மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label சங்கீத மேதை. Show all posts
Showing posts with label சங்கீத மேதை. Show all posts

19.11.15

Cinema: இசைஞானி இளையராஜாவின் இசை அமைப்பு பற்றி அறிந்ததும் அறியாததும்

Cinema: இசைஞானி இளையராஜாவின் இசை அமைப்பு பற்றி 
அறிந்ததும் அறியாததும் 

Dedicated to all music lovers and especially to Illayaraja fans 

1. ஒரு  பாடலை உருவாக்க வெளிநாட்டு பயணமோ, அழகான லொகேஷன்களோ, வார அல்லது மாதக்கணக்கில் நேரமோ இளையராஜாவுக்குத் தேவைப்பட்டதில்லை. தென்றல் வந்து
தீண்டும்போது... என்ற பாடலை உருவாக்க இசைஞானி எடுத்துக்
கொண்டது வெறும் அரை மணி  நேரம்தான்.

2. இளையராஜா வெறும் அரைநாளில் மொத்த ரீரிகார்டிங்கையும் செய்துமுடித்த படம் ''நூறுவாது நாள்"

3. சிகப்பு ரோஜாக்கள்  படத்திற்கான ரீரிகார்டிங்கிற்கு ஆன மொத்த
செலவு வெறும் பத்தாயிரம்.. மூன்றே நாளில் வெறும் ஐந்தே ஐந்து இசைக்கலைஞர்களை கொண்டு  அந்த படத்திற்கு இசை சேர்க்கப்
பட்டது

4. எல்லோரும் இசையை வாசித்துதான் காட்டுவார்கள். ஆனால் ராஜா மட்டும்தான் இசையை 'பக்கா' நோட்ஸாக இசைக் கலைஞர்களுக்கு
எழுதியே கொடுப்பவர். அவர் நோட்ஸ் எழுதும் வேகம் பார்த்து சர்வதேச
இசை விற்பன்னர்களே மிரண்டு  போனது வரலாறு.

5. அமிர்தவர்ஷினி என்ற மழையை வரவழைப்பதற்கான தனித்துவமுடைய ராகத்தை ஒரு கோடைப்பொழுதின் பிற்பகலில்  "தூங்காத விழிகள் ரெண்டு" பாடலை அமைத்து மழையையும் வரவழைத்தவர் இசைஞானி

6. பாடலின் மெட்டும் அதற்கான 100% orchestration ஐயும்  ஒருவரே செய்யும்போது கிடைக்கும் அத்தனை முழுமை! அத்தோடு ஒவ்வொரு வாத்தியத்தையும் வித்தியாசமாய் கையாளும் ஆளுமை மற்றும் பாங்கு,
அதுவும் மற்றவர்களிடமிருந்து இவரை வேறுபடுத்திக் காட்டுகிறது

7. இசைஞானி தான் முதல்மிறையாக ரீதிகௌளை என்ற ராகத்தை சினிமாவில் பயன்படுத்தினார் ."கவிக்குயில்" என்னும் படத்தில் "சின்ன கண்ணன் அழைக்கிறான்" என்ற பாடல்தான் அது.

8. Counterpoint என்ற யுக்தியை சர்வதேச இசையின் நுட்பங்களை இசைஞானி சிட்டுக்குருவி படத்தில் இடம்பெற்ற "என் கண்மணி" என்ற பாடலில் பயன்படுத்தி வெற்றி கண்டவர்.

9. இந்தியத் திரை இசையில் காயத்ரி என்ற படத்தில்தான் முதன் முதலாக இசைஞானி "எலெக்ட்ரிக் பியானோ" உபயோகபடுத்தினார்.

10. இசைஞானி செஞ்சுருட்டி ராகத்தில் இசையமைத்த ஒரே பாடல் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு.

