மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.7.10

எதை நினைவில் வைக்கச் சொன்னார் வாத்தியார்?

--------------------------------------------------------------------------------------
எதை நினைவில் வைக்கச் சொன்னார் வாத்தியார்?

நமது வகுப்பறை மணமகன்கள் பெஞ்ச் மாணவர் ஆலாசியம் கோவிந்தசாமி எழுதிய மலரும் நினைவு இது. நீங்கள் படித்து மகிழ அதை இன்று வலையில் ஏற்றுகிறேன்.

நமது மாணவர்களுக்கு எழுத்தாற்றல் இருப்பதில் எனக்குப் பெருமையே! மகிழ்ச்சியே! உங்கள் ஆக்கங்களை  அனுப்பலாம். சுவையாகவும், சுவாரசியமாகவும் இருப்பவைகள் ஒவ்வொரு ஞாயிறன்றும் உங்கள் பெயருடன் (புகைப்படம் அனுப்பினால் - புகைப்படத்துடன்) நம் வகுப்பில் பதிவிடப்பெறும்.

over to posting
-----------------------------------------------------
நீங்காத நினைவுகளுள் இதுவும் ஒன்று!
----------------------------------------------------
எழுதியவர்: ஆலாசியம் கோவிந்தசாமி, சிங்கப்பூர்

அன்னைத் தமிழையும், எனக்கு பாடம் சொல்லித் தந்த (தரும்) ஆசிரியர்களையும் வணங்கிக் கொள்கிறேன்.

 1985 வருடம், நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்
அன்றொரு நாள் மதிய உணவிற்குப் பிறகு பள்ளி மணி ஒலித்தது பெரும்பாலான மாணவர்கள் நாங்கள் அனைவரும் வகுப்பறையில் இருந்தோம். என் நண்பன் சரவணன் வேகமாக வகுப்பினுள்
நுழைந்தான், அதுவரை முதல் வரிசை பெஞ்சில் கதை
பேசிக்கொண்டிருந்த, நானும், எனது நண்பர்கள் பூனைக் கண்ணன் (மன்னிக்கணும், எனது நெருங்கிய நண்பன்  அவனை அப்படித்தான் கூப்பிடுவேன், அவன் பெயர் சிலம்பு வார்த்த துறவியின் பெயர்,
ஆம் அந்த அழகான பெயர், இளங்கோவே தான்), செல்வக்குமார்,
கருப்பையா, மற்றும் யூனூஸ் நாங்கள் அனைவரும் சட்டென்று
பேச்சை நிறுத்தினோம்

காரணம் சரவணன் வந்த வேகத்தைப் பார்த்தால் ஜோசப்
வாத்தியார் தான் வகுப்பறைக்கு வந்து கொண்டிருப்பார் போலும்
என்று எங்களுக்குத் தோன்றிற்று. அவர் தான் எங்களது தமிழாசிரியர்,
இருந்தும்அவரை பெரும்பாலும் எங்களுக்குள் தமிழையா! என்று
சொல்லிக் கொள்வதில்லை. காரணம், அவர் இடைநிலை
ஆசிரியராக இருந்து  கொண்டே தொலைதூரக் கல்வி மூலம்
பட்டம் பெற்று தமிழாசிரி யரானார்  ஆகவே, அதற்கு  முன்பே ஜோசப் வாத்தியார் என்றே அழைத்து வந்ததே காரணமாக இருந்தது.

விசயத்திற்கு வருவோம்.

திடீர் என்று முதல் பெஞ்சில் அமைதி!.. இல்லை, அது நெருப்பாய்ப்
பரவி முழு வகுப்பையும் வசப்படுத்திக் கொண்டது. அமைதியின்
அர்த்தம் தெரியாது, பின்பு அமர்ந்து இருந்த மாணவர்களும்,
வகுப்பறையின் இடதுபுறம்  அமர்ந்து இருந்த மாணவிகளும்
வருவது யாரென்று வாயில்க் கதவைப் பார்க்க..'குபீர்' என்று
சிரிப்பொலி வகுப்பறையில் எழும்பி, அமைதித் தீயை அப்படியே
அணைத்தது,

