மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

16.7.20

கவியரசர் கண்ணதாசன் பெண்களின் விரகதாபத்தினை குறித்து எழுதும்போது காட்டிய விவேகம்!!!!


கவியரசர் கண்ணதாசன் பெண்களின் விரகதாபத்தினை குறித்து எழுதும்போது காட்டிய விவேகம்!!!!

கவியரசர் கண்ணதாசன் மறைந்து சிலநாட்களுக்குப் பின், ஒரு கச்சேரிக்கான விமர்சனத்தில், தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் கலை விமர்சகர் சுப்புடு. "கண்ணதாசனை தமிழில் புதிய சாகித்யங்கள் நிறைய எழுதுமாறு நான் கேட்டுக் கொண்டிருந்தேன். செய்து தருவதாக சொல்லியிருந்தார். அதற்குள் மறைந்து விட்டாரே' என்று ஆதங்கப்பட்டிருந்தார் அவர்.

தமிழ் இசைமரபுக்கு மிகவும் புதிதான அம்சங்களை திரைப்பாடலிலேயே செய்தவர் கண்ணதாசன் என்பதால் தான் அப்படிக்கேட்டுக் கொண்டதாக சொன்ன சுப்புடு, "விரக தாபம் என்கிற விஷயம் இசைப்பாடல்களில் எழுதப்பட்டு வந்த விதத்தையும் கண்ணதாசன் கையாண்ட புதுமையையும் மேற்கோள் காட்டியிருந்தார்.

"காலம் காலமாகவே தமிழில் விரகதாபம் என்றால் பால் கசக்கும் பழம் புளிக்கும். இதையே வைத்துக் கொண்டு மன்னன் எப்படி மாற்றுகிறார் பாருங்கள்.

"பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது!
பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது".
மேற்கண்ட வரிகளை இதயம் பேசுகிறது இதழில் சுப்புடு எழுதியதாக நினைவு. வரிகள் நினைவிருக்கின்றன. வருடமோ இதழோ நினைவிலில்லை . அப்போது நான் பள்ளி மாணவன்.

"கட்டவிழ்ந்த கண்ணிரண்டும் உங்களைத் தேடும்-பாதிக்
கனவுவந்து மறுபடியும் கண்களை மூடும்
பட்டுநிலா வான்வெளியில் காவியம் பாடும்-கொண்ட
பள்ளியறைப் பெண்மனது போர்க்களமாகும்"

என்று நயமும் நளினமுமாய் நகரும் அந்தப் பாடல். கண்ணதாசன் பெண்களின் விரகம் குறித்து எழுதும்போது சில அற்புதமான நியதிகளைக் கையாள்கிறார். வேட்கை மீதூற பெண் பாடுகிற போதுகூட அவள் காமுகியாக சித்தரிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் அவர் காட்டும் கவனம் நுட்பமானது "யார் நீ" என்றொரு படம். தான் கைப்பிடித்தவள் பெண்ணா பேயா என்று தெரியாத குழப்பத்தில் நாயகன் விலகியே இருக்கிறான். அவனை மெல்ல ஆசுவாசப்படுத்தி அணைத்துக் கொள்ள முயல்கிறாள் நாயகி

"பொன்மேனி தழுவாமல்
 பெண்ணின்பம் அறியாமல்
 போக வேண்டுமா
 கண்ணோடு கண்சேர
 உன்னோடு நான்சேர
 தூது வேண்டுமா"
 என்பது பல்லவி.

இதில் நாயகி மட்டுமே பாடுகிறாள்.ஆசைக்கும் அச்சத்திற்கும் இடையில் நாயகன் தடுமாறுகிறான்.

"இரவென்பதே நம்வாழ்விலே இல்லாமல் போகுமோ
உறவென்பது உன்நெஞ்சிலே இன்றேனும் தோன்றுமோ"

சராசரியான பாடலாசிரியர்களாக இருந்திருந்தால் அடுத்த வரியில் போதையை ஏற்றியிருப்பார்கள். ஆனால், பெண்மையின்மீது கவிஞருக்கிருக்கும் மரியாதை கண் மலர்த்துகிறது.
"நீசொல்வதை நான்சொல்வதா இது நீதியாகுமா?
 தாளாத பெண்மை தீண்டும்போது மௌனமாகுமா?
 என்று பாடவைத்து விடுகிறார்.

விரகம் வளர்க்கும் சூழல் என்றாலும் அடுத்த சரணத்தில் காதலின் தளும்பலையே கவிஞர் பாடலாக்குகிறார்,

"மழைமேகமே என் தீபமே என்காதல்தெய்வமே
மறுவாழ்விலும் உன்னோடுநான் ஒன்றாக வேண்டுமே
நீயென்பதும் நானென்பதும் ஒருராகம் அல்லவா..
நாமொன்று சேர்ந்து பாடும்போது வார்த்தை வேண்டுமா"
என்று காமக் கடலில் இறங்கிய பாட்டு காதல் கரையில் சேர்கிறது.
இந்த நாசூக்கு பாரதியிடம் உண்டு. குயில்பாட்டில் குயில் காளையைக் காதலிக்கும்.

"காமனே மாடாகக் காட்சிதரும் மூர்த்தியே
பூமியிலே மாடுபோல் பொற்புடைய சாதியுண்டோ?
காளையர்தம் முள்ளே கனம் மிகுந்தீர்,ஆரியரே!
நீள முகமும்,நிமிர்ந்திருக்கும் கொம்புகளும்
பஞ்சுப் பொதிபோல் படர்ந்த திருவடிவும்
மிஞ்சு புறச்சுமையும் வீரத் திருவாலும்...'
என்றெல்லாம் நீளப் புகழ்ந்துவிட்டு,

"காளை யெருதரே,காட்டிலுயர் வீரரே
தாளைச் சரணடைந்தேன் தையலெனைக் காத்தருள்வீர்
காதலுற்று வாடுகிறேன்!காதலுற்ற செய்தியினை
மாதருரைத்தல் வழக்கமில்லை யென்றறிவேன்.
ஆனாலும் என்போல் அபூர்வமாங் காதல்கொண்டால்
தானா வுரைத்தலன்றிச் சாரும் வழியுளதோ?"

என்று அதற்கான நியாயத்தையும் கற்பிக்கும். காதலை வெளிப்படுத்தும்போதுகூட அதில் கவனமாயிருக்கும் கலையை தன் நாயகியருக்கு கவிஞரும் கற்றுக் கொடுக்கிறார். (இடையில் ஒரு செய்தி .கவிஞருக்கு பாரதியின் குயில்பாட்டில் மிகுந்த ஈடுபாடு உண்டு. பாரதி குயில்பாட்டை எழுதும்போது என்ன மனநிலையில் இருந்திருப்பான் என்றொரு கவிதையில் சொல்கிறார்.

"ஓராயிரங் குயில்கள்
உட்காரும் சோலையிலே
ஓர் குயிலைக் கண்டானடி-பாரதி
உடன்குயில் ஆனானடி"
என்பது கவிஞரின் கவிதை)

நாயகியும்,நாயகனும் தங்களுக்குள் ஏற்படும் பிணக்கை பிள்ளையிடம் பாட்டுப்பாடி தீர்த்துக் கொள்கிறார்கள். காத்திருந்த கண்கள் படத்தில்

"வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா-அவள்
வடித்துவைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா
என்ற பாடல்.அதில் நாயகன் கேட்பான்,

தினம்தினம் ஏன் கோபம்கொண்டாள் கூறடா கண்ணா-அவள்
தேவையென்ன ஆசையென்ன கேளடா கண்ணா!
அங்கே இருப்பது குழந்தையும் கணவனும்தான்.ஆனால் நாயகி என்ன சொல்கிறாள்?

நினைப்பதெல்லாம் வெளியில்சொல்ல முடியுமா கண்ணா-அது
நீபிறந்த பின்புகூட இயலுமா கண்ணா!
இது, கதாபாத்திரத்தின் கனத்தைக் கூட்ட கவிஞர் சேர்க்கும் தங்கம்.

தமிழிலக்கியத்தில் காலங்காலமாகவே தலைவி - தோழி உரையாடல் மரபு உண்டு.தலைவி என்றால் தோழி முக்கியம் என்பதை
இப்போதுகூட தமிழ்நாட்டில் நாம் பார்க்கலாம். தன் காதல் தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவியும் தோழியும் உரையாடிக் கொள்வதாக ஒரு பாடலை,கவிஞர் பச்சை விளக்கு படத்தில் எழுதியிருப்பார்.

தூது சொல்லவொரு தோழி இல்லையெனத்
துயர் கொண்டாயோ தலைவி
துள்ளும் காற்றுவந்து மெல்ல சேலைதொட
சுகம் கண்டாயோ தலைவி
என்று கேட்பாள் தோழி.

அன்று சென்றவனை இன்னும் காணவில்லை
என்ன செய்வதடி தோழி
தென்றல் தொட்டதடி திங்கள் சுட்டதடி
கண்கள் வாடுதடி தோழி
என்பாள் தலைவி.இந்தப் பாடலின் இரண்டாவது சரணத்திற்கு காப்பிய அந்தஸ்தே கொடுக்கலாம்.

முத்தும் மணியும் கருகிடும் வண்ணம்
மோகத்தில் ஆழ்ந்தாள் தலைவி
என்று தோழி சொன்னதுதான் தாமதம்.....
முத்தத்தை மறந்தவள் சித்தத்தில் இருந்ததை
மௌனத்தில் அறிந்தாள் தோழி
என்று நாயகி பாடுவாள்.

தன் விரகத்தை அவள் மறந்தும் தன் தோழியிடம்கூட சொல்லவில்லையாம்.
தோழி தானாகக் கண்டுபிடித்துவிட்டால் அதற்கு தலைவி பொறுப்பில்லையல்லவா!!
கோவலனைப் பிரிந்திருந்த கண்ணகி தன் பிரிவாற்றாமையை தோழி தேவந்தியிடம் கூடப்பேசவில்லை. சோமகுண்டம், சூரியகுண்டம்
ஆகியவற்றில் நீராடினால் கணவன் திரும்பக்கூடும் என்று பரிகாரம் சொல்கிற தோழியிடம்,"பீடன்று" என்று மறுத்துவிடுகிறாள் கண்ணகி. அப்படி பரிகாரம் செய்தால் தான் துன்பத்தில் இருப்பது தோழிக்கும் ஊருக்கும் தெரிந்துவிடும் என்பது கண்ணகியின் எண்ணம். இந்த நினைவு நமக்கே வருகிறபோது கவிஞருக்கு வராதாஎன்ன?பாடல் தொடர்கிறது.

காவிரிக்கரையின் ஓரத்தில் இவ்விதம்
காத்திருந்தாள் அந்தத் தலைவி
காவிய நாயகன் காதலன் வணிகன்
கோவலன் என்பாள் மனைவி!!

பெண்மையில் இன்னொரு வகையும் உண்டு. வாழ்வையே குடும்பத்திற்காகக் கரைத்துவிட்டு தன் ஆசைகளை அவித்துக் கொண்டு
தவமிருக்கும் பெண்கள். இவர்களுக்கெல்லாம் முன்னோடி ,பெரிய புராணத்தில் வருகிற திலகவதியார். திருநாவுக்கரசரின் தமக்கை.
நிச்சயிக்கப்பட்ட கணவர் போரில் மாள்கிறார். அந்த அதிர்ச்சியில் பெற்றோரும் மறைகின்றனர். இறந்து போகலாம் என்றால் சிறுவனாகிய தம்பியின் கதி? எனவே திருமணமே செய்து கொள்ளாமல் வீட்டிலேயே தவம்புரிகிறார் திலகவதியார். தம்பி வாழவேண்டும் என்ற தயையுணர்வே காரணம். அதை சேக்கிழார் சொல்கிறார்:

"தம்பியார் உளராக வேண்டுமென வைத்த தயா
உம்பர் உலகு அடையவுறும் நிலைவிலக்க உயிர்தாங்கி
அம்பொன்மணி நூல்தாங்காது அனைத்துயிர்க்கும் அருள்தாங்கி
இம்பர்மனைத் தவம்புரிந்து திலகவதியார் இருந்தார்"

கவிஞர் வாழ்ந்த இருபதாம் நூற்றாண்டிலும் தன்னையே தன் குடும்பத்திற்காக அர்ப்பணித்த முதிர்கன்னிகள் உண்டு. அவர்கள் திலகவதியார்போல் ஆசையை அவித்தவர்களில்லை. ஆனால் அவர்கள் மனதில் ஆசையே கிடையாது என்று கருதி குடும்பத்தினர் தங்கள் ஆசைகளுக்கான வாகனமாய் அவர்கள் உழைப்பை உறிஞ்சுகின்றனர். அவர்கள் மனதில் இருப்பதை அறிந்தவர்கள்யார்? ரவி அறியாததையும் கவி அறிவான் என்றொரு மலையாளப் பழமொழியைக் கேள்விப்பட்டதுண்டு. அப்படியொரு பெண்ணைப்பற்றிய கவிஞரின் பாடல் இது:

கண்ணிலே என்ன உண்டு கண்கள் தானறியும்
கல்லிலே ஈரமுண்டு கண்களா அறியும்?
என்மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்?

இந்த மூன்று வரிகளில், அந்தரங்க வலி,தனிமையின் அழுத்தம், நிராதரவான நிலை எல்லாம் வெளிப்படுகின்றன.
அந்தப் பெண்ணுக்குள்ளும் ஒரு நெருப்பு இருக்கிறது...

"நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும்
நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்
நான்கொண்ட நெருப்பு அணைக்கின்ற நெருப்பு
யாரணைப்பாரோ இறைவனின் பொறுப்பு"

கனலும் தவிப்பையும் காத்திருப்பையும் இதைவிட அழகாய் சொல்ல முடியாது. அதேநேரம் அந்தப்பெண்ணை இந்தத் தனிமை
பலவீனப்படுத்தவில்லை.அனுபவங்களும், காயங்களும்அந்தப்பெண்ணுக்குள் ஒரு ஞானத்தை வளர்த்திருக்கிறது.மேனி அழகாய் இருந்தாலும் ஞானம் உள்ளே ஒளிர்கிறது.ஞானிகள் தடுமாறினாலும் தான் தடுமாற மாட்டேன் என்று தருக்கிச் சொல்கிறாள் அவள்.

"சேலைக்குள் ஆடும் மங்கையின் மேனி
மேனிக்குள் ஆடும் மனம் எனும் ஞானி
ஞானியின் மனமும் ஆசையின் கேணி
நானொரு ராணி பெண்களில் ஞானி"

அரசர்களில் ஞானி,ஜனகர் என்கிறார்கள். ஜனரஞ்சகமான நாயகி ஒருத்தியை அந்த உயரத்திற்கு உயர்த்திவிடுகிறார் கவிஞர்..
-----------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.5.20

கவியரசர் கண்ணதாசன் எழுதிய சில ஐயங்கள்


கவியரசர் கண்ணதாசன் எழுதிய சில ஐயங்கள்

பொய்மானைத்  தேடிப்
      புறம்போன ராமனுக்கும்
தெய்வம் எனும்பெயரைச்
     சேர்த்துவைத்த தேனடியோ?
தெய்வம் எனும்பெயரைச்
     சேர்த்துவைத்த தேனெனிலோ
தெய்வமே தர்மத்தைத்
      தேடுவதாம் என்பதனால்!

கற்புடையாள் சீதையவள்
      கனலாக மாறாமல்
காட்டிடையே கண்ணீரில்
     கரைந்ததுவும் ஏனடியோ?
காட்டிடையே கண்ணீரில்
     கரைந்ததுவும் ஏனெனிலோ
பாட்டிடையே கம்பனுக்கு
     பலபொருள்கள் தேர்வதற்கே!

சூதாடும் நேரத்தில்
     துணைக்குவராக் கண்ணனவன்
போராடும் பாரதத்தில்
      பொங்கிவந்த தேனடியோ?
போராடும் நேரத்தில்
     பொங்கிவந்த தேனெனிலோ
யாரோடு கூட்டணிஎன்(று)
     அன்றுவரை அறியானால்!

அகலிகையின் கணவனுக்கே
     ஐயந்தீர் ராமபிரான்
அகந்தெளித்த சீதையின்பால்
     ஐயமுற்ற தேனடியோ?
அகந்தெளித்த சீதையின்பால்
     ஐயமுற்ற தேனெனிலோ
பரந்தெரித்த ராமனுக்கும்
     இகந்தெரியாக் காரணத்தால்!

மாதவியாள் மார்பிருந்து
      மயங்கிவிட்ட கோவலினின்
பேதலித்த புத்திக்குப்
      பின்னணிதான் என்னடியோ?
பேதலித்து புத்திக்குப்
      பின்னணிதான் என்னவென்றால்
பேர்தரித்த வணிகனெனும்
     பிறப்பாய்ப் பிறந்ததனால்!

காரியங்கள் அத்தனைக்கும்
      காரணங்கள் உள்ளவெனக்
காட்டிவிட்ட வேதமெல்லாம்
      கண்மறைந்த தேனடியோ?
காட்டிவிட்ட வேதமெல்லாம்
      கண்மறைந்த தேனனெனிலோ?
காட்டியதை பொய்யென்று
     கண்டுகொண்ட காரணந்தான்

அவ்வளவும் உண்மையென்று
      ஆர்ப்பரிக்கும் மக்களிடை
இவ்வளவு ஐயங்கள்
       எனக்கெழுந்த தேனடியோ?
இவ்வளவு ஐயங்கள்
       எனக்கெழுந்த தேனெனிலோ?
கையளவு கல்வியில்நீ
        கவிபாடும் காரணம்தான்!
-------------------------------------------------
படித்ததில் ரசித்தது!
அன்புடன்
வாத்தியார்
===================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.9.19

சாகாவரம் பெற்ற கண்ணதாசன்


சாகாவரம் பெற்ற கண்ணதாசன்

ஒரு பாடலின் பல்லவி இல்லாமலேயே சரணமோ அல்லது சரணத்தின் ஒரு வரியே கூட அந்த பாட்டை நம் மன சிந்தனையில் ஓட  விடக்கூடிய வலிமையை பெற்றவர் கவிஞர் கண்ணதாசன் மட்டுமே. அப்படி அவர் எழுதிய சில பாடல்கள் கீழே தொகுக்க பட்டுள்ளது.

அவ்வகை பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்த எம். எஸ். விஸ்வநாதன், கே.வி.மகாதேவன்  டி எம். செளந்திர ராஜன்,  பி.சுசீலா , பி.பி. சீனிவாஸ், சிவாஜி,எம்.ஜி.ஆர், ஜெமினி, ஜெய்சங்கர் ,ஜேசுதாஸ் , எஸ். பி. பாலசுப்ரமணியம் ,சீர்காழி ஐயா மற்றும் இதில் விடுபட்ட ஏனைய கலைஞர்களும் இவருடைய பாடல்களுக்கு பெருமை சேர்த்தனர்.

அதில் சில படப் பாடல்களின் சரணங்கள் மட்டும் உங்கள் ரசனைக்கு.

"எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா – நான்
இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா"

"தங்கக் கடியாரம் வைர மணியாரம் தந்து மணம் பேசுவார்
பொருள் தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார் உலகை விலை பேசுவார்"

"கொதிக்க தெரிந்த நிலவே உனக்கு குளிர தெரியாதா
குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்க தெரியாதா
பிரிக்க தெரிந்த இறைவா உனக்கு இணைக்க தெரியாதா
இணைய தெரிந்த தலைவா உனக்கு என்னை புரியாதா
தலைவா என்னை புரியாதா "

"வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால்
இந்த மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம்
வரும் ஜனனம் என்பது வரவாகும்
அதில் மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா"

"உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்....
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் - பெரும்
பணிவு என்பது பண்பாகும் - இந்த
நான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்"

"காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்துவிடும்
கூட்டை திறந்து விட்டால் அந்த
குருவி பறந்து விடும்
காலில் விலங்கும் இட்டோம்
கடமை என அழைத்தோம்
நாலு விலங்குகளில் தினம்
நாட்டியம் ஆடுகின்றோம்"

பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்
அந்த பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்
நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்
இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும்
உள்ளம் கேட்பேன்
நன்மை செய்து துன்பம் வாங்கும்
உள்ளம் கேட்பேன்"

"தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
மண்ணைத் தோண்டி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
என்னை தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி
உண்மை என்ன பொய்மை என்ன
இதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ? "

"கன்னிக் காய் ஆசைக் காய்
காதல் கொண்ட பாவைக் காய்
அங்கே காய் அவரைக் காய்
மங்கை எந்தன் கோவைக் காய்
மாதுளங்காய் ஆனாலும்
என்னுளங்காய் ஆகுமா
எனை நீ காயாதே
என்னுயிரும் நீ அல்லவோ "

"செஞ்சோற்று கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா
கர்ணா, வஞ்சகன் கண்ணனடா ||

"நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே"

"வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும் "

நானாட வில்லையம்மா சதையாடுது
அது தந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது
பூவாக வைத்திருந்தேன் மனமென்பது
அதில் பூநாகம் புகுந்து கொண்டு உறவென்றது
அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா
இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா"

"வாழ்க்கை வழியிலா ?
ஒரு மங்கையின் ஒளியிலா ?
ஊரிலா ? நாட்டிலா ?ஆனந்தம் வீட்டிலா ?
அவள் நெஞ்சின் ஏட்டிலா ?
சொந்தம் இருளிலா ?
ஒரு பூவையின் அருளிலா ?
எண்ணிலா ?ஆசைகள் என்னிலா ?
கொண்டது ஏன் ?
அதைச் சொல்வாய் வெண்ணிலா "

பிரமிப்பாக இருக்கிறதல்லவா?
------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!!
அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.8.19

ஆறுதல் பாடல்களுக்கு கவியரசர் கண்ணதாசன்!!!!!


ஆறுதல் பாடல்களுக்கு கவியரசர் கண்ணதாசன்!!!!!

ஆறுதல்_பாடல்களுக்கு_அமரகவி #கண்ணதாசன் .

"சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ"

என்ற பாட்டு மூலமாக எத்தனை பேர் மாற்றுத்திறனாளிகள் ஆறுதல் அடைந்திருப்பார்கள்.

பிறருக்கு ஆறுதல் சொல்வதற்காகவே தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக் கொண்டு படவுலகில் நுழைந்தவர் கவியரசு அவர்கள்.கன்னியின் காதலி படத்தில்

"கலங்காதே மனமே உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே "

என்ற பாடலின் மூலம் அடி எடுத்து வைத்தார் கவியரசு அவர்கள்.
காதல், வீரம், சோகம், தத்துவம், தாலாட்டு, நகைச்சுவை என ஐயாயிரத்திற்கு மேல் பாடல்கள் இயற்றி மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் உணர்ச்சிகளை பாடலாக வடித்தவர்.

"மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா?
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை"

இந்த பாட்டு வாழ்க்கையில் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்த எத்தனயோ கோடி பேரை ஆறுதலடையச் செய்திருக்கும் என்பதே உண்மை.

 வாழ்க்கைச் சிக்கலின் குழப்பத்தில் மயங்கி கிடந்த போது இந்தப் பாடல்தான் என் உயிரை மீட்டுத் தந்தது என்கிறார் இவர் சமகாலத்து கவிஞர் வாலி .

விஸ்வநாதன் - ராமமூர்த்தி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ராமமூர்த்தி பிரிந்த போது, விஸ்வநாதனால் அந்தப் பிரிவைத் தாங்க முடியவில்லை.

அன்று ஒரு பாடல் எழுதுவதற்காக கவியரசரும் விஸ்வநாதனும் அமர்கிறார்கள். காதல் பிரிவை தாங்க முடியாத காதலி பாடும் பாடல், இது தான் சூழல்.

" தம்பி, நீ ட்யூன் போடுகிறாயா? நான் வார்த்தை தரட்டுமா?"

கவியரசர் கேட்கிறார்.

"நீங்க வார்த்தை கொடுங்கண்ணே"

சிறிது யோசனைக்குப் பின் கவியரசர் சொல்கிறார்.

"நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு
மறக்கத் தெரியாதா?"

வார்த்தைகளை கேட்டதும் விசுவநாதன் கவிஞரை நிமிர்ந்து பார்க்கிறார். தனக்கென்றே சொல்லப்பட்டது போல அவர் பார்வையை உணர்ந்து கொண்ட கவிஞர் மெளனமாக சிரித்தபடியே தலையசைத்து மேலே தொடர்கிறார்.

 ராமமூர்த்தி பிரிந்த துயருக்கு அது ஆறுதலாக இருந்தது. கவியரசர் எதையும் திட்டமிட்டுப் பாடுவதில்லை. சூழலைப் பொருத்து அந்தப் பாத்திரமாகவே மாறி உணர்ச்சிகளைப் பாடலாகக் கொண்டு வருகிறார்.

 "மனைவி அமைவதெல்லாம்
  இறைவன் கொடுத்த வரம்"

என்ற பாடலைக் கேட்டு கண் கலங்காதவர்களே இல்லை. ஏன், கவியரசரே ஒரு கணம் கண்களைத் துடைத்துக் கொண்டார். நல்ல மனைவியைப் பெற்றவர்கள் ஆனந்தமும், வாய்க்கப் பெறாதவர்கள் இந்தப் பாடலைக் கேட்டு ஆறுதலும் அடைந்தனர்.

ஆயிரக்கணக்கானவர்கள் கவிஞருக்கு கடிதம் எழுதி வாழ்த்தியது மட்டுமின்றி நன்றியும் தெரிவித்தனர்.

மகனைக் கஷ்டப்பட்டு படிக்க வைக்கும் ஏழை ஒருவர் , மகன் அவ்வாறில்லாமல் தீய வழியில் செல்கிறான் என்றறிந்து அந்த ஏழை தந்தை படும் வேதனையை சூழலாகக் கொண்டு பாடல் பாடுகிறார்

"வளர்த்த கடா முட்ட வந்தால்
வச்ச செடி முள்ளானால்
போன ஜென்மப்பாவமடி அம்மாளு "

இதைப் பாடும் போது திரு.டி.எம்.எஸ் அவர்களால் பாட முடியாமல் தொண்டை அடைத்துக் கொண்டது. இப்படி ஒரு சூழல் டி.எம்.எஸ் வாழ்விலேயே அப்போது சம்பவித்திருந்தது.

1962 தேர்தலில் தனது நண்பரின் வெற்றிக்காக கவிஞர் பெரும் முயற்சி செய்தார். இதில் நண்பர் தோற்றதை கவிஞரால் தாங்க முடியவில்லை.

