
எக்ஸ்க்யூஸ் மி ப்ளீஸ், இந்த ஜாதகத்தில் என்ன கோளாறு சொல்ல முடியுமா?
ஜோதிடம் கற்றுக் கொள்வதில் உள்ள சிக்கலைவிட, ஓரளவு கற்றுக்கொண்ட பின்
ஏற்படும் சிக்கல் அவஸ்தையாக இருக்கும். அதாவது பல சமயங்களில் இக்கட்டாக
இருக்கும்.
இந்த இக்கட்டு என்பது எங்கள் பகுதியில் (காரைக்குடி) உள்ள வழக்குச் சொல்!
"என்னடா, உன்னை நம்பி வந்தேன் பெரிய இக்கட்டில மாட்டிவிட்டாயே" என்று
ஒருவர் சொன்னால், இருக்கவும் முடியாமல், தப்பிக்கவும் முடியாமல் உள்ள
சூழலில் அவர் மாட்டிக்கொண்டு விட்டார் என்று பொருள்!
அதாவது விழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாத சூழ்நிலை!
ஆங்கிலத்தில் சொன்னால் Bottleneck Situation!
அந்தக் காலத்தில் கோலி சோடா இருக்கும். அதன் கழுத்துப் பகுதியில் இருக்கும்
கோலிக்குண்டு உள்ளேயும் போகாமல், வேளியேவும் வந்து விழுகாமல் இருக்கும்
அதை நினைவில் கொள்ளலாம்.
அதற்கு ஒரு கதை சொல்கிறேன் பாருங்கள். இந்தக் கதை என் தந்தையார்
சொல்லக் கேட்டது. சொன்னது என்னிடம் அல்ல! அவர் தன் நண்பர்களிடம்
சொல்லிக் கொண்டிருக்கும்போது கேட்டது. கதை கொஞ்சம் 'அ' கதை!
அதனால்தான் இந்த டிஸ்க்ளைமர் அல்லது உங்கள் மொழியில் டிஸ்கி!
--------------------------------------------------------------------------------------------
காலம்: 100 வருடங்களுக்கு முற்பட்டது
இடம்: ஒரு செழிப்பான கிராமம்
நாயகர்: பெரிய நாட்டு மருத்துவர்.கோட்டா தொந்தரவு இல்லாத காலத்தில்
படித்தவர். அனுபவம் மிக்கவர், கைராசிக்காரர் என்று பெயர் பெற்றவர்.
சுற்றியுள்ள 18 பட்டிக் கிராமங்களுக்கும் அவர்தான் மருத்துவர்.
வேறு ஆள் கிடையாது.அறுவை சிகிச்சையைத் தவிர மற்ற எல்லாச்
சிகிச்சைகளையும் வெற்றிகரமாகச் செய்யக்கூடியவர். வயது 50.
உப செய்தி: 50 கிலோமீட்டர் தூரம் உள்ள நகரத்திற்கு சென்றால்தான்
வேறு வைத்தியர்கள் கிடைப்பார்கள். ரோடு மண் ரோடு. வாகனம்
மாட்டு வண்டிகள் மட்டுமே! இதைக் கவனத்தில் கொள்ளவும்
நாயகி: பூவாத்தாள். செடியில் இருந்து பறித்த பூவைப்போன்று இருப்பாள்
வயது 22. மருத்துவருடைய மருமகள்
பில்ட் அப் கொடுத்து விட்டேன். இப்போது கதைக்குப் போவோம்
-------------------------------------------
பூவாத்தாளுக்குத் தொடையில் பெரிய கட்டி. அது வீங்கி எழுமிச்சம்பழ
அளவிற்குப் பெரிதாகி, பழுத்து உடையும் நிலையில் இருக்கிறது.
நான்கு நாட்களாகத் தாங்க முடியாத வலி!.
கணவன் வேறு ஊரில் இல்லை! தனியாக அமர்ந்து கண்ணீரில் கரைந்து
கொண்டிருந்தாள்.
