மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

22.8.10

ஆயிரம் ரூபாய் யாருக்குக் கிடைத்தது?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆயிரம் ரூபாய் யாருக்குக் கிடைத்தது?

நீங்காத நினைவுகள் - பகுதி 5

வகுப்பறையின் வார மலர். ஒவ்வொரு ஞாயிறன்றும் வெளியாகும். ஆக்கங்கள் உங்களுடையது. படித்து ரசித்தவர்கள், தங்கள்
கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவிடலாம். பங்கு கொள்ள
விரும்புபவர்கள் தங்கள்ஆக்கங்களை அனுப்பிவைக்கலாம்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஏழாம் வகுப்பில் படித்த பெரும் பாலும் அத்தனை மாணவர்களும் தேர்ச்சி பெற்று எட்டாம் வகுப்பிற்கு வந்துவிட்டோம்.

எட்டாம் நிலை "அ" பிரிவு,

முதல் நாள் வகுப்பிற்கு கொஞ்சம் சீக்கிரமே சென்று விடுவது வழக்கம், என்ன.. வெகுநாட்கள் விடுமுறையில்  வீட்டில் இருந்தது மாத்திரம் அல்ல, முதல் நாள் விரைவில் சென்று முதல் பெஞ்சில் இடம் போடுவது, மேலும் நமக்கு பிடித்தவர்களையும் அருகில் அமரச் செய்து கொள்வதற்காகவும் கூட.

நான் பள்ளிக்கு கிளம்பி வீதிக்கு வரும் போது, எனக்குப் பின்புறமாக ஓடிவந்த, சொக்கலிங்கம் வாத்தியார் மகன் சரவணனும் வந்து என்னோடு சேர்ந்துகொண்டான் இருவருமாக பள்ளியை அடைந்தோம்.

அங்கு எங்களுக்கு முன்பே வகுப்பில் ஒரு மாணவி உட்கார்ந்து இருந்தாள். அவள் பாவாடை தாவணியில் வந்திருந்தாள், பார்ப்பதற்கு பெரிய பிள்ளையாக இருந்ததாலும்,  எங்கள் வகுப்பில் அவள் இருந்தமையால் சற்றுக்  குழப்பத்தோடு உள்ளே சென்றோம்.

சரவணன் கொஞ்சம் வாய் துடுக்கானவன்,   “ஏய்! இந்தா புள்ள நீ எப்படி இங்கே?” என்றான், உடனே அவள்,   “டேய்! என்னடா சொன்னே?” என்று
எங்கள் அருகில் வந்தவள் தொடர்ந்து சொன்னாள், “.. ஒரு அரை
விட்டேன்னா, அப்புறம் தெரியும் நான் யாருன்னு!” என்று சொன்னாள்.

உடனே நான் இடைமறித்து,   “அக்கா!”  என்றேன், அதற்கு அவள் 
“இல்லை, ஹாலாஸ்யம், நீ அக்காவென்று  எல்லாம் சொல்ல
வேண்டாம் என்னை சுந்தராம்பாள் என்றே கூப்பிடலாம், நானும் உங்களோடுதான் படிக்கப் போகிறேன் போனவருடம் தேர்ச்சி
பெறவில்லை!” என்றாள்.

அவளை நான் முன்பே சரியாக அறிந்து இருக்கவில்லை, இருந்தும்
அவள் என் பெயரைச் சொன்னதிலும் ஆச்சரியம் இல்லை. ஆம்,
பெருமை இல்லை, உண்மை. எனது, இந்த அரிதான பெயரைக்
கேள்விப் பட்ட யாரும்எழுதில் ஞாபகம் வைத்துக் கொள்வார்கள்.

எனக்குத் தெரிந்து, இப்பெயரில் எனது தாய் வழிப் பாட்டனார் பர்மாவில் ராஜாசர் அண்ணாமலை செட்டியார் வர்த்தகத்தில் கணக்காளராக இருந்தார். அவர் ஒருவரைத்தான் அந்தப் பெயருடன் எனக்கு தெரியும்.
பின்நாளில்நான் வேலைப் பார்த்த கம்பெனியில் எனக்கு மேல்
அதிகாரியாக ஒருவர் இருந்தார் அதற்கு அடுத்தபடியாக ஸ்ரீரங்கத்தில் (கிருஷ்ணாபள்ளியில்) என்.ஹாலாஸ்யம் ஐயர்  என்றொரு வக்கீல் இருந்ததாகக் கேள்வி பட்டேன்.

அவ்வளவுதான் வேறு யாரையும் கேள்விப்படவில்லை.

அதோடு இந்தத் தமிழும் எனக்கு பள்ளியில் ஒரு அங்கீகாரத்தைத் தந்து இருந்தது. . சரி, சொல்ல வந்ததை சொல்லுகிறேன்.... 

சுந்தராம்பாள் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவள். அவளின் பேச்சு சொல்லியது, அவளின் தைரியத்தை!

அதன் பிறகு, பின்னாளில்,  மற்றொரு சமயத்தில், இரண்டாண்டு கழித்து.
நான் மஞ்சள் காமாலைக்கு நாட்டு  மருந்து குடிக்க அவளின்
கிராமத்திற்கு சென்றபோது  பார்த்துவிட்டு அவள் அடைந்த
மகிழ்ச்சியை  அளவிடவே முடியாது.. கிராமத்தில் பிறந்து வளர்ந்த
பெண்களின் அணுகுமுறை, நடத்தை, பாசம் அலாதியானது!

மீண்டும் சொல்ல வந்ததை விட்டு பாதை மாறுகிறேன்....... 

சரி விசயத்திற்கு வருவோம்... வகுப்பறைக்கு பெரும்பாலும் அனைவரும் வந்து விட்டார்கள், வகுப்பாசிரியர் யார்  என்ற எதிபார்ப்பில் இருந்தோம். அவர் புது மாணிக்கம். அவரும் வந்து விட்டார்.

அதென்ன, புது மாணிக்கம்? ஆமாம் அவருக்கு முன்பே பழைய மாணிக்கம் என்றொருவர் இருக்கிறார்.

சற்று நேரத்தில் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர்
திரு. ரெங்கராஜன் அவர்கள் ஒரு பெண்ணை அழைத்துக்
கொண்டு வந்தார். அழகு நிறைந்த அப்பெண் யாராக இருக்கும்
என்று சிந்தனையில் இருக்கும் நேரத்தில் வகுப்பாசிரியரும்,
“ வாங்க சார், உள்ளே வாங்க, நீயும் வாம்மா!” என்றார்.
வந்தவர் அந்தப் பெண்ணை வகுப்பில் விட்டுவிட்டுச் சென்று
விட்டார். அவளும் வந்து அமர்ந்து கொண்டாள்.

வருகைப் பதிவேடு எடுத்தார் ஆசிரியர்.

