மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My Photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

Google+ Followers

Google+ Badge

We and God with us!

We and God with us!
நம்மோடு இருக்கும் தெய்வம்

அறிவிப்பு!

இந்தப் பதிவில் உள்ள ஆக்கங்களை ,பாடங்கள், கட்டுரைகள் மற்றும் கதைகளை புத்தகமாக வெளியிட உள்ளேன். ஆகவே பதிவில் உள்ளவைகள் படிப்பதற்கு மட்டுமே. வாசகர்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மட்டுமே! வேறு எந்த மாற்று உபயோகத்திற்கும் என் அனுமதியின்றி பிரதி எடுப்பது மறுக்கப்படுகிறது! காப்பு உரிமை பெறப்பட்டுள்ளது. அதை மனதில் கொள்க!

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

Facts of Life

Facts of Life
உபயம்: கூகுள் ஆண்டவர்

Request

வேண்டுகோள்:

எனக்குக் கடிதம் எழுதுபவர்கள். classroom2007@gmail.com என்ற எனது மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே எழுதுங்கள்.

அதுபோல எனது ஜோதிடப் புத்தகங்களுக்காக எழுதுபவர்கள் umayalpathippagam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே எழுதுங்கள்.

அன்புடன்
வாத்தியார்

1.7.15

Short story: சிறுகதை: ஆச்சிக்குக் காட்சி கொடுத்த பழநிஅப்பன்!


Short story: சிறுகதை: ஆச்சிக்குக் காட்சி கொடுத்த பழநிஅப்பன்!

சென்ற மாதம் அடியவன் எழுதி, மாத இதழ் ஒன்றில் வெளிவந்த சிறுகதை ஒன்றை நீங்கள் படிப்பதற்காக இன்று பதிவில் ஏற்றியுள்ளேன். அனைவரும் படித்து மகிழுங்கள்1

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------
ஆச்சிக்குக் காட்சி கொடுத்த பழநிஅப்பன்!

   “கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பது ஆன்றோர்
கூறிய வாக்கு. அதை நன்கு அறிந்ததால்தான் என்னவோ நகரத்தார்கள் தாங்கள் குடியேறிய ஊர்களில் எல்லாம் கோயிலைக் கட்டினார்கள்.
அத்துடன் தாங்கள் கட்டிய கோயிலுக்கும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருப்பணிகளைச் செய்து, குடமுழுக்கையும் நடத்தினார்கள்.

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பதற்கு விஞ்ஞான ரீதியாகவும் ஒரு நல்ல விளக்கம் உண்டு. அக்காலத்தில் இடி,மின்னல் ஏற்பட்டால் அதைத் தாங்குவதற்கு எந்த வித வசதியும் இல்லை. கோயில்களில் வைக்கப்படும் கொடிமரத்தை தேக்கு மரத்தால் செய்து
அதன் மேல் தாமிரத் தகடு வைத்து மூடியிருப்பார்கள். அதில் இடியோ மின்னலோ பட்டால் அது அப்படியே பூமிக்குள் ஈர்க்கப்பட்டு விடும்.
அத்துடன் கொடிமரத்தின் கீழ் நேர்த்திக்கடனுக்காக உப்பைக்
கொட்டுவார்கள். அதனால் அந்த கொடிமரத்தின் ஈர்ப்பு சக்தி அதிகமாகும். அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இடி,மின்னலினால் எந்தவித
பாதிப்பும் ஏற்படாது. ஆனால் கோயிலோ,கொடிமரமோ இல்லாவிட்டால் இதன் பாதிப்பு அப்படியே மக்களைப்பாதிக்கும்.மேலும் கொடிமரத்திற்கு
பூஜை செய்யச்செய்ய அதன் எதிரே கற்பக்கிரகத்தில் உள்ள மூலவருக்கு சென்று மூலவரின் சக்தியை அதிகரிக்கச் செய்து, பின் கொடிமரத்தின்
கீழ் வணங்கும் மக்களுக்கும் அதன் பலன் சென்றடையும்.

