மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

12.6.18

எல்லோரிலும் நல்லவன் யார்?


எல்லோரிலும் நல்லவன் யார்?

பதினெட்டு நாட்கள் நடைபெற்றது குருட்க்ஷேத்திரப் போர். அந்தப் போரில் அது பதினான்காவது நாள்.அன்று அதிக எண்ணிக்கையில் கௌரவர்களைக் கொன்று குவிப்போம் என்று உறுதி எடுத்துக் கொண்டபின் பாண்டவர்களின் கால்கள் பாசறையை விட்டு வெளிநடந்தன.அவர்களை வீரத் திலகமிட்டு வழியனுப்பி வைத்தாள் பாஞ்சாலி வெற்றி கிட்டியபின் தான் தலைமுடிவேன் என்ற சபதத்தின்படி, தலைவிரி கோலமாக இருந்த பாஞ்சாலி.

பாஞ்சாலி பார்த்துக் கொண்டிருக்கும் போதே வழிபடுகிற கண்ணன், அர்ச்சுனனின் தேரில் சாரதியாகத் தாவி ஏறி அமர்ந்தான். புல்லாங்குழல் வாசிக்கும் கண்ணனின் தாமரைப் பூங்கரங்கள், நல்லவர்களை வாழ வைத்து அல்லவர்களை அழிப்பதற்காக, தேர்க் குதிரைகளின் லகானைச் சடாரென்று கையில் பற்றிக் கொண்டன.

மற்றவர்களும் அவரவர் தேரில் அமர்ந்து போர்க்களம் நோக்கிப் புறப்பட்டார்கள். அந்தத் தருணத்தில்தான் பாஞ்சாலியிடமிருந்து அந்த விசித்திரமான வினா கண்ணனை நோக்கிப் புறப்பட்டது

‘‘கண்ணா! எல்லாம் தெரிந்த எம்பெருமானே! அனைத்துச் செயல்களையும் நடத்தும் ஆதிநாயகனே! இந்த யுத்தம் முழுவதையும் நீயே நடத்துகிறாய் என்பதை நான் அறிவேன். கொல்பவனும் நீ. கொல்லப்படுபவனும் நீ. வெல்பவனும் நீ. வெல்லப்படுபவனும் நீ. சொல். இன்று யார் யாரால் கொல்லப்படுவார்கள்?”

(பாஞ்சாலியின் இந்தக் கேள்வியைக் கேட்டதும் பாண்டவர்கள் அனைவரும் கண்ணன் முகத்தை ஆவலோடு நோக்கினார்கள். இன்றைய போரின் நிலவரத்தை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் ஆர்வம் அனைவர் விழிகளிலும்)

எதனாலும் எவ்விதத்திலும் பாதிக்கப்படாத கண்ணன், கலகலவென நகைத்தவாறே சொன்னான்: ‘‘பாஞ்சாலி! உனக்கு ஆனாலும் எல்லாவற்றையும் முன்கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல். நல்லது. சொல்கிறேன். இன்று இரு தரப்பினராகப் பிரிந்து போரிடும் அனைவரிலும் மிகமிக நல்லவன் ஒருவன் கொல்லப்படுவான். இப்போது உலகில் வாழ்பவர்களில் அவனைவிட நல்லவர்கள் யாருமில்லை. அவன் இறக்கவிருப்பதை எண்ணி என் மனம் இப்போதே வருந்துகிறது!”

இந்த விந்தையான பதிலால் கடும் அதிர்ச்சியடைந்த அர்ச்சுனன், பீமன், நகுலன், சகாதேவன் நால்வரும் தங்கள் அண்ணனான தர்மபுத்திரரைக் கவலையோடு பார்த்தார்கள். தர்மபுத்திரரை விட நல்லவர்கள் யாரிருக்க முடியும்? தர்மபுத்திரர்தான் இப்போது உலகில் வாழும் மிக நல்லவர் என்பது மக்கள் அனைவரும அறிந்த விஷயம் தானே? தர்மநெறி ஒருசிறிதும் தவறாத அவரது கதை இன்றோடு முடியப் போகிறதா? போர் என்று வந்துவிட்டால் இருதரப்பிலும் இழப்புகள் நேரும் என்பது எல்லோரும் அறிந்ததுதான். ஆனால், மூத்தவனையே போர் காவு கொள்ளப் போகிறதா? என்று...

