மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label உதிரிப்பூக்கள். Show all posts
Showing posts with label உதிரிப்பூக்கள். Show all posts

3.9.19

உலகின் எட்டாவது அதிசயம்!!!!


உலகின் எட்டாவது அதிசயம்!!!!

உலகத்தின் 8-வது அதிசயமாக கருதப்படும், எஞ்சினீரிங்க் மார்வெல் – காரகோரம் ஹைவே !!!!

கீழே இருக்கும் வீடியோவை காண்பதற்கு முன்னால், இதைப்பற்றிய பிரமிக்க வைக்கும் சில விவரங்கள்….

பாகிஸ்தானிலிருந்து – சீனாவிற்கு செல்லும், 1300 கிலோமீட்டர் தூர மலைப்பாதை “காரகோரம் ஹைவே” ( Karakoram Highway )… இந்த பெருஞ்சாலை பால்டிஸ்தானில் உள்ள கில்கிட்டை (gilgit -ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள ஒரு பகுதி )பண்டைக்கால சில்க் ரோடுடன் இணைக்கிறது.

இதில் 806 கி.மீ. பாகிஸ்தான் எல்லைக்குள்ளும், மீதி தூரம் சீன எல்லைக்குள்ளும் அமைந்திருக்கிறது….

இந்தப்பாதையை அமைக்க 20 ஆண்டுகள் பிடித்திருக்கிறது.
பாகிஸ்தானுக்கும், சீனாவிற்கும் இடையே ஏற்பட்ட
உடன்பாட்டின்படி, இதன் பெரும்பாலான செலவு, சீனாவால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்த பாதையை உருவாக்கும் பணியில் – நிலச்சரிவுகளாலும், மலையிலிருந்து சறுக்கி விழ நேர்ந்ததாலும், பணியில் இருக்கும்போதே
– 810 பாகிஸ்தானியர்களும், 200 சீனர்களும் தங்கள் உயிரை இழந்திருக்கிறார்கள்.

காரகோரம் மலைச்சிகரங்களை கடக்கும்போது,இந்த பாதை சுமார்
15,466 அடி அதாவது 4,714 மீட்டர் உயரத்தில் செல்கிறது….

உலகத்தின் 26,000 அடி (எட்டாயிரம் மீட்டர்) உயரத்தில் அமைந்திருக்கும்
5 சிகரங்களை இந்தப்பாதையில் பயணிக்கும்போது பார்க்க முடியும்….இதிலிருந்து நெருங்க முடியும்… உலகத்தின் மிக
அதிசயமான, ஆபத்தான பாதையில் பயணம் …!!!

மீண்டும் ஒரு முறை பாருங்கள். அப்போது தான் அதன் அருமையை
உணர முடியும்… பலமுறை பார்த்தும்  பிரமிப்பு அடங்கவில்லை… எப்படித்தான் திட்டம் போட்டு, எப்படித்தான் கட்டினார்களோ…?
அதுவும் அவ்வளவு உயரத்தில், செங்குத்தான சிகரங்களில்….!!!

காணொளி:


மேலதிகத் தகவல்களுக்கு!!!!
https://en.wikipedia.org/wiki/Karakoram_Highway
-----------------------------------------------------------------
படித்து, வியந்து பகிர்ந்தது!
அன்புடன்
வாத்தியார்
=================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.12.17

செட்டிநாட்டு சமையல் கலையில் சில பதார்த்தங்கள் உங்களுக்காக!


பால் பணியாரம்
---------------------------------------------------------------------------------------------------------------
செட்டிநாட்டு சமையல் கலையில் சில பதார்த்தங்கள் உங்களுக்காக!

23 வகை செட்டிநாட்டு ரெசிபி

'செட்டிநாடு' என் றாலே... கலைநயம் மிளிரும் அழகழகான வீடுகளும், தனிச் சிறப்புமிக்க உணவு வகைகளும்தான் கண் முன்னே விரியும். கும்மாயம், இனிப்பு சீயம், ஐந்தரிசி பணியாரம், பால் கொழுக்கட்டை, கல்கண்டு வடை என்று இந்த  'செட்டிநாடு சமையல்  சாப்பிடுவதை சுகானுபவமாக மாற்றும் இந்த ஸ்பெஷல் அயிட்டங்களில்... சுண்டைக்காய் பச்சடி, சிவப்பரிசி புட்டு, கீரை மண்டி போன்றவை... உடல் நலத்தை உறுதிப்படுத்தும்.

1
மிளகாய் சட்னி

தேவையானவை: காய்ந்த மிளகாய் - 15 அல்லது 20, புளி - சிறிய எலுமிச்சையளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, மிளகாயை நிறம் மாறாமல் வறுக்கவும். அடுப்பை அணைத்து விட்டு புளி, உப்பு சேர்த்து வறுக்கவும். ஆறவிட்டு நைஸாக அரைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, அரைத்து வைத்திருக்கும் சட்னியில் சேர்க்கவும்.

குறிப்பு: சட்னியின் மேலே எண்ணெய் நிற்குமாறு இருக்க வேண்டும். ரோஜாப்பூ நிறத்தில் இருக்கும் இதற்கு 'ரோஜாப்பூ சட்னி’ என்றே பெயர். பணியாரம், இட்லி, தோசைக்கு சிறந்த காம்பினேஷன்.
---------------------------------------------------
2
வெள்ளை பணியாரம்

தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், உளுந்து - 4 டேபிள்ஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, உளுந்தை சேர்த்து சுத்தம் செய்து 2 மணி நேரம் ஊறவிடவும். பிறகு உப்பு, சர்க்கரை சேர்த்து நைஸாக அரைக்கவும் (தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும்). வாணலியில் எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் வட்ட வடிவ அகலக் கரண்டியால் மாவை ஊற்றவும். ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேகவிடவும். இதை ஒவ்வொன்றாகத்தான் செய்ய வேண்டும்.

குறிப்பு: மாவு புளிக்கக் கூடாது. அரைத்த 10 நிமிடத்தில் செய்யவும். இதற்கு கார சட்னி சூப்பர் காம்பினேஷன்!
-------------------------------------------------------
3
கல்கண்டு வடை

தேவையானவை: உளுந்து - ஒன்றரை கப், பச்சரிசி - 2 டேபிள்ஸ்பூன், கல்கண்டு - ஒரு கப், எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசி, உளுந்தை ஒன்றாக சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து, கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். முக்கால் பதம் அரைத்தவுடன் பொடித்து வைத்த கல்கண்டை சேர்த்துக் கரைக்கவும் உளுந்தை அரைக்கும்போது, தண்ணீர் சிறிது கூட சேர்க்கக் கூடாது. அரைத்து முடித்ததும் மாவு நீர்க்க இருப்பது போல் தெரிந்தால், சிறிது அரிசி மாவு சேர்த்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, மாவை வடைகளாக தட்டிப் போட்டு, வேகவிட்டு எடுக்கவும் (தீயை மிதமாக எரிய விட வேண்டும்).

குறிப்பு: கல்கண்டு சேர்ப் பதால், தீ அதிகமாக எரிந்தால், வடை கறுத்து விடும்.
-------------------------------------------------------
4
கும்மாயம்

தேவையானவை: வெள்ளை முழு உளுந்து - ஒரு கப், பச்சரிசி - ஒரு டேபிள்ஸ்பூன், பாசிப்பருப்பு - கால் கப், கருப்பட்டி (அ) வெல்லம் - ஒன்றரை கப், நெய் - கால் கப்.

செய்முறை: உளுந்து, அரிசி, பாசிப்பருப்பை தனித்தனியே வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். இவற்றை ஒன்றுசேர்த்து மாவாக அரைக்கவும். கருப்பட்டி (அ) வெல்லத்தை கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய தண்ணீரில் மாவைக் கொட்டி, கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் பாதி நெய் விட்டு, சூடானதும், கரைத்து வைத்துள்ளதை கொட்டி, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கிளறவும். கைவிடாமல் கிளறிக் கொண்டே மீதி நெய்யைச் சேர்த்து, மாவு நன்கு வெந்து கையில் ஒட்டாமல் வரும்போது இறக்கவும்.
-------------------------------------------------------------
5
இனிப்பு சீயம்

தேவையானவை:

பச்சரிசி, உளுந்து - தலா ஒரு கப், உப்பு - ஒரு சிட்டிகை, எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

பூரணம் செய்ய: தேங்காய் - ஒன்று, பொடித்த வெல்லம் - ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் - 2 டீஸ்பூன், நெய் - 3 டீஸ்பூன்.

செய்முறை: தேங்காயைத் துருவிக் கொள்ளவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டவும். வாணலியில் நெய் விட்டு, தேங்காய் துருவல் சேர்த்து ஈரம் போக கிளறவும். அதனுடன் கரைத்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்கி ஆறவிடவும். இதுதான் பூரணம்.

பச்சரிசி, உளுந்தை ஒன்றாக சேர்த்துக் களைந்து, ஒரு மணி நேரம் ஊறவிட்டு, பின் நைஸாக அரைத்து, உப்பு சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். கிளறி வைத்துள்ள பூரணத்தை சிறு எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பூரணத்தை அரைத்து வைத்துள்ள மாவில் தோய்த்து, எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால்.... சுவையான இனிப்பு சீயம் தயார்!
-----------------------------------------------------------------
6
ஜவ்வரிசி ஊத்தப்பம்

தேவையானவை: இட்லி அரிசி - 4 கப், உளுந்து - ஒரு கப், ஜவ்வரிசி - கால் கிலோ, வெங்காயம் - 2, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசி, உளுந்தை ஒன்றாக சேர்த்து ஊற வைத்து, தோசைக்கு அரைப்பது போல் அரைத்து, புளிக்கவிட்டு உப்பு சேர்க்கவும். மறுநாள் ஜவ்வரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து மாவில் சேர்க்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்து மாவில் சேர்க்கவும். தோசைக் கல்லைச் சூடாக்கி, மாவை கெட்டியாக ஊற்றி, எண்ணெய் விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுத்து, காரச் சட்னியுடன் பரிமாறவும்.
குறிப்பு: விருப்பப்பட்டால், கேரட் துருவல் சேர்த்துக் கொள்ளலாம்.
-------------------------------------------------------------------
7
குழி பணியாரம்

தேவையானவை: பச்சரிசி, புழுங்கலரிசி - தலா ஒரு கப், உளுந்து - அரை கப், ஜவ்வரிசி - கால் கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 3, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், கறி வேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசி மற்றும் புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக ஊற விடவும். 2 மணி நேரம் கழித்து நைஸாக அரைக்கவும். அரைக்கும்போது, 10 நிமிடம் ஊற வைத்த ஜவ்வரிசியை மாவுடன் சேர்த்து அரைக்கவும். உப்பு சேர்த்துக் கலக்கி, 5 - 6 மணி நேரம் புளிக்கவிடவும். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். வாணலி யில் எண்ணெய் சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப் பிலை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி மாவில் சேர்க்கவும். குழி பணியார சட்டியை சூடாக்கி, சிறிது எண்ணெய் விட்டு, மாவை குழிகளில் ஊற்றி, இரு புறமும் வேகவிட்டு எடுத்தால்.... சுவை யான குழி பணியாரம் ரெடி.
-----------------------------------------------------------------------
8
கருப்பட்டி பணியாரம்

தேவையானவை: பச்சரிசி மாவு - ஒரு கப், கருப்பட்டி, வெல்லம் - தலா கால் கப், நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: பாத்திரத்தில் வெல்லம், கருப்பட்டியை போட்டு, தேவையான நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, கரைந்ததும் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து கம்பிப்பாகு பதத்தில் பாகு காய்ச்சவும். இதை பச்சரிசி மாவில் ஊற்றி நன்கு கிளறவும். மேலே நெய் ஊற்றி, ஆறியதும் துணியினால் மூடி வைக்கவும். இந்த மாவை ஒரு வாரம் வரை வைத்திருக்கலாம். பணியாரம் செய்யும் முன், தேவைக்கேற்ப மாவில் தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, அகலக் கரண்டியில் மாவை எடுத்து, ஒவ்வொன்றாக ஊற்றி, இருபுறமும் வேகவிட்டு, பொன்னிறமானதும் எடுக்கவும். எண்ணெய் வடியவிட்டு எடுத்து வைத்தால், கருப்பட்டி பணியாரம் தயார்.
குறிப்பு: நகரத்தார் வீட்டு பிள்ளையார் நோன்பில் கட்டாயம் இந்த பணியாரம் இடம் பெறும்.
------------------------------------------------------------------------
9
கந்தரப்பம்

தேவையானவை: பச்சரிசி - 2 கப், உளுந்து - கால் கப், கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், பொடித்த வெல்லம் - இரண்டரை கப், தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை: வெல்லத்தை தண்ணீரில் கொதிக்கவிட்டு, வடிகட்டி ஆறவிடவும். அரிசி, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, வெந்தயம், உளுந்து ஆகியவற்றை சேர்த்துக் கலந்து, சுத்தம் செய்து ஊறவிடவும். ஊறியதும் தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். மாவை எடுக்கும் முன் ஏலக்காய்த்தூள், வெல்லத் தண்ணீர் சேர்த்து, அரைத்து எடுக்கவும். மாவு ரொம்ப கெட்டியாக இல்லாமல் மிதமாக இருக்க வேண்டும். மாவை 4 மணி நேரம் புளிக்க வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் எரியவிடவும். அரைத்து வைத்துள்ள மாவில் ஒரு கரண்டி எடுத்து, மெதுவாக விடவும். ஒரு பக்கம் வெந்ததும், மறுபுறம் திருப்பி, சிவக்க விட்டு எடுக்கவும். இதை ஒவ்வொன்றாகத்தான் தயார் செய்ய வேண்டும்.
---------------------------------------------------------------------
10
ஐந்தரிசி பணியாரம்

தேவையானவை: பச்சரிசி, புழுங்கலரிசி, பாசிப்பருப்பு - தலா ஒரு கப், ஜவ்வரிசி, ரவை - தலா அரை கப், பொடித்த வெல்லம் - 2 கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசி, புழுங்கலரிசி, பருப்பு மூன்றையும் ஒன்றாகவும்... ரவை, ஜவ்வரிசியை தனித்தனியாகவும் ஊறவிடவும். ஒரு மணி நேரம் ஊறியதும் முதலில் அரிசிகள், பருப்பை அரைக்கவும். பாதி அரைத்தவுடன் ரவை, ஜவ்வரிசி, நீரில் கரைத்து வடிகட்டிய வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, மாவை வட்டமாக ஊற்றி, ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு, மறுபுறம் வேகவிடவும். ஒவ்வொன்றாக போட்டு, பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும். தீயை மிதமாகத்தான் எரியவிட வேண்டும். பொறுமையாக செய்தால், சூப்பர் சுவையில் அசத்தும் இந்த ஐந்தரிசி பணியாரம்.
--------------------------------------------------------------------
11
பால் பணியாரம்

