஆகவே
நீங்கள் என் காலில் விழுந்து வணங்குவது முறையாகாது” என்று சொன்னான்.

தலைமை ஆசிரியர் மேலும் பரசவசமாகி, சீடனின் வார்த்தைகளில் தன்னை இழந்து
அப்படியே நம்முடைய அரவிந்தசாமியைக் கட்டி அனைத்துக் கொண்டார்.

ஆசிரியரின் உடம்பில் 10,000 watts மின்சரம் பாய்ந்தது போல் இருந்தது. அது
விஸ்வரூபக் காட்சிக்காக சனீஸ்வரன் தன்னுடைய Powerஐ Switch On செய்திருந்ததால்
ஏற்பட்டதாகும்.

அது இன்ப அதிர்வை மட்டுமே ஏற்படுத்தும். இப்போது அந்த அதிர்வால் ஆசிரியர்
மிகவும் மகிழ்ந்து போனார்.

அங்கே இருந்த சனீஷ்வரனின் தோழர்கள் அனைவரும், நடந்ததைப் பார்த்துப்
பிரமித்துப் போயிருந்தவர்கள், ஆசிரியரின் கணீர்க்குரலால், பிரமிப்பிலிருந்து
மீண்டதோடு, அனைவரும் கீழே விழுந்து நமது அரவிந்தசாமி சனீஷ்வரனை
வணங்கி மகிழ்ந்தார்கள்.

அந்த் நெகிழ்ச்சியான காட்சியில் இருந்து அனைவரையும் பழைய நிலைக்குக்
கொண்டுவரும் முகமாக சனீஸ்வரன் பேச ஆரம்பித்தார்.

“குருவே, உங்களுக்கு நான் தட்சணை (காணிக்கை) கொடுக்க விரும்புகிறேன்.
என்ன வேண்டும் கேளுங்கள்”

“எனக்கு ஒன்றும் வேண்டாம். பொருட்கள் மீது எனக்கு ஆசை இல்லை” என்று
தலைமை ஆசிரியர் தீர்க்கமாகச் சொன்னார்.

“பொருட்கள் வேண்டாம் என்றால் . வரமாக ஏதாவது கேளுங்கள்;தருகிறேன்!”
என்றார் சனீஷ்வரன்.

நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம். நீ தானே ஆயுள்காரகன் அதனால்
ஆயிரம் ஆண்டுகள் நான் வாழ்வதற்கு அருள் செய்துவிட்டுப்போ என்று
சொல்லியிருப்போம்.

சற்று யோசித்த ஆசிரியர், அருமையான வரம் ஒன்றைக் கேட்டார்.

அது என்ன வரம்? அவருக்கு அது கிடைத்ததா? கிடைத்த பிறகு என்ன நடந்தது?
என்பதெல்லாம் மீதிக் கதை! இதைப்போன்றே அதுவும் சுவாரசியமான கதை!
அதிலும் ஒரு சூப்பர் க்ளைமாக்ஸ் இருக்கிறது.

அவற்றை அடுத்த பதிவில் பார்ப்போம்!

(தொடரும்)

11.4.08

சனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம் - பகுதி 3


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஜோதிடக் கட்டுரைகள் - பகுதி 1

உட்தலைப்பு: சனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம் - பகுதி 3

முந்தைய பகுதிகள் இங்கே!

1. பகுதி 1

2. பகுதி 2

அவற்றைப் படித்துவிட்டு வாருங்கள் - இல்லையென்றால்
இந்தப் பகுதி சத்தியமாகப் புரியாது! மற்றும் சுவைக்காது!
-----------------------------------------------------------------------
'நெகிழ்ந்து போன தலைமை ஆசிரியர், வந்திருப்பது யாரென்று தெரியாமலேயே,
அனுமதிச் சீட்டை வழங்கினார்' என்ற சென்ற பதிவின் கடைசி வரிகளைப் படித்து
விட்டு நம் வலையுலக 40 பக்க நோட்டுப் பதிவர் சற்றுக் கன்ஃபியூஸாகி விட்டார்
----------------------------------------------------------------------------------------------
(அவருடைய ஒவ்வொரு பதிவையும் - 40 பக்க நோட்டுப் புத்தகத்தில் நுணுக்கி
நுணுக்கி 1 Page x 32 lines x 40 pages = Total Lines 1,280 எழுதிப் பிறகு அதை
மின்னல் வேகத்தில் தட்டச்சு செய்து இடுகையைப் பதிவிடும் அற்புதமான பதிவர்
அவர்.

ஒவ்வொரு பதிவும் Mary Brown Chain Shoppe யின் Stuffed Burger மாதிரி
சுவையாக இருக்கும் படிப்பவர்களுக்கு மட்டுமே அது தெரியும்.

அவர் எழுதும் சினிமா ரிவியூ'வெல்லாம் படத்தை நேரில் பார்ப்பதைவிட
அற்புதமாகக் கண்முன் வந்து நிற்கும். அந்த ஆங்கிலப் படங்களின் இயக்குனர்கள்
எல்லால் இவருடைய ரிவ்யூக்களைப் படித்தால், உடனே தாங்கள் இருக்கும்
நாட்டில் இருந்து அடுத்த ப்ளைட்டைப் பிடித்து இங்கே வந்து இவரைக் கட்டித்
தழுவி தங்கள் பாராட்டைத் தெரிவித்து விட்டுதான் அடுத்த வேலையைப்
பார்ப்பார்கள்.

அப்படியொரு திறமைசாலி. அடுத்தவர்களைப் பாராட்டும் நல்ல உள்ளம்
படைத்தவர் அவர். அவருக்கு நம் வலையுலகக் கண்மணிகள் வைத்திருக்கும்
பெயர்தான் அந்தப் பெயர் - எதற்காக வைத்தார்கள் என்று தெரியவில்லை?

எனக்கும் அப்படி எழுத ஆசை. அவரிடம் பயிற்சி எடுத்துக் கொண்டால்
மட்டுமே அது சாத்தியப்படும். - அதற்கு அவர் சம்மதிக்கவும் வேண்டுமே?
விளக்கம் போதுமா?)
-------------------------------------------------------------------------------------------------------------------
//நெகிழ்ந்து போன தலைமை ஆசிரியர், வந்திருப்பது யாரென்று தெரியாமலேயே,
அனுமதிச் சீட்டை வழங்கினார்.// இங்கனதான் 'சனி' அவரைப் பிடிச்சிருப்பான்னு
நினைக்கிறேன்..கரீக்ட்டா வாத்தியாரே..? என்று அவர் கேட்டிருந்தார்

அதற்கு நான் உடனே பதில் சொல்லி விட்டேன்.

“கரீக்ட் இல்லை தமிழரே!நீங்கள் பதிவை மறுபடியும் ஒரு தடவை படிப்பது நல்லது!
சனி படிக்க வந்தாரா? பிடிக்க வந்தாரா? பிடிக்க வேண்டுமென்றால் அவர் அதை
தன் இடத்திலிருந்தே சும்மா just like that' பிடித்து விடுவாரே! இங்கே வந்தது
படிக்க அல்லவா?”

உங்களுக்கும் அதைத்தான் சொல்கிறேன்.

அவர் வந்தது படிக்க மட்டுமே! ஆகவே அதை மனதில் வைத்துக் கொண்டு மேலே
படிக்கும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்
---------------------------------------------------------------------------------------------------------------------
நினைத்ததைச் சாதித்துப் பள்ளியில் சீட் வாங்கிவிட்ட சனீஸ்வரனுக்கு அன்றையப்
பொழுது சாதாரணமாகக் கழிந்து விட்டது.

பள்ளி வளாகத்தில் உள்ள தங்கும் விடுதி, உணவு விடுதி, வகுப்புக்கள், நூலகம்,
மற்ற ஆசிரியர்களின் அறிமுகம் என்று பகல் பொழுது ஓடிவிட்டது. இரவில்
அங்கங்கே பெரிய தீப்பந்த வெளிச்சம் மட்டும்தான். எல்லோரும் எட்டு மணிக்கே
உறங்க ஆரம்பித்து விடுவார்கள்.

