மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

22.1.15

Short story: சிறுகதை: சாமியார் சம்சாரியான கதை!

அருள்மிகு நெல்லையப்பர் கோயில்

சிறுகதை: சாமியார் சம்சாரியான கதை!

அப்பச்சி சொன்ன கதைகள் - பகுதி 11
                   
(எங்கள் அப்பச்சி சொன்ன கதைகள் வரிசையில் இது பதினோராவது
கதை. கதையின் கரு மட்டும் அவருடையது. அதை விரிவு படுத்தி
எனது நடையில் நான் எழுதியுள்ளேன்)

சாமியார் சம்சாரியான கதை’ என்று தலைப்பில் கொடுத்துள்ளேன்.
ஆனால் எங்கள் அப்பச்சி இந்தக் கதையை சாமியார் பூனை வளர்த்த
கதை’ என்றுதான் சொல்வார்கள். அவர்கள் என்னிடம் சொல்லிய
கதை அல்ல இது. மற்றவர்களிடம் சொல்லியபோது, அருகில்
இருந்து கேட்கும் வாய்ப்பைப் பெற்றேன்
--------------------------------------------------
ஆவுடையப்பன். நமது நாயகரின் பெயர் அதுதான். வயது 51. கதை
நடந்த காலம் 1921ம் ஆண்டு. நெல்லையப்பரும், காந்திமதி அம்மனும்
ஆட்சி செய்யும் திருநெல்வேலியை சொந்த ஊராகக் கொண்டவர்
அவர்.

அந்தக் காலத்தில் திருநெல்வேலி அமைதியாகவும், அற்புதமாகவும்
இருக்கும். பரபரப்பு இல்லாமல் இருக்கும். ஒருமுறை சென்றவர்களுக்கு
அந்த ஊரைவிட்டுத் திரும்பிவர மனமிருக்காது. எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று வயல் வெளிகளும், வாகை மரங்களும் சூழ்ந்த ஊர் அது.பல இடங்களில் வீடுகளுக்குப் பின்னால் தண்ணீர் ஓட்டத்துடன் கூடிய வாய்க்கால்கள் இருக்கும். வீட்டுக்காரர்களே படிகளைக் கட்டி வைத்திருப்பார்கள். வீட்டுப் பெண்கள் எல்லாம் பாத்திரங்களைக் கழுவிச் சுத்தம் செய்வதற்கும், துணிகளைத் துவைப்பதற்கும், ஏன் குளிப்பதற்கும்
அந்த வாய்க்கால் நீரைத்தான் பயன் படுத்துவார்கள். நீர் ஓட்டத்துடன் இருந்ததால் சுத்தமாக இருக்கும்.

ஆவுடையப்பரின் வீடு, தெற்குப் புதுத் தெருவில் இருந்தது. வாகையடி முக்கில் இருந்து கிழக்கு திசையில் இருக்கும். பூர்வீக வீடு. பெரிய வீடு.
திருநெல்வேலிக்கு அருகில் மேலப்பாளையம் கிராமத்தில், தாமிரபரணி ஆற்றையொட்டிய பகுதிகளில் அவருக்கு நிறைய விளை நிலங்கள்
இருந்தன.ஆறு கிலோமீட்டர் தொலைவுதான். அவருடைய தந்தையார் காலத்தில் அவர்களே விவசாயத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆவுடையயப்பர் தலையெடுத்ததும் நிலைங்களைப் பிரித்து குத்தகைக்குக் கொடுத்துவிட்டார். அவருக்கு விவசாயத்தில் ஆர்வம் இல்லாமல் போனதுதான் அதற்குக் காரணம். அந்தக் காலத்தில் மனிதர்கள்
தர்மத்திற்குக் கட்டுப் பட்டு நடந்ததால், குத்தகைக்காரர்களே நெல்,
பணம் என்று குத்தகைத் தொகையை ஒழுங்காகக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். வாழ்க்கை பணக்கஷ்டமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தது.

கர்மகாரகன் எல்லாக் கதவுகளையுமே திறந்து விட மாட்டான்.
ஒரு கதவைத் திறந்து விட்டால், இன்னொரு கதவை அடைத்து வைத்திருப்பான். அந்த நியதியின்படி, ஆவுடையப்பருக்கு பணம்
வரும் வழியைத் திறந்துவிட்டவன், நிம்மதி மற்றும் மகிழ்ச்சி வரும்
வழியை அடைத்து வைத்துவிட்டான்.

மனிதர் அனுதினமும் நிம்மதியில்லாமல் தவிர்த்தார். அதற்குக்
காரணம் அவருக்கு இரண்டு மனைவிகள் 12 பிள்ளைகள். விடிந்தால், எழுந்திரித்தால் சண்டை சச்சரவுகள். அவருக்கு அக்கா, தங்கை என்று
இரண்டு சகோதரிகளே மனைவிகளாக வாழ்க்கைப்பட்டிருந்தார்கள்.

அவருக்கு முதல் திருமணமாகி, ஐந்தாண்டுகளுக்குக் குழந்தையே பிறக்காததினால், அவருடைய மாமனாரே உவந்து தனது அடுத்த
மகளையும் அவருக்குக் திருமணம் செய்து வைத்தார். இருதாரச்
சட்டம் எல்லாம் இல்லாத காலம் அது!

அதில் வேடிக்கை என்னவென்றால், இறையருளால் அவருக்கு
இரண்டாவது திருமணம் நடந்ததற்கு மறு ஆண்டே, இரண்டு
மனைவிகளும் உண்டாகி இருந்தார்கள். இருவருக்குமே அடுதடுத்து
ஆண் குழந்தைகளைப் பெற்றுக் கொடுத்தார்கள். அந்த சமயத்தில் ஆவுடையப்பர் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

தாமிரபரணி ஆற்றின் நடுவில் இருக்கும் குறுக்குத்துறை முருகனின்
அருள் என்பார் அதை!

அடுத்தடுத்து பத்து ஆண்டுகளுக்குள் அவருக்குப் பன்னிரெண்டு
பிள்ளைகள் பிறந்துவிட்டன.