பாஞ்சாலி கண்களில் நீர்வழிய யுதிஷ்டிரரைப் பார்த்தாள். இதயத்தைப் பிடித்துக்கொண்டு அப்படியே தரையில் அமர்ந்தாள். ஒவ்வொரு நாளும் பாண்டவர்கள் ஐவரும் போர் முடிந்து நல்லபடியாகத் திரும்ப வேண்டும் என்று கண்ணனைப் பிரார்த்தித்தவாறே பதற்றத்தோடு காத்திருப்பாளே இன்று மாலை ஐவரும் திரும்புவார்களா, இல்லை நால்வர் மட்டும் தானா? என்று. கண்ணன் தன் பதிலால் ஏற்பட்ட பின்விளைவு எதையும் பொருட்படுத்தாத கண்ணன் அர்ச்சுனனின் தேரில் சாரதியாக போர்க்களம் நோக்கிப் பாய்ந்தது. யுதிஷ்டிரர் தேர் மற்றும் அனைவரின் தேர்களுக்கும் அடுத்து அடுத்து நகர்ந்தது...

போர்க்களத்தில் கையில் கதாயுதத்தோடு களத்தில் இறங்கிய பீமன் தன்னுடன் போர்த் தொடுக்க முன்வந்து நின்ற விகர்ணனைப் பார்த்துக் கடுமையாக எச்சரித்தார்

‘‘விகர்ணா! என்முன் வராதே! தள்ளிப் போ. நான் உன்னைக் கொல்வதற்காகக் களத்தில் இறங்கவில்லை. உன் இரு அண்ணன்களான துரியோதனன், துச்சாதனன் இருவரையும் வதம் செய்ய வந்திருக்கிறேன். அவர்கள் இருவரின் குருதியையும் கலந்து கூந்தலில் பூசிக் குளிப்பேன் எனச் சபதம் செய்திருக்கிறாள் பாஞ்சாலி. மேகம் போல் அடர்ந்த அவள் கூந்தல் முடியப்படாமல் இருப்பதை எத்தனை நாட்கள் நான் பார்த்துக் கொண்டிருப்பது! இன்று என் கையில் உள்ள கதையால், உன் அண்ணன்கள் இருவரின் கதை முடியவேண்டும். பாஞ்சாலி தன் கூந்தலை முடியவேண்டும். குறுக்கே வராதே! வழிவிடு!”

பீமனின் வீராவேசப் பேச்சைக் கேட்டு விகர்ணன் கடகடவென நகைத்தார் ‘‘ஏன் பீமா? என்னை வென்றுவிட்டு அவர்களை வெல்ல இயலாதா? என்னை வெல்ல முடியாதென்ற பயமா?" என்றார்...

"பயமா? எனக்கா? அதுவும் உன்னைப் பார்த்தா? நல்ல வேடிக்கை. அச்சத்தால் அல்ல, உன்மேல் கொண்ட அன்பால் உன்னைக் கொல்ல என் கதாயுதம் விரும்பவில்லை நான் உன்னைக் கொல்ல முயன்றாலும் கூட என் கதாயுதம் என்னைத் தடுத்துவிடுமோ எனத்தான் அஞ்சுகிறேன். அன்று நீ நடந்துகொண்ட முறையை என்னோடு என் கதாயுதமும் அல்லவா பார்த்துக் கொண்டிருந்தது? என்னைப் போலவே அதற்கும் உன்மேல் அன்பும் மரியாதையும் உண்டு. தப்பிப் பிழைத்துப் போ" என்றார் பீமன்...

விகர்ணன் மீண்டும் நகைத்தார் ‘‘பீமா! அன்று என்ன நடந்தது? எதைப் பற்றிப் பேசுகிறாய் நீ? உன் கதாயுதம் என்மேல் அன்பு செலுத்த வேண்டிய அவசியம் என்ன?” என்றார்.

