
அடடா, யாரவர்? இசைஞானியா?
இல்லை அவர் இசைக்கு மட்டும்தான் ராஜா!
நான் சொல்ல வருகிறவர் சுகங்களுக்கு ராஜா!
உங்களுக்குத் தெரிந்திக்க வாய்ப்பில்லை. நோ சான்ஸ்!
ஆனால் அவரைப்பற்றி சொன்னால், உடனே அதுபோன்ற அம்சங்கள்
உடைய ஒருவரை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு.
அவர்தான் மிஸ்டர்.சுகவாசி. (பெயரை மாற்றியிருக்கிறேன்)
அவர் எனக்குப் பரீட்சையமானவர். அதனால்தான் மாற்றம் அவசியமாகி
விட்டது. அவருக்கென்று ஒரு வேலையுமில்லை; ஒரு தொழிலுமில்லை!
அதனால் ஒரு தொல்லையுமில்லை. சுங்கவரி, சேவை வரி, விற்பனை வரி,
வருமான வரி என்று எந்த வரித்தொல்லைகளும் இல்லாதவர்.
கதைநடந்த காலம் பதினைந்தாண்டுகளுக்கு முந்தைய காலம்
சுறுசுறுப்பானவர். நல்ல தோற்றமுடையவர். யாரையும் தன்னுடைய
பேச்சுத் திறமையால் வளைத்துப் போடக்கூடியவர். இறங்கினால்,எடுத்த
காரியத்தைச் சாதிக்ககூடியவர்.
படிப்பெல்லாம் பள்ளி இறுதியாண்டுவரைதான். ஆனால் தமிழிலும்
ஆங்கிலத்திலும் சரளமாகப் பேசக்கூடியவர். துணிச்சலாக, அதிரடியாகப்
பேசக்கூடியவர். இவைகள்தான் அவருடைய தகுதிகள்.
அப்போது அவருக்கு வயது நாற்பது.எல்லா வேலைகளுக்கும் லாயக்கானவர்.
இந்த எல்லாம் என்கின்ற பதத்தை மூன்று முறைகள் அழுத்திச் சொல்லிப்
படியுங்கள். அப்போதுதான் அதன் அர்த்தம் உங்களுக்கு முழுதாகப் பிடிபடும்.
அவருக்குக் கட்டிக்கொண்ட - கட்டுப்படுகின்ற (அதுதான் முக்கியம்)
மனைவியும், ஒரு மகனும் உண்டு. வீட்டைப் பற்றிக் கவலைப் படாதவர்.
சிறிய வீடு. ஆனாலும் சொந்தவீடு. வீட்டு வாடகை உபத்திரவம் இல்லாதது
அவருக்குப் ப்ளஸ் பாயிண்ட். ஒன்றாம் தேதியன்று, கையில் இருக்கும்
பணத்தில் ஐயாயிரம் ரூபாயையோ அல்லது ஆறாயிரம் ரூபாயையோ,
மனைவியின் கையில் கொடுத்துவிடுவார். அது வீட்டுச் செலவுகளுக்கு.
அந்தக் காலகட்டத்தில் அது போதுமான தொகை.
மற்றதை வீட்டு அம்மையார் பார்த்துக் கொள்வார்கள்.
காலையில் ஆறு மணிக்கு எழுந்தார் என்றால், காலைக்கடன்களை
முடித்துக் குளித்து எட்டு மணிக்குள், நெற்றியில் விபூதியும், சந்தனமும்,
சட்டையில் Jovan' செண்ட்டும் மணக்கத் தயாராகிவிடுவார். காலைச்
சிற்றுண்டியும் முடிந்திருக்கும்.
மல்லிகைப்பூப் போன்ற இட்டிலியும், நெய்யும், தேங்காய் சட்டினியும்
உடன் ஃபில்டர் காப்பியும் உள்ளே இறங்கி, உற்சாகத்தையும் கொடுத்து
விடும்
He is ready for that day jobs!
அவருக்குத்தான் வேலை இல்லை என்றீர்களே?
முதலாளி இருக்கும் வேலை அவருக்கு இல்லை என்றும், வாடிக்கையாளர்
இருக்கின்ற தொழிலும் அவருக்கு இல்லை என்று சொன்னேனே தவிர, வேலை
வெட்டி இல்லாத ஆசாமி என்றா சொன்னேன்?
கதையைப் படியுங்கள். அவருடைய மொத்த வாழ்க்கையும் சுவாரசியமானது
எட்டு மணிக்குள் அவரைத் தேடி ஆசாமிகள் வந்து விடுவார்கள்.
