மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

7.1.19

சிகரெட் பற்றிய சுஜாதாவின் சுவாரஸ்யமான கட்டுரை!!!!


சிகரெட் பற்றிய சுஜாதாவின் சுவாரஸ்யமான கட்டுரை!!!!

சுஜாதா அவர்களின் புகை பிடிக்கும் பழக்கம் - ஒரு சிகரெட் எழுதும் கட்டுரை (pressbooks என்ற வலைமனையில் வந்த ஒரு சுவாரஸ்யமான பதிவு) .

சுஜாதா ஒரு ஸ்மோக்கர் என்பதும், அந்தப் பழக்கத்தை உதறியும், வருடக் கணக்கில் நிறைய புகைத்ததின் காரணமாகவே மூச்சுத் திணறல் ஏற்பட்டு (வேறு பல உபாதைகள் இருந்திருந்தாலும்) அவர்
நம்மைவிட்டு சீக்கிரமே பிரிந்த சோகமும் நிகழ்ந்தது....இதை ஒரு சிகரெட் (தன்மை ஒருமையில்) கூறினால் எப்படி இருக்கும் என்ற நோக்கில் அமைந்தது இந்தக் கட்டுரை....

சுஜாதாவின் காதல்கள்:

ப்ளேயர்ஸ், கோல்டு ப்ளேக், வில்ஸ் ஃபில்டர் என என் மூன்று வடிவங்களை அடுத்தடுத்து காதல் செய்த  எழுத்தாளர் சுஜாதாஅவர்கள் என்னை பிரேக்-அப், அதாங்க கழட்டி விட்டதன் இரகசியம் பற்றி என்ன  கூறி இருக்கிறார் என பாருங்கள்.

“பற்ற வைப்பதற்கு முன் ஒரு நிமிஷம்..!” என்ற தலைப்போடு, கற்றதும் பெற்றதும் பகுதியில் 29.12.2002 ஆனந்தவிகடனில் அவர் என்ன எழுதியிருக்கிறார் என்று! நீங்கள் என்னை விட்டு விட உங்களுக்கு மிகவும் உதவிகரமாய் இருக்கும்.

=========================

இனி சுஜாதா (அவருடைய வார்த்தைகளில்)  .....

“மூச்சு ஆராய்ச்சி நிறுவனம் (ரெஸ்பிரேட்டரி ரிசர்ச்ஃபவுண்டேஷன்) சென்னை வடகிழக்கு ரோட்டரி சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், டாக்டர் நரசிம்மன் அவர்கள்
கிரானிக்அப்ஸ்ட்ரக்டிவ் பல்மனரி டிசீஸ் (C.O.P.D- பிடிவாதமான சுவாசத்தடை வியாதி) மனிதனைக் கொல்வதில், மூன்றாவது இடத்திற்கு வந்திருக்கிறது என்று சொன்னார். இதய நோய், புற்றுநோய் போன்றவை மெள்ள மெள்ள குறைந்து வரும்போது ஸி.ஓ.பி.டி முதலிடத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறதாம்.

இந்தக் கூட்டத்தில் புகைப்பதை கைவிடுவது எப்படி என்கிற தலைப்பில் உரையாற்ற அழைத்திருந்தார்கள். இதற்கு நான் தகுதியான ஆள்தான். 1986 வரை ஒரு நாளைக்கு பாக்கெட் சிகரெட்
– ப்ளேயர்ஸ், பிறகு கோல்டு ப்ளேக், இறுதியாக வில்ஸ் ஃபில்டர் பிடித்தவன். அதை ஒரே நாளில் கைவிட்டவன்.