முதல் முறையாக சனி பகவானும் கயிற்றுக் கட்டிலில் படுத்து நன்றாக உறங்கி
விட்டார்.

அடுத்த நாள் முதல் சிரத்தையாக வகுப்புக்குச் சென்று படிக்க ஆரம்பித்தார்.
மூன்று வாரங்கள் வரை எல்லாம் சுமுகமாக இருந்தது.

அந்த மாத இறுதியில் நடந்த பரீட்சையில், சனி பகவான் ஒரு கலக்குக் கலக்கி
விட்டார். வகுப்பு ஆசிரியர் மிரண்டு போய்விட்டார். வாழ்க்கை நெறிமுறைகள்
பாட ஆசிரியர் கேட்டிருந்த கேள்விகளுக்கு படித்த பாடத்திலிருந்து சரியான
பதிலைக் கச்சிதமாக எழுதியதுடன், அதற்குப் பொருத்தமாக வேறு ஒரு விடை
விகிதம் ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு கூடுதல் விடையையும் எழுதி வைத்திருந்
தார். ஆசிரியர் நடத்தியிருந்த பாடப்படியான விடை சிறந்த விடைதான் என்றா
லும், சனீஸ்வரன் எழுதிய விடை டபுள் சிறப்பாக இருந்தது. அதைக்கண்ட
ஆசிரியர் வியந்து போய்விட்டார்.

அதுபோல அந்த மூன்று வாரகாலத்தில் அந்தப் பள்ளியின் சக மாணவர்கள்
பாதிப் பேர்களுக்குமேல் சனீஸ்வரனோடு நட்பாகிவிட்டார்கள்.

முதல் மூன்று நாட்கள், குருகுலத்தின் பின்புறம் ஓடிக்கொண்டிருந்த ஆற்றிற்கு
அவர்களுடன் குளிக்கச் சென்ற சனீஸ்வரன், குளித்ததோடு என்ன நடக்கிறது
என்று பார்த்துவிட்டு மட்டும் திரும்பினார்.

அங்கே சில வம்படி மாணவர்கள் தங்கள் கில்லாடித்தனத்தை நீச்சலில்
காண்பிப்பதுடன், பயந்த சுபாவம் உள்ள மாணவர்களிடம் சேட்டைகள்
செய்வதும் வழக்கம். எல்லாம் அந்த வயதிற்காக குறும்பு. அவ்வளவுதான்

ஆனால் நான்காம் நாள் குளிக்கச் சென்ற சனீஸ்வரன் அந்த அடாவடிகளை
எல்லாம் தண்ணீருக்குள்ளேயே வைத்துப் புரட்டி எடுத்து விட்டார்.

அவர்களுடைய சேட்டைகள் எல்லாம் அன்றே களையப்பட்டு, அனைவரிடமும்
சமத்துவம் நிலவ ஆரம்பித்தது. அதோடு சனீஸ்வரன், நீர் விளையாட்டு முதல்
மற்ற விளையாட்டுக்களில் உள்ள நுணுக்கங்களையும் அவ்வப்போது அனைவ
ருக்கும் சொல்லிக் கொடுத்தார். நாளும் பொழுதுமாக நட்பு வளர்ந்தது.

அதேபோல் இறைவழிபாடு பயிற்சி வகுப்புக்களிலும் சனீஸ்வரன் கலக்க
ஆரம்பித்து விட்டார். ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்த பாடல்களை அவர்கள்
சொல்லிய கனமே மனதில் வாங்கிப் பதிய வைத்ததோடு, கேட்கப்படும்
போது எழுந்து, தடுமாற்றம் இன்றி அசத்தலாகப் பாடியும் காட்டினார்

அதுவும் எப்படி? ஒரு திறமையான மிமிக்கிரி கலைஞர் போல, ஒரே பாட்டை
சிர்காழியைப்போன்ற குரலிலோ அல்லது யேசுதாஸ் போன்ற மெலடியான
குரலிலோ அல்லது உதித் நாராயணனின் எழரைக் கட்டைக் குரலிலோ
பாடிக்காட்டி அசத்தினார்.

பள்ளி முழுவதும் - ஒரே ஒருவரைத்தவிர - சனீஸ்வரனின் புகழ் பரவிவிட்டது.

அந்த ஒருவரான த்ரைவேதி எனப்படும் தலைமை ஆசிரியருக்கும் ஒருநாள்
நம்ம அரவிந்தசாமி சனீஸ்வரனின் புகழ் தெரிய வந்தது.

உதவி அசிரியர் ஒருவர் தலைமையைச் சந்தித்து, நடந்ததையெல்லாம் விவரித்து,
அந்தப் பையன் ஒரு பிறவி மேதை (Born Genius) என்று போட்டுக் கொடுக்க,
வேத பாடங்களை மட்டும், அதுவும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு
மட்டுமே நடத்திக் கொண்டிருந்த தலைமை ஆசிரியர், சனீஸ்வரனை அழைத்து
எதிரில் உட்கார வைத்து விசாரிக்க, சனீஸ்வரன், தன்னைப்பற்றிய சில விஷயங்
களை உடனே தெளிவு படுத்தினார்.

வாழ்க்கையின் தர்மங்களும், கர்மங்களும் தனக்கு அத்துபடி என்றும், அதோடு
இறைவழிபாட்டின் அத்தனை சாராம்சங்களும் தனக்கு நன்றாகத் தெரியும் என்றும்
தன் தந்தை அவற்றை முழுமையாகச் சொல்லிக் கொடுத்து வளர்த்தார் என்றும்,
தான் அங்கே வந்த நோக்கம் வேதங்களை மட்டுமே கற்றுக் கொள்ள என்றும்
சொல்லி முடித்தார்.

சனீஸ்வரனின் கண்களை உற்றுப் பார்த்துக் கொண்டே, அவை அனைத்தையும்
கேட்ட தலைமை அசிரியர், கிஞ்சித்தும் பொய் இல்லை என்பதை உணர்ந்து,
கேட்டார்.

“தம்பி, இங்கே சேர்ந்தபோது அதைச் சொல்லியிருக்கலாமே? ஏன் சொல்ல
வில்லை!”

“ஒரு பாடத்திற்காக மட்டும் என்னை எப்படிச் சேர்த்துக் கொள்வீர்கள்? அதனால்
தான் சொல்ல வில்லை. என்ன அறியாமல் என்னுடைய மேதாவித்தனம் மற்ற
வகுப்புக்களில் வெளிப்பட்டு விட்டது. தவறுதான் அய்யா”

தலைமையும் ஒரு அறிவுஜீவியல்லவா? உடனே முடிவெடுத்தார்.

”இன்று முதல் உனக்கு வேதபாடங்கள் மட்டுமே! காலையில் ஒரு மணி நேரம்,
மாலையில் ஒரு மணிநேரம் நானே நடத்துகிறேன். என்னுடைய இந்த அறைதான்
இனி உன்னுடைய வகுப்பு அறை. மற்ற நேரங்களில் நீ இங்குள்ள ஓலைச்
சுவடிகளை எடுத்துப்படி! அதோடு உனக்கு ஆறு மாதகாலத்திற்குள் எல்லா
வேதங்களையும் சொல்லிக் கொடுத்து விடுகிறேன். அதற்குப் பிறகு ஒருதினம்
கூட நீ இங்கே தங்க வேண்டாம். உன் ஊருக்கு நீ புறப்பட்டுப் போய் விடலாம்.
இவ்வளவு அருமையான பிள்ளையைப் பிரிந்து உன்னுடைய பெற்றோர்கள்
எப்படித் தவித்துக் கொண்டிருக்கிறார்களோ?” என்று சொன்னதோடு அதை
நடைமுறைப் படுத்தவும் செய்தார்.

அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் முக்கியமானதுதான் என்றாலும், பதிவின்
நீளத்தைக் கருதியும், உங்களின் பொறுமையைக் கருதியும், நான் இப்போது
அவை எல்லாவ்ற்றையும் ஸ்கிப் செய்து விட்டு, கதையின் முதல் க்ளைமாக்ஸ்
காட்சிக்கு உங்களைக் கூட்டிக் கொண்டு போகிறேன்.

ஆமாம், கதையில் இரண்டு க்ளைமாக்ஸ் காட்சிகள். இப்போது முதல்
க்ளிமாக்ஸ் காட்சி!
---------------------------------------------------------------------------------------------------------------
(தொடரும்)

சனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம் - பகுதி 2

================================================

ஜோதிடக் கட்டுரைகள் - பகுதி 1


உட்தலைப்பு: சனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம் - பகுதி 2


இதன் முதல் பகுதி இங்கே!


அதைப் படித்துவிட்டு வாருங்கள் - இல்லையென்றால்
இந்தப் பகுதி சற்றும் புரியாது!

தனது சக்தியால் ஒரே நொடியில் தன்னுடைய உருவத்தை - மணி ரத்தினத்தின்
ரோஜா படத்தில் வரும் அரவிந்த சாமி - அவருடைய பதினைந்து வயதில் எப்படி
இருந்திருப்பாரோ அப்படிப் பட்ட உருவத்திற்கு மாற்றிக் கொண்டார். அவர்
எத்தனை பேர்களுக்கு சர்டிஃபிகெட் கொடுத்தவர், அதனால் அவர் கையில்
ஒரு ஆரம்பப் பள்ளிச் சான்றிதழும் வந்து விட்டது.

உடனே குஷியாகி நேராகப் பள்ளிக்குச் சென்று வாசலில் காவலுக்கு நின்ற
கிராமத்தானை ஒரு பார்வையில் மயங்க வைத்துவிட்டு நேராக பிரின்சிபால்
இருக்கும் அறையை நோக்கி நடந்தார்....!

அப்படி நடந்த சனீஸ்வரன், தான் அந்தப் பள்ளிக்கூடத்தில் இருக்கும் காலத்தில்
தன்னுடைய அதீத சக்தியால், தலைமை ஆசிரியருக்கோ அல்லது உதவி ஆசிரியர்
களுக்கோ அல்லது அங்கே படிக்கும் மற்ற மாணவர்களுக்கோ கடுகளவுகூட
எந்தப் பாதிப்பும் வரக்கூடாது என்பதற்காக தன்னுடைய Powerஐ முதலில் Sitch Off செய்தார்.

பள்ளிக்கூடத்துத் தோட்டத்தில் மான்கள் விளையாடிக் கொண்டிருந்தன! மயில்கள் நடமாடிக்
கொண்டிருந்தன. அவற்றையெல்லாம் ரசித்தவாறு, சனீஸ்வரன் தலைமை ஆசிரியரின் குடிலை
அடைய, அவர் அப்போதுதான் தனது காலைப் பூஜையை முடித்துவிட்டு வெளியே வந்தார்.

திடுதிப்பென்று ஒரு அழகான யுவன் தன் கண் எதிரே காட்சி கொடுத்ததும் இல்லாமல்,
ஒளி பொருந்திய கண்களால் தன்னை உற்று நோக்குவதையும் கண்டவர், கணீரென்ற
குரலில் கேட்டார்,” யார் தம்பி நீ? இங்கே யாரைப் பார்க்க வந்திருக்கிறாய்?”

“மகான் த்ரைவேதி அவர்களைப் பார்க்க வந்துள்ளேன் அய்யா!”

“மகான் என்று இங்கு யாரும் இல்லை. வெறும் த்ரைவேதிதான் இங்கே இருக்கிறார்.
அது நான்தான்! என்ன வேண்டும் உனக்கு?”

”அய்யா, நான் பக்கத்து மாநிலத்தைச் சேர்ந்தவன். உங்கள் பள்ளியில் படிக்கும் ஆசையில்
நீண்டதூரம் பயணித்து வந்துள்ளேன். என்னை நீங்கள் சேர்த்துக் கொள்ளவேண்டும் அய்யா!”

புன்னகைத்த தலைமை ஆசிரியர், கணீரென்று குரல் கொடுத்துச் சொன்னார்

“அட்மிசன் எல்லாம் முடிந்து, வகுப்புக்கள் ஆரம்பமாகி விட்டனவே தம்பி! நீ பத்து நாட்கள்
தாமதமாக வந்துள்ளாய். இப்போது நோ சான்ஸ். நீ அடுத்த கல்வியாண்டில் வந்து பார்!”

யாரை எப்படி மடக்குவது என்பதை அறியதவரா சனீஸ்வரன்?

“அய்யா, நான் இந்த பூமியில் இருக்கப்போவது இன்னும் இரண்டு ஆண்டுகள்தான். அதற்குப் பிறகு
மேலே போய்விடுவேனாம். என் ஜாதகத்தைப் பார்த்தவர்கள் சொன்னார்கள். இருக்கிற அந்தக்
கொஞ்ச நாளில் வேதங்களைக் கற்றுக்கொண்டுவிட வேண்டும் என்ற ஆசையில்தான் நான் இங்கே
வந்திருக்கிறேன். அந்த வேதங்கள்தான் ஒருவனின் பிறவியைச் செம்மைப் படுத்தக்கூடிய சக்தி
கொண்டவை என்று கேள்விப் பட்டிருக்கிறேன். என் பிறவி செம்மைப் படவேண்டும்.அதற்கு நீங்கள்
தான் உதவ வேண்டும்.” என்று சொன்ன சனீஸ்வரன் தலைமை ஆசியரை எதுவும் பேசவிடாமல்
திகைக்க வைத்ததோடு, மேலும் அவரைச் சங்கடப்பட வைக்கும் விதமாக, அவர் காலில் விழுந்து
வணங்கவும் செய்தார்..

திகைப்பிலிருந்து மீண்ட ஆசிரியர் மெல்லிய குரலில் சொன்னார், “முதலில் எழுந்திரு தம்பி!”

சணீஸ்வரன் எழுந்திரிக்கவில்லை; ஆசிரியர் மீண்டும் ஒருமுறை சொல்ல, சனீஸ்வரன்,”அய்யா
என்னை நீங்கள் சேர்த்துக் கொள்வதாகச் சொன்னால் மட்டுமே, எழுவேன். இல்லையென்றால்
இங்கேயே கிடப்பேன். மற்றது என் விதிப்படி நடக்கட்டும்” என்றார்.

நெகிழ்ந்து போன தலைமை ஆசிரியர், வந்திருப்பது யாரென்று தெரியாமலேயே,
அனுமதிச் சீட்டை வழங்கினார்.

(தொடரும்)

அடுத்த பகுதி நாளை!

10.4.08

சனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம் - பகுதி 1



=====================================================

ஜோதிடக் கட்டுரைகள் - பகுதி 1

உட்தலைப்பு: சனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம்!

கிரகங்களில் ‘சனி'க்கு மட்டும்தான் ஈஸ்வரன் என்கிற பட்டம் உண்டு. சூரியன் உட்பட
மற்ற எந்தக் கிரகத்திற்கும் அந்தப் பெருமை இல்லை!

நமது கர்மங்களை - காரியங்களை - செயல்பாடுகளை - activitiesகளை நடத்துபவன்
அவன்தான்.

கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிப்பான்.தண்டிக்க வேண்டிய இடத்தில் தண்டிப்பான்.
தட்ட வேண்டிய இடத்தில் தட்டுவான்.

சில நேரங்களில் ஒரேயடியாகத் 'தட்டி' மேலே அனுப்பியும் விடுவான்.

நெடுஞ்சாலையில் படு ஒய்யாரமாகப் பென்ஸ் காரில் செல்லும் ஒரு செல்வந்தனை, ஒரு டிப்பர்
லாரிக்காரன் அழுத்தமாக முத்தமிட்டு, வைகுண்டத்திற்கு அனுப்பி வைத்தானென்றால்,
அது சனி பகவானின் ஆசியோடுதான் அறங்கேறியது என்று கொள்வீராக!