முதலில் வருகிறவனுக்குத்தான் முன் இடம்!
"என்ன கந்தசாமி?" வந்திருக்கும் கார் டிரைவரிடம் கேட்பார்.
"சின்னய்யா, உங்களைக்கூட்டிக் கொண்டு வரச்சொன்னார்"
"என்ன விஷயம் என்று சொன்னாரா? அவசரமாமா?"
"ஆமாம் அண்ணே! குனியமுத்தூரில் ஃபாக்டரி கட்டுவதற்காக ஒரு இடம்
பார்த்திருக்கிறார். அதை முடித்துக் கிரயம் செய்ய வேண்டுமாம். நீங்கள்
வந்தால்தான் முடியுமாம். அழைத்து வரச்சொன்னார்"
வேறு ஒருவன் வந்தால் அழைப்பு வேறுவிதமாக இருக்கும்.
"அண்ணே, பெரிய செட்டியார் உங்களை அழைத்துக் கொண்டு வரச்
சொன்னார்."
"என்னடா விஷயம்?"
"அவருடைய மகன் நேற்றுக் கிளப்பிற்குப் போய்விட்டுக் காரில் திரும்பி
வரும்போது, அவனாசி ரோட்டில் ஆக்சிடெண்ட். ஒரு ஆளை அடித்துப்
படுக்க வைத்து விட்டான். போலீஸ் கேசாகி விட்டது. நீங்கள் வந்தால்
தான் பிரச்சினை தீரும்"
உடனே கிளம்பிவிடுவார். போனால் எப்போது திரும்பி வருவார் என்று
தெரியாது. மதியம், மாலை, இரவு உணவெல்லாம் தடபுடலாய் போகின்ற
இடங்களில்! பத்து மணிக்குத் திரும்பிவந்தால் நல்லது. சில சமயம்
இரவு பன்னிரெண்டு மணிக்குத்தான் திரும்பி வருவார்.
அவருடைய தலை முடிகளை எண்ணினாலும் எண்ணலாம். அவருக்கு
இருக்கின்ற நட்பு வட்டத்தை என்ன முடியாது!
ஒரு தடவை, ஒரு நாள் பழகியவன், அவரை விட மாட்டான். அவருடைய
அருமை தெரிந்து அவருடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டு விடுவான்.
அதேபோல நமது நாயகனும் ஒரு நாள் பழக்க மென்றாலும் மறக்க
மாட்டார். கணினி மூளையில் பழகியவனின் பயோ டேட்டா பதிவாகிவிடும்
சிலசமயம், எவனுடவனாவது அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
இருக்கும் போதே அல்லது ஒரு வங்கியில் பகுதி மேலாளருடன் பேசிவிட்டுத்
திரும்பிக் கொண்டிருக்கும்போது, அவரைத் தேடி, மோப்பம் பிடித்து அவருடைய
நெருங்கிய நண்பர்களில், மூவரோ அல்லது நால்வரோ, அங்கே வந்துவிடுவார்கள்.
"ஏய் அப்பனே, வண்டியில் ஏறு!" இது அவர்கள்.
"எங்கே போக வேண்டும் சொல்லுங்கள்" இது இவர்
"நீ முதலில் ஏறு, சொல்கிறோம்"
ஏறிக்கொள்வார். கார் காந்திபுரத்தில் இருந்து புறப்பட்டு, பன்னிரெண்டு கிலோ
மீட்டர்கள் தூரம் பயணித்து, கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையைக் கடந்த
பிறகுதான் இவர் கேட்பார்"
"எங்கேடா போகிறோம்? திருப்பூருக்கா?"
"இல்லை, பெங்களூருக்கு!"
"அடப்பாவிகளா? நான் வீட்டில் சொல்ல வேண்டாமா?"
"என்னைக்கு உன்னை வீட்டில் தேடியிருக்கிறார்கள் - சொல்வதற்கு?"
"இல்லையில்லை, வெளியூர் செல்வதானால் நான் சொல்லிவிட்டுத்தான் வருவேன்"
"அதெல்லாம் நாங்கள் சொல்லிவிட்டோம். உன் ஒய்ப்தான் நீ வங்கிக்குச்
சென்றிருக்கும் விஷயத்தைச் சொன்னார்கள். இல்லையென்றால் நீ வங்கியில்
உட்கார்ந்து பிளேடு போட்டுக் கொண்டிருப்பது எங்களுக்கு எப்படித்
தெரியும்? உன்னை எப்படிக் கொத்திக் கொண்டு வந்திருக்க முடியும்?"
