மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label சுஜாதா. Show all posts
Showing posts with label சுஜாதா. Show all posts

23.4.21

எல்டொராடோ - சுஜாதா அவர்களின் மற்றுமொரு சிறுகதை!


எல்டொராடோ - சுஜாதா அவர்களின் மற்றுமொரு சிறுகதை!

கதவு திறந்து மன்னிக்கு அவனை அடையாளம் தெரிந்து கொள்ள சிரமமாக இருந்தது. தெரிந்ததும் திடுக்கிட்டாள் திணறி எச்சில் விழுங்கி 'நீங்களா? எப்ப வந்தேள்?"
"இப்பதான், நேர வரேன், அப்பா எப்படி இருக்கா?"
"அம்மா, அம்மா யார் வந்திருக்கா பாருங்கோ."
"யாருடி?"
"பரத்"
"பரத்தா?"
யாரு? பரத்தா?"
“என்னது? பரத்தா!" மூலைக்கு மூலை ஆச்சர்யக் குரல்கள் ஒலித்தன.
ரேடியோ நிறுத்தப்பட்டது. பிள்ளைகளின் படிப்பு ரத்து செய்யப்பட்டது.
அம்மா, பெரிய அண்ணா, அண்ணா, அக்கா, மன்னிகள் குழந்தைகள் எல்லோரும் ஹாலில் ஒரு அரை வட்ட விரோத விழாப் போல் வந்து சேர்ந்துகொண்டு, அவனைச் சுற்றிப் பார்வை வியூகம் அமைத்தார்கள்
சின்ன மன்னிதான் "வா பரத்" என்றாள். எப்படி மாறிவிட்டாள்! எங்கே அந்த அழகான மணப்பெண்?
"என்னடா, எங்கே வந்தே?" அம்மா
"அப்பாவைப் பார்க்க வந்தேம்மா எப்படி இருக்கார்?"
"இத்தனை நாளா இல்லாம இப்ப வந்தாயா? ஏன் என்னைப் பார்க்க வரக்கூடாதா? எத்தனை வருஷமாச்சு!"
"அப்பா உடம்பு ரொம்ப மோசமா இருக்குன்னு கேள்விப்பட்டேன்"
"ஏண்டா, எந்த மூஞ்சியை வெச்சுண்டு விசாரிக்கறே! துப்புக் கெட்டவனே ! ஒரு கடுதாசி உண்டா? இப்ப திடீர்னு எதுக்காக வந்ததிக்கறே? எதுக்காகடா?"
"இல்லைம்மா, அம்பி அய்யர் சொன்னதைப் பார்த்தா அப்பாவை ஒரு வேளை இனிமே பார்க்க முடியாம போய்டுமோன்னு பயம் வந்துடுத்து.”
"பார்த்து இப்ப என்ன கிழிக்கப் போற?'
"ஏன்னா ? வந்தவரை...''
"சும்மாருடி! இது எங்க குடும்ப விஷயம். ப்ராடிகல் சன் வந்திருக்கான்" என்றார் அண்ணன்
"ஏண்டா, பார்க்க என்ன தகுதி இருக்கு உனக்கு?"
"ஏன் பார்க்கக் கூடாதா?" என்றான் விரோதமாக
"ஏய் பசங்களா எல்லோரும் உள்ள போங்கோ."
"மகன்ங்கிற தகுதிதான் அண்ணா ."
"மகன்! ஆஹா! பெரிசா வந்துட்டான். எத்தனை நாள் அவருக்கு சோறு போட்டே?."
"இதையெல்லாம் அப்புறம் பேசலாம். எனக்கு அப்பாவை பார்க்கணும், அவ்வளவுதான்"
"கூடாது. முடியாது. இந்த வீட்டில நுழையறதுக்கு உனக்கு அருகதை இல்லை. அப்படியே வெளில போ"
"இந்த வீடு உன்னுதா அண்ணா?"
"பார்த்தியாம்மா. வந்த உடனே என்ன கேள்வி கேக்கறான் ?
"எட்டு வருஷமா ஏண்டா வரலை? அதுக்கு பதில் சொல்"
"இந்த வீடு இன்னும் நம் அப்பாதுதானே, இதில் நுழைய எனக்கு உரிமை இருக்கு"
"இவன் அப்பாவைப் பார்க்க வரலைம்மா. கிழவன் மண்டையைப் போட்டுறப் போறார்னு சொத்தில் பங்கு வந்திருக்கான்"
"ஏண்டா கடன்காரா! எப்படி நீ வரப்போகும்? -பெத்த தாயார்க்கு ஒரு லெட்டர் போட்டியா?"
"அதுக்கெல்லாம் என்ன காரணம்ங்கறது எல்லோருக்கும் தெரியுமே"
"தெரியும் பேப்பர்ல சந்தி சிரிச்சுதே..."
"சொத்துக்குத்தாம்மா வந்திருக்கான்..."
"இதோ பார் ஸ்ரீதர். அனாவசியமா சண்டைக்கு காலைப் பிராண்டாதே! எனக்கு சொத்தும் வேண்டாம் ஒரு எழவும் வேண்டாம். அப்பாவைப் பார்க்க அனுமதிச்சாப் போறும். எங்க படுத்திண்டிருக்கார்?"
"அப்படியே சுபாவம் மாறாம இருக்கான்."
'இருந்துட்டுப் போறேன். முட்டாத்தனமாக நடந்துக்காதீங்கோ என்ன சொன்னாலும் ஏசினாலும் நான் அப்பாவைப் பார்த்துட்டுத் தான் இந்த இடத்தை விட்டுப் போகப் போறேன். அனாவசியத் துக்கு இந்த இடத்தில் சண்டையோ மூர்க்கத்தனமோ வேண்டாம். ஒரு நண்பன், இல்லை பார்வையாளனா நினைச்சுக் கங்கோ...... . எங்கே அவர்?"
"உன்னை இப்ப அவர் பார்த்தா அடையாளம் கண்டுப்பார்னு நினைக்கிறயா?"
"ஏன்? மயக்கமா?"
"இல்லை . மூஞ்சில காறித் துப்புவார்."
'துப்பமாட்டார். நிச்சயம் என்னை அவருக்கு ஞாபகம் இருக்கும். எட்டு யுகமானாலும் ஞாபகமிருக்கும்!"
"கிழத்துக்கு நேத்திக்கு நடந்தது இன்னிக்கு நினைவில்லை.....ஞாபகம் இருக்குமாம்!"
"சரிம்மா; இவனோட என்ன ரோதனை? கல்லுளி மங்கன் மாதிரி போகமாட்டான். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு......கூடப் பிறந்த தோஷத்துக்காக காட்டிட்டு வீட்டை விட்டு விரட்டிடலாம். ஏய் சின்னி , வாடி இங்கே. இது யார் தெரியுமா... சி...த்... தப்...பா... அழகான சித்தப்பா, அழைச்சுண்டு போய் தாத்தா ரூமை காட்டு"
சின்னியின் பின் மௌனமாக நடந்தான். மாடிப்படி ஏறித் திரும்பும்போது அத்தனை கண்களும் அவனைக் குத்தித் துளைப்பதை உணர்ந்தான்
எட்டு வருஷமாக விட்டுப்போன உறவு, ஒரு கடிதமில்லை விசாரிப்பில்லை கல்யாண அழைப்பில்லை எங்கே இருக்கிறான் என்கிற சங்கதி இல்லை. சினிமா என்றோ, டிராமா என்றோ கல்கத்தா என்றோ, காசி என்றோ, பணக்காரன் என்றோ கடனில் முழ்கிவிட்டான் என்றோ, பொண்டாட்டி ஓடிப்போய் கிறிஸ்துவப் பெண்ணை வைத்துக் கொண்டிருக்கிறான் என்றோ கேள்விப்பட்டிருப்பார்கள்......எட்டு வருஷ வெட்டுக்குப் பிறகு வதந்திகளிலிருந்து வடிவெடுத்திருக்கிறான். எப்படி ஒட்டுவார்கள்?
"சித்தப்பாவா நீ" என்றாள் சின்னி.
"ஆமாம்".
மெதுவாக அந்த மாடி அறையை அணுகினார்கள்
"எந்த ஊர்?'
"ஏதோ ஊரு"
"சித்தி வரலியா"
"இல்லை"
'செத்துப் போய்ட்டாளா?"
"இல்லை"
"என்ன வேலை பண்றேள்?"
"அலையறேன்"
"எதுக்கு?"
“ஜெயிலுக்குப் போயிருந்தேன்னு சொன்னாளே, அந்த சித்தப்பாவா, நீ?"
"ஏய் சின்னி! பேசாம ரூமைக் காட்டிட்டு திரும்பி வா..."
சின்னி கதவைத் திறந்து, "உள்ள போங்கோ. தாத்தா தூங்கிண்டிருப்பார்” என்று சொல்லிவிட்டு விலகினாள்,
உள்ளே டெட்டால் வாசனையடித்தது. ஏறக்குறைய இருட்பாக, சைபர் வாட் நியான் ஒளியில் தரையில் ஒரு போர்வைக் குவியல் தெரிந்தது
சுவரில் தடவி விளக்குப்போட்டு அதை அணுகினான். குனிந்து மெல்ல விலக்கினான். அதிர்ந்து போனான்,
'மை காட்! இது அப்பா இல்லை. நான் பார்த்த அப்பா பாதி! சுருங்கிப் போய்விட்டார். கண்கள் இருட்டுப் பொத்துகளாக மூடி, கன்னங்கள் ஒட்டிப்போய், கை நரம்புகளும் மார்பு எலும்புகளும் தெரிய......பிராணன் ?
"அப்பா" பதில் இல்லை.
சற்று நேரம் அவரைப் பார்த்துக் கொண்டு அழுதான். மன வெளிச்சத்தில் சட் சட் என்று அந்த மனிதரின் ஞாபக பிம்பங்கள் மாறின.
"அப்பா, அப்பா..."
படுக்கையருகில் உட்கார்ந்து நெற்றியைத் தொட்டான். சூடு அந்த கையெலும்பை எடுத்துத் தன் கன்னத்தில் வைத்துக் கொண்டான். அழுகை பீறிட்டது.
"அப்பா..."
சட்டென்று கனவுச் சங்கிலியிலிருந்து விடுதலை பெற்றவர் போல் சிலிர்த்துக் கண் விழித்தார்.
"யாரு?"
"நான்தாம்பா, பரத் வந்திருக்கேன்"
மெல்லத் தலை நகர்த்தி அவனைப் பார்த்தார்.
'பரத்தா?... பரத்தா?... என் மூணாவது பையனா?"
"ஆமாம்ப்பா ஆமாம்"
"நீதானா!" என்ன கிணற்றுக் குரல் அது! எட்டு வருஷத்துக்கு முந்தைய ஒலி முழக்கம் எங்கே...?
"நான் தாம்பா.."
'சௌக்கியமா இருக்கியா?"
"இருக்கேம்பா!"
"ரொம்ப நாளா காணோம்..."
"வந்துட்டேம்பா!"
"தெரியும். நீ வருவேன்னு தெரியும் சாப்பிட்டியா?'
"இல்லப்பா"
"சாப்ட்டுறு. ராட்சசிகள்ளாம் அப்புறம் இல்லைன்னுடுவா. மூணு ராட்சசி.....நாலு ராட்சசி"
"என்னப்பா உனக்கு உடம்பு..."
"களைப்புப்பா! அலுப்பு... போறும் நிஜமாவே பரத்தா...?' அந்தக் கரம் சிரமப்பட்டு மேல் வந்து அவன் தலை மயிரைக் கலைத்து, "பரத் உனக்குத்தான்... உனக்குத்தான் சரியாவே எதும் செய்யலை..." கிழவரின் கண்கள் கலங்கின
"அதெல்லாம் இல்லப்பா"
"என்னைப் பாரு சீக்கிரம் செத்துப் போய்டுவேனா? சீக்கிரம் போய்ட்டா தேவலாம்..."
"இல்லப்பா, தேவலையாய்டும்"
'உன்னைப்பத்திதான் சதா நினைப்பு"
"எனக்கும்ப்பா"
"கிட்ட வா" கிழவர் மெல்ல, யோசித்து யோசித்து, மிக மெலிந்த குரலில் பேசினார்.
"இந்த ரூமைப் பாரு சுடுகொடு மாதிரி இல்லை என்னை இதில் போட்டு அடைச்சுட்டு எல்லாரும் கீழயே இருக்கா அஞ்சு நிமிஷம் பேச ஆளில்லை. நாக்கு செத்துப் போச்சு. ஆரஞ்சுப்பழம் வாங்கிக் கொடுனு ஒரு வாரமா சொல்லிண்டிருக்கேன். இங்க வேற யாரும் இல்லையே...?
"இல்லைப்பா!"
"பழம் எல்லாம் கீழே வெச்சிண்டிருக்கா. அவாளே சாப்படறா..... உங்கம்மா, மூத்த ராட்சசி, என்னை வந்து பார்த்து மூணு நாளாச்சு, எல்லாரும் காத்திண்டிருக்கா பரத்..."
"அதெல்லாம் இல்லைப்பா, சரியாய்டும்".
"ஆரஞ்சுப்பழம் வாங்கித் தரயா"
'தரேன்ப்பா "
"இத பார் மருந்து.. இதில் விஷம் கலந்திருக்கா, குடிக்கமாட்டேன்"
"அப்படி எல்லாம் செய்யமாட்டாப்பா."
"எல்லாரும் காத்துண்டிருக்கா.. நீ எந்த ஊர்ல இருக்கே?"
"ஏதோ ஊர்ப்பா. ஸ்திரமா எதும் இல்லை ."
வீட்டில் இருக்கயா?
"இல்லை, ரூம்ல..."
எனக்கு இடம் இருக்குமா, என்னை அழைச்சுண்டு போறியா?"
"சரிப்பா"
"இப்ப போகலாமா"
"இல்லை, நாளைக்கு கார்த்தலை..."
"இப்பவே போகவேண்டாமா?'
"தூங்கிட்டு நாளைக்கு கார்த்தலை போகலாம்."
"என்னை இந்த சுடுகாட்டில் இருந்து அழைச்சுண்டு போயிடறியா?"
"சரிப்பா"
அவர் முகத்தில் சாந்தம் தெரிந்தது
"நீ பேசு"
அவர் முன் சாய்ந்து "அப்பா” என்றான் தலையைக் கோதிவிட்டு
*அப்பா நானும் நீயும் கிரிக்கெட் ஆடுவோமே, ஞாபகம் இருக்கா ?"
ஞாபகம் புன்னகையாக மலர்ந்தது
"ரெண்டுபேரும் ஒரே டீம்ல மாட்ச் ஆடியிருக்கோம். நீ பத்தொம்பது அடுச்சுட்டு ரன் அவுட் ஆயிட்டே. எனக்கு ஏற்ப உன்னால ஓட முடியலே. ஸாரிப்பா, அது ராங்கால், அது என் தப்பு...."
"சொல்லு..."
"சின்ன - வயசில அய்யன் வாய்க்கால்ல நீஞ்ச கத்துக் குடுத்தியே. தொபுக்கடீர்னு தள்ளிவிட்டுட்டு மூச்சுத் திணற வெப்பியே; அப்புறம் கொய்யாக்கா அடிச்சு சாப்பிடுவோமே அம்மாவுக்குத் தெரியாம உனக்கு பர்க்லி சிகரெட் வாங்கிண்டு வருவேனே. ரெண்டு பேரும் கவட்டை கட்டி குருவி அடிப்பமே எவ்வளவு தூரம் ட்ரெக்கிங்... போவோம்... பாண தீர்த்தத்தில் பாறைல படுத்துண்டு நட்சத்திரத்துக்கு எல்லாம் புதுசா பேர் வெப்பியே! சுள்ளி பத்த வெச்சு சட்டில சமைப்பமே..."
ஒவ்வொன்றாக ஒவ்வொன்றாகச் சொன்னான்.
தந்தை மகன் இருவருக்கும் இருந்த உணர்ச்சிபூர்வமான பிணைப்பு, சிநேகிதம் கையோடு கை அழுத்திய பலப்பரீட்சை,
நீண்ட நீண்ட நடைப் பயணங்கள், பறவைக் குரல்கள், மண் வெளியில் தியாகராஜர், துரத்தல், ஓட்டம், பிடிப்பு, ரகசியப்பரிவர்த்தனை, நிறுத்தி உட்காரவைத்து மரத்தடியில் அருணாசலக் கவிராயரின் ராமநாடகக் கீர்த்தனைகள், ஆலிஸ் இன் ஒண்டர்லாண்ட்...
"பரத்" என்று அவன் கையைப் பிடித்தார். "நானும் நீயும் ஒண்ணு..."
'அப்பா! எல்டொராடோவைப் பத்தி சொல்லுவியே, ஞாபகம் இருக்கா? அதைத் தேடிண்டு தான் நான் போனேம்பா. கற்பனைத் தங்கம்னு தெரியாம தூரத்திலேயே பளிச்னு காட்டிட்டிருந்ததை நோக்கி ஓடினேன்ப்பா"
"நானும்தான் அதையே தேடினேன்" என்றார்
"அப்பா உன்னை முதல்ல சரசுவோட பார்த்தப்ப எனக்கு அப்படியே சகலமும் ஸ்தம்பிச்சுப் போச்சு. ரொம்ப நாள் கழிச்சுத்தான் எனக்கு ஏன்னு புரிஞ்சுது. ஆனா அதைப்பத்தி நான் ஒருத்தர்கிட்ட ஒரு வார்த்தை பேசலியே! இன்னிவரைக்கும்...சொன்னதில்லையே!"
"அந்த சம்பவத்துக்கப்புறம் உனக்கும் எனக்கும் உறவுல பிளவு வந்துடுத்து....... அன்னியோன்யம் வெட்டுப்பட்டுடுத்து..."
"நீ என்னைப் பார்த்து, நான் உன்னை பார்த்து பயப்பட ஆரம்பிச்சோம், என் மனசுல உன்ன பத்தி இருந்த இமேஜ் கலைஞ்சு போயி நாம் ரெண்டு பேரும் அப்பவே பிரிய ஆரம்பிச்சுட்டோம். அதுக்கப்புறம் எத்தனையோ நடந்து போயி, நான் விலகிப் போய், ஊர் ஊரா அலைஞ்சு...உறவு விட்டுப்போயி,கல்யாணம் பண்ணிண்டு, பெண்டாட்டியைப் பிரிஞ்சு போய்......வேண்டாம்பா......
அதையெல்லாம் அழிச்சுடலாம்பா ......சரசு வரைக்கும் விரசமில்லாம இருக்கு அதோட போதும். அதுக்கப்புறம் எல்லாத்தையும்....."
அப்பா தலையை ஆட்டினார். "அதுவும் இருக்கட்டும்" என்றார்.
'பரத் கிட்ட வா.."
அவன் வந்தான். "நாளைக்கு கார்த்தால என்னை அழைச்சுண்டு போறியா அந்த இடத்துக்கு-"
"சரிப்பா ."
"எத்தனை மணிக்கு வண்டி?"
"சீக்கிரமே கிளம்பிடலாம்பா.."
"என்னால நடக்க முடியாது..."
"உன்னை அப்படியே தூக்கித் தோள்மேல வெச்சுண்டு போயிடறேம்பா..நீ என்னைத் தூக்கிண்டு போவியே அது மாதிரி....."
"எனக்குத் தேவலை ஆய்டுமா?"
"நிச்சயம் ஆயிடும்பா"
"தேவலையானதும் கண்ணாடி மாத்திக்கொடு. என்ன?"
'சரிப்பா"
"ஒரு சின்ன டிரான்சிஸ்டர் வாங்கிக் கொடுத்துடு"
"சரிப்பா"
"ஹெமிங்வேயோட கிலிமஞ்சாரோ படிச்சுக்காட்டு"
"சரிப்பா"
'மார்க்கஸ் அரேலியஸ், திருவாசகம், அப்புறம் பவிஷ்ய புராணம், டாஸ்டாயவ்ஸ்கி, கோஸ்லர், ரஸ்ஸல்....."
'எல்லா,.."
"இதோ பாரு, அந்த தடி ரெண்டு வேஷ்டி, ரெண்டு பனியன், அதான் என்னுது. செருப்பு கூடக் கிடையாது. இப்பவே எடுத்துண்டுடு".
'நான் வாங்கித்தரேம்பா."
"நிறைய நடக்கணும்" அவர் முகத்தில் இப்போது தேஜஸ் தெரிந்தது. உதட்டில் புன்னகையுடன் அவனை மிக அருகி அழைத்து கண் சிமிட்டலுடன், 'பரத் உங்கிட்ட ஒரு ரகசிய சொல்லணும். அவா ஒருத்தருக்கும் தெரியாது."
"என்னப்பா?"
சொன்னார்
ராத்திரி முழுவதும் அவர் அருகிலேயே உட்கார்ந்து அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். மூன்று மணி சுமாருக்கு அப்பா இறந்து போயிருந்ததை உணர்ந்தான். தூக்கம் போலத்தான் படுத்திருந்தார். உதட்டில் புன்னகை ஸ்திரமாக இருந்தது.
பரத் ஓரத்தில் ஒதுங்கி நிற்க, ஒவ்வொருவராக வந்து ஆர்ப்பாட்டமாக அழுதார்கள். அதன்பின் சுரத்துக் குறைந்து அழுதார்கள். அதன் பின் மௌனமாக...
"வந்தான், முடிச்சுட்டான்! இவனைப் பார்த்த அதிர்ச்சியிலே உயிர் போய்டுத்து !!. எதுக்காக இப்படி திடீர்னு வரணும்?'
"அண்ணா ஒரு விஷயம். தனியா வாயேன்"
"என்ன?"
"போறதுக்கு முன்னால அப்பா எங்கிட்ட சொன்னார். வீட்டையும் நிலத்தையும் என் பேரில் எழுதி வெச்சிருக்கறதா..... காரியம் எல்லாம் முடிஞ்சப்புறம் இந்த அட்ரஸ்க்கு எழுது. எல்லாத்தையும் மாத்தி சாஸனம் பண்ணிக் கொடுத்துடறேன்..."
"பரத், எங்க போற ?'
திரும்பிப் பார்க்காமல் நடந்தான்.
=====================================
இந்தச் சிறுகதையை எவ்வளவு முறை படித்திருப்பேன் என்று நினைவில்லை. நான் அவ்வளவு எமோஷனலான ஆள் இல்லை. சட்ரென்று கலங்குவது, உணர்ச்சி வசப்படுவது.....இதெல்லாம் அதிகம் கிடையாது.
இருந்தும் ஒவ்வொரு முறை இதைப் படிக்கும் போதும் நிறையவே கண் கலங்கியிருக்கிறேன். அதுதான் சுஜாதாவின் எழுத்தின் சக்தி
-------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.5.20

சுஜாதாவின் குதிரை வண்டிக் கதை!!!!


