மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

9.7.10

சிவல்புரியாரின் கவிதைகள்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சிவல்புரியாரின் கவிதைகள்                       
---------------------------------------------------------------------------------------------------------
("நெஞ்சைத் தொட்ட கவிதைகள்" என்ற தலைப்பில் அடியவன் எழுதி மாத இதழ் ஒன்றில் வெளிவந்த தொடர் கட்டுரையிலிருந்து கவிஞர் திரு.சிவல்புரி சிங்காரம் அவர்களின் கவிதைகளைப் பற்றிய பகுதிகள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது)
----------------------------------------------------------------------------------------------------------
                                                                பகுதி 1
    கடவுள் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது - அதனால்தான் தாயைப் படைத்தார் என்றான் ஒரு சிந்தனையாளன்.
   
    அதைப்போலவே எல்லா உள்ளங்களுக்கும் நெகிழ்ச்சியைத் தரமுடியாது என்றுதான் கடவுள் கவிஞர்களைப் படைத்தார் போலும் !

    காலை நேரத்தில் குளிர்ந்த காற்றிடையே  தவழ்ந்து வருகிறது ஒரு பாடல்

" ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்
    அருள்மொழி கூறும் பறவையின்  ஒலி கேட்டேன்"


    நம் மனது நெகிழ்ந்து ஆஹா ! என்கிறது. அதுவரை யில் சாதாரணமாகத் தெரிந்த பறவைகளின் ஒலி இப்பொழு தெல்லாம்  அருள்மொழியாகவே தெரிகின்றது ! கவியரசர் கண்ணதாசன் அவர்களின் கைவண்ணத்தால் வந்த பாடலிது

    தை' என்றால் நமக்கு தை மாதம் மட்டும்தான் சட்டென்று நினைவிற்கு வரும். ஆனால் ஒரு கவிஞருக்கு தை' என்றவுடன் என்னவெல்லாம் நினைவிற்கு வருகின்றது பாருங்கள்   

" அத்தையென்றால் எல்லோர்க்கும் தெரியும் ! இங்கே
    அப்பாவின் சோதரியை அழைப்ப துண்டு !
  வித்தையென்றால் நாம்கற்றுக் கொள்ளு கின்ற
    விநோதமிகு பாடங்கள் ! ஊர்ந்து செல்லும்
  நத்தையென்றால் ஒருபூச்சி ! பழம ரத்தில்
    நாரத்தையென ஒருமரத்தைச் சொல்லு வார்கள்
  சொத்தையென்பார் பயன்படாத பொருளை எல்லாம் !
    சுகத்தை யெலாம் விரும்பாதோர் யாருமுண்டோ ? "


    இதுபோல் இருபத்தைந்து 'தை' களைப் பாடலில் எழுதியுள்ளார். வை" யை வைத்தும் பாடல் எழுதியுள்ளார். வை'யென்று வரும் 32 சொற்கள் பாடலில் வந்து நம்மை அசத்தி விடுகின்றன!

" கோவை யென்றால் ஊர்ஒன்றின் பெயர தாகும் !
     கொவ்வை யென்றால் காய்ஒன்றின் பெயர தாகும் !
  பாவை யென்றே பெண்களைத்தான் அழைப்ப துண்டு !
      பறவை யென்றால் ஐயறிவு படைத்த தாகும் !
  தேவை யென்றால் நாம் தேடும் பொருளதாகும்
      திறவை யென்றால் திறக்கின்ற சாவியாகும் !
  பூவை யென்பார் பூத்துவந்த பெண்க ளைத்தான் !
       புதுவை யென்றால் புதுச்சேரி நகரம் தானே ! "


    செட்டிநாட்டுத் திருமணங்களில் சாமான் பரப்புவது என்பது சம்பிரதாயம் மட்டுமல்ல - ஒரு கலையாகவும் இருக்கும். அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்
சாமான்களைக் கவிஞர் எப்படி அடுக்கிச் சொல்கின்றார் பாருங்கள்

" பொங்கலிடும் உருளியுடன், விளக்குச் சட்டி,
      புதுவிதத்தில் அன்னமுள்ள சரவி ளக்கு,
  மஙகலத்தைத் தரும்மாட விளக்கு, கூசா,
       மணக்கவைக்கும் டிக்காசப் போணி மூன்று,
  தங்கநிறம் போல்தாயும் மூடிச் சட்டி,
       தாமிரத்தில் மிகப்பெரிய தண்ணி அண்டா,
  சிங்கார மாப்பிள்ளைக்கு சோறெ  டுக்க
      தெளிவான டிபன்பாக்ஸ்ம், சேர்த்து வைத்தார் ! "


" முக்காலி, தீவட்டி, அண்டா தட்டு,
       முளைப்பாரி சருவங்கள் எட்டு, மேலும்
  எக்காலும் தண்ணீரைத் தூக்கி வந்து
      இயல்பாக வைத்திருக்க குடங்கள் பத்து,
  தக்காளிப் பழநிறத்துப் பெண்ணுக் காக
       தஙகம்போல் மின்னலிட வெங்கலத்தில்
  சொக்கவைக்கும் சாமான்கள் நிறையச் சேர்த்தார் !
    தொழிலகம் போல் வீட்டிற்குள் அடுக்கிவைத்தார் ! "

    சுவை கருதி ஒவ்வொரு பாடலுக்கும் சில வரிகளைத்தான் கொடுத்துள்ளேன்.

    எழுதியவர் யாரென்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது அல்லவா ?

    கீழச்செவல்பட்டிக்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும்
கவிஞர் சிவல்புரி சிங்காரம் அவர்கள்தான் அவற்றை எழுதியவர்.

    எல்லோரும் ஒரு துறையில் புகழ் பெறுவதே மிகவும் கடினம்.
ஆனால் கவிஞர் பெருமகனார் பல துறைகளில் புகழ் பெற்றவராவார் !

    ஆமாம் ! கவிஞர் ஜோதிடத்துறையிலும் புகழ் பெற்றவர். மிகச் சிறந்த மேடைப் பேச்சாளரும் ஆவார் !