காரணம்  வகுப்பினுள் நுழைந்தவர் எங்கள் பள்ளியின் பியூன்
வேதாச்சலம் தான், அவர் எப்போது வந்தாலும்,  யானை  வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்று சித்தனாதன் விபூதி வாசனை தான் முந்திக்கொண்டு வரும்.இப்போதும் அப்படியே, முந்திக்கொண்டு
நுழைந்தது. வழக்கம் போல அவரது தொந்தி, பிந்திக் கொண்டது.
இருந்தும் அது, அதாவது அவரின் பெரியத் தொந்தி  அவரை முந்திக்
கொண்டு தானே வந்தது.

வருகைப் பதிவேடை வைக்க வந்த அவரும் திடுக்கிட்டார்,
என்ன இது நுழையும் போது மயான அமைதியாய்  இருந்தது
இப்போது திடீர் என்று சிரிப்பொலி?.... சிவ! சிவா! என்ன ஆச்சு
தம்பிகளா? என்ன சிரிக்கிறீர்கள்என்று அவரும் சேர்ந்து சிரித்து
விட்டு வருகைப் பதிவேட்டை ஆசிரியரின் மேசையில் வைத்து
விட்டுத் திரும்பினார். ஆனால், என் நண்பன் சரவணன் மட்டும்
சிரிக்கவில்லை என்பதை நான் பார்த்துக் கொண்டிருந்த
மாத்திரத்தில் எனது மனம் சொல்லிற்று ஆசிரியரும் அவரின்
பின்பு வருவாரோ! என்று, எனது நினைப்பு நிஜமானது. இம்முறை மூக்குபொடிக்காரம்  மணியோசையாய் முந்தி வந்து துழைத்தது.                                                     

உள்ளே நுழைந்தது தான் தாமதம் ஆசிரியரின் கண்கள் வீசிய
வலையில் சிக்கிய மீன், எனது சக மாணவன்  குமார். நீ, நீ...
எழுந்திரு என்று மாப்பிள்ளை பெஞ்சை நோக்கி கையை
நீட்டிக் கொண்டு முன்னேறினார்

தமிழாசிரியர், கடைசி பெஞ்சில் இருப்பவர்கள் ஒருவரை
ஒருவர்ப் பார்த்துக் கொண்டிருந்த நேரம் பார்த்து.... எங்கே
குமார் தாமதித்தால்  நம்மை எழுப்பிவிடுவாரோ என்று,
பயந்து குமாரின் அருகில் இருந்த மதர்பாவா விரைந்து
உன்னைத்தான், உன்னைத்தான் என்று வேகமாக தனது
அருகில் இருந்த குமாரை எழுப்பினான்.

மேகத்தினுள் இருந்து வெளிப்படும் நிலவைப் போல்  குமாரும்
காற்றுக்கும் நோகாமல் கன்னத்திற்கும் நோகாமல் எழுந்தான்,
கண்கள் திருத் திருவென விழித்தது, அவன் பார்த்தப் பார்வையில்
அவன் தனக்குத் தானே கூறிய,செய்தி மட்டும் அவனை நோக்கி
பின்புறமாக திரும்பிப்  பார்த்த எங்கள் அனைவருக்கும் புரிந்தது,
"நான் இன்று  செத்தேன்,,,,,, என்று.

குறில், குறில், குறிலுக்கு எத்தனை மாத்திரை? என்று கேட்டார்
ஆசிரியர்,  அனைவருக்கும்  அது தெரிந்ததே, அவனுக்கும் அது
தெரிந்ததே என்று  நானும் அவனை பார்த்துக் கொண்டிருந்தேன்,
ஆனால் அவன் திரு திரு  என்று விழித்துக் கொண்டு தயவு செய்து
என்னைக் காப்பாற்றுங்கள்    என்பதைப் போல் எங்களைப் பார்க்கிறான்,
இதில் "மலைக்கள்ளனும்,  மம்பட்டியானும்" நாங்கள் தானே (பிறர்நலன் கருதிகள் (அ) அதிகப்பிரசங்கிகள்), உடனே ஆசிரியருக்கு பின்புறமாக இருக்கும்            நாங்கள் (நானும் இளங்கோவும்) ஒருவிரலை  உயர்த்தி காண்பித்தோம், குமாரும் உடனே ஒரு மாத்திரை என்றான்.