கோயில்களில் கட்டப்படும் ராஜகோபுரங்களில் எல்லாம் நடுவில்
வாசல் போன்று காற்று செல்ல வழி ஏற்படுத்திஇருப்பார்கள்.
ஏனென்றால் வேகமாக வீசும் காற்றால் கோபுரம் சாய்ந்து விடாமல்,
அந்த பாதை வழியே காற்று வெளியேறிவிடும். இதனால் கோபுரத்திற்கு
எந்த பாதிப்பும் ஏற்படாது.

நகரத்தார்களின் அதீத இறை உணர்வும், இறை வழிபாடும்தான்
அவர்களை இன்றுவரை காத்துக் கொண்டிருக்கிறது.

செட்டியார்களில் ஆயிரத்தில் ஒருவரையாவது இறையுணர்வு
இல்லாத நாத்திகர் என்று காட்டமுடியும். ஆனால் ஆச்சிமார்களில் இறையுணர்வு இல்லாதவர்  என்று ஒருவரைக் கூட நீங்கள் காட்ட
முடியாது. ஆச்சிமார்களின் அந்த இறையுணர்வுதான், அவர்களின் பிள்ளைகளை நெறிப்படுத்திக் கொண்டிருக்கிறது. நகரத்தார் சமூகம் இன்றளவும் ஆன்மீகத்தில் தீவிர ஈடுபாடு உள்ள சமூகமாக தலை
நிமிர்ந்து நிற்கிறது. ஆச்சிமார்களால் தான் அது சாத்தியப்படுகிறது
என்றால் அது மிகையல்ல!

”டேய், இந்தப் பாலைக் கொண்டுபோய் பிள்ளையார் கோயில்
அண்டாவில் ஊற்றிவிட்டு, அருகம்புல் மாலையையும் அர்ச்சகரிடம் கொடுத்து விட்டுவா”என்று தங்கள் வீட்டுப் பையன்களைக் கட்டா
கட்டியாக கோயிலுக்கு அனுப்பி வைக்கும் பழக்கம் எல்லா ஆச்சிமார்களிடமும் இருந்திருக்கிறது.

தாங்கள் செல்லும் கோயில்களுக்கெல்லாம் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு சென்றிருக்கிறார்கள். பிள்ளைகளுக்கெல்லாம்
இறைவன் இறைவியின் திருநாமங்களையே பெயர்களாகச் சூட்டியிருக்கிறார்கள்.

முத்தப்பன் இல்லாத வீடும் இல்லை, முருகப்பன் இல்லாத ஊரும்
இல்லை என்பார், கவியரசர் கண்ணதாசன். அந்த அளவிற்கு
முருகப்பெருமான் மீதும் பக்தியோடு இருந்திருக்கிறார்கள்.
இன்றும் இருக்கிறார்கள்.

சரி, சொல்லவந்த விஷயத்திற்கு வருகிறேன். தீவிர முருக
பக்தையான முத்தாள் ஆச்சிக்கு முருகப்பெருமான் எப்படி உதவி
செய்தார் என்பதுதான் கதையில் வரவிருக்கும் முக்கிய செய்தி.

நகரத்தார் வீடுகளில், குடும்பங்களில் வீட்டுக்கு வீடு எட்டுப்
பிள்ளைகள், பத்துப் பிள்ளைகள் என்றிருந்த காலம் அது. சில வீடுகளில்பணத்திற்கு முடையிருந்தாலும் பிள்ளைகளுக்கு முடையில்லாமல் இருந்தது.

முத்தாள் ஆச்சிக்கு ஏற்கனவே 2 பிள்ளைகள். இப்போது உண்டாகி
யிருந்தார். மூன்றாவது பிரசவம்.

ஆச்சி இரண்டுமாதக் கர்ப்பிணியாக இருக்கும்போது இளைப்பு நோய்
அதாவது மூச்சிரைப்பு நோய் (ஆஸ்த்மா) வந்து விட்டது. ஆனால் ஆச்சி பயப்படாமல் பழநிஅப்பனைப் பிரார்த்தித்துக் கொண்டு மனத் துணிவோடு இருந்தார்கள்.

ஆனால் ஆச்சியின் தந்தை சாத்தப்ப செட்டியாருக்கு மட்டும் மிகுந்த கவலையாகிவிட்டது.

“ஆத்தா, பிரசவ சமயத்தில் உனக்கு ஏதாவது சிக்கல் என்றால் நாங்கள்
என்ன செய்வோம். உன்னுடைய மற்ற இரண்டு பிள்ளைகளை யார்
பார்த்துக் கொள்வது?” என்று புலம்பலாகச் சொல்லிக் கொண்டே
இருந்தார்கள்.

