Astrology காதலில் கிறங்கிய தேவயானி என்ன செய்தாள்?
Star Temples - Part 8
தேவயானி என்ற பெயரைப் பார்த்தவுடன், கோடம்பாக்கம் நினைப்போடு நீங்கள் உள்ளே நுழைந்திருந்தால், அதற்கு நான் பொறுப்பில்லை!
இது வேறு தேவயானி!
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் முன்னொரு காலத்தில் நடந்த கடும் யுத்தத்தில், அசுரர்களில் பலர் போர்டிங் பாஸ் வாங்கிக்கொண்டு மேல் உலகம் போய்விட்டார்கள்.
அவர்களுக்கு ஏதய்யா மேல் உலகம் என்று கேட்பவர்கள் பதிவை விட்டு விலகவும். எல்லோருக்குமே ஒரு மேல் உலகம் உண்டு. ஒபாமாவுக்கும் உண்டு உங்களுக்கும் உண்டு எழுதும் எனக்கும் உண்டு. அதுதான் இறைவன் இருக்குமிடம். சிவலோகம் அல்லது வைகுண்டம் அல்லது சொர்க்கம் என்று எப்படி வேண்டுமென்றாலும் அவரவர் நோக்கப்படி வைத்துக்கொள்ளுங்கள். அதில் ஒன்றிற்குப் போய்விட்டார்கள். அதாவது மரணமடைந்து விட்டார்கள்.
அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் சக்திவாய்ந்த மருதசஞ்சீவினி என்ற மந்திரம் மூலம் இறந்துபோன அத்தனை பேர்களையும் மீண்டும் உயிர் பெறச்செய்தார்.
அந்த மந்திரம் தெரிந்தால், தங்களுக்கு அது உதவியாக இருக்கும் என்று நினைத்த தேவர்கள் ஒரு ஆசாமியைப் பிடித்தார்கள். அவன் பெயர் கசன். குரு பகவானின் மகன். அவனைச் சரிகட்டி அனுப்பிவைத்தார்கள். மருதசஞ்சீவினி மந்திரத்தை கற்றுவருவதற்காக. அவனும், அசுரகுருவிடம் சென்றான்.
அவனுடைய தந்தை குரு பகவானும் அவனை ஆசிர்வதித்து அசுரலோகத்திற்கு அனுப்பிவைத்தார்.
சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானி அவனுக்கு உதவி செய்ய, அவள் மூலமாக சுக்ராச்சாரியாரிடம் மருதசஞ்சீவினி மந்திரத்தைக் கற்றுக் கொண்டான். இதைக் கண்ணுற்ற அசுரர்கள் கசன் உயிரோடு இருந்தால் அசுரர்குலத்திற்குப் ஆபத்து வந்துவிடும் என நினைத்து, கசனை கொன்று தீயிலிட்டு சாம்பலாக்கி அசுரகுரு குடிக்கும் பானத்தில், சாம்பலைக் கலக்கி கொடுத்து விட்டார்கள். அவரும் குடித்து விட்டார்.
கசனைக் காணாது கலங்கிய தேவயானி, கசனின் இருப்பிடத்தை கண்டறிந்து சொல்லும்படி தன் தந்தையிடம் வேண்டினாள்.
அசுரகுரு தன் ஞான திருஷ்டியால் கசன் தன் வயிற்றில் இருப்பதை அறிந்து, மருதசஞ்சீவினி மந்திரம் மூலம் கசனை உயிர் பெறச் செய்தார். உயிர்பெற்று வந்த கசன், தன் உயிரைக்காப்பாற்றிய அசுரகுரு இறந்து கிடப்பதைக் கண்டு, தான் அவரிடம் கற்ற மந்திரம் மூலம் அசுரகுருவை உயிர்பெறச் செய்தான்.
சுக்கிராச்சாரியார், தன் மகள் தேவயானியை மணம் முடித்து செல்ல வேண்டும் என்று அவனிடம் கூற, அதற்கு கசன் சுக்கிராச்சாரியாரின் வயிற்றிலிருந்து மீண்டு வந்துள்ளதால் அவருடைய மகள் தேவயானி தனக்கு சகோதரி முறை வேண்டும் என்று கூறி, அவரது வேண்டுகோளைக் கடாசி விட்டு, தேவலோகத்திற்குப் புறப்பட்டான்.
கடும்கோபம் கொண்ட தேவயானி, கசனை சப்தமலைகளாலும் தேவலோகத்திற்குச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்திவிட்டாள். பையன் அசுரலோகத்தில், தேவயானியின் அரவணைப்பிலேயே தங்கும்படியாகிவிட்டது.
