மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

1. Galaxy 2007 சிறப்பு வகுப்பு

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம்,

2. Stars2015 சிறப்பு வகுப்பு

2016ம் ஆண்டு நடைபெற்ற ஸ்டார்ஸ்2015 வகுப்பறையில் 126 பாடங்கள் உள்ளன. அந்த மேல்நிலை வகுப்பும் நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 126 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம்,

இந்த இரண்டு வகுப்புக்களும் எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)

அவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்

29.6.18

இன்ஜினீயரிங் படிப்பின் இன்றைய நிலைமை!!!!

இன்ஜினீயரிங் படிப்பின் இன்றைய நிலைமை!!!!

இன்ஜினீயரிங் படித்தால் வேலை கிடைக்குமா?

சுமார் 20 வருடங்களுக்கு முன்பு, பொறியியல் படிப்பு  என்பது அடைய முடியாத பெருங்கனவு. இன்றோ... நகரம் மற்றும் கிராமங்களின் வீதிகள் தோறும்  பொறியாளர்கள் நிறைந்திருக்கின்றனர். நம் ஊரில், தெருவில், குடும்பத்தில்... எங்கெங்கு காணினும்  பொறியாளர்கள். ஆனால், அவர்கள் ஏக்கத்துடன் எதிர்பார்த்த பொன்னுலகம் அவர்களுக்குக்  கிடைத்துவிட்டதா? 'இன்ஜினீயரிங் படிச்சிட்டா போதும்... கை நிறையச் சம்பாதிக்கலாம்; வாழ்க்கையில் செட்டில் ஆகிடலாம்’ என்ற எண்ணம் ஈடேறியதா? இது விடை தெரியாத கேள்வி அல்ல.

பல  லட்சங்கள் செலவழித்து இன்ஜினீயரிங் படித்துவிட்டு, 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்குக்கூட வேலை கிடைக்காமல் திண்டாடும் எத்தனையோ பொறியாளர்களை நமக்குத் தெரியும். ஃபைனான்ஸ் கம்பெனியில் பணம் கட்டி ஏமாந்தவர்களைப் போல, அவர்களின் முகங்களில் எதிர்காலம் குறித்த  அச்சம் உறைந்திருக்கிறது. எப்படியாவது, ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்துவிடத் துடிக்கிறார்கள்.  யதார்த்தம், அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறதா?

பொறியியல் மோகம்!

தமிழ்நாட்டில்  மட்டும் 498 பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு 2,36,417 பேர் படித்து வெளியில் வருகின்றனர். மொத்த இந்தியாவையும் கணக்கிட்டால், நாடு முழுவதும் உள்ள  4,469 பொறியியல் கல்லூரிகளில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு 16,03,012 பேர் படித்து வெளியில்  வருகின்றனர். இது, 2011-12ம் ஆண்டின் கணக்கு. இதற்கு முந்தைய ஆண்டுகளில், இந்த  எண்ணிக்கை சற்றுக் குறைவாக இருக்கலாம். எப்படி இருப்பினும், ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும்  மேற்பட்ட புதிய பொறியாளர்கள் உருவாகிக்கொண்டே வருகின்றனர்.

இது தொடர்பான பல்வேறு புள்ளிவிவரங்களில், ஒரு தகவல் நம்மை ஆச்சரியப்படுத்தியது. ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்கா மற்றும் 
சீனாவில் எவ்வளவு பொறியாளர்கள் உருவாகிறார்களோ... அதைவிட அதிகமான எண்ணிக்கையில்  இந்தியாவில் பொறியாளர்கள் உருவாக்கப் படுகின்றனர். பொருளாதாரரீதியாக நம்மைவிட வலுவாக  உள்ள நாடு மற்றும் பரப்பளவிலும், மக்கள்தொகையிலும் நம்மைவிட பெரிய நாடு... இந்த இரண்டுக்கும்  தேவைப்படுவதைவிட, நம் நாட்டுக்கு அதிக பொறியாளர்கள் தேவைப் படுகின்றனரா?

''உண்மையில்  இப்படிப்பட்ட எந்தக் கணக்கும் இந்திய அரசிடம் இல்லை. இந்தியாவின் பல்வேறு துறைகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் எத்தனை பொறியாளர்கள் தேவை எனக் கணக்கிட்டு அதற்கேற்ப கல்லூரிகளில்  கல்வியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதைவிட அதிகமான இடங்களுக்கு அனுமதி தரக்கூடாது. ஆனால், இந்திய அரசிடமே அப்படி ஒரு கணக்கீடு இல்லை என்பதால், விருப்பம் போல கல்லூரிகளுக்கும் கல்வியிடங்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. விளைவு, பொறியியல்  கல்லூரிகள் மழைக்கால ஈசல்களைப் போல பெருகியிருக்கின்றன'' என்கிறார் ஐ.டி. துறையில் பணிபுரியும், சேவ்-தமிழ்ஸ் அமைப்பைச் சேர்ந்த இளங்கோவன்.

