வாரமலர்: இன்றைய வாரமலரை இரண்டு ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. முதலில் வருவது வகுப்பறையின் சீனியர் மாணவர் எழுதியது. அடுத்தது வாத்தியார் எழுதியது. இரண்டையும் படித்து மகிழுங்கள். உங்கள் கருத்தை எழுதுங்கள்!
+++++++++++++++++++++++++++++++++++++
1
அவர் மனைவிக்கு எத்தனை கானா பைகள்?
கானா பைகள் என்பதற்கு அர்த்தம் தெரியாதவர்கள் முழுப் பதிவையும் படிக்கவும்!
--------------------------------------------------------------------------------------------------------------------
என்னைப் போல ஓர் அம்மாஞ்சிக்கு வயிற்று நோவு வந்து சேரந்தது. வைத்தியரிடம் போனான். வைத்தியர் என்றால் ஏ,பி,சி,டி 26 எழுத்துக்களையும் போட்டுக்கொண்டு இருக்கிறாரே அந்த ஆங்கில டாக்டர் இல்லை.நாட்டு வைத்தியர்.
"உமது நோயை 3 வேளை மருந்தில் சரி பண்ணி விடுகிறேன்".
"ஆஹா! மகிழ்ச்சி ,மகிழ்ச்சி ! மருந்தை எடுத்துக் கொடும்"
ஒரு சூரணம், ஒரு கஷாயம் கொடுத்தார். 5 அணா பீஸ் கொடுத்துவிட்டு வாசல் வரை வந்துவிட்ட நோயாளியை வைத்தியர் திரும்ப அழைத்தார்.
"இந்த மருந்து நன்றாக வேலை செய்ய ஒரு 'கண்டிஷன்' இருக்கே!அதை நான் சொல்லலியே!"
"என்ன 'கண்டிஷன்'?"
"மருந்து சாப்பிடும் போது குரங்கு ஞாபகம் மட்டும் வரக்கூடாது."
"வந்தால் என்ன ஆகும்?"
"என்ன ஆகும்?! மருந்து வேலை செய்யாது.அப்புறம் என்னைக் குறை சொல்லக் கூடாது. குரங்கை நினைக்காமல் மருந்தைச் சாப்பிடும்."
'சரி' என்று அம்மாஞ்சி வீட்டுக்கு வந்து மருந்தைச் சாப்பிடக் கையில் எடுத்தார்.
வைத்தியர் போட்ட 'கண்டிஷன்' நினைவுக்கு வந்தது.கூடவே குரங்கு ஞாபகம் வந்தது.
அம்மாஞ்சி மருந்தை சாப்பிட்டரா, வயிற்று நோவு சரியாயிற்றா என்று முடிவைக் கேட்காதீர்கள்.எனக்குச் சொன்ன என் தாத்தா முடிவைச் சொல்லவில்லை.
இந்தக் கதை எதுக்கு இப்போ?
ஏனென்றால், நான் வகுப்பறைக்கு எதாவது எழுத வேண்டுமானால் உடனே என் மனதில் தோன்றுவது சப்பான்(ஜப்பான்தான், தமிழ் ஆர்வத்தால் சப்பான் ஆகிவிட்டது)மைனர்வாள் தான்.
"ஆகா! சண்டை வந்தது பிராமணா; சாதத்து மூட்டையைக் கீழே வையும்!"என்று டெல்லிக்காரவுக கிளம்ப வேண்டாம்.(அந்தக் கதை அப்புறம் சொல்கிறேன்)
மைனர்வாளை டார்வின் தியரி படி நம் மூதாதையுருடன் ஒப்பிட்டு விட்டதாகப் பின்னூட்டம் போட வேண்டாம் என்று டெல்லிக்கு புறா மூலம் ஓலை அனுப்பி விட்டேன்.
வகுப்பறயை பற்றி நினைத்தாலே வாத்தியாருக்கு முன்னால் மைனர்வாள் தான் மனக்கண் முன் வந்து நிற்கிறார்.
மனோதத்துவ டாக்டரை கேட்டேன். "ஆமாம்! இது ஜேப்பன்னோ மைனரோ ஃபோபியா" என்ற புதுவிதமான மன நிலை. மன நோய் வகையில் சேர்க்க முடியாது.மன நிலைப்பாடுதான்.ஆனால் இதை சரியாகக் கவனிக்காவிடில் மனநோயில் கொண்டு விட்டுவிடும்" என்றார்.
