
******************************************************************************
மனதை மயக்கிய மந்திரச் சொல்
விடுபட்டவைகள் - பகுதி 1
என்னுரை
தமிழ்மணம் அரங்கில் 23.3.2008 முதல் 30.3.2008 வரை நட்சத்திர வாரப் பதிவுகளாக மொத்தம் 33 இடுகைகளைப் பதிந்திருந்தேன். அனைவரும் ரசித்துப் படித்து என்னை மிகவும் ஊக்குவித்துப் பாராட்டினார்கள். என்றும் மறக்க முடியாத வாரமாக அது அமைந்தது.
இறுதிப் பதிவில் எழுத முடியாமல் விடுபட்டவைகள் என்று சில மேதைகளின்
பெயர்களையும், மற்றும் சில செய்திகளையும் குறிப்பிட்டிருந்தேன்.
அதைப் படித்த வலையுலக நண்பர்கள் திரு.வடுவூர் குமார்,
திரு.நெல்லை, திரு.இலவசக்கொத்தனார், திரு.ஆயில்யன், திரு.மதுரையம்பதி, திரு.நா.கணேசன், திரு.ராம்ஸ்,
திரு.தெக்கிக்காட்டான், திரு.கோவி.கண்ணன், திரு.காசி ஆறுமுகம், திரு.சுரேகா, திருமதி.துளசி கோபால், திரு.குமரன்,
திரு.நாகை சங்கர், திருமதி.மீனா, திரு.ரவி, திரு.யோகன் பாரீஸ்
போன்று பல அன்பர்கள் விடுபட்டதையும் தொடர்ந்து எழுதுங்கள்
என்று பின்னூட்டத்தில் கேட்டுக்கொண்டார்கள்.
நட்சத்திர வாரத்தில் பல முறைகள் வந்து என்னை மிகவும்
ஊக்குவித்த திரு.காசி ஆறுமுகம் அவர்களிடம் விடுபட்டதில்
எதை முதலில் எழுத என்று கேட்டபோது, திரு சின்ன அண்ணாமலை அவர்களைப் பற்றி எழுதுங்கள், தெரிந்து கொள்வோம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
அவருடைய தெரிவு, உண்மையில் அற்புதமான தெரிவாகும்.
திருவாளர் காசி ஆறுமுகம் அவர்கள் கேட்டிருக்கிறார். ஆகவே
சிரத்தையுடன் சற்று விரிவாக எழுதுவோம் என்று என்னிடம் இருந்த பல குறிப்புகளை ஒருங்கினைத்துச் சின்ன அண்ணாமலை அவர்களின் மேன்மையை என்னால் இயன்றவரை எழுதியுள்ளேன்
இந்தக்கட்டுரையின் மொத்தப்பக்கங்கள் A4 - Sizeல் 25 பக்கங்களாகும்.
இதை எழுதுவதற்கு எடுத்துக் கொண்ட சிரத்தையின் காரணமாக
கால தாமதம் ஏற்பட்டுவிட்டது. காலதாமதத்திற்கு அனைவரும்
அடியவனை மன்னிக்க வேண்டுகிறேன்
என்னுடைய வியாபார அலுவல்கள் மற்றும் சொந்த அலுவல்களுக்
கிடையே உங்கள் அனைவரின் மேல் உள்ள பிரியத்தின் காரணமாகவும், எழுத்தின்மேல் உள்ள ஆர்வத்தின் காரணமாகவும் சற்று விரிவாகவே
இதை எழுதியுள்ளேன். அனைவரும் படித்து, உங்கள் கருத்தை ஒருவார்த்தையில் பின்னூட்டம் இட்டால் எழுதியதன்
பயனை அடைவேன்.