மாணவிகளை எல்லாம் கூப்பிட்டாச்சு, மாணவர்களையும் கூப்பிட்டாச்சு... ஆனால் அந்தப் புதுப் பெண்ணின் பெயர் இன்னும் கூப்பிடப்பட வில்லை? ஒருவழியாக ஆசிரியர்   “அனுராதா!”  என்றார் கடைசியாக!

புதிதாக வந்தவள் செந்தாமரையைப் போன்று அழகாக இருந்தாள்.

அவளின் பெயர், மேலும் அவளுக்கு அழகு சேர்த்தது!

இந்நேரம் நரை தட்டிப் போயிருக்கும்!.... அதெல்லாம் பழைய கதை..... என்னது?  சரி, சரி வடிவதை துடைத்துக் கொள்கிறேன்!

பாடம் ஆரம்பம் ஆனது, முதல் நாள் முதல் வகுப்பு வேகமாகச் சென்றது. வகுப்பு முடியும் முன் ஆசிரியர்  ஜோடிப் புறாக்களிடம் வந்தார்!

வகுப்பாசிரியர் புது மாணிக்கம் சென்ற வருடம் எங்களுடைய நீதிபோதனை ஆசிரியர். எங்களை நன்கு அறிந்தவர் அவர்.

ஜோடிப் புறாக்களா...... யாரது?. நானும் எனது நண்பன் பூனைக்கண்ணனும் தான். எங்கு சென்றாலும் ஒன்றாகவே  செல்வோம் அதைப் பல நேரம் பார்த்து விட்டு இந்தப் பெயரை எங்களுக்கு வைத்திருந்தார் அவர்.

  “என்னடா? எல்லாம் உங்களுக்குப் போட்டியாகதான், புதிதாக இரண்டு பேர் வந்திருக்கிறார்கள்” என்று சொல்லி  விட்டு நகர்ந்து விட்டார்.

ஒருத்தி தானே? வந்திருக்கிறாள்!, இன்னொரு ஆள் யார்? அதோடு என்ன போட்டி? ஒன்றும் புரியாமல் நாங்கள்  நுனிவிரல்களால் தலை மயிரின் அடியை வருடிக்கொண்டு அமர்ந்திருந்தோம்.

அடுத்ததாக கணக்கு வகுப்பு, சுப்பையா வாத்தியார் வந்தார். இவர்
சென்ற ஆண்டு வகுப்பு வாத்தியார், இவர்  எனக்கு வைத்தப் பெயர் பாலசுப்ரமணியன், காரணம் தெரியாது  அப்படிதான் பல
நேரங்களில் அழைப்பார் நானும்பதில் பேசிவிடுவேன்.

ம்.. சரி, நாம் இன்று பொதுவாக பேசுவோம், என்று வகுப்பை ஆரம்பித்தவர் பேசும்போதுதான், நாங்கள் புரிந்துக்  கொண்டோம் அது என்ன போட்டியென்று..

கிராம பள்ளிகளில் எட்டாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களில் பள்ளி
இறுதித் தேர்வில்  ஒன்றியத்திலே முதல் மாணவனாக வருபவருக்கு
ஆயிரம் ரூபாய் பரிசாக ஒன்றியம் வழங்கும் என்றும், அதற்காகத்தான் புதுக்கோட்டை நகரில் இருந்து, தான் வேலை செய்யும் கிராமப்புற மேல்நிலைப் பள்ளிக்கே தன் மகளை எட்டாம் வகுப்பில்  படிக்க கூட்டி
வந்து விட்டார் AHM என்பதும் எங்களுக்குத் தெளிவானது.

அட!,  இதையும் விடமாட்டீர்களா? என்று எங்களுக்குள் பேசிக் கொண்டோம். இருந்தாலும் ஒரு கை பார்ப்போம்  என்றே இருந்தோம். பள்ளி இடைவேளையும் விட்டது. நானும், இளங்கோவும் வேகமாக வெளியில் சென்றோம்,

எட்டாம் வகுப்பில் படிக்கும் செல்வ குமாரை பார்ப்பதற்காக.

அவனும் எங்களைப் பார்க்க வேகமாக ஓடிவந்தான் கூடவே வேறு ஒரு மாணவனும் வந்தான், செல்வகுமாரும்,  எங்களுக்கு அவனை அறிமுகப் படுத்தி வைத்தான்.

அவன் பெயர் சங்கரநாராயணன், திருக்கோகர்ணத்தில் இருந்து வருகிறான் மேலும் நமது பழைய மாணிக்கம் ஆசிரியரின் மகன் என்பதும் தெரிய வந்தது. ஒருவழியாக அனைத்தும் புரிந்தது.

ஒருபுறம் நான், இளங்கோ, செல்வக்குமார் மறு புறம் அனுராதா, சங்கர நாராயணன் கடுமையான போட்டி.

பள்ளி காலாண்டு பரீட்சை முடிந்தது, மதிப் பெண்களை பெற்றோம், வழக்கம் போல் எங்கள் அணி முந்தி  இருந்தாலும் ஆங்கிலத்தில் அவர்களை ஜெயிக்க முடியவில்லை. என் தமிழ் என்னை முன்னுக்கு கொண்டு வந்து இருந்தும், அந்நிய ஆங்கிலம் என்னை அதல பாதாளத்தில் தள்ளி விடுமோ? என்ற பயமும் கூடவே இருந்தது.

அரைப் பரீட்சையிலும் இதே நிலைமையா என்றால்? இல்லை. நல்லவேளை இம்முறை செல்வகுமார் அடித்து  நொறுக்கித் தூள் கிளப்பிவிட்டான். இருந்தும் மற்ற நால்வரும் ஓரிரு மதிப்பெண் வித்தியாசத்திலே இருந்தோம். 

அரைப்பரீட்சை விடுமுறை முடிந்து, பள்ளி துவங்கியது, பாடம் ஒருபக்கம் இருக்க எனக்கு வேறொரு வேலையும்  காத்திருந்தது.

ஆம், பள்ளி இலக்கிய மன்றப் போட்டிகள் தான் அவை. அரைக்கால் சட்டை போட்ட இலக்கிய மன்றச் செயலாளர். தமிழாசிரியர்கள் எல்லோரும் சேர்ந்து எனக்கு தந்த பெருமையாக அதைக் கருதிக் கொண்டு உற்சாகத்துடன் அடியவன் செய்த பணி அது!

மேல்நிலை படிப்பவர்களுக்கு கிடைக்காத அங்கீகாரம் எனக்கு கிடைத்தது. இருந்தும் அதில் எனக்கு பெருமை  தந்ததோ இல்லையோ? என்னை அப்பதவி சிறுமையான செயல்களில் இருந்து காத்திருந்தது என்பது தான்  உண்மை.

