மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

16.7.20

கவியரசர் கண்ணதாசன் பெண்களின் விரகதாபத்தினை குறித்து எழுதும்போது காட்டிய விவேகம்!!!!


கவியரசர் கண்ணதாசன் பெண்களின் விரகதாபத்தினை குறித்து எழுதும்போது காட்டிய விவேகம்!!!!

கவியரசர் கண்ணதாசன் மறைந்து சிலநாட்களுக்குப் பின், ஒரு கச்சேரிக்கான விமர்சனத்தில், தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் கலை விமர்சகர் சுப்புடு. "கண்ணதாசனை தமிழில் புதிய சாகித்யங்கள் நிறைய எழுதுமாறு நான் கேட்டுக் கொண்டிருந்தேன். செய்து தருவதாக சொல்லியிருந்தார். அதற்குள் மறைந்து விட்டாரே' என்று ஆதங்கப்பட்டிருந்தார் அவர்.

தமிழ் இசைமரபுக்கு மிகவும் புதிதான அம்சங்களை திரைப்பாடலிலேயே செய்தவர் கண்ணதாசன் என்பதால் தான் அப்படிக்கேட்டுக் கொண்டதாக சொன்ன சுப்புடு, "விரக தாபம் என்கிற விஷயம் இசைப்பாடல்களில் எழுதப்பட்டு வந்த விதத்தையும் கண்ணதாசன் கையாண்ட புதுமையையும் மேற்கோள் காட்டியிருந்தார்.

"காலம் காலமாகவே தமிழில் விரகதாபம் என்றால் பால் கசக்கும் பழம் புளிக்கும். இதையே வைத்துக் கொண்டு மன்னன் எப்படி மாற்றுகிறார் பாருங்கள்.

"பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது!
பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது".
மேற்கண்ட வரிகளை இதயம் பேசுகிறது இதழில் சுப்புடு எழுதியதாக நினைவு. வரிகள் நினைவிருக்கின்றன. வருடமோ இதழோ நினைவிலில்லை . அப்போது நான் பள்ளி மாணவன்.

"கட்டவிழ்ந்த கண்ணிரண்டும் உங்களைத் தேடும்-பாதிக்
கனவுவந்து மறுபடியும் கண்களை மூடும்
பட்டுநிலா வான்வெளியில் காவியம் பாடும்-கொண்ட
பள்ளியறைப் பெண்மனது போர்க்களமாகும்"

என்று நயமும் நளினமுமாய் நகரும் அந்தப் பாடல். கண்ணதாசன் பெண்களின் விரகம் குறித்து எழுதும்போது சில அற்புதமான நியதிகளைக் கையாள்கிறார். வேட்கை மீதூற பெண் பாடுகிற போதுகூட அவள் காமுகியாக சித்தரிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் அவர் காட்டும் கவனம் நுட்பமானது "யார் நீ" என்றொரு படம். தான் கைப்பிடித்தவள் பெண்ணா பேயா என்று தெரியாத குழப்பத்தில் நாயகன் விலகியே இருக்கிறான். அவனை மெல்ல ஆசுவாசப்படுத்தி அணைத்துக் கொள்ள முயல்கிறாள் நாயகி

"பொன்மேனி தழுவாமல்
 பெண்ணின்பம் அறியாமல்
 போக வேண்டுமா
 கண்ணோடு கண்சேர
 உன்னோடு நான்சேர
 தூது வேண்டுமா"
 என்பது பல்லவி.

இதில் நாயகி மட்டுமே பாடுகிறாள்.ஆசைக்கும் அச்சத்திற்கும் இடையில் நாயகன் தடுமாறுகிறான்.

