மனிதனால் எதைத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை?
சோதனை மேல் சோதனையால் வந்த சோகத்தில் பூத்த மலர்
"சுற்றும்வரை பூமி
எரியும்வரை நெருப்பு
போராடும்வரை மனிதன்"
என்று எழுதினான் ஒரு கவிஞன்
உண்மை!
சுற்றுவதை பூமி நிறுத்திவிட்டால் என்ன ஆகும்?
நெருப்பு நீர்த்துவிட்டால் என்ன ஆகும்?
மனிதன் போராடுவதை நிறுத்திவிட்டால் என்ன ஆகும்?
எல்லாம் முடிந்து விடும்!
மனிதன் ஆதிமுதல் போராடுவதை என்று நிறுத்தினான்?
விதை முட்டிமோதிப் பூமியிலிருந்து வெளிவந்து விருட்சமாவதைப்
போல மனிதன் பிறந்ததிலிருந்து மண்ணோடு மண்ணாகும்வரை முட்டிமோதிப் போராடிக் கொண்டுதான் இருக்கிறான்.
அவனுடைய ஈறாறு வயதிற்குப் பிறகு இந்தப் போராட்டம் எல்லை
யின்றி பல களங்களில் விரிந்து அவனை மென்மேலும் போராட வைக்கின்றது!
படித்தல்,பணிக்குச் செல்லுதல்,பணிதல், ஈட்டல், காத்தல், ஈதல், சமூகவாழ்க்கை,பதவி, புகழ், அந்தஸ்த்து என்று இந்த மாயவாழ்க்கை
காட்டும் ஜாலங்களில் அவன் அடைந்தது பாதி, தொலைந்தது மீதி
என்று போராடிவிட்டு இறுதியில் சாம்பாலாகிக் கரைந்து போகிறான்.
வெற்றி, தோல்வி, இன்பம், துன்பம், உறவு, பகைமை, வறுமை,
செழுமை, பெருமை, சிறுமை என்று மாறி மாறி வாழ்க்கைச் சுழல்
அவனைப் புரட்டிப் போடும் போதெல்லாம் உணர்வுகள் அவனை
அடித்து உட்காரவைத்தாலும், அறிவு ஆறவைத்து அவனை எழுந்து உடகாரவைத்து, "உன் பிரச்சினைகளவிட நீ பெரியவன்" என்று
மீண்டும், மீண்டும் போராட வைத்துவிடுகிறது!
"தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே,
கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே!"
என்று வாழ்க்கையின் பிறப்பு, இறப்பிலுள்ள சமத்துவத்தைச் சொல்லி
அறிவு மனதைச் சமாதானப் படுத்தி விடுகிறது.
எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ளும் மனிதனால் இரண்டை மற்றும் தாங்கிக் கொள்ள முடிவதில்லை
ஒன்று அவன் நம்பியிருந்தவன் அல்லது இருந்தவள் செய்யும்
துரோகம். இரண்டாவது அவன் யாருக்காகத் தன் வாழ்க்கையை அர்பபணித்துப் பல பணிகள் செய்தானோ, அந்தப் பயனை
அடைந்தவர்கள், செய்நன்றியை மறப்பதோடு அவனை அலைக்
கழிப்பதால் உண்டாகும் நிலைமை
அதைவிட ஒருவனுக்கு, அதிகமான துன்பத்தைத் தருவது, அவன்
பெற்று, ஆசையாய், அருமை பெருமைகளோடு வளர்த்த அவனுடைய பிள்ளையே, அவனுடைய நம்பிக்கையையும், உணர்வுகளையும் சிதைக்கும்போது!
அந்தக்கணங்களில் அவன், தன் தலையில் இடி விழுந்ததுபோல
நொடிந்து உட்கார்ந்து விடுகிறான். மனதில் துக்கம் வெள்ளமாய்
பிரவாகம் எடுக்கும்.
அதே துக்கம், திரைப்படம் ஒன்றில் வரும் நாயகனுக்கும் ஏற்படுகிறது.
அந்தத் துக்கத்தைப் பாட்டில் வடிக்கக் கவியரசரை அழைத்தார்கள்.