அரை மாத்திரைப் பொழுதுதான் (அரை வினாடி) ஆகியிருக்கும் 
பளார்!  பளார்!! என்ற சப்தம்,

"தடுத்து இமையாமல் இருந்தவர், தாளில்
மடுத்ததும், காண்நுதி வைத்ததும் நோக்கார்
கடுப்பினில் யாரும் அறிந்திலர்; கையால்
எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார்".


கம்பர், இராமபிரான் சிவதனுசை உடைத்த அழகை, வேகத்தை,
திறத்தை, அருமையானதொரு பாடல் மூலம் படம்  பிடித்துக்
காட்டுவார். அதாவது, இராமனுக்கு அதெல்லாம்  சும்மா...
என்பதாக கூறுவார்.. அதையே   நான் இங்கு  கூறுவது முறையாகாது,
அதனால் அதை இப்படிக் கூறுவேன்....

அரை மாத்திரை என்று,
அறைந்த  பதிலோடு....
தொடர்ந்த தொரு சத்தம்;
பளார்! பளாரென்று....
 
இமைக்க மூடிய இமைகள்
எழுந்துச் சுருங்கும் முன்னே,
 
இடியாய் தொடங்கி
மின்னலாய் இறங்கியது
அறையொன்று!
அவன் கன்னம் சிவக்க!


 இடியை முந்திய மின்னலாய், காற்று கூட நோகச் செய்யாது
இருந்த கன்னத்தில் பளார்! பளாரென்று  ஆசிரியரின் அறை விழுந்தது... அவனின் சிவந்தக் கன்னம், வடிந்தக் கண்ணீர், வகுப்பில் பலரையும்  குழப்பியுள்ளது ?!?!?!....... என்பது மட்டும் அனைவரின் பார்வையும்,
எனக்கு விளக்கியது.ஆமாம், விடையைச் சரியாக தானே சொன்னான்!,
பிறகு என் இந்த அறை.. யாருக்குத் தெரியும்?, அது  அவரைத்தான் கேட்கவேண்டும்.

 அடி வாங்கியக் குமார் அப்படியே நிற்க. ஆசிரியர் மட்டும், அடுத்து
அடுத்து என்று வரிசையாகத் தொடர்ந்தார்.. தொடர்ந்து கேட்க,
ஒரு மாத்திரை    என்பது தவறு என்பதை குமார் வாங்கிய அறை
சொல்லிற்று.  என்பதுபோல,  அடுத்தடுத்து எழுந்த மதர்பாவா,
திருஞானம்,  வரிசையாக  அரை மாத்திரை , இரண்டு மாத்திரை
என்றும் கூற,  தொடர்ந்து சாமிநாதன், ரோஸ்விக்டர் என்று கேள்வி
மட்டும் நகர்ந்தது... பதில் சொல்ல வழியில்லாமல்  விழித்தார்கள்.

அப்படியே கேள்வி மாப்பிள்ளை பெஞ்சிலிருந்து, மணப்பொண்ணு பெஞ்சுக்கு சென்றது. அங்கும் மட்டும் என்ன?  அதே நிலைதான் கடைசியாக அகத்தியரின் தங்கை அம்பிகாவிடம் (அவள்தான் 
வகுப்பில் மிகவும் குட்டையாக இருப்பாள்) சென்றது. நல்ல 
வேளை, நாங்கள் வைத்த பெயரைக் காப்பாற்றி விட்டாள். 
தைரியமாக ஒரு மாத்திரை  என்றாள்.

உம்ம்ம்ம்.... பார் இவள் சரியாகச் சொல்லிவிட்டாள்..... ஆசிரியர்
மீண்டும் குமாரை நோக்கி நகர்ந்தார், குமார்  அறை வாங்கிய
தனது இடது கன்னத்தை தனது இடது உள்ளங்கையால் மூடிக்
கொண்டே அவரை கவனித்தான்.

