மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label பக்தி மலர். Show all posts
Showing posts with label பக்தி மலர். Show all posts

12.4.16

திருமாலின் பெருமைகளைக் கவியரசர் பாடியது!


திருமாலின் பெருமைகளைக் கவியரசர் பாடியது!

கவியரசர் கண்ணதாசன் பாடல்கள்        

பல அவதாரங்களை எடுத்தவர் திருமால். அவர் பெருமைகளைப் பாடுவதற்கு அந்தக் காலத்தில் அவரது அடியார்களான ஆழ்வார்கள்
இருந்தார்கள்

ஸ்ரீநாராயண மூர்த்தி உன்னைப் பாடிப் பரவசப்படுவதைவிட எங்களுக்குப் பெரிதாக வேறு என்ன கிடைத்துவிடப்போகிறது? ஒன்றும் வேண்டாம்
அது இந்திரலோகத்தை ஆட்சி செய்யும் வாய்ப்பாக இருந்தாலும் வேண்டாம் என்று சொன்னதோடு, அப்படியே வாழ்ந்தும் காட்டியவர்கள் அவர்கள்.

பிறகு முண்டாசுக் கவிஞர் பாரதி வந்து திருமாலின் கண்ணன் அவதாரத்தின் மேல் தீராத பக்தி கொண்டதோடு அவரைப் பலவிதமாக தன் மனதிற்கண்டு இன்புற்றுச் சிறப்பாகப் பல பாடல்களை இயற்றினார்.

1.கண்ணன் என் தோழன், 2.கண்ணன் என் தாய் 3.கண்ணன் என் தந்தை 4.கண்ணன் என் சேவகன்
5.கண்ணன் என் அரசன் 6.கண்ணன் என் சீடன் 7.கண்ணன் என் சற்குரு 8. கண்ணம்மா என் குழந்தை
9.கண்ணன் என் விளையாட்டுப் பிள்ளை 10.கண்ணன் என் காதலன் (5 பகுதிகள்)
11.கண்ணன் என் காந்தன் என்று அந்த மாயக்கண்ணனைப் பல வடிவங்களில் கண்டு இன்புற்று,உருகி உருகி எழுதியவர் அவர்.

இறைவனையே, தாயாகவும், தந்தையாகவும், குருவாகவும் கற்பனை செய்து எழுதியதோடு மட்டுமல்லாமல் தோழனாகவும், சீடனாகவும்,
ஏன் சேவகனாவும், அதற்கும் மேலே ஒரு படி சென்று காதலனாகவும் எழுதிக் களிப்புற்றதோடு பலரையும் கிறங்க வைத்தவர் அவர்.

அவருக்குப் பிறகு, கவியரசர் கண்ணதாசன் அவர்கள் தான் கண்ணனை வைத்து விதம் விதமாகப் பாடல்களை எழுதினார். அவற்றில் அற்புதமான பாடல்கள் பல உள்ளன.
------------------------------------------------------------
திருமால் பெருமைக்கு நிகரேது - உன்றன்
திருவடி நிழலுக்கு இணையேது!
பெருமானே உன்றன் திருநாமம் - பத்து
பெயர்களில் விளங்கும் அவதாரம்
(திருமால்)

கடல் நடுவே வீழ்ந்த சதுர்வேதம் - தனைக்
காப்பதற்கே கொண்ட அவதாரம்
- மச்ச அவதாரம்!

அசுரர்கள் கொடுமைக்கு முடிவாகும் - எங்கள்
அச்சுதனே உன்றன் அவதாரம்
- கூர்ம அவதாரம்!

பூமியைக் காத்திட ஒரு காலம் -நீ
புனைந்தது மற்றொரு அவதாரம்
- வராக அவதாரம்!

நாராயணா என்னும் திருநாமம் - நிலை
நாட்டிட இன்னும் ஒரு அவதாரம்
- நரசிம்ம அவதாரம்!

மாபலிச் சிரம் தன்னில் கால் வைத்து - இந்த
மண்ணும் விண்ணும் அளந்த அவதாரம்
- வாமன அவதாரம்!

தாய் தந்தை சொல்லே உயர் வேதம் - என்று
சாற்றியதும் ஒரு அவதாரம்
- பரசுராம அவதாரம்!

ஒருவனுக்கு உலகில் ஒரு தாரம் - எனும்
உயர்வினைக் காட்டிய அவதாரம்
- ராம அவதாரம்!

ரகு குலம் கொண்டது ஒரு ராமன் - பின்பு
யது குலம் கண்டது பலராமன்
- பலராமன்

அரசு முறை வழிநெறி காக்க - நீ
அடைந்தது இன்னொரு அவதாரம்
- கண்ணன் அவதாரம்

ஸ்ரீராகம்:

விதி நடந்ததென மதி முடிந்ததென
வினையின் பயனே உருவாக,
நிலைமறந்தவரும், நெறியிழந்தவரும்
உணரும் வண்ணம் தெளிவாக,
இன்னல் ஒழிந்து புவி காக்க - நீ
எடுக்க வேண்டும் ஒரு அவதாரம்
- கல்கி அவதாரம்!
(திருமால்)

படம்: திருமால் பெருமை - வருடம் 1968

பரந்தாமன் எடுத்த அவதாரங்களைப் பட்டியலிட்டவர், எடுக்க வேண்டிய அவதாரத்தையும் முத்தாய்ப்பாய்ச் சொல்லிப் பாடலை நிறைவு செய்ததுதான்
இந்தப் பாடலின் சிறப்பு
-------------------------------------------
மற்றுமொரு பாடல்:

மலர்களிலே பலநிறம் கண்டேன் - திரு
மாலவன் வடிவம் அதில் கண்டேன்
மலர்களிலே பலமணம் கண்டேன் - அதில்
மாதவன் கருணை மனம் கண்டேன்!
(மலர்)

பச்சைநிறம் அவன் திருமேனி
பவள நிறம் அவன் செவ்விதழே
மஞ்சள் முகம் அவன் தேவிமுகம்
வெண்மை நிறம் அவன் திரு உள்ளம்!
(மலர்)

பக்தி உள்ளம் என்னும் மலர் தொடுத்துப்
பாசமென்னும் சிறு நூலெடுத்துச்
சத்தியமென்னும் சரம் தொடுத்து - நான்
சாற்றுகின்றேன் உன் திருவடிக்கு!
(மலர்)

நானிலம் நாரணன் விளையாட்டு
நாயகன் பெயரில் திருப்பாட்டு
ஆயர் குலப்பிள்ளை விளையாட்டு - இந்த
அடியவர்க் கென்றும் அருள்கூட்டு!
(மலர்)

படம்: திருமால் பெருமை - வருடம் 1968

அந்தப் பரந்தாமனுக்குக் கவியரசர் எதைச் சாற்றினார் பார்த்தீர்களா?

பக்தி உள்ளம் என்னும் மலர் தொடுத்துப் பாசமென்னும் சிறு நூலெடுத்துச் சத்தியமென்னும் சரம் தொடுத்து - நான்
சாற்றுகின்றேன் உன் திருவடிக்கு!

சத்தியம் என்னும் சரத்தில் பக்தி, பாசம் எல்லாவற்றையும் தொடுத்தல்லவா சாற்றியுள்ளார்!!

அந்தப் பரந்தாமனின் அருள் கிடைக்க நாமும் அதையே சாற்றுவோம்!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

13.2.16

வழிபாடுகளில்தான் எத்தனை விதங்கள்!



வழிபாடுகளில்தான் எத்தனை விதங்கள்!

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!இந்து மதத்தின் பெருமை!!!!!!

வேறு எந்த மதத்திலும் இல்லாத ஒரு பெருமை ஹிந்து மதக் கடவுளுக்கு உண்டு . ஏனெனில் கடவுளை எல்லா விதமாகவும் வழிபடும் தன்மை ஹிந்து மதத்தில் மட்டும் தான்.
..
1. தாயாக = அம்மன்
2. தந்தையாக = சிவன்
3. நண்பனாக = பிள்ளையார், கிருஷ்ணன்
4. குருவாக = தட்சிணாமூர்த்தி
5. படிப்பாக = சரஸ்வதி
6. செல்வமகளாக = லக்ஷ்மி
7. செல்வமகனாக = குபேரன்
8. மழையாக = வருணன்
9. நெருப்பாக = அக்னி
10. அறிவாக = குமரன்
11. ஒரு வழிகாட்டியாக = பார்த்தசாரதி
12. உயிர் மூச்சாக = வாயு
13. காதலாக = மன்மதன்
14. மருத்துவனாக = தன்வந்திரி
15. வீரத்திற்கு = மலைமகள்
16. ஆய கலைக்கு = மயன்
17. கோபத்திற்கு = திரிபுரம் எரித்த சிவன்
18. ஊர்க்காவலுக்கு = ஐயனார்
19. வீட்டு காவலுக்கு = பைரவர்
20. வீட்டு பாலுக்கு = காமதேனு
21. கற்புக்கு = சீதை
22. நன் நடத்தைகளுக்கு = ராமன்
23. பக்திக்கு = அனுமன்
24. குறைகளை கொட்ட = வெங்கடாசலபதி
25. நன் சகோதரனுக்கு = லக்ஷ்மணன், கும்பகர்ணன்
26. வீட்டிற்கு = வாஸ்த்து புருஷன்
27. மொழிக்கு = முருகன்
28. கூப்பிட்ட குரலுக்கு = ஆதி மூலமான சக்கரத்தாழ்வார், மாயக் கிருஷ்ணன்
29. தர்மத்திற்கு = கர்ணன்
30. போர்ப்படைகளுக்கு = வீரபாகு
31. பரதத்திற்கு = நடராசன்
32. தாய்மைக்கு = அம்பிகை
33. அன்னத்திற்கு = அன்ன பூரணி
34. மரணத்திற்கு = யமன்
35. பாவ கணக்கிற்கு = சித்திர குப்தன்
36. பிறப்பிற்கு = பிரம்மன்
37. சுகப் பிரசவத்திற்கு = கர்ப்ப ரட்சாம்பிகை

இன்னும் நிறையாக உள்ளது பெருமைப் பட்டுக் கொள்வோம் !!!!
--------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
===============================================

24.1.16

இன்று தைப்பூசம்!

இன்று தைப்பூசம்!

தை மாதத்தில் பொங்கலுக்கு இணையாக இன்னொரு விசேட நாள் இருக்கிறது என்றால் அது தைப்பூச தினம்தான்! ஆயிரக் கணக்கான முருக பக்தர்கள் நடைப் பயணமாக பழநிக்குச் செல்லும் நாள் இது. இன்னன்நாளில் நாமும் முருகப் பெருமானை நினைத்து, வழிபட்டு அவனருளைப் பெறுவோம்!

கவியரசர் கண்ணதாசன் அவர்கள் அற்புதமாக முருகனைப் பாடிய சில பாடல்களை இன்று பதிவிடுகிறேன். படித்து மகிழுங்கள்!

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாகக் குவலயத்தோர் வழிபடட்டும் என்று சிறப்பாகத் தன் வசனத்தில் எழுதிப் படங்களிலும்
அதைச் சிறப்பாகக் காட்டியவர் திரு.ஏ.பி.நாகராஜன்.

எல்லா இடங்களிலும் குன்றில் உறையும் குமரன், திருச்சீரலைவாய் எனப்படும் திருச்செந்தூரில் மட்டும் கடலோரத்தில் குடிகொண்டுள்ளார்.

சூரனைவென்று தேவர்களைக் காத்தகுமரன், இன்றும் இன்முகத்துடன் அங்கே நின்று, தன் அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார்.

கவியரசர் கண்ணதாசன் அவர்கள் திருச்செந்தூர் சண்முகநாதனைச் சிறப்பித்துப் பாடிய  பாடல்களை நீங்கள் படித்து மகிழ இன்று பதிவிட்டுள்ளேன்!

பாடலைப் பாருங்கள்:
-------------------------------------------------
"திருச்செந்தூரின் கடலோரத்தில்
செந்தில்நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும் தெய்வாம்சம்!

அசுரரை வென்ற இடம் - அது
தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் - வரும்
ஐப்பசித் திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம்!

கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள்
தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும்
குமரனவன் கலையா?

மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளைக் காணும்முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும்முகம் ஒன்று
சாதிமத பேதமின்றிப் பார்க்கும்முகம் ஒன்று
நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ணமுகம் ஒன்று
நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு!

பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா
கண்மலர்கள் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்
கந்தா முருகா வருவாய் அருள்வாய் முருகா!

படம்: தெய்வம் - வருடம் 1972

"திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - அவனைத் தேடித்தேடி வருவோர்க் கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்!" என்று

பாடலைத் துவங்கியவர், கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் - தலையா கடல் அலையா? என்று வியந்ததோடு, குழந்தைகள், பெரியவர் என்று

அனைவரையும் அங்கே வரவழைக்கும் செயல் குமரனுக்கு மட்டுமே தெரிந்த கலை!" என்று சொன்னது இந்தப்பாடலின் சிறப்பாகும்.

நம்பியவர் வந்தால், நெஞ்சுருகி நின்றால், முருகன் வந்து அவர்களுக்கு அருள் புரிவான் என்று முத்தாய்ப்பாய்ப் பாடலை முடித்தது கவியரசருக்கே

கைவந்த கலை என்றால் அது மிகையல்ல!
---------------------------------------------
மற்றுமொரு பாடல்:

செந்தூர் முருகன் கோவிலிலே - ஒரு
சேதியை நான் கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்

(செந்தூர்)

என்னிரு கைகள் தூக்கியபோது
பெண்பார்க்க வந்தானம்மா,
பன்னிரு கையில் வாரி யணைத்துப்
பண்பாட வந்தானம்மா!