"இரவென்பதே நம்வாழ்விலே இல்லாமல் போகுமோ
உறவென்பது உன்நெஞ்சிலே இன்றேனும் தோன்றுமோ"

சராசரியான பாடலாசிரியர்களாக இருந்திருந்தால் அடுத்த வரியில் போதையை ஏற்றியிருப்பார்கள். ஆனால், பெண்மையின்மீது கவிஞருக்கிருக்கும் மரியாதை கண் மலர்த்துகிறது.
"நீசொல்வதை நான்சொல்வதா இது நீதியாகுமா?
 தாளாத பெண்மை தீண்டும்போது மௌனமாகுமா?
 என்று பாடவைத்து விடுகிறார்.

விரகம் வளர்க்கும் சூழல் என்றாலும் அடுத்த சரணத்தில் காதலின் தளும்பலையே கவிஞர் பாடலாக்குகிறார்,

"மழைமேகமே என் தீபமே என்காதல்தெய்வமே
மறுவாழ்விலும் உன்னோடுநான் ஒன்றாக வேண்டுமே
நீயென்பதும் நானென்பதும் ஒருராகம் அல்லவா..
நாமொன்று சேர்ந்து பாடும்போது வார்த்தை வேண்டுமா"
என்று காமக் கடலில் இறங்கிய பாட்டு காதல் கரையில் சேர்கிறது.
இந்த நாசூக்கு பாரதியிடம் உண்டு. குயில்பாட்டில் குயில் காளையைக் காதலிக்கும்.

"காமனே மாடாகக் காட்சிதரும் மூர்த்தியே
பூமியிலே மாடுபோல் பொற்புடைய சாதியுண்டோ?
காளையர்தம் முள்ளே கனம் மிகுந்தீர்,ஆரியரே!
நீள முகமும்,நிமிர்ந்திருக்கும் கொம்புகளும்
பஞ்சுப் பொதிபோல் படர்ந்த திருவடிவும்
மிஞ்சு புறச்சுமையும் வீரத் திருவாலும்...'
என்றெல்லாம் நீளப் புகழ்ந்துவிட்டு,

"காளை யெருதரே,காட்டிலுயர் வீரரே
தாளைச் சரணடைந்தேன் தையலெனைக் காத்தருள்வீர்
காதலுற்று வாடுகிறேன்!காதலுற்ற செய்தியினை
மாதருரைத்தல் வழக்கமில்லை யென்றறிவேன்.
ஆனாலும் என்போல் அபூர்வமாங் காதல்கொண்டால்
தானா வுரைத்தலன்றிச் சாரும் வழியுளதோ?"

என்று அதற்கான நியாயத்தையும் கற்பிக்கும். காதலை வெளிப்படுத்தும்போதுகூட அதில் கவனமாயிருக்கும் கலையை தன் நாயகியருக்கு கவிஞரும் கற்றுக் கொடுக்கிறார். (இடையில் ஒரு செய்தி .கவிஞருக்கு பாரதியின் குயில்பாட்டில் மிகுந்த ஈடுபாடு உண்டு. பாரதி குயில்பாட்டை எழுதும்போது என்ன மனநிலையில் இருந்திருப்பான் என்றொரு கவிதையில் சொல்கிறார்.

"ஓராயிரங் குயில்கள்
உட்காரும் சோலையிலே
ஓர் குயிலைக் கண்டானடி-பாரதி
உடன்குயில் ஆனானடி"
என்பது கவிஞரின் கவிதை)

நாயகியும்,நாயகனும் தங்களுக்குள் ஏற்படும் பிணக்கை பிள்ளையிடம் பாட்டுப்பாடி தீர்த்துக் கொள்கிறார்கள். காத்திருந்த கண்கள் படத்தில்

"வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா-அவள்
வடித்துவைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா
என்ற பாடல்.அதில் நாயகன் கேட்பான்,

தினம்தினம் ஏன் கோபம்கொண்டாள் கூறடா கண்ணா-அவள்
தேவையென்ன ஆசையென்ன கேளடா கண்ணா!
அங்கே இருப்பது குழந்தையும் கணவனும்தான்.ஆனால் நாயகி என்ன சொல்கிறாள்?