    தேவகோட்டையில் சென்றவருடம் நடந்த கந்த சஷ்டி விழாக் கவியரங்கத்தில் 'அவை வணக்கத்தில்' கவிஞர் தன்னைப்பற்றிச்சொன்ன வரிகள் இதோ:

    " மாதிடம் கொண்டோருக்கும்
        மனத்திடம் இல்லாருக்கும்
      சோதிடத்தாலே வாழ்வில்
        சுகத்தினை ஊட்டுகின்ற
      சிவல்புரி  சிங்காரத்தின்
        சிரம்தாழ்ந்த  வணக்கங்கள் !

      திரளான மக்கள்
        தினம்படிக்கும் தினத்தந்தி
      இரண்டாம் பக்கத்தில்
        எந்நாளும் இருப்பவன்நான் !
      எண்கலை வித்தகர்'
        எனும்பட்டம் பெற்றவன்நான் !  


 " கண்கள் பற்றிப் பாடுஎன்றால் காதலிக்கக் கற்கவேண்டும்
   புண்கள் பற்றிப் பாடுஎன்றால் மருத்துவத்தைக் கற்கவேண்டும்
   மண்/கல் பற்றிப் பாடுஎன்றால் மண்ணியலைக் கற்கவேண்டும்
   எண்கள் பற்றிப் பாடுஎன்றால் எனக்குஅது எளிதன்றோ !


என்று கூறும் கவிஞர் மேலும் ஒன்பது கோள்களுக்கும் எண்களுக்கும் உள்ள தொடர்பை தன் பாடல் ஒன்றில் விளக்கமாகச் சொல்கின்றார்

    "ஒன்றென்றால் சூரியனும்
        இரண்டென்றால் சந்திரனும்
    மூன்று என்றால் குருவும்
        நான்கு என்றால் ராகுவும்
    ஐந்து என்றால் புதனும்
        ஆறுஎன்றால் சுக்கிரனும்
    ஏழுஎன்றால் கேதுவும்
        எட்டுஎன்றால் சனியும்
    ஒன்பதுஎன்றால் செவ்வாயும்
        உச்சரிக்கும் ஜோதிடன்நான் ! "


    அதோடு மட்டுமா - சந்தோஷத்தை நாளும் வழங்கும் சனி பகவானுக்காக 'சனி பகவான் கவசம்' ஒன்றையும் எழுதி, வாழ்வில் வளம்பெற அதைத் தினமும் எட்டு முறை படித்து வாருங்கள் என்கிறார்

    64 வரிகளைக்கொண்ட அந்தப்பாடல் அற்புதமாக உள்ளது.
அதை நம்பிக்கையோடு படித்தால் அர்த்தாஷ்டசனி, அஷ்டமச் சனி, ஏழரைச்சனியென்று சிரமப்படுபவர்கள்கூட சிரமங்கள் குறைந்து நலமடைவார்கள் - அந்தப் பாடலை விரிவாக அடுத்த இதழில் பார்ப்போம். அதுவரை பொறுத்திருக்க வேண்டுகிறேன்.

----------------------------------------------------------------------------------------------
                                                             பகுதி 2
    கிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்றவர் சனி பகவான் ஒருவர்தான். மற்றவர்களுக்கெல்லாம் அந்தச் சிறப்பு இல்லை!

    சனீஸ்வரன் கர்மகாரகன் என்றும் பட்டம் பெற்றவர்.

    சனி பகவானின் அருள் இருந்தால்தான் நாம் செய்யும் எல்லாக் காரியங்களுமே தடையின்றி, சிரமங்களின்றி ஈடேறும்!

    சென்றஇதழில் கூறியது போல சனி பகவானைச் சிறப்பாக வழிபடக் கவிஞர் சிவல்புரி சிங்காரம் அவர்கள் எழுதிய சனி பகவான் கவசத்தை முழுமையாகக் கீழே கொடுத்துள்ளேன்.

    'தினத்தந்தி' ஜோதிடர், எண்கலை வித்தகர், செட்டிநாடு கிரிவலக் குழுத் தலைவர் என்னும் பல சிறப்புக்களைப்பெற்ற சிவல்புரி சிங்காரம் அவர்கள் இந்தக் கவசத்தின் தலைப்பில்  சந்தோஷத்தை நாளும் வழங்கும் சனி பகவான் கவசம் என்றும், தினசரி எட்டுமுறை படித்து வாழ்வில் வளம் பெறுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    ஆகவே நம்பிக்கையோடு எட்டுமுறைகள் தினமும் படிப்போம். எட்டாவனவெல்லாம் நமக்கு வாழ்வில் எட்டட்டும்!

    கருநிறக் காகம் ஏறி காசினி தன்னைக் காக்கும்
    ஒருபெரும் கிரகமான ஒப்பற்ற சனியே!உந்தன்
    அருள் கேட்டு வணங்குகின்றேன்!ஆதரித்தெம்மைக் காப்பாய்!
    பொருளோடு பொன்னை அள்ளி பூவுலகில் எமக்குத் தாராய்!

    ஏழரைச் சனியாய் வந்தும் எட்டில் இடம் பிடித்தும்
    கோளாறு நான்கில் தந்து கொண்டதோர் கண்ட கத்தில்
    ஏழினில் நின்ற போதும் இன்னல்கள் தாரா வண்ணம்
    ஞாலத்தில் எம்மைக் காக்க நம்பியே தொழுகின்றேன் நான்!

    பன்னிரு ராசி கட்கும் பாரினில் நன்மை கிட்ட,
    எண்ணிய எண்ணம் எல்லாம் ஈடேற வழிகள் காட்ட
    எண்ணையில் குளிக்கும் நல்ல ஈசனே உனைத்துதித்தேன்!
    புண்ணியம் எனக்கு தந்தே புகழ் கூட்டவேண்டும் நீயே!

    கருப்பினில் ஆடை ஏற்றாய் காகத்தில் ஏறி நின்றாய்!
    இரும்பினை உலோகமாக்கி எள்தனில் பிரியம்வைத்தாய்!
    அரும்பினில் நீல வண்ணம் அணிவித்தால் மகிழ்ச்சி கொள்வாய்
    பெரும் பொருள்வழங்கும் ஈசா பேரருள் தருக நீயே!

    சனியெனும் கிழமை கொண்டாய் சங்கடம் விலக வைப்பாய்!
    அணிதிகழ் அனுஷம், பூசம் ஆன்றதோர் உத்திரட்டாதி,
    இனிதே உன் விண்மீனாகும்! எழில்நீலா மனைவியாவாள்!
    பணியாக உனக்கு ஆண்டு பத்தொன்போதென்று சொல்வர்!
   