 அப்போது பலே பாண்டியா படத்திற்கு ஒரு தத்துவப் பாடல் எழுத வேண்டி வந்தது. வார்த்தைகளில் இந்த நிகழ்ச்சியைப் பிரதிபலித்தார் கவிஞர்.

"யாரை எங்கே வைப்பது என்று
யாருக்கும் தெரியலே - அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும்
பேதம் புரியலை "

என்று தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டார். சென்ற நூற்றாண்டில் பாரதிக்குப் பிறகு கண்ணதாசனே புகழைக் குவித்தவர். பாரதியாரைப் படித்தவர்கள் மட்டுமே பயின்றார்கள்.

கவியரசர் கண்ணதாசனையோ படித்தவர்கள் மட்டுமின்றி பாமரர்களும் பயின்றார்கள்.இந்த நூற்றாண்டிலும் அது தொடரும் என்பதில் சந்தேகம் இல்லை.
---------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!
அன்புடன்
வாத்தியார்
=========================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.7.19

வாத்தியார் கேட்ட லிப்ட்!


வாத்தியார் கேட்ட லிப்ட்!

கவிதைப் போட்டி ஒன்றின் தலைப்பைப் பார்த்த உடனேயே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகி விட்டது.  இதைத் தலைப்பாகக் கொடுத்திருக்காங்களே - நாம்  சுளுவாக  எழுதிவிடலாம் என்று நினைத்தேன்.

எழுதினதோடு சும்மா இருந்திருக்கக்கூடாதா? என் போதாத நேரம் அதை வகுப்பில் வைத்து கொஞ்சம் கரெக்ட் பண்ணிவிடலாம் என்று வகுப்பறைக்கு எடுத்துக்கொண்டு போனதுதான் தப்பாகப் போய்விட்டது சாமிகளா !

தலைமை ஆசிரியர் கூப்பிட்டார்ன்னு ஒரு எட்டுப் போய்விட்டுத் திரும்பறதுக்குள்ள - ஒரு வாலில்லாத பயல் அந்தக் காகிதத்தில ஒரு அடிக்குறிப்பை எழுதி வைத்துவிட்டான்.

சும்மா சொல்லக்கூடாது நன்றாகத்தான் எழுதியிருந்தான்!

படிப்பைத் தவிர பசங்களுக்கு மத்ததெல்லாம் நல்லா வருது சாமி - நல்லாவே வருது!

இரண்டையும் கீழே கொடுத்திருக்கேன் - நீங்களே பாருங்க!.
----------------------------
கவிதைத் தலைப்பு: கொஞ்சம் கிடைக்குமா லிப்ட்?

மனைவியோடு வெளியில் போனால் மட்டுமே
மனமுவந்து வண்டியை எடுப்பது வழக்கம்
வாகனம் இன்றி வாசலில் நிற்கிறேன்
கொஞ்சம் கிடைக்குமா லிப்ட்?

கட்டியிருக்கும் வெள்ளை வேஷ்டி, சட்டை
கணப் பொழுதில் கசங்கிவிடும் - நனைந்துவிடும்
ஆகவே பேருந்தில் அடியேன் செல்வதில்லை
கொஞ்சம் கிடைக்குமா லிப்ட்?

ஆட்டோக் காரரிடம் பேரம் இன்றி
அதிரடியாய்ச் சென்று திரும்ப
அடியவன் எனக்குப் பழக்கம் இல்லை
கொஞ்சம் கிடைக்குமா லிப்ட்?

இந்தியப் பொருளாதாரத்தை
இயன்றவரை மேம்படுத்த
அடியேன் பெட்ரோல் போடுவதில்லை
ஆகவே கொஞ்சம் கிடைக்குமா லிப்ட்?
-------------------------
(நான் இல்லாத நேரத்தில் வகுப்புப் பையன் ஒருவன்
எழுதி வைத்த அடிக்குறிப்பு கீழே உள்ளது)

இரண்டு பங்க்குகள் என்தந்தைக்(கு) உண்டு
இலவசப் பெட்ரோல் உங்களுக்(கு) உண்டு
அறுவையின்றி, சிகிச்சையின்றி, வகுப்பைக் கடக்க
அடியேன் எனக்குக் கிடைக்குமா லி•ப்ட்?

எப்படி இருக்கு - என்னைவிட பயல் நல்லா எழுதியிருக்கானில்லையா?
----------------------------
அப்புறம் யோசித்தேன் - என் வகுப்பில நாகபட்டினத்தில இருந்து ஒரு தம்பி வந்து படிக்குது. நல்லா படிக்கும் - அதனால அந்தத் தம்பியை மொத பெஞ்ச்சில உட்கார வச்சிருக்கேன்.

இந்த அடிக்குறிப்பை அந்தப் பையன் எழுதியிருந்தா எப்படியிருக்கும்னு கற்பனை செய்து பார்த்தேன்

அவன் எழுதியிருந்தா இப்படித்தான் எழுதியிருப்பான்

கடவுள்கொடுத்த கால்கள் உண்டே கடப்பதற்கு,
நடப்பதற்கு மனம்தான் தேவை! - அடடா
எங்களைப்போல பள்ளிக்கு ஓடிவரவா சொல்கிறோம்?
எதற்குக் கேட்கிறீர்கள் எல்லோரிடமும் லிப்ட்?
-------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
====================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.1.19

மதுவின் தீமைகளை பாட்டாக எழுதிய கவியரசர்!!!!


மதுவின் தீமைகளை பாட்டாக எழுதிய கவியரசர்!!!!

*கண்ணதாசன் தான் வேண்டும் அழைத்து வாருங்கள்: எம்ஜிஆர் போட்ட கட்டளை: நடுங்கியது  படக்குழு..*

மக்கள் திலகம் எம்ஜிஆருக்கும், கவியரசர் கண்ணதாசனுக்கும் சில ஊடல்கள் இருந்தது. இந்த நேரத்தில் எம்ஜிஆர் உறுதியாச் சொன்னார்.

“இந்தப் பாடலை கண்ணதாசன்தான் எழுத வேண்டும். அவரால் மட்டுமே நான் நினைப்பதை வரிகளாகக் கொண்டு வர  முடியும்.” – எம்.ஜி.ஆரின் இந்த திடமான வார்த்தைகளைக் கண்டு சுற்றி இருந்த படக் குழுவினர் திகைத்துப் போனார்கள் .

“சங்கே  முழங்கு” என்ற படத்திற்கான பாடல் அது..!

மதுவின் தீமைகளை விளக்கி கதாநாயகன் எம்.ஜி.ஆர்.  பாடுவதாக வரும் பாடல் ;

அதை , மதுவிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் கண்ணதாசனைக் கொண்டு  எழுதச் சொன்னால் எப்படி ..?

சரி .. எம்.ஜி.ஆர். சொன்னால் சொன்னதுதான்..! வேறு வழி இல்லை..!  படக் குழுவினர் கண்ணதாசனிடம் சென்று சொன்னார்கள் .

சிரித்தார் கண்ணதாசன்.

சில காலம் முன் அவர்  எழுதி இருந்த ஒரு கவிதை : "ஒரு கையில் மதுவும் ஒரு கையில் மாதுவும் சேர்ந்திருக்கின்ற வேளையிலே 
என் ஜீவன் பிரிய வேண்டும் - இல்லையென்றால் என்ன வாழ்க்கை நீ வாழ்ந்தாயென்றே எனை படைத்த இறைவன் கேட்பான்..”

கண்ணதாசன் எழுதிய இந்தக் கவிதை , எம்.ஜி.ஆருக்கும் தெரியும்..! அப்படி  இருந்தும் தன்னை எம்.ஜி.ஆர் அழைக்கிறார். மதுவின் தீமைகளை விளக்கி பாடல் எழுதச் சொல்கிறார்  என்றால்?

புரிந்து கொண்டார் கண்ணதாசன் !

மதுவினால் ஒரு மனிதன் படும் அவஸ்தைகளை மதுப்  பழக்கம் இல்லாத ஒருவனால் , அனுபவித்து எழுத முடியாது .

எனவேதான் மதுக் கோப்பைக்குள் குடி  இருக்கும் தன்னை தேர்ந்தெடுத்து இந்தப் பாடலை எழுத அழைக்கிறார் எம்.ஜி.ஆர்.

கண்ணதாசனுக்கு  தெளிவாக தெரிந்து போனது தயாரானார் கண்ணதாசன்.

*“சிலர் குடிப்பது போலே நடிப்பார்*
*சிலர் நடிப்பது போலே குடிப்பார்”*

கோப்பையிலிருந்து வழியும் மதுவாக ,பொங்கி வந்து விழுந்தன வார்த்தைகள்..!

*“மதுவுக்கு ஏது ரகசியம் ?*
*அந்த மயக்கத்தில் எல்லாம் அவசரம்*
*மதுவில் விழுந்தவன் வார்த்தையை*
*மறுநாள் கேட்பது அவசியம் !”*

“ஆஹா..” என்றார் எம்.ஜி.ஆர்.

அடுத்து கண்ணதாசனிடமிருந்து வழிந்த  வார்த்தைகள் :
*“அவர் இவர் எனும் மொழி*
*அவன் இவன் என வருமே”*

கூர்ந்து கவனித்தார் எம்.ஜி.ஆர்.

கண்ணதாசன் அடுத்து சொன்ன வரிகள் :

*“நாணமில்லை வெட்கமில்லை*
*போதை ஏறும் போது*
*நல்லவனும் தீயவனே*
*கோப்பை ஏந்தும் போது”*

“சபாஷ்..!”-பரவசப்பட்டுப் போனார் எம்.ஜி.ஆர். இதை 
விட மதுவின் தீமைகளை எவரால் சொல்ல இயலும்..?

கண்களை மூடியபடி கண்ணதாசன் யோசித்தார்..மதுவின் தீமைகளை சொல்லி விட்டோம். எம்.ஜி.ஆருக்கு ஏற்றபடி  சில பாஸிடிவ் விஷயங்களை சொல்ல வேண்டாமா..?

“எழுதிக் கொள்ளுங்கள்” என்ற கண்ணதாசன் உதடுகளிலிருந்து  உதிர்ந்த வார்த்தைகள் :

*“புகழிலும் போதை இல்லையோ*
*பிள்ளை மழலையில் போதை இல்லையோ*
*காதலில் போதை இல்லையோ*
*நெஞ்சின் கருணையில் போதை இல்லையோ*

*மனம் மதி அறம் நெறி 
தரும் சுகம் மது தருமோ ?*

*நீ நினைக்கும் போதை வரும்*
*நன்மை செய்து பாரு*
*நிம்மதியை தேடி  நின்றால்*
*உண்மை சொல்லிப் பாரு !”*

சொல்லி முடித்து விட்டுப் புறப்பட்டுப் போய் விட்டார் 
கண்ணதாசன்.

படக் குழுவினரை ஏறிட்டுப் பார்த்தார் எம்.ஜி.ஆர். “என்ன..? கவிஞரை நான் ஏன் அழைத்தேன் என்று இப்போதாவது தெரிகிறதா..?”

ஆம் .. யாரிடம் எதை எப்படி கேட்டு வாங்க வேண்டும்  என்ற வித்தை எம்.ஜி.ஆருக்கு தெரிந்திருந்தது ;
சரி .. இப்படி எந்தச் சூழ்நிலையானாலும் அதற்கேற்ற பாடல் எழுதும் இந்த வித்தை ..அது எங்கிருந்து வந்தது கண்ணதாசனுக்கு ..?

இதோ.. அதை  கண்ணதாசனே சொல்லி இருக்கிறார் :
“வட்டிக் கணக்கே
வாழ்வென் றமைந்திருந்த
செட்டி மகனுக்கும்
சீர்கொடுத்த சீமாட்டி!

தோண்டுகின்ற போதெல்லாம்
சுரக்கின்ற செந்தமிழே
வேண்டுகின்ற 
போதெல்லாம்
விளைகின்ற நித்திலமே

உன்னைத் தவிர
உலகில்எனைக் காக்க
பொன்னோ பொருளோ
போற்றிவைக்க வில்லையம்மா!
என்னைக் கரையேற்று
ஏழை வணங்குகின்றேன்!”

ஆஹா..!

*வாழ்க  கண்ணதாசன் புகழ் !
வளர்க அவர் தாலாட்டிய தமிழ் !!*

*நன்றி:
எழுத்தாளர் :* *Vallam John*
-------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.1.19

வாருங்கள், தமிழ் தேன் பருகுவோம்!!!!


வாருங்கள், தமிழ் தேன் பருகுவோம்!!!!

*தமிழ் தேன் பருகலாமா*

ஒரு புலவர் காளமேக புலவரிடம் கேட்டார்.

“ஐயா, நீர் பெரிய புலவர் என்று பேசிக் கொள்கிறார்களே. உம்மால் முருகனைப் புகழ்ந்து பாட முடியுமா?” என்றார்

“முருகன் அருளால் முடியும். வேலில் தொடங்கவா? மயிலில் தொடங்கவா?” என்றார் காளமேக புலவர்

”வேலிலும் தொடங்க வேண்டாம். மயிலிலும் தொடங்க வேண்டாம். *செருப்பில்* தொடங்கி *விளக்குமாறில்* முடித்தால் போதும்” என்று குசும்பாகக் கூறிவிட்டார் போட்டிப் புலவர்.