வீட்டிற்கு வந்த அவளுடைய தோழி, விசனத்திற்குக் காரணம் கேட்க
விவரத்தைச் சொன்னதோடு, தன்னுடைய சேலையை விலக்கி, அவளுக்கு
அந்தக் கட்டியைக் காட்டவும் செய்தாள்.
தோழி அரண்டு விட்டாள், "என்னடி இவ்வளவு பெரிதாக வீங்கி உடையும்
நிலையில் உள்ளது. சுத்த பைத்தியக் காரியாக இருக்கியே - உன்
மாமனாரிடம் காட்டி வைத்தியம் பார்த்துக் கொள்ள வேண்டியதுதானே?
சொல்லாம அழுதுக்கிட்டிருந்தா சுகமாயிருமா?"
"எப்படியடி காட்டுவேன், அவர் என் மாமனார் ஆயிற்றே?"
"மாமனார் என்று ஏன் நினைக்கிறாய்? வைத்தியர் என்று நினத்துக் காட்டு!"
"மனசு என்று ஒன்று இருக்கிறதே - எப்படிக் காட்ட முடியும்? காட்டிவிட்டு
அவரைப் பார்க்கும் போதெல்லாம் மனசு குறுகுறுக்குமே? அதோடு இந்த
கிராமத்தில் இருக்கும் மற்ற பெண்களுக்குத் தெரிந்தால், அவர்களுடைய
பார்வையை எப்படித் தாங்குவேன். உனக்கு இப்படி ஒரு நிலைமை என்றால்
என்ன செய்வாய்? அதற்கு முதலில் பதில் சொல்லடி!"
தோழி மெளனமாகி விட்டாள்.
அழுதுகொண்டே தொடர்ந்து பூவாத்தாள் சொன்னாள்:
"எல்லாம் என் தலை எழுத்து. இப்படி ஒரு இக்கட்டு. காட்டினால் மானம்
போகும்; காட்டாவிட்டால் பிராணன் போகும்!"
--------------------------------------------------------------------
நான் மாட்டிக் கொண்ட இக்கட்டு ஒன்றைச் சொல்கிறேன்
புதுசா கல்யாணம் செய்துகொண்டவன் கையும், புண் வந்தவன் கையும்
சும்மா இருக்காது என்பார்கள் (அதெல்லாம் பதிவில் விவரமாகச் சொல்ல
முடியாது. ஆகவே புரிந்து கொள்ளுங்கள்) அதேபோல ஜோதிடம் கற்றுக்
கொண்டவன் கையும் சும்மா இருக்காது.
யார் கிடைத்தாலும் அல்லது எந்த ஜாதகம் கிடைத்தாலும் நோண்டிப்
பார்க்கச் சொல்லும்.
நான் தொடர்ந்து சொல்லப்போவதேல்லாம் 15 அல்லது 20 வருடங்களுக்கு
முன்பு நடந்த சம்பவங்கள்
--------------------------------------------------------------------
ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு வந்த உறவினர் ஒருவர் , நேற்று என்னை நாய்
கடித்து விட்டது!” என்றார்.
என் போதாத காலம், சும்மா இருக்காமல், அவரிடம் கேட்டேன்,” உங்களுக்கு
ராகு திசை சுய புத்தி நடக்கிறதா?”
“ஆமாம் எப்படி கரெக்டாகச் சொல்கிறாய்?”
“ராகு திசை சுய புத்தி நடந்தால், ஏதாவது ஒன்று கடிக்கும், அதுதான் கேட்டேன்”
“ஏதாவது ஒன்று என்றால்?”
“நாய், பாம்பு, தேள், பூரான் இப்படி ஏதாவது ஒன்று கடிக்கும். ஜாதகத்தின்
அமைப்பை வைத்து, கடிகள் வித்தியாசப்படும்!”
அவ்வளவுதான் ஜேட் வேகத்தில் தனது வீட்டிற்குப் போய்விட்டு பத்தே நிமிடங்களில்
திரும்பி வந்து விட்டார்.