கொஞ்சும் குமரனின் அழகிய மடியில்
கொண்டாட வரலாமா?
குங்குமம் சிவந்த கோதை இதழில்
ஒன்றேனும் தரலாமா?"

படம்: சாந்தி - வருடம்.1965
-------------------------
மேலும் ஒரு பாடல்:

இந்தப் பாடலை ஒருமுறைக்கு இருமுறை படித்துப் பாருங்கள். என்னதொரு சொல் விளையாட்டு என்று கண்டு கூறுங்கள்!

"காவலுக்கு வேலுண்டு ஆடலுக்கு மயிலுண்டு
கோவிலுக்கு பொருளென்னடா - குமரா
நீயிருக்கும் இடம் தானடா

(காவ..)

நதிகளிலும் மலர்களிலும் நடந்துவரும் தென்றலிலும்
உன்முகம் கண்டேனடா - எங்கும்
சண்முகம் நின்றானடா

(காவ..)

ஓம் முருகா என்றவுடன் உருகுதடா உள்ளமெல்லாம்
ஒருகணம் சொன்னேனடா - அங்கே
சரவணன் வந்தானடா!

தெய்வயாணை தேடிவந்தாளே விழி வண்டோடு
கந்தனுன்னைக் காண வந்தாளோ அருள் கண்ணோடு
பக்தனென்னைப் பார்க்க வந்தாளோ

(காவ..)

ஆடுவதும் தொட்டிலடா அன்புமகன் கட்டிலடா
பாடுவது வள்ளி அல்லடா - என் கந்தையா
ஏழையுடன் பள்ளி கொள்ளடா!

திருப்பதம் நான் தாங்கத் தாலேலோ
புவியாவும் நீ தாங்கத் தாலேலோ
கந்தைய்யா வேலையா தாலேலோ
தங்கையா முருகையா தாலேலோ நீ தாலேலோ"

படம்: மனிதனும் தெய்வமாகலாம் - வருடம் 1975

"காவலுக்கு வேலுண்டு ஆடலுக்கு மயிலுண்டு கோவிலுக்கு பொருளென்னடா - குமரா நீயிருக்கும் இடம் தானடா" என்று கோவிலுக்கு ஒரு புது

விளக்கம் சொல்லிப் பாடலைத் துவக்கியவர், "நதிகளிலும் மலர்களிலும் நடந்துவரும் தென்றலிலும், ஏன் எங்கும் உன்முகம் தான் தெரியுது  சண்முகா"

என்று சொன்னது இந்தப் பாடலின் சிறப்பு.

புவியைக் காப்பவனே, உன் திருவடிகளை நாங்கள் தாங்குவோம் என்று முத்தாய்ப்பான வரிகளில் சொன்னது இந்தப் பாடலின் மற்றுமொரு சிறப்பு!!!

அன்புடன்
வாத்தியார்
===================================================

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

8.1.16

குருந்தமலை குழந்தை வேலாயுதசாமி கோயில்



குருந்தமலை குழந்தை வேலாயுதசாமி கோயில்

குழந்தை வேலாயுதசாமி கோயில் கோவைக்கு 36 கிலோ மீட்டர் தூரத்தில் காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள அற்புதமான முருகன் திருத்தலமாகும்!

கோயில் தகவல்கள்

மூலவர்: குழந்தை வேலாயுதசாமி
குழந்தை வேலாயுதசாமி கோயில், (Kurunthamalai Kulanthai Velayuthaswamy Temple) தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூர் மாவட்டம், காரமடைக்கருகில் அமைந்துள்ளது.. இக்கோயிலின் முதன்மைக் கடவுளான முருகன், குழந்தை வேலாயுதசாமி என அழைக்கப்படுகிறார். தோற்றத்தில் பழனி முருகனைப் போலவே காணப்படுகிறார். இந்து அறநிலையத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வரும் இக் கோயிலில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஜூன் 29, 2012 இல் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட அன்னதானத் திட்டம் செப்டம்பர் 11, 2011 முதல் இங்கும் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடந்து வருகிறது.

அமைவிடம்

கோயம்புத்தூர் மாவட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த மருதூர் எனும் ஊராட்சிக்குட்பட்ட குக்கிராமமான குருந்தமலையில் இக் கோயில் அமைந்துள்ளது. கோயம்புத்தூர்-மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் (தேசிய நெடுஞ்சாலை 67) காரமடை வரை சென்று அங்கிருந்து இக்கோயிலுக்குச் செல்லலாம். மேட்டுப்பாளையத்திலிருந்தும் இக் கோயிலுக்குச் செல்லலாம்.

கோயில் அமைப்பு

குருந்தமலை அடிவாரத்தில் ஐந்துநிலை இராஜகோபுரத்துடன் கூடிய நுழைவாயிலைத் தொடர்ந்து மலையேறிச் செல்ல நன்கமைக்கப்பட்ட படிக்கட்டுகள் தொடங்குகின்றன. படிக்கட்டுகளின் இருபுறமும் இராஜகம்பீர விநாயகர் சன்னிதி, கன்னிமார் சன்னிதி, நாகர் சன்னிதி, பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி சன்னிதி, இடும்பன், கடம்பன், வீரவாகு-மூவரின் சன்னிதிகள் உள்ளன. அவற்றைத் தாண்டியதும் படிக்கட்டுகளின் ஒருபுறம் காசிவிசுவநாதர் சன்னிதி விசாலாட்சியம்மனுக்குத் தனி சன்னிதியுடனும் மறுபுறம் தீபத்தூண் மற்றும் இராஜநாகலிங்க சன்னிதியும் அமைந்துள்ளது. இவ்விருவர் சன்னிதிகளைச் சுற்றி சூரியன், பஞ்சாட்சர கணபதி, பஞ்சலிங்கம் சன்னிதி, வள்ளி-தேவானை உடனுறை சண்முகர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேசுவரர், நவக்கிரக, காலபைரவர், சந்திரன் ஆகியோரின் சன்னிதிகள் உள்ளன.

காசிவிசுவநாதர் சன்னிதி தாண்டி மேலே குழந்தை வேலாயுதசாமி சன்னிதி இராஜகோபுரத்துடன் சுற்றுப் பிரகாரத்துடன் அமைந்துள்ளது. கருவறையில் மூலவர் குழந்தை வேலாயுதசாமி மேற்கு நோக்கியுள்ளார்.

வாய்ப்புக் கிடைத்தால் ஒருமுறை இக்கோயிலுக்குச் சென்று குழந்தை வேலாயுதசாமியை வணங்கி அவர் அருளைப் பெற்று வாருங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

29.12.15

பாடலுடன் வரிகளைப் படித்து ரசிப்பதிலேதான் சுகம் சுகம்!


பாடலுடன் வரிகளைப் படித்து ரசிப்பதிலேதான் சுகம் சுகம்!

பாடலுடன் வரிகளைப் படித்து ரசிப்பதிலேதான் சுகம் சுகம்! உங்களுக்காக சஷ்டி கவசப் பாடலை வரிகளுடன் பிடித்துக் கொடுத்துள்ளேன். கேட்டுப்
பாருங்கள் ஆனந்தமாக இருக்கும்.

மேலும் அப்பாடலை இயற்றிய அருளாளர் தேவராய சுவாமிகளைப் பற்றிய செய்திகளையும் உடன் கொடுத்துள்ளேன். அவைகள் மூன்றையும் நமது
வகுப்பறைத் தோழி திருமதி. என். அன்பழகன் அவர்கள் கொடுத்ததாகும். அவர்களுக்கும் உங்கள் சார்பில் நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்,
வாத்தியார்





------------------------------------------------------

Our sincere thanks to the person who uploaded this video in the net



வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!

25.12.15

கந்தர் சஷ்டி அரங்கேறிய இடம் எது தெரியுமா?


சென்னிமலை முருகன்
கந்தர் சஷ்டி அரங்கேறிய இடம் எது தெரியுமா?

கந்தர் சஷ்டி அரங்கேறிய இடம் சென்னிமலை

ஸ்ரீ சுப்ரமணியசுவாமி திருக் கோவில், சென்னிமலை, ஈரோடு மாவட்டம், சென்னிமலையில், மலை மீது அமைந்துள்ள திருத்தலம் இதுவாகும். இதன் சிறப்பு, இன்று உலகமெல்லாம் பாடப்படும் கந்த சஷ்டி கவசத்தை இயற்றிய தேவராயர், இந்த தலத்தில் உள்ள முருகபெருமான் முன்னிலையில் அரங்கேற்றினார்.



ஈரோடு-கோவை செல்லும் வழியில் இங்கூர் என்ற ரெயில் நிலையத்தி லிருந்து 7.5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது சென்னிமலை. ஈரோட்டிலிருந்து 26 கிலோ மீட்டர் தொலைவு தூரம். பெருந்துறையிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவு. கடல் மட்டத்தி லிருந்து 600 மீட்டர் உயரத்தில், 1320 படிக்கட்டுக்களுடன் மலையில் உள்ள கோவில் ஆகும். மலை உச்சி வரை பஸ் செல்லும் வசதி உண்டு. தேவஸ்தானத்தில் தங்கும் வசதிகளும் இருக்கின்றன.

நொய்யல் ஆற்றுக்கு அருகில் ஒரு விவசாயி ஒரு பசு வளர்த்து வந்தார். அந்த பசு ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சென்று அந்த இடத்தில் மட்டும் பாலை சொரிந்தது. இதை கவனித்த அந்த பசுவின் உரிமையாளர், என்ன காரணத்தால் இந்த இடத்தில் மட்டும் பாலை தானாகவே சொரிகின்றது என்று அறிந்து கொள்ள, அந்த இடத்தை தோண்டியபொழுது, அந்த இடத்தில் ஒரு அழகிய முருகப் பெருமான் சிலை இடுப்பு வரை நல்ல அழகிய வேலப்பாடுகளுடன் இருந்தது.

சிலையிலிருந்து பீறிட்ட ரத்தம்

கீழ் பகுதி கரடு முரடாக இருந்தததால், அதை உளி கொண்டு செதுக்க முனைந்தபொழுது, சிலையில் இருந்து ரத்தம் பீறிட்டதாம். அதைக் கண்டு பயந்து போய் ஓடி விட்டார். பின்னர் அங்கு வசித்து வந்த ஒரு முனிவரிடம் இது பற்றி கூறினர். அவரின் பெயர் சரவண முனிவர். அவர் ஆராய்ந்து, இந்த முருகன் அப்படியேதான் இருக்க விரும்புகின்றார். ஆகவே அப்படியே வைத்து பிரதிஷ்டை செய்யும்படி கேட்டுக்கொண்டதால் இந்த முருகன் அன்று கண்டு எடுத்தது போலவே உள்ளார் என்பது வரலாறு.

இன்றும் இந்த முருகபெருமானின் சிலை இடுப்புக்கு கீழே வேலைப் பாடுகள் இல்லாமலேயே இருப்பதை காணலாம்.
தவிர, ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் யுத்தம் நடந்தபோது, ஆதிசேஷனுடைய சிரம் விழுந்த இடம் இது என்று கூறுகின்றனர்.
12.2.1984 அன்று, இரட்டை காளைகள் பூட்டிய மாட்டு வண்டி செங்குத்தான வளைந்து வளைந்து செல்லும் படிகளில் ஏறி, மலைக் கோவிலுக்கு சென்று அதிசயம் நடத்திய இடம் ஆகும். வேறு எங்கும் காண இயலாதபடி, இன்றும் பொதி காளைகள் மூலம் திருமஞ்சன தீர்த்தம் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த திருத்தலம் 500-1000 வருட பழமை வாய்ந்தது. இதை புஷ்பகிரி, என்றும், கரை கிரி என்றும், மகுடகிரி என்றும் பல பெயர்களில் குறிப்பிடு கின்றனர்.

மூலவர் பெயர் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி மற்றும் தண்டாயுதபாணி என்ற நாம கரணம் கொண்டவர். மூலவர் முருகன் நடுநாயகமாக, மூர்த்தியாக, செவ்வாய் கிரகமாக அமைந்து, மூலவரை சுற்றி, எட்டு நவகிரகங்களும் உள்ளன. மூலவரை வழிபட்டாலே, நவகிரகங்களை வழிபட்ட பலனும் கிட்டும் சகல தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

அமிர்தவல்லி, சுந்தரவல்லி பெயரில் தவம்…

வள்ளி, தெய்வானை சென்னிமலை ஆண்டவரை திருமணம் செய்ய அமிர்தவல்லி, சுந்தரவல்லி என்ற பெயருடன் தவம் செய்ய தனிப் பெருங்கோவிலாக இங்கு அமைந்து உள்ளது. இவை ஒரே கல்லில் வடிக்கப்பட்டுள்ளது மிகவும் சிறப்பு. அருணகிரி நாதருக்கு படிக்காசு வழங்கிய தலம். முருகன் தன்னைத் தானே பூஜித்த தலம் இதுவாகும். இடும்பனுக்கு பொதிகை மலை செல்ல வழிகாட்டிய தலம் என்றும் கூறுகின்றனர்.

இரண்டு தலை முருகன்

இங்குள்ள முருகப்பெருமானுக்கு இரண்டு தலைகள் உள்ளன. இது போன்று எந்த தலத்திலும் கிடையாது. அக்னிஜாத மூர்த்தி என்பது இதுவாகும். இது மிகவும் விசேஷமான தலம் ஆகும். தமிழகத்தில் வேறு எந்த தலத்திலும் இல்லாத தேர் இங்கு உள்ளது. இது வேங்கை மரத்தில் செய்யப்பட்டது ஆகும்.