நன்றி,
வணக்கத்துடன்
SP.VR. சுப்பையா
Over to Katturai
---------------------------------------------------------------------------------
இந்தப் பதிவு அன்பர் திரு.காசி ஆறுமுகம் அவர்களுக்கு சமர்ப்பணம்
---------------------------------------------------------------------------------
இது ஒரு மீள் பதிவு. அதை மனதில் கொள்ளவும். ஆறு ஆண்டுகளுக்கு
முன்பு எனது மற்றொரு பதிவான பல்சுவைப் பதிவில் வெளிவந்ததாகும்
இது. உங்களுக்கு அறியத்தரும் பொருட்டு அதை இன்று வலையில்
ஏற்றியுள்ளேன்
===============================================
மனதை மயக்கிய மந்திரச்சொல்!
சின்ன அண்ணாமலை
சின்ன அண்ணாமலை - இந்த எட்டெழுத்துப்பெயர் அந்தக்காலத்தில்
ஒரு மந்திரச் சொல்
அந்தக்காலம் என்பதை 1940ஆம் ஆண்டு துவங்கி 1980ஆம்
ஆண்டு வரை என்று எடுத்துக் கொள்ளுங்கள். தமிழக அரசியல்
மற்றும், இலக்கிய மேடை ரசிகர்களை சுமார் நாற்பது ஆண்டுகள்
மதிமயங்க வைத்த பெயர் அது.
கவிதைக்கு ஒரு கண்ணதாசன் என்றால், மேடைப் பேச்சிற்கு
ஒரு சின்ன அண்ணாமலை என்றிருந்தது. அவருடைய
பேச்சிற்குப் பல தலைவர்களும், எழுத்தாளர்களும் ரசிகர்கள்.
ராஜாஜி, காமராசர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா,
நாமக்கல் கவிஞர், கல்கி, என்று பட்டியல் நீளும்.
ஆவேசமாகப் பேசுவார். அசத்தலாகப்பேசுவார். பல குட்டிக்கதைகள், உவமானங்களுடன் பேசுவார். சிரிக்கச் சிரிக்கப்பேசுவார். அவர்
பேசுகின்ற மேடைகளில் மற்ற பேச்சாளர்களின் பேச்சு எடுபடாமல் போய்விடும். அப்படிப்பட்ட அற்புதமான பேச்சாளர் அவர். பேச்சை
வைத்தே பல உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர்.
18.6.1920ஆம் தேதியன்று உ.சிறுவயல் என்னும் செட்டிநாட்டுக்
கிராமத்தில் பிறந்தவர். சின்ன அண்ணாமலை. இயற்பெயர் நாகப்பன்.
தான் பிறந்த ஊரை விட்டு செட்டி நாட்டின் மற்றொரு ஊரான தேவகோட்டைக்குச் சிறு வயதிலேயே சுவீகாரம் வந்து விட்டார்.
சுவீகாரம் வந்த இடத்தில் அண்ணாமலை ஆனார்.
பின்னாளில் காங்கிரசில் முன்பே ஒரு அண்ணாமலை இருந்ததால்,
ராஜாஜி அவர்களால் சின்ன அண்ணாமலை என்று நாமகரணம் சூட்டப்பெற்றார்.
சிறு வயதில் மலேசியாவில் 4 ஆண்டுகள் படித்தவர், பிறகு ஏழு
ஆண்டுகள் - அதாவது பள்ளி இறுதியாண்டுவரை தேவகோட்டையில்
தான் படித்துத் தேர்ந்தார்.
அந்தக் காலத்து வழக்கப்படி அவருக்குப் சிறு வயதில் திருமணம்
ஆகிவிட்டது. திருமணம் ஆகும்போது அவரின் வயது 13.
அவர் மனைவியின் வயது 12.
செட்டிநாட்டின் இன்னொரு பிரபலமான கம்பன் அடிப்பொடி
திரு.சா.கணேசன் அவர்களின் உறவினர் ஆவார் அவர்.
சிறுவயதில் சுதந்திரப்போராட்ட இயக்கத்தில் தீவிரமாக
இயங்கிய சா.கணேசன் அவர்களால் அவருக்கும் சுதந்திரப்
போராட்டத்தில் சின்ன வயதிலேயே மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டு
முழு காங்கிரஸ்காரராக மாறி, கடைசிவரை காங்கிரஸ்
இயக்கத்திலேயே இருந்தவர் அவர்.