11. உலகில் வேறு எந்த இசையமைப்பாளரும் முயற்சி  செய்திருக்கவே முடியாத விஷயம்., ஓர் இசையமைப்பாளர் ஏற்கனவே இசையமைத்து,
 பாடல் வரிகள் எழுதப்பட்டு, படமாக்கப்பட்டு, அந்த சவுண்ட்  ட்ராக்கை
அப்படியே நீக்கிவிட்டு, அந்தக் காட்சியை மட்டும் அப்படியே வைத்துக்கொண்டு, உதட்டசைவு, உடலசைவு, காட்சித்தேவை அனைத்துக்கும் பொருத்தமாக புதிய இசையை எழுதி வியப்பின்
உச்சிக்கு நம்மை அழைத்து சென்றவர் இசைஞானி ( ஹேராம் )

12. முன்பெல்லாம்  பின்னணி இசைச்சேர்ப்பில் ஒரு ரீல் திரையிட்டு காண்பித்ததும் இயக்குனரோ மற்றவர்களோ இசையமைப்பாளரிடம்
வந்து அமர்ந்து அந்த படத்தில் வந்ததுபோல போடுங்கள், இந்த படத்தில் வந்தது போல போடுங்கள் என்றெல்லாம் சொல்லிப் பின் இசைச்
சேர்ப்பு முடிந்து, அது சரியில்லாமல்  மறுபடி இசையமைப்பாளரே
வேறு மாதிரி இசை சேர்ப்பார். ஆனால் இளையராஜாவிடம் அப்படி
இல்லை. ஒரு ரீல் திரையில் பார்த்தால் போதும்  உடனே இசைக்
குறிப்புகளை எழுத ஆரம்பித்து விடுவார். அதை வாசித்தாலே போதும்.
இப்படி வேண்டாம், வேறுமாதிரி போடுங்கள் என்று  சொல்வதற்கான வாய்ப்பே இருக்காது.

13. இந்தியாவில் அல்ல ஆசியாவிலே முதன் முறையாக சிம்பொனி
இசை அமைத்தவர் இசைஞானி,சிம்போனி கம்போஸ் பண்ண குறைஞ்சது ஆறு மாசமாவது ஆகும். வெறும் 13 நாளில் மற்ற கம்போஸர்களை
மிரளச் செய்தவர் இசைஞானி.

14. விசிலில் டியூன் அமைத்து அதை ஒலினாடாவில் பதிவு செய்து பின்பு பாடகரை வைத்து பாடிய பாடல் "காதலின் தீபம் ஒன்று".

15. படத்தின் கதையை  கேட்காமல் பாடலுக்கான சூழ்நிலைகளை மட்டும் கேட்டு இசையமைத்த ஒரே படம், "கரகாட்டக்காரன்".

16. வசனமே இல்லாத காட்சியில் கூட,  அந்த காட்சியை இசையால், மௌனத்தால் செழுமைபடுத்தி பார்வையாளர்களுக்கு கொண்டு போய்
சேர்க்க முடியும் என்பது ராஜாவிற்கு நன்றாக தெரியும். அதில் ராஜா
கிரேட். இரண்டு பேர் மௌனமாக இருக்கும் காட்சியாக இருந்தால் கூட, அவர்களின் மன உணர்வுகளை கூட புரியாதவர்களுக்கும் புரிய வைத்துவிடுவார் ராஜா. அந்த அற்புதமான ஆற்றல் இளையராஜாவிற்கு உண்டு. இந்திய சினிமாவில் பின்னணி இசையில்  நம்பர் ஒன் ஜீனியஸ் இளையராஜா.

17. ராஜா சார் ரீ-ரெக்கார்டிங் பண்றதுக்கு முன்னாடி ஒரு முறைக்கு
இரண்டு முறை படத்தை பார்ப்பார், மூன்றாவது முறை படம் திரையில் ஆரம்பிக்கும்போது நோட்ஸ் எழுத ஆரம்பிச்சிடுவார், அவர் ஆரம்பிச்சு
முடிக்கும்போது படம் கரெக்டா முடியும்.  அந்த அளவுக்கு எந்த இசையமைபாளராலும் நோட்ஸ் எழுத முடியாது.

18. இந்தியாவிலேயே பின்னணி இசை கேசட்டாக வந்து ஹிட்டான ஒரே
படம் ‘பிள்ளை நிலா’

19. பருவமே புதிய பாடல் பாடு என்ற பாடலுக்கு தொடையில் தட்டி தாளத்திற்கு புதிய பரிமாணத்தை கொடுத்தவர் இசைஞானி

20. இந்தியாவில் முதல் முறையாக சிறந்த பிண்ணனி இசைக்கான
விருதை வாங்கியவர் இசைஞானி ( பழசிராஜா )

21. இசைஞானி  முதன் முதலாக 'ஸ்டீரியோ'' முறையில் பாடல்களை
பதிவு செய்த படம் பிரியா.