மலையின் மீது அடர்ந்த மரங்களுடன், அமைதியான, அழகான கோவில் இதுவாகும். மேலும் சிறப்பான அம்சமாக, இங்குள்ள மாமாங்க தீர்த்தக்குளம் என்பது ஆகும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, வறட்சியான கோடை காலத்திலும், மழையே இல்லாத நேரத்திலும், மலைக் கோவிலின் தென்புறம் உள்ள தீர்த்த குளத்தில் விநாயகர் முன்பு, திடீரென்று பொங்கி வழிந்தோடுவது மிகவும் அதிசயமான ஒன்றாகும். இத்தீர்த்தம் மிகவும் சக்தி வாய்ந்த தாகவும் சகல பிணிகளையும் களைய வல்லதாகும் என்கின்றனர்.

சித்தர்கள் வாழ்ந்த மலை

இந்த மலையில் பல சித்தர்கள் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இங்குள்ள அம்மன் சன்னதியில் இருந்து பின்புறம் சென்றால், மலையின் உச்சியில் 18 சித்தர்களில் ஒருவரான பின் நாக்கு (புண்ணாக்கு) சித்தர் கோவில், வேல்கள் நிறைந்து வேல்கோட்டமாக அமைந்துள்ளது. இதன் அருகில், சரவணமா முனிவரின் சமாதியும் உள்ளது. அந்த முனிவர்கள் வசித்த குகைகள் உள்ளது.

சென்னிமலை என்பதில் சென்னி என்றால் சிரம், கிரி என்றால் மலை ஆகவேதான் சிரகிரி சென்னிமலை என்கின்றனர்.

இயற்கை மூலிகைகள், மரங்கள், செடி கொடிகள் அதிக அளவில் இங்கு இருப்பதாகவும், இங்கு வந்து செல்லும் பக்தர்கள், ரத்தக்கொதிப்பு, ஆஸ்துமா, நெஞ்சு வலி, மூச்சு இறைப்பு உள்ளோர் குணம் அடைகின்றனர் என்று கூறுகின்றனர். இது அனுபவ பூர்வமாக உணர்ந்த பக்தர்கள் பலர். திருமணம் வரங்கள், விவசாயம், கிணறு வெட்டுதல், புதிய தொழில் துவங்க,வியாதிகள் தீர, முடிவு செய்ய, அர்ச்சனை செய்து சிரசுப்பூ உத்திரவு கேட்டு நல்ல உத்தரவு கிடைத்த பின்பு, காரியத்தை தொடங்குகின்றனர். உத்தரவு கிடைக்கா விட்டால் அந்த காரியத்தை துவங்குவது இல்லை.
இத்தலத்தில் உள்ள சக்தி வாய்ந்த சுப்ரமணிய சுவாமியை வழிபட்டால், கல்யாண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும்,செவ்வாய் தோஷம் நீங்கும், நோய்கள் அகலும், ஆயுள் தீர்க்கமடையும், ஞானம் பெருகும், சுபிட்சமான வாழ்வு கிட்டும் என்பது திண்ணம்.

பால், தயிர் அபிஷேகம்

முருகப் பெருமானுக்கு பால், தயிர் அபிஷேகம் செய்யப்படுகிறது.மேலும் காவடி எடுத்தல், முடிக்காணிக்கை செலுத்துவது, அன்னதானம் செய்வது, காது குத்தும் வைபவம் செய்வது என்பதற்காக பக்தர்கள் அதிக அளவில் கூடுகின்றனர்.

தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் திறந்து இருக்கும். கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், சிறப்பாக கொண்டாடப்படும் விழாக்கள் ஆகும்.

அன்புடன்,
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.12.15

மருதமலை முருகன் கோயில்


மருதமலை முருகன் கோயில்

மருதமலை முருகன் கோயில் , கோயம்புத்தூரிலிருந்து 15 கிமீ தொலைவிலுள்ள மருதமலை மேல் அமைந்துள்ளது. அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற தலமிது. இக்கோவிலின் முதன்மைக் கடவுளான முருகன், இங்கு சுப்பிரமணிய சுவாமி என்றும் தண்டாயுதபாணி என்றும் மருதாசலமூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார். மருதமலையின் அடிவாரத்தில் தான்தோன்றி விநாயகர் என்ற ஒரு சிறிய விநாயகர் கோயிலும் உள்ளது.

முருகப்பெருமானின் ஏழாவது படைவீடாகக் கருதப்படும் மருதமலை, முற்காலத்தில் கொங்கு வேட்டுவ மன்னர்களால் பராமரிக்கப்பட்டு வந்தது. மருதமலை முருகன் கோயில் தற்போது தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலமான திருமுருகன்பூண்டி கோயில் கல்வெட்டுகளில், மருதமலை கோயில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகத் தகவல்கள் உள்ளன.

முருகன் கோயிலுக்கு அருகில் பாம்பாட்டி சித்தரின் குகைக்கோயில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க பதினெட்டு சித்தர்களுள் ஒருவரான பாம்பாட்டி சித்தர், இந்த குகையில் சில காலம் வசித்து வந்தார். பல மூலிகைகளின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்களைப் பற்றிய அவரது குறிப்புகள் மிகவும் சிறப்பானவையாகக் கருதப்படுகிறது.

அமைவிடம்

தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சோமையம்பாளையம் ஊராட்சியில் அமைந்துள்ள மருதமலையின் மீது இக்கோயில் அமைந்துள்ளது. இம்மலை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியைச் சேர்ந்தது. கோயம்புத்தூர் பேருந்து நிலையத்திலிருந்தும், தொடருந்து நிலையத்திலிருந்தும் இங்கு செல்வதற்கு நிறைய பேருந்துகள் உள்ளன. மலை அடிவாரம் வரை தமிழக அரசுப் பேருந்துகள் செல்கின்றன. மலையின் மீது படியேறி கோவிலுக்கு நடந்து செல்லலாம்; அல்லது கோயில் நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கட்டணச் சிற்றுந்துகளில் மலைப்பாதையில் செல்லலாம். தனியார் இரு சக்கர வாகனங்களும் மகிழுந்துகளும் கட்டணம் செலுத்தி மலைப்பாதை மூலம் மேலே கோயிலுக்குச் செல்லலாம்.

அருகிலுள்ள விமான நிலையம்: கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலையம்.

கோயில் அமைப்பு

கல் கொடிமரத்தில் வலம்புரி விநாயகர்

புதியதாக அமைக்கப்பட்ட பாதை இராஜகோபுரத்தின் வழியே நேராக தண்டாயுதபாணி சன்னிதிக்குச் செல்கிறது. இராஜகோபுர நுழைவாயிலைத் தாண்டினால் கல்லாலான கொடிமரத்துக்கு முன் வலம்புரி விநாயகர், அவர்முன் வைக்கப்பட்டுள்ள பெரிய மயில்முக குத்துவிளக்கு, அடுத்து உலோகக் கொடிமரம், மயில்வாகனம், முன்மண்டபத்தில் வரதராஜப் பெருமாள் சன்னிதி, அர்த்தமண்டபத்தில் கருவறையின் நுழைவாயிலின் இருபுறத்திலும் விநாயகரும் (இடப்புறம்) வீரபத்திரரும் (வலப்புறம்), கருவறையில் தண்டத்துடன் காட்சிதரும் தண்டாயுதபாணி என இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. வலம்புரி விநாயகரின் முன்னுள்ள மயில்முக விளக்கின் அடிப்புற ஆமைவடிவமும் அதனைத் தொடர்ந்த மேற்தண்டிலுள்ள பாம்பு உருவங்களும் குறிப்பிடத்தக்கவை.

இது தனிப்பட்ட முருகன் கோயிலாக இருந்தாலும் இங்கு முருகன், சோமாஸ்கந்தனாக வெளிமண்டபத்தில் வலப்புறம் பட்டீசுவரர், இடப்புறம் மரகதாம்பிகை சன்னிதிகளுடன் உள்ளார். மரகதாம்பிகை சன்னிதிக்கு எதிராக வெளி மண்டபத்தில் நவகிரகங்கள் சன்னிதி அமைந்துள்ளது. மற்றும் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேசுவரர் ஆகியோருக்கும் வெளிமண்டபச் சுவற்றில் தனித்தனி சன்னிதிகள் உள்ளன.

மலையின் அடிவாரத்திலிருந்து நடைப்பயணமாகச் செல்லும் போது, பாதையின் தொடக்கத்தில் தான்தோன்றி விநாயகர் சன்னிதியும், சற்று மேலே சென்றால் இடும்பன் சன்னிதியும் அமைந்துள்ளன. மலையின் மீது சென்றதும் அங்கிருந்து கோயிலுக்குச் செல்லும் இறுதிப் படிக்கட்டுகள் ஆதிமூலஸ்தானத்திற்கு நேரெதிராக உள்ளன. இப்பாதைவழிச் செல்பவர்கள் ஆதி மூலஸ்தானத்தில் சுயம்புவாக உள்ள சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையையும் அதற்கடுத்து, பஞ்சமுக விநாயகரையும் வழிபட்டபின் தண்டாயுதபாணி சன்னிதிக்குச் செல்லலாம்.

மருதமலைக் கோயில் - விவரம்
மூலவர் சுப்பிரமணிய சுவாமி/தண்டாயுதபாணி/மருதாசலமூர்த்தி
உற்சவர் அம்மன்/தாயார் வள்ளி, தெய்வயானை
தல விருட்சம் - மருதமரம்
தீர்த்தம் - மருத தீர்த்தம்
ஆகமம்/பூஜை
பழமை சுமார் 800 ஆண்டுகள்
புராண பெயர்
ஆதிமூலஸ்தானம்
மருதமலைக் கோயிலின் ஆதி மூலஸ்தானத்தில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வயானையுடன் மூவரும் சுயம்புலிங்க வடிவில் உள்ளனர். இங்கு வள்ளியின் சுயம்பு உருவம், தெய்வயானையை விட சற்று உயரமாகக் காணப்படுகிறது. ஆதிமூலஸ்தான கருவறை விமானமும், முன்புறம் தைப்பூசக் கல்யாண உற்சவ மண்டபமும் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன.

பாம்பாட்டி சித்தர் குகைக்கோயில்

பாம்பாட்டி சித்தர் சன்னிதி

இக்கோவிலின் தெற்குமூலையில் பாம்பாட்டி சித்தர் குகைக்கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டுகள் கீழிறங்குகின்றன. இக்குகைக்கோயில் சிறு குடைவரை அமைப்பில் உள்ளது. உட்புறத்தில் ஒரு பாறை பாம்பு வடிவில் உள்ளது. பாம்பாட்டி சித்தருக்கு முருகன் பாம்பு வடிவில் காட்சியளித்ததார் என்பது மரபு வரலாறு. பாம்பாட்டி சித்தர் சன்னிதி முன்புறமுள்ள தியான மண்டபத்தில் இங்கு வருகை தருவோர் அமர்ந்து அமைதியாக தியானம் செய்து வழிபடுகின்றனர். தண்டாயுதபாணி கோயில் தலவிருட்சம் இக்கோயிலுக்கு முன்னால் உள்ளது. இக்கோயிலுக்கு இறங்கி வரும் பாதையில் சப்த கன்னியருக்கு ஒரு சிறு சன்னிதி அமைந்துள்ளது.

பஞ்ச விருட்ச விநாயகர்

ஆதிமூலஸ்தானத்திற்கும் முன்மண்டபத்திற்கும் தண்டாயுதபாணி சன்னிதி மண்டபத்திற்கும் இடையே பஞ்ச விருட்ச விநாயகர் சன்னிதி உள்ளது.பொதுவாக அரசமரத்தடியில் காணப்படும் விநாயகர் இங்கு அரசு, அத்தி, வேம்பு, வன்னி, கொரக்கட்டை என ஐந்து மரங்களுக்கடியில் ஐந்து முகங்களுடன் அமைந்துள்ளார். நடைப்பயணமாக மலையேறி வருவோர் இந்த விநாயகரைத் தாண்டிதான் தண்டாயுதபாணி சன்னிதிக்குச் செல்ல வேண்டும்.

நடைபயணப் பாதை

அடிவாரத்திலிருந்து நடைபயணமாக மலையேறும் பாதையில் படிகள் ஆரம்பிக்கும் இடத்தில் தான்தோன்றி விநாயகர் உள்ளார். இப்பாதை ஆதிமூலஸ்தானத்தில் முடிவடைகிறது. இப்பாதையில் செல்வோர் கவனிக்கக்கூடிய முக்கிய இடங்கள்: பதினெட்டாம் படி எனப்படும் முதல் பதினெட்டுப் படிகள்; காவடி சுமந்த வடிவிலுள்ள இடும்பன் கோயில்; குதிரைக் குளம்புச் சுவடு காணப்படும் பாறை.

குடமுழுக்கு விழா

தண்டாயுதபாணி சன்னிதிக்கு நேராக புதியதாக ஏழுநிலை இராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இராஜகோபுர கல்ஹாரம், ஏழுநிலை கோபுரம், தங்கமுலாம் பூசிய ஏழு கலசங்கள், மேல்மண்டபம், இராஜகோபுரத்திற்குச் செல்லும் படிக்கட்டுகள் மற்றும் இராஜ கோபுரத்திலிருந்து மேல் மண்டபத்திற்குச் செல்லும் படிக்கட்டுகள் புதியதாய் இந்து சமய அறநிலைத் துறையால் நிர்மாணிக்கப்பட்டு 2013 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் நாளன்று இக்கோயிலுக்கு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது

திருப்புகழ் பாடல்

அருணகிரிநாதர் திருப்புகழில் மருதமலை முருகனைப் பாடியுள்ளார்.