சிகரெட் பழக்கம் தற்செயலாகத்தான் ஏற்படுகிறது. குறிப்பாக வீட்டில் கட்டுப்பாடாக வளர்ந்த இளைஞர்கள் அதை ஒருவிதமான defiance (எதிர்ப்பு காட்டும் மனப்ப்பான்மை) ஆகப் பழகிக் கொள்கிறார்கள். ஸ்ரீரங்கத்தில் குடுமி வைத்துக்கொண்டு
பிரபந்தம் சொல்லிக்கொண்டிருந்த நண்பன் வேலை கிடைத்து, டெல்லி வந்து குடுமியை நறுக்கிய கையோடு மகாவிஷ்ணு
சங்கு சக்கரம் போல் கையில் ‘பனாமா’ பற்றவைத்துக் கொண்டான். ரிட்டயட் ஆனப்புறம்தான் நிறுத்தினான்.

இக்கால இளைஞர்கள் பெண் சிநேகிதிகள் முன்னால் ஸ்டைலாக சிகரெட் பற்றவைத்து ஒரு இழுத்து

இழுத்து விட்டுப் பேசிக் கொண்டே வார்த்தை வார்த்தையாக புகையை வெளிவிடுவது ரொம்ப ஸ்டைலாக இருக்கும். சில காதலிகளும் இதைக் கல்யாணம் வரை விரும்புவார்கள். பிள்ளை பிறந்ததும் அதன் தலைமேல் சிகரெட் புகை வாசனை வரும்போது பழக்கத்தை கைவிட்டே ஆகவேண்டும். இல்லையேல் சுளுக்கு.

என் சிகரெட் பழக்கம்… எம்.ஐ.டி. (M.I.T) ஹாஸ்டலில் வெள்ளிக்கிழமை மெஸ்ஸில் டின்னர் கொடுக்கும்
போது ஒரு 555 சிகரெட் தருவார்கள். அப்போதெல்லாம் அதன் விலை நாலணா. அதை நண்பனிடம் கொடுத்து அவன் புகை வளையம் விடுவதை வேடிக்கை பார்ப்பேன். ஒரு நாள் நாமே குடித்துப்
பார்க்கலாமே என்று தோன்றியதில் பழக்கம் ‘பச்சக்’ என்று ஒட்டிக்கொண்டது.

சிகரெட் பழக்கம் ஒரு சனியன். லேசில் நம்மை விடாது. ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் என்னுடன் அது இருந்தது. சில சமயம் சிகரெட் பிடிப்பதற்காகவே எதையாவது சாப்பிடுவேன். கொல்லைப்புறம்
போவதற்கு சிகரெட் பிடித்தாக வேண்டும்.

சாப்பிட்டவுடன் கட்டாயம் பிடிப்பேன். சிந்தனா சக்தி வேண்டும் என்று வெத்து காரணம் சொல்லி பற்றவைத்து விரலிடுக்கில் வைத்து சாம்பலை சொடுக்குவேன். இதனால் பல சுவைகளை, வாசனைகளை இழந்தேன். இவ்வாறு அது என்னை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்த போது அவ்வபோது ‘ச்சே’
என்று தோன்றி நிறுத்திவிடத் தீர்மானிப்பேன். ஒவ்வொரு புதுவருஷமும் தவறாத வைராக்கியமாக சிகரெட்டை நிறுத்துவேன். அது சில சமயம் பிப்ரவரி வரி நீடிக்கும். சில சமயம் ஜனவரி 2ம் தேதி வரை. பெங்களூரில் ஒரு முறை செக்கப்புக்கு போனபோது டாக்டர் பரமேஸ்வரன் “ரங்கராஜன், நீ சிகரெட் பழக்கத்தை கைவிட வேண்டும்” என்றார்.

“ஏன்?’ என்றேன். ‘உன் ஹார்ட் சரியில்லை” என்றார்.

“எப்போதிலிருந்து விட வேண்டும்? என்று கேட்டதற்கு ‘நேற்றிலிருந்து” என்றார். “கைவிடாவிட்டால் என்ன ஆகும்?” என்றேன். “ஹார்ட் அட்டாக்… லங்கேன்சர்.. யூ ச்சூஸ்.. நீதான் எத்தனையோ படிக்கிறாயே… உனக்கு சொல்ல வேண்டுமா?”