22. 137 வாத்தியங்கள் பயன்படுத்தப்பட்ட பாடல் "சுந்தரி கண்ணால்
 ஒரு சேதி"

23. இசைஞானியின் பாடலுக்காக கதை எழுதிய வெற்றிக்கண்ட படங்கள் "வைதேகி காத்திருந்தாள்", "அரண்மனைக்கிளி".

24.  இந்தியாவுக்கு கம்ப்யூட்டர் இசையை அறிமுகப்படுத்தியவர்
இசைஞானி ( புன்னகை மன்னன் )

25. “பஞ்சமுகி” என்றொரு ராகம் நமது ராகதேவனால் இயற்றப்பட்டுள்ளது.. ஆனால் இதுவரை அவர் இந்த ராகத்தினை எந்த பாடலிலும் பயன்
படுத்தாமல் ரகசியமாக வைத்துள்ளார்..

26. பொதுவாக 2 அல்லது 3 நாட்களிகல் படத்திற்கான இசையமைப்பை முடித்துவிடுவார் ராஜா, ஆனால் அதிகபட்சமாக, அதாவது 24 நாள்
பின்னணி இசைகோர்ப்புக்காக எடுத்துக்கொண்ட படம் ( காலாபாணி )
தமிழில் ( சிறைச்சாலை )

27. முன்பெல்லாம் கிட்டார், தபேலாக் கலைஞர்கள் உதவியுடன் ஆர்மோனியத்தை இசைத்து டியூன் உருவாக்குவார். அதற்கு பிறகு ஆர்மோனியத்தில் வாசித்துப் பார்ப்பதில்லை, கண்களை மூடிச்
சிந்திப்பார், இசை வடிவங்கள் அவர் மூளையில் இருந்து புறப்படும்.
அவற்றை அப்படியே இசைக் குறிப்புகளாக எழுதிவிடுவார். ஆர்மோனியம் இல்லாமல் இசை அமைக்கும் இந்த ஆற்றல், இந்திய சினிமா இசை
அமைப்பாளர்களில் இவரிடத்தில் மட்டுமே இருக்கிறது என்பது
பிரமிப்பான  உண்மை.

28. ராஜா இசை வித்தகர் மட்டுமல்ல... அற்புதமான கவிஞர். காவியக்
கவிஞர் வாலிக்கே வெண்பா கற்றுக் கொடுத்தவர். அதனால் ராஜாவை
தனது 'குரு' என்றும் கூறி மகிழ்ந்தவர் வாலி.

படித்ததில் பிடித்தது. மின்னஞ்சலில் வந்தது. நன்றாக இருந்தது. உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்
அன்புடன்
வாத்தியார்
=====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.4.11

தமிழ் நாட்டையே அசத்திய ஜோடி!

-------------------------------------------------------------------------
தமிழ் நாட்டையே அசத்திய ஜோடி!

எத்தனை தடவைதான் பிரியாமணியைப் பற்றியும், நயன்தாராவைப்
பற்றியுமான செய்திகளைப் படித்துக்கொண்டிருப்பீர்கள்?
ஒரு மாறுதலுக்காக இதையும் படியுங்கள்.

திருமதி. K.B.சுந்தராம்பாள் அவர்கள் 11.10.1908ஆம் ஆண்டு
ஈரோட்டிற்கு அருகில் உள்ள கொடுமுடி என்னும் ஊரில் பிறந்தார்.
அற்புதமான குரல்வளம் மிக்கவர். சிறந்தபாடகி.
காவிரிக் கரையில் இருக்கும் இயற்கை எழில் சூழ்ந்த ஊர் அது.

சிறுவயதில் மிகவும் சிரமப்பட்டவர். குழந்தையாக இருக்கும்
போது ரயிலில் பாட்டுப்பாடி, கிடைத்த காசைத் தன் தாயார்
பாலாமணி அம்மாள் அவர்களிடம் கொடுத்து பிழைக்க வேண்டிய
சூழ்நிலையில் இருந்தவர். இவருடைய அற்புதமான குரல் வளத்தைப்
பார்த்த - அவருடைய தாயார் பாலாமணி அம்மாவிற்கு
வேண்டிய காவல்துறை அதிகாரி திரு. கிருஷ்ணசாமி என்பவர்
அவரை அழைத்துக் கொண்டு சென்று அந்தக்காலத்தில் நாடகக்
கம்பெனி ஒன்றை நடத்திக் கொண்டிருந்த P.S. வேலு நாயர்
என்பவரிடம் சேர்த்துவிட்டார். அப்போது சுந்தராமபாளுக்கு
வயது பத்து.