சுஜாதாவின் குதிரை வண்டிக் கதை!!!!

*ஒரு சாதாரணமான சம்பவத்தை இவ்வளவு சாமர்த்தியமாக, சுவாரஸ்யமாக, ஹாஸ்யமாக சஜாதாவைத்தவிர வேறு யாராலும் சொல்ல முடியுமா என்பது சந்தேகம்*

Sujatha’s beautiful  story ! குதிரை வண்டி 🐎🐎

A story of 1965.....🐎

நாங்கள் பயணிக்கும் ரயில் (meter gauge) திருவாரூரை நெருங்கிக் கொண்டிருக்கும்......

ஸ்டார் ஹோட்டல் பாத்ரூம் பைப் மாதிரி ஏகப்பட்ட கைப்பிடிகள் நீராவி இஞ்சினுக்குள் துருத்திக் கொண்டிருக்கும். அதில் ஏதோ ஒன்றிரண்டை டிரைவர் பிடித்து இழுக்க ரயிலின் வேகம் குறையும்.

பிறகு இன்னொரு லீவர் மேல் ஏறி உட்கார்ந்து ப்ரேக்கைப் போடுவார். மாடு ஏகமாய் உச்சா போவது போல சிலிண்டரிலிருந்து நிறைய சுடுநீர் கொட்டும். ரயில் ஒரு வழியாக ப்ளாட்பாரத்தில் நிற்கும்.

மூட்டை முடிச்சுகளைத் தூக்கிக் கொண்டு இறங்குவோம். பெரியவர்களுக்கு மட்டும் தான் வாசல் கதவு வழியாக இறங்கும் பாத்யதை உண்டு. லக்கேஜ்கள் எல்லாம் ஜன்னல் வழியாகவே இறக்கப்படும்.

அந்தக் காலத்து கம்பார்ட்மெண்ட் ஜன்னல்களுக்கு கம்பிகள் கிடையாது. அது Windows டெவலப் ஆகாத காலம்.

லக்கேஜ்கள் ஜன்னல் வழியாக இறக்கப்பட்டதும் என்னைப் போன்ற பொடிசுகளும் ஜன்னல் வழியாகவே இறக்கப்படுவார்கள்.

இதற்காக ரயில் உள்ளே ஒரு Giver இருப்பார். ப்ளாட்பாரத்தில் ஒரு Taker இருப்பார். நம் குடும்பத்தைச் சாராத மூன்றாம் நபர் கூட இந்த Give and take policy ல் இணைவார்.

லக்கேஜ்கள் எண்ணப்படும். கை கால் முளைத்த லக்கேஜ்களுக்கும் Numbering system உண்டு. பித்தளைக் கூஜாவுக்கு நம்பர் கிடையாது. அது Hand luggage.

அப்போதெல்லாம் பயணத்தின் போது படுக்கை கண்டிப்பாக இருக்கும். அதன் உள்ளே தான் துணிமணிகளை சுருக்கம் சுருக்கமாய் அள்ளிப் போட்டு சுருட்டியிருப்பார்கள். சுருக்கமாகச் சொன்னால் அது ஒரு படுக்கப் போட்டிருக்கும் லாண்டரி பேஸ்கட்.

படுக்கையை கயிறு போட்டு கட்டியிருப்பார்கள். யூனியன் ஜேக் கொடி மாதிரி ப்ளஸ், பெருக்கல் இரண்டுமே அதில் இருக்கும்.

ஜெமினி கணேசன் மாதிரி பிஸ்தாக்கள் மட்டும் தான் வலது தோளில் ஹோல்டாலை கோணலாக சாய்த்துக் கொண்டு ரயிலிலிருந்து இறங்குவார்கள். எங்களுக்கு எல்லாம் பவானி ஜமக்காளம் தான் ப்ராப்தி.

இது நாள் வரை அந்த ஹோல்டாலை எப்படி பேக் செய்கிறார்கள் என்றே எனக்கு புரிபடவில்லை. அதை மடிப்பதும் சுருட்டுவதும் ஒரு கலை. ஹோல்டாலுக்குள் நம் ஜட்டி பனியன்கள் எல்லாம் தலையணை அவதாரம் எடுத்திருக்கும் என்று மட்டும் தெரியும்.

அப்பாவும் அம்மாவும் முன்னால் போவார்கள். பின்னால் கோழிக்குஞ்சுகள் மாதிரி நாங்கள். ஒரே வித்தியாசம். கோழிக்குஞ்சுகளுக்கு மண்டையில் முடி இருக்கும். எங்களுக்கு நாட் அலோவ்ட். முடி உச்சவரம்பு சட்டம் அமுலில்
இருந்த காலம் அது.

வெளியே நான்கு குதிரை வண்டிகள் காத்துக் கொண்டு நிற்கும். எங்களைப் பார்த்ததும் ஒரு குதிரை வண்டி முன்னால் வரும். குதிரை வண்டிக்காரர் கையில் இருக்கும் குச்சி முப்பது டிகிரி கோணத்தில் ஏதோ சேட்டிலைட்டை சுட தயாராக இருப்பது போல ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டு நிற்கும்.

“அய்யா.... ஏறுங்கய்யா” என்பார் வண்டிக்காரர். அவரை இனி கோவிந்து என அழைப்போம்.

எங்கே போக வேண்டும் என்று கேட்க மாட்டார். மேட்டு தெரு MGR வீடு என்றால் அந்த சின்ன ஊரில் அனைவருக்கும் தெரியும். எனக்குத் தான் MGR என்றால் என்னவென்று புரியாமல் இருந்தது.

வண்டிக்குக் கீழே பன்னியை கட்டித் தூக்கிப்போகும் வலை மாதிரி ஒன்று தொங்கிக் கொண்டிருக்கும். குதிரைக்குண்டான புல் அதில் தான் ஸ்டோர் செய்து வைத்திருப்பார்கள். கோவிந்து குதிரைக்குப் புல் போட்டு நான் பார்த்ததில்லை. ஏதோ statutory requirements க்காக அந்த புல் பேங்கை வைத்திருக்கிறார் என்று தோன்றியது.

அந்த புல்களுக்கு மேல் படுக்கை மற்றும் இதர சாமான்களை வைப்பார் கோவிந்து. இதன் விளைவாக வீட்டுக்குப் போனவுடன் பல புல்லரிக்கும் சம்பவங்கள் நடக்கும்.

வண்டிக்கு உள்ளே ஒரு லோ பட்ஜெட் மெத்தை இருக்கும். இங்கும் புல் தான். மேலே சாக்கு போட்டு மூடியிருப்பார்கள்.

புல் ஒரு சம்பிராதாயத்திற்குத் தான் இருக்கும். கவாஸ்கர் வண்டியில் ஏறினால் There is little amount of grass and it may assist passengers என்று பிட்ச்
ரிப்போர்ட் கொடுத்து விடுவார்.

கோவிந்து எங்களையெல்லாம் கண்ணாலேயே எடை போடுவார். சாக்கில் யார் உட்கார வேண்டும் என்று அவர் சாக்ரடீஸ் மூளை வேலை செய்யும்.

பொதுவாக பெண்களுக்குத்தான் சாக்கு அலாட் ஆகும். ஏனென்றால் இந்த சாக்கு சறுக்காது. அது ஒரு Safe zone.

கால் வைத்து ஏற பின் பக்கம் ஒரு படி இருக்கும். உள்ளங்கை சைஸுக்குத் தான் இருக்கும். ஏகப்பட்ட பேர் கால் வைத்து வைத்து உள்ளங்கை ரேகை முழுக்க அழிந்து போயிருக்கும். கால் வைத்தால் வழுக்கும். வழுக்கை வீழ்வதற்கே என்று பயமுறுத்தும்.

ஒரு வழியாக பெண்கள் முதலில் ஏறுவார்கள். சாக்கு மெத்தையில் உட்காருவது ஒரு கலை. அந்த காலத்து பெண்கள் Table mate மாதிரி. பதினாறு வகைகளில் மடங்குவார்கள். ஒரு குக்கர் கேஸ்கட் அளவே உள்ள வட்டத்துக்குள் கூட கால்களை மடக்கி உட்காரும் அளவுக்கு Flexibility வைத்திருந்தார்கள்.

ஒரு பெண்ணுக்கு எதிரே பொதுவாக இன்னொரு பெண்ணே உட்கார வைக்கப் படுவார். பொதுவாக மாமியாரும் மருமகளும்தான் எதிர் எதிரே உட்காருவார்கள்.

மருமகளுக்குத் தான் பிரச்சினை. கால் மாமியார் மேல் படாமல் உட்கார வேண்டும். வாஸ்து புத்தர் மாதிரி முழங்கால்களைக் கட்டிக் கொண்டு
உட்கார வேண்டும். அடுத்து பாட்டி ஏறுவார். பாட்டி நிறைய மடி பார்ப்பார். ஆனால் உடம்பு தான் மடியாது. கஷ்டப்பட்டு உட்காருவார். பாட்டி மீது எல்லோரும் படுவார்கள். வேறு வழியில்லை. அரை மணி நேரத்துக்கு
மடி விலக்கு கொள்கையை அமுல் படுத்துவார் பாட்டி.

வண்டிக்கு மத்தியில் ஜன்னல் இருக்கும். ஏழு இஞ்ச் ஸ்க்ரீன் செல்போன் சைஸுக்குத்தான் இருக்கும் அந்த ஜன்னல்.

அதன் வழியாகப் பார்த்தால் கும்பகோணம் பாத்திரக்கடை என்ற கடையின் பெயர்ப் பலகை முழுதாகத் தெரியாது. எந்த கோணத்தில் பார்த்தாலும் கோணம் மட்டும் தான் தெரியும்.

குதிரை பாட்டுக்கு ஒரு ப்ளாஸ்டிக் ஸ்டூல் மாதிரி ஆடாமல் அசையாமல் நின்று கொண்டிருக்கும். வண்டியின் உள்ளே ஆட்கள் ஏறியதும் குதிரையின் கால்களுக்கு லோட் டிரான்ஸ்பர் ஆகும். கால்கள் உதறும். சில சமயம்
வண்டி முன்னால் கூட போக ஆரம்பிக்கும்.

இதைத் தவிர்க்க வண்டியைக் கையினால் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு Hand brake போட்டுக் கொண்டு நிற்பார் கோவிந்து.

“ஏண்டா... அந்த குதிரையை கெட்டியா பிடிச்சிக்கோடா” என்று அலறுவார் பாட்டி.

பாட்டி எல்லோரையும் வாடா போடா என்று தான் கூப்பிடுவார். எவ்வளவு வயதானவர்களாக இருந்தாலும் டா தான். அவருக்கு அந்த Civil liberty உண்டு.

இரண்டு சுமாரான பையன்களை பின்னால் உட்கார வைப்பார் கோவிந்து. குறுக்காக ஒரு கம்பியைப் போடுவார். Location sealed என்று அதற்கு அர்த்தம்.

பின்னால் உட்காருவதில் ஒரு செளகரியம் உண்டு. காலைக் கீழே தொங்கப் போட்டுக் கொள்ளலாம். வேடிக்கை பார்க்கலாம். பிற்காலத்து ஃபிகர்களுக்கு டாட்டா காட்டலாம்.

தெருவோரத்து மரங்களும் ஓட்டு வீடுகளும் ரிவர்ஸில் போவதைப் பார்க்க ஆனந்தமாக இருக்கும்.பின்னால் ஆட்கள் ஏறியவுடன் வண்டி பின்நோக்கிச் சாயும்.

இந்த சமயத்தில் தான் ‘டேய் கடன்காரா’ என்ற திட்டு பாட்டியிடமிருந்து கிளம்பும். பாவம். இவ்வளவுக்கும் கோவிந்துவுக்கு எந்த கடனும் இருக்காது. அவனால் எந்த பேங்குக்கும் NPA ஏறியதில்லை.

கோவிந்து ஒரு ரவுண்டு அடித்து பின்னால் வருவார். கொஞ்சம் உள்ளே போங்க... தம்பி காலை இப்படி நீட்டு என்று சில Balancing acts செய்வார்.

பிறகு அப்பா முன்னால் ஏறி உட்காருவார். முன்னால் உட்காருவது மிகவும் கடினம். அப்பாவின் ஒரு தொடை வண்டிக்குள்ளும் இன்னொரு தொடை முன்னால் இருக்கும் சட்டத்தின் மீதும் இருக்கும். அப்பா தொடை
நடுங்கியாக வந்து கொண்டிருப்பார்.

அப்பா பக்கத்தில் என்னைத் தூக்கி வைப்பார்கள். முன் இருக்கை. வேடிக்கை பார்க்க நன்றாக இருக்கும். ஆனால் பின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்.

எனக்குப் வலது பக்கத்தில் கோவிந்து உட்காருவார்.

“தம்பீ... நகந்து உட்காரு. காலை கீழே போடு” என்பார்.

காலை கீழே போட்டதும் தான் நமக்கு பிரச்சினை ஆரம்பிக்கும். குதிரைக்கு வால் நீளமாக இருக்கும். அதில் முடிவில்லாமல் முடி இருக்கும்.

திரெளபதி மாதிரி குதிரையும் ஏதோ சபதம் செய்திருக்க வேண்டும். முடியை முடியாமல் தொங்கப் போட்டுக் கொண்டே வரும். அந்த முடி நம் காலில் பட்டு கிச்சுக்கிச்சு மூட்டும். சில சமயம் குத்தும்.

குதிரையின் வால் முடியில் இயற்கையிலேயே முள் உண்டா என்று நமக்கு சந்தேகம் வரும்.

முதலில் வண்டி பர்ஸ்ட் கியரில் மெதுவாகத் தான் போகும். திடீரென்று கோவிந்து தன்னை மறப்பார். குச்சி எடுத்து குதிரையை அடிப்பார்.

வடிவேலு இருந்திருந்தால் “நல்லாத்தானே போயிகிட்டு இருக்கு... ஏன்?” என்று கேட்டிருப்பார்.

குதிரை வேகம் எடுக்க ஆரம்பிக்கும். வண்டிக்குள் உட்கார்ந்திருப்பவர்கள் மண்டை பக்கத்து கூரையில் டங் டங்கென்று அடித்துக்கொள்ளும்.

முன்னால் உட்கார்ந்திருக்கும் எனக்கு சறுக்கு மரத்தில் கீழே போவது போல ஒரு ஃபீலிங் வரும்.

இப்போது குதிரை தன் வாலை உயர்த்தும். அது என் தொடையை நோக்கி வாலை நகர்த்தும். அந்த அவுட் கோயிங் வால் ஏகமாய் என் தொடையில் உராசி தொடையெங்கும் கீறல் விழும். தொடை வால் பேப்பர் ஆகியிருக்கும்.

கொஞ்ச நேரத்தில் தான் க்ளைமாக்ஸ் வரும். குதிரை ரன்னிங் மோடிலேயே பச்சை லட்டுகளை உதிர்க்க ஆரம்பிக்கும்.

Equal distribution of wealth என்று பொருளாதார வல்லுநர்கள் சொல்வதை குதிரை செய்து காட்டும். தெருவெங்கும் லட்டுகளை பரவலாக போட்டுக் கொண்டே போகும்.

தனக்கு கோவிந்து புல்லை போட்டிருக்கிறான் என்பதை நிரூபித்து அநியாயத்திற்கு எஜமான விசுவாசத்தை காட்டும்.

திடீரென்று குதிரை வேகத்தைக் குறைக்கும். ஒரு இடத்தில் நின்றே விடும்.

கோவிந்து குதிரையிடம் ஏதோ பேசிப் பார்ப்பார். அது நகராது. பதினைந்து நாள் முன்னாலேயே ஸ்டிரைக் நோட்டீஸ் கொடுத்திருக்குமா எனத் தெரியாது.

வாரைப் பிடித்து இழுப்பார். அடிப்பார். குதிரை நகராது. தியானம் பரமானந்தம் என்று நின்று கொண்டிருக்கும்.

திடீரென்று அதுவே நகர ஆரம்பிக்கும். மறுபடியும் வேகம் பிடிக்கும்.

பத்து நிமிடத்தில் எங்கள் வீட்டு வாசலில் நிற்கும். கோவிந்து அதற்கு ரூட் எப்படி சொன்னார்? அது எப்படி வந்தது?

கூகுளாலேயே கண்டு பிடிக்க முடியாத புதிர் இது.

அதன் மண்டைக்குள் ஓவர்சீயர் வீட்டுக்கு Navigation implant ஆகியிருக்கிறது.

வீட்டுக்குள் லக்கேஜ்களையும் கோவிந்துதான் கொண்டு வந்து வைப்பார்.

அப்பா பணம் கொடுப்பார். கண்டிப்பாக ஒரு ரூபாய்குள்தான் இருக்கும்
 
எங்கள் அடுத்த 🐎குதிரை சவாரிக்கும் இதே கோவிந்துதான் தவறாமல் வருவார்.....🐎🐎

(பயணங்கள் நிச்சயமாக முடிவதில்லை)...

“சுஜாதா”
========================================================
படித்ததில் பிடித்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
===============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.3.20

இரண்டணா - சுஜாதாவின் சிறுகதை.


இரண்டணா - சுஜாதாவின் சிறுகதை.

இப்போதும் சிலர் இரண்டணா நாலணா என்ற சொற்களைப் பயன்படுத்தினால் சுதந்திரத்துககு முன் பிறந்தவர்கள் என்று நிச்சயமாக சொல்லலாம் இரண்டணா ஒரு தனி நாணயம். பித்தளை. சதுர வடிவில் இருக்கும். ஒரணா போல அசிங்கமான நௌ¤நௌ¤கள் இல்லாமல் கூர்மையான முனைகளை மழுப்பி ஒருபககததில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் தன் தலையில் கிரீடத்துடன் சைடுவாகாக பார்த்ததுக கொண்டிருப்பார். அவர் கிரீடத்தை துக்கிப் பார்ததால் அப்போது தான் கிராப்பு வெட்டிக் கொண்டிருக்கலாம் என்று தோன்றும்.

இரண்டணா அந்த தினங்களின் பொருளாதாரத்தில் முக்கியமான நாணயம் இந்த நாட்களின் எட்டுபைசாவுக்கு சமம் என்று அதை அலட்சியம் பண்ணிவிடாதீர்கள் நான் சொல்லும் நாட்களில் சீரங்கம் திருச்சி பஸ் கட்டணம் இரண்டணா. பெனின்சுலர் கபேயில் தோசை இரண்டணா . கிருஷ்ணன் கோட்டை வாசலில் இலநதைப்பழம் லேக்கா உருண்டை கொடுக்காப்புளி எல்லாமே காலணாதான் அதாவது இரண்டணாவில் எட்டில் ஒரு பங்கு. டிபிஜி கடையில் அழிக்கும் ரப்பர் கட்டைபேனா மசிக்கூடு ரூல்டு பேப்பர் ப்ளாட்டிங் பேப்பர் வாங்கியும் இரண்டணாவுக்கு சில்லரை தருவார் அல்லது ஒரு புளிப்பு மிட்டாய் தருவார்.

வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் போது மார்கழி மாதத்தில் பகல் பத்தில் தேர்முட்டியருகில் தரையில் பள்ளம் தோண்டி துருத்தி வைத்து சாணி பூசி பெரிய வாணலி அமைத்து அதில் கொள்ளிடம் மணலைக் கொட்டி அதனுடன் வருக்கப்பட்டு உற்சாகமாக வெடிக்கும் பட்டாணி ஒரு பை நிறைய இரண்டணாவுக்கு கிடைக்கும், இரவு பெடரமாக்ஸ் வெளிச்சத்தில் பெரிய எழுத்து விக்ரமாதித்தன் கதை கொக்கோகம் போன்ற புத்தகங்கள் எங்கேயோ பார்த்துக் கொண்டு வாங்கலாம்.

ரங்கராஜாவில் 'காப்டன் மார்வல்' படம் தரைடிக்கெட் இரண்டணா. தங்கராசு மிதிவண்டி நிலையத்தில் அவர் சைக்கிள் இரண்டணாவுக்கு எடுக்கலாம் அதற்கு கீழே ஒரணா அரையணா காலணா தம்பிடி போன்ற பரிவார நாணயங்கள் இருந்ததால் இரண்டணா இருக்கிறவன் ஆகாகான் போல உணரலாம் விகடன் பத்திரிகை நீல நிறத்தில் அச்சிட்ட சிறுவர் மலருடன் இரண்டணா .ஒரு பாக்கெட் கலர்கலராக இருக்கும் பலப்பம் இரண்டணா. லிப்ஸ்டிக் போல சிவப்படிக்கும் மிட்டாய் ஐஸ்கட்டியை சரக்சரக் கென்று தேய்த்து சர்பத் ஊற்றி உறிஞசுவதுடன் ஒரு காத்தாடி தலையாரி பம்பரம் எல்லாம் வாங்கலாம் என்ன என்ன வெல்லர்ம இரண்டணாவில் வாங்கலாம்!.

அப்பேற்பட்ட இரண்டணா நாணயத்தை தொலைத்துவிட்டேன் சொல்கிறேன் பாட்டி என்னை ஒரு ஆழாக்கு எண்ணெய் வாங்கிக்கொண்டு வா என்று இரண்டணா கொடுத் அரையர் கடைக்கு அனுப்பினாள் கூடவே ஒரு கிண்ணியும் கொடுத்தாள். ஈயம் பூசினது வாயகன்றதுநான் அந்தவயசில் ஸ்தலத்திற்கு ஸ்தலம் ஓட்டம் தான் ஒரு நிமிஷத்துக்குள் அரையர் கடைக்கு வந்து "மாமா ஒரு ஆழாக்கு எண்ணெய்" என்றேன் அரையர் கடை என்று எப்படி பெயர் வந்தது தெரியாது கடை சொந்தக் காரர் அரையர் இல்லை அய்யங்கார்தான்.

ஆனால் கோவில் அரையர்கள் பரம்பரையெல்லாம் கீழ உத்திர வீதியில் இருந்தார்கள் இநத அரையர் எங்கள் வீட்டிற்கு எடடுவீடு தள்ளி இருந்தார் சாதி வழக்கத்துககு மாறாக பலசரக்கு கடைவைத்திருநத ஒரே அய்யங்கார் சன்னமான குரலில் வரவேற்பார் எப்போதும் பலகையில் உட்கார்ந்து கொண்டிருப்பார் நிலக்கடலையோ முந்திரிப்பருப்போ எதையும் கண்ணெதிரே, இருந்தாலும் வாயில் போட்டுக் கொள்ள மாட்டார். கையில் பனை விசிறிக் கொண்டு இருப்பார் அவர் கடையில் ஏலக்காய் கிராம்பு கோதுமை அரிசி லவங்கப்பட்டை சீமெண்ணை எல்லாம் கலந்து ஒரு சுகமான வாசனை வீசும்.

"என்ன எண்ணைடா நல்லெண்ணையா தேங்கா எண்ணெயா ஆமணக்கு எண்ணெயா விளக்கெண்ணையா வேப்பெண்ணையா" என்றார்.

அப்போது தான் இவ்வளவு எண்ணெய் இருப்பது தெரிந்து நான் மீண்டும் பாட்டியிடம் ஓடி வந்து "என்ன எண்ணை பாட்டி?".

"உன்னை கன்னம் கன்னமா இழைக்கணும் நம்மாத்தில எப்பவாவது நல்லெண்யைதவிர எதாவது பயன்படுத்துவமா நல்லெண்ணைதாண்டா". மீண்டும் ஓடிப்போய் "ஒரு ஆழாக்கு நல்லெண்ணை மாமா".

"நல்லெண்ணை ஆழாக்கு ரெண்டரை அணா ஆச்சேப்பா பாட்டி கிட்ட போய் இன்னும அரைணா வாங்கிண்டு வரயா" நான் மீண்டும் ஓடி வந்து சொல்ல "ஏண்டா மடயா ஆழாக்கு ரெண்டரை அணான்னா ரெண்டணாவுக்கு உண்டானதை வாங்கிண்டு வரதுக்கென்ன புத்திகிடையாதா உனக்கு இப்படி பரபக்கபரக்க ஓடிண்டேருப்பியா".

"நீ சொல்லவே இல்லையே பாட்டி" என்றேன் நியாயம் தானே "காதுல வாங்கிக்கோ அரையர் கிட்டபோயி போன வாரம்தான் ரெண்டணா ஆழாக்கு ஒரு முழு ஆழாக்கு கொடுத்தாரேன்னு கேளு இல்லைன்னா முக்காலே மூணுவீசம் ஆழாக்கு போடச் சொல்லு நன்னா பார்த்து எல்லா எண்ணெயும் பாத்திரத்தில விழுந்து கீழசொட்டாம வாங்கிண்டு வா வரப்ப ஓடி வராதே கொட்டிடப் போறே" இந்த எச்சரிக்கைகளுக் கெல்லாம் தேவை இல்லாதபடி அடுத்த முறை அரையர் கடைக்கு போக விடாமல் வழியில் ஒரு சம்பவம் நிகழந்தது.

ராஜன் கேர்ள்ஸ் ஸ்கூல் எதிரில் தெரு நடுவில் தேர்முட்டியருகில் கொட்டு சப்தம் கேட்டது அதைக் கடந்து தான் அரையர் கடைக்கு போக முடியும் கூட்டம் கூடிக்கொண்டிருந்தது நையாண்டி மேளம் கேட்டது. மத்தளம் அவ்வப்போது உருமியது பைஜாமா அணிந்த ஒரு சிறுமி அலட்சியமாக உள்ளங்கைகளை தரையில அழுத்தி பல்ட்டி அடித்து சுற்றி வந்தாள் அவளை விட சற்றே பெரிய சிறுவன் ஒரு கழியை லாவகமாக தூக்கி நிறுத்த மஸ்தான் தரையில் வட்டம் வரைந்து அதில் பாம்புப் பெட்டிகள் ஒரு மகுடி வேறு என்னஎன்னவோ உபரகணங்கள் கோழிமூககு இறகு போர்த்திய போர்வை கருப்புத் துண்டு என்று பல வித உபகரணங்களை பரப்பிக் கொண்டிருக்க "வாங்க வாங்க நாகூர் பாபா மோடி மஸ்தான் பரம்பரை, மனுசனை பாம்பாக்குவேன் பாம்மை மனசனாக்குவேன்" ஒரு கீரி ஆணியில் தனிப்பட்டு சுற்றி வந்து கெர்ணடிருக்க மோடி மஸ்தான் என்னையே பார்த்து "பயப்படாத பக்கத்ல வந்து குந்து" என்று என்னை அழைத்தான் அந்த பரட்டை தலை சிறுமி சின்ன பல் வரிசையில் என்னைப் பார்த்து சிரித்தாள்.

ஆழாக்கு எண்ணெயை மறந்தேன் முதல் வரிசையில்போய் உட்கார்ந்து கொண்டுவிடடேன் அவ்வப்போது மத்தளம் தட்டிக்கொண்டு அவன் இடைவிடாமல் பேசினான்.

"கந்துமதக்கரியை வசமாக்கலாம் கரடிபுலி வாயைக் கட்டுவேன் சிங்கத்தை முதுகிலல போட்டுப் பேன் பாம்பை எடுத்து ஆட்டுவேன்… இது என்ன?" என்ற சபையோரில் ஒருவரை கேட்டான்.

"ஒரணா" "என்னது ஒக்காளியா" என்று கேட்க சபையில் சிரிப்பு" நெருப்பில அரதம் வச்சு வேதிச்சு வித்துருவேன் வேற யாரும் பார்க்காம உலகத்தில உலாவுவேன் எப்பவும் இளமையா இருப்பேன் மத்தொருவன் சரீரத்தில பூந்துருவேன் தண்ணில நடப்பேன் நெருப்பில குந்துவேன் எல்லாம் எதுக்காக?" என்று கேள்வி கேட்டு தயங்கி தன் சட்டையை நீக்கி பட்டென்று வயிற்றில் எதிரொலிகேட்கத் தட்டி"பாழும் வவுத்துக்காக!".

"நீ காசு கொடுக்கவாணாம் உன் காசை உம் மடிலயே வெச்சுக்க வித்தை பாரு பாத்து மஸ்தான் குஷியாயிருச்சுன்னு ஒரணா ரெண்டணா கால் ரூபா அரை ரூபா ஒரு ரூபா தட்ல போடு பச்சைப் புள்ளையை பந்தாடப் போக்ஷற்ன்" எல்லாரும் பலமா கைத்தட்டுங்க என்று சொல்லி நாங்கள் கைதட்ட காத்திராமல் உய் உய் என விசிலடித் தான்.

நான் அவன் வித்தையில் பரிபூர்ணமாக ஐக்கிய மானேன் "தகிரிய முள்ளவங்க யாராச்சும் இருந்தா வாங்க" என்று கேட்க ஒரு சிறுவன் முன்னால் வந்து நின்றான் அந்தப் பையனை கூப்பிட்டு அவன் முன் விரல்களை என்னவோ பண்ண அவன் சட்டென்று துங்கிப் போக அழுக்குத் துணடால் போர்த்திப் படுக்க வைத்தான் "யார் வூட்டுப் புள்ளையோ இது" என்றான் தரையில் ஒரு முகம் வரைந்தான் அந்த முகத்திற்கு ஒரு வாய் மட்டும் பெரிசாக வரைந்தான் பக்கத்தில் ஒரு பேனாக்கத்தியை வைத்தான் பாம்புப் பெட்டியைத திறந்து அதை உசுப்பிவிட ஒரு முறை அவன் மணிக்கட்டில் கொத்தியது.

த என்று அதை அதட்டினான் உள்ளுணர்வில் அஙகிருந்து விலக வேண்டும என்று தான் தோன்றியது ஆனால் கட்டிப்போட்டவன் போல ஆகிவிட்டேன சன்மத்துககு இந்த இடத்தை விட்டு விலகப் போவதில்லை கீரிப்பிள்ளை ஒன்றுக்குப் போனது அந்த பைஜாமா சிறுமி பெரிய கொம்பை வைத்துக் கொண்டு அவன் தோளிலிருநது கயிற்றுக்கு எவ்வி அதன் மேல லாவகமாக நடந்தாள் அதன் பின் கழி முனையில் படுத்திருக்க இவன் கீழே இருந்து பாலன்ஸ பண்ணி அவளை சுற்றினான் இந்த நேரத்தில் எல்லாம் பையன் கண்மூடிப் படுத்திருந்தான் எனக்கு மிகவும் கவலையாக இருந்தது. "யார் பெத்தபுள்ளையோ இதை எழுப்பவாணாமா?".

"வித்தை பாத்திங்கோ இப்ப நம்ம ராணி தட்டு கொண்டாருவா ஒரணா ரெண்டணா" என்று சொன்னபோது சபையோர் மெல்ல எழுநதிருக்க "ஏய்!" என்று குலை நடுங்குமாறு ஒரு அதட்டுப் போட்டான் "பாப்பார தெருவில வித்தை காட்டிட்டு காசு வாங்காம போகமாட்ன் நீ மட்டும காசு தராம வூட்டுக்கு போனே என்ன ஆகும்பாரு" என்று கையில் அந்த பேனைக் கத்தியை எடுத்து தரையில் வரைந்திருந்த வாயில் கீறினான் படுத்திருந்த பையன் வாயிலிருந்து ரத்தம் வடிந்தது.

"இதான் உனக்காகும் ராத்தரி" அப்டியே எல்லோரும் மூச்சடங்கி கதிகலங்கி ப்போய் நின்றோம் மௌமான சூழ்நிலையில் அவன் கத்தியைக் காட்டிக்கொண்டே மெல்ல எங்களிடம வந்தான் நான் எனனிடமிருந்த இரண்டணாவைப் போட்டதை அவன் பார்க்கக் கூட இல்லை உடுக்கை அடித்துக் கொண்டே சற்றி வந்தான் கீரி சுற்றிக் கொண்டு இருந்தது வித்தை எப்போது முடிந்தது ஞாபகமில்லை மெல்ல கனவிலிருந்து விடுபட்டவன் போல நடந்து வந்தேன் வீட்டின் அருகில் வந்த போது தான் நிஜ உலகத்து நிதர்சனங்கள் எனக்கு உரைக்க "எங்கே இரண்டணா" என்பது மட்டுமின்றி எங்கே கிண்ணி?.

"கிண்ணியையும் வைத்துவிட்டு வந்து விட்டேன பாட்டி சமயலறையிலிருநது குரல் கொடுத்தாள்" ஏண்டா இத்தனை நாழி எண்ணையை மோடைமேல வச்சுட்டு பாடம் படிக்கபோ" என்றள் மீண்டும தெருக் கோடிக்கு ஓடினேன் அதற்குள் வித்தைக் காரன் சாமக்கிரியைகளை கவர்ந்து கொண்டு சென்றிருக்க வேண்டும் விறிச் சோடியருந்தது தெரு போய் விட்டான்.

நான் செய்வதியறியாது திகைத்து நிற்க தெற்கு சித்திரை வீதி மூலையில் மீண்டும் கொட்டு சப்தம் எதிரொலித்தது சப்தம் வந்த திசையை நோக்கி ஓடினேன் தெற்குவாசல் அருகில் வாணி விலாஸ் பிரஸ் எதிரில் அவன் அடுத்த டேரா போட்டிருக்க மெல்ல கூட்டம் கூடிக் கொண்டிருந்தது வித்தை காரன் அருகில் சென்க்ஷற்ன அந்தப் பையன், வாயில் ரத்தம் வந்து கிடந்தவன் பைஜாமா பெண்ணுடன் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தான்.

வித்தைக்காரன் எங்கள் விட்டுக் கிண்ணியை திருப்பித் திருப்பிப் பார்ததுக் கொண்டிருந்தான் இது எவ்வளவு பெறும் என்பது போல் "வா தம்பி" "நான் வந்து கீழ சித்திரை வீதில விததை பார்க்க வந்தேங்க கிண்ணியை விட்டுட்டு போய்ட்டடங்க அந்த கிண்ணி என்னுது" "தம்பி வந்தியா கிண்ணி தரேன் ஆனா ஒரு கண்டிசன் "என்ன" எங்கூட வரியா வித்தை காட்ட லர்ல்குடி பிச்சாண்டார கோவில் இந்த பக்கம் குளித்தலை "அந்தப்பக்கம் புதுக்கோட்டை வரைக்கும் போகலாம்" என்றாள். பைஜமா சிறுமி என்னைப் பார்த்து மோகனமாக சிரித்தாள்.

"ஏபிசி புஸ்தவம் வெச்சிருக்கியா" என்று கேட்டாள் நான் அங்கேயே உட்கார்ந்து கொண்டு விசும்ப ஆரம்பித்தேன் "என் கிண்ணியை கொடு" " கொடுக்கறேன் கொடுக்கறேன்" அவன் என்னிடம அந்த கிண்ணியை கொடுக்காமல் அவவப் போது நீட்டி நீட்டி கொடுப்பது போல் கொடுத்து கையை இழுத்து கொண்டான் நான் பெரிசாக அழ ஆரமபித்ததும் கொடுத்தான் "கிண்ணியை கொடுத்துடடு வந்துரு நல்ல ஐயர் வூட்டு சாப்பாடு போடறேன் ஊர் உலகமெல்லாம் சுத்தலாம் பனாரஸ் அலகாபாத் கல்கத்தா "நான் வீட்டுக்கு திரும்பும் போது அந்தப் பெண் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்" "வரல்ல? வரப்ப ஏபிசி பொஸ்தவம் கொண்டுட்டுவா" என்றாள் நான் ஓடி வந்து அவசரமாக என் உண்டியலை உடைத்து எட்டு காலணா சேர்த்து அரையர் கடைக்கு போய் எண்ணை வாங்கிக் கொண்டு வந்து விட்டேன்.

பாட்டி திட்டுவாளோ என்று நான் வித்தைக்காரருடன் போயிருந்தால் என்ன ஆகியிருப்பேன் என்று இந்த வயசில் எப்போதாவது எண்ணிப் பார்ப்பேன் தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு ஒருகையால் மத்தளம் தட்டிக்கொண்டு மற்றொரு கையால் புல்லாங்குழல் வாசிக்க அந்தப் பெண் சுழன்று சுழன்று ஆட... எது எப்படியோ இந்தக் கதையை எழுதியிருக்க மாட்டேன்.

படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.3.20

புளியோதரை புராணம் - எழுத்தாளர் சுஜாதா அவர்கள் எழுதியது


புளியோதரை புராணம் - எழுத்தாளர் சுஜாதா அவர்கள் எழுதியது 

ரெஃப்ரிஜிரேட்டர் கண்டு பிடிக்கும் முன்பே தமிழன் “வச்சு வச்சு” சாப்பிட்டது புளி சாதத்தைத் தான்.! ஒரு வாரம் ஆனாலும் கெடாது.! அக்காலத்தில் வெளியூர் பயணங்களில் நம் கால்களே டாக்சியாக இருந்த காலத்தில் நம் பாட்டன்களின் பசியைப் போக்கிய வழிச் சோறு என்பது புளிச் சோறே! என்பது 100% உண்மை.!

எப்போதும் சுவை மிகுந்த உணவுகளின் பட்டியலில் டாப் 5 இல் இடம் பிடிக்கக் கூடிய ஒரு உணவு புளியோதரை.! உப்பு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, கசப்பு என அறு சுவைகளும் உள்ள உணவு புளியோதரை.. இதன்  நிறத்திலேயே அதன் தரத்தை அறிந்துவிடலாம்.. இதன் புராணம் மிகச் சுவையானது!

புளியோதரைக்கு மணமும் நிறமும் இரு கண்கள்.. முதலில் புளியோதரைக்கு வடிக்கும் சாதத்தின் பதம் மிக முக்கியம்.. அது புதுமணத் தம்பதியர்  போல பின்னிப் பிணைந்து குழைந்து இராமல்.. திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன தம்பதிகள் போல சற்று ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும் பதமே சாலச் சிறந்தது.. அடுத்து நிறம்.!

புளியோதரை ஆழ்ந்த மஞ்சளில் இருப்பது மிகச்சிறப்பு.! சாதத்தை வடித்து ஆறவிட்டு பயன்படுத்துதல் புளியோதரைக்கு சரியான சமையல் முறையாகும்.. அடுத்து எண்ணெய்.. நீங்கள் பில்கேட்ஸ் குடும்பமாக இருந்தாலும் எண்ணெய்க்கு பதிலாக நெய் எல்லாம் சேர்க்கக்கூடாது.. நல்லெண்ணெய் என்னும் ஏக பத்தினியை மட்டும்..

ஏற்றுக் கொள்வான் இந்த புளியோதரை என்னும் ராமச்சந்திர மூர்த்தி!அதிலும் செக்கில் ஆட்டிய புனிதவதி எண்ணெய் எனில் எந்தச் சீரும் வாங்காமல் சிறப்பாக இணைவான் இவன். அடுத்து புளி.. நேற்று முளைத்த புதுப்புளி கூடாது.!  பழம் புளியே புளிக் காய்ச்சல் செய்வதற்கு மிகச் சிறந்தது..

புதுப்புளியில் புளியோதரை புளிக்கு பிறந்த பூனையாகிவிடும்.! பழம் புளியில் தான் அது புலியாகும்! அடுத்து மிளகாய்.. நல்ல தரமான வதக்கும் போதே நெடியேறும்.. காரசார காய்ந்த மிளகாய் தான் பெரும் சிறப்பு,  அடுத்து இதற்கு மிகுந்த சுவை சேர்ப்பது நிலக்க டலைப் பருப்புகள்.!