உள்ளூர் மருத்துவர் ஒருவரும் வந்து பார்த்து ஆச்சியின் இளைப்பு
நோய் குணமாக மருந்து எழுதிக் கொடுத்துவிட்டுப் போனார்.

அந்தக் காலத்தில் மகப்பேறு மருத்துவர், மகப்பேறு மருத்துவமனை
என்று எதுவும் இல்லை. உள்ளூரில் இருந்த மருத்துவச்சி (midwife)
தான் அந்த வேலையைச் செய்து கொண்டிருந்தார். நூற்றுக்கணக்கான பிரசவங்களைப் பார்த்தவர் அவர். எல்லாமுமே சுகப் பிரசவங்கள்தான். உள்ளூரில் இருந்த செட்டியார் வீடுகள் அனைத்தும் அவருக்குப்
பரீட்சயம். ருக்மணி அம்மாள் என்றால் அனைவருக்கும் தெரியும். பாலக்காட்டிற்குப் பக்கத்தில் தட்சன்பாரா என்னும் கிராமம்தான்
அவருக்குப் பூர்வீகம். ஆனால் அவர் இந்தப் பகுதிக்கு வந்து குடியேறி
முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. போக்குவரத்திற்கு ஒரு
மாட்டு வண்டியையும், நல்ல வண்டிக்காரர் ஒருவரையும் வைத்திருந்தார்.

கூப்பிட்ட குரலுக்கு உடனே வந்துவிடுவார். கொடுக்கிற பணத்தை
வாங்கிக் கொள்வார். இன்முகத்தோடு இருப்பார்.

சாத்தப்ப செட்டியாருக்கு எட்டுக் குழந்தைகள். முத்தாள் ஆச்சிதான்
மூத்த மகள். சாத்தப்ப செட்டியாரின் மனைவி மீனாட்சி ஆச்சிக்கு
கடைசி இரண்டு பிரசவங்களைப் பார்த்தவர் அவர்தான். இப்போது
உமையாள் ஆச்சிக்கும் அவருடைய சகோதரிகள் ஐவருக்கும்
அவர்தான் மகப்பேறைப் பார்ப்பவர். வருடங்களுக்கு சாத்தப்ப
செட்டியார் வீட்டில் 3 அல்லது 4 பேரக்குழந்தைகள் பிறந்த வண்ணமாக இருக்கும்.

முத்தாள் ஆச்சி தன்னால் தன் அப்பச்சிக்கு எந்த சிரமமும் வரக்கூடாது என்பதற்காக மருத்துவர் கொடுத்த மருந்தை 3 வேளையும் உட்கொண்டதோடு,, சதாகாலமும் பழநியப்பனைப் பிரார்த்தித்த
வண்ணமாக இருந்தார்.

ஜெட்வேக விமானங்கள் இல்லாத காலத்திலும் காலம் ஜெட்
வேகமாகத்தான் ஓடிக்கொண்டிருந்தது. எட்டு மாதகாலம் போனதே தெரியவில்லை!
     
”ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!
சரவண பவனார் சடுதியில் வருக”

என்னும்  கந்தர் சஷ்டிக் கவசப் பாடல் வரிகளை முத்தாளாச்சி
நாளொன்றுக்கு எத்தனை முறைகள் மனதிற்குள்ளேயே பாடினார்கள்
என்று தெரியாது.

ஆனால் பழநிஅப்பன் ஆச்சியின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து வேண்டுகோளை நிறைவேற்றினான். ஆச்சிக்கு இளைப்பு நோய்
முற்றிலும் குணமாகியது. அத்துடன், ஒரு நல்ல நாளில் ஆண்
மகவையும் ஈன்றார்கள். சுகப்பிரசவம். கார்த்திகை நட்சத்திரத்தில்
ஆண் குழந்தை பிறந்து அனைவரையும் மகிழ்வித்தது.

ஆச்சி அவர்கள் குழந்தைக்கு ‘பழநிஅப்பன்’ என்று பெயர் சூட்டி
மகிழ்ந்தார்கள். அத்துடன் இசையும்போது பழநிக்கு வந்து குழந்தைக்கு முடியிறக்குவதுடன், தானும் முடிக் காணிக்கை செலுத்துவதாக வேண்டிக்கொண்டார்கள்.