ஆம், சிறுவயதிலே வீட்டில் இருக்கும் பிள்ளைகளுக்குச் சில பொறுப்புகளைத் தந்து அவர்களை மேற்பார்வையில் விட்டால் அவர்களின் மேம்பட்ட திறன், பண்பாடு, ஒழுக்கம் உயர்வடையும். இது என் அனுபவம்.

அறிவு என்பது கத்தி. அது அனுபவம் என்னும் உரை கல்லில் உரைபடும் போது இன்னும் கூறாகிறது.

இன்றும், சில வீடுகளில் பார்க்கலாம். வீட்டில் முக்கிய விசயங்களைப் பேசும் போது தம்பி நீ வெளியே போய்  விளையாடு என்பார்கள். நாம் என்ன செய்கிறோம் என்பதையே பார்த்து வளராத பிள்ளை எப்படிப் பொறுப் புள்ளவனாக வருவான்?

“வருமானத்தை சொன்னால் நம்பிக்கை பிறக்கும்
கடன்களைச் சொன்னால் பொறுப்பு பிறக்கும்
சொத்து, பத்துகளை சொன்னால் தைரியம் பிறக்கும்
நம்பிக்கை, பொறுப்பு, தைரியம் இம்மூன்றும் கொண்ட
பிள்ளையின் வாழ்வும் சிறக்கும்.”


அன்றும், இன்றும், செட்டியார் வீடுகளில் இந்த வழக்கம் உண்டு எவ்வளவு பெரிய பணக்காரர் ஆனாலும்,  செட்டியார் மகனை மைத்துனன் கடையிலும், மைத்துனன் மகனைச் செட்டியார் கடையிலும், வேலை பார்க்க வைப்பார்கள். அப்போது தான் அவர்களுக்கு பொறுப்பு வரும் என்று. அதுதான் உண்மையும்கூட!.

சிறுவயதில் பொறுப்புகளைக் கொடுத்துக் கண்காணித்தால் அது சிறுவயதிலே வாழ்வின் சரியான பாதையைக்  காட்டும்.    

மீண்டும் பாதை மாறுகிறேனோ?

தவிர்க்க முடியாமல் கொஞ்சம் சுயபுராணம்....!

பள்ளியில் பிரபலம், ஊரில் இலக்கியக் கூட்டங்களில் பேசி  பிரபலம்,  சிறு வயதிலே சுக்கிரதிசை நடந்தது  எனக்கு. இருந்தும், ஊரறிந்த சிறுவன் நான் என்பதும், என்னை யாரோ கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்ற எனது எண்ணமும், மேடைகளில் பேசும் நான் முதலில் சரியாக நடந்து கொள்ளவேண்டும் என்ற காந்திய எண்ணமும் என்னை இளமைக்கால தவறுகளுக்கு நெருப்பு வேலி போட்டுத் காத்தது எனலாம் .

மற்றவர்கள் நம்மை அங்கீகரிக்க வேண்டும், கெளரவப் படுத்தவேண்டும் என்றதொரு நினைப்பு என்னுள் மேலோங்கியே  இருந்தது!

இலக்கிய மன்றப் போட்டிகள் இனிதே முடிவுற்றது.

பள்ளி இறுதித் தேர்வும் வந்தது! நாங்கள் அனைவரும் நன்றாகவே செய்து இருந்தோம். ஒன்று இரண்டு வாரத்தில்  மதிப்பெண்  விபரங்கள் தெரிய வரும் என்றுக் காத்திருந்தோம்.

மதிப்பெண் பட்டியல் மட்டும் அல்ல! அதோடு பெரிய அதிர்ச்சியும் சேர்ந்தே வந்தது.

கடைசியில் நாங்கள் ஐவரும் வெற்றிப் பட்டியலில் இல்லை, ஜோதி என்றொரு எங்கள் வகுப்பு மாணவி  முதலாவதாக வந்து விட்டாள்.

அவள் முதலாவதாக வந்ததன் ரகசியம் சில நாட்களில், எங்கள் வீதியில் வசிக்கும் எங்கள் வகுப்பு வரலாறு, புவியியல் ஆசிரியரின் மனைவியின் மூலம் தெரிய வந்தது! என் அம்மாவிடம் கூறியிருக்கிறார்கள்.

எனன ரகசியம் அது?

உள்ளூர் பாண்டியன் வாத்தியார் தனது மகளுக்கு மதிப்பெண்களைக் கேட்டு வாங்கிக் கொடுத்து, ஆயிரம் ரூபாயை தட்டிசென்று இருக்கிறார்!

இந்த ஐவரில் ஏழ்மையானவன் நான். என்னைவிட மிகவும் வறுமையானவன் எனது வீதிக்கு பின் வீதியில் இருப்பவனும், எனது நண்பனுமான செல்வகுமார். அவனுக்குத்தான் இந்த பரிசுத்தொகை கிடைத்திருக்க வேண்டும்.

கிடைத்திருந்தால்?  நல்ல சாதம், சாம்பார், ரசம், காய்கறிகள், பாயாசம்
வைத்து நாலு நாளைக்கு அவர்கள் குடும்பமே சாப்பிட்டிருக்கும்.
தலைக்கு  நல்லெண்ணெய் தேய்க்க, ஒரு வழி பிறந்திருக்கும்,
அவனது கிழிந்த  ஆடைகளுக்கு விடுதலை கொடுத்து புதிய ஆடை
அவன் உடம்பில் புதிதாய்ப் பூத்திருக்கும்.  இதற்கெல்லாம் மேலே ஊர்
ஊராய் சென்று பருத்திப் பால் விற்றுவரும் அவனின் அப்பத்தாவிற்கு
ஒரு நாலு  நாளாவது வேலையிலிருந்து  ஓய்வு கிடைத்திருக்கும்.

ம்ம்ம்... என்ன செய்வது, சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்காது என்பார்கள் அதைப் போல.  சில பணப்பிசாசுகளின் ஓரங்க நாடகத்தின் உச்சக்கட்ட அரங்கேற்றம் அது.

இதில், ஒரு வருடம், நகர்புறத்திலிருந்து கிராமத்திற்கு  வந்து படித்தவர்களுக்கு அலைச்சல் தான் மிச்சம். 

ஆனால், ஒன்று இப்படித்தான் வாழவேண்டும் என்று நல்லவர்களிடம் மட்டும் அல்ல, இப்படி வாழக் கூடாது  என்று, சில மாக்களிடமும் நாம் கற்றுக் கொள்ள முடியும்.

சரி இவர்கள் எல்லாம் எங்கு இருக்கிறார்கள்,

அனுராதா தெரியவில்லை....

சங்கர நாராயணனும் நானும் கல்லூரி படிப்பு முடிந்தவுடன் ஒரே கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தோம். ஒரே  தட்டில் சாப்பிடும் அளவிற்கு நெருங்கிய நண்பர்களானோம், அவன் இப்போது சென்னையில் இருக்கிறான்.

