மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

27.11.15

பிரம்மா எதற்காகத் தலையில் குட்டுப் பட்டார்? யாரிடம் குட்டுப் பட்டார்?




அருள்மிகு சுவாமிநாதர் திருக்கோயிலின் முன்புறத் தோற்றம்
---------------------------------------------------------------------------------------------------------------
பிரம்மா எதற்காகத் தலையில் குட்டுப் பட்டார்? யாரிடம் குட்டுப் பட்டார்?

பக்தி மலர்

நான்காவது படை வீடு - சுவாமிமலை முருகன் கோவில் 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் நான்காவது படை வீடாகத் திகழ்வது திருவேரகம் என்று போற்றப்படும் சுவாமிமலை. இங்கு கதிர்வேலனாக முருகப்பெருமான் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். தஞ்சாவூரில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது.

நமது உடலில் உள்ள ஆறு சக்கரங்களில் நான்காவது சக்கரமான `அனாகதம்' எனும் சக்கரத் துடன் இந்த தலத்தை நம்முன்னோர்கள் ஒப்பிட்டு வணங்கியுள்ளனர். அனாகதம் சக்கரம் என்பது ஒருவரது உடம்பில் நெஞ்சுப்பகுதியில் இருப்பதாகும். அதாவது இருதயத்துக்கு நேர் பின்னால் முதுகுத்தண்டில் அனாகதம் சக்கரம் உள்ளது.

இந்த சக்கரம் அன்பு, பாசம், இரக்கம், சகோதரத்துவம், விசுவாசம், பக்தி போன்ற நல்ல இயல்புகளை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. சுவாமி மலையில் வீற்றிருந்து அருளும் முருகனின் பண்புகள், செயல்பாடுகளுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் அனாகதம் சக்கரம் எந்த அளவுக்கு கச்சிதமாக பொருந்தும் என்பது தெரியும்.

முருகப்பெருமான் அன்பு மிக்கவர்.பாசத்தின் ஊற்றாகத் திகழ்கிறார். முருகப்பெருமான் தன் பக்தர்கள் மீது காட்டும் இரக்கத்துக்கு எவ்வளவோ உதாரணங்களைச் சொல்லாம். அது போல அவர் அம்மை, அப்பனிடம் பக்தியும், விசுவாசமும் கொண்டவர். இந்த நற்பண்பு காரணமாகவே அவர் சுவாமி மலையில் தன் தந்தைக்கே பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்தார்.

அது பற்றிய வரலாறு: 

படைப்புத் தொழிலில் ஆணவம் முற்றியிருந்த பிரம்மா, ஒருமுறை முருகப்பெருமானை சந்திக்க நேர்ந்தது. அப்போது பிரம்மாவிடம், படைப்புத் தொழில் செய்யும் உமக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா என்று முருகப் பெருமான் கேட்கிறார். இந்த கேள்விக்கு பிரம்மாவால் பதில் சொல்ல முடியவில்லை.

பிரணவத்தின் பொருள் தெரியாமல் திகைத்தார். அவரை தலையில் குட்டி, சிறையில் அடைத்தார் முருகப்பெருமான். ஈசனே நேரில் வந்து கேட்டுக்கொண்டதால், பிரம்மாவை அவர் விடுதலை செய்தார். பிறகு சிவபெருமான், "பிரணவத்தின் பொருள் உனக்குத் தெரியுமா?'' என்று முருகனிடம் கேட்டார்.

"ஓ நன்றாகத் தெரியுமே'' என்றார் முருகன். "அப்படியானால் அப்பொருளை எனக்குக் கூற இயலுமா?'' என்றார் ஈசன். "உரிய முறையில் கேட்டால் சொல்வேன்!'' என்றார் முருகன். அதன்படி சிவபெருமான் இந்த சுவாமிமலை தலத்தில் சிஷ்யன் நிலையில் அமர்ந்து, முருகப்பெருமானிடம் பிரணவ உபதேசம் கேட்டார்.

இவ்வாறு இறைவனான சிவபெருமானுக்கே முருகன் குருநாதனாக ஆனதால், அவரை சுவாமிநாதன் என்றும், பரமகுரு என்றும், தகப்பன்சாமி என்றும் போற்றுகிறோம். அதனாலேயே இந்த தலமும் சுவாமிமலை என்று பெயர் பெற்றுவிட்டது. இத்தலத்தில் சுவாமிநாதன் நான்கரை அடி உயரத்தில், நின்ற கோலத்தில் கம்பீரமாகக் காட்சித் தருகிறார்.