தேவையானவை: பச்சரிசி, உளுந்து - தலா ஒரு கப், பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண் ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: பச்சிரிசி, உளுந்து இரண்டையும் சேர்த்து 2 மணி நேரம் ஊறவிட்டு, நைஸாக அரைத்து, உப்பு சேர்க்கவும். மாவு கெட்டியாக இருக்க வேண்டும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, அடுப்பை மிதமாக எரியவிடவும். மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு பொரித்தெடுத்து, எண்ணெயை வடியவிடவும். இதை குளிர்ந்த நீரில் போட்டு எடுக்கவும். பாலைக் காய்ச்சி, சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும் பொரித்து வைத்த பணியாரங்களை பாலில் சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு: மாவு புளிக்கக் கூடாது. அரைத்த சிறிது நேரத்திலேயே செய்துவிடவும். பணியாரத்தை பாலில் அதிக நேரம் ஊறவிடக் கூடாது. பரிமாறுவதற்கு 10 நிமிடம் முன்பு பாலில் சேர்க்கவும்.
-----------------------------------------------------------------------
12
பாசிப்பருப்பு புட்டு

தேவையானவை: பாசிப்பருப்பு - 2 கப், வெல்லம் - அரை கப், தேங்காய் துருவல் - கால் கப், ஏலக்காய்த்தூள், நெய், உப்பு - தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவிடவும். நன்கு ஊறியதும், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். அரைத்த மாவை இட்லித் தட்டில் ஊற்றி, இட்லிகளாக வேக வைத்து எடுக்கவும். வெந்த இட்லிகளை எடுத்து உதிர்த்துக் கொள்ளவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். உதிர்த்த மாவில் வெல்லக் கரைசலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, உதிர் உதிராக இருக்கும்படி கிளறவும். இதில் நெய், ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறினால்... சத்தான பாசிப்பருப்பு புட்டு ரெடி!
-------------------------------------------------------------------
13
பருப்பு உருண்டைக் குழம்பு

தேவையானவை - உருண்டை செய்ய: கடலைப்பருப்பு - முக்கால் கப், துவரம்பருப்பு - கால் கப், சோம்பு, சீரகம், மிளகு - தலா கால் டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, வெங்காயம் - ஒன்று, உப்பு - தேவையான அளவு.

குழம்புக்கு: தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், சோம்பு, கசகசா - தலா அரை டீஸ்பூன், தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று, புளி - நெல்லிக்காய் அளவு, மிளகாய்த்தூள் - ஒன்றை டீஸ்பூன், மல்லித்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கறி வேப்பிலை - சிறிதளவு, சின்ன வெங்காயம் - 5.

செய்முறை: உருண்டை செய்ய கொடுக்கப்பட்டுள்ள பருப்பு வகைகளை ஒரு மணி நேரம் ஊற வைத்து, பிறகு (வெங்காயம் தவிர) மற்ற பொருட்களை சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி, ஆவியில் வேகவைத்து எடுத்துக் வைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவல், சோம்பு, கசகசா, தக்காளி, வெங்காயத்தை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து, அரைத்த மசாலாவைப் போட்டு வதக்கவும். அதில் மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். இதனுடன் புளித் தண்ணீர், உப்பு சேர்க்கவும். பச்சை வாசனை போக கொதித்ததும், வேக வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு, கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி சேர்த்துக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: உருண்டைகளை வேக வைக்காமலும் போடலாம். எண்ணெயில் பொரித்தும் போடலாம்.
----------------------------------------------------------------------
14
கத்திரிக்காய் மசாலா

தேவையானவை: கத்திரிக்காய் - கால் கிலோ, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், மல்லித்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, பிரியாணி இலை - ஒன்று, சோம்பு - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கத்திரிக்காயை நான்காக நறுக்கி நீரில் போட்டு வைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி... பட்டை, சோம்பு, பிரியாணி இலை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தக்காளி சேர்க்கவும். பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும். அதனுடன் கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தேவையான உப்பு, நீர் சேர்த்து வேகவிடவும். வெந்து, நீர் சுண்டியதும் இறக்கி பரிமாறவும்.
------------------------------------------------------------
15
வெண்டைக்காய் மண்டி

தேவையானவை: வெண்டைக்காய் - கால் கிலோ, வேக வைத்த கொண்டைக்கடலை - ஒரு கப், அரிசி களைந்த நீர் - 2 கப், புளி - எலுமிச்சையளவில் பாதி, பச்சை மிளகாய் - 3, காய்ந்த மிளகாய் - 3, சின்ன வெங்காயம் - 15 (உரித்தது), கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பூண்டு பல் - 10, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெண்டைக்காயை பெரிது பெரிதாக நறுக்கிக் கொள்ளவும். புளியை அரிசி களைந்த நீரில் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம் தாளித்து, நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும். வதங்கியதும், வேக வைத்த கொண்டைக்கடலை, புளித் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். எல்லாம் சேர்ந்து வரும்போது இறக்கிப் பரிமாறவும்.
------------------------------------------------------------------
16
மாங்காய் வற்றல் ரசம்

தேவையானவை: துவரம்பருப்பு - கால் கப், மாங்காய் வற்றல் - 6, வெங்காயம் - ஒன்று, தக்காளி - ஒன்று, புளி - நெல்லிக்காய் அளவு, மிளகு - சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன், பூண்டு - 6 பல், காய்ந்த மிளகாய் - 3, கடுகு, வெந்தயம், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பை குழையாமல் வேக வைக்கவும். மாங்காய் வற்றலை சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும். புளியை அரை டம்ளர் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் 2 டம்ளர் நீர் விட்டு வேக வைத்த பருப்பு, வெங்காயம், தக்காளி, மாவற்றல் சேர்த்து வேகவிடவும். வெந்ததும், புளித் தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். வேறொரு வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, வெந்தயம், மிளகு - சீரகத்தூள், தட்டிய பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, ரசத்தில் சேர்க்கவும். கொத்தமல்லித் தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.
குறிப்பு: மாவற்றல் மிகவும் புளிப்பாக இருந்தால், புளியின் அளவைக் குறைக்கவும். வற்றலில் உப்பு இருப்பதால் உப்பையும் பார்த்து சேர்க்கவும்.
--------------------------------------------------------------
17
கத்திரிக்காய் திரக்கல்

தேவையானவை: கத்திரிக்காய் - 100 கிராம், உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
அரைக்க: பூண்டு - 5 பல், காய்ந்த மிளகாய் - 6, தேங்காய் துருவல் - கால் கப், கசகசா, சோம்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்.

தாளிக்க: சோம்பு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்.
செய்முறை: கத்திரி, உருளை, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை துண்டுகளாக நறுக்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுத்து, அரைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி... சோம்பு, சீரகம் தாளித்து, காய்களைச் சேர்த்து வதக்கவும். காய்கள் வெந்ததும் அரைத்த மசாலா, உப்பு சேர்த்துக் கிளறி, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். சேர்ந்து வரும்போது இறக்கிப் பரிமாறவும்.
---------------------------------------------------------------
18
தண்ணிக் குழம்பு

தேவையானவை: துவரம்பருப்பு - கால் கப், பாசிப்பருப்பு - அரை கப், புளி - சிறிய எலுமிச்சையளவு, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, உப்பு - தேவையான அளவு.
பொடி செய்ய: காய்ந்த மிளகாய் - 4, தனியா - 2 டேபிள்ஸ்பூன், சோம்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்.
தாளிக்க: எண்ணெய் - சிறிதளவு, பட்டை - சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் - 4, பூண்டு - 4 பல், கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு - தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பொடி செய்யக் கொடுத்துள்ளவற்றை வறுத்துப் அரைக்கவும். பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். துவரம்பருப்பை நிறைய தண்ணீர் விட்டு வேகவைத்து கரைத்துக் கொள்ளவும். இதில் பாசிப்பருப்பை சேர்த்து வேக விடவும். குழைய வெந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, வறுத்து அரைத்த பொடி, உப்பு, புளித் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். மற் றொரு வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பட்டை, சோம்பு, கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், நசுக்கிய பூண்டு ஆகியவற்றை தாளித்து, குழம்பில் சேர்த்து இறக்கவும்.
-------------------------------------------------------------------
19
வறுத்துப் பொடித்த சாம்பார்

தேவையானவை: துவரம்பருப்பு - அரை கப், காய்ந்த மிளகாய் - 4, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் - தலா 2, புளி - நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பு, காய்ந்த மிளகாயை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து, ஆறவிட்டு பொடித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து... நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். காய் வதங்கியதும் புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு சேர்க்கவும். வறுத்து பொடித்து வைத்திருக்கும் துவரம்பருப்பு - மிளகாய் பொடியை சேர்த்து தேவைக்கேற்ப நீர் சேர்த்து கொதிக்கவிடவும். கொதி வந்த வுடன் நறுக்கிய கொத்தமல்லி தழையைத் தூவி இறக்கவும். இது... இட்லி, தோசையுடன் பரிமாற ஏற்ற சாம்பார்.
------------------------------------------------------------------
20
செட்டிநாட்டு அவியல்

தேவையானவை: கத்திரிக்காய் - 100 கிராம், உருளைக்கிழங்கு - 2, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, பட்டை - சிறிய துண்டு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

அரைக்க: தேங்காய் துருவல் - கால் கப், பச்சை மிளகாய் - 5, பூண்டு - 3 பல், சோம்பு - ஒரு டீஸ்பூன், பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: காய்கறிகளைப் பொடியாக நறுக்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பட்டை தாளித்து... வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். கத்திரிக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி, நீர் சேர்த்து வேகவிடவும். காய்கள் வெந்ததும், அரைத்து வைத்திருக்கும் மசாலா, உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கினால்... ருசியான செட்டிநாட்டு அவியல் ரெடி! இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி என எல்லாவற்றுக்கும் ஏற்ற அவியல் இது.
-----------------------------------------------------------------
21
ஜவ்வரிசி பாயசம்

தேவையானவை: ஜவ்வரிசி - ஒரு கப், வெல்லம் - ஒன்றரை கப், தேங்காய் - ஒன்று (துருவி பால் எடுக்கவும்), முந்திரி - 10, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: அடுப்பில் பாத்திரத்தை வைத்து, தேவையான நீர் ஊற்றி ஜவ்வரிசியை வேகவிடவும் (கட்டி தட்டாமல பார்த்துக் கொள்ளவும்). வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, ஜவ்வரிசியுடன் சேர்க்கவும். பிறகு, தேங்காய்ப்பால் சேர்த்து, ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும். நெய்யில் முந்திரியை வறுத்து சேர்க்கவும்.

குறிப்பு: தேங்காய்ப் பால் சேர்த்த பிறகு கொதிக்க விடக் கூடாது. பொதுவாக பால், சர்க்கரை சேர்த்து ஜவ்வரிசி பாயசம் செய்வார்கள். செட்டிநாட்டில் வெல்லம் - தேங்காய்ப் பால் சேர்ப்பது ஸ்பெஷல்.
-----------------------------------------------------------------
22
சுண்டைக்காய் பச்சடி

தேவையானவை: சுண்டைக்காய் - ஒரு கப், துவரம்பருப்பு - அரை கப், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, பச்சை மிளகாய் - 4, புளி - கோலி அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு - தலா டீஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சுண்டைக்காய்களை இரண்டாக நறுக்கி, தண்ணீரில் போடவும். துவரம்பருப்பை மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேகவிடவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு தாளித்து... வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். சுண்டைக்காய் சேர்த்து வதக்கி, புளித் தண்ணீர் உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். காய் வெந்ததும், துவரம்பருப்பை சேர்த்துக் கலந்து கொதி வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.
குறிப்பு: வயிற்றில் ஏற்படும் பூச்சி தொல்லையை நீக்கும் அருமருந்து இது.
-----------------------------------------------------------------
23
கீரை மண்டி

தேவையானவை: கீரை - ஒரு கட்டு (முளைக்கீரை, அரைக்கீரை, மணத்தக்காளிக்கீரை, அகத்திக்கீரை, சிறுகீரை இவற்றில் எதில் வேண்டுமானாலும் செய்யலாம்), சின்ன வெங்காயம் - 10, பூண்டு - 5 பல், பச்சை மிளகாய் - 2, அரிசி கழுவிய நீர் - 2 கப், தேங்காய்ப் பால் - கால் கப், கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, வெந்தயம், கீறிய பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் (நறுக்கியது), பூண்டு, காய்ந்த மிளகாய், சேர்த்து வதக்கவும். அதனுடன் நறுக்கிய கீரையை சேர்த்து வதக்கி, அரிசி கழுவிய நீர் சேர்க்கவும். கொதி வந்ததும் உப்பு சேர்க்கவும். கீரை வெந்ததும் கடைசியாக தேங்காய்ப் பால் சேர்த்துக் கிளறி இறக்கவும் (தேங்காய்ப் பால் சேர்த்த பிறகு கொதிக்கவிடக் கூடாது).

குறிப்பு: வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாக உதவும் உணவு இது. 'மண்டி இருந்தால், உண்டி பெருக்கும்’ நீங்கள் கேட்ட பல காரங்கள் அனைத்தும் கொடுத்து இருக்கிறேன்.
=======================================================
அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.6.17

அன்றே சொன்னது அருமையாக உள்ளது!


அவ்வையார் என்றால் நமக்கெல்லாம் சட்டென்று நினைவிற்கு வருவது கே.பி.எஸ் அவர்கள்தான். அதனால் அவர்கள் படத்தையே இங்கே கொடுத்துள்ளேன்!!!!
----------------------------------------------------------------------------------------------------------
அன்றே சொன்னது அருமையாக உள்ளது!

நம் முன்னோர்கள், நாம் தெரிந்துகொள்ள வேண்டியதை எல்லாம் நச்’ சென்று நாலு வரிகளிலேயே சொல்லி வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள்.

நமக்குத்தான் அவற்றைப் படிப்பதற்கு நேரமுமில்லை. படித்தால் கடைப்பிடிப்பதற்கு மனமுமில்லை.

கடைப்பிடிப்பதும் கடைப்பிடிக்காததும் உங்கள் விருப்பம். யாரும் உங்களைக்கட்டாயப் படுத்த முடியாது. ஆனால் தெரிந்தாவது
வைத்துக்கொள்ளலாம் இல்லையா?

