
=================================================================
JL. 50. உலகை மயக்கிய மந்திரப் பெயர்
இது ஜோதிடத்தொடரின் 50வது பதிவு. ஆகவே இன்று இதை
ஸ்பெஷல் பதிவாக மகிழ்வோடு பதிவிடுகிறேன்.
படித்துவிட்டு இது Special ஆக இருந்ததா என்று நீங்கள்
பின்னூட்டத்தில் சொல்லுங்கள்!
நம்ம ஊர் இளவட்டங்களெல்லாம் நமீதாவை விரும்புகிற அளவில்,
அவருக்காகச் செலவிடுகின்ற நேரத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூடத்
தொன்மையான கலையான ஜோதிடத்தில் செலுத்துவதில்லை.
1,500 ஆண்டுகளாக அக்கலையில் நமக்கிருக்கும் மேலான்மையைப்
புரிந்து கொள்ளாததோடு, அரைகுறையான கேள்விகளைக் கேட்டு
எரிச்சலையும் உண்டாக்குவார்கள்.
ஜோதிடத்தைக் கற்றுக் கொள்வதற்காக இந்தியாவிற்கு வந்து
இங்கே மகாராஷ்டிராவில் ஒரு அந்தனர் வீட்டில் இரண்டாண்டு காலம்
தங்கி, ஜோதிடத்தைக் கற்றுக் கொண்டதோடு, திரும்பிச் சென்று சுமார்
40 ஆண்டு காலம் அக்கலையில் புகழ்பெற்று உலகையே தன்னைத்
திரும்பிப் பார்க்க வைத்த ஒரு ஆங்கிலேயரைப் பற்றிய உண்மைச்
செய்திகளை இன்று பதிவிடுகிறேன்.
பதிவு சற்றுப் பெரிதாக இருக்கும்.நீளமாக இருக்கும். தீபாவளிப் பதிவு
என்று வைத்துக் கொள்ளுங்கள். பொறுமை இல்லாதவர்கள் பதிவை விட்டு
இப்போதே விலகி விடலாம். ரசித்துப் படிப்பவர்கள் மட்டும் தொடரவும்.
உலகை மயக்கிய அந்த மந்திரப் பெயர்:
வில்லியம் ஜான் வார்னர் - மற்றும் ஒரு பெயர் கவுன்ட் லூயி ஹாமோன்
ஆனால் சீரோ என்று சொன்னால்தான் அவரை அனைவருக்கும் தெரியும்.
His name, Cheiro, derives from the word cheiromancy -- meaning palmistry
அவர் வாழ்ந்த காலம்
November 1, 1866 - October 8, 1936 (சுமார் 70 ஆண்டு காலம்)
ஜோதிடம், கைரேகை, எண் ஜோதிடம் என்று அத்தனை துறையிலும்
உலகைக் கலக்கியவர் அவர்.
அவருடைய ரசிகர்கள் அல்லது அவரை ஆதரித்துக் கெளரவித்தவர்
களைப் பட்டியலிட்டு மாளாது.
King Edward VII (இங்கிலாந்தின் பேரரசராக இருந்தவர்) ,
William Gladstone, Charles Stewart Parnell, Henry Morton Stanley,
Sarah Bernhardt, Oscar Wilde, Professor Max Muller, Blanche
Roosevelt, the Comte de Paris, Joseph Chamberlain, Lord Russell
of Killowen,Robert Ingersoll ( இவர் பிரபல நாத்திகர் - லண்டனில்
வாழ்ந்தவர்) Ella Wheeler Wilcox, Lillie Langtry, Mark Twain,
W.T. Stead, Richard Croker, Natalia Janotha என்று
சிலரைக் குறிப்பிடலாம்.
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பெரும் புகழ் பெற்றிருந்த சீரோ,
தனது கணிப்பை அது நன்மையோ அல்லது தீமையோ- அப்பட்டமாகச்
சொல்லிவிடுவார்.
பெரும் புகழையும் பணத்தையும் ஈட்டிய சீரோ ஐரீஷில் பிறந்தவர்,
ஆனால் அமெரிக்காவில் குடியேறி வாழ்ந்தவர்.
அவருடைய கணிப்பு என்றுமே தவறானது கிடையாது.