திரிபுரம் அதனை ஒரு நொடியதனில்
எரிசெய் தருளிய சிவன் வாழ்வே!
சினமுடைஅசுரர் மனமது வெருவ
மயிலது முடுகி விடுவோனே!
பருவரை யதனை உருவிட எறியும்
அறுமுகமுடைய வடிவேலா!
பசலையொ டணையும் இளமுலை மகளை
மதன்விடு பகழி தொடலாமோ!
கரிதிரு முகமும் இடமுடை வயிறும்
உடையவர் பிறகு வருவானே!
கனதனமுடைய குறவர்தம் மகளை
கருணையொ டணையும் மணிமார்பா!
அரவணை துயிலும் அரிதிரு மருக
அணிசெயு மருத மலையோனே!
அடியவர்வினையும் அமரர்கள் துயரும்
அற அருள் உதவு பெருமாளே!

கோவைக்கு வந்து செல்லும் வாய்ப்புக் கிடைத்தால், ஒருமுறையேனும் மருதமலையாண்டவரை தரிசித்து மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
==============================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

11.12.15

வாழ்நாளில் ஒரு முறையேனும் செல்ல வேண்டிய இடம்!

பழமுதிர்ச் சோலை முருகன் கோயில்

----------------------------------------------------------------------
வாழ்நாளில் ஒரு முறையேனும் செல்ல வேண்டிய இடம்!

பக்தி மலர்

பழமுதிர்ச்சோலை

பழமுதிர்ச்சோலை முருகன் கோயில்  மதுரையிலிருந்து பதினைந்து மைல் தொலைவில் அமைந்துள்ளது. முருகனின் ஆறுபடை வீடுகளுள் இது ஆறாவது படை வீடாகும். முருகன் சிறுவனாய் வந்து ஔவையாரை சோதித்தது இங்குதானென நம்பப்படுகின்ற இடம். விஷ்ணு கோயிலான அழகர் கோவில் இதற்கு அண்மையில் அமைந்துள்ளது. அருணகிரிநாதர் இத்தலம் மீது திருப்புகழ் பாடியுள்ளார்.

"சோலைமலை" என்ற பெயரும் இதற்கு உண்டு. இங்குள்ள முருகன் வெற்றிவேல் முருகன் என்று அழைக்கப்படுகின்றார். பழமுதிர்ச்சோலை என்பதற்கு "பழங்கள் உதிர்க்கப் பெற்ற சோலை" என்று பொருள் எடுத்துக் கொள்ளலாம்.

இலக்கியக் குறிப்புகள்

திருமுருகாற்றுப்படையில் வரும் பழமுதிர்ச்சோலை என்பதற்கு பழம் முற்றிய சோலை என்று நச்சினார்க்கினியர் உரை எழுதியிருக்கிறார். கந்தபுராணத் துதிப்பாடலில், வள்ளியைத் திருமணம் செய்ய விநாயகரை யானையாக வந்து உதவும்படி முருகன் அழைத்த தலம் பழமுதிர்ச்சோலை என்று கூறுகிறார் கச்சியப்ப சிவாச்சாரியார். எனவே ஆறாவது படை வீடாகிய பழமுதிர்ச்சோலை, வள்ளி மலையைக் குறிக்கும் என்று ஒருசாரார் தெரிவிக்கின்றனர்.

ஆனால் அருணகிரிநாதர், திருப்புகழில் வள்ளி மலையையும், பழமுதிர்ச்சோலையையும் தனித்தனியே பாடியிருக்கிறார். மேலும் பழமுதிர்ச்சோலையில் இன்றும் காணப்படுகின்ற "நூபுர கங்கை" என்னும் சிலம்பாற்றை பழமுதிர்ச்சோலைத் திருப்புகழில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். அதனால், பழமுதிர்ச்சோலையே முருகனின் ஆறாவது படைவீடாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. பழமுதிர்ச்சோலை முருகனுக்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது. அன்றைய தினம் முருகனுக்கு தேனும் தினை மாவும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.

தல வரலாறு

பழமுதிர் சோலை அருகே சில மரங்களில் நூற்றுக்கணக்கான வௌவால்கள் உள்ளன. அறுபடை வீடுகள் ஒவ்வொன்றிலும் திருவிளையாடல் புரிந்த அழகன் முருகன், இந்தத் தலத்தில், மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஔவையாரிடம் திருவிளையாடல் புரிந்ததாகச் சொல்கிறார்கள்.

தனது புலமையால் புகழின் உச்சிக்குச் சென்ற அவ்வையாருக்கு தான் என்ற அகங்காரம் ஏற்பட்டது. அந்த அகங்காரத்தில் இருந்து அவ்வையை விடுவிக்க எண்ணிய முருகன், அவ்வை மதுரைக்கு காட்டு வழியாக நடந்து செல்லும் வழியில் ஆடு மேய்க்கும் சிறுவனாக தோன்றி வந்தார். அங்கிருந்த ஒரு நாவல் மரத்தின் கிளை ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டார். நடந்து வந்த களைப்பால் அந்த மரத்தின் அடியில் வந்து அமர்ந்தார் அவ்வை. நீண்ட தொலைவு பயணம் செய்திருந்ததால் அவருக்குக் களைப்பையும் தந்திருந்தது. வயிறு பசிக்கவும் செய்தது.

அப்போது, தற்செயலாக அந்த மரக்கிளையில் ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் அமர்ந்திருப்பதைக் கண்டார். அந்த மரத்தில் நிறைய நாவல் பழங்கள் இருப்பதையும் பார்த்தார். உடனே அந்தச் சிறுவனிடம், "குழந்தாய்... எனக்குப் பசிக்கிறது. சிறிது நாவல் பழங்களைப் பறித்துத் தர முடியுமா?" என்று கேட்டார். அதற்கு, சிறுவனாக இருந்த முருகப்பெருமான், "சுட்டப் பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? " என்று கேட்டார்.

சிறுவனின் கேள்வி அவ்வைக்குப் புரியவில்லை. பழத்தில் கூட சுட்ட பழம், சுடாத பழம் என்று இருக்கிறதா? என்று எண்ணிக் கொண்டவர், விளையாட்டாக "சுடாத பழத்தையே கொடுப்பா..." என்று கேட்டுக் கொண்டார்."சுடாத பழம் வேண்டுமா? சரி உலுக்கி விடுகிறேன் சுடாத பழமா பார்த்து எடுத்துக்கோ" என்று கூறி,நாவல் மரத்தின் கிளை ஒன்றை சிறுவனாகிய முருகப் பெருமான் உலுப்ப, நாவல் பழங்கள் அதில் இருந்து கீழே உதிர்ந்து விழுந்தன. அந்தப் பழங்களைப் பொறுக்கிய அவ்வை, அந்தப் பழத்தில் மணல் ஒட்டி இருந்ததால், அவற்றை நீக்கும் பொருட்டு வாயால் ஊதினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவனாகிய முருகப்பெருமான், "என்ன பாட்டி... பழம் சுடுகிறதா?" என்று கேட்டார்.

சிறுவனின் அந்த ஒரு கேள்வியிலேயே அவ்வையின் அகங்காரம் பறந்து போனது. தன்னையே சிந்திக்க வைத்த அந்தச் சிறுவன் நிச்சயம் மானுடனாக இருக்க முடியாது என்று கணித்த அவ்வை, "குழந்தாய்... நீ யாரப்பா? " என்று கேட்டார். மரக்கிளையில் இருந்து கீழே குதித்த சிறுவன் முருகப்பெருமான், தனது சுயஉருவத்தை காண்பித்து அவ்வைக்கு அருளினார்.

இந்தத் திருவிளையாடல் நடந்த நாவல் மரத்தின் கிளை மரம் இன்றும் சோலைமலை உச்சியில் காணப்படுகிறது. சோலைமலை முருகன் கோவிலுக்கு சற்று முன்னதாக இந்த மரத்தை இன்றும் நாம் பார்க்கலாம்.

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் அழகர் மலையில் முருகரின் ஆறாம் படை வீடான பழமுதிர்சோலை உள்ளது. பழமுதிர்ச்சோலைக்கு வரும் பக்தர்கள் குளிக்க இயற்கையாகவே முருகப்பெருமானால் உருவாக்கப்பெற்ற கங்கையாக நூபுரகங்கை தீர்த்தம் விளங்குகிறது. வருடம் முழுவதும் மூலிகைகள் கலந்து வரும் நூபுரகங்கை தீர்த்ததில் நீராடுவதால் பல தோஷங்கள் நிவர்த்தியாகி நம் உடல் புனிதத்துவம் பெற்று ஆரோக்கியமாவது உறுதி. திருக்கோவில் ஊழியர்களால் வரிசையாக டிக்கெட் கொடுக்கப்பட்டு வாளியில் விரும்பும் அளவிற்கு ஊற்றுகிறார்கள் . மிகுந்த சுவையுடைய நூபுர கங்கை தீர்த்தத்தை பலர் வீட்டிற்கு எடுத்துச்செல்கிறார்கள் .

அருணகிரி நாதர்பாடல் : சோலைமலை என அழைக்கப்படும் பழமுதிர்ச்சோலையில் இருந்து சுமார் 500அடி தூரத்தில் இருக்கும் நூபுரகங்கை தீர்த்தத்தை அருணகிரிநாதர் தமது சோலைமலை திருப்புகழில் " ஆயிர முகங்கன் கொண்ட நூபுர மிரங்கு கங்கை" என்று வர்ணிக்கிறார் .இதன் பொருள் ஆயிரம் முகங்கள் கொண்ட நூபுரம் இறங்கும் கங்கை எனலாம் . பாட்டுச்சித்தர் ஸ்ரீ முருகப்பெருமானின் பூரண அருட்கடாச்சம் பெற்ற ஸ்ரீ அருணகிரி நாதரே சொன்ன பிறகு அதன் மகத்துவத்தை நாம் உணரவேண்டும் . மிகவும் பழமை பொருந்திய பழமுதிர்ச்சோலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ வள்ளி தெய்வானை உடனமர் ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோவில் பழமுதிர்சோலையின் முருகரை வணங்க துதி : "எழுமுதி ரைப்புனத்து இறைவி முன்புதன் கிழமுதிர் இளநலங் கிடைப்ப முன்னவன் மழமுதிர களிறென வருதல் வேண்டிய பழமுதிர் சோலையம் பகவற் போற்றுவாம் ."

அமைவிடம் : மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் அழகர் கோயில் நடுமலையில் பழமுதிர் சோலை அமைந்துள்ளது. மதுரையின் சிறப்புகளில் ஒன்றாக விளங்குகிறது பழமுதிர்சோலை. முதல் படைவீடான திருப்பரங்குன்றம் மதுரையில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது அது முருகரின் முதல் படை வீடாகும் .முருகப்பெருமானின் இருபடை வீடுகளை தன்னகத்தே கொண்டுள்ள மதுரை ஒர் அற்புத ஆன்மீக நகராகும் .

மூலவர் : ஸ்ரீ வள்ளி தெய்வானை உடனமர் ஸ்ரீ சுப்பிரமணியர்
ஸ்தல விருட்சம் : நாவல் மரம்
ஔவைக்கு ஸ்ரீ முருகர் காட்சி தந்து நாவற்பழம் கொடுத்த இடம் . இது ஐப்பசிமாதத்தில் மட்டுமே பழம் பழுக்கும் .மற்ற நாவல் மரங்கள் ஆடி ஆவணிமாதத்தில் மட்டும் பழம் பழுக்கும்
தீர்த்தம் : நூபுர கங்கை தீர்த்தம்
திருக்கோவில் சுற்றியுள்ள சன்னதிகள் : முழுமுதற் கடவுளாம் அருள்மிகு வித்தக விநாயகர் தரிசனம் செய்து பின் மூலவரான வள்ளி தெய்வானை உடனமர் ஸ்ரீ சுப்பிரமணியர் தரிசித்து ஸ்ரீ ஆதிவேல் உற்சவர் வணங்கி பின் ஸ்ரீ நாவல் மரத்தடி விநாயகரை பார்த்து வரலாம் .

பழமுதிர் சோலை செல்லும் வழிகள் பஸ் வசதிகள் : மதுரையில் இருந்து அழகர் கோவில் 20 கி.மீட்டர் தொலைவில் கடந்து அழகர்மலை அடிவாரத்தில் இருந்து திருக்கோவில் நிர்வாகத்தால் இயக்கப்படும் சிற்றுந்தின் மூலம் 20நிமிட பயணத்தில் பழமுதிர்ச்சோலையை அடையலாம் .

மதுரையில் இருந்து அழகர்மலை செல்ல காலை 05.00மணியில் இருந்து இரவு 10.00 மணிவரைகள் பஸ்கள் உண்டு. அழகர் மலையில் இருந்து பழமுதிர்சோலை செல்ல திருக்கோவில் நிர்வாகத்தின் பஸ் காலை 06 .00மணி முதல் மாலை05.00மணி வரை பேருந்துகள் இயக்கப்படுகிறது.

பூஜை முறைகள் : மூன்றுகாலப்பூஜைகள் பழமுதிர்ச்சோலையில் நடைபெறுகிறது. காலை அபிஷேகபூஜை 09.00 மணிக்கும் உச்சிகால பூஜை 12.00மணிக்கும் மாலை அபிஷேகபூஜை 05.00மணிக்கும் நடைபெறுகிறது. திருக்கோவில் காலை 0600மணிமுதல் மாலை 0600மணி வரை திறந்தே இருக்கும் .