ஜோதி (இடைநிலை ஆசிரியை) கணவனின் துரோகத்தால் தற்கொலை செய்து கொண்டாளாம்.

நான், இளங்கோ, செல்வகுமார், மூவரும் இங்கே சிங்கப்பூரில் நல்ல நிலையில் உள்ளோம் என்பது மகிழ்ச்சியான  செய்தி.

உங்கள் பொறுமையை சோதிக்காமல், கடைசியாக ஒன்றே ஒன்றை கூறிக்கொள்கிறேன்....

எனக்கு, ஏதோ கொஞ்சம் எழுத்தும் பேச்சும் வரும்.... ஆனால் செல்வகுமார் எழுதும் கவிதை அவனோடு கை கோர்த்து நிற்கும். ஒரே ஒரு உதாரணம், நாங்கள் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது செல்வகுமார்
வடித்த கவிதையைப் பாருங்கள்..

"கண்டபல பூநாடி காவடைந்த வண்டே - நீ
உண்டபல பூவின் சுண்ணப் பொடியினும்
தாயன்பினும் மேலாகச் சுவைத்தது எதுவோ?"


கவிதை வடிக்க, வீட்டில் சோறு வடிக்க வழியிருக்கக் கூடாது.

கலைவாணி எங்களது வாழ்வில் முழுமையாக வியாபித்து விட்டதால் லக்ஷ்மிக்கு அப்போது இடமில்லாமல்  போய்விட்டது!

லக்ஷ்மி இப்போது அருளிவிட்டாள்  லக்ஷ்மி தனியாக அல்ல அன்னை சக்தியையும் அழைத்து வந்து விட்டாள்.. முப்பெரும் தேவிகளும்
இப்போது எங்களுடன் இருக்கிறார்கள்.

நன்றி!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆக்கம்:
ஆலாசியம் கோவிந்தசாமி,
சிங்கப்பூர்.

 ஆலாசியம் கோவிந்தசாமியின் எழ்ல்மிகு தோற்றம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த ஆக்கத்தைப் படித்தவர்கள், பிடித்திருந்தால், பின்னூட்டத்தில் ஒருவரி அதைப்பற்றிச் சொல்லிவிட்டுச் செல்லுங்கள். உங்களின் பாராட்டுக்கள்தான் எழுதுபவர்களுக்கு ஊக்க மருந்து!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

38 comments:

  1. ஆசிரியருக்கு வணக்கம்,

    நட்சத்திரக் கூட்டங்களுகிடையே
    சிறு மின்மினிப் பூச்சியாய்,
    மின்னல் ஒளியினிடையே
    சிறு விளக்கொளியாய்,
    எனது இந்த எண்ணப்பதிவுகளை.....
    ஆங்காங்கே,
    விட்டென விட்டு,
    சட்டென சொல்ல,
    சங்கடம் தவிர்க்க,
    மெத்தென மொழிய,
    அத்தன மேவிய
    திருத்தங்களை இறுக்கி,
    ஓவியமாக்கி!
    வகையும், தொகையும்
    இல்லாவிடினும்,
    அதனுள் உள்ள சிறு உயர்வை காட்ட
    வலையினுள் ஏற்றி என்னுள்
    வாகையை சூட்டிய பெருந்தகையே
    வணங்குகிறேன்!.

    நன்றி! நன்றி! நன்றிகள் ஐய!

    ReplyDelete
  2. நல்ல எழுத்து நடை. உங்களின் அனுபவம் போல நானும் பார்த்திருக்கின்றேன். வாத்தியார் (ஒரு சிலர் மட்டும்) மகன்/மகள் என்பதற்காக திறமையானவர்களுக்கு கிடைக்கவேண்டியது கிடைக்காமல் போனது. இது போன்ற சம்பவங்கள் சிலருக்கு மனவலிமையை குடுக்கும், சிலருக்கு விரக்தியயை குடுக்கும். எதுவானாலும் வாய்மை வெல்லும்.

    ReplyDelete
  3. அருமை! அருமை! அருமை! ஹாலாஸ்யம் நீர் சரியான இலக்கிய மன்றச் செயலாளர்தான். இன்னும் எழுதுங்கள்.ந‌ம் வகுப்பறை இலக்கிய
    மன்றத்திற்கும் உங்களை செயல‌ராகத் தேர்ந்தெடுக்க முன் மொழிகிறேன்.

    "கவிதை வடிக்க வீட்டில் சோறு வடிக்க வழி இருக்கக் கூடாது" என்றது மனதைத்தொட்டு விட்டது.முப்பெருந்தேவியரும் உங்க‌ளுக்கும் நண்பர்களுக்கும்
    எப்போதும் துணையிருப்பர். வாழ்க! வளர்க!!

    ReplyDelete
  4. வணக்கம் அய்யா.
    என்ன சொல்ல நினைத்தீர்களோ
    அதை எளிய நடையில்
    விளக்கமாக சொல்லியிருக்கிறீர்கள்,
    நமது வாத்தியார் அய்யா போல்.

    நன்றி அய்யா.

    ReplyDelete
  5. ////Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    நட்சத்திரக் கூட்டங்களுகிடையே சிறு மின்மினிப் பூச்சியாய்,
    மின்னல் ஒளியினிடையே சிறு விளக்கொளியாய்,
    எனது இந்த எண்ணப்பதிவுகளை.....
    ஆங்காங்கே, விட்டென விட்டு, சட்டென சொல்ல, சங்கடம் தவிர்க்க,
    மெத்தென மொழிய, அத்தன மேவிய திருத்தங்களை இறுக்கி,
    ஓவியமாக்கி! வகையும், தொகையும் இல்லாவிடினும்,
    அதனுள் உள்ள சிறு உயர்வை காட்ட வலையினுள் ஏற்றி என்னுள்
    வாகையை சூட்டிய பெருந்தகையே வணங்குகிறேன்!.
    நன்றி! நன்றி! நன்றிகள் ஐயா!////

    நல்லது. நன்றி ஆலாசியம். மகிழ்ச்சியில் பெரிய மகிழ்ச்சி - அடுத்தவர்களை மகிழ்வித்துப் பார்ப்பதுதான். எழுத்தில் அது அதிகமாகச் சாத்தியப்படும்!

    ReplyDelete
  6. /////யூர்கன் க்ருகியர் said...
    very nice..completely enjoyed!////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  7. ////sudhakar said...
    நல்ல எழுத்து நடை. உங்களின் அனுபவம் போல நானும் பார்த்திருக்கின்றேன். வாத்தியார் (ஒரு சிலர் மட்டும்) மகன்/மகள் என்பதற்காக திறமையானவர்களுக்கு கிடைக்கவேண்டியது கிடைக்காமல் போனது. இது போன்ற சம்பவங்கள் சிலருக்கு மனவலிமையைக் கொடுக்கும், சிலருக்கு விரக்தியயை குடுக்கும். எதுவானாலும் வாய்மை வெல்லும்./////

    கரெக்ட். என்றும் வாய்மையே வெல்லும்! நன்றி நண்பரே!