வலது கரத்தில் தண்டாயுதம் தரித்து, இடது கரத்தை இடுப்பில் வைத்து, சிரசில் ஊர்த்துவ சிகாமுடியும், மார்பில் பூணூலும் ருத்திராட்சமும் விளங்க... கருணாமூர்த்தியாக காட்சித் தருகிறார். முகத்தில் ஞானமும் சாந்தமும் தவழ்வதை கண்குளிரப் பார்க்க முடிகிறது. தத்துவத்தின் அடிப்படையில் பார்த்தால் சுவாமிமலை தலம் காற்று தலமாக உள்ளது. முருகப் பெருமான் கிரியா சக்தியாக உள்ளார்.

வடிவம் என்று எடுத்துக்கொண்டால் சுவாமி மலையில் முருகன் "சொல் வடிவு'' எனும் நிலையில் உள்ளார். அதன்படி அனாகதம் இவ்வுலக சுகத்தைக் தரும் என்பது ஐதீகமாகும். தந்தைக்கு உபதேசம் செய்த இடம் என்பதால், இத்தலத்தில் வழிபடுவர்களுக்கு ஞானம், சுகவாழ்வு, மகிழ்ச்சி எல்லாம் கிடைக்கும்.

மகாமண்டபத்தில் மயிலுக்குப் பதிலாக முருகனுக்கு இந்திரனால் வழங்கப்பட்ட ஐராவதம் என்ற யானை நிற்கிறது. கிழக்கு நோக்கி நின்று திருவருள் பாலிக்கும் சுவாமிநாதனுக்கு, தங்கக் கவசம், வைரவேல், தங்க சகஸ்ர நாம மாலை, ரத்தின கிரீடம் போன்ற பல்வேறு அணிகலன்களும் பூட்டி பக்தர்கள் அழகு பார்க்கின்றனர்.

தலவிருட்சம் நெல்லி : 

நெல்லி மரம் சுவாமிமலையின் தல விருட்சமாகும். நெல்லி மரத்தை வடமொழியில் "தாத்ரி'' என்பர். அதனால் சுவாமிமலையை "தாத்ரிகிரி'' என்றும் குறிப்பிடுகின்றனர். மேலும் சிவகிரி, குருவெற்பு, குருமலை, சுவாமி சைலம் போன்ற பெயர்களும் உண்டு. வடமொழியில் சுவாமிநாதனை "ஞானஸ்கந்தன்'' என்று போற்றுகின்றனர்.

அருணகிரிநாதர் 38 திருப்புகழ்ப் பாடல்களை இந்த சுவாமிநாதனுக்கு பாமாலையாக சூட்டியுள்ளார். சுவாமிமலையைச் சேர்ந்த கடுக்கண் தியாகராஜ தேசிகர் என்பவர் சுவாமிமலை நவரத்தின மாலை என்ற நூலை இயற்றியுள்ளார். "ஒருதரம் சரவணபவா...'' என்று தொடங்கும் நவரத்தின மாலையின் மூன்றாவது பாடல் மிகவும் பிரபலமானது. அவ்வாறே, சங்கீத மூர்த்தி ஸ்ரீமுத்துசுவாமி தீட்சிதர் இயற்றிய, "சுவாமிநாத பரிபாலயாதுமாம்" என்ற நாட்டை ராகக் கிருதியும் மிகவும் பிரபலமானது.

திருவிழாக்கள் விவரம் :   

இங்கு முக்கிய திருவிழாவாக திருக்கார்த்திகை திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது. பிற விழாக்கள் : சித்திரையில் 10 நாள் பிரம்மோற்சவம், வைகாசி விசாகப் பெருவிழா, ஆவணி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் பவித்ரோற்சவம், புரட்டாசி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் நவராத்திரி பெருவிழா, ஐப்பசி மாதத்தில் கந்த சஷ்டி விழா, மார்கழியில் திருவாதிரைத் திருநாள், தை மாதத்தில் தைப்பூசப் பெருவிழா, பங்குனியில் வள்ளி திருக்கல்யாணம் ஆகிய விழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
------------------------------------
திருமண வரம், குழந்தை வரம், குடும்ப ஐஸ்வர்யம், தீர்க்காயுள், கல்வி, கேள்விகளில் சிறந்த ஞானம், உயர் படிப்பு, வேலை வாய்ப்பு, உத்யோக உயர்வு என அனைத்து கோரிக்கைகளுக்கும் இவரை வேண்டி பெருமளவிலான பக்தர்கள் தம் பிராத்தனைகள் நிறைவேறிட, வணங்கிச் செல்கின்றனர்.

