
இதற்கு முன் உள்ள பதிவைப் படித்திராதவர்கள், அதைப் படித்து விட்டு
வரவும். அப்போதுதான் இந்தப் பதிவு பிடிபடும். அதாவது விளங்கும்!
ஒருவனைத் தட்டி எடுக்க வேண்டும். ஒருவனுக்குக் கொட்டிக் கொடுக்க
வேண்டும். இரண்டையும் சனி அங்கே செய்ய வேண்டும். அதை
அற்புதமாகச் செய்தார் சனீஷ்வரன் என்று சொன்னேன் இல்லையா?
தேனிக்குச் சென்று வட்டிக் கடைக்காக வீடு பார்க்கும்போதுதான், முத்தப்பன்
மூலம் அதை அவர் ஆரம்பித்துவைத்தார்.
தன் நண்பனிடம் முத்தப்பன் தெளிவாக இப்படிச் சொன்னான்.
"கொள்ளைக்குப் போனாலும் போ, கூட்டுக்குப் போகாதே என்று மாமா
சொல்வார். எந்தக் கூட்டுமே நிலைத்து நிற்காது பகையில் முடியும் என்று
சொல்வார். நாம் இருவரும் கடைசி வரையில் நண்பர்களாகவே இருப்போம்.
நமக்குள் கருத்து வேற்றுமை மற்றும் பகை வரக்கூடாது. அதோடு நான்
சிம்ம லக்கினம். தனியாகத்தான் தொழிலைச் செய்ய வேண்டும் என்றும்
என் மாமா சொல்வார். ஆகவே இருவரும் இதே ஊரிலேயே தொழிலைச்
செய்வோம். ஆனால் தனித்தனியாகச் செய்வோம். நட்பு மற்றும் பாதுகாப்பிற்காக
ஒரே தெருவில் இருந்து கொண்டு அதைச் செய்வோம்"
ஏகப்பன், அதற்கு உடனே சரி என்று சொல்லி விட்டான். அவனுடைய நல்ல
நேரம், பதினொன்றாம் இடத்துச் சனி அவனை அப்படிச் சொல்ல வைத்தது.
என்ன ஆச்சர்யம் பாருங்கள். ஒரே தெருவில் இரண்டு நல்ல வீடுகள்
வாடகைக்குக் கிடைத்தன. இரண்டு வீட்டு அமைப்புக்களுமே வீடு cum கடைக்குச்
சரியாக இருந்தன.
பிறகு நடந்ததெல்லாம் முக்கியமில்லை. ஆகவே சுருங்கச் சொல்கிறேன். ஒரு
நல்ல நாளில் கடையைத் துவங்கினார்கள். சொந்த ஊரிலிருந்து தத்தம் மனைவி
குழந்தைகள் மற்றும் அத்தியாவசியமான சாமான்களுடன் அங்கே வந்து குடியும்
குடித்தனமாகவும் இருக்கத் துவங்கினார்கள். எல்லாம் மகிழ்ச்சிகரமாக இருந்தது.
வெளி வேலைகள், மற்றும் வீட்டு வேலைகளுக்கு என்று ஊரிலிருந்து ஒரு
இளைஞனைப் பிடித்துக் கொண்டு வந்து உடன் வைத்துக் கொண்டான் முத்தப்பன்.
வீட்டிற்குப் பின்புறம் இருந்த அறையில் அவனைத் தங்க வைத்தான். அவன் பெயர்
மாரியப்பன். அவனும் இவன் சொல்கின்ற வேலைகளைச் சலிப்பின்றி செய்தான்
முதலிடு செய்த சொற்ப பணமும் 15 நாட்களிலேயே அடைபட்டது. வங்கியில்
இருந்து மேலும் பணத்தைக் கொண்டு வந்து இறக்கி முத்தப்பன் சுறுசுறுப்பாக
கடையை நடத்தினான். உள்ளூர் ஆசாரி ஒருவர் காலை நேரங்களில் வந்திருந்து
அடகுக்கு வரும் தங்கத்தை உரசிப் பார்த்து, அதன் நம்பகத்தன்மைக்குச் சாண்றிதழ்
வழங்கினார். அதாவது அப்ரைசர் வேலை செய்தார்.
ரோரிங் பிஸினெஸ் என்பார்களே, அப்படி இருவருடைய கடைகளும் பிரபலமாகி
நாளும் வருகிறவர்களின் எண்ணிக்கை, அதிகமாகிக் கொண்டே போனது.
முத்தப்பன் தன்னுடைய இரண்டு லட்ச ரூபாய் பணத்தையும் இறக்கிக் கடையை
நடத்தியதோடு, தன் தந்தையார் உவந்து வந்து கொடுத்த ஒரு லட்ச ரூபாயையும்
அடகில் அடைத்தான்.