மனைவிகள் இருவரும் அவருக்குப் போட்டி போட்டுக் கொண்டு
சமையல் செய்து பறிமாறினார்கள். இருவருமே கிராமத்துப் பெண்க
ளாதலால் அற்புதமாக சமையல் செய்வார்கள். நெல்லைப் பிரதேசத்தின் பாரம்பரிய உணவுகளான கூட்டாஞ்சோறு, உளுந்தஞ்சோறு, வடைகறி தோசை, உளுந்தங்களி என்று அசத்திவிடுவார்கள்.

ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்த சகோதரிகளுக்குள், பின்னால் பிள்ளைகளை வைத்தும், பணத்தை வைத்தும் பல பிரச்சினைகள் வந்துவிட்டன!

உங்களுடைய நாத்தச் சண்டைகளை என்னிடம் கொண்டு வராதீர்கள்
என்று சொல்லித் தப்பித்து வந்தார். இருவரையும் தனித்தனியாக
வெவ்வேறு வீடுகளில் வைக்கும்படி உறவினர்கள் அவருக்கு
யோசனை சொன்னார்கள். அது நிறைவேறவில்லை.சின்னவளை
அனுப்பச் சொல்லிப் பெரியவளும், அந்தக் களவாணியையே
அனுப்புங்கள் என்று சின்னவளும் சொல்லி, வீட்டைவிட்டுப் போக மறுத்துவிட்டார்கள்.

வீட்டின் மேல் பகுதியில் ஒரு பெரிய அறை காலியாக இருந்தது. பகல் நேரங்களில் அவருடைய நண்பர்கள் வந்து விடுவார்கள். தினமும்
சீட்டாட்டம் நடக்கும். பாயிண்டிற்கு காலணா என்று நிர்ணயித்து
ஆடுவார்கள். யாருக்கும் அதில் பெரிய நஷ்டமோ அல்லது லாபமோ இருக்காது. வந்து சென்றவர்கள் எல்லோருமே செல்வந்தர் வீட்டு
வாரிசுகள் என்பதால், அதையே மும்மரமாகச் செய்து கொண்டிருந்தார்கள்.

தாமிரபரணி ஆற்றைப்போல காலம் சுறுசுறுப்பாக ஓடியதில் 20
ஆண்டுகள் போனதே தெரியவில்லை. ஆவுடையப்பருக்கும் வயது
ஐம்பதைக் கடந்தது. அவருடைய மகன்களில் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டிய நேரம் வந்தது. அத்துடன் அவருடைய வீட்டில் சண்டை வடிவில் பூகம்பமும் வந்தது.

அவருடைய தங்கை மகள் அலம்பிவிட்ட மொசைக் தரையைப் போல
பளிச் சென்று அழகாக இருப்பாள். அத்துடன் அவளுக்கு பத்து ஏக்கர்
பூமியும், 100 பவுன் நகையும் சீர்வரிசையாக வர இருந்தது. யாருக்குத்தான் அதை இழக்க மனம் வரும்? அதை வைத்து வீட்டில் ஆவுடையப்பரின் மனைவிகள் இருவருக்கும் பெரிய சக்களத்தி சண்டை. கடைசியில் கைகலப்பில் முடிந்தது. ஆவுடையப்பர்தான் இருவரையும் பிரித்து
விட்டார். பெரியவளைக் கிராமத்திற்குப் போய் 10 நாட்கள் இருக்கும்படி கேட்டுக் கொண்டார். அதற்கு அவள் செவிசாய்க்கவில்லை. தங்கை
மகளை யாருக்குக் கட்டினாலும் பொல்லாப்பு என்பதனால், தன்
தங்கையிடம், “உன் மகளை வெளியே கட்டிக்கொடுத்துவிடு” என்று
அவர் சொல்லி விட்டார்.

அது வீட்டினருக்குத் தெரிந்தபோது, வீட்டில் பெரிய கலவரமாகி
விட்டது. ஆளாளுக்கு அவருடன் சண்டைக்கு வந்து விட்டார்கள்.
வாய் வார்த்தைகள் முற்றிய நிலையில், அவருடைய மூத்த மகன்
யாரும் எதிர்பார்க்காத செயலைச் செய்துவிட்டான். செய்யக்கூடாத செயலைச் செய்துவிட்டான். ஆமாம், தன் தந்தையை ஓங்கி அறைந்த
தோடு, பிடித்துக் கீழேயும் தள்ளி விட்டு விட்டான். அவன் ஆத்திரம்
அவனுக்கு. ஆத்திரத்தில் புத்தி வேலை செய்யாது என்பது உண்மை யாகிவிட்டது.

கீழே விழுந்த அவருக்கு இடுப்பில் அடிபட்டுவிட்டது. அத்துடன் பலத்த அதிர்ச்சிக்கும் ஆளாகிவிட்டார். எழுந்து நிற்கவே சில மணித்துளிகள் ஆகிவிட்டது. அதற்குள் வீட்டினர் போட்ட காட்டுக் கூச்சலில் தெருவே, அவர்கள் வீட்டின் முன்பாகக் கூடி விட்டது. எதிர் வீட்டுக்காரர் வந்து அனைவரையும் சமாதானம் செய்தார்.

அப்போதுதான், அந்தக் கணத்தில்தான் அவுடையா பிள்ளை முடிவு
செய்தார். தனக்கு மதிப்பில்லாத அந்த வீட்டில் இனிமேல் இருக்கக்
கூடாது என்று முடிவு செய்ததோடு, அதைச் செயல் படுத்தவும்
செய்தார்.

என்ன செய்தார்?

தனக்கு மதிப்பில்லாத வீட்டில் இனிமேல் இருக்கக்கூடாது என்று
முடிவு செய்த ஆவுடையா பிள்ளை, அதைச் செயல் படுத்தும் முகமாகக் களத்தில் இறங்கினார். தன் நில புலன்களை இரண்டு பங்காக்கித் தன் மனைவிகள் இருவர் பெயருக்கும் எழுதி அதைப் பதிவு செய்து
அவர்களிடம் கொடுத்ததோடு, தன் பங்கிற்காக வங்கியில் இருந்த
மூன்று லட்ச ரூபாய்கள் பணத்தைத் தன் பாதுகாப்பிற்காக வைத்துக் கொண்டார். மூன்று லட்ச ரூபாய்கள் என்பது அந்தக் காலத்தில் மிகப்
பெரிய தொகை.