என்ன கொடுமை?

என் இறைவனை,
முத்தமிழ்முதல்வனை,
செந்தமிழ் தெய்வத்தை,
வெற்றி வேல் அழகனை,
கருணைக் கடவுளை,
கண்கவர் காளையை,
முருகனை
பாடும் போது செருப்பு என்று தொடங்கி விளக்குமாறு என்று முடிப்பதா?
தகுமா? முறையா? என மனம் கேட்க

அதை தகும் என்றும்  ,  முறை என்றும் மிகமிக அழகாக நிரூபித்தார் காளமேக புலவர்

...இப்படி .....

 *செருப்புக்கு வீரர்களை*
*சென்றுழக்கும் வேலன்*
*பொருப்புக்கு நாயகனை*
*புல்ல- மருப்புக்கு*
*தண்தேன் பொழிந்த*
*திரு தாமரைமேல் வீற்றிருக்கும்*
*வண்டே விளக்குமாறே*

செரு என்றால் போர்க்களம். செருப்புக்கு என்றால் போர்க்களம் புகும் என்று பொருள்படும்.
அப்படி போர்க்களத்தின் புகுந்த வீரர்களை வெற்றி கொள்ளும் முருகனை அணைத்துக் கொள்ளத் துடிக்கிறது உள்ளம்.
குளிர்ந்த தேன் நிறைந்த தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் வண்டே,
அந்த முருகன் இருக்கும் இடத்தை விளக்குமாறே உன்னைக் கேட்கிறேன்.விளக்குமாறு என்பதற்கு விளக்கம் ,  சொல்லுமாறு என்றும் பொருள் கொள்ளலாம் அல்லவா.....?

இப்படி செருப்பில் தொடங்கி விளக்குமாறில் முடிகின்றது இந்த முருகன் பாட்டு.....!
------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.10.17

கவிதை: வைரமுத்துவின் வைர வரிகள்


கவிதை: வைரமுத்துவின் வைர வரிகள்

*எனக்குப்பிடித்த வைரமுத்துவின் வைர வரிகள்:*

*'கொல்'  'கொள்ளையடி'*
*சரித்திரம் அதிகம் கேட்ட* *வார்த்தைகள்*

*''தழுவு'' ''முத்தமிடு''*
*கட்டில்கள் அதிகம் கேட்ட* *வார்த்தைகள்*

*''ஆராரோ'' ''சனியனே''*
*தொட்டில்கள் அதிகம் கேட்ட* *வார்த்தைகள்*

*''உனக்கெப்போது கல்யாணம்?''*
*விலைமகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்*

*''உருப்போடு'' - உருப்படமாட்டாய்''*
*வகுப்பறைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்*

*''இன்னொரு ஜென்மம்*
*என்றொன்றிருந்தால்''*
*பூங்காக்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள்*

*''கடைசியாய் எல்லாரும்*
*முகம்பார்த்துக்* *கொள்ளுங்கள்''*
*மயானங்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள்*

*''சவால் விடுகிறேன் - சபதம் செய்கிறேன்'*
*மேடைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்*

*'பாலாறு - தேனாறு'*
*பொதுஜனம் அதிகம் கேட்ட வார்த்தைகள்*

*''மறக்காமல் கடிதம் போடு''*
*ரயிலடிகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்*

*''அய்யா குளிக்கிறார்''*
*தொலைபேசி அதிகம் கேட்ட வார்த்தைகள்*

*'அப்பா கோபமாயிருக்கிறார்'*
*குழந்தைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்*

*'தயவுசெய்து' - 'மன்னியுங்கள்'*
*ஐரோப்பா அதிகம் கேட்ட வார்த்தைகள்*

*''நேற்றே வந்திருக்கக் கூடாதா''*
*கடன் கேட்போன் அதிகம் கேட்ட வார்த்தைகள்*

*'இனிமேல் ஆண்டவன் விட்ட வழி'*
*மருத்துவமனைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்*

*போதுமடா சாமி!*
*போதும்! போதும்!*

*ஒரே கல்லில் துவைத்துத் துவைத்துச்*
*சாயம் போயின* *வார்த்தையின் நிறங்கள்*

*இனி ஒவ்வொரு சொல்லையும்*
*ஒட்டடை தட்டுவோம்*

*இனிமேல் வார்த்தைகளை*
*இடம் மாற்றிப் போடுவோம்*

*அத்தனை சொல்லிலும்*
*ஆக்சிஜன் ஏற்றுவோம்*

*வார்த்தை மாறினால்*
*வாழ்க்கை மாறும்*

*முதலில்*
*வாழ்க்கையிலிருந்து*
*வார்த்தையை மீட்போம்*
*பின்னர்*
*அர்த்தத்திலிருந்து*
*வார்த்தையை மீட்போம்*

*வாழ்வின் நீள அகலம் கருதி*
*வார்த்தைகளிலும் நாம்*
*மழித்தல் நீட்டல் செய்வோம்*

*மரித்தான் என்ற சொல்லை யெறிந்து*
*வாழ்வை வென்றான் என்று புகழ்வோம்*

*தோல்வி என்னும் சொல்லைத் தொலைத்து*
*விலகி நிற்கும் வெற்றி*
*என்றுரைப்போம்*

*எதிரி என்ற வார்த்தை எதற்கு?*
*தூரத்து நண்பன் சொல்லித் திளைப்போம்*

*சதிபதி இருவர் சண்டைகள் இட்டால்*
*முரட்டு அன்பென்று மொழிந்து பார்ப்போம்*

*இலைகள் கழிந்த கிளைகள் கண்டால்*
*அடுத்த வசந்த ஆரம்பம் என்போம்*

*நொந்த தேகம் நோயில் விழுந்தால்*
*உடம்பே கொள்ளும் ஓய்வென்றுரைப்போம்*

*வெள்ளைச் சட்டையில் மைத்துளிபட்டால்*
*மையைச் சுற்றிலும் வெண்மையென்போம்*

*நிலவைத் தொலைத்த வானம் என்பதை*
*விண்மீன் முளைத்த விண்வெளி என்போம்*

*எதிர்மறை வார்த்தைகள்*
*உதிர்ந்து போகட்டும்*

*உடன்பாட்டு மொழிகள்*
*உயிர் கொண்டெழட்டும்*

*பழைய வார்த்தைகள் பறித்துப் பறித்துப்*
*புதிய நிலத்தில் பதியன்போடுவோம்*

*புளித்த வார்த்தைகள் மாறும்போது*
*சலித்த வாழ்க்கையும்*
*சட்டென்று மாறும்*

-*வைரமுத்து*
*கவிப்பேரரசு
---------------------------------------------------------------
இணையத்தில் படித்ததைப் பகிர்ந்துள்ளேன்
அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.10.17

கவியரசரின் பண்பும் பணிவும்!


கவியரசரின் பண்பும் பணிவும்!

தொலைக்காட்சி நம் நாட்டிற்குள் புகாத பொற்காலம் அது..!
.
அகில இந்திய வானொலி அத்தனை வீடுகளிலும் அரசாட்சி செய்து வந்த நேரம் .
.
அந்தக் காலத்தில்தான் , அநத கல்லூரிப் பேராசிரியை வானொலியில் பேசிக் கொண்டிருந்தார் .
.
பேசிக் கொண்டிருந்தார் என்று சொல்வதை விட ...அடித்து துவைத்து கிழித்துக் கொண்டிருந்தார் என்றே சொல்லலாம் .
.
கடுமையாக அவர் அப்படி தாக்கிப் பேசிக் கொண்டிருந்தது – கண்ணதாசனை ..!

ஆம் ... அடுக்கடுக்கான ஆதாரங்களோடு அந்தப் பெண் பேராசிரியர் வானொலியில் பேசிக் கொண்டிருந்தார் .
.
இதோ ..அது பற்றி அந்தப் பேராசிரியப் பெண்ணே சொன்னது :

"ஒரு முறை சென்னை வானொலியில் 'இலக்கியங்களும் திரைப்படப் பாடல்களும்' என்ற தலைப்பில் ஒரு உரை நிகழ்த்த என்னை

அழைத்திருந்தார்கள்.
நான் உரை நிகழ்த்தியபோது , இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல விஷயங்களை கவிஞர் கண்ணதாசன் எப்படி தன் பாடல்களில்

எடுத்துக் கையாண்டிருந்தார் என்பதைச் சொல்லி விளக்கி , கிட்டத்தட்ட கண்ணதாசன் பண்டைய இலக்கியங்களில் இருந்து

நிறைய காப்பியடித்துள்ளார் என்கிற ரீதியில் என்னுடைய உரை நிகழ்த்தினேன். ஒலிப்பதிவு செய்யப்பட்டு இரண்டு நாள் கழித்து

என்னுடைய உரை வானொலியில் ஒலிபரப்பானது.”
.
அவ்வளவுதான் ..!
அடுக்கடுக்காக போன் கால்கள் ..!
யார் யாரோ போன் செய்து பாராட்டினார்கள் ..!
.
“சபாஷ்.. இத்தனை காலம் இதை கண்ணதாசனே சொந்தமாக எழுதி இருக்கிறார் என நினைத்துக் கொண்டிருந்தோம். நீங்கள்

எடுத்துச் சொன்ன பிறகுதான் , இலக்கியங்களில் இருந்து இதையெல்லாம் காப்பி அடித்திருக்கிறார் கண்ணதாசன் என்பது

தெரிகிறது.. அற்புதமாக பேசினீர்கள்..!”
.
இந்த தினுசில் பலரது பாராட்டுக்களும் போன் கால்கள் மூலமாக வந்து குவிந்து கொண்டே இருக்க , உச்சி குளிர்ந்து போனது

அந்தப் பெண்ணுக்கு ..!

மறுபடியும் ஒரு போன் கால் !
=
“இது யாருடைய பாராட்டோ ..?” என பரவசத்துடன் போனை எடுத்தார் அந்தப் பேராசிரியப் பெண்.

மறுமுனையில் ஒலித்த குரல் : "நான் கண்ணதாசன் பேசுகிறேன்.."
.
பதறிப் போனார் அந்தப் பெண் . அவருக்கு கையும் ஓடவில்லை .. காலும் ஓடவில்லை..!

உலர்ந்து போன உதடுகள் ஒட்டிக் கொள்ள , போனைப் பிடித்திருந்த கை நடு நடுங்க “சொல்லுங்க ஸார் ..”
.
தொடர்ந்து கண்ணதாசன் :

"சற்றுமுன்னர் வானொலியில் உங்களின் உரை கேட்டேன் மிக அருமையாக பேசியிருந்தீர்கள். ஒரு விஷயத்தை உங்களுக்கு

தெளிவு படுத்த விரும்புகிறேன்.

பண்டைய இலக்கியங்களிலும் இதிகாசங்களிலும் சொல்லப்பட்டிருக்கும் பல நல்ல விஷயங்கள் , உங்களைப்போன்ற

பேராசிரியர்கள், பண்டிதர்கள் மட்டத்தோடு நின்று விடுகின்றன.

ஆனால் திரைப்படப் பாடல்கள் என்பது நாட்டின் கடைக்கோடியில் குக்கிராமத்தில் , பள்ளிக்கூடமே போகாத , மாடு மேய்க்கும்

சிறுவன் வரை சென்றடையக்கூடிய வலிமை பெற்றது.

அதனால் இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல நல்ல விஷயங்கள் அவர்களையும் சென்று சேர வேண்டும் என்று அவற்றை

எளிமைப்படுத்தி தருகிறேன்.

உதாரணமாக , திருமணங்களில் ஓதப்படும் சமஸ்கிருத வேத மந்திரங்களில் , கணவன் மனைவிக்கிடையேயான மன ஒற்றுமையை

எடுத்துக்காட்ட
'நான் மனமாக இருந்து நினைப்பேன்... நீ வாக்காக இருந்து பேசு' என்று ஒரு வரி வரும். அது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..?

ஆனால் அதையே நான்
"நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்"
என்று எழுதியபோது பெரும்பாலான மக்களை சென்று அடைந்தது. இது தவறு என்று சொல்கிறீர்களா?"
.
ஆல் இந்தியா ரேடியோவில் ஆரவாரமாக பேசிய அந்தப் பெண் , இப்போது அடுத்த முனையில் பேசிக் கொண்டிருந்த

கண்ணதாசனுக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார் : “மன்னித்துக் கொள்ளுங்கள் ஸார் ..”
.
# இந்த நிகழ்வை பத்திரிகைகளில் பகிர்ந்து கொண்ட அந்த பேராசிரிய பெண் சொன்ன முத்தாய்ப்பு வார்த்தை :

“கண்ணதாசன் சொன்னதைக் கேட்டது முதல் அவர் மேல் எனக்கிருந்த மதிப்பு பல மடங்கு அதிகரித்து விட்டது".
.
இந்தப் பேராசிரியைக்கு கண்ணதாசன் மீது மதிப்பு அதிகரிக்க காரணம் ...அவர் பேச்சில் இருந்த எளிமை ...உண்மை..!
.
அடுத்த காரணம் .. திரை உலகின் உச்சத்தில் இருந்த காலத்திலும் , இந்தப் பெண்ணுக்கு அவரே போன் செய்து , தன் தரப்பு

நிலையை விளக்கிச் சொன்ன பண்பு.. பணிவு..!
.
ஆம் ..!
.
“உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது பணிவு கொண்டால் 
உயிர்கள் உன்னை வணங்கும்”
.
வாழ்க வளமுடன்..!

