மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

1.10.07

ஜோதிடம் மதுவா? மருந்தா?

ஜோதிடம் மதுவா? மருந்தா?

ஜோதிடப் பாடம். பகுதி 39

என் தந்தையார் ஜோதிடத்தில் அபார நம்பிக்கை
கொண்டவர். அவரை வைத்துத்தான் எனக்கும்
ஜோதிடத்தில் நம்பிக்கை ஏற்பட்டது.

அதே போல் என் தாய்வழிப் பாட்டனாரும் ஜோதிடத்தில்
அபார நம்பிக்கை உள்ளவர். அவரிடமிருந்து சுமார் 300
ஜாதங்களும், அவற்றைப் பற்றிய குறிப்புக்கள் அடங்கிய
- கையால் எழுதப்பெற்ற புத்தகமும் கிடைத்தது.
கிடைத்தபோது, என் சேகரிப்புப் பழக்கத்தினால் அதை
மற்ற புத்தகங்களுடன் பத்திரமாக வைத்திருந்தேன்.
அது கிடைத்தபோது பிற்காலத்தில் அது உதவும்
என்று எனக்குத் தெரியாது

பிறகு ஜோதிடத்தை - சுயமாக நானே படித்துக் கற்ற
காலத்தில் பயிற்சிக்கு (Practical Class) அந்தப் புத்தகம்
பேருதவியாக இருந்தது.

என் தந்தையாருக்கு ஜோதிடத்தில் அரிச்சுவடிகூடத்
தெரியாது. ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில்
நிறைய ஜோதிடர்களின் தொடர்பும், நட்பும் அவருக்கு
இருந்தது.

அவர்களில் சிலர் எங்கள் வீட்டிற்கு வந்து செல்வார்கள்.
முக்கியமாக மூன்று பேர்கள். அந்த மூவரில் இருவர்
கேரளாவைப் பூர்விகமாகக் கொண்டவர்கள்
ஒருவர் தஞ்சைக்காரர்.

அந்த மூவருமே அசத்தலாகப் பலன் சொல்லக்கூடியவர்கள்
(அதெல்லாம் பின்னால் வரும்)

கேரளாவில் பணிக்கர் இனத்தவரும், தஞ்சைப் பகுதியில்
வள்ளுவர் எனக்கூறப்படும் இனத்தவர்களும் ஜோதிடத்தில்
கரை கண்டவர்களாக இருந்தார்கள். முற்காலத்தில், அந்த
இனத்தவரில் பலர் முறைப்படி ஜோதிடம் கற்று, அதையே
தொழிலாகக் கொண்டு, அதிலேயே திளைத்தவர்களாக
இருந்தார்கள்.

ஆனால் இன்று அப்படியல்ல!

அந்த எண்ணிக்கை குறைந்து விட்டது. நல்ல ஜோதிடர்கள்
குறைந்து விட்டார்கள். தேடிப் பிடிக்க வேண்டிய நிலைமை.
சிலருக்குத் திருமணப் பொருத்தம் மட்டுமே பார்க்கத் தெரியும்

முன்பு கல்வி, மருத்துவம், ஜோதிடம் ஆகிய மூன்றுமே
தர்மத்தொழிலாகக் கருதப்பெற்றது. அந்த மூன்று துறைகளில்
இருந்தவர்களுமே மக்களுக்கு அதைச் சேவையாகச் செய்து
கொண்டிருந்தார்கள். மக்களின் துயரங்களைத் துடைத்துக்
கொண்டிருந்தார்கள். அது தர்மத் தொழில் என்று சொல்லப்
பட்டதால் யாரிடமும் கைநீட்டிக் காசு வாங்கமாட்டார்கள்.

மீறிக் கட்டாயப் படுத்திக் கொடுத்தால், வீட்டில் ஒரு
ஓரத்தில் வைத்திருக்கும் உண்டியலில் போட்டுவிட்டுப்
போகச் சொல்லி விடுவார்கள்.

சரி, அவர்களுடைய ஜீவனம் எப்படி நடந்தது?

சில இடங்களில் மன்னர்களும் (உதாரணம் மைசூர்,
புதுக்கோட்டை, இராமநாதபுரம்) சில இடங்களில்
ஜமீன்தார்களும், சில இடங்களில் பெரிய பண்ணையார்
களும், சில இடங்களில் மிட்டாமிராசுகளும் அவர்களுக்கு
வருடச் செலவிற்கு அரிசி, பருப்பு, எண்ணெய், விறகு
என்று பொருட்களாகவும், காசு பணமாகவும் மானியம்
அளித்துக் கொண்டிருந்தார்கள். சில இடங்களில் பத்து
ஏக்கர் முதல் நூறு ஏக்கர் வரை அவர்களுக்கு நிலங்கள்
இலவசமாகக் கொடுக்கப்பட்டு - அதில் இருந்து கிடைத்த
குத்தகைப் பணத்தில் அவர்களுடைய வாழ்க்கை
நிம்மதியாக நடைபெற்றது. அவர்களும் ஊருக்கு உழைத்தார்கள்.