இப்போது சொல்... குறிலுக்கு எத்தனை மாத்திரை?.... குறிலுக்கு
ஒருமாத்திரை! (குமாரும் ஆசிரியரும் சேர்ந்தே கூறினார்கள்)
குறிலுக்கு ஒரு மாத்திரை...இனிமேல் மறப்பாய்? ஆசிரியர்.
இல்லை மறக்க மாட்டேன் என்றான் குமார்....


ஆசிரியரும் மீண்டும் சத்தமாகக் கூறினார்..  “ யாரும் மறக்கக் கூடாது”....

நல்ல வேளை, குமார் "அதுதானே இது" நான் சொன்ன பதில் என்று
சொல்லி அதற்கு மேலும் ஆசிரியர், வேறு  ஒரு கஷ்டமானக்
கேள்வியை கேட்டு (அடிப்பது என்று முடிவானப் பிறகு யார்
தடுத்து அது நிற்கும்?) அதுக்கும்அடிவாங்காமல் விட்டானே.

இதைப் போல நான் எட்டாம் வகுப்பில் படிக்கும் போது வேறொரு
தமிழாசிரியரிடமிருந்து எல்லோரும் அடிவாங்கிய நேரத்தில்
எனக்கு மட்டும் கிடைக்காமல் ஆசிரியரே ஒரு காரணத்தை கூறி தவிர்த்துவிட்டார். சில நேரங்களில் இப்படித்தான், அது ஆசிரியரைப் பொறுத்தும், ஆசிரியருக்கு

மாணவர் மீது உள்ள அலாதிப் பிரியத்தைப் பொறுத்தும்
தண்டனையும், பாராட்டும் வேறுபாடும். நம் வாத்தியார் அவர்களின் வகுப்பறையிலே நாம் பார்க்கலாம். சில மாணவர்கள் பின்னூட்டம் வந்தவுடனே ஆசிரியரின்   பதிலும் வரும். அதுவும் இது போல் அல்ல,
அதற்கு ஒரு சிறு வேறுபாடு  உண்டு அந்த மாணவர்கள் மிகுந்த
வேலைப்  பழுக்கு இடையில்   பின்னூட்டம் இடுபவர்கள் ஆதலால்
அவர்களை காக்க வைக்க   வேண்டாம் என்ற நல்ல  எண்ணத்தில்
தான் அப்படி செய்வார்.

சரி இப்போது சொல்ல வந்ததை சொல்லி முடிக்கிறேன்.

அதன் பிறகு ஆசிரியர் வகுப்பில் இல்லாத போது அதை சொல்லிச்
சொல்லி  நாங்கள் அனைவரும்  குமாரோடு சேர்ந்து  பல முறை சிரித்த
துண்டு.  இன்றும் பல நேரங்களில் எனது பள்ளித் தோழர்களைப்
பார்க்கும் போது சொல்லிச் சிரிப்பது உண்டு.

ஆனால் அன்று அனைவரும் சிரிக்க, அடியை வாங்கிய
அந்த குமார்... சில வருடங்களுக்குப் பிறகு, ஒரு பெண்ணைக் காதலித்ததாகவும்,  அதை விரும்பாத அப் பெண்ணின்  உறவினர்கள்,
சிலரும் சேர்ந்து அவனை   அடித்தே கொன்றுவிட்டதாகவும் அது
நடந்து சில வருடங்களுக்கு பின்பு கேள்வியுற்று மிகவும்
வருந்தினேன். அதோடு,அந்த அவலம் நடந்து சில மாதங்களில்
அப்பெண்ணும்  இறந்து  விட்டதாகவும் கேள்வியுற்றேன்.
 தமிழாசிரியர் மறக்கக் கூடாது என்ற அந்த நிகழ்வு மனதிற்குள்
பல நேரங்களில் சிரிப்பொலியை எழுப்பினாலும், குமாரின்
வாழ்வுக்கு வந்த  அந்த சோகமான முடிவு  இன்றும்  நீரு பூத்த
நெருப்பாய் என் நெஞ்சில் அனல் கக்கிக் கொண்டுத்தான் இருக்கிறது.....