எனவேதான் ஜனவரி - 2011  நிலவரப்படி 98 லட்சமாக இருந்த இந்திய வேலையில்லா பொறியாளர்களின் எண்ணிக்கை, 2013-ல் 
1.8 கோடியாக அதிகரித்துள்ளது.

பெற்றோர்களின் சுமை!

வேலை கிடைக்கவில்லை என்பது  மாணவர்களைவிட பெற்றோர்களுக்கே அதிக மன உளைச்சலைத் தருகிறது. ஏனெனில், அவர்கள்தான்  சொத்துகளை விற்று, நகைகளை விற்று, சொந்த-பந்தங்களிடம் கடன் வாங்கி பிள்ளைகளைப் படிக்க  வைக்கின்றனர். படித்து முடித்ததும் நல்ல வேலை கிடைக்கும்; சம்பளம் கிடைக்கும்..அதைக்கொண்டு கடனை அடைத்துவிடலாம் என்பது அவர்களின் நம்பிக்கை. அது பொய்க்கும்போது  யதார்தத்தை எதிர்கொள்ள மிகவும் சிரமப்படுகின்றனர். கடன் மேல் கடன் வாங்கி ஓட்டாண்டியான  குடும்பங்கள் எத்தனையோ. 'தொழிற்கல்வி’ என்ற பெயரில் பொறியியல் கல்லூரிகள் கல்வியைத்  தொழிலாக நடத்த, தொழில் நடத்திய பல பெற்றோர்கள் சொத்துகளை இழந்து கடனாளிகளாக  நிற்கின்றனர்.

இன்னொரு பக்கம் கல்விக் கடன். லட்சக்கணக்கான இளைஞர்கள், கல்லூரியைவிட்டு பொறியாளர்களாக மட்டும் வெளியேறவில்லை... கடன்காரர்களாகவும் வருகின்றனர். ஆனால், மத்திய  நிதியமைச்சர் ப.சிதம்பரமோ கல்விக் கடனை ஒரு புரட்சிகரத் திட்டம் போலவே அறிவித்து வருகிறார். சொந்தக் குடிமக்களுக்குத் தரமான கல்வியை இலவசமாகத் தர வழியற்ற அரசு, லட்சக்கணக்கான நடுத்தரவர்க்கக் குடும்பங்களை கடனாளிகளாக மாற்றியிருப்பது எப்படி புரட்சிகரத் திட்டமாகும்? நாடு முழுவதும் புற்றீசல் போல திறக்கப்பட்டுள்ள தனியார் கல்வி முதலாளிகளின் கொள்ளை லாபத்தை  உத்தரவாதப்படுத்தவே, இந்தக் கல்விக் கடன்கள் உதவுகின்றன. அந்தப் பக்கம் கடன் தந்துவிட்டு, இந்தப் பக்கம் அதைக் கல்வி வியாபாரிகளின் கல்லாவில் வாங்கிப் போடுகிறார்கள். ஆனால், மாணவர்களோ... படிப்பு முடிந்த முதலாம் ஆண்டு முடிவில் இருந்து வட்டியுடன் கடனைத் திருப்பிச்  செலுத்தியாக வேண்டும்.

''நான் திருப்பூர் அருகே உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் கல்விக் கடன் பெற்றுதான் படித்தேன். ஒருமுறை நான் வங்கி சென்றிருந்தபோது ஒரு மாணவன், இரண்டாவது தவணை கல்விக் கடனைப் பெறுவதற்காகப் பெற்றோருடன் வங்கிக்கு வந்திருந்தான். அவனது தேர்வு  மதிப்பெண் அட்டையை வாங்கிப் பார்த்த வங்கி மேலாளர், மதிப்பெண்கள் குறைவாக இருந்ததால், 
அவனைக் கடுமையாகத் திட்டியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். ஒழுங்காகப் படிக்கவில்லை என்றால், ஆசிரியர் திட்டுவார், பெற்றோர் திட்டுவார்கள். ஆனால், ஒரு வங்கி மேலாளர் திட்டியதைக் கண்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது'' என்கிறார் தற்போது சென்னையில் பணிபுரியும்  பாரதிதாசன்.