பத்து நாட்கள் மெளனம் காத்துப் பொறுமையாக இருந்தவர், ஒரு நாள்
கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு, வீட்டைவிட்டுக் கிளம்பி விட்டார்.
தூர தேசங்களுக்குச் செல்வதாகவும், திரும்பி வரமாட்டேன் - என்னைத்
தேட வேண்டாம் என்றும் எழுதி வைத்தவர், தான் வளர்ந்து ஆளாகிய நெல்லையை விட்டுக் கிளம்பி விட்டார்.

சாமியாராகி ஏதாவது மடத்தில் சேர்ந்து தங்கிவிடலாம் என்று நினைத்தார். ராமகிருஷ்ணா மடத்தில் சேர்ந்து விடலாம் என்று முதலில் நினைத்தார்.
அங்கெல்லாம் சுகமாக இருக்க முடியாது. உழைக்க வேண்டும்.
இறைவனைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டு மக்களிடம் இறையுணர்வை முழுமையாக்க வேண்டும். மக்களுக்குச் சேவை
செய்ய வேண்டும். அங்கேயுள்ள சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட
வேண்டும். யோசிக்க யோசிக்க மலைப்பாக இருந்தது. ஆகவே அந்த நினைப்பைக் கைவிட்டார்.

திருச்செந்தூர் சென்று சண்முகநாதனை வழிபட்டவர், அங்கேயே ஒரு விடுதியில் தங்கி விடலாம் என்று நினைத்தார். ஆனால் நெல்லை மாவட்டத்துக்காரர்கள் அடிக்கடி வந்துபோகும் இடமாதலால், தன்னை அறிந்தவர்கள் மூலம், தான் அங்கே இருப்பதை அறிந்து தன் வீட்டினர், தன்னைத் தேடிவரும் அபாயம் உண்டு என்று நினைத்தவர், திருச்செந்தூரைவிட்டுக் கிளம்பிவிட்டார்.

கிளம்புமுன், காவி வேஷ்டியும், காவித்துண்டும் வாங்கி முருகன் சந்நிதானத்திலேயே வைத்து, வணங்கி, உடுத்திக்கொண்டார். சுமார்
ஒரு மாத காலம் சவரம் செய்யப்படாத முகத்துடன் பார்ப்பதற்கு அசல் சாமியாரைப் போலவே தோற்றமளித்தார். ஆண்டவன் கட்டளை திரைப்படத்தில்’ ஆறு மனமே ஆறு, அந்த ஆண்டவன் கட்டளை ஆறு’
என்று பாடிக்கொண்டு, திருச்செந்தூர் கோயிலின் முன்பாக நிற்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் போலவே அவர் தோற்றமளித்தார்.

தஞ்சை மாவட்டத்தில் நிறையக் கிராமங்களும், கோவில்களும்
இருப்பதால் அங்கே ஒரு ஊருக்குச் சென்று தங்கிவிடலாம் என்று
முடிவு செய்து, கடைசியில் நாகபட்டிணம் அருகில் உள்ள சிக்கல்
என்ற ஊருக்கு வந்து சேர்ந்தார். முருகப் பெருமான் சிங்காரவேலனாக உறைந்திருக்கும் ஊர் அது. சுற்றுப்புறம் பச்சைப் பசேல் என்று
பசுமையாக இருந்தது. அங்கேயே தங்கிவிட முடிவு செய்தார்.

சூரனை அழிக்க புறப்பட்ட முருகனுக்கு சிவனும், பார்வதியும் ஆயுதம் கொடுத்த ஸ்தலம் அது. பார்வதி தேவி முருகனுக்கு வேல் கொடுத்தார். தாயிடம் இருந்து வேல் பெற்ற முருகன் சிங்கார வேலன் என்ற ழைக்கப்பட்டார். அந்த நிகழ்வு நடந்த இடம் சிக்கல் என்ற தலமாகும்.
சிறப்பு மிகுந்த அந்த ஸ்தலம் பழைய தஞ்சை மாவட்டத்தில்,
இப்போதைய நாகை மாவட்டத்தில், நாகை - திருவாரூர் வழித்
தடத்தில் நாகையில் இருந்து சுமார்  8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

உண்மையில் இத்தலம் நவநீதிஸ்வரரை  மூலவராகக்  கொண்ட சிவாலயமாகும். இத்தலத்தில் வசிஷ்ட முனிவர், காமதேனுவின் வெண்ணையால் சிவலிங்கம் அமைத்து வழிபட்டார். பிறகு அந்த
லிங்கத்தை எடுக்க முயன்றார். ஆனால் அந்த லிங்கம் எடுக்க
முடியாதபடி  சிக்கிக் கொண்டது. அதன் காரணமாக இந்த ஊருக்கு
சிக்கல் என்ற பெயர் ஏற்பட்டதாம்.

தன் சிக்கல்களை மறப்பதற்கு சிக்கல்தான் சரியான ஊர் என்று முடிவு செய்தவர், கோயில் தர்மகர்த்தாவைப் பார்த்துப் பேசித் தன்னை
அறிமுகம் செய்து கொண்டதோடு, தான் அந்த ஊரிலேயே தங்க இருப்பதாகவும், தனக்கு ஒரு சிறு வீடு ஒன்றைப் பிடித்துத் தருமாறு
கேட்டுக் கொண்டார்.

சற்று யோசனையில் ஆழ்ந்த தர்மகர்த்தா, கடையில் தீர்க்கமாகப்
பதில் சொன்னார்: “இது சின்ன கிராமம். இங்கே உள்ள மக்கள் கட்டுப் பெட்டியானவர்கள், சாமியார்களுக்கும், பிரம்மச்சாரிகளுக்கும் வீட்டை வாடகைக்குத் தரமாட்டார்கள். வேண்டுமென்றால் ஒன்று செய்யுங்கள். கிராமத்திற்கு ஒதுக்குப்புறத்தில் பத்து ஏக்கர் பூமி ஒன்று வீட்டுடன்
விலைக்கு வருகிறது. உங்களிடம்தான் பணம் இருக்கிறது என்கிறீர்களே, அதை சல்லிசாக வாங்கித் தருகிறேன். நீங்கள் அங்கேயே தங்கிக் கொள்ளலாம்” என்றார்.