"கவனிப்பது என்றால் எப்பூடி?"
"எப்பூடின்னா?அப்படித்தான். அடிக்கடி மைனர் உம்மைக் காலை வாரவும், நீர் அவரைக் கையைப்பிடித்து இழுக்கவுமாக இருந்து கொண்டே இருக்கவும்.அப்போ உங்களுக்குள்ள ஒரு 'இது'வந்துடும். மைனரோ ஃபோபியா முற்றாது."
'சரி'ன்னு வந்துட்டேன்.
நான் சாமியார்களைப் பற்றி எழுதினால் மைனருக்கு ஆகுமா ஆகாதா என்ற ஆராய்ச்சி. அனுஷ்கா சர்மா கனுஷ்கா கர்மா என்றெல்லாம் எழுத வரமாட்டேன் என்கிறது என்ன செய்ய?
விவேகானந்தர் பற்றி எழுதினால், 'கீதையைவிட ஃபுட்பால் சிறந்தது என்று விவேக் சொல்லியிருக்கார்' என்று அந்த ஃபுட் பாலாலேயே தாக்குகிறார்.
அதனாலே எனக்கு கட்டுரைக்கான செய்திப் பஞ்சம் வந்துவிட்டது.இந்த வாரம் அதிகம் மூளையை கசக்கி எழுதியுள்ளேன்.
ஃபுட் பால் விஷயம் போலவே confidence trickster matter ஒன்று விவேகானந்தருடன் தொடர்புடையது.
ஒரு சோப்பளாங்கி விவேகானந்தரிடம் போய் ஞான உபதேசம் கேட்டான். ஒன்றுக்கும் உதவாத அவனிடம் சொன்னார்,"நீ நான் நம்பும் படி ஏதாவது டூப் சொல்லி என்னை நம்ப வை பார்க்கலாம்" என்றார்.
அவன் சொன்னானா என்று தெரியவில்லை.ஆனால் என் வாழ்க்கையில் அப்படி ஏமாந்த நிகழ்வைச் சொல்கிறேன்.
தஞ்சைக்கு நான் வந்து ஒரு சில வாரங்களே ஆகியிருந்தது. யாரையும் அதிகம் பழக்கம் இல்லை. ஒருவருடைய இயல்பும் பிடிபடாத சமயம்.
மதிய உணவு இடை வேளையில் எல்லோரும் சேர்ந்து அமர்ந்து உண்போம்.
அந்த சமயத்தில் பல செய்திப் பரிமாற்றங்கள் நடைபெறும்.
காய்கனி எந்தக் கடைத் தெருவில் மலிவு, தஞ்சாவூரிலேயே சிறந்த டைலர் யார்,தொலைகாட்சி நிகழ்ச்சிகள் தெரிகிறதா இல்லை வெறும் கோடுதானா, பாக்கெட் பால் நல்லதா, கைப்பால் நல்லதா ..... இப்படிப் பல.
தங்கம் விலையில் இருந்து,பாய்லர் பற்ற வைக்க சாண உருண்டை வரை பல விஷயங்கள் பேசுவோம்.
என் insufficient time. அதாங்க, போறாத காலத்தின் போது, காபி பற்றிய பேச்சு சாப்பாட்டு மஹாசபையில் அலசப்பட்டது.
"எந்தக் கடையில் காப்பித் தூள் வங்கற?"
ஒருவர் சொன்னார்: 'ராமன்ஸ்'
'நாதன்ஸ் தான் பெஸ்ட்'
'நாங்க லியோ தாம்பா'
'நரசூஸ்தான் பாரம்பரியமானது.'
நான் மெளனமாகத்தான் இருந்தேன்.
"என்னா முத்து பேச்சைக் காணோம்" என்றார் அவர்.
அவர்னா? அவர்தான். எனக்கு ஆப்பு வைக்கப் போகிறவர்.