இதைச் சொன்னால இன்றைய இளைஞன் நமபமாட்டான்.
ஏனென்றால் காலம் காலமாக நம் திரைப்பட வல்லுனர்கள்
அவர்களையெல்லாம் வில்லன்களாகவே சித்தரித்துக்
கதைகளை ஓட்டி வந்ததால் இன்று யாருக்கும் ஜமீன்தார்கள்,
மற்றும் பண்னையார்களின் உண்மைக்கதைகள் எடுபடாது.

இரண்டொருவர் கொடுமைக்காரர்களாகவும் இருந்திருக்கலாம்
- இந்தத் திரைப்பட வில்லன்களால், ஒட்டு மொத்தமாக
அவர்கள் யாரையுமே நமக்குப் பிடிக்காமல் போய்விட்டது.

இன்று என்றால், குத்தகைக்காரனுடன் ஜோதிடர் கோர்ட்டிற்கு
அலைந்து கொண்டிருக்க வேண்டும். அந்தக் காலத்தில் அப்படி
எவனாது செய்தால், அவனை ஊர்மக்களே மரத்தில் கட்டி
வைத்துப் பின்னி எடுத்து விடுவார்கள். பணமும் வசூலாகிவிடும்.

பணக்காரன், ஏழை என்ற பாகுபாடின்றி அன்றைய மக்கள்
அனைவரும் தர்ம நியாயத்திற்குக் கட்டுப்பட்டவர்களாக
இருந்தார்கள்.

இன்றைய நிலைமையை நான் எழுத வேண்டியதில்லை
- உங்களுக்கே தெரியும்!

அப்போதெல்லாம் வாழ்க்கை மிக எளிமையாக இருந்தது.
மக்களும் பெரிய ஆசைகள் எதுவும் இல்லாதவர்களாக
இருந்தார்கள்.

ஒரு பவுன் தங்கம் ரூபாய் பதின்மூன்று என்ற நிலை
யிலும், ஒரு மூட்டை அரிசி ரூபாய் எட்டு என்ற
அளவிலும் இருந்திருக்கிறது. நான் கூறும் காலம்
1900 ம் ஆண்டு முதல் 1939ம் ஆண்டு வரை என்று
வைத்துக் கொள்ளுங்கள்.

அதற்கு முன்பு, விலவாசிகள் இன்னும் குறைவாக
இருந்திருக்கிறது.

அந்தக் காலகட்டத்தில் ஒரு கட்டிட மேஸ்திரியின்
தினக்கூலி நான்கு அணாதான் (0.25 பைசாதான்)
ஒரு சித்தாளின் தினச்சம்பளம் இரண்டு அணாதான்
(0.12 பைசாதான்) பஞ்சாலைக் கணக்காளரின் மாதச்
சம்பளம் மாதம் ரூபாய் 15.00 தான்

இப்போது அந்தப் பதினைந்து ரூபாயில் ஒரு மசால்
தோசைகூடச் சாப்பிட முடியாது.

1939 முதல் 1945ஆம் ஆண்டுவரை நடந்த இரண்டாவது
உலக யுத்தம்தான் எல்லாவற்றையும் புரட்டிப்போட்டி
ருக்கிறது.

அது கிடக்கட்டும், Main Storyக்கு வருகிறேன்.

திரு. ஆசான் என்பவர்தான் (பெயரே ஆசான் என்றுதான்
சொல்வார்கள்) என் தந்தையாரின் ஜோதிட நண்பர்களில்
முக்கியமானவர்.

தினமும் எங்கள் வீட்டில், மாலை நேரத்தில் நடக்கும் சீட்டுக்
கச்சேரிக்கு அவர் தவறாமல் வந்து விடுவார்.

அப்போது என் தந்தையார் தேவகோட்டையிலேயே -
எங்கள் உள்ளூரிலேயே வாழந்து கொண்டிருந்தார்.
எங்கள் வீடு வழக்கமான செட்டிநாட்டு வீடுகளைப்
போல பிரம்மாண்டமான வீடு. தேக்கு மரங்களாலேயே
இழைத்துக் கட்டப்பெற்ற வீடு.