வந்தார் கவியரசர், வாங்கிக் கொண்டார் சூழ்நிலையை அவர்
வாயிலிருந்து கருத்தும், சொல்லும் கலந்த பாட்டொன்று சட்டனெ வெள்ளமாய்வர, உடனிருந்த கவியரசரின் உதவியாளர் எழுதி
முடித்தார்
'நன்றிகெட்ட மாந்தரடா: நானறிந்த பாடமடா' என்று ஒரு பாட்டில்
அவர் எழுதியதைப் போல அவர் செய்த உதவிகளை மறந்து,
நன்றியின்றி நடந்து கொண்டவர்கள் அவர் வாழ்வில் அனேகம்
பேர்கள். அதுபோல அவர் சந்தித்த துரோகச் செயல்களும் பல் உண்டு!
அவர் சிறப்பாக அனுபவித்துப் பாடல் எழுத வேண்டும்
என்பதற்காகவே, இறைவன் அந்த நல்ல மனிதரின் வாழ்வில்
பல சோகங்களை வைத்தான் போலும்
அதனால், கொடுக்கப்பட்ட அந்த சூழ்நிலைக்கு அற்புதமான பாடல்
ஒன்றைக் கொடுக்க முடிந்தது அவரால்!
அந்தமாதிரியொரு நிலை ஏற்படும் மனிதன் ஒவ்வொருவனின்
மனதையும் வருடிக் கொடுக்கும் பாடல் அது!
வாருங்கள் பாடலைப் பார்ப்போம்
------------------------------------
"சோதனைமேல் சோதனை போதுமடா சாமி
வேதனைதான் வாழ்க்கையென்றால் தாங்காது பூமி
(சோதனைமேல்)
சொந்தம் ஒரு கைவிலங்கு நீ போட்டது - அதில்
பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது
(சோதனைமேல்)
ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல - நான்
அவதாரமில்லையம்மா தத்துவம் சொல்ல
பரிகாரம் தேடீ நான் எவ்விடம் செல்ல - எனக்கு
அதிகாரமில்லையம்மா வானகம் செல்ல
ஒரு நாளும் நான் இதுபோல் அழுதவனல்ல - அந்தத்
திருநாளை மகன் கொடுத்தான் யாரிடம் சொல்ல!
(சோதனைமேல்)
பெண் (மருமகளாக படத்தில் வரும் பிரமிளா தன் குரலில் வசன நடையில் சொல்வது )
மாமா, காஞ்சுபோன பூமியெல்லாம் வத்தாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும் அந்த நதியே காஞ்சி போயிட்டா.... துன்பப் படுற்வங்க எல்லாம்
அவங்க கவலையை தெய்வத்துக்கிட்ட முறையிடுவாங்க, ஆனா, தெய்வமே கலங்கிநின்னா - அந்த தெய்வத்துக்கு யாராலே ஆறுதல் சொல்ல முடியும்?
பாட்டு தொடர்கிறது:
தானாடவில்லையம்மா சதையாடுது - அது
தந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது
பூவாக வைத்திருந்தேன் மனமென்பது - அதில்
பூநாகம் புகுந்து கொண்டு உறவென்றது
அடிதாங்கும் உள்ளமிது இடி தாங்குமா?
இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா?
(சோதனை மேல் சோதனை)"
படம்: தங்கப் பதக்கம் - வருடம்: 1974
பாடலை எழுதியவர்: கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்: திரு.T.M.S,
இசை: திரு.M.S விஸ்வநாதன்
இயக்கம்: திரு. P.மாதவன்
நடிப்பு: நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகை.பிரமிளா
சோதனைமேல் சோதனை போதுமடா சாமி
வேதனைதான் வாழ்க்கையென்றால் தாங்காது பூமி
என்று பாடலுக்குச் சிறப்பான துவக்கத்தைக் கொடுத்தவர், சொந்தம்
என்பது இறைவன் கொடுத்தது, அந்த சொந்தத்தை பந்த பாசமாக்கி அவதிப்படுவது மனிதன்தான் என்பதை, சொந்தம் ஒரு கைவிலங்கு
நீ போட்டது - அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது என்று சொன்னது அற்புதம்.
அடுத்து வரும் ஆறு வரிகளில் உள்ள சொல் விளையாட்டைப்
பாருங்கள் – எல்லா வரிகளுமே சொல்ல, செல்ல, அல்ல என்று
எதுகையில்,அமரத்துவமான கருத்துக்களுக்கு அளவெடுத்துத்
தைதத ஆடைபோல அருமையாகப் பொருந்தி நிற்கும்
"ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல - நான்
அவதாரமில்லையம்மா தத்துவம் சொல்ல
பரிகாரம் தேடீ நான் எவ்விடம் செல்ல - எனக்கு
அதிகாரமில்லையம்மா வானகம் செல்ல
ஒரு நாளும் நான் இதுபோல் அழுதவனல்ல - அந்தத்
திருநாளை மகன் கொடுத்தான் யாரிடம் சொல்ல!"