    ReplyDelete
  8. //////kmr.krishnan said...
    அருமை! அருமை! அருமை! ஹாலாஸ்யம் நீர் சரியான இலக்கிய மன்றச் செயலாளர்தான். இன்னும் எழுதுங்கள்.ந‌ம் வகுப்பறை இலக்கிய மன்றத்திற்கும் உங்களை செயல‌ராகத் தேர்ந்தெடுக்க முன் மொழிகிறேன்.
    "கவிதை வடிக்க வீட்டில் சோறு வடிக்க வழி இருக்கக் கூடாது" என்றது மனதைத்தொட்டு விட்டது.முப்பெருந்தேவியரும் உங்க‌ளுக்கும் நண்பர்களுக்கும் எப்போதும் துணையிருப்பர். வாழ்க! வளர்க!!///////

    நல்லது. ஆலாசியத்தைச் சிறப்பாகப் பாராட்டியுள்ளீர்கள். நன்றி! வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  9. /////thirunarayanan said...
    வணக்கம் அய்யா.
    என்ன சொல்ல நினைத்தீர்களோ அதை எளிய நடையில் விளக்கமாக சொல்லியிருக்கிறீர்கள்,
    நமது வாத்தியார் அய்யா போல்.
    நன்றி அய்யா.////

    நல்லது. நன்றி திருநாராயணன்!

    ReplyDelete
  10. வாத்தியார் ஐயா
    காலைப்பொழுது வணக்கம்.

    இன்றைய வாரமலரை படிக்கும் பொழுது எமது பள்ளிக்கூட நாட்களின் வகுப்பறைக்கே சென்றுவிட்டேன் ஐயா அலாசியம் அவர்களே!

    அதனிளையும் அந்த இரண்டும் கெட்டான் வயதிக்கே உரித்தானதை

    ( அதன் சுவை என்ன வென்றே தெரியாத ஆனால் ஈர்ப்பு தன்மையை )

    வேருவாக்கில் சொல்லுவது என்றால் எல்லோரின் மனதிலையும்
    இயற்கையிலே உடைய
    கதாநாயகனின் தோற்றத்தை அப்படியே படம் பிடித்து காட்டியமைக்கு மிக்க நன்றி

    { புதிதாக வந்தவள் செந்தாமரையைப் போன்று அழகாக இருந்தாள். அவளின் பெயர், மேலும் அவளுக்கு அழகு சேர்த்தது!
    இந்நேரம் நரை தட்டிப் போயிருக்கும்!.... அதெல்லாம் பழைய கதை..... என்னது? சரி, சரி வடிவதை துடைத்துக் கொள்கிறேன்!}

    தாங்கள் சொல்லிய விதம் மிகவும் அருமை!

    மேலும்,
    பெரியவர்கள் சொல்லுவதை கேள்விபட்டது உண்டு . இதனை நடைமுறையாக அனுபவித்தவனும் என்பதனால் இங்கு கூற விருப்புகின்றேன் ஐயா!

    " சிறுவயதில் பிள்ளைகளிடம் பணபலக்கம் கூடாது ஏன்னெனில் பிள்ளைகளின் கல்வி சிந்தனையை சிதற செய்துவிடும் என்பது"!

    பணம் சம்பாதிக்கும் எண்ணம் வந்து விட்டால் மேற்கொண்டு படிக்கும் எண்ணம் போகிவிடும் என்பதனை இப்பொழுது உள்ள பிரபலங்களை கண்டாலே அனைவருக்கும் உண்மை புரியும்

    { கலைவாணி எங்களது வாழ்வில் முழுமையாக வியாபித்து விட்டதால் லக்ஷ்மிக்கு அப்போது இடமில்லாமல் போய்விட்டது!
    லக்ஷ்மி இப்போது அருளிவிட்டாள் லக்ஷ்மி தனியாக அல்ல அன்னை சக்தியையும் அழைத்து வந்து விட்டாள்.. முப்பெரும் தேவிகளும் இப்போது எங்களுடன் இருக்கிறார்கள்.}

    ReplyDelete
  11. /////kannan said...
    வாத்தியார் ஐயா
    காலைப்பொழுது வணக்கம்.
    இன்றைய வாரமலரை படிக்கும் பொழுது எமது பள்ளிக்கூட நாட்களின் வகுப்பறைக்கே சென்றுவிட்டேன் ஐயா அலாசியம் அவர்களே!
    அத்தனையும் அந்த இரண்டும் கெட்டான் வயதிற்கே உரித்தானவை
    ( அதன் சுவை என்ன வென்றே தெரியாத ஆனால் ஈர்ப்பு தன்மையை )
    வேறுவாக்கில் சொல்லுவது என்றால் எல்லோரின் மனதிலையும் இயற்கையிலே உடைய
    கதாநாயகனின் தோற்றத்தை அப்படியே படம் பிடித்து காட்டியமைக்கு மிக்க நன்றி
    { புதிதாக வந்தவள் செந்தாமரையைப் போன்று அழகாக இருந்தாள். அவளின் பெயர், மேலும் அவளுக்கு அழகு சேர்த்தது! இந்நேரம் நரை தட்டிப் போயிருக்கும்!.... அதெல்லாம் பழைய கதை..... என்னது? சரி, சரி வடிவதை துடைத்துக் கொள்கிறேன்!}
    தாங்கள் சொல்லிய விதம் மிகவும் அருமை!
    மேலும்,
    பெரியவர்கள் சொல்லுவதை கேள்விபட்டது உண்டு . இதனை நடைமுறையாக அனுபவித்தவனும் என்பதனால் இங்கு கூற விருப்புகின்றேன் ஐயா!
    " சிறுவயதில் பிள்ளைகளிடம் பணபலக்கம் கூடாது ஏன்னெனில் பிள்ளைகளின் கல்வி சிந்தனையை சிதற செய்துவிடும் என்பது"!
    பணம் சம்பாதிக்கும் எண்ணம் வந்து விட்டால் மேற்கொண்டு படிக்கும் எண்ணம் போகிவிடும் என்பதனை இப்பொழுது உள்ள பிரபலங்களை கண்டாலே அனைவருக்கும் உண்மை புரியும்
    { கலைவாணி எங்களது வாழ்வில் முழுமையாக வியாபித்து விட்டதால் லக்ஷ்மிக்கு அப்போது இடமில்லாமல் போய்விட்டது! லக்ஷ்மி இப்போது அருளிவிட்டாள் லக்ஷ்மி தனியாக அல்ல அன்னை சக்தியையும் அழைத்து வந்து விட்டாள்.. முப்பெரும் தேவிகளும் இப்போது எங்களுடன் இருக்கிறார்கள்.}///////////

    உங்கள் பாராட்டுக்களில் ஆலாசியத்தை மயக்கிவிட்டீர்கள் கண்ணன்!