அகலம் 80 அடிகள், நீளம் 160 அடிகள் என்ற அளவில்
முகப்பு, உள்கட்டு, நடுவாசல் (முற்றம்) 2 & 3 உள்கட்டு,
வளவு, மேல்மாடி, 20 அறைகள் என்று மொத்தம்
15,000 சதுரஅடிகள் கட்டிடப் பகுதியைக் கொண்ட வீடு

அது 1895ம் ஆண்டு கட்டப் பெற்றதாகும். கூட்டுக் குடும்ப
வாழ்க்கை. அய்யா, அப்பத்தா (தாத்தா & பாட்டி) பெரியப்பா,
சித்தப்பா அவர்களுடைய குழந்தைகள், சமையல்காரர்,
வண்டிக்காரர் என்றும் மொத்தம் நாற்பது முதல் ஐம்பது
தலைகள் ஒருமித்து ஒற்றுமையுடன் வாழந்த காலம்.

மாலை நேரங்களில் முகப்பில் உள்ள அறையில் வீட்டு
இளைஞர்களும், அவர்களுடைய நண்பர்களூம் பொழுது
போக்காக சீட்டு (Playing Cards) விளையாடுவது சர்வ
சாதாரணம் (அந்தச் சிற்றுரில் வேறு பொழுது போக்கு
இல்லை) இளைஞர்களுடன் பெரியவர்களும் சேர்ந்து
விளையாடுவார்கள். கலகலப்பாக இருக்கும்

Point ற்கு காலணா அல்லது அறையணா, அல்லது
ஒரு அணா வைத்து விளையாடுவார்கள். ரூபாய்க்கு
பதிணாறு அணாக்கள் என்பதை நினைவில் கொள்க

அப்போது ஒரு பெரிய அளவு இட்லியின் விலை
காலணாதான். நான்கு இட்லிகளுக்குமேல் சாப்பிட
முடியாது. விடுதிகளில் சாப்பிடுபவர்கள் ஒரு அணாவில்
காலைப் பலகாரத்தை முடித்துக் கொண்டு விடலாம்.

இந்தத் தசாம்சப் பணமெல்லாம் (பத்து பைசா, இருபது
பைசாவெல்லாம்) 1957ம் ஆண்டுதான் அறிமுகப் படுத்தப்
பெற்றது.

நான் சொல்வதெல்லாம் 1941ம் ஆண்டு முதல் 1947ம்
ஆண்டு வரையான காலம். அப்போது என் தந்தையார்
இளைஞர். இந்தக் கதைகளெல்லாம் அவர் வர்ணனையுடன்
சொல்லச் சொல்ல - பல முறைகள் கேட்கக் கேட்க
என் மனதில் பதிந்து விட்ட பழைய நிகழ்வுகளாகும்

அப்போது என் தந்தையின் நண்பர் ஆசான்,
கேரளாவில் இருந்து தேவகோட்டைக்கு வந்து ஒரு
பெரிய வீட்டின் முகப்புப் பகுதியில் தங்கிக் கொண்டு
ஜோதிடத் தொழிலைச் செய்து கொண்டிருந்தார்.

உள்ளூர், மற்றும் சுற்றுப் பகுதிக் கிராம மக்கள் என்று
கூட்டம் அலை மோதும்.

காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி
வரை மட்டுமே ஜாதகங்களைப் பார்த்துப் பலன் சொல்லுவார்.

சூரிய அஸ்தமனத்திற்கு மேல் கிரகங்களைக் கழித்துப்
பார்க்கக்கூடாது என்ற தன் கொள்கையால், எங்கள்
வீட்டிற்குச் சீட்டாடக் கிளம்பி வந்து விடுவார்

மாதத்தில் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை
நாட்டுக்குப் போய் வருகிறேன் என்று தன் சொந்த ஊரான
பாலக்காட்டிற்குப் போய்வருவார். அவருடைய
குடும்பமெல்லாம் அங்கேதான் இருந்தது.
அசத்தலாகத் தமிழில் பேசவும், எழுதவும் செய்வார்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை என் பெரியப்பா
விற்கும், மற்றும் வீட்டிள்ள இதர உறுப்பினர்களுக்கும்,
அவருக்கும் இடையே கலந்துரையாடல்
நடைபெற்றது.

பேச்சு மலையாள மாந்திரீகத்தைப் பற்றித் திரும்பும்போது,
என் பெரியப்பா, "ஆசான் எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை
இருக்கிறது - ஆனால் மாந்திரீகத்தில் நம்பிக்கை இல்லை" என்று சொல்லப்போக, ஆசான் பிடித்துக்கொண்டு விட்டார்

"மாணிக்க அண்ணே (என் பெரியப்பாவின் பெயர்)
உங்களுக்கு மாந்திரீகம் உண்மையா? அல்லது இல்லையா?
என்று தெரியவேண்டும் அவ்வளவுதானே! இப்போதே -
இன்றே நிருபித்துக் காட்டுகிறென் - அதற்கு வேண்டிய பூஜை
சாமான்களை எழுதித் தருகிறேன். உங்கள் வீட்டு
வேலக்காரரை விட்டு வாங்கி வரச்சொல்லுங்கள்!"
என்று சொன்னவர் அடுத்த பத்து நிமிடங்களில்
ஒரு சிறிய சீட்டையும் எழுதிக் கொடுத்து விட்டார்.