"விகர்ணா மீண்டும் மீண்டும் சொல்கிறேன். வீண் வாதத்தில் இறங்காதே! கௌரவர்கள் நூறு பேரில் நீ மட்டும் தப்பிப் பிறந்தவன். அன்று கௌரவர் சபையில் பாஞ்சாலியை உன் அண்ணன் துச்சாதனன் துகிலுரிய எத்தனித்தானே, அப்போது மெய்ஞ்ஞானியான பீஷ்மர் கூட வாய்மூடி மௌனியாகத்தானே இருந்தார்? அதர்மம் தலைவிரித்தாடிய அந்த சந்தர்ப்பத்தில் தர்மத்தின் பக்கம் நின்று குரல்கொடுத்தவன் நீ மட்டும்தான். ‘அநியாயம் நடக்கிறது, நிறுத்துங்கள்‘ என்று அறைகூவியவன் நீ ஒருவன்தான். கண்ணன் மட்டும் பாஞ்சாலிக்கு அருள் புரியாதிருந்தால் அன்று அவள் நிலை என்னவாகி இருக்கும்? பெண்ணை மானபங்கம் செய்ய முயல்வது கண்டு பதைபதைத்த உள்ளம் உன் உள்ளம். நாங்கள் ஐவரும் கையாலாகாதவர்களாக இருந்தோம். பாஞ்சாலியின் பொருட்டாக நீ குரல்கொடுத்தால் அது உன் அண்ணன் துரியோதனனுக்கு உகப்பாக இராது என்பதையும் நீ யோசிக்கவில்லை. அறத்தின் பக்கமே நின்றது உன் மனம். ஒரு பெண்ணுக்கு நேரும் அவமானம் கண்டு துடித்தது உன் நெஞ்சம். அந்த உயர்ந்த நெஞ்சை என் கதாயுதம் பிளப்பதை நான் விரும்பவில்லை. தயவுசெய்து தள்ளிப்போ அல்லது இன்னோர் யோசனை சொல்கிறேன். அதைக் கேள்!”

"அதென்னப்பா இன்னோர் யோசனை? அதையும் தான் சொல்லேன் கேட்போம்" என்றார் விகர்ணன்.

"நீ எங்களுடன் சேர்ந்துவிடு. பாண்டவர்கள் உன்னையும் சேர்த்து ஆறுபேராக இருப்போம். உனக்கும் அரசு வழங்கி முடி சூட்டுகிறோம். பாஞ்சாலியின் மானத்தைக் காக்கக் குரல்கொடுத்த உன் தலையில் முடிசூட்டிப் பார்க்க விழைகிறது என் மனம். என் விருப்பத்தை நிறைவேற்று" என்றார் பீமன்.

விகர்ணன் நகைத்தார் ‘‘பீமா நான் அற வழியில் நிற்பவன் என்று சொன்னாயே, அது உண்மைதான் அன்று மட்டுமல்ல எப்போதும் அறத்தின் வழியில்தான் நிற்பேன். அன்று பெண்ணின் மானம் சூறையாடப்படும் நிலையில் அதன் பொருட்டு எதிர்த்துக் குரல் கொடுப்பது அறம். எனவே எதிர்த்துக் குரல் கொடுத்தேன். இன்று யார் தரப்பில் நியாயம் இருந்தாலும், நான் சார்ந்திருக்கும் என் அண்ணண் தரப்புக்காக நான் போரிடுவதே நியாயம். வெறும் மகுட ஆசைக்காக என் அண்ணனை விட்டு விலகி விடுவேன் என்றா நினைத்தாய்? என்னைத் தாண்டித்தான் நீ துரியோதனனை அடைய முடியும். இயலுமானால் என்னை நோக்கி உன் கதாயுதத்தைப் பிரயோகித்துப் பார். வீண்பேச்சை வீரர்கள் விரும்புவதில்லை. அவர்கள் செயல்படுபவர்கள். நீ வீரனென்றே நான் நம்புகிறேன்.”
விகர்ணனின் துடுக்கான பேச்சு பீமனுக்குக் கடும் சீற்றம் விளைவித்தது. தேரிலிருந்து குதித்துப் பாய்ந்து சென்று விகர்ணனைத் தாக்கலானான் பீமன்.

