மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 571 - 580. Show all posts
Showing posts with label Lessons 571 - 580. Show all posts

20.9.12

Astrology நிரந்தரக் கஷ்டங்களும், தற்காலிகக் கஷ்டங்களும்!

Astrology  நிரந்தரக் கஷ்டங்களும், தற்காலிகக் கஷ்டங்களும்!

அலசல் பாடம் (மேல்நிலைப் பாடம்)

எனது கஷ்டங்கள் எப்போது தீரும்? என்னும் தலைப்பில் முன்பு ஒரு முறை சூரியனை வைத்து அலசுவதைப் பற்றி எழுதியிருந்தேன்.

இன்று சந்திரனை வைத்து எப்படி அலசுவது என்று பார்ப்போம்!

சந்திரன் மனகாரகன் அதோடு தாய்க்குக் காரகன்.

(He is the authority for mind and Mother)

ஜாதகத்தில் சந்திரன் வலுவாக இருந்தால் பெரிய மனக்கஷ்டங்கள் இருக்காது.

வலு அல்லது வலிமையாக இருப்பது என்றால் என்ன?

1. சந்திரன் ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருக்கும் நிலைமை

2. தீய கிரகங்களின் கூட்டணி மற்றும் பார்வை பெறாத நிலைமை

3. கேந்திரம் மற்றும் திரிகோணங்களில் இருக்கும் நிலைமை

4. சுய அஷ்டகவக்கத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருக்கும் நிலைமை.
++++++++++++++++++++++++++++++
அப்படி வலுவாக இல்லாவிட்டால் என்ன ஆகும்?

தேவையில்லாத மனக்குழப்பங்கள், கவலைகள் மனதை அரித்துக்கொண்டே இருக்கும்.

தீய கிரகங்களுடன், குறிப்பாக சனி அல்லது ராகுவுடன் சந்திரன் சேர்ந்திருந்தால், மனம், போராட்டங்கள் மிகுந்ததாக இருக்கும்.
வாழ்க்கை எதிர் நீச்சல் போடும் படியாக இருக்கும்.

எதற்கெடுத்தாலும் கவலைப்படத்தோன்றும். உப்புப் பெறாத விஷயத்திற்குக் கூட ஜாதகன் கவலைப் பட்டுக்கொண்டிருப்பான். எதிலும்  சந்தேகம் தோன்றும். யாரையும் நம்ப முடியாத சூழ்நிலை உருவாகும்.

உதாரணத்திற்கு பஸ்ஸில் ஏறி, பஸ் புறப்பட்ட பிறகு, வீட்டைச் சரியாகப் பூட்டிவிட்டு வந்தோமா என்று சந்தேகம்  தோன்றும். ஜாதகத்தின் வேறு அம்சங்களை வைத்து, சிலருக்குக், கணவன் அல்லது மனைவியுடன் கருத்து  வேற்றுமை தோன்றி, சண்டை சச்சரவுகள் நிறைந்திருக்கும். மொத்தத்தில் சந்திரன் வலுவாக இல்லையென்றால்  மனதில் நிம்மதியாக இருக்காது.

ஐந்தாம் வீடு மனதிற்குள்ள வீடு. (House of mind).ஜாதகத்தில் ஐந்தாம் வீடும் ‘வீக்’ காக இருந்து, சந்திரனும்  வீக்’காக இருந்தால், மனதிற்குள் நிரந்தரமான கவலை குடிகொண்டுவிடும். அது எதைப்பற்றியதாக  வேண்டுமென்றாலும் இருக்கலாம். வீடு, வாசல், கணவன் அல்லது மனைவி, குழந்தைகள், உடல் நலம் என்று  எதைப்பற்றியதாக வேண்டுமென்றாலும் இருக்கலாம்

மேற்கூறிய அனைத்தும் நிரந்தரக் கஷ்டத்தில் வரும். இப்போது சந்திரனை வைத்துத் தற்காலிகக் கஷ்டத்தைப்  பார்ப்போம்!

சந்திரன் 27 நாட்களுக்கு ஒருமுறை தனது சுற்றை முடிக்கும். சராசரியாக ஒவ்வொரு நாளுக்கும் ஒரு நட்சத்திரம்.

நட்சத்திரம் ஆரம்பிக்கும் நேரமும், முடியும் நேரமும், ஒரே மாதிரியாக இருக்காது. ஒரு நாளிற்கு உரிய நட்சத்திரம்  எப்போது ஆரம்பிக்கும் மற்றும் எப்போது முடியும் என்பது பஞ்சாங்களிலும் குறிக்கப் பெற்றிருக்கும், அத்துடன் செய்தித்தாள்களிலும் அதைக் குறிப்பிட்டு எழுதுவார்கள்.

உதாரணத்திற்கு இன்று (31.3.2010) சித்திரை நட்சத்திரம் இரவு 9:30 மணி வரை, அதற்குப் பிறகு சுவாதி நட்சத்திரம் நாளை (1.4.2010) இரவு 9:10 மணி வரை. இப்படியே அடுத்தடுத்து நட்சத்திரங்கள் மாறிக்கொண்டிருக்கும்.

உங்கள் நட்சத்திரத்தைவைத்து நீங்கள் என்ன ராசிக்காரர் என்பதை மனதில் ஏற்றிக் கொள்ளுங்கள். அன்றையத்  தேதியில் என்ன நட்சத்திரம் என்று பாருங்கள். அதை வைத்து உங்கள் ராசிக்கு  எத்தனையாவது ராசியில் அன்றையச் சந்திரன் இருக்கிறார் என்று பாருங்கள்.

அது உங்களுடைய ராசிக்கு எட்டாம் இடம் அல்லது 12ஆம் இடமாக இருந்தால் அன்று உங்களுக்கு நல்ல  பலன்கள் கிடைக்காது. நினைத்த காரியம் நடக்காது. வெட்டி அலைச்சலாக இருக்கும். முக்கியமான காரியங்களை  அன்று செய்தால்  அது தோல்வியில் முடியும். சுருக்கமாகச் சொன்னால் That will not be your day!
அதை வைத்துத்தான் ஒவ்வொரு ராசிக்காரருக்கும் பத்திரிக்கைகளில் தினப்பலன்களை எழுதுகிறார்கள்.

ஒரு ராசிக்காரருக்கு அன்றைய நட்சத்திரம் 2ஆம் ராசியில் இருந்தால் தன லாபம் என்று எழுதுவார்கள். ஏழில்  இருந்தால், மனைவியுடன்
அந்நியோன்யம் என்று எழுதுவார்கள். 5ல் இருந்தால் மனமகிழ்ச்சி என்று எழுதுவார்கள். கோச்சார சந்திரன் (Transit Moon) உங்கள் ராசிக்கு 6, 8, 12 ஆம் இடங்களில் இருக்கும் அல்லது நகரும்  நாட்களில், உங்களுக்கு காரிய சித்தி (காரிய ஜெயம்) இருக்காது. நல்ல காரியங்களைச் செய்வதற்கு அவற்றைக் கண்டறிந்து ஒதுக்குவது நல்லது.

உதாரணத்திற்கு ஒரு இடம் வாங்குவதற்கோ அல்லது ஒரு மருத்துவரிடம் பரிசோதனைக்குப் போவதற்கோ  அல்லது பெண்பார்க்கப் போவதற்கோ அல்லது முக்கியமான வெளியூர்ப் பயணங்களுக்கோ அந்த தினங்களை  விலக்குவது நல்லது.

1. The transiting Moon in houses from the natal Moon will show the attitude a person has on any given day.
2. It is ideal to have the Moon in a good position from the natal Moon for daily events to run smoothly.


ராசிக்கான நட்சத்திரங்கள்:

மேஷம்: அஸ்விணி, பரணி , கார்த்திகை (1 பாதம்)
ரிஷபம்: கார்த்திகை (2, 3 & 4),ரோகிணி, மிருகசீர்ஷம் (1 & 2)
மிதுனம்: மிருகசீர்ஷம் (3 & 4) திருவாதிரை, புனர்பூசம் (1, 2 & 3)
கடகம்: புனர்பூசம் (4ம் பாதம்) பூசம், ஆயில்யம்

சிம்மம்: மகம், பூரம், உத்திரம் (1ஆம் பாதம்)
கன்னி: உத்திரம் (2, 3 & 4) ஹஸ்தம், சித்திரை (1 & 2)
துலாம்: சித்திரை (3 & 4), சுவாதி, விசாகம் (1,2 & 3)
விருச்சிகம்: விசாகம் (4ஆம் பாதம்) அனுஷம், கேட்டை

தனுசு: மூல, பூராடம், உத்திராடாம் (1ஆம் பாதம்)
மகரம்: உத்திராடம் (2, 3 & 4) திருவோணம், அவிட்டம் (1 & 2)
கும்பம்: அவிட்டம் (3 & 4), சதயம், பூரட்டாதி 1, 2 & 3)
மீனம்: பூரட்டாதி (4ஆம் பாதம்), உத்திரட்டாதி, ரேவதி

என்ன பாடம் புரியும் படியாக உள்ளதா?

அன்புடன்
வாத்தியார்


பின் குறிப்பு:  இது பெண்களுக்கு மட்டும்:  மாதவிடாய் (periods) அதாவது மாதத்தில் 3 நாட்கள் வீட்டு விலக்கு, இந்தச் சந்திரனின் சுற்றை வைத்துத்தான் ஒவ்வொரு மாதமும் உண்டாகும். சந்திரனும் செவ்வாயும் வலுவாக  இல்லை என்றால் மாதவிடாய்க் கோளாறுகள், அதைவைத்து அடிவயிற்றில் வலி போன்ற பிரச்சினைகள் பெண்களுக்கு ஏற்படும்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

18.9.12

Astrology - Popcorn Post ஆடும்வரை ஆட்டம்!!