அதற்குள் ஊரில் இவன் கடை விபரம் தெரிய, சில பெருசுகள், பத்தாயிரம்,
இருபதாயிரம் என்று இவன் கடைக்கு வைப்பு நிதியாகக் கொடுத்தன. வங்கியை விட
இவன் கடையில் அதிக வட்டி கிடைக்கும் எனும் ஆசையில் அப்படிக் கொடுத்தார்கள்
அந்த வகையில் மேலும் இரண்டு லட்ச ரூபாய் ரொட்டேசனுக்குக் கிடைத்தது.
முத்தப்பன் மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டான். அவனைச் சுற்றி 100 வயலின்களும்
பத்துப் புல்லாங்குழல்களும் எப்போதும் ஒலிக்கத் துவங்கிவிட்டன. பாரதிராஜா
படங்களில் வருவதுபோல அவன் மனதில் எப்போதும் பத்து தேவதைகள்
நடனமாடிக்கொண்டே இருந்தார்கள்.
இரண்டு வருடங்கள் சென்றதே தெரியவில்லை. முத்தப்பன் மகிழ்ச்சிக் கடலில்
தினமும் குளித்துவிட்டு, பணத்தால் தன்னை ஒப்பனை (மேக்கப்) செய்து கொண்டான்.
இதே போல அதே தெருவில் கடை வைத்த ஏகப்பனுக்கும் அசத்தலாக வட்டிக் கடை
நடந்து கொண்டிருந்தது. அவனிடமும் பணம் பல ஆயிரங்களில் புழங்க ஆரம்பித்தது.
இருவரும் மாலை நேரங்களில் ஒரு அரைமணி நேரம் சந்தித்து பேசுவார்கள்.
அவ்வளவுதான். அதற்குமேல் இருவருக்கும் நேரம் இருக்காது. கடை மற்றும் தத்தம்
குடும்பத்திற்கே மொத்த நேரத்தையும் செலவிடும்படியாகிவிட்டது.
இந்த இரண்டு ஆண்டுகளில், நான்கைந்து முறைகள், ஊருக்குச் சென்றவன்
இரண்டு முறைகள் தன் மாமாவைப் போய்ப் பார்த்துவிட்டும் வந்தான்.
மரியாதை நிமித்தம் சென்று பார்த்தவன், ஒவ்வொரு முறையும் ஒரு கூடைப்
பழங்களையும் வாங்கிக் கொண்டுபோய்க் கொடுத்து விட்டும் வந்தான். அதோடு
சும்மா இருக்காமல் தன் ஜாதகத்தில் ஏதோ கோளாறு இருப்பதாகவும், இல்லை
என்றால் ஏன் இப்படி எதிர்பார்ப்பிற்கு எதிராகவே எல்லாம் நடக்கிறது என்று
சொல்லி விட்டும் வந்தான். மாமா பதில் ஒன்றும் சொல்லாமல் வெறுமனே
புன்னகை மட்டும் செய்வார்.
இரண்டு ஆண்டுகளும் ஐந்து மாத காலங்களும் பறந்து சென்று விட்டன. விரையச்
சனி முடிவதற்கு இன்னும் முப்பது நாட்களே பாக்கி இருந்தன.
அந்த நேரத்தில்தான் அது நடந்தது.
முத்தப்பனின் அன்புத் தாயாருக்கு வீட்டில் இடறி விழுந்ததால் மண்டையில் அடிபட்டு
விட்டது. மிகவும் சீரியாக பேச்சு மூச்சு இன்றி இருப்பதாகத் தகவல் வர, முத்தப்பன்
தன் மனைவி, குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு ஊருக்குச் சென்றான்.
உள்ளூர் மருத்துவர் கையை விரித்துவிட்டார். திருச்சியில் ஒரு பெரிய மருத்துவ
மனையின் பெயரைச் சொல்லி அங்கே சென்று சிகிச்சையளியுங்கள் என்று சொல்லி
விட்டார். முத்தப்பன் மேலும் நான்கு தினங்கள் தாயாருடன் தங்கும்படி ஆகிவிட்டது.
-------------------------------------------------------------------------------------------------------------
ஐந்தாம் நாள் காலை தந்தி ஒன்று வந்தது. ஏகப்பன் அனுப்பியிருந்தான். அதில்
இருந்த செய்தி மிகவும் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.
அப்போதெல்லாம் தொலைபேசி வசதி இல்லாததால் செய்திகள் எல்லாம் தந்தி
மூலமாகத்தான் வரும்
தந்தியில் இருந்த செய்தி இதுதான்.
