மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

11.12.15

வாழ்நாளில் ஒரு முறையேனும் செல்ல வேண்டிய இடம்!

பழமுதிர்ச் சோலை முருகன் கோயில்

----------------------------------------------------------------------
வாழ்நாளில் ஒரு முறையேனும் செல்ல வேண்டிய இடம்!

பக்தி மலர்

பழமுதிர்ச்சோலை

பழமுதிர்ச்சோலை முருகன் கோயில்  மதுரையிலிருந்து பதினைந்து மைல் தொலைவில் அமைந்துள்ளது. முருகனின் ஆறுபடை வீடுகளுள் இது ஆறாவது படை வீடாகும். முருகன் சிறுவனாய் வந்து ஔவையாரை சோதித்தது இங்குதானென நம்பப்படுகின்ற இடம். விஷ்ணு கோயிலான அழகர் கோவில் இதற்கு அண்மையில் அமைந்துள்ளது. அருணகிரிநாதர் இத்தலம் மீது திருப்புகழ் பாடியுள்ளார்.

"சோலைமலை" என்ற பெயரும் இதற்கு உண்டு. இங்குள்ள முருகன் வெற்றிவேல் முருகன் என்று அழைக்கப்படுகின்றார். பழமுதிர்ச்சோலை என்பதற்கு "பழங்கள் உதிர்க்கப் பெற்ற சோலை" என்று பொருள் எடுத்துக் கொள்ளலாம்.

இலக்கியக் குறிப்புகள்

திருமுருகாற்றுப்படையில் வரும் பழமுதிர்ச்சோலை என்பதற்கு பழம் முற்றிய சோலை என்று நச்சினார்க்கினியர் உரை எழுதியிருக்கிறார். கந்தபுராணத் துதிப்பாடலில், வள்ளியைத் திருமணம் செய்ய விநாயகரை யானையாக வந்து உதவும்படி முருகன் அழைத்த தலம் பழமுதிர்ச்சோலை என்று கூறுகிறார் கச்சியப்ப சிவாச்சாரியார். எனவே ஆறாவது படை வீடாகிய பழமுதிர்ச்சோலை, வள்ளி மலையைக் குறிக்கும் என்று ஒருசாரார் தெரிவிக்கின்றனர்.

ஆனால் அருணகிரிநாதர், திருப்புகழில் வள்ளி மலையையும், பழமுதிர்ச்சோலையையும் தனித்தனியே பாடியிருக்கிறார். மேலும் பழமுதிர்ச்சோலையில் இன்றும் காணப்படுகின்ற "நூபுர கங்கை" என்னும் சிலம்பாற்றை பழமுதிர்ச்சோலைத் திருப்புகழில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். அதனால், பழமுதிர்ச்சோலையே முருகனின் ஆறாவது படைவீடாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. பழமுதிர்ச்சோலை முருகனுக்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது. அன்றைய தினம் முருகனுக்கு தேனும் தினை மாவும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.

தல வரலாறு

பழமுதிர் சோலை அருகே சில மரங்களில் நூற்றுக்கணக்கான வௌவால்கள் உள்ளன. அறுபடை வீடுகள் ஒவ்வொன்றிலும் திருவிளையாடல் புரிந்த அழகன் முருகன், இந்தத் தலத்தில், மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஔவையாரிடம் திருவிளையாடல் புரிந்ததாகச் சொல்கிறார்கள்.

தனது புலமையால் புகழின் உச்சிக்குச் சென்ற அவ்வையாருக்கு தான் என்ற அகங்காரம் ஏற்பட்டது. அந்த அகங்காரத்தில் இருந்து அவ்வையை விடுவிக்க எண்ணிய முருகன், அவ்வை மதுரைக்கு காட்டு வழியாக நடந்து செல்லும் வழியில் ஆடு மேய்க்கும் சிறுவனாக தோன்றி வந்தார். அங்கிருந்த ஒரு நாவல் மரத்தின் கிளை ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டார். நடந்து வந்த களைப்பால் அந்த மரத்தின் அடியில் வந்து அமர்ந்தார் அவ்வை. நீண்ட தொலைவு பயணம் செய்திருந்ததால் அவருக்குக் களைப்பையும் தந்திருந்தது. வயிறு பசிக்கவும் செய்தது.