உங்களுக்காக ஒரு பழைய பாடலை - அசத்தலான பாடலைக் கொடுத்துள்ளேன்.  படித்து மகிழுங்கள். முடிந்தால் கடைப்பிடித்துப் பயன் அடையுங்கள்
-----------------------------------------------------------------------
நல்ல காரியங்களுக்கு ஒரு ரூபாய்கூட செலவழிக்காமல், ஒட்டு மொத்தமாகச் சேர்த்துவைக்கப்படும் செல்வத்தின் அதாவது பணத்தின் நிலைமை  என்ன ஆகும்?

நீங்கள் யாருக்காக அத்தனை கஷ்டப்பட்டு சேர்த்து வைக்கின்றீர்களோ, அந்த செல்வங்கள், உங்களுக்குப் பிறகு, அதாவது நீங்கள் சனீஷ்வரனிடம்  போர்டிங் பாஸ் வாங்கிக்கொண்டு மேல் உலகம் சென்ற பிறகு, நீங்கள் சேர்த்து வைத்துவிட்டுப்போன செல்வங்கள், உங்கள் வாரிசுகளால் அல்லது
அவர்களின் வாரிசுகளால் என்ன நிலமைக்கு உள்ளாகும் என்பதை ஒளவை மூதாட்டி அழகாக நான்கே வரிகளில் நச்’சென்று சொல்லியுள்ளார்.

முதலில் பாடலைப் பாருங்கள்:

“நம்பன் அடியவர்க்கு நல்காத் திரவியங்கள்
பம்புக்காம் பேய்க்காம் பரத்தையர்க்காம் - வம்புக்காம்
கொள்ளையர்க்காம் கள்ளுக்காம் கோவுக்காம் சாவுக்காம்
கள்ளர்க்காம் தீக்காகும் காண்!”
- ஒளவையார்

நம்பன் அடியவர்க்கு - சிவனின் அடியவர்களுக்கு
நல்காத் திரவியங்கள் - மனமுவந்து வழங்காத செல்வங்கள்
பம்புக்காம் - சூனிய வித்தைகளுக்கும்
பேய்க்காம் - பேய் வழிபாடுகளுக்கும்
பரத்தையர்க்காம் - தாசிகளுக்கும்
வம்புக்காம் - வீண் செலவுகளுக்கும்
கொள்ளையர்க்காம் - கொள்ளை கொடுப்பதற்கும்
கள்ளுக்காம் - மதுவிற்கும்
கோவுக்காம் - பகை அரசால் பறிமுதல் செய்யப்படுவதற்கும்
சாவுக்காம் - அவனுடைய சாவிற்கும்
கள்ளர்க்காம் - கள்வர்களால் கவர்ந்து கொள்ளப்படுவதற்கும்
தீக்காகும் - நெருப்பால் வெந்து அழிக்கப்படுவதற்கும்
காண் - உரியனவாகும் என்று தெரிந்து கொள்வாயாக!

இன்றைய காலகட்டத்தில் இப்படிப்பொருள் கொள்ள வேண்டும். அடியார்கள் என்பவர்கள் உலகம் மேன்மையுறப் பாடுபடுபவர்கள் என்று பொருள்  கொள்ளுங்கள்.

சூனிய வித்தைகள் என்பதை இன்றைய காலகட்டத்தில், குதிரை ரேஸ், லாட்டரி சீட்டுக்கள், சீட்டாட்டம், விளயாட்டுக்களை வைத்து நடைபெறும்  சூதாட்டங்கள் (betting)  என்று பொருள் கொள்ளுங்கள்

பேய்வழிபாடுகள் என்பதற்கு கடலை போடும் பெண்களைக் கூட்டிக்கொண்டுபோய், அல்லது நமது தீய நட்புக்களைக் கூட்டிக்கொண்டுபோய் - அதாவது கஃபிற்கும், ப்ஃபிற்கும் அல்லது பார்களுக்கும் கூட்டிக் கொண்டுபோய்ச் செய்யும் செலவுகள் என்று பொருள் கொள்ளுங்கள்

பகை அரசால் பறிமுதல் செய்யப்படுவதற்கும் என்பதற்கு, வம்பு, வழக்கு, நீதிமன்றத்தண்டனை போன்ற சிக்கல்களில் மாட்டிக்கொண்டு செய்யும்  செலவுகள் என்று பொருள் கொள்ளுங்கள்

சாவிற்கும் என்பதற்கு, தீராத நோய் நொடிகள் வந்து லட்சக்கணக்கில் சாகும்வரை செய்யப்படும் மருத்துவச் செலவுகள் என்று பொருள்  கொள்ளுங்கள்

மற்ற வீண் செலவுகளுக்குச் சொல்லப்பட்டிற்கும் வார்த்தைகள் எல்லாம் எளிய சொற்களே. அதில் பொதிந்துள்ள பொருள் அனைவருக்கும் விளங்கும்படியாகவே உள்ளது. ஆகவே அவற்றிற்கு விளக்கம் சொல்லவில்லை!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
சரி என்ன செய்ய வேண்டும்?

அளவு முக்கியமில்லை! உங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை - அதாவது 5% முதல் 10% வரை - எடுத்துக்காட்டுக்காகச் சதவிகிதத்தில்
சொல்லியிருக்கிறேன் - நல்ல காரியங்களுக்குச் செலவு செய்யுங்கள்.

தர்ம காரியங்களுக்குச் செலவு செய்யுங்கள்.

இறைப்பணிக்கு, கல்விப்பணிக்கு, ஏழைப் பெண்களின் திருமணங்கள் போன்றவற்றிற்கு, வறியவர்களுக்கு, முதியவர்களுக்குத் தானமாகக் கொடுங்கள். அன்னதானம் செய்யுங்கள். உங்களுக்கு முன்பின் தெரியாதவர் களுக்குக் கொடுங்கள். செய்யுங்கள். அதுதான் தானமாகும்.

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30.7.16

உங்களுக்கு உபயோகமான தகவல்!!!


உங்களுக்கு உபயோகமான தகவல்!!!

"நான் சென்ட்ரல் வந்துட்டேன். கே.கே.நகருக்கு நான் எப்படி வரணும்? பஸ் பிடிச்சு வரணுமா இல்லை ஆட்டோவா?'' - இனி அதிகாலை நேரத்தில் சென்னைக்கு வந்து இறங்கியதும் யாருக்கும் போன் செய்து வழி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கே உங்களுக்காக வந்துவிட்டது 'ரூட்ஸ்’. சென்னையில் எந்த வழித்தடத்தையும் ஒரே போனில் தெரிந்துகொள்ளலாம்.

''இந்த ஐடியா நல்லா இருக்கே?'' என்று அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான அஸ்வின் குமாரிடம் கேட்டால் ''ஒரு நாள் ராத்திரி கிண்டி பக்கத்துல டீக்கடையில நின்னுட்டு இருந்தேன். அந்த டீக்கடைக்காரர்கிட்ட வெளியூர்க்காரங்க வந்து வழி கேட்டுட்டுப் போனாங்க. அவருக்கும் ரூட் தெரியலை. அந்த நொடிதான் 'சென்னையில தினமும் இப்படி எத்தனை பேரு பஸ் ரூட் தெரியாம தவிக்குறங்க? அவங்களுக்கு வழிகாட்ட ஏதாவது செய்யணும்’னு முடிவுபண்ணி, என்னோட நண்பர் பரத் சோமானிகிட்ட இதுபத்திப் பேசினேன். ரெண்டு பேரும் சேர்ந்து சென்னையில் ஒட்டுமொத்த பஸ் ரூட் சம்பந்தமான அத்தனை தகவல்களையும் சேகரிச்சோம்.

திரட்டின தகவல்களை நெட்டுல போடுறதுல எந்தப் பிரயோஜனமும் இல்ல. நடுரோட்டுல நிற்கிறவங்களால இன்டர்நெட் பார்க்க முடியாது. அதனால நம்பர் கொடுத்து, நீங்க எங்கே போகணுமோ நாங்க ரூட் சொல்றோம்னு விளம்பரப்படுத்தினோம்.

ஒரு நாளைக்கு 2,500 கால்கள் வர ஆரம்பிச்சுருச்சு.

அப்புறம்தான் இந்த 'ரூட்ஸ்’ கம்பெனியை ஆரம்பிச்சிட்டோம்.

8695959595 நம்பருக்கு யார் போன் செஞ்சாலும், அவங்களுக்குத் தேவையான பஸ் ரூட், லோக்கல் டிரெய்ன் ரூட், டைம்னு எல்லா விஷயங்களும் சொல்வோம்.

அதோட நீங்க வெளியூர் கிளம்பினால், அந்த ஊருக்கு ரயில் வசதி இருக்குதா? அதில் இடம் இருக்குதானு அத்தனை தகவல்களும் கொடுப்போம்'' என்றார்.

நல்ல தொடக்கம்! வாழ்த்துக்கள்! !!!

பணமே பிரதானம்!எனும் நாட.டில் இப்படி ஒரு சமூக சேவை செய்வது மிகப்பெரிய சேவை!வாழ்க வளர்க!!
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.7.16

சினிமா: எதற்காகக் கொஞ்சிப் பேசிட வேண்டாம்?


சினிமா: எதற்காகக் கொஞ்சிப் பேசிட வேண்டாம்?

எதற்காகக் கொஞ்சிப் பேசிட வேண்டாம் - என்கிறார் நாயகன்? நாயகியின் கண்ணே பேசுகையில் வாய்ச் சொற்கள் எதற்கு? நியாயம்தானே!!!

உங்களுக்காக என் மனம் கவர்ந்த புதுப்படப் பாடல் ஒன்றின் காணொளி ஒன்றை இன்று பதிவிட்டிருக்கிறேன். பார்த்து ரசியுங்கள்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------
படத்தின் பெயர்: சேதுபதி
படம் வெளியான தேதி 19-2-2016

பாடலைப் பாடியவர்கள்: கே.எஸ்.சித்ரா, ஸ்ரீராம் பார்த்தசாரதி
நடிப்பு: விஜய் சேதுபதி, ரெம்யா நம்பீசன்
இசை: நிவாஸ் கே.பிரசன்னா
பாடலாக்கம்: கவிஞரின் பெயர் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
----------------------------------
பாடலின் வரிகள்:

கொஞ்சி பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பார்த்தால்
மழைசாரல் வீசுதடி

நா நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேட்குதடி
அடி தொலைவில இருந்தாதானே
பெருங்காதல் கூடுதடி
தூரமே தூரமாய் போகும் நேரம்

கொஞ்சி பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடா
கொஞ்சமாக பார்த்தால்
மழைசாரல் வீசுதடா

நா நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேட்குதடா
அட தொலைவில இருந்தாதானே
பெருங்காதல் கூடுதடா
தூரமே தூரமாய் போகும் நேரம்

ஆசை வலையிடுதா
நெஞ்சம் அதில் விழுதா
எழுந்திடும் போதும் அன்பே
மீண்டும் விழுந்திடுதா
தனிமை உனை சுடுதா
நினைவில் அனல் தருதா

தலையணைப் பூக்களிலெல்லாம்
கூந்தல் மணம் வருதா
குறு குறு பார்வையால் கொஞ்சம் கடத்துறியே
குளிருக்கும் நெருப்புக்கும் நடுவுல நிறுத்துறியே
வேறு என்ன வேணும்

மேகல் மழை வேணும்
சத்தம் இல்லா முத்தம் தர வேணும்….
கொஞ்சி பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பார்த்தால்
மழைசாரல் வீசுதடா

நா நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேட்குதடி
அடி தொலைவில இருந்தாதானே
பெருங்காதல் கூடுதடா
தூரமே தூரமாய் போகும் நேரம்

கொஞ்சி பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடா
கொஞ்சமாக பார்த்தால்
மழைசாரல் வீசுதடா…
------------------------------------
Video Clipping of the Song:
Our sincere thanks to the person who uploaded this song in the net!!!



வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!
===============================================

21.6.16

பாரத யுத்தத்தில் கொல்லப்பட்ட அந்த மிகமிக நல்லவன் யார்?


பாரத யுத்தத்தில் கொல்லப்பட்ட அந்த மிகமிக நல்லவன் யார்?

பதினெட்டு நாட்கள் நடைபெற்றது குருட்க்ஷேத்திரப் போர். அந்தப் போரில் அது பதினான்காவது நாள்.அன்று அதிக எண்ணிக்கையில்
கௌரவர்களைக் கொன்று குவிப்போம் என்று உறுதி எடுத்துக் கொண்டபின் பாண்டவர்களின் கால்கள் பாசறையை விட்டு வெளிநடந்தன.அவர்களை வீரத் திலகமிட்டு வழியனுப்பி வைத்தாள் பாஞ்சாலி வெற்றி கிட்டியபின் தான் தலைமுடிவேன் என்ற சபதத்தின்படி, தலைவிரி கோலமாக இருந்த பாஞ்சாலி.

பாஞ்சாலி பார்த்துக் கொண்டிருக்கும் போதே வழிபடுகிற கண்ணன், அர்ச்சுனனின் தேரில் சாரதியாகத் தாவி ஏறி அமர்ந்தான். புல்லாங்குழல் வாசிக்கும் கண்ணனின் தாமரைப் பூங்கரங்கள், நல்லவர்களை வாழ வைத்து அல்லவர்களை அழிப்பதற்காக, தேர்க் குதிரைகளின் லகானைச் சடாரென்று கையில் பற்றிக் கொண்டன.

மற்றவர்களும் அவரவர் தேரில் அமர்ந்து போர்க்களம் நோக்கிப் புறப்பட்டார்கள். அந்தத் தருணத்தில்தான் பாஞ்சாலியிடமிருந்து அந்த விசித்திரமான வினா கண்ணனை நோக்கிப் புறப்பட்டது

‘‘கண்ணா! எல்லாம் தெரிந்த எம்பெருமானே! அனைத்துச் செயல்களையும் நடத்தும் ஆதிநாயகனே! இந்த யுத்தம் முழுவதையும் நீயே நடத்துகிறாய் என்பதை நான் அறிவேன். கொல்பவனும் நீ. கொல்லப்படுபவனும் நீ. வெல்பவனும் நீ. வெல்லப்படுபவனும் நீ. சொல். இன்று யார் யாரால்
கொல்லப்படுவார்கள்?”