பழமுதிர்ச்சோலையின் சிறப்புகள் : அழகர்மலையின் அடிவாரத்தில் காக்கும் கடவுள் ஸ்ரீ திருமாலின் வைணவத் திருக்கோவில் அமைந்துள்ளது. மலையின் மேலே பழமுதிர்சோலையில் ஸ்ரீ முருகர் (சைவம் )குடிகொண்டுள்ளார் . சைவ,வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஸ்தலம் . மாமனாகிய திருமாலும் மருமகனாகிய ஸ்ரீமுருகரும் இணைந்த ஸ்தலம் . பழமுதிர்சோலை வருபவர்கள் அழகர் மலையில் திருமாலை வணங்கி விட்டு பின்னர் பழமுதிர்ச்சோலை வருவதே சிறப்பாகும் . ஆறாம் படை வீடு ,மாட்டுக்கார சிறுவனாக வந்து அவ்வையார்க்கு நாவல் பழம் கொடுத்து காட்சி தந்த ஸ்தலம் . பாடல் பெற்ற ஸ்தலம் .

அழகிய கண்ணனும் அழகன் முருகனும் ஆட்சி செய்வதாலேயே இது அழகர் மலையானது.

கந்தபுராணம் இயற்றிய கச்சியப்பர் வியந்து பாடிய ஸ்தலம் .
அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற ஸ்தலம் ,
திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் போற்றிப்புகழ்ந்த அழகு மிகு மலையில் அமைந்துள்ள அற்புத ஸ்தலமே பழமுதிர்சோலையாகும் .

ஸ்தலத்தின் வேறுபெயர்கள் : சோலைமலை, பழமுதிர்ச்சோலை, குலகிரி,குலமலை, விருஷபகிரி,

முடிவுரை : பழமுதிர் சோலை வருகின்றவர்கள் நூபுரகங்கை தீர்த்தத்தில் குளித்து மாற்றிக்கொள்ள ஏதுவாக மாற்றுத்துணிகளுடன் வந்தால் நூபுரகங்கையில் குளித்து விட்டு ஸ்ரீ முருகப்பெருமானை 500மீட்டர் நடந்து வந்து ஸ்ரீ பழமுதிர்ச்சோலையில் முருகப்பெருமானை வணங்கலாம் .

வாழ்நாளில் ஒரு முறையேனும் ஆறாம்படை வீடான பழமுதிர்ச்சோலயில் அருள்பாலிக்கும் ஸ்ரீ முருகரை வணங்கி செல்லுங்கள் .

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

4.12.15

சகலமும் தருவார் தணிகை முருகன்!!!




சகலமும் தருவார் தணிகை முருகன்!!!

பக்தி மலர்

திருத்தணி முருகன் கோயில்

திருவள்ளூர் மாவட்டத்தின் திருத்தணி மலையில் அமைந்துள்ளது
இந்தக் கோயில். ஆண்டின் 365 நாட்களையும் குறிக்கும்படியாக
365 படிகளைக் கொண்டது இந்த மலைக்கோயில். இக்கோயில்
அறுபடை வீடுகளில் ஒன்று. திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரால்
பாடல் பெற்ற தலமிது.

முத்துச்சாமி தீட்சதராலும் பாடப்பட்ட தலம். இக்கோயிலை தணிகை
முருகன் கோயில் என்றும் அழைப்பார்கள்.

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று திருத்தணி. அரக்கோணத்தில்
இருந்து 18 கி.மீ. தூரத்திலும், சென்னைக்கு வடமேற்கே 84 கி.மீ. தூரத்திலும்
இருக்கிறது. இது தொண்டை நாடு என்ற பகுதியில் உள்ளது. தேவர்களுக்குத் தீராத துன்பம் கொடுத்து வந்த சூரபத்மனுடன் போர் புரிந்து

தேவர்களின் துயரத்தை நீக்கி, வள்ளியை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாகப் போர்புரிந்து, கோபம் தணிந்து அமர்ந்த தலம்
திருத்தணிகை. தேவர்கள் பயம் நீங்கிய இடம், முனிவர்கள் காமவெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம். அடியார்களின் துன்பம்,
கவலை, பிணி, வறுமை முதலியவற்றைத் தணிக்கும் இடம்
இத்திருத்தலம்.

திருத்தணி முருகன் கோவில் மிகவும் பழமையானது. அருணகிரிநாதர் இத்தலத்தை போற்றி 63 திருப்பாடல்களை பாடினார். இத்தலம் 600
ஆண்டுகளுக்கு முன்பே புகழ்பெற்று இருந்திருக்கிறது. 1000 ஆண்டுகளுக்கு முன்பே பல்லவ, சோழ மன்னர்களால் இத்தலம் போற்றப்பட்டுள்ளது
என தெரிகிறது. பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், வடலூர் ராமலிங்க
அடிகள், கந்தபைய தேசிகர், கச்சியப்ப முனிவ கச்சியப்ப சிவாச்சாரியார் மற்றும் அருணகிரிநாதர் முதலிய சான்றோர்கள் திருத்தணி முருகனை பெரிதும் புகழ்ந்துள்ளனர்.

சங்க காலப் புலவரான நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படையில் இக்கோயில் குறித்த குறிப்புகள் காணப்படுகிறது. இக்கோயில் விசய
நகர மன்னர்களாலும், உள்ளூர் நிலக்கிழார்களாலும் பேணப்பட்டு வந்தது.

ஆடிக்கிருத்திகை, தைக்கிருத்திகை மற்றும் மாசிக் கிருத்திகை முதலிய சிறப்பு நாட்களில் திருத்தணியில் பக்தகோடிகள் பூ காவடி, பால் காவடி
ஆகிய பிரார்த்தனையை செலுத்துகின்றனர். நூற்றுக்கணக்கான திருப்புகழ் சபையினர் பக்தி பாடல்களை பாடிக்கொண்டும், முருகன் திருநாமங்களை
சொல்லிக்கொண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஏறும்போது, பக்தியில்லாதவனுக்குக் கூட திருத்தணி முருகன் மீது பக்தியை
உண்டாக்கி பரவசப்படுத்தும். சிவபெருமான், திருமால், ஸ்ரீராமர்,
பிரம்மதேவர், கலைமகள் ஆகியோரும் திருத்தணி முருகனை
வணங்கி வழிபட்டதாக புராணங்கள் கூறுகின்றன.

திருத்தணிக்கு செல்லும் பக்தர்கள் முதலில் சரவண பொய்கையில்
நீராட வேண்டும். தோய்த்து உலர்ந்த ஆடை அணிந்து, திருநீறு பூசி உத்திராட்சம் போன்ற சிவசின்னங்களை அணிந்து, பக்தியுடன் மலை ஏறவேண்டும். மலை ஏறும்போது திருப்புகழ் பாடல்களை பாடுவது
சிறப்பு. மலை உச்சியை அடைந்ததும் கிழக்கு பிரகாரத்தில் உள்ள
கொடிக்கம்ப விநாயகரையும், ஐராவத யானையையும் தரிசிக்க வேண்டும். பின்னர் தெற்கில் உள்ள இந்திர நீலச் சுனையை தரிசித்துவிட்டு
கோயிலுக்குள் சென்று ஆபத்சகாய விநாயகர், அருகில் உள்ள வீரவாகு முதலிய நவ வீரர்கள், குமாரலிங்கேஸ்வரரை வணங்க வேண்டும்.

பின்னர் மூலஸ்தானத்தில் உள்ள ஞானசக்திதரர் என்னும் முருகனையும், வள்ளி தெய்வானை அம்மையாரையும் வழிபடுதல் வேண்டும். முருகன்
சன்னதியில் திருநீறு, குங்குமப் பிரசாதங்களுடன் திருமேனிப் பூச்சு
என்னும் சந்தனமும் வழங்கப்படும். இதை உட்கொண்டால் சகல
விதமான நோய்களும் நீங்கி ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும்.

சிறப்பான வசதிகள்

தமிழகத்தின் வடக்கு எல்லையாக விளங்கும் ஊர் திருத்தணி. முருகப் பெருமானின் ஐந்தாம் படை வீடு என்ற பெருமை இத்தலத்துக்கு உண்டு. முருகப் பெருமானின் சக்தி வாய்ந்த திருத்தலங்களில் ஒன்று. இந்த கோயிலில் அமைந்திருக்கும் தங்க விமானம், கோயிலின் சிறப்பை
மேலும் மெருகேற்றியுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த
ஆண்டைவிட இந்த ஆண்டில் ஆடி கிருத்திகை தெப்ப திருவிழாவுக்கு அதிகளவில் மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். இங்கு அமைந்துள்ள
இலவச தங்கும் விடுதி, நவீன வசதிகளுடன் கூடிய கோயில் காட்டேஜ் மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தும் சிறப்பாக இருப்பதால் ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து திருத்தணி முருகனின் அருள்
பெற்று செல்கின்றனர்.

சகலமும் தரும் முருகன்

ஆடிக்கிருத்திகை நன்னாளில் திருத்தணி முருகனை வழிபடுதல் சாலச்சிறந்தது. திருத்தணி முருகன் கோயிலுக்கு சென்று அர்ச்சித்து
இருநெய் விளக்கை முருக பெருமானுக்கு ஏற்றி வழிபாடு செய்வதன்
மூலம் சகல நன்மைகளையும் பெறலாம். முருகப் பெருமானுக்கு உகந்த
இந்த ஆடிக்கிருத்திகை நாளில் மனமுருக வேண்டினால் நல்ல வேலை கிடைக்கும், விவசாயம் மேன்மையடையும், உயர் அதிகாரத்தில்
உள்ளவர்கள் மேலும் சிறப்படைவார்கள். தாழ்வு மனப்பான்மை நீங்கும்,
உடல் ஆரோக்கியம் பெருகும், நல்ல வாழ்க்கைத்துணை அமையும்,
மக்கள் செல்வம், பொருட்செல்வம், அருட்செல்வம் என அனைத்தும் கிடைக்கும்.

திருவிழாக்கள்

டிசம்பர் 31 - படித்திருவிழா
ஆடிக்கிருத்திகை
கந்தசஷ்டி
பங்குனி உத்திரம்
தைப்பூசம்
ஆடித் தெப்பத் திருவிழா

இதுவரை திருத்தணிக் கோயிலுக்கு சென்றிருக்காதவர்கள் ஒருமுறை சென்றுவாருங்கள். தணிகை நாதரின் அருளைப் பெற்றுவாருங்கள்!

அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.11.15

பிரம்மா எதற்காகத் தலையில் குட்டுப் பட்டார்? யாரிடம் குட்டுப் பட்டார்?




அருள்மிகு சுவாமிநாதர் திருக்கோயிலின் முன்புறத் தோற்றம்
---------------------------------------------------------------------------------------------------------------
பிரம்மா எதற்காகத் தலையில் குட்டுப் பட்டார்? யாரிடம் குட்டுப் பட்டார்?

பக்தி மலர்

நான்காவது படை வீடு - சுவாமிமலை முருகன் கோவில் 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் நான்காவது படை வீடாகத் திகழ்வது திருவேரகம் என்று போற்றப்படும் சுவாமிமலை. இங்கு கதிர்வேலனாக முருகப்பெருமான் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். தஞ்சாவூரில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது.

நமது உடலில் உள்ள ஆறு சக்கரங்களில் நான்காவது சக்கரமான `அனாகதம்' எனும் சக்கரத் துடன் இந்த தலத்தை நம்முன்னோர்கள் ஒப்பிட்டு வணங்கியுள்ளனர். அனாகதம் சக்கரம் என்பது ஒருவரது உடம்பில் நெஞ்சுப்பகுதியில் இருப்பதாகும். அதாவது இருதயத்துக்கு நேர் பின்னால் முதுகுத்தண்டில் அனாகதம் சக்கரம் உள்ளது.

இந்த சக்கரம் அன்பு, பாசம், இரக்கம், சகோதரத்துவம், விசுவாசம், பக்தி போன்ற நல்ல இயல்புகளை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. சுவாமி மலையில் வீற்றிருந்து அருளும் முருகனின் பண்புகள், செயல்பாடுகளுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் அனாகதம் சக்கரம் எந்த அளவுக்கு கச்சிதமாக பொருந்தும் என்பது தெரியும்.

முருகப்பெருமான் அன்பு மிக்கவர்.பாசத்தின் ஊற்றாகத் திகழ்கிறார். முருகப்பெருமான் தன் பக்தர்கள் மீது காட்டும் இரக்கத்துக்கு எவ்வளவோ உதாரணங்களைச் சொல்லாம். அது போல அவர் அம்மை, அப்பனிடம் பக்தியும், விசுவாசமும் கொண்டவர். இந்த நற்பண்பு காரணமாகவே அவர் சுவாமி மலையில் தன் தந்தைக்கே பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்தார்.

அது பற்றிய வரலாறு: 

படைப்புத் தொழிலில் ஆணவம் முற்றியிருந்த பிரம்மா, ஒருமுறை முருகப்பெருமானை சந்திக்க நேர்ந்தது. அப்போது பிரம்மாவிடம், படைப்புத் தொழில் செய்யும் உமக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா என்று முருகப் பெருமான் கேட்கிறார். இந்த கேள்விக்கு பிரம்மாவால் பதில் சொல்ல முடியவில்லை.