    குளிகனை மகனாய்ப் பெற்றாய் குறைகளை அகல வைப்பாய்!
    எழிலான சூரியன் உன் இணயற்ற தந்தை யாவார்!
    விழிபார்த்து பிடித்து கொள்வாய்! விநாயகர்,அனுமன் தன்னை
    தொழுதாலோ விலகிச் செல்வாய்! துணையாகி அருளைத் தாராய்!

    அன்னதானத்தின் மீது அளவிலாப் பிரியம் வைத்த
    மன்னனே! சனியே! உன்னை மனதார போற்றுகின்றோம்!
    உன்னையே சரணடைந்தோம்! உயர்வெல்லாம் எமக்குத் தந்தே
    மன்னர் போல் வாழ்வதற்கே மணியான வழிவகுப்பாய்!

    மந்தனாம் காரி, நீலா மணியான மகர வாசா!
    தந்ததோர் கவசம் கேட்டே சனியெனும் எங்கள் ஈசா!
    வந்திடும் துயரம் நீக்கு! வாழ்வினை வசந்தம் ஆக்கு!
    எந்தநாள் வந்த போதும் இனியநாள் ஆக மாற்று!

    சனி பகவானைப் பற்றிய அத்தனை செய்திகளும் இடம் பெற்றுள்ளதும், அவரை மனம் உருக வணங்கினால் என்னென்ன சிரமங்கள் நீங்கும் என்ற விபரங்களும் இடம் பெற்றிருப்பதும்தான் கவிஞர் பெருமகனார் எழுதியுள்ள இப்பாடலின் சிறப்பாகும்.

    இந்தப் பாடல் நம் நெஞ்சைத் தொடுவது மட்டுமல்லாமல், நம் நெஞ்சில் ஆசனம் போட்டு அமர்ந்து கொள்வதற்குப் பாடலின் மேற்கூறிய சிறப்புக்களோடு, பாமரனும் புரிந்துகொள்ளும் வகையில் மிக எளிய நடையில், சொற்களில் சிவல்புரியார் அவர்கள் பாடலை எழுதி யிருப்பதும் ஒரு முக்கிய காரணம் ஆகும்!

    திங்கள் முகத்துப் பெண்ணரசி, திருவருள் நல்கும் கண்ணரசியான தையல் நாயகியைப் பற்றியும் கவிஞர் பெருந்தகை அவர்கள் பல அற்புதமான பாடல்களை எழுதியுள்ளார்.

    வைத்தீஸ்வரன் கோவிலுக்கு நடைப் பயணமாகச் சென்றவர் களுக்கும், செல்பவர்களுக்கும் மிகவும் பழக்கமான பாடல்களாகும்

    அந்தப் பாடல்களையும், அதன் சிறப்புக்களையும் வரும் இதழில் பார்ப்போம்: அதுவரை பொறுப்பீர் -  அன்புள்ளத்தோடு!                             
       ------------------------------------------------------------------------------------------------------
                                                  பகுதி 3
    செனற இதழில் கவிஞர் சிவல்புரி சிங்காரம் அவர்கள் எழுதிய நாளும் நலம் தரும் சனி பகவான் கவசத்தைப் படித்து மகிழ்ந்திருப்பீர்கள்.
இந்த இதழில் கவிஞர் பெருமகனார் எழுதிய எண்ணற்ற பக்திப் பரவச மூட்டும் பாடல்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

    திங்கள் முகத்துப் பெண்ணரசி, திருவருள் நல்கும் கண்ணரசி  என்று தையல் நாயகி அம்மனைப் பற்றி கவிஞர் சிவல்புரியார் பல அற்புதமான பாடல்களை எழுதியுள்ளார்.

    "தையல் நாயகி வருகைப் பதிகம்" என்னும் தலைப்பில் கவிஞர் எழுதியுள்ள பாடலில் மொத்தம் 40 வரிகள் உள்ளன.எல்லா வரிகளுமே சிறப்பாகப் படிப்பவர் நெஞ்சில் பதியும் வண்ணம் உள்ளன. இடம், சுவை கருதி சிலவரிகளை மட்டும் கீழே கொடுத்துள்ளேன்.

    "தீரா வினையைத் தீர்த்திடவே திருச்சாந் துருண்டை வைத்துள்ள
       ஆரா வமுதே! வைத்தீசன் அருகில் இருக்கும் மாமணியே!
     சீராய்ச் சிறப்பாய் நான் வாழத் தினமும் வெற்றிகள் வந்தடையக்
          காரார் குழலி உனைத் துதித்தேன்! கனியே தையல் நாயகியே
    சித்தாமிர்தக் குளம் வைத்தாய்! திருநீ றென்னும் மருந்தளித்தாய்!
        பக்தர் குரலைக் கேட்டவுடன்பறந்துவந் துதவி செய்திடுவாய்!
    சக்தி எனும்பெயர் பெற்றவளே!சங்கடம் தீர்க்கக் கற்றவளே!
        மற்றவர் போற்றும் வாழ்வமைக்க வருவாய் தையல்  நாயகியே!    

என்று     கூறும் கவிஞர்,  தையல் நாயகியை மனமுருகி வழிபடுபவர் களுக்கு என்னென்ன கிடைக்கும் என்பதைத் தொடர்ந்து  சொல்கின்றார்

"மாலைகள் தேடி வருவோர்க்கு மணங்கள் நீயும் முடித்திடுவாய்
   வேலைகள் இல்லாக் காளையர்க்கும் வேலை வாய்ப்பைக் கொடுத்                                      திடுவாய்
நூலைப் படித்து வழிபட்டால் நொடியில் துயரை அழித்திடுவாய்
   தாலிப் பலனும் நிலைக்கஅருள்  தருவாய் தையல் நாயகியே!
வைத்தீஸ் வரனின் மனையானாய்! வாழ்ந்திடும் பக்தரின் துணையானாய்!
   துய்த்திடும் இன்பம் நிலைத்திடவே தூயவள் கட்டும் அணையானாய்!
கைத்தலம் பற்றி¢ய கணவருடன் கனிவாய் வைத்தியம் செய்பவளே!
   மெய்தவத் தாலேஉனைத் துதித்தேன்! வருவாய் தையல் நாயகியே


    வருகைப் பதிகம் அல்லவா! கவிஞர் பெருமகனார் எல்லாப் பத்திகளையுமே 'வருவாய் தையல் நாயகியே!' என்று முடித்தது மட்டு மல்லாமல், படிப்பவர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் பாடல்களின்
மற்ற வரிகளையும் நயம்பட எழுதியுள்ளார்

    இதேபோல் கவிஞர் பெருமகனார் எழுதிய "எள்ளுப்பூ மூக்கு" என்று துவங்கும் அற்புதமான பாடல் வரிகள் அனைத்தும் வைத்தீஸ்வரன் கோவிலுக்குக் கால்நடைப்பயணமாகச் செல்லும் பக்தர்களிடையே மிகவும் பிரசித்தமானது!

