Astrology: ஜோதிடம்: அள்ள அள்ளப் பணமா? அல்லது தள்ளத் தள்ள விதியா?
SP.VR. சுப்பையா
-------------------------------------
இன்று உலகில் உள்ள மனிதர்களை இரண்டு பிரிவாக வகைப் படுத்தலாம். ஒன்று பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று மலைத்துப் போய் நிற்கும் மனிதர்கள். அதாவது சேர்ந்த பணத்தை, குவிந்து கொண்டி ருக்கும் பணத்தை அல்லது கொட்டிக்கொண்டிருக்கும் பணத்தை எங்கே முதலீடு செய்யலாம் அல்லது பதுக்கலாம் அல்லது என்ன செய்தால் பாதுகாக்கலாம் என்று மண்டையைப் பியத்துக் கொண்டிருப்பவர்கள் முதல் வகை.
பணத்திற்கு, அதாவது தேவைப்படும் பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துப்போய் அல்லது கிறுகிறுத்துப்போய் செயலற்று நிற்கும் மனிதர்கள் மற்றொரு வகை.
இருவருக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம்.
இரு பிரிவினருக்கும் ஜாதகப்படி என்ன வித்தியாசம்?
அதீத பணக்காரர் (Enormously Rich) பெரிய பணக்காரர் (Very rich) பணக்காரர் (rich) செள்கரியமானவர் (well to do) மேல்தட்டு மக்கள் (upper Middle class) நடுத்தர வர்க்கத்தினர் (Middle class) ஏழை (Poor) மிகவும் ஏழ்மையானவர் (Very poor) மற்றும் பரம ஏழை (extremely poor) என்று சற்று விரிவாக வகைப் படுத்தலாம்.
ஜாதகப்படி வகைப்படுத்தலாமா?
படுத்தலாம். முடிந்தவரை விவரித்துக் காட்டுகிறேன். சற்று நீண்ட கட்டுரை. ஒரே ஸ்ட்ரோக்கில் எழுதினால் திகட்டிவிடும். ஆகவே சுவாரசியம் குறையாமல் தொடர்ந்து எழுத உள்ளேன். அவைகள் வாரம் ஒரு பகுதியாக சில வாரங்களுக்கு வரும். பொறுமையுடன் படிக்க வேண்டுகிறேன். பிறகு அடுத்த தலைப்பில் வேறு ஒரு மாரத்தான் பதிவு வரும்
---------------------------------------
“அது என்ன மாரத்தான் போஸ்ட் என்ற பெயர்?”
“பாப்கார்ன் பதிவுகளைப்போல, இதுவும் ஒருவகைப் பதிவு என்று வைத்துக்கொள் ராசா!. பொட்டலம் சிறிதாக இருக்கிறதே என்ற பேச்சிற்கெல்லாம் இதில் இடமிருகக்காது. செட்டிநாட்டு விருந்தைப்போல முழுச் சாப்பாடாக இருக்கும். சுவைத்துச் சாப்பிடு ராசா!:-)))
-----------------------------------------
1
நான் தொழில்முறை எழுத்தாளன் அல்ல! முதலில் பத்திரிக்கை ஆசிரியர் ஒருவரின் வற்புறுத்தலுக்காக எழுதத் துவங்கினேன். அதை நான் விபத்து என்று வேடிக்கையாகச் சொல்வேன்.. அது நடந்து பன்னிரெண்டு வருடங்களுக்கு மேலாகிறது. அவருடன் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தபோது, தொடர்ந்து பல குட்டிக்கதைகளைச் சொல்லிச் சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருந்தேன். வியந்து பாராட்டிய அவர், இத்தனை சுவாரசியமாகப் பேசுகிறீர்களே - எழுதுவீர்களா? என்றார். எழுதினால் இன்னும் அதிகமான சுவாரசியத்துடன் எழுதலாம் என்றேன்.