Astrology - Popcorn Post ஆடும்வரை ஆட்டம்!!

Popcorn Post No.25
பாப்கார்ன் பதிவுகள் - எண்.25


"வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?
"

என்று பிரபலமான பாடல் ஒன்றின் பல்லவியில் எழுதிய கவியரசர், அதே பாடலின் சரணத்தில் இப்படி எழுதியிருப்பார்:

"ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்
கொள்ளிவரை வருமா?"


செவிட்டில் அறைவதைப்போன்று என்ன ஒரு கேள்வி பாருங்கள்

நம்மோடு தொடர்ந்து சுற்றியவர்கள், சாப்பிட்டவர்கள், நமது பணத்தைக் கூட இருந்தே கரைத்தவர்கள், வலது கை என்று நாம் நம்பிக்கொண்டிருந்தவர்கள்,  மாலை நேரங்களில், கூட இருந்து நமக்கு சரக்கை ஊற்றிக்கொடுத்தவர்கள், கொஞ்சம் அதிகமான நேரங்களில் வீடுவரை கொண்டுவந்து விட்டு விட்டுப் போனவர்கள், உயிர் காப்பான் தோழன் என்று கவிஞர்களால் வர்ணிக்கப் படுகிறவர்கள் - இப்படிச் சொல்லிக்கொண்டே போகக்கூடிய எண்ணற்ற வர்கள், நமக்கு மிகவும் நெருங்கியவர்கள் எத்தனை பேர்கள் இருந்தாலும், ஒரு நாள் நாம் சிதையில் வேகும் போது “ அடேய், நம் சுப்பிரமணி கொள்ளியில் தனியாக வேகிறானடா! அவன் தனியாக வேகக்கூடாது. நானும் அவனோடு போகிறேன்” என்று சொல்லியவாறு எரியும் சிதையில் எவனாது ஏறிப் படுத்துகொள்வானா?

மாட்டான்!. மாட்டான்! மாட்டான்!

அதைத்தான் கூடிவரும் கூட்டம் கொள்ளிவரை வருமா? என்று கவியரசர் கேட்டார்
------------------------------------------------------------------
பணம், பதவி, புகழ், செல்வாக்கு, அதிகாரம் என்று அவற்றை ஒரு கிரக்கத்துடன் தேடி அலைபவர்கள்  நிறையப் பேர்கள் உள்ளார்கள்.

அவற்றில் ஏதாவது ஒன்று கிடைத்தாலும் போதும் என்று தனியாக அலைபவர்களும் உள்ளார்கள். ஒருவித போதை அது!

வாழ்க்கை ஒரு மாயை (illusion) என்பதை உணர்ந்தவன் அதற்கு அலைய மாட்டான்!

கிடைப்பது முக்கியமில்லை. கிடைத்தால் அது கடைசிவரை நம்மோடு இருக்க வேண்டும். நம்மை அது மேன்மைப் படுத்த வேண்டும். அந்த நிலைமை இல்லை என்றால் அது கிடைத்தும் பிரயோஜனமில்லை

ஜாதகப்படி அது கிடைப்பதற்கும், கிடைத்தது  நிலைப்பதற்கும் என்ன காரணம் என்று இன்று பார்ப்போம்
------------------------------------------------------------------------------------

மேலே உள்ள ஜாதகம் உலகையே கலக்கிய மனிதனின் ஜாதகம்
ஆமாம். ஹிட்லரின் ஜாதகம்

ஹிட்லரைப் பற்றி முன்பு விவரமாக எழுதியுள்ளேன். ஆகவே அதைத் தவிர்த்துவிட்டு சொல்ல வந்த செய்தியை மட்டும் சொல்கிறேன்
பணம், பதவி, புகழ், செல்வாக்கு, அதிகாரம் என்று அனைத்தையும் எட்டிப் பிடித்தவர் அவர்.

ஆனால் அவைகளே அனைத்தையும் கொட்டிக் கவிழ்த்து அவருடைய முடிவைத் தற்கொலையில் கொண்டுபோய் நிறுத்தின!

ஜாதகப்படி என்ன காரணம்?

கஜகேசரி யோகம் இருந்து, அந்த யோகத்தைக் கொடுக்கும் குரு பகவான் தன்னுடைய  பார்வையில் ஏழாம் வீட்டை வைத்திருந்தால் ஜாதகனுக்கு எல்லாம் கிடைக்கும். ஆனால் அந்த அமைப்பில் குருவுடன், கேது அல்லது ராகு வந்து ஒட்டிக்கொண்டிருந்தால், முடிவு அவலமாக இருக்கும். கஜகேசரி யோகம் கிடைத்தும் பிரயோஜனமில்லாத நிலை அது!

சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் என்று 4 கிரகங்களை தன்னுடைய கஜகேசரி யோகத்தால் ஆட்டிவைத்த குருவை, (ஆட்டிவைத்த பதம் எதற்கு? துலாம் லக்கினத்திற்கு குரு நம்பர் ஒன் வில்லன். அதை மனதில் வையுங்கள்) அவர் ஜாதகனுக்கு வாங்கிக் கொடுத்தவற்றை, கூடவே இருந்த கேது, கடைசியில் கொட்டிக் கவிழ்த்தான்.

ஹிட்லரின் படையில் எத்தனை அதிகாரிகள், வீரர்கள் இருந்தார்கள். அவனுடன் சேர்ந்து சுகப்பட்டவர்கள் எத்தனை பேர்கள். ஒருவனாவது ஹிட்லர் புதையுண்டபோது, கூடச் சேர்ந்து புதையுண்டானா?
அதை வலியுறுத்தத்தான் பதிவின் முகப்பில் உள்ள பாடல் வரிகள்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

17.9.12

Astrology யாரடா மேன்மக்கள்?




Astrology  யாரடா மேன்மக்கள்?

Key Points
முக்கியவிதிகள்


கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே;
சங்கு சுட்டாலும் வெண்மை தரும்!


1
சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது & தேய்பிறைச் சந்திரன் மற்றும் தீய கிரகத்துடன் கூட்டாக இருக்கும் புதன் ஆகியவை  தீமைகளையே செய்யக்கூடியவை. குரு, சுக்கிரன், வளர்பிறைச் சந்திரன் மற்றும் சுபக்கிரகத்துடன் கூட்டணி சேர்ந்திருக்கும் புதன் ஆகியவை எப்போதும் நன்மைகளையே செய்யக்கூடியவை.

2.
குரு மிகவும் வலிமையான கிரகம். நம்பர் ஒன் சுபக்கிரகம். தீமைகளைக் குறைக்கூடிய கிரகம். வாழ்வில் செழுமையை  உண்டாக்கக்கூடிய கிரகம் (Prosperity in ones life) சுக்கிரனுக்குக் குருவைப்போன்று முழு வலிமை இல்லாவிட்டாலும், அதுவும் வலிமையான கிரகம்தான். நன்மைகளைச் செய்யும்  கிரகம்தான். புதனுக்குக் குருவைப்போல வலிமை இல்லை யென்றாலும், சுபனோடு கூட்டணி போட்டால் வலிமை உடையதாகிவிடும்.

3.
குரு ஜாதகத்தில் நீசம் பெற்றிருந்தாலும், ஜாதகனுக்கு நன்மைகளைச் செய்யும்.

4.
குரு ஜாதகனுக்குப் பல விதங்களில் நன்மைகளையும், உதவிகளையும் செய்யக் கூடியது. சுக்கிரன் ஜாதகனுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய வகையில் செயல்படும். வாழ்க்கையில் சொகுசை (Luxury)  உண்டாக்கும். குருவிற்கு தேவகுரு என்று பெயர். சுக்கிரனுக்கு அசுர குரு என்று பெயர்.

5.
தீமை செய்யக்கூடிய கிரகங்களில் சனி முதன்மையானது. ஜாதகனுக்குப் பொறுமை, சகிப்புத்தன்மை ஆகியவற்றைக் கொடுக்கக்கூடிய  கிரகமும் அதுதான். வாழ்க்கையின் பல பரிமாணங்களை உணரவைக்கக்கூடிய கிரகமும் அதுதான். இறையுணர்வை அதிகமாக்கும்  கிரகமும் அதுதான்!

6.
செவ்வாய் அதற்கு (சனிக்கு) நேர்மாறானது. ஜாதகனுக்குக் கோபம், பழிவாங்கும் தன்மைகளை ஏற்படுத்தும். சில ஜாதகர்களை தீவிரவாதி யாக்கும். கலவரங்களில் ஈடுபடவைக்கும். ஜாதகத்தில் உள்ள மற்ற கிரகங்களின் அமைப்பை வைத்து அவைகள் உண்டாகும்.

மேலே கூறியவற்றில் விதிவிலக்கும் உண்டு. சில தீய கிரகங்கள், சில லக்கினக்காரர்களுக்கு, இயற்கையாகவே நன்மை செய்யக்கூடிய
கிரகமாக இருக்கும்.

உதாரணத்திற்கு ரிஷப லக்கினக்காரர்களுக்கு சனி யோககாரகன். அந்த லக்கினக்காரர்களுக்கு சனி, ஒன்பது மற்றும் பத்தாம் இடத்திற்கு உரியவன். யோகங்களைக் கொடுக்கத் துவங்கிவிடுவான். திகைக்க வைக்கக்கூடிய அளவிற்கு யோகங்களைக் கொடுப்பான்.