அவர் கையில் ஒரு தடிமனான நோட்டுப் புத்தகம். அதில் அவருடைய குடும்பத்து
உறுப்பினர்களின் ஜாதகங்கள்.
நான் தப்பிப்பதற்காக, ”எனக்கு முழுமையாக ஜோதிடம் தெரியாது அமெச்சூர்,”
என்று சொல்லிப் பார்த்தேன்.
“தெரிந்தவரை பார்” அவர் விடுவதாக இல்லை!
கடைசியில் அன்றையப் பொழுதில் என்னுடைய நேரத்தில் நான்கு மணிகளை
இரண்டு ஃபில்டர் காப்பியுடன் சேர்த்துக் குடித்துவிட்டுத்தான் அவர் என்னை
விட்டார்!
--------------------------------------------------------------
அதேபோல இன்னொரு சமயம் எனக்கு நன்கு பரீட்சையமான நண்பர்
தன் சகோதரனுடன் என்னைத் தேடிவந்தார்.
வந்தவர் தன் தம்பியை அறிமுகப் படுத்துவிட்டு, மகாதேவி படத்தில் பி.எஸ்.வீரப்பா
தன் இடுப்பிலிருந்து பட்டாக் கத்தி ஒன்றை உருவி மிரட்டுவதைப் போல, ஒரு
ஜாதகத்தைக் காட்டி மிரட்டும் தொனியில் சொன்னார், “இந்த ஜாதகத்தில்
ஒரு பிரச்சினை இருக்கிறது. என்ன என்று கண்டுபிடி பார்க்கலாம்?”
அவருடைய தம்பி மகனின் ஜாதகம் அது. அந்தப் பையனுக்கு வயது இருபது.
பிரச்சினை என்றால், மாந்தி இருக்கும் இடத்தைத்தான் பார்க்க வேண்டும்
அந்தப் பையனின் ஜாதகத்தில் ஐந்தில் மாந்தி. ஐந்தில் மாந்தி இருந்தால்
மன நோய் ஏற்படும் அபாயம் உண்டு. ஆறாம் வீட்டு அதிபதி (Sixth lord -
lord for diseases) எங்கே இருக்கிறார் என்று பார்த்தேன். அவர் தன்னுடைய
வீட்டிற்குப் பின் வீட்டில் (That is 12th house from his own house) அதாவது
அதே ஐந்தாவது வீட்டில் மாந்தியுடன் சேர்ந்து இருந்தார். இருவரும் ஒன்று
சேர்ந்தால் மனநோய்தான்!
உடனே சடாரென்று சொன்னேன்,” Native of the horsocope should be a
mentally retarded person" (இந்த ஜாதகன் ஒரு மனநோயாளி)
இருவரும் திகைத்துப்போய் விட்டார்கள்
“எப்படிச் சொன்னாய்?”
“ஜாதகம் அதைத்தான் சொல்கிறது!”
(தொடரும்)
பதிவின் நீளம், மற்றும் என்னுடைய தட்டச்சும் நேரம், உங்களுடைய பொறுமை
அனைத்தையும் கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். மற்றவை
அடுத்த பதிவில்!
தலைப்பிற்கான செய்தி எங்கே?
அது சுவையானது, முக்கியமானதும் கூட, அதுவும் அடுத்த பதிவில்
________________________________________________________
Request
Many people are asking my contact details and wants to speak with me either over
phone or in person. I do not have free time to speak with anybody for consultation or
discussion or clarification.
I know one contact will multiply by several times and totally disturb my routine
business work
I am writing in blogs out of my own interest
I am not a professional astrologer and I learned a portion of astrology only out
of interest
I am writing in blogs to share my knowledge and experiences with my
beloved blog readers like you!. In turn I never expect anything from anybody
I request all, particularly my blog readers to send their queries only
through blog comment box and if it is personal through email!
Please understand my problem and co-operate with me!
Those who know my phone number please do not give it to your friends!
Thanks & regards
SP.VR.Subbiah
வாழ்க வளமுடன்!