மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

15.3.22

Humour நகைச்சுவை: கிரேசி மோகன் ஜோக்ஸ்


நகைச்சுவை: கிரேசி மோகன் ஜோக்ஸ்

Crazy Mohan jokes 

🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

இப்பதானே தேள் கொட்டிடுச்சினு மருந்து வாங்கிட்டுப் போனீங்க?மறுபடி வந்து இருக்கீங்களே, எதற்கு?

இப்ப மருந்து கொட்டிடுச்சி.

🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

என் மனைவிக்கு தெரியாம நான் அவ பீரோவை திறந்ததை அவ பார்த்திட்டா...!!

அய்யோ...!! அப்பறம்?

“சாத்திட்டா”

🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

கடல்ல மூழ்கி தற்கொலை பண்ணிக்கப்போன பொண்ணைக்
காப்பாத்தினியே, அவ இப்போ எப்படி இருக்கா?

முழுகாம இருக்கா..!!!???....

🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

DOCTOR : கண் ஆபரேஷனுக்கு அப்புறம் உங்களுக்கு எப்படி
இருக்கு?

போயும் போயும்j இந்த நர்ஸையா சைட் அடிச்சோம்னு
தோணுது டாக்டர்…!

🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

"எம்பிளாய்மெண்ட் ஆபிசிலே நீ பதியறதுக்கு, உன்னோட அப்பா, தாத்தாவையும் கூட்டிட்டு வந்திருக்கியே! ஏன்?"

"அப்பாவுக்குப் புதுப்பிக்கணும்... எங்க தாத்தாவுக்கு முதல் இண்டர்வியூ வந்திருக்கு!"

🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

வரதட்சணையே வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்குது!

அதனால…?

வரதட்சணையே வாங்காம இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு பிராயச்சித்தம் செய்யப் போறேன்!

🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

"தம்பி உங்க பக்கத்து வீட்டு பெண் பாமாவை எங்க பையனுக்கு கேட்கலாம்னு இருக்கோம், பொண்ணு எப்பிடி?"

"நான் காதலிச்ச வரைக்கும் அந்த பொண்ணு நல்ல பொண்ணுதான் சார்"

🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

ஹீரோவுக்கும் தயாரிப்பாளருகும் என்ன வித்தியாசம்?

ஏழையா இருந்த ஹீரோ க்ளைமாக்ஸில்
கோடீஸ்வரனாகி விடுவான்,
கோடீஸ்வரனா இருந்த தயாரிப்பாளர், க்ளைமாக்ஸி’ல
ஏழையாயிடுவாரு…!

🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

"தினமும் காலையும், மாலையும் வந்து ஸ்டேசன்ல கையெழுத்து போட்டுட்டு போகணும் தெரியுதா?"

"சரிங்கய்யா, அப்புறம் வழக்கம் போலத் திருடப் போகலாமில்லே ஐயா?"

🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

💃🏽உங்க மனைவிய அடிக்கடி சினிமா பார்க்க தியேட்டருக்குக் கூட்டிக்கிட்டுப் போறீங்களே…..? அவங்க மேல அவ்வளவு பிரியமா .. .. ?

அட நீங்க ஒண்ணு .. .. ஒரு மூணு மணி நேரம் அவ பேசாம இருப்பாள்ல!!!
------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.12.20

Humour நகைச்சுவை: 400 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடுவது எப்படி?

400 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடுவது எப்படி?

இதப்படிங்க முதல்ல..

ஊர் முழுவதும் ஓர் அறிவிப்பு!

400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்.

இதைக் கண்டுப் பலர் வியந்தனர்.  இதைப்பற்றி மேலும் விசாரித்தபோது, 400 ரூபாய் பணத்துடன் வந்து சந்திக்க வேண்டிய இடத்தின் முகவரி கிடைத்தது.

ஊரே திரண்டு அந்த இடத்திற்கு வந்தது. வெறும் 400 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் தின்பதென்றால் சும்மாவா.😊

இடத்தை அடைந்த ஒருவன் சக நபரிடம் 400 ரூபாயா? அல்லது 4000, 40,000 ... அப்படி ஏதாவதா? என்று...🤭

400 ரூபாய் மட்டுமே என்றான்.😜

வரிசையில் உள்ள ஒவ்வொருவரும் உள்ளே சென்றனர்..
.
.சார் நீங்க, 

நானும் காலம் புரா உக்கார்ந்து சாப்பிட போரேன். 
.
.நானும் வரேன். .
.
.சார் நானும் .
.
.ஐயா வாங்க .
.
.அம்மா வாங்க .
.
.அக்கா நீயுமா.
'
'வா வா, உக்கார்ந்து.  ..400, ரூவா, 
.
.வாவா 

அங்கே ஒருவன் நாற்காலி விற்றுக் கொண்டு இருந்தான்.🤣

"வாங்க சார்... வாங்க சார்...ஸ்டராங்கான நாற்காலி சார்...இது சீக்கிரத்துல உடையாது சார்...


400 ரூபாய் கொடுத்து வாங்கிட்டு போய் காலம் முழுவதும் இதில் உட்கார்ந்து சாப்பிடலாம் சார்"🤪 என்று கூவினான்.

நீதி :
வாக்குறுதிகளை உடனே நம்பிவிடக் கூடாது. 

நல்லா யோசிக்கணும்.

சாத்தியமான்னு பார்க்கணும்.

ரொம்ப அநியாயத்துக்கு ஆசைப்படக் கூடாது.

 இனி வருவது தேர்தல் காலம் 

கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் இவ்வாறுதான் இருக்கும்

 சிந்தித்து செயல்படுங்கள் தமிழக மக்களே👍

===========================================================
2 .பொழைக்கத் தெரிஞ்சவன்

*இஞ்சினியரிங் படிச்சிட்டு ரொம்ப நாள் வேலை கிடைக்காத இஞ்சினியர் ஒருத்தர் டாக்டர் ஆகிடலாம் என்று  கிளினிக் ஒன்றைத் திறந்தார்.*

வாசலில் ஒரு போர்டு எழுதினார்.

*"எந்த வியாதியாக  இருந்தாலும் 500 ரூபாயில் குணப்படுத்தப்படும். உங்கள் வியாதி குணமாகவில்லை எனில்  1000 ரூபாயாக திருப்பி தரப்படும்!"*

இதைக் கவனித்த வேலையில்லா மருத்துவர் ஒருவர் இந்த போலி இஞ்சினீர் டாக்டரிடம் இருந்து ஆயிரம் ரூபாயை பறிக்க உள்ளே சென்றார்.

*"டாக்டர், என் நாக்குல எந்த சுவையும் உணர முடில .."*

"நர்ஸ் அந்த 23 ம் நம்பர் பாட்டில்ல இருக்குற மருந்தை இவர் வாயில மூனு சொட்டு விடுங்க!" என்றார் இஞ்சினீர் டாக்டர்.

நர்ஸ் அவர் வாயில் மருந்தை விட்ட பிறகு "அய்யோ டாக்டர் இது  பெட்ரோல் ஆச்சே!" என்று அலறினார் இவர்.

"வெரி குட். இப்ப உங்க taste buds நல்லா வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு. உங்களுக்கு எல்லா சுவையையும் உணர முடிகிறது. 500 ரூபாய் ஃபீசை எடுங்க!"

உண்மையான டாக்டர் வேற வழி இல்லாமல் 500 ரூபாயைத் தந்து விட்டு வெளியேறினார்.

ஆனாலும் ஆயிரம் ரூபாயை பெறும் முயற்சியைக் கைவிட வில்லை. சில நாட்கள் கழித்து மீண்டும் அந்த கிளினிக்கிற்கு சென்றார்.

*"டாக்டர் எனக்கு மறதி ரொம்ப ஜாஸ்தியாருக்கு குணப்படுத்துங்க!" என்றார்.*

"நர்ஸ் அந்த 23 ம் பாட்டிலைத் திறந்து இவர் வாயில மூன்று சொட்டுக்கள் விடுங்க!" என்றார் இஞ்சினீர் டாக்டர்.

"அய்யோ டாக்டர் அது பெட்ரோல் ஆச்சே!" என்று அலறினார் இவர்..

"வெரி குட் உங்க மெமரி பவர் நல்லாய்டுச்சு 500 ரூபா எடுங்க!"

இந்த முறையும் ஏமாந்து போன மருத்துவர் சில நாட்கள் கழித்து மீண்டும் வந்தார்.

*"எனக்கு கண் பார்வை சரி இல்லை. மருந்து தாங்க டாக்டர்"*

"சாரி இதுக்கு என்கிட்ட மருந்து இல்லை. இந்தாங்க ஆயிரம் ரூபாய்!" என்று ரூபாய் நோட்டை நீட்டினார் இஞ்சினீர் டாக்டர் 

"இது 500 ரூபாய் நோட்டாச்சே " என்று பதறினார் இவர்.

"வெரிகுட் உங்க பார்வையும் நல்லாய்டுச்சு எடுங்க 500 ரூபாய்!" 

*பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான். படிப்பாவது கிடிப்பாவது! :)*

படித்ததில் ரசித்தது!
அன்புடன்
வாத்தியார்
=====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.12.20

வழக்கு தள்ளுபடியானதில் ஒரு நகைச்சுவை நிகழ்வு!


வழக்கு தள்ளுபடியானதில் ஒரு நகைச்சுவை நிகழ்வு!

#மனைவிமார்கள் எல்லாம் கணவர்களுக்கு எதிராக ஒரு வழக்கு தொடுத்தார்கள்..