இடத்தைவைத்து, தீய கிரகங்கள் நன்மை செய்வதைப்போல, நன்மை செய்யக்கூடிய கிரகங்கள், தீய இடங்களில் இருந்தாலும், தன்னுடைய இயற்கையான குணத்தை இழக்காமல், ஜாதகனுக்கு நன்மைகளையே செய்யும். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!

7.
கேந்திரம் மற்றும் திரிகோணங்களில் நல்ல நிலைமையில் வலுவாக இருக்கும் ராகுவும், கேதுவும், தங்களுடைய தசாபுத்திகளில்,  ஜாதகனுக்கு நன்மைகளையே செய்வார்கள்.

8.
கேந்திரம் அல்லது திரிகோணத்தில் இருக்கும் குரு பகவான், ஜாதகனுக்குத் தன்னுடைய தசா புத்திகளில் அதிகமான அளவு நன்மைகளையே செய்வார். தனது 5, 7 & 9 ஆம் பார்வையால் பார்க்கும் வீடுகளுக்கு உரிய நன்மைகளை வாரி வழங்குவார். திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்குத் திருமணத்தை நடத்திவைப்பார். குழந்தை இல்லாதவர்களுக்கு, குழந்தை பாக்கியத்தை ஏற்படுத்திக் கொடுப்பார். குறிப்பாக லக்கினத்தைப் பார்க்கும் குரு ஜாதகனுக்கு மொத்தமாக நன்மைகளை வாரி வழங்குவார்.சுபக்கிரகங்கள் நன்மை செய்யும் அமைப்புக்கள்:

9. இருக்கும் இடத்தைவைத்து நன்மைகள் கிடைக்கும்

10. பார்வையை வைத்து நன்மைகள் கிடைக்கும்

11. அமர்ந்திருக்கும் இடத்தின் அதிபதியோடு கூட்டு அல்லது பார்வையைவைத்து நன்மைகள் கிடைக்கும்.

12. அமர்ந்திருக்கும் இடத்திற்கான காரகனோடு ஆன பார்வையைவைத்து நன்மைகள் கிடைக்கும்.

13. ஒரு சுபக்கிரகம் மற்றொரு சுபக்கிரகத்துடன் கூட்டாக இருந்தாலும் அல்லது பார்வையோடு இருந்தாலும் இரண்டு மடங்கு நன்மைகளை வாரி வழங்கும்.

14. அதே அமைப்பில் ஒரு தீய கிரகம் இன்னொரு தீய கிரகத்துடன் கூட்டு அல்லது பார்வையுடன் இருந்தால் இரண்டு மடங்கு தீமைகளையே செய்யும்!

15. நன்மையான கிரகங்கள், தீமையான இடத்தில் அமரும்போது தீமைகளைச் செய்ய மாட்டார்கள். உதாரணத்திற்கு, ரிஷப  லக்கினத்திற்கு குரு தீயவன். எட்டாம் இடத்து அதிபதி. எட்டாம் இடத்து அதிபதி லக்கினத்தில் அமர்ந்தால், ஜாதகனுக்கு விபத்துக்களை ஏற்படுத்துவார் என்பது பொதுவிதி. ஆனால் ரிஷப லக்கினத்தில் அமரும் குரு அதைப் பொய்யாக்கிவிடுவார். அந்தப் பொதுவிதியைப் பொய்யாக்கிவிடுவார், ஜாதகன் பாதிப்பு அடையமாட்டான். குரு பகவானின் இயற்கத்தன்மை அது. அதை மனதில் வையுங்கள்.

மேல்நிலை வகுப்புப் பாடம். அனைவருக்கும் பயன் படட்டும் என்று அதை இன்று இங்கே பதிவிட்டுள்ளேன்

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

13.9.12

Astrology: கொடிபிடித்துச் செல்பவரின் முக்கியத்துவம்!

 Astrology: கொடிபிடித்துச் செல்பவரின் முக்கியத்துவம்!

காலசர்ப்ப தோஷம் என்பது என்னவென்று உங்கள் அனைவருக்கும் தெரியும். பாடம் நடத்தியுள்ளேன். ராகு & கேதுவிற்குள் அத்தனை கிரகங்களும் அடங்கிவிடும் நிலைமை அது. அதன் கால அளவு பற்றி இருவேறான கருத்துக்கள் உள்ளன.

சிலர் 30 அல்லது 33 வயதுவரை காலசர்ப்ப தோஷம் இருக்கும். அதற்குப்பிறகு அந்த தோஷமே யோகமாக மாறிவிடும் என்பார்கள்.

வேறு சிலர் கால சர்ப்ப தோஷம் லக்கினத்தில் எத்தனை பரல்கள் உள்ளனவோ அத்தனை ஆண்டுகள் நீடிக்கும் என்பார்கள்.

ஆனால் கால சர்ப்ப தோஷத்தில் இரண்டு வகைகள் உள்ளன.

1. காலமிரித யோகம்: ராகு முன்னால் நின்று கொடி பிடிக்க மற்ற கிரகங்கள் அதன் பின்புறம் நின்று வரவும், கேது கடைசியாக வரும் அமைப்பு. இது கடிகாரச் சுற்றில் ஜாதகத்தில் இருக்கும். இது நன்மை பயக்கக்கூடிய அமைப்பு.

2. விலோமா யோகம்: கேது முன்னால் நின்று கொடி பிடிக்க மற்ற கிரகங்கள் அதன் பின்புறம் நின்று வரவும், ராகு கடைசியாக வரும் அமைப்பு. இதுவும் கடிகாரச் சுற்றில் ஜாதகத்தில் இருக்கும். இது தீமை பயக்கக்கூடிய அமைப்பு.

There are two types of Kala Sarpa Yogas. One is when all of the seven grahas that are caught in the axis are moving toward the mouth of the serpent, Rahu. This is called kalamrita yoga and is considered the main formation. The other is when all of the planets are moving towards the tail Ketu and is known as viloma.
அது சம்பந்தமாக இப்போது ஒரு ஜாதகத்தை அலசுவோம்.
-----------------------------------------------------------------------------------



++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மேலே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.

இது ஒரு பெண்மணியின் ஜாதகம். திருமணவாழ்வு, அதிருப்தியுடன் துவங்கிக் கடைசியில் சோகத்தில் முடிந்தது. ஆமாம். திருமணமான சில மாதங்களிலேயே கணவர் இறந்துவிட்டார். கணவர் உடல் நலமில்லாதவர் என்பது திருமணத்திற்குப் பிறகுதான் அம்மணிக்குத் தெரியவந்தது.

அதற்குப் பிறகு என்ன செய்வது?

மனதைத் தேற்றிக்கொண்டு அம்மணி வாழ்ந்தார். சமூக சேவைகளைச் செய்து தன் வாழ் நாட்களைப் பயன் உள்ளதாக்கிக் கொண்டார்.

என்ன காரணம்?

ஜாதகத்தைப் பாருங்கள். கேது கொடிபிடித்துக் கொண்டு செல்கிறது. மற்ற கிரகங்கள் அனைத்தும் அதன் பின்புறம் உள்ளன. ஏழுக்குரிய சுக்கிரன் ஏழாம் இடத்திற்குப் பன்னிரெண்டில் விரையத்தில் அமர்ந்தார். உடன் ஜோடி சேர்ந்த எட்டாம் அதிபதி புதன் கணவரைக் காலி செய்து விரையத்தைப் பூர்த்தி யாக்கினார். 2ஆம் அதிபதி குரு நீசமானதால் குடும்ப வாழ்க்கையைக் கொடுக்கவில்லை.

பத்தாம் அதிபதி சூரியன் அந்த வீட்டிற்குப் பத்தில். அத்துடன் பாக்கியாதிபதி சந்திரன் அந்த வீட்டிற்கு எட்டில் அமர்ந்து ஜாதகியின் பாக்கியங்களைக் கெடுத்தாலும், பத்தாம் இடத்தைத் தன் பார்வையில் வைத்து, ஜாதகியைச் சமூக சேவைகளில் ஈடுபட வைத்தார்.

ஆகவே காலசர்ப்ப தோஷ ஜாதகர்கள், தங்கள் ஜாதகத்தில் கொடி பிடித்துச் செல்வது யார் - ராகுவா அல்லது கேதுவா என்று பார்ப்பது அவசியம்.

விளக்கம் போதுமா?

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

12.9.12

Astrology செவ்வாயும் அதன் தோஷங்களும்!

Astrology செவ்வாயும் அதன் தோஷங்களும்!

மேல்நிலைப் பாடம்
முக்கியமான விதிகள்
தலைப்பு: செவ்வாய் தோஷம்


செவ்வாய் தோஷம் என்ற சொல் திருமணச் சந்தையில் சில சிக்கல்களை உண்டு பண்ணும்!

தோஷம் இல்லாத சுத்த ஜாதகத்தையுடைய குழந்தைகளுக்கு வரன் பார்க்கும் போது, அவர்களின் பெற்றோர்கள், செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகம் என்றால் வேண்டாம் என்று மறுத்துவிடுவார்கள்.

செவ்வாய் தோஷம் என்றால் என்ன?
அது உண்டா அல்லது இல்லையா?
அதனால் பாதிப்பு உண்டா அல்லது இல்லையா?