"சரி, சரி, எத்தனை நாள் பயணம்?"
"அதை இன்னும் முடிவுசெய்யவில்லை! உத்தேசமாகச் சொன்னால் நான்கு
நாட்கள் என்று வைத்துக்கொள்"
"நான்கு நாட்களா? மாற்று உடைகள் எதுவும் இல்லையே பாவிகளா?"
"எங்களுக்கு இருக்கிறது"
"உங்களை எவன் கேட்டான்? எனக்கு என்ன செய்வது?"
"போகிற இடத்தில் வழக்கம்போல ரெடிமேடாக வாங்கிக் கொள்வோம்!"
"சரி பெங்களூரில் ரூம் எல்லாம் போட்டுவிட்டீர்களா?"
"நீ இருக்கையில் அதெல்லாம் எதற்கு? உன்னைப் பார்த்தபிறகு எந்த
ஹோட்டல்காரனாவது அறை இல்லை என்று சொல்வானா?"
"பெங்களூரில் என்னடா வேலை?"
"நிஜலிங்கப்பாவைப் பார்த்துப் பேசி, லால் பார்க்கை விலைக்கு
வாங்க வேண்டும்?"
"ஏன் அல்சூர் ஏரியை வாங்குங்கள். அதில் உள்ள தண்ணீரை
வெளியேற்றிவிட்டு, மல்லய்யாவிடம் சொல்லி அதைப் பியரால்
நிரப்பி ஆட்டம் காட்டலாமே?"
"அதில் ஒரு ஆபத்து இருக்கிறது?"
"என்ன?"
"இங்கேயிருந்து போகிற தமிழன் எவனும் திரும்பி வரமாட்டான்"
"டேய் கருமம் பிடித்தவங்களா, என்ன வேலை என்று சொல்லித்
தொலைங்கடா"
அவருடைய பொறுமைச் சோதிக்காமல், அவசரமாகப் போகின்ற
வேலையைச் சொல்வார்கள். போகின்ற அந்த செயலுக்கு அவருடைய
உதவி தேவைப் பட்டாலும் அல்லது தேவைப்படாவிட்டாலும், அவரைக்
கூட்டிக்கொண்டு போவார்கள். ஒரு பாதுகாப்புக்காக, ஒரு கம்பெனிக்காக,
ஒரு பேச்சுத் துணைக்காக, அதைவிட ஒரு ஜாலிக்காக அவரைக்
கூட்டிக் கொண்டு போவார்கள்.
நம் நாயகருடைய பல தகுதிகளில் ஒன்று அற்புதமாகக் கார் ஓட்டுவார்
சொந்தமாக அவருக்குக் கார் கிடையாது என்றாலும், அவருடைய
நணபர்களின் கார் அத்தனையும் அவருடையதுதான். மாருதி ஜென்னில்
இருந்து, பென்ஸ் வரை அவர் ஓட்டியிருக்காத கார்களே கிடையாது.
அடுத்துவரும் நிறுத்ததில் அல்லது மோட்டலில் காரின் ஸ்டீரிங் வீல்
அவர் கைக்குப் போய்விடும்.
செல்லும் ஊரில் அவருக்கு, சோப்பிலிருந்து வான் ஹுஸேன் சட்டை
வரை அத்தனையையும் வேண்டிய அளவிற்கு வாங்கிக் கொடுத்துவிடுவார்கள்
அதோடு, அவருக்கு காப்பி சிகரெட்டிலிருந்து, பீட்டர் ஸ்காட் வரை ஒரு
செலவும் இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள். அதோடு திரும்பி வந்துவுடன்
அவர் சொல்லிக் கொண்டு வீட்டில் இறங்கும்போது, பெரிய நோட்டுக்
கட்டில் ஒன்றையோ அல்லது இரண்டையோ அவர் பெட்டிக்குள் வைத்துக்
கொடுத்து விடுவார்கள்.
சிலர், தங்கள் வேலைகளுக்கு அவரை மட்டும் அனுப்பும்போது கையில்
வேண்டிய பணத்தையும், காரையும் கொடுத்துவிடுவார்கள்
வேலையை நேர்த்தியாக முடித்துக் கொடுப்பதில் அவருக்கு இணை அவரேதான்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இங்கே சொல்ல வந்தது. அந்த மனிதருக்கு வாழ்க்கையில் எல்லா
செளகரியங்களும், சுகங்களும் தேடி வந்து அனைத்துக் கொண்டன!