பிரணவத்தின் பொருள் தெரியாமல் திகைத்தார். அவரை தலையில் குட்டி, சிறையில் அடைத்தார் முருகப்பெருமான். ஈசனே நேரில் வந்து கேட்டுக்கொண்டதால், பிரம்மாவை அவர் விடுதலை செய்தார். பிறகு சிவபெருமான், "பிரணவத்தின் பொருள் உனக்குத் தெரியுமா?'' என்று முருகனிடம் கேட்டார்.

"ஓ நன்றாகத் தெரியுமே'' என்றார் முருகன். "அப்படியானால் அப்பொருளை எனக்குக் கூற இயலுமா?'' என்றார் ஈசன். "உரிய முறையில் கேட்டால் சொல்வேன்!'' என்றார் முருகன். அதன்படி சிவபெருமான் இந்த சுவாமிமலை தலத்தில் சிஷ்யன் நிலையில் அமர்ந்து, முருகப்பெருமானிடம் பிரணவ உபதேசம் கேட்டார்.

இவ்வாறு இறைவனான சிவபெருமானுக்கே முருகன் குருநாதனாக ஆனதால், அவரை சுவாமிநாதன் என்றும், பரமகுரு என்றும், தகப்பன்சாமி என்றும் போற்றுகிறோம். அதனாலேயே இந்த தலமும் சுவாமிமலை என்று பெயர் பெற்றுவிட்டது. இத்தலத்தில் சுவாமிநாதன் நான்கரை அடி உயரத்தில், நின்ற கோலத்தில் கம்பீரமாகக் காட்சித் தருகிறார்.

வலது கரத்தில் தண்டாயுதம் தரித்து, இடது கரத்தை இடுப்பில் வைத்து, சிரசில் ஊர்த்துவ சிகாமுடியும், மார்பில் பூணூலும் ருத்திராட்சமும் விளங்க... கருணாமூர்த்தியாக காட்சித் தருகிறார். முகத்தில் ஞானமும் சாந்தமும் தவழ்வதை கண்குளிரப் பார்க்க முடிகிறது. தத்துவத்தின் அடிப்படையில் பார்த்தால் சுவாமிமலை தலம் காற்று தலமாக உள்ளது. முருகப் பெருமான் கிரியா சக்தியாக உள்ளார்.

வடிவம் என்று எடுத்துக்கொண்டால் சுவாமி மலையில் முருகன் "சொல் வடிவு'' எனும் நிலையில் உள்ளார். அதன்படி அனாகதம் இவ்வுலக சுகத்தைக் தரும் என்பது ஐதீகமாகும். தந்தைக்கு உபதேசம் செய்த இடம் என்பதால், இத்தலத்தில் வழிபடுவர்களுக்கு ஞானம், சுகவாழ்வு, மகிழ்ச்சி எல்லாம் கிடைக்கும்.

மகாமண்டபத்தில் மயிலுக்குப் பதிலாக முருகனுக்கு இந்திரனால் வழங்கப்பட்ட ஐராவதம் என்ற யானை நிற்கிறது. கிழக்கு நோக்கி நின்று திருவருள் பாலிக்கும் சுவாமிநாதனுக்கு, தங்கக் கவசம், வைரவேல், தங்க சகஸ்ர நாம மாலை, ரத்தின கிரீடம் போன்ற பல்வேறு அணிகலன்களும் பூட்டி பக்தர்கள் அழகு பார்க்கின்றனர்.

தலவிருட்சம் நெல்லி : 

நெல்லி மரம் சுவாமிமலையின் தல விருட்சமாகும். நெல்லி மரத்தை வடமொழியில் "தாத்ரி'' என்பர். அதனால் சுவாமிமலையை "தாத்ரிகிரி'' என்றும் குறிப்பிடுகின்றனர். மேலும் சிவகிரி, குருவெற்பு, குருமலை, சுவாமி சைலம் போன்ற பெயர்களும் உண்டு. வடமொழியில் சுவாமிநாதனை "ஞானஸ்கந்தன்'' என்று போற்றுகின்றனர்.

அருணகிரிநாதர் 38 திருப்புகழ்ப் பாடல்களை இந்த சுவாமிநாதனுக்கு பாமாலையாக சூட்டியுள்ளார். சுவாமிமலையைச் சேர்ந்த கடுக்கண் தியாகராஜ தேசிகர் என்பவர் சுவாமிமலை நவரத்தின மாலை என்ற நூலை இயற்றியுள்ளார். "ஒருதரம் சரவணபவா...'' என்று தொடங்கும் நவரத்தின மாலையின் மூன்றாவது பாடல் மிகவும் பிரபலமானது. அவ்வாறே, சங்கீத மூர்த்தி ஸ்ரீமுத்துசுவாமி தீட்சிதர் இயற்றிய, "சுவாமிநாத பரிபாலயாதுமாம்" என்ற நாட்டை ராகக் கிருதியும் மிகவும் பிரபலமானது.

திருவிழாக்கள் விவரம் :   

இங்கு முக்கிய திருவிழாவாக திருக்கார்த்திகை திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது. பிற விழாக்கள் : சித்திரையில் 10 நாள் பிரம்மோற்சவம், வைகாசி விசாகப் பெருவிழா, ஆவணி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் பவித்ரோற்சவம், புரட்டாசி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் நவராத்திரி பெருவிழா, ஐப்பசி மாதத்தில் கந்த சஷ்டி விழா, மார்கழியில் திருவாதிரைத் திருநாள், தை மாதத்தில் தைப்பூசப் பெருவிழா, பங்குனியில் வள்ளி திருக்கல்யாணம் ஆகிய விழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
------------------------------------
திருமண வரம், குழந்தை வரம், குடும்ப ஐஸ்வர்யம், தீர்க்காயுள், கல்வி, கேள்விகளில் சிறந்த ஞானம், உயர் படிப்பு, வேலை வாய்ப்பு, உத்யோக உயர்வு என அனைத்து கோரிக்கைகளுக்கும் இவரை வேண்டி பெருமளவிலான பக்தர்கள் தம் பிராத்தனைகள் நிறைவேறிட, வணங்கிச் செல்கின்றனர்.

சுவாமிநாதனை வழிபட்டால் நமக்கு வரும் இடையூறுகள், நோய்கள், பிராணிகள், பூதம், தீ, நீர், வெள்ளம், செய்த பாவம் ஆகியவற்றால் விளையும் தீமைகள் விலகும் என்பது நிச்சயம்.

கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து ஏராளமான சிற்றுந்துகள் சுவாமி மலைக்கு இயக்கப்படுகின்றன. சிற்றுந்துகள் வழியாக சுவாமிமலை முருகன் கோயில் அருகே சென்று இறங்கி அங்கிருந்து நடந்து செல்லலாம்.

இதுவரை இத்தலத்திற்கு சென்றிருக்காதவர்கள், ஒருமுறை சென்று வாருங்கள். சுவாமிநாதனின் அருளைப் பெற்று வாருங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
--------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

13.11.15

திருமணத்தடை உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்?


திருமணத்தடை உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்!

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய
சுவாமி கோயில் பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக்
குறிப்பிடப்படுகின்ற இந்துக் கடவுளான முருகனுக்குரிய அறுபடை
வீடுகளில் இரண்டாம் படை எனப் போற்றப்படும் மிகச் சிறப்புமிக்க கோயிலாகும்.

தூத்துக்குடி மாவட்டத்தில், மன்னார் வளைகுடாவை ஒட்டி
அமைந்துள்ள இக்கோயில் சென்னையில் இருந்து 600 கி.மீ
தொலைவில் உள்ளது. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோயில் 2000 ஆண்டுகள் வரை பழமை
கொண்டதாகக் கருதப்படுகின்றது.

முருகப்பெருமானுக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள  கோயில் இதுவாகும். இக்கோயில் அமைந்துள்ள இடம் “திருச்சீரலைவாய்”
என முன்னர் அழைக்கப்பட்டது.

தல வரலாறு

தேவர்கள் தங்களை தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற
சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினார். பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார். இவ்வேளையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான
வியாழ பகவான் இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்கு காட்சி தந்த முருகப்பெருமான், இவ்விடத்தில் தங்கினார். அவர் மூலமாக
அசுரர்களின் வரலாறையும் தெரிந்து கொண்டார். அப்போது தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினார். அவன் கேட்கவில்லை.

பின்பு, முருகன் தன் படைகளுடன் சென்று, அவனை வதம் செய்தார்.
வியாழ பகவான், முருகனிடம் தனக்கு காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார். பின்பு, வியாழ பகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்கு கோயில் எழுப்பினார்.

முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் இவர், "செயந்திநாதர்'
என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே "செந்தில்நாதர்' என
மருவியது. தலமும் "திருஜெயந்திபுரம்' (ஜெயந்தி - வெற்றி) என அழைக்கப்பெற்று, "திருச்செந்தூர்' என மருவியது.

கோயில் அமைப்பு

முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும்
கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாகவும் அமைந்துள்ளன.
150 அடி உயரம் கொண்ட இக் கோயிலின் கோபுரம், ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்ட
பின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக சிவபூஜை செய்தார்.
இந்த கோலத்திலேயே முருகன் வலது கையில் தாமரை மலருடன் அருளுகிறார்.

தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார்.
இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கிறது. இவருக்கு
முதல் தீபாராதனை காட்டியபின்பே, முருகனுக்கு தீபராதனை நடக்கும். சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது.
இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில்
மட்டுமே காண முடியும்.

பஞ்சலிங்க தரிசனம்

இதுதவிர முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் "பஞ்சலிங்க' சன்னதியும் இருக்கிறது. இவர்களை மார்கழி மாதத்தில் தேவர்கள் தரிசிக்க வருவதாக
ஐதீகம். சிவனுக்குரிய வாகனமான நந்தியும், முருகனுக்கு எதிரே இந்திர,
தேவ மயில்களும் மூலஸ்தானம் எதிரே உள்ளன.

வெளியிலிருந்தபடி முருகரை தரிசனம் செய்யும்போதே பஞ்சலிங்க
தரிசனம் செய்ய இயலாது. மூலவர் முருகரின் இடதுபுறம் உள்ள சிறு
வாயில் வழியே உள்ளே நுழைந்து சுற்றி வலது புறம் வந்து பாதாள
பஞ்சலிங்க தரிசனம் செய்ய வாரநாட்களில் இயலும்.இதற்கு கோயில்
சார்பில் ஐந்து ரூபாய் கட்டண நுழைவுச்சீட்டு உண்டு. கூட்டநெரிசல்
அதிகம் உள்ள சமயம் இந்த நுழைவுச்சீட்டு வழங்கப்படுவதில்லை.

ராஜகோபுரம்

திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு
நோக்கி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில்
கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக
இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி
விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள்
மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே
செல்ல அனுமதி கிடையாது.

திறக்கும் நேரம்:

காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

பொதுத தகவல்கள்

தமிழகத்தில் முருகனுக்கு பல தலங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட ஆறு தலங்கள் படைவீடாகக் கருதி வழிபடப்படுகிறது. போர் புரியச் செல்லும்
தளபதி, தனது படைகளுடன் தங்கியிருக்கும் இடம் "படைவீடு' எனப்படும். அவ்வகையில் சூரபத்மனை வதம் செய்யச் சென்ற முருகப்பெருமான்,
படைகளுடன் தங்கியிருந்த தலம் திருச்செந்தூர் மட்டுமே ஆகும். ஆனால், மற்ற ஐந்து தலங்களையும் சேர்த்து, "ஆறுபடை வீடு'    என்கிறோம். வறுமையில் வாடும் ஒருவரிடம், வறுமையை வென்ற ஒரு வர்,
வள்ளல்கள் இருக்குமிடத்தைச் சுட்டிக்காட்டி, அங்கு சென்றால் அவரது
வறுமை தீரும் என்று சொல்லி அவரை ஆற்றுப்படுத்துவார். இந்த வகையில் அமைந்த நூல்கள் சங்க காலத்தில், "ஆற்றுப்படை' எனப்பட்டது. இவ்வாறு
மக்களின் குறைகளைப் போக்கி, அருள் செய்யும் முருகன் இந்த ஆறு இடங்களில் உறைகிறார். அவரிடம் சென்று சரணடைந்தால் அவரது
அருள் கிடைக்கும் என்ற பொருளில் நக்கீரர் ஒரு நூல் இயற்றினார். முருகனின் பெருமைகளைச் சொல்லும் நூல் என்பதால் இது, "திருமுருகாற்றுப்படை' (திருமுருகன் ஆற்றுப்படை) என்று பெயர்
பெற்றது. பிற்காலத்தில் இந்த ஆற்றுப்படை தலங்களே மருவி, "ஆறுபடை' என்றானது. அவர் பாடிய வரிசையிலேயே, ஆறுபடை வீடுகள்
அமைந்துள்ளது.

பிரார்த்தனை

திருமணத்தடை உள்ளவர்கள் இத்தல இறைவனிடம் வேண்டிக்கொள்ள
நல்ல வரன் அமையும் என்கிற நம்பிக்கை இந்து சமய மக்களிடம்
உள்ளது.சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். திருச்செந்தூரில் முருகனுக்கு தினமும்
9 கால பூஜை நடக்கிறது. இப்பூஜைகளின்போது சிறுபருப்பு பொங்கல், கஞ்சி, தோசை, அப்பம், நெய் சாதம், ஊறுகாய், சர்க்கரை கலந்து பொரி,
அதிரசம், தேன்குழல், அப்பம், வேக வைத்த பாசிப்பருப்பு, வெல்லம் கலந்த உருண்டை என விதவிதமான நைவேத்தியங்கள் படைக்கப்படுகிறது.
கங்கை பூஜை தினமும் உச்சிக்கால பூஜை முடிந்தபின்பு, ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு மேள, தாளத்துடன் சென்று கடலில் கரைக்கின்றனர். இதனை, "கங்கை பூஜை' என்கின்றனர். இங்குள்ள சரவணப்பொய்கையில், ஆறு தாமரை மலர்களில் முருகன் ஆறு
குழந்தைகளாக தவழ, நடுவே கார்த்திகைப்பெண்கள் இருக்கும் சிற்பம் வடிக்கப்பட்டிருக்கிறது.