(பாஞ்சாலியின் இந்தக் கேள்வியைக் கேட்டதும் பாண்டவர்கள் அனைவரும் கண்ணன் முகத்தை ஆவலோடு நோக்கினார்கள். இன்றைய போரின் நிலவரத்தை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் ஆர்வம் அனைவர் விழிகளிலும்)

எதனாலும் எவ்விதத்திலும் பாதிக்கப்படாத கண்ணன், கலகலவென நகைத்தவாறே சொன்னான்: ‘‘பாஞ்சாலி! உனக்கு ஆனாலும் எல்லாவற்றையும் முன்கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல். நல்லது. சொல்கிறேன். இன்று இரு தரப்பினராகப் பிரிந்து போரிடும் அனைவரிலும் மிகமிக நல்லவன் ஒருவன் கொல்லப்படுவான். இப்போது உலகில் வாழ்பவர்களில் அவனைவிட நல்லவர்கள் யாருமில்லை. அவன் இறக்கவிருப்பதை எண்ணி
என் மனம் இப்போதே வருந்துகிறது!”

இந்த விந்தையான பதிலால் கடும் அதிர்ச்சியடைந்த அர்ச்சுனன், பீமன், நகுலன், சகாதேவன் நால்வரும் தங்கள் அண்ணனான தர்மபுத்திரரைக் கவலையோடு பார்த்தார்கள். தர்மபுத்திரரை விட நல்லவர்கள் யாரிருக்க முடியும்? தர்மபுத்திரர்தான் இப்போது உலகில் வாழும் மிக நல்லவர் என்பது மக்கள் அனைவரும அறிந்த விஷயம் தானே? தர்மநெறி ஒருசிறிதும் தவறாத அவரது கதை இன்றோடு முடியப் போகிறதா? போர் என்று வந்துவிட்டால் இருதரப்பிலும் இழப்புகள் நேரும் என்பது எல்லோரும் அறிந்ததுதான். ஆனால், மூத்தவனையே போர் காவு கொள்ளப் போகிறதா? என்று...

பாஞ்சாலி கண்களில் நீர்வழிய யுதிஷ்டிரரைப் பார்த்தாள். இதயத்தைப் பிடித்துக்கொண்டு அப்படியே தரையில் அமர்ந்தாள். ஒவ்வொரு நாளும் பாண்டவர்கள் ஐவரும் போர் முடிந்து நல்லபடியாகத் திரும்ப வேண்டும் என்று கண்ணனைப் பிரார்த்தித்தவாறே பதற்றத்தோடு காத்திருப்பாளே இன்று
மாலை ஐவரும் திரும்புவார்களா, இல்லை நால்வர் மட்டும் தானா? என்று. கண்ணன் தன் பதிலால் ஏற்பட்ட பின்விளைவு எதையும் பொருட்படுத்தாத கண்ணன் அர்ச்சுனனின் தேரில் சாரதியாக போர்க்களம் நோக்கிப் பாய்ந்தது. யுதிஷ்டிரர் தேர் மற்றும் அனைவரின் தேர்களுக்கும் அடுத்து அடுத்து நகர்ந்தது...

போர்க்களத்தில் கையில் கதாயுதத்தோடு களத்தில் இறங்கிய பீமன் தன்னுடன் போர்த் தொடுக்க முன்வந்து நின்ற விகர்ணனைப் பார்த்துக் கடுமையாக எச்சரித்தார்

‘‘விகர்ணா! என்முன் வராதே! தள்ளிப் போ. நான் உன்னைக் கொல்வதற்காகக் களத்தில் இறங்கவில்லை. உன் இரு அண்ணன்களான துரியோதனன், துச்சாதனன் இருவரையும் வதம் செய்ய வந்திருக்கிறேன்.

அவர்கள் இருவரின் குருதியையும் கலந்து கூந்தலில் பூசிக் குளிப்பேன் எனச் சபதம் செய்திருக்கிறாள் பாஞ்சாலி. மேகம் போல் அடர்ந்த அவள் கூந்தல் முடியப்படாமல் இருப்பதை எத்தனை நாட்கள் நான் பார்த்துக் கொண்டிருப்பது! இன்று என் கையில் உள்ள கதையால், உன் அண்ணன்கள் இருவரின் கதை முடியவேண்டும். பாஞ்சாலி தன் கூந்தலை முடியவேண்டும். குறுக்கே வராதே! வழிவிடு!”

பீமனின் வீராவேசப் பேச்சைக் கேட்டு விகர்ணன் கடகடவென நகைத்தார் ‘‘ஏன் பீமா? என்னை வென்றுவிட்டு அவர்களை வெல்ல இயலாதா?

என்னை வெல்ல முடியாதென்ற பயமா?" என்றார்...

"பயமா? எனக்கா? அதுவும் உன்னைப் பார்த்தா? நல்ல வேடிக்கை. அச்சத்தால் அல்ல, உன்மேல் கொண்ட அன்பால் உன்னைக் கொல்ல என் கதாயுதம் விரும்பவில்லை நான் உன்னைக் கொல்ல முயன்றாலும் கூட என் கதாயுதம் என்னைத் தடுத்துவிடுமோ எனத்தான் அஞ்சுகிறேன். அன்று நீ நடந்துகொண்ட முறையை என்னோடு என் கதாயுதமும் அல்லவா பார்த்துக் கொண்டிருந்தது? என்னைப் போலவே அதற்கும் உன்மேல் அன்பும் மரியாதையும் உண்டு. தப்பிப் பிழைத்துப் போ" என்றார் பீமன்...

விகர்ணன் மீண்டும் நகைத்தார் ‘‘பீமா! என்று என்ன நடந்தது? எதைப் பற்றிப் பேசுகிறாய் நீ? உன் கதாயுதம் என்மேல் அன்பு செலுத்த வேண்டிய அவசியம் என்ன?” என்றார்.

"விகர்ணா மீண்டும் மீண்டும் சொல்கிறேன். வீண் வாதத்தில் இறங்காதே! கௌரவர்கள் நூறு பேரில் நீ மட்டும் தப்பிப் பிறந்தவன். அன்று கௌரவர் சபையில் பாஞ்சாலியை உன் அண்ணன் துச்சாதனன் துகிலுரிய எத்தனித்தானே, அப்போது மெய்ஞ்ஞானியான பீஷ்மர் கூட வாய்மூடி மௌனியாகத்தானே இருந்தார்?

அதர்மம் தலைவிரித்தாடிய அந்த சந்தர்ப்பத்தில் தர்மத்தின் பக்கம் நின்று குரல்கொடுத்தவன் நீ மட்டும்தான். ‘அநியாயம் நடக்கிறது, நிறுத்துங்கள்‘ என்று அறைகூவியவன் நீ ஒருவன்தான். கண்ணன் மட்டும் பாஞ்சாலிக்கு அருள் புரியாதிருந்தால் அன்று அவள் நிலை என்னவாகி இருக்கும்?

பெண்ணை மானபங்கம் செய்ய முயல்வது கண்டு பதைபதைத்த உள்ளம் உன் உள்ளம். நாங்கள் ஐவரும் கையாலாகாதவர்களாக இருந்தோம்.

பாஞ்சாலியின் பொருட்டாக நீ குரல்கொடுத்தால் அது உன் அண்ணன் துரியோதனனுக்கு உகப்பாக இராது என்பதையும் நீ யோசிக்கவில்லை.

அறத்தின் பக்கமே நின்றது உன் மனம். ஒரு பெண்ணுக்கு நேரும் அவமானம் கண்டு துடித்தது உன் நெஞ்சம். அந்த உயர்ந்த நெஞ்சை என் கதாயுதம் பிளப்பதை நான் விரும்பவில்லை. தயவுசெய்து தள்ளிப்போ அல்லது இன்னோர் யோசனை சொல்கிறேன். அதைக் கேள்!”

"அதென்னப்பா இன்னோர் யோசனை? அதையும் தான் சொல்லேன் கேட்போம்" என்றார் விகர்ணன்.

"நீ எங்களுடன் சேர்ந்துவிடு. பாண்டவர்கள் உன்னையும் சேர்த்து ஆறுபேராக இருப்போம். உனக்கும் அரசு வழங்கி முடி சூட்டுகிறோம். பாஞ்சாலியின் மானத்தைக் காக்கக் குரல்கொடுத்த உன் தலையில் முடிசூட்டிப் பார்க்க விழைகிறது என் மனம். என் விருப்பத்தை நிறைவேற்று" என்றார் பீமன்.

விகர்ணன் நகைத்தார் ‘‘பீமா நான் அற வழியில் நிற்பவன் என்று சொன்னாயே, அது உண்மைதான் அன்று மட்டுமல்ல எப்போதும் அறத்தின் வழியில்தான் நிற்பேன். அன்று பெண்ணின் மானம் சூறையாடப்படும் நிலையில் அதன் பொருட்டு எதிர்த்துக் குரல் கொடுப்பது அறம். எனவே எதிர்த்துக் குரல் கொடுத்தேன். இன்று யார் தரப்பில் நியாயம் இருந்தாலும், நான் சார்ந்திருக்கும் என் அண்ணண் தரப்புக்காக நான் போரிடுவதே நியாயம்.

வெறும் மகுட ஆசைக்காக என் அண்ணனை விட்டு விலகி விடுவேன் என்றா நினைத்தாய்? என்னைத் தாண்டித்தான் நீ துரியோதனனை அடைய முடியும். இயலுமானால் என்னை நோக்கி உன் கதாயுதத்தைப் பிரயோகித்துப் பார். வீண்பேச்சை வீரர்கள் விரும்புவதில்லை. அவர்கள் செயல்படுபவர்கள். நீ வீரனென்றே நான் நம்புகிறேன்.”

விகர்ணனின் துடுக்கான பேச்சு பீமனுக்குக் கடும் சீற்றம் விளைவித்தது. தேரிலிருந்து குதித்துப் பாய்ந்து சென்று விகர்ணனைத் தாக்கலானான் பீமன்.

உக்கிரமான போர் நெடுநேரம் நடைபெற்றது. ஒரு மாபெரும் வீரனுடன் போர் புரிகிறோம் என்பதை பீமனின் மனம் உணர்ந்தது. அதுமட்டுமல்ல, அறத்தின் வழியே வாழ்பவர்களை வெல்வது சுலபமல்ல என்பதையும் அவன் மனம் புரிந்துகொண்டது.

மனமே இல்லாமல் தன் கதாயுதத்தால் ஓங்கி விகர்ணனை அறைந்தான் பீமன். தர்மத்தின் வழியிலேயே நின்ற அவன் முகத்தில் புன்முறுவல் படர்வதையும் சிரித்துக் கொண்டே அவன் மரணத்தை வரவேற்பதையும் பார்த்து வியந்தது பீமன் மனம். விகர்ணனின் உயிர்ப் பறவை விண்ணில் பறந்தபோது பீமன் உள்ளம் இனம் தெரியாத சோகத்தில் ஆழ்ந்தது.

மாலை சூரியாஸ்தமனத்திற்குப் பிறகு யுத்தம் நிறுத்தப்பட்டது. பாண்டவர்கள் பாசறைக்குத் திரும்பினார்கள். அனைவரிலும் நல்லவன் அன்று கொல்லப்படுவான் என்று கண்ணன் சொன்னானே? பதற்றத்தோடு காத்திருந்த பாஞ்சாலி யுதிஷ்டிரர் உள்ளிட்ட எல்லோரும் நலமாகத் திரும்பி வருவதைப் பார்த்து நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

பாஞ்சாலி கண்ணனிடம் கேட்டாள் ‘‘கண்ணா! அனைவரிலும் நல்லவன் சாவான் என்றாயே? அப்படியானால் இறந்தது யார்? என் கணவர் ஐவரிலும் மூத்தவரைத் தானே உலகம் மிக நல்லவர் எனப் புகழ்கிறது? அவரின் நலத்திற்காக நான் இன்று முழுவதும் உன்னைப் பிரார்த்தித்தவாறே காலம் கழித்தேன். கண்ணா! அவரை விடவும் நல்லவர்கள் உண்டா என்ன?”

புல்லாங்குழலைக் கையில் தட்டியவாறே நகைத்த கண்ணன் சொன்னார் "பாஞ்சாலி! நல்லவர்களிடையே நல்லவனாக இருப்பதில் என்ன சிரமம்? அப்படி இல்லாதிருப்பதுதான் கஷ்டம். ஆனால் விகர்ணன் கெட்டவர்களிடையே நல்லவனாக இருந்தான். உன் மானத்தைக் காப்பதற்காக எதிரணியில் இருந்து குரல்கொடுத்தான். இப்போது தன் அண்ணன் கெட்டவனே ஆனாலும், தன் அண்ணனுக்காக உயிரையே கொடுத்திருக்கிறான். மகுட ஆசை கூட அவன் மனத்தை மாற்ற முடியவில்லை. தான் இறப்போம் என்று தெரிந்தே இறந்திருக்கிறான். தர்மம் எந்த அணியில் இருக்கிறதோ
அந்த அணியில் தான் நான் இருப்பேன் என்பதும் நான் இருக்கும் அணிதான் வெல்லும் என்பதும் அவன் அறிந்தவைதான். ஆனாலும் தன் உயிர் போவதை அவன் ஒரு பொருட்டாய்க் கருதவில்லை. தனது அண்ணனுக்காக உயிரை விடுவதே தனது தர்மம் எனக் கருதியிருக்கிறான்.

அவன் இருந்தவரை கௌரவர்கள் அத்தனை பேரையும் அந்த நல்லவனின் தர்மசக்தி கவசமாய்க் காத்திருந்தது. அவன் இருக்கும்வரை கௌரவர்களை அழிப்பது இயலாத செயல். இன்று உன் கணவன் பீமன் அந்த நல்லவனை வதம் செய்துவிட்டான். இனி கெட்டவர்களான மற்ற கௌரவர்களை அழிப்பது கடினமல்ல. சொல் பாஞ்சாலி. சேற்றில் பூத்த செந்தாமரை போல, கெட்டவர்களிடையே நல்லவனாக வாழ்ந்தானே, இவனைவிட நல்லவர் உலகில் வேறு யார்?”

இதற்கு தர்மபுத்திரர் ‘‘ஆமாம், விகர்ணன் எல்லோரிலும் நல்லவன்! என்னை நல்லவன் என்கிறார்கள். அது உண்மையோ இல்லையோ, விகர்ணன் என்னை விடவும் நல்லவன் என்பது மட்டும் உண்மை. இந்தப் பாழும் போரால் அந்த உத்தமனையும் கொல்ல நேர்ந்ததே பீமா!” என்ற அவர் தன் விழிநீரை விரல்களால் துடைத்துக் கொண்டார்.

பீமன் இருகரம் கூப்பி வணங்கியபோது, பீமனின் கரத்திலிருந்த கதாயுதம் வெட்கத்தோடு கீழே சாய்ந்தது.
---------------------------------------------------
படித்ததில் பிடித்தது. உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்!