சுவாமிநாதனை வழிபட்டால் நமக்கு வரும் இடையூறுகள், நோய்கள், பிராணிகள், பூதம், தீ, நீர், வெள்ளம், செய்த பாவம் ஆகியவற்றால் விளையும் தீமைகள் விலகும் என்பது நிச்சயம்.

கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து ஏராளமான சிற்றுந்துகள் சுவாமி மலைக்கு இயக்கப்படுகின்றன. சிற்றுந்துகள் வழியாக சுவாமிமலை முருகன் கோயில் அருகே சென்று இறங்கி அங்கிருந்து நடந்து செல்லலாம்.

இதுவரை இத்தலத்திற்கு சென்றிருக்காதவர்கள், ஒருமுறை சென்று வாருங்கள். சுவாமிநாதனின் அருளைப் பெற்று வாருங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
--------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

24 comments:

  1. வகுப்பறை..வகுப்பறைதான்... வாத்தியார்.. வாத்தியார்தான்.. விளக்கங்கள் அருமை... தொடர்கிறேன்...!

    ReplyDelete
  2. An Uday vathiyaar ayyavukku vanakkam
    Arumai appan (swamy) muruganai parri vibaram ...Sri Valleee skaanatha smaranam ....Siva subramaniyam

    ReplyDelete
  3. அறிவில் சிறந்தவன் இந்த முருகன். என்ன, அடியார்களை கொஞ்சம் சோதித்தே அருளுவான். (குறும்பன் குணமும் கூடவே உள்ளதே).
    இந்த 'ஓம்' என்பது மந்திரங்களில் முதன்மையானது என்பதற்கு இந்தக் கதை சான்றானது. வேறு எந்த மந்திரமும் இவ்வாறு கதை வழி எல்லோருக்கும் கேட்க கிடைக்கவில்லை.
    மந்திரங்களில் முதன்மையான 'காயத்ரி மந்திரம்' கூட ஓம் என்றே ஆரம்பிக்கிறது.
    எந்த ஒரு மந்திரம் தெரியாவிட்டாலும், ஓம் என்பதை மட்டுமே தினமும் ஓதி வருவதால் ஆன்ம சக்தியில் மாற்றம் ஏற்படுவதை உணரலாம். இன்னும் பலவற்றை வாழ்வில் உணரலாம். இதை முழுமனதுடன் ஓதி வருவோருக்கே இதன் சக்திகளை உணரக்கூடியதாக இருக்கும்.
    'ஓ' என்பதை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதே இந்த 'ம்'. அதனால் அதை மீண்டும் மீண்டும் சரியாக ஆரம்பிக்க முடிகிறது.
    ஓம் முருகா. ஓம் சக்தி

    ReplyDelete
  4. சுவாமிமலையில்தான் எங்கள் திருமணம் 1975ல் நடந்தது.எனவே அந்தத் தலத்தின் மீது எனக்கு எப்போதுமே ஒரு பாசம் உண்டு.

    அருமையான உங்கள் கட்டுரைக்கு நன்றி.

    ReplyDelete
  5. குருவே வணக்கம்.
    இன்றைய பக்தி மலரில் ஞானஸ்கந்தன் பற்றிய தொகுப்பு பக்தி மனம் பரப்புகின்றது.
    அனாகதம் என்றால் என்ன? அதற்கும் சுவாமிமலைக்குமுள்ள தொடர்பு, தலவிருட்சம் மற்றும் முருகன் தகப்பன்சாமியாகிய வரலாறு ஆகிய அனைத்துமே தித்திக்கும் செய்திகள்.
    சுவாமிமலையோனைக் கடந்த ஜூன் மாதம் கூடத் தொழுது வந்தோம், குடும்பத்தாரோடு. மீண்டும் தரிசிக்கச் செல்வோம்.
    வகுப்பறை குருவுக்கும், மாணவ, மாணவியருக்கும் ஞானஸ்கந்தனின் அருள் வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்.