    எள்ளுப்பூப் போன்ற மூக்கு, குவளைப்பூக் கண்கள், தாமரை மலர் முகம், செந்தாழைச் செவிகள், பவளநிற மேனி, ரோஜாப்பூக் கன்னங்கள்,
அல்லிமலரில் கடைந்த கால்கள்,கைகளும், விரல்களும்,கனகாம்பரம், மல்லி¢யில் என்று புள்ளிருக்கும் வேளூர் பூவையாம் வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியை வர்ணித்துப் பாமாலை பாடும் கவிஞர் பெருமகனார், அந்த உலகமகா நாயகியின் பெருமைகளை எப்படிச் சொல்கின்றார் பாருங்கள்.

    "பால் கேட்டு அழுததோர் பிள்ளைக்குச் சீர்காழிப்
        படித்துறையில் பால் கொடுத்தாய்
    பச்சைவெற் றிலைதுப்பிக் கவிகாள மேகத்தைப்
              பாட்டரசன் ஆக்கி வைத்தாய்
    வேல்கேட்ட பிள்ளைக்குச் செந்தூரில் சமர்செய்ய
        விருப்பமுடன் வேல் கொடுத்தாய்
    விளையாடும் ஏழரைச் சனியோடு கிரகங்கள்
        விலகிடும் வழி அமைத்தாய்"

    தனக்கு என்ன வேண்டும் என்று கவிஞர் அடுத்து வரும் வரிகளில் குறிப்பிட்டு எழுதியுள்ளது - அவர் தமக்காக மட்டும் எழுதியதல்ல- நமக்கும் சேர்த்துத்தான் எழுதியுள்ளார். பாடலைப்பாருங்கள்:

    மலைபோன்ற செல்வத்தைக் குவித்து வைத்திருந்துநான்
        மற்றவருக்கு உதவ வேண்டும்
    மழலையின் குணத்தோடு முதுமையிலும் இளமையாய்
        மகிழ்வோடு வாழ வேண்டும்
    கலைதவழும் மேடையெலாம் பூமாலை அணிந்துநான்
        கெளரவம் செய்ய வேண்டும்
    கவிபாடும் எனது குரல் கேட்டவுடன் தேய்வமெல்லாம்
        காட்சி தந்து அருளவேண்டும்

    நிலையான புகழ் தந்து உற்றாரும் மற்றாரும்
        நேசிக்கும் உறவு வேண்டும்
    நீ எனது  துணையாகி  நான்   செல்லும் பாதைக்கு                          

        நேர் வழிகள் காட்டவேண்டும்

    ஆறறிவு கொண்ட மனிதனாய்ப் பிறக்காமல் வேறு பிறவி எடுத்திருந்தால் என்னென்ன அல்லல்கள் படவேண்டியதிருக்கும் என்பதைக் கவிஞர் எப்படி நயம்பட உறைக்கின்றார் என்பதை அடுத்துவரும் வரிகளில் பாருங்கள்

    "கழுதையெனும் பிறவியை எடுத்தாலோ நிச்சயம்
        கழுத்திலே பொதி யிருக்கும்!
    காளைமாடாகவே பிறந்திடின் நிச்சயம்
        கழனியில் கால் இருக்கும்!
    பழுதான பிறவியாம் நாயாகப் பிறந்தாலோ
        பகலிறவு விழிக்க வேண்டும்!
    பறவையாய்ப் பிறந்தாலும் மரங்களின் உச்சியில்
        பதியங்கள் போட வேண்டும்!
    புல்லாகிப் பூடாகிப் புழுவாகி இருந்தாலோ

        புலம்பியே தீர வேண்டும்!
    பொன்னாக அணிகின்ற மனிதனாய்ப் பிறந்தநான்
        புதுயுகம் காண வேண்டும்!"


    சீர்கொண்ட பதிகங்கள் பத்தையும் சிறப்பாக எழுதிய கவிஞர் சிவல்புரி சிங்காரம் அவர்கள், தனது பதிகத்தை முத்தாய்ப்பாக  இப்படிக்கூறி முடிக்கின்றார்:
    மகன் கேட்டு தாய் எதுவும் மறுப்பதில் முறையில்லை
        மனமிரங்கி வந்து அருள்க!
    வைதீஸ்வரன் கோவில் வளர்தையல்நாயகியே
        வளம்காண வைக்கும் உமையே!                


-------------------------------------------------------------------------------------------------------
                        பகுதி 4
    உரைநடையல்லாத இலக்கியப்படைப்பு, செய்யுள், பாடல் அனைத்துமே கவிதையாகும்.ஆனால் அவற்றில் நல்ல கருத்துக்களும்,நெஞ்சைத் தொடும் உணர்வுகளும், வாழ்க்கையை நெறிப்படுத்தும் செய்திகளும், நமது கலாச்சாரத்தை மீறாத பண்புகளும் கலந்து  வெளிப்படுத்தப்ப ட்டு,எழுதப்படும்போது அவைகள் மக்கள் மனதில் நன்றாகப் பதிவதோடு, காலத்தாலும் அழிக்கமுடியாத தாக்கத்தையும் ஏற்படுத்தி விடுகின்றன!

    கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பாடல்கள் அன்றும், இன்றும்,ஏன் என்றும், எல்லா வயதினராலும் பேசப்படுவதற்கும் பேசப்படப் போவதற்கும் இதுவே காரணமாகும்!

    ஒருநல்ல கவிஞனுக்கு மக்கள் மனதில் அசைக்க முடியாத இடத்தைப் பிடிப்பதைவிட வேறு என்ன உயரிய விருதோ, பரிசோ அல்லது  பணமோ கிடைத்துவிடப் போகிறது?