அப்போதெல்லாம் ஏக்கர் ஐநூறு ரூபாயிற்கே கிடைக்கும். பவுன்
பதிமூன்று ரூபாய்க்கு விற்ற காலம் அது. ஆவுடையாபிள்ளை சரி
என்று தன் சம்மதத்தைச் சொல்ல, எல்லாம் மளமளவென்று நடந்தன.
ஓட்டு வீடுதான். பின்பக்கம் கிணற்றுடன் செளகரியமாக இருந்தது.
அத்துடன் பின்பக்கம் தென்னை மரங்களுடன் கூடிய நெல்வயல்.

தர்மகர்த்தா, நாகபட்டிணத்திற்கு ஆள் அனுப்பி, அவருக்கு வேண்டிய
கயிற்றுக் கட்டில், பாய், தலையணை, உட்காரும் மர நாற்காலி,
அவசியமான தட்டுமுட்டுச் சாமான்கள் அனைத்தையும் வாங்கிக்
கொடுத்து உதவினார்.

மூன்று நாட்கள் தர்மகர்த்தாவின் வீட்டில் தங்கியிருந்தவர், நான்காம்
நாள் தன் சொந்த வீட்டில் பால் காய்ச்சிக் குடியேறினார்.

சில மாதங்களுக்குள்ளாகவே தனக்கு ஏற்படப் போகின்ற சிக்கல் என்னவென்று தெரியாமலேயே அங்கே குடியேறினார்.

என்ன சிக்கல்?

தொடர்ந்து படியுங்கள்!

                          ******************************

சிக்கல்களும், சந்தோஷங்களும் சொல்லிவிட்டு வருவதில்லை.
நாம் செய்யும் செயல்களின் விளைவுகளே அவைகள். திணை
விதைத்தால் திணை விளையும், விணை விதைத்தால் விணைதான் விளையும்.

ஆவுடையா பிள்ளைக்குப் புது வீட்டில் தனிமைதான் பெரிய குறையாக இருந்தது. அதனால் பாதி நேரத்தைக் கோயில் வளாகத்திலேயே கழித்தார்.
சின்ன ஊர் என்பதால் கோயிலுக்கு வருபவர்கள் எல்லாம் அவருக்குப் பழக்கமாகி விட்டார்கள்.

அந்தக் காலத்தில் எல்லாக் கோயில்களிலும் மடப்பள்ளி இருந்தது.
இருந்தது மட்டுமல்ல, அதில் காலையில், பிரசாதம் செய்து
இறைவனுக்குப் படைப்பதோடு, கூடுதலாகச் செய்து கேட்கும்
பக்தர்களுக்கு, விலைக்கும் கொடுப்பார்கள். பெரும்பாலும்
சம்பாசாதம், வெண்பொங்கல் அல்லது புளியோதரை போன்ற
சாதங்கள்தான் பிரசாதமாக இருக்கும்.

அவற்றுள் சம்பா சாதம் சூப்பராக இருக்கும். சிவ ஆலயங்களில்
சிவனுக்கு உகந்த பிரசாதமாக, சம்பா சாதத்தைத்தான் வடித்து
நிவேதனமாகப் படைப்பார்கள். அரிசியைக் களைந்து, தண்ணீர்,
உப்புச் சேர்த்து உதிரியாக வடித்து, பெரிய இருப்புச் சட்டியில்,
நெய் விட்டு, சூடானதும் மிளகுத் தூள், சீரகத் தூள்,  கறிவேப்பிலை
போட்டுத் தாளித்து, அதைச் சாதத்தில் கொட்டிக் கிளறிவிடுவார்கள்.
அதுதான் சுவையான சம்பாசாதப் பிரசாதம் ஆகும். சிதம்பரம்
நடராஜர் கோயிலின் நித்தியப் பிரசாதம் அது!. ஒரு நபர் சாப்பிடக்கூடிய சாதத்தின் அன்றைய விலை ஒரு அணா. ஆவுடையா பிள்ளைக்குக்
காலைப் பலகாரம் கோயில் பிரசாதத்தில் முடிந்து விடும். மதிய
உணவை உள்ளூரில் இருந்த சைவப் பிள்ளைமார் வீட்டுக்காரர்கள்
செய்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.  இட்லி , சாம்பாருடன்
அவர்களே இரவு உணவையும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

தலைச் சுமையாகக் கூடையில் பாத்திரம் வைத்துப் பால் கொண்டு
வந்து விற்கும்  பெண்மணியிடம் இருந்து ஒரு உழக்குப் பாலை வாங்கி வைத்துக் கொள்வார். வேண்டும்போது, காப்பி அல்லது டீ போட்டுக்
குடித்துக் கொள்வார். விறகு அடுப்பு. அடுப்பைப் பற்றவைத்து காப்பி
அல்லது டீ போடுவதும், பாத்திரங்களைக் கொண்டுபோய்க் கிணற்றடியில் போட்டுக் கழுவதும்தான் சற்றுக் கடுமையான வேலையாக அவருக்குத் தோன்றியது. டீக்கடை, பெட்டிக்கடை எல்லாம் அந்தக் கிராமத்தில்
இல்லாத காலம் அது!

அப்படியே பத்து நாள் பொழுது ஓடிவிட்டிருந்தது. அதற்குப் பிறகுதான் பிரச்சினை ஆரம்பித்தது.

ஆள் நடமாட்டம் இருப்பது தெரிந்து, பக்கத்து வயல்களில் இருந்து
எலிகள் வர ஆரம்பித்துவிட்டன. வந்த எலிகள் சும்மா இருக்காமல்
வீட்டில் இருந்த கெளபீணம், வேஷ்டி, துண்டுகள் எல்லாவற்றையும்
கடித்துக் குதறிவிட்டுப் போயிருந்தன.

எலிகள் மட்டும் அல்ல, இரண்டொரு சமயம் பாம்பும் வர ஆரம்பித்து
விட்டது. ஆவுடையா பிள்ளைக்குப் பழக்கமில்லாத சமாச்சாரங்கள்
அவைகள்.