உக்கிரமான போர் நெடுநேரம் நடைபெற்றது. ஒரு மாபெரும் வீரனுடன் போர் புரிகிறோம் என்பதை பீமனின் மனம் உணர்ந்தது. அதுமட்டுமல்ல, அறத்தின் வழியே வாழ்பவர்களை வெல்வது சுலபமல்ல என்பதையும் அவன் மனம் புரிந்துகொண்டது.
மனமே இல்லாமல் தன் கதாயுதத்தால் ஓங்கி விகர்ணனை அறைந்தான் பீமன். தர்மத்தின் வழியிலேயே நின்ற அவன் முகத்தில் புன்முறுவல் படர்வதையும் சிரித்துக் கொண்டே அவன் மரணத்தை வரவேற்பதையும் பார்த்து வியந்தது பீமன் மனம். விகர்ணனின் உயிர்ப் பறவை விண்ணில் பறந்தபோது பீமன் உள்ளம் இனம் தெரியாத சோகத்தில் ஆழ்ந்தது.

மாலை சூரியாஸ்தமனத்திற்குப் பிறகு யுத்தம் நிறுத்தப்பட்டது. பாண்டவர்கள் பாசறைக்குத் திரும்பினார்கள். அனைவரிலும் நல்லவன் அன்று கொல்லப்படுவான் என்று கண்ணன் சொன்னானே? பதற்றத்தோடு காத்திருந்த பாஞ்சாலி யுதிஷ்டிரர் உள்ளிட்ட எல்லோரும் நலமாகத் திரும்பி வருவதைப் பார்த்து நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

பாஞ்சாலி கண்ணனிடம் கேட்டாள் ‘‘கண்ணா! அனைவரிலும் நல்லவன் சாவான் என்றாயே? அப்படியானால் இறந்தது யார்? என் கணவர் ஐவரிலும் மூத்தவரைத் தானே உலகம் மிக நல்லவர் எனப் புகழ்கிறது? அவரின் நலத்திற்காக நான் இன்று முழுவதும் உன்னைப் பிரார்த்தித்தவாறே காலம் கழித்தேன். கண்ணா! அவரை விடவும் நல்லவர்கள் உண்டா என்ன?”

புல்லாங்குழலைக் கையில் தட்டியவாறே நகைத்த கண்ணன் சொன்னார் "பாஞ்சாலி! நல்லவர்களிடையே நல்லவனாக இருப்பதில் என்ன சிரமம்? அப்படி இல்லாதிருப்பதுதான் கஷ்டம். ஆனால் விகர்ணன் கெட்டவர்களிடையே நல்லவனாக இருந்தான். உன் மானத்தைக் காப்பதற்காக எதிரணியில் இருந்து குரல்கொடுத்தான். இப்போது தன் அண்ணன் கெட்டவனே ஆனாலும், தன் அண்ணனுக்காக உயிரையே கொடுத்திருக்கிறான். மகுட ஆசை கூட அவன் மனத்தை மாற்ற முடியவில்லை. தான் இறப்போம் என்று தெரிந்தே இறந்திருக்கிறான். தர்மம் எந்த அணியில் இருக்கிறதோ அந்த அணியில் தான் நான் இருப்பேன் என்பதும் நான் இருக்கும் அணிதான் வெல்லும் என்பதும் அவன் அறிந்தவைதான். ஆனாலும் தன் உயிர் போவதை அவன் ஒரு பொருட்டாய்க் கருதவில்லை. தனது அண்ணனுக்காக உயிரை விடுவதே தனது தர்மம் எனக் கருதியிருக்கிறான். அவன் இருந்தவரை கௌரவர்கள் அத்தனை பேரையும் அந்த நல்லவனின் தர்மசக்தி கவசமாய்க் காத்திருந்தது. அவன் இருக்கும்வரை கௌரவர்களை அழிப்பது இயலாத செயல். இன்று உன் கணவன் பீமன் அந்த நல்லவனை வதம் செய்துவிட்டான். இனி கெட்டவர்களான மற்ற கௌரவர்களை அழிப்பது கடினமல்ல. சொல் பாஞ்சாலி. சேற்றில் பூத்த செந்தாமரை போல, கெட்டவர்களிடையே நல்லவனாக வாழ்ந்தானே, இவனைவிட நல்லவர் உலகில் வேறு யார்?”