 Whatsappல் படித்ததில், பிடித்து பகிர்ந்து கொள்கிறேன் உங்களுடன்......

அன்புடன்
வாத்தியார்
===========================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

31.8.17

சினிமா: பட்டுக் கோட்டையாரின் சொல் விளையாட்டு!!!


சினிமா: பட்டுக் கோட்டையாரின் சொல் விளையாட்டு!!!

பாடல் மிகவும் எளிமையாக உள்ளதால் விளக்கம் எழுதவில்லை. எதுகை, மோனை, சந்தம், சீர் என்று என்னவொரு சொல் விளையாட்டு பாருங்கள்:

ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
இவள் ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
குளிர் ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ
நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ

துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
சொந்தம் உள்ள ராணி இவள் நாக மங்கை(2)
எல்லையற்ற ஆசையில் ஓடி வந்தாள்
தள்ளி விட்டுப் போன பின் தேடி வந்தாள்
கிளை தான் இருந்து கனியே சுமந்து
தனியே கிடந்த கொடி தானே
கண்ணாளன் உனைக் கணாந்தனந்தமே பெற
காவினில் வாழும் கிளி நானே

துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
சொந்தம் உள்ள ராணி இவள் நாக மங்கை

அந்தி வெய்யில் நிறத்தவளோ
குலுங்கும் அல்லி மலர் இனத்தவளோ
உந்தி உந்தி விழும் நீரலையில்
ஓடி விளையாடி மணம் சிந்தி வரும் தென்றல் தானோ
இன்பம் தந்த மயில் இவள் தானோ - ஆடைக்கட்டி

ஆஹா..ம்ம்..லாலா..
அன்பு மனம் கூடுவதில் துன்பமில்லை
அஞ்சி அஞ்சி ஓடுவதில் லாபமில்லை
வீணை மட்டும் இருந்தால் நாதமில்லை
மீட்டும் விரல் பிரிந்தால் கானமில்லை

இதயம் கனிந்து யெதையும் மறந்து
இருவர் மகிழ்ந்து உறவாட
நன் நேரமிதே மனம் மீறிடுதே
நன் நேரமிதே மனம் மீறிடுதே
மனம் மாளிகை ஓரம் ஆடிடுவோம் - ஆடை கட்டி
------------------------------
படம்: அமுதவல்லி (1959)
திரைப்படத்தின் பெயர் அமுதவல்லி
திரைப்பட நடிகர்கள் T.R.மகாலிங்கம் G. வரலக்ஷ்மி, K.A. தங்கவேலு,
இசைஅமைப்பாளர்  M.S விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடலாக்கம்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பாடியவர்கள்: TR.மகாலிங்கம் & P.சுசீலா
திரைப்படத்தின் இயக்குனர்:A.K. சேகர்
----------------------------------------------
காணொளி

-------------------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
==============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.1.17

கவிதை: உண்டியலில் பணத்தைப் போட்டாமல், பாட்டெழுதிப் போட்ட கவிஞர்!



கவிதை: உண்டியலில் பணத்தைப் போட்டாமல், பாட்டெழுதிப் போட்ட கவிஞர்!

திருப்பத் உண்டியலில் எல்லோரும் பணத்தை, தங்கத்தைப் போடுவார்கள். ஆனால் கவியரசர் கண்ணதாசன் பாட்டு ஒன்றை எழுதிப் போட்டுவிட்டு வந்தார்

“என் கடனைத் தீர்ப்பாய் இறைவா! திருமலைவாழ்
வெங்கடேசு ரப்பெருமாள் வேந்தனே - மங்காத 
செல்வத்தை அள்ளித் தினமும் தருவாயேல்
நல்வழியில் வாழ்ந்திருப்பேன் நான்

அந்த நிகழ்வுக்குப் பிறகு அவருக்குப் பணத்திலும் வறுமை இல்லை. ஓடிப்போய்விட்டது. பாட்டிலும் வறுமை இல்லை. எண்ணற்ற பாடல்களை எழுதிக்குவித்தார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? திருப்பதி உண்டியலில் பணம் போட்டால் பணம் பெருகும். பாட்டெழுதிப் போட்டால் புலமை பெருகும். துன்பங்களை எழுதிப்போட்டல், நமது துன்பங்கள் நீங்கும். மொத்தத்தில் பட்ட கடன் தீரும். அடுத்து முறை திருமலைக்குச் செல்லும்போது முயன்று பாருங்கள்

“வேங்கடம் ஏறக் கால்வலு வில்லை
   வீட்டிலே இருந்துனைக் கேட்டேன்
பாங்குடன் எனக்குப் பைந்தமிழ் அளித்த
   பாட்டையே காணிக்கை போட்டேன்
தீங்குடன் நலமும் சேர்த்துவைக் கின்றாய்
   சிறிது அதைப் பிரித்துவைப் பாயே
ஓங்குமால் நிலையே உயர்பெரும் மலையே
   உன்பதம் என்சிரம் தாயே

என்று தான் பாட்டு எழுதிப்போட்டு விட்டு வந்ததையும் கவிதையாக்கிச் சொன்னார் கவியரசர் கண்ணதாசன்

எப்படி இருக்கிறது சாமிகளா?
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------




வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.12.16

கவிதை நயம்: எதை எது வெல்லும்?

கவிதை நயம்: எதை எது வெல்லும்?

நீலவான் குடையின் கீழே
   நின்றாடும் உலகம் எங்கும்
கோலமோர் கோடி! ஆடி(க்)
   குலவுமோர் காட்சி கோடி!
காலையும் மாலையும் என்றும்
   கடும்பகல் இராப்போழ் தென்றும்
காலமோ விரைந்து போகும்
   காண்பதோ குறைவே யாகும்!

பூவமை வாசல் கன்னிப்
   புதுமலர் பெண்கள் பாடப்
பாவகை பலமன் றங்கள்
   பல்வகை நடனம்; நெஞ்சில்
ஆவலைக் கிளப்பும்; போதை
   ஆயிரம் மதுக்கிண் ணங்கள்;
காலனும்  வேலி யின்றிக்
   கட்டவிழ்த் தாடும் சங்கம்!

ஆடைகள் புதுவண் ணங்கள்
   ஆங்காங்கு நாடு தோறும்
மேடைகள் பலவண் ணங்கள்
   மெல்லிய மடவார் காட்டும்
ஜாடைகள் பலவா றாகச்
   சமைத்தநற் கறிகள், நீந்த
ஓடைகள் அருவி ஆறு
   உலகமே கலையின் கூடம்!

சில்லென்ற காற்று வந்து
   தேகத்தைத் தழுவும் குன்றம்
புல்லென்ற இறைவன் மெத்தை
   போகத்தின் நினைவை யூட்டிச்
செல்கின்ற மேகக் கூட்டம்
   சிறுமழைத் தூறல் சாரல்
கொல்கின்றாள் இயற்கை அன்னை!
   கொஞ்சத்தான் பருவம் இல்லை!

சிங்கப்பூர் பாங்காங் ஹாங்காங்
   செல்வம்சேர் கோலா லம்பூர்
இங்கிலாந் தமெரிக் காவோ(டு)
   எழிலான பிரான்ஸூ ஜப்பான்
எங்கெங்கே விமானம் போகும்
   எல்லாமும் காணத் தோன்றும்,
இங்கேநான் வாழும் எல்லை
   இவைகாணும் அளவா யில்லை!

அணைக்கவோ இரண்டே கைகள்
   அனுபவித் துறவை வாழ்வில்
இணைக்கவோ ஒன்றே உள்ளம;
   இயறகையைச் சுகத்தை நித்தம்
பிணைக்கவோ சிலநாள் வாழ்க்கை;
   பெரும்பெரும் நினைவை யெல்லாம்
அணைக்கவோ வருவான் காலன்;
   அளந்துதான் கொடுத்தான் தேவன்!

இருபதே வயதாய் என்னை
   இருநூற்று ஐம்ப தாண்டு
பருவத்தில் அவன்வைத் தானேல்
   பார்க்கின்ற அனைத்தும் பார்த்து
மருவற்ற பெண்கூட் டத்தின்
   மடியிலே புரண்டு நித்தம்
ஒருகிண்ணம் மாற்றி மாற்றி
   உலகத்தை அனுப விப்பேன்!

இறைவனா விடுவான்? என்னை
   இருபாலும் விலங்கு போட்டுக்
குறையுள்ள மனிதனாக்கி
   குரங்கென ஆட்டு வித்து
முறையாக வயது போக
   முதுமையும் நோயும் தந்து
சிறைவாசம் முடிந்த தேபோல்
   ஜீவனை முடித்து வைப்பான்!

இதயத்தை எண்ணம் வெல்லும்
   இளமையை முதுமை வெல்லும்
அதிகமாய்த் தோன்றும் நெஞ்சில்
   ஆசையைக் காலம் வெல்லும்;
மதியினை விதியே வெல்லும்
   வாழ்க்கையைக் கனவே வெல்லும்
வதைபட்ட நிலையில் இந்த
   மனிதனை மரணம் வெல்லும்!
                            - கவியரசர் கண்ணதாசன்

===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.10.16

கவிதை: திரையிசைப் பாடல்களில் இலக்கணம்!


கவிதை: திரையிசைப் பாடல்களில் இலக்கணம்!

திரைப்படங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையக் கூடியதாகும். அதன் மூலம் நாம் ஒரு செய்தியைக் கூறினால், உடனே புரிந்து கொள்ளும் தன்மை, பலருக்கும் உண்டு. அதுபோல திரையிசைப் பாடல்களில் வரும் இலக்கணங்கள் இனிப்புத் தடவப்பட்ட மாத்திரைகள் என்று கூறலாம்.

திரையிசைப் பாடல்களில் தமிழ் இலக்கணம் குறித்த சில செய்திகள் இங்கே உங்களுக்காகக் கொடுக்கப்பெற்றுள்ளது. படித்துப் பாருங்கள்

🖌அடுக்குத்தொடர்:
 ஓடிஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும்.

🖌இரட்டைக்கிளவி:
 ஜல்ஜல் எனும் சலங்கை ஒலி சலசல எனச் சாலையிலே.

🖌சினைப்பெயர்:
 பூபூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா.

🖌பொருட்பெயர்:
  கண்ணன் என்னும் மன்னன் பெயரைச் சொல்லச் சொல்ல

🖌இடப்பெயர்:
 வீடு வரை உறவு வீதி வரை மனைவி!

🖌காலப்பெயர்:
 வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்!

🖌குணம் அல்லது பண்புப்பெயர்:
 அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா!

🖌தொழில் பெயர்:
  ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம்! சுகம்!

🖌இறந்த காலப் பெயரெச்சம்:
 வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை!

🖌எதிர்காலப் பெயரெச்சம்:
 ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ?

🖌இடவாகுபெயர்:
  உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான் நீதிபதி

🖌எதிர்மறைப் பெயரெச்சம்:
 துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்

🖌குறிப்புப் பெயரெச்சம்:
 அழகிய தமிழ்மகள் இவள் இரு விழிகளில் எழுதிய மடல்!

🖌ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்:  வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது.

🖌வன்றொடர்க் குற்றியலுகரம்:
 முத்துப்பல் சிரிப்பென்னவோ முல்லைப்பூ விரிப்பென்னவோ!

🖌நெடிற்றொடர்க் குற்றியலுகரம்:
  நாடு அதைநாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு

🖌உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்:
  ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்

🖌இரண்டாம் வேற்றுமை உருபு:
  நிலவைப்பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே.

🖌மூன்றாம் வேற்றுமை உருபு:
  உன்னால் முடியும் தம்பி! தம்பி!!

🖌பெயர்ப் பயனிலை:
  காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம்.

மாணவர்களைப் படிக்க வைக்க எப்படி எல்லாம் ஆசிரியர்கள் கஷ்டபட வேண்டியதாக இருக்கிறது பாருங்கள்!
---------------------------------------------------------------------
2
Someone asked a teacher,
 why do you feel proud of being a teacher?
he smiled and said
" A lawyer's income increases with increase in crime and litigation.
A  doctor's income increases with increase in disease /  illness.
But a teacher's income increases with increase in knowledge, prosperity of people and
 Nation ...!!".
That's why we feel proud...👏👏👏

Dedicated to all Teachers....
=======================================================
படித்தேன், ரசித்தேன்..பகிருகிறேன்
அன்புடன்
வாத்தியார்
==========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.10.16

கவிதை: படிப்பது வேறு; படித்துத் தெளிவது வேறு!

கவிதை: படிப்பது வேறு; படித்துத் தெளிவது வேறு!

கவியரசர் கண்ணதாசன் அவர்களுக்கிருந்த ஞானத்தைப் பற்றி இன்று பார்ப்போம்!

ஞானம்

உள்ளத்திலிருந்து வெளிப்படுவது கவிதை! உள்ளத்திலிருந்து அது வந்தாலும் அதைச் சிறந்த முறையில் எழுத்தில் வெளிப்படுத்துவதற்கு மொழியாற்றல் வேண்டும்.

ஆனால் சினிமாவிற்கு பாட்டெழுதுவது என்பது சற்று வித்தியாசமானது. மேற்கூறிய இரண்டோடு மேலும் ஒன்று கூடுதலாக வேண்டும்.

அதுதான் ஞானம்!