ஒரு பக்கம் குடும்பக் கடன், கல்விக் கடன், வேலை கிடைக்காத சூழல், குடும்பத்தின்  நெருக்கடி... என்று படித்த இளைஞர்களின் மனம், பெரும் பாரத்தைச் சுமக்கிறது. இன்னொரு பக்கம், இந்தியாவின் வேலைவாய்ப்புச் சந்தை ஒவ்வோர் ஆண்டும் பலவீனமாகி வருகிறது.

குறையும்  வேலைவாய்ப்பு!

இந்தியாவின் வேலைவாய்ப்பு சதவிகிதம் 2004-2005ம் ஆண்டில் 42 சதவிகிதமாக  இருந்தது. இது 2009-10ம் ஆண்டில் 36.5 சதவிகிதமாகவும், 2011-12ம் ஆண்டில் 35.4 சதவிகிதமாகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு சதவிகிதம் குறைந்துகொண்டே வருகிறது. மாறாக, ஒவ்வோர் ஆண்டும் இந்தியப் பொறியாளர்களின் எண்ணிக்கை  அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதாவது, தேவையைவிட அதிக உற்பத்தி. தேவைப்படாதபோது ஒரு பொருளை உற்பத்தி செய்வதால் பொருள் வீணாவது மட்டுமல்ல... அதை உருவாக்கச் செலவிடப்பட்ட பணம், நேரம், மனிதவளம் அனைத்தும் வீணாகின்றன. இது 
எளியோர்களுக்கான கணக்கு. முதலாளிகளின் உலகத்தில், இந்த மிகை உற்பத்தியும் தந்திரமாக லாபமாக்கப்படுகிறது.

நாட்டின் தொழில் துறை வளர்ச்சி விகிதத்துக்கு எவ்வளவு பொறியாளர்கள் தேவையோ... அதற்கேற்ற எண்ணிக்கையில் கல்லூரிகளும் கல்வியிடங்களும் இருக்க வேண்டும். மாறாக, நம் ஊரில் பொறியியல் கல்லூரிகள் ஏராளமாகப் பெருகிவிட்டன. 'பொறியியல் படிப்பதுதான் கௌரவம். அதுதான் எதிர்காலம்’ என்ற ஆசை உருவாக்கப்பட்டு, மாணவர்கள் அதில் சேர்க்கப்  படுகின்றனர். ஆனால், இவர்கள் அனைவருக்கும் வேலை கொடுக்கும் அளவுக்கு இந்தியத் தொழில் துறையில் வளர்ச்சி இல்லை. இதனால் இந்தியப் பொறியாளர்கள், மிகவும் சவாலான வேலைவாய்ப்புச் சந்தையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

ஐ.டி. நிறுவனங்களின் கூட்டமைப்பான 'நாஸ்காம்’ வெளியிட்ட தகவலின்படி, 2013-ம் ஆண்டில் 50 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளைப் பெற, சுமார் 10 லட்சம் பொறியாளர்கள் போட்டியிட்டனர். இப்படிக் குறைந்த எண்ணிக்கையிலான 
வேலைகளுக்கு அதிக எண்ணிக்கையிலானோர் போட்டியிடும்போது, இயல்பாகவே ஊதியம்  குறைக்கப்படுகிறது!

மிகை உற்பத்தி... மிகை லாபம்!

''இதில் நுணுக்கமாக ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். தேவைக்கு அதிகமான பொறியியல் கல்லூரிகளைக் கட்டி, அதில் 
லட்சக்கணக்கான மாணவர்களைப் படிக்க வைத்து, நம் குடும்பங்களின் வாழ்நாள் சேமிப்பை உறிஞ்சுகின்றனர். அந்தக் கல்லூரிகளின் மூலம் தேவைக்கு அதிகமான பொறியாளர்களை உற்பத்தி செய்து, அவர்களை குறைந்த கூலியில் வேலைக்கு எடுத்து, நம் இளைஞர்களின் உழைப்பை  உறிஞ்சுகின்றனர். அதிலும் லாபம்; இதிலும் லாபம்'' என்கிறார் ஐ.டி. துறையில் பணிபுரியும் செந்தில்.

எனினும், இந்த வேலைகூட கிடைப்பது இல்லை என்பதுதான் இன்றுள்ள யதார்த்தச் சூழல். இதனால், பொறியியல் படித்த லட்சக் கணக்கானோர் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு பி.பி.ஓ., டெஸ்ட்டிங் என்று ஐ.டி. துறையில் வந்து சரணடைகிறார்கள். இந்த வேலைகளும் உறுதியானவையோ, நிரந்தரமானவையோ அல்ல. இவை அனைத்தும் இந்தியாவின் குறைந்த சம்பளத்தைக் 
கணக்கில்கொண்டு அவுட்சோர்ஸ் செய்யப்படுபவையே. இதைவிட குறைவான சம்பளத்துக்கு வேறொரு நாட்டில் பணியாளர்கள் கிடைக்கும்போது, அவுட்சோர்ஸ் வேலைகள் அங்கு பறந்துவிடுகின்றன.