தான்தான் பழநிஅப்பனின் பெரிய பக்தை என்றும் நினைத்துக்
கொண்டார்கள். அது தவறு, தன்னைவிட பெரிய பக்தைகள்
எத்தனையோ பேர்கள் இருக்கிறார்கள் என்பது ஆச்சி அவர்களுக்குப் பின்னொரு நாளில் தெரியவந்தது. அதை உணர்த்தியதும்
முருகக் கடவுள்தான்.

என்ன அது?

தொடர்ந்து படியுங்கள்.
 *******************************

"சரவணப் பொய்கையில் நீராடி 
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
இரு கரம் நீட்டி வரம் கேட்டேன் - அந்த 
மன்னவன் இன்னருள் மலர் தந்தான்"

என்று கவியரசர் கண்ணதாசன் அவர்கள் ஒரு பாடலின் சரணத்தில் எழுதியதுபோல பழநிக்கு அருகில் உள்ள சரவணப் பொய்கை ஆற்றில்
நீர் ஓடிக்கொண்டிருந்த காலம்.

காலம் என்றால் என்ன ஆண்டு என்று வேண்டாமா? 1956ஆம் ஆண்டு
என்று வைத்துக்கொள்ளுங்கள்.

இரண்டு ஆண்டுகள் கழித்துத்தான் முத்தாள் ஆச்சிக்கு பழநிக்குச்
செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. தன் பிரார்த்தனையைச் செலுத்து
வதற்காக தன் இரண்டு வயதுக் குழந்தையுடன் பழநிக்குப் புறப்பட்டு வந்தார்கள். துணைக்கு தன் அடுத்த சகோதரியையும், ஆண் துணைக்கு
தன் சகோதரியின் 15 வயது மகன் சிங்காரத்தையும் கூட்டிக் கொண்டு வந்தார்கள்.

ஆச்சியின் மகன் பழநியப்பன் தாய்ப்பால் குடித்து இரண்டு ஆண்டுகளில் கெட்டியாகவும் சுட்டியாகவும் வளர்ந்திருந்தான். இறக்கிவிட்டால்  குடுகுடுவென்று அக்கம் பக்கமெல்லாம் ஓடுவான். மேலும் சிங்காரத்துடன் ஒட்டிக் கொண்டுவிட்டான். மழலையாக அண்ணா, அண்ணா என்று
அழைத்து சிங்காரத்தை வசப் படுத்தியதோடு, எங்கு சென்றாலும் சிங்காரத்தையையே தூக்கும்படி செய்து கொண்டிருந்தான்.

முதல் நாள் இரவு வந்திறங்கியவர்கள் நகரத்தார்களின் பெருமைக்குரிய இராக்கால மடத்தில் தங்கினார்கள். அடுத்த நாள் காலை, ஒரு குதிரை வண்டியை வைத்துக்கொண்டு சரணவப் பொய்கை ஆற்றிற்குச் சென்று முத்தாள் ஆச்சிக்கும் சிறுவனுக்கும் முடிக்காணிக்கை செலுத்தியதோடு, ஆற்றில் நீராடிவிட்டுத் திரும்பினார்கள்.

வெய்யிலுக்கு முன் மலையேற வேண்டும் என்று வந்த வேகத்திலேயே
மலை ஏறி, கோயிலுக்குள் சென்று, முருகப் பெருமானை மனங்குளிர வழிபட்டுவிட்டு, சந்நிதானத்தை விட்டு வெளியே வந்தவுடன், மூன்று
முறை வெளிப் பிரகாரத்தைச்  சுற்றி வந்தவர்கள், கோயிலின் முன்புறம்
உள்ள மண்டபத்தில் வந்து அமர்ந்தார்கள்.

அப்போதெல்லாம் கம்பிகள் போட்டு அடைக்காமல் மண்டபம்
முழுவதும் திறந்தவெளியாகவே இருக்கும். சிங்காரம் போய் காசு
கொடுத்துக் கோயில் பிரசாதங்களை வாங்கிவர, பெரியவர்கள்
இருவரும் அவனும் சேர்த்து பிரசாதத்தை ருசித்துச் சாப்பிடத்  துவங்கினார்கள்.