பூவாக வைத்திருந்தேன் மனதை - அதில் உறவென்று சொல்லிக்
கொண்டு ஒரு பூநாகம் புகுந்து கொண்டது என்று சொல்வதற்காக
அடுத்து எழுதிய ஆறு வரிகளுமே பாடலின் முத்தாய்ப்பான
வரிகளாகும்.
தானாடவில்லையம்மா சதையாடுது - அது
தந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது
பூவாக வைத்திருந்தேன் மனமென்பது - அதில்
பூநாகம் புகுந்து கொண்டு உறவென்றது
அடிதாங்கும் உள்ளமிது இடி தாங்குமா?
இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா?
என்னவொரு அற்புதமான சிந்தனை வெளிப்பாடு பாருங்கள். அதனால்தான் அவரைக் கவியரசர் என்கிறோம்
அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
உண்மைதான் அய்யா..
ReplyDeleteஅனுபவசாலிகளுக்கு மட்டுமே இந்த வரிகளின் ஓலம் புரியும்.
இதைப்போலவே படிக்காதவன் படத்தில் வரும் ஒரு பாட்டு..
ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன், உலகம் புரிஞ்சுக்கிட்டேன்,
கண்மணி என் கண்மணி!
ஞானம் பொறந்திருச்சு, நாலும் புரிஞ்சிருச்சு,
கண்மணி என் கண்மணி!
பச்சை குழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன்,
பாலக் குடிச்சுபுட்டு பாம்பாகக் கொத்துதடி!
(ஊரைத்)"
வைரமுத்துவின் இந்த வரிகளும் வலியின் அனுபவத்தை பிரதிபலிக்கிறவைகள்.
சில சமயம் சோதனை மேல் சோத்னை வந்துவிடுகின்றது.ஏழரைச்சனி, அஷ்டசனி சமயங்களீல் இப்படி வந்துவிடுகிறது. தாங்கும் சக்தியை ஆண்டவனாகக்கொடுத்தால் தப்பித்தோம்.
ReplyDeleteநல்ல பாடலுக்கு நன்றி ஐயா!
எதுகை மோனை
ReplyDeleteஎன குறிப்பிட்டுள்ளீர்
அதை சந்தம் என சொல்லுங்கள்
அந்த எதுகை மோலை
பாடலில் முதலில் தான் வரும்
படித்து தெரிபவர்
தமிழை எப்பவும் போல்
தவறாக புரிந்து கொள்ள கூடாதே
சோதனை மேல் சோதனை
நல்ல அருமையான பாட்டு.
ReplyDeleteதங்களின் கருத்து எழுத்து நடையுடன் மிகவும் நன்றாக இருந்தது.
ஒருவனுக்கு சனி தசை வரும் பொழுது தான் சோதனை மேல் சோதனை வரும்.தத்துவமும் வரும்.
அதிலிருந்து மீண்டு வருவதும் வராமல் இருப்பதும் அவர்களுடைய விதி.
தாங்கள் அடிகடி கூருவது போல் இறைவணக்கம் ஒன்றே வழி.
பல கவிஞ்ஞர்களுக்கு இளவயதில் தான் சனி தசை வந்திருக்கும்.
ஆகையால்தான் பல கவிகள் உருவானது.
வணக்கம் குரு.
ReplyDeleteஉண்மைதான். மனித பிறவி எடுப்பதால் துன்பமே என உணர்ந்த நாயன்மார்களும், ஆழ்வார்களும் மற்றும் ரிஷிகளும் இனி பிறவா வரம் வேண்டி இறைவனை சரணடைந்தார்கள்.
நன்றி
செல்வம்
வணக்கம் சார்...
ReplyDeleteமனிதன் எதையும் தாங்குவதற்குதான்
போனால் போகட்டும் போடா....
என்ற பாடலை கவியரசர் கொடுத்தார்
இந்த பாடலை கேட்டுப்பாருங்கள்
நம் கவலைகள் போனஇடம்
தெரியாது.......
////Blogger Yarlpavanan Kasirajalingam said...
ReplyDeleteசிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்///
நல்லது. நன்றி நண்பரே!
////Blogger Govindasamy said...
ReplyDeleteஉண்மைதான் அய்யா..
அனுபவசாலிகளுக்கு மட்டுமே இந்த வரிகளின் ஓலம் புரியும்.