அப்புறம்?

அப்புறம் நடந்ததுதான் மிகவும் சுவாரசியமான விஷயம்.

பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.
மற்றவை நாளை!
----------------------------------------
இந்தப் பதிவிற்குத் தொடர்பான படங்கள்
கீழே உள்ளன. அதையும் பாருங்கள்

எங்கள் வீட்டின் வீடியோ படம் உள்ளது.
அதை ஒரு வேறு ஒரு சமயத்தில் வலை
ஏற்றுகிறேன்.

இப்போது இரண்டு படங்களைப் பதிவிட்டிருக்கிறேன்.
அது எங்கள் வீட்டுப் படங்கள் அல்ல!
ஆனால் அது மாதிரி அமைப்புள்ள படங்கள்
அவை. பொதுவாக எல்லா வீடுகளும் இந்த
அமைப்பில்தான் இருக்கும். நீங்கள் பல
திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள்.
ஆகவே ஒரு பார்வைக்காக அவற்றைக்
கொடுத்துள்ளேன்
-------------------------------------------------

படத்தில் உள்ளது காலணா, அரையணா,
ஒரு அணா, இரண்டு அணா
மன்னர்கள் கால்த்துக் காசுகள்.
1.புதுக்கோட்டை அரசர் காலம்,

2. திருவாங்கூர் அரசர் ரவி வர்மா காலம், 3.
மன்னர் ஜார்ஜ் 5th

காலம்படத்தைப் பெரிதாக்கிப் பாருங்கள்
1917, 1935, 1944, 1946 என்று காசுகள்

வெளிவந்த வருடம் கண்ணில் படும்
படத்தில் என் தந்தையாருடன் நின்று
கொண்டிருப்பவர் தான் (ஜிப்பாவுடன்)

ஜோதிட மேதை திரு. ஆசான்.
உட்கார்ந்திருக்கும் அன்ப்ர்கள்
என் தந்தையாரின்

நண்பர்கள். சுமார் 50 ஆண்டுக்ளுக்கு
முன்பு எடுக்கப்பெற்ற படம்
எங்கள் பகுதி வீடு ஒன்றின் முகப்புப் பகுதி

ஒரு வீட்ட்டின் வளவு - நடுவாசல்
பகுதி (Court Yard)
(தொடரும்)
----------------------------------
வெறும் பாடம் மட்டும் நடத்தினால் சுவாரசியமாக
இருக்காது. அதனால் பாடம், பயிற்சிவகுப்பு, மாதிரி
ஜாதகங்கள், ஜோதிடக்கதைகள், அனுபவக் கதைகள்
என்று பலவும் கலந்து இனிமேல் பதிவுகள் வரும்.
தொடர்ந்து படித்துப் இன்புறுங்கள்.
வாரம் இரண்டு அல்லது மூன்று பதிவுகள் வரும்
தினமும் பதிவு போட எனக்கு ஆசைதான்.
எழுதி தட்டச்ச வேண்டாமா?
----------------------------------------------

29 comments:

துளசி கோபால் said...

இப்பதான் உங்க வகுப்பு ரொம்ப சுவாரசியமா இருக்கு. பழங்கதைகள் கேக்கவே இனிமைதாங்க.

வீடும், வீட்டு முற்றமும் அடடடா............ அட்டகாசம் போங்க.

எங்க வீட்டுலே அந்தக் காலத்துலே வீட்டுலே நடக்கும் ச்சின்ன விசேஷமுன்னாலும் வெளியாட்கள் இல்லாமலேயே ஒரு கூட்டம் இருக்கும்.

அந்தநாளும் வந்திடாதோன்னு ஏங்கதான் முடியுது(-:

காலணா, அரையணா, ஓரணான்னு பழைய காசுகள் நானும் சேகரிச்சு வச்சுருக்கேன்.

எல்லாவற்றையும் மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்துட்டீங்க. நன்றி வாத்தியார் ஐயா.

ஜீவி said...

நண்பரே,
அந்தக் கால நாணயங்களின் படங்களை
அசத்தலாகப் போட்டு பழைய நினைவுகளைக் கிளறி விட்டுவிட்டீர்கள்
நயாபைசா (தசாம்ச நாணைய)காலத்திற்குப் பின்தான்,
விலைவாசிகள் ஏகத்துக்கும் ஏறி
விட்டதாக என் நினைவு.
நல்ல பதிவு.

SP.VR. SUBBIAH said...