நான் சொன்னேன்:"நாங்க 3 விதமான சீட்ஸ் வாங்கி ஒரு விகிதத்தில் கலந்து மண்சட்டியில் தினமும் வறுத்து, அவ்வப் போது கை மெஷினில் அறைத்து ஃபில்டரில் வடிகட்டி, கறந்த பால் காய்ச்சி, மிதமான சர்க்கரை சேர்த்து
....."
'தினமுமா?'
"ஆம்!காலை மாலை இரண்டு வேளையும்!"
'எப்படி முடிகிறது?'
"நல்ல காபி சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் தான். ஜென் புத்த மதத்தில் டீ சாப்பிடுவதே ஒரு சடங்கு போல இருக்குமாம்.அதுபோல காலையில் காபி தயாரிப்பதையே ஒரு தியானம் போலச் செய்கிறோம்."
"ஆகா! கேட்கவே சுகமாக இருக்கே! காபியின் மணத்தையும் சுவையையும் உன் பேச்சே கொண்டு வந்து விட்டதே.ஒரு நாள் வீட்டுக்கு அழைத்து அந்தக் காபியை எனக்குக் கொடேன்."
"பேஷா! எப்போ வருகிறீர் சொல்லும்."
"நாளை சனிகிழமை! அரை நாள் தான் அலுவலகம்! நாளை மாலை 4 மணிக்கு வருகிறேன்."
வீட்டில் வந்து சொன்னேன்!
மறுநாள், கேசரி, அடை,அவியல், காபி என்று மெனுவைப் போட்டார்கள்.
சொன்ன நேரத்திற்கு வந்துவிட்டார்.
மகிழ்ச்சியுடன் வரவேற்று சிற்றுண்டியைக் கொடுத்தோம்.
காபியை சாப்பிட்டுவிட்டு 'ஆகா, ஓகோ' என்று புகழ்ந்தார்.
"தேவாமிர்தம்னா இதுதான்!அடடா என்ன சுவை, என்ன மணம்!!"
வீட்டுப் பெண்களுக்கு உச்சி குளிர்ந்துவிட்டது.
"என் வீட்டில் அவளுக்குத்தான் உடம்பே சரியில்லை.அதனால் சரியான சமையல்,காபி, டிபன் சாப்பிட்டு 5 வருஷம் ஆயிற்று.5 வருஷம் கழித்து இன்றுதான் நல்ல டிபன் காபி"
"அடை இன்னொன்று சாப்பிடுங்கள்.காபி இன்னொரு கப் தரவா?"
'ஆகா, கொடுங்கள்' என்று கேட்டு மீண்டும் மீண்டும் புகழ்ச்சியான வார்த்தைகளைச் சொல்லி ஒரு அன்னியோன்னியத்தை வர வழைத்துவிட்டார்.
பெண்கள் மகுடி கேட்ட பாம்பாக மாறிப் போனார்கள்.
"அவளுக்கு ஹிஸ்டெரெக்டமி(கர்பப்பை) ஆபரேஷன். இன்னும் 2 நாளில் வைத்து உள்ளது. 3000/= ஆகும்.(1974) பணம் தான் இல்லை. என்ன செய்யப் போகிறேனோ!? எல்லாம் பகவான் மேல் பாரத்தை போட்டு விட்டு இருக்கேன்"
'அதென்ன. நாங்கள் இல்லையா? கவலைபடாதீர்கள்.'
மந்திரித்து விட்டது போல எல்லோரும் கிளம்பி வீட்டையே கவிழ்த்துப்போட்டுத் தேடி 3000/= தேர்த்தி அவருக்குத் தக்க மரியாதைகளுடன்
கொடுத்தோம்.
"இப்படிப்பட்ட மனுஷாளை நான் பார்த்ததே இல்லை. எங்க தஞ்சாவூர்காராள் இல்லையோல்லியோ நீங்கள்?அதான். இந்த ஊர்க்காரப்பசங்க எச்சக் கையால் காக்காய் ஓட்டமாடான்.ரொம்ப அபூர்வம்னா இப்படிப்பட்ட மனுஷாளைப் பார்கிறது! சரி வரேன். ரொம்ப தேங்ஸ்!"
காலில் வெந்நீர் பட்டவரைப் போல ஓடிவிட்டார்.
மறுநாள் ஞாயிறு. அலுவலகம் விடுமுறை.
திங்கள் அவர் அலுவலகத்திற்கு வரவில்லை.
