கவிதை: வெய்யிலடித்து கடல் காய்ந்து போகுமா என்ன?
இசைக் குயில் எம்.எஸ் மறைந்த தினம் சென்ற வெள்ளிக்கிழமை:( 11/12/2015)
எம்.எஸ் .சுப்புலட்சுமி காலமான போது , வாலி எழுதிய கவிதை ..
--------------------------------------------------------------
நடுத்தமிழ் நிற்கிறது
நடுத்தெருவில் ....
தன் விலாசத்தை
தவறவிட்டு ; அதன் -
திருவிழி உகுக்கிறது
தீர்த்தச் சொட்டு !
எம்.எஸ்
ஏறிவிட்டார் வாகனம் ;
எல்லோர்க்கும் இருந்தென்ன ?
எமனுக்கு இல்லையே ஏழிசை ஞானம்!
இழந்து நிற்கிறது
இசைக்கலை -
தான்
தங்கியிருந்த -
எம்.எஸ்
என்னும் இன்ஷியலை!
ஓதம்சூல் உலகின்காண்-
ஓர்
ஒப்புலட்சுமி-இல்லாதவர்
சுப்புலட்சுமி ;
தூய வாய்மலரால்-
இசைத் தேனைத்
துப்புலட்சுமி
என்னணம்
எண்டிசை-இனி
பயணிக்கக் கூடும் -நம்
பண்டிசை?
எம்.எஸ்
என்பது
சங்கீத
சாஸ்திரத்தின்
பெண்முக வடிவு ;இப்-
பெண்முக வடிவைப் பெற்றது -வீணை
சண்முகவடிவு !
வீணை சண்முகவடிவு-இவ்
வையத்தை..
விரல்வழி
வென்றார் ;அவரது
குலக்கொடி சுப்புலட்சுமி
குரல்வழி வென்றார் !
அம்புவி மேல்
அவர்போல் -
ஆர்க்கும்
அமைந்ததில்லை தொண்டை;
அக்தேபோல்
அவர் போல்
ஆரும்
ஆற்றியதில்லை ..
தொண்டை வழியாகப்-பொதுநலத்
தொண்டை !
கிருதி;
சுருதி;
இவை
இரண்டும் -
அவரை
அண்டியிருந்தன
தமது
தாயெனக் கருதி
ஒருவரும் கண்டதில்லை -அவை
ஒன்றோடு ஒன்று பொருதி ;
இலயத்தை-
இராகத்தை-
சிவப்பனுவாய் வெள்ளையனுவாய்
சுவீகரித்துக் கொண்டிருந்தது ..
எம்.எஸ் ஆக்கையுள்
எங்கனும் சஞ்சரித்த குருதி !
என்ன சொல்லி
என்ன ?
எரிக்கும் மயானத்தில்
இருக்கும் ..
வேகுந்தலம் புகுந்தது -காளிதாசன்
சாகுந்தலம் !
என்
எமபுரத்தில் கூவித்திரி என்று -
கூற்றுவன் அழைக்க-அந்தோ
அவன்
கூடப்போனாள் சாவித்திரி ;
தென்மதுரையில் கண்மலர்ந்து
வட மதுரைக் கண்ணனிடம்
மீண்டும் போய்ச் சேர்ந்தாள்-
மீரா!
பாட்டூர்புரம்-எனும்
பதிமதுரை தோன்றிக் -கடைசியில்
கோட்டூர்புரம் போந்த
கோகிலத்திற்கு ..
மாங்குயிலும் பூங்குயிலும்
மண்மிசை ஆகுமோ நேரா ?
தீ
தின்றது ..
சங்கீத வாணியின்
சரீரத்தை தான்;அது
சாப்பிடப் போமோ -அவரது
சாரீரத்தை ?
குறுந்தகடுகளில்;நாடாக்களில்-
குடியிருப்பார்..
எம்.எஸ்
என்றும் சாகாது;
கடல்-வெயிலடித்துக்
காய்ந்து போகாது !
-------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!
குருவே வணக்கம்.
ReplyDeleteஎம்.எஸ் பற்றிய கவிஞர் வாலி அவர்களின் கவிதை வரிகள் படிப்போர் மனதில் ஒரு வலியை உண்டாக்குகிறது. உதாரணத்திற்கு:
"*எம்.எஸ்
ஏறிவிட்டார் வாகனம் ;
எல்லோர்க்கும் இருந்தென்ன ?
எமனுக்கு இல்லையே ஏழிசை ஞானம்!
இழந்து நிற்கிறது
இசைக்கலை -
தான்
தங்கியிருந்த -
எம்.எஸ்
என்னும் இன்ஷியலை!"*
எம்.எஸ் அம்மா அவர்கள் தன் வாழ்நாளில் பெரும்பகுதியை இசைக்கே அர்ப்பணித்தார். கிடைத்த வருமானங்களையும் அறப்பணிக்கே ஈந்தார். சதா-சிவனுடன் சதா நலப்பணிகளிலேயே ஈடுபட்டார். கல்கி கார்டனில் வாழ்ந்தபோதும், அதையிழந்து கோட்டூர்புரத்தில் வாடகைக்கு இருந்தபோதும் நிலை கலங்காதவர் எம்எஸ்.
அன்னாரின் நினைவு நம் நெஞ்சை விட்டு எந்நாளும் நீங்காது!!
She was very pretty even in her old days,
ReplyDeletebut, having a chance of seeing her young face is priceless.
Thank you
Mrs N Anpalagan
////Blogger வரதராஜன் said...
ReplyDeleteகுருவே வணக்கம்.
எம்.எஸ் பற்றிய கவிஞர் வாலி அவர்களின் கவிதை வரிகள் படிப்போர் மனதில் ஒரு வலியை உண்டாக்குகிறது. உதாரணத்திற்கு:
"*எம்.எஸ்
ஏறிவிட்டார் வாகனம் ;
எல்லோர்க்கும் இருந்தென்ன ?
எமனுக்கு இல்லையே ஏழிசை ஞானம்!
இழந்து நிற்கிறது
இசைக்கலை -
தான்
தங்கியிருந்த -
எம்.எஸ்
என்னும் இன்ஷியலை!"*
எம்.எஸ் அம்மா அவர்கள் தன் வாழ்நாளில் பெரும்பகுதியை இசைக்கே அர்ப்பணித்தார். கிடைத்த வருமானங்களையும் அறப்பணிக்கே ஈந்தார். சதா-சிவனுடன் சதா நலப்பணிகளிலேயே ஈடுபட்டார். கல்கி கார்டனில் வாழ்ந்தபோதும், அதையிழந்து கோட்டூர்புரத்தில் வாடகைக்கு இருந்தபோதும் நிலை கலங்காதவர் எம்எஸ்.
அன்னாரின் நினைவு நம் நெஞ்சை விட்டு எந்நாளும் நீங்காது!!////
உண்மைதான் நன்றி வரதராஜன்!
/////Blogger Mrs Anpalagan N said...
ReplyDeleteShe was very pretty even in her old days,
but, having a chance of seeing her young face is priceless.
Thank you
Mrs N Anpalagan/////
உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!