2014-ம் ஆண்டு பிப்ரவரியில் புகழ்பெற்ற கணினி நிறுவனமான ஐ.பி.எம்., குறைந்துவிட்ட தனது லாப விகிதத்தைச் சமப்படுத்த, உலகம் முழுவதும் உள்ள கிளைகளில் இருந்து 13,000 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியது. இந்த நிறுவனத்தின் பெங்களூரூ கிளையில் ஒரே  நாளில் 50 பேர் திடீரென்று நீக்கப்பட்டனர்!

கை கொடுக்காத கேம்பஸ்!

புறச்சூழல் இத்தகைய  நெருக்கடிகளுடன் இருப்பது, கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் தெரிகிறது. 
இதனால் எப்படியாவது 'கேம்பஸ் இன்டர்வியூ’ எனப்படும் வளாக நேர்முகத் தேர்விலேயே ஒரு வேலையைப் பெற்றுவிட வேண்டும் என்று அவர்கள் துடியாகத் துடிக்கின்றனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வளாக நேர்முகத் தேர்வு நடத்தவரும் நிறுவனங் களின் எண்ணிக்கையும், அவர்கள்  தேர்வு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துவிட்டன. காரணம், உலகளாவியப் பொருளாதார நெருக்கடி. ஏற்கெனவே கேம்பஸில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கே அவர்களால் வேலை தர முடியவில்லை. புகழ் பெற்ற மும்பை ஐ.ஐ.டி-யில் 2012-13வது கல்வி ஆண்டில் 1,501 மாணவர்கள் கேம்பஸில் தேர்வானார்கள். ஆனால், அவர்களில் 1,005 பேருக்கு மட்டுமே வேலை கொடுக்கப்பட்டுள்ளது. இதே கல்லூரியில், கடந்த ஆண்டு 1,389 பேர் கேம்பஸில் தேர்வு செய்யப்பட்டு, 1,060 பேருக்கு மட்டுமே வேலை அளிக்கப்பட்டது.

வளாக நேர்முகத் தேர்வில் வேலை கிடைக்காவிட்டால், அது மன அழுத்தமாக மாறி சில நேரம் தற்கொலையில்கூட முடிகிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்த ஷாகில் முகமது என்கிற மாணவர், வளாக நேர்முகத் தேர்வில் வேலை கிடைக்கவில்லை என்று கடந்த ஆண்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

எனில், பொறியியல் படிப்பது வீண் செயலா? பொறியியல் படித்தால் வேலை கிடைக்காதா? இப்படி ஒரு முடிவுக்கு வருவது இல்லை இந்தக் கட்டுரையின் நோக்கம், ஒவ்வோர் ஆண்டும் தமிழ்நாட்டில் சுமார் இரண்டு லட்சம் பேர் பொறியியல் படிப்புப் படித்து வெளியில் வருகின்றனர் என்றால், அதில் குறிப்பிடத்தகுந்த பேருக்கு வேலை கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது. அடியோடு அது வீண் என்று சொல்வதற்கு இல்லை. அதே நேரம் 'பொறியியல் படிக்கும் அனைவருக்கும் நல்ல சம்பளத்தில் வேலை உறுதி’ என்ற நிலை இன்று இல்லை. இந்த நிலையில் கல்வியாளர்களின் பரிந்துரைதான்  என்ன? அது எப்போதும் சொல்வதுதான். பிள்ளைகளின் ஆர்வம் எதில் இருக்கிறதோ, அந்தப் படிப்பில் சேர்த்துவிடுங்கள். 'இதற்குத்தான் எதிர்காலம் இருக்கிறது’ என்று ஊதிப் பெருக்கப்பட்ட மாயைக்கு  இரையாகாதீர்கள்!

அனிஷ்குமார், மெக்கானிக்கல் இன்ஜினீயர்: ''என்னோட 1.20 லட்ச ரூபாய் கல்விக் கடன், இப்போ 1.40 லட்சமா இருக்கு. வேலைத் தேடிப்போற இடத்துல எல்லாம், 'டிப்ளமோ படிச்சிருந்தா வேலை தர்றோம். இன்ஜினீயரிங்னா வேண்டாம்’ங்கிறாங்க. ஏன்னா, டிப்ளமோவா  இருந்தா அதிக வேலை வாங்கிட்டு கம்மி சம்பளம் தரலாம். இன்ஜினீயரிங்னா அது முடியாதே... 10 லட்சம் செலவு செஞ்சு இன்ஜினீயரிங் படிச்சதுக்கு 10 ஆயிரம் சம்பளத்துல வேலை கிடைக்கிறதே பெரும்பாடா இருக்கு!''