ராகு ஒருவனைக் கருணையின்றி தண்டிப்பான் (Merciless Action) ஆனால் சனீஸ்வரன்
அப்படியல்ல! அவனை மாதிரி அள்ளிக் கொடுப்பாரும் இல்லை; தள்ளிக் கெடுப்பாரும்
இல்லை!

அவன் தண்டிப்பதிலும் ஒரு தர்மம் இருக்கும். அதன் விவரத்தைப் பின்வரும் கட்டுரை
ஒன்றில் பார்ப்போம்!

இப்போது சனீஸ்வரனைப் பற்றிய ஒரு சுவையான கதை!
---------------------------------------------------------------------------------
கதை' என்று சொல்லிவிட்டேன். கதையை மட்டும் பாருங்கள். அதில் உள்ள நீதியை
மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். வேறு ஒன்றும் வாலாட்ட வேண்டாம்.

கதைக்கு லாஜிக் கேட்டு, சான்று கேட்டு அவஸ்தைபட விரும்புகிறவர்கள் இப்போதே
பதிவை விட்டு விலகி விடலாம்.

இது கர்ண பரம்பரைக் கதை! செவி வழியாகவே இதுவரை அறியப்பட்ட கதை!

என் போதுகின்ற நேரமா அல்லது போதாத நேரமா - தெரியவில்லை இந்தக் கதையை
எழுத்தில் வடிக்கும் முதல் ஆசாமி நானாகத்தான் இருப்பேன்.

ஆகவே படிக்கும் அனைவரும் லாஜிக்கையும் சான்றுகளையும் மறந்துவிட்டுப் படிக்குமாறு
கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்
----------------------------------------------------------------------------------------------------

பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட காலம்.

கங்கா தேவியும் அவளுடைய கிளைகாரிகளும் அதாவது உப நதிகளும் தாங்கள்
செல்லும் வழியெல்லாம் செழுமைப் படுத்துவார்களே - அப்படிச் செழுமையான பிரசேசம்
தான் நமது கதை நடக்கும் இடம்.

அப்படிக் கங்கா தேவியின் அணைப்பில் மகிழ்ந்து கொண்டிருந்த கிராமம் ஒன்றில்
நமது கதை துவங்குகிறது!

அந்தக் கிராமத்து மக்களெல்லாம் பெரிய பிரச்சினைகள் எதுவும் இன்றி ஒற்றுமையாக
இருந்தார்கள்.

அந்தக் கிராமத்தின் மத்தியில் ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. அந்தப் பள்ளிக்கூடத்தின்
சிறப்பு அது உயர்கல்வியைப் போதிக்கும் பள்ளிக்கூடம்.

ஆரம்பக்கல்விக்கு அந்தக் கிராமத்தில் வேறு ஒரு பள்ளிக்கூடம் இருந்தது.

அந்தக் கிராமம் மட்டுமல்ல சுற்று வட்டத்தில் உள்ள பதினெட்டுப் பட்டிக் கிராமத்திற்கும்
உயர்கல்வியைப் போதிக்கும் பள்ளிக்கூடம் அது ஒன்றுதான் இருந்தது!

அதனால் அங்கே இடத்தைப் பிடிப்பதற்குப் பெரும் போராட்டமாக இருக்கும்.

ஆரம்பப் படிப்பை முடித்தவர்களும், வயது பதினான்கைத் தாண்டியவர்களுக்கும் மட்டுமே
அங்கே அட்மிஸன் கிடைக்கும்.

சிபாரிசெல்லாம் செல்லாது! அந்தப் பிரதேச மன்னன் வீட்டுக் குழந்தை என்றாலும்
வரிசையில்தான் நிற்க வேண்டும். செலக்ஸன் தலைமை ஆசிரியர் கையில். பையனைப்
பார்த்தவுடனேயே சொல்லிவிடுவார் - இவன் சாப்பாட்டுக் கேஸ் படிக்கமாட்டான் - இவன்
அறுந்த வால், இவனும் படிக்க மாட்டான் என்று!

வேதங்களும், வாழ்க்கை நெறிகளும், இறைவழிபாடும் அங்கே பாடமாகச் சொல்லிக்
கப்பெற்றது. கால அளவு (Duration of the course) இரண்டாண்டுகள்.

கல்விக் கட்டணம் இல்லை! அதோடு ரோட்டி, கப்டா, மக்கான் என்று எல்லாம் இலவசம்!
அதாவது குருகுலம். (Boarding School) உணவு, உடை, தங்குமிடம் எல்லாம் இலவசம்

லீவு, கட் அடிப்பது எதுவும் நடக்காது. உள்ளே போனால் திஹார் ஜெயிலை விடக்
கண்டிப்பான இடம்.

காலை ஐந்து மணி முதல் மாலை 5 மணி வரை கிண்டி எடுத்து விடுவார்கள்.

காலை மற்றும் மாலை என்று இரண்டு நேரமும் பக்கத்தில் ஓடும் சிற்றாற்றில் நீந்திக்
குளித்துவிட்டு வரவேண்டும். உணவு இரண்டு வேளைகள் மட்டுமே! அதுவும்
குளித்துவிட்டு, இறைவழிபாடு செய்து விட்டு வந்த பிறகே!

காலை எட்டு மணிக்கு, வகுப்பு துவங்கிவிடும். மாலை நான்கு மணி வரை நடைபெறும்
நடுவில் இரண்டு தடவை சூடாகத் தேநீர் மட்டும் உண்டு!

அது எப்படி சாத்தியம்?அதாவது டோட்டலாக இலவசம் என்பது எப்படி சாத்தியம்?

அந்தப் பிரதேச மன்னனிடம் இருந்து மான்யம் - அதாவது உதவித் தொகை கிடைத்துக்
கொண்டிருந்தது. அதோடு கிராமத்து மக்களும் போட்டி போட்டுக் கொண்டு அந்தப்
பள்ளிக்கு வேண்டிய உதவியைச் செய்து கொண்டிருந்தார்கள்

இங்கே ஒரே ஒரு செய்தி அதைச் சொன்னால்தான் கதையின் சுவை கூடும். ஆகவே
அதைச் சொல்லி விடுகிறேன்.

குருகுலத்தின் (Prime instructor & Principal) தலைவர் ஒரு அந்தணர். அவருடைய பெயர்
த்ரைவேதி' - த்ரைவேதி' என்றால் மூன்று வேதங்களையும் கற்றவர் என்று பொருள் படும்
அவருக்கு வயது நாற்பது. கட்டை பிரம்மச்சாரி. விதிப்படிதான் எல்லாம் நடக்கும் என்பதில்
அசாத்திய நம்பிக்கை உள்ளவர். யாருக்கும் பயப்படாதவர். குடும்பம் வேறு அவருக்கு
இல்லையாதலால், யாருக்கும் எதற்கும் பயப்படாதவர். ஆசிரியர் தொழிலுக்கே தன்னை
அர்ப்பணித்துக் கொண்டவர். எல்லா மாணவர்களையும் Fine Tuning' பண்ணுவது
அவர்தான்.

தர்மப்படி நடப்பவர். வருடத்திற்கு 2 X 50 = 100 மாணவர்களைத் தெரிவு செய்து
பள்ளிக்குள் சேர்ப்பது அவர்தான். கீழோன், மேலோன் என்ற பாகுபாடெல்லாம்
அறவே பார்க்க மாட்டார். பையன் shrewd, smart என்று தேரிந்தால் சேர்த்துக் கொண்டு
விடுவார். மக்குப் பிளாஸ்திரிகளுக்கு மட்டும் அங்கே இடமில்லை!.

புத்திசாலிப் பையனுக்கு நிச்சயமாக அங்கே இடம் உண்டு! அவன் எந்த இனத்தைச்
சேர்ந்தவனாக இருந்தாலும் சரி!