என்ன காரணம்?
அவர் ரிஷப லக்கினக்காரர். ரிஷப லக்கினக்காரர்கள் இயற்கையாகவே
ஜாலியானவர்கள். காரணம் அதன் அதிபதி. அதோடு நம் நாயகருக்கு
ரிஷப லக்கின நாயகன் பதினொன்றில். சுயவர்க்கத்தில் எட்டுப்பரல்களுடன்
அவருக்கு சொந்தத்தில் பெரிய அளவில் பணம் இல்லாவிட்டாலும்,
முறையான சம்பாத்தியம் துளிக்கூட இல்லாவிட்டாலும், அவரால் எப்படி
வாழ்க்கையின் அத்தனை சுகங்களையும் அனுபவிக்க முடிந்தது?
அதற்குக் காரணம் வலுவான சுக்கிரன்தான்.
அவரைப்போன்ற சுகவாசிகள் சின்ன லெவலிலோ அல்லது பெரிய லெவலிலோ
பலர் இருக்கிறார்கள். நான் பார்த்திருக்கிறேன். நீங்களும் பார்த்திருப்பீர்கள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
"வாத்தியார் அவரைப் பற்றிய கதை எதற்கு?"
"அவரை மறந்து விடுங்கள். சுக்கிரனைப் பற்றி நினையுங்கள்"
======================================================
சுக்கிரனைப் பற்றிய தனிப் பதிவிற்கான முன்னோட்டம்தான் இது!
மற்ற விவரங்கள் அடுத்த பதிவில்!
(தொடரும்)
===================================================
இது இடைச் சேர்க்கை!
பின்னூட்டத்தில் பலர் எனக்கு 90 வயதில் சுக்கிரதிசை வரும்
என்றும் அல்லது வயதான காலத்தில் வரும் என்றும் குழப்பத்தில்
உள்ளார்கள்.
அதற்காக அவசரமாக இந்த தசா புத்தி அட்டவனையை இடைச்
சேர்க்கையாகக் கொடுத்திருக்கிறேன்
இதை முன்பே என்னுடைய பதிவில் வெளியிட்டிருக்கிறேன்
அது எந்தப் பதிவு என்று தேட நேரமில்லை.
கூடுதுறையாரும் தன் வகைப் படுத்தில் இதைக் குறிப்பிட்டிருக்கிறாரா
என்று தெரியவில்லை.
ஆகவே மீண்டும் ஒருமுறை அதைப் பதிவில் கொடுக்கின்றேன்
அதைப்பாருங்கள். 9 கிரகங்களின் திசைகளிலும், தசா நாதனுடன்
சேர்ந்து புத்தி நாதர்களும் அந்த தசை காலத்தைப் பங்கு போட்டுக்
கொண்டிருப்பார்கள்.
ஆகவே ஒன்றை மட்டும் தெளிவாக வைத்திருங்கள்.
ஒரு கிரகத்தின் தசை உங்களுக்கு வர சந்தர்ப்பம் இல்லை என்று
நினைக்காதீர்கள்.
புத்திநாதன் என்கின்ற போர்வையில் அவர் வருவார்.
நல்லவராக இருந்தால் கட்டித் தழுவி விட்டுப்போவார்.
தீயவராக இருந்தால் அடித்துக் கீழே தள்ளிவிட்டுப்போவார்.
மீண்டும் வேறு ஒரு நல்லவர் வந்து உங்களை எழுப்பி உட்கார
வைத்து ஒத்தடம் கொடுத்து ஆறுதல் சொல்வார்.
இது ஒவ்வொரு தசையிலும் நடக்கும்
சுக்கிரதிசையிலும் நடக்கும்
சனி திசையிலும் நடக்கும்
ராகு திசையிலும் நடக்கும்
மொத்தம் எல்லா தசைகளிலும் நடக்கும்
தழுவதுவதும், அடிவாங்குவதும் மாறி மாறி நடக்கும்
இரவு பகலைப்போல!
புரிந்ததா கண்மணிகளே?
========================================================================
ஒவ்வொரு கிரகமும் தசா புத்திகளைப் பங்கிட்டுக் கொள்ளும் நாட்களின் விவரம்:
எண்கள் அனைத்தும் நாட்களைக் குறிக்கின்றது!
எண்கள் அனைத்தும் நாட்களைக் குறிக்கின்றது!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!