நிலக்கடலையும் புளியோதரையும் நல்ல நண்பர்கள்! நல்லெண்ணெய் கமகமக்க ஒரு வாய் அள்ளிச் சுவைக்கையில் வாயில் அரைபடும் புளியோதரையின் நிலக்கடலை பத்து பாதாம் பருப்புகளுக்குச் சமம்.! புளியோதரைக்கு மிகப் பொருத்தமான சாம்பார் எதுவெனில் துவரம் பருப்பு போட்ட மெல் இனிப்பில் சின்ன வெங்காயம்..

அல்லது சிவப்பு பூசணி சாம்பார் தான்! கத்திரிக் காய் சாம்பாரை விட எண்ணெய்/ புளிக் கத்திரிக்காய் வதக்கல் இன்னும் பிரமாதம்.. இஞ்சி, பருப்பு, புதினா, கடலை, நவதானியம், இப்படி தேங்காய் சேர்க்காது புளி சேர்த்து அரைக்கும் துவையல்கள் நீண்ட நாள் உபயோகத்திற்கு.. பொட்டுக் கடலை தேங்காய் வைத்து அரைக்கும் துவையல் இன்ஸ்டண்ட் சுவர்க்கம்.!

மதுரையில் சித்திரான்னங்களுக்கு பேர் போன சவுராஷ்டிரா சமூக நண்பர்களுடன் பழகிய போது அவர்கள் வீட்டில் செய்யும் புளியோதரைக்கு கருப்பு கொண்டைக் கடலை சுண்டலை தந்தார்கள்.. அசுவாரஸ்யாமாக சாப்பிட்டால் சுவை ஆஹா.. அள்ளியது..! கூடவே இஞ்சி மிளகாய் சட்னி வேறு!

முருங்கை, முள்ளங்கி போன்ற காய்கறிகளின் தன்மையால் அக்காய்களைக் கொண்டு வைக்கும் சாம்பார்கள் நல்ல புளியோதரை சாப்பிடும் உன்னத உணர்வை கெடுத்துவிடும்.. என் அம்மா இதற்கு மாங்காய் போட்டு சாம்பார் வைப்பார்.. இது புள்ளத்தாச்சி பெண்களுக்கு பிடிக்கும்டா தம்பி என்பார்!

அம்மாவுடன் வீட்டில் அடிக்கடி வந்து  பேசும் சில கர்ப்பிணி அக்காக்களின் ரகசியம் அப்போது தான் தெரிந்தது.! ஆயிரம் தான் புளியோதரை வீட்டில் செய்தாலும் பெருமாள் கோவில் புளியோதரையின் தரமே வேறு.. ஒரு பெண் புகுந்த வீட்டில் இருந்து தன் தாய்வீட்டிற்கு 1 மாதம் விடுமுறையில் வந்தது போல..

புளியோதரையின் தாய்வீடு பெருமாள் கோவில்.! அங்கு வந்து விட்டாலே அதற்கு ஒரு தனிக் கு (ரு)சி வந்துவிடும்.! திருப்பதி,  மயிலை, திருவட்டார் முதலிய பெருமாள் கோவில் புளியோதரைகளுக்கு நான் ஹேமநாத பாகவதர் பாண்டிய நாட்டிற்கு அடிமை என எழுதித் தந்தது போல எழுதித் தரச் சொன்னால்..

கொஞ்சமும் தயங்காமல் மனதார எழுதித் தருவேன். என் பாட்டியின் ஸ்டைல் சிறிது சுண்டை வத்தல் நன்கு வதக்கி அதை இடித்துத் தூவுவது.! பெருமாளே வந்து கையேந்தும் பக்குவத்தில் மிகப் பிரமாதமாகச் செய்வார் புளியோதரையை புண்ணியச் சோறு என்பார்! கல்யாண சமையல் சாதம் என்ற மாயாபஜார் படப் பாடல் வரிகளில்..

 “புளியோதரையில் சோறு மிகப் பொருத்தமாய் சாம்பாரு” போல அருமையான புளியோதரை கிடைத்துவிட்டால் நாம் எல்லாருமே கடோத்கஜன்கள் தானே!!!

எழுத்தாளர் சுஜாதா அவர்கள் எழுதியது
---------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
==========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.3.20

எழுத்தாளர் ராகி.ரங்கராஜன் பற்றி எழுத்தாளர் சுஜாதா!!!!!


எழுத்தாளர் ராகி.ரங்கராஜன் பற்றி எழுத்தாளர் சுஜாதா!!!!!

ரா.கி.ரங்கராஜன் பற்றி சுஜாதா

திரு ரா.கி.ரங்கராஜன் அவர்களுக்கும் நம் மதிப்பிற்குரிய சுஜாதா அவர்களுக்கும் நல்ல நட்பு உண்டு. இருவருமே மற்றவரைப் பற்றி மனமாரப் புகழ்வார்கள். குமுதத்தில் சுஜாதா எழுத ஆரம்பித்த போது, ஏற்கனவே அங்கு (ரா.கி.) ஒரு ரங்கராஜன் இருந்ததால், தன் (எழுது) பெயரை "சுஜாதா" என மாற்றிக்கொண்டார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

ஹென்றி ஷாரியர் (Henri Charriere - a French writer) எழுதிய ‘பாப்பியான் (Papillon) ’ என்ற புத்தகத்தை ‘பட்டாம்பூச்சி’ என்ற பெயரில் திரு ரா.கி.ரங்கராஜன் அவர்கள் மொழி பெயர்த்தார்.

அந்தப் புத்தகத்தில் ஆத்மார்த்தமாக சுஜாதா எழுதிய அணிந்துரையிலிருந்து சில பகுதிகளை இங்கே பகிர்ந்துக்கொள்கிறேன் –:)

“ரங்கராஜன் சுதந்திரம் வந்த புதுசிலிருந்தே எழுதி வருகிறார் என்பது என் அனுமானம். ஆரம்ப காலங்களில் அவர் கலைமகள் போன்ற பத்திரிகைகளில் எழுதினார். அவருடைய சிறுகதைகள் ‘பல்லக்கு’ என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது.

துவக்க நாட்களிலேயே குமுதம் நிறுவனத்தில் சேர்ந்து அவர்கள் ‘கல்கண்டு பத்திரிகையுடன் கூடவே வெளியிட்ட ‘ஜிங்லி’ என்ற சுவாரஸ்யமான சிறுவர் பத்திரிகைக்குத் துணை ஆசிரியராக இருந்திருக்கிறார். ‘ஜிங்லி’யின் அகால மரணத்திற்கு வருத்தப்பட்டவர்களில் நானும் ஒருவன். பிறகு குமுதம் ஆசிரியர் குழுவில் சிறுகதைகளும் தொடர்கதைகளும் எழுதத் துவங்கினார்.

அதேசமயம் குமுதத்தில் ‘சூர்யா’ என்பவர் தரமான சிறுகதைகளை எழுதிவந்தார். ‘ஹம்சா’ என்பவர் வேடிக்கை நாடங்களும் டி.துரைஸ்வாமி துப்பறியும் கதைகளும் ‘கிருஷ்ண குமார்’ திகில் கதைகளும் ‘மாலதி’ குறும்பு கதைகளும் ‘முள்றி’ மழலைக் கட்டுரைகளும் ‘அவிட்டம்’ நையாண்டிக் கவிதைகளும், 'மோகினி' என்பவர் சினிமாவை / அதன் நடிகர்/நடிகைகளைப் பற்றி எழுதி வந்தார்கள்.

பிற்காலத்தில் நான் குமுதத்தில் எழுதத் துவங்கி ஆசிரியர் குழுவுடன் பரிச்சயம் ஏற்பட்டது. அப்போது ‘சூர்யா’ வின் செய்தி என்கிற சிறப்பான சிறுகதைக்கு ஏதோ ஒரு நிறுவனம் பரிசளித்திருந்த செய்தியில் கதையின் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் என்று குறிப்பிட்டிருந்தது.

விசாரித்ததில் நான் மேற்சொன்ன அத்தனை எழுத்தாளர்களும் ரங்கராஜன் ஒருவரே என்கிற விவரம் தெரிந்து எனக்கு அப்போது ஏற்பட்ட பிரமிப்பு இன்னும் விலகவில்லை.

ஓர் எழுத்தாளர் கதை, கட்டுரை, நாடகம், கவிதை எழுதுவது எல்லாம் சகஜம். என்னாலேயே முடிகிறது. ஆனால் எப்படி ஒரே எழுத்தாளரால் நடையிலேயே கருத்திலோ உருவத்திலோ எதுவும் தொடர்பு இல்லாமல் தனித்தனி மனிதர்கள் போல எழுத இயலும்? இந்தப் பல்திறமைக்கு ஒரே ஒரு முன்னோடிதான் உள்ளார்: கல்கி.

நேரில் சந்திக்கும்போது ரங்கராஜன் இத்தனை திறமைகளையும் ஒரு சின்னப் புன்னகையில் மறைத்துவிடுவார்.

ஒரு தபால் தலையில் அடங்கிவிடக்கூடிய திறமை உள்ள எழுத்தாளர்கள் எல்லாம் சுயவிளம்பரமும் பட்டங்களும், பரிசுகளும் ஏற்பாடு பண்ணிக்கொண்டு சொந்தப் பெருமையில் குளிர்காயும் சூழ்நிலையில், ரங்கராஜன் ஒரு கர்ம யோகி; குமுதம் ஸ்தாபன விசுவாசம்; ஆசிரியர் எஸ்.ஏ.பி மேல் பக்தி; கிடைத்தது போதும் என்கிற திருப்தி; சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பரிவு நேசம்; வெள்ளைச் சட்டை வெள்ளை வேட்டி நெற்றியில் ஸ்ரீசூர்ணம், நண்பர்களைக் கண்டால் கட்டி அணைத்து முதுகில் ஒரு ஷொட்டு; பெரிசு பெரிசாக குண்டு பேனாவில் எழுதப்பட்டச் சிறகடிக்கும் எழுத்து. ஏறக்குறைய ஒரு லைப்ரரி அளவுக்கு இவர் எழுதியிருக்கும் கதை, கட்டுரைகள் அனைத்தையும் திருமதி கமலா ரங்கராஜன் பைண்டு பண்ணி வைத்திருக்கிறார். இவரது படைப்புகள் திரைப்படங்களாக வந்திருக்கின்றன. சின்னத்திரையில் வந்திருக்கின்றன.

இத்தனை சாதனை படைத்தவருக்கு, குறைந்தபட்சம் ஒரு பொன்னாடை கூட போர்த்தாதது தமிழகத்தின் விசித்திரமான முரண்பாடுகளில் ஒன்று!”
-----------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.11.19

எனக்கு எத்தனை நண்பர்கள் !! - சுஜாதா


எனக்கு எத்தனை நண்பர்கள் !! - சுஜாதா

(கற்றதும் பெற்றதும்) Thanks to...Ram Sridhar.,.who typed this text

என் மறு அவதாரத்துக்கு முக்கிய காரணம், அப்பல்லோ மருத்துவர்கள். 'யவனிகா' 13-ம் அத்தியாயம் எழுதிக்கொண்டிருந்த சமயம், நாகேஸ்வரராவ் பார்க்கில் வாக் போகும்போது நெஞ்சு வலித்தாற்போல் இருந்தது.

'அன்ஜைனா' வகை நெஞ்சுவலி என் சிநேகிதன்.எனக்கு 'பைபாஸ்' ஆபரேஷன் ஆகி எட்டு வருஷமாச்சு. எட்டிலிருந்து பத்து வருஷம்தான் அதற்கு உத்தரவாதம் என்பது தெரியும். [பைபாஸ் என்பது இதயத்துக்கு ரத்த சப்ளை செய்யும் கரானரி  ஆர்ட்டரிகளில் (Coronary Artery) நேரும் அடைப்பை, உடலின் மற்ற பாகங்களிலிருந்து குழாய் எடுத்து மாற்றுப் பாதை அமைத்து தைப்பது). டாக்டர் விஜயஷங்கருக்கு போன் செய்தபோது 'வாங்களேன், ஒரு ஆன்ஜியோ எடுத்துப் பார்த்துவிடலாம்' என்றார்.

எட்டு வருஷமாகியும் தோற்றம் மாறாமல் இருந்தார் விஜயஷங்கர் (தினம் ஒரு பைபாஸ் செய்கிறார்). டாக்டர் ராபர்ட் மோ என்கிற கார்டியாலஜிஸ்டுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் மணிப்பூர் மாநிலத்தவர். சீனர்.

ஆன்ஜியோ  சமாச்சாரங்களில் திறமை மிக்கவர். அவர் எனக்கு ஆன்ஜியோ எடுத்துப் பார்த்து, இந்த நற்செய்தியை சொன்னார். “

உங்கள் இதயத்தில் முன்பு சரி செய்த நான்கு க்ராஃப்டுகளில் மூன்று அடைத்துக் கொண்டு இருக்கின்றன. ஒரே ஒரு க்ராஃப்டில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் ஆன்ஜியோபிளாஸ்ட்டி
செய்வது நல்லது” என்றார்.

டாக்டர் மோ ஒரு மாநாட்டுக்காக ஆஸ்திரேலியா போய் வந்த கையோடு எனக்கு அந்த சிகிச்சை செய்தார். உடன் டாக்டர் நஜீபும் இருந்தார்.
ஆப்பரேஷன் நல்ல வெற்றி என்று எனக்கு சிடி போட்டு காண்பித்தார்.

எல்லாம் நலம் வீட்டுக்குப் போகலாம் என்று படுக்கையடிப் புத்தகங்களை சேகரித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று  என் சிறுநீரகம்
(acute renal failure) பழுதடைந்து நின்று போய் விட்டது. விளைவு ராத்திரி
ஒரே மூச்சுத் திணறல். மேல் மூச்சு வாங்கும் போது ஏறக்குறைய சொர்க்கத்தில் கின்னர கிம்புருடர்கள் “திருக்கண்டேன்; பொன்மேனி
கண்டேன் திகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன்“ என்று பாடும் ஆழ்வார்கள் சகிதம் தெரிந்தார்கள்.

இதில் இரண்டு வகை உண்டாம் - அக்யூட், க்ரானிக் என்று. எனக்கு கிடைத்தது அக்யூட். டயாலிசிஸ் செய்தால் சரியாகிவிடும். க்ரானிக் என்றால் மாற்று சிறுநீரகம் பொருத்தும் வரை டயாலிசிஸ் பண்ணிக்கொண்டே இருக்க
வேண்டுமாம். ( நல்ல வேளை, எனக்கு இதில் ஒரு சின்ன அதிர்ஷ்டம்). சூழ்ந்திருந்த டாக்டர்கள் முகத்தில் கவலை ரேகைகள் தெரிந்தன.
அடிக்கடி மானிட்டரையும் கை கடிகாரத்தையும் பார்த்தனர்.

நெஃப்ராலஜிஸ்ட் டாக்டர் கே சி பிரகாஷ் அழைக்கப்பட்டார். அவர் உடனே எனக்கு டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்றார். அப்போலோ காரர்கள் என் மனைவியிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு ராத்திரியே அதற்கு
ஏற்பாடு  செய்தார்கள். (டயாலிசிஸ் என்பது சிறுநீரகத்துக்குச் செல்லும் ரத்தத்தை வெளியே கொண்டு வந்தது கழுவி பிறகு மறுபடி
சிறுநீரகத்திற்கு அனுப்புவது).

இதற்காக, என் கழுத்தருகில் வெட்டு போட்ட டெக்னீஷியன் என் அருகே
வந்து ” உங்க ஸ்டோரிஸ் எல்லாமே  படிப்பேங்க. உங்ககிட்ட ஒரு சந்தேகம் கேட்கணும்...”
"காலையில் பார்த்துக்கலாமே..."
"காலைல எனக்கு டூட்டி முடிஞ்சு போயிருவேனே"
"டயாலிஸிஸ் ஓடிட்டு இருக்கு இல்லையா....இப்பவேவா?"
"இது என்னங்க ஜுஜுபி. பத்து நாளைக்கு ஒரு முறை ட்ரெயின் பிடித்து வந்து பண்ணிக்கிறவங்க இருக்காங்க. அங்க  பாருங்க.."
ஹால் முழுவதும் டயாலிசிஸ் மெஷின்கள் அமைத்து பலர் மாத நாவல் படித்துக்கொண்டு டயாலிசிஸ் பண்ணி கொண்டு இருந்தார்கள். அப்படி ஒன்றும் பயப்பட வேண்டிய விஷயம் அல்ல என்பது தெரிந்தது.

மறுதினம் சந்தேகத்துக்கு இன்னொரு முறை டயாலிஸிஸ் பண்ணிக்கொண்டதும் சிறுநீரகம் பழைய நிலைக்கு திரும்பி
பொன் வண்ணத்தில் சிறுநீர் கழிக்கத் துவங்கினேன். எனக்கு ஆன்ஜியோவுக்காக கொடுக்கப்பட்ட கறுப்பு  திரவத்தினாலோ அல்லது கொலஸ்ட்ரால் எம்பாலிசத்தாலோ வந்திருக்கலாம் என்று என் சங்கடத்துக்குக் காரணம்  சொன்னார்கள்.

ஒரு வாரம் ஐசியு-வில் இருந்துவிட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன்.
அதன்பின் வீட்டுக்கு வந்ததும் மற்றொரு சிக்கல் ஏற்பட்டது. அதை
விவரித்து அதை ஏற்படுத்தியவர் பெயரைக் கெடுக்க விரும்பவில்லை.

ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆக விரும்புபவர்களுக்கு என் பரிந்துரைகள்
இவை - முடிந்தால் அட்மிட் ஆவதைத் தவிர்க்க வேண்டும். என் கேஸில் போல தவிர்க்க இயலவில்லை என்றால், எத்தனை சீக்கிரம் வெளிவர முடியுமோ வந்துவிடவும். ஓர் உபாதைக்காக அட்மிட் ஆகி உள்ளே
போனதும், அப்படியே மற்ற உபாதைகள் உள்ளனவா என்று பார்த்து
விடலாம் என்று யாராவது அல்லக்கை யோசனை சொன்னால் பெரிய எழுத்தில் வேண்டாம் என்று சொல்லிவிடுங்கள். முடிந்தால்
அலறவும். இல்லையேல் மாட்டினீர்கள்.

எல்லோரும் நல்லவர்கள், திறமைசாலிகள். சிக்கல் என்னவென்றால்
அவர்கள் திறமைசாலிகளாக இருக்கும் அவயங்கள் வேறுபடும். கிட்னி ஸ்பெஷலிஸ்ட் கிட்னியையே கவனிப்பார், ஹார்ட், ஹார்ட்டையே...
சுவாச நிபுணர் சுவாசத்தையே. யாரவது ஒருவர் பொதுவாகப் பொறுப்
பேற்றுச் செய்யாவிடில் அகப்படுவீர்கள். ஒவ்வொரு டாக்டரும் சிற்றசர்கள்போல

குட்டி டாக்டர் புடைசூழ வருவார்கள். மொத்தம் ஒரு நிமிஷம் நம் படுக்கையருகே நிற்பார்கள். அன்று அதிர்ஷ்ட தினம் என்றால் ஏறிட்டுப் பார்ப்பார்கள்.இல்லையேல், தலைமாட்டு சார்ட்தான். "ஹவ் ஆர் யு ரங்கராஜன்?" என்று மார்பில் தட்டுவார் சீனியர்.

குட்டி டாக்டர் தாழ்ந்த குரலில் கிசுகிசுப்பார்."ஸ்டாப் லாசிக்ஸ் ...இன்க்ரீஸ் ட்ரெண்டால்..." என்று கட்டளையிட்டுவிட்டு கவுன் பறக்க கடவுள் புறப்பட்டு விடுவார். அடுத்து, அடுத்த ஸ்பெஷலிஸ்ட் வந்து குய்யோ முறையோ -
"யார் லாசிக்ஸை நிறுத்தியது?" இவர்கள் இருவருக்கும் பொதுவாக வார்டு சிஸ்டர் என்னும் பெரும்பாலும் மலையாளம் பேசும் அப்பிராணி.

இதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது கட்டாயம் - ஒவ்வொரு மருந்துக்கும் ஒரு விளைவும், பக்க விளைவும் உண்டு.

ஒரு மாத்திரை கல்குடலாக்கி பாத்ரூம் எங்கிருக்கிறது என்பதே மறந்து போகும். மற்றொரு மாத்திரை இளக்கி குழாய் போலத் திறந்துவிடும். ஒரு மாத்திரை தூக்கத்தைக் கொடுக்கும். ஒன்று கெடுக்கும். ஒன்று, ஈறுகளை, பல்லை மறைக்க வைக்கும் அளவுக்குக் கொழுக்க வைக்கும், ஒன்று
பல்லை உதிர்க்கும்.

ஒரு காலத்தில் ஒரு வேளைக்குப் பதினான்கு மாத்திரைகள் சாப்பிட்ட எனக்கு என்ன ஆகியிருக்கும்? ரகளை !