"உன் கடை உடைத்துக் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. உடனே புறப்பட்டு வா"
-------------------------------------------------------------------------------------------------------------
முத்தப்பன் அலறியடித்துக் கொண்டு போனான்.
எல்லாம் முடிந்து போய்விட்டிருந்தது.
அவன் வீட்டிலிருந்த பெட்டகம் உடைக்கப்பெற்று, உள்ளேயிருந்த தங்கம் மற்றும்
ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப் பெற்றிருந்தது.
தங்கத்தின் விலை அப்போது பவுன் அறுபது ரூபாய். அடகில் வந்து பெட்டகத்தில்
வைக்கப்பட்டிருந்த தங்கத்தின் மதிப்பு பத்து லட்ச ருபாய். எத்தனை பவுன் தங்கம்
கொள்ளை போயிருக்கும் என்று நீங்களே கணக்குப் பண்ணிக் கொள்ளுங்கள்
உத்தேசமாக மொத்தம் 133 கிலோ தங்கம். அத்துடன் ரொக்கம் ரூபாய் எழுபதாயிரம்
முத்தப்பன் நொடிந்துபோய் தரையில் உட்கார்ந்து அழுக ஆரம்பித்துவிட்டான்.
அவனைச் சமாதானப் படுத்துவது பெரும் பாடாகிவிட்டது.
காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்கள். அவர்கள் வந்து விசாரணையைத்
துவக்கினார்கள்.
வீட்டில் பாதுகாப்பிற்காக வைக்கப்பெற்றிருந்த முத்தப்பனின் வேலைக்காரன்
மாரியப்பனைக் காணவில்லையாதலால், அவனை முதல் குற்றவாளியாக்கி
விசாரனை துவங்கியது.
முத்தப்பனின் வீட்டிற்கு எதிரில் டீக்கடை வைத்திருந்த இரண்டு கேரள இளைஞர்
களையும் காணவில்லையாதலால், அவர்களையும் இணைத்துத் தேடும் படலம்
துவங்கியது.
மொத்த நகைகளையும், பணத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு சென்றவர்கள்
அவர்கள்தான் என்று உறுதியாயிற்று.
ஆட்டை போட்டவர்கள் அவ்வளவு சுலபத்தில் கிடைப்பார்களா என்ன?
அவர்கள், தேனியில் இருந்து மூணாறு வழியாகக் கேரளாவிற்குத் தப்பிப்
போயிருந்தார்கள். கடைசி வரை பிடிபடவேயில்லை!
---------------------------------------------------------------------------------------------------------
அதற்குள் இங்கே கலவரமாகியிருந்தது. நகைகளை அடகு வைத்திருந்த
மக்கள் வந்து சூழ்ந்து கொண்டு விட்டார்கள். அத்தனை பேரும் ஏழை, எளிய
ஜனங்கள். அடகுப் பணத்தை வட்டியுடன் திருப்பித் தருகிறோம். எங்கள்
நகைகளைத் திருப்பிக் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள். அல்லது நகையின்
அளவிற்கு மிச்சப் பணத்தைக் கொடுங்கள் என்று நச்சரிக்க ஆரம்பித்து விட்டார்கள்
சிலர் அடிக்க வந்து விட்டார்கள்.
கடைசியில் கட்டைப் பஞ்சாயத்து வைத்து, அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட
சதவிகிதத்தில் ஈட்டுப் பணம் கொடுக்கப்பெற்றது. அதைக் கொடுப்பதற்கு
முத்தப்பனின் பங்கில் திருவாரூரில் இருந்த நிலங்களைக் காசாக்கிக்கி கொடுக்கும்
படியாகிவிட்டது.
அதையெல்லாம் செய்து முடிக்க ஆறுமாதங்கள் ஆகிவிட்டன. மரண
அவஸ்தை வேறு!
மொத்தத்தையும் ஒரு வரியில் சொன்னால், விரையச் சனி முத்தப்பனைக்
கட்டிய வேட்டி சட்டையுடன், தெருவில் கொண்டு வந்து நிறுத்தி விட்டான்.
--------------------------------------------------------------------------------
இதைக் கேள்விப்பட்ட முத்தப்பனின் மாமா வேதனையுடன் சொன்னார்:
முதல் மாடியில் இருந்து விழுக வேண்டிய முத்தப்பனை, சனி பத்தாவது
மாடிவரை கூட்டிச்சென்று அங்கிருந்து தள்ளி விட்டிருக்கிறான்!
(முற்றும்)
வாழ்க வளமுடன்!