நீங்காத நினைவுகளுள் இதுவும் ஒன்று.

நன்றிகள்,
அன்புடன் உங்கள் நண்பன்,
ஆலாசியம் கோ.

23/07/2010. Singapore.
--------------------------------------------------------------------------------------------


வாழ்க வளமுடன்!

9 comments:

  1. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

    வகுப்பறை மாணவர்களின் எழுத்தாற்றலினை சிறப்பிக்கும் வகையில்,
    ஒவ்வொரு ஞாயிறன்றும் அவர்கள் அனுப்பும் ஆக்கங்களில்,
    சுவையாகவும், சுவாரசியமாகவும் இருப்பவைகளை
    "நம் வகுப்பில் பதிவிடப்பெறும்". என்கிற அறிவிப்பு வரவேர்க்கத்தகுந்ததாகும். ஆசிரியர் அவர்களுக்கு மிக்க நன்றி.

    இன்று
    ஆலாசியம் கோவிந்தசாமி அவர்களின்
    நீங்காத நினைவுகள், இதனைப் படிப்பவர்களுக்கும் நீங்காத நினைவுகளாக இருக்குமென கருதுகிறேன்.வகுப்பறையில் முதன் முதலாக நீங்காத நினைவுகள் மூலமாக இடம்பெற்ற அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-07-25

    ReplyDelete
  2. ஆசிரியருக்கு வணக்கம்,
    தேவ தச்சர் செதுக்கிய சிலைகளுக்கு இடையில், இந்த சிரியன் செதுக்கிய கல்லையும் வைத்த குருவிற்கு எனது சிரம் தாழ்ந்த ஆயிரமாயிரம் நன்றி கலந்த வணக்கங்கள்.

    அரை மாத்திரை என்று,
    "(உண்மையில் ஒரு மாத்திரை என்றே கூறினாலும் அது ஆசிரியருக்கு அரை மாத்திரை அளவாக தோன்றி இருக்கலாம் என்பதாக கொள்ளலாம்)"
    அறைந்த பதிலோடு....
    தொடர்ந்த தொரு சத்தம்;
    பளார்! பளாரென்று....

    நன்றிகள் குருவே!

    ReplyDelete
  3. வகுப்பறையில் உள்ள மாணவர்கள் மற்றும் வாழ்த்தும் அனைவருக்கும் ஆசிரியரின் அனுமதியோடு எனது நன்றிகளை மொத்தமாக கூறிக்கொள்கிறேன்.

    ReplyDelete
  4. ஆலாசியம் என்று தமிழில் எழுதினாலும் ஹாலாஸ்யம் என்பதே வடமொழியில் சரி. "லா" வை விட்டு விட்டால் ஹாஸ்யம் என்று ஆகும் அதாவது நகைச்சுவை. நல்ல நகைச்சுவை உணர்வும் இலக்கிய ஆர்வமும் உடையவர் சஹ மாணவர் ஆலாசியம். அவருக்கு நீங்கள் அளித்த அந்தஸ்துக்கும் ஆதரவுக்கும் மாணவர்கள் அனைவரின் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். பிறருக்குப் புகழ் சேர்க்கும் நல்ல எண்ணம் உள்ளதாலேயே உங்களுக்குப் புகழ் சேர்கிறது.

    அவர் சொன்ன உண்மை சம்பவத்தின் இறுதி முடிவு நெஞ்சில் அம்பு போல் பாய்ந்து குடைகிறது.நிஜ‌ வாழ்க்கை கற்பனைக்கதைகளை விட சோகமானது.அது போன்ற அற்ப ஆயுள்காரர்களே அமானுஷ்யமாக நடமாடுகிறார்கள்.