ஆஸ்பத்திரி என்பது மிகுந்த மனச்சோர்வு அளிக்கும் இடம். சுற்றிலும் ஆரோக்கியர்கள் காபி, டிபன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது நாம்
மட்டும் கண்காட்சிப் பொருள் போல படுத்திருக்க, கண்ட நேரத்தில்,
கண்டவர் வந்து கண்டஇடத்தில் குத்தி ரத்தம் எடுத்து க்ளூகோஸ்
கொடுத்து, பாத்திரம் வைத்து மூத்திரம் எடுத்து, ஷகிலா ரேஞ்சுக்கு
உடம்பெல்லாம் தெரியும்படி நீல கவுன் அணிவித்து, ஆஸ்பத்திரியில் நிகழ்வது போல மரியாதை இழப்பு மந்திரியின் முன்னிலையில் கூட நிகழாது.

அப்பல்லோ போன்ற ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கான அத்தனை கருவிகளும் உள்ளன. எனக்கே எடுத்த டெஸ்டுகள்
ஆன்ஜியோகிராம், பல்மனரி ஃபங்க்ஷன் டெஸ்ட்,ஒருநாள் விட்டு
ஒரு நாள் எக்ஸ்ரே, ரீனல் ப்ரொஃபைல் டெஸ்ட், 1 அண்ட்
2 பிளட் டெஸ்ட், எட்டு மணி நேரம் மெல்லக் கொடுக்கப்படும் ஏதோ இன்ஜெக்ஷன், கால் வலிக்கு டாப்ளர் ஸ்கேன் ...ஒவ்வொன்றுக்கும்
மிகுந்த பொருள் செலவாகும். ஏழைகள் அணுக முடியாது.
நானே உள்ளாடை வரை உருவப்பட்டு பெஞ்சு, நாற்காலிகளை விற்கும் நிலைக்கு வந்துவிட்டேன்.

டிஸ்சார்ஜ் ஆகும்போது டாக்டர் கே சி பிரகாஷ் ஒரு சிற்றிடி கொடுத்தார். "எல்லாம் சரியாயிடுச்சு. ஆனா, ஒரு நாளைக்கு ஒரு கிராம்தான் உப்பு,
ஐந்நூறு மில்லிதான் தண்ணி."

உப்பில்லாமல், தண்ணீரில்லாமல் உயிர்வாழ்வதற்கு இன்னொரு பெயர் உண்டு...நரகம்....

தாகம் என்றால் இப்படி, அப்படித் தாகம் இல்லை....டாண்டலஸ்ஸின் (Tantalaus) தாகம். (புரியாதவர்கள் ஹாய் மதனைக்  கேட்கவும்)

*********************************************
என் குறிப்பு: - இந்த டாண்டலஸ் பற்றி நான் படித்ததை (அதில் நினைவிருப்பதை) உங்களோடு பகிர்ந்து கொள்ள  விழைகிறேன்.

டாண்டலஸ் ஒரு கிரேக்க இதிகாச ஹீரோ. அவன் ஓர் சமயம் தன் வீட்டிற்கு விருந்துண்ண வரும் கடவுள்களுக்கு அவனுடைய மகனைச் சமைத்து பரிமாற விழையும்போது, உண்மை தெரிய வர, கோபத்தில் டாண்டலஸை சபிக்கின்றனர்.

அந்த சாபத்தின் விளைவாக டாண்டலஸ் முழங்காலளவு தண்ணீரில் எப்போதும் நிற்பான். அவன் தலைக்கு மேல் உள்ள மரத்தில் கைக்கெட்டும் தூரத்தில் உள்ள கிளையில் பழங்கள் இருக்கும். அவனால் அதைப் பறித்து சாப்பிட முடியாது.

சாப்பிட நினைக்கும்போது பழங்கள் உயரே போய்விடும். சரி தண்ணீராவது குடிக்கலாம் என்று குனிந்தால், காலுக்குக்  கீழே இருக்கும் தண்ணீர் வற்றிவிடும். இதனால், டாண்டலஸ் எப்போது கடுமையான தாகத்துடனும், நிரந்தர பசியுடனும் இருப்பான். இவன் பெயரிலிருந்தே ஆங்கில வார்த்தையான tantalize / tantalise வந்தது. டிக்ஷனரியில் பொருள் பாருங்கள்,
விளங்கும்.)
******************************
மறுபடியும் சுஜாதா......

ஆஸ்பத்திரியிலிருந்து மூன்று வாரங்களுக்குப் பிறகு நான் வெளிவந்தபோது நான் இழந்தது பன்னிரண்டு கேஜி. பெற்றது,

"எனக்கு இத்தனை நண்பர்களா? இத்தனை நலம் விரும்பிகளா?" என்ற பிரமிப்பு. என் மனைவியும், மகன்களும், என்  மச்சினரும் மாற்றி, மாற்றி ட்யூட்டி பார்க்க, சினிமா நண்பர்கள் அனைவரும் வந்து ஆறுதலும், பொருளுதவியும் தந்தார்கள். பக்கத்துக்கு வார்டுகளில் படித்திருந்தவர்கள் தங்கள் வியாதிகளை மறந்து என்னை விசாரிக்க வந்தார்கள்.

டாக்டர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள், லாப் டெக்னீஷியன்கள், பெரும்பாலும் செல்வி என்ற பெயர் கொண்ட அரிதான தமிழ் நர்ஸுகள், அஃறிணையில், இனிமையாக பேசும் மலையாள நர்ஸுகள்,...
எத்தனைப் பேர் !!

'நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன்' (திருவாய்மொழி) ஆன நான் இவர்களுக்கு என்ன செய்தேன் என யோசித்துப் பார்க்கிறேன். இவர்களுக்காக இந்தண்டை ஒரு துரும்பை எடுத்து அந்தண்டை போட்டதில்லை. ஒரு ஸ்டூலைக் கூட நகர்த்தியதில்லை. ஏதோ தமிழில் கிறுக்கினத்துக்கு
இத்தனை மதிப்பா? இத்தனை சக்தியா?

உற்றார்கள் எனக்கில்லை யாரும் என்னும்;
உற்றார்கள் எனக்கிங்கெல்லாரும் என்னும்

என்ற திருவாய்மொழி வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.
-------------------------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.9.19

சுஜாதாவின் எழுத்துத் திறமை!


சுஜாதாவின் எழுத்துத் திறமை!

இதை படித்த பிறகு கண்ணீர் வந்தால் அது மகா பெரியவா மகிமை மற்றும் சுஜாதாவின் எழுத்து திறமை.

'தேடல்' - சுஜாதா

போயிங் விமானத்தின் ஜன்னல் வழியாக சென்னையின் தென்னை மரங்கள் மெல்ல அணுகிக் கொண்டிருக்க, கட்டடங்கள் கான்க்ரீட் கொம்புகள் போல முளைத்தன. நுரை மீசை வைத்திருந்த கடலலைகளின் அருகே வெண்மணல் பாக்கி இருந்தது.

“சரியா இருபது வருஷம் ஆச்சு இந்த மெட்ராசை விட்டு” “நிறைய மாறுதல் இருக்கும்” என்றாள் பாகீரதி.

“கடல் மட்டும்தான் மாறலை !”

பாகீரதி தன் கைப்பெட்டியைத் திறந்து, சின்னச் சின்ன பல வர்ணக் குப்பிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துத் திறந்து கவிழ்த்து கிடைத்த ரோஜா நிறக் குழம்பை எடுத்து முகத்தில் தேய்த்துக் கொண்டு தன் வயசைப் பத்து நிமிஷம் குறைத்துக் கொண்டாள். விமானத்தில் குப்பென்ற வாசனை சூழ்ந்தது.

“சங்கராச்சாரியாரைப் பார்க்கப் போறதுக்கு மேக் அப்பா ?”

“மேக் அப் இல்லை வெய்யில் தாங்காது என் ஸ்கின்.”

“மே ஐ ஹேவ் யுர் அட்டென்ஷன் ப்ளீஸ்…!” என்று மண்டை மேல் இருந்த ஸ்பீக்கர் கமறியது. அதற்கப்புறம் புரியவில்லை.

“உலகத்திலேயே மோசமான ஏர்லைன்னு வருஷா வருஷம் இந்தியன் ஏர்லைன்சுக்குத்தான் பரிசு தரணும்.”

பாகீரதியின் ஆழ்ந்த மௌனத்தைத் தொடர்ந்து, “உலகத்திலேயே மோசமானதொரு ஏர்போர்ட் பாம்பே” என்றார்.

பாகீ அவரைக் கடைக் கண்ணால் பார்த்து, “உங்க இந்தியா தூஷணையை ஆரம்பிச்சுட்டீங்களா ?”

“உண்மையைத்தானே சொல்றேன். இந்த நாடு உருப்படுமா சொல்லு. ஏர்போர்ட்டில் குடிக்க ஒரு வாய் தண்ணி கிடையாது. உட்கார ஒரு நாற்காலி கிடையாது. அமெரிக்கால Confirm பண்ண டிக்கெட் இங்க மெசேஜ் வரலைங்கிறான். ப்ளேன் மூணு மணி நேரம் லேட்டு. எதுக்காக இந்த நாட்டுக்கு ஏரோப்ளேன் ?”

பாகீரதி பேசாமல் இருந்தாள். இந்த மாதிரி கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்னால் இன்னும் பெரிசாக வாக்குவாதம் வளரும்.

“காஞ்சீபுரத்தில் ஓட்டல் ஏதாவது உண்டா இல்லை வயக்காட்டு பக்கம் ஒதுங்கலாமா ?”

பேசவில்லை.

“அலுமினிய சொம்போட ?”

பேசவில்லை.

விமானம் தரை தொட்டு ஒரு தடவை குதித்தது.

“என்ன மோசமான லாண்டிங் !”

விமானம் ஊர்ந்தது.

“உனக்கு வேணும்னா அவரைத் தரிசனம் பண்ணிக்கோ. எதுக்காக என்னை இழுக்கறே !”

“நீங்களும் பார்க்கணும்.”

“எதுக்கு நான் ? எனக்குத்தான் இதில் எல்லாம் நம்பிக்கை கிடையாதே. நான் ஒரு ஃபிசிக்ஸ் ஆசாமி — அக்னாஸ்டிக் !”

பாகீ இந்தப் பேச்சைத் தொடர விருப்பமின்றி, “இன்னிக்கு என்ன கிழமை ?” என்றாள்.

“இந்தியாவுக்கு வந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்துக்குக் காத்திருந்து கிழமையே மறந்து போச்சு….”

“எத்தனை நேரம்?இவங்களுக்கெல்லாம் எதுக்கு ஏரோ பிரிட்ஜ்?”

பிரயாணிகள் இறங்க அவசரப்பட்டு முன் வாசலில் நெருக்கினார்கள்.

“மூணு மணி நேரம் உட்கார்ந்திருந்தாங்க. மூணு நிமிஷம் கதவு திறக்கப் பொறுமை இல்லை ........ இந்தியன்ஸ்!”

“நீங்க இந்தியன் இல்லையா ?” என்று கேட்க விருப்பமின்றி பாகீ பேச்சை மாற்றினாள்.

“நீங்க முதல்ல அமெரிக்கா புறப்படறப்ப எத்தனை டாலர் வச்சிருந்தீங்க ?”

“ரெண்டு டாலர்! ஜஸ்ட் டூ டாலர்ஸ் !”

அது அவருடைய செல்ல ‘டாபிக்.’ எத்தனை தடவை சொல்லியிருக்கிறார் !

“கென்னடில வந்து இறங்கறேன், டெலிபோன் செய்யக் காசு இல்லை. ‘கலெக்ட் கால்’ னா என்னன்னே தெரியாது. அப்ப அங்க ஒரு….”

அவர் வாழ்க்கையில் முன்னேறிய கதையை 27வது தடவை கேட்கத் தயாரானாள்.

சீட்டிலேயே உட்கார்ந்திருந்து, எல்லோரும் இறங்கியதுமே அவர்கள் வெளியே வந்து பாலம் கடக்கும் போது, உஷ்ணம் அவர்களைத் தாக்கி, ஐம்பது அடி அவர்களுடனேயே கூட வந்து ‘ஏசி’க்குக் கொண்டு வந்துவிட்டது.

‘எஸ்கலேட்டர் அவுட் ஆப் ஆர்டர் ‘ என்று போர்டைப் பார்த்து சிவசங்கரன் நக்கலாகச் சிரித்தார்.

“இருக்கிற ஏழை ஜனங்களுக்கு உணவும் உடையும் கொடுத்து, பாப்புலேஷனை கண்ட்ரோல் பண்ணா போதும். மத்த எதுவும் வேண்டாம் இந்தியாவுக்கு. சாட்டிலைட் எதுக்கு ? எதுக்காக மிசைல் ப்ரோக்ராம் ?” என்று மூன்று வரியில் இந்தியாவுக்கு விமோசனம் சொன்னார்.

பாகீ மௌனமாகவே வந்தாள். அமெரிக்காவில் இருந்தால் விவாதித்திருப்பாள்…. ‘நாமெல்லாம் இதைச் சொல்வது ரொம்பச் சுலபம், நடைமுறை தான் கஷ்டம்’ என்று.

இங்கே பாகீரதி அவருடன் எந்த விதத்திலும் வாதாட விரும்பவில்லை, காஞ்சிபுரம் போய்ச் சேரும் வரையாவது!

கீழே ஹாலில் இறங்கினதும் கைவண்டி எடுத்துக் கொண்டார். அதன் சக்கரங்கள் சண்டி பண்ண, “சேச்சே ! ஒரு கைவண்டி சரியா பண்றாங்களா பாரு இந்தியாவிலே …”

கன்வேயரில் சுயம்வர ராஜகுமாரி போல் ஊர்ந்து வந்து கொண்டிருந்த அவர்கள் பெட்டியை, ஒரு சிப்பந்தி அதன் பாகேஜ் சீட்டைத் தப்பாகப் படித்து, எடுத்து வைத்துக் கொள்ள, சிவசங்கரன் “எக்ஸ்க்யூஸ்மி, எக்ஸ்க்யூஸ்மி” என்று ஓடிப் போய் அவன் கையைப் பிடித்துத் தடுக்க, அந்தச் சிப்பந்தி. “பொட்டி உன்னுதுன்னா சொல்லு – மேல கை போடாதே ! நீ கை வச்சா நான் கை வைக்க எத்தினி நேரமாகும் ? நீ சீமான்னா உங்க ஊரோட வச்சுக்க — இந்தப் பேட்டைல நான் சீமான் “ என்றான்.

“வாட் வாட் ?”

அவர் திரும்பிய போது முகம் சிவந்திருந்தது. கைகள் உதர ஸார்பிட்ரேட் மாத்திரை எடுத்து அடக்கிக் கொண்டார்.

“ஃபூல்ஸ் ! ஃபிலிஸ்டைன்ஸ்…” பாகீரதியின் மேல் பாய்ந்தார்.

“எல்லாம் உன்னால தான். எதுக்காக என்னை இந்த மாதிரி அவமானப்படுத்தறே? நான்தான் இந்தியா வர மாட்டேன்; பிரின்ஸ்டன்லயே இருக்கேன்; எனக்குப் பிடிக்காது இதெல்லாம்னு சொன்னேனில்லையா? எதுக்காக என்னை டார்ச்சர் பண்றே ? நான் எதுக்காக மெட்ராஸ் ஏர்போர்ட்டில ஒரு பொறுக்கி கிட்ட கெட்ட வார்த்தை கேட்கணும் ?”

“டேய் ...... யார்ரா பொறுக்கி! ஒரு உதை விட்டன்னா அரை டிராயர்லாம் ரத்தம் ஆயிரும் !”

“நீங்க வாங்க; அவனோட என்ன ?”

பாகீரதி அவசரமாக வெளியே வந்தாள். இந்த உச்ச சமயங்களில் பேசவே கூடாது.

வராந்தாவுக்கு வந்தார்கள். வாசலில் கார் காத்திருக்கும் என்று சொன்னார்கள். யார் என்று தெரியவில்லை. அவரவர் அவரவர் கார்களில் ஆரோகணித்துக் கதவு சாத்திக் கொண்டு புறப்பட்டுச் செல்ல, சற்று நேரத்தில் வராந்தா காலியாகி விட்டது.

“ஆட்டோ போலாங்களா ? செவண்டி ருப்பீஸ் கொடுத்துருங்க. எங்க மைலாப்பூர் தானே !”

“நான் எங்கே போனா உனக்கென்ன ?”

“அவனோட பேச வேண்டாம்.”

“சும்மனாங்காட்டியும் கேட்டேன். கோவிச்சுக்கிறியேம்மா !”

அப்போது ஒரு டிரைவர் வந்து, “நீங்க டாக்டர் சிவராமனா ?”

“டாக்டர் சிவசங்கர்.”

“காஞ்சி பார்ட்டி நீங்கதானே ? ப்ரதிபா டிராவல்சிலே வண்டி கேட்டிருந்தீங்களே !”

“ஆமாம்.”

“இருங்க வண்டி வந்திருக்குது.”

“நான் சிவராமன் இல்லைப்பா.”

“சரி சிவசங்கர். வாங்க! உங்களுக்குத்தான் வண்டி.”

பாகீரதிக்கு அந்த டாக்ஸி டிரைவரைப் பிடித்திருந்தது. பெட்டியை எடுத்து வைத்துக் கதவை மரியாதையாகத் திறந்து, மூடி, ஓடிப் போய் சீட்டில் அமர்ந்தான்.

“ஒரு பேரை ஒழுங்காக் கொடுக்கத் தெரியலை; என்ன ட்ராவல் எஜெண்டுப்பா !”

“அது சில சமயங்கள்ள தப்பாயிருதுங்க, டெலெக்ஸ்ல….”

“எது சரியாய் இருக்கு உங்க நாட்டில ?”

“டிரைவர் உங்க பேரு என்ன ?”

“பால்ராஜு...ங்கம்மா. ஏசி போட்டுரலாங்களா…? காசட் போட்டுரலாங்களா…?” காசட்டைச் செருகினான்.

“கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம்….”

“எனக்குக் காதல் வேண்டாம்ப்பா !”

கார் கிளம்பி நெடுஞ்சாலையில் சேர்ந்து கொண்டது. “பக்தி பாட்டு போடட்டுங்களா ?”

“எதுவும் வேண்டாம்ப்பா, ஆளை விடு!”

“பூந்தமல்லி பக்கம் திரும்பியதும், “பால் ராஜ், மெதுவாப் போங்க, அவசரமே இல்லை.”

“நீங்க பெரியவரைத் தரிசனம் பண்ண வேண்டாமா இன்னைக்கு ? போயிரலாங்க ரெண்டு அவர்ல.”

“நாளைக்கு மெதுவா தரிசனம் பண்ணிக்கறம்பா. எனக்கு அவசரம் இல்லை. நான் பார்க்கலைன்னாக்கூட பரவால்லை. இந்த அம்மாதான்… இதுக்காகவே அமெரிக்காவிலிருந்து வந்திருக்குது !”

“அப்படீங்களா ? சந்தோசங்க. மனித தெய்வம் சார் பெரியவரு. இதுவரைக்கும் எம்பத்தொன்பது முறை தரிசனம் பண்ணிட்டேங்க! இன்னம் பதினொன்று பண்ணா நூறாயிடும் — அவருக்கு நூறு வயசு ஆனாப்பல….”

“பால்ராஜ் நீங்க கிறிஸ்டியன்தானே ?

“ஆமாங்க அதனாலே என்ன சார் ?”

“Funny !” என்றார் சிவசங்கர்.

“எங்க வீட்டுல அவருதாங்க தெய்வம். அவரு என்ன சொல்றாரு ? நீ சர்ச்சுக்குப் போ – மசூதிக்குப் போ – கோயிலுக்குப் போ — கடைசில — எல்லா தெய்வங்களும் ஒண்ணு தானே ….”

“விபூதி வரவழைப்பாரா ?”

“அது சாய்பாபாங்க. அவர் உங்களைப் பார்த்தாலே போதுங்க — நினைச்ச காரியம் நடக்கும்.”

“உனக்கு நடந்ததா ?”

“பின்ன ? நம்ம புள்ள ரோஸ்மேரிக்குத் தபால் ஆபீஸ் உத்தியோகம் கிடைக்கணும்னு ஒருமுறை கேட்டேங்க. அடுத்த ட்ரிப்ல ஆர்டர் வந்துருச்சு !”

“அப்படியா டெலிபோன்ஸ்லயும் இருக்காரா இவர் !” என்றார்.

அந்தக் கேலியை பால்ராஜ் கவனிக்கவில்லை.

“பெரியவர்தாங்க தெய்வம். தூரக்க இருந்து பார்த்து மனசில கேட்டா காரியம் நடக்குது. உங்களுக்கு என்ன வேணுங்க !”

“காஞ்சிபுரத்தில நல்ல ஓட்டல்பா !”

“அம்மா உங்களுக்கு ?”

“நிம்மதி “ என்றாள்.

“அய்யாதான் கேலியாய்ப் பேசறாரு !”