திராவிடத் தம்பி, கம்ப்யூட்டர் சயின்ஸ்: ''படிப்பு முடிச்சு அஞ்சு வருஷமா பி.பி.ஓ. வேலைதான் பார்க்கிறேன். இப்போ ஐ.டி. வேலைக்கு இன்டர்வியூ போனா, 'உங்களுக்கு டச்  விட்டுப்போச்சு. வேற ஃபீல்டுக்குப் போயிட்டீங்க... வேண்டாம்’ங்கிறாங்க. இந்த வேலையைப் பார்க்கிறதுக்கு எதுக்கு லட்சம், லட்சமா செலவழிச்சு நாலு வருஷம் படிக்கணும்?''

ரிஸ்வான், பி.டெக். ஐ.டி.: ''2007-ல் படிப்பு முடிச்சேன். ஏழு வருஷம் ஆச்சு. மூணு வருஷம் வாத்தியார் வேலை பார்த்தேன். 
டேட்டா என்ட்ரி, டீச்சிங் எதுக்குப் போனாலும் 7,000, 8,000 தான் சம்பளம் தர்றாங்க. யாரும் வேலை தர்றது இல்லை. ஆனா, எல்லாரும் எக்ஸ்பீரியன்ஸ் கேட்கிறாங்க. வேலையே கொடுக்காம எக்ஸ்பீரியன்ஸுக்கு எங்கே போறது?''

மீண்டும் வங்கிப்பணி மோகம்!

இந்திய வேலைவாய்ப்புச் சந்தையில் புதிய வேலைவாய்ப்புகளின் உருவாக்கம் ஒவ்வோர் ஆண்டும் குறைந்துகொண்டே வருகிறது. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட சுமார் 250 முன்னணி நிறுவனங்களில் 'எக்கனாமிக் டைம்ஸ்’ ஒரு சர்வே நடத்தியது. அதன்படி 2011-வது நிதியாண்டில் 2.02 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. இது, 2012-ல் 1.91 லட்சமாகவும், 2013-ல் 1.23 லட்சமாகவும்  வீழ்ச்சி அடைந்துள்ளது. அதாவது, 2011-ம் நிதியாண்டில்  6.4 சதவிகிதமாக இருந்த வேலைவாய்ப்பு வளர்ச்சி, 2012-ல் 5.7 சதவிகிதமாகவும், 2013-ல் 3.5 சதவிகிதமாகவும் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

இதனால், 20 வயதில் இருந்து 30 வயது வரையிலான பொறியியல் பட்டத்தாரிகளில் 74 சதவிகிதம் பேர் வங்கி தொடர்பான வேலைகளில் ஆர்வம் காட்ட  ஆரம்பித்துவிட்டார்களாம். வருங்காலத்தில் வங்கி தொடர்பான வேலைவாய்ப்புகள் லட்சக்கணக்கில்  அதிகரிக்க இருக்கும் நிலையில், பெரும்பாலான பொறியியல் பட்டதாரிகள் வங்கித் தேர்வுகளுக்குத்  தயாராகி வருவதாகச் சொல்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று!

'கெம்பா’ கார்த்திகேயன், மனிதவள நிபுணர்:

''தற்போதைய நிலையில், வேலை கிடைக்காத பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது உண்மைதான். அதே நேரம் கடந்த சில ஆண்டுகளாக பெரும் நிறுவனங்கள் நல்ல ஊதியத்தில்  பொறியாளர்களை வேலைக்கு அமர்த்தி வருவதும் உண்மை. அதனால் பொறியியல் படிப்பு குறித்து  அடியோடு அவநம்பிக்கை கொள்ளத் தேவையில்லை. பொறியியல் கல்லூரிகள் அதிகமாக இருப்பதோ, தேவையைவிட அதிக பொறியாளர்கள் உருவாக்கப்படுவதோ ஒரு பிரச்னை இல்லை. உருவாகிவரும் 
பொறியாளர்களின் பெரும்பகுதியினர் திறனற்றவர்களாக இருப்பதுதான் பிரச்னை. இதற்கு, தனிநபர்களைக் குற்றம் சொல்ல முடியாது. முதலில் நாம் நமது கல்லூரிகளை, அனைத்து உள் கட்டமைப்பு வசதிகளும் கொண்டவையாக மாற்ற வேண்டும். உள் கட்டமைப்பு என்றால், வெறும் கட்டடங்கள் அல்ல; மாணவர்களின் தனித்திறனையும் ஆற்றலையும் வளர்க்கும் கல்விமுறை, 
திறமையான ஆசிரியர்கள்... என்பதில் இருந்து அதைத் தொடங்க வேண்டும். இது, உடனடி பலன் அளிக்காது; எனினும், நீண்டகால நோக்கில் நிச்சயம் பலன் அளிக்கும்!'
------------------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16 comments:

ஸ்ரீராம். said...