அப்போது, தற்செயலாக அந்த மரக்கிளையில் ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் அமர்ந்திருப்பதைக் கண்டார். அந்த மரத்தில் நிறைய நாவல் பழங்கள் இருப்பதையும் பார்த்தார். உடனே அந்தச் சிறுவனிடம், "குழந்தாய்... எனக்குப் பசிக்கிறது. சிறிது நாவல் பழங்களைப் பறித்துத் தர முடியுமா?" என்று கேட்டார். அதற்கு, சிறுவனாக இருந்த முருகப்பெருமான், "சுட்டப் பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? " என்று கேட்டார்.

சிறுவனின் கேள்வி அவ்வைக்குப் புரியவில்லை. பழத்தில் கூட சுட்ட பழம், சுடாத பழம் என்று இருக்கிறதா? என்று எண்ணிக் கொண்டவர், விளையாட்டாக "சுடாத பழத்தையே கொடுப்பா..." என்று கேட்டுக் கொண்டார்."சுடாத பழம் வேண்டுமா? சரி உலுக்கி விடுகிறேன் சுடாத பழமா பார்த்து எடுத்துக்கோ" என்று கூறி,நாவல் மரத்தின் கிளை ஒன்றை சிறுவனாகிய முருகப் பெருமான் உலுப்ப, நாவல் பழங்கள் அதில் இருந்து கீழே உதிர்ந்து விழுந்தன. அந்தப் பழங்களைப் பொறுக்கிய அவ்வை, அந்தப் பழத்தில் மணல் ஒட்டி இருந்ததால், அவற்றை நீக்கும் பொருட்டு வாயால் ஊதினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவனாகிய முருகப்பெருமான், "என்ன பாட்டி... பழம் சுடுகிறதா?" என்று கேட்டார்.

சிறுவனின் அந்த ஒரு கேள்வியிலேயே அவ்வையின் அகங்காரம் பறந்து போனது. தன்னையே சிந்திக்க வைத்த அந்தச் சிறுவன் நிச்சயம் மானுடனாக இருக்க முடியாது என்று கணித்த அவ்வை, "குழந்தாய்... நீ யாரப்பா? " என்று கேட்டார். மரக்கிளையில் இருந்து கீழே குதித்த சிறுவன் முருகப்பெருமான், தனது சுயஉருவத்தை காண்பித்து அவ்வைக்கு அருளினார்.

இந்தத் திருவிளையாடல் நடந்த நாவல் மரத்தின் கிளை மரம் இன்றும் சோலைமலை உச்சியில் காணப்படுகிறது. சோலைமலை முருகன் கோவிலுக்கு சற்று முன்னதாக இந்த மரத்தை இன்றும் நாம் பார்க்கலாம்.

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் அழகர் மலையில் முருகரின் ஆறாம் படை வீடான பழமுதிர்சோலை உள்ளது. பழமுதிர்ச்சோலைக்கு வரும் பக்தர்கள் குளிக்க இயற்கையாகவே முருகப்பெருமானால் உருவாக்கப்பெற்ற கங்கையாக நூபுரகங்கை தீர்த்தம் விளங்குகிறது. வருடம் முழுவதும் மூலிகைகள் கலந்து வரும் நூபுரகங்கை தீர்த்ததில் நீராடுவதால் பல தோஷங்கள் நிவர்த்தியாகி நம் உடல் புனிதத்துவம் பெற்று ஆரோக்கியமாவது உறுதி. திருக்கோவில் ஊழியர்களால் வரிசையாக டிக்கெட் கொடுக்கப்பட்டு வாளியில் விரும்பும் அளவிற்கு ஊற்றுகிறார்கள் . மிகுந்த சுவையுடைய நூபுர கங்கை தீர்த்தத்தை பலர் வீட்டிற்கு எடுத்துச்செல்கிறார்கள் .