அன்புடன்,
வாத்தியார்
---------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

17.6.16

மதமாற்றங்கள் எப்படி நடக்கின்றன?


மதமாற்றங்கள் எப்படி நடக்கின்றன?

ஒரு அடர்ந்த காட்டுக்குள்ள ஒரு நரிக்கூட்டம் வாழ்ந்து வந்தது.

அதில் ஒரு நரி ஒரு நாள் காட்டை ஒட்டி இருந்த திராட்சை தோட்டத்திற்குள் புகுந்து திராட்சை பழங்களை சாப்பிட்டுக் கொண்டிருந்தது.

அப்பொழுது அங்கு வந்த தோட்டக்காரன் நரியைப் பிடித்து அதன் வாலை வெட்டி விட்டான்.

வாலில்லாமல் நரிக்கு மிகவும் அவமானமாக இருந்தது. "அடடா இனிமே நம்மை நம்ம கூட்டத்தில் சேர்க்க மாட்டாங்களே. என்ன செய்யலாம்.....???" என்று யோசித்து கொண்ருக்கும் போது எதிரில் அதோட கூட்டத்தை சேர்ந்த நரி ஒன்று வந்தது.

அது வால் இல்லாத நரியைப் பார்த்ததும் அடக்க முடியாம விழுந்து விழுந்து சிரித்தது.

என்னடா இது அசிங்கமா போச்சேன்னு யோசித்த முதல் நரிக்கு ஒரு யோசனை வந்தது.

உடனே பதிலுக்கு அதுவும் விழுந்து புரண்டு சிரித்தது.

உடனே இரண்டாவது நரி "ஏன்டா நீ என்ன லூசா" என்று கேட்டது.

உடனே இது "அடேய் முட்டாப்பயலே என் வாலை வெட்டினவுடனே கடவுள் எனக்கு தரிசனம் தந்தாரு. ஆனா அது தெரியாம நீ என்னை கிண்டல் பண்ற" என்று சொல்லியது.

இரண்டாவது நரி "அது எப்படின்னு?" என்று கேட்க, வால் அறுபட்டிருந்த நரி, "உன் வாலையும் வெட்டினா கடவுள் தெரிவார்” என்றது.

”ஆனால் நீயா வெட்டக்கூடாது. அதோ அந்த திராட்சை தோட்டத்தில போய் திராட்சையை சாப்பிட்டின்னா அந்த தோட்டக்காரன் பிடிச்சி
உன் வாலை வெட்டி விடுவான். அப்ப உன் முன்னாடி கடவுள் தோன்றுவார்" என்று கூறியது.

உடனே இரண்டாவது நரி அதே மாதிரி செய்யப் போய் தோட்டக்காரன் வாலை வெட்டி விட்டுவிட்டான்.

ஆனால் கடவுள் வரவில்லை. ஏமாந்த நரி கடும் கோபத்துடன் முதல் நரியோடு சண்டை போட்டது.

ஆனால் முதல் நரி அமைதியாக "இங்க பாரு இப்ப உனக்கும் வால் இல்லை. எனக்கும் வால் இல்லை. இரண்டு பேரையும் கூட்டத்துல சேர்க்க மாட்டாங்க. அதனால நம்மாள முடிஞ்ச அளவுக்கு வால் இல்லாத நரிக்கூட்டத்தை உருவாக்குவோம்" என்று சொன்னது.

இப்படித்தான் மதவாதிகள் பிறர் வழிபடுவதை சாத்தான் என்றும், தாங்கள் கும்பிடுவதுதான் கடவுள் என்றும் சொல்லி மதம் மாத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

நம்பிப் போன மக்களும் திரும்பி வந்தால் அவமானப்பட்டு விடுவோம் என்று அவங்களால் முடிந்த அளவிற்குக் கூட்டத்தைச் சேர்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

அந்த வேலைதான்  பல நாடுகளில், பல ஊர்களில் வெகு விமரிசையாக நடந்தேறிக் கொண்டு இருக்கிறது ஆன்மீக மார்க்கதில்.......!!!

படித்ததில் பிடித்தது. உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்

அன்புடன்,
வாத்தியார்
---------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.6.16

ஸ்டீவ் ஜாபின் இறுதி வரிகள்.


ஸ்டீவ் ஜாபின் இறுதி வரிகள்.

நான் வணிக உலகில் வெற்றியின் உச்சத்தை அடைந்திருக்கிறேன். பிறரின் பார்வையில் என் வாழ்க்கை வெற்றிகரமானது.

 எப்படியிருந்தாலும் என் பணிச்சுமைகள்  எல்லாம் தாண்டி நானும் வாழ்க்கையில் சிறிது சந்தோசங்களை அனுபவித்திருக்கிறேன்.

பணமும் வசதிகளும் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை இறுதியில் தான் அறிந்து கொண்டேன்.

இதோ இந்த மரணத்தருவாயில், நோய் படுக்கையில் படுத்து கொண்டு என் முழு வாழ்க்கையையும் திரும்பி பார்க்கும் இந்த தருணத்தில் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த அங்கீகாரங்கள், பணம் , புகழ் எல்லாம் செல்லா காசாக , அர்தமற்றதாக மரணத்தின் முன் தோற்று போய் நிற்பதை உணர்கிறேன்.

இந்த இருளில் என் உயிரை தக்க வைக்க போராடிக் கொண்டிருக்கும் மருத்துவ இயந்திரங்களின் மெல்லிய சத்தங்கள் மட்டுமே காதுகளில் ரீங்கரிக்கிறது. கடவுளின் மூச்சுக்காற்றையும் மரணத்தையும் மிக அருகில் உணர்கிறேன்.

வாழ்க்கையில் நாம் வாழ்வதற்கு போதுமான பணம் சம்பாரித்த பின், பணத்திற்கு சம்மந்தமில்லாத விஷயங்களையும் சம்பாரிக்க தொடங்க வேண்டும்

என்பது இப்போது புரிகிறது. அது உறவாகவோ, இல்லை எதாவது கலை வடிவமாகமாவோ , நம் இளமையின் கனவாகவோ இருக்கலாம். அது தான் வாழ்வில் மிக முக்கியமானது.

அதைவிட்டு பணத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு ஓடும் மனிதனின் வாழ்க்கை முற்றிலும் வேறு திசையில் திரும்பிவிடுகிறது என் வாழ்க்கையை  போல.

கடவுள் நம் புலன்களின் மூலம் அனைவரின் மனதில் இருக்கும் அன்பை உணரசெய்யும் சக்தியை கொடுத்திருக்கிறார், பணத்தால் நாம் உண்டாக்கியிருக்கும் எல்லா சந்தோசங்களும் வெறும் பிரமைகள் தான்.

நான் சம்பாரித்த பணம் எதையும் இங்கு கொண்டுவர முடியாது. நான் மகிழ்ந்திருந்த என் நினைவுகள் மட்டுமே இப்போது என்னுடன் இருக்கிறது.

அன்பும் காதலும் பல மைல்கள் உங்களுடன் பயணிக்கும். வாழ்க்கைக்கு எந்த எல்லைகளுமில்லை. எங்கு செல்ல ஆசைப்படுகிறீர்களோ அங்கு செல்லுங்கள். தொட நினைக்கும் உயரத்தை தொட முயற்சியுங்கள். நீங்கள் வெற்றியடைவது உங்கள் எண்ணத்திலும் கைகளிலும் தான் உள்ளது.

உங்கள் பணத்தை வைத்து நீங்கள் என்ன வேண்டுமானாலும் வாங்கலாம், ஆனால் அந்த பணத்தின் மூலம் உங்கள் வலியை, உங்கள் துயரை யாரும் வாங்கிகொள்ளுமாறு செய்ய முடியாது.

பணத்தின் மூலம் வாங்கும் பொருட்கள் தொலைந்துவிட்டால் மீண்டும் வாங்கிவிடலாம். ஆனால் நீங்கள் தொலைத்து அதை பணத்தால் வாங்க முடியாது என்ற ஒன்று உண்டென்றால் அது உங்கள் வாழ்க்கை தான்.

வாழ்க்கையில் எந்த கட்டத்தில் நீங்கள் இருந்தாலும் பரவாயில்லை , இப்போது வாழ்க்கையை வாழ ஆரம்பியுங்கள். நாம் நடித்து கொண்டிருக்கும்

வாழ்க்கை எனும் நாடகத்தின் திரை எப்போது வேண்டுமானாலும் இறக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் குடும்பத்தினருக்கு, மனைவிக்கு, நண்பர்களுக்கு, அன்பை வாரி வழங்குங்கள்.

உங்களை நீங்கள் சந்தோசமாக வைத்து கொள்ளுங்கள். அனைவரையும் மனமார நேசியுங்கள்.!

(ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் கம்பெனி நிறுவனர். ஸ்மார்ட் போன்களை வடிவமைத்தவர்)

💖💖💖🌷💖💖💖
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.6.16

உழைப்பு மற்றும் அனுபவக் கல்வியின் மேன்மை!


உழைப்பு மற்றும் அனுபவக் கல்வியின் மேன்மை!

7 வது வரை படித்தவர்... இப்போது 210 பஸ்களுக்கு முதலாளி !!!

படித்து பட்டங்கள் பல பெற்றவர்கள்தான் புதுமையாக சிந்தித்து ,தொழிலில் வெற்றிபெறமுடியும் என்பதில்லை......

பள்ளிக்கல்வியை முழுமையாக முடிக்காதவர்கள் கூட வெற்றிகரமான தொழில் முனைவோர்களாக விளங்குகிறார்கள் என்பதற்கு மற்றொரு உதாரணமாக வலம் வருகிறார் இந்த தொழிலதிபர்................

மூன்று ஆங்கில எழுத்துக்களை சொன்னாலே போதும், தமிழகம் மட்டுமல்ல தென்மாநிலங்களில் உள்ள மக்களுக்கும் அந்த சொகுப்பேருந்துகள்தான் நினைவுக்கு வரும். அந்தப் பேருந்துகளை இயக்கும் கே.பி.என். டிராவல்ஸ் அதிபர் கே.பி.நடராஜன்,


இன்றைய தேதியில் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தலா ஒன்றரைக்கோடி ரூபாய் மதிப்புள்ள 210 சொகுசு பேருந்துகளுக்கு சொந்தக்காரர்.

அதோடு 300 பார்சல் லாரிகளும் நாடுமுழுவதும் சுமைகளை ஏற்றி இறக்கி வலம் வந்துகொண்டிருக்கின்றன. இவ்வளவு பெரிய போக்குவரத்து சாம்ராஜ்யத்தை நிறுவி, வெற்றிகரமாக நடத்திவரும் கே.பி.நடராஜன், பெரிய பிசினஸ் படிப்பு எதுவும் படித்தவர் அல்ல. இவர் படித்தது வெறும் ஏழாம் வகுப்பு மட்டும்தான். ஆனால், அடைந்த வெற்றிகள் ஏராளம்.தனது வெற்றிக்கதையை சொல்கிறார் நடராஜன்....

'' நான் பிறந்து வளர்ந்தது சேலம், பெரியபுத்தூர் கிராமம். அப்பா பொன்மலைக்கவுண்டர் நாலரை ஏக்கர் நிலம் வைத்திருந்த சாதாரண விவசாயி. எனக்கு விவசாயத்தில் பெரிய நாட்டம் இல்லை. சிறு வயதில் இருந்தே மோட்டார் தொழிலில் ஈடுபடவேண்டும் என்கிற ஆசை எனக்கு அதிகம். ஏழாம் வகுப்பு தாண்டியதும் பள்ளிப்படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தேன். சில வருடங்கள் அப்பாவுக்கு துணையாக விவசாய வேலைகளை செய்தேன். ஒரு கட்டத்தில் என்னுடைய மோட்டார் தொழில் கனவு நிறைவேறும் சூழல் ஏற்பட்டது. 1968 ம் வருடம் எனது உறவினர்கள் சிலருடன் சேர்ந்து பஸ் ஒன்றை வாங்கினேன்.

அதுக்கு ’வெங்கடேஸ்வரா பஸ் சர்வீஸ்' என்று பெயர் வைத்து கோவை டூ பெங்களூரு ட்ரிப் அடித்தேன்.அந்த ஒற்றைப் பஸ்ஸின் ஓட்டுநரும் நான்தான், கிளீனரும் நான்தான். இப்படியாக தனி ஒருவனாக பஸ் போக்குவரத்தை நடத்தினேன். அடுத்த சில வருடங்களில் பங்குதாரர்கள் தங்கள் பங்கை பிரித்துக்கொண்டு வேறு தொழில்களுக்கு போய்விட்டார்கள்.

எனக்கு மோட்டார் தொழிலை விட மனதில்லை. என்னிடம் இருப்பில் இருந்த பணம் போதவில்லை. வெளியில் தெரிந்தவர்களிடம் கொஞ்சம் கடன் வாங்கி 1969 ல் ஒரு புதிய பஸ் ஒன்றை வாங்கினேன். எனது நெருங்கிய உறவினரின் குழந்தை பெயர் சிவக்குமார். அந்த குழந்தையின் பெயரையே புதிய பஸ் கம்பெனிக்கு வைத்தேன். 'சிவக்குமார் பஸ் சர்வீஸ்' என்கிற பெயரில் இயங்கிய அந்தப் பஸ்ஸின் டிரைவரும் நான்தான்.மதுரை டூ பெங்களூரு ரூட்டில் பேருந்தை இயக்கி, அந்த பஸ் கம்பெனியை 3 வருடங்களாக வெற்றிகரமாக நடத்தினேன். கிடைத்த லாபத்தில், தொடர்ந்து இன்னொரு பஸ் வாங்கினேன்.

எனது தாத்தா ’குப்பண்ணகவுண்டர் பெயரின் முதல் எழுத்தான 'கே' இன்ஷியலையும், எனது தகப்பனார் பொன்மலைக்கவுண்டர் பெயரில் இருந்து 'பி' எழுத்தையும், என்னோட பெயரில் இருந்து 'என்' ஆங்கில எழுத்தையும் எடுத்து இணைத்து, '1972 கே.பி.என்.' என்கிற பெயரைவைத்து, டிராவல்ஸ் கம்பெனி தொடங்கினேன்.

'ஏ.பி.சி 7581' என்கிற ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட அந்த கே.பி.என். டிராவல்ஸ் பஸ், திருநெல்வேலி - பெங்களூரு இடையே இயக்கப் பெற்றது. தொடர்ந்து இரண்டு வருடங்கள் நடந்த போக்குவரத்தை தொடர்ந்து, 1974ம் வருடத்தில், கே.பி.என்.டிராவல்ஸின் இரண்டாவது பஸ் இயக்கப்பெற்றது.1976 ல் மூன்றாவது பஸ்ஸை வாங்கினேன். மூன்று பேருந்துகளும் லாபகரமாக ஓடின.