யுத்த நாயகன் என்று புகழ் பெற்ற ஃபீல்ட் மார்ஷல் லார்ட் கிச்சென்னரின்
கையைப் பார்த்த சீரோ வழக்கமான தகவல்களைக்கூறிவிட்டு,
இறுதியாகச் சொன்னார்,"நீங்கள் நீரில் மூழ்கி மரணமடைவீர்கள்"
நீச்சல் தெரியாத, பயந்துபோன கிச்சென்னார், உடனே தற்காப்பு
நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு, நீச்சலும் கற்றுக் கொண்டார்.
ஆனால் சீரோ சொன்னதுதான் நடந்தது.
1916-ஆம் ஆண்டு ஹம்ப்ஷயர் என்ற கப்பலில் ஃபீல்டு மார்ஷல்
பயணம் செய்தார். அக்கப்பல் கடற் கண்ணி ஒன்றில் மோதிச்
சேதமுற்று மூழ்கியது. லார்ட் கிச்சென்னர் நீரில் மூழ்கி மரணமடைந்தார்.
சீரோவை நேரில் பார்த்து தங்கள் எதிர்காலத்தை அறிந்து கொள்ள
மக்கள் கூட்டம் அலை மோதியது. நாள் ஒன்றிற்கு இருபது
பேர்களுக்குக் குறையாமல் சந்தித்துப் பலன்களைச் சொல்லி வந்தார்.
பெரிய இடங்களிருந்தும் அவருக்கு அழைப்புகள் வந்து கொண்டிருந்தன!
இங்கிலாந்தின் மாமன்னர் ஏழாம் எட்வர்டின் உடல் நிலை மிகவும்
மோசமாகி மரணத்தின் விளிம்பில் அவர் இருந்த நேரம், மூச்சிவிடத்
திணறிக் கொண்டிருந்தார் அவர். மருத்துவர்கள் எல்லாம் கை
விட்டு விட்டனர். அரசரின் இறுதி நேரம் நெருங்கி விட்டது என்றனர்.
சீரோ வரவழைக்கப்பட்டார். அரசரின் கையை ஆராய்ந்த பிறகு
சீரோ சொன்னார்.
"உங்கள் உயிருக்கு இப்போது ஒன்றும் ஆபத்தில்லை. 69வது வயதில்தான்
உங்களுக்கு மரணம் ஏற்படும்"
அதன்படி 1841ல் பிறந்த அரசர், 1910ஆம் ஆண்டு மே மாதம் -
தனது 69 வது வயதில்தான் காலமானார்.
அதேபோன்று பிறிதொரு சமயம், அரச குடும்பத்தினர் அனைவரையும்
உட்காரவைத்து ஒவ்வொருவர் கையாகப் பார்த்துப் பலன் சொல்லும்போது,
பட்டத்து இளவரசன் எட்டாம் எட்வர்ட் வேல்ஸின் கையைப் பார்த்துவிட்டு,
சீரோ சொன்ன செய்தியால் மொத்த அரச குடும்பமும் திடுக்கிட்டுப்
போய் விட்டது.
சீரோ சொன்னது இதுதான்."இளவரசனே, நீ பதவிக்கு வரமாட்டாய்.
அரசனாகும் வாய்ப்பு உனக்கு இல்லை!"
அதன்படிதான் பின்னால் நடந்தது. திருமதி சிம்ப்சன் என்ற விவாகரத்தான
- தன்னை விட இரண்டு வயது மூத்த பெண்ணை - அந்த இளவரசன்
காதலித்ததையும் - தன் காதலுக்கு எதிர்ப்புக் கிளம்பிய போது, காதலிதான்
முக்கியம் எனக்கு - நாடும் பதவியும் முக்கியமில்லை என்று ஒரு
பெண்ணிற்காக ஒரு மிகப் பெரிய சாமராஜ்ஜியத்தையே (அப்போது பிரிட்டனின்
கீழ் 26 நாடுகள் இருந்த காலம்) உதறிவிட்டுத் தன் காதலியோடு
நாட்டையே விட்டு வெளியேறினான் அந்த இளைஞன் (அது மிகவும்
சுவாரசியமான கதை - 40 ஆண்டுகளுக்கு முன்பு சாவி அவர்கள்
ஆனந்த விகடனில் தொடராக அதை எழுதினார் - படித்தவர்களுக்கு
நினைவிருக்கும்)
23 -06 - 1894 ஆண்டு பிறந்த - முடி துறந்த அந்த இளவரசன், பிறகு
பிரான்ஸ் நாட்டில் 28 .05.1972 வாழ்ந்து தன்னுடைய 79 வது வயதில்
இறந்து போனான். விக்டோரியா மகாராணியின் பேரன் அவன் என்பது
உபரிச்செய்தி.