    ஒரு திரைப்படப் பாடலைப் பாருங்கள்..கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதியது. நாயகி நாயகனை நோக்கிப் பாடுகின்றாள்:

    "மல்லிகை மலர்சூடிக் காத்து நிற்கவா
       மாலை இளந்தென்றல் தனைத் தூதுவிடவா
    நல்லதோர் நாள்பார்த்துச் சேதி சொல்லவா
       நாட்டோரைச் சாட்சிவைத்து வந்து விடவா!"   


இதில் கடைசிவரிதான் மிகவும் அற்புதம்.அவள் காத்து நிற்கட்டும்,
தூதுவிடட்டும், சேதி சொல்லட்டும் - ஆனால் அவனுடன் போவதற்கு நான்கு பேர்களைச் சாட்சியாக வைத்துத் திருமணம் செய்துகொண்டுதான் போகவேண்டும் என்று கவியரசர் எப்படி பொறுப்போடும் சமுதாய உணர்வோடும் எழுதியுள்ளார்.

    இப்போதுள்ள பாடல்களில் 90 சதவிகிதம் அப்படியா உள்ளன?

    சமீபத்தில் பிரபலமாகித் தொலைக் காட்சிகளிலும், வானொலி களிலும் ஒலிக்கும் ஒரு பாடலைப்பாருங்கள்:

    கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போகலாமா
       ஓடிப்போய் கல்யாணம்தான் கட்டிக்கலாமா"

எவ்வளவு பண்பாட்டுச் சீர்கேடு பாருங்கள். இன்னொரு பாட்டைப் பாருங்கள்:

    சிரித்து வந்தான், சிரித்து வந்தான், சீனாதானா டோய்
       சிறுக்கி மகள், சிறுக்கி மகள், தானப்போனா டோய்"

    சரி, பாடல்கள்தான் இப்படி மோசமாக இருக்கின்றன என்றால்
பெரும்பாலான படங்களும் அப்படித்தான் இருக்கின்றன.பாலுணர்வைத் தூண்டும் காட்சிகளோடும்,வன்முறைகளை நியாயப்படுத்தும்
காட்சிகளோடும்தான் இருக்கின்றன!

    தாய், தந்தை,மனைவி, மக்கள் என்று குடும்ப உறுப்பினர்கள்
அனைவருடனும் ஒன்றாக அமர்ந்து பார்த்து ரசிக்கும் படியாகவா இன்றைய திரைப்படங்கள் இருக்கின்றன? நிச்சயமாக இல்லை!
   
    தொலைக்காட்சியில் சில காட்சிகளைத் தங்கள் குழந்தைகளுடன் பார்க்கும் பெற்றோர்கள் நெளிய வேண்டியதிருக்கிறது, தலை குனிய வேண்டியதிருக்கிறது, அல்லது வேறு சானலை மாற்றவேண்டியதிருக்கிறது!

    இந்த நாட்டு நடப்பு அவலங்களையெல்லாம் பார்த்த நமது கவிஞர் சிவல்புரியார் அவர்கள், கவியரசர் கண்ணதாசன் காலத்துப் பாடல் களைத்தன் மனதிற்குள் ஒரு ஆதங்கத்தோடு வைத்துக்கொண்டு தற்காலத் திரைபடப் பாடல்களையும், படங்ளையும் கீழ்க்கண்ட தனது பாடலின் மூலம் ஒரு பிடி பிடித்திருக்கின்றார்.

    "நீயின்றி திரையுலகம் மாறிப் போச்சு
       நிழல்கூட நிஜமென்று தேறிப் போச்சு
    வாயினின்றி வரும்சொல்லே கவிதை யாச்சு
       வளர்தமிழில் கொச்சைத் தமிழ் கூடலாச்சு
    தாயோடு தாரத்தைச் சேர்த்து வைத்துத்
       தமிழ்ப் படத்தைப் பார்க்கும்நிலை மாறிப்போச்சு"


    சம்பந்தப்பட்டவர்கள் கண்களில் இந்தப் பாடல் பட்டு அவர்கள் ஓரளவாவது திருந்தினால் அது தமிழ் மக்களாகிய நாம் செய்த பாக்கியம் என்று  கொள்வோம்!

    சென்ற அக்டோபர் திங்கள் 16ம் தேதி  இதழில் கவிஞர் சிவல்புரியார் அவர்கள் தன் மனதை பெரிதும் கவர்ந்த கவியரசர் கண்ணதாசன் அவர்களுக்குக் கவிதாஞ்சலி எழுதியிருந்தார். படித்தவர்  மனதைத் தொட்ட அந்தக் கவிதையிலிருந்து சில வரிகளைப் படிக்கத் தவறிய வாசகர்களுக்காக் கொடுத்துள்ளேன்


கண்ணதாசனே!                     
நீ                                  
கண்ணனுக்கு                       
தாசன் அல்ல!                      
கண்ணனின் அவதாரமே           
என்று சொல்லுவேன்                
ஏன் தெரியுமா?                     
கண்ணன் அவன் பெற்றோர்க்கு     
எட்டாவது பிள்ளை!                
நீயும் உன் பெற்றோர்க்கு              
எட்டாவது பிள்ளை!!                
கண்ணன் புல்லாங்குழலால்          
இந்த உலகத்தை மயக்கினான்!
நீயோ எழுதுகோலால்
இந்த உலகத்தை மயக்கினாய்!
கண்ணன் வாய்க்குள்
இந்த உலகத்தைக் காட்டினான்!
நீயோ உலகத்தார் வாயிலெல்லாம்
உன் பாடலை இசைக்கவைத்துக் காட்டினாய்!
அதனால்தான் சொல்கிறேன்
நீ
கண்ணனுக்கு தாசன் அல்ல!
கண்ணனின் அவதாரமே என்று!

என்ன ஒரு ஒப்பீடு பாருங்கள்!

    இது போன்ற பல அற்புதமான, எண்ணற்ற பாடல்களைக் கவிஞர் சிவல்புரி சிங்காரம் அவர்கள் எழுதியுள்ளார்கள். சொல்லிக்கொண்டே போகலாம். கடந்த நான்கு திங்களாகக் கவிஞரின் பாடல்களில் என் மனதை மிகவும் கவர்ந்த பாடல்களீல் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொண்ட அடியவன், கவிஞர் சிவல்புரியாரின் சிறப்புக்களைப்பற்றி கவியரசர் திரு.கண்ணதாசன் அவர்களும், கவிஞர் திரு.வாலி அவர்களும் கவிஞர் திரு.வைரமுத்து அவர்களும் எழுதிய வரிகளைக்கொடுத்து என் கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

கவிதைகள் சிறப்பதாக! கற்பனைகள் வளர்வதாக!
நவமெனப் பொருள்கள்தோன்றி நாநிலம் புகழ்வதாக!
தவமிருந்து அடைந்ததான தமிழ்ச்சுவை வளர்வதாக!
'சிவல்புரி சிங்காரத்தின்' சீர் என்றும் உயர்வதாக!