விஷயஞானம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

சினிமா பாடல்களைப் பொதுவாக பக்திப்பாட்டு, தாலாட்டுப் பாட்டு, காதல் பாட்டு, தத்துவப் பாட்டு, பல்சுவைப் பாட்டு என்று ஐந்து விதமாகப் பிரிக்கலாம்.

ஒரு திரைப்படக் கவிஞருக்கு கற்றுணர்ந்த அனுபவமும், பட்டுத்தெளிந்த அல்லது பட்டுத்தேறிய அனுபவமும், மக்களின் நாடியைப் படித்துப் பார்த்த அனுபவமும் வேண்டும்.

அந்தக் கற்றுணர்ந்த அறிவும், பட்டுத்தேறிய அனுபவமும் கவியரசருக்கு அதீதமாக இருந்தது.

எப்படி இருந்தது என்று பார்ப்போம்.

கவியரசர் ஆன்மிகத்தில் மிகவும் ஈடுபாடு உள்ள ஒரு சமூகத்தில் பிறந்தவர். அதோடு பல புராணங்களும், இதிகாசங்களும் அவருக்குப் படித்துணர்வதற்கு இளம் வயதிலேயே கிடைத்தது.

அதேபோல அவர் பிறந்த மாவட்டத்தில் தாலாட்டுப் பாட்டிற்கும் பஞ்சமில்லை. அந்தக் காலத்து - அதாவது கவியரசர் காலத்துத் தாய்மார்களெல்லாம், தாய்ப்பாலோடு தமிழையும் சேர்த்து ஊட்டினார்கள். தங்கள் குழந்தைகளைத் தாலாட்டுப் பாடித்தான் தூங்கவைத்தார்கள்.

கவியரசர் இளைஞராக இருந்தபோது ஒரு பெண்ணைக் காதலித்து, அது கைகூடாமற்போய் சோகத்தில் மிதந்தவர்.

அந்த காதலிக்காக அவர் ஒரு நோட்டுப்புத்தகத்தில் எழுதி வைத்திருந்த எண்ணற்ற பாடல்களில் சில பாடல்கள் பின்னாளில் திரையில் ஒலித்தன.

உதாரணத்திற்கு சில பாடல் வரிகள்:

"நான்பேச நினைப்பதெல்லாம் நீபேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்"

"பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பவளவாயில் புன்னகை சிந்தி
கோலமயில் போல் நீ வருவாயே
கொஞ்சும் கிளியே அமைதி பெறுவாயே!"

"உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
என்னைச் சொல்லிக் குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி!"

அதேபோல அவர் சிறு வயதிலும், இளைஞராக இருந்தபோதும், கேட்ட, படித்த தாலாட்டுப் பாடல்கள் எண்ணற்றவை!

அந்தப் பகுதியில் மிகவும் பிரபலமான தாலாட்டுப் பாடல்களில் ஒன்றின் வரிகளை உங்களுக்காகக் கீழே கொடுத்துள்ளேன்

"வாரும்வாரும் தெய்வவடிவேல் முருகரே வரும்
வள்ளிமணாளரே வாரும், புள்ளிமயிலோரே வாரும்
சங்கும் ஒலித்தது, தாழ்கடல் விம்மிற்று
சண்முகநாதரே வாரும், உண்மைவினோதரே வாரும்"

இப்படி அசத்தலாக 24 வரிகளோடு கூடிய பாடல் அது! தாய் ராகம் போட்டுப் பாடுகையில் குழந்தை பத்தாவது வரியிலேயே தூங்கிவிடும்.

அதே போல சிறுவயதில், தன் பெற்றோர்களுக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தமையாலும், தங்கள் குடும்பத்தில் நிலவிய வறுமையாலும், பல அனுபவங்களைப் பெற்று வாழ்க்கையின், ஏற்றத்தாழ்வுகளையும், தத்துவங் களையும் அப்போதே புரிந்து கொண்டு விட்டவர் அவர்.

அதனால்தான் எல்லாவிதமான பாடல்களையும் அவரால் எழுத முடிந்தது.

கவியரசர் திரைத்துறையில் நுழைந்த காலத்தில் (1952 - 1960) பிரபலமாக இருந்த கவிஞர் ஒருவர் பக்திப்பாட்டு அல்லது தாலாட்டுப் பாட்டு என்றால், என்னால் முடியாது, நீங்கள் கண்ணதாசனிடம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று பெருந்தன்மையோடு இயக்குனர்களிடமும், சையமைப்பாளர்களிடமும் கூறிவிடுவாராம்.

அந்த நிகழ்வுகளெல்லாம் அடுத்து வரும் பதிவுகளில் விவரமாக வரும்.

இப்போது சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன். கீழே உள்ள பாட்டைப் பாருங்கள்.
-------------------------------------------------
"ராமன் எத்தனை ராமனடி - அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி
ராமன் எத்தனை ராமனடி!

கல்யாணக் கோலம் கொண்ட கல்யாணராமன்
காதலுக்கு தெய்வம் அந்த சீதாராமன்
அரசாள வந்த மன்னன் ராஜாராமன்
அலங்கார ரூபன் அந்த சுந்தரராமன்
தாயே என்தெய்வம் என்ற கோசலராமன்
தந்தைமீது பாசம் கொண்ட தசரதராமன்,
வீரன்என்னும் வில்லை ஏந்தும் கோதண்டராமன்
வெற்றி என்று போர்முடிக்கும் ஸ்ரீஜெயராமன்

வம்சத்திற்கு ஒருவன் ரகுராமன்
மதங்களை இணைப்பவன் சிவராமன்
மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீராமன்
முடிவில்லாதவன் அனந்தராமன்.

ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
நம்பியபேருக்கு ஏது பயம்?
ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
ராமனின் கைகளில் நான் அபயம்!

ராம், ராம், ராம்
ராம், ராம், ராம்

ராமன் எத்தனை ராமனடி!

படம் -லஷ்மி கல்யாணம்
பாடியவர்: பி..சுசீலா அவர்கள்
வருடம்: 1968
--------------------------------------------
இன்னொரு பாடல்:

"அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான்
கீதையிலே கண்ணன்.
பார்ப்பவர் கண்ணுக்குத் தெரிவேன் என்றான்
பாரதத்தில் கண்ணன்.

காற்றடித்தால் அவன் வீடாவான்
கடுமழையில் அவன் குடையாவான்
அற்றாதழுதால் அழுத கண்ணீரை
அங்கே துடைக்கும் கையாவான்!

சிறையினிலேதான் அவன் பிறந்தான்
மழையினிலே வேறு மனைபுகுந்தான்
உறவறியாத குழந்தைக் கெல்லாம்
உறவினனாக அவன் வருவான்!

அடையாக் கதவு அவன் வீடு
அஞ்சேல் என்பது அவன் ஏடு
அடைக்கலம் தருவான் நடப்பது நடக்கும்
அமைதியுடன் நீ நடமாடு!

படம்: அனாதை ஆனந்தன் (வருடம் 1970)
பாடியவர்: சீர்காழி. எஸ்.கோவிந்தரஜன் அவர்கள்
-------------------------------------------
இப்படிப் பல பாடல்களைச் சொல்லாம் இடமும், நேரமும், பதிவின் நீளமும்  இரண்டோடு நிறைவு செய்கிறேன்.

இப்போது சொல்லுங்கள் இது போன்ற பாடல்களை எழுதுவதற்கு, ராமாயணமும், மகாபாரதமும் கற்றுணர்ந்திருக்க வேண்டாமா?

படிப்பது வேறு, படித்துத் தெளிவது வேறு! அதுதான் ஞானம்!
-------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.9.16



கவிதை: வேலைக்குச் செல்லும் பெண் பாடிய தாலாட்டு! 

சோலைக்கு பிறந்தவளே!
சுத்தமுள்ள தாமரையே!
வேலைக்கு போகின்றேன் -
வெண்ணிலவே கண்ணுறங்கு!

அலுவலகம் விட்டு -
அம்மா வரும் வரைக்கும் -
கேசட்டில் தாலாட்டு -
கேட்டபடி கண்ணுறங்கு!

ஒரு மணிக்கு ஒரு பாடல்
ஒளிபரப்பும் வானொலியில்
விளம்பரங்கள் மத்தியில் -
விழி சாத்தி நீயுறங்கு!

9 மணி ஆனால் உன் அப்பா சொந்தமில்லை -
9:30 மணி ஆனால் உன் அம்மா சொந்தமில்லை -
ஆயவும் தொலைக்காட்சியும் அசதியில் தூங்கிவிட்டால் -
தூக்கத்தை தவிர துணைக்கு வர யாருமில்லை!

20-ம் நூற்றாண்டில் என் கருவில் வந்தவளே!
இது தான் கதியென்று -
இன்னமுதே கண்ணுறங்கு!

தூரத்தில் இருந்தாலும் தூயவளே -
உன் தொட்டில் ஓரத்தில் -
என் நினைவு - ஓடிவரும் கண்ணுறங்கு!

பேருந்தில் நசுங்கி, பிதுங்கி போகிற வேளையிலும்
எடை கொஞ்சம் இழந்து இறங்குகின்ற வேளையிலும்
பூப்பூவாய் உனது புகம் புறப்பட்டு வரும் கண்ணே!

தந்தை வந்து கொஞ்சுவதாய் -
தங்க மடியில் தூங்குவதாய் -
கண்ணனே கண்மணியே - கனவு கண்டு - நீயுறங்கு!

புட்டிபால் குறையவில்லை -
பொம்மைக்கும் பஞ்சமில்லை -
தாய்ப்பாலும் தாயும் இன்றி -
தங்க மகனுக்கு என்ன குறை?

மாலையிலே ஓடி வந்து
மல்லிகையே உன்னை அணைத்தால்
சுரக்காத மார்பும் சுரக்குமடி- கண்ணுறங்கு!

தாலாட்டு பாட்டில் தளிரே - நீ
தூங்கிவிட்டால கோலாட்டம் ஆட
கொண்டவனுக்கும் ஆசை வரும்!

உறவுக்கு தடையாக
'ஒ' என்று அலறாமல் -
இரவுக்கும் மிச்சம் வைத்து
இப்போது - நீ உறங்கு!

தாயென்று காட்டுவதற்கும்
தாவி எடுப்பதற்கும்
ஞாயிற்றுகிழமை வரும் -
நல்லவளே கண்ணுறங்கு!

- வைரமுத்து

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.8.16

படித்து முடித்ததும் என்னவாகப் போகிறீர்கள்?


படித்து முடித்ததும் என்னவாகப் போகிறீர்கள்? 

ஐந்தாம் வகுப்பு
-----------------------------
'அ' பிரிவு  
-----------------
மழை பெய்யா நாட்களிலும்
மஞ்சள் குடையோடு வரும்
ரோஜாப்பூ மிஸ்
வகுப்பின் முதல் நாளன்று
முன்பொரு முறை
எங்களிடம் கேட்டார்
"படிச்சு முடிச்சதும்
என்ன ஆகப் போறங்க?"
_____________________
முதல் பெஞ்சை
யாருக்கும் விட்டுத் தராத
கவிதாவும் வனிதாவும்
"டாக்டர்" என்றார்கள்
கோரஸாக
இன்று
கல்யாணம் முடிந்து
குழந்தைகள் பெற்று
ரேஷன் கடை
வரிசையில்
கவிதாவையும்;

கூந்தலில் செருகிய
சீப்புடன்
குழந்தைகளை
பள்ளிக்கு வழியனுப்பும்
வனிதாவையும்
எப்போதாவது
பார்க்க நேர்கிறது.
____________________
"இன்ஜினியர் ஆகப்போகிறேன்"
என்ற எல்.சுரேஷ்குமார்
பாதியில் கோட்டடித்து
பட்டுத் தறி
நெய்யப் போய்விட்டான்.
_____________________
"எங்க அப்பாவுடைய
இரும்புக் கடையைப்
பாத்துப்பேன்"
கடைசி பென்ச்
சி.என்.ராஜேஷ்
சொன்னபோது
எல்லோரும் சிரித்தார்கள்.

இன்றவன்
நியூஜெர்சியில்
மருத்துவராகப்
பணியாற்றிக்கொண்டே
நுண் உயிரியலை
ஆராய்கிறான்.
_____________________
"பிளைட்  ஓட்டுவேன்"
என்று சொல்லி
ஆச்சரியங்களில்
எங்களைத் தள்ளிய
அகஸ்டின் செல்லபாபு
டி.ன்.பி.ஸ்.சி. எழுதி
கடைநிலை
ஊழியனானான்.
____________-______
"அணுசக்தி
விஞ்ஞானியாவேன்"
என்ற நான்
திரைப் பாடல்கள்
எழுதிக் கொண்டிருக்கிறேன்.
__________________
வாழ்க்கையின் காற்று
எல்லாரையும்
திசைமாற்றிப் போட,

"வாத்தியாராவேன்"
என்று சொன்ன
குண்டு சுரேஷ் மட்டும்
நாங்கள் படித்த
அதே பள்ளியில்
ஆசிரியராகப்
பணியாற்றுகிறான்.

"நெனைச்ச வேலையே
செய்யற,
எப்படியிருக்கு மாப்ளே?"
என்றேன்.

சாக்பீஸ் துகள்
படிந்த விரல்களால்
என் கையைப்
பிடித்துக்கொண்டு
"படிச்சு முடிச்சதும்
என்ன ஆகப் போறீங்க?
என்று மட்டும்
என் மாணவர்களிடம்
நான் கேட்பதே இல்லை! "
என்றான்.