இந்தக் கேள்விகளுக்கான பதிலை இன்று பார்ப்போம்!
---------------------------------------------
ஒரு ஜாதகத்தில் லக்கினம், நான்காம் வீடு, 7ம் வீடு, 8ம் வீடு மற்றும்12ம் வீடுகளில் செவ்வாய் இருந்தால் ( If mars is placed in those houses) அந்த ஜாதகம் செவ்வாய் தோஷமுள்ள ஜாதகம் ஆகும். அதிலும் ஒரு கணக்கு உண்டு. 7ல் அல்லது 8ல் செவ்வாய் இருந்தால் அது முழு தோஷம் என்றும் மற்ற இடங்களில் இருக்கும் செவ்வாய்க்கு கால், அரை, முக்கால் என்று அளவையும் சொல்வார்கள். சில ஜோதிடர்கள் இரண்டாம் வீட்டையும் இந்த ஆட்டத்தில் சேர்த்துக்கொள்வார்கள்

பெண்களின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால், அந்தப் பெண்ணிற்கு வரன் பார்க்கும் போது, அதே போன்று அல்லது அதைவிட அதிகமாக தோஷமுள்ள பையனைத் தேடுவார்கள்.

அப்படி தோஷப் பொருத்தம் இல்லாமல் செய்யப்படும் திருமணங்கள் அவலத்தில் முடிவதுண்டு. பிரச்சினையில் முடிவதுண்டு.

உதாரணத்திற்கு ஒரு பெண் ஜாதகத்தில் எட்டில் செவ்வாய் இருந்தால், அது மாங்கல்ய ஸ்தானம் என்பதால், கடுமையான தோஷம் என்பார்கள். அதற்குப் பலன், ஒன்று அவள் விதவையாகி விடுவாள் அல்லது அவளூடைய கணவனுக்கு ஆயுள் அதிகமாக இருக்கும் அமைப்பில், அவள் தன் கணவனை விட்டுப் பிரிந்து வந்து விடுவாள் என்பார்கள்.

ஆனால் சில ஜோதிடர்கள் அதற்கு விதிவிலக்கு என்று சில கணக்குகளைச் சொல்வார்கள்.

மேஷ லக்கினத்திற்கும், விருச்சிக லக்கினத்திற்கும் செவ்வாய் அதிபதி. ஆகவே அந்த லக்கினக்காரர்களை செவ்வாய் தோஷம் ஒன்றும் செய்யாது. செவ்வாயே லக்கினாதிபதியானதால், அவன் தனக்குத் தானே எப்படி தோஷத்தைச் செய்வான்? ஆகவே அந்த இரு லக்கினக்காரகளும் செவ்வாய் தோஷத்தில் இருந்து விடுபட்டவர்கள் ஆவார்கள் என்பார்கள். ஜாதகத்தில் உச்சம் பெற்றுள்ள செவ்வாயும் தோஷத்தைக் கொடுக்காது என்பார்கள்.

தோசம் உண்டு என்று சொல்லும் ஜோதிடர்கள் எல்லாம் தங்கள் அனுபவத்தை வைத்து அவ்வாறு சொல்வார்கள். ஆகவே அதை எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்! அதாவது அனுபவமிக்க ஜோதிடர்சொன்னால், தோஷத்தை எடுத்துக் கொண்டு ஒழுங்கு மரியாதையாக தோஷமுள்ள ஜாதகத்தையே இணைக்க வேண்டும்.

இல்லாவிட்டால் ரிஸ்க் எடுப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும்

எனக்குத் தெரிந்த பெண்கள் இருவரின் வாழ்வில் அவ்வாறு நடந்துள்ளது. அவர்கள் இருவருக்கும் எட்டில் செவ்வாய். அதுவும் உச்சம் பெற்ற செவ்வாய். ஆனால் அவர்கள் செவ்வாயால் திருமண வாழ்வில் பலத்த அடி வாங்கிக்கொண்டு திரும்பி வந்துவிட்டார்கள். மேட்டர் நீதி மன்றம் வரை சென்று விவாகரத்தும் ஆகிவிட்டது.

சில பெண்கள் இந்த செவ்வாய் தோஷத்தால், தங்கள் கணவனைப் பறி கொடுத்திருக்கலாம். ஆனால் அது செவ்வாயின் இருப்பிடத்தை மட்டும் ஏற்பட்டதாக இருக்காது. செவ்வாய் ஜாதகத்தில் வேறு ஏதாவது தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையால் வலிமை கெட்டு இருக்கும் நிலைமையால் அவ்வாறு ஏற்பட்டிருக்கலாம். ஆகவே முழு ஜாதகத்தையும் அலசிப் பார்ப்பது அவசியம்.

செவ்வாய் தோஷத்தால் வாழ்க்கையே முடிந்து விடாது. முதலில் கவலைப் படுவதை அல்லது பயப்படுவதை நிறுத்த வேண்டும். அந்த தோஷம் காலாவதியாகிவிடும் என்று பல உப விதிகள் சொல்லப்பட்டுள்ளன. அவை என்னவென்று தெரிந்து கொண்டு, அதையும் பார்க்க வேண்டும். உலகில் விதிகளும் உண்டு. விதிவிலக்குகளும் உண்டு. அதை மனதில் கொள்க!

சில ஜோதிடர்கள், கடுமையான செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகங்களுக்கு (கடுமை என்பது 7 அல்லது 8ல் செவ்வாயுடன், ராகு, கேது அல்லது சனி சேர்ந்து இருக்கும் நிலைமை) சில பரிகாரங்களைச் சொல்வார்கள். அவ்வாறான அமைப்பு உள்ள பெண்ணிற்கு திருமணம் செய்ய முனையும்போது, மனைவியை இழந்த இளைஞனுக்கு, இரண்டாம் தாராமாக அப்பெண்ணைத் திருமணம் செய்யச் சொல்வார்கள்

இன்றைய கால கட்டத்தில் இரண்டாம் தாரமாகக் கழுத்தை நீட்ட எந்தப் பெண்ணும் ஒப்புக்கொள்ள மாட்டாள். எடுத்துச் சொன்னாலும் அவளுக்குப் பிடிபடாது. அவ்வாறு அமைப்பு இருப்பதால் மட்டுமே அவள் விதவை யாகிவிடுவாள் என்று சொல்லிவிட முடியாது. ஜாதகத்தில் உள்ள மற்ற சுப அமைப்புக்களையும் பார்க்க வேண்டும்.

ஜாதகத்தில் செவ்வாய் இருக்கும் இடத்தை வைத்துப் பலன்கள்:

லக்கினத்தில் செவ்வாய் இருந்தால்: சிறு விஷயங்களுக்குக்கூட விவாதம் செய்யக்கூடியவர். உறவுகளின் மேல் தன் அதிகாரத்தைச் செலுத்தக்கூடியவர்.

இரண்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: கேட்பவைனைக் கோபப்பட வைக்கும் பேச்சை உடையவர்.

நான்காம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவர். அதன் காரணமாக அடிக்கடி அவருடைய வேலை அல்லது தொழிலில் சிக்கல்கள், மாற்றங்கள் ஏற்படலாம்.

ஏழில் செவ்வாய் இருந்தால்: அதீதமான செயலாற்றல் உடையவர். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் உடையவர். பல சமயங்கள் மற்றவர்களுடன் ஒத்துப்போக மாட்டார்.

எட்டில் செவ்வாய் இருந்தால்: இளம் வயதிலேயே கணவன் அல்லது மனைவியைப் பறிகொடுக்க நேரிடலாம்.

பன்னிரெண்டில் செவ்வாய் இருந்தால்: பண இழப்புக்கள். அதிகமான விரோதிகள். அடக்கமுடியாத கோப மனப்பான்மை உடைய ஜாதகம்.

இவை அனைத்தும் பொது விதிகள். சுபக் கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கையால் இவைகள் குறையலாம் அல்லது இல்லாமல் போகலாம்.

பண்டைய நூல்களில் குறிப்பாக பிருஹத் பாரசார ஹோர சாஸ்திர நூலில் செவ்வாய் தோஷத்தைப் பற்றிக் குறிப்பிடப் பெற்றுள்ளது. 1, 4,7, 8 & 12ல் சுப கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையுடன்  இருக்கும் செவ்வாய்,  தோஷத்தைக் கொடுக்காது என்கிறது அந்த நூல். அதுபோன்ற சுபகிரகங்களின் சேர்க்கையோ அல்லது பார்வையோ இல்லாமல் தனித்திருக்கும் செவ்வாய் தோஷத்தை உண்டாக்குமாம். அவ்வாறு 7 அல்லது 8ல் செவ்வாய் இருக்கும் பெண் தன் கணவனை இளம் வயதிலேயே பறி கொடுக்க நேரிடும் என்று அந்த நூல் கூறுகின்றது.

தோஷத்திற்கான சில விஷேச விதிவிலக்குகள்

ரிஷப லக்கினக்காரர்களுக்கும் சிம்ம லக்கினக்காரர்களுக்கும் இரண்டாம் வீட்டில் இருக்கும் செவ்வாயால் கெடுதல் இல்லை என்பது விதி (rule)

மகர லக்கினக்காரர்களுக்கு 4ஆம் வீட்டில் இருக்கும் செவ்வாயால் கெடுதல் இல்லை என்பது விதி (rule)

மகர லக்கினத்திற்கு 7ல் அல்லது கடக லக்கினத்திற்கு 7ல் இருக்கும் செவ்வாயால் கெடுதல் இல்லை என்பது விதி (rule)

சிம்ம லக்கினத்திற்கு எட்டில் இருக்கும் செவ்வாயால் கெடுதல் இல்லை என்பது விதி (rule)

மிதுன லக்கினத்திற்கு 12ல் இருக்கும் செவ்வாயாலும், விருச்சிக லக்கினத்திற்கு 2ல் இருக்கும் செவ்வாயாலும் கெடுதல் இல்லை என்பது விதி (rule)

கடக, மற்றும் சிம்ம லக்கினக்காரர்களுக்கு செவ்வாய் யோககாரகன், ஆகவே அவர்களுடைய ஜாதகத்தில் செவ்வாய் எங்கே இருந்தாலும் தோஷம் இல்லை என்பது விதி (rule)

லக்கினத்தில் குரு அல்லது சுக்கிரன் அமர்ந்திருக்கும் ஜாதகர்களுக்கு செவ்வாய் தோஷம் இல்லை என்பது விதி (rule)

குரு அல்லது சந்திரனுடன் சேர்ந்திருக்கும் அல்லது அவர்களின் நேரடிப்பார்வையில் இருக்கும் செவ்வாயால், தோஷம் இல்லை என்பது விதி (rule)

செவ்வாய் தோஷம் இருந்தாலும் 28 வயதிற்கு மேல், அந்த தோஷம் வலிமை இழந்து விடும் என்பவர்களும் உண்டு. பொதுவாக 30 வயதில் ஜாதகத்தில் உள்ள எல்லா தோஷங்களும் காலாவதியாகிவிடும்.