கந்த சஷ்டி

முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக
கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தது.
எனவே, கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமரிசையாகக்
கொண்டாடப்படுகிறது.

கந்தசஷ்டி கொண்டாடுவது ஏன்? சூரபத்மன் வதம் தவிர்த்து, கந்த சஷ்டி
விழா கொண்டாடப்படுவதற்கு, வேறு இரண்டு காரணங்களும் இருப்பதாக
மகாபாரதம், கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.ஒருசமயம் முனிவர்கள்
சிலர், உலக நன்மைக்காக ஒரு புத்திரன் வேண்டுமென்பதற்காக யாகம்
ஒன்று நடத்தினர். ஐப்பசி மாத அமாவாசையன்று யாகத்தை துவங்கி,
ஆறு நாட்கள் நடத்தினர். யாக குண்டத்தில் எழுந்த தீயில் இருந்து,
ஒவ்வொரு நாளும் ஒரு வித்து வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அந்த வித்துக்களை ஆறாம் நாளில் ஒன்றாக்கிட, முருகப்பெருமான் அவதரித்தார்.

இவ்வாறு முருகன் அவதரித்த நாளே கந்தசஷ்டி என மகாபாரதம் கூறுகிறது.கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார், தேவர்கள்,
அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெறவும், அவரது அருள் வேண்டியும்
ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருளச்செய்து, நோன்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள்செய்தார். இதனை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பசி
அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது என்கிறார்.

சஷ்டி யாகம்

திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவின் முதல் நாள் அதிகாலையில்,
ஹோம மண்டபத்திற்கு மூலவரின் பிரதிநிதியாக வள்ளி,
தெய்வானையுடன் ஜெயந்திநாதர் (முருகன்) எழுந்தருளுவார்.
அறுகோண வடிவில் அமைக்கப்பட்ட ஹோம குண்டத்தில் முருகனின் வெற்றிக்காக யாகம் துவங்கும்.

குண்டத்தை சுற்றிலும் சிவன், அம்பிகை, நான்கு வேதங்கள், முருகன்,
வள்ளி, தெய்வானை, மகாவிஷ்ணு, விநாயகர், சப்தகுருக்கள், வாஸ்து பிரம்மா, தேவர்கள், சூரியன், அஷ்டதிக்பாலகர்கள், துவாரபாலகர்கள்
என அனைத்து தேவதைகளையும் கும்பத்தில் எழுந்தருளச் செய்வர். உச்சிக்காலம் வரையில் நடக்கும் யாகசாலை பூஜை முடிந்தவுடன் ஜெயந்திநாதர், சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுவார். ஆறாம் நாளன்று வள்ளி, தெய்வானை இல்லாமல் தனித்து கடற்கரைக்கு எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்வார். அதன்பின், வெற்றி வேந்தராக வள்ளி, தெய்வானையுடன் யாகசாலைக்கு திரும்புவார்.

கண்ணாடிக்கு அபிஷேகம்

ஜெயந்திநாதர், சூரனை சம்ஹாரம் செய்தபின்பு பிரகாரத்திலுள்ள
மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுவார். அப்போது சுவாமியின் எதிரே
ஒரு கண்ணாடி வைக்கப்படும். அர்ச்சகர், கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வார். இதை சாயாபிஷேகம் என்பர்.

"சாயா' என்றால் "நிழல்' எனப்பொருள். போரில் வெற்றி பெற்ற
முருகனை குளிர்விக்கும் விதமாக இந்த அபிஷேகம் நடக்கும். இதை,
முருகப்பெருமானே, கண்ணாடியில் கண்டு மகிழ்வதாக ஐதீகம். இந்நிகழ்ச்சிக்குப்பின்பு, முருகன் சன்னதிக்கு திரும்புவார். இத்துடன் சூரசம்ஹார வைபவம் நிறைவடையும்.

தெய்வானை திருக்கல்யாணம்

சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக
இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு
தேவ மயிலாகவும் மாறி சேவை செய்தார். இவர்களது திருமணம்
முதல்படைவீடான திருப்பரங்குன்றத்தில் நடந்தது. சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரில் கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகன்,
தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று காலையில் தெய்வானை தபசு மண்டபம் சென்று, முருகனை மணந்து கொள்ள வேண்டி
தவமிருப்பாள். மாலையில் குமரவிடங்கர் (முருகனின் ஒரு உற்சவர்
வடிவம்), முருகனின் பிரதிநிதியாக மயில் வாகனத்தில் தபசு மண்டபம் சென்று தெய்வானைக்கு மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்து கொள்கிறார். நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள, அங்கு
திருமணம் நடக்கும். மறுநாள் சுவாமி, தெய்வானையுடன் வீதியுலா செல்கிறார். அடுத்த மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில்
ஊஞ்சலில் காட்சி தருவார்.

முருகனுக்கு மஞ்சள் நீராட்டு

கிராமங்களில் திருவிழாவின்போது, கன்னிப்பெண்கள் தங்க ளது முறைப்பையனுக்கு மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர். இத்தலத்திலும் இவ்வாறு
முருகனுக்கு மஞ்சள் நீராட்டும் வைபவம் நடக்கும். கந்தசஷ்டி விழாவின் கடைசி நாளில் முருகன், தெய்வானையுடன் வீதியுலா செல்வார். அப்போது,
பக்தர்கள் தங்கள் ஊரில் திருமணம் செய்து கொண்ட முருகனை வரவேற்கும் விதமாகவும், போரில் வென்றதன் உக்கிரத்தைக் குறைக்கும்
விதமாகவும் அவர் மீது மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர்.

மும்மூர்த்தி முருகன்

திருச்செந்தூர் கோயில் யானை

முருகப்பெருமான் சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர். ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை தந்தைக்கே குருவாக இருந்து
உபதேசித்தவர். அதே மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மாவை,
சிறையில் அடைத்தவர். சூரனை சம்ஹாரம் செய்து, பின்
மகாவிஷ்ணுவின் மகளை மணந்து கொண்டவர். மாமனான மகாவிஷ்ணுவின் பாசத்திற்கு கட்டுப்பட்டவர். இவ்வாறு முருகன், மும்மூர்த்திகளோடும் தொடர்புடையவராக இருக்கிறார். இதனை உணர்த்தும்விதமாக திருச்செந்தூரில் முருகப்பெருமான், மும்மூர்த்தி
களின் அம்சமாக காட்சி தருகிறார்.

ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாவின்போது சிவன், விஷ்ணு, பிரம்மா
என மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். விழாவின் 7ம் நாளன்று
மாலையில் இவர் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி சிவபெருமானாக காட்சி தருகிறார். மறுநாள் (8ம்நாள்) அதிகாலையில் இவர் வெண்ணிற ஆடையில்
பிரம்மாவின் அம்சமாக அருளுவார். மதிய வேளையில் பச்சை வஸ்திரம் சாத்தி பெருமாள் அம்சத்தில் காட்சியளிக்கிறார்.

நான்கு உற்சவர்கள்

பொதுவாக கோயில்களில் ஒரு தெய்வத்துக்கு, ஒரு உற்சவர் சிலை
மட்டுமே இருக்கும். ஆனால், திருச்செந்தூர் கோயிலில் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள் என நான்கு
உற்சவர்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்குமே தனித்தனி சன்னதிகள் இருப்பது சிறப்பு.இவர்களில் குமரவிடங்கர், "மாப்பிள்ளை
சுவாமி' என்றழைக்கின்றனர்.

சந்தனமலை

முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும்
கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாக அமைந்தது போலவும் தோற்றம் தெரியும். உண்மையில், திருச்செந்தூரும் மலைக்கோயிலே
ஆகும். இக்கோயில் கடற்கரையில் இருக்கும் "சந்தனமலை'யில் இருக்கிறது. எனவே இத்தலத்தை, "கந்தமாதன பர்வதம்' என்று சொல்வர். காலப்
போக்கில் இக்குன்று மறைந்து விட்டது. தற்போதும் இக்கோயிலின்
இரண்டாம் பிரகாரத்தில் பெருமாள் சன்னதி அருகிலும், வள்ளி குகைக்கு அருகிலும் சந்தன மலை சிறு குன்று போல புடைப்பாக இருப்பதைக் காணலாம்.

குருப் பெயர்ச்சி

திருச்செந்தூரில் முருகன் "ஞானகுரு'வாக அருளுகிறார். அசுரர்களை அழிக்கும் முன்பு, குருபகவான் முருகனுக்கு அசுரர் களை பற்றிய
வரலாறை இத்தலத்தில் கூறினார். எனவே இத்தலம், "குரு தலமாக' கருதப்படுகிறது. பிரகாரத்தில் உள்ள மேதா தெட்சிணாமூர்த்தி கூர்மம்,
அஷ்ட நாகங்கள் அஷ்ட யானைகள், மேதா மலை என நான்கு
ஆசனங்களின் மீது அமர்ந்திருக்கிறார். இவருக்கு பின்புறம் உள்ள
கல்லால மரத்தில் 4 வேதங்களும், கிளிகள் வடிவில் இருக்கிறது. அறிவு, ஞானம் தரும் மூர்த்தியாக அருளுவதால் இவரை, "ஞானஸ்கந்த மூர்த்தி' என்று அழைக்கிறார்கள். வழக்கமாக கைகளில் அக்னி, உடுக்கையுடன்
காட்சி தரும் தெட்சிணா மூர்த்தி, இங்கு மான், மழுவுடன் காட்சி தருகிறார். குருப் பெயர்ச்சியன்று திருச்செந்தூர் முருகனை வணங்கினால், குருவினால் உண்டாகும் தீய பலன்கள் குறையும்.

இரண்டு முருகன்

சூரனை சம்ஹாரம் செய்ய வந்த முருகன், இத்தலத்தில் சுப்பிரமணியாக நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். இவர் வலது கையில் மலர் வைத்து,
சிவபூஜை செய்தபடி தவக்கோலத்தில் இருப்பது சிறப்பான அமைப்பு. இவரது தவம் கலைந்துவிடக்கூடாது என்பதற்காக, இவருக்கு பிரகாரம்
கிடையாது. இவருக்கான பிரதான உற்சவர் சண்முகர், தெற்கு நோக்கி தனி சன்னதியில் இருக்கிறார். இவரை சுற்றி வழிபட பிரகாரம் இருக்கிறது.
மூலவருக்குரிய பூஜை மற்றும் மரியாதைகளே இவருக்குச் செய்யப்படுகிறது.

தீபாவளிக்கு புத்தாடை ஊர்வலம்

மகாவிஷ்ணு, நரகாசுரனை அழித்து மக்கள் இன்புற்ற தீபாவளி நாளில் அனைவரும் புத்தாடை உடுத்தி மகிழ்கிறோம். திருச்செந்தூர் கோயிலிலும்
அனைத்து சுவாமிகளுக்கும் தீபாவளியன்று புத்தாடை அணிவிக்கப்படுகிறது. அன்று அதிகாலையில் இக்கோயிலில் உள்ள அனைத்து பரிவார
தெய்வங்களுக்கும் சந்தன காப்பு செய்யப்படுகிறது. பின் புத்தாடைகளை வெள்ளி பல்லக்கில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்று,
அணிவிக்கின்றனர். இதை, தெய்வானையை, முருகன் மணம் முடிக்க காரணமாக இருந்த தலம் என்பதால், இந்திரன் இத்தலத்தில் மருமகனுக்கும்,
அவரைச் சார்ந்தவர்களுக்கும் தீபாவளிக்கு புத்தாடை எடுத்து தருவதாக ஒரு நம்பிக்கை உள்ளது.

திருவிழா

பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, வைகாசி விசாகம், கந்த சஷ்டி முருகத்தலங்களில் கந்தசஷ்டிவிழா ஆறு நாட்களே நடக்கும். சில
தலங்களில் சஷ்டிக்கு மறுநாள் முருகன் திருக்கல்யாணத்துடன் சேர்த்து
ஏழு நாட்கள் நடத்துவர். ஆனால், திருச்செந்தூரில் கந்தசஷ்டி முதல் ஆறுநாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த 5 நாட்கள், சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை. என இவ்விழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

தமிழ் இலக்கியங்களில்

தமிழ் இலக்கியங்களில் திருச்செந்தூர் அலைவாய், சீரலைவாய் என்கிற பெயர்களில் போற்றப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்கள்

தொல்காப்பியம்
முருகன் தீம்புனல் அலைவாய் - தொல்காப்பியம் (களவு சூத்23)

புறநானூறு
வெண்டலைப் புனரி யலைக்குஞ் செந்தில்
நெடுவேல் நிலைஇய காமர் வியன்துறை (பாடல் 55)

அகநானூறு
திருமணி விளக்கினலை வாய்ச்செரு மிகுசேஎய் (பாடல் 266)

திருமுருகாற்றுப்படை
உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர் அலைவாய்

சிலப்பதிகாரம்
சீர் கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்

தேவாரப் பதிகம்
நஞ்செந்தில் மேய வள்ளிமணாளற்குத் தாதை கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே

அருணகிரிநாதர் பாடல்
இக்கோயில் குறித்தும், முருகப்பெருமான் குறித்தும் அருணகிரிநாதரின் பாடல் இது.