    ReplyDelete
  6. பிரணவத்திற்கு என்ன அர்த்தம்... அதை
    பதிவில் சொல்லவில்லையே..

    ReplyDelete
  7. வணக்கம் குரு,

    ஒரு இருபது வருடங்களுக்கு முன் சுவாமி தரிசனம் பார்த்தேன். இப்போது இந்த பதிவின் மூலமாக இன்று ஒரு தரிசனம் பார்த்ததாக உணர்கிறேன்.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete
  8. அய்யா,
    நான் தினமும் சாமி கும்பிட தவற மாட்டேன், ஆனால் எனது அப்பத்தா சென்ற வாரம் இறந்த காரணத்தினால் 30 நாள்கள் முடியும் வரை கோயிலுக்கு செல்ல கூடாது என்றும், சாமி தரிசனம் செய்ய கூடாது என்றும் கூறி விட்டார்கள். ஆனாலும் எனது சிந்தனை ஆண்டவனை நினைக்காமல் இருந்தது இல்லை. "ஆண்டவனை வணங்குவது தீட்டு என்றால் ஆண்டவனை நினைப்பதும் தீட்டு தானே".
    மனிதன் பிறந்தாலும் தீட்டு, இறந்தாலும் தீட்டு பற்றி விளக்குங்கள்.
    "சிரமத்திற்கு மன்னிக்கவும".

    ReplyDelete
  9. ஐயா வணக்கம்
    நான்காவது படை வீடு பற்றிய பதிவு நன்று.
    ஆறு ஆதாரங்களில் அனாகதம் , சுவாமிமலை யோடு அற்புதம்.
    நன்றி ஐயா
    கண்ணன்

    ReplyDelete
  10. ”அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையா!!!!!!!!!!!!!,
    வாழ்க வளமுடன்,
    -பொன்னுசாமி.

    ReplyDelete
  11. அருமையான கட்டுரை..

    ஓமெழுத்தி லன்பு ...... மிகவூறி
    ஓவியத்தி லந்த ...... மருள்வாயே

    முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
    மொழியேயு ரைத்த ...... குருநாதா

    ......... சொல் விளக்கம் .........

    ஓமெழுத்தி லன்பு ... ஓம் என்னும் பிரணவப் பொருளில் ஈடுபாடு

    மிகவூறி ... மிகவும் ஏற்பட்டு,

    ஓவியத்தி லந்தம் ... யான் சித்திரம் போன்ற மோன நிலை முடிவை (அடைய)

    அருள்வாயே ... அருள்வாயாக.

    முதுமாமறைக்குள் ஒருமாபொருட்குள் ... பழம் பெரும்
    வேதத்தினுள் ஒப்பற்ற சிறந்த பொருளுக்குள்ளே

    மொழியேயு ரைத்த குருநாதா ... பிரணவப் பொருளை சிவனாருக்கு
    உபதேசித்த குருநாதனே,

    அருணகிரிநாதரின் திருப்புகழ் ....நன்றி: கௌமாரம்

    ஸ்ரீ ஸ்வாமி ஸைலே வஸந்தம் ... ஸாது
    ஸங்கஸ்ய ரோகான் ஸதா ஸம்ஹரந்தம்
    ஓங்கார தத்வம் வதந்தம் ... ஸம்பு
    கர்ணே ஹஸந்தம் பஜே ஹம் ஸிஸுந்தம்
    ஹே ஸ்வாமி நாதார்த்த பந்தோ ...

    ஸ்ரீ ஸ்வாமிநாத ஸ்தோத்திரம் (ப்ரம்ம ஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர் இயற்றியது)


    வாத்தியார் வாத்தியார் தான். சில விஷயத்தை புத்தகத்தில் எழத முடியாது.அருணகிரிநாதரே அதை எழத வில்லை.அதனால்தான் பிரணவம் என்ற சொல்லுக்கு பதில் தரவில்லை....

    ReplyDelete
  12. //////Blogger தங்கம் பழனி said...
    வகுப்பறை..வகுப்பறைதான்... வாத்தியார்.. வாத்தியார்தான்.. விளக்கங்கள் அருமை... தொடர்கிறேன்...!/////

    நல்லது. தொடர்ந்து வாருங்கள். நன்றி!