    ReplyDelete
  12. GOOD MR. ALASIAM, U HAVE GIVEN SOME VALUABLE POINTS ON THIS ONE STORY. I LIKE UR STORY, AS SOME OF THE POINTS ARE COMPARALE FOR ME WITH MY PERSONAL LIFE

    ReplyDelete
  13. கிராமப்புறங்களில் இருந்து நகரிய வாழ்க்கைக்கு வரும் பலரின் பள்ளிக்கால அனுபவம் கிட்டத்தட்ட இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்..oh ..அது கூட பிறந்த நேரத்தைப் பொறுத்து மாறும்தானே?
    ////////////////உள்ளூர் பாண்டியன் வாத்தியார் தனது மகளுக்கு மதிப்பெண்களைக் கேட்டு வாங்கிக் கொடுத்து, ஆயிரம் ரூபாயை தட்டிசென்று இருக்கிறார்!\\\\\\\\\\\\\\\\\
    இந்த இடத்தில் என் வகுப்பாசிரியர் நினைவுக்கு வருகிறார்..அவர் ஆங்கிலச் சிறப்பாசிரியர்..அவரின் மகன் என்னுடன் படித்தார்..நான் அந்தப்பள்ளிக்கு புதிதாக 9ஆம் வகுப்பிலிருந்து நுழைந்தேன்..அதுவரையில் அந்த நண்பர்தான் அந்த பள்ளியின் 8ஆம் வகுப்பு வரையிலே முதல் மாணவனாக இருந்து வந்தவர்..நான் உள்நுழைந்த காலம் முதலே எல்லா மாதாந்திர ரிவிஷன் டெஸ்ட் தொடங்கி இறுதியாண்டு பரிட்சை வரையிலே நான்தான் முதலிடம்..இரண்டாமிடம்தான் அந்த நண்பர்..
    அந்த வகுப்பாசிரியர் நினைத்திருந்தால் அவர் மகனை முதலிடத்தில் கொண்டு வந்திருக்க முடியுமோ என்னவோ..அவ்விதம் நடக்கவில்லை..நானும் அப்படி ஒருபோதும் நினைத்ததில்லை..இன்று வரை அந்த நண்பனும் அப்படி நினைத்ததில்லை..
    இப்படியாக 9 ,10 ஆம் வகுப்புகளில் நடந்த அத்தனை டெஸ்ட்களிலும் (ஒரு முறை தவிர) நானே முதலிடம் என்ற போதிலும் 10ஆம் வகுப்பின் இறுதித்தேர்வு பொதுத்தேர்வு என்பதால் திருத்தும் இடம் எங்கோ என்பதால் எந்த வகை biasing (சரியான தமிழ் வார்த்தை தெரியவில்லை) இல்லாமல் வரும் ரிசல்ட் என்பதால் மிகுந்த ஆர்வத்துடன் சென்று ரிசல்ட் பார்த்தால் அங்கும் நானேதான் முதலிடம்..இரண்டாமிடம் அந்த நண்பர்தான்..
    தகுதியான மாணவனைக் கண்டறிந்து மதிப்பெண் மூலம் தரவரிசைப் படுத்துவது என்பது அந்தப் பள்ளியின் தரத்துக்கு சான்று..அந்த வகையிலே அந்த ஆசிரியர் என்றும் என் நெஞ்சிலே நீங்காத இடத்தில் அமர்ந்திருக்கிறார்..(இதை எழுதும்போது என் கண்கள் பனிக்கின்றன.)

    ReplyDelete
  14. இந்த வாரமலர் மிகுவும் அருமை அய்யா , அனால் ஒரு சிறு வருத்தம் , கஷ்டங்கள் அனைவருக்கும் சமம் , என்ன தகுதிக்கு ஏற்றப அளவு குறையும் , பணகஷ்டம் என்றால் ௦ ௦0 மட்டும் கூடயும் , குறைந்தும் இருக்கும் . பாவம் அந்த உள்ளூர் பாண்டியன் வாத்தியாருக்கு , வெளியில் சொல்லமுடியாத கஷ்டமோ , என்னவோ ,,, அதற்காக பணபேய் என்பது சற்று வருத்தமாய் இருக்கிறது. உலகத்தில் நிறைய பேர் (நாமும் , சிலநேரங்களில் ) கௌரவ பிசைகாரன்களாய் இருந்து நாட்களை சமாளித்து கடகின்றோம் என்பதை மறுக்க கூடாதல்லவா , அய்யா

    ReplyDelete
  15. வகுப்பறையின் தலைவர் class leaderயை தேர்வு செய்தாச்சு போலிருக்கே . . .

    இது பல் . . கலை . . கழகம் . .
    (பார்த்து கட்சி தொடங்கிட போறாங்க . .)

    ReplyDelete
  16. ஆலாசியம் என்ற பெயர் அவர் கதையில் சொல்லியிருப்பதைப்போலவே நான் கேட்பது இதுவே முதல் முறை.
    நன்கு தன் சுந்தராம்பாளின் நினைவுகளையும் இடையிடையே அலைபாயும் அட்வைஸ் ஆலாசிய மனவோட்டத்தையும் வார்த்தைகளில் வடித்திருக்கிறார்..
    இந்தக் கதையை சற்று உற்று நோக்கையில் எனக்கென்னவோ சுப்பையா வாத்தியாரின் கதைப் பாணி தென்படுகிறது..இதையும் செட்டியார் கதைத்தொகுதியில் சேர்த்துவிடலாமா?
    கதையில் சொன்னபடி மைத்துனன் கடை வியாபாரம் பார்க்கும் செட்டியார் நண்பர்களின் தொந்தி ரொம்பப் பிரபலம்..உட்கார்ந்தே கல்லா கட்டும் கைங்கர்யம்..
    இப்போதோ பல சாப்ட்வேர் தொழில் நண்பர்களும் இதே அவதியில்.. உட்கார்ந்தே கல்லா கட்டும் கைங்கர்யம்..

    ReplyDelete
  17. வணக்கம் அய்யா.
    ஆக்கம் மிகமிக சிரப்பாக இருந்தது.தங்கள் பிளைகலிடம்
    எப்படி பெட்ரோர் எப்படி நடத்தவேணடும் எனக்குபிடித்தமான‌
    கருத்து,எனதுசெயல்பாடும் அதுவே.நன்றிசார்,
    வாழ்க வளமுடன்.
    அரிபாய்.