மதியம் சாப்பாட்டு மஹாநாட்டில் எல்லோரும் பேசிக்கொண்டு இருந்தோம்.
"சார் இன்னிக்கு ஏன் வரவில்லை தெரியுமோ?"
"அவனுக்கென்ன வராததிற்குக் காரணம்? எந்த சீட்டாட்ட கிளப்பில் விழுந்து கெடக்கிறானோ? எவ்வள்வு ஸ்டேக்கோ? யாருக்குத் தெரியும்?"
எனக்கு 'பகீர்' என்றது.
"இல்லை, சனிக்கிழமை என்னிடம் சொன்னார், அவர் பார்யாளுக்கு யுடெரஸ்ஆபரேஷன் அப்படின்னு"
"அவன் பார்யாளுக்கு எத்தனை யுட்ரஸ் இருக்குமோ யாருக்குத் தெரியும்? ஊர் பூரா வாரா வாரம் இதே கதையைச் சொல்லிக் கடன் வாங்கிண்டு ஓடிப் போய்டுவான். பார் சாயங்காலம் அவன் பார்யாள் விசாரிச்சுண்டு வருவா பார்."
சொல்லிவைத்தார் போல மாலை அலுவலக வாசலில் அந்தப் பெண் வந்து நின்று கொண்டிருந்தார்.முதல் முறையாக அவரைப் பார்க்கிறேன். சோகமயமான மஹாலட்சுமி!
"யார்? யார்? கொடுத்தா பணம் அவருக்கு? எந்த கிளப்பில இருக்கார்? எதாவது சொல்லிண்டு போனாரா? இங்கயானா அவரோட அம்மாவுக்கு ரொம்ப சீரியசா இருக்கு.ஆத்தில ஒரு குந்துமணி அரிசி இல்லை. கிழவிக்கு கஞ்சி காய்ச்சக் கூட குருணை இல்லை. பொறுப்பே இல்லாம எங்கயோ சொல்லிக்காம சீட்டாட போய்ட்டாரே!"
நான் பேச்சு வராமல் நின்றேன். பணம் போனது எனக்குப் பெரிசாகத் தெரியவில்லை.
இக்கட்டான நிலையில் குடும்பததை விட்டு விட்டு, சீட்டாடப் பொய் சொல்லிப் பணம் பறித்துக்கொண்டு போயுள்ளாரே அந்த மனிதர்.சே! என்ன மனுஷன் இவர்!
பாத்திரம் அறிந்து அளிக்கச் சொன்ன பெரியவர்கள் எவ்வளவு முன் யோசனை உடையவர்கள்.
புத்திக் கொள்முதல்!
அப்புறம்?
அப்புறம் என்ன, விழுப்புரம்?
அவர் திருந்தினாரா? அவர் திருந்துவதற்கு ஏற்பட்ட சம்பவம் எது என்றெல்லாம் வளர்க்க இது கதையல்ல. நிஜம்!
வாழ்க வளமுடன்!
ஆக்கியோன்: வகுப்பரையின் மூத்த மாணவர்களில் ஒருவரான
கே. முத்துராமகிருஷ்ணன் (லால்குடி)
கர்ப்பப் பைகள் என்று தலைப்பில் போடாமல், க.பைகள் என்று சுறுக்கிப் போட்டுள்ளேன். க. என்ற எழுத்து கானாவாக மாறியதற்குக் காரணம் எங்கள் பகுதி சொல்வழக்குகள்தான் காரணம் - வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாரமலர் - பகுதி இரண்டு
மின்னஞ்சல்களைப் பற்றி பகவான் கிருஷ்ணர் என்ன சொன்னார்?
பஞ்சபூதங்கள் ஐந்தல்ல - ஆறு!
நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் ஆகியவற்றுடன் மின்னஞ்சலும் சேர்ந்து தற்சமயம் உள்ள பூதங்கள் மொத்தம் ஆறு!