“இதுவரை ஏன் எழுதவில்லை?” என்றார்
“எழுதினால் அதைப் பிரசுரிப்பதற்கு ஆள் வேண்டுமே? குமுதம் விகடன் போன்ற பத்திரிக்கைகளில் எல்லாம், ஸ்டார் எழுத்தாளர்களின் ஆக்கங்களை மட்டும்தான் பிரசுரிப்பார்கள். (இது அன்றைய நிலை) ஸ்டார் எழுத்தாளர் ஆவதற்குள் தாவு தீர்ந்துவிடும். ஆகவே எழுதவில்லை!” என்றேன்
“நாங்கள் குறும் பத்திரிக்கைக்காரர்கள்தான். எங்களுக்கு எழுதிக்கொடுங்கள். நாங்கள் பிரசுரிக்கிறோம்” என்று வாக்களித்தார். அப்படித்தான் துவங்கியது எனது எழுத்துப் பயணம். அந்தப் பத்திரிக்கையில் தொடர்ந்து இதுவரை 140ற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், குட்டிக்கதைகளையும், இரண்டு தொடர் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறேன். ஏராளமான வாச்கர்களின் ஆதரவு இருக்கிறது.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, அந்த இதழின் ஆத்மார்ந்த வாசகரும், காரைக்குடியின் மூத்த குடிமக்களில் ஒருவருமான திரு.வேங்கடாசலம் செட்டியார் என்பவர் நேரில் வந்து என்னைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்துவிட்டுக் கடைசியில் வேண்டுகோள் ஒன்றை முன் வைத்தார்.
“உங்கள் கதைகளில் ஒரு இருபது கதைகளைப் பிரதி எடுத்துக் கொடுங்கள்” என்றார்
“என்ன செய்யப்போகிறீர்கள்?” என்று கேட்டேன்.
“எனக்கு இன்னும் இரண்டு மாதங்களில் முத்து விழா (எண்பதாம் ஆண்டு நிறைவு விழா) வரவுள்ளது. அந்த விழாவிற்கு வரும் விருந்தினர்களுக்கு, உங்கள் கதைகளை ஒரு புத்தகமாக்கிப் பரிசாகக் கொடுக்கலாம் என்றுள்ளேன்”
“நல்லது. அப்படியே செய்யுங்கள். ஆனால் நான் ஒரு புத்தக ரசிகன். என் புத்தகம் எப்படி வரவேண்டும் என்பதில் எனக்கு ஒரு கனவு உள்ளது. ஆகவே நானே ஏற்பாடு செய்து, அச்சிட்டுப் புத்தகமாகத் தருகிறேன். உங்களுக்கு எத்தனை பிரதிகள் வேண்டும்?” என்று கேட்டேன்
“650 பிரதிகளை வாங்கிக் கொள்கிறேன்” என்றார்
அது நல்ல எண்ணிக்கை. உள்ளம் உவகை கொண்டது. சரி தருகிறேன் என்று என் சம்மதத்தைத் தெரிவித்தேன்.
அடுத்த நொடியே இரண்டு நூறு ரூபாய்க் கட்டுகளை எடுத்து என் மேஜை மேல்வைத்தார்.
“இது எதற்கு?” என்றேன்
“தமிழில் எழுதி எல்லாம் சம்பாதிக்க முடியாது. புத்தகங்களை அச்சிடும் வேலையை உங்கள் கைக்காசை வைத்துச் செய்து நீங்கள் சிரமப்பட வேண்டாம் இதை முன்பணமாக வைத்துக் கொள்ளுங்கள். புத்தகம் அச்சாகி வந்தவுடன் மீதம் எவ்வளவு தரவேண்டும் என்று சொல்லுங்கள். தந்துவிடுகிறேன்”
என் கைகளைப் பிடித்துக் குலுக்கி விட்டு, ஆசி வழங்கிவிட்டு, அவர் புறப்பட்டுச் சென்று விட்டார்.
இளையராஜா அவர்களின் பின்னணி இசையுடன் அந்தக் கணம் நான் காற்றில் பறந்ததென்னவோ உண்மைதான்.
அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் வேறு. அதைத்தான் விதி என்போம்!
என்ன நடந்தது?