கோவில் தர்மகர்த்தாவிடம் அதைக் குறையாகச் சொல்லி, என்ன
செய்யலாம் என்று கேட்டபோது, அதற்கு அவர் ஒரு தீர்வைச்
சொன்னார். ஒரு பூனையை வாங்கிக் கொடுத்து, அதை வைத்துக்
கொள்ளச் சொன்னார்.

வந்த பூனைக்கு நேரம் சரியில்லை போலிருக்கிறது. வந்த இரண்டாவது
நாளே வீட்டிற்குப் பின்பக்கம் இருந்த தோட்டத்தில், நாகப் பாம்புடன்
அது போராடிய போது, நாகப்பாம்பு அதைப் போட்டுத் தள்ளிவிட்டுப் போய்விட்டது.

மீண்டும் ஒரு பூனையைப் பிடித்துக் கொடுத்த தர்மகர்த்தா, கூடவே
நாய் ஒன்றையும் வாங்கிக் கொடுத்தார். ஆனால் அவை இரண்டும்
அதிசயமாக ஒன்றுக் கொன்று ஒற்றுமையாக இருந்தன. எலிக்காகப்
 பூனை. பாம்பிற்காக நாய்.

அவைகளுக்கு உணவு, பால் ஆகியவற்றிற்கும் அவர் ஏற்பாடு
செய்தார். இப்போது சற்றுப் பாதுகாப்பாக இருந்தது.

இப்போது ஒரு உழக்குக்கிற்குப் பதிலாக 4 உழக்குப் பால் வாங்க
வேண்டியதாக இருந்தது. காசைப் பற்றிய கவலை இல்லாததால்
வாங்கத் துவங்கினார். அவை இரண்டையும் பராமரிப்பதிலும் சற்றுப்
பொழுது கழிந்தது.

ஆனால் பால் ஊற்றும் பால்கார அம்மணி சில நாட்கள் வராமல் விட்டு, அவரைத் திண்டாட வைத்தாள். அதற்கும் ஒரு தீர்வைச் சொல்லி,
தர்மகர்த்தா குறைந்த விலையில் ஒரு பசுமாட்டைக் கன்றுடன்
வாங்கிக் கொடுத்தார். அவற்றிற்குத் தீவனப் பயிர்களான வைக்கோல், சோளத்தட்டை, புண்ணாக்கு, கழனித் தண்ணீர் என்று வேலைப் பளு
சற்று அதிகரித்தது. அத்துடன்  மாட்டைக் கழுவிக் குளிப்பாட்டுவது,
மாட்டுக் கொட்டகையில் சாணத்தை அள்ளித் தரையைச் சுத்தம்
செய்வது போன்ற வேலைகளும் ஏற்பட்டன.

அதற்கு என்னடா செய்யலாம்? என்று அவர் நொந்துபோனபோது,
தர்மகர்த்தா அதற்கும் ஒரு தீர்வைச் சொன்னார்.

பக்கத்து கிராமத்தில் இருந்து தெரிந்த பெண் ஒருத்தியைக் கூட்டிக்
கொண்டு வந்து காட்டி, ”இன்று ஒரு நாள் வேலை செய்யச் சொல்லிப் பாருங்கள், உங்களுக்குப்பிடித்தால், இந்தப் பெண்ணை வேலைக்கு
வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்” என்றார்.

வந்த பெண் அம்சமாக இருந்தாள். வயது 28 இருக்கும். சற்று
விளக்கமாகச்  சொல்ல வேண்டும் என்றால், கல்யாணப் பரிசு படத்தில்
வரும் நடிகை சரோஜாதேவியைப் போன்று இருந்தாள். கறுப்பு
நிறம்தான் ஆனால் ஈர்க்கும் விதமாக வசீகரமாக இருந்தாள்.
அத்துடன் சுறுசுறுப்பாகவும் இருந்தாள். ஒரே ஒரு சோகம். அவள்
விதவைப் பெண். திருமணமான மறு ஆண்டிலேயே தன்னுடைய
கணவனைப் பறிகொடுத்தவள். குழந்தை இல்லை. தன் அன்னையோடு தங்கியிருக்கிறாள். காலையில் 7 மணிக்கு வந்தால் மாலை 6 மணி
வரைக்கும் வேலை பார்க்கிறேன் என்றாள்.அவளுடைய கிராமம்
பக்கத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. கூலி வேலைக்
குத்தான் சென்று கொண்டிருக்கிறாளாம்.

பெயரைக் கேட்டார். கண்ணம்மா’ என்று சொன்னாள்.

இனி கூலி வேலைக்கெல்லாம் நீ செல்ல வேண்டாம். இங்கே வந்து வேலைகளைப் பார். வேண்டிய சம்பளத்தை நான் தருகிறேன் என்று ஆவுடையா பிள்ளை சொல்லிவிட்டார்.

காலையில் காப்பி போட்டுக் கொடுப்பதில் துவங்கி, மூன்று
வேளைக்குமான சமையலையும் அவளே செய்து கொடுத்தாள்.
வீட்டையும், வீட்டிலுள்ள மற்ற ஜீவன்களையும் அவளே பார்த்துக் கொள்ளத் துவங்கினாள்.

ஒரு மாதம் சென்றது. கிட்டத்தட்ட ஒரு மனைவி செய்வதைப் போன்று
எல்லா வேலைகளையும் அவள் ஈடுபாட்டுடன் செய்ததால், ஆவுடையா பிள்ளைக்கு அவளை மிகவும் பிடித்துப் போய்விட்டது.

அத்துடன், எல்லாம் அப்படி சுமூகமாகவே நடந்து கொண்டிருந்தால்
கதையில் என்ன சுவாரசியம் இருக்கப்போகிறது?

விதி எப்போதும் எதிரணியில்தான் விளையாடும். விதி தன்
ஆட்டத்தைத் துவங்கியது. ஆவுடையா பிள்ளையைக் கண்ணம்மாவிடம் நெருக்கிக் கொண்டு சென்றது.

கண்ணம்மா நடுக்கட்டில் வேலை செய்யும்போது, கட்டிலில் அமர்ந்தவாறு அவளுடைய அழகை ரசிக்கத் துவங்கினார்.

ஒரு கவிஞன் கவிதையொன்றில் நச்சென்று குறிப்பிட்டதைப் போல நடக்கத்துவங்கியது.