அருணகிரி நாதர்பாடல் : சோலைமலை என அழைக்கப்படும் பழமுதிர்ச்சோலையில் இருந்து சுமார் 500அடி தூரத்தில் இருக்கும் நூபுரகங்கை தீர்த்தத்தை அருணகிரிநாதர் தமது சோலைமலை திருப்புகழில் " ஆயிர முகங்கன் கொண்ட நூபுர மிரங்கு கங்கை" என்று வர்ணிக்கிறார் .இதன் பொருள் ஆயிரம் முகங்கள் கொண்ட நூபுரம் இறங்கும் கங்கை எனலாம் . பாட்டுச்சித்தர் ஸ்ரீ முருகப்பெருமானின் பூரண அருட்கடாச்சம் பெற்ற ஸ்ரீ அருணகிரி நாதரே சொன்ன பிறகு அதன் மகத்துவத்தை நாம் உணரவேண்டும் . மிகவும் பழமை பொருந்திய பழமுதிர்ச்சோலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ வள்ளி தெய்வானை உடனமர் ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோவில் பழமுதிர்சோலையின் முருகரை வணங்க துதி : "எழுமுதி ரைப்புனத்து இறைவி முன்புதன் கிழமுதிர் இளநலங் கிடைப்ப முன்னவன் மழமுதிர களிறென வருதல் வேண்டிய பழமுதிர் சோலையம் பகவற் போற்றுவாம் ."

அமைவிடம் : மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் அழகர் கோயில் நடுமலையில் பழமுதிர் சோலை அமைந்துள்ளது. மதுரையின் சிறப்புகளில் ஒன்றாக விளங்குகிறது பழமுதிர்சோலை. முதல் படைவீடான திருப்பரங்குன்றம் மதுரையில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது அது முருகரின் முதல் படை வீடாகும் .முருகப்பெருமானின் இருபடை வீடுகளை தன்னகத்தே கொண்டுள்ள மதுரை ஒர் அற்புத ஆன்மீக நகராகும் .

மூலவர் : ஸ்ரீ வள்ளி தெய்வானை உடனமர் ஸ்ரீ சுப்பிரமணியர்
ஸ்தல விருட்சம் : நாவல் மரம்
ஔவைக்கு ஸ்ரீ முருகர் காட்சி தந்து நாவற்பழம் கொடுத்த இடம் . இது ஐப்பசிமாதத்தில் மட்டுமே பழம் பழுக்கும் .மற்ற நாவல் மரங்கள் ஆடி ஆவணிமாதத்தில் மட்டும் பழம் பழுக்கும்
தீர்த்தம் : நூபுர கங்கை தீர்த்தம்
திருக்கோவில் சுற்றியுள்ள சன்னதிகள் : முழுமுதற் கடவுளாம் அருள்மிகு வித்தக விநாயகர் தரிசனம் செய்து பின் மூலவரான வள்ளி தெய்வானை உடனமர் ஸ்ரீ சுப்பிரமணியர் தரிசித்து ஸ்ரீ ஆதிவேல் உற்சவர் வணங்கி பின் ஸ்ரீ நாவல் மரத்தடி விநாயகரை பார்த்து வரலாம் .

பழமுதிர் சோலை செல்லும் வழிகள் பஸ் வசதிகள் : மதுரையில் இருந்து அழகர் கோவில் 20 கி.மீட்டர் தொலைவில் கடந்து அழகர்மலை அடிவாரத்தில் இருந்து திருக்கோவில் நிர்வாகத்தால் இயக்கப்படும் சிற்றுந்தின் மூலம் 20நிமிட பயணத்தில் பழமுதிர்ச்சோலையை அடையலாம் .

மதுரையில் இருந்து அழகர்மலை செல்ல காலை 05.00மணியில் இருந்து இரவு 10.00 மணிவரைகள் பஸ்கள் உண்டு. அழகர் மலையில் இருந்து பழமுதிர்சோலை செல்ல திருக்கோவில் நிர்வாகத்தின் பஸ் காலை 06 .00மணி முதல் மாலை05.00மணி வரை பேருந்துகள் இயக்கப்படுகிறது.

