வாருங்கள் மேகமலைக்குப் போய் வருவோம்!!!
மேகமலை போறீங்களா... அப்போ இதைப் படிக்காம போய்டாதீங்க!
ஊட்டி, கொடைக்கானல், மூணாறு வரிசையில் ஜம்முனு வந்து அமர்ந்துகொண்டிருக்கிறது மேகமலை. தேனி மாவட்டம்
சின்னமனூர் அருகே உள்ள மேகமலை, பெயருக்கு ஏற்றார் போல மேகங்கள் தவழ்ந்து செல்லும் ஓர் அழகிய இடம்.
மேற்குத்தொடர்ச்சிமலையில் அமைந்துள்ள மேகமலை, வன உயிரின சரணாலயமாக விளங்குகிறது. அரிதான ஹார்ன்பில், சலீம்
அலி வவ்வால், எங்குமே காண கிடைக்காத ஹூட்டன் பிட் வைபர் பாம்பு முதலிய பல அரிய வகை பறவைகள், விலங்குகளின்
வாழிடமாக திகழ்கிறது மேகமலை. இது பள்ளி விடுமுறைக் காலம் என்பதால் மேகமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின்
எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதற்கு ஏற்றார்போல அருமையான கிளைமேட் மேகமலைக்கு மக்களை
இழுத்துவருகிறது என்றே சொல்லலாம்.
எங்குமே காணமுடியாத சிறப்பான நில அமைப்பைக் கொண்ட மேகமலை ஆங்கிலேயரின் கண்டுபிடிப்பு. 1920-களில் தேயிலை
தோட்டங்களை அமைத்தனர். தற்போது ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் அந்தத் தேயிலை தோட்டங்கள் விரிந்து
பரவியுள்ளன. சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் மேகமலை தற்போது தேர்வு நிலை பேரூராட்சியாக உள்ளது.
*தடையாக இருந்த சாலை சீரானது*
மேகமலையை அறிந்தவர்கள் அச்சப்படுவது அதன் சாலையைப்பார்த்துதான். கல்லும் குழியுமாக இருந்த சாலையானது நான்குவருட தொடர் பணிகளுக்குப் பின்னர் தற்போது சீராகியுள்ளது. சின்னமனூரில் இருந்து சுமார் 34 கிலோமீட்டர் நீளம்
கொண்ட மலைகளில் செல்லும் சாலையில் 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.
வழியில் நம்மை வழிமறைக்கும் மேகங்களுக்கு நடுவே, மெதுவாக ஊர்ந்து செல்லும் அனுபவம் வேறெங்கும் கிடைக்காது என்றே சொல்லலாம்.
*என்னென்ன பார்க்கலாம் மேகமலையில்?*
ஹைவேவிஸ் மேலணை, கீழணை, தூவாணம் அணை, மணலாறு அணை, வெள்ளியாறு அணை, இரவங்கலாறு அணை என
மேகமலையைச் சுற்றி ஐந்து அணைகள் உள்ளன. ஹைவேவிஸ் அணையில் பிடிக்கப்படும் கோல்டு ஃபிஸ்களை அங்கேயே சூடாக
சமைத்துக்கொடுப்பார்கள். `உட்பிரையர்` என்ற தனியார் நிறுவனத்தாரின் தேயிலைத் தோட்டங்கள்தான் அங்கே அதிக பரப்பளவு கொண்டவை. அவர்களின் தேயிலைத் தொழிற்சாலைக்கு சென்று `டீ தூள்` தயாரிக்கும் முறை பற்றி தெரிந்துகொள்ளலாம். அதற்கு தனிக் கட்டணம் வசூலிக்கப்படும்.
ஹைவேவிஸ் அணையைக் கடந்து சென்றால் `இறைச்சல் பாறை` என்ற அழகான அருவி ஒன்றைக் காணலாம். வருடம் முழுவதும் தண்ணீர் வரும் இந்த அருவித் தண்ணீர் மருத்துவகுணம் கொண்டது என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை.
*இது யானை சீசன்*
பொதுவாக மேகமலையில் யானைகள் சுற்றித்திரிவது வாடிக்கை. தேயிலை தோட்டங்களுக்கு நடுவே உலாவரும் யானைகளை
மேகமலைக்குச் செல்லும் அனைவரும் பார்த்து ரசிப்பர். இந்நிலையில், சபரிமலை சீசன் ஆரம்பித்துள்ளதால், கேரள
வனப்பகுதிகளுக்குள் இருக்கும் யானைகள், மேகமலைக்கு படையெடுக்கும். மேகமலையில் இருக்கும் வட்டப்பாறை, சன்னாசி
மொட்டை, போதைப்புல்மேடு போன்ற இடங்கள் யானைகள் வலசைச் செல்லும் பாதைகள். குறிப்பாக வட்டப்பாறை பகுதியில்
தினமும் காலை மாலை யானைக்கூட்டத்தைப் பார்க்கலாம். மேகங்கள் சாலையை சூழ்ந்து கிடக்க, அந்த மேகத்திற்குள் மறைந்து நின்றுகொள்ளும் யானைகளைக் கவனித்துதான் வாகனங்களை இயக்க வேண்டும். யானைகள் மட்டுமல்லாது
காட்டுமாடுகளையும் எளிதில் பார்த்து ரசிக்கலாம். மேகமலை மக்களோடு பழகிய யானைகள் மற்றும் காட்டு மாடுகள் மனிதர்களை எந்தத் தொந்தரவும் செய்வதில்லை.
*ஓர் அன்பான வேண்டுகோள்*
மேகமலைக்குச் செல்ல வேண்டும் என்றால், தேனி மாவட்டம் சின்னமனூரில் இருந்து காலை, மாலை இரு நேரங்களில் பேருந்து
வசதி உள்ளது. சொந்த வாகனத்தில் செல்பவர்கள், மேகமலை அடிவாரப் பகுதியான தென்பழஞ்சியில் அமைந்துள்ள
வனத்துறையின் சோதனைச் சாவடியை கடந்து செல்ல வேண்டும். வன விலங்குகளின் நடமாட்டம் காரணமாக, காலை 6 மணிக்கு
மேல் மற்றும் மாலை 6 மணிக்குள் மட்டுமே சோதனைச் சாவடியை கடந்து செல்ல அனுமதிக்கப்படுவர். கடந்த விடுமுறை
தினங்களில் மேகமலைக்குச் சென்றவர்கள் வீசிவிட்டுச் சென்ற குப்பைகள் டன் கணக்கில் அள்ளப்பட்டன.
அரிய வகை உயிரினங்களின் வாழிடமான மேகமலையில் குப்பைகளையும், மது பாட்டிகளையும் தவிர்த்துவிட்டு வனச் சூழலை காக்க ஒத்துழைப்பு வழங்குமாறு மேகமலை வாசிகள் சுற்றுலாப்பயணிகளுக்கு அன்பான வேண்டுகோள் விடுக்கிறார்கள். சில்லுனு காற்று, இதமான சூழல், கொஞ்சும் மேகம், முத்தமிடும் சாரல் என ரம்மியமான இடமாக இருக்கும் மேகமலை நம் கைகளில் இருக்கிறது.
விடுமுறை நாள்களில் குடும்பத்தோடு சென்று ரசிக்கச் சரியான இடமாக விளங்கும் மேகமலையில் சூழலை காக்கும் கடமையும்
நம்மிடமே!
மேலதிக தகவல்களுக்கு:
https://en.wikipedia.org/wiki/Meghamalai
----------------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!