வள்ளிதிருமணம், பவளக்கொடி, ஹரிச்சந்திரா போன்ற நாடகங்களில்
நடித்துக் கொண்டிருந்த போது, தன்னுடன் நாடகங்களில் நடித்தும்,
பாடிக்கொண்டுமிருந்த S.G.கிட்டப்பாவின் மேல் மயக்கம் கொண்டு
அவரைத் தீவிரமாகக் காதலிக்க ஆரம்பித்தார். S.G.கிட்டப்பா
அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமான பாடகர். சம வயதுக்காரர்தான்.

இருவருமே தங்கள் குரல்வளத்தால் தமிழ் மக்களைக் கட்டிப்
போட்டார்கள்.

இருவரும் திருமணம் செய்துகொள்ள ஜாதி ஒரு தடையாக இருந்தது.
இருவர் வீட்டிலுமே பலத்த எதிர்ப்பு. சுந்தராம்பாள் கவுண்டர்
இனத்தைச் சேர்ந்தவர். S.G.கிட்டப்பா அந்தனர் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

பலத்த எதிர்ப்பிற்கிடையே, நண்பர்கள், மற்றும் ஏராளமான ரசிகர்களின்
ஆதரவுடன் இருவரும் 1927ஆம் ஆண்டு திருமணம் செய்து
கொண்டார்கள்.அற்புதமான ஜோடி என்று தமிழ் நாடே பார்த்தும்,
கேட்டும் வியந்தது. அப்போது சுந்தராம்பாளுக்கு வயது 19தான்.

ஐந்து வருட காலம் ஓடியதே தெரியவில்லை.

எந்தக் கொள்ளிக்கண் பட்டதோ - 1932ஆம் ஆண்டு கிட்டப்பா
மேடையில்நடித்துக் கொண்டிருக்கும்போதே இரத்தம் கக்கி
இறந்து விட்டார். சுந்தராம்பாள் நொறுங்கிப்போய் விட்டார்.

அப்போது அவருக்கு வயது 24தான்.

அந்தக் காலகட்டத்தில் ஒலி வாங்கி, ஒலி பெருக்கியெல்லாம்
கிடையாது. Mike & Sound System, Speakers எல்லாம் கிடையாது.
மேடையில் இருந்து இருவரும் பாடினால் அரங்கில் கடைசி
வரிசையில் இருக்கும் ரசிகனுக்கும் கேட்கும் படியாகப் பாட
வேண்டும். அப்படித் தன்னை வருத்திக் கொண்டு அனுதினமும் பாடியதால்தான் கிட்டப்பா இளம் வயதிலேயே மாண்டு போனார்.

பின்னாளில் ஒரு விமர்சகன் இப்படிச் சொன்னான்:

For want of mike
Kittappa lost his life!


பிறகு சில ஆண்டுகளில் சுந்தராம்பாள் தன்னைத் தேற்றிக் கொண்டு
மேடைகளில் பக்திப் பாடல்களைப் பாட ஆரம்பித்து அதிலும்
பிரபலமானார். அவர் எங்கு பாடினாலும் கூட்டம் அலை மோதியது.

"வெந்நீறு அணிந்ததென்ன? - வேலைப் பிடித்தததென்ன?"
"பழம் நீயப்பா - ஞானப் பழம் நீயப்பா - தமிழ்ஞானப் பழம் நீயப்பா!"

போன்ற அவர் பாடிய முருகன் பாமாலைகள் மிகவும் பிரசித்தமானவை.

1953ஆம் ஆண்டு வந்த ஒளவையார் திரைப்படம் அவர் வாழ்க்கையில்
ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியதென்றால் அதில் சந்தேகம் ஒன்றுமில்லை!

அந்தப் படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டதே ஒரு சுவையான
விஷயம்.

அந்தக் காலகட்டத்தில் மிகவும் பிரபலமாக இருந்த திரைப்படத்
தயாரிப்பாளரும், ஜெமினி ஸ்டுடியோவின் உரிமையாளருமான
திரு.S.S. வாசன் அவர்கள் ஒளவையாரின் கதையைத் திரைப்படமாக
எடுப்பது என்று எண்ணிச் செயல்படத் துவங்கியவுடன், கதாநாயகி
யாக நடிக்க மிகவும் தகுதியானவர் சுந்தராம்பாள் என்று முடிவு
செய்து அவரை அணுகினார்.