அந்தண்மறை வேள்வி காவற் கார செந்தமிழ் சொல் பாவின் மாலைக் கார அண்டரூப கார சேவற் கார முடிமேலே -
அஞ்சலிசெய் வோர்கள் நேயக் காரகுன்றுருவ ஏவும் வேலைக் காரஅந்தம்வெகு வான ரூபக் கார எழிலான;
சிந்துரமின் மேவு போகக் காரவிந்தைகுற மாது வேளைக் காரசெஞ்சொலடி யார்கள் வாரக் கார எதிரான -
செஞ்சமரை மாயு மாயக் காரதுங்கரண சூர சூறைக் கார செந்திநகர் வாழு மாண்மைக் கார பெருமாளே.

Source: vikipedia
===================================================================
இன்றைய பக்தி மலர் எப்படி உள்ளது? ஒரு வார்த்தை சொல்லிவிட்டுச் செல்லுங்கள்.
அன்புடன், 
வாத்தியார்
--------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.11.15

தினமும் ரசம் உடல் நலம் உங்கள் வசம்!


தினமும் ரசம் உடல் நலம் உங்கள் வசம்!       

ரசம் பற்றிய ஒரு அலசல்

சித்த வைத்திய முறைப்படி நம் உணவில் தினசரி துணை உணவுப்
பொருட்களாக வெள்ளைப் பூண்டு, பெருங்காயம், மிளகு, சீரகம்,
புதினாக்கீரை, கறிவேப்பிலை, கொத்துமல்லிக் கீரை, கடுகு, இஞ்சி
முதலியன சேர வேண்டும்.

இந்த ஒன்பது பொருட்களும்  ஆங்காங்கே நம் உணவில் சேருகிறது என்றாலும், ஒட்டு மொத்தமாகச் சேர்வது ரசத்தில்தான்.
புளிரசம்,
எலுமிச்சை
ரசம், மிளகு ரசம்,
அன்னாசிப் பழரசம்,
கொத்துமல்லி ரசம்
என்று பலவிதமான  சுவைகளில் ரசத்தைத்  தயாரித்தாலும் இந்தப்
பொருட்கள் பெரும்பாலும் தவறாமல் இடம் பெற்றுவிடும்.
பல நோய்களைக் குணமாக்கும் மாற்று  மருந்து (Antidote) தான் இந்த
ரசம்.

வைட்டமின் குறைபாடுகளையும் தாது உப்புக் குறைபாடுகளையும் இது
போக்கிவிடுகிறது. அயல்  நாட்டினர்  உணவு முறையில் சூப்புக்கு
முதலிடம் கொடுத்துள்ளனர்.

இது, ரசத்தின் மறுவடிவமே. ரசமோ, சூப்போ எது சாப்பிட்டாலும்
பசியின்மை, செரியாமை,  வயிற்று உப்புசம், சோர்வு, வாய்வு,
ருசியின்மை, பித்தம் முதலியன உடனே பறந்து போய்விடும்.

சித்த வைத்தியப்படி உணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும்
இந்தியர்கள் பின்பற்றுவது ரசத்தைப் பொறுத்தவரை 100 சதவிகிதம்
பொருந்தும்.

ரசத்தில் போடப்படும் சீரகம், வயிற்று உப்புசம், தொண்டைக்
குழாயில் உள்ள சளி, கண்களில் ஏற்படும் காட்ராக்ட் கோளாறு,
ஆஸ்துமா முதலியவற்றைக் குணப்படுத்துகிறது.

ரசத்தில் சேரும் பெருங்காயம் வயிறு சம்பந்தமான கோளாறுகள்
அனைத்தையும் குணப்படுத்துகிறது. வலிப்பு நோய் வராமல்
தடுக்கிறது. மூளைக்கும்  உடலுக்கும் அமைதியைக் கொடுக்கிறது.
 நரம்புகள் சாந்தடைவதால்  நோய்கள் குணமாகின்றன.
அபார்ஷன் ஆகாமல் தவிர்த்துவிடுகிறது. புரதமும்  மாவுச்சத்தும்
 பெருங்காயத்தில் தக்க அளவில் உள்ளது.

கொத்துமல்லிக்கீரை ரசத்தில் சேர்வதால்,காய்ச்சல்  தணிந்து
சிறுநீர் நன்கு வெளியேறுகிறது.  உடல்  சூடு, நாக்கு வறட்சி முதலியன
அகலுகின்றன. கண்களின் பார்வைத் திறன் அதிகரிக்கிறது.
மாதவிலக்கு  சம்பந்தமான கோளாறுகள்  வராமல் தடுக்கிறது.
வயிற்றிற்கு உறுதி தருவதுடன் குடல் உறுப்புகள்  சிறப்பாகச்
செயல்படவும், செரிமானக் கோளாறுகளைத் தடுக்கவும்,
நீரிழிவு, சிறுநீரக் கோளாறு முதலியவை இருந்தால் அவற்றைக்
குணப்படுத்தவும், ரசத்தில் சேரும்  கறிவேப்பிலை உதவுகிறது.
கறிவேப்பிலையை ஒதுக்காமல் மென்று தின்பது நல்லது.

கறிவேப்பிலையால்  ரசம் மூலிகை டானிக்காக உயர்ந்து
 நிற்கிறது. ரசத்தில் சேரும் வெள்ளைப்பூண்டு, ஆஸ்துமா, இதயக்
கோளாறு, குடல் பூச்சிகள்,  சிறுநீரகத்தில் உள்ள கற்கள்,
 கல்லீரல் கோளாறுகள் முதலியவற்றைக் கட்டுப் படுத்துகிறது.
 இதயத்திற்கு  இரத்தத்தைக் கொண்டு செல்லும் குழாய்கள்
தடித்துப் போகாமல் பார்த்துக் கொள்கிறது. தக்க அளவில்
புரதமும் நோய்களைக் குணமாக்கும் ‘பி’ வைட்டமின்களும்,
‘சி’வைட்டமின்களும் பூண்டில் இருப்பதால் நுரையீரல்
கோளாறு, காய்ச்சல் போன்றவையும் எட்டிப் பார்க்காது.

தலைவலி,தொடர்ந்து இருமல், மூக்கு ஒழுகுதல் போன்றவை
ரசத்தில் சேரும்  இஞ்சியால் எளிதில் குணம் பெறுகின்றன.

மூச்சுக்குழல், ஆஸ்துமா, வறட்டு இருமல், நுரையீரலில்
காசம்  முதலியவற்றையும் குணமாக்கி,  குளிர்காய்ச்சலையும்
தடுக்கிறது இஞ்சி.

ஜலதோஷம், காய்ச்சல், நரம்புத் தளர்ச்சி, மலட்டுத்தன்மை
முதலியவற்றை ரசத்தில்  சேரும் மிளகு, சக்தி  வாய்ந்த
உணவு மருந்தாக இருந்து குணப்படுத்துகிறது. தசைவலியும்,
மூட்டுவலியும் குணமாகின்றன. வாதம், பித்தம், கபம் வராமல்
தடுக்கிறது.

ரசத்தில் சேரும் கடுகு உடம்பில்  குடைச்சல், தலை சுற்றல்
முதலியவற்றைத் தடுக்கிறது. வயிறு சம்பந்தமான  கோளாறுகளை
நீக்கி வயிற்றைச் சுத்தமாக  வைத்திருக்க  உதவுகிறது.  ரசத்தில்
புளியின்  அளவை மட்டும் மிகக்  குறைவாகச்  சேருங்கள்.

 மழைக்காலத்தில்  உடல் நலத்தைக் காத்து முன்கூட்டியே
நோய்களைத் தடுத்துவிடுவதால்,  ரசத்தின் உதவியால்
ஜலதோஷம், ப்ளூ காய்ச்சல் இன்றி வாழலாம்.

வெயில் காலத்தில் நாக்கு வறட்சி, அதிகக்  காப்பி, டீ
 முதலியவற்றால் வரும்  பித்தம் முதலிய  வற்றையும், தினசரி
 உணவில் சேரும் ரசம் உணவு மருந்தாகக் குணப்படுத்தும்.

எனவே,  ரசம் என்னும் சூப்பர் திரவத்தைக் கூடியவரை தினமும்
உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்

இணையத்தில் படித்தேன். உங்களுக்குப் பயன்படட்டும் என்று பதிவில் ஏற்றியுள்ளேன்!

அன்புடன்,
வாத்தியார்
=======================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

13.10.15

இன்முகம் காட்டி நெஞ்சை இழுக்கின்ற வாசல் அது!

இன்முகம் காட்டி நெஞ்சை இழுக்கின்ற வாசல் அது!

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப் பெருமான் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------
ஆறுமுகன் வாசம் செய்யும் ஆலயத் திருவாசல்
அலைக் கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல்
(ஆறுமுகன் ... )

அலைக் கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல்
ஏறுமயில் ஏறிவரும் இறைவனின் தலை வாசல் 
எண்ணற்றக் காவடிகள் எடுத்தாடும் எழில் வாசல் 
(ஆறுமுகன் ... )

ஏழைமுகம் பார்த்திறங்கும் ஈராறு விழி வாசல் 
இன்முகம் காட்டி நெஞ்சை இழுக்கின்ற மன வாசல் 
வாழையடி வாழை என வாழ வரம் தரும் வாசல் 
வானவரும் வந்திறங்கி வணங்கி நலம் பெரும் வாசல்
(ஆறுமுகன் ... )

பொங்கும் சரவணப்பொய்கை போகின்ற தனி வாசல்
புலவோர்கள் நா துதிக்கும் புகழ் திருப் புகழ் வாசல் 
சங்கும் முரசும் முழங்கும் சங்கீதம் தவழ் வாசல் 
சக்தி வடிவேல் முருகன் சன்னிதியைத் தொழும் வாசல் 
இளைத்தாரும் களைப்பாற இளம் தென்றல் வரும் வாசல்
நீலவர்க்கும் ஞானியர்க்கும் இன்பம் தரும் ஒரு வாசல்
மலைத்தேனும் தினைமாவும் மணம் வீசும் மலர் வாசல் 
மால் மருகன் திருச்செந்தூர் மகராசன் எழும் வாசல் 
(ஆறுமுகன் ... )

அலைக் கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல்
ஏறுமயில் ஏறிவரும் இறைவனின் தலை வாசல்
எண்ணற்றக் காவடிகள் எடுத்தாடும் எழில் வாசல்
(ஆறுமுகன் ... ).

பாடிப்பரவசப் படுத்தியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள் 
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.10.15

தேரில் வந்தவன் நேரில் தந்தது என்ன?


தேரில் வந்தவன் நேரில் தந்தது என்ன?

பக்தி மலர்

6.10.2015

இன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப்
பெருமான் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும்
படித்து மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------
பழநி என்னும் ஊரிலே ... பழநி என்ற பேரிலே
பவனி வந்தான் தேரிலே ... பலனும் தந்தான் நேரிலே
முருகன் ... பலனும் தந்தான் நேரிலே.

பழமுதிரும் சோலையிலே ... பால் காவடி ஆடிவர
தணிகை மலை தென்றலிலே ... பன்னீர் காவடி ஆடிவர
சாமிமலை கோயிலிலே ... சர்க்கரை காவடி ஆடிவர 
செந்தூரின் வாசலிலே ... சந்தனக் காவடி ஆடிவர 

குமரன் ...
பழநி என்னும் ஊரிலே ... பழநி என்ற பேரிலே

பரங்குன்றின் மலையோரம் ... சேவற்கொடி ஆடிவர
குன்றக்குடி என்நாளும் ... வண்ண மயிலும் ஆடிவர
மயிலத்தின் மலைமேலே ... மணி ஓசை முழங்கிவர 
விராலிமலை மேலிருந்து ... வீரவேலும் வெற்றி தர.

கந்தன் ...
பழநி என்னும் ஊரிலே ... பழநி என்ற பேரிலே
பவனி வந்தான் தேரிலே ... பலனும் தந்தான் நேரிலே
முருகன் ... பலனும் தந்தான் நேரிலே.

பாடிப் பரவசப் படுத்தியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள் 
========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

29.9.15

பாடவந்தது ஏன் மறந்தது?


பாடவந்தது ஏன் மறந்தது?

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப் பெருமான் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------
உன்னைத்தான் பாடவந்தேன் ... வண்ணமயில் வேல்முருகா
உன்னைக்கண்டு மறந்துவிட்டேன் ... என்ன சொல்லிப் பாடுவதோ ...
என்ன சொல்லிப் பாடுவதோ
(உன்னைத்தான் ...)

பழமுதிரும் சோலை வந்தேன் ... மனமுருகி பாடி நின்றேன் 
பழநிமலை ஓடி வந்தேன் ... அழகு தமிழ் பாடி நின்றேன் 
திருத்தணிக்கு தேடி வந்தேன் ... திருக்காட்சி காணவந்தேன் 
(உன்னைக்கண்டு ...)

தினைப்புனத்தைக் காத்துநின்ற ... அனைவரையும் கேட்டுவந்தேன் 
திருப்பபரங்குன்றூர் வந்தேன் ... தென்குமரி தேவைவந்தேன் 
ஆறுபடை வீதியெல்லாம் ... நூறுமுறை சென்றுவந்தேன் 
(உன்னைக்கண்டு ...)

பாடிப் பரவசப் படுத்தியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள் 
-------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!