“பால்ராஜ், பாருங்க எனக்கு இதிலே எல்லாம் நம்பிக்கை இல்லை. நான் செய்யற ஆராய்ச்சில கடவுள் தேவைப்படறதில்லை.”

“எனக்குத் தேவைப்படுதுங்க.”

“லுக் அவுட் !” என்று கத்தினார்.

வண்டி ஒரு லாரியை நூலிழையில் தவிர்த்து, தார் சாலையை விட்டு இறங்கி பாம்பு போல் நெளிந்து மரத்தருகே நின்றது.

அவர் உடல் நடுங்கி நெற்றி வியர்வை படர்ந்திருக்க, பால்ராஜ் இறங்கி டயரை உதைத்து, “பஞ்சர்ங்க! பதினைந்து நிமிஷத்தில ஸ்டெப்னி போட்டுரலாங்க. இளநி சாப்பிடுங்க.”

சிவசங்கர் சிகரெட் பற்றவைத்தார். மரத்தடியில் கயிற்றில் குலை குலையாக இளநீர் தொங்கியது.

“இளநி சீவலாங்களா ?”

“வேண்டாம்ப்பா .”

“சீவிட்டேங்களே…”

பாகீரதி பதற்றத்துடன் மற்றொரு வாக்குவாதத்தை எதிர்பார்த்தாள்.

“சரி, குடு” என்றார். நல்ல வேளை.

இளநீரை உறிஞ்சுகையில், “இந்தியால இது ஒண்ணு தான் உருப்படியா இருக்கு !”

பால்ராஜ் டயர் ஸ்பானரை டிக்கி இடைவெளியில் செருகி விட்டு, “போவலாங்க” என்றார்.

“இளநி சாப்பிடுங்க பால்ராஜ்” என்றாள் பாகீ.

“வேண்டாம்மா. பெரியவரைப் பார்க்கிற வரைக்கும் பச்சை தண்ணி பல்லுல படக்கூடாது.”

“மயிரிழைல தப்பினம்.” “எல்லாம் பெரியவர் ஆசிங்க !”

“அப்படியா ?” மறுபடி கேலிக் குரல்.

காஞ்சிபுரத்தை அணுகும்போது மணி மூன்றாகிவிட்டது. ஏரியில் வாத்துகள் நீந்த, அதை அணைத்துச் சென்ற பாதையில் பனைமர சோல்ஜர்கள் காவல் நின்றன. கோபுரங்கள் வெண்மையாக, புதுசாகத் தெரிந்தன. நகரமே நூறாவது ஆண்டைக் கொண்டாட அலங்கரித்துக் கொண்டிருந்தது. குறுக்கும் நெடுக்கும் தட்டியும் மூங்கிலும், சுதந்திர மாடுகளும், ஓடும் நாய்களும், லாட்டரி டிக்கெட் நிறைந்த சைக்கிள்களும்….

பாகீரதிக்கு உற்சாகம் பொங்கியது.

பெரிசாக பந்தல் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

“இங்கதான் விழா நடக்கப் போகுதுங்க.”

“யாராவது இந்த ஊரைப் பார்த்தா பழைய பல்லவர் காலத்து தலைநகர்னு சொல்வாங்களா ? வாட்டிகனைப் பார்த்தியே எப்படி இருந்தது ? ஆயிரம் ஆண்டு பழசுன்னா அமெரிக்கால என்னமா ‘ப்ரிசர்வ்’ பண்ணுவா !”

“நமக்கு அதெல்லாம் முக்கியமில்லைங்க,”

“நான் உன்கிட்ட பேசலை பால்ராஜ்.”

“நேராப் போய்ப் பெரியவரை முதல் தரிசனம் பண்ணிறலாங்க. அப்புறம் போயி மத்த சாமிங்களைப் பார்த்துறலாம்.”

சிவசங்கர் தீர்மானமாக மறுத்தார். “முதல்ல ஓட்டல் போய் ‘செக் இன்’ பண்ணிட்டு அப்புறம்தான் மத்ததெல்லாம்.”

“இல்லைங்க. அரைமணிதான் அவரைப் பார்க்க சமயம். அதுக்குத்தாங்க வண்டியை விரட்டிக்கிட்டே வந்தேன்.”

“நாளைக்குப் பார்த்துக்கலாம். முதல்ல ஓட்டல். எனக்குப் பசிக்கிறது.”

ஆர்ச் வளைவுகளில் மூன்று பெரியவர்களும் ஆசிர்வதிக்க நரசிம்மராவ் எழுதிக் கொண்டிருந்தார்.சினிமா சுவரொட்டியை உரக்கப் படித்தார்.

ஒரே ஒரு த்ரீ ஸ்டார் ஓட்டல்தான் இருந்தது. அதிலும் ரூம் போட்டு உள்ளே சென்று படுக்கையில் உட்கார்ந்ததும் குறை சொன்னார்.

“பாத்ரூமில் கரப்பான் பூச்சி, சுவர்களில் ரத்தக் கரை, டவல் அழுக்கு, மருந்து நாற்றம்…அமெரிக்கால ஒரு மினிமம் comfort - ஆவது….”

பாகீரதி கடைசியாகப் பொறுக்க முடியாமல், “ரெண்டு நாளைக்கு அமெரிக்காவை விட்டு இந்தியாவுக்கு வாங்களேன். நாம வந்தது பரமாச்சாரியாளைத் தரிசனம் பண்ண. ஓட்டல் மூட்டைப்பூச்சியை எண்ண இல்லை.”

“நாம வந்ததுன்னு சொல்லாதே. நீ வந்தது! எனக்கு இதில இஷ்டமில்லை; நம்பிக்கை இல்லை.அவரைப் பார்க்காட்டிக் கூட எனக்குப் பரவாயில்லை. தலைவலி எனக்கு !”

அதற்குள் பால்ராஜ் வந்து, “அம்மா, அம்பாள் பூசை செய்யறாரு சின்னவரு. வாங்க… போய் தரிசனம் பண்ணிடுங்க.”

“வரேன் பால்ராஜ்… கிளம்புங்க.”

“நான் வரலை நீ போ. நான் ரூம்ல இருக்கேன்.”

“நீங்க வராம தனியாப் போக மாட்டேன்.”

“அதான் பால் இருக்கானே ?”

“அய்யா நான் உள்ளே வர மாட்டேங்க! வெளியே பெரியவரை ஒருமுறை தரிசனம் செய்தா போதும்….”

“ச்சே! உன்னோட வேதனை பாகீ !”

“ப்ளீஸ்! ஒரு நாளைக்கு, ஒரே ஒரு நாளைக்கு உங்க ஃபிசிக்ஸ் பேசறதை மறக்கக் கூடாதா, பிடிவாதத்தை விட்டுக் கொடுக்கக் கூடாதா ? இந்தப் பிடிவாதம் பிடிச்சுத் தானே பிள்ளையைப் பறிகொடுத்தோம் .”

அவர் சட்டென்று மௌனமாகத் தீய்க்கும் கண்களால் பாகீரதியைப் பார்த்து, “நான் தான் காரணமா ! நான் மட்டும்தான் காரணமா ?” என்றார்.

“மறுபடி ஆரம்பிக்க வேண்டாம்.”

“நான்தான் காரணமா சொல்லு ?”

“சரி நானும்தான் காரணம்.”

பால்ராஜ் தர்மசங்கடத்தை உணர்ந்து, “நான் ஓட்டல் வாசல்ல வண்டி கொண்டு வரேங்க!”

சிவசங்கர் “ஆல் ரைட் ! வரேன். ஆனா என்னால சட்டையெல்லாம் கழட்ட முடியாது. அப்பப்ப ஸ்மோக் பண்ணுவேன். நான் நாஸ்திகன். மதமும் ஒரு போதைப் பொருள். ஒரு ஏமாற்று வேலைன்னு நம்பறவன்.”

“சும்மா வாங்களேன் துணைக்கு!”

அவர் அரை டிராயரையும் யுனிவெர்சிட்டி பனியனையும் மாட்டிக் கொண்டு தலையில் பேஸ்பால் குல்லா போட்டுக் கொண்டு “லெட்ஸ் மூவ்!” என்றார்.

பாகீரதிக்கு அழுகை வந்தது. ஏன் இத்தனை பிடிவாதம் பிடிக்கிறார் ! ஏதோ நிகழப் போகிறது என்று வயிற்றில் பயம் முலாம் பூசியது.

மடத்துக்குள் நூற்றுக்கணக்கானவர்கள் உட்கார்ந்திருக்க மேடை மேல் பூஜை நடந்து கொண்டிருந்தது.

“ஹூ இஸ் திஸ் பாய் ?”

“புதுப் பெரியவா.”

“வாட் நான்சென்ஸ், இந்தப் பையன் கால்ல விழணுமா ?”

“நீங்க விழ வேண்டாம்.”

“இவர் நம்பர் த்ரீயா ? வேர் இஸ் நம்பர் டூ ?”

“பேசாம இருங்களேன் ப்ளீஸ்.”

ஆயாசம் தரும் அளவுக்குக் காத்திருந்த பின் ஆரத்தி எடுத்தார்கள்.

அங்கிருந்து சுவரோரமாக நடந்து நழுவி, பெரியவரைப் பார்க்கச் சென்றார்கள்.
சிவசங்கரன் ஓரமாக நிற்க ........ “நிக்கறேளே உட்காருங்கோ. பேரு ? “
“ஷிவ்ஷங்கர்.”

“ஊரு ?”

“அமெரிக்கால ப்ரின்ஸ்டன்ல பிசிக்ஸ் ப்ரொபசரா இருக்கேன்.”

” ப்ரின்ஸ்டன்லதானே ஜெயராமன்னு மடத்துக்கு ரொம்ப வேண்டப்பட்டவர் இருக்கார்.”

“எனக்குத் தெரியாது. ப்ரின்ஸ்டன்ல ஐன்ஸ்டைன்னு ஒரு மகாமேதை இருந்தார்.”

“உங்க பௌதீக சாஸ்திரம் என்ன சொல்றது, ஆதி சங்கரர் சொன்னதைத் தானே !”

“இல்லை சுவாமி. பௌதீகம் ரொம்ப தூரம் போயிட்டது. பிரபஞ்சத்தையே ஒரு துகள், ஒரே ஒரு சக்தி இதில் விளக்க முடியுமா பார்க்கறா !”

“அதையே தான் – சக்தியும் சிவமும்னு ஒரு சரீரத்தில் அர்த்தநாரீஸ்வர திருக்கோலத்தோட ஒரே பொருளா விளங்கறா !”

”இல்லை நாங்க சொல்றது வேற .”

“அது இங்கிலீஷ், இது சம்ஸ்கிருதம். பவானீத்வம். இனி நீயாவே நான் ஆகி விடுகிறேன். நான், என்னுடையது என்கிறதை உன்னிடத்திலேயே கரைச்சுடறேன்ன்னு சொல்றார்…”

“அப்படி இல்லை “ என்றார் சிவசங்கரன்.

“வாங்க போகலாம்” என்றாள் பாகீரதி.

“உங்களுக்கு மிராகிள்ஸ்ல நம்பிக்கை இல்லையா ?”

“இல்லை.”

“பால்ப்ரண்டன், ஆர்தர் கோஸ்லர் எல்லாரும் எழுதிருக்காளே படிச்சதில்லை ?”

“இல்லை.”

“பரமாச்சார்யாள் மெஹபூப் நகர்ல சாதுர்மாஸ்ய பூஜைக்காக காம்ப் இருக்கறப்ப, உங்களைப் போலத் தான் ஒருத்தர் அமெரிக்காவில இருந்து வந்திருந்தார். பஸ் ஸ்டாண்டில சைக்கிள் ரிக்ஷாவைப் போட்டுண்டு வந்தார். ஆசீர்வாதம் வாங்கிண்டார்.

அப்பல்லாம் மஹாபெரியவா நன்றாகவே எல்லோருடனும் பேசுவா. அவர் கொடுத்த குங்குமத்தைத் தன் தலையிலே அப்பிண்டு, ஆப்பிளைக் கொடுத்து அனுப்பிச்சார்.

அவர் மடத்திலேயே சாப்பிட்டுட்டு ஏதாவது கான்ட்ரீப்யூஷன் பண்ணலாம்னு பர்சை எடுக்கறார். காணோம். பதறிப் போய்ட்டார்.

பர்ஸ் மட்டும் இல்லை. பாஸ் போர்ட்டு, ‘டிராவலர் செக்’குங்கறாளே — பதினஞ்சாயிரம் டாலர் — எல்லாமே காணும். அப்படியே ஒடிஞ்சு போய்ட்டார். எங்கன்னு தேடுவார் ? சாப்ட்ட இடத்தில இல்லை. சைக்கிள் ரிக் ஷாக்காரனை வீடு தேடித் போனா அவங்கிட்டேயும் இல்ல..கடைசில எங்க இருந்தது தெரியுமா ? பஸ் ஸ்டாண்டிலஸ்டாண்டி சிமெண்ட் பெஞ்சில அவர் உட்கார்ந்திருந்த இடத்தில. அந்த இடத்தில் ரெண்டாயிரம் பேராவது புழங்கியிருப்பா. இதுக்கு என்ன சொல்றேள் சிவசங்கரன், மிராக்கிள் இல்லையா இது ? இதை உங்க பௌதீக சாஸ்திரம் எப்படி விளக்க முடியும் ?”

“நீங்க மிராக்கிள்ன்னு சொல்லலாம். நான் இதை பிராபபிலிட்டி — சான்ஸ் இப்படித்தான் சொல்வேன். தரிசனம் ஆச்சோல்லியோ போகலாமா பாகீ !”

அவர் புன்னகைத்துப் பிரஸாதம் படாமல் கொடுத்தார்.

வெளியே வரும்போது பாகீரதி கோபத்தில், “அவர் கிட்ட கூடவா ஆர்க்யுமென்ட்?”

“ஏன் ? அவரும் என்னைப் போல் ஒரு ஆத்மா தானே ? அதானே அத்வைதம் சொல்றது ?”

பால்ராஜ் வெளியே காத்திருந்தான். “வேகமா வாங்க, நீங்க அதிர்ஷ்டம் பண்ணவங்க. மஹா பெரியவரை இன்னும் அரை மணி பார்க்கலாமாம்!”

அந்த மண்டபத்தை ஒட்டி புறப்பட்ட க்யூ தெருவில் தொடர்ந்தது. மெல்ல மெல்ல நகர பாகீரதி

ஓட்டமும் நடையுமாக அதன் வாலில் சேர்ந்து கொண்டாள். மற்றதெல்லாம் மறந்து போய் விட்டது.

ஒரு வெள்ளைக்காரி பல்பொடி கலரில் ஜிப்பா அணிந்து கொண்டு நிஷ்டையில் எதிரே திறந்திருந்த வாசலையே நோக்கிக் கொண்டிருந்தாள். உள்ளே இலேசான இருட்டாக இருந்தது. மெல்ல அணுகினார்கள்.

உள்ளே அந்த நூறு வயதுப் பெரியவர் ஏறக்குறைய மல்லாந்த வாக்கில் உட்கார்ந்திருந்தார். காவி முட்டாக்கின் மேல் இலைக் கிரீடம் வைத்திருந்தார்கள். முழங்கால் மடங்கியிருந்தது. யாரையும் குறிப்பாகப் பார்க்கவில்லை.

அருகே ஒரு பிராமண இளைஞன் வரிசையை “ம்ம் நகருங்க” என்று துரிதப்படுத்திக் கொண்டிருக்க, அவ்வப்போது மாலையை அணிவித்துக் கழட்டிக் கொண்டிருந்தான். இளைஞன் பால்ராஜை அடையாளம் கண்டு கொண்டு, “என்ன பால்ராஜ் எத்தனாவது தடவை தரிசனம் ?”

“தொண்ணூறுங்க ! அய்யா ..... அமெரிக்காவிலிருந்து வந்திருக்காரு”

“அமெரிக்காலருந்து நிறைய பேர் வரா ! வாங்கம்மா கிட்ட பாருங்கோ ” என்று பாகீரதியை அருகே அழைக்க .......

பாகீரதி அந்தக் கணத்தில் தன் சகல கட்டுப்பாடுகளையும் இழந்து கண்ணீர் உதிர்க்க, புடவை மேல் பட்டுத் தெறித்தது.

“பரமாச்சார்யாள் கிட்டே சொல்லுங்கோ. இந்த க்ஷணத்துக்குத்தான் பத்தாயிரம் மைல் கடந்து வந்திருக்கோம். மேம்போக்கா இவர் குதர்க்கம் பேசினாலும் உள்ளுக்குள்ளே இவருக்கும் நம்பிக்கைதான்.

ஒரே பிள்ளை. பாலாஜின்னு பேர் வச்சோம். 12 வயசு வரைக்கும் சமத்தா வளர்ந்தான். பாழாப்போன அமெரிக்காவில அப்பாவுக்கும் பிள்ளைக்கும் சரிப் படாம வாக்குவாதம் வந்து வீட்டை விட்டுப் போய்ட்டான் !

உலகம் பூரா தேடியாச்சு. நேபாள், சிலோன், ஜப்பான், எல்லாம் தேடியாச்சு. ஆக்சிடெண்டில போய்ட்டானா, செத்துப் போய்ட்டானா, இருக்கானா…. ? எம்புள்ளை போய்ட்டான். நிம்மதியே இல்லை. இன்னி வரைக்கும் !”

“பரமாசார்யாளைத் தரிசனம் பண்ணிக்குங்க. சார் நீங்களும்தான் சார்.”

அந்த இளைஞன், அருகில் சென்று அவர் காதுடன் சொல்ல, ஸ்ரீமஹா பெரியவா கைகளை உயர்த்தி வாழ்த்தினார். பாகீரதியின் நெஞ்சு நிறைந்தது.

காட்டராக்ட் கண்ணாடி வழியாகப் பெரிய கண் ஒன்று அவளைப் பார்த்தது.

ஆப்பிள் பழத்தையும் ரோஜாவையும் கொடுத்த அந்த இளைஞன், “எல்லாம் சரியாய்ப் போய்டும். கவலைப்படாதீங்கோ.

பையன் பேர் என்ன சொன்னேள் ?”

“பாலாஜி.”

அவர்கள் வெளியே வந்தனர்.

சிவசங்கர் கோபமாக, “ஏன் சின்னக் குழந்தை மாதிரி அழறே ?” “சினிமாவில வர மாதிரி உன் பிள்ளை வருவான்னு நினைச்சியா !

அவள் அடங்காமல் அழுதாள்.

“பாகீ ! பாகீ ... டோன்ட் பி சில்லி. டோன்ட் மேக் எ ஸீன் ! கமான் !” அவளைத் தோளில் பற்றி, பரிவு என்பதன் முதல் அடையாளம் சற்றே தெரிய நடத்தி அழைத்துச் சென்றார். பின்னால் குரல் கேட்டது. மடத்து சிப்பந்தி ஒருவர் ஓடி வருகிறார். '' மாமி மாமி, பெரியவா உங்க கிட்ட யாரையோ அனுப்பியிருக்கா "'

யார்?

ஒரு கட்டுக்குடுமிக்காரர் ஒருவர் ஒரு இளம் வாலிபனுடன் வந்தவர் '' டேய் பாலாஜி நேத்திக்கி பெரியவா சொன்னாளே இன்னிக்கி வருவான்னு ''இவா தானே அது -

''எங்க அப்பா அம்மா தான் வந்திருக்கா !”

இதற்கு மேல் எழுதுவது அர்த்தமில்லை. இதயமும் மனமும் தானே எழுதிக் கொள்ளும்...
--------------------------------------------------------------------------------
படித்து நெகிழ்ந்தது!
அன்புடன்
வாத்தியார்
===============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.3.19

அந்தக் காலத்தைப் பற்றி சுஜாதா அசத்தலாகச் சொன்னது!!!


அந்தக் காலத்தைப் பற்றி சுஜாதா அசத்தலாகச் சொன்னது!!!

1. கிழிந்த dressஐ தைத்து போட்டது அந்தகாலம், தைத்த dessஐ கிழித்து போடுவது இந்தகாலம்..

*சுஜாதாவை தவிர வேறு யார் இப்படி எழுத முடியும்*

அந்தக் காலம் தான் நன்றாக இருந்தது....!

2. ஒரு முறை ரேடியோவில் கேட்டாலே சினிமாபாட்டு மனப்பாடம் ஆச்சு

3. பேருந்துக்குள் கொண்டுவந்து மாலைமுரசு விற்பார்கள் .,

4. மிதி வண்டி வைத்திருந்தோம்.,

5. எம் ஜி ஆர் உயிரோடு இருந்தார்.

6. ரஜினி, கமல் படம் ரிலிஸ்.

7. KB படங்கள் என்றால் ஒரு மாதம்அலசுவோம்

8. எந்த நிறுத்தத்தில் ஏறினாலும் உட்கார இடம் கிடைக்கும் பேருந்தில்.