    ReplyDelete
  13. /////Blogger hamaragana said...
    An Uday vathiyaar ayyavukku vanakkam
    Arumai appan (swamy) muruganai parri vibaram ...Sri Valleee skaanatha smaranam ....Siva subramaniyam/////

    நல்லது. நன்றி கணபதியாரே!

    ReplyDelete
  14. /////Blogger Mrs Anpalagan N said...
    அறிவில் சிறந்தவன் இந்த முருகன். என்ன, அடியார்களை கொஞ்சம் சோதித்தே அருளுவான். (குறும்பன் குணமும் கூடவே உள்ளதே).
    இந்த 'ஓம்' என்பது மந்திரங்களில் முதன்மையானது என்பதற்கு இந்தக் கதை சான்றானது. வேறு எந்த மந்திரமும் இவ்வாறு கதை வழி எல்லோருக்கும் கேட்க கிடைக்கவில்லை.
    மந்திரங்களில் முதன்மையான 'காயத்ரி மந்திரம்' கூட ஓம் என்றே ஆரம்பிக்கிறது.
    எந்த ஒரு மந்திரம் தெரியாவிட்டாலும், ஓம் என்பதை மட்டுமே தினமும் ஓதி வருவதால் ஆன்ம சக்தியில் மாற்றம் ஏற்படுவதை உணரலாம். இன்னும் பலவற்றை வாழ்வில் உணரலாம். இதை முழுமனதுடன் ஓதி வருவோருக்கே இதன் சக்திகளை உணரக்கூடியதாக இருக்கும்.
    'ஓ' என்பதை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதே இந்த 'ம்'. அதனால் அதை மீண்டும் மீண்டும் சரியாக ஆரம்பிக்க முடிகிறது.
    ஓம் முருகா. ஓம் சக்தி//////

    உண்மைதான். உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  15. ///Blogger kmr.krishnan said...
    சுவாமிமலையில்தான் எங்கள் திருமணம் 1975ல் நடந்தது.எனவே அந்தத் தலத்தின் மீது எனக்கு எப்போதுமே ஒரு பாசம் உண்டு.
    அருமையான உங்கள் கட்டுரைக்கு நன்றி.////

    உங்களுடைய திருமணம் நடந்த செய்தியைக் கொடுத்தமைக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  16. ////Blogger வரதராஜன் said...
    குருவே வணக்கம்.
    இன்றைய பக்தி மலரில் ஞானஸ்கந்தன் பற்றிய தொகுப்பு பக்தி மனம் பரப்புகின்றது.
    அனாகதம் என்றால் என்ன? அதற்கும் சுவாமிமலைக்குமுள்ள தொடர்பு, தலவிருட்சம் மற்றும் முருகன் தகப்பன்சாமியாகிய வரலாறு ஆகிய அனைத்துமே தித்திக்கும் செய்திகள்.
    சுவாமிமலையோனைக் கடந்த ஜூன் மாதம் கூடத் தொழுது வந்தோம், குடும்பத்தாரோடு. மீண்டும் தரிசிக்கச் செல்வோம்.
    வகுப்பறை குருவுக்கும், மாணவ, மாணவியருக்கும் ஞானஸ்கந்தனின் அருள் வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்.////

    உங்களின் பிரார்த்தனைக்கு நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  17. ///Blogger வேப்பிலை said...
    முருகா...
    முருகா./////

    வருவாய்
    அருள்வாய்
    குகனே!

    ReplyDelete
  18. ///Blogger வேப்பிலை said...
    பிரணவத்திற்கு என்ன அர்த்தம்... அதை
    பதிவில் சொல்லவில்லையே../////

    நீங்கள் சொல்லட்டும் என்றுதான் அதை நான் சொல்லவில்லை வேப்பிலையாரே!

    ReplyDelete
  19. /////Blogger selvam velusamy said...
    வணக்கம் குரு,
    ஒரு இருபது வருடங்களுக்கு முன் சுவாமி தரிசனம் பார்த்தேன். இப்போது இந்த பதிவின் மூலமாக இன்று ஒரு தரிசனம் பார்த்ததாக உணர்கிறேன்.
    நன்றி
    செல்வம்//////

    அப்படியா. நன்று நண்பரே!