    ReplyDelete
  18. நல்ல மொழி ஆற்றல், ஆளுமை தெரிகிறது. எனக்கு முன்பெல்லாம் எளிய எழுத்து நடையே தட்டுத் தடுமாறிதான் வரும். இப்போது எப்படி என்று எல்லோரும்தான் பார்க்கிறீர்களே. என்ன ஐயா செய்வது. இது எனக்கு தானாக வரவில்லை. நானாக வரவழைக்க வேண்டியிருந்தது. முயற்சி இருந்தால் எதுவும் வசப்படும்.

    //உள்ளூர் பாண்டியன் வாத்தியார் தனது மகளுக்கு மதிப்பெண்களைக் கேட்டு வாங்கிக் கொடுத்து, ஆயிரம் ரூபாயை தட்டிசென்று இருக்கிறார்//

    இது முடிந்த அவரால் தன் மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் (வாங்கிக்) கொடுக்க முடியவில்லை.

    ReplyDelete
  19. /////Ram said...
    GOOD MR. ALASIAM, U HAVE GIVEN SOME VALUABLE POINTS ON THIS ONE STORY. I LIKE UR STORY, AS SOME OF THE POINTS ARE COMPARABLE FOR ME WITH MY PERSONAL LIFE/////

    நல்லது. நன்றி நண்பரே. Why you are using capital letters in the total text while typing. It is irritating while reading

    ReplyDelete
  20. ////minorwall said...
    கிராமப்புறங்களில் இருந்து நகரிய வாழ்க்கைக்கு வரும் பலரின் பள்ளிக்கால அனுபவம் கிட்டத்தட்ட இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்..oh ..அது கூட பிறந்த நேரத்தைப் பொறுத்து மாறும்தானே?
    ////////////////உள்ளூர் பாண்டியன் வாத்தியார் தனது மகளுக்கு மதிப்பெண்களைக் கேட்டு வாங்கிக் கொடுத்து, ஆயிரம் ரூபாயை தட்டிசென்று இருக்கிறார்!\\\\\\\\\\\\\\\\\
    இந்த இடத்தில் என் வகுப்பாசிரியர் நினைவுக்கு வருகிறார்..அவர் ஆங்கிலச் சிறப்பாசிரியர்..அவரின் மகன் என்னுடன் படித்தார்..நான் அந்தப்பள்ளிக்கு புதிதாக 9ஆம் வகுப்பிலிருந்து நுழைந்தேன்..அதுவரையில் அந்த நண்பர்தான் அந்த பள்ளியின் 8ஆம் வகுப்பு வரையிலே முதல் மாணவனாக இருந்து வந்தவர்..நான் உள்நுழைந்த காலம் முதலே எல்லா மாதாந்திர ரிவிஷன் டெஸ்ட் தொடங்கி இறுதியாண்டு பரிட்சை வரையிலே நான்தான் முதலிடம்..இரண்டாமிடம்தான் அந்த நண்பர்..
    அந்த வகுப்பாசிரியர் நினைத்திருந்தால் அவர் மகனை முதலிடத்தில் கொண்டு வந்திருக்க முடியுமோ என்னவோ..அவ்விதம் நடக்கவில்லை..நானும் அப்படி ஒருபோதும் நினைத்ததில்லை..இன்று வரை அந்த நண்பனும் அப்படி நினைத்ததில்லை..
    இப்படியாக 9 ,10 ஆம் வகுப்புகளில் நடந்த அத்தனை டெஸ்ட்களிலும் (ஒரு முறை தவிர) நானே முதலிடம் என்ற போதிலும் 10ஆம் வகுப்பின் இறுதித்தேர்வு பொதுத்தேர்வு என்பதால் திருத்தும் இடம் எங்கோ என்பதால் எந்த வகை biasing (சரியான தமிழ் வார்த்தை தெரியவில்லை) இல்லாமல் வரும் ரிசல்ட் என்பதால் மிகுந்த ஆர்வத்துடன் சென்று ரிசல்ட் பார்த்தால் அங்கும் நானேதான் முதலிடம்..இரண்டாமிடம் அந்த நண்பர்தான்..
    தகுதியான மாணவனைக் கண்டறிந்து மதிப்பெண் மூலம் தரவரிசைப் படுத்துவது என்பது அந்தப் பள்ளியின் தரத்துக்கு சான்று..அந்த வகையிலே அந்த ஆசிரியர் என்றும் என் நெஞ்சிலே நீங்காத இடத்தில் அமர்ந்திருக்கிறார்..(இதை எழுதும்போது என் கண்கள் பனிக்கின்றன.)///////

    அடடா, இதை விரிவாக எழுதி அனுப்பியிருக்கலாமே மைனர். உங்களின் எழில்மிகு படத்துடன் வாரமலரில் ஏற்றியிருப்பேனே! பரவாயில்லை, உங்கள் மனதைத் தொட்டு இன்று வரை மனதைவிட்டு நீங்காத சம்பவம் ஒன்றை எழுதியனுப்புங்கள் மைனர்

    ReplyDelete
  21. /////profit500 said...
    இந்த வாரமலர் மிகுவும் அருமை அய்யா , அனால் ஒரு சிறு வருத்தம் , கஷ்டங்கள் அனைவருக்கும் சமம் , என்ன தகுதிக்கு ஏற்றப அளவு குறையும் , பணகஷ்டம் என்றால் ௦ ௦0 மட்டும் கூடயும் , குறைந்தும் இருக்கும் . பாவம் அந்த உள்ளூர் பாண்டியன் வாத்தியாருக்கு , வெளியில் சொல்லமுடியாத கஷ்டமோ , என்னவோ ,,, அதற்காக பணபேய் என்பது சற்று வருத்தமாய் இருக்கிறது. உலகத்தில் நிறையப் பேர் (நாமும் , சிலநேரங்களில் ) கௌரவ பிச்சைகாரன்களாய் இருந்து நாட்களை சமாளித்து கடக்கின்றோம் என்பதை மறுக்க கூடாதல்லவா , அய்யா/////

    உண்மைதான்! கதையின் சூழ்நிலையை அழுத்தமாகச் சொல்வதற்காக அவர் அந்தச் சொல்லைப் பயன் படுத்தியிருக்கலாம். Take it easy!

    ReplyDelete
  22. /////iyer said...
    வகுப்பறையின் தலைவர் class leaderயை தேர்வு செய்தாச்சு போலிருக்கே . . .
    இது பல் . . கலை . . கழகம் . .
    (பார்த்து கட்சி தொடங்கிட போறாங்க . .)/////

    தொடங்கட்டுமே சுவாமி! அதில் உங்களுக்கு என்ன ஆதங்கம்? பாரதிராஜாவிடம் பழகிய பாக்கியராஜ் பின்னாளில் பெரிய இயக்குனர் ஆனார். அவரிடம் உதவியாளராக இருந்த பாண்டியன், பார்த்திபன், சங்கர் எல்லாம் பின்னாளில் பெரிய இயக்குனர்கள் ஆனார்கள். அதுதான் பரிணாம வளர்ச்சி! கலைஞருடன் இருந்த வைக்கோ தனிக்கட்சி துவங்கவில்லையா?