மின்னஞ்சல்களை மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டிய கட்டாய கர்மச் செயல்! The Karma of Forwarding Emails to One and All
பகவத் கீதை - புது அத்தியாயம் - எண் 19
அர்ஜுனன்: வாசுதேவா, எனக்கு வரும் எண்ணற்ற மெயில்களை மற்றவர்களுக்கு அனுப்பும் - Forwarding Emails - அடாவடி வேலையை,
மன்னிக்கமுடியாத செயலை நான் எப்படிச் செய்வேன்? அதுவும் உயிரினும் மேலான நண்பர்களுக்கும், உற்றார்களுக்கும், உறவினர்களுக்கும்,
வயதில் மூத்தவர்களுக்கும் மதிப்பிற்கு உரியவர்களுக்கும் எப்படி அவற்றை நான் அனுப்புவேன். மனம் ஒப்பவில்லையே?
கிருஷ்ணர்: இன்றைய காலகட்டத்தில், நண்பன், எதிரி, உறவினன் அந்நியன் இளைஞன், வயோதிகன் என்ற பேதங்கள் (பிரிவுகள்) கிடையாது.
அனைவரும் சமமானவர்களே! வேண்டியவர்களே! எதையாவது சொல்லி நீ தப்பிக்க முடியாது. அதுதான் இணைய தர்மம் (Net-Dharma) மின்னஞ்சல் பெட்டிக்குள் நுழைந்து பார்ப்பதற்குத் தயங்காதே. வந்திருக்கும் அத்தனை மெயில்களையும் அனைவருக்கும் ஃபார்வேர்ட் செய். உன்னிடமிருந்து எதிர்பார்க்கப்பெறும் கர்மா அது ஒன்றுதான். நீ கடைபிடிக்க வேண்டிய தர்மமும் அதுதான்!
அர்ஜுனன்: மாதவா, என் மனசாட்சிக்கும், ஆன்மாவிற்கும் ஒவ்வாத செயலைச் செய்யச் சொல்லி என்னைக் கட்டாயப் படுத்தாதீர்கள்.
சங்கடத்திற்கு உள்ளாக்காதீர்கள்!
கிருஷ்ணர்: குந்திபுத்திரனே! இன்று நிலவும் மாயவட்டத்திற்கு நீ ஒன்றும் விதிவிலக்கல்ல! டாலரும், யென்னும், யூரோகரன்சியும் ஆட்சி செய்யும்
இன்றைய உலகிற்கு உனக்கு நீயே கமிட்டாகி உள்ளாய். நீ என்பது உன்னையும், உன்னுடைய கணினி மவுஸையும் சேர்த்துக் குறிக்கும்! அதை மறந்து விடாதே! மெயில்கள் 25 ஆண்டுகாலமாக கோலோட்சிக்கொண்டுள்ளன. நீ வைகுண்டம் போனாலும் போவாய். அவைகள் போகாது. தொடர்ந்து அவைகள் இங்கேயே நிற்கக்கூடியவை. ஆட்சி செய்யக்கூடியவை. மாயைக்குள் படுத்துக்கொள்ளாதே! எழுந்து உட்கார்! உனது கடமையைச் செய்! வரும் மெயில்களில் ஒன்றையும் விடாமல் அனைத்தையும் அனைவருக்கும் ஃபார்வேர்ட் செய்!
அர்ஜுனன்: கண்ணா, மாய உலகத்தில் மின்னஞ்சலுக்கு உரிய முக்கியத்தைக் கொஞ்சம் தெளிவுறச் சொல்லுங்கள்
கிருஷ்ணர்: அப்படிக்கேள். இப்போது சொல்கிறேன். மின்னஞ்சல் இவ்வுலகின் ஆறாவது பூதம். E*mail is the 6th element in the universe நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் ஆகியவற்றுடன் மின்னஞ்சலும் சேர்ந்து தற்சமயம் உள்ள பூதங்கள் மொத்தம் ஆறு! மின்னஞ்சல்களை உருவமுள்ளவைகள் என்று உணரவும் முடியாது. உருவமில்லாதவைகள் என்று ஒதுக்கவும் முடியாது. அவைகளுக்கு உயிருண்டு. ஆனால் மரணமில்லை. மின்னஞ்சல்கள் ஒரு மகத்தான வேலையைச் செய்கின்றன. மின்னஞ்சல்களைப் படிப்பதன் மூலமும், மற்றவர்களுக்கு அவற்றை அனுப்புவதன் மூலமும் தங்கள் நேரம் சரியான விதத்தில் செலவிடப்படுவதாக மக்கள் நம்புகிறார்கள். தங்கள்
அறிவையும், முயற்சியையும் தாண்டி தாங்கள் சாதிப்பதாக, சாதனை செய்வதாக அவர்கள் எண்ணுகிறார்கள். ஆன்மா ஒரு உடலை விட்டு
நீங்கி பிரிதொரு உருவம் எடுப்பதைப்போல மின்னஞ்சல்களும் ஒரு கணினியில் இருந்து இன்னொரு கணினிக்குப் போய்ச் சேருகிறது.