*என்ன வழக்குன்னு கேட்கிறீர்களா..அதாகப்பட்டது.

...நாங்கள் ஏன் அவர்களுக்கு "வடிச்சு கொட்டணும்"..(WHY SHOULD WIVES COOK FOOD TO HUSBANDS?)..

#வித்தியாசமான வழக்கு..விசித்திரமானதும் கூட..??

*எதிர்தரப்பு வக்கீல் தன்னுடைய ஒரே ஒரு point ஐ கொண்டு வழக்கை உடைத்தெறிந்து விட்டார்..

***கணவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்....

அது என்ன point...??!

MY LORD,
               " IT IS THE RESPONSIBILITY OF A JAILOR TO PROVIDE FOOD TO THE PRISONER.."

கணம் நீதிபதி அவர்களே,
   .         "கைதிகளுக்கு உணவு வழங்குவது ஒரு ஜெயிலருடைய கடமை/பொறுப்பு.."

#CASE DISMISSED...

வழக்கு தள்ளுபடியானது!
------------------------------------------
படித்து ரசித்தது
அன்புடன்
வாத்தியார்
========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.11.20

என்ன நடந்தது அங்கே?


என்ன நடந்தது அங்கே?

சர்ச்சில் திருமணம்  ஒன்று நடக்க விருந்தது. 

பெண் வீட்டாரும் மணமகன் வீட்டாரும் உற்றாரும் உறவினரும் கூடியிருந்தார்கள். 

கிறித்துவ சம்பிரதாயப்படி திருமண பந்தத்தில் ஒரு ஆணையும் பெண்ணையும் இணைத்து வைப்பதற்கு முன் பாதிரியார் ஓர் அறிக்கை விடுவார்.

"இந்த ஊரைச் சேர்ந்த இன்னாரது மகனான மணமகனையும் இந்த ஊரைச் சேர்ந்த இன்னாரது மகளான மணமகளையும் கர்த்தரின் பெயரால் திருமண பந்தத்தில் இணைக்கப் போகிறேன்.

இந்தத் திருமணத்திற்கு யாரிடமிருந்தாவது ஏதாவது ஆட்சேபனை இருந்தால் எழுந்து நின்று கர்த்தரின் முன்னனிலையில் அறிக்கையிடலாம்."

கூட்டம் , ஊசி போட்டால் ஓசை கேட்கும் நிசப்தம். 

கடைசி வரிசையில் இருந்த ஒரு அழகான இளம் வயதுப் பெண் எழுந்து கையில் அழும் குழந்தையுடன் கையை ஆட்டியவாறே பாதிரியாரை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

கூட்டத்தில் ஒரே கசமுசா. 

அந்தப் பெண் பாதிரியாரை நெருங்கு முன் மாப்பிள்ளைப் பையனின் தாயார் மயங்கி விழுந்தார். (பையன் மேல் அவ்வளவு நம்பிக்கை?).

மாப்பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் தங்களுக்குள் குசு குசுவென்று பேசிக் கொண்டார்கள்.  

மணமகள் மணமகனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் (ஒங்கம்மாவே மயங்கி விழுத்துட்டாங்கன்னா நீ என்ன பண்ணி வச்சிருக்கியோ? மகனே நான்தானா கிடைச்சேன் அல்வா குடுக்க?).

கூட்டம் அதிர்ச்சியில் உறைந்தது. 

பாதிரியார் கைக்குழந்தையுடன் எழுந்து வந்த பெண்ணிடம் கேட்டார்,

"மகளே! உனது ஆட்சேபனை என்ன?"

அந்தப் பெண் சொன்னாள், 

" ஃபாதர் கடைசி வரிசையில் இருக்கும் எங்களுக்கு நீங்கள் சொல்வது எதுவுமே கேட்கவில்லை......!"

படித்ததில் சிரித்தது
அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.11.20

வார்த்தை ஒன்றுதான் - அது மகிழ்ச்சியையும் தரலாம் அல்லது வருத்தத்தையும் தரலாம்!!!


வார்த்தை ஒன்றுதான் - அது மகிழ்ச்சியையும் தரலாம் அல்லது வருத்தத்தையும் தரலாம்!!!

*வார்த்தை ஒன்றுதான்*
மருத்துவர்
சொன்னால்
மகிழ்ச்சி

ரேசன் கடைகாரர்
சொன்னால்
வருத்தம்
*" சர்க்கரை இல்லை"*
😳 😇 🤔
****************************
*வார்த்தை ஒன்றுதான்*
கணவர்
சொன்னால்
மகிழ்ச்சி

மகன்
சொன்னால்
வருத்தம்
*" அரியர்ஸ் வந்து இருக்கிறது"*
😳 😇 🤔
****************************
*வார்த்தை ஒன்றுதான்*
மனைவி 
சொன்னால் கணவனுக்கு 
மகிழ்ச்சி

கணவன் 
சொன்னால் மனைவிக்கு 
வருத்தம்
*"ஊரில் இருந்து என் தங்கச்சி வர்றா"*
===================================================
படித்ததில் மகிழ்ந்தது!
அன்புடன்
வாத்தியார்
===============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.7.20

கரோனா வராமல் தப்பிக்க நான் செய்வது போதுமா டாக்டர்?


கரோனா வராமல் தப்பிக்க நான் செய்வது போதுமா டாக்டர்?

"டாக்டர்.. டாக்டர்.. நான் கரோனாவிலிருந்து தப்பிக்க எல்லா முயற்சி யும் பண்ணறேன்.. இருந்தாலும் பயமாருக்கு..."

*" என்னெல்லாம் பண்றீங்க"*

"யோகா
+
வாக்கிங்
+
😋லெமன் வாட்டர்
+
மஞ்சள் பொடி கலந்து சூடான பால் சாப்பிட றேன்
+
ச்யவன்பிராஷ் லேகியம்
எடுத்துக்கறேன்
+
முளைகட்டிய தான்யங்கள்
(Sprouts)
+
இஞ்சி
+
கொஞ்சம் பாதாம்
+
அத்திப்பழம் உலர்ந்தது
(காபூல்அத்திப்பழம் பேமஸ்..அது தான்.. டாக்டர்)
+
துபாய் பேரீச்சை
+
கொஞ்சம் dry fruits
எல்லாம் சாப்பிடறேன்
+
கப சுர குடிநீர் குடிக்கறேன்
+
வாயிலே ரெண்டு மிளகு,
லவங்கம்
அடக்கி வைச்சுக்கறேன்
+
மூக்கில ரெண்டு சொட்டு எண்ணெய்
விட்டுக்கறேன்
+
மஞ்சள் பொடி ,உப்பு கலந்து வெதுவெதுப்பான
ஜலத்தில தொண்டை வரைக்கும் படறா மாதிரி
gogle பண்ணறேன்..
+
ஓமம் எல்லாம் போட்டு
ஆவி பிடிக்கறேன்..
+
நாள் பூரா வென்னீர் தான் குடிக்கறேன்
+
பதஞ்சலி நீம்+துளசி மாத்திரை
+கிலோய்(அம்ருதவல்லி) மாத்திரை
எல்லாம் சாப்பிட்டேன்..
கைவசம் வைச்சும் இருக்கேன்..
+
ஹோமியோபதி ல
சொன்னாங்கன்னு
ஆர்சனிக் எல்போ+
கேம்ஃபர் மாத்திரை மாசத்துக்கு 5 நாள்
சாப்பிட்டேன்
+அல்லோபதிலே Hcqc+
Eginthryl+iverameqtin
ஒரு கோர்ஸ் எடுத்து ண்டேன்
+
அப்பறம்..
எப்பவும் முக கவசம்
+
கழுத்தில ஸ்கார்ஃப்
+
சேனிடைசர்லே
ஒரு நாளைக்கு 50தடவையாவது
கை கழுவுவேன்..
+
சாமான்லாம் door delivery தான்
+
Paytm ல தான் பேமெண்ட் எல்லாம்
+
💁♀️வேலைக்காரி கிடையாது.. நான் தான்
பாத்திரம் தேய்க்கிறேன்..
+
வீட்டு வேலை எல்லாம் செய்யறேன்
+
Daily தோய்த்த துணி தான் போட்டுக்குவேன்.. பார்ட்டி, function, எதுக்கும்
போறதில்லை...
+
சாமி கும்பிடறேன்
கை தட்டி, பஜனை பண்ணி சாம்பிராணி போட்டு எல்லாம் பண்றேன்..
+
*கரோனா தேவிக்கு* என்னால முடிஞ்ச அளவுக்கு விரதம் விடாமல் செய்ஞ்சுட்டேன்..
ஒரு பாபா கொடுத்த தாயத்து கூட கட்டிக்கிட்டேன்..
+
ஹெல்த் இன்சூரன்ஸும்
டேர்ம் இன்சூரன்ஸும்
எடுத்து வைச்சுண்டிருக்கேன்..
🤔டாக்டர்.. கொஞ்சம் சொல்லுங்க..வேற ஏதாவது விட்டு போச்சா..பண்ணறதுக்கு
🤔
👨🏻⚕️
டாக்டர்:-"போதும்.. போதும்.. 
ஹிரண்ய கசிபு போல
ஆயிட்டீங்க... 
😀உங்களே கரோனா என்ன எமனே எதுவும் பண்ணமுடியாது.. பகவானே இன்னொரு அவதாரம் எடுக்கணும் உன்னை கொண்டு போக..🤭
😂😂😂😂😂
--------------------------------------------------
படித்து ரசித்தது: பகிர்ந்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
===============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.7.20

நகைச்சுவை: தெனாலி ராமனும் கொரோனாவும்!!!!