இப்போது மெயின் கதைக்குத் தாவிவிடுவோம்!
-------------------------------------------------------------------------------------------
முறைப்படி தானும் வேதங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சனீஸ்வரனுக்கு,
வெகு நாட்களாக ஒரு ஆசை இருந்து வந்தது.!

இந்தப் பள்ளிக்கூடத்தைப் பற்றித் தெரிய வந்ததும், அங்கே சேர்ந்து படிப்பது என்று
முடிவு செய்தான். முடிவைச் செயல் படுத்த அந்தக் கிராமத்திற்கு ஒரே நொடியில்
வந்து சேர்ந்தான்.

வந்த பிறகுதான் உரைத்தது. தான் அப்படியே சென்றால் எப்படி அட்மிஸன் கிடைக்கும்?
என்பதை உணர்ந்தான்.

1.பள்ளிக்கூட விதிகளின் படி வயது 14 அல்லது 15 இருக்க வேண்டும்
2.தோற்றம் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும்
3.ஆரம்பப் பள்ளியை முடித்து நல்ல மதிப்பெண்களைப் பெற்ற சான்றிதழ் வேண்டும்

தனது சக்தியால் ஒரே நொடியில் தன்னுடைய உருவத்தை - மணி ரத்தினத்தின்
ரோஜா படத்தில் வரும் அரவிந்த சாமி - அவருடைய பதினைந்து வயதில் எப்படி
இருந்திருப்பாரோ அப்படிப் பட்ட உருவத்திற்கு மாற்றிக் கொண்டான். அவன்
எத்தனை பேர்களுக்கு சர்டிஃபிகெட் கொடுத்தவன், அதனால் அவன் கையில்
ஒரு ஆரம்பப் பள்ளிச் சான்றிதழும் வந்து விட்டது.

உடனே குஷியாகி நேராகப் பள்ளிக்குச் சென்று வாசலில் காவலுக்கு நின்ற
கிராமத்தானை ஒரு பார்வையில் மயங்க வைத்துவிட்டு நேராக பிரின்சிபால்
இருக்கும் அறையை நோக்கி நடந்தான்....!

(தொடரும்)

----------------------------------------------------------------------------

5.4.08

ஜோதிடப் பாடத்திற்கொரு வணக்கம்!


------------------------------------------------------------------------------------------
ஜோதிடப் பாடத்திற்கொரு வணக்கம்!

ஜோதிடம் என்பது பலரையும் பிடித்து உள்ளே கொண்டு வரக்கூடிய கலையாகும்.
அதை ஒரளவு அறிந்தவர்களும் வருவார்கள், அதன் மேல் ஆர்வம் உள்ளவர்களும்
வருவார்கள்.அதைத் தெரிந்து கொள்ள நினைப்பவர்களும் வருவார்கள்.அதன் மேல்
சுத்தமாக நம்பிக்கை இல்லாதவர்களும் வருவார்கள்.

இதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

அது பெரிய கடல்!

அதை முழுதாக அறிந்துணர்ந்தவர்கள் குறைவு!

என்னுடைய அறிவு லெவல் ஒரு பத்தாம் வகுப்பு அல்லது ப்ளஸ் டூ லெவலாக
இருக்கலாம். எனக்குச் சரியாக அளந்து சொல்லத் தெரியவில்லை.

அதில் முதுகலைப் பட்டதாரி, டாக்டரேட் லெவலில் எல்லாம் ஜாம்பவான்கள்
இருக்கிறார்கள்

எனக்குத் தெரிந்தவரை சொல்லிக் கொடுக்கலாம் என்றுதான் அதைத் துவங்கினேன்.

அடிப்படைப் பாடங்களை முன்பே நடத்தி விட்டேன்.

அது மட்டுமே 50 பாடங்கள். இப்போது 10 பாடங்களைப் புதிதாக நடத்தியுள்ளேன்

நான் தொழில் முறை ஜோதிடன் அல்ல!

எனக்குத் வேறு தொழில் உள்ளது!

மேல் நிலைப் பாடங்களைச் சொல்லிக் கொடுப்பது மிகவும் சிரமம்.

அடைப்படைப் பாடங்களைப் படித்து முடித்தவர்களைப் பரிட்சை வைத்து தேர்வு
செய்து அவர்களுக்குத்தானே மேல் நிலைப் பாடங்களைச் சொல்லித் தர முடியும்?

அதெல்லாம் தம்மாத்துண்டு வலைப் பதிவில் எப்படி சாத்தியமாகும்?

இங்கே பதிவைப் படிப்பவர்களில் பல பேர்கள் அடைப்படையைத் தெரிந்து கொள்ள
வில்லை என்பது, எனக்கு வரும் பல மின்னஞ்சல் மூலமாகத் தெரிகிறது.

அதற்குப் பதில் எழுதி விளக்கம் சொல்வது முடியாத செயல்

அதோடு என் ஜாதகத்தைப் பார்த்துப் பதில் சொல்லுங்கள் என்று, வெறும் பிறந்த
தினத்தையும், நேரத்தையும் கொடுத்து உடன் ஐந்து அல்லது ஆறு கேள்விகளையும்
கேட்டுத் தினமும் நிறைய மின்னஞ்சல்கள் வருகின்றன. வந்துள்ளன.

அவற்றிற்கு ஜாதகங்களை நானே என்னிடம் உள்ள மென்பொருளில் கணித்து,
பின் அவற்றைப் பூதக் கண்ணாடி வைத்து ஆராய்ந்து, அவர்கள் கேட்டு எழுதியுள்ள
கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும்.

சிலருக்குப் பதில் எழுதினேன்.

அதாவது பரவயில்லை சிலரது கேள்விகளைப் பார்த்தால் திகைப்பாக இருக்கும்

உதாரணம் கொடுத்துள்ளேன்

1. அய்யா, எனக்கு எப்பொழுதுமே தற்கொலை செய்து கொள்ளும் மன நிலையே
இருக்கிறது. என் ஜாதகத்தைப் பார்த்துச் சொல்லுங்கள் அப்படி ஏதாவது நடந்து விடுமா?

2. என் மனைவிக்கும் எனக்கும் தினமும் சண்டைதான். அவளை விவாகரத்து செய்து
விட்டு வேறு பெண்னைத் திருமணம் செய்து கொள்ளலாமா என்று பார்க்கிறேன்.
என் ஜாதகத்தில் அதற்கு வழி இருக்கிறதா? தயவு செய்து பார்த்து உடனே
பதில் எழுதுங்கள்

3. எனக்குத் தற்சமயம் பார்த்துவரும் வேலை கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை.
வேறு நல்ல வேலை எப்போது கிடைக்கும்? தயவு செய்து பார்த்து உடனே
பதில் எழுதுங்கள்.

இப்படித் தினமம் பல மின்னஞ்சல்கள் வந்தால் நான் என்ன செய்வது?
------------------------------------------------------------------------------------------------------
நேரமின்மை காரணமாக, அவற்றைப் pending வைத்தால் reminder மேல் reminder
வந்து குவிகிறது.

எல்லாவற்றிற்கும் பதில் எழுத எனக்கு இந்த ஜென்மம் பற்றாது!

இதை எத்தனையோ தடவை முன்பு பதிவில் எழுதினாலும், பலர் கேட்பதில்லை!