சா.கணேசன் அவர்களின் காரைக்குடி வீட்டிற்குக் காந்திஜி
அவர்கள் வந்திருந்தபோது (வருடம் 1930), கண்ட மாத்திரத்திலேயே
அவர் மேல் பக்தி கொண்டு, காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து சுதந்திரத்திற்காகப் போராடிய எண்ணற்ற வீரர்களில் அவரும்
ஒருவர்.
----------------------------------------------------------------------------------
முதல் சொற்பொழிவு
தேவகோட்டை உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது, மாணவர்
கூட்டத்தில், 'செல்வம்' என்ற தலைப்பில் பேசுவதற்காக, அந்தக் காலகட்டத்தில் ஆனந்தவிகடனின் ஆசியராக இருந்த கல்கி அவர்கள் எழுதியிருந்த 'பெருளாதாரம், பணம், செல்வம்' என்ற தலையங்கத்தை மனப்பாடம் செய்துகொண்டு போய்ப் பேச, முதல் பேச்சிலேயே
பள்ளியில் பிரபலமாகிவிட்டார்.
தொடர்ந்து கல்கி அவர்களின் எழுத்துக்களை விடாமல் மனனம்
செய்ய ஆரம்பித்துள்ளார்.
பேசும் மேடைகளில் எல்லாம் ஆரம்ப காலத்தில் அது கை
கொடுத்திருக்கிறது. விஷயம் அனைத்தும் கல்கியுடையதாக
இருக்கும். குரல் மட்டும் இவருடையதாக இருக்கும்.
ஒருசமயம் ராஜாஜி அவர்கள் தேவகோட்டைக்கு வந்திருந்தபோது, அடித்துபிடித்துச் சான்ஸ் வாங்கி அந்தமேடையில் திரு ராஜாஜி
அவர்களின் முன்னிலையில் சின்ன அண்ணாமலை அவர்கள்
சிறப்பாகப் பேச, கூட்டத்தின் கரகோஷம் காதைப்பிளந்தது.
பேசி முடித்துக் குனிந்து ராஜாஜியின் பாதத்தைத் தொட்டு இவர்
வணங்க, ராஜாஜி சொன்னாராம் “நன்றாக மனப்பாடம்
செய்திருக்கிறாய்”
புத்திக்கூர்மையுள்ளவரல்லவா அவர், ஆகவே கண்டுபிடித்துவிட்டார்.
இவர் சற்றுக் கலக்கத்துடன் ராஜாஜின் பின்புறம் இருந்த இருக்கையில்
அமர, அருகில் இருந்தவர் மெதுவாகக் கேட்டாராம்.
“இதையெல்லாம் எதில் படித்தீர்கள்”
“ஏன்?”
“இல்லை, இதையெல்லாம் நானும் எதிலோ படித்தமாதிரி
இருக்கிறது!”
நமது நாயகர் சின்ன அண்ணாமல், இனி மறைக்கூடாது என்று
உண்மையைச் சொன்னார்
“ஆனந்த விகடனில் படித்தது”
“யார் எழுதியது தெரியுமா?”
“கல்கி”
“கல்கியைத் தெரியுமா?”
“தெரியாது நான் பார்த்ததில்லை”
“பார்த்தால் என்ன செய்வீர்கள்?”
“பார்த்தால் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்யலாம் என்றிருக்கிறேன்”
இதுவரை தொடர்ந்து கேட்டுக்கொண்டே வந்த அவர் சொன்னார்,
“ சரி, அப்படியானால் என்னையே நமஸ்காரம் பண்ணுங்க!”
இவர், ஏன்?” என்று அவரிடம் கேட்க, அவர் மெதுவாகச் சொன்னாராம்:
“நான்தான் அந்தக் கல்கி!”
-------------------------------------------------------------------------------------
(தொடரும்)
பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை மற்றும் படிக்கும் நேரம் கருதியும் இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். பதிவின் தொடர்ச்சி
அடுத்து வரும்.
அன்புடன்
வாத்தியார்
=======================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!