அப்போதுதான் அது நடந்தது.

அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த இடத்தில் இருந்து இருபது அடிகள்
தள்ளி உள்ள இடத்தில் ஒரு வயதான ஆச்சி ஒருவர் அமர்ந்து, தியானம் செய்து முருகனை வழிபட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு
எண்பது வயது இருக்கலாம். அவர்களுடன் வந்தவர்கள் எல்லாம்
இரண்டாவது முறை தரிசனத்திற்காகக் கோயிலுக்குள் சென்றிருந்தார்கள்.

கண்கள்தான் மூடியிருந்ததே தவிர, பெரிய ஆச்சியின் வாய் சத்தமாக தனக்குத்தானே பேசும் முகமாகச் சொற்கள் அடுக்கடுக்காக வந்தன

”அப்பா, பழநியப்பா, ராசா, எத்தனை ஆண்டுகளாக உன்னை நான் வணங்கிக் கொண்டிருக்கிறேன்?. எப்போது என் ஆசையை நிறைவேற்றுவாய்? எப்போது எனக்குக் காட்சி கொடுப்பாய்? அருணகிரிநாதருக்குக் காட்சி கொடுத்தாய். குமரகுருபருக்குக் காட்சி கொடுத்தாய். எனக்கு மட்டும் ஏன் காட்சி
கொடுக்க மாட்டேன் என்கிறாய்? என் ஆய்சு முடிவதற்குள் காட்சி கொடுப்பாயா? என் கண்களில் உன்னைக் காணும் சக்தி உள்ளபோதே
காட்சி கொடுத்தால் என்ன?
உடனே வா, பழநியப்பா....பழநியப்பா....பழநியப்பா!”

பழநியப்பா, என்ற சொல்லைச் சற்று உணர்ச்சியுடனும் அதிக
ஒலியுடனும் சொல்ல, இங்கே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பழநியப்பன், தன்னைத்தான் கூப்பிடுகிறார்கள் என்று, மின்னல்
வேகத்தில் ஓடிச் சென்று ஆச்சியின் முன் நின்றான்.

ஆச்சி அவர்கள் கண்களைத் திறந்து பார்க்கவில்லை. சிறுவன்
ஆச்சியின் நெற்றியைத் தொட்டு, அதிர்வை உண்டாக்கினான்.
சட்டென்று கண்களைத் திறந்து பார்த்தார்கள். சிறுவன் மழலையாக
நெஞ்சில் தன் பிஞ்சுக் கரங்களை வைத்து “ பழநியப்பன்” என்றான்.
அதாவது தன் பெயரைச் சொன்னான்.

ஆச்சி பரவசத்தின் எல்லைக்கே போய் விட்டார்கள்.

சிறுவனின் கைகளைப் படித்துத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டவர்கள், பரவசத்துடன் பேச ஆரம்பித்தார்கள், “சாமி, ராசா.. பழநியப்பா...வந்திட்டியா அய்யா....என்னே உன் கருணை...இப்பவாவது உன் மனம் கனிந்ததே....”
என்று சொல்லிக் கொண்டே வந்தவர்கள் சிறுவனின் கண்கள், தன் அருகே தான் வைத்திருந்த மலை வாழைப்பழங்களின் மீது செல்வதைப் பார்த்து விட்டார்கள்.

உடனே கேட்டார்கள்.”உனக்கு எப்போதுமே பழத்தின் மீதுதான் கண்கள்...
பழம் வேண்டுமா அய்யா?”

சிறுவன் தலையசைக்கவும், இருப்பதில் பெரிய பழமாக ஒன்றைப்
பிய்த்து அவன் கையில் கொடுத்தார்கள்.

வாங்கிக் கொண்ட சிறுவன், “அண்ணனுக்கு..” என்று இன்னொரு கையை நீட்டவும் ஆச்சி அவர்கள் அசந்து போயவிட்டார்கள். சிறுவன் அண்ணனுக்கு என்று கேட்டது, தான் சவாரி செய்யும் அண்ணன் சிங்காரத்திற்காக.
ஆனால் ஆச்சியின் சிந்தனை வேறுவிதமாப்போய் விட்டது

”அடடே, உங்க அண்ணன் விநாயகப் பெருமானும் வந்திருக்கிறாரா?
எங்கே அவர்? வெளியே நிற்கிறாரா? அவருக்கு ஒரு பழம் பத்தாதே...
இந்தா!” என்று சொல்லி ஒரு முழு சீப்பை எடுத்துக் கொடுக்க
முயன்றார்கள்.