நகைச்சுவை: தெனாலி ராமனும் கொரோனாவும்!!!!

டீல் வித் கொரோனா தி தெனாலி வே!

தெனாலி ராமன் வீட்டில் ஹாயாக நெட்ஃபிளிக்ஸில் மலையாளப்படம் பார்த்து கொண்டிருக்கிறார். 

அப்போது அவர் மனைவி அவரின் பர்சனல் மொபைலை எடுத்து வந்து,

தெனாலி ராமனின் மனைவி : சுவாமி, மன்னர் கான்ஃப்ரன்ஸ் காலில் இருக்கிறார். உங்களுடன் ஏதோ அவசரமாக பேச வேண்டுமாம்!

தெனாலி : நான் உறங்கிக் கொண்டிருப்பதாக சொல்லி சமாளிக்க வேண்டியது தானே? இந்த லாக்டவுனிலும் விடாமல் கழுத்தை.........

மன்னர் : தெனாலி........நான் லைனில் தான் இருக்கிறேன்.

தெனாலி : மன்னியுங்கள் மன்னா! மைக் ம்யூட்டில் இருப்பதாக நினைத்து உள்ளத்தில் இருந்தவற்றை உரக்க பேசி விட்டேன்.  எதற்காக இந்த அவசர ஆலோசனை?

மன்னர் : அமைச்சர்களே நன்றாக கவனியுங்கள்!
அஷ்டதிக்கஜங்கள் என்று உங்களுக்கு பட்டப்பெயர் கொடுத்தது சும்மா வீட்டில் சாப்பிட்டு தூங்க இல்லை. கொரோனாவை ஒழிக்க ஏதாவது யோசித்தீர்களா?

அமைச்சர் 1 : மன்னா, முக கவசம், மூலிகை குடிநீர், நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் அனைத்து மக்களுக்கும் கொடுத்தாயிற்று.

அமைச்சர் 2 : மக்கள் அனைவரையும் அவரவர் வீட்டிலேயே இருக்கும்படி எல்லோருடைய வீட்டின் முன்புற வாசலையும், பின்புற வாசலையும் பூட்டி, அனைத்து சாவிகளையும், நம்பர் ஒட்டி, அரண்மனை வைத்தியரின் பி.ஏ.விடம் ஒப்படைத்தாயிற்று.

அமைச்சர் 3 : மக்களுக்கு தேவையான பொருட்கள், காய்கனி முதலியவற்றை அவர்கள் வீட்டின் ஜன்னல் சாளரத்தின் வழியே பட்டுவாடா செய்வதற்கான அனைத்து  ஏற்பாடுகளும் தயார் மன்னா !

அமைச்சர் 4 : அரண்மனை வைத்தியரின் சிஷ்யர்கள் தினமும் வீடு வீடாக சென்று ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் மக்கள் அனைவரும் உடல்நலக்குறைவில்லாமல் நன்றாக இருக்கின்றனரா என்று விசாரித்து, அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்கின்றனர் மன்னா!

அமைச்சர் 5 : நம் நாட்டில் இருக்கும் ஆலயங்கள், குருகுலங்கள், மல்யுத்த கூடங்கள், வீர விளையாட்டுக்கள், கேளிக்கை கூடங்கள், எல்லாவற்றையும் மூடச்சொல்லி உத்தரவிட்டு ஐந்து மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது மன்னா!

அமைச்சர் 6 : நாடு முழுவதும் இண்டு இடுக்கு, சந்து பொந்து எல்லா இடங்களிலும் கிருமி நாசினி கூட தெளித்தாயிற்று அரசே!

அமைச்சர் 7 : அரண்மனை வைத்தியரும், அவருடைய பிரதான சிஷ்யர்களும் இந்த நோய்க்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் ராப்பகலாக ஈடுபட்டிருக்கின்றனர், மன்னரே!

மன்னர் : என்ன தெனாலி, நீ மட்டும் மௌனமாக இருக்கிறாய்? கொரோனாவை ஒழிப்பதில் உன் பங்களிப்பு என்ன?

தெனாலி : மன்னா, எனக்கு ஒரு வார கால அவகாசம் வேண்டும்.

மன்னர் : மக்கள் அனைவரும் வெளியில் வராமல் வீட்டிற்குள்ளேயே அடைபட்டு மிகவும் தவிக்கிறார்கள். அவர்களை காப்பது நம் அரசின் கடமை.  உனக்கு ஒரு வாரம் அவகாசம் தருகிறேன். அதற்குள் நீ உருப்படியான யோசனை எதுவும் சொல்லவில்லை என்றால் சிறையில் தள்ளப்படுவாய்.

தெனாலி : உத்தரவு மன்னா!

(ஒரு வாரம் கழிந்தது)

மன்னர் :  என்ன தெனாலியிடமிருந்து எந்த தகவலும் இல்லை!

இந்த சந்தர்ப்பத்தில் அவன் புத்திசாலித்தனம் எப்படி வேலை செய்கிறது என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறது.
ஹே.......சிரி.......... தெனாலியை கூப்பிடு!

தெனாலியின் மனைவி : வணக்கம் மன்னா! அவர் காலையிலேயே கிளம்பி எங்கோ வெளியே போய் விட்டார். நீங்கள் அழைத்தால் உங்களிடம் அவர் ஃபேஸ்புக் பேஜில் சரியாக நான்கு மணிக்கு லைவில் அவரை பார்க்கலாம் என்று சொல்ல சொன்னார்.  உங்களுடன் சேர்த்து நம் நாட்டில் இருக்கும் அனைத்து மக்களையும் ஃபேஸ்புக் லைவ் பார்க்க உத்தரவிடுமாறும் கேட்டுக்கொள்ள சொன்னார்.

மன்னர் : “அப்படியா, ஆச்சர்யமாக இருக்கிறதே! என்னவாக இருக்கும்?”

“சரி, மக்கள் அனைவரையும் இன்று நான்கு மணிக்கு ஃபேஸ்புக் லைவ் வரும்படி ஆணையிடுகிறேன். “

நேரம் சரியாக நான்கு மணி!

ஃபேஸ்புக் லைவில் மன்னர் லாக் இன் செய்ததும், தெனாலி ஒரு மலை உச்சியில், கையில் தாம்புக்கயிற்றை கெட்டியாக பிடித்துக்கொண்டு நிற்பதை பார்க்கிறார்.

பார்வையாளர்கள் பட்டியலில் நாட்டு பிரஜைகள் அனைவரும் இருக்கிறார்கள்.

காற்று வேகமாக வீசுகிறது.

எங்கே தெனாலி ஸ்லிப்பாகி விழுந்து விடப்போகிறாரோ என்று அனைவருக்கும் டென்ஷனாக இருக்கிறது.

மன்னர் “தெனாலி என்ன பண்ற?” என்று மெசேஜ் டைப் செய்கிறார்.

தெனாலி உரத்த குரலில் பேச ஆரம்பிக்கிறார்.

“மன்னா வணக்கம்! மக்கள் அனைவருக்கும் வணக்கம்!
இங்க பாருங்க, என் கையில் இருக்கும் தாம்பக்கயிறில் கொரோனாவை கட்டி இழுத்து வந்திருக்கிறேன். உங்கள் கண்களுக்கு அது தெரிகிறதா?
வீரர்களின் கண்களுக்கும், இளமையான யுவதிகளுக்கும் அது கண்டிப்பாக கண்ணில் தெரியும்.  தெரிந்தவர்கள் மட்டும் கமென்டில் ‘எஸ்’ போடுங்கள்.

மன்னர் : என்னது இது? கயிற்றின் நுனியில் ஒன்றுமே இல்லை. வீரர்களுக்கு கண்ணில் தெரியும் என்று பொடி வைத்து பேசுகிறானே, எதற்கு வம்பு, நமக்கு வீரம் இல்லை என்று நினைத்து விடப்போகிறான். ‘எஸ்’ போட்டு விடுவோம் என்று நினைத்து மெசேஜை டைப் செய்தார்.  அவர் ‘எஸ்’ என்றதும் ஆயிரக்கணக்கான ‘எஸ்’ கள் குவிந்தன.

தெனாலி : “ஓகே, குட், எல்லாரும் நல்லா பாருங்க.”

“இப்போ இந்த மலை உச்சிலேர்ந்து கொரோனாவை கீழே தள்ளிவிடப் போறேன், இன்னியோட கொரோனா ஒழிஞ்சது, நீங்க எல்லாரும் பழையபடி ஆட்டம், பாட்டு என்று நிம்மதியா இருக்கலாம்”
என்று சொல்லியபடியே தாம்பக்கயிற்றை கஷ்டப்பட்டு இழுப்பது போல் பாவ்லா செய்து, அதை மலை உச்சியின் மேலிருந்து கீழே தூக்கி வீசினான்.

மக்கள் மிகவும் ரசித்து, நிம்மதி பெருமூச்சுடன்,
“மன்னர் வாழ்க!
  தெனாலி வாழ்க” என்று கமென்ட் எழுதி ஸ்மைலியுடன் சேர்த்து மெசேஜ் எழுதி பாராட்டினார்கள்.

தெனாலியின் லைவ் வீடியோவிற்கு லைக்ஸும், கமென்டும், பாராட்டும் குவிந்து அன்றைய தினத்தின் டாப் ட்ரெண்டிங் ஆனது.