இதைப்போலவே படிக்காதவன் படத்தில் வரும் ஒரு பாட்டு..
ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன், உலகம் புரிஞ்சுக்கிட்டேன்,
கண்மணி என் கண்மணி!
ஞானம் பொறந்திருச்சு, நாலும் புரிஞ்சிருச்சு,
கண்மணி என் கண்மணி!
பச்சை குழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன்,
பாலக் குடிச்சுபுட்டு பாம்பாகக் கொத்துதடி!
(ஊரைத்)"
வைரமுத்துவின் இந்த வரிகளும் வலியின் அனுபவத்தை பிரதிபலிக்கிறவைகள்.////
கவிஞர்கள் எதையும் சுருங்கச் சொல்லிப் புரிய வைப்பதில் வல்லவர்கள்! உங்களின் பகிர்விற்கு நன்றி நண்பரே!
///Blogger kmr.krishnan said...
ReplyDeleteசில சமயம் சோதனை மேல் சோத்னை வந்துவிடுகின்றது.ஏழரைச்சனி, அஷ்டசனி சமயங்களீல் இப்படி வந்துவிடுகிறது. தாங்கும் சக்தியை ஆண்டவனாகக்கொடுத்தால் தப்பித்தோம்.
நல்ல பாடலுக்கு நன்றி ஐயா!////
ஆமாம்! கஷ்டப்படும்போதுதான் பல நல்ல அனுபவங்கள் கிடைக்கின்றன. பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
/////Blogger வேப்பிலை said...
ReplyDeleteஎதுகை மோனை
என குறிப்பிட்டுள்ளீர்
அதை சந்தம் என சொல்லுங்கள்
அந்த எதுகை மோலை
பாடலில் முதலில் தான் வரும்
படித்து தெரிபவர்
தமிழை எப்பவும் போல்
தவறாக புரிந்து கொள்ள கூடாதே
சோதனை மேல் சோதனை/////
கண்ணதாசன் எதுகையை பாடல் வரியின் கடைசியில்தான் வைப்பார். ஓசை நயத்துக்காக!
உதாரணத்திற்கு ஒரு பாடலைச் சொல்கிறேன்:
கடவுள் ஒருநாள் உலகைக் காண தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதரை எல்லாம் நலமா என்றாராம்
சரி, இன்னும் ஒரு பாடலைத் தருகிறேன்
மாம்பழத்து வண்டு
வாசமலர்ச் செண்டு
யார்வரவைக் கண்டு
வாடியது இன்று
இதில் எதுகை எங்கே வந்துள்ளது? சொல்லுங்கள்!
/////Blogger Chandrasekaran Suryanarayana said...
ReplyDeleteநல்ல அருமையான பாட்டு.
தங்களின் கருத்து எழுத்து நடையுடன் மிகவும் நன்றாக இருந்தது.
ஒருவனுக்கு சனி தசை வரும் பொழுது தான் சோதனை மேல் சோதனை வரும்.தத்துவமும் வரும்.
அதிலிருந்து மீண்டு வருவதும் வராமல் இருப்பதும் அவர்களுடைய விதி.
தாங்கள் அடிகடி கூருவது போல் இறைவணக்கம் ஒன்றே வழி.
பல கவிஞ்ஞர்களுக்கு இளவயதில் தான் சனி தசை வந்திருக்கும்.
ஆகையால்தான் பல கவிகள் உருவானது./////
உண்மைதான். உங்களின் எண்ணப்பகிர்விற்கு நன்றி நண்பரே!
/////Blogger Selvam Velusamy said...
ReplyDeleteவணக்கம் குரு.
உண்மைதான். மனித பிறவி எடுப்பதால் துன்பமே என உணர்ந்த நாயன்மார்களும், ஆழ்வார்களும் மற்றும் ரிஷிகளும் இனி பிறவா வரம் வேண்டி இறைவனை சரணடைந்தார்கள்.
நன்றி
செல்வம்/////
நாமும்தான் பிறவா வரம் கேட்கிறோம். கிடைக்குமா?
///Blogger Sakthivel K said...
ReplyDeleteவணக்கம் சார்...
மனிதன் எதையும் தாங்குவதற்குதான்
போனால் போகட்டும் போடா....
என்ற பாடலை கவியரசர் கொடுத்தார்
இந்த பாடலை கேட்டுப்பாருங்கள்
நம் கவலைகள் போனஇடம்
தெரியாது......./////
எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன். குறிப்பிட்டு எழுதியமைக்கு நன்றி!