//ஃபைனான்ஸ் கம்பெனியில் பணம் கட்டி ஏமாந்தவர்களைப் போல, அவர்களின் முகங்களில் எதிர்காலம் குறித்த அச்சம் உறைந்திருக்கிறது. //

மிகச்சரியான உவமை.

K.P.Shanmuga Sundaram Sundaram said...

Good morning sir very useful info and statistics, how to overcome this unemployment problem sir?

gnana sekhar said...

அருமையான பதிவு.....

வரதராஜன் said...

வணக்கம் குருவே!
உண்மையான வேதனை! உணரமுடிகிறது!பொதுமக்களாகிய நாம், நாட்டில் நல்ல முறையில் திட்டங்கள் தீட்டி, பொருளாதார
முன்னேற்றம் உட்பட்ட பல நலன்களுடன் வேலைவாய்ப்பும்
மேம்படுத்தி சுபிட்சம் தழைக்க வாழ்வோம், என்ற நம்பிக்கையில்
MLA மற்றும் MP க்களை தேர்வு செய்து அனுப்புகிறோம்! ஆனால்,
அவர்கள் தங்கள் கடமைகளை மறந்து சுயலாபம் கருதி வாழ்ந்து நம்மை ஏமாற்றுகிறார்கள்! என்ன செய்வது? அப்படிப்பட்ட ஒரு காரியம்
தான் தேவைக்கு மீறி எஞ்ஜினீயரிங
கல்லூரிகள் திறக்கப்பட்டு இப்போது வேலையில்லாத் திண்டாட்டத்தில்,
படிப்பை முடித்த அவதிப்படுகின்றனர். இதுபோன்ற அவதிகள நாட்டில் பலப்பல!
....................
ஆனால், வாத்தியாரையா, தாங்களின் இன்றைய பகிர்ப்பு மிகப்
பழையது.. இன்றைய BJP ஆட்சிக்கு
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில்
நடந்ததைப் பற்றி எழுதப்பட்டுள்ளது
காரணம்......."ஆனால், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமோ கல்விக் கடனை ஒரு புரட்சிகரத் திட்டம் போலவே அறிவித்து வருகிறார்"....
என்ற வரிகள்!....
.

Visvanathan N said...

Respected sir,

Good afternoon sir. Thank you for your message on Unemployment and Engg. coursed and colleges in Tamil Nadu. Sorry to tell you that I think this is very old status of the Engg. college analysis and data. But recent trend is different and more unemployment story is much more. Anyhow, Thank you for your messasge.\

regards,

Visvanathan N

adithan said...

வணக்கம் ஐயா,நம் கல்வி முறையில் மாற்றம் வேண்டும்.வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இருப்பதை மாற்ற வேண்டும்.கல்லூரி முடிந்து வரும்போது படித்த பிரிவில் தனித்து வேலை செய்யும் திறனுடன் இருக்க வேண்டும் நம் படிப்பு.அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் திரு.பாலகுருசாமி அவர்கள் சொன்னது நினைவுக்கு வருகிறது."படித்தது எலக்ட்ரிகல் என்ஜினீரிங்காக இருக்கும் ஆனால் வீட்டில் ப்யூஸ் போய்விட்டால் எலக்ட்ரீஷியனை தேடிக்கொண்டிருப்பார்கள்".நன்றி.

thozhar pandian said...

முற்றிலும் உண்மை ஐயா. எனக்கு தெரிந்தே பல உதாரணங்கள் உண்டு. அதில் ஒன்று.