”அவள்
குனிந்து, நிமிர்ந்து வீட்டைக்
கூட்டினாள்
வீடு சுத்தமானது
மனம் குப்பையானது!”

ஆவுடையா பிள்ளையின் மனம் குப்பையாகிப் போனது. ரசனை உணர்வு
காம உணர்வாக மாறியது.

ஒரு அடை மழை நாளில், வேலைக்கு வந்த அவள் திரும்பிப் போக முடியாமல், அன்று இரவு ஆவுடையா பிள்ளையின் வீட்டில் தங்கும்படியானது. தங்கியவளைத் தாரமாக்கித் தன் இச்சைகளைத்
தீர்த்துக் கொண்டுவிட்டார் ஆவுடையா பிள்ளை. கண்ணம்மாவும், ஏழு ஆண்டுகளாக உள்ளே உறங்கிக் கொண்டிருந்த விரகதாபத்திற்கு
தன்னைப் பலி கொடுத்து விட்டாள்.

அந்தப் பாவ உணர்வு தொடர இருவரும் அந்நியோன்யமானார்கள்.
அந்த அந்நியோன்யம் மூன்றே மாதங்களில் கண்ணம்மா கர்ப்பமடைந்
ததில் வந்து திகைப்புடன் நின்றது.

அதற்குப் பிறகு?

அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் முக்கியமில்லை. விஷயம் ஊர்
முழுக்கத் தெரிய, பஞ்சாயத்தை வைத்துக் கண்ணம்மாவை,
ஆவுடையா பிள்ளைக்கே திருமணம் செய்து வைத்துவிட்டார்கள்.

ஆவுடையா பிள்ளையாவின் சந்நியாசம் அதிரடியாக முடிவிற்கு
வந்தது. அவர் மீண்டும் சம்சாரியானார்.

எல்லோரும் சாமியாராக, துறவியாக  முடியுமா? அதற்குக்
கொடுப்பினை வேண்டும்!

துறவு என்றால் எல்லாவற்றையும் துறக்க வேண்டும். முதலில்
ஆசைகளைத் துறக்க வேண்டும். மனச் சலனங்களைத் துறக்க
வேண்டும். மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை அறவே
கூடாது. ஆவுடைய பிள்ளை துறவறம் பூண நினைத்தவருக்குப்
பணம் எதற்கு? ஊரை விட்டுக் கிளம்பியவர் பெரும்தொகையை வைப்புநிதியாக உடன் கொண்டு வந்தது முதல் தவறு. மடங்களில்
சேராமல் வீட்டைப் பிடித்துத் தங்கியது இரண்டாவது தவறு. எலிக்குப்
பூனை, பாம்பிற்கு நாய், பிறகு பாலுக்காக பசுமாடு, பிறகு அவற்றைக்
கவனிக்க வேலைக்காரப் பெண் என்று அடுக்கடுக்காகத் தவறான செய்கைகளைச் செய்தது, தொடர்ந்து மீளமுடியாத நிலைக்குப்
போன தவறுகளாகும். அதற்கு ஈடாகத்தான் துறவறத்தையே அவர் பலிகொடுக்க நேர்ந்தது.

என்ன இன்னொரு பெண்ணும் இங்கே அவர் வாழ்க்கையில்
குறுக்கிடாமல் இருக்க வேண்டும். சிக்கல் சிங்கார வேலன்தான்
அதற்கு அருள் புரிய வேண்டும்!

(ஒரு தவறுக்கு, அந்தத் தவறை மறைக்க முயன்று அடுத்தடுத்து
செய்யும் தவறுகளுக்காக சாமியார் பூனை வளர்த்த கதை என்று இந்தக் கதையை என் தந்தையார் சொல்வார்கள். என்னிடம் சொன்னதில்லை. அடுத்தவர்களிடம் சொல்லும்போது கேட்டு என் மனதில் நிறுத்தியதாகும். அதை இன்று உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்)

சென்ற மாதம், மாத இதழ் ஒன்றில் வெளிவந்து பலரது பாராட்டையும்
பெற்ற கதை இது!

எப்படியுள்ளது கதை? ஒரு வரி பின்னூட்டத்தில் சொல்லுங்கள்

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

27 comments:

பழனி. கந்தசாமி said...

இதுதான் ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்குவது என்பது.

Dallas Kannan said...

Respected Sir
Loved the Story. That too reading it in your Style... forgot about my workload for 10 min...
Thanks a lot.

B. Lakshmi Narayanan, Tuticorin said...

அருமையான சொல் நடை... மயக்கிவிட்டீர் வாத்தியாரே... கதாபாத்திரங்களை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தி விட்டீர்கள்...

என்ன பாக்கியம் செய்தோம், இப்படி ஒரு வாத்தியார் கிடைக்க....


அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.

Kamala said...

தனக்குத் தானே பின்னிக்கொள்ளும் வலையில் மாட்டிக்கொண்டு திண்டாடும் மனிதன்!அருமையாக இருக்கிறது கதை.

eswari sekar said...

vanakkam sir story nanrga ulluthu

selvam velusamy said...

வணக்கம் குரு,

உங்கள் எழத்து நடையில் மற்றுமொரு ரசிக்கும்படியான அருமையான சிறு கதை.

நன்றி
செல்வம்

Regunathan Srinivasan said...

சும்மா பின்னு பின்னுன்னு பின்னறீங்க வாத்தியாரே.
S .ரகுநாதன்

kmr.krishnan said...

இந்தக்கதைக்கு 'சாமியார் பூனை வளர்தத கதை' என்று பெயர்.இது சகஜமாக
எல்லா ஊர்களிலும் சற்றே இலக்கிய அறிமுகம் உள்ளவர்கள் இடையில் புழக்கத்தில் உள்ள கதைதான்.'கெளபீனததை கடித்த எலிகளை ஒழிக்க பூனையும்,பூனைக்குப் பால் அளிக்க பசுமாடும் ,பசுமாட்டைப் பராமரிக்கப் பெண்ணும் என்று சாமியார் சம்சாரியானார்'என்று பழமொழி போல சட்டென்று முடியும் கதை.இந்தக் குட்டிக் கதையை நகாசு வேலைகள் செய்து சுவாரஸ்யமாக மாற்றி விட்டீர்கள். எந்த ஊரைப்பறி எழுதினாலும் உண்மையாக உள்ள தெருப் பெயரையெல்லாம் எழுதி ஒரு நமபத்தன்மையைக் கொண்டு வந்துவிடுகிறீகள்.நெல்லையில் வாகையடி முக்கு,மேலப்பாளையம் என்று எழுதி அவ்வ்வூரை அறிந்தவர்கள் மனதில் மகிழ்ச்சியை ஊட்டுகிறீர்கள்.