கடிதம் எழுதுபவர்களைப் பொறுத்தவரை அவர்கள் ஒருவருக்குப் பதில் சொன்னால்
போதும்!
---------------------------------------------------------------------------------------------------------

ஆகவே, ஜோதிட வகுப்பு தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கிறேன்
---------------------------------------------------------------

வகுப்பறையில் வேறு பாடங்கள் நடத்தப்படும். ஆர்வமுள்ளவர்கள் அவற்றை வந்து
படிக்கலாம். அது பற்றிய அறிவிப்பு தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளியிடப்படும்
------------------------------------------------------------------------

அஞ்சல் வழிக் கல்வியில் 3ஆண்டு பாடத்திட்டங்களுடன் ஜோதிடம் சில பல்கலைக்
கழகங்களில் சொல்லித் தரப்படுகிறது. உங்களுக்காக அவற்றைப் பட்டியலிட்டுள்ளேன்

1.ஜோதிடப் பாடங்கள் குறித்த இந்தியக் கல்வித்துறையின் தளம்:

2. ஜோதிடப் பாடங்கள் குறித்து மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்தின் தளம்

3. தி ஹிண்டு நாளிதழின் செய்தி

4. சென்னையில் ஜோதிட வகுப்புக்கள் நடைபெறும் இடம்

இணைய தளத்தில் தேடுங்கள் நிறையக் கிடைக்கும்

விருப்பம் உள்ளவர்களை அம்போ என்று விட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான்
மேற்கண்ட விவரங்களைக் கொடுத்துள்ளேன்,

உண்மையில் விருப்பமுள்ளவர்கள் ஏதாவது ஒரு பல்கலைக் கழகத்தில் சேர்ந்து
படியுங்கள்.

நீங்கள் ஜோதிடத்தை முழுதாக அறிய வாழ்த்துக்கள்!
------------------------------------------------------------------------------------------------------

ஒரு பொன்மொழி உண்டு:

ஆண்டவனே என் எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன்.
என் நண்பர்களை மட்டும் நீ பார்த்துக்கொள்!

அதைச் சற்று மாற்றி நான் இப்படிச் சொல்ல விரும்புகிறேன்.

ஆண்டவனே ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களை
நான் பார்த்துக் கொள்கிறேன்.
நம்பிக்கை உள்ளவர்களை நீ பார்த்துக் கொள்!

நன்றி,
வணக்கத்துடன்,
வகுப்பறை வாத்தியார்.

14.3.08

உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்?

உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்?

மீண்டும் ஜோதிடம் - பகுதி 10

இந்தக் கேள்வியைக் கேட்டால் ஒரே மாதிரியான பதில் சர்வ நிச்சயமாக வராது. ஒவ்வொருவரிடம் இருந்து ஒவ்வொரு மாதிரியான பதில் வரும்.

அன்புமிக்க தாய், அறிவுமிக்க தந்தை, பாசமிக்க சகோதரர்கள், சகோதரிகள், பரிவுமிக்க மனைவி,
உள்ளத்தைக் கொடுக்கும் குழந்தைகள், உயிரைக்கூட கொடுக்கும் நண்பர்கள், இவற்றோடு
பாரதி பாடிய காணி நிலம், வற்றாத கேணி, பத்துப்பதினைந்து தென்னை மரங்கள், கத்தும்
குயிலோசை, அதோடு...!

என்ன அதோடு? இது போதாதா?

சற்றுப் பொறுங்கள் சொல்லி முடித்துவிடுகிறேன்.

அதோடு இணைப்பாக அசையா சொத்துக்கள், வற்றாத வங்கிக் கணக்கு இருப்பு, பிடித்தமான ஊரில்
வசிக்கும் வசதி, போட்டியில்லாத தொழில், இன்னோவா, டாட்டா சுமோக் கார்கள், பாரத ரத்னாவேண்டாம், அட்லீஸ்ட் பத்மபூஷன் பட்டம் கிடைக்கும் கெளரவம். ஒரு வட்டம் அல்லது மாவட்டச்
செயலாளர் பதவி, என்று பலரும் பலவற்றை ஏக்கத்துடன் அல்லது ஆசையுடன் சொல்வார்கள்.

அவ்வளவும் கிடைத்து விடுமா என்ன?

கிடைக்காது!

அதெல்லாம் எப்படிக் கிடைக்கும். அதற்கு உரிய தகுதி நமக்கு இருக்கிறதா என்று பார்க்க வேண்டாமா?

ஆசையிருக்குத் தாசில் பண்ண; அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க' என்று கிராமங்களில் சொல்வார்கள்
80% மக்களின் வாழ்க்கை அப்படித்தான் இருக்கும்! இருப்பதை வைத்துத் திருப்திப் பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

சரி மனித முயற்சி என்பதற்குப் பலன் எதுவும் கிடையாதா?

ஏன் இல்லை? முயற்சிக்குப் பலன் உண்டு.

நீ மாட்டை வைத்துதான் பிழைப்பு நடத்த வேண்டுமென்பதுதான் விதியென்றால் நீ மாட்டை வைத்துத்தான் பிழைப்பை நடத்தியாக வேண்டும். ஆனால் மாட்டின் எண்ணிக்கையை இறைவன்
தீர்மானிப்பதில்லை.

அது உன் கையில்தான் உள்ளது. உன் முயற்சியில்தான் உள்ளது. 4 மாடுகளா அல்லது 40 மாடுகளா என்பது உன் முயற்சியால் நிர்ணயிக்கப்படும்.

ஒரு ஏழைப் பால் வியாபாரி இருந்தான். இரண்டு மாடுகளை வைத்துப் பால் வியாபாரம் செய்து
கொண்டிருந்தான். வருமானம் போதவில்லை. பற்றாக்குறை. வீட்டில் அவன் மனைவி, பிள்ளைகளைச்
சேர்த்து ஐந்து ஜீவன்கள்

வீட்டு வாசல் திண்ணையில் கவலையோடு அவன் அமர்ந்திருந்தபோது, அந்த வழியாகச் சென்ற
முனிவர் ஒருவர், அவனை நோக்கிக் கேட்டார், ”தம்பி, சற்றுக் களைப்பாக இருக்கிறது, பசியாற
ஏதாவது கிடைக்குமா?”

அவன் பதறிவிட்டான். பசியின் கொடுமை அறிந்தவனல்லவா? உடனே திண்ணையை விட்டுக் குதித்துக் கீழே வந்தவன், “அய்யா நல்ல மோர் இருக்கிறது, தரட்டுமா?” என்று கேட்டான்.

அவர் சம்மதம் சொல்ல, ஒரு செம்பு நிறைய மோரைக் கொண்டு வந்து கொடுத்தான்.

வாங்கி அமைதியாகக் குடித்தார் முனிவர். குடித்தபிறகுதான் அவனை உற்று நோக்கினார்.
அவன் முகத்தில் கவலை குடிகொண்டிருந்தது.

தன் ஞானக்கண்ணால் அவனுடைய நிலைமையை முழுதாக உணர்ந்தவர் சொன்னார்:

“நாளை அதிகாலை என்னை வந்துபார். உன் கவலைகளை ஓட்டும் வழியைச் சொல்லித் தருகிறேன்”

அவன் அவருடைய இருப்பிடத்தை அறிந்து கொண்டு, அடுத்த நாள் உதயத்தில், நம்பிக்கையுடன்,
அவரைச் சென்று பார்த்தான்.

அவர் அவனுடன் அதிகமாகப் பேசவில்லை. ஆனால் தீர்க்கமாக ஒன்றைச் சொன்னார் “உன்னிடம்
இருக்கும் இரண்டு மாடுகளையும் ஓட்டிக் கொண்டு போய் பக்கத்து ஊர்ச் சந்தையில் விற்று விட்டு
வந்து, விற்ற பணத்தை உன் வீட்டில் பத்திரமாக வை.”

அவன் அதிர்ந்து போய் விட்டான்.

மாடுகள் இரண்டையும் விற்று விட்டால் வயிற்றுப் பிழைப்பிற்கு என்ன செய்வது என்று அவரிடமே
கேட்டுத் தெரிந்து கொள்ளும் முனைப்பில், “அய்யா...” என்று இழுத்தான்.

அது தெரியாதா அவருக்கு? கையைக் உயர்த்திக் காட்டியதோடு, சொன்னார், “ சொன்னதைச் செய்,
மற்றது தானாக நடக்கும், மீண்டும் நீயே வந்து என்னைப் பார்ப்பாய், இப்போது போ!”

அவன் அவர் சொன்னபடியே செய்தான். இரண்டு மாடுகளும் நல்ல விலைக்குப் போயிற்று. விற்ற
பணத்தைக்கொண்டு வந்து, வீட்டுப் பரணின் மேலிருந்த பானைக்குள் வைத்து மூடினான். பிறகு
நன்றாகச் சாப்பிட்டுவிட்டு, பாயைப் போட்டு படுத்து உறங்கிவிட்டான்.