எனது மனைவியின் தமக்கை மகன் கைவேலைக்காரன். சிறு வயதில் இருந்தே எதையாவது உருட்டிக் கொண்டே இருப்பான். படிப்பு அவ்வளவாக வராது. அவனது தாய்க்கு அவனை கணிப்பொறியாளனாக்கி அமெரிக்கா அனுப்ப வேண்டும் என்று ஆசை. ஆனால் 10ம் வகுப்பிலும் 12ம் வகுப்பிலும் மிக சொற்ப மதிப்பெண்களே பெற்று தேர்ந்தான். அவனை 10ம் வகுப்பு முடிந்த பின்பு டிப்ளோமா படிக்க வைக்குமாறு எனது அண்ணியிடம் கூறியும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை. 12ம் வகுப்பு முடிந்த பின்பு நாமக்கல் அருகில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்க வைத்தார். நிறைய செலவு. அவனும் ஒரு வழியாக படித்து முடித்து 5 ஆண்டுகள் ஆகி விட்டன. இன்னும் ஒரு நல்ல வேலைதான் கிடைக்கவில்லை. தடுமாறுகின்றான்.

ஏன் இந்த மோகம்? இந்த படிப்பு படித்தால் தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்ற எண்ணம் வேறோங்க காரணம் என்ன? இதை வைத்து பலர் கல்லூரிகள் தொடங்கி செல்வந்தர்கள் ஆனது தான் மிச்சம். எல்லா வேலையையும் சமுதாயம் மதிக்க வேண்டும். இந்த வேலை உயர்ந்தது, இது தாழ்ந்தது என்ற எண்ணம் அறவே கூடாது. டிக்னிட்டி ஆஃப் லேபர் மிக முக்கியம். ஊதியம் என்பது ஒரு வேலைக்கான தேவையை பொறுத்ததே தவிர திறமையை மட்டும் பொறுத்தது அல்ல.

மென்பொருள் துறையில் உள்ள நிலையின்மை பற்றி இன்னும் பலருக்கு புரியவில்லை. இன்று தேவை இருக்கிறது என்று ஒரு தொழில் நுட்பத்தை படித்து தேர்வதற்குள் அது காலாவதியாகின்ற நிலைமை தான்.

தனக்கு எதில் திறமையும் ஆர்வமும் உள்ளதோ, அந்த துறையை தேர்வு செய்து வெற்றி காண வேண்டும். அதற்கு நீங்கள் கூறியது போல் பெற்றோர்கள் ஒத்துழைப்பு வேண்டும். பெரு நகர பெற்றோர் இதை சற்று புரிந்து வைத்துள்ளனர்.

Indian said...

:(

Subbiah Veerappan said...

////Blogger ஸ்ரீராம். said...
//ஃபைனான்ஸ் கம்பெனியில் பணம் கட்டி ஏமாந்தவர்களைப் போல, அவர்களின் முகங்களில் எதிர்காலம் குறித்த அச்சம் உறைந்திருக்கிறது.
மிகச்சரியான உவமை./////

நல்லது. நன்றி நண்பரே!!!!

Subbiah Veerappan said...

/////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir very useful info and statistics, how to overcome this unemployment problem sir?/////

நம்மைப் பொறுத்தவரை நாம்தான் முயற்சி செய்து தீர்வு காண வேண்டும். நன்றி!!!!

Subbiah Veerappan said...

////Blogger gnana sekhar said...
அருமையான பதிவு...../////

நல்லது. நன்றி நண்பரே!!!!!

Subbiah Veerappan said...

////Blogger வரதராஜன் said...
வணக்கம் குருவே!
உண்மையான வேதனை! உணரமுடிகிறது!பொதுமக்களாகிய நாம், நாட்டில் நல்ல முறையில் திட்டங்கள் தீட்டி, பொருளாதார முன்னேற்றம் உட்பட்ட பல நலன்களுடன் வேலைவாய்ப்பும்
மேம்படுத்தி சுபிட்சம் தழைக்க வாழ்வோம், என்ற நம்பிக்கையில்
MLA மற்றும் MP க்களை தேர்வு செய்து அனுப்புகிறோம்! ஆனால்,
அவர்கள் தங்கள் கடமைகளை மறந்து சுயலாபம் கருதி வாழ்ந்து நம்மை ஏமாற்றுகிறார்கள்! என்ன செய்வது? அப்படிப்பட்ட ஒரு காரியம் தான் தேவைக்கு மீறி எஞ்ஜினீயரிங
கல்லூரிகள் திறக்கப்பட்டு இப்போது வேலையில்லாத் திண்டாட்டத்தில்,
படிப்பை முடித்த அவதிப்படுகின்றனர். இதுபோன்ற அவதிகள நாட்டில் பலப்பல!
....................
ஆனால், வாத்தியாரையா, தாங்களின் இன்றைய பகிர்ப்பு மிகப்
பழையது.. இன்றைய BJP ஆட்சிக்கு
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில்
நடந்ததைப் பற்றி எழுதப்பட்டுள்ளது
காரணம்......."ஆனால், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமோ கல்விக் கடனை ஒரு புரட்சிகரத் திட்டம் போலவே அறிவித்து வருகிறார்"....
என்ற வரிகள்!....//////

நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி வரதராஜன்!!!!