கசனைக் காணாத குருபகவான், தன் மகனை மீட்டுத்தரும்படி பெருமாளை வேண்டி, தவமிருந்தார். பெருமாள், கருணை கொண்ட பெருமாள், சக்கரத் தாழ்வாரை அனுப்பி கசனை மீட்டார். பின்பு குருபகவானின் வேண்டுதலுக்காக அவர் தவமிருந்த தலத்தில் எழுந்தருளினார்.
அந்தத்தலம்தான் இன்று சித்திரரத வல்லபபெருமாள் கோவில் இருக்கும் இடம்.
சித்திரை நட்சத்திர தலம் அது. பெருமாள், குரு பகவானுக்கு ஒரு சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்தன்று (சித்ரா பவுர்ணமியன்று), சித்திரத் தேரில் எழுந்தருளி காட்சி தந்தார். இதனால் அவர், சித்தி ரரத வல்லப பெருமாள் என்று அழைக்கப்படுகின்றார்.
எனவே அத்தலம் சித்திரை நட்சத்திரத்திற்குரிய கோயிலாக விளங்குகிறது.
அத்தல பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் சந்தன மரச்சிலையால் ஆன மூர்த்தியாக காட்சி தருவது குறிப்பிடத்தக்க அம்சம்.
கோயிலுக்கு எதிரே குருபகவான், சக்கரத்தாழ்வாருடன் சுயம்பு வடிவில் இருக்கிறார். குருபார்க்கக் கோடி நன்மை என்பதால், சித்திரை நட்சத்திரகாரர்களை தவிர மற்ற நட்சத்திரக்காரர்களும் இங்கு வழிபாடு செய்து பலன் அடையலாம். நம்பிக்கை முக்கியம். நம்பிக்கையோடு பிராத்தனை செய்து வலம் வந்தால், பலன் கிடைப்பது நிச்சயம்.
ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள், தங்கள் ஜாதகத்தைக் கையில் ஏந்தியபடி இந்தப் பெருமாளை சுற்றி வருவது நல்லது. நன்மையளிக்கும்.
கோவில் இருக்கும் இடம்: குருவித்துறை என்னும் சிறு கிராமம். ரியல் எஸ்டேட்காரர்களின் கையில் சிக்கி தனது அடையாளத்தை இழக்காத சிறு கிராமம்.
மதுரையில் இருந்து வடக்கில் 23 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அங்கிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் சோழவந்தான் என்னும் பெரிய கிராமம் உள்ளது.
தில்லியில் வாசம் செய்தவாறு அரசியல்வாதிகள் பலரின் வயிற்றில் புளியைக் கரைத்துக்கொண்டிருக்கும் அன்பர் சுப்பிரமணிய சுவாமியின் சொந்த ஊர்தான் இந்த சோழவந்தான்,
அங்கே செல்ல மதுரை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் உள்ளன. வசதி உள்ளவர்கள் வாடகை ஊர்திகளில் சென்று வரலாம். குலுக்கல் வண்டி - அதான் நம்ம ஆட்டோ ரிக்ஷா வசதியும் உள்ளது.
பவுர்ணமி நாட்களில் அல்லது ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் செல்வது உசிதமானது.
கோவிலின் நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7.30மணி முதல் - மதியம் 12 மணி வரை. பிறகு மாலை 3மணி முதல் - 6 மணி வரை. விழாக்காலங்களில் இந்த நேரம் மாறுபடும்.
-------------------------------------------------------------
‘Star of Prosperity’ என்று புகழப்படும் சித்திரை நட்சத்திரக்காரர்களின் குண நலன்கள் பற்றிப் பிறகு பார்ப்போம். 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களைப் பற்றி ஒரு தொடர் கட்டுரை எழுதவுள்ளேன். அப்போது பார்ப்போம். அதுவரை பொறுத்திருங்கள்
புராணங்களை எல்லாம் நம்ப வேண்டும். ஆராயக்கூடாது. நம்ப முடியா விட்டால், புராணங்களைப் படிப்பதை விட்டுவிட்டு, வேறு வேலையைப் பார்க்கலாம். அதுதான் உசிதமானது. நான் அடிக்கடி சொல்வதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி எழுதுகிறேன். சுக்கிராச்சாரியாரின் மருதசஞ்சீவினி மந்திரம், கசனைக் கொன்று, எரித்து சாம்பலை டாஸ்மாக் சரக்கில் சுக்கிராச்சாரியாருக்குக் கொடுத்த செயல்கள் எல்லாம் நடக்குமா?’ என்று கேள்வி கேட்டுக் கொண்டிருக்காமல் சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கான தலம் குறிவித்துறையில் இரூக்கிறது என்ற தகவலை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++ வாழ்க வளமுடன்!