மன்னர் : “தெனாலி இது என்ன விளையாட்டு?”

என்று இன்பாக்ஸில் கேட்க,

தெனாலி : “மன்னா, இதற்கு பேர் தான் ‘பிளாஸிபோ எஃபெக்ட்’”.

மன்னர் : “அப்படின்னா?”

தெனாலி : “உங்கள் கேள்விக்கு கூகிளில் விரிவான விளக்கம் இருக்கிறது மன்னா! அந்த பக்கத்தை இன்பாக்ஸில் அனுப்புகிறேன். படித்து பாருங்கள். “

என்று பதில் மெசேஜும், அதனுடன் ஒரு லிங்க்கும் வந்தது.

இந்த நிகழ்ச்சி முடிந்து தொடர்ந்த வாரங்களில் கொரோனாவின் பயம் குறைந்து, வீரியம் குறைந்து, அந்த விஷக்கிருமி முற்றிலுமாக அழிந்தது.

ஒரு மாதம் கழித்து மன்னரின் ராஜ தர்பார்!

தெனாலி : வணக்கம் மகாராஜா!

மன்னர் : வாரும் தெனாலி அவர்களே!

கண்ணுக்கு தெரியாத கிருமியை மலை உச்சியின் மேலிருந்து தள்ளுவது போல் நாடகமாடி, அந்த கிருமியின் மேல் இருந்த பயத்தை மக்களிடமிருந்து அறவே போக்கி விட்டீர்கள்.

அதனால், அவர்கள் எதிர்ப்பு சக்தியும் அதிகரித்து ‘கொரோனா’ நோய் முற்றிலுமாக ஒழிந்தது.

நாடும், மக்களும் சுபிட்சமாக இருக்கிறார்கள்.

உங்கள் சமயோசிதமான  அறிவுக்கு என் உயர்ந்த பரிசு,

இதோ அங்கிருக்கும் அலங்கார இருக்கையில் அமருங்கள்!

இனிமேல் நீர் தான் இந்த ராஜ்யத்தின் முதல் அமைச்சர்!
சந்தோஷம் தானே!

தெனாலி : “அலங்கார இருக்கையா, எங்கே மன்னா? என் கண்ணுக்கு எதுவும் புலப்படவில்லையே!”

மன்னர் : “அது அறிவாளிகளின் கண்களுக்கு மட்டும் தான் தெரியும்”

தெனாலி : “ஹா....ஹா.....ஹா.... இப்போது நன்றாக தெரிகிறது மன்னா! உங்கள் அன்புக்கு நன்றி!”

உங்கள் கண்ணுக்கும் கிருமி மலை உச்சியிலிருந்து விழுந்தது தெரிந்ததா? 
----------------------------------------------------------------
படித்து ரசித்தது; பகிர்ந்தது
அன்புடன்
வாத்தியார்
========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.1.20

Humour: நகைச்சுவை: பெண்ணோட உயரத்தைச் சொன்னீங்க, ஆனா அகலத்தைச் சொன்னீங்களா?


நகைச்சுவை: பெண்ணோட உயரத்தைச் சொன்னீங்க, ஆனா 
அகலத்தைச் சொன்னீங்களா?

1.
மனைவி: கொஞ்ச நாளைக்கு என்கூடச் சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிங்க!
கணவன்: ஏன் .. .. ?
மனைவி: அதைப் பார்த்துட்டுத் தான் கண்ணை மூடுவேன்னு உங்கம்மா அடம் பிடிக்கிறாங்களே.
----------------------------------------
2.
டாக்டர் கோபமா இருக்காரே, ஏன் ?
ஆபரேஷன் தியேட்டர்ல யாரோ உடல் மண்ணுக்கு, உயிர் டாக்டருக்குன்னு எழுதி வெச்சிருக்காங்களாம்.
------------------------------------------
3.
என்னம்மா உங்க கணவர் காணாம போய் இருபது நாள் ஆச்சுன்னு சொல்றீங்க..... ஏன் இவ்வளவு நாள் கழிச்சு வந்து

கம்ப்ளைண்ட் பண்றீங்க ?
இன்னிக்குத் தான் சார் அவரோட சம்பள நாள்.
-----------------------------------------
4.
தரகரே.. நீங்க பெரிய விஷயத்தை மறைச்சுட்டீங்க.. இப்படிச் செய்யலாமா..?
ஏங்க.. என்ன ஆச்சு இப்போ..?
பொண்ணு அஞ்சரை அடி உயரம்ன்னு சொன்னீங்க.. சரி.. மூணு அடி அகலம்ன்னு சொன்னீங்களா..?
------------------------------------------
5.
நிருபர்: நீங்க இருபது வருசமா கட்சியிலே இருக்கீங்க. எம்.பி.க்கு ஏன் நிக்கல்லே...
நடிகை: இருபத்தி ஐந்து வயது ஆனவங்கதான் தேர்தல்லே நிற்கணுமாமே?
---------------------------------------------
6.
கணவன் ; சாமி கிட்ட என்னம்மா வேண்டிகிட்ட?
மனைவி ; அடுத்த ஜென்மத்திலும் நீங்க தான் என் புருஷனா வரணும்னு வேண்டிகிட்டேன்ங்க... நீங்க என்னங்க

வேண்டிகிட்டீங்க?
கணவன் ; எனக்கு அடுத்த ஜென்மமே வேணாம்னு வேண்டிகிட்டேன்...
-----------------------------------------------
7.
உங்க மாமியாருக்கு ஆபரேஷன் பண்ணனும், ரெண்டு லட்சம் ரூபாய் ஆகும்…!
என்ன டாக்டர், கூலிப் படையை விட அதிகமா சொல்றீங்க…!
-------------------------------------------------
8.
டைரக்டர்: நம்மளோட அடுத்த படம் 100நாள் ஓடணும்...
பவர் ஸ்டார் : இல்லை 500நாள் ஓடணும்...
டைரக்டர்: ஜோக் அடிக்காதிங்க சார் !!
பவர் : ங்கொய்யால! முதல்ல ஜோக் அடிச்சது யாரு நீயா? நானா?..
-------------------------------------------------
9.
பஸ் சார்ஜ் எவ்வளவு ஏறினாலும் எனக்கு கவலை இல்லை…
நிஜமாவா?
ஆமாம், செக்கிங் ஏறினால்தான் கவலை..!!!???..
--------------------------------------------
10.
என்ன இவ்வளவு சோகமா இருக்கீங்க...
என்னோட வைஃப் ஒரு மாசம் என்கூட பேசமாட்டேன் என்று சொல்லிட்டா.
அதுக்கு நீங்க சந்தோஷம் தானே படணும்...
எப்படிங்க...இன்னையோட அந்த ஒரு மாசம் முடியுதே...
-------------------------------------------
11.
எட்டு மணிக்கு மேலே விசிட்டர் யாரும் ஹாஸ்பிட்டல்ல இருக்கக்கூடாது..!
இருந்தா?
அவங்களையும் ‘அட்மிட்’ பண்ணிடுவோம்…!!
--------------------------------------------------
12
நேத்து நான் என் மனைவியை முட்டி போட வெச்சிட்டேன்!
நிஜமாவா, எப்படி?
அவ என்னை அடிக்க வரும்போது நான் கட்டிலுக்கு அடியிலே போய் ஒளிஞ்சிகிட்டேன்!'...
---------------------------------------------------
17.
பல்லு எப்படி விழுந்திச்சு?
அத வேற யாருகிட்டயாவது சொன்னா மீதி பல்லும் கொட்டிரும்னு என் மனைவி சொல்லியிருக்கா டாக்டர்!
-----------------------------------------------------
18. மாப்பிள்ளை வீட்டார்: பொண்ணு புடிச்சிருந்தா தான் சாப்பிடுவோம்.
பெண் வீட்டார்: பொண்ணு புடிச்சிருக்குன்னு சொன்னாதான் சமையலே ஆரம்பிப்போம்..!
------------------------------------------------------------------
19
டாக்டர்-"ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்."
நோயாளி-"ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?"
-----------------------------------------------------------
20
வித்வான் : நேத்து என் கச்சேரிக்கு வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்.
நம்மவர் : வரனுணும்னுதான் சார் நினைச்சேன்.அதுக்குள்ள வேறொரு கஷ்டம் வந்திருச்சி!.
------------------------------------------------------
21.
நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம் !
நபர் : ஏன்?
நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் !
-----------------------------------------------------
22.
நோயாளி : என்ன டாக்டர் இது, மருந்து சீட்டில் சா-வுக்கு முன், சா-வுக்கு பின் அப்படினு போட்டிருக்கீங்க.
டாக்டர் : அதுக்கு ஏன் இப்படிப் பதர்றீங்க! சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின் அப்படின்னு எழுதியிருக்கேன்.
-------------------------------------------------------------------
23.
மனைவி : என்னங்க செத்துட்டா சொர்கத்துல கணவன் மனைவி தனியாத்தான் இருகனுமாம்ல..............
கணவன் : அதனால தாண்டி அது சொர்க்கம் ...........!
மனைவி . . . . ????
--------------------------------------
இதில் எது மிகவும் நன்றாக உள்ளது?
எழுதுங்கள்!
அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30.9.19

ஏடாகூடமான பள்ளிக்கூடம்!!!!


ஏடாகூடமான பள்ளிக்கூடம்!!!!