உங்கள் கதைகள் எல்லாம் எந்த எதிர்மறைகளையும் சொல்லாத, யாரையும் புண்படுத்தாத அறிவுரைகளுடன் கூடியதாக இருக்கின்றன. முற்போக்கு என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொள்பவர்கள் இதுபோன்ற கதைகளை பிரச்சாரக் கதைகள் என்றும், இவை இலக்கியம் ஆகாது என்றும் இலக்கணம் சொல்கிறார்கள்.சமூகத்தின் இருட்டுப் பக்கங்களை சொன்னால் தான் அது இலக்கியம் என்று ஒரு கூற்று.அது தான் யதார்த்தமாம்.

எனக்கென்னமோ உங்கள் கதைகளில் அதிக யதார்த்தத் தனமை தென்படுகிறது.
தங்கள் இலக்கியப்பணி மேலும் சிறக்க பழனியாண்டவரை வேண்டுகிறேன்.

lrk said...

ஐயா வணக்கம்
கதை மிக நன்றாக இருந்தது .

///அரிசியைக் களைந்து, தண்ணீர்,
உப்புச் சேர்த்து உதிரியாக வடித்து, பெரிய இருப்புச் சட்டியில்,
நெய் விட்டு, சூடானதும் மிளகுத் தூள், சீரகத் தூள், கறிவேப்பிலை
போட்டுத் தாளித்து, அதைச் சாதத்தில் கொட்டிக் கிளறிவிடுவார்கள்.///

சம்பாசாதம் தயாரிப்பு சொன்ன விதம் மிக அருமை .இப்பவே உண்ண தூண்டுகிறது .

நன்றி ஐயா

Kirupanandan A said...

இதுவும் ஒரு நல்ல ideaவாகதான் இருக்கிறது. கேட்கவே எவ்வளவு இனிமையாக இருக்கிறது. அதாவது வயதான பிறகு நானும் இது போன்றதொரு துறவ்றத்தை மேற்கொள்ளலாம் என்று இருக்கிறேன். Suggestionகள் வரவேற்கப்படுகின்றன (சும்மா தமாஷ்).

அது போகட்டும். இன்றைய காலகட்டத்தில் துறவறம் என்று சொல்லும் பல சாமியார்களும் நாளொரு பெண் பொழுதொரு சிஷ்யை என்று குடியும் குடித்தனமுமாகதானே இருக்கிறார்கள். வெளியே தெரிவது கொஞ்சம். வெளிவராதது எத்தனையோ?

Subbiah Veerappan said...

////Blogger பழனி. கந்தசாமி said...
இதுதான் ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்குவது என்பது.////

உங்கள் வருகைக்கு முதற்கண் நன்றி. கதைக்கு விமர்சனம் அளித்து அணி சேர்த்தமைக்கு இரண்டாவது நன்றி1

Subbiah Veerappan said...

////Blogger Dallas Kannan said...
Respected Sir
Loved the Story. That too reading it in your Style... forgot about my workload for 10 min...
Thanks a lot.//////

நல்லது. மனம் திறந்த பாராட்டிற்கு நன்றி கண்ணன்!

Subbiah Veerappan said...

/////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
அருமையான சொல் நடை... மயக்கிவிட்டீர் வாத்தியாரே... கதாபாத்திரங்களை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தி விட்டீர்கள்...
என்ன பாக்கியம் செய்தோம், இப்படி ஒரு வாத்தியார் கிடைக்க....
அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி./////

உங்களின் பாராட்டிற்கு நன்றி தூத்துக்குடிக்காரரே!

Subbiah Veerappan said...

////Blogger Kamala said...
தனக்குத் தானே பின்னிக்கொள்ளும் வலையில் மாட்டிக்கொண்டு திண்டாடும் மனிதன்!அருமையாக இருக்கிறது கதை.////

உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

Subbiah Veerappan said...

////Blogger eswari sekar said...
vanakkam sir story nanrga ulluthu/////

உங்களின் மேன்மையான பாராட்டிற்கு நன்றி சகோதரி!

Subbiah Veerappan said...

////Blogger selvam velusamy said...
வணக்கம் குரு,
உங்கள் எழத்து நடையில் மற்றுமொரு ரசிக்கும்படியான அருமையான சிறு கதை.
நன்றி
செல்வம்/////

அதென்னமோ எழுத்து நடை வசப்பட்டு விட்டது. பத்து ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கிறேன் இல்லையா? நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

////Blogger Regunathan Srinivasan said...
சும்மா பின்னு பின்னுன்னு பின்னறீங்க வாத்தியாரே.
S .ரகுநாதன்////

நல்லது. உங்களின் ரசனை உணர்விற்கு நன்றி ரகுநாதன்!

Subbiah Veerappan said...

