
சொர்க்கம் மதுவிலே' என்று கவியரசர் பாடலைச் சொல்ல வருகிறேன்
என்று நினைப்பவர்கள் பதிவை விட்டு விலகவும்.
நமீதாவைப் பற்றிச் சொல்ல வருகிறேன் என்பவர்களும் ஜூட் விடவும்
இது வேறு ஒரு சொர்க்கத்தைப் பற்றிய கட்டுரை!
=================================================
"அப்பா....."
"என்னடா செல்லம்?"
"கடவுள் எங்கே இருக்கிறார் அப்பா?"
"ஏனடி செல்லம், கடவுளைத் தேடுகிறாய்?"
"கடவுளை ஒரு தடவையாவது பார்க்க வேண்டுமென்று ஆசையாய் இருக்கிறது அப்பா!"
"நீ நன்றாகப் படிக்க வேண்டும். டீச்சர் கொடுக்கும் ஹோம் ஒர்க்கையெல்லாம்
ஒழுங்காகச் செய்ய வேண்டும். அப்பா, அம்மா பேச்சைத் தட்டக்கூடாது.
காலையிலும் மாலையிலும் தவறாமல் பிரேயர் செய்ய வேண்டும்.
இதையெல்லாம் செய்தால் நீ நல்ல பெண்ணாகிவிடுவாய். நல்ல பெண்ணாகி
விட்டால் கடவுளே உன்னைப் பார்க்க வருவார்"
"சரி, இப்போது கடவுள் எங்கே இருக்கிறார்?"
"கடவுள் சொர்க்கத்தில் இருக்கிறார்!"
"சொர்க்கம் எங்கே இருக்கிறது?"
அப்பா வானத்தை நோக்கி கைகளை உயர்த்திக் காட்டினார். குழந்தை
விடவில்லை. தொடர்ந்து கேட்டது:
"சொர்க்கத்திற்கு எப்படிப் போக வேண்டும்? ஏரோப்பிளேனில் போக வேண்டுமா?"
"நாமாகப் போக முடியாது. கடவுள் அழைப்பு அனுப்புவார் அப்போதுதான்
போக முடியும்"
அப்பா ஒருவழியாகச் சமாளித்தார்.
குழந்தைவிடவில்லை. நச்சரிப்புத் தொடர்ந்தது.
"சொர்க்கத்தை யாரப்பா உருவாக்கினார்கள்? (who created heaven?)"
"கடவுள்தான் உருவாக்கினார்"
"சொர்க்கத்தை உருவாக்கும் முன்பு கடவுள் எங்கே அப்பா இருந்தார்?"
அப்பாவிற்கு அதிர்ச்சியாகிவிட்டது. அதோடு கோபமும் பொத்துக் கொண்டு
வந்துவிட்டது.
"அதையெல்லாம் பெரியவளானால் நீயே தெரிந்து கொள்வாய்! இப்போது
போய் விளையாடு, போ! என்று அனுப்பிவைத்துவிட்டார்.
ஐந்து நிமிடம் அமைதியாய் யோசித்துக் கொண்டிருந்த குழந்தை திடீரென்று
உணர்வு மேலிடப் பேச ஆரம்பித்தது.
"அப்பா நான் கண்டு பிடித்துவிட்டேன். நரகம் இருப்பதாகச் சொல்லுவீர்கள்
அல்லவா? சொர்க்கத்தை உருவாக்கும் முன்பு கடவுள் அங்கேதான்
இருந்திருக்க வேண்டும்."
அப்பா அசடு வழிய, வேறு வழி தெரியாமல் பதில் சொன்னார்.
"ஆமாம், அங்கேதான் இருந்திருப்பார்"
"நரகத்தை உருவாக்கியவர் யாரப்பா?"
"அதையும் கடவுள்தான் உருவாக்கினார்!"
"நரகத்தை உருவாக்கியது தவறில்லையா? ஏனப்பா கடவுள்கூட தவறுகளைச்
செய்வாரா?"
"சில சமயம் செய்வார்" என்று சொல்லித் தன் குழந்தையை அனுப்பிவைத்த
தந்தை தனக்குள் முனுமுனுத்துக் கொண்டார்
"கடவுள் செய்த முதல் தவறு உலகத்தைப் படைத்தது. இரண்டாவது தவறு
பெண்ணைப்படைத்தது. மூன்றாவது தவறு பெண்ணைக் கண்டு ஆணைச்
சொக்கவைத்து, அவளை மணந்து கொள்ள வைத்தது. நான்காவது தவறு
அவள் மூலம் குழந்தைகளைப் பெற்று பந்தம் பாசம் என்று மனிதனை
ஒரு வலைக்குள் பிடித்துப்போட்டது."
=======================================================
அதில் உண்மை இல்லை.
மனிதன் தானாகக் கற்பனை செய்து கொண்டவை அவைகள்.
சொர்க்கம் நரகம் என்று எந்தப் புண்ணாக்கும் இல்லை.
கடவுள் இருப்பது மட்டும் உண்மை!
அவரைத் தனிமைப் படுத்தி எந்தவொரு அம்சமாகவும் பார்ப்பது கடினம்
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருப்பவர் அவர்.
earth, space, time, light, என்று எல்லா வடிவமாகவும் இருப்பவர் அவர்.
அதைத்தான் அருணகிரியார் இப்படிச் சொன்னார்:
"உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே !"
(உருவாய் என்றால் உருவமுள்ளவனாகவும், அருவாய் என்றால் உருவமற்ற
நிலையை உடையவனாகவும் என்று பொருள்!)
===============================================
என்னை எழுதவைப்பவரும் அவர்தான்;
உங்களைப் படிக்கவைப்பவரும் அவர்தான்:-))))
இது உண்மையா?
இல்லை! இதுவும் தவறு.
நம் செயல்களுக்கு அவர் பொறுப்பில்லை!
அதுபோல நமது பாவ, புண்ணியங்களுக்கும் அவர் பொறுப்பில்லை!
நல்ல செயல்களைச் செய்து பிறவிக்கடனைக் கழியுங்கள்
இல்லையென்றால் மீண்டும் மீண்டும் பிறந்து அவதிப்பட நேரிடும்!
வாழ்க வளமுடன்!