பயணிகளிடம் நாங்கள் காட்டிய அன்பான அணுகுமுறை, சரியான நேரத்தில் புறப்பட்டு ஊரை சென்றடைதல், பாதுகாப்பான பயணத்திற்கு உத்தரவாதம் உள்ளிட்ட விஷயங்களில், எங்கள் கம்பெனி டாப்கியரில் போகத்தொடங்கியது. இதில் ஒரு விஷேசம் என்னவென்றால், ஒரு பஸ் மட்டும் இயக்கிய பொழுது, நான் மட்டும்தான் டிரைவர். இரண்டாவது பஸ்ஸை ஓட்ட, இன்னொரு டிரைவரை வேலையில் சேர்த்தேன். படிப்படியாக கம்பெனி வளர்ந்து, ஒரு கட்டத்தில் 10 வண்டிகளுடன் உயர்ந்தது. அப்படி 10 வண்டிகளுக்கு முதலாளி என்கிற அந்தஸ்து கிடைத்தபோதும், அதில் ஒரு வண்டியின் டிரைவராக நான்தான் இருந்தேன்.

அடுத்தடுத்து தொலைதூர பயணிகளை ஈர்க்கும் விதமாக சொகுசு பஸ்களை அறிமுகம் செய்தேன். குளுகுளு வசதி செய்யப்பட்டதும், சாய்மானம் கொண்ட மெத்தை இருக்கைகளை உடைய பஸ்களை வடிவமைத்தோம். அவற்றுக்கு பயணிகளிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பல பஸ்களை இயக்கினோம்.

இந்தியாவில் படுக்கை வசதி கொண்ட தொலைதூர பஸ்ஸை அறிமுகம் செய்தது எங்கள் நிறுவனம்தான்.இப்போது எங்கள் நிறுவனத்தின் 210 பேருந்துகளில், 95 படுக்கை வசதி கொண்டவை.இன்று நாட்டின் எல்லா நகரங்களிலும் எங்கள் நிறுவனத்திற்கு பதிவுக் கிளைகள் உண்டு
நாட்டின் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும், கே.பி.என்.டிராவல்ஸில் பயணம் செய்ய ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளமுடியும்.

ரயில் பயணிகளுக்கு ரயிலுக்குள் உணவு கிடைப்பது போல, எங்கள் பஸ்ஸில் பயணிப்பவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்திட உள்ளோம். எதிர்காலத்தில் 'கே.பி.என். ஏர்லைன்ஸ்' என்கிற பெயரில் குறைந்த கட்டணத்தில் விமானச் சேவை வழங்கும் ஒரு திட்டத்தைப் பற்றிய யோசனையும் இருக்கிறது.

ஏழாம் வகுப்பு வரை மட்டும் படித்த நான் 17 வயதில் கிளீனர்,18 வயதில் டிரைவர், 20 வயதில் ஒரு பஸ்ஸின் பங்குதாரர், 24 வயதில் கே.பி.என்.டிராவல்ஸ் என்கிற கம்பெனியின் முதலாளி என்று படிப்படியாக வளர்ந்து, இன்று 510 வாகனங்களை வைத்து இயக்கி வருகிறேன். நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் எங்கள் பஸ்ஸில் பயணிக்கிறார்கள். கோடிக்கணக்கான ருபாய் சரக்குகள் நாடெங்கிலும் எடுத்துச் செல்லப்படுகிறது. இதை நிர்வாகம் செய்ய, என்னிடம் நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் வேலை பார்க்கிறார்கள்" என்ற நடராஜன்," அன்றைக்கு ஏதோ ஒரு ஆர்வத்தில் படிப்பை பாதியில் கை விட்டேன். இன்னும் கூட படித்திருக்கலாம் என்கிற ஆதங்கம் சிலசமயம் எழுவதுண்டு. இன்று தென் மாநிலங்களுக்கு மட்டும் பஸ் போக்குவரத்தை நடத்திவரும் நான், பட்டப்படிப்பை படித்திருந்தால், இன்னும் நன்றாக பஸ் போக்குவரத்தை நடத்தியிருக்கலாம் என்று எப்போதாவது நினைப்பதுண்டு. ஆனாலும் வாழ்க்கையில் தெரிந்துகொண்ட அனுபவக் கல்விதான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தி உள்ளது என்பதையும் மறுபதற்கில்லை.'' என சொல்லி முடித்தார்!~

நன்றி :..... விகடன் 
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.6.16

வித்தியாசமான உதவி


வித்தியாசமான உதவி

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.

சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.

தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.

பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.

பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச்  செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.

பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.

பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்

படித்ததில் பிடித்தது!
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.6.16

செட்டிநாட்டுச் சாப்பாட்டின் சிறப்பு!


செட்டிநாட்டுச் சாப்பாட்டின் சிறப்பு!

இந்தப் பதிவு லால்குடி கே.முத்துராமகிருஷ்ணன் (KMRK) அவர்களுக்கு சமர்ப்பணம்!
----------------------------------------------------------------------------

பாசிப்பருப்பு மசியலுக்கு
பக்குவமாய் உப்பிட்டு
உருக்கி நெய் ஊத்தி
சீரகமும் பூண்டும் அதில
சிக்கனமாத் தட்டிப்போட்டு
கருவேப்பிலை கிள்ளிப் போட்டு
கடைஞ்சு வச்சா சாப்பாடு..ஆஹா!
முறுக்கா ஆரம்பிக்கும்!
முதல்ருசியே மூக்கை இழுக்கும்!!

அம்மியில்லாத ஆச்சிவீடு  ?!

அம்மியில அரச்சுப்போட்டு
ஆச்சிவச்ச கறிக்குழம்பு
கம்மியாவே இருந்தாலும்
களிப்பூட்டும் ருசியிருக்கும்!

பலாக்காயில பருப்புப்போட்டு
கூட்டுக் கறிவச்சா....
ஆட்டுக் கறிகூட
அதுக்குஇணையில்லையப்பா!

அவரைக்காய் இளங்குழம்பு
அதுக்கு ஒரு தனி ரெசிபி{பக்குவம்}
சீரகமும் கசகசாவும்
பூண்டும்வச்சு அம்மியில
புதுசாத்தட்டிப் போட்டு..
ஆஹா..
இதுவல்லோ இளங்குழம்பு!

புடலங்காய்த் துவட்டலுக்கு
துவரம்பருப்பு அரைவேக்காட்டில்!
அடடா! அதுவொருசுவை!

பலகாய் போட்டு ஒரு மண்டிவைப்பார்!
உலகமெலாம் விரும்புகின்ற
உருசியான மண்டியப்பா!

பறங்கிக்காய் புளிக்கறியும்
பக்குவமாய்க் கருணையிலே
படுருசியாய் மசியலும்
இங்கிலீசு கய்கறியில்
இதமாகக் காரமிட்டு
பிரட்டல் வைப்பார்கள்
பிடித்தபடி சாப்பிடலாம்!

அமிர்தத்தைப் போல
அரிசிப் பரமான்னம்!
அப்பளமும் பொரிச்சுவைப்பார்
அதுவல்லோ ஆனந்தம்!

வத்தல் வகை

வத்தலிலே வகைவகையாய்
வறுத்து வைப்பார்கள்!

கிள்ளிக்கிள்ளிக் காயவைத்த
கிள்ளுவத்தல்!

வத்தக்குழலில் பிழிஞ்சுவச்ச
தேங்குழ வத்தல

வண்ணம்கலந்து காயவைத்த
ரொசாப்பூ வத்தல்!

துணியில் ஊத்திக் காயவைத்த
கேப்பை வத்தல்!

மோருக்குள்ள போட்டுவச்ச
மொளகாவத்தல்!

சுண்டவத்தல்!
பலகாயும் மோருக்குள்ள
பக்குவமாப் போட்டுவச்ச
காய்கறிவத்தல்!

பலகார வகையும் தொட்டுக்கொள்ளுவதும்!

வெள்ளைப் பணியாரத்துக்கு
வரமிளகாய்த் துவையல்!

மசாலைப் பணியாரத்துக்கு
கதம்பத் துவையல்!

உளுந்தவடை சுட்டாக்க
தேங்காய்ச் சட்டினி!

மசால்வடை சுட்டாக்க
இஞ்சி சேத்த சட்டினி!

பொங்கல் போட்டாக்க
முருங்கைக்காய் சாம்பார்!

இடியாப்பம் செஞ்சாக்க
கத்தரிக்காய் கோசமல்லி!

ரவா உப்புமாவுக்கு
பாசிப்பருப்பு பச்சடி!

அடைத்தோசை சுட்டாக்க
பொரிச்சுக்கொட்டித் துவையல்!

இளந்தோசை சுட்டாக்க
வெங்காயக் கோசு!

அஞ்சரிசித் தோசைக்கு
வெங்காயம் பூண்டுவச்சு
தேங்காய்த் துவையல

ஊத்தப்பம் தொட்டுக்க
துவரம்பருப்பு சட்டினி!

அரிசி உப்புமாவுக்கு
அரைச்ச மல்லித்துவையல்!

பூரிக்கு கிழங்கு!

சப்பாத்திக்கு குருமா!

இட்டலிக்கு டாங்கரு!

சும்மா குளம்பும் வைக்கலாம்!
புளிமிளகாய் கரைக்கலாம்!!

இனிப்பு வகை

கருப்பட்டியும் நெய்யும்சேத்த
ஆடிக்கூழு கும்மாயம்!
தேடிவாங்கிச்சாப்பிடலாம்
திகட்டாத பலகாரம்

வெல்லம்போட்டு ஏலம்சேத்து
ஆட்டிச்சுட்ட கந்தரப்பம்

இனிப்புச்சீயம்!

தேங்காய்திருவி நெய்போட்டு
வேகவச்ச கவுனரிசி

பசங்கவிரும்பிச் சாப்பிடுற
பால்பணியார மாவு
பக்குவமா அரைக்கலைன்னா
படபடன்னு வெடிச்சிரும்!

ரெங்கூன்புட்டு சாப்பிட்டதும்[மனசு]
ரெக்கை கட்டிப்பறக்கும்!

உக்காரை ருசியில
ஒலகமே மறந்துரும்!

கருப்பட்டிப் பணியாரம்
விருப்பம்போல சாப்பிடலாம்!

குருவை அரிசிப் பணியாரம்
குசியாகச் சாப்பிடலாம்!

முகம் மலர வரவேற்று
மூச்சுமுட்ட அன்னமிடும்
நகரத்தார் பண்பாட்டை
நாடே வியந்தறியும்!
==========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2.6.16

மரணம் எப்போது நிகழுமோ அப்போது நிகழ்ந்தே தீரும்.


மரணம் எப்போது நிகழுமோ அப்போது நிகழ்ந்தே தீரும். 

ஒருநாள் எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார்; ஆஹா,இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான்,(கருடபகவான் என்பது பகவான் விஷ்ணுவை சுமந்து செல்லும் கழுகு. இது கழுத்தில், வெள்ளை நிறமும், உடலில் ப்ரவுன் நிறத்திலும் இருக்கும்)  உடனடியாக அந்தக்குருவியை தூக்கிக் கொண்டு பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த ஒரு மரப்பொந்தில் பாதுகாப்பாக வைத்தது.அந்த பொந்தில் வசித்து வந்த ஒரு பாம்பு கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த குருவியை விழுங்கிவிட்டது; குருவியை காப்பாற்ற நினைத்து அந்த குருவிக்கே எமனாகி விட்டோமே என்று கருடபகவான் குருவி இறந்த துக்கத்தில் மீண்டும் எமதர்மராஜன் இருந்த இடத்திற்கே திரும்பி வந்தது.

அப்போது எமதர்மரான கருடபகவானை கூர்ந்து கவனித்தார்.அதற்கு கருடபகவான், “நான் பகவான் விஷ்ணுவை முதுகில் சுமந்து செல்வதால் என்னை உம்மால் ஒன்றும் செய்ய முடியாது” என்று கோபத்தில் கத்தியது.

இதைக் கேட்ட எமதர்மராஜன் கருடபகவானிடம், “நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டீர்கள்; நான் அந்தக் குருவியை உற்று நோக்கக் காரணம், அந்த குருவி சில நொடிகளில் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் வசிக்கும் ஒரு பாம்பின் வாயால் இறக்க நேரிடும் என எழுதப்பட்டிருந்தது; அது எப்படி நிகழப் போகிறது? என்பதை யோசித்துக் கொண்டு இருந்தேன்;”

மரணம் எப்போது நிகழுமோ அப்போது நிகழ்ந்தே தீரும்.

அதனால் வாழ்வில் நடக்கப் போவதை குறித்துக் கவலை பட்டுக்கொண்டே இருக்காமல், செய்வதை திறம்பட  சிறப்பாய் செய்வோம்.

படித்ததில் பிடித்தது. மின்னஞ்சலில் வந்தது!

அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

31.5.16

மனத்தெளிவு எப்போது பிறக்கும்?

மனத்தெளிவு எப்போது பிறக்கும்?

ஒரு உண்மையான.... இறைபக்திக்கு எது முக்கியம்?

முனிவர் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தம் வேட்டியில் இருந்த கிழிசலை தைத்துக்கொண்டு இருந்தார். அவர் ஒரு சிவபக்தர். அப்போது சிவனும், பார்வதியும் வான்வெளியில் வலம் வந்து கொண்டிருந்தனர். மரத்தடியில் ஒளிப்பிழம்பாய் அமர்ந்திருந்த முனிவரை கண்டதும் உளம் நெகிழ்ந்த அம்மை, ஐயனைப் பார்த்து மரத்தடியில் பார்த்தீர்களா? என்றாள்.

“பார்த்தேன்” என்றார் பரமன்.

பார்த்தபிறகு சும்மா எப்படி போவது ஏதேனும் வரம் கொடுத்துவிட்டுப் போகலாம் வாருங்கள் என்றாள் அம்மை. அட,அவன் அந்த நிலையெல்லாம் கடந்தவன். இப்போது அவனிடம் செல்வது வீண்வேலை, வேண்டாம் வா! நம் வழியே போகலாம் என சொல்ல, ஆனால் அம்மை பார்வதி விடவில்லை.ஐயனை வற்புறுத்தி மரத்தடிக்கு அழைத்து வந்துவிட்டாள்.

வணக்கம், முனிவரே! என வணங்கினர் அம்மையும்  அப்பனும்.
முனிவர் நிமிர்ந்து பார்த்தார். அடடே எம்பெருமானும் பெருமாட்டியுமா வரணும் வரணும்… என்று வரவேற்றவர் தாகத்திற்கு மோர் கொடுத்து உபசரித்தார். அவ்வளவுதான்.
மீண்டும் கிழிசலைத் தைக்கத் தொடங்கிவிட்டார்.