/////Blogger kmr.krishnan said...
இந்தக்கதைக்கு 'சாமியார் பூனை வளர்தத கதை' என்று பெயர்.இது சகஜமாக
எல்லா ஊர்களிலும் சற்றே இலக்கிய அறிமுகம் உள்ளவர்கள் இடையில் புழக்கத்தில் உள்ள கதைதான்.'கெளபீனததை கடித்த எலிகளை ஒழிக்க பூனையும்,பூனைக்குப் பால் அளிக்க பசுமாடும் ,பசுமாட்டைப் பராமரிக்கப் பெண்ணும் என்று சாமியார் சம்சாரியானார்'என்று பழமொழி போல சட்டென்று முடியும் கதை.இந்தக் குட்டிக் கதையை நகாசு வேலைகள் செய்து சுவாரஸ்யமாக மாற்றி விட்டீர்கள். எந்த ஊரைப்பறி எழுதினாலும் உண்மையாக உள்ள தெருப் பெயரையெல்லாம் எழுதி ஒரு நமபத்தன்மையைக் கொண்டு வந்துவிடுகிறீகள்.நெல்லையில் வாகையடி முக்கு,மேலப்பாளையம் என்று எழுதி அவ்வ்வூரை அறிந்தவர்கள் மனதில் மகிழ்ச்சியை ஊட்டுகிறீர்கள்.
உங்கள் கதைகள் எல்லாம் எந்த எதிர்மறைகளையும் சொல்லாத, யாரையும் புண்படுத்தாத அறிவுரைகளுடன் கூடியதாக இருக்கின்றன. முற்போக்கு என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொள்பவர்கள் இதுபோன்ற கதைகளை பிரச்சாரக் கதைகள் என்றும், இவை இலக்கியம் ஆகாது என்றும் இலக்கணம் சொல்கிறார்கள்.சமூகத்தின் இருட்டுப் பக்கங்களை சொன்னால் தான் அது இலக்கியம் என்று ஒரு கூற்று.அது தான் யதார்த்தமாம்.
எனக்கென்னமோ உங்கள் கதைகளில் அதிக யதார்த்தத் தன்மை தென்படுகிறது.
தங்கள் இலக்கியப்பணி மேலும் சிறக்க பழனியாண்டவரை வேண்டுகிறேன்./////

இருண்ட பக்கங்களை நான் எப்போதுமே எழுதுவதில்லை. நல்லதையே நினைப்போம். நல்லதையே செய்வோம். நல்லதையே எழுதுவோம். உங்களின் யதார்த்தமான விமர்சனத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

////Blogger lrk said...
ஐயா வணக்கம்
கதை மிக நன்றாக இருந்தது .
///அரிசியைக் களைந்து, தண்ணீர்,
உப்புச் சேர்த்து உதிரியாக வடித்து, பெரிய இருப்புச் சட்டியில்,
நெய் விட்டு, சூடானதும் மிளகுத் தூள், சீரகத் தூள், கறிவேப்பிலை
போட்டுத் தாளித்து, அதைச் சாதத்தில் கொட்டிக் கிளறிவிடுவார்கள்.///
சம்பாசாதம் தயாரிப்பு சொன்ன விதம் மிக அருமை .இப்பவே உண்ண தூண்டுகிறது .
நன்றி ஐயா /////

நான் செட்டி நாட்டுக்காரன். விருந்தோம்பலுக்கும் விதம் விதமான உணவுகளுக்கும் பெயர் பெற்ற பகுதிக்காரன். அத்துடன் சாப்பாடு விரும்பி. ஆகவே இடம் கிடைக்கும் போதெல்லாம் உணவுகளை விவரிக்கத் தவறுவதில்லை! நன்றி நண்பரே! சீக்கிரம் சம்பா சாதம் செய்து சாப்பிட்டுப் பாருங்கள்!

Subbiah Veerappan said...

////Blogger Kirupanandan A said...
இதுவும் ஒரு நல்ல ideaவாகதான் இருக்கிறது. கேட்கவே எவ்வளவு இனிமையாக இருக்கிறது. அதாவது வயதான பிறகு நானும் இது போன்றதொரு துறவ்றத்தை மேற்கொள்ளலாம் என்று இருக்கிறேன். Suggestionகள் வரவேற்கப்படுகின்றன (சும்மா தமாஷ்).
அது போகட்டும். இன்றைய காலகட்டத்தில் துறவறம் என்று சொல்லும் பல சாமியார்களும் நாளொரு பெண் பொழுதொரு சிஷ்யை என்று குடியும் குடித்தனமுமாகதானே இருக்கிறார்கள். வெளியே தெரிவது கொஞ்சம். வெளிவராதது எத்தனையோ?/////

கே. முத்துராம கிருஷ்ணன் அவர்கள் சொன்னபடி அவையெல்லாம் இன்றைய காலகட்டத்தின் இருண்ட பக்கங்கள். அவற்றைக் கண்டு கொள்ளாமல் விடுவதுதான் நமக்கு நல்லது. நன்றி கிருபானந்தன்!

Muthukumar said...

Arumai

உணர்ந்தவை! said...

ஒரு குட்டி கதையாக கேட்டிருக்கிறேன் ஆனால் உங்கள் நடையில் சொல்லவும்வேண்டுமா!

thozhar pandian said...

பலே, எங்கள் ஊர் கோவில் படம். தாமிர சபையான‌ நெல்லையப்பர் கோவில் நமது புராதன கோவில்களில் ஒன்று. மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கோவில் அளவிற்கு பெரிய கோவில் அல்ல என்றாலும் நெல்லை கோவிலும் பெரிதே. ஆனால் கோவில் இன்னும் சரியாக பராமரிக்கப்படவேண்டும் என்பது எனது கருத்து. மழைக்காலத்தில் அங்கங்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. குரங்குகளும் அதிகம் திரிகின்றன. அவை பக்தர்களை சற்று மிரட்டி பிரசாதத்தை பறித்து கொள்வதும் நடக்கிறது. இப்போது பரவாயில்லை. ஒரு காலத்தில் கோவிலில் வவ்வால்கள் அதிகமாக இருந்ததால், ஒரு துர்நாற்றம் வீசும். அது இப்போது இல்லை.

கதை நன்றாக இருந்தது. ஒரு முறை ரஜினிகாந்த் கூட இதே கதையை ஒரு மேடையில் அவரது பாணியில் கூறினார்.

Pathrachalam Chalam said...

Ayya...Nalla..Pathivu...thavaru seipavarkallukum,than nillai maranthu thavari nadapavarkalukkum....

sundari said...

good story sir,

தமிழ்ச் செல்வன்ஜீ said...

சிக்கல் கதை புதிது!அருமை!

R VASSUDEVAN said...

I KNOW THIS STORY ALREADY, BUT THE WAY U HAVE NARRATED IS JUST FASCINATING. IT IS REALLY GOD'S GIFT. OH WHAT A FLUENCY. THIS IS AKIN TO THE STYLE OF KALKI, AND SUJATHA.

PL CONTINUE. TOU ARE REALLY INSPIRING.

REGARDS.
R VASSUDEVAN