    எனது பதிவுகளைப் படிப்பவர்கள் எல்லாம், சொந்த வலைப்பூக்களைத் துவங்கி, ஆக்கங்களை நன்றாக எழுதிப் பதிவிட்டால், முதலில் மகிழ்பவன் நானாகத்தான் இருப்பேன்!

    ReplyDelete
  23. /////minorwall said...
    ஆலாசியம் என்ற பெயர் அவர் கதையில் சொல்லியிருப்பதைப்போலவே நான் கேட்பது இதுவே முதல் முறை. நன்கு தன் சுந்தராம்பாளின் நினைவுகளையும் இடையிடையே அலைபாயும் அட்வைஸ் ஆலாசிய மனவோட்டத்தையும் வார்த்தைகளில் வடித்திருக்கிறார்..
    இந்தக் கதையை சற்று உற்று நோக்கையில் எனக்கென்னவோ சுப்பையா வாத்தியாரின் கதைப்பாணி தென்படுகிறது..இதையும் செட்டியார் கதைத்தொகுதியில் சேர்த்துவிடலாமா?
    கதையில் சொன்னபடி மைத்துனன் கடை வியாபாரம் பார்க்கும் செட்டியார் நண்பர்களின் தொந்தி ரொம்பப் பிரபலம்..உட்கார்ந்தே கல்லா கட்டும் கைங்கர்யம்..
    இப்போதோ பல சாப்ட்வேர் தொழில் நண்பர்களும் இதே அவதியில்.. உட்கார்ந்தே கல்லா கட்டும் கைங்கர்யம்../////

    என்னுடைய ஆக்கங்களைத் தொடர்ந்து படிப்பதால், அந்த பாதிப்பு இருக்கத்தானே செய்யும் மைனர்?

    ReplyDelete
  24. //////aryboy said...
    வணக்கம் அய்யா.
    ஆக்கம் மிகமிகச் சிறப்பாக இருந்தது. தங்கள் பிள்ளைகளைப் பெற்றோர் எப்படி நடத்தவேணடும் என்று சொல்லியுள்ளது எனக்குபிடித்தமான‌ கருத்து,எனது செயல்பாடும் அதுவே. நன்றிசார்,
    வாழ்க வளமுடன்.
    அரிபாய்./////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  25. ///////ananth said...
    நல்ல மொழி ஆற்றல், ஆளுமை தெரிகிறது. எனக்கு முன்பெல்லாம் எளிய எழுத்து நடையே தட்டுத் தடுமாறிதான் வரும். இப்போது எப்படி என்று எல்லோரும்தான் பார்க்கிறீர்களே. என்ன ஐயா செய்வது. இது எனக்கு தானாக வரவில்லை. நானாக வரவழைக்க வேண்டியிருந்தது. முயற்சி இருந்தால் எதுவும் வசப்படும்.
    //உள்ளூர் பாண்டியன் வாத்தியார் தனது மகளுக்கு மதிப்பெண்களைக் கேட்டு வாங்கிக் கொடுத்து, ஆயிரம் ரூபாயை தட்டிசென்று இருக்கிறார்//
    இது முடிந்த அவரால் தன் மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் (வாங்கிக்) கொடுக்க முடியவில்லை. //////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  26. படிக்க ரசனையா இருக்கு:) நிறைய எழுதுங்க:)

    ReplyDelete
  27. ஆக்கம் மிகவும் இனிமை, நன்றிகள் பல‌

    ReplyDelete
  28. /////ரசிகன் said...
    படிக்க ரசனையா இருக்கு:) நிறைய எழுதுங்க:)/////

    எழுதியவரைப் பாராட்டிய மேன்மைக்கு நன்றி!

    ReplyDelete
  29. /////vprasanakumar said...
    ஆக்கம் மிகவும் இனிமை, நன்றிகள் பல‌////

    எழுதியவரைப் பாராட்டிய மேன்மைக்கு நன்றி!

    ReplyDelete
  30. திரு ஆனந்த் அவர்களுக்கு
    தங்களின் மாணவன் வகுப்பறைக்குள்
    நுழைந்ததுமே ரன் டைம் எர்ரர் காட்டுகிறது.
    அப்புறம் இன்டர்நெட் எர்ரர் காட்டுகிறது.
    பேஜ் க்ளோஸ் ஆகிவிடுகிறது.
    தயவுசெய்து இது எதனால் ஏற்படுகிறது
    என விளக்கினால் என்னை போன்ற‌
    கணிணி அறிவு குறைவாக உள்ளவர்களூக்கு
    பயன்படும்.
    நன்றி ஆனந்த்.

    ReplyDelete
  31. நித்தியானந்தம்
    கரையாம்பாளையம்
    பல்லடம்
    ஆககம் மிக அருமை
    வறுமையிலும் திறமைசாலியான செல்வக்குமாருக்கு கிடைக்க வேண்டிய ஆயிரம் ரூபாய் ஜோதிக்குக் கிடைத்திருக்கிறது
    காரணம் தன்னுடைய மாணவனுக்கு வாத்தியார் செய்த துரோகம் இளமையில் வறுமை கொடுமைதான் அந்த வறுமையிலும் படித்து வாங்கிய மதிப்பெண்ணுக்கு மதிப்பில்லை ஊழலுக்கு மதிப்பு இன்றைய நாட்டு நடப்பும் அதுதான்
    அந்த மாணவனுக்கு வாத்தியார் செய்த துரோகத்திற்கு விலைதான் மகளின் வாழ்வில் அவளுடைய கணவனின் துரோகம் தற்கொலை வரை கொண்டுபோய் விட்டுவிட்டது இன்று நீங்கள் அனைவரும் நல்ல நிலையில் ஆனால் ஜோதி?
    அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்றுகொல்லும் இது வாத்தியாருக்கு புரிந்திருக்கும் அவர் வாழ்ந்து முடித்திருப்ப்பார் வாழ்ந்துகொண்டு இருப்பவர்களுக்கு வாழப்போகிறவர்களுக்கு புரிந்தால் சரி

    ReplyDelete
  32. /////thirunarayanan said...
    திரு ஆனந்த் அவர்களுக்கு
    தங்களின் மாணவன் வகுப்பறைக்குள்
    நுழைந்ததுமே ரன் டைம் எர்ரர் காட்டுகிறது.
    அப்புறம் இன்டர்நெட் எர்ரர் காட்டுகிறது.
    பேஜ் க்ளோஸ் ஆகிவிடுகிறது.
    தயவுசெய்து இது எதனால் ஏற்படுகிறது
    என விளக்கினால் என்னை போன