தோஷம் உள்ள ஜாதகர்கள் அவ்வாறு தோஷம் உள்ள ஜாதகரையே தேடிப் பிடித்து மணந்து கொள்வது நல்லது.

முருகப் பெருமானின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவர் செவ்வாய். ஆகவே முருகப் பெருமானை வழிபடுவது தோஷத்தைக் குறைக்கும்.
--------------------------------------------------------------
என்ன படிக்கப் படிக்க தலையைச் சுற்றுகிறதா?

ஜோதிடம் என்றால் சும்மாவா? அப்படித்தான் சுற்றும்.

அதை போக்க அஷ்டகவர்க்கம்337 சரக்கில் இரண்டு பெக் அடித்துவிட்டு, நிம்மதியாக இருங்கள்.

இது மேல்நிலை வகுப்பிற்காக எழுதப்பெற்ற பாடம். அனைவருக்கும் பயன்படட்டும் என்று அதை இன்று இங்கே பதிவிட்டுள்ளேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

11.9.12

Astrology லக்கின சந்திப்புக்களில் ஏற்படும் பிறப்புக்கள் (Border births between 2 lagnas)

 Astrology லக்கின சந்திப்புக்களில் ஏற்படும் பிறப்புக்கள்  
(Border births between 2 lagnas)

இது நேற்றைய பதிவின் தொடர்ச்சி. அதைப் படித்திராதவர்கள், அதைப் படித்துவிட்டு, இதைப் படிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பஞ்சாங்க வகைகள்

பஞ்சாங்கத்தில் இரு வகைகள் உள்ளன.
1. திருக்கணித பஞ்சாங்கம்
2. வாக்கிய பஞ்சாங்கம்.
வாக்கிய பஞ்சாங்கத்திற்கும் திருக்கணிதப் பஞ்சாங்கத்திற்கும் அதிகபட்சமாக 17 நாழிகை வரை வேறுபாடு ஏற்படுவதுண்டு. அதாவது 6 மணி 48 நிமிசம் வரை இந்த வேறுபாடு ஏற்படும். தமிழகக் கோவில்களில் வாக்கிய பஞ்சாங்கமே பயன்படுத்தப்படுகிறது.

திருக்கணித பஞ்சாங்கம்
சந்திரனது வட்டப்பாதையில் அவ்வப்போது ஏற்படும் இயக்க நிலை வித்தியாசத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு எழுதப்படும் பஞ்சாங்கமாகும்.

திருத்தப்பட்ட பஞ்சாங்கமாக திருக்கணித பஞ்சாங்கம் வெளிவருகிறது. திருக்கணிதப் பஞ்சாங்கள்:
வாசன் சுத்த திருக்கனிதப் பஞ்சாங்கம்,
ஆதவன் திருக்கனிதப் பஞ்சாங்கம்,
குமரன் திருக்கணித பஞ்சாங்கம்,
பாலன் திருக்கணித பஞ்சாங்கம்,
ராஷ்ட்ரீய பஞ்சாங்கம்,
சபரி சுத்த திருக்கனிதப் பஞ்சாங்கம்,
ஸ்ரீனிவாசன் திருக்கணிதப் பஞ்சாங்கம்,
ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ ஆச்சாரியார் மடத்து பஞ்சாங்கம்.
ஆகியவைகள் புகழ்பெற்ற திருக்கணிதப் பஞ்சாங்களாகும்.

வாக்கிய பஞ்சாங்கம்

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ரிஷிகள் ஒன்று கூடி எழுதிய சுலோகங்களில் உள்ள கணித முறைப்படி அப்படியே எழுதப்படும் பஞ்சாங்கம் வாக்கிய பஞ்சாங்கமாகும். வாக்கியம் என்பது மாறுதல் இல்லாமல் ரிஷிகளின் வாக்கை அப்படியே பிரதிபலிக்ககூடியதாகும்..

தமிழ்நாட்டில் வாக்கியப் பஞ்சாங்கம்தான் அதிகமாக பின்பற்றப்படுகிறது. தமிழ் நாட்டில பற்பல வாக்கியப் பஞ்சாங்கங்கள் வெளிவருகின்றன.

ஆற்காடு ஸ்ரீசீதாராமையர் சர்வ முகூர்த்த பஞ்சாங்கம்,
திருநெல்வேலி வாக்கியப் பஞ்சாங்கம்,
ராமநாதபுரம் வாக்கியப் பஞ்சாங்கம்,
பாம்புப் பஞ்சாங்கம்,
ஸ்ரீகாஞ்சி மடத்து பஞ்சாங்கம்,
சிருங்கேரி மடம் பஞ்சாங்கம்,
ஸ்ரீரங்கம் வாக்கிய பஞ்சாங்கம்,
ஆகியவைகள் புகழ்பெற்ற வாக்கியப் பஞ்சாங்கங்களாகும்!.

இந்த வகைப் பஞ்சாங்கங்கள் தமிழ் நாட்டில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. பிற மாநிலங்களில் திருக்கணிதப் பஞ்சாங்கம் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.
----------------
சரியான கணக்குகளுக்கு என்றால் திருக்கணிதம் சிறந்தது. சரியான ஜாதகத்திற்கு என்றால் வாக்கியம் சிறந்தது. (நமது பெற்றோர்கள் கணித்துவைத்துள்ள ஜாதகம் இதன் அடைப்படையில்தான்) ஆகவே கணினியில் திருக்கணிதத்தில் கணித்துவிட்டு, எங்கப்பா எழுதி வைத்ததுபோல இல்லையே என்று சொல்லாதீர்கள்
--------------------------------
உங்க அப்பா எழுதியதுபோல வேண்டுமென்றால், ராமன் அயனாம்சத்தில் கணித்து வைத்துக் கொள்ளுங்கள். ராமன் அயனாம்சத்திலும்
360 நாள் கணக்கை வைத்துக் கணித்துக்கொள்ளுங்கள். அதற்கான படம் கீழே உள்ளது


எனக்கு அப்படித்தான் எழுதிவைத்திருக்கிறேன். சரியாக உள்ளது. என் தாத்தா எழுதி வைத்திருப்பதைப் போல இருக்கிறது.

சிலருக்கு வித்தியாசம் வருகிறது என்று ஏன் சொல்கிறார்கள் என்று ஆராய்ந்தபோது. கால சந்திப்பில்  (Border Birth) பிறந்தவர்களுக்கு அதுபோன்று வரும். அவர்கள் ராமன் அயனாம்சத்தில் கணித்து வைத்துக்கொள்வது நல்லது. ராமன் அவர்கள்தான் ஜோதிடத்திற்கு அத்தாரிட்டியாக எல்லோராலும் போற்றப்பட்டு வந்தவர். அதை மனதில் வையுங்கள்.

பொதுவாக லக்கின சந்திப்புக்களில் (Border birth between 2 lagnas) பிறந்தவர்களுக்கு ஜாதகங்களில் லக்கினக் குழப்பம் இருக்கும். அதுபோல் கிரகங்கள் ராசி சந்திப்பில் நகரும் காலத்தில் (Border between 2 rasis for planets) பிறந்தவர்களுக்கு கிரகங்கள் அமர்ந்திருக்கும் இடக் குழப்பம் ஏற்படும். அவைகள் தவிர்க்க முடியாது. அவர்கள் தங்கள் ஜதகத்தைக் கணித்து வைத்துக்கொண்டு, வேறு முறைகளுடன் தங்கள் ஜாதகத்தை நோண்டிப் பார்ப்பதை அல்லது தோண்டிப் பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது. பிரச்சினை இருக்காது. குழப்பம் இருக்காது.
---------------------------------------------
பிரச்சினை தீர வேண்டுமென்றால், உங்க அப்பா எழுதிவைத்துள்ளதை உங்களுடைய ஜாதகமாக வைத்துக்கொள்ளுங்கள். அதில் அஷ்டகவர்க்கம் இல்லை என்றால், அஷ்டகவர்கத்தை மட்டும் தனியாகக் கணித்து அதனுடன் சேர்த்துவைத்துக்கொள்ளுங்கள்.
------------------------------------------------------
ஜோதிட மென்பொருட்களில் லஹிரி, ராமன், கிருஷ்ணமூர்த்தி முறை என்று இருப்பதைப் போல, வாக்கியத்திற்கும் option உள்ள மென் பொருள் இருக்கிறதா? என்று கேட்பவர்களுக்கு, கீழே ஒரு புதிய மென்பொருளைக் கொடுத்துள்ளேன். அதில் வாக்கியமுறைக்கான சாய்ஸ் உள்ளது.அதைப் பயன் படுத்திக் கொள்ளூங்கள். பயன் படுத்திப் பார்த்து விட்டு எப்படி உள்ளது என்று சொல்லுங்கள். அந்த மென் பொருளுக்கான சுட்டியை நமது வகுப்பறைக் கண்மணி ஒருவர் கொடுத்தார். அவருக்கு நம் நன்றிகள் உரித்தாகுக!


image

அதற்கான சுட்டி  (URL) http://www.astraura.org/Charter2/CharterVak3.aspx

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

10.9.12

Astrology எங்கும் இலவசம். எதிலும் இலவசம். எல்லாம் இலவசம்

Astrology எங்கும் இலவசம். எதிலும் இலவசம். எல்லாம் இலவசம்

ஜாதகத்தைக் கணித்து வைத்துக்கொள்வதற்கு, பஞ்சாங்கமும், ஜோதிடர்களும் இன்றைய காலகட்டத்தில் தேவையில்லாமல் போய்விட்டது. கணினி அந்த வேலையைச் செய்து தருவதால், எல்லாம் சுலபமாக ஆகிவிட்டது.