ஒருபள்ளிக்கூடத்துக்கு ஆய்வாளர் ஒருத்தர் வந்தாரு. அந்த பள்ளிக்கூடத்தப் பத்தி ஏற்கனவே நிறைய அவரோட வேலை பாத்தவங்க சொல்லி இருக்காங்க... 'இது ஒரு ஏடாகூடமான ஸ்கூலு பார்த்து ட்ரீட் பண்ணுங்க'ன்னு அதனால எதுக்கும் தயாராத்தான் அவர் வந்தார்...😂
😂முதல்ல ஒரு வகுப்புக்குள்ள நுழைஞ்சாரு... உடனே பசங்க எல்லாம் எழுந்திருச்சு நின்னு வணக்கம் சொன்னாங்க...
😂சரி... எடுத்தவுடனேயே எதாவது கேள்வி கேக்க வேண்டாம்ன்னு முதல் பையன எழுப்பி...😂

😂"உன் பேர் சொல்லு"
"பழனி"
"உன் அப்பா பேரு" "பழனியப்பா",
😂அடுத்தப் பையன எழுப்பி ,
"உன் பேர் சொல்லு" "மாரி"
"உன் அப்பா பேரு" "மாரியப்பா..." 😂
😂அவருக்கு கொஞ்சம் டவுட் வருது😦...
😂இருந்தும் அடுத்தப் பையன எழுப்பி...
"உன் பேர் சொல்லு"
"பிச்சை"
"உன் அப்பா பேரு"
"பிச்சையப்பா"
இப்பொ அவருக்கு கன்பார்ம் ஆயிடுச்சு, சரி பசங்க ஆரம்பிச்சுட்டாங்க அப்படினு புரிஞ்சுருச்சு😒...
😂அடுத்தப் பையன எழுப்பினாரு...
😂"முதல்ல நீ உன் அப்பா பேரைச் சொல்லு..." (மனசுக்குள்ள ஒரு பெருமிதம்😍)
😂"ஜான்"
"இப்பொ உன் பேரைச் சொல்லு"
"ஜான்சன்"
கொஞ்சமா டென்சன் ஆயிடுச்சி...😈😈😈
😂அடுத்த பையன எழுப்பி,
"உன் அப்பா பேர சொல்லு..."
"டேவிட்.."
"உன் பேரு...?"
"டேவிட்சன்" கொலவெறி ஆயிட்டாரு😬😬😬,
😂கொஞ்ச நேரம் நிதானமா யோசிச்சி,
அடுத்த பையன எழுப்பி,
😂"உன் தாத்தா பேர சொல்லு...😣"
"சார்... அப்பாவோட தாத்தாவா?, அம்மாவோட தாத்தாவா?"
ஆய்வாளர் பல்ல கடிச்சிக்கிட்டு😬😠,
"அப்பாவோட தாத்தா...😤."ன்னாரு
"வீரமணி",
"சரி அப்பா பேரு?",
"வீ.ரமணி",
"உன் பேரு?😕",
"வீ.ர.மணி...😊"
அப்புறம் என்ன... !!!! அதுக்கு அப்பறம் அந்த பள்ளிக்கு ஆய்வாளருன்னு ஒருத்தருமே எட்டி பார்க்குறதில்லையாம்... 😂😂😂
==========================================================================
2

1.  சரியான பெண்ணை திருமணம் செய்தால் தினமும் "காதலர் தினம்"
2. அன்பான பொண்ணை திருமணம் செய்தால் தினமும் "அன்னையர் தினம்"
3. தவறான பெண்ணை திருமணம் செய்தால் தினமும் "தியாகிகள் தினம்"
4. சோம்பேறி பெண்ணை திருமணம் செய்தால் தினமும் "உழைப்பாளர் தினம்"
5. பணக்கார பெண்ணை திருமணம் செய்தால் தினமும் "புத்தாண்டு தினம்"
6. அதி புத்திசாலி பெண்ணை திருமணம் செய்தால் தினமும் "முட்டாள்தினம்"
7. லூசுப் பெண்ணை திருமணம் செய்தால் தினமும் "குழந்தைகள் தினம்"
8. கோபக்கார பெண்ணை திருமணம் செய்தால் தினமும் "அடிமைகள் தினம்"
9. திருமணமே செய்யாமல் இருந்தால் தினமும் "சுதந்திர தினம்"

=========================================================
படித்து, நகைத்துப் பதிவிட்டது!
அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.8.19

கி.வா.ஜ அவர்களின் சிலேடை நகைச்சுவை


கி.வா.ஜ அவர்களின் சிலேடை நகைச்சுவை

கி.வா.ஜகந்நாதன் ஒரு ஊருக்குப் பேச்சாளராகச் சென்றார்.  அவருக்கு சிற்றுண்டி ஏற்பாடு செய்பவர், "தங்களுக்குப் பூரி பிடிக்குமா? என்று கேட்டார். அதற்கு இவர், 'ஜகந்நாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?' என்று சொல்ல,
அருகிலிருந்த அனைவரும் அவரது சமயோசித பதிலைக் கேட்டுச் சிரித்தனர்.

கி வா ஜ உதிர்த்த முத்து

ஒரு கல்யாண வீட்டில் சாப்பிட்டு விட்டுக் கை கழுவ வந்தார், கி வா ஜ. ஒரு செம்பில் தண்ணீர் எடுத்து அவர் கை கழுவத் தந்தார், ஒரு அன்பர்.

சாதாரணமாக நீரில்தான் குவளை இருக்கும் !!
இங்கே குவளையில் நீர் !!

கி. வா. ஜ அவர்கள் ஒரு கூட்டத்தில் இம்மை - மறுமை என்ற தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருந்தார். அவர் உரையாற்ற ஆரம்பித்ததும் மைக் கோளாறாகி விட்டது.

அதை அகற்றி விட்டு வேறு மைக் வைத்தார்கள். அதுவும் கொஞ்ச நேரத்தில் சரியாகச் செயல்படவில்லை.

கி.வா.ஜ உடனே  *“இம்மைக்கும் சரியில்லை,  அம்மைக்கும் சரியில்லை"* என பேசவிருந்த தலைப்பிற்கு ஏற்றவாறு சிலேடையில் சொல்ல, அனைவரும் ரசித்தனர்.
_________

ஒரு குழந்தைக்கு, அதன் அம்மா உப்புமா ஊட்டிக் கொண்டிருந்தார். எதனாலோ அந்தப் பழைய உப்புமா குழந்தைக்குப் பிடிக்கவில்லை. அருகில் இருந்தார் கி.வா.ஜ. 'உப்புமாவைத் தின்ன' முடியலையோ! உப்புமா ஏன் தொண்டையைக் குத்துகிறதா'' எனக் குழந்தையைக் கோபித்துக் கொண்டார், அந்தப் பெண்மணி.

கி.வா.ஜ. அந்தப் பழைய உப்புமாவை வாங்கி வாயில் போட்டுக் கொண்டு பார்த்தார்.

பிறகு, ''ஆமாம். இந்த உப்புமா தொண்டையைக் குத்தத்தான் செய்யும்'' என்றார்.

ஏன் என்று அந்த அம்மா கேட்டார், *'ஊசி இருக்கிறது'* என்று கூறிச் சிரித்தார் கி.வா.ஜ.!
__________

கி வா ஜ ஒருமுறை தொடர்ச்சியாக விழாக்களில் கலந்து கொண்டதால் இருமல் மற்றும் தொண்டை புண்ணால் அவதிப் பட்டார். அதற்காக விழாக்குழுவினர் அவருக்கு cough syrup ஒன்றை கொடுத்து சாப்பிடச் சொன்னார்கள்.
கி வா ஜ அவர்கள் இதைத்தானா கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் "சிறப்பு" என்கிறார்கள் என்று கேட்டார்.
___________

பல்லாண்டுகளுக்கு முன் சென்னை வீனஸ் காலனியில் நடந்த வாரியாரின் புராணச் சொற்பொழிவின் இடையே ஒரு நாள் வாரியார் எழுதிய நூல் ஒன்றை வானதி பதிப்பகத்தினர் வெளியிட்டனர்.

பாராட்டுரை சொல்ல வந்த கி. வா. ஜ, பதிப்பாளர் வாரியார் சுவாமிகளுக்குப் பொன்னாடையைப் போர்த்தியதும் சிலேடையாக, *'நூல் தந்த வாரியாருக்கு பதிப்பாளர் ஆடை தருகிறார்'* என்றார். அரங்கத்தில் கைதட்டல் எழுந்தது.

அடுத்து இறை வணக்கம் பாடிய சிறுமிக்கு கி. வா.ஜ. ஒரு பேனா பரிசளித்தார். இதைக் கண்ட வாரியார் உடனே தன் பங்குக்கு, *"நாவால் பாடிய சிறுமியை கி.வா.ஜ. பே_னாவால் கௌரவிக்கிறார்"* என்றதும் மறுபடியும் கைதட்டல்
வானைப் பிளந்தது.
____________

ஒரு கடை முதலாளியின் வீட்டில் விருந்து. கி.வா.ஜ-வும் அதில் கலந்துகொண்டார். அனைவரும் உணவு உண்ண அமர்ந்திருக்க,
கடையில் வேலை செய்யும் ஒரு பையன் மட்டும் இல்லாதது கண்டு,
கி.வா.ஜ. அது பற்றி விசாரித்தார்.

“அவன் கடையைப் பூட்டிவிட்டு வந்து அடுத்த பந்தியில் கலந்துகொள்வான்” என்றார் முதலாளி.