         - என்று  கவியரசர் திரு.கண்ணதாசன் அவர்களும்

பேர்மல்கும் சிவல்பட்டி பேரூர்வாழ் சிங்காரம்
சீர்மல்கும் பழங்கலையாம் ஜோதிடத்தின் நுணுக்கமெல்லாம்
கூர்மல்கும் மதிவளத்தல் குறிப்புணர்ந்து சொல்கின்றான்
நீர்மல்கும் கண்களெல்லாம் நிம்மதியில் சிரிக்குதம்மா!

          -என்று கவிஞர் திரு.வாலி அவர்களும்

சிங்காரக் கவிஞர்! எந்தன் சிந்தனையைக் கவர்ந்த தோழர்!
மங்காத புகழைப் பெற்ற மாகவி கண்ணதாசன்
தங்கமாய்ப் பிறந்தமண்ணைத் தாய்மண்ணாய்க் கொண்டநேசர்!
பொங்குமாம் தமிழைப்போலே புகழேந்தி வாழ்க! வாழ்க!

          - என்று கவிஞர்.திரு.வைரமுத்து அவர்களும் கவிஞர் சிவல்புரி சிங்காரம் அவர்களைச் சிறப்பாகப் பாராட்டியுள்ளனர்
  ------------------------------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

23 comments:

  1. தினத்தந்தி சோதிடர் சிவல்புரி சிங்காரம் இத்துணை சிறந்த கவிஞர் என்பது
    தங்க‌ள் பதிவைப் படித்தவுடன் தான் தெரிந்தது.
    வைத்தீஸ்வ‌ரன் கோவில் நடைப்பயணர்களுக்கு திருவலம் சுழியில் வணக்கத்திர்க்குரிய பத்துசுவாமி என்கிற பத்மநாப சுவாமிகள் ஏற்பாட்டில்
    3 நாட்களுக்கு காலைச் சிற்றுண்டி அளிக்கப்படுகிறது.சுமார் 40 மாண‌வர்கள்
    பம்பரமாகச் சுழ‌ன்று வேலைசெய்யும் அற்புதத்தைக் காண்பதே பாக்கியம்.
    தஞ்சையில் நடைப்பயண‌ர்களுக்கு தொண்டூழியம் செய்யும் நகரத்தார் யார் என்ற விவரம் அறிந்தால் சொல்லுங்கள்.அவர்களுடன் சேர்ந்து கொள்கிறேன்.

    ReplyDelete
  2. கவிதையில் அவருக்கிருக்கும் சொல்லாட்சி அவருடைய சிறப்பு வெளிப் படுகிறது. சனி பகவான் கவசமும் நன்று. அனைவரும் படித்து பயன் பெறலாம். கவசம் மந்திரம் இவையெல்லாம் விடாமல் மீண்டும் மீண்டும் படித்தால்தான் அதன் சக்தி வெளிபடும். மந்திரங்கள் எப்படி இயங்குகின்றன என்பதைப் பற்றி நான் படித்ததை கீழே கொடுத்திருக்கிறேன்.

    When we repeatedly utter a Mantra we are tuning to a particular frequency and this frequency establishes a contact with the cosmic energy and drags it into our body and surroundings. Thus we can balance the energies and also increase the level of a certain type of energy, which promote certain actions and events. For example, if we increase the Mercury’s energy level, it promotes us to take intelligent steps in business.

    ReplyDelete
  3. ////////kmr.krishnan said...
    தினத்தந்தி சோதிடர் சிவல்புரி சிங்காரம் இத்துணை சிறந்த கவிஞர் என்பது
    தங்க‌ள் பதிவைப் படித்தவுடன் தான் தெரிந்தது.
    வைத்தீஸ்வ‌ரன் கோவில் நடைப்பயணர்களுக்கு திருவலம் சுழியில் வணக்கத்திற்குரிய பத்துசுவாமி என்கிற பத்மநாப சுவாமிகள் ஏற்பாட்டில்
    3 நாட்களுக்கு காலைச் சிற்றுண்டி அளிக்கப்படுகிறது.சுமார் 40 மாண‌வர்கள்
    பம்பரமாகச் சுழ‌ன்று வேலைசெய்யும் அற்புதத்தைக் காண்பதே பாக்கியம்.
    தஞ்சையில் நடைப்பயண‌ர்களுக்கு தொண்டூழியம் செய்யும் நகரத்தார் யார் என்ற விவரம் அறிந்தால் சொல்லுங்கள்.அவர்களுடன் சேர்ந்து கொள்கிறேன்.//////

    நீங்கள் தரணி போற்றும் தஞ்சையில் இருப்பதால், உங்களுக்குப் பல விஷயங்கள் தெரிந்திருக்கிறது. நன்றி கிருஷ்ணன் சார். தஞ்சையில் தொண்டூழியம் செய்பவர்கள்: நகரத்தார் சங்கம் மற்றும் நகரத்தார் விடுதி அமைப்பினர்கள். அவர்களின் முகவரி: 387, பாம்பாட்டித் தெரு, கீழவாசல், தஞ்சாவூர் - 613 001

    ReplyDelete
  4. /////ananth said...
    கவிதையில் அவருக்கிருக்கும் சொல்லாட்சி அவருடைய சிறப்பு வெளிப்படுகிறது. சனி பகவான் கவசமும் நன்று. அனைவரும் படித்து பயன் பெறலாம். கவசம் மந்திரம் இவையெல்லாம் விடாமல் மீண்டும் மீண்டும் படித்தால்தான் அதன் சக்தி வெளிபடும். மந்திரங்கள் எப்படி இயங்குகின்றன என்பதைப் பற்றி நான் படித்ததை கீழே கொடுத்திருக்கிறேன்.
    When we repeatedly utter a Mantra we are tuning to a particular frequency and this frequency establishes a contact with the cosmic energy and drags it into our body and surroundings. Thus we can balance the energies and also increase the level of a certain type of energy, which promote certain actions and events. For example, if we increase the Mercury’s energy level, it promotes us to take intelligent steps in business./////