தன் கணவர் இறந்தவுடன், நாடக மேடைகளைத் துறந்திருந்த
சுந்தராம்பாள் அவர்கள் சினிமாவில் நடிக்க முதலில் மறுத்து
விட்டார்.

ஆனால் தான் நினைத்ததைச் சாதிக்கும் திறமையுள்ள திரு.வாசன்
அவர்கள் விடவில்லை.

"நீங்கள் தான் நடிக்க வேண்டும்.அப்போதுதான் இந்தப் படத்திற்கு
உயிர் கிடைக்கும் என்று சொன்னதோடு நீங்கள் கேட்கின்ற தொகை
யையும் தருவதாகச் சுந்தராம்பாளிடம் சொன்னார். அப்போது
ஐந்தாயிரம், பத்தாயிரத்திற்கு மேல் யாருக்கும் சம்பளம் இல்லாத
காலம்.

அவர் விட்டால் போதும் என்பதற்காக யாருமே எதிர்பார்க்க 
முடியாத ஒரு தொகையைக் கே.பி.எஸ் அவர்கள் சொன்னார்.

ஆமாம்,"ஒரு லட்ச ரூபாய் தருவீர்களா?" என்று சும்மா கேட்டு
வைத்தார்,

சற்றும் யோசிக்காத திரு,வாசன் அவர்கள் தருகிறேன் என்று
உடனே சொல்ல அவர் நடிக்கும்படி ஆகிவிட்டது. படம் சூப்பர்
ஹிட்டாக ஓடியது தனிக் கதை!

பின்னாட்களில் நல்ல இயக்குனர்களின் படங்களில் அவர் நடித்தார்.
பூம்புகார், திருவிளையாடல் போன்ற படங்களை உதாரணமாகச்
சொல்லலாம்.

1964ஆம் ஆண்டில் தமிழ் இசைப் பேரறிஞர் விருதும், 1970ஆம்
ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் அவருக்குக் கிடைத்தது.

தமிழ் இசை உலகில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி
யவர் 1980ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

அந்த ஓளவையார் படம் பிரமாண்டமான விளம்பரங்களுடன் ஓடியது
மக்கள் அலையென வந்து படத்தைப் பார்த்தார்கள். அந்தப் படம் ஓடிய
ஒவ்வொரு ஊர்களிலும் படத்தின் காட்சி ஒன்று கலரில் - படம் நடக்கும்
திரையரங்கின் பெயருடன் நோட்டிசில் விளம்பரப் படுத்தப்பட்டது.

கலர் நோட்டிசையெல்லாம் நினத்துப் பார்க்க முடியாத காலம் 
அது. வாசன் அவர்கள் அதிலும் ஒரு சாதனை நிகழ்த்தினார் 
என்பதுதான் கூடுதல் ஆச்சரியம்.


கிட்டப்பாவின் படம். 
அருகில் ஹார்மோனியம் வாசிப்பவர் 
அவருடைய சகோதரர் காசி அய்யர் 
படம் உதவி: நன்றி ஹிந்து நாளிதழ்

அன்புடன்
வாத்தியார்
(நேறைய பதிவில் குறிப்பிட்டிருந்த அந்த 33 பதிவுகளில் இது
இரண்டாவது. மற்ற பதிவுகளும் தொடர்ந்து வரும்)

வாழ்க வளமுடன்!

1.6.10

சோகமும் சுகமானதுதான்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சோகமும் சுகமானதுதான்
---------------------------------------

தலைப்பைப் பார்த்துவிட்டு, 'சோகம் எப்படி சுகத்தைத் தரும்? என்று கேட்டு எவரும் வாதம் செய்ய வேண்டாம்.

இசைமேதை பீத்தோவனின் கதையைச் சொல்லியிருக்கிறேன்.கடைசி வரி வரை படியுங்கள்.அப்புறம் தெரியும் சோகம் எப்படி சுகப்படுமென்று!

நிழலாகத் தொடர்ந்த சோகத்திலும், அதை வென்று சாதனை படைத்தமனிதர் ஒருவர் இருந்திருக்கிறார். சரித்திரத்தில் இடம் பிடித்து இன்று பலருடைய மனதிலும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவர்தான் இசை மேதை பீத்தோவன்!