*ஓகோ! கடை சிப்-பந்திக்குக் கடைசிப் பந்தியா?!”* என்று கேட்டார் கி.வா.ஜ.
____________

ஒரு நண்பர் வீட்டுக்கு கி.வா.ஜ. போயிருந்தபோது, நண்பரின் மனைவி விளாம்பழத்தில் வெல்லம் போட்டுப் பிசைந்து, அன்போடு கொண்டு வந்து உபசரித்தார். அதை வாங்கி உண்ட கி.வா.ஜ. “மாதுளங்கனி அருமை!” என்று பாராட்டினார்.

“மாதுளங்கனியா! நான் தந்தது விளாம்பழம் அல்லவோ!” என்று அந்த அம்மையார் குழப்பத்துடன் கேட்க,

*“மாது உளம் கனிந்து கொடுத்த கனி என்று சொன்னேன்!”* என்றார் கி.வா.ஜ.
கிவாஜ சிலேடையில் உச்சமான ஒன்று!!

அவரை அதே போல மடக்கிய ஒரு பெண் உண்டு தெரியுமா? -
ஒரு பெண் அவரை தங்கள் கூட்டத்தில் பேச அழைத்தாள்.

கிவாஜ - *இன்னிக்கு வேணாமே!* *தொண்டை கம்மியிருக்கு...* என்றார்..

அந்தப் பெண் சொன்னாள் - *பரவாயில்லை, கம்மல் பிரகாசிக்கவே செய்யும்.*

ஒரு தடவை அவருக்கு போர்த்திய பொன்னாடை கிழிந்து இருந்தது...

அதற்கு அவரின் கமெண்ட்: *"இந்த பொன்னாடையில் பூ இருக்கிறது...பழம் இருக்கிறது...பிஞ்சும் இருக்கிறது...*
----------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.7.19

அன்பருக்காக ஒரு பதிவு!

அன்பருக்காக ஒரு பதிவு!

என்னுடைய பழைய பதிவு ஒன்றைப் படித்து விட்டு, இது மாதிரி
அடிக்கடி எழுதுங்கள், தவறாமல் வந்து தடயம் பதித்து விட்டுப்
போவோம் என்று எழுதியிருந்தார் ஒரு அன்பர்!!!!

அவருக்காக இந்தப் பதிவு!
-------------------------------------------------------------------------------

நகைச்சுவைப் பதிவு! ஆராயாதீர்கள்; அனுபவித்து மகிழுங்கள்!

------------------------------------------------------------------------------------

தன் பணக்காரக் கணவனிடம், அவனது அன்பு மனைவி சொன்னாள்

“அன்பே! எனக்கு நாளை 28வது பிறந்த நாள்!”

“ஓ...28 தான் ஆகிறதா? பார்த்தால் அறுபதை நெருங்கிக் கொண்டிருக்கிற மாதிரித் தெரிகிறது!”

மனைவி, செல்லமாக அடிப்பதற்குக் கையை ஓங்கினாள்: அவன் தடுத்து விட்டுச் சொன்னான்

“உன் பிறந்த நாளும் அதுவுமாக என்னை மருவத்து மனைக்கு அனுப்பி விடுவாய் போலிருக்கிறதே! சரி, சொல்! உனக்குப் பிறந்த நாள் பரிசாக என்ன வேண்டும்?

மனைவி புன்னகைத்து விட்டுச் சொன்னாள்:

“நான்கே நொடிகளில் ஜீரோவிலிருந்து நூறுக்கு எகிறக்கூடிய (நூறைத் தொடக்கூடிய - From 0 to 100) சாதனம் ஒன்று இருக்கிறது. அதை வாங்கிக் கொடுங்கள்; அது என்ன வென்று நான் சொல்ல மாட்டேன்! நீங்களே கண்டு பிடித்து வாங்கிக் கொண்டு வாருங்கள்!”

அதன்படியே கணவன் செய்தான்!

மனைவி நினைத்தையும், கணவன் வாங்கிக் கொண்டு வந்ததையும் கீழே அறியத் தந்திருக்கிறேன்:-))))

முதலில் மனைவி நினைத்தது:விரும்பியது!


ரேஸ் கார்
---------------------------------------------------------------------------------
கணவன் வாங்கிக் கொண்டு வந்தது என்ன?
சற்று யோசித்துப் பார்த்துவிட்டுக் ஸ்க்ரோல் டவுன் செய்து பாருங்கள்!

V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V

--------------------------------------------------------------------------------------
இப்போது கணவன் மருத்துவமனை ஐ.சி.யூவில்; ஆனால் கவலைப் படும்படியாக ஒன்றும் இல்லை!
He is in a stable condition!:-)))))))
------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.7.19

வாத்தியார் கேட்ட லிப்ட்!


வாத்தியார் கேட்ட லிப்ட்!

கவிதைப் போட்டி ஒன்றின் தலைப்பைப் பார்த்த உடனேயே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகி விட்டது.  இதைத் தலைப்பாகக் கொடுத்திருக்காங்களே - நாம்  சுளுவாக  எழுதிவிடலாம் என்று நினைத்தேன்.

எழுதினதோடு சும்மா இருந்திருக்கக்கூடாதா? என் போதாத நேரம் அதை வகுப்பில் வைத்து கொஞ்சம் கரெக்ட் பண்ணிவிடலாம் என்று வகுப்பறைக்கு எடுத்துக்கொண்டு போனதுதான் தப்பாகப் போய்விட்டது சாமிகளா !

தலைமை ஆசிரியர் கூப்பிட்டார்ன்னு ஒரு எட்டுப் போய்விட்டுத் திரும்பறதுக்குள்ள - ஒரு வாலில்லாத பயல் அந்தக் காகிதத்தில ஒரு அடிக்குறிப்பை எழுதி வைத்துவிட்டான்.

சும்மா சொல்லக்கூடாது நன்றாகத்தான் எழுதியிருந்தான்!

படிப்பைத் தவிர பசங்களுக்கு மத்ததெல்லாம் நல்லா வருது சாமி - நல்லாவே வருது!

இரண்டையும் கீழே கொடுத்திருக்கேன் - நீங்களே பாருங்க!.
----------------------------
கவிதைத் தலைப்பு: கொஞ்சம் கிடைக்குமா லிப்ட்?

மனைவியோடு வெளியில் போனால் மட்டுமே
மனமுவந்து வண்டியை எடுப்பது வழக்கம்
வாகனம் இன்றி வாசலில் நிற்கிறேன்
கொஞ்சம் கிடைக்குமா லிப்ட்?

கட்டியிருக்கும் வெள்ளை வேஷ்டி, சட்டை
கணப் பொழுதில் கசங்கிவிடும் - நனைந்துவிடும்
ஆகவே பேருந்தில் அடியேன் செல்வதில்லை
கொஞ்சம் கிடைக்குமா லிப்ட்?

ஆட்டோக் காரரிடம் பேரம் இன்றி
அதிரடியாய்ச் சென்று திரும்ப
அடியவன் எனக்குப் பழக்கம் இல்லை
கொஞ்சம் கிடைக்குமா லிப்ட்?

இந்தியப் பொருளாதாரத்தை
இயன்றவரை மேம்படுத்த
அடியேன் பெட்ரோல் போடுவதில்லை
ஆகவே கொஞ்சம் கிடைக்குமா லிப்ட்?
-------------------------
(நான் இல்லாத நேரத்தில் வகுப்புப் பையன் ஒருவன்
எழுதி வைத்த அடிக்குறிப்பு கீழே உள்ளது)

இரண்டு பங்க்குகள் என்தந்தைக்(கு) உண்டு
இலவசப் பெட்ரோல் உங்களுக்(கு) உண்டு
அறுவையின்றி, சிகிச்சையின்றி, வகுப்பைக் கடக்க
அடியேன் எனக்குக் கிடைக்குமா லி•ப்ட்?

எப்படி இருக்கு - என்னைவிட பயல் நல்லா எழுதியிருக்கானில்லையா?
----------------------------
அப்புறம் யோசித்தேன் - என் வகுப்பில நாகபட்டினத்தில இருந்து ஒரு தம்பி வந்து படிக்குது. நல்லா படிக்கும் - அதனால அந்தத் தம்பியை மொத பெஞ்ச்சில உட்கார வச்சிருக்கேன்.

இந்த அடிக்குறிப்பை அந்தப் பையன் எழுதியிருந்தா எப்படியிருக்கும்னு கற்பனை செய்து பார்த்தேன்

அவன் எழுதியிருந்தா இப்படித்தான் எழுதியிருப்பான்

கடவுள்கொடுத்த கால்கள் உண்டே கடப்பதற்கு,
நடப்பதற்கு மனம்தான் தேவை! - அடடா
எங்களைப்போல பள்ளிக்கு ஓடிவரவா சொல்கிறோம்?
எதற்குக் கேட்கிறீர்கள் எல்லோரிடமும் லிப்ட்?
-------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
====================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.7.19

முன்னாடியா அல்லது பின்னாடியா?


முன்னாடியா அல்லது பின்னாடியா?

"நெக்ஸ்ட்" என்று டாக்டர் குரல் கொடுத்தவுடன் கதவைத்திறந்து கொண்டு வந்தவரைப் பார்த்தவுடன் டாக்டருக்கே பரிதாபமாக இருந்தது.

வந்தவருக்கு வயது நாற்பது இருக்கும். இரட்டை நாடி உடம்பு. நடக்க முடியாமல் நடந்து வந்தார். முகம் மட்டும் அப்பாவித்தனமாக இருந்தது. தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார். பிறகு எதிரில் இருந்த இருக்கையில் சிரமப்பட்டு அமர்ந்தார்.