    நிதர்சனமான உண்மை. அதனால்தான் கோவில் சந்நிதானங்களுக்கு ஒரு சக்தி உள்ளது என்பார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகள், இறைவனின் பக்திக் கவசங்களை ஓங்கி உரைத்த இடமல்லவா அவைகள்! நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  5. அறிவிப்பு:

    வகுப்பறை வருகைப் பதிவேட்டில் பதிந்துள்ள கண்மணிகளின் பின்னூட்டங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். பதில் அளிக்கப்படும். மற்றவர்கள் தயவு செய்து பின்னூட்டம் இடவேண்டாம். குவிகின்ற குப்பைப் பின்னூட்டங்களையும், தேவையில்லாமல் இறைவனையும், ஜோதிடத்தையும் நக்கலடித்து வருகிற பின்னூட்டங்களை வடிகட்டவே இந்த ஏற்பாடு. அதற்கெல்லாம் குட்டிச் சுவர்கள் உள்ளன. அவர்கள் அங்கே சென்று தேவையானதை எழுதி, மகிழ்ந்து கொள்ளலாம்!!!!!!

    ReplyDelete
  6. சிவல்புரி சிங்காரம்-அவர்
    கவி தரும் ஒய்யாரம்,
    எண்கலை வித்தகராம்-அவர்
    எம்பெருமான் ஈசனின் பித்தராம்,
    சோதிடத்தின் சூரியனாய்
    சுந்தரத் தமிழ் கொண்டு
    மானுடம் செழிப்புரவே புரிகின்றார்
    சீரியத் தொண்டு!

    வீணைத் தந்தியாய்,
    தினத் தந்தியில்;அவர் தரும்
    ஜோதிட நாதம் அதுவே
    துவண்டதோர் உள்ளங்களில்
    நம்பிக்கைத் தீமூட்டும் வேதம்.
    பல்கலை வித்தகர்
    பண்பாட்டுச் சித்தர்
    செட்டிநாட்டுக் கவிக்குயில்
    வாழ்க! வாழ்க! வாழ்கவே!!!

    ReplyDelete
  7. //////Blogger Alasiam G said...
    சிவல்புரி சிங்காரம்-அவர்
    கவி தரும் ஒய்யாரம்,
    எண்கலை வித்தகராம்-அவர்
    எம்பெருமான் ஈசனின் பித்தராம்,
    சோதிடத்தின் சூரியனாய்
    சுந்தரத் தமிழ் கொண்டு
    மானுடம் செழிப்புரவே புரிகின்றார்
    சீரியத் தொண்டு!
    வீணைத் தந்தியாய்,
    தினத் தந்தியில்;அவர் தரும்
    ஜோதிட நாதம் அதுவே
    துவண்டதோர் உள்ளங்களில்
    நம்பிக்கைத் தீமூட்டும் வேதம்.
    பல்கலை வித்தகர்
    பண்பாட்டுச் சித்தர்
    செட்டிநாட்டுக் கவிக்குயில்
    வாழ்க! வாழ்க! வாழ்கவே!!!/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  8. சிவல்புரி சிங்காரம் ஒரு சிறந்த கவிஞர் என்று இப்போது தான் தெரிந்தது.அறிவுப்பு அருமை.
    A mantra is repeated in multiples of 9 in all religious beliefs. The sound AHA is used as a base for all the mantras. Ramana Maharishi said like a chain is given to the elephant so that it will not stray its trunk on things, the mantra is given to the mind to quell its restlessness.When the mind is calm the innate quality of the self arises and reveals to us that we have nothing to do and nowhere to go to be what we are.

    ReplyDelete
  9. முன்பொருமுறை ஒரு பத்திரிகையில் வெளியிடப்பட்டிருந்த துணுக்கு. உதவி ஆசிரியர் ஆசிரியரிடம் இந்த வாரம் வாரபலன் எழுதுபவர் வரவில்லை என்ன செய்யலாம் என்கிறார், அதற்கு ஆசிரியர் பழைய பிரதியில் உள்ள பலன்களை அப்படியே வெளியிடுங்கள் என்றார். வெளியாயிற்று. பலரும் பாராட்டினர். இதுதான் அந்த துணுக்கு. சிவல்புரி சிங்காரம் என்ற பெயரை தினத்தந்தியில் பார்த்திருந்தாலும், அதிகம் அவரைப்பற்றி புரிந்து கொள்ளாமல் இருந்து விட்டேன். உங்கள் பாடத்தில் அவருடைய கவிதை வரிகளைப் படித்ததும் அடடா! இவரது பெருமையை உணராமல் போனோமே என்ற வருத்தம்தான் மேலோங்கியது. மிக ஆழமான, அழுத்தமான, கருத்தாழமிக்க கவிதை வரிகள். நாடு போற்றவேண்டிய கவிஞர்கள், அறிஞர்கள் இப்படி குடத்திற்குள் இட்ட விளக்காக இருக்கிறார்கள். அவரையும், அவரது கவிதை வரிகளைத் தந்த உங்களையும் வணங்கி மகிழ்கிறேண். நன்றி.

    ReplyDelete
  10. /////krish said...
    சிவல்புரி சிங்காரம் ஒரு சிறந்த கவிஞர் என்று இப்போது தான் தெரிந்தது.அறிவுப்பு அருமை.
    A mantra is repeated in multiples of 9 in all religious beliefs. The sound AHA is used as a base for all the mantras. Ramana Maharishi said like a chain is given to the elephant so that it will not stray its trunk on things, the mantra is given to the mind to quell its restlessness.When the mind is calm the innate quality of the self arises and reveals to us that we have nothing to do and nowhere to go to be what we are./////

    நன்றி கிரீஷ்!