// Thulasi Teacher Said:இப்பதான் உங்க வகுப்பு ரொம்ப சுவாரசியமா இருக்கு. பழங்கதைகள் கேக்கவே இனிமைதாங்க.///

வாங்க டீச்சர்!
கதை கேட்பதும் கதை சொல்வதும் ஒரு சுகமான அனுபவம்!

அந்தக் காலத்தில் எல்லாம் கூட்டுக் குடும்ப வாழக்கை Joint families
இப்போது எல்லாம் தலை கீழ்!

Micro families என்றாகி விட்டது.கதை சொல்ல ஆளில்லை.
யாருக்கும் நேரமில்லை. Housing loan , Credi card கடன்கள்
கழுத்தை நெறிக்கும். அதிலிருந்து மீள்வதற்காக கணவன் மனைவி இருவருமே
வேலைக்குச் செல்லும் அவல் நிலை!

பிள்ளைக் கவனிக்க ஆள் இல்லை
அப்புறம் கதை எங்கேயிருந்து வரும்?
cartoon TV, Bogo TV, Sun Music Channel - அல்லது வன்முறைக் காட்சிகளைக்

கொண்ட தமிழ்ப் படங்கள் தான் குழந்தைகளுக்கென்றாகி விட்டது. :-(((((

SP.VR. SUBBIAH said...

/// அந்தக் கால நாணயங்களின் படங்களை
அசத்தலாகப் போட்டு பழைய நினைவுகளைக் கிளறி விட்டுவிட்டீர்கள்///

எல்லாம் உங்களூக்காத்தான்!

வடுவூர் குமார் said...

தகவல் களஞ்ஜியம் ஐயா நீங்கள்.
பல விபரங்கள்.
உங்கள் அப்பா,ஜிப்பா... அந்த படத்தின் பின்புலமும் வெள்ளையில் இருப்பதால் யார் ஜிப்பா என்பது கண்டுபிடிப்பது கஷ்டமாக இருக்கிறது.
சம்பள விவரம் சொல்லும் போது ஞாபகம் வருகிறது.என் தாத்தா சம்பளம் 15 ரூபாய்,என் அப்பா ஆரம்பிக்கும் போது 28 ரூபாயாம்.சின்ன வயதில் நான் எதையோ கேட்டு அடம் பிடிக்கும் போது அடி வாங்கி கேள்விப்பட்ட தகவல்கள்.:-)

வடுவூர் குமார் said...

அடுத்து மாந்திரீகமா?
அதிலும் நான் கேள்விப்பட்டது ஒன்று உள்ளது.

கோவி.கண்ணன் said...

//ஜோதிடம் மதுவா? மருந்தா? //

ஐயா,

ஜோதிடம் - மது கசாயம்.
மது என்றால் போதை திரவம்,
கசாயம் என்றால் மருந்து.

ஆனால்,

மதுகசாயம் என்று ஒரு சாராயம் இருக்கிறது.
அதை குடித்தவர்கள் வேலியில் முட்டிக் கொண்டு புலம்பிக் கொண்டிருப்பார்கள் என்பதால் அதற்கு 'வேலி முட்டி' என்ற பெயரும் இருக்கிறது.

அதாவது ஜோதிடம் என்பது ஒரு போதைஇ...பார்த்து பழக்கப்பட்டவர்கள் உட்கார்ந்து எழுவதற்கு கூட இராகுகாலம் எமகண்டம் பார்ப்பார்கள்.
:))

******

உங்க வீடு அட்டகாசம்...

சூட்டிங்க்கு வாடகைக்கு விடலாம்.
:)

P.A.விக்னேஷ்வரன் said...

மிக அருமை. பழைய கதைகளோடு விஷயங்கள் கிடைக்கும் போது மதில் பதிய வைத்துக் கொள்ள சுலபமாக இருக்கிறது. அடுத்த பதிவை விரைவில் போடுங்கள். அவர் என்ன செய்தார் என தெரிய வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

துளசி சொல்கிற மாதிரி, பழைய நினைவுகள் ஓறூ கருவூலம்.
நீங்கள் உண்மையான நாணயங்களை வேறப் படமாப் போட்டு இருக்கிறீங்க:)))

நல்ல நாட்கள் அவை.
இப்போது போல் எல்லாவற்றுக்கும் யோசிக்க வேண்டாம். உண்மை உண்மையாக இருந்த நாட்கள்.

சுவாரஸ்யமாக இருக்கிறது.
மந்திரம்,மாந்திரீகம் தெரிந்து கொள்ள ஆவல் யாவருக்கும் இருக்கும்.மிக்க நன்றி சுப்பையா சார்.

பி.கு.
எங்கள் திருமணம் நடந்த ்போது வீட்டுக்காரர் சம்பளம் 369ரூபாய்.
சந்தோஷமாகத் தான் குடும்பம்நடத்தினோம்:)))

cheena (சீனா) said...