அதற்குள் இவற்றை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த
முத்தாளாச்சியும் அவருடைய சகோதரியும் அந்த இடத்திற்கு
விரைந்து வந்ததுடன், “ஆச்சி ஒரு பழம்போதும். அவன் எங்கள்
குழந்தைதான்” என்று சொல்ல ஆச்சி மறுத்துப் பேச ஆரம்பித்து
விட்டார்கள்.

“என்னது உங்கள் குழந்தையா? இல்லை இவன் பழநிஅப்பன்.
வேலுடன், மயில்மீது வந்து எனக்குக் காட்சி கொடுத்தான். இப்போதும் பாருங்கள். இந்தச் சிறுவனின் கண்களில் வேலும் மயிலும் தெரிகிறது”

அவர்கள் இருவரும் தங்கள் குழந்தையின் கண்களைப் பார்க்க,
இவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. ஆனால், ஆச்சி அவர்கள்,
தன் கண்களை மூடியவாறு, சிறுவனின் கைகளைப் பிடித்துக்
கொண்டு பழநியப்பா...பழநியப்பா...என்று சொல்லத்துவங்கி
விட்டார்கள்.

ஆச்சியின் கண்களில் இருந்து நீர் பெருகத் துவங்கியது.

இவர்கள், ஆச்சியிடம் இருந்து தங்கள் குழந்தையைக் கூட்டிக்கொண்டு தங்களுடைய இருப்பிடத்திற்குத் திரும்பிவர எத்தனித்தார்கள். அந்தப் பெரியாச்சி விடவில்லை. தன் கைப் பையைப் பிரித்து, அதில் இருந்த
புது தங்கச் சங்கிலி ஒன்றை எடுத்து, சிறுவனின் கழுத்தில் அணிவித்து விட்டார்கள். இவர்கள் எவ்வளவோ மறுத்தும் விடவில்லை.

“பழநி அப்பனுக்கு உண்டியலில் போடுவதற்காகக் கொண்டுவந்ததுதான்
இது. அவனே எனக்குக் காட்சி கொடுத்ததால், அவன் கழுத்திலேயே அணிவித்து விட்டேன். வந்த பழநியப்பனை சும்மா அனுப்பலாமா? மறுக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று சொல்லி அவர்களை
அனுப்பி வைத்தார்கள்.

பக்தியின் உன்னத நிலை இதுதான்.

இறைவனைக் காண வேண்டுமென்றால் காணலாம். பழநிஅப்பனைக்
காண வேண்டுமென்றால் காணலாம். எல்லாம் அவன் மீது உங்களுக்கு
உள்ள பக்தியையும், விசுவாசத்தையும் நம்பிக்கையையும் பொறுத்தது
அது.

சரவணப் பொய்கையில் நீராடி 
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
இரு கரம் நீட்டி வரம் கேட்டேன் - அந்த 
மன்னவன் இன்னருள் மலர் தந்தான்

அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை 
அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை
இவ்விதம் இவர் தந்த இன்ப நிலை கண்டு 
எவ்விதம் நான் கண்டேன் மாறுதலை

நல்லவர் என்றும் நல்லவரே 
உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே
நல்ல இடம் நான் தேடி வந்தேன் 
அந்த நாயகன் என்னுடன் கூட வந்தான்

என்று கவியரசர் எத்தனை நம்பிக்கையுடன் அந்த நாயகன் என்னுடன்
கூட வந்தான் என்று எழுதினார் பார்த்தீர்களா?

முத்தாள் ஆச்சியின் கண்கள் பனித்தன. அந்த நாயகன் என்னுடன் கூட வந்தான் என்ற வரிகள் மட்டும் அவர்களுடைய மனத்திரையில்
திரும்பத் திரும்ப ஒலித்துக்கொண்டிருந்தது.