பூஜை முறைகள் : மூன்றுகாலப்பூஜைகள் பழமுதிர்ச்சோலையில் நடைபெறுகிறது. காலை அபிஷேகபூஜை 09.00 மணிக்கும் உச்சிகால பூஜை 12.00மணிக்கும் மாலை அபிஷேகபூஜை 05.00மணிக்கும் நடைபெறுகிறது. திருக்கோவில் காலை 0600மணிமுதல் மாலை 0600மணி வரை திறந்தே இருக்கும் .

பழமுதிர்ச்சோலையின் சிறப்புகள் : அழகர்மலையின் அடிவாரத்தில் காக்கும் கடவுள் ஸ்ரீ திருமாலின் வைணவத் திருக்கோவில் அமைந்துள்ளது. மலையின் மேலே பழமுதிர்சோலையில் ஸ்ரீ முருகர் (சைவம் )குடிகொண்டுள்ளார் . சைவ,வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஸ்தலம் . மாமனாகிய திருமாலும் மருமகனாகிய ஸ்ரீமுருகரும் இணைந்த ஸ்தலம் . பழமுதிர்சோலை வருபவர்கள் அழகர் மலையில் திருமாலை வணங்கி விட்டு பின்னர் பழமுதிர்ச்சோலை வருவதே சிறப்பாகும் . ஆறாம் படை வீடு ,மாட்டுக்கார சிறுவனாக வந்து அவ்வையார்க்கு நாவல் பழம் கொடுத்து காட்சி தந்த ஸ்தலம் . பாடல் பெற்ற ஸ்தலம் .

அழகிய கண்ணனும் அழகன் முருகனும் ஆட்சி செய்வதாலேயே இது அழகர் மலையானது.

கந்தபுராணம் இயற்றிய கச்சியப்பர் வியந்து பாடிய ஸ்தலம் .
அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற ஸ்தலம் ,
திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் போற்றிப்புகழ்ந்த அழகு மிகு மலையில் அமைந்துள்ள அற்புத ஸ்தலமே பழமுதிர்சோலையாகும் .

ஸ்தலத்தின் வேறுபெயர்கள் : சோலைமலை, பழமுதிர்ச்சோலை, குலகிரி,குலமலை, விருஷபகிரி,

முடிவுரை : பழமுதிர் சோலை வருகின்றவர்கள் நூபுரகங்கை தீர்த்தத்தில் குளித்து மாற்றிக்கொள்ள ஏதுவாக மாற்றுத்துணிகளுடன் வந்தால் நூபுரகங்கையில் குளித்து விட்டு ஸ்ரீ முருகப்பெருமானை 500மீட்டர் நடந்து வந்து ஸ்ரீ பழமுதிர்ச்சோலையில் முருகப்பெருமானை வணங்கலாம் .

வாழ்நாளில் ஒரு முறையேனும் ஆறாம்படை வீடான பழமுதிர்ச்சோலயில் அருள்பாலிக்கும் ஸ்ரீ முருகரை வணங்கி செல்லுங்கள் .

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

16 comments:

siva kumar said...

உள்ளேன் ஐயா
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

kmr.krishnan said...

நாவற்பழம் உதிர்ந்ததால் பழம் உதிர் சோலை!

Mrs Anpalagan N said...

உண்மை தான் ஐயா,
கிருஷ்ணன் ஐயா சொல்வது போல் தமிழ் இலக்கணப்படியும்
பழமுதிர்ச்சோலை என்பதை பிரித்தால் பழம், உதிர், சோலை எனவே வரும்.

Mrs Anpalagan N said...

///பழமுதிர்ச்சோலை என்பதற்கு "பழங்கள் உதிர்க்கப் பெற்ற சோலை" என்று பொருள் எடுத்துக் கொள்ளலாம்.

இலக்கியக் குறிப்புகள்

திருமுருகாற்றுப்படையில் வரும் பழமுதிர்ச்சோலை என்பதற்கு பழம் முற்றிய சோலை என்று நச்சினார்க்கினியர் உரை எழுதியிருக்கிறார். ///

மேலிரண்டு வகையிலும் கூட இருக்கலாம். காரண காரியப் பெயர்கள் பின்னர் மருவி/திரிபு அடைந்திருக்கலாம்.

புராணக் கதையை விடுத்து வெறுமே பழமுதிர்ச்சோலை என்னும் போது; பழம் உதிர் சோலை என்றே எடுக்க முடிகிறது.