பல பழைய நினைவுகள் - படிக்கச் சுவையாகத்தான் இருந்தது. நினைத்துப் பார்க்க நேரமில்லை. நயாபைசா பற்றி நானும் எழுதி இருக்கிறேன். நேரமிருப்பின் படித்துக் கருத்துக் கூறுங்கள். அடுத்த பதிவினை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்

என் பதிவின் முகவரி :
http://cheenakay.blogspot.com

SP.VR. SUBBIAH said...

///வடுவூர் குமார் said...
தகவல் களஞ்ஜியம் ஐயா நீங்கள்.
பல விபரங்கள்.
உங்கள் அப்பா,ஜிப்பா... அந்த படத்தின் பின்புலமும் வெள்ளையில் இருப்பதால் யார் ஜிப்பா என்பது கண்டுபிடிப்பது கஷ்டமாக இருக்கிறது.///

நிற்பவர் இருவரில் from left to right - முதல் நபர் என் தந்தையார். அவருக்கு அடுத்து நிற்பவர் ஆசான்

SP.VR. SUBBIAH said...

///வடுவூர் குமார் said...
அடுத்து மாந்திரீகமா?
அதிலும் நான் கேள்விப்பட்டது ஒன்று உள்ளது.///
சொல்லுங்கள் நாங்க்ளும் கேட்டுக் கொள்கிறோம்

SP.VR. SUBBIAH said...

///கோவி.கண்ணன் said...
மதுகசாயம் என்று ஒரு சாராயம் இருக்கிறது.
அதை குடித்தவர்கள் வேலியில் முட்டிக் கொண்டு புலம்பிக் கொண்டிருப்பார்கள் என்பதால் அதற்கு 'வேலி முட்டி' என்ற பெயரும் இருக்கிறது.///

இப்போதும் கிடைக்கிறதா?
************
/// உங்க வீடு அட்டகாசம்...///
பதிவில் சொல்லியிருக்கிறேன். அது எங்கள் வீட்டுப் படமல்ல!
அதேபோன்ற அமைப்பிலுள்ள வேறு ஒரு வீட்டின் படம்
எங்கள் வீடு Video வில் பதிவு செய்ப்பட்ட பிரதியில் உள்ளது
பின்னர் வலையேற்றுகிறேன்

SP.VR. SUBBIAH said...

///P.A.விக்னேஷ்வரன் said...
மிக அருமை. பழைய கதைகளோடு விஷயங்கள் கிடைக்கும் போது மதில் பதிய வைத்துக் கொள்ள சுலபமாக இருக்கிறது. அடுத்த பதிவை விரைவில் போடுங்கள். அவர் என்ன செய்தார் என தெரிய வேண்டும்.///

நன்று நண்பரே!

SP.VR. SUBBIAH said...

///வல்லிசிம்ஹன் said...
துளசி சொல்கிற மாதிரி, பழைய நினைவுகள் ஓரு கருவூலம்.
நல்ல நாட்கள் அவை.
இப்போது போல் எல்லாவற்றுக்கும் யோசிக்க வேண்டாம். உண்மை உண்மையாக இருந்த நாட்கள். சுவாரஸ்யமாக இருக்கிறது.///

அந்த சுவாரசியமான நாட்கள் எல்லாம் திரும்பவும் வராது சகோதரி
என்னைப்போன்று எழுதுபவர்களின் ஆக்கங்களைப் படித்து சந்தோசப்பட்டுக் கொள்ளலாம். அவ்வளவே!

SP.VR. SUBBIAH said...

///cheena (சீனா) said...
பல பழைய நினைவுகள் - படிக்கச் சுவையாகத்தான் இருந்தது. நினைத்துப் பார்க்க நேரமில்லை. நயாபைசா பற்றி நானும் எழுதி இருக்கிறேன். நேரமிருப்பின் படித்துக் கருத்துக் கூறுங்கள். அடுத்த பதிவினை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்///

நன்று நண்பரே - படித்தேன். சுவைத்தேன்.பாராட்டிப் பின்னூட்டமும் இட்டுள்ளேன்
தொடர்ந்து எழுதுங்கள்

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

வாத்யாரே..

படம் காட்டி விளக்கும் உங்களது வகுப்பு போரடிக்கவே இல்லை.. என்ன அவ்வப்போது பாத்ரூம் போக எழுந்து போக வேண்டியிருக்கிறது, உங்களது அனுமதி இல்லாமலேயே..

ஒரு அணா, இரண்டணாக்களின் காலம் போனாலும் மனித நேயத்தின் பொற்காலம் அதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் நீங்கள் அனுபவித்த அந்தக் கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் சுகமே இறுதிவரை உங்களுக்குப் போதும் என்று நினைக்கிறேன்..