9. கல்யாண வீடுகளில் பந்திப் பாய் போட்டு சாப்பாடு

10. கபில் தேவின் கிரிக்கெட். FANTASTIC 5 நாள் MATCH

11. குமுதம், விகடன் நேர்மையாக இருந்தது.

12  எல்லா வீடுகளிலும், ரேடியோவிலும், கேசட்டிலும் பாடல் கேட்பது சுகமானது

13. வீடுகளின் முன் பெண்கள் காலையில் கோலமிட்டார்கள்,
மாலைப் பொழுதுகளில் வீட்டின் முன் அரட்டை அடிப்பார்கள்

14. சினிமாவுக்கு செல்ல 2 நாளைக்கு முன்பே திட்டமிடுவோம்

15. தீபாவளி பண்டிகையை கொண்டாட ஒரு மாதத்துக்கு முன்பே  தயாராவோம்

16. புது SCHOOL UNIFORM தான் சிலருக்கு DEEPAWALI DRESS

17. டான்ஸில் ஆபரேஷன்தான் பெரிய ஆபரேஷன் நிறையப் பேர்கள் பண்ணிக் கொண்டார்கள்

18. வானொலி நாடகங்களை ரசித்து கேட்டோம்.,

19. எல்லோரும் அரசு பள்ளிகளில் படித்தோம்.,

20. சாலையில் எப்போதாவது வண்டி வரும்.,

21. மழை நின்று நிதானமாக பொழியும்

22. தமிழ் ஆசிரியர்கள் தன்நிகரற்று விளங்கினர்.,

23. வேலைக்கு போகாதவன் எந்த குடும்பத்திற்கும் பாரமாயில்லை.,

24. எளிதில் மணப்பெண் கிடைத்தாள்.,

25. வெஸ்ட் இன்டீசை  வெல்லவே முடியாது.,

26. சந்தைக்கு போக பத்து ரூபாய் போதும்.,

27. அம்மா பக்கத்தில் உறங்கினோம்

28. கொளுத்தும் வெயிலில் செருப்பு இல்லாமல் நடந்தோம்

29. முடி வெட்ட இரண்டு ரூபாய்தான்.,Shaving 50 பைசா

30. பருவப் பெண்கள் பாவாடை தாவணி உடுத்தினர் - ,சிலிண்டர் மூடுதுணி போல்  யாரும் நைட்டி அணிய வில்லை.,

31. சுவாசிக்க காற்று இருந்தது., குடிதண்ணீரை யாரும் விலைக்கு வாங்க வில்லை.,

32. தெருவில் சிறுமிகள் பல்லாங்குழி ஆடுவார்கள். அவர்களை கலாய்த்துகொண்டே  நாங்கள் நுங்கு வண்டி ஓட்டுவோம்.,

33. டாக்டர் வீட்டுக்கே வருவார்

34. காதலிப்பது த்ரில்லிங்கா  இருந்தது

35. சினிமா பாட்டு புத்தகம் கிடைக்கும்

36. மயில் இறகுகள் குட்டி போட்டன...புத்தகத்தில்.,

37. ஐந்து ரூபாய் தொலைத்ததற்கு அப்பாவிடம் அடி வாங்கினோம்..,

38. மூன்றாம் வகுப்பிலிருந்து  மட்டுமே,ஆங்கிலம்.,

39. ஐந்தாம் வகுப்பு வரை அரைக்கால் டவுசர்.,

40. மொத்தத்தில் மரியாதை இருந்தது..

தொலைந்து போனவை நம் நாட்கள் மட்டுமல்ல.,நம் சுகங்களும்தான்..,

படித்ததில் மனதை உருக வைத்தது....
அன்புடன்
வாத்தியார்
====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.2.19

எழுத்தாளர் சுஜாதாவின் காபி கதை!

எழுத்தாளர் சுஜாதாவின் காபி கதை!

காபி புராணம் ஒரு பெரிய புராணம்தான்! சேக்கிழார் எழுதியதல்ல!👍👍

எழுத்தாளர் சுஜாதாவின்  காபி கதை

பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு ( காஃபி வித் காப்பி)
--------------------------------------------
ஏண்ணா.. பால் பாக்கெட் போட்டுட்டான்னானு பாருங்கோ..

இல்லையேடி.. எல்லார் ஆத்துலேயும் போட்டுட்டு கடைசில தான் நம்மாத்துக்கு வர்றா..

அறுபது வயதிற்கு மேற்பட்ட தமிழ் நாட்டு பிராமணர்களின் வயிற்றிற்கு எரி பொருள் காப்பி தான்.. கார்த்தால ஒரு தடவை . அதே
போல் மத்யானம் மூணு மணிக்கு ஒரு தடவை. ஒரு வாய் காபி உள்ளே போனால் தான் அன்னிக்கு வேலையே நடக்கும். குறிப்பாக
ஆண்களுக்கு.

காபி அதுவும் முதல் டிகாக்ஷனில் போட வேண்டும். இரண்டு டைப் பீபரி கொட்டைகளையும் சம அளவு மிக்ஸ் பண்ணி , சிலருக்கு
சிக்ரியுடன், சிலருக்கு இல்லாமலேயும் சுட சுட அரைச்சு வாங்கணும்.. எவர்சில்வர் பில்டரில் குறைந்த பட்சம் மூணு ஸ்பூன் காபி பொடிய அமுக்கி போடணும்.. சிறிய ஜாலி மூடி போன்ற ஒன்றை கொண்டு மேலும் அமுக்கி விடணும். தள தள வென வெந்நீர் கொதித்தவுடன் , நேரே விடாமல் போக வர சுற்றி விட வேண்டும். 'ணங்' என்று செல்லமாக பில்டர் மூடியால் ஒரு தட்ட வேண்டும்.

அதிகமாய் தட்டி விட கூடாது. அப்போது தான் சொட்டு சொட்டாக டிகாக்ஷன் ஸ்ட்ராங்கா விழும். கொஞ்சம் கூட தட்டி
விட்டாலோ , பொடி அமுக்கா விட்டாலோ டிகாக்ஷன் நீர்த்து போய்விடும்.

அந்த கால கூட்டு குடும்பங்கள் , பெரிய சம்சாரிகள் வீட்டில் இரண்டாவது டிகாக்ஷன் தான் எல்லாம். முதல் டிகாக்ஷனில் குடும்ப
தலைவருக்கு மட்டும் ரகசியமாக தயாரிக்கபடும். இன்றைய காஃபி மேக்கர்களெல்லாம் ஃபில்டருக்கு இணையாகாது.

பழைய திரைப்படங்களில் 'பிறாமணாள் காபி க்ளப்' என்ற போஸ்டரை அதிகம் பார்க்க முடியும்

சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பு எங்கள் ஸ்ரீரங்கம் ரெங்க பவன் ஹோட்டல் காப்பி மிகவும் பிரசித்தம்..அவர்களே கூட
பிரத்யேகமாக ரெங்கநாயகி காபி என்று ஒரு கடை வைத்து இருந்தார்கள்..எனது சீனு மற்றும் ராமநாதன் பெரியப்பாக்கள்
வெளியூரிலிந்து வருபவர்கள் .டவுன் பஸ்ஸில் இருந்து இறங்கி ரங்க பவனில் ஃபர்ஸ்ட் கிளாஸ் காப்பி கொடுத்தாம்பா என்று
ஸ்லாகிப்பதை கேட்டு இருக்கிறேன். ஒரு சிறிய டபராவின் உள்ளுக்குள்ளே சூடு இறங்காமல் இருப்பதற்காக ஒரு குட்டி டம்ப்ளரை கவுத்து காபியை கொடுக்கும் வழக்கம் இன்றும் பல ஊர்களில் இருக்கின்றது.. மிக ஜாக்கிரதையாக அதை பிரித்து டபராவில் கொட்டி ஆற்ற வேண்டும். இல்லையெனில் மேலே சிந்தும் அபாயம் உண்டு. இன்றைக்கு ஸ்ரீரங்கத்தில் காந்தி சிலை அருகே முரளி கடை ஒன்றில் தான் காபி சொல்லி கொள்ளும்படியாக இருக்கிறது .

காப்பி போடுவது என்பது ஒரு கலை. ரொம்பவும் பால் இருக்க கூடாது. ரொம்பவும் கறுத்து போய் விட கூடாது. ஓரிரண்டு முறை
பெரிதாக ஆற்ற வேண்டும். நல்ல சூடு அதன் சிறப்பு.. நுரை வந்து அதை பார்ப்பதே ஒரு அழகு .அளவாக சர்க்கரை போட
வேண்டும்.இந்த சுகர் ஃப்ரீ மாத்திரைகள் எல்லாம் அதன் சுவையை மங்க செய்து விடும். ஒரு மிதமான கசப்பு தான் அதன்
தனித்துவம். முக்கியமாக, குடித்த பிறகும் நாக்கில் அதன் சுவை ஒரு மணி நேரத்திற்காவது தங்க வேண்டும்.சில பிரகிருதிகள்
அதனுடன் சேர்ந்து மருந்து மாத்திரையை எடுத்து கொள்ளும்போது , ரசனை கெட்ட ஜென்மங்கள் என்று சொல்ல தோன்றும்.

காலையோ , மதியமோ பரபரப்பு இல்லாமல் குடிக்க வேண்டும்.

ம்..' மேலே படிக்க போறானா இல்லை வேலைக்கு போக போறானா?; ', என்ன இருந்தாலும் அவா சுப்பிணியை கல்யாணத்துக்கு
கூப்பிடாதது தப்பு தான்' - இப்படி சில வம்பு சம்பாஷனைகளையும் சேர்த்து கொண்டால் காப்பி கூடுதல் சுவையுடன் இருக்கும்.

இதெல்லாம் மிடில் கிளாசுக்கு தான். கொஞ்சம் வசதி இருந்தால் போர்ன்விட்டா,ஓவல்டின் என்று தடம் மாறி விடுவார்கள்.
அப்படியே காப்பி சாப்பிட வேண்டி இருந்தால் , பையன் கறுப்பாகி விடுவானோ என்ற பயத்தில் அம்மாக்கள் நிறைய பால் விட்டு
வெள்ளை காப்பி ஆக்கி விடுவார்கள்.. அவன் படித்து விட்டு பின்னாளில் இஞ்சினியர் ஆகி ராமகுண்டத்தில் இருந்து கறு கறு
என்று வருவான் என்பது வேறு விஷயம் .

காப்பியை டம்ளர் டபராவில் குடித்தால் தான் அது ருசிக்கும்.. இந்த கப் அண்ட் சாசர் எல்லாம் டீ யிற்கு வேண்டுமென்றால் சரியாக
இருக்கலாம், காபிக்கு அல்ல.. திருச்சியில் பத்மா கபே என்று ஒரு ஓட்டல் உண்டு. ஆர் ஆர் சபா சமீபம் . அங்கே இன்ன பிற
அயிட்டங்கள் இருந்தாலும் , அதன் காபிக்கு தான் மவுசும் கூட்டமும்...பிற்காலத்தில் திருச்சியில் அபிராமி , காஞ்சனா போன்ற
ஹோட்டல்களில் ஓரளவு தரமான காப்பி கிடைத்து வந்தது..

இந்த ப்ரு, நெஸ்கா ஃ பே எல்லாம் ஹனி மூன் தம்பதியரின் அசதிக்கும் , விளம்பரத்துக்கும் மட்டும் தான் சரியாக வரும்.

திடீர் என்று ஒரு நாள் எங்கள் மாரீஸ் தியேட்டரில் இடைவேளையின் போது புஸ் புஸ் என்று சத்தம் போட்டு ஒரு இரும்பு
கம்பிக்குள் காப்பி கப்பை செலுத்தினார்கள்.. நிறைய நுரையுடன் பாலாக ஒரு காபி வந்தது. எஸ்ப்ரெசோ என்று அழைத்தார்கள்.

ஆர்வ மிகுதியில் உடனே குடிக்க போக சூட்டில் நாக்கு பற்றி கொண்டது.

சென்னையில் தி நகர் பஸ் நிலையம் அருகில் இந்தியா காப்பி ஹவுஸ் என்று ஒரு கடை இன்றும் இருக்கிறது..ஒரு காலத்தில் புகழ்
பெற்றது.அங்கே ரயில்வே ஐ ஆர் ஆர் போல வெள்ளை பீங்கான் கப்பில் தான் காப்பி . ஆனால் சகாய விலையில் கிடைக்கும்.

நீரிழிவு நோயாளிகளை கேட்டு பாருங்கள் . காலையில் வெறும் வயிற்றில் ரத்தம் கொடுக்க க்யூவில் நின்று ஒரு மணி நேரத்திற்கு
பிறகு ஒரு காப்பி குடித்தவுடன் அவர்களுக்கு கிடைக்கும் நிம்மதி சொல்லி மாளாதது..

அதிகமாக காபி விளையும் கர்நாடகாவில் கூட காபியின் சுவை என்னை பொறுத்தவரை சுமார் தான். உடுப்பியும் , காமத்தும் ஓரளவு சொல்லி கொள்ளும்படியான ஹோட்டல்களாக இருந்தாலும் , நம்ம ஊர் கும்பகோணம் டிகிரி காப்பிக்கு நாக்கை அடகு
வைத்தவர்களால் ஒருவித தயக்கத்துடன் தான் அவைகளை ஏற்று கொள்ள முடியும் ..

கல்யாணங்களில் காபியின் தரம் என்பது திருமண உறவையே அசைக்கும் வல்லமை பெற்றது.

சுடு தண்ணி சுடு தண்ணி என்று திட்டிக்கொண்டே எல்லோரும் ரயிலில் வரும் காப்பியை குடிப்பது தவிர்க்க முடியாதது..ஒரு
காலத்தில் மாயவரம் ரயில்வே ஸ்டேஷனில் தரமான காப்பி கிடைக்கும் என்று பெரியவர்கள் சொல்ல கேட்டு இருக்கிறேன்.

தலையெழுத்தே என்று குடிக்கும் காப்பி என்றால், இரண்டை சொல்லலாம் ஒன்று விமானங்களில் கொடுக்கப்படுவது. .மற்றொன்று ஐந்து நட்சத்திர ஹோட்டல் ரூம்களில் நாமே கெட்டில் பயன்படுத்தி தயாரிப்பது.. விமானங்களில் ஒரு முழு கப்பிற்கு டிகாக்ஷன் கொடுத்தாலும் , ஒரு குட்டி குமிழிலிரிந்து சொட்டு பாலை கலப்பதற்குள் ஆறி தொலைத்து விடும்..மற்றொன்று பால் பவுடர்
வகையை சேர்ந்தது.

ஹௌ ஆர் யு டூயிங் டுடே என்று கூறி அறிமுகமில்லாதவரிடமும் சிரித்தால் , அது அமெரிக்கா..

மில்க் ?..

நோ தேங்க் யூ…

ஒரு குண்டு பீப்பாய்காரி உங்கள் ஆர்டரையும் , பெயரையும் ஸ்கெட்ச் கொண்டு ஒரு பெரிய பேப்பர் கப்பில் எழுதி காப்பி தயாரித்து கொடுத்தால் அது ஸ்டார் பக்ஸ்.. கை சுடாமல் இருப்பதற்காக ஒரு பேப்பர் மேலுறையை நீங்கள் சொருகி கொண்டு மேலுக்கு ஒரு மூடியை எடுத்து கொள்ள வேண்டும் .

எவ்வளவு தான் காபி புராணம் பாடினாலும், வீட்டில் மனைவி தரும் காபிக்கு இன்னொரு கூடுதல் சிறப்பும் உண்டு .

'டொங்க்' என்று டம்ப்ளரை கீழே வைக்கும் வேகத்தில் அன்றைய நாள் ராசி பலனை தெரிந்து கொண்டு விடலாம்
-------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.1.19

சுஜாதாவின் மருத்துவமனை அனுபவம்!!!!!


சுஜாதாவின் மருத்துவமனை அனுபவம்!!!!!

உடல் நலம் குன்றிய போதும் எழுதுவதற்கு எழுத்தாளர்  சுஜாதாவால் மட்டுமே முடிந்திருக்கிறது!!!!.

சுஜாதாவின் ஹாஸ்பிடல் அனுபவம் :

ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆக விரும்புபவர்களுக்கு என் பரிந்துரைகள்...

முடிந்தால் அட்மிட் ஆவதை தவிர்க்கவும். அப்படி தவிர்க்க இயலவில்லை என்றால், எத்தனை சீக்கிரம் வெளிவர முடியுமோ வந்துவிடவும். ஓர் உபாதைக்காக அட்மிட் ஆகி உள்ளே போனதும், அப்படியே மற்ற உபாதைகள் உள்ளனவா என்று பார்த்து விடலாம் என்று யாராவது அல்லக்கை யோசனை சொன்னால் பெரிய எழுத்தில் 'வேண்டாம்...!' என்று சொல்லி விடுங்கள் . முடிந்தால் அலறவும். இல்லையேல் மாட்டினீர்கள். எல்லா டாக்டர்களும் நல்லவர்கள். திறமைசாலிகள்.

சிக்கல் என்னவென்றால் அவர்கள் திறமைசாலிகளாக இருக்கும் அவயவங்கள் வேறுபடும். கிட்னி ஸ்பெஷலிஸ்ட், கிட்னியையே கவனிப்பார். ஹார்ட், ஹார்ட்டையே. சுவாச நிபுணர் சுவாசத்தையே..! யாராவது ஒருவர் பொதுவாக பொறுப்பேற்று செய்யாவிடில் அகப்படுவீர்கள்.

ஒவ்வொரு டாக்டரும் சிற்றரசர்கள் போல குட்டி டாக்டர் புடைசூழ வருவார்கள். மொத்தம் ஒரு நிமிஷம் நம் படுக்கை அருகே நிற்பார்கள். அன்று அதிர்ஷ்ட தினம் எனில் ஏறிட்டு பார்ப்பார்கள். இல்லையேல் தலைமாட்டில் இருக்கும் சார்ட்(chart) தான்.

"ஹவ் ஆர் யூ ரங்கராஜன் ?" என்று மார்பில் தட்டுவார் சீனியர். குட்டி டாக்டர் தாழ்ந்த குரலில் கிசுகிசுப்பார்.

"ஸ்டாப் லேசிக்ஸ்..இன்க்ரீஸ் ட்ரெண்டால்..!" என்று கட்டளையிட்டுவிட்டு கவுன் பறக்க கடவுள் புறப்பட்டு விடுவார்.

அடுத்து,அடுத்த ஸ்பெஷலிஸ்ட் வந்து குய்யோமுறையோ. "யார் லேசிக்சை நிறுத்தியது..?"...இவர்கள் இருவருக்கும் பொதுவாக வார்ட் சிஸ்டர் எனும் பெரும்பாலும் மலையாளம் பேசும் அப்பிராணி.

ஆஸ்பத்திரி என்பது மிகுந்த மனச்சோர்வு அளிக்கும் இடம்.

 சுற்றிலும் ஆரோக்கியர்கள் காபி, டிபன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, நாம் மட்டும் கண்காட்சி பொருள் போல படுத்திருக்க, கண்ட நேரத்தில் கண்டவர் வந்து கண்ட இடத்தில் குத்தி ரத்தம் எடுத்து, க்ளுக்கோஸ் கொடுத்து , பாத்திரம் வைத்து மூத்திரம் எடுத்து, ஷகிலா ரேஞ்சுக்கு உடம்பெல்லாம் தெரியும்படி நீல கவுன் அணிவித்து ...ஆஸ்பத்திரியில் நிகழ்வது போன்ற மரியாதை இழப்பு மந்திரியின் முன்னிலையில் கூட நிகழாது...!

படித்தேன்: பகிர்ந்தேன்!!!!
அன்புடன்
வாத்தியார்
=================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.1.19

சிகரெட் பற்றிய சுஜாதாவின் சுவாரஸ்யமான கட்டுரை!!!!


சிகரெட் பற்றிய சுஜாதாவின் சுவாரஸ்யமான கட்டுரை!!!!

சுஜாதா அவர்களின் புகை பிடிக்கும் பழக்கம் - ஒரு சிகரெட் எழுதும் கட்டுரை (pressbooks என்ற வலைமனையில் வந்த ஒரு சுவாரஸ்யமான பதிவு) .

சுஜாதா ஒரு ஸ்மோக்கர் என்பதும், அந்தப் பழக்கத்தை உதறியும், வருடக் கணக்கில் நிறைய புகைத்ததின் காரணமாகவே மூச்சுத் திணறல் ஏற்பட்டு (வேறு பல உபாதைகள் இருந்திருந்தாலும்) அவர்
நம்மைவிட்டு சீக்கிரமே பிரிந்த சோகமும் நிகழ்ந்தது....இதை ஒரு சிகரெட் (தன்மை ஒருமையில்) கூறினால் எப்படி இருக்கும் என்ற நோக்கில் அமைந்தது இந்தக் கட்டுரை....