சற்றுநேரம் பொறுமையாகக் காத்திருந்துவிட்டு, சரி, நாங்கள்
விடை பெறுகிறோம் என்றனர் அம்மையும் அப்பனும். மகிழ்ச்சியாய்ப் போய் வாருங்கள்

'வணக்கம்' என்று சொல்லி விட்டு மீண்டும் கிழிசலைத்  தைக்க முனைந்தார் முனிவர்.

அம்மை குறிப்புக் காட்ட, அப்பன் பணிவாய்க் கேட்டார். முனிவரே நாங்கள் ஒருவருக்குக் காட்சி கொடுத்து விட்டால் வரம் கொடுக்காமல் போவதில்லை. எனவே தாங்கள் ஏதாவது வரம் கேளுங்கள். கொடுக்கிறோம் என சொல்ல,முனிவர் சிரித்தார். வரமா! உங்கள்  தரிசனமே எனக்குப் போதும் பரமா! வரம் எதுவும் வேண்டாம். உங்கள் வழியைத் தொடருங்கள் என்று சொல்லி விட்டுப் பணியில் ஆழ்ந்தார்.

அப்பனும் அம்மையும் விடவில்லை. ஏதாவது வரம் கொடுக்காமல் செல்ல மாட்டோம் என்று பிடிவாதமாய் நிற்க, முனிவர் வேறு வழியின்றி ஒரு வரம்  கேட்டார். நான் தைக்கும்போது இந்த ஊசிக்குப் பின்னாலேயே நூல் போக வேண்டும் அது போதும் என்றார்.

இதைக்கேட்ட அம்மையும் அப்பனும் திகைத்தனர். ஏற்கனவே ஊசிக்குப் பின்னால் தான் நூல் போகிறதே. இதற்கு நாங்கள் ஏன் வரம் தர வேண்டும்? என்று அம்மை பணிவாய் கேட்கிறார்.

அதைத்தான் நானும் கேட்கிறேன். நான் ஒழுங்கு தவறாமல் நடந்துகொண்டு வந்தால் வரவேண்டிய பலன் நியதிப்படி தானாகப் பின்னால்  வருமே. இடையில் நீங்கள் எதற்கு எனக்கு வரம் தர வேண்டும்? என்று கேட்டார் முனிவர்.

முனிவரின் விளக்கத்தைக் கேட்ட அம்மையும், அப்பனும் சிரித்துவிட்டு சென்றனர்.

'இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சியவர்க்கு.

நீதி!

தூய்மையான இறை நம்பிக்கை கொண்டவர்களுக்கு நாம் சரியாக நடந்துகொண்டால் நமக்குரிய விளைவும் சரியாக இருக்கும் என்ற மனத்தெளிவு இக்கதையிலே நமக்கு பிறக்கிறது.     🔯🙏🙏
-------------------------------------------------
2

காந்தி சொர்க்கதில் கடவுளிடம் போய் நான் பூமியில் விட்டு வந்த 3 குரங்கும் என்ன ஆச்சு எனக் கேட்டார்.

கடவுள்  சொன்னார்:

கண்ணை பொத்தியபடி இருந்த குரங்கு நீதியாகி விட்டது,
காதை பொத்தியபடி இருந்த குரங்கு அரசாங்கமாகி விட்டது.
வாயை பொத்தியபடி இருந்த குரங்கு மக்களாகி விட்டது🙊🙉🙈

======================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.5.16

வறுமையை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்?

வறுமையை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்?

வறுமையை ஒழிக்க என்ன செய்யலாம் என்று சூப்பராக ஒருவர் அறிவுரை சொல்கிறார். காணொளியாக உள்ளது. பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்

கார் திருடர்கள் எப்படி லாகவமாகச் செயல்படுகிறார்கள் என்பது ஒரு காணொளி வடிவில் உள்ளது. அதையும் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

ஆக மொத்தம் 2 காணொளிகளை இன்று உங்களுக்காக வலை ஏற்றியுள்ளேன்!

அன்புடன்
வாத்தியார்

1
2


Our sincere thanks to the person who uploaded these clippings in the net
=========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.5.16

செவ்வாழைப்பழமும், குழந்தைப் பேறும்!


செவ்வாழைப்பழமும், குழந்தைப் பேறும்!

திருமணமாகி நீண்ட நாட்களாக உங்களுக்கு குழந்தை இல்லையா ?

திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர்.அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும்.

குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும்.

தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

எளிமையுடன் எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப்பழம்.

வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன.

பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.

செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது.

இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது.

இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது.

இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது.

செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது.

இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.

கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும்.

கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.

மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்.பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும்.

பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.
==============================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.5.16

வீட்டைச் சுற்றி என்ன இருக்க வேண்டும்?


வீட்டைச் சுற்றி என்ன இருக்க வேண்டும்?

ஒவ்வொரு வீட்டை சுற்றியும் பத்து வகை மரங்கள் இருக்க வேண்டும்.

வீட்டுக்கு முன் ஒரு வேப்பமரம் இருக்க வேண்டும். பக்கத்தில் ஒரு முருங்கை மரம் இருக்க வேண்டும். ஒரு பப்பாளி மரம் இருக்க வேண்டும்.

குளிக்கும் தண்ணீர் போகும் இடத்தில் வாழை மரம் இருக்க வேண்டும்.

பாத்திரங்கள் கழுவும் இடத்தில் தென்னை மரம் இருக்க வேண்டும். ஒரு எலுமிச்சை மரம் இருக்க வேண்டும். அதன் நிழலில் ஒரு கறுவேப்பிலை செடி இருக்க வேண்டும். ஒரு நெல்லிச் செடி இருக்க வேண்டும்.

வேலியில் நான்கு இடத்தில் சீதா மரம் இருக்க வேண்டும். இடம் இருந்தால் ஒரு பலா மரம் இருக்க வேண்டும். ஒரு மா மரம் வைக்க வேண்டும்.

இப்படி இருந்தால் ஒருவர்கூட பசியுடன் தூங்க மாட்டார்கள்
----------------------------------------------------------------
சொந்த வீட்டுடன் பின்பக்கம், முன்பக்கம் காலி இடம் இருப்பவர்களுக்குத்தான் இது சாத்தியம். மற்றவர்களுக்குக் குறிப்பாக நகரங்களில் ஒண்டிக்குடித்தன வீடுகளிலிலும், அடுக்குமாடிக் குடியிருப்புக்களில் இருப்பவர்களுக்கும் இது சாத்தியமில்லை!

அன்புடன்,
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.5.16

கடவுளைக்காண தேவைப்படும் கண்ணாடி!


தொடர்ந்து இரண்டாவது முறையாக அரியணையில் ஏறியிருக்கும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்களை நமது வகுப்பறையின் சார்பாக வாழ்த்துகிறேன்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
💃1st time in India....
💃In north- Mehbooba
💃South- Jayalalita
💃East- Mamta 
💃West- Anandiben

(All four directions... Women CM....Without Husband...)

😱In centre Narendra Modi without wife.😀😀
-====================================================

கடவுளைக்காண தேவைப்படும் கண்ணாடி!

சொற்பொழிவிலிருந்து...... கடவுளைக் காண தேவைப்படும் கண்ணாடி!
.
ஒரு பெரியவர் அரசமரத்தின் கீழ் அமர்ந்து கடவுளைத் தியானித்துக் கொண்டிருந்தார். அங்கே ஒரு மாணவன் சென்றான். அம்மாணவன் மிடுக்கும்,

சொல் துடுக்கும் உடையவனாகக் காட்சியளித்தான். “ஐயா! பெரியவரே! ஏன் உட்கார்ந்து கொண்டே தூங்குகின்றீர்? சுகமாகப் படுத்து உறங்கும்”

என்றான்.
.
“தம்பி! நான் உறங்கவில்லை. கடவுளைத் தியானிக்கிறேன்.”
.
“ஓ! கடவுள் என்று ஒன்று உண்டா? ஐயா! நான் எம். ஏ. படித்தவன். நான் மூடன் அல்லன். நூலறிவு படைத்தவன். கடவுள், கடவுள் என்று கூறுவது

மூடத்தனம். கடவுளை நீர் கண்ணால் கண்டிருக்கின்றீரா?”
.
“தம்பி, காண முயலுகின்றேன்.”
.
“கடவுளைக் கையால் தீண்டியிருக்கின்றீரா?”
.
“இல்லை.”
.
“கடவுள் மீது வீசும் மணத்தை மூக்கால் முகர்ந்திருக்கின்றீரா?”
.
“இல்லை.”
.
“ஐயா! என்ன இது மூட நம்பிக்கை? உம்மை அறிவற்றவர் என்று கூறுவதில் என்ன தடை? கடவுளைக் கண்ணால் கண்டீரில்லை, மூக்கால்

முகர்ந்தீரில்லை; கையால் தொட்டீரில்லை; காதால் கேட்டீரில்லை; இல்லாதவொன்றை இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு அரிய நேரத்தை

வீணடிக்கிறீரே? உம்மைக் கண்டு நான் பரிதாபப் படுகிறேன். உமக்கு வயது முதிர்ந்தும் மதிநலம் முதிரவில்லையே? பாவம்! உம்போன்றவர்களைக்

காட்சிச் சாலையில் வைக்க வேண்டும். கடவுள் என்றீரே? அது கறுப்பா, சிவப்பா?”
.
“அது சரி, தம்பி! உன் சட்டைப் பையில் என்ன இருக்கின்றது?”
.
“தேன் பாட்டில்.”
.
“தேன் இனிக்குமா, கசக்குமா?’
.
“என்ன ஐயா! இதுகூட உமக்குத் தெரியாதா? சுத்த மக்குப் பிண்டமாக இருக்கின்றீர். உலகமெல்லாம் உணர்ந்த தேனை இனிக்குமா கசக்குமா என்று

வினாவுகின்றீரே, உணவுப் பொருள்களிலேயே தேன் தலைமை பூண்டது. இது அருந்தேன். இதை அருந்தேன் என்று எவன் கூறுவான்? அதற்காக

இருந்தேன் என்பான். தேன் தித்திக்கும். இதை எத்திக்கும் ஒப்புக் கொள்ளும்.”
.
“தம்பி! தித்திக்கும் என்றனையே, அந்த இனிப்பு கறுப்பா, சிவப்பா! சற்று விளக்கமாக விளம்பு, நீ நல்ல அறிஞன்.”
.
மாணவன் திகைத்தான். தித்திப்பு என்ற ஒன்று கறுப்பா சிவப்பா என்றால், இந்தக் கேள்விக்கு என்ன விடை கூறுவது என்று திக்கித் திணறினான்.
.
“ஐயா! தேனின் இனிமையை எப்படி இயம்புவது? இதைக் கண்டவனுக்குத் தெரியாது! உண்டவனே உணர்வான்.”
.
பெரியவர் புன்முறுவல் பூத்தார். “அப்பா! இந்தப் பௌதிகப் பொருளாக, ஜடவஸ்துவாகவுள்ள தேனின் இனிமையையே உரைக்க முடியாது,

உண்டவனே உணர்வான் என்கின்றனையே? ஞானப் பொருளாக, அநுபவவஸ்துவாக விளங்கும் இறைவனை அநுபவத்தால் தான் உணர்தல் வேண்டும்.
.
“தேனுக்குள் இன்பம் கறுப்போ? சிவப்போ?
 வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!
 தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல்
 ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!”
என்கிறார் பரம ஞானியாகிய திருமூலர்.
.
மாணவன் வாய் சிறிது அடங்கியது. “பெரியவரே! எனக்குப் பசிக்கிறது. சாப்பிட்டு விட்டு வந்து உம்முடன் உரையாடுவேன்.”
.
“தம்பி! சற்று நில். பசி என்றனையே, அதைக் கண்ணால் கண்டிருக்கின்றனையா?”

 “இல்லை.”
.
“என்ன தம்பி! உன்னை அறிஞன் என்று நீயே கூறிக் கொள்கிறாய். பசியைக் கண்ணால் கண்டாயில்லை, மூக்கால் முகர்ந்தாயில்லை; கையால்

தொட்டாயில்லை; அப்படியிருக்க அதை எப்படி நம்புவது? பசி பசி என்று உரைத்து உலகத்தை ஏமாற்றுகின்றாய். பசி என்று ஒன்று கிடையவே

கிடையாது. இது சுத்தப்பொய். பசி என்று ஒன்று இருக்கிறது என்று கூறுபவன் முட்டாள். உனக்கு இப்போது புரிகின்றதா? பசி என்ற ஒன்று அநுபவப்

பொருள். அது கண்ணால் காணக் கூடியதன்று. அதுபோல்தான் கடவுளும் அநுபவப் பொருள். அதைத் தவஞ் செய்து மெய்யுணர்வினால் உணர்தல்

வேண்டும்.”
.
மாணவன் உடம்பு வேர்த்தது, தலை சுற்றியது. பெரியவர் கூறுவதில் உண்மை உள்ளது என்பதை உணர்ந்தான்.
.
“என் அறியாமையை உணர்கின்றேன். இருந்தாலும் ஒரு சந்தேகம், கடவுளைக் கண்ணால் காண முடியுமா?”
.
“உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் ஒரு கேள்வி, தம்பி! இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா?”
.
“என்ன ஐயா! என்னைச் சுத்த மடையன் என்றா கருதுகின்றீர்? எனக்கென்ன கண் இல்லையா? இந்த உடம்பை எத்தனையோ காலமாகப் பார்த்து

வருகிறேன்.”
.
“தம்பி! நான் உன்னை மூடன் என்று ஒரு போதும் கருதமாட்டேன். நீ அறிஞன்தான். ஆனால் அறிவில் விளக்கந்தான் இல்லை. கண் இருந்தால்

மட்டும் போதாது. கண்ணில் ஒளியிருக்க வேண்டும். காது இருந்தால் மட்டும் போதுமா? காது ஒலி கேட்பதாக அமைய வேண்டும். அறிவு இருந்தால்

மட்டும் போதாது. அதில் நுட்பமும் திட்பமும் அமைந்திருத்தல் வேண்டும். உடம்பை நீ பார்க்கின்றாய். இந்த உடம்பு முழுவதும் உனக்குத்