Subbiah Veerappan said...

////Blogger Visvanathan N said...
Respected sir,
Good afternoon sir. Thank you for your message on Unemployment and Engg. coursed and colleges in Tamil Nadu. Sorry to tell you that I think this is very old status of the Engg. college analysis and data. But recent trend is different and more unemployment story is much more. Anyhow, Thank you for your messasge.\
regards,
Visvanathan N//////

நல்லது. நன்றி நண்பரே!!!

Subbiah Veerappan said...

///Blogger adithan said...
வணக்கம் ஐயா,நம் கல்வி முறையில் மாற்றம் வேண்டும்.வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இருப்பதை மாற்ற வேண்டும்.கல்லூரி முடிந்து வரும்போது படித்த பிரிவில் தனித்து வேலை செய்யும் திறனுடன் இருக்க வேண்டும் நம் படிப்பு.அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் திரு.பாலகுருசாமி அவர்கள் சொன்னது நினைவுக்கு வருகிறது."படித்தது எலக்ட்ரிகல் என்ஜினீரிங்காக இருக்கும் ஆனால் வீட்டில் ப்யூஸ் போய்விட்டால் எலக்ட்ரீஷியனை தேடிக்கொண்டிருப்பார்கள்".நன்றி.////

உண்மைதான். உங்களுடைய கருத்துப் பகிர்விற்கு நன்றி ஆதித்தன்!!!!

Subbiah Veerappan said...

/////Blogger thozhar pandian said...
முற்றிலும் உண்மை ஐயா. எனக்கு தெரிந்தே பல உதாரணங்கள் உண்டு. அதில் ஒன்று.
எனது மனைவியின் தமக்கை மகன் கைவேலைக்காரன். சிறு வயதில் இருந்தே எதையாவது உருட்டிக் கொண்டே இருப்பான். படிப்பு அவ்வளவாக வராது. அவனது தாய்க்கு அவனை கணிப்பொறியாளனாக்கி அமெரிக்கா அனுப்ப வேண்டும் என்று ஆசை. ஆனால் 10ம் வகுப்பிலும் 12ம் வகுப்பிலும் மிக சொற்ப மதிப்பெண்களே பெற்று தேர்ந்தான். அவனை 10ம் வகுப்பு முடிந்த பின்பு டிப்ளோமா படிக்க வைக்குமாறு எனது அண்ணியிடம் கூறியும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை. 12ம் வகுப்பு முடிந்த பின்பு நாமக்கல் அருகில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்க வைத்தார். நிறைய செலவு. அவனும் ஒரு வழியாக படித்து முடித்து 5 ஆண்டுகள் ஆகி விட்டன. இன்னும் ஒரு நல்ல வேலைதான் கிடைக்கவில்லை. தடுமாறுகின்றான்.
ஏன் இந்த மோகம்? இந்த படிப்பு படித்தால் தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்ற எண்ணம் வேறோங்க காரணம் என்ன? இதை வைத்து பலர் கல்லூரிகள் தொடங்கி செல்வந்தர்கள் ஆனது தான் மிச்சம். எல்லா வேலையையும் சமுதாயம் மதிக்க வேண்டும். இந்த வேலை உயர்ந்தது, இது தாழ்ந்தது என்ற எண்ணம் அறவே கூடாது. டிக்னிட்டி ஆஃப் லேபர் மிக முக்கியம். ஊதியம் என்பது ஒரு வேலைக்கான தேவையை பொறுத்ததே தவிர திறமையை மட்டும் பொறுத்தது அல்ல.
மென்பொருள் துறையில் உள்ள நிலையின்மை பற்றி இன்னும் பலருக்கு புரியவில்லை. இன்று தேவை இருக்கிறது என்று ஒரு தொழில் நுட்பத்தை படித்து தேர்வதற்குள் அது காலாவதியாகின்ற நிலைமை தான்.
தனக்கு எதில் திறமையும் ஆர்வமும் உள்ளதோ, அந்த துறையை தேர்வு செய்து வெற்றி காண வேண்டும். அதற்கு நீங்கள் கூறியது போல் பெற்றோர்கள் ஒத்துழைப்பு வேண்டும். பெரு நகர பெற்றோர் இதை சற்று புரிந்து வைத்துள்ளனர்./////

நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி தோழரே!!!

Subbiah Veerappan said...

////Blogger Indian said...
:( /////

நன்றி!!!