-கவிஞர் நா. முத்துக்குமார்
===================================
மனதைத் தொட்ட வாசகங்கள்!




================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.7.16

கவியரசரின் அசாத்தியத் திறமை!


கவியரசரின் அசாத்தியத் திறமை!

"மருத மலை மாமணியே" என்ற பாடலில் குன்னக்குடி வைத்தியநாதனுக்கும், கண்ணதாசனுக்கும் ஒரு செல்ல போட்டி நடந்தது. இதை குன்னக்குடியே பல இடங்களில் சொல்லியுள்ளார்.

அதாவது, தனது வயலினில் ஒரு மெட்டை குன்னக்குடி வாசிப்பார். சிறிதும் யோசிக்காமல் கண்ணதாசன் அதற்கு பாட்டு எழுத வேண்டும்.

இது தான் போட்டி. குன்னக்குடி கடினமான மெட்டுக்கள் வரும்படி வாசித்தாராம். ஆனால் ஒவ்வொரு முறையும் கண்ணதாசன் அதற்கான வார்த்தைகளை உடனுக்குடன் கூறிவிடுவாராம்.

அந்த பாடல்களில் ஒன்று தான் மேலே சொன்ன 'மருதமலை மாமணியே' பாடல். ஒரு கட்டத்தில் சற்றே கடினமான மெட்டை வயலனில் வாசித்து 'இதற்கான வார்த்தைகளை கூறுங்கள்' என்றாராம் குன்னக்குடி. உடனடியாக வந்து விழுந்த வார்த்தைகள் "சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன்"....

குன்னக்குடி வைத்தியநாதன் இதே பாடலில் முடிவில் வேண்டுமென்ற வயலினில் சம்பந்தம் இல்லாமல் நிச நிச நிச நிச என்று வேகமாக வாசித்துவிட்டாராம்..

கவிஞர் உடனே இதைத்தான் எதிர்பார்த்தேன் என்று "பனியது மழையது நதியது கடலது சகலமும் உனதொரு கருணையில் எழுவது" என்ற வார்த்தையை எழுதியவுடன் வயலினை நான் சிறிது நேரம் கீழே வைத்து ",ஐயா ,என்னை விட்டுறுங்க"ன்னு கும்பிட்டேன் என்றார் குன்னக்குடி வைத்தியநாதன்!
===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.6.16

கவிதை: கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பிறந்த தினத்தில் அவரை நினைவு கூறுவோம்!!

கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பிறந்த தினத்தில் 
அவரை நினைவு கூறுவோம்!!

ஜூன் மாதம் 24ம் தேதி கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பிறந்த தினம்!

எண்ணற்ற தமிழர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் கவியரசர் கண்ணதாசன்.

அறிமுகம் தேவையில்லாத தமிழர்களில் அவரும் ஒருவர்!

அவரைத் தெரியாது என்று சொல்பவன் தமிழனே அல்ல!

தான் படித்ததையெல்லாம் பாட்டாக்கியவர் அவர்

தன் அனுபவத்தையெல்லாம் எழுத்தாக்கியவர் அவர்!

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, ஒரு கோல மயில் என் துணையிருப்பு என்று தன்னைப் பற்றிய உண்மைகளை வெளிப்படையாகச் சொன்னவர் அவர்

என்னைப்போல் வாழாதீர்கள். என் எழுத்துக்களைப்போல் வாழுங்கள் என்று தன்மையாகச் சொல்லிவிட்டுப் போனவர் அவர்!

உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக' என்று சொல்லி உற்சாகப் படுத்திவிட்டுப்போனவர் அவர்!

சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு, தென்றலே உனக்கேது சொந்தவீடு' என்று சுதந்திர உணர்வை உண்டாக்கியவர் அவர்!

ஆலயமணியின் ஓசையைக் கேட்க வைத்தவர் அவர்!

வண்ண வண்ணப் பூவில் காயை வைத்தவனைக் காட்டியவர் அவர்!

ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத முருகனா நீ' என்று ஆண்டியின் கதைக்குப் பாட்டெழுதி அசரவைத்தவர் அவர்.

ஆறு மனமே ஆறு, அந்த ஆண்டவன் கட்டளை ஆறு என்று ஆண்டவனின் கட்டளையைச் சொன்னவர் அவர்!

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது, வல்லவன் வகுத்ததடா' என்று சொல்லி விட்டுச் சென்றவர் அவர்.

அவனைக் கண்டால் வரச் சொல்லடி, அன்றைக்குத் தந்ததைத் தரச் சொல்லடி' என்று கண்ணனை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியவர் அவர்!

ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்' என்று காதலுக்கு பொருள் சொல்லி விட்டுப் போனவர் அவர்!

மண்பார்த்து விளைவதில்லை, மரம் பார்த்துப் படர்வதில்லை என்று கன்னியரைப் பூங்கொடிகளுக்கு உவமையாகச் சொன்னவர் அவர்.

சொல்லலெல்லாம் தூய தமிழ்ச் சொல்லாகுமா? சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா என்று மங்கையரின் மேன்மையைச் சொன்னவர் அவர்!

பெண்ணாகப் பிறந்து விட்டால் கண்ணுறக்கம் இரண்டு முறை' என்று பெண்களின் துயரத்தை விளங்க வைத்தவர் அவர்

மனிதன் மாறிவிட்டான், மதத்தில் ஏறிவிட்டான், என்று இன்றைய மனிதனின் நிலைப்பாட்டைச் சொல்லி விட்டுப் போனவர் அவர்!

சின்ன மனிதன், பெரிய மனிதனின் செயலைப் பார்த்து சிரித்துவிட்டுப் போனவர் அவர்!

ஒன்று எங்கள் ஜாதியே, ஒன்று எங்கள் நீதியே, உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களேயென்று உழைப்பை மேன்மைப் படுத்தியவர் அவர்!

மாபெரும் சபையினில் நீ நடந்தால் மாலைகள் விழ வேண்டும், ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று பலர் போற்றிப் புகழ வேண்டும் என்று தனிமனித உயர்விற்கும் நேர்மையான வாழ்விற்கும் வழி சொல்லிவிட்டுப்போனவர் அவர்.

வீடுவரை உறவு, வீதிவரை மனைவி' என்று நிலையாமைத் தத்துவத்தைச் சொன்னவர் அவர்.

போனால் போகட்டும் போடா, இந்தப் பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா என்று வாழ்க்கையை வரிகளாக்கியவர் அவர்!

"இது நமக்காக எழுதிய பாடல்" என்று பலரையும் மகிழ்வு கொள்ளும்படி அல்லது உருகிப்போகும்படி எண்ணற்ற அற்புதமான பாடல்களை எழுதியவர் அவர்!

அவருடைய புகழ் வாழ்க! அவரைப்பற்றிய நினைவுகள் வளர்க!
---------------------------------------------------------------
பிறந்த நாளிற்கு வந்தவர்களை சும்மா அனுப்பலாமா? இனிப்பைப் பாட்டாகக் கொடுத்திருக்கிறேன். பாடல் வரிகள்

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது

(ஒளிமயமான)

நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த
நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்
நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த
நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்
மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றால்
வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க என்றவர் பாடுகின்றார்

(ஒளிமயமான)

குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள்
கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக
குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள்
கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக
மங்கலச் செல்வி அங்கயர்க்கண்ணி திருமகளே வருக
வாழும் நாடும் வளரும் வீடும் மணம்பெறவே வருக

(ஒளிமயமான)
====================================================================
2
நாத்திகம், பகுத்தறிவு பற்றி கவிஞர் கண்ணதாசன்.

ஈ வே ரா சேலத்தில் நடத்தியது போல் சென்னையிலும் ஒரு ஆபாச ஊர்வலம் நடத்த முயன்ற போது கண்ணதாசன் அவர்களால்
எழுதப்பட்ட கட்டுரை இது.  இதைத் தொடர்ந்து அந்த ஆபாச ஊர்வலம் கைவிடப்பட்டது.

(கவிஞர் கண்ணதாசனின் எண்ணங்கள் ஆயிரம் என்ற நூலிலிருந்து!)

நான் ஒரு இந்து. இந்து என்பதில் நான் பெருமைப்படுகிறேன்.

நான் எல்லா மதத்தினரையும் மனமார நேசிக்கிறேன்; ஆனால் இந்துவாகவே வாழ விரும்புகிறேன்.

நான் கடவுளை நம்புகிறேன்; அவனைக் காட்டியவனைப் போற்றுகிறேன்;

அந்தக் கடவுளைக் கல்லிலும், கருத்திலும் கண்டு வணங்குகிறேன்.

ஆன்மா இறைவனோடு ஒன்றிவிடும்போது, அமைதி இருதயத்தை ஆட்சி செய்கிறது.

நாணயம், சத்தியம், தர்மம் இவற்றின் மீது நம்பிக்கை பிறக்கிறது.

நேரான வாழ்க்கையை இருதயம் அவாவுகிறது. பாதகங்களை, பாவங்களை கண்டு அஞ்சுகிறது.

குறிப்பாக ஒரு இந்துவுக்குத் தன் மத அமைப்பின் மூலம் கிடைக்கும் நிம்மதி, வேறு யாருக்கும் கிடைப்பதில்லை.

கடைசி நாத்திகனையும், அது ஆத்திகன் என்றே அரவணைத்துக் கொள்கிறது.

என்னை திட்டுகிறவன்தான் அடிக்கடி நினைத்துக் கொள்கிறான்; ஆகவே அவன்தான் முதல் பக்தன்” என்பது இறைவனின் வாக்கு.

இந்து மதத்தைப்போல் சகிப்புத்தன்மை வாய்ந்த மதம் உலகில் வேறு எதுவும் இல்லை .

நீ பிள்ளையாரை உடைக்கலாம்;
பெருமாள் நாமத்தை அழிக்கலாம்;
மதச்சின்னங்களை கேலி செய்யலாம்;
எதைச் செய்தாலும் இந்து சகித்துக் கொள்கிறான்.

ஏதோ பரம்பரையாகவே பகுத்தறிவாளனாகப் பிறந்தது போல் எண்ணிக் கொண்டு, பாத்திரத்தை நிரப்புவதற்காகவே சாஸ்திரத்தைக் கேலி செய்யும் பகுத்தறிவுத் தந்தைகள் இஸ்லாத்தின் மீதோ, கிறிஸ்துவத்தின் மீதோ கை வைக்கட்டும் பார்க்கலாம்.

கடந்த நாற்பது வருசங்களில் ஒரு நாளாவது அதற்கான துணிவு ஏற்பட்டதாக தெரியவில்லையே!

பாவப்பட்ட இந்து மதத்தை மட்டுமே தாக்கித் தாக்கி, அதை நம்புகிற அப்பாவிகளிடம் ‘ரேட்டு ‘ வாங்கிச் சொத்துச் சேர்க்கும் ‘பெரிய ‘ மனிதர்களைத்தான் நான் பார்த்திருக்கிறேன்.

அவர்கள் பேசுகிற நாத்திக வாதம், அவர்கள் ‘குடும்பம் நடத்தும் வியாபாரம்’ என்பதை அறியாமல், வாழ்கையையே இழந்து நிற்கும் பல பேரை நான் அறிவேன்.

பருவ காலத்தில் சருமத்தின் அழகு மினுமினுப்பதைப் போல், ஆரம்ப காலத்தில் இந்த வாதத்தைக் கேட்டு ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்.

நடிகையின் ‘மேக் அப்’ பைக் கண்டு ஏமாறுகிற சராசரி மனிதனைப்போல், அன்று இந்த வாதத்தைக் கேட்டு ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்.

அந்த கவர்ச்சி எனக்கு குறுகிய காலக் கவர்ச்சியாகவே இருந்தது இறைவனின் கருணையே!

என்னை அடிமை கொண்ட கண்ணனும், ராமனும் இன்று சந்திர மண்டலத்துக்குப் பயணம் போகும் அமெரிக்காவையே அடிமைக்கொண்டு, ஆன்மீக நெறியில் திளைக்க வைத்திருக்கிறார்கள்.

அமெரிக்காவை விடவா ஈரோடு பகுத்தறிவில் முன்னேறிவிட்டது?

வேண்டுமானால்  ‘பணத்தறிவில்' முன்னேறிவிட்டது என்று சொல்லலாம்.

ஆளுங் கட்சியாக எது வந்தாலும் ஆதரித்துக் கொண்டு, தன் கட்சியும் உயிரோடிருப்பதாகக் காட்டிக் கொண்டு, எது கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு வாழ்கையை சுகமாக நடத்துவதற்கு, இந்த நாத்திக போலிகள் போட்டிருக்கும் திரை, பகுத்தறிவு!

உலகத்தில் நாத்திகம் பேசியவன் தோற்றதாக வரலாறு உண்டே தவிர,வென்றதாக இல்லை.

இதை உலகமெங்கும் இறைவன் நிரூபித்துக் கொண்டு வருகிறான்.

அவர்கள் எப்படியோ போகட்டும்.

இந்த சீசனில் வாழ்ந்து கொண்டிருக்கும் சில மனிதர்கள் கோவில்களுக்கு முன்னால் பகுத்தறிவு விளையாட்டு விளையாடிப் பார்க்கலாம் என்று கருதுகிறார்கள். இதை அனுமதித்தால், விளைவு மோசமாக இருக்கும்.