நானும் காரைக்குடி அருகே புதுவயல் என்னும் ஊருக்கு சில காலம் வந்து போய் கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் அங்கிருக்கும் வீடுகளை ஆச்சரியமாகப் பார்ப்பதுண்டு. அது பாட்டுக்கு ஒரு தெருவின் கடைசி முனைவரை தாராளமாக வருகிறது.. இவ்ளோ பெரிய வீடுகளா என்ற பிரமை எனக்கு இன்றைக்கும் உண்டு.

ஜோதிட வகுப்பை கொஞ்சம் த்தி வைத்துவிட்டு நகரத்தாரின் வீடு கட்டும் கலை நயம் மற்றும் நகரத்தாரின் கூட்டுக் குடும்ப வாழ்க்கை இஇவை பற்றியெல்லாம் கொஞ்சம் எடுத்து விடுங்கள்..கேட்கத் தயாராக இருக்கிறோம்..

Sumathi. said...

ஐய்யா, இந்த மாதிரி பழைய கதைகளைக் கேட்கும் போது அதிலிருக்கிற சுவை மட்டும் அல்லாது அதன் நிஜமும் கூட மலைக்கத் தான் செய்யும்.

அதே மாதிரி என் வீட்டிலும் கூட அந்த ஓட்டை காலனாவை நானும் பார்த்திருக்கிறேன்.ரொம்ப நாளா அதை வைத்தும் இருந்திருக்கிறோம்.

SP.VR. SUBBIAH said...

///உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
படம் காட்டி விளக்கும் உங்களது வகுப்பு போரடிக்கவே இல்லை.. என்ன அவ்வப்போது பாத்ரூம் போக எழுந்து போக வேண்டியிருக்கிறது, உங்களது அனுமதி இல்லாமலேயே..///

என் பதிவுகள் அனாவசியமான நீளத்துடன் இருக்கிறதோ என்ற கவலை
எனக்கு எப்போதும் உண்டு. அதை நீங்கள் உருதிப் படுத்துகிறீர்களே!

///ஒரு அணா, இரண்டணாக்களின் காலம் போனாலும் மனித நேயத்தின் பொற்காலம் அதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் நீங்கள் அனுபவித்த அந்தக் கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் சுகமே இறுதிவரை உங்களுக்குப் போதும் என்று நினைக்கிறேன்..///

வார்த்தைகளால் முற்றிலும் விவரிக்க முடியாத காலம் அது!
இன்றைய பணத்தேடலில், சக மனிதன் அதை இழந்து விட்டு நிற்பதைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது.

பணத்தால் ஒரு பெரிய வீட்டை வாங்க முடியும். ஆனால், அன்பு, பாசம், பரிவு, உவகை - ஆகிய எதையும் வாங்கமுடியாது. அதை அவன் உணரும்போது எல்லாம் முடிந்து போயிருக்கும்

///நானும் காரைக்குடி அருகே புதுவயல் என்னும் ஊருக்கு சில காலம் வந்து போய் கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் அங்கிருக்கும் வீடுகளை ஆச்சரியமாகப் பார்ப்பதுண்டு. அது பாட்டுக்கு ஒரு தெருவின் கடைசி முனைவரை தாராளமாக வருகிறது.. இவ்ளோ பெரிய வீடுகளா என்ற பிரமை எனக்கு இன்றைக்கும் உண்டு.
ஜோதிட வகுப்பை கொஞ்சம் ஒத்தி வைத்துவிட்டு நகரத்தாரின் வீடு கட்டும் கலை நயம் மற்றும் நகரத்தாரின் கூட்டுக் குடும்ப வாழ்க்கை இவை பற்றியெல்லாம் கொஞ்சம் எடுத்து விடுங்கள்..கேட்கத் தயாராக இருக்கிறோம்..///

உங்களைப் போல் அந்தப் பகுதியை அறிந்தவர்களுக்கு அது சுவையாக இருக்கலாம். ஆனால் பதிவிற்குள் வரும் அனைவருக்குமே அது சுவைக்குமா
என்பது தெரியவில்லை!

அனாலும் உங்கள் வேண்டுகோளுக்காக இடையிடையே எழுதுகிறேன்

SP.VR. SUBBIAH said...

///Sumathi. said...
ஐயா, இந்த மாதிரி பழைய கதைகளைக் கேட்கும் போது அதிலிருக்கிற சுவை மட்டும் அல்லாது அதன் நிஜமும் கூட மலைக்கத் தான் செய்யும்.///

ஆமாம் சகோதரி, நான் மலைத்து வியந்தவற்றைத்தான் பத்வில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.தொடர்ந்து படியுங்கள்

அறிவன் /#11802717200764379909/ said...

