அவ்வையார் என்றால் நமக்கெல்லாம் சட்டென்று நினைவிற்கு வருவது கே.பி.எஸ் அவர்கள்தான். அதனால் அவர்கள் படத்தையே இங்கே கொடுத்துள்ளேன்!!!!
----------------------------------------------------------------------------------------------------------
அன்றே சொன்னது அருமையாக உள்ளது!
நம் முன்னோர்கள், நாம் தெரிந்துகொள்ள வேண்டியதை எல்லாம் நச்’ சென்று நாலு வரிகளிலேயே சொல்லி வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள்.
நமக்குத்தான் அவற்றைப் படிப்பதற்கு நேரமுமில்லை. படித்தால் கடைப்பிடிப்பதற்கு மனமுமில்லை.
கடைப்பிடிப்பதும் கடைப்பிடிக்காததும் உங்கள் விருப்பம். யாரும் உங்களைக்கட்டாயப் படுத்த முடியாது. ஆனால் தெரிந்தாவது
வைத்துக்கொள்ளலாம் இல்லையா?
உங்களுக்காக ஒரு பழைய பாடலை - அசத்தலான பாடலைக் கொடுத்துள்ளேன். படித்து மகிழுங்கள். முடிந்தால் கடைப்பிடித்துப் பயன் அடையுங்கள்
-----------------------------------------------------------------------
நல்ல காரியங்களுக்கு ஒரு ரூபாய்கூட செலவழிக்காமல், ஒட்டு மொத்தமாகச் சேர்த்துவைக்கப்படும் செல்வத்தின் அதாவது பணத்தின் நிலைமை என்ன ஆகும்?
நீங்கள் யாருக்காக அத்தனை கஷ்டப்பட்டு சேர்த்து வைக்கின்றீர்களோ, அந்த செல்வங்கள், உங்களுக்குப் பிறகு, அதாவது நீங்கள் சனீஷ்வரனிடம் போர்டிங் பாஸ் வாங்கிக்கொண்டு மேல் உலகம் சென்ற பிறகு, நீங்கள் சேர்த்து வைத்துவிட்டுப்போன செல்வங்கள், உங்கள் வாரிசுகளால் அல்லது
அவர்களின் வாரிசுகளால் என்ன நிலமைக்கு உள்ளாகும் என்பதை ஒளவை மூதாட்டி அழகாக நான்கே வரிகளில் நச்’சென்று சொல்லியுள்ளார்.
முதலில் பாடலைப் பாருங்கள்:
“நம்பன் அடியவர்க்கு நல்காத் திரவியங்கள்
பம்புக்காம் பேய்க்காம் பரத்தையர்க்காம் - வம்புக்காம்
கொள்ளையர்க்காம் கள்ளுக்காம் கோவுக்காம் சாவுக்காம்
கள்ளர்க்காம் தீக்காகும் காண்!”
- ஒளவையார்
நம்பன் அடியவர்க்கு - சிவனின் அடியவர்களுக்கு
நல்காத் திரவியங்கள் - மனமுவந்து வழங்காத செல்வங்கள்
பம்புக்காம் - சூனிய வித்தைகளுக்கும்
பேய்க்காம் - பேய் வழிபாடுகளுக்கும்
பரத்தையர்க்காம் - தாசிகளுக்கும்
வம்புக்காம் - வீண் செலவுகளுக்கும்
கொள்ளையர்க்காம் - கொள்ளை கொடுப்பதற்கும்
கள்ளுக்காம் - மதுவிற்கும்
கோவுக்காம் - பகை அரசால் பறிமுதல் செய்யப்படுவதற்கும்
சாவுக்காம் - அவனுடைய சாவிற்கும்
கள்ளர்க்காம் - கள்வர்களால் கவர்ந்து கொள்ளப்படுவதற்கும்
தீக்காகும் - நெருப்பால் வெந்து அழிக்கப்படுவதற்கும்
காண் - உரியனவாகும் என்று தெரிந்து கொள்வாயாக!
இன்றைய காலகட்டத்தில் இப்படிப்பொருள் கொள்ள வேண்டும். அடியார்கள் என்பவர்கள் உலகம் மேன்மையுறப் பாடுபடுபவர்கள் என்று பொருள் கொள்ளுங்கள்.
சூனிய வித்தைகள் என்பதை இன்றைய காலகட்டத்தில், குதிரை ரேஸ், லாட்டரி சீட்டுக்கள், சீட்டாட்டம், விளயாட்டுக்களை வைத்து நடைபெறும் சூதாட்டங்கள் (betting) என்று பொருள் கொள்ளுங்கள்
பேய்வழிபாடுகள் என்பதற்கு கடலை போடும் பெண்களைக் கூட்டிக்கொண்டுபோய், அல்லது நமது தீய நட்புக்களைக் கூட்டிக்கொண்டுபோய் - அதாவது கஃபிற்கும், ப்ஃபிற்கும் அல்லது பார்களுக்கும் கூட்டிக் கொண்டுபோய்ச் செய்யும் செலவுகள் என்று பொருள் கொள்ளுங்கள்
பகை அரசால் பறிமுதல் செய்யப்படுவதற்கும் என்பதற்கு, வம்பு, வழக்கு, நீதிமன்றத்தண்டனை போன்ற சிக்கல்களில் மாட்டிக்கொண்டு செய்யும் செலவுகள் என்று பொருள் கொள்ளுங்கள்
சாவிற்கும் என்பதற்கு, தீராத நோய் நொடிகள் வந்து லட்சக்கணக்கில் சாகும்வரை செய்யப்படும் மருத்துவச் செலவுகள் என்று பொருள் கொள்ளுங்கள்
மற்ற வீண் செலவுகளுக்குச் சொல்லப்பட்டிற்கும் வார்த்தைகள் எல்லாம் எளிய சொற்களே. அதில் பொதிந்துள்ள பொருள் அனைவருக்கும் விளங்கும்படியாகவே உள்ளது. ஆகவே அவற்றிற்கு விளக்கம் சொல்லவில்லை!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
சரி என்ன செய்ய வேண்டும்?
அளவு முக்கியமில்லை! உங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை - அதாவது 5% முதல் 10% வரை - எடுத்துக்காட்டுக்காகச் சதவிகிதத்தில்
சொல்லியிருக்கிறேன் - நல்ல காரியங்களுக்குச் செலவு செய்யுங்கள்.
தர்ம காரியங்களுக்குச் செலவு செய்யுங்கள்.
இறைப்பணிக்கு, கல்விப்பணிக்கு, ஏழைப் பெண்களின் திருமணங்கள் போன்றவற்றிற்கு, வறியவர்களுக்கு, முதியவர்களுக்குத் தானமாகக் கொடுங்கள். அன்னதானம் செய்யுங்கள். உங்களுக்கு முன்பின் தெரியாதவர் களுக்குக் கொடுங்கள். செய்யுங்கள். அதுதான் தானமாகும்.
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!