கதையின் பிரகாரம் பார்த்தால் ஆரம்பத்தில் இட்ட பெயர் திரிபடைந்திருக்கவும் வாய்ப்புண்டு.

ravichandran said...

Respected Sir,

Holy friday... very very useful info...

Have a great friday,

With best regards,
Ravi-avn

Gajapathi Sha said...

Vanakkam, Murugan pugal parappum cholai enimai vazhaga valamudan

வேப்பிலை said...

முருகா... முருகா..

Subbiah Veerappan said...

/////Blogger siva kumar said...
உள்ளேன் ஐயா
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா/////

வீரவேல் முருகனுக்கு அரோஹரா!

Subbiah Veerappan said...

////Blogger kmr.krishnan said...
நாவற்பழம் உதிர்ந்ததால் பழம் உதிர் சோலை!/////

உண்மைதான்.நன்றி கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

////Blogger Mrs Anpalagan N said...
உண்மை தான் ஐயா,
கிருஷ்ணன் ஐயா சொல்வது போல் தமிழ் இலக்கணப்படியும்
பழமுதிர்ச்சோலை என்பதை பிரித்தால் பழம், உதிர், சோலை எனவே வரும்./////

ஆமாம். நன்று & நன்றி சகோதரி!

Subbiah Veerappan said...

////Blogger Mrs Anpalagan N said...
///பழமுதிர்ச்சோலை என்பதற்கு "பழங்கள் உதிர்க்கப் பெற்ற சோலை" என்று பொருள் எடுத்துக் கொள்ளலாம்.
இலக்கியக் குறிப்புகள்
திருமுருகாற்றுப்படையில் வரும் பழமுதிர்ச்சோலை என்பதற்கு பழம் முற்றிய சோலை என்று நச்சினார்க்கினியர் உரை எழுதியிருக்கிறார். ///
மேலிரண்டு வகையிலும் கூட இருக்கலாம். காரண காரியப் பெயர்கள் பின்னர் மருவி/திரிபு அடைந்திருக்கலாம்.
புராணக் கதையை விடுத்து வெறுமே பழமுதிர்ச்சோலை என்னும் போது; பழம் உதிர் சோலை என்றே எடுக்க முடிகிறது.
கதையின் பிரகாரம் பார்த்தால் ஆரம்பத்தில் இட்ட பெயர் திரிபடைந்திருக்கவும் வாய்ப்புண்டு/////.

உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி சகோதரி!

Subbiah Veerappan said...

////Blogger ravichandran said...
Respected Sir,
Holy friday... very very useful info..
Have a great friday,
With best regards,
Ravi-avn/////

நல்லது. நன்றி அவனாசி ரவிச்சந்திரன்!

Subbiah Veerappan said...

/////Blogger Gajapathi Sha said...
Vanakkam, Murugan pugal parappum cholai enimai vazhaga valamudan////

ஆமாம். அது முருகப் பெருமானின் புகழ் மற்றும் அருள் பரப்பும் சோலை!

Subbiah Veerappan said...

////Blogger வேப்பிலை said...
முருகா... முருகா..////

வருவாய்...
அருள்வாய்....!

bala subramanian said...

Arumai

வரதராஜன் said...

குரு வணக்கம்.
குன்றுதோராடும் குமரனின் சிறப்பை
சொல்லி மாளாது.குணக்குன்றாம் குழந்தை தெய்வத்தின் திருவிளையாடல்கள் எத்தனை, எத்தனை!
அதிலொன்றுதானே "சுட்டபழம்"!!
அன்பிற்குக் கட்டுப்படுபவன், அகந்தையை அழிப்பவன் அவனல்லவா குமரக்கடவுள்!
ஜுரத்தால் அவதிப்பட்ட குழந்தையுடன் திருப்பரங்குன்றம் வரை சென்ற எங்களால்
சோலைமலை செல்ல இயலா
மல் போனதும் அவன் " (வி)திருப்பமாயிருக்கலாம்"!?
நிச்சயம் மீண்டும் முயற்சித்துப் போவோம்.
"சோலைமலைக் கிழவனுக்கு அரோகரா"!