அவைகள் உலகை விட்டு நீங்குவதும் இல்லை. அழிவதும் இல்லை.
அர்ஜுனன்: பகவானே, மின்னஞ்சல்களின் உண்மையான தன்மைகள் என்ன?
கிருஷ்ணர்: நெருப்பால் அவற்றை எரிக்க முடியாது. காற்றுடன் கலந்து அவைகள்காணாமல் போகாது. அவற்றைத் வெற்றி கொள்ளவும் முடியாது. தோல்வி அடையச் செய்யவும் முடியாது. உன்னுடைய பரிபூரண ஆன்மாவைப்போல மின்னஜ்சல்களும் நிலையானவை. நீ உன்னுடைய வில்லில் இருந்து செலுத்தும் அம்புகளைப் போல அல்ல அவைகள். சமயங்களில் நீ ஃபார்வேர்ட் செய்யும் மின்னஞ்சல்கள் வழி தவறினாலும் உன்னிடமே திரும்ப வந்து சேரக்கூடிய தன்மை உடையவை! நீயும் வேண்டிய மட்டும் திரும்பத் திரும்ப எத்தனை முறைகள் வேண்டும் என்றாலும் ஒரு க்ளிக்கில் அந்த நபருக்கே அவற்றை அனுப்பலாம். இப்போது புரிகிறதா அவற்றின் உண்மையான தன்மை மற்றும் மேன்மை?
அர்ஜுனன்: வாசுதேவா, கோடி வந்தனங்கள் உமக்கு உரித்தாகுக! மூடிக் கிடந்த என் கண்களைத் திறந்துவிட்டீர்கள். மெயில்களின் மேன்மையை நன்கு புரிந்துகொண்டேன். இதுவரை நான் செய்து வந்த தவறு எனக்கு விளங்குகிறது. இதுவரை எனக்கு வந்த மெயில்கள் அனைத்தையும் படித்துப் பார்ப்பதிலேயே எனது நேரத்தைச் செலவிட்டேன். வேறு எந்த வேலையையும் நான் செய்யவில்லை. யாருக்கும் அவற்றை ஃபார்வேர்ட் செய்யவில்லை. இன்று முதல் என்னை நான் மாற்றிக்கொள்கிறேன். படிப்பதைவிட அவற்றை மற்றவர்களுக்குப் ஃபார்வேர்ட் செய்வதுதான் முக்கியம் என்பதை உணர்ந்துவிட்டேன். அதுதான் தர்மமும் கூட. சிம்ப்பிளாக ஃபார்வேட் பட்டனை அமுக்கி, அங்கிங்கெனாதபடி அனைவருக்கும் அவற்றை அனுப்பி வைக்கிறேன். அதர்மத்திற்கு எதிராக நடக்கும் இன்றைய குருஷேத்திர யுத்தத்தில் அனைவரையும் பங்கு கொள்ளச் செய்ய அதுதான் சிறந்த வழி!
கிருஷ்ணர்: வெற்றி, தோல்வி எல்லாம் உன் கையில் இல்லை. செயல் மட்டுமே உன் வசம். பலன் உன் கையில் இல்லை. அனுப்புவதோடு
நிறுத்திக் கொள். கிடைக்கும் ஒவ்வொருவன் கையிலும் அதை விட்டுவிடு.
அது ஒன்றுதான் உன்னுடைய தலையாய கடமை. ததாஸ்து!
- மின்னஞ்சலில் வந்த சரக்கு. மொழிமாற்றம் மட்டும் அடியவனுடைய கைவண்ணம் புதிய அத்தியாயம் எப்படி உள்ளது சாமிகளா? ஒரு வரி எழுதுங்கள்!
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------------------------------------