சுஜாதாவின் காதல்கள்:

ப்ளேயர்ஸ், கோல்டு ப்ளேக், வில்ஸ் ஃபில்டர் என என் மூன்று வடிவங்களை அடுத்தடுத்து காதல் செய்த  எழுத்தாளர் சுஜாதாஅவர்கள் என்னை பிரேக்-அப், அதாங்க கழட்டி விட்டதன் இரகசியம் பற்றி என்ன  கூறி இருக்கிறார் என பாருங்கள்.

“பற்ற வைப்பதற்கு முன் ஒரு நிமிஷம்..!” என்ற தலைப்போடு, கற்றதும் பெற்றதும் பகுதியில் 29.12.2002 ஆனந்தவிகடனில் அவர் என்ன எழுதியிருக்கிறார் என்று! நீங்கள் என்னை விட்டு விட உங்களுக்கு மிகவும் உதவிகரமாய் இருக்கும்.

=========================

இனி சுஜாதா (அவருடைய வார்த்தைகளில்)  .....

“மூச்சு ஆராய்ச்சி நிறுவனம் (ரெஸ்பிரேட்டரி ரிசர்ச்ஃபவுண்டேஷன்) சென்னை வடகிழக்கு ரோட்டரி சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், டாக்டர் நரசிம்மன் அவர்கள்
கிரானிக்அப்ஸ்ட்ரக்டிவ் பல்மனரி டிசீஸ் (C.O.P.D- பிடிவாதமான சுவாசத்தடை வியாதி) மனிதனைக் கொல்வதில், மூன்றாவது இடத்திற்கு வந்திருக்கிறது என்று சொன்னார். இதய நோய், புற்றுநோய் போன்றவை மெள்ள மெள்ள குறைந்து வரும்போது ஸி.ஓ.பி.டி முதலிடத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறதாம்.

இந்தக் கூட்டத்தில் புகைப்பதை கைவிடுவது எப்படி என்கிற தலைப்பில் உரையாற்ற அழைத்திருந்தார்கள். இதற்கு நான் தகுதியான ஆள்தான். 1986 வரை ஒரு நாளைக்கு பாக்கெட் சிகரெட்
– ப்ளேயர்ஸ், பிறகு கோல்டு ப்ளேக், இறுதியாக வில்ஸ் ஃபில்டர் பிடித்தவன். அதை ஒரே நாளில் கைவிட்டவன்.

சிகரெட் பழக்கம் தற்செயலாகத்தான் ஏற்படுகிறது. குறிப்பாக வீட்டில் கட்டுப்பாடாக வளர்ந்த இளைஞர்கள் அதை ஒருவிதமான defiance (எதிர்ப்பு காட்டும் மனப்ப்பான்மை) ஆகப் பழகிக் கொள்கிறார்கள். ஸ்ரீரங்கத்தில் குடுமி வைத்துக்கொண்டு
பிரபந்தம் சொல்லிக்கொண்டிருந்த நண்பன் வேலை கிடைத்து, டெல்லி வந்து குடுமியை நறுக்கிய கையோடு மகாவிஷ்ணு
சங்கு சக்கரம் போல் கையில் ‘பனாமா’ பற்றவைத்துக் கொண்டான். ரிட்டயட் ஆனப்புறம்தான் நிறுத்தினான்.

இக்கால இளைஞர்கள் பெண் சிநேகிதிகள் முன்னால் ஸ்டைலாக சிகரெட் பற்றவைத்து ஒரு இழுத்து

இழுத்து விட்டுப் பேசிக் கொண்டே வார்த்தை வார்த்தையாக புகையை வெளிவிடுவது ரொம்ப ஸ்டைலாக இருக்கும். சில காதலிகளும் இதைக் கல்யாணம் வரை விரும்புவார்கள். பிள்ளை பிறந்ததும் அதன் தலைமேல் சிகரெட் புகை வாசனை வரும்போது பழக்கத்தை கைவிட்டே ஆகவேண்டும். இல்லையேல் சுளுக்கு.

என் சிகரெட் பழக்கம்… எம்.ஐ.டி. (M.I.T) ஹாஸ்டலில் வெள்ளிக்கிழமை மெஸ்ஸில் டின்னர் கொடுக்கும்
போது ஒரு 555 சிகரெட் தருவார்கள். அப்போதெல்லாம் அதன் விலை நாலணா. அதை நண்பனிடம் கொடுத்து அவன் புகை வளையம் விடுவதை வேடிக்கை பார்ப்பேன். ஒரு நாள் நாமே குடித்துப்
பார்க்கலாமே என்று தோன்றியதில் பழக்கம் ‘பச்சக்’ என்று ஒட்டிக்கொண்டது.

சிகரெட் பழக்கம் ஒரு சனியன். லேசில் நம்மை விடாது. ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் என்னுடன் அது இருந்தது. சில சமயம் சிகரெட் பிடிப்பதற்காகவே எதையாவது சாப்பிடுவேன். கொல்லைப்புறம்
போவதற்கு சிகரெட் பிடித்தாக வேண்டும்.

சாப்பிட்டவுடன் கட்டாயம் பிடிப்பேன். சிந்தனா சக்தி வேண்டும் என்று வெத்து காரணம் சொல்லி பற்றவைத்து விரலிடுக்கில் வைத்து சாம்பலை சொடுக்குவேன். இதனால் பல சுவைகளை, வாசனைகளை இழந்தேன். இவ்வாறு அது என்னை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்த போது அவ்வபோது ‘ச்சே’
என்று தோன்றி நிறுத்திவிடத் தீர்மானிப்பேன். ஒவ்வொரு புதுவருஷமும் தவறாத வைராக்கியமாக சிகரெட்டை நிறுத்துவேன். அது சில சமயம் பிப்ரவரி வரி நீடிக்கும். சில சமயம் ஜனவரி 2ம் தேதி வரை. பெங்களூரில் ஒரு முறை செக்கப்புக்கு போனபோது டாக்டர் பரமேஸ்வரன் “ரங்கராஜன், நீ சிகரெட் பழக்கத்தை கைவிட வேண்டும்” என்றார்.

“ஏன்?’ என்றேன். ‘உன் ஹார்ட் சரியில்லை” என்றார்.

“எப்போதிலிருந்து விட வேண்டும்? என்று கேட்டதற்கு ‘நேற்றிலிருந்து” என்றார். “கைவிடாவிட்டால் என்ன ஆகும்?” என்றேன். “ஹார்ட் அட்டாக்… லங்கேன்சர்.. யூ ச்சூஸ்.. நீதான் எத்தனையோ படிக்கிறாயே… உனக்கு சொல்ல வேண்டுமா?”

இந்த முறை பயம் வந்து விட்டது. ஞாபகம் வைத்துக் கொள்வதற்குத் தோதாக ஆகஸ்ட் பதினைந்தைத் தேர்ந்தெடுத்து பெல்காலனி தெருநாய் ஜிம்மி உள்பட அனைத்து நண்பர்களிடமும், “நான் சிகரெட்டை  நிறுத்திவிட்டேன்” என்று அறிவித்தேன். இது முக்கியம். யாராவது நான் புகைபிடிப்பதை பார்த்தால் உடனே உலகத்துக்கும் மனைவி மக்களுக்கும் தகவல் சொல்லிவிடும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தினேன்.

சிகரெட் பழக்கம் என்பது பைனரி இதைத் தெளிவாக உணரவேண்டும். ஜாதிகள் இரண்டொழிய வேறில்லை. – சிகரெட் பிடிப்பவர், பிடிக்காதவர், அவ்வளவுதான். குறைவாக பிடிப்பவர்… எப்போதாவது பிடிப்பவர்… இதெல்லாம் ஏமாற்று வேலை. கைவிடுவதாக இருந்தால் முழுவதும் கைவிட வேண்டும்.

இருபது சிகரெட்டிலிருந்து பத்து, பத்திலிருந்து 8 என்று குறைப்பதெல்லாம் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வது. முதல் தினம் நரகம். முதல் வாரம் உபநரகம். சிகரெட் இல்லாமல் உலகமே பாழாகி இருக்கும்… இந்த இம்சை தேவையா என்ற ஏக்கத்தைச் சமாளிக்க நிறைய ஐஸ்வாட்டர் குடிக்க வேண்டும். சிகரெட்டுக்கு பதிலாக பாக்கு, பான்பராக்என்று புகையிலையின் எந்த வடிவமும் கூடாது.

வேறு ஏதாவது வேலையில் கவனம் செலுத்துவது உத்தமமானது. நீங்கள் விட்டுவைத்த புல்புல்தாரா வாசிப்பது, இயற்கை காட்சிகளை வரைவது, கவிதை எழுதுவது போன்ற பயனுள்ள பொழுது போக்குகளைத் தொடரலாம்.

உதடுகளில் லேசாக நடுக்கம் ஏற்படும் போதெல்லாம் குளிர்ந்த தண்ணீர் குடித்துவிட்டு "யார் தெச்ச சட்டை… எங்க தாத்தா தெச்ச சட்டை… தாத்தா தெச்சசட்டை சட்டைப்பைல பாத்தா ரெண்டு முட்டை” என்று தொடர்ந்து சொல்ல வேண்டும். பக்கத்தில் இருப்பவர்கள் புகார் செய்தால், “ஒரு வாரம் அப்படித்தான் இருக்கும்” என்று அவர்கள் மேல் பாயலாம். யாரையாவது அடிக்க வேண்டும் போல இருக்கும். அதற்கு வசதியில்லையென்றால் ஒரு மேளம் வாங்கிக் கொள்ளுங்கள்… கூடவே  உதைப்பதற்கு ஒரு கால்பந்தும், சுழற்ற ஒரு சாவிச் சங்கிலியும் வைத்துக் கொள்ளலாம். (கண்
ஜாக்கிரதை) ஒரு வாரமானதும் பழக்கம் லேசாக வாலைச் சுருட்டிக் கொள்ளும். நாட்களை எண்ணத் துவங்கலாம். தமிழ்ப்படங்கள் போல வெற்றிகரமான பத்தாவது நாள்… இன்று பதினைந்தாவது நாள்..சூப்பர்ஹிட் ஐந்தாவது வாரம்.. இப்படி, மெள்ளமெள்ள நண்பர்களிடம், மனைவியிடம் பீற்றிக் கொள்ளத் துவங்கலாம். போஸ்டர் கூட ஒட்டலாம். ஆனால், இந்தக் கட்டத்தில் சிகரெட் குடிக்கும் நண்பர்கள் அருகே செல்வதும் மிதப்புக்காகப் பையில் குடிக்காமல் சிகரெட்வைத்துக் கொள்வதும் விஷப் பரீட்சைகள்.

பழக்கத்தை விட்ட நாற்பத்தெட்டாவது நாள் முதல் மைல்கல் தாண்டி விட்டீர்கள். ஒரு சிகரெட்டை எடுத்து அதைப் பற்ற வைக்காமல் மூக்கில் ஒட்டிப்பார்த்து விட்டு ‘ச்சீ நாயே’ என்று சொல்ல முடிந்து,

அழுகை வராவிட்டால் பரீட்சையில் பாஸ். இனியெல்லாம் சுகமே.

சிகரெட் பழக்கம் நம்முடன் அஞ்சு வருஷம் தேங்குகிறது என்று டைம் பத்திரிக்கையில் படித்தேன்.

அதாவது சிகரெட்டை நிறுத்துன அஞ்சு வருஷத்துக்குள் ஒரு சிகரெட் பிடித்தாலும் மறுதினமே பழைய ஞாபகம் உசுப்பப்பட்டு பத்தோ, இருபதோ வழக்கமான கோட்டாவுக்கு போய்விடுவீர்கள். அஞ்சு வருஷம் தாண்டிவிட்டால் பழக்கம் போய்விடுகிறது.”

நன்றி: ஆனந்த விகடன்

மனுஷன் பெரிய ஆளுதான். எல்லாவற்றையும் சரியாக ஆராய்ச்சி செய்து கன கச்சிதமாய் எழுதியிருக்கிறார். அவர் சொன்னதையெல்லாம் இன்னும் விரிவாகச் சொல்லி உங்களுக்கு
உதவப்போகிறேன், அவ்வளவுதான்! என்னையும், தன்னையும் உணர்ந்த மனிதர்!

--இப்படிக்கு சிகரெட் (உங்களுக்கு பிடித்த ப்ராண்ட் பெயரை சேர்த்துக் கொள்ளுங்கள்)
------------------------------------------------------------------
படித்ததில் இரசித்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.9.18

மறுபடியும் சுஜாதா



மறுபடியும்  சுஜாதா

அம்பலம் இணைய இதழில் சுஜாதா எழுதிய நறுக் சுருக் கேள்வி பதில்கள்!.

சுஜாதா சார்!  கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர் என்று பேசுகிறீர்களே... கொஞ்சம் சாப்பாட்டைப் பற்றிப் பேசலாமே. உங்கள்  கணிப்பொறி
நிறுவனத்தில் கேன்டீன் எப்படி? -எம்.பரிமளா, சென்னை.

*கணிப்பொறி, கேன்டீன்  இரண்டிற்கும் அடிக்கடி ஒரே பிரச்சினைதான் : ‘‘சர்வர் ப்ராப்ளம்*’’.

##################

திருமணத்திற்கும் மரபுக் கவிதைக்கும் என்ன சார் தொடர்பு?
-ஏ.ஆர்.மார்ட்டின், திருமானூர்.

*இரண்டிலும் சீர் உண்டு. திருமணமும் ஒரு ‘தளை’தானே? இரண்டும் வளமடையத் தேவை. ‘பொருள்’தான். இரண்டிலும் வெற்றி
பெற நன்கு யோசித்து ‘அடி’யெடுத்து வைக்க வேண்டும். இரண்டிலும் இலக்கணப் பிழைகள் இருக்கக் கூடும். மணம் புரிந்து
கொண்ட மனைவி  ‘வஞ்சிப்பா’ளானால் வாழ்க்கை ‘வருத்தப்பா’ ஆகிவிடும்*

##################

ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையாக இருந்தால் ‘கள்’ சேர்த்துக் கொள்கிறோம். (உம்) பறவை, பறவைகள்; நூல்  நூல்கள் -இப்படி.
ஆனால் 1330 இருந்தும் அதனை திருக்குறள் என்றுதானே சொல்கிறோம்.  திருக்குறள்கள் என்று சொல்வதில்லையே. ஏன்?

-வி.மகேஸ்வரன், காரைக்குடி.

*திருக்குறள் கள்ளை அனுமதிப்பதில்லை*

##################

‘மானும் மழுவமேந்தி மலர்ப் பாதம் தூக்கி ஆடும் இறைவன்’ என சிவனை கவிஞர்கள் பாடுகிறார்களே; ‘மலர்ப் பாதம்’ 
பெண்களுக்குத் தானே பொருந்தும். சிவனுக்கு எப்படி? -டி.என்.பாலகிருஷ்ணன், சென்னை.

*சிவனே என்றிராமல்  இப்படியொரு சக்தியுள்ள கேள்வி கேட்டிருக்கிறீர்கள். மலர்ப்பாதம் என்ற சொல்லுக்கு மலர் போன்ற  பாதம் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும் என்பதில்லை. மலர்களால் அர்ச்சிக்கப்படுகிற பாதம் என்று பொருள்
கொள்ளலாமல்லவா? உவமைத் தொகையை மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும்  உடன் தொக்க தொகையாகப் புரிந்து
கொள்ளுங்களேன*்.

#################

தற்போதைய  பட்டிமன்றங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? -என்.எஸ்.பார்த்தசாரதி, திருப்பூர்.

*கி.வா.ஜ.,  குன்றக்குடி அடிகளார், திருச்சி தேசியக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் ராதாகிருஷ்ணன் போன்றோர்  காலங்களில்
பட்டிமன்றங்கள் சிந்தனையைத் தூண்டின. இப்போது பெரும்பாலான பட்டிமன்றங்கள்  நகைச்சுவை என்ற பெயரில் சிரிப்பாய்ச் சிரிக்கின்றன*.

#########((########

லால்குடி ஜெயராமனுக்கும், லால்குடியில் காவேரிக் கரையில் விவசாயம் செய்யும் விவசாயிக்கும் ஏதேனும் ஒற்றுமை உண்டா?
-வி.அம்பிகை, சென்னை.

*உண்டே. இவர் ஸ்வரம் பாடுகிறார்; அவர் உரம் போடுகிறார். இவர் பண் மூலம் பண்படுத்துவது மனதை; அவர் மண் மூலம்
பண்படுத்துவது நிலத்தை. மொத்தத்தில் இருவருமே வயலின் மேன்மைக்காகப் பாடுபடுகிறார்கள்*.

##################

சமையலில் மனைவிக்கு உதவி செய்வீர்களா? -ஆவடி த.தரணிதரன், சென்னை.

*சமையல் கலை இரண்டு பகுதிகளைக் கொண்டது. ஒன்று சமைப்பது. இன்னொன்று சாப்பிடுவது. நான் இரண்டாவது  பகுதியில் உதவுவதுண்டு*.

##################

நீங்கள் மரபுக் கவிதைகள் எழுதுவது உண்டா?  உங்களுடைய ஏதாவது ஒரு மரபுக் கவிதை ப்ளீஸ்! -என்.அஞ்சுகம், பாலப்பட்டி.

*உண்டு.  எப்போதாவது. ‘வேண்டாம் வரதட்சணை’ என்ற ஈற்றடிக்கு முன்பு தினமணி கதிரில் ஒரு நேரிசை  வெண்பா எழுதினேன். அது*

*பத்து பவுன் தங்கம்* *பளிச்சென்ற* *கல்வளையல்*
*முத்திலே  சின்னதாய்* *மூக்குத்தி - மத்தபடி*
*பாண்டு வைத்து* *ஊர்கோலம் பாட்டு* *இவைதவிர*
*வேண்டாம்  வரதட் சிணை*

##################

‘சிங்களத் தமிழ்’, ‘சிங்கார சென்னைத் தமிழ்’ ? 
-ந.வந்தியக்குமாரன், சென்னை.

*இலங்கைத் தமிழர்களுடன் கதைக்கும் போது அவர்கள் பாவிக்கும் சில  தமிழ் வார்த்தைகள் சொக்கிலேற்றுகளாய்த் தித்திக்கும்
என்று நம்மால் அவதானிக்க முடிகிறது.  கனகாலமாய் அவற்றைப் படித்து வருவதால் சென்னைத் தமிழைப் பொறுத்தவரை அதிக
அளவில்  கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தும் வட்டாரத் தமிழ் அதுதான்*

################

காதல்  கவிதை எழுதக் காதலித்துத்தான் ஆக வேண்டுமா? -ராஜசுதா, சேலம்.

*சரிதான்... துப்பறியும் கதை  எழுத கொலை செய்ய வேண்டும் என்பீர்களா*?

#################

ஊழல் பெருச்சாளிகள்  எங்கிருந்து வருகிறார்கள்? -எஸ்.வெண்ணிலாராஜ், வேம்படிதாளம்.

*பெரும்பாலும் அரசியல் சாக்கடையிலிருந்துதான்*

-#################

ஆலய உண்டியலில் பணம் போடுவது, ஏழையொருவனுககு அறம் செய்வது. -நற்பயன் தரக் கூடியது? -எஸ்.ஏ.கேசவன், இனாம்
மணியாச்சி.

*‘நடமாடும் கோயில் நம்பர்க்கொன்று ஈந்தால் அது படமாடும் கோயில் பரமற்கு் போய்ச் சேரும் என்கிறார் திருமூலர். ஏழை
சப்-போஸ்ட் ஆபீஸ், கடவுள் ஹெட் போஸ்ட் ஆபீஸ். ஏழைக்குக்  கொடுத்தால் கடவுளுக்குப் போகும்.*

``~~~~^^^^^^^^^^^^^^^^^^^

தினமும் பூண்டு சாப்பிட்டால்  இதய நோய் வராதாமே? -எஸ்.சண்முகம், திருவண்ணாமலை.

*தொடர்ந்து அதன் நாற்றத்தைச்  சகித்துக் கொள்வதில் உறுதிபூண்டு செயல்பட்டுப் பாருங்கள்.*
~~~~~~~~~~~~~~~~~

இடமிருந்து  வலமாக வாசித்தாலும், வலமிருந்து இடமாக வாசித்தாலும் ஒரே வார்த்தையைத் தரும் ‘விகடகவி’யைப்  போல் வேறு ஏதாவது? -த.முரளிதரன், சென்னை.

*தேருவருதே’, ‘மோருபோருமோ* *தமிழில் ஒரு *முழுக்குறள் *வெண்பாவே இப்படி *இருக்கிறது. ‘நீவாத *மாதவா தாமோக
*ராகமோ தாவாத* *மாதவா நீ*
~~~~~~~~~~~~~~~~~

அன்னை ஓர் ஆலயம் என்று கூறுவது ஏன்? -ஆடுதுறை  கோ.ராமதாஸ், தஞ்சாவூர்.

*‘கர்ப்ப’க்கிரகம் அங்கிருப்பதால்*
--------------------------------------------------------------
படித்து வியந்தது!
அன்புடன்
வாத்தியார்
=============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!