தூக்கம் என்றால் அப்படியொரு தூக்கம்.

மாலை ஆறு மணிக்குத்தான், ”அம்மா...” என்று தன் மாடுகள் கத்தும் ஒலி கேட்டுத் திடுக்கிட்டு
எழுந்தவன், ஓடிப்போய் தன் வீட்டிற்குப் பின் புறம் இருந்த தொழுவத்தில் பார்த்தான். அங்கே
அவனுடைய மாடுகள் இரண்டும் நின்று கொண்டிருந்தன. மயக்கம் வராத குறை அவனுக்கு.

அதோடு அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. விற்று விட்டு வந்த மாடுகள் எப்படித் திரும்பி வந்தன?

இருட்டி விட்டதால் வீட்டிலேயே தங்கி விட்டு, அடுத்த நாள் காலையில் ஒட்டமும் நடையுமாகச்
சென்று முனிவரைப் பார்த்தான்.

தியானத்தில் இருந்த அவர் இவன் உள்ளே வந்த ஒலி கேட்டு, கண்களைத் திறந்து பார்த்தார்.
பார்த்தவர் கேட்டார்,” என்ன உன்னுடைய மாடுகள் இரண்டும் திரும்பி வந்து விட்டனவா?”

அவன் ஆச்சரியத்தின் எல்லைக்கே போய் விட்டான்.

சலனமற்று காட்சியளித்த அவர் சொன்னார்,” நேற்றுச் செய்ததுபோல இன்றும் செய்; ஒன்றும்
கேட்காதே, பிறகு சொல்கிறென் இப்போது போய் வா”

வந்த வேகத்திலேயே திரும்பியவன், அவர் சொல்லியபடியே அன்றும் செய்தான். மறுபடியும்
கிட்டத்தட்ட அதே அளவு தொகை கிடைத்தது. வீட்டிற்குக் கொண்டு வந்து, பானைக்குள்
போட்டுப் பரணுக்குள் வைத்துவிட்டு, எப்போதும் போல சாப்பிட்டுவிட்டுக் கண் அயர்ந்தான்

நேற்று நடந்தது போலவே இன்றும் நடந்தது. அவன் அதிசயப்படும் விதமாக அவனுடைய
இரண்டு மாடுகளும் இன்றும் திரும்பி வந்து தொழுவத்தில் நின்று கொண்டிருந்தன!

இது தொடர்ந்தது. ஒரு நாள் அல்ல இரு நாள் அல்ல பத்து நாட்கள் தொடர்ந்தது. வழக்கப்
படி பதினோறாம் நாள் காலையில் முனிவரைச் சென்று பார்த்தான்

அவர் சொன்னார்,” இன்மேல் அந்த அதிசயம் தொடராது. உன்னிடம் இப்போது 20 மாடுகளுக்கான
தொகை இருக்கிறது. இன்று சந்தைக்குப்போ; நல்ல மாடுகளாகக் கிடைக்கும் 20 மாடுகளை
வாங்கி வந்து இன்று முதல் உன் பால் வியாபாரத்தை நல்லபடியாகச் செய்!”

அவன் நெகிழ்ந்து விட்டான். கண்கள் பனிக்கக் கேட்டான்,”அய்யா உங்களுக்கு நான் மிகுந்த
நன்றிக் கடன் பட்டவனாக இருப்பேன். இதுவரை அந்த அதியசம் எப்படி நடந்தது என்பதைச்
சொன்னீர்கள் என்றால் நான் சற்று மன நிம்மதியோடு போவேன்.”

“உன் தலையெழுத்து மாடுகளை வைத்து பிழைப்பதுதான். ஆனால் நீ முயற்சி எதுவும் செய்யாமல்,
இருப்பதை வைத்து இதுவரை உன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு வந்திருக்கிறாய். உனக்கு
உதவும் பொருட்டே, எனது சித்து வேலையால் நான் அப்படிச் செய்தேன். எதற்கும் ஒரு அளவு
உண்டு. அது தெரிந்து நான் நேற்றோடு நிறுத்திவிட்டேன். இனிமேல் நான் நினைத்தால்கூட
உனக்கு உதவ முடியாது. இறைவனை வேண்டிக்கொள். உன் பிரச்சினைகள் எல்லாம் தீரும்
அதோடு இனிச் சோம்பியிருக்காமல் முயற்சி செய்து கடுமையாக உழைத்தாய் என்றால்
உன் மாடுகளின் எண்ணிக்கை கூடிய சீக்கிரம் 100 ஆகும், பிறகு 200 ஆகும். போய்ப்
பிழைத்துக் கொள்!” என்று முடித்தார்.

கதை அவ்வளவுதான். முயற்சி எப்படி வேலை செய்யும் என்பதற்குத்தான் இந்தக் கதை!
நமக்கும் ஒரு முனிவர் வருவாரா என்று யாரும் காத்துக் கொண்டிருக்க வேண்டாம். இது
கலியுகம். முனிவரெல்லாம் வரமாட்டார். முனி வேண்டும் என்றால் வரும்.

(முனி என்றால் என்னவா? அதுதான் நட்பு என்ற பெயரில் வரும் டாஸ்மார்க், சல்பேட்டா
பார்ட்டிகள்)
-----------------------------------------------------------------------------------------------------------
சரி துவக்கத்திற்கு வருகிறேன். நல்ல வாழ்க்கைக்கு ஜாதகம் எப்படியிருக்க வேண்டும்?

ஒன்று, ஒன்பது, பத்து, மற்றும் பதினோறாம் வீடுகளில் 30ற்கும் மேற்பட்ட பரல்கள்
இருக்க வேண்டும்.

அதவது First House (Lagna), Ninth House (House of gains), 10th House (House of Profession)
11th House (House of Profit) ஆகிய நான்கு இடங்களிலும் 30 பரல்களோ அல்லது 30ற்கு
மேற்பட்ட எண்ணிக்கையில் பரல்கள் இருக்க வேண்டும்.

மற்ற இடங்களெல்லாம் முக்கியமில்லையா? இல்லை!

அப்படியிருந்தால் வாழ்க்கை எப்படியிருக்கும்?

சூப்பராக இருக்கும்!

படிக்கும் வாசகர்கள் யாருக்காவது அப்படியிருக்கிறதா? இருந்தால் சொல்லுங்கள்

எனக்குத் தெரிந்து என்னுடைய உறவினர்கள் இரண்டு பேருக்கு இருக்கிறது. அவர்களது
வாழ்க்கையும் சூப்பராக இருக்கிறது. அவர்களுடைய ஜாதகத்தை நான் பர்த்திருக்கிறேன்.
அதனால்தான் அடித்துச் சொல்கிறேன்.

மற்றவை அடுத்த பதிவில்!

அன்புடன்,
வகுப்பறை வாத்தியார்

(தொடரும்)

3.3.08

யாருக்கு மாப்பிள்ளை யாரோ!

யாருக்கு மாப்பிள்ளை யாரோ - அவர்
எங்கே பிறந்திருக்கின்றாரோ!

மீண்டும் ஜோதிடம் - பகுதி 9

நாட்டு மருந்துகளைத் தேனில் கலந்து கொடுப்பார்கள்
மருந்தின் கசப்புத் தெரியக்கூடாது என்பதற்காக!

அதுபோல நானும் பாடங்களை, சம்பந்தப்பட்ட
சுவாரசியமான விஷயங்களுடன் கலந்து கொடுத்துக்
கொண்டிருக்கிறேன்

சில சமயம் மருந்து தூக்கலாக இருக்கும், சில சமயம்
தேன் அதிகமாக இருக்கும். அது தற்செயலாக அமைந்து
விடுவது!