உலக சரித்திரத்தில் இடம் பிடிப்பது என்பது என்ன சாதாரணமான விஷயமா? சாதித்துக் காட்டினால் அல்லவா சரித்திரம் வசப்படும்! உலக இசை மேதைகளுக்கான தர வரிசையில் இன்றைக்கும் அவர் இரண்டாவது
இடத்தில்தான் இருக்கிறார்.(முதல் இடம் மொசார்ட்டிற்கு)

விதி எப்பொழுதும் எதிர் அணியில்தான் ஆடும் எண்பார்கள். பீத்தோவனுக்கு விதி எதிர் அணியில் ஆடியதோடு, அவரைப் பல முறை காயப்படுத்தியும், ஒருமுறை ஆட்டத்தை விட்டு வெளியேற்றவும் முயன்றிருக்கிறது.

ஆமாம்! ஒரு முறை தன் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றவர், இசையின் மேல் தான் கொண்ட தீராத காதலால் மரணத்தின் விளிம்புவரை சென்றுவிட்டுத் திரும்பியிருக்கிறார்.

கொடிது, கொடிது இளமையில் வறுமை என்பார் அவ்வையார். பீத்தோவனுக்கு இளம் வயதில் பசியே பாடமாகவும், வறுமையே வாய்ப்பாடாகவும், இருந்திருக்கிறது.

ஒருபக்கம், தினமும் குடித்துவிட்டு அகால நேரங்களில் வீட்டுக்குத் திரும்பிவந்து அனைவரையும் அடித்துத் துவைக்கும் தந்தை. மறுபுறம், ஏழு குழந்தைகளைப் பெற்று அதில் மூன்று குழந்தைகளை வறுமைக்குத் தாரைவார்த்துவிட்டு, மிச்சம் இருக்கும் குழந்தைகளுடன் போராடிக்கொண்டிருக்கும் தாய் மரியா. சந்தோஷத் தையே அறியாத வாழ்க்கை!

பீத்தொவனின் தந்தை ஜோஹன் ஜெர்மெனி நாட்டின் பான் (Bonn) நகரில் இருந்த இசை அரங்கம் ஒன்றில் வாத்தியக்காரராகப் பணியாற்றிக் கொண்டிருந்திருக் கிறார். அது ஒன்றுதான் சற்று ஆறுதலான விஷயம். தன் தந்தையிடம், அவர் நல்ல மன நிலையில் இருக்கும்போது பியானோ வாசிக்கக் கற்றுக்கொண்ட பீத்தோவன், தன்னுடைய எட்டாவது வயதிலேயே தனிக் கச்சேரி செய்யும் அளவிற்கு இசையில் ஒரு மேதைத்தனத்தை எட்டிப்பிடித்திருக்கிறார்

17.12.1770 ஆம் ஆண்டு பிறந்த பீத்தோவன், தனது 20வது வயதில் ஜெர்மெனியைவிட்டுக் குடிபெயர்ந்து, வீயன்னா நகருக்குத் (Vianna, Austria) தன் நண்பன் ஒருவனுடன் போய்ச்சேர்ந்திருக்கிறார். அங்கே பல அரங்கங்களில் வாசித்ததோடு, இசைக்கான 'இசைக் குறிப்பேடுகளை' (Notes) எழுதிக் கொடுத்தும்
பிரபலமடைந்திருக்கிறார்.அவர் இசைக்கு மயங்காதவர்களே இல்லை என்னும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