என் வாசகருக்குக் கொடுத்த வாக்குப்படி என் புத்தகத்தை 20 சிறுகதைகளின் முதல் தொகுப்பாக இரண்டுமாத காலத்திற்குள் அவருக்குக் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு நான் ஆளாகியிருந்தேன்.
அடுத்த நாளே சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றேன்
எனக்குத் தெரிந்த பதிப்பாளர்கள் (Book Publishers) இருவர் சென்னையில் இருந்தார்கள். புத்தகம் வெளியிடுவதில் எனக்கு அனுபவம் (அப்போது) இல்லையாதலால, ஒரு பதிப்பகத்தின் மூலம் புத்தகத்தைக் கொண்டுவரும் முயற்சியில் இறங்கினேன்.
முதலில் ஒருவரிடம் என் புத்தகத்தை வெளியிடுவது குறித்துப் பேசினேன்.
அவர் சாதகமாகப் பேசவில்லை. தமிழில் புத்தகம் வாங்கிப் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதைத் தெளிவு படுத்தினார். அத்துடன் கதை, கவிதைப் புத்தகங்களுக்கெல்லாம் அச்சடித்தால் வாங்க ஆள் இல்லை என்றும் கூறினார். ஒரு பிளேட் அடித்தால் (அதாவது ஆயிரம் பிரதிகள் பிரசுரித்தால்) அதை விற்பதற்கு மூன்று அல்லது நான்கு ஆண்டு காலம் ஆகும் என்றார். புத்தகக் கண்காட்சிகளில் போட்டுத்தான் விற்க வேண்டும் என்றார். அத்துடன் சுஜாதா, பாலகுமாரன் போன்ற பிரபலங்களின் புத்தகங்கள் விற்கும் அளவில் மற்றவர்களுடையது ஐந்து சதவிகிதம் கூட விற்காது என்றும் கூறினார்.
“என்ன செய்யலாம்?” என்று கேட்டேன்
“நீங்கள் கதைகள் எழுதுவதை நிறுத்திவிட்டு, ‘பணம் சம்பாதிப்பது எப்படி?’ என்னும் தலைப்பில் எழுதுங்கள். நிறைய விற்கும்!” என்றும் யோசனை சொன்னார்
“அள்ள அள்ளப் பணம் என்னும் தலைப்பிலா?” என்று கேட்டேன். மெல்ல புன்னகைத்தார்
அள்ள அள்ளப் பண்மெல்லாம் எல்லோருக்கும் வராது. அதற்கெல்லாம ஜாதக அமைப்பு வேண்டும். ஜாதகத்தில் இரண்டாம் வீடும், பதினொன்றாம் வீடும் நன்றாக இருக்க வேண்டும். இரண்டாம் வீடு அண்டா. பதினொன்றாம் வீடு பைப். பைப்பிலும் தொடர்ந்து தண்ணீர் வரவேண்டும். அண்டாவும் ஓட்டை இல்லாமல் இருக்க வேண்டும். அத்துடன் லக்கினாதிபதியும் வலுவாக இருக்க வேண்டும். சிலருக்கு இரண்டாம் வீட்டில் பரல்கள் அதிகமாக இருக்கும். கூடவே சனி அல்லது ராகு இரண்டாம் வீட்டில் டென்ட் அடித்துக் குடியிருப்பார்கள். அண்டா இருந்தும் அது ஓட்டை அண்டா. வரும் காசெல்லாம் பல வழிகளில் கரைந்து கொண்டிருக்கும்
“அள்ள அள்ளப் பணம் என்பதெல்லாம் பொய். தள்ளத் தள்ள விதி என்பதுதான் உண்மை! - ‘தள்ளத் தள்ள விதி!’ என்னும் தலைப்பில் எழுதித் தரட்டுமா என்று நகைச்சுவையுடன் கேட்டேன்.
அவர் உற்சாகமாகிவிட்டார். “ஆகா...எழுதிக்கொடுங்கள். ஜோதிடப் புத்தகங்களுக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது!” என்றார்.
“சரி, அதைப் பிறகு பார்ப்போம். இதற்கு என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டேன்
“நீங்கள் பாதி, நாங்கள் பாதி என்ற கணக்கில் பணம் போட்டால், புத்தகம் சாத்தியப்படும்” என்றார்.