பாடங்கள் நிறைய உள்ளன. நேரமின்மை காரணமாக
தட்டச்சுவது செய்வது ஒன்றுதான் பிரச்சினையாக உள்ளது.
அதோடு எனது வியாபார அலுவல்களும் சேர்ந்து கொள்வதால்
தொடர்ந்து பதிவுகள் வெளியிட முடிவதில்லை. வருந்துகிறேன்

நீங்கள் கொண்டிருக்கும் அன்பின் காரணமாகவும், ஆர்வத்தின்
காரணமாகவும், வாரம் ஒரு பதிவாவது வெளியிடுவேன்.

இன்று அரட்டைக் கச்சேரி இல்லை; நேரடியாகப் பாடம்தான்!
-----------------------------------------------------------------------------------------
1. ஏழாம் வீடு களத்திர ஸ்தானமாகும்.
(Seventh house is called as house of marriage)

2. சுக்கிரன் களத்திரகாரகன் எனப்படுவான்
(Venus is called as authority for marriage).

3. ஏழிற்குரிய கிரகத்தின் திசை புக்தியில் அல்லது சுக்கிரனின்
Sub - periodல் திருமணம் நடக்கும்

4. ஏழில் குரு இருந்தால் நல்ல மனைவி கிடைப்பாள்
.
5. ஏழாம் வீட்டிற்கு உரியவன் (Owner) திரிகோண வீடுகளில்
அமர்ந்து குருவின் பார்வை பெற்றாலும் நல்ல மனைவி கிடைப்பாள்.

6. ஏழில் சந்திரன் அல்லது சுக்கிரன் இருந்தாலும் நல்ல மனைவி
கிடைப்பாள். இதே அமைப்பு பெண்ணாக இருந்தால் நல்ல
கணவனாகக் கிடைப்பான் என்று பொருள் கொள்ளவும்.

7. சுக்கிரனும், குருவும் கூடி நின்றால் படித்த புத்திசாலியான
மனைவி கிடைப்பாள்

8. சுக்கிரனுடன், சந்திரனும், புதனும் கூடி இருந்தால் ஒரு
பெரிய செல்வந்தரின் மகள் மனைவியாகக் கிடைப்பாள்.

9. சுக்கிரனுடன், சனி சேர்ந்திருந்தால் மிகவும் கஷ்டப்படுகிற
- ஆனால் உழைப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த பெண்
மனைவியாகக் கிடைப்பாள்.

10. ஏழாம் அதிபனுடன் எத்தனை கோள்கள் சேர்ந்திருக்கிறதோ
அத்தனை பெண்களுடன் ஜாதகனுக்குத் தொடர்பு உண்டாகும்.
ஆனால் ஏழாம் அதிபது சுபக் கிரகமாகவோ அல்லது சுபக்கிரகத்தின்
பார்வை பெற்றாலோ ஜாதகன் ஒழுக்கமுடையவனக இருப்பான்.

11. லக்கினாதிபதியும், ஏழாம் அதிபதியும் சேர்ந்து ஜாதகத்தில்
ஆறு, எட்டு, பன்னிரெண்டாம் வீடுகளில் அமர்ந்திருந்தால்
ஜாதகனுக்குத் திருமணம் நடைபெறாது.

12. சுக்கிரனும், செவ்வாயும் சேர்ந்து ஏழாம் வீட்டில் அமர்ந்
திருந்தால் ஜாதகன் ஒரு விதவையை மணந்து கொள்வான்

13. ஏழில் ஒன்றிற்கு மேற்பட்ட பாப கிரகங்கள் இருந்தால்
மனைவிக்கு நோய் உண்டாகும்

14. இரண்டாம் இடத்தில் பாப கிரகங்கள் இருந்தாலும்,
அல்லது இரண்டாம் வீட்டைப் பாப கிரகங்கள் பார்த்தாலும்
அதனதன் திசா புக்திகளில் மனைவிக்கு நோய் உண்டாகும்.

15. ஏழிற்கு உடையவன் சர ராசியில் இருந்தால் ஜாதகனுக்கு
இரண்டு தாரம் உண்டு. ஸ்திர ராசி என்றால் ஒரு மனைவிதான்.
உபயராசியென்றால் அவன் பல பெண்களுக்கு நாயகன்.

16. லக்கினாதிபதி சுக்கிரன் வீட்டில் இருந்தாலும், சுக்கிரனுடன்
சேர்க்கை பெற்றிருந்தாலும், அல்லது சுக்கிரனின் பார்வை
பெற்றிருந்தாலும் ஜாதகன் பல பெண்களிடத்தில் விருப்பம்
உடையவனாக இருப்பான்.

17. ஏழில் சந்திரனும், சுக்கிரனும் சேர்ந்திருந்தாலும் சரி,
செவ்வாயும், சனியும் சேர்ந்திருந்தாலும் சரி, ஜாதகனுக்கு
உரிய காலத்தில் திருமணம் நடக்காது!

18. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள்,
அதோடு சுக்கிரன் போன்றவர்கள் பாப கிரகங்களுடன் கூடி ஆறு,
எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் மனைவி
நிலைக்க மாட்டாள்

19. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள்
கேந்திர, திரிகோணங்களில் நின்றால், ஜாதகனுக்கு ஒரே மனைவி,.
அவர்கள் சுக்கிரனுடன் அல்லது பாப கிரகங்களுடன் கூடி ஆறு,
எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் பல
பெண்களிடம் தொடர்பு ஏற்படும்

20. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள் கேந்திர,
திரிகோணங்களில் நின்றால், ஜாதகனுக்கு ஒரே மனைவி, அதோடு
அவன் பிற மாதரை விரும்ப மாட்டான்

21. சுக்கிரன் இருக்கும் வீட்டிற்கு அதிபதி ஆறு, எட்டு,
பன்னிரெண்டில் மறைவுற்றால் மண வாழ்க்கை மகிழ்ச்சியைத் தராது
.
22. ஏழாம் வீட்டிற்கு அதிபதி பாபிகள் வீட்டில் நின்றாலும், பாபிகளால்
பார்க்கப்பட்டாலும் ஜாதகனுக்குத் திருமணம் தூர தேசத்தில் நடக்கும்.

23. நவாம்ச சக்கரத்தில் ஏழாம் வீட்டு அதிபன் சுபர்களுடைய வீட்டில்
இருந்தால் உள்ளூர்ப் பெண்ணே மனைவியாக வருவாள்.

24. ஏழாம் அதிபது பாப கிரகமாகி , ஆறு, எட்டு, பன்னிரெண்டில்
மறைந்து நின்றால், எத்தனை கிரகங்களின் பார்வை அங்கே விழுகிறதோ
அத்தனை பெண்களுடன் ஜாதகனுக்குத் தொடர்பு ஏற்படும்

25. ஏழாம் அதிபதி சுபக்கிரகங்களுடன் சேர்ந்தால் மனைவி
நல்லவளாக இருப்பாள். அதுவே பாப கிரகங்களுடன் சேர்க்கை
என்றால் மனைவி பொல்லாதவளாக இருப்பாள்.

26. ஏழிற்குரியவன் ராகுவுடன் சேர்ந்து ஆறு, எட்டு,
பன்னிரெண்டில் இருந்தால் ஜாதகன் இழிவான பெண்ணை
மணக்க நேரிடும்.

27. சுக்கிரனோ அல்லது ஏழிற்குரியவனோ ஜாதகத்தில்
நீசமாகியிருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்வாக இருக்காது.

கொடுத்திருப்பது எல்லாம் பொதுவிதிதான். அவரவர் ஜாதகத்தைப்
பொறுத்து இந்த விதிகள் சிலருக்குச் செல்லுபடியாகாமல் போகலாம்.
ஆகவே ஒவ்வொருவரும் தங்கள் ஜாதகத்தின் மற்ற அமைப்பையும்
கொண்டு பலன் பார்த்துத் தெளிவது நல்லது!

கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதிவைத்தபடி,”மனைவி
அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!”

அதில் மாற்றுக் கருத்திற்கு இடம் இல்லை!

அடுத்த வகுப்பில் சந்திப்போம்
அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

(தொடரும்)