பியானோ இசைக்கலைஞன், இசையமைப்பாளர், இசைப் பயிற்சியாளர் என்று தன்னுடைய பல்முனைத் திறமைகளை வெளிக்காட்டி மக்களை அசரவைத்தவர் அவர். அந்தக் காலத்தில் இருந்த இசைக்கலைஞர்களைப் போல தேவாலயம் (Church) எதிலும் வேலைக்குச் சேர்ந்து பிழைப்பைக் கவனிக்காமல், கடைசிவரை
தன்னிச்சையாகவே இருந்து வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளோடு போராடிய மாமனிதர் அவர். இசைப் புரவலர்களால் (Patrons) அவருடைய பணத்தேவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அவர் பிறந்த தேதி தெரிய வந்ததில் கூட ஒரு சுவாரசியமான தகவல் இருக்கிறது. அவர் மிகவும் பிரபலமானவுடன், அவருடைய பிறந்த நாளைத் தெரிந்து கொள்ள விரும்பிய ரசிகர்களுக்கு, அவர் பிறந்த கிராமத்தையும், வருடத்தையும், மாதத்தையும் மட்டுமே சொல்ல ஆள் இருந்திருக்கிறது. தேதியைச் சொல்ல
ஆளில்லை. விடுவார்களா ரசிகர்கள்? பிறந்த குழந்தைக்கு அது பிறந்து 24 மணி நேரங்களுக்குள் ஞானஸ்தானம் செய்யும் வழக்கம் இருந்ததால், அவர் பிறந்த கிராமத்திலுள்ள தேவாலயத்தின் பதிவேடுகளில் இருந்து, அவருடைய பெற்றோர்களின் பெயரைச் சொல்லித் தேதியை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ஒருவனுக்கு ஒரே நேரத்தில் இரண்டு விபத்து ஏற்பட்டால் எப்படி இருக்கும்? பனை ஏறி விழுந்தவனை, கடா ஏறி மிதித்தமாதிரி என்பார்கள் - அதாவது பனை மரத்தின் உச்சியில் இருந்து பிடி தவறித் தடால் என்று விழுந்தவனை, அவன் என்ன ஏது என்று நிலைப்படும் முன்பாக, அந்தப் பக்கம் தெறிகெட்டுப் பாய்ச்சலில்
ஓடிவந்த காளை மாடு ஒன்று மிதித்து விட்டுப் போனதாம். அப்படி ஒரு இரட்டை விபத்து பீத்தோவனின் வாழ்க்கையில் அவருடைய முப்பதாவது வயதில் ஏற்பட்டது.

மிகவும் விரும்பிக் காதலித்த பெண்ணை அவர் மணந்து கொள்ள முடியாமல் போனது முதல் விபத்து. அவள் பெரிய செல்வந்தர் வீட்டுப் பெண். அவளுடைய பெற்றோர்கள் காட்டிய சிவப்புக் கொடியில் பித்தோவனின் காதல் காணாமல் போய்விட்டது. மனமுடைந்த அவர், தனது இறுதி மூச்சுவரை திருமணமே செய்து கொள்ளவில்லை.

அதே காலகட்டத்தில் அவருடைய செவிகள் கேட்கும் திறனை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க ஆரம்பித்து, பாதி செவிகள் பழுதாகி விட்டன. அடுத்தடுத்த ஆண்டுகளில் அது தொடர்ந்து, கடைசியில் செவிகளுள் இரண்டும் முழுவதும் பழுதாகிவிட்டன.

எவ்வளவு கொடுமை பாருங்கள். இசை கேட்கச் செவி வேண்டும். இசைப்பவனுக்கு அது இல்லாமல் கெட்டுக் குட்டிச்சுவராகப் போய்விட்டது என்றால் அவன் எப்படி இசைப்பான்?

ஆனாலும் இசைத்தார். அதுதான் பீத்தோவனின் மன வலிமை.

காது கேட்ட காலத்தில் அவர் இசைத்த இரண்டு சிம்பொனிகளை விட, காது பழுதான பிறகு அவர் இசைத்த மூன்று புது சிம்பொனிகள் அற்புதமாக அமைந்தன. அவருக்கு சரித்திரத்தில் இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தன!

கட்டுரையின் நீளம் கருதி அவர் முத்தாய்ப்பாய் தன்னைப் பற்றித் தன் நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்திலிருந்த முக்கியமான வரியைச் சொல்லி நிறைவு செய்கிறேன்.

"இறைவனால் படைக்கப்பெற்ற மனிதர்களில். மகிழ்ச்சி மறுக்கப்பட்ட மனிதன் நானாகத்தான் இருக்க முடியும்"

நிதர்சனமான உண்மை!

மெழுகுவர்த்தி உருகித்தான், தன்னை எரித்துக்கொண்டுதான் ஒளியைக் கொடுக்கிறது பீத்தோவனும் அப்படித்தான் தன்னுடைய உருக்கத்தில்தான் இந்த உலகிற்கு அற்புதமாக இசையைக் கொடுத்துவிட்டுப் போனார். அவருடைய சோகங்கள்தான் சுகமான இசையாக வெளிப்பட்டன!.

16.3.1827ம் தேதியன்று, தனது இசையரங்கில் சேர்த்துக்கொள்ளக் காலன் அவரைக் கவர்ந்து கொண்டு போய்விட்டான்.

சோகத்திலும் ஒரு சுகம் உண்டு. அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அது தெரியும்!
-------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!