10 ஆண்டுகளுக்கு முன்பு,  கணினி ஜாதகத்திற்குக்கூட, மையங்களுக்குச் சென்று, காசு கொடுத்து, அவர்கள் கணித்து, பிரதி எடுத்துக் கொடுப்பதை வாங்கிக் கொண்டு வரவேண்டும்.

இப்போது அந்த வேலையும் இல்லை.

வீட்டில் கணினி இருந்தால் நாமே கணித்துக் கொள்ளலாம். அதற்குத் தேவையான மென்பொருள்கள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன.

இலவசம் என்றால்தான் நமக்கு மிகவும் பிடிக்குமே. அதைப் பற்றி இன்று பார்ப்போம்!
---------------------------------------------------
இந்தியாவின் தேசியப் பறவை மயில்
இந்தியாவின் தேசிய மலர் தாமரை
இந்தியாவின் தேசியக் குணம் இலவசம்

ஒரு குடிமகனின் ஆதங்கம்: “டாஸ்மாக் சரக்கு இலவசமாகக் கிடைத்தால் எத்தனை ஆனந்தமாக இருக்கும்?”
----------------------------------------------------
1.
மிகவும் விவரமாக உள்ள ஜோதிட மென்பொருள் ஜகந்நாத ஹோரா
அதற்கான சுட்டி (URL)
http://www.vedicastrologer.org/jh/
அதைத் தரவிறக்கம் (Download) செய்து, உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள் (install it in your computer)



Basic calculation
Complete calculation
என்று எல்லா வசதிகளும் உள்ளன.
------------
Chakras (Rasi chakra, Navamsa chakra)
Basics
Strengths > Ashtakavarga
Dasas

என்று எல்லாவற்றிற்கும் வசதி உள்ளது. மெனு பாரைப் பாருங்கள். அதை க்ளிக்கி அல்லது நோண்டி அல்லது தோண்டிப் பாருங்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளலாம். எதாக இருந்தாலும் தோண்டிப் பார்த்துக் கற்றுக்கொள்வேன். அதுதான் என்னுடைய பழக்கம். அவ்வாறே செய்யுங்கள்.
---------------------------
சரி, ஜாதகத்தை எப்படி அதில் உருவாக்குவது? மெனு பாரில் ஆறாவதாக Data என்னும் பட்டன் இருக்கும் அதை அமுக்கிப் பாருங்கள். கீழே குறிப்பிட்டுள்ளபடி ஒரு புதிய ஜன்னல் வரும். அதில் உங்கள் பிறப்பு விவரங்களை உள்ளிடுங்கள். உங்களுக்குத் தேவையான ஜாதகத்தை அது கண் இமைக்கும் நேரத்திற்குள் தயாரித்துக் கொடுத்துவிடும்.
----------------------------
இதைச் சொல்லிக் கொடுத்தும் ஒருவர் என்னை விடவில்லை. ஜோதிடத்தில் திருக்கணிதப் பஞ்சாங்கம், வாக்கியப் பஞ்சாங்கம் என்று இரண்டு சனியன்கள் உள்ளதே! அவற்றிற்கிடையே இரண்டு பாகைகள் வித்தியாசம் இருந்து ஆளையும் கொள்கிறதே. அதைப் போக்குவதற்கு  இதில் என்ன வழி?

வழி இல்லாமல் இல்லை! இருக்கிறது.

Menu Bar > Preferences > Related to calculations > Ayanamsa > select ayanamsa இங்கே உங்களுக்கு கீழ்க் கண்ட அமைப்பில் ஜன்னல் கிடைக்கும்




”என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு - என்
கண்ணில்பட்டு ரொம்ப நாளாச்சு”


 என்று பாடிக்கொண்டே அதில் உங்களுக்குத் தேவையான அயனாம்சத்தைத் தெரிவு செய்து கொள்ளூங்கள்

Lahiri = திருக்கணிதம்
Raman = வாக்கியம்


இப்போது நீங்கள் விரும்பியபடி உங்கள் ஜாதகம் கிடைக்கும்!
++++++++++++++++++++++++++++++++
இந்த உதவி செய்யப்போய், ஒருமுறை, பல்கலைக் கழகம் ஒன்றில் ஜோதிடப் பாடம் படிக்கும் மாணவர் ஒருவரிடம் மாட்டிக்கொண்டு விட்டேன். என்னை அவர் பிலு பிலுவென்று பிடித்துக்கொண்டுவிட்டார்.

”ராமன் அயனாம்சத்தை நம் ஊர் வாக்கியப் பஞ்சாங்களோடு ஒப்பிட முடியாது. என் பெற்றோர் எழுதி வைத்துள்ளது போலவே அச்சு அசலாக ஒரு ஜாதகம் கிடைக்க வழி சொல்லுங்கள்” என்றார்

சொன்னேன்

அது நாளை

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++

6.9.12

Astrology என்னதான் ரகசியமோ ஜாதகத்திலே!!!!

Astrology என்னதான் ரகசியமோ ஜாதகத்திலே!!!!

அலசல் பாடம்!

"என்னதான் ரகசியமோ இதயத்திலே
நினைத்தால்... எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே"
என்று கவியரசர் கண்ணதாசன் பல்லவி ஒன்றில் எழுதினார்

அதை மாற்றி நாம் இப்படிப் பாட வேண்டியதுதான்:

”என்னதான் ரகசியமோ ஜாதகத்திலே
நினைத்தால்... எனக்கே அழுகைவரும் சமயத்திலே”

சில ஜாதகங்கள் அப்படி அமைந்துவிடும்!
-----------------------------------------
கர்மவினையின்படி நமக்கு என்ன வேலை விதிக்கப்பட்டுள்ளதோ அதைத்தான் நாம் செய்ய வேண்டியதிருக்கும். அரசாங்க உத்தியோகம் என்றால் அதுதான் அமையும். இல்லை என்றால் என்ன கரணம் போட்டாலும் அமையாது.

சிலருக்குத் தாங்கள் செய்கின்ற வேலை பிடிக்கும். சிலருக்கு பிடித்தம் இல்லாமல் இருக்கும். வேலையில் இருப்பவர்களுக்குத் தொழில் செய்தால் பரவாயில்லை, நிறைய காசு பார்க்கலாமே, வேலைக்குச் செல்வதில், கைக்கும் வாய்க்குமாக இருக்கிறதே என்ற மன நிலை இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு, இதில் ஏற்ற இறக்கங்கள், ரிஸ்க் எல்லாம் உள்ளதே, வேலை என்றால் மாதாமாதம் வருமானம் இருக்குமே என்ற ஆதங்கம் இருக்கும்.

பொதுவாகப் பலரும் திருப்தியாக இல்லை. நிம்மதியாக இல்லை. இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற நிலைமை.

பலர் மனதிலும் உள்ள கேள்விகள் இவைதான்:

1.  நமக்கு ஏற்ற தொழில் எது?
2. வெளி நாட்டில் வேலை கிடைக்குமா?

அது சம்பந்தமாக இப்பொது ஒரு ஜாதகத்தை அலசுவோம்
-----------------------------------------------------------------------------------
கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.


இது மகர லக்கின ஜாதகம். யோககாரகன் சுக்கிரன் (அதாவது ஒரு திரிகோண வீடு & ஒரு கேந்திர வீடு ஆகியவற்றிற்கு உரியவன்) இந்த ஜாதகத்திற்கு அவன் யோகாரகன் என்பதோடு 10ஆம் வீட்டிற்கும் அதிபதி. அவன் எங்கே இருக்கிறான். அடடா, 12ல் மறைந்து விட்டான்.

அத்துடன்  லக்கினாதிபதியும், தொழில்காரகனுமாகிய சனீஷ்வரன் நீசம்.
ஏழாம் அதிபதி சந்திரனும் நீசம்

”பனை ஏறி விழுந்தவனை, கடா ஏறி மிதித்ததுபோல” என்று கிராமத்தில் சொல்வார்கள். அதாவது ஒருவன் பனை மரத்தின் உச்சியில் இருந்து பிடி நழுவி தடால் என்று கீழே விழுந்துவிட்டானாம். இடுப்பு எலும்பு முறிந்து பலமான அடி. அவன் என்ன நடந்தது என்று பார்ப்பதற்குள், அந்தப் பக்கமாகத் தறிகெட்டு ஓடிவந்த பொலி காளை மாடு ஒன்று அவனை நன்றாக மிதித்துவிட்டு ஓடியதாம். ஒரே நேரத்தில் இரண்டு விபத்துக்கள்.