நினைப்பதெல்லாம் வெளியில்சொல்ல முடியுமா கண்ணா-அது
நீபிறந்த பின்புகூட இயலுமா கண்ணா!
இது, கதாபாத்திரத்தின் கனத்தைக் கூட்ட கவிஞர் சேர்க்கும் தங்கம்.

தமிழிலக்கியத்தில் காலங்காலமாகவே தலைவி - தோழி உரையாடல் மரபு உண்டு.தலைவி என்றால் தோழி முக்கியம் என்பதை
இப்போதுகூட தமிழ்நாட்டில் நாம் பார்க்கலாம். தன் காதல் தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவியும் தோழியும் உரையாடிக் கொள்வதாக ஒரு பாடலை,கவிஞர் பச்சை விளக்கு படத்தில் எழுதியிருப்பார்.

தூது சொல்லவொரு தோழி இல்லையெனத்
துயர் கொண்டாயோ தலைவி
துள்ளும் காற்றுவந்து மெல்ல சேலைதொட
சுகம் கண்டாயோ தலைவி
என்று கேட்பாள் தோழி.

அன்று சென்றவனை இன்னும் காணவில்லை
என்ன செய்வதடி தோழி
தென்றல் தொட்டதடி திங்கள் சுட்டதடி
கண்கள் வாடுதடி தோழி
என்பாள் தலைவி.இந்தப் பாடலின் இரண்டாவது சரணத்திற்கு காப்பிய அந்தஸ்தே கொடுக்கலாம்.

முத்தும் மணியும் கருகிடும் வண்ணம்
மோகத்தில் ஆழ்ந்தாள் தலைவி
என்று தோழி சொன்னதுதான் தாமதம்.....
முத்தத்தை மறந்தவள் சித்தத்தில் இருந்ததை
மௌனத்தில் அறிந்தாள் தோழி
என்று நாயகி பாடுவாள்.

தன் விரகத்தை அவள் மறந்தும் தன் தோழியிடம்கூட சொல்லவில்லையாம்.
தோழி தானாகக் கண்டுபிடித்துவிட்டால் அதற்கு தலைவி பொறுப்பில்லையல்லவா!!
கோவலனைப் பிரிந்திருந்த கண்ணகி தன் பிரிவாற்றாமையை தோழி தேவந்தியிடம் கூடப்பேசவில்லை. சோமகுண்டம், சூரியகுண்டம்
ஆகியவற்றில் நீராடினால் கணவன் திரும்பக்கூடும் என்று பரிகாரம் சொல்கிற தோழியிடம்,"பீடன்று" என்று மறுத்துவிடுகிறாள் கண்ணகி. அப்படி பரிகாரம் செய்தால் தான் துன்பத்தில் இருப்பது தோழிக்கும் ஊருக்கும் தெரிந்துவிடும் என்பது கண்ணகியின் எண்ணம். இந்த நினைவு நமக்கே வருகிறபோது கவிஞருக்கு வராதாஎன்ன?பாடல் தொடர்கிறது.

காவிரிக்கரையின் ஓரத்தில் இவ்விதம்
காத்திருந்தாள் அந்தத் தலைவி
காவிய நாயகன் காதலன் வணிகன்
கோவலன் என்பாள் மனைவி!!

பெண்மையில் இன்னொரு வகையும் உண்டு. வாழ்வையே குடும்பத்திற்காகக் கரைத்துவிட்டு தன் ஆசைகளை அவித்துக் கொண்டு
தவமிருக்கும் பெண்கள். இவர்களுக்கெல்லாம் முன்னோடி ,பெரிய புராணத்தில் வருகிற திலகவதியார். திருநாவுக்கரசரின் தமக்கை.
நிச்சயிக்கப்பட்ட கணவர் போரில் மாள்கிறார். அந்த அதிர்ச்சியில் பெற்றோரும் மறைகின்றனர். இறந்து போகலாம் என்றால் சிறுவனாகிய தம்பியின் கதி? எனவே திருமணமே செய்து கொள்ளாமல் வீட்டிலேயே தவம்புரிகிறார் திலகவதியார். தம்பி வாழவேண்டும் என்ற தயையுணர்வே காரணம். அதை சேக்கிழார் சொல்கிறார்:

"தம்பியார் உளராக வேண்டுமென வைத்த தயா
உம்பர் உலகு அடையவுறும் நிலைவிலக்க உயிர்தாங்கி
அம்பொன்மணி நூல்தாங்காது அனைத்துயிர்க்கும் அருள்தாங்கி
இம்பர்மனைத் தவம்புரிந்து திலகவதியார் இருந்தார்"

கவிஞர் வாழ்ந்த இருபதாம் நூற்றாண்டிலும் தன்னையே தன் குடும்பத்திற்காக அர்ப்பணித்த முதிர்கன்னிகள் உண்டு. அவர்கள் திலகவதியார்போல் ஆசையை அவித்தவர்களில்லை. ஆனால் அவர்கள் மனதில் ஆசையே கிடையாது என்று கருதி குடும்பத்தினர் தங்கள் ஆசைகளுக்கான வாகனமாய் அவர்கள் உழைப்பை உறிஞ்சுகின்றனர். அவர்கள் மனதில் இருப்பதை அறிந்தவர்கள்யார்? ரவி அறியாததையும் கவி அறிவான் என்றொரு மலையாளப் பழமொழியைக் கேள்விப்பட்டதுண்டு. அப்படியொரு பெண்ணைப்பற்றிய கவிஞரின் பாடல் இது:

கண்ணிலே என்ன உண்டு கண்கள் தானறியும்
கல்லிலே ஈரமுண்டு கண்களா அறியும்?
என்மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்?

இந்த மூன்று வரிகளில், அந்தரங்க வலி,தனிமையின் அழுத்தம், நிராதரவான நிலை எல்லாம் வெளிப்படுகின்றன.
அந்தப் பெண்ணுக்குள்ளும் ஒரு நெருப்பு இருக்கிறது...

"நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும்
நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்
நான்கொண்ட நெருப்பு அணைக்கின்ற நெருப்பு
யாரணைப்பாரோ இறைவனின் பொறுப்பு"

கனலும் தவிப்பையும் காத்திருப்பையும் இதைவிட அழகாய் சொல்ல முடியாது. அதேநேரம் அந்தப்பெண்ணை இந்தத் தனிமை
பலவீனப்படுத்தவில்லை.அனுபவங்களும், காயங்களும்அந்தப்பெண்ணுக்குள் ஒரு ஞானத்தை வளர்த்திருக்கிறது.மேனி அழகாய் இருந்தாலும் ஞானம் உள்ளே ஒளிர்கிறது.ஞானிகள் தடுமாறினாலும் தான் தடுமாற மாட்டேன் என்று தருக்கிச் சொல்கிறாள் அவள்.

"சேலைக்குள் ஆடும் மங்கையின் மேனி
மேனிக்குள் ஆடும் மனம் எனும் ஞானி
ஞானியின் மனமும் ஆசையின் கேணி
நானொரு ராணி பெண்களில் ஞானி"

அரசர்களில் ஞானி,ஜனகர் என்கிறார்கள். ஜனரஞ்சகமான நாயகி ஒருத்தியை அந்த உயரத்திற்கு உயர்த்திவிடுகிறார் கவிஞர்..
-----------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2 comments:

  1. அருமை அருமை ஐயா,

    அற்புத அலசல் சகல பதிவுகளும் தரம் அருமை ஐயா.


    தங்கள் நற்பணி என்றும் தொடரட்டும்.

    அன்புடன்
    விக்னசாயி.
    ==============================

    ReplyDelete
  2. //////Blogger vicknasai said...
    அருமை அருமை ஐயா,
    அற்புத அலசல் சகல பதிவுகளும் தரம் அருமை ஐயா.
    தங்கள் நற்பணி என்றும் தொடரட்டும்.
    அன்புடன்
    விக்னசாயி./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி விக்னசாயி!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com