Type setting, page alignment, wrapper designing, bulk purchase of 16.8 map litho paper, off set printing, multicolor wrapper printing, glue binding' என்று பல வேலைகள் உள்ளன. உத்தேசமாக 35 முதல் 40 ஆயிரம்வரை செலவாகும் என்றார்.
எனக்கு அதில் உடன்பாடு இல்லை. யோசித்துச் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். அடுத்த பதிப்பாளரும் அதையேதான் சொன்னார். பழநி அப்பன் இருக்கிறான் பார்த்துக்கொள்வோம். நாமே முழுப்பணததையும் போட்டு புத்தகத்தைத் தயார் செய்துகொள்வோம் என்று முடிவிற்கு வந்தேன். அத்துடன் உடனே புறப்பட்டுக் கோவைக்குத் திரும்பி வந்துவிட்டேன்.
செட்டியார் வந்த அன்றுதான் எனக்கு சனி மகாதிசை முடிந்து, புதன் மகா திசை ஆரம்பமாகியிருந்தது. நான் சிம்ம லக்கினக்காரன் புதன் என் ஜாதகத்திற்கு இரண்டு மற்றும் பதினொன்றாம் வீட்டிற்கு உரியவன். ஏழில் அமர்ந்து லக்கினத்தைத் தன் நேர் பார்வையில் வைத்திருக்கிறான். நான் நினைத்தபடி எனக்குப் புதன் கை கொடுத்தான். ஒன்று அல்ல மூன்று பத்தகங்களை ஆறு மாத காலத்திற்குள் அடுததடுத்து வெளிக் கொணர்ந்தேன். செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் தொகுப்பு ஒன்று, தொகுப்பு இரண்டு, தொகுப்பு மூன்று என்று என்னுடைய மூன்று புத்த்கங்களும் வெளிவந்ததுடன், அத்தனையும் விற்றுத் தீர்ந்தன. (மூன்று தொகுப்புக்களிலும் சேர்த்து மொத்தம் 60 சிறுகதைகள். ஒவ்வொரு தொகுப்புமே 160 பக்கங்கள்.)
புத்தகங்களைப் பதிப்பதில் உள்ள நெளிவு சுளிவுகளை எல்லாம் புதன் எனக்குக் கற்றுக் கொடுத்தான். அத்துடன் வடிவமைக்கவும், அச்சிடவும் தேவையான நபர்களை எல்லாம் அவனே என் முன் கொண்டு வந்து நிறுத்தினான்.
புத்தகங்களுக்கு அணிந்துரை வாங்க வேண்டுமே!
என்னுடைய முதல் புத்தகத்திற்கு மனமுவந்து மூவர் அணிந்துரை வழங்கிச் சிறப்பித்தார்கள். முன்னாள் உச்சநீதி மன்ற நீதியரசரும், அப்போது இந்திய சட்ட ஆணையத்தின் தலைவராக (Chairman, Law Commission of India) இருந்தவருமான திருவாளர்.டாக்டர், ஜஸ்டிஸ். AR.லெட்சுமணன் அவர்கள்
சிறப்பானதொரு பாராட்டுரை நல்கினார்கள். சென்னை இலக்கியச் சிந்தனை அமைப்பின் தலைவரான திருவாளர் ப.லெட்சுமணன் அவர்கள் (இவர் முன்னாள் மத்திய நிதியமைச்சர் திரு.ப. சிதம்பரம் அவர்களின் மூத்த சகோதரர்) எனது கதைகளை அலசி நல்லதோர் அணிந்துரை நல்கினார்கள். மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்த திருவாளர். முனைவர், பேராசான், தமிழண்ணல் அவர்கள் சிறப்பானதொரு அணிந்துரை வழங்கினார்கள். மூவரின் அணிந்துரையுடன் புத்தகம் அழகு பெற்றது.