நம்பிக்கை இல்லாதவன் கோவிலுக்கு போக வேண்டாம். நம்புகிறவனை தடுப்பதற்கு அவன் யார்?

அப்பாவி இந்துக்கள் பேசாமல் இருக்க இருக்கச் சமுதாய வியாபாரிகள் கோவிலுக்கு முன் கடை வைக்க தொடங்குகிறார்கள்
.
வெள்ளைக்காரனின் கால்களை கட்டிப்பிடித்துக் கொண்டு ‘போகாதே போகாதே என் கணவா ‘ என்று பாடியவர்களுக்கு நாட்டுப் பற்று எங்கிருந்து வரும்?

நாட்டு பற்று இல்லாதவர்களுக்கு தெய்வப் பற்று எங்கிருந்து வரும்?

தெய்வப் பற்று இல்லாதவர்களுக்கு நாணயம், நேர்மை இவற்றின் மீது நம்பிக்கை எங்கிருந்து வரும்?

இந்த நாலரை கோடி (அன்று) மக்களில் நீங்கள் சலித்துச் சலித்து எடுத்தாலும், நாலாயிரம் நாத்திகர்களைக் கூட காண முடியாது.

பழைய நாத்திகர்களை எல்லாம் நான் பழனியிலும், திருப்பதியிலும் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்! ஆகவே இந்த காரியங்களுக்கு யாரும் துணை வர மாட்டார்கள்.ஆனால் இதை அனுமதித்தால் விளைவுகள் மோசமாக இருக்கும்

ஆக்கம்: கவியரசர் கண்ணதாசன்
=========================================
அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.6.16

கவிதை: நம்மைத் திக்குமுக்காட வைக்கும் கவியரசரின் பாடல்!

கவிதை: நம்மைத் திக்குமுக்காட வைக்கும் கவியரசரின் பாடல்!

புனித ரமதான் நோன்பு துவங்கி சில நாட்கள்  ...

"பாவமன்னிப்பு" படத்தில் "நடிகர் திலகம்" சிவாஜி கணேசன் அவர்கள் முதன்முதலாக படத்தில் தோன்றும் காட்சியில் ஒரு அற்புதமான பாடலை வைத்தால் நன்றாக இருக்கும் என்று விரும்பினார் படத்தின் இயக்குனர் ஏ.பீம்சிங்.

"மெல்லிசை மன்னர்கள்" விஸ்வநாதன் - ராமமூர்த்தி, "கவியரசு" கண்ணதாசன் ஆகியோரோடு அந்த அற்புதமான சூழ்நிலைக்கு அமர்ந்தார்கள்.

படத்தின் கதைப்படி சிவாஜி கணேசன் அவர்கள் முஸ்லீமாக இருந்தாலும், பிறப்பால் ஒரு இந்து வீட்டில் எம்.ஆர். ராதாவுக்கு மகனாக பிறந்திருப்பார். அதன்படி, அந்த நுட்பத்தை வெளிப்படுத்தும் விதமாக பாட்டு அமைய வேண்டும் என்று விரும்பி இயக்குனர் ஏ.பீம்சிங் இதை கண்ணதாசன், விஸ்வநாதன் - ராமமூர்த்தி அவர்களிடம் தெரிவித்தார். வழக்கம்போல், "மெல்லிசை மன்னர்கள்" மெட்டமைக்க, கண்ணதாசன் பாட்டு எழுதிக் கொடுத்தார்.

பாடலை படித்துப் பார்த்த ஏ.பீம்சிங்கிற்கும், விஸ்வநாதனுக்கும் முதலில் ஒன்றும் விளங்கவில்லை. "இதில் என்ன புதுமை இருக்கிறது, நுட்பம் உள்ளது" என குழம்பினார்கள். திரும்ப, திரும்ப படித்துப் பார்த்துவிட்டு கண்ணதாசனிடம் தயங்கிக் கேட்டார்கள்.

கண்ணதாசன் வழக்கமான தன்னுடைய குழந்தைப் புன்னகையை உதிர்த்துக் கொண்டே "பாடலைப் படித்துக் காட்டுங்கள்" என்றார்.

எம்.எஸ்.வி. உடனே,

" எல்லோரும் கொண்டாடுவோம்... எல்லோரும் கொண்டாடுவோம். அல்லாவின் பெயரைச் சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி எல்லோரும் கொண்டாடுவோம்" என்று மெட்டில் பாடினார்.

கண்ணதாசன், "இன்னுமா புரியலை, பிறப்பால் இந்துவாக பிறந்து வாலிப வயதை எட்டிப் பிடித்தவன் ஒரு முஸ்லீமாக வளர்ந்திருந்தாலும், அவனை அறியாமல் இந்து மத தத்துவமான "ஓம்" என்ற நாத மந்திரம் அவன் வாயினில் இருந்து வருவதுபோல் பாடலை அமைத்துள்ளேன். இப்பொழுது பாருங்கள்" என்று பாடிக் காட்டினார்.

"எல்லோரும் கொண்டாடு'வோம்' (ஓம்)... எல்லோரும் கொண்டாடு'வோம்' (ஓம்)...vஅல்லாவின் பெயரைச் சொல்லி, நல்லோர்கள் வாழ்வை எண்ணி எல்லோரும் கொண்டாடு'வோம்' (ஓம்).. என்று முடித்ததுமே, "மெல்லிசை மன்னர்" அவரைக் கட்டிப்பிடித்து "கவிஞரே... இந்த உலகத்தில் உம்மை
ஜெயிக்க யாரய்யா இருக்கிறார்" என்று உச்சி முகர்ந்தார்.. கூடவே இயக்குனர் ஏ.பீம்சிங்கும் தமக்கு வேண்டியது கிடைத்து விட்டது என்று சந்தோஷக் கடலில் ஆழ்ந்தார்.

அதே போல இந்தப் பாடல் முழுக்க "முதலுக்கு அன்னை என்போம்(ஓம்), முடிவுக்கு தந்தை என்போம்(ஓம்)"  என வார்த்தை விளையாட்டு தொடர்ந்து நிகழ்ந்து நம்மை திக்கு முக்காட வைக்கும் அந்தப் பாடல்.
--------------------------------------
அந்தப் பாடலை முழுமையாக, உங்களுக்காக் கீழே கொடுத்துள்ளேன்:

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------
எல்லோரும் கொண்டாடுவோம்;
அல்லாவின் பெயரைச் சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி

(எல்லோரும்)

கல்லாகப் படுத்திருந்து களித்தவர் யாருமில்லே
கைகால்கள் ஓய்ந்த பின்னே துடிப்பதில் லாபமில்லே
வந்ததை வரவில் வைப்போம் செய்வதைச் செலவில் வைப்போம்
இன்றுபோல் என்றும் இங்கே ஒன்றாய்க் கூடுவோம்!

(எல்லோரும்)

நூறுவகைப் பறவை வரும், கோடிவகைப் பூமலரும்
ஆடவரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா
கறுப்புமில்லே வெளுப்புமில்லே, கனவுக்கு உருவமில்லே
கடலுக்குள் பிரிவுமில்லே, கடவுளில் பேதமில்லே
முதலுக்கு அன்னை என்போம் முடிவுக்குத் தந்தை என்போம்
மண்ணிலே விண்ணைக் கண்டு ஒன்றாய்க்கூடுவோம்

(எல்லோரும்)

ஆடையின்றிப் பிறந்தோமே ஆசையின்றிப் பிறந்தோமா
ஆடிமுடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ?
படைத்தவன் சேர்த்துத் தந்தான் வளர்த்தவன் பிரித்து வைத்தான்

எடுத்தவன் மறைத்துக் கொண்டான்
கொடுத்தவன் தெருவில் நின்றான்
எடுத்தவன் கொடுக்க வைப்போம்
கொடுத்தவன் எடுக்க வைப்போம்

இன்றுபோல் என்றும் இங்கே ஒன்றாய்க் கூடுவோம்"

(எல்லோரும்)

படம்: பாவ மன்னிப்பு (வருடம் 1961)

கருத்துக்களோடு, என்னதொரு சொல் விளையாட்டையும் நடத்தியிருக்கிறார் பாருங்கள்!

”நூறுவகைப் பறவை வரும், கோடிவகைப் பூமலரும், ஆடவரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா” என்று எழுதினார் பாருங்கள் - அதுதான் இந்தப் பாடலின் முத்தாய்ப்பான வரி!
-----------------------


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.4.16

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க... வைரமுத்து


ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க.---- வைரமுத்து

பொதுவாக கவிஞர்கள் இளகிய, மென்மையான மனதுள்ளவர்கள். (எழுத்தாளர்களும் தான்.). அதனால் தான் சிறந்த எழுத்தாளர்கள், மற்றும் கவிஞர்கள் மனித மனங்களில் தமது எழுத்துகள் மூலமேனும் நீங்கா இடத்தைப் பிடித்து விடுகின்றனர். சிறந்த கற்பனை வளம், ஆழமாக நோக்கும் ஆற்றல், பலவிடயங்களை ஒன்றோடொன்று தொடர்பு படுத்தி அவற்றின் சார்பு நிலைகளை காணல் போன்ற பல இயல்புகளை அவர்கள் இயற்கையில் பெற்றிருப்பதே இந்த ஆற்றலுக்கான காரணம்.

அதனால் தான் ஞானசம்பந்தர் தொடக்கம் கம்பர், வள்ளுவர் என்று எல்லோருமே ஞானிகள் வரிசையில் இடம் பிடித்தமையும். சாதாரண புத்திக்கு புரிவனவற்றை தாண்டி பல விடயங்கள் அவர்களுக்கு புரிவதால்.

இறப்பிலிருந்து.......

    கவியரசு வைரமுத்துவின் மிக அருமையான ஒரு பாடல்.
     இந்த பாடலை இரு பாடககர்கள் மிக அருமையான நயத்துடன் பாடி இருக்கின்றார்கள் .

    இந்த பாடலை கேட்டபின்பு  பாடல் எழுதிய வைரமுத்துவுக்கோ அல்லது பாடிய விஜய்ஏசுதாஸ்  மற்றும் சுதாவுக்கோ நன்றி தெரிவியுங்கள்.

      கீழே காணும் யு டியுப்  தளத்திலிருந்து பாடல்களை கேட்கலாம்  அல்லது பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்......

பாடல் வரிகள்

ஜென்மம் நிறைந்தது
சென்றவர் வாழ்க

சிந்தை கலங்கிட
வந்தவர் வாழ்க

நீரில் மிதந்திடும்
கண்களும் காய்க

நிம்மதி நிம்மதி
இவ்விடம் சூழ்க!

ஜனனமும் பூமியில்
புதியது இல்லை

மரணத்தைப் போல் ஒரு
பழையதும் இல்லை

இரண்டுமில்லாவிடில்
இயற்கையும் இல்லை

இயற்கையின் ஆணைதான்
ஞானத்தின் எல்லை

பாசம் உலாவிய
கண்களும் எங்கே?

பாய்ந்து துழாவிய
கைகளும் எங்கே?

தேசம் அளாவிய
கால்களும் எங்கே?

தீ உண்டதென்றது
சாம்பலும் இங்கே

கண்ணில் தெரிந்தது
காற்றுடன் போக

மண்ணில் பிறந்தது
மண்ணுடன் சேர்க

எலும்பு சதை  கொண்ட
உருவங்கள் போக

எச்சங்களால் அந்த
இன்னுயிர் வாழ்க

பிறப்பு இல்லாமலே
நாளொன்று இல்லை

இறப்பு இல்லாமலும்
நாளொன்று இல்லை

நேசத்தினால் வரும்
நினைவுகள் தொல்லை

மறதியைப் போல்
ஒரு மாமருந்தில்லை

கடல் தொடு ஆறுகள்
கலங்குவதில்லை

தரை தொடும் தாரைகள்
அழுவதும் இல்லை

நதி மழை போன்றதே
விதியென்று கண்டும்

மதி கொண்ட மானுடர்
மயங்குவதேன்ன !

மரணத்தினால் சில
கோபங்கள் தீரும்

மரணத்தினால் சில
சாபங்கள் தீரும்

வேதம் சொல்லாததை
மரணங்கள் கூறும்

விதை ஒன்று வீழ்ந்திட
செடிவந்து சேரும்

பூமிக்கு நாம் ஒரு
யாத்திரை வந்தோம்

யாத்திரை தீரும் முன்
நித்திரை கொண்டோம்

நித்திரை போவது
நியதி என்றாலும்

யாத்திரை என்பது
தொடர்கதையாகும்

தென்றலின் பூங்கரம்
தீண்டிடும் போதும்

சூரியக் கீற்றொளி
தோன்றிடும் போதும்

மழலையின் தேன்மொழி
செவியுறும் போதும்

மாண்டவர் எம்முடன்
வாழ்ந்திட கூடும்

மாண்டவர் சுவாசங்கள்
காற்றுடன் சேர்க !

தூயவர் கண்ணொளி
சூரியன் சேர்க !

பூதங்கள் ஐந்திலும்
பொன்னுடல் சேர்க!

போனவர் புண்ணியம்
எம்முடன் சேர்க !
http://www.youtube.com/watch?v=wPbybg3LCtc
http://www.youtube.com/watch?v=N1-nt1sNg3g
http://www.youtube.com/watch?v=LoFSHrUd43g

Thank you





வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!
===================================================