இந்த முறை பயம் வந்து விட்டது. ஞாபகம் வைத்துக் கொள்வதற்குத் தோதாக ஆகஸ்ட் பதினைந்தைத் தேர்ந்தெடுத்து பெல்காலனி தெருநாய் ஜிம்மி உள்பட அனைத்து நண்பர்களிடமும், “நான் சிகரெட்டை  நிறுத்திவிட்டேன்” என்று அறிவித்தேன். இது முக்கியம். யாராவது நான் புகைபிடிப்பதை பார்த்தால் உடனே உலகத்துக்கும் மனைவி மக்களுக்கும் தகவல் சொல்லிவிடும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தினேன்.

சிகரெட் பழக்கம் என்பது பைனரி இதைத் தெளிவாக உணரவேண்டும். ஜாதிகள் இரண்டொழிய வேறில்லை. – சிகரெட் பிடிப்பவர், பிடிக்காதவர், அவ்வளவுதான். குறைவாக பிடிப்பவர்… எப்போதாவது பிடிப்பவர்… இதெல்லாம் ஏமாற்று வேலை. கைவிடுவதாக இருந்தால் முழுவதும் கைவிட வேண்டும்.

இருபது சிகரெட்டிலிருந்து பத்து, பத்திலிருந்து 8 என்று குறைப்பதெல்லாம் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வது. முதல் தினம் நரகம். முதல் வாரம் உபநரகம். சிகரெட் இல்லாமல் உலகமே பாழாகி இருக்கும்… இந்த இம்சை தேவையா என்ற ஏக்கத்தைச் சமாளிக்க நிறைய ஐஸ்வாட்டர் குடிக்க வேண்டும். சிகரெட்டுக்கு பதிலாக பாக்கு, பான்பராக்என்று புகையிலையின் எந்த வடிவமும் கூடாது.

வேறு ஏதாவது வேலையில் கவனம் செலுத்துவது உத்தமமானது. நீங்கள் விட்டுவைத்த புல்புல்தாரா வாசிப்பது, இயற்கை காட்சிகளை வரைவது, கவிதை எழுதுவது போன்ற பயனுள்ள பொழுது போக்குகளைத் தொடரலாம்.

உதடுகளில் லேசாக நடுக்கம் ஏற்படும் போதெல்லாம் குளிர்ந்த தண்ணீர் குடித்துவிட்டு "யார் தெச்ச சட்டை… எங்க தாத்தா தெச்ச சட்டை… தாத்தா தெச்சசட்டை சட்டைப்பைல பாத்தா ரெண்டு முட்டை” என்று தொடர்ந்து சொல்ல வேண்டும். பக்கத்தில் இருப்பவர்கள் புகார் செய்தால், “ஒரு வாரம் அப்படித்தான் இருக்கும்” என்று அவர்கள் மேல் பாயலாம். யாரையாவது அடிக்க வேண்டும் போல இருக்கும். அதற்கு வசதியில்லையென்றால் ஒரு மேளம் வாங்கிக் கொள்ளுங்கள்… கூடவே  உதைப்பதற்கு ஒரு கால்பந்தும், சுழற்ற ஒரு சாவிச் சங்கிலியும் வைத்துக் கொள்ளலாம். (கண்
ஜாக்கிரதை) ஒரு வாரமானதும் பழக்கம் லேசாக வாலைச் சுருட்டிக் கொள்ளும். நாட்களை எண்ணத் துவங்கலாம். தமிழ்ப்படங்கள் போல வெற்றிகரமான பத்தாவது நாள்… இன்று பதினைந்தாவது நாள்..சூப்பர்ஹிட் ஐந்தாவது வாரம்.. இப்படி, மெள்ளமெள்ள நண்பர்களிடம், மனைவியிடம் பீற்றிக் கொள்ளத் துவங்கலாம். போஸ்டர் கூட ஒட்டலாம். ஆனால், இந்தக் கட்டத்தில் சிகரெட் குடிக்கும் நண்பர்கள் அருகே செல்வதும் மிதப்புக்காகப் பையில் குடிக்காமல் சிகரெட்வைத்துக் கொள்வதும் விஷப் பரீட்சைகள்.