    ReplyDelete
  11. /////Thanjavooraan said...
    முன்பொருமுறை ஒரு பத்திரிகையில் வெளியிடப்பட்டிருந்த துணுக்கு. உதவி ஆசிரியர் ஆசிரியரிடம் இந்த வாரம் வாரபலன் எழுதுபவர் வரவில்லை என்ன செய்யலாம் என்கிறார், அதற்கு ஆசிரியர் பழைய பிரதியில் உள்ள பலன்களை அப்படியே வெளியிடுங்கள் என்றார். வெளியாயிற்று. பலரும் பாராட்டினர். இதுதான் அந்த துணுக்கு. சிவல்புரி சிங்காரம் என்ற பெயரை தினத்தந்தியில் பார்த்திருந்தாலும், அதிகம் அவரைப்பற்றி புரிந்து கொள்ளாமல் இருந்து விட்டேன். உங்கள் பாடத்தில் அவருடைய கவிதை வரிகளைப் படித்ததும் அடடா! இவரது பெருமையை உணராமல் போனோமே என்ற வருத்தம்தான் மேலோங்கியது. மிக ஆழமான, அழுத்தமான, கருத்தாழமிக்க கவிதை வரிகள். நாடு போற்றவேண்டிய கவிஞர்கள், அறிஞர்கள் இப்படி குடத்திற்குள் இட்ட விளக்காக இருக்கிறார்கள். அவரையும், அவரது கவிதை வரிகளைத் தந்த உங்களையும் வணங்கி மகிழ்கிறேண். நன்றி./////

    அவர் எனது நண்பரும்கூட. இது போன்று செட்டிநாட்டில் சுமார் 20 கவிஞர்கள் இருக்கிறார்கள். அவர்களது கவிதைகளைப் படித்து, ஒரு சுவாரசியத் தொடர் எழுதும் வாய்ப்பை ஒரு மாத இதழ் எனக்கு நல்கியது. சுமார் 2 ஆண்டு காலம் அத்தொடரை எழுதினேன். அனைவரது பாராட்டுக்களையும் பெற்றது அத்தொடர். வாய்ப்புக்கிடைத்தால் அத்தொடரை ஒரு நூலாக வெளியிடும் எண்ணம் உள்ளது. அதற்கு பழநிஅப்பன் க்ரீன் சிக்னல் கொடுக்க வேண்டும். பார்க்கலாம். காத்திருக்கிறேன். உங்களுடைய நெகிழ்ச்சியான பின்னூட்டத்திற்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  12. சிவல்புரியாரின் மற்றொரு பரிணாமத்தை, அழகாக விளக்கியுள்ளீர்கள்..நன்றி..

    அன்புடன்
    செங்கோவி

    ReplyDelete
  13. ///SHEN said...
    சிவல்புரியாரின் மற்றொரு பரிணாமத்தை, அழகாக விளக்கியுள்ளீர்கள்..நன்றி..
    அன்புடன்
    செங்கோவி ////

    அவருடைய மேடைப்பேச்சுக்களும், கவியரங்க உரைகளும் சிறப்பாக இருக்கும். நான் பலமுறைகள் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். நன்றி செங்கோவி!

    ReplyDelete
  14. ///கடவுள் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது - அதனால்தான் தாயைப் படைத்தார் என்றான் ஒரு சிந்தனையாளன்./// - அருமை ஐயா ...

    ReplyDelete
  15. Todays information is really exicting one, all are new for me

    ReplyDelete
  16. அன்புடன் வணக்கம் திரு சிவல் புரி சிங்காரம் அவர்களின் கவிதை பாமர மக்களுளம் புரிஉம்படி பயன்பெற வேண்டும் என எண்ணி உபகரிக்கும் அந்த எண்ணம் பெரிய விஷயம் வாழ்க

    ReplyDelete
  17. ஐயா வணக்கம்,
    நான் உங்கள் மாணவ கண்மணிதான் நான் உளற மாட்டேன் கிறுக்க மாட்டேன்
    நீங்க சனிஷ்வரனை வகுப்பில் சேர்த்து கொண்டீங்க நான் வேண்டாம் என்று சொன்னேன். இப்போ எமனுக்கு வேற BIODATA
    அவரையும் சேர்த்துகொள்ள போறீங்களா.
    சுந்தரி

    ReplyDelete
  18. ////rk guru said...
    ///கடவுள் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது - அதனால்தான் தாயைப் படைத்தார் என்றான் ஒரு சிந்தனையாளன்./// - அருமை ஐயா ...////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  19. /////Ram said...
    Todays information is really exicting one, all are new for me/////

    எல்லாம் உங்களைப் போன்றவர்களுக்காகத்தான். நன்றி!

    ReplyDelete
  20. ////hamaragana said...
    அன்புடன் வணக்கம் திரு சிவல்புரி சிங்காரம் அவர்களின் கவிதை பாமர மக்களுளம் புரியும்படி பயன்பெற வேண்டும் என எண்ணி உபகரிக்கும் அந்த எண்ணம் பெரிய விஷயம் வாழ்க/////

    நன்றி சங்கரன் கோவில்காரரே!

    ReplyDelete
  21. /////paramasivam said...
    ஐயா வணக்கம்,
    நான் உங்கள் மாணவக்கண்மணிதான் நான் உளற மாட்டேன் கிறுக்க மாட்டேன்
    நீங்க சனிஷ்வரனை வகுப்பில் சேர்த்து கொண்டீங்க நான் வேண்டாம் என்று சொன்னேன். இப்போ எமனுக்கு வேற BIODATA
    அவரையும் சேர்த்துகொள்ள போறீங்களா.
    சுந்தரி//////

    அவர்களுக்கெல்லாம் அதற்கு நேரம் இருக்காது சகோதரி!

    ReplyDelete
  22. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

    கவிஞர் திரு.சிவல்புரி சிங்காரம் அவர்களின் கவிதைகளைப் பற்றிய பகுதிகள் தங்களின்

    கை வண்ணத்தால் மேலும் சிறப்புப் பெறுகிறது.

    கவிதைகள் அனைத்தும் எளிமையாகவும்,சிந்தனைக்கு உரிய தகவல்களையும் கொண்டுள்ளது

    நன்றி.
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-07-10௦

    ReplyDelete
  23. /////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    கவிஞர் திரு.சிவல்புரி சிங்காரம் அவர்களின் கவிதைகளைப் பற்றிய பகுதிகள் தங்களின்
    கை வண்ணத்தால் மேலும் சிறப்புப் பெறுகிறது.
    கவிதைகள் அனைத்தும் எளிமையாகவும்,சிந்தனைக்கு உரிய தகவல்களையும் கொண்டுள்ளது
    நன்றி.
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி/////

    நன்றி தட்சணாமூர்த்தி!
    தங்களின் அன்பிற்காகப் பெருமைப்படும் வாத்தியார்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com