இரண்டாவது புத்தகத்திற்கு இயக்குனர் SP.முத்துராமன் அவர்களும், பெரும் புலவர்.திரு.ப.நமசிவாயம் அவர்களும், கவித்தென்றல் திரு.காசு. மணியன் அவர்களும் அணிந்துரை வழங்கினார்கள்
என்னுடைய மூன்றாவது புத்தகத்திற்கு தில்லியைத் தலைமைச் செயலகமாகக் கொண்டிருக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் பொது மேலாளர் திரு. சோம வீரப்பன் அவர்கள் அணிந்துரை வழங்கினார் (இவர் இயக்குனர் வசந்த அவர்களின் மூத்த சகோதரர்)
மூன்று புத்தகங்களுமே காரைக்குடியில் உள்ள செல்வந்தர்கள் மூவரின் வீடுகளில் நடந்த மணி விழாக்கள் மற்றும் திருமண விழாக்களில் வெளியிடப் பெற்றன.
வெளியீடு என்றால் மண்டபத்தைப் பிடிக்க வேண்டும். அழைப்பிதழ்கள் அனுப்பி வாசகர்கள் மற்றும் நண்பரகளைச் சேர்க்க வேண்டும். தலைமை தாங்க ஒருவரையும், வெளியிட ஒருவரையும், முதல் பிரதியை வாங்கிக் கொள்ள ஒருவரையும் ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் நிகழ்ச்சியில் பேச இருவரை ஏற்பாடு செய்ய வேண்டும். வந்திருப்பவர்களுக்கு உணவு வழங்க வேண்டும். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் குறைந்தது ஐம்பதாயிரம் ரூபாயாவது செலவு செய்ய வேண்டும்.
ஆனால் எனக்கு ஒரு பைசாக் கூட செலவு ஏற்படாமல் பழநிஅப்பன் அதற்கும் வழி வகுத்தான்.
எப்படி நடந்தது அது?
பெரியவர் திரு.மு.வெ,தெ வேங்கடாசலம் செட்டியார் அவர்கள் மூலமே என்னுடைய முதல் புத்தகத்தை வெளியிட்டுச் சிறப்பிக்க
பழநியாண்டவர் அருள்பாலித்தார். ஆமாம். பெரியவரின் முத்து விழா 12-4-2009ம் தேதி காரைக்குடி ஆலங்குடியார் வீதியில் உள்ள அவருடைய வீட்டில் நடைபெற்றபோது, என்னுடைய புத்தக வெளியீட்டு விழாவும் அங்கேயே நடைபெற்றது.
குழந்தைக் கவிஞர் திரு. செல்ல கணபதி அண்ணன் அவர்கள் வெளியீட்டிற்கு தலைமை தாங்கி புத்தகத்தை வெளியிட, தேவகோட்டை ஜமீந்தார் திரு.சோம. நாராயணன் செட்டியார் அவர்கள் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டு கெளரவித்தார்கள்
நகைச்சுவை மன்னரும், பட்டிமன்ற பேச்சாளரும், பேராசிரியருமான திரு.கண.சிற்சபேசன் அவர்கள் பாராட்டுரை நல்கி விழாவிற்குச் சிறப்புச் சேர்த்தார்கள்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த திரளான பெருமக்களுக்கு மதிய விருந்து அவர்கள் வீட்டிலேயே சிறப்பாக வழங்கப்பெற்றது,
அடுத்து வந்த ஆறு மாதங்களுக்குள் மேலும் இரண்டு புத்தகங்களை காரைக்குடியிலேயே வெளியிட்டுச் சிறப்பிக்க பழநியாண்டவர்
அருள்பாலித்தார் என்றால் அது மிகையல்ல!
கடந்த 9 ஆண்டுகளில் 15 புத்தகங்களை வெளியிட்டிருக்கிறேன். அவற்றுள் “சனீஷ்வரன் படித்த பள்ளிக்கூடம்” என்ற கதைப் புத்தகமும் ”வாரணாசிக்கு வாருங்கள்” என்ற பயணக் கட்டுரைப் புத்தகமும் பலருடைய பாராட்டுக்களையும் பெற்று என்னை ஆதீத மகிழ்ச்சிக்கு ஆளாக்கின!!!!“
அன்புடன்
SP.VR. சுப்பையா,
கோயமுத்தூர் - 641 012
==============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!