அதுபோல ஜாதகனுக்கு லக்கினாதிபதியும் அவுட். தொழில்காரகனும் அவுட், பத்தாம் அதிபதியும் அவுட். அவுட்டோ அவுட்!!!! பாவம்தான் என்ன செய்வது? வாங்கிவந்த வரம்! அவ்வளவுதான்!

ஜாதகருக்கு எந்தத் தொழிலும் அல்லது வியாபாரமும் அமையாது. வேலக்குச் செல்ல வேண்டிய ஜாதகம். அல்லது சுய தொழிலாக இருந்தால், பணமுதலீடு இல்லாமல் கமிஷன் அடிப்படையில் உள்ள தொழில்களைச் செய்யலாம்.

சுக்கிரனுக்கு, 9ஆம் அதிபதி மற்றும் 7ஆம் அதிபதியுடன் தொடர்பு இல்லை. ஆகவே வெளிநாடு சென்று வேலை செய்யும் அமைப்பு ஜாதகத்தில் இல்லை. ஆசாமி இங்கேயே வேலை செய்ய வேண்டியதுதான்.

இது மேல்நிலை வகுபிற்காக எழுதப்பெற்ற பாடம். அனைவருக்கும் பயன்படட்டும் என்று அதை இன்று இங்கே பதிவிட்டுள்ளேன்.

அன்புடன்
வாத்தியார்
----------------------------

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

5.9.12

Astrology மண வாழ்க்கை மணக்குமா? மணக்காதா?

Astrology  மண வாழ்க்கை மணக்குமா? மணக்காதா?

Key Points - Part 4

திருமண வாழ்க்கை!

திருமணம் என்பது ஒருவரின் வாழ்வில் முக்கியமான நிகழ்வு. அதி முக்கியமான நிகழ்வு என்றுகூடச் சொல்லலாம்.

கிரேக்க மேதை சாக்ரடீஸ் சொன்னாராம் “எப்படியும் திருமணம் செய்து கொள்ளுங்கள். ஒன்று உங்களுக்கு நல்ல மனைவி கிடைப்பாள். அல்லது நாட்டிற்கு ஒரு நல்ல தத்துவஞானி கிடைப்பான்.”

தத்துவஞானியாக யாரும் விரும்புவதில்லை. நல்ல இல்வாழ்க்கை அமைவதையே எல்லோரும் விரும்புவார்கள். நல்ல இல்வாழ்க்கை அமைவதற்கான ஜாதக அமைப்புக்கள் என்ன?  சில அமைப்புக்கள் உள்ளன. அதைவைத்து திருமணம் ஆக வேண்டியவர்கள் தங்களுக்கு நல்ல இல்வாழ்க்கை அமையுமா என்று பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். நடுத்தரவயதினர், தங்கள் உடன் பிறப்புக்களுக்கு அமையுமா என்று தெரிந்துகொள்ளலாம். வயதானவர்கள், தங்கள் மகன் அல்லது மகளுக்கு அமையவிருக்கும் வாழ்க்கையைத் தெரிந்து கொள்ளலாம்.

சுருக்கமாகச் சொன்னால், மணவாழ்க்கை மணக்குமா அல்லது மணக்காதா? ஜாதக அமைப்புப்படிதான் எல்லாம் நடக்கும். நம் கையில் ஒன்றும் இல்லை. எல்லாம் வாங்கி வந்த வரம். அதைப் பற்றி இன்று பார்ப்போம்.

பொதுவாகவே அது அனைவரும் தெரிந்து கொள்ள விரும்பும் பாடமாகும். அதை இன்று பதிவு செய்துள்ளேன். அனைவரும் படித்துப் பயன் பெறுக!

இது மேல்நிலை வகுப்புப் பாடம். அனைவருக்கும் பயன் படட்டும் என்று இன்று அதை இங்கே பதிவிட்டுள்ளேன்.
--------------------------------------------
1
ஏழாம் வீட்டுக்காரன் ஆட்சி பலத்துடன் இருந்தாலும் அல்லது உச்சம் பெற்று இருந்தாலும் நல்ல திருமண வாழ்க்கை அமையும்.

2,
ஏழாம் வீட்டுக்காரன், 6 அல்லது 8 அல்லது 12ஆம் வீடுகளில் இருப்பதுடன், அது அவருடைய சொந்த வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ இல்லாத நிலைமையில் ஜாதகனின் மனைவி நோயாளியாக இருப்பாள். அவனைப் படுத்தி எடுப்பாள்.

3.
சுக்கிரன் எந்த வீட்டில் இருந்தாலும் சரி, உடன் பாபக் கிரகங்களின் கூட்டு இல்லாமல் இருக்க வேண்டும். தவறிக் கூட்டாக இருந்தால், ஜாதகனின் மனைவிக்கு அந்தக் கூட்டு மரணத்தை ஏற்படுத்தும்.

4.
ஏழாம் அதிபதி சுபக்கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை (associaton or aspect) பெற்று வலுவாக இருந்தால், ஜாதகனின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

5.
அதற்கு மாறாக ஏழாம் அதிபதி தீய கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை பெற்றிருந்தால், அல்லது பகை வீட்டில் இருந்தால் அல்லது நீசமடைந்திருந்தால், அல்லது அஸ்தமணம் பெற்று வலுவிழந்திருந்தால், ஜாதகனின் மனைவி நோயுற்றவளாக இருப்பாள். அல்லது பலவீனமாக இருப்பாள். அத்துடன் இந்த அமைப்புள்ள ஜாதகன் பல பெண்களுடன் தகாத உறவை ஏற்படுத்திக்கொள்வான்.

6.
ஏழாம் வீட்டுக்காரன் அமர்ந்திருக்கும் வீட்டின் இருபக்க வீடுகளிலும் சுபக்கிரகங்கள் இருந்தால், ஜாதகனுக்கு இனிய மணவாழ்வு அமையும்.

7.
ஏழாம் வீட்டுக்காரன் நவாம்சத்தில் சுபக்கிரகத்தின் வீட்டில் அமர்ந்திருந்தால், நல்ல திருமண வாழ்க்கை அமையும்.

8.
ஏழாம் வீட்டுக்காரன், 6 அல்லது 8 அல்லது 12ஆம் வீடுகளில், தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையுடன் இருக்கும் நிலைமை, நல்ல மணவாழ்க்கையைத் தராது. ஜாதகனின் திருமண வாழ்க்கை அவதி நிறைந்ததாக இருக்கும்!

9
ஏழாம் வீட்டுக்காரன் எந்த விதத்திலாவது பாதிக்கப்பெற்றிருந்தால், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இராது. சண்டை சச்சரவுகள் நிறைந்ததாக இருக்கும்.

10.
ஏழாம் வீட்டில் ஒரு தீய கிரகம் அமர்ந்து, அது ஏழாம் அதிபதிக்கோ அல்லது லக்கினாதிபதிக்கோ பகைவன் என்னும் நிலைமையில், திருமண வாழ்வு மகிழ்ச்சியாக இராது.

11.
செவ்வாயும், சுக்கிரனும் எந்தவிதத்திலாவது ஜாதகத்தில் பாதிக்கப்பெற்றிருந்தால், திருமண வாழ்க்கை அமைதி நிறைந்ததாக இருக்காது,

12.
ஏழில் சனீஷ்வரன் இருந்து, அது அவருடைய சொந்த வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ இல்லாமலிருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது!

சில முக்கியமான விதிகளைத்தான் குறிப்பிட்டுள்ளேன். எல்லாம் பொதுவிதிகள். ஜாதகத்தில் ஏழாம் வீட்டின் அமைப்பை வைத்தும், குடும்பஸ்தானத்தின் அமைப்பை வைத்தும், அஷ்டகவர்க்கப்பரல்கள், ஏழாம் அதிபதியின் சுயவர்க்கப்பரல்களை வைத்தும் இந்த விதிகளின் பலன்கள் மாறுபடும். அதாவது கூடலாம் அல்லது குறையலாம் அல்லது இல்லாது போகலாம். அதையும் மனதில் வையுங்கள்.

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

30.8.12

Astrology சனீஷ்வரனிடம் இருக்கும் சூப்பர் கணினியும் (Super Computer) மென்பொருளும் (Software)!



 Astrology சனீஷ்வரனிடம் இருக்கும் சூப்பர் கணினியும் (Super Computer) மென்பொருளும் (Software)!

சொத்துக்கள் இரண்டு வகைப்படும்; கஷ்டங்களும் இரண்டு வகைப்படும்.

அசையாத சொத்து (Fixed asset) அசையும் சொத்து (Movable asset) என்று சொத்துக்களைப் பிரித்துப் பார்க்கலாம். இடம், வீடு, நிலம், தோட்டம் எல்லாம் முதல் வகையில் சேரும். நகைகள், பணம், வைப்புநிதிச் சான்றிதழ்கள், பங்குப் பத்திரங்கள் எல்லாம் இரண்டாம் வகையில் சேரும்.

நம்மைப் பெற்ற அன்னையும் அசையும் சொத்துதான். அனால் சொத்துக்களில் எல்லாம் முதன்மையான சொத்து.

அதுபோல கஷ்டங்களும் இரண்டு வகைப்படும். நிரந்தரமான கஷ்டங்கள், தற்காலிகமான கஷ்டங்கள்.

நிரந்தரமான கஷ்டங்கள் எதெது? தற்காலிகமான கஷ்டங்கள் எதெது?

கஷ்டங்களைப் பட்டியலிடுவது கஷ்டமானது. கர்மகாரகன் சனியிடம் என்ன மென்பொருள் இருக்கிறதென்று தெரியவில்லை என்ன சர்வர் இருக்கிறதென்று தெரியவில்லை இந்தியாவில் உள்ள 120 கோடி ஜனங்களுக்கும் 120 கோடி விதமான கஷ்டங்களைக் கொடுத்திருக்கிறான்.