இதற்கு தர்மபுத்திரர் ‘‘ஆமாம், விகர்ணன் எல்லோரிலும் நல்லவன்! என்னை நல்லவன் என்கிறார்கள். அது உண்மையோ இல்லையோ, விகர்ணன் என்னை விடவும் நல்லவன் என்பது மட்டும் உண்மை. இந்தப் பாழும் போரால் அந்த உத்தமனையும் கொல்ல நேர்ந்ததே பீமா!” என்ற அவர் தன் விழிநீரை விரல்களால் துடைத்துக் கொண்டார்.

பீமன் இருகரம் கூப்பி வணங்கியபோது, பீமனின் கரத்திலிருந்த கதாயுதம் வெட்கத்தோடு கீழே சாய்ந்தது.
---------------------------------------------------
படித்ததில் பிடித்தது. உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்...
அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

  1. Good morning sir very excellent story thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    அருளாளன் கண்ணனின் அவதாரக்
    கதைகளைச் சொல்லும் 'பாகவதத்தின்' ஒரு பருவம் தான்
    மஹாபாரதம்! அதில் வரும் பல உபகதைகள் எல்லோருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை!
    அப்படிப்பட்ட ஒன்று தான் இன்றைய
    பதிவு! "அனைவரிலும் மிகமிக நல்லவன் ஒருவன் கொல்லப்படுவான்" என்பதைப் படித்தவுடன் நான் 'கர்ணனை' நினைத்தேன் அல்லாது விகர்ணனைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை!? இப்படிப்பட்ட ஒரு புத்திரன் கௌரவர்கள் பக்கம் இருந்திருக்கிறான் என்பது எனக்கு விந்தையான செய்தி! இறைவன்
    கிருஷ்ணன் புதிராக இருந்தே அருள்
    பாலித்துள்ளான், சித்து விளையாட்டுக்காரன் போல்!
    மாவீரன் விகர்ணனுக்காக ஒரு சொட்டு கண்ணீர் சிந்தி, ஸ்ரீஹரி பார்த்தசாரதியையும் வணங்கிப்
    பிரார்த்திக்கிறேன்!

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா,புராண காலத்திலையே சமூக நீதி நிலை நாட்ட பட்டிருக்கிறது.நன்கு படித்த குடும்பத்தில் இருந்து ஒரு படிப்பாளி வருவதில் ஆச்சரியமில்லை மற்றும் அது எளிது,இயல்பு.ஆனால் வறுமையில் வாழும் குடும்பங்களில் இருந்து இன்று பல முன்னுதாரங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.நன்றி.

    ReplyDelete
  4. ////Blogger kmr.krishnan said...
    Very touching story.////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  5. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very excellent story thanks sir vazhga valamudan////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  6. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    அருளாளன் கண்ணனின் அவதாரக்
    கதைகளைச் சொல்லும் 'பாகவதத்தின்' ஒரு பருவம் தான்
    மஹாபாரதம்! அதில் வரும் பல உபகதைகள் எல்லோருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை!
    அப்படிப்பட்ட ஒன்று தான் இன்றைய
    பதிவு! "அனைவரிலும் மிகமிக நல்லவன் ஒருவன் கொல்லப்படுவான்" என்பதைப் படித்தவுடன் நான் 'கர்ணனை' நினைத்தேன் அல்லாது விகர்ணனைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை!? இப்படிப்பட்ட ஒரு புத்திரன் கௌரவர்கள் பக்கம் இருந்திருக்கிறான் என்பது எனக்கு விந்தையான செய்தி! இறைவன்
    கிருஷ்ணன் புதிராக இருந்தே அருள் பாலித்துள்ளான், சித்து விளையாட்டுக்காரன் போல்!
    மாவீரன் விகர்ணனுக்காக ஒரு சொட்டு கண்ணீர் சிந்தி, ஸ்ரீஹரி பார்த்தசாரதியையும் வணங்கிப்
    பிரார்த்திக்கிறேன்!/////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete
  7. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,புராண காலத்திலையே சமூக நீதி நிலை நாட்ட பட்டிருக்கிறது.நன்கு படித்த குடும்பத்தில் இருந்து ஒரு படிப்பாளி வருவதில் ஆச்சரியமில்லை மற்றும் அது எளிது,இயல்பு.ஆனால் வறுமையில் வாழும் குடும்பங்களில் இருந்து இன்று பல முன்னுதாரங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.நன்றி.//////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com