தெரிகின்றதா?”
.
“ஆம். நன்றாகத் தெரிகின்றது.”
.
“அப்பா! அவசரப்படாதே. எல்லாம் தெரிகின்றதா?”
.
“என்ன ஐயா! தெரிகின்றது, தெரிகின்றது என்று எத்தனை முறை கூறுவது? எல்லாந்தான் தெரிகின்றது?”
.
“அப்பா! எல்லா அங்கங்களும் தெரிகின்றனவா?”
.
“ஆம்! தெரிகின்றன.”
.
“முழுவதும் தெரிகின்றதா?”
.
அவன் சற்று எரிச்சலுடன் உரத்த குரலில் “முழுவதும் தெரிகின்றது” என்றான். “தம்பி! உடம்பின் பின்புறம் தெரிகின்றதா?”
.
மாணவன் விழித்தான்.
.
“ஐயா! பின்புறம் தெரியவில்லை.”
.
“என்ன தம்பி! முதலில் தெரிகின்றது, தெரிகின்றது என்று பன்முறை பகர்ந்தாய். பின்னே பின்புறம் தெரியவில்லை என்கின்றாய். நல்லது, முன்புறம்

முழுவதுமாவது தெரிகின்றதா?” “முன்புறம் முழுவதும் தெரிகின்றதே.”
.
“அப்பா! அவசரங்கூடாது. முன்புறம் எல்லாப் பகுதிகளையும் காண்கின்றனையோ? நிதானித்துக் கூறு….”
.
“எல்லாப் பகுதிகளையும் காண்கின்றேன். எல்லாம் தெரிகின்றது.”
.
“தம்பி! இன்னும் ஒருமுறை சொல். எல்லாம் தெரிகின்றதா? நன்கு சிந்தனை செய்து சொல்.”
.
“ஆம்! நன்றாகச் சிந்தித்தே சொல்கின்றேன். முன்புறம் எல்லாம் தெரிகின்றது.”
.
“தம்பி! முன்புறத்தின் முக்கியமான முகம் தெரிகின்றா?
.
மாணவன் துணுக்குற்றான். நெருப்பை மிதித்தவன் போல் துள்ளினான். தன் அறியாமையை உன்னி உன்னி வருந்தலானான்.
.
தணிந்த குரலில் பணிந்த உடம்புடன், “ஐயனே! முகம் தெரியவில்லை!” என்றான்.
.
“குழந்தாய்! இந்த ஊன உடம்பில் பின்புறம் முழுதும் தெரியவில்லை. முகம் தெரியவில்லை. நீ இந்த உடம்பில் சிறிதுதான் கண்டனை. கண்டேன்,

கண்டேன் என்று பிதற்றுகின்றாய். அன்பனே! இந்த உடம்பு முழுவதும் தெரிய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும், சொல்.”
.
“ஐயனே! இருநிலைக் கண்ணாடிகளின் இடையே நின்றால் உடம்பு இருபுறங்களும் தெரியும்.”
.
“தம்பி! இந்த ஊன் உடம்பை முழுவதும் காண்பதற்கு இரு நிலைக் கண்ணாடிகள் தேவைப்படுவதுபோல், ஞானமே வடிவாய் உள்ள கடவுளைக்

காண்பதற்கும் இரு கண்ணாடிகள் வேண்டும்.”
.
“ஐயனே! அந்தக் கண்ணாடிகள் எந்தக் கடையில் விற்கின்றன? சொல்லுங்கள். இப்போதே வாங்கி வருகின்றேன். பெல்ஜியத்தில் செய்த

கண்ணாடியா?”
.
“அப்பனே! அவை பெல்ஜியத்தில் செய்ததன்று. வேதாகமத்தில் விளைந்தவை. ஞானமூர்த்தியைக் காண இருநிலைக் கண்ணாடிகள் வேண்டும். ஒரு

கண்ணாடி திருவருள், மற்றொன்று குருவருள். இந்தத் திருவருள், குருவருள் என்ற இரு கண்ணாடிகளின் துணையால் ஞானமே வடிவான இறைவனைக்

காணலாம். “தம்பி! திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும் அதனை குருவருள் மூலமே பெற வேண்டும். திருவருளும் குருவருளும் இறைவனைக் காண

இன்றியமையாதவை.”
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.5.16

அங்கே செல்வதற்கான மறைமுகமான விலைகள்!


அங்கே செல்வதற்கான மறைமுகமான விலைகள்!

அமெரிக்கா செல்வதற்கு கொடுக்கும் மறைமுகமான விலைகள் சில உண்டு. அவற்றைப் புரிந்துகொண்டு செல்லுங்கள். அவை இவை:

1. திரும்ப வரமாட்டீர்கள்… இது கட்டாயம், நூறு சதவிகிதம் நிகழும் ஒரு விளைவு. போய்விட்டு படிப்பு முடித்துவிட்டு உடனே வருகிறேன் என்று சொல்வதெல்லாம் பொய். அந்த நாடு உங்கள் மேல் படரும் நாடு. ஒரு ஆக்டோபஸ், அல்லது மலைப்பாம்பின் இறுக்கம் போல அது உங்களை விடாது. அதன் கிரெடிட் கார்டு சமூகத்தில் உங்களை மூன்றாவது தலைமுறை வரை கடன் வாங்க வைத்துவிடுவார்கள். மீளவே முடியாத கடன் சொர்க்கம் அது. அதைத் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்.

2. அங்கே போனபின் உறவு, பாசம் இவற்றுக்கெல்லாம் புதிய அர்த்தங்கள் தோன்றும். எதற்காக அப்பா அம்மாவைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கடமையைச் செய்தார்கள். வருஷம் ஒரு முறை ஃபாதர்ஸ் டே, மதர்ஸ் டே கார்டு அனுப்பினால் போதுமே… அல்லது அவ்வப்போது நூறு டாலர், இருநூறு டாலர்… - இப்படித் தோன்றும் இந்த எண்ணத்தையும் தவிர்க்க முடியாது. குறிப்பாக, பிசுநாரித்தனம் அங்கு கொஞ்சம் அதிகமாகும்.

3. அங்கே போய் நிறைய சம்பாதிக்கத் தொடங்கியதும் இந்திய விஷயங்கள் மேல் ஒரு ஏளனம் தோன்றும். என்னப்பா உங்க ஊர்ல சரியா ஒரு டாய்லெட் கட்டமாட்டாங்களா. வாட் ட்ராஃபிக்! ஐம் கெட்டிங் ம்யாட். ரோடுல ஒண்ணுக்கு போறவரைக்கும் உங்க தேசம் உருப்படாது… (கவனிக்கவும் உங்க ஊர். உங்க தேசம்)

4. தமிழ் பேசும் வழக்கத்தையும் மெல்ல இழக்க வேண்டியிருக்கும். நாங்கள் தமிழில் பேசினால் நீங்கள் இங்கிலீஷில் பதில் சொல்வீர்கள். நாளடைவில் தமிழ் படிக்கவே மறந்து போய்விட்டது என்று புளுகுவீர்கள்.

இந்தப் பக்கவிளைவுகள் எல்லாம் பரவாயில்லை என்றால் தாராளமாக வெளிநாடு செல்லுங்கள்.

அண்மையில் நான் ஹாசன் சென்றிருந்தேன். கர்நாடக
மாநிலத்தின் மத்தியில் உள்ள சிறிய டவுன். அங்கே இன்சாட்
2-இ செயற்கைக்கோளின் கட்டுப்பாட்டுக் கேந்திரம் உள்ளது. பல இளம் இன்ஜினீயர்களைச் சந்தித்தேன்.

24 மணி நேரமும் இந்தியாவின் செயற்கைக்கோளை திசை பிசகாமல் கட்டுப்படுத்தும் ஷிஃப்ட் வேலை பார்க்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கேட்டேன். அமெரிக்கா போயிருக்கலாமே…அவர், போயிருக்கலாம். அட்மிஷன் கூட கிடைத்தது, ஸ்காலர்ஷிப்புடன் என்றார்.

ஏன் போகலை?

எல்லாரும் போய்ட்டா எப்படி? ஒன்றிரண்டு பேர் தங்கி நாட்டுக்கு சேவை செய்ய வேண்டாமா? என்றார்.

கார்கிலிலிருந்து துவங்கி நம் பிற்பட்ட கிராமங்களில் வயற்புறங்கள் வரை பணிபுரியும் இளைஞர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மேல்தான் எனக்கு மரியாதை. என்னைக் கேட்டால் இங்கேயே இருந்துகொண்டு எல்லா அசௌகரியங்களுக்கு மத்தியிலும் எதாவது சாதிக்கும் இளைஞர்கள் இந்நாட்டின் கண்கள்… நீங்களோ, நீங்கள் அனுப்பப்போகும் டாலரோ அல்ல! தாராளமாக செல்லுங்கள். சம்பாதியுங்கள். ஆனால், இந்தியாவைக் கேலி செய்யாதீர்கள்.

- எழுத்தாளர் சுஜாதா
--------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.5.16

தாமதத்திற்கு என்ன காரணம்? தலைவர் சொன்ன காரணம்!


தாமதத்திற்கு என்ன காரணம்? தலைவர் சொன்ன காரணம்

பெருந்தலைவர் காமராஜர், முதல்வராக இருந்த போது,  சென்னை தாம்பரம் குடிசைவாசிகளுக்கு  பட்டா வேண்டும் என்று ஜீவா போராடினார்.

அப்போது,  தாம்பரத்தில் ஓர் ஆரம்பப்பள்ளியை திறந்து வைக்கச் சென்றார் காமராஜர்.போகும் வழியில் தான் ஜீவாவின் வீடு இருந்தது.

அந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர் ஜீவா என்பதால், அவரையும் அழைத்துச் செல்வது தான் சரியாக இருக்கும் என்று நினைத்து,
காரை ஜீவாவின் வீட்டுக்கு விடச் சொன்னார்.

ஒழுகும் கூரை வீடு ஒன்றில் குடியிருந்தார் ஜீவா.

திடீரென தன்னுடைய வீட்டுக்கு காமராஜர் வந்ததைக் கண்டு ஆச்சர்யப்பட்டு "என்ன காமராஜ்" என்று கேட்டார்

" ஜீவா."என்ன நீங்க இந்த வீட்டுல இருக்கீங்க..?" என்று கேட்டு  ஆதங்கப்பட்டார் காமராஜர்
.
உடனே ஜீவா,"நான் மட்டுமா..? இங்கே இருக்கிற  எல்லோரையும் போலத்தான் நானும் இருக்கேன்”, என்று சர்வ சாதாரணமாக சொன்னார்.

காமராஜரை, உட்கார வைக்க,ஒரு நாற்காலி கூட இல்லாததால், இருவரும், நின்று கொண்டே பேசினார்கள்.

"நீ அடிக்கல் நாட்டிய,  பள்ளிக் கூடத்தைத் திறக்கணும்.
அதான் உன்னையும் கூப்பிட்டுப் போக வந்தேன்" என்றார் காமராஜர்.

"காமராஜ், நீ முதலமைச்சர், நீ திறந்தா போதும்" என்று ஜீவா மறுக்க,
"அட... ஆரம்பிச்ச  நீ இல்லாம, நான் எப்படிப் போக, கிளம்பு போகலாம்" என்று அழைத்தார்,  காமராஜர்,

"அப்படின்னா, நீ முன்னால போ. நான் அரை மணி நேரத்துல வந்துடுறேன் " என்று அனுப்பி வைத்தார்.

"கண்டிப்பாக வரணும்" என்றார் காமராஜர்.

விழாவுக்கு, அரை மணிக்கு மேல் தாமதமாகவே வந்தார் ஜீவா.

"என்ன ஜீவா, இப்படி லேட் பண்ணிட்டியே...? " என்று காமராஜர் உரிமையுடன் கடிந்து கொண்டார்.

உடனே ஜீவா, "நல்ல வேட்டி ஒண்ணுதாம்பா இருக்கு. அதை உடனே துவைச்சு, காய வைச்சு, கட்டிட்டு வர்றேன். அதான் தாமதம்.
தப்பா நினைச்சுக்காதே"... என்றார்.

உடனே கண் கலங்கி விட்டார் காமராஜர்.

விழா நல்ல படியாக முடிந்தது. ஆனால் ஜீவாவின் வறுமை,  காமராஜரை மிகவும் வாட்டியது. அதனால் ஜீவாவுக்கு தெரியாமல், அவரது கம்யூனிஸ்ட் நண்பர்களை அழைத்துப் பேசினார்.
"ஜீவாவுக்கு வீடு கொடுத்தா போக மாட்டான்.காரு கொடுத்தாலும் வாங்க மாட்டான். ஆனா,அவனைப் போல தியாகிகள் எல்லாம்
இத்தனை கஷ்டப் படக்கூடாது என்ன செய்யலாம்"....? என்றார்.

கூட்டத்தில் இருந்த ஒருவர்,"ஜீவாவின் மனைவி படித்தவர். அதனால்
அவருக்கு ஏதாவது பள்ளியில் அரசு வேலை கொடுத்தா, அந்த குடும்பம் நிம்மதியாக இருக்கும்" என்றார்.

உடனே காமராஜர், "ரொம்ப நல்ல யோசனை ஆனா,நான் கொடுத்தா,  அவன் பொண்டாட்டியை வேலை செய்ய விட
மாட்டான்.அதனால நீங்களா ஜீவா மனைவியிடம் பேசி,
"வீட்டுக்குப் பக்கத்துல பள்ளிக்கூடத்துல ஒரு வேலை காலியாக இருக்குன்னு சொல்லி மனு போடச் சொல்லுங்க. உடனே, நான் வேலை போட்டுத் தர்றேன்...ஆனா,இந்த விஷயம் வேறு யாருக்கும் தெரியக்கூடாது அவன் முரடன்,உடனே வேலையை விட வைச்சுடுவான் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

அதன்படியே ஜீவாவுக்குத் தெரியாமல், அவருடைய மனைவிக்கு அரசு வேலை கொடுத்தார் காமராஜர்.

அதற்குப் பின்னரே ஜீவாவின் வாழ்க்கையில் வறுமை ஒழிந்தது.

காமராஜர், ஜீவா இருவருடைய நட்பும் வார்த்தைகளால்
வடிக்க முடியாதது.

நோய் வாய்ப்பட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டார் ஜீவா.

தனக்கு முடிவு வந்து விட்டதைத் தெரிந்து கொண்டவர், கடைசியாக உதிர்த்த வார்த்தைகள்... காமராஜருக்கு போன் பண்ணுங்கள்"...
என்பது தான்.

இனி எங்கே காணமுடியம் இது போன்ற தலைவர்களை?
அடித்தட்டு மக்களோடு மக்களாக, வறுமையை உணர்ந்த,
பகிர்ந்த தலைவர்கள், கர்மவீரர் காமராஜர்,ஜீவா, கக்கன் போன்ற தலைவர்கள்.

படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
==============================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!