பழக்கத்தை விட்ட நாற்பத்தெட்டாவது நாள் முதல் மைல்கல் தாண்டி விட்டீர்கள். ஒரு சிகரெட்டை எடுத்து அதைப் பற்ற வைக்காமல் மூக்கில் ஒட்டிப்பார்த்து விட்டு ‘ச்சீ நாயே’ என்று சொல்ல முடிந்து,

அழுகை வராவிட்டால் பரீட்சையில் பாஸ். இனியெல்லாம் சுகமே.

சிகரெட் பழக்கம் நம்முடன் அஞ்சு வருஷம் தேங்குகிறது என்று டைம் பத்திரிக்கையில் படித்தேன்.

அதாவது சிகரெட்டை நிறுத்துன அஞ்சு வருஷத்துக்குள் ஒரு சிகரெட் பிடித்தாலும் மறுதினமே பழைய ஞாபகம் உசுப்பப்பட்டு பத்தோ, இருபதோ வழக்கமான கோட்டாவுக்கு போய்விடுவீர்கள். அஞ்சு வருஷம் தாண்டிவிட்டால் பழக்கம் போய்விடுகிறது.”

நன்றி: ஆனந்த விகடன்

மனுஷன் பெரிய ஆளுதான். எல்லாவற்றையும் சரியாக ஆராய்ச்சி செய்து கன கச்சிதமாய் எழுதியிருக்கிறார். அவர் சொன்னதையெல்லாம் இன்னும் விரிவாகச் சொல்லி உங்களுக்கு
உதவப்போகிறேன், அவ்வளவுதான்! என்னையும், தன்னையும் உணர்ந்த மனிதர்!

--இப்படிக்கு சிகரெட் (உங்களுக்கு பிடித்த ப்ராண்ட் பெயரை சேர்த்துக் கொள்ளுங்கள்)
------------------------------------------------------------------
படித்ததில் இரசித்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4 comments:

  1. Thanks for the article Sir!Luckily I do not have that habit Sir.

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    என் ஆழ்ந்த மனத்தின் அடியில் என்னேன்றும்ம் வாழ்ந்து கொண்டிருக்கும் செல்ல உள்ளம் படைத்த வெள்ளை மனிதர் சுஜாதா
    அவர்களின் பல்லாயிரம் படைப்பில்
    தன்னை முன்னிறுத்தி ஒரு பெரிய பாபச் செயலில் இருந்து விடுபட வழி
    சொல்லியிருக்கும் இக்கட்டுரை வரவேர்க்கத் தக்கது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை!
    நல்ல பதிவைத் தந்தமைக்கு நன்றிகள் வாத்தியரையா!

    ReplyDelete
  3. //////Blogger kmr.krishnan said...
    Thanks for the article Sir!Luckily I do not have that habit Sir./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!

    ReplyDelete
  4. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    என் ஆழ்ந்த மனத்தின் அடியில் என்னேன்றும்ம் வாழ்ந்து கொண்டிருக்கும் செல்ல உள்ளம் படைத்த வெள்ளை மனிதர் சுஜாதா
    அவர்களின் பல்லாயிரம் படைப்பில்
    தன்னை முன்னிறுத்தி ஒரு பெரிய பாபச் செயலில் இருந்து விடுபட வழி
    சொல்லியிருக்கும் இக்கட்டுரை வரவேர்க்கத் தக்கது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை!
    நல்ல பதிவைத் தந்தமைக்கு நன்றிகள் வாத்தியரையா!/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com