எப்படி மனித முகம் வேறு படுகிறதோ, எப்படி வலது கை கட்டை விரல் ஆளாளுக்கு வேறு படுகிறதோ, அப்படி கஷ்டங்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

அதுபோல கஷ்டங்களும் தீர்ந்த பாடில்லை. ஒரு கஷ்டம் போனால் அடுத்த கஷ்டம் கதவைத் திறந்து கொண்டு வந்து விடுகிறது. கஷ்டம் என்பதை எளிமைப் படுத்திப் பிரச்சினை என்று கொள்ளலாம்.

சிலருக்குப் பிரச்சினைகள் ஒவ்வொன்றாக வரும். சிலருக்கு ஒட்டு மொத்தமாக வரும். சிலருக்கு க்யூவில் நின்று அடுத்தடுத்து இடைவெளியில்லாமல் வரும்.

அதனால் பிரச்சினை இல்லாதவர்களே கிடையாது. பிரச்சினைகளே இல்லாதவர் இவரென்று நீங்கள் ஒருவரையாவது காட்டுங்கள் - நான் இந்தத் தொடர் எழுதுவதையே நிறுத்தி விடுகிறேன்.

கவியரசர் கண்ணதாசன் சொல்வார்.

”தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே!”

என்னவொரு அற்புதமான வெளிப்பாடு பாருங்கள். இரண்டே வரிகளில் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும்படி சொன்னார் பாருங்கள். அதனால்தான் அவரைக் கவியரசர் என்கின்றோம்.

ஆகவே இங்கே கஷ்டங்கள் என்பதை நான் சற்று Fine Tuning செய்து, கட்டுரைக்கு வசதியான முறையில் உங்கள் அனுமதியுடன் பிரச்சினைகள் என்று மாற்றிக்கொள்கிறேன்.

உடல் ஊனம், மன நோய், வறுமை, தீராத பிணி இவைகள் ஜாதகத்தின் வேறு பகுதியில் பார்க்கப் பட வேண்டியவை ஆகும். ஆகவே அவற்றை இங்கே நான் எடுத்துக்கொள்ளவில்லை

பொதுவாக உள்ள பிரச்சினைகளை அல்லது கஷ்டங்களை மட்டுமே நான் இங்கே வகைப் படுத்திப் பேச உள்ளேன்
------------------------------------------------------------------------------------------
1. வளர்கின்ற வயதில், தாய் அல்லது தந்தை இல்லாமல் வளர்வது

2. படிக்கவேண்டிய வயதில் சூழ்நிலை காரணமாக அல்லது சேர்க்கை காரணமாக படிக்க முடியாமல் போய்விடுவது.

3. வேலை கிடைக்க வேண்டிய வயதில் சரியான அல்லது தோதான வேலை கிடைக்காமல் அல்லாடுவது.

4. திருமணமாக வேண்டிய வயதில் ஏதாவதொரு காரணத்தினால் திருமணம் தள்ளிக் கொண்டே போவது.

5. திருமணம் ஆனாலும், அன்பு செலுத்தாத, அரவனைக்காத கணவன், கூட இருந்தும் உதவியாக இல்லாத மாமனார் மாமியார், மற்றும் இன் லாக்கள்.

6. வேலை கிடைத்தாலும் திருப்தியில்லாத வேலை, தகுதிக்கு ஒத்துவராத வேலை, நிறைவில்லாத சம்பளம்.

7. வாடகை வீடு - அதுவும் வீடு ஓரிடம், வேலை ஓரிடம், தினமும் 40 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டிய அலுப்பு

8. வாழ்க்கையில் நிலவும் கடுமையான போட்டியின் காரணமாகக் கவலைப்பட்டு, குழந்தைகளைப் படி, படி என்று அனுதினமும் விரட்டிப் படிக்க வைக்க வேண்டிய அவதி

9. பருவம் வந்த பெண் குழந்தையாக இருந்தால் அவளை வெளியே அனுப்பும்போது ஏற்படும் பரிதவிப்பு

10. அத்தியாவசியத் தேவைக்குக் கூட செலவு செய்ய முடியாமல் ஏற்பட்டு விடும் கடன் சுமைகள்

இப்படிப் பிரச்சினைகளைப் பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம்.

ஆகவே ஒன்றை மட்டும் மனதில் வையுங்கள் பிரச்சினை என்பது உங்களுக்கு மட்டுமில்லை. ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. பெரும்பாலான பிரச்சினைகள் பணத்தைச் சார்ந்து இருக்கும்.

“பணம் இருந்தால் போதும் சார்! எல்லாப் பிரச்சினைகளையும் ஒரே நொடியில் தீர்த்து விடுவேன்!” என்று சிலர் சொல்வதைக் கேட்கலாம்.

அது உண்மையல்ல! பணத்தால் சில பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். ஆனால் அது உருமாறி வேறு விதத்தில் நம்மிடமே திரும்பவும் வந்து நிற்கும்.

இன்று பணம் இல்லாதவனை விட, பணக்காரனிடம்தான் அதிகமான பிரச்சினைகள் உள்ளன!

மெத்தையை வாங்கலாம், ஸ்பிளிட் ஏர்கண்டிஷன் இயந்திரத்தை வாங்கலாம் - ஆனால் தூக்கத்தை வாங்க முடியாது. பணம் கொடுத்துப் பசியை வாங்க முடியாது! பணம் கொடுத்து அரண்மனையை வாங்கலாம். அன்பு செலுத்தும் இல்லாளை வாங்க முடியாது. சொன்னதைக் கேட்கும் குழந்தையை வாங்க முடியாது. துரோகம் இல்லாத நட்பை வாங்க முடியாது. இப்படி முடியாதது எவ்வளவோ இருக்கின்றன!
-----------------------------------------------------------------------------
சரி, உங்களுக்குப் புரியும் படியாக ஒரே வரியில் சொல்கிறேன்.

பிரச்சினை தீரவே தீராது.

ஒன்றைத் தீர்க்க அடுத்தது வந்து நிற்கும். பிர்ச்சினை என்பது சீட்டாட்டத்தைப்போல! உங்கள் கையில் எப்போதுமே 13 சீட்டுக்கள் இருந்து கொண்டே இருக்கும். ஒன்றைக்கிழே கழற்றி விட்டால், அங்கேயிருந்து பதிலுக்கு நீங்கள் ஒரு கார்டை எடுத்துத்தான் ஆகவேண்டும்.

கேஸ் ஸ்டவ், பிரஷ்சர் குக்கர், மிக்ஸி, வெட் கிரைண்டர், வாட்டர் ஹீட்டர், வாஷிங்மெஷின், டெலிவிஷன், டி.வி.டி. பிளேயர், ஸ்டெபிலைசர், ஸ்பிளிட் ஏர்கண்டிஷனர் அல்லது மின் விசிறிகள், மோட்டார் சைக்கிள் அல்லது கார், கணினி, யு.பி.எஸ் என்று வீட்டிலுள்ள சாதனங்கள் ஒன்று மாற்றி ஒன்று ரிப்பேராகிக் கொண்டே இருக்கும்.

பணம் இருப்பவன் எல்லாவற்றையும் தூக்கிக் கடாசிவிட்டு ஒரே நாளில் அத்தனை சாதனங்களையும் புதிதாக மாற்றிவிட்டு, நிம்மதியாக இருப்போம் என்று நினைத்தால், விதி அவனை விடாது. அவனேயே நோய்க்கு ஆளாக்கி அல்லது எங்காவது விபத்தில் புரட்டி எடுத்து மருத்துவமனையில் கொண்டுபோய் படுக்க வைத்துவிடும். அவனையே ரிப்பேர் செய்ய வேண்டிய நிலைமைக்கு ஆளாக்கி விடும்.

ஆகவே பிரச்சினை என்பது, நமது இரத்த ஓட்டம்போல, சுவாசம் போல உடன் இருப்பது ஆகும்!
------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தக் கட்டுரையின் அவசியமென்ன?

இரண்டு வழிகளில் உங்களுக்குப் பதில் சொல்வதற்குத்தான் இந்தக்கட்டுரை!

1. பிரச்சினையைத் தாங்கக் கூடிய திறன் இருக்கிறதா?

2. அடுத்த பிரச்சினையை அப்போது பார்த்துக்கொள்வோம், இப்போதுள்ள பிரச்சினை எப்போது தீரும்?
---------------------------------------------------------------------------------------------------------------
ஜாதகத்தில் திரிகோண வீடுகளான ஒன்றாம் வீடு (லக்கினம்) ஐந்தாம் வீடு (House of Mind) ஒன்பதாம் வீடு (House of Gains - பாக்கிய ஸ்தானம்) ஆகிய வீடுகள் நன்றாக - அதாவது வலுவாக இருந்தால் - உங்களுக்குப் பிரச்சினைகளைத் தாங்கக்கூடிய திறன் இருக்கிறது என்று கொள்ளலாம். அதுதான் முக்கியம் - தாங்கும் வல்லமை இருந்தால் போதாதா?

சரி, அதை எப்படித் தெரிந்து கொள்வது?

அது விரிவான பாடம். இப்போது நேரமில்லை. இன்னொரு நாள எழுதுகிறேன். பொறுத்திருங்கள்

ஒரே ஒரு முக்கியமான செய்தியை மட்டும் சொல்லி, இன்றைய பாடத்தை நிறைவு செய்கிறேன்.

ஜாதகத்தில் லக்கினாதிபதியும், மனகாரகனும் வலுவாக இருப்பது முக்கியமாகும்!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++