நம் முன்னோர்கள் எல்லாம் அவர்களுடைய பிள்ளைகளுக்கு இறைவன், இறைவியின் பெயர்கலையே சூட்டினார்கள். அதுபோல முருக பக்தர்கள் எல்லாம் தங்கள் பிள்ளைகளுக்கு முருகப்பன், முத்தப்பன், சுப்பிரம்ணியன், செந்தில்நாதன், சுவாமிநாதன், பழநியப்பன் என்று முருகனின்பெயர்களைச் சூட்டினார்கள். அப்பிள்ளைகளின் வாழ்க்கை அதிர்ஷ்டமான பெயருடனேயே துவங்குகிறது. எல்லாவற்றிலும் பழநியப்பன் என்ற பெயர் சூப்பரானது. அதை மனதில் கொள்ளுங்கள்
===============================================================              
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

30.6.15

நண்பனாக வந்தவன் அவன்!


நண்பனாக வந்தவன் அவன்!

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய பக்திப் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------
ஆயிரம் போற்றி பாடினும் ஆவல் ஆறுமோ முருகா
(ஆயிரம் ... )
ஆறுமுகா ...
(ஆயிரம் ... )

தாயினும் இனித்தாய் தந்தையாய் வளர்த்தாய் 
வாழ்வெல்லாம் வகுத்தாய் வரம் எனக்களித்தாய் 
(ஆயிரம் ... )

நீயே எளியேன் நெஞ்சினில் நின்றாய்
நிம்மதி தந்தே அஞ்சேல் என்றாய் 

நாயேன் பிழைகள் நாளும் பொருத்தாய் 
நண்பனாய் வந்தே துன்பம் தவிர்த்தாய் 
(ஆயிரம் ... )
ஆறுமுகா
(ஆயிரம் ... ).

பாடியவர்: பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜன் 
==============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

27.6.15

அறிவிப்பு: வாத்தியாரின் ஜோதிட நூல் - முதல் தொகுதி

அறிவிப்பு: வாத்தியாரின் ஜோதிட நூல் - முதல் தொகுதி

vagupparai Astrology Book - Part one

ஒருவழியாக பல சிரமங்களுக்கிடையே முதல் பகுதியின் தொகுப்பு வேலை, படிப்பதற்குத் தகுந்த முறையில் அத்தியாயங்கள் வரிசைப்படுத்தப் பெற்று Type setting for printing, எழுத்துப்பிழைகள் திருத்தம், படங்கள், அட்டவணைகள் சேர்க்கை என்று எல்லாம் முடிந்து புத்தகம் முழு வடிவம் பெற்று, அச்சிற்குத் தயாராகிவிட்டது.

ஒரு நவீன அச்சகத்தில் கொடுத்தால், printing and binding ஐ ஒரே ஸ்ட்ரோக்கில் முடித்து அவர்கள் புத்தகங்களைக் கையில் கொடுத்துவிடுவார்கள்.
இன்னும் 15 முதல் 20 நாட்களுக்குள் புத்தகங்கள் வந்துவிடும். வந்தவுடன் முன்பதிவு செய்து வைத்துள்ள அனைவருக்கும் அவைகள் முதலில் அனுப்பி வைக்கப்படும்

புத்தகம் - தொகுதி ஒன்று
அத்தியாயங்கள் - 65
பக்கங்கள் - 320
புத்தகத்தின் எடை 350 கிராம்கள்
விலை: ரு.320:00
கூரியர் செலவு: தமிழ்நாட்டிலுள்ள ஊர்களுக்கு ரூ.50:00
பிற மாநிலங்களில் உள்ள ஊர்களுக்கு சற்றுக் கூடுதலாக இருக்கும்

முன் அட்டை


பின்பக்க அட்டை
புத்தகம் நன்றாக அமைந்துள்ளது. பார்த்தால், படித்தால் மகிழ்ச்சி கொள்வீர்கள்.ஆகவே அனைவரும் இன்னும் 20 தினங்களுக்குப் பொறுத்திருங்கள்.

அன்புடன்,
வாத்தியார்
------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

காப்புரிமை பெற்ற வலைப் பதிவு இது

காப்புரிமை பெற்ற வலைப் பதிவு இது
ஆக்கங்களைப் பிரதி எடுத்துக்கொண்டுபோய்த் தவறாகப் பயன்படுத்தவேண்டாம்!