    ReplyDelete
  5. //////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    வகுப்பறை மாணவர்களின் எழுத்தாற்றலினை சிறப்பிக்கும் வகையில்,
    ஒவ்வொரு ஞாயிறன்றும் அவர்கள் அனுப்பும் ஆக்கங்களில்,
    சுவையாகவும், சுவாரசியமாகவும் இருப்பவைகளை
    "நம் வகுப்பில் பதிவிடப்பெறும்". என்கிற அறிவிப்பு வரவேற்கத்தகுந்ததாகும். ஆசிரியர் அவர்களுக்கு மிக்க நன்றி. இன்று
    ஆலாசியம் கோவிந்தசாமி அவர்களின்
    நீங்காத நினைவுகள், இதனைப் படிப்பவர்களுக்கும் நீங்காத நினைவுகளாக இருக்குமென கருதுகிறேன்.வகுப்பறையில் முதன் முதலாக நீங்காத நினைவுகள் மூலமாக இடம்பெற்ற அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி//////

    சரி, நீங்கள் ஒன்றை எழுதியனுப்புங்கள் தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  6. //////kmr.krishnan said...
    ஆலாசியம் என்று தமிழில் எழுதினாலும் ஹாலாஸ்யம் என்பதே வடமொழியில் சரி. "லா" வை விட்டு விட்டால் ஹாஸ்யம் என்று ஆகும் அதாவது நகைச்சுவை. நல்ல நகைச்சுவை உணர்வும் இலக்கிய ஆர்வமும் உடையவர் சஹ மாணவர் ஆலாசியம். அவருக்கு நீங்கள் அளித்த அந்தஸ்துக்கும் ஆதரவுக்கும் மாணவர்கள் அனைவரின் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். பிறருக்குப் புகழ் சேர்க்கும் நல்ல எண்ணம் உள்ளதாலேயே உங்களுக்குப் புகழ் சேர்கிறது.
    அவர் சொன்ன உண்மை சம்பவத்தின் இறுதி முடிவு நெஞ்சில் அம்பு போல் பாய்ந்து குடைகிறது.நிஜ‌ வாழ்க்கை கற்பனைக்கதைகளை விட சோகமானது.அது போன்ற அற்ப ஆயுள்காரர்களே அமானுஷ்யமாக நடமாடுகிறார்கள்.//////

    உங்களின் கருத்திற்கும் பாராட்டிற்கும் நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  7. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    =====================
    ////"ஆலாசியம் கோவிந்தசாமி அவர்களின்
    நீங்காத நினைவுகள், இதனைப் படிப்பவர்களுக்கும் நீங்காத நினைவுகளாக இருக்குமென கருதுகிறேன்.வகுப்பறையில் முதன் முதலாக நீங்காத நினைவுகள் மூலமாக இடம்பெற்ற அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி//////

    சரி, நீங்கள் ஒன்றை எழுதியனுப்புங்கள் தட்சணாமூர்த்தி!

    Monday, July 26, 2010 3:44:00 AM
    ========================
    தஙக‌ளின் ஆசியுடன் விரைவில் நீங்காத நினைவுகள் ஒன்றை
    எழுதியனுப்பி வைக்க‌ உள்ளேன்.

    நன்றி.

    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-07-29

    ReplyDelete
  8. ////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    =====================
    ////"ஆலாசியம் கோவிந்தசாமி அவர்களின்
    நீங்காத நினைவுகள், இதனைப் படிப்பவர்களுக்கும் நீங்காத நினைவுகளாக இருக்குமென கருதுகிறேன்.வகுப்பறையில் முதன் முதலாக நீங்காத நினைவுகள் மூலமாக இடம்பெற்ற அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி//////
    சரி, நீங்கள் ஒன்றை எழுதியனுப்புங்கள் தட்சணாமூர்த்தி!
    Monday, July 26, 2010 3:44:00 AM
    ========================
    தஙக‌ளின் ஆசியுடன் விரைவில் நீங்காத நினைவுகள் ஒன்றை
    எழுதியனுப்பி வைக்க‌ உள்ளேன்.
    நன்றி.
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி/////

    ஆகா, அப்படியே செய்யுங்கள். நன்றி!

    ReplyDelete
  9. அய்யா அந்த செல்வகுமார் நான் தான்.. ஆலாசியதுடன் அந்த வகுப்பில் நானும் இருந்தென். அந்த நாட்கலை நினைவுபடுதிய தஙலுக்கு ...........

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com