"சொல்லுங்கள்" என்றார் டாக்டர்.

"உடம்பு கனத்து விட்டது சார். அதுதான் பிரச்சினை. எப்படிக் குறைப்பது என்று தெரியவில்லை. சாப்பாட்டைக் குறைக்கமுடியவில்லை. குறைத்தால் பசி பிராணன் போகிறது.இப்போது நூறு கிலோ வெயிட்டாகி விட்டது. குறைப்பதற்கு உதவுங்கள்" என்றார்.

"முப்பது கிலோ அதிகமாக இருக்கிறீர்கள். சடனாகக் குறைக்கக் கூடாது. படிப்படியாகக் குறைத்து விடுவோம். நீங்கள் காலையிலும், மாலையிலும் தவறாமல் ஒரு நாற்பது நிமிடங்களாவது வாக்கிங் போகவேண்டும்."

"சரி சார்!"

"உங்கள் உணவுப் பழக்கத்தைப் பற்றி சொல்லுங்கள்" என்றார் டாக்டர்.

வந்தவர் பட்டியலிட ஆரம்பித்தார்." காலை ஆறு மணிக்கு ஒரு டம்ளர் காப்பி,. எட்டு மணிக்கு நான்கு இட்லி, நான்கு தோசை. பதினோரு மணிக்கு ஒரு கப் சூப், ஒரு பிளேட் காளிப்ள்வர். ஒரு மணிக்கு •புல் மீள்ஸ் வித் சிக்கன் 65, மாலை 4 மணிக்கு மூன்று பஜ்ஜி அல்லது 3 உருளைக்
கிழங்கு போண்டா, இரவு எட்டு மணிக்கு ஆறு சப்பாத்தி, ஒரு கப் ஐஸ்க்ரீம், படுக்கப்போகும் முன்பு இரவு 10 மணிக்கு ஒரு டம்ளர் கற்கண்டு பால்"

டாக்டர் உணவுக்கட்டுப்பாடு மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்றவர். வந்தவரின் எடைக்கு அவருடைய அந்த மோசமான உணவுப் பழக்கம்தான் காரணம் என்று தெரிந்து கொண்டவர், அதை மாற்ற நினைத்து மெல்லிய குரலில் சொன்னார்.

"முதலில் பதினைந்து நாட்களுக்குப் பசித்தால் மட்டுமே சாப்பிடுங்கள். இரண்டு டம்ளர் கோதுமைக் கஞ்சி , ஒரு டம்ளர் ஆப்பிள் ஜூஸ் சாப்பிடுங்கள்!"

வந்தவர் அப்பாவித்தனமாகக் கேட்டார், "அது இரண்டையும் எப்போது சாப்பிடவேண்டும் டாக்டர் - சாப்பிடுவதற்கு முன்னாடியா அல்லது பின்னாடியா?"
-------------------------------------------------------------
2
வழக்குரைஞருக்கு என்ன தெரிந்திருக்க வேண்டும்?

உன் பக்கம் உண்மை இருந்தால்
அந்த உண்மையை நீதிமன்றத்தில் அடித்துப்பேசு!

உன் பக்கம் சட்டம் இருந்தால்
நீதிமன்றத்தில் அந்த சட்டத்தை எடுத்துச் சொல்லி அடித்துப்பேசு!

அவை இரண்டுமே உனக்கு சாதகமாக இல்லையென்றால்
நீதிமன்றத்தின் மேஜையை அடித்துப்பேசு!

- மின்னஞ்சலில் வந்தது!
---------------------------
What a lawyer should know?

If you have facts on your side, hammer the facts in Judge's mind;

If you have law on your side, hammer the law in Judge's mind;

If you have neither, hammer the table!

===========================================================
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.7.19

மாணவன் எழுதிய அடிக்குறிப்பு!


மாணவன் எழுதிய அடிக்குறிப்பு!

காட்சி 1

நகரப் பேருந்து ஒன்றில் பயணித்துக் கோண்டிருந்தேன்

உள்ளே நல்ல கூட்டம். நெருக்கடி.

பல கல்லூரிக் காளைகள் படியில் தொற்றிப் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.

படி எதிரே உள்ள ஒரு எழுத்து வாசகம் மிக அழகாக படிப்பயணத்தை எச்சரிக்கை செய்து கொண்டிருந்தது.

"படியில் பயணம்
நொடியில் மரணம்!"

அதையும் மீறிப் படியில் பயணிப்பவர்களை, நடத்துனர் எச்சரிக்கை செய்தும், அவர்கள் கேட்டபாடில்லை. கோபம் கொண்ட அவர் கிண்டலாக இப்படிச் சொன்னார்.

"என்னம்மா கண்ணுங்களா, எல்லாரும் வீட்டில சொல்லிட்டு வந்திட்டீங்களா?"

அவர்கள் சளைத்தவர்களா?

அதில் ஒருவன் சொன்னான்,  "ஆ...சொல்லாம வருவமா? சொல்லிட்டுத்தான் வந்திருக்கோம். பின்னாடிப் பாரு நம்மளை பாலோ பண்ணி வந்திக்கிட்டிருக்கில்ல ஆம்புலன்ஸ் அதுவும் நாங்க சொல்லித்தான் பின்னாடி வந்திக்கிட்டிருக்கு!"

"ஓ, அப்ப சங்கு ஊதுரவனுக்கு மட்டும் சொன்னாப் போதும் - இல்லையா?" இது நடத்துனர்.

பேருந்தில் கொல்லென்று சிரிப்பு

அடடா! என்னே நகைச்சுவை உணர்வு.
---------------------------------
காட்சி 2

ஒவ்வொரு நாளும் காலையில், வகுப்புத் துவங்கு முன்பாக கரும்பலகையில் பொன்மொழி ஒன்றை அல்லது மாணவர்களைச் சிந்திக்க வைக்கும் வாசகம் ஒன்றை எழுதி வைக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர் உத்தரவு
போட்டு வைத்திருக்கிறார்.

தினம் ஒரு பொன்மொழியா - அதற்கு நான் எங்கே போவேன்?

என் வகுப்புக் கண்மணி ஒருவன்தான் "சார் கவலைப் படாதீர்கள். உங்கள் பிரச்சினையைத் தீர்த்து வைக்கிறேன்" என்று புது மண்டபத்தில் உள்ள பழைய புத்தகக் கடையில் இருந்து பொன்மொழிக்களஞ்சியம் என்ற புத்தகம் ஒன்றை வாங்கிக் கொடுத்தான். அதிலிருந்துதான் தினம் ஒன்றைப் படித்து அல்லது பிடித்துக் கரும்பலகையில் எழுதிச் சமாளித்து விடுவது என் வழக்கம்.

இன்று போதாத காலம் குறித்துக் கொண்டு வரவில்லை.

என்ன செய்யலாம் என்று யோசித்தேன்
.
பேருந்தில் படித்த வாசகம் நினைவிற்கு வர, அதையே எழுதிவிட்டேன்.

"படியில் பயணம்
நொடியில் மரணம்!
----------------------------
காட்சி 3

தலைமை ஆசிரியர் அழைத்திருந்ததால், அவரைப் பார்த்துவிட்டு ஐந்து நிமிடங்களில் வகுப்பிற்குத் திரும்பி வந்தேன்
.
என்ன நினைத்தேனோ அது நடந்து விட்டது!

எவனோ ஒரு கண்மணி நான் எழுதியிருந்த அந்த வாசகங்களுக்கு கீழே அடிக்குறிப்பு ஒன்றை எழுதி விட்டானய்யா,

எழுதி விட்டான்!

நீங்களே பாருங்கள்:

"படியில் பயணம்
நொடியில் மரணம் :

"பிடியில் கவனம்
போகுமே மரணம்!"

அதாவது நல்லாக் கம்பியைக் கெட்டியாப் பிடிச்சிக்கிட்டுப் படியில நீ பாட்டுக்குப்போடா - எப்படிடா மரணம் வரும் -

வந்தாலும் - பிடிச்சிருக்கிற பிடியைப் பாத்திட்டு அது ஓடிப்போயிரும்டான்னு எழுதியிருக்கானய்யா எழுதியிருக்கான்

இந்த மாதிரி எது செஞ்சாலும் அதுக்கொரு அடிக்குறிப்பு வச்சிருக்கிறவங்களையெல்லாம் வச்சிக்கிட்டு எப்படி சாமி
பாடம் நடத்தறது - நீங்களே சொல்லுங்கள்!
----------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
==================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.7.19

எதற்காகச் செருப்பைக் கழற்றினான்?


எதற்காகச் செருப்பைக் கழற்றினான்?

செருப்பு என்ன சாதாரண சமாச்சாராமா - நம் கால்களின் பாதுகாவலன் அல்லவா - இடம் பொருள்

ஏவல் என்று பார்க்காமல் அதைக் கழற்றலாமா ?

கழற்றிவிடக்கூடாதுதான். ஆனால் கழற்றிவிட்டவனிடம் கேட்டாலல்லவா - உண்மைக் காரணம் தெரியும்!

வாருங்கள் என்னவென்று பார்ப்போம்

அடர்ந்த காடுகள் - மலைகள் சூழ்ந்த ரம்மியமான கிராமம் அது. அங்கே இரண்டு நண்பர்கள்.