    ReplyDelete
  20. /////Blogger C.Senthil said...
    அய்யா,
    நான் தினமும் சாமி கும்பிட தவற மாட்டேன், ஆனால் எனது அப்பத்தா சென்ற வாரம் இறந்த காரணத்தினால் 30 நாள்கள் முடியும் வரை கோயிலுக்கு செல்ல கூடாது என்றும், சாமி தரிசனம் செய்ய கூடாது என்றும் கூறி விட்டார்கள். ஆனாலும் எனது சிந்தனை ஆண்டவனை நினைக்காமல் இருந்தது இல்லை. "ஆண்டவனை வணங்குவது தீட்டு என்றால் ஆண்டவனை நினைப்பதும் தீட்டு தானே".
    மனிதன் பிறந்தாலும் தீட்டு, இறந்தாலும் தீட்டு பற்றி விளக்குங்கள்.
    "சிரமத்திற்கு மன்னிக்கவும".//////

    எல்லாவற்றிற்கும் மனதுதான் காரணம். ஆண்டவனை வணங்குவதற்கும், நினைப்பதற்கும் எந்த கண்டிஷனும் கிடையாது. அதை மனதில் வையுங்கள்!

    ReplyDelete
  21. ////Blogger lrk said...
    ஐயா வணக்கம்
    நான்காவது படை வீடு பற்றிய பதிவு நன்று.
    ஆறு ஆதாரங்களில் அனாகதம் , சுவாமிமலை யோடு அற்புதம்.
    நன்றி ஐயா
    கண்ணன்/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  22. ////Blogger GOWDA PONNUSAMY said...
    ”அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையா!!!!!!!!!!!!!,
    வாழ்க வளமுடன்,
    -பொன்னுசாமி./////

    உண்மைதான். நன்றி பொன்னுசாமி அண்ணா!

    ReplyDelete
  23. Blogger Chandrasekaran Suryanarayana said...
    அருமையான கட்டுரை..
    ஓமெழுத்தி லன்பு ...... மிகவூறி
    ஓவியத்தி லந்த ...... மருள்வாயே
    முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
    மொழியேயு ரைத்த ...... குருநாதா
    ......... சொல் விளக்கம் .........

    ஓமெழுத்தி லன்பு ... ஓம் என்னும் பிரணவப் பொருளில் ஈடுபாடு
    மிகவூறி ... மிகவும் ஏற்பட்டு,
    ஓவியத்தி லந்தம் ... யான் சித்திரம் போன்ற மோன நிலை முடிவை (அடைய)
    அருள்வாயே ... அருள்வாயாக.
    முதுமாமறைக்குள் ஒருமாபொருட்குள் ... பழம் பெரும்
    வேதத்தினுள் ஒப்பற்ற சிறந்த பொருளுக்குள்ளே
    மொழியேயு ரைத்த குருநாதா ... பிரணவப் பொருளை சிவனாருக்கு
    உபதேசித்த குருநாதனே,
    அருணகிரிநாதரின் திருப்புகழ் ....நன்றி: கௌமாரம்
    ஸ்ரீ ஸ்வாமி ஸைலே வஸந்தம் ... ஸாது
    ஸங்கஸ்ய ரோகான் ஸதா ஸம்ஹரந்தம்
    ஓங்கார தத்வம் வதந்தம் ... ஸம்பு
    கர்ணே ஹஸந்தம் பஜே ஹம் ஸிஸுந்தம்
    ஹே ஸ்வாமி நாதார்த்த பந்தோ ...
    ஸ்ரீ ஸ்வாமிநாத ஸ்தோத்திரம் (ப்ரம்ம ஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர் இயற்றியது)
    வாத்தியார் வாத்தியார் தான். சில விஷயத்தை புத்தகத்தில் எழத முடியாது.அருணகிரிநாதரே அதை எழத வில்லை.அதனால்தான் பிரணவம் என்ற சொல்லுக்கு பதில் தரவில்லை....//////

    அமெரிக்காவில் இருந்து கொண்டு இத்தனை சிரத்தையுடன் ஆன்மிக ஈடுபாடு கொள்வதற்கு, உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது என்பதுதான் ஆச்சரியமான விஷயம். நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com