ஒரு யோசனை.
ஒரு தனி வலை திட்டு அமைத்து அதில் ஜோதிட பாடங்களை வெளியிடுங்கள்.
பொதுப் பதிவின் பல செய்திகளுக்கு மத்தியில் சென்று சேர வேண்டியவர்களுக்கு சேராது.
எனக்கும் ஜோதிடக் கலையில் ஆர்வம் உண்டு..காத்திருக்கிறேன்.

cheena (சீனா) said...

நன்றி நண்பரே ! எனது பதிவினிற்கு வருகை புரிந்து கருத்து பதிந்தமைக்கு மிக்க நன்றி

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

ஐயா, என் தந்தையாரும் அந்த காலக் கதைகள் நிறைய சொல்லுவார். எனக்கு 2 தாத்தாக்களையும் பார்க்கும் பாக்கியம் இல்லை:-‍‍( எனவே, ஓட்டை காலணா பற்றி அறிந்திருந்தேன். ஆனால், என் தந்தை ஜோசியம், ஜாதகம் இவற்றில் அவ்வளவு நம்பிக்கை இல்லாதவர்...

நகரத்தார் வீடுகள் கொள்ளை அழகு தான். அந்த கால வாழ்க்கை முறை பற்றி பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி!

இந்த இடைவேளை(!) முடிந்து நீங்கள் மறுபடி ஜோசியம் பற்றி கற்று கொடுக்கவும்! இதுவும் நன்றாக இருக்கிறது, அதுவும் நன்றாக இருக்கிறது!

மதுரையம்பதி said...

ஐயா, இப்படி சஸ்பென்ஸ் வச்சிட்டீங்களே?....சீக்கிரம் அடுத்த பதிவ போடுங்க.

படங்கள் அருமை....பல இனிய நண்பர்களின் சொந்த ஊர் அந்தப் பக்கம் தான்...(கீழச்சேவல் பட்டி, வேந்தன் பட்டி, நச்சாந்துப் பட்டி) அவர்கள் திருமணத்துக்குச் சென்றீருக்கிறேன். நீங்கள் படத்தில் காட்டியது போன்ற வீடுகளில் தங்கியும் இருக்கிறேன். நினைவில் கொண்டுவந்தமைக்கு நன்றி.

Anonymous said...

Just for information - there are many Darshinis and Sagar restaurents in Bangalore city where - good quality masal dosai is available for less than Rs. 15 - as of today (Oct 2007). It ranges from Rs.12 to Rs 17 and of course higher in other hotels. The quality of this Rs.12/Rs.15 masal dosai is as good or better than the ones in Saravana Bhavan or any of the the cafes in TamilNadu except that only one chutney (+ one sambar) is given

from
Krishna Kumar

SP.VR. SUBBIAH said...

///அறிவன் /#11802717200764379909/ said...
ஒரு யோசனை.
ஒரு தனி வலை திட்டு அமைத்து அதில் ஜோதிட பாடங்களை வெளியிடுங்கள்.
பொதுப் பதிவின் பல செய்திகளுக்கு மத்தியில் சென்று சேர வேண்டியவர்களுக்கு சேராது.
எனக்கும் ஜோதிடக் கலையில் ஆர்வம் உண்டு..காத்திருக்கிறேன்.///

தனி வலை (web site) ஆரம்பிக்கும் எண்ணம் எனக்கும் உண்டு
யாராவது (web design - static page & dynamic page) தள வடிவமைப்பிற்கு
உதவினால் - யோசிக்கலாம்

SP.VR. SUBBIAH said...

///அறிவன் /#11802717200764379909/ said...
ஒரு யோசனை.
ஒரு தனி வலை திட்டு அமைத்து அதில் ஜோதிட பாடங்களை வெளியிடுங்கள்.
பொதுப் பதிவின் பல செய்திகளுக்கு மத்தியில் சென்று சேர வேண்டியவர்களுக்கு சேராது.
எனக்கும் ஜோதிடக் கலையில் ஆர்வம் உண்டு..காத்திருக்கிறேன்.///

தனி வலை (web site) ஆரம்பிக்கும் எண்ணம் எனக்கும் உண்டு
யாராவது (web design - static page & dynamic page) தள வடிவமைப்பிற்கு
உதவினால் - யோசிக்கலாம்

SP.VR. SUBBIAH said...

///கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
இந்த இடைவேளை(!) முடிந்து நீங்கள் மறுபடி ஜோசியம் பற்றி கற்று கொடுக்கவும்! இதுவும் நன்றாக இருக்கிறது, அதுவும் நன்றாக இருக்கிறது!

நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

///மதுரையம்பதி said...
ஐயா, இப்படி சஸ்பென்ஸ் வச்சிட்டீங்களே?....சீக்கிரம் அடுத்த பதிவ போடுங்க.///
ஆகா - போட்டுட்டா போச்சு!