விடுமுறை நாட்களில் இருவரும் அருகிலுள்ள காட்டிற்கு வேட்டைக்குப் போவார்கள். காட்டில் முயல், ஆடு என்று கிடைப்பதைப் பிடித்துக் கொண்டு திரும்புவார்கள்.

காட்டின் முன் பகுதில் முதல் 2 கிலோ மீட்டர் தூரம் வரைக்கும்தான் செல்வார்கள். அதற்குப் பிறகு மிகவும் அடர்ந்த காடு. கொடிய வனவிலங்குகளிடம் மாட்டிக்கொள்ளும்படி நேரிட்டுவிடும்.அதெல்லாம் அவர்களுக்குத் தெரியும்.பாதுகாப்பிற்கு ஒரு ஏர் கன் மட்டும்தான்.

சத்தம் மட்டும்தான் அது எழுப்பும்.

அப்படித்தான் அன்றும் சென்றார்கள். நான்கு முயல்கள் கிடைத்தன. வலை, சாக்கு சகிதமாகத வேட்டையை முடித்துவீட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார்கள்

விதி பாருங்கள். அடர்ந்த காட்டுப்பகுதியில் திரியவேண்டிய புலி ஒன்று வழி தவறி காட்டின் முன் பகுதிக்கு வந்து விட்டது.

புலி இவர்கள் இருவரையும் பார்த்து விட்டது: இவர்களும் புலியைப் பார்த்துவிட்டார்கள்!

அப்புறம்?

அப்புறம் என்ன- துண்டைக்காணேம் துணியைக் காணேமென்று வலை, பிடித்த முயல்கள் எல்லாவற்றையும் கீழே போட்டுவிட்டு, ஓட ஆரம்பித்தார்கள்

புலி துரத்தும் போது ஓடித்தப்பிப்பதற்கு ஒரு டெக்னிக் இருக்கிறது. நேர் கோட்டில் ஓடக்கூடாது.

ஜிக் ஜாக்காக வளைந்து, புதர்களில் மறைந்து ஆட்டம் காட்டித்தான் ஓட வேண்டும்.

அவர்களும் அப்படித்தான் ஓடினார்கள். புலியும் மோப்பம் பிடித்துத் துரத்திக்கொண்டு வந்தது.

அப்பொது ஓடிக்கொண்டிருந்த இருவரில் ஒருவன், தன் செரூப்புக்களைக் கழற்றி எறிந்துவிட்டு ஓட ஆரம்பித்தான்

கூட ஓடிக்கொண்டிருந்தவனுக்கு அதிர்ச்சி ! என்னடா மடையனாக இருக்கிறானே - காட்டில் முற்கள் நிறையக்கிடக்குமே - காலில் குத்தினல் என்னாவது?

ஓடிக்கொண்டே வருத்தத்துடன் அவனிடம் கேட்டான்

"ஏண்டா, செருப்பில்லாமல் ஓடினால் புலியைவிட வேகமாக ஓட முடியுமா?"

அவன் கூலாகச் சொன்னாண்,"அதெப்படி முடியம்?"

"பின் ஏண்டா நாயே, செருப்பைக் காழற்றி எறிந்தாய்?"

அவன் முன்பைவிடக்கூலாக இப்படி சொன்னான்,

"புலியைவிட வேகமாக ஓட முடியது - ஆனால் உன்னைவிட வேகமாக ஓடமுடியுமல்லவா?"
----------------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.7.19

வாத்தியாருக்கு வால் உண்டா?


வாத்தியாருக்கு வால் உண்டா?

அதை ஏஞ்சாமிகளா கேக்கிறீக! இன்னிக்குக் காலைல ஹெல் மாஸ்டரு - அதுதான் தலைமை வாத்தியார் (நம்ம பசங்க வச்ச பேரு சாமி - நம்மள மாட்டவிட்ராதிங்க ராசாக்களா) என்னையப் புடிச்சு காச்சு காச்சுன்னு காச்சிப்புட்டாரா - அதே வேகத்தோட வந்து பசங்களுக்கெல்லாம் பாடம் நடத்த ஆரம்பிச்சேன்.

எல்லாப் பயபிள்ளைகளும் என்னைக் கெடுத்ததுமில்லாம நாங்களும் தேன்கூடு போட்டிக்குப் போயி எழுதிட்டு வர்றோம் அய்யான்னுட்டுப் பொட்டாய்ங்ய. அதுக்குத்தான் காலையில எனக்கு ஹெல் மாஸ்ட்டருகிட்ட அந்த டோசு!

வாரத்தில ஒரு நாளாவது பாடம் நடத்த வேண்டாமா சாமி?

சரின்னு புத்தகத்தைத் தொறந்து வச்சு இன்னைக்கு என்ன பாடம்டா நடத்தலாம்னு யோசிச்சேன். போனவாரம் எந்த இடத்தில முடிச்சோம்னு எனக்கே ஞாபகம் இல்லை

கண்ணில பட்டது ANIMALS ங்கிற பாடம். சரி இந்த வானரங்களுக்கு அந்த வானரங்களை பத்தி நடத்தினாத் தான் சரியா வரும்னு அதையே நடத்த ஆரம்பிச்சேன். 

என் போதாத நேரம் சும்மா பாடத்தை நடத்தியிருக்கக் கூடாதா? பொது அறிவுல ஒரு கேள்வியைக் கேட்டுப் பிட்டே பாடத்தை ஆரம்பிப்போம்டா சாமின்னு ஒரு கேள்வியைக் கேட்டேன். அதுவும் தெரியாத்தனமா நம்ம பார்த்திபன் சாயல்ல இருக்கிற ஒரு பையனாப் பார்த்துக் கேட்டுப்பிட்டேன்

அவன் பண்ணின கூத்தைக்கேளுங்க. வகுப்பே சிரிப்பா சிரிச்சுப் போச்சு. சிரிப்பு அடங்கெறதுக்கு அஞ்சு நிமிஷம் ஆச்சுன்னா பார்த்துக்குங்களேன்

அப்படி என்ன சிரிப்புங்கிறீங்களா"

நீங்களே பாருங்கள்:

"டேய் எங்க கரெக்டா சொல்லு - மனிதக் குரங்குக்கு வால் இருக்கா - இல்லையா?"

அவன் கணீர்ன்னு குரல் கொடுத்துச் சொன்னான்

"சார், திரும்பி நில்லுங்க பார்த்திட்டுச் சொல்றேன்!"

எப்பிடியிருக்குப் பாருங்க - எல்லாம் கலி காலம்!

"Good Jokeடா சாமி" ந்னு சொல்லி அவன் உக்காரச் சொல்லிட்டேன்

வேறென்ன செய்யமுடியும்?

அடிக்கவா முடியும்?

பொம்பிளப்பிள்ளங்களை அடிச்சா - ஸ்கூல் முடிஞ்சவுடனே சாயங்காலம் 'மகளிர் காவல்' நிலையத்தில போய் உக்கார்ர மாதிரி ஆயிடும். பசங்கள அடிச்சா சாயங்காலம் ஏதாவது கட்சி ஆபீஸ்ல போயி உக்கார்ர மாதிரி ஆயிடும். எல்லாப் பயல்களுக்கும் ஏதாவது கட்சித் தொடர்பு இருக்கய்யா, கட்சித் தொடர்பு இருக்கு!

அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு யோசிச்சுப் பார்த்தேன்.

நம்ம வகுப்பில சார்ஜாவிலேயிருந்து இங்கவந்து தங்கிப் படிக்குதே ஒரு தம்பி - அந்தத்தம்பிகிட்ட இதே கேள்வியைக் கேட்டிருந்தா என்ன பதில் வந்திருக்கும்?

"டேய் கண்ணா, கரெக்டா சொல்லு - மனிதக் குரங்குக்கு வால் இருக்கா - இல்லையா?"

"சார் நீங்க எந்தக் குரங்கைக் கேக்கிறீங்க? உங்களையும், ஹெட் மாஸ்டரையும் சேர்த்து நம்ம ஸ்கூல்ல மொத்தம் 25 குரங்குகள் இருக்கு - நீங்க எந்தக்குரங்குன்னு சொன்னாத்தான் நான் கரெக்டா பதில் சொல்லமுடியும்!"

"எங்களுக்குள்ள அப்படியேன்னடா ராசா வித்தியாசம்?"

" இல்ல சார், சில பேருக்கு வெட்டிட்டோம். இன்னும் சில பேருக்கு வெட்டாம இருக்கு!"

அந்தத் தம்பி பெரிய இடத்துப் பிள்ளை - இப்படித்தான் சொல்லியிருக்கும். நல்ல வேளை, அந்தத் தம்பி இன்னிக்கு பள்ளிக்கூடத்துக்கு வரவில்லைடா சாமி!

சரி, சரி சொல்லவந்த மேட்டெருக்கு வாரேன்

வாத்தியாருக்கு வால் உண்டா?

வாத்தியாருக்கு மட்டுமில்ல சாமி, மனுசனாப் பொறந்த எல்லோருக்குமே வால் உண்டு - ஆனா அந்த வால் உடம்பில கெடையாது - மனசுல இருக்கு!

சமயம் வரும்போது எல்லாரும் அதைக் காட்டிருவாங்க!

நாங்க அதான் வாத்தியாருங்க எப்ப காட்டுவோம்னா - மனசுக்குள்ளேயே வச்சிரிந்து மார்க் போடும்போது காட்டிருவோம்!

என்ன நான் சொல்றது சரிதானே?
--------------------------------------------------------------------------
அன்புடன்

வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
========================================================