தெரியாதவர்கள் அக்கதையைப் படிக்க சுட்டியைக் கீழே கொடுத்துள்ளேன்
The story of Edward Eight
சீரோ எழுதிய நூல்கள்தான் இன்று ரேகை சாஸ்திரம் மற்றும் எண் கணித
நிபுணர்களின் வேத புத்தகங்களாகும்
நீங்களும் வாங்கிப் படியுங்கள்!
ரேகை சாஸ்திரஸ்தில் அவருக்குள்ள மேதைத்தனத்தையும், தனித்தன்மை
யையும் அறிந்து கொள்ளவும், உலகிற்கு அதை நிருபிக்கவும்
அமெரிக்காவில் இவருக்கு டெஸ்ட் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தார்கள்.
மிக உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களையும், புகழ் பெற்ற அறிஞர்
களையும் கொண்ட கூட்டுக் குழு அதை நடத்தியது. ஏராளமான
பத்திரிக்கையாலர்களும் அதில் கலந்து கொண்டார்கள்.
புகை படர்ந்த காகிதத்தில் பன்னிரெண்டு பேருடைய கை ரேகைகளைப்
பதிவு செய்து சீரோவிடம் கொடுத்தார்கள்.
கை ரேகைகளைத் தவிர அவற்றில் எந்த விதமான குறிப்போ
அல்லது அடையாளமோ கிடையாது.
சீரோ அவற்றில் ஒன்றை மட்டும் எடுத்துத் தனியாக வைத்துவிட்டு,
மற்றவற்றிற்கு குறிப்புகள் எழுதிக் கொடுத்தார்.
அத்தனையும் உண்மை.
இறுதியாக தனியாக எடுத்துவைத்திருந்த ரேகையை எடுத்தார்.
"இது ஒரு கொலைகாரனின் கை ரேகை" என்றார். அனைவரும்
ஆச்சரியத்தால் அதிர்ந்து போயினர்.
அதற்குக் காரணம், உண்மையிலேயே ஒரு கொலைக்குற்றத்திற்காக
மரண தண்டனையை எதிர் நோக்கிச் சிறையில் காத்திருக்கும்
டாக்டர் மேயர் என்பவனின் கைரேகைதான் அது!
"ஆனால் இவனுடைய மர்ண தண்டனை நிறைவேறாது. ரத்தாகிவிடும்"
என்றார் சீரோ.
அதன்படிதான் நடந்தது.
இறுதிவரை அந்தக் கணிக்கும் திறமை சற்றும் குறையாமல் இருந்தது
சீரோவிடம். தனது ஆயுள் நெருங்குவதை உணர்ந்த சீரோ,
பதிப்பாளர்களிடம் தீவிரம் காட்டி, தன்னுடைய கண்டுபிடிப்புக்கள்,
கணிப்புக்கள், அனுபவங்கள் அத்தனையையும் புத்தகமாக வெளியிட்டு
விட்டுத்தான் மறைந்தார்.
தன்னுடைய இறுதி நாளையும் சரியாகக் கணித்துத் தன் மனைவியிடமும்,
நண்பர்களிடமும் சொன்ன சீரோ, தன்னுடைய வாழ்நாளின் கடைசி
தினத்தன்று தன் நண்பர்களுக்கு மிகப் பெரிய விருந்தையும் அளித்தார்.
அன்று இரவு படுத்தவர்தான் அடுத்த நாள் காலையில் எழுந்திரிக்கவில்லை
அவர். படுக்கையிலேயே உயிர் பிரிந்திருந்தது. (3.10.1936)
தான் கற்றுக்கொண்ட கலைக்காக, இந்தியாவின் புகழை அவர் தன்னுடைய
நூல்களில் நன்றிக்கடனாக குறிப்பிடத்தவறவில்லை! That is his greatness!
The Story of Cheiro - Click here for the link
Link for numerology:
===================================

=======================================================
எண் கணிதத்தில் சீரோ எழுதிய பல சுவையான செய்திகள், மற்றும்
கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் அடங்கிய பல குறிப்புகள்
என்னிடம் உள்ளன. வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அவற்றைப் பதிவிடுகிறேன்
பதிவின் நீளம் கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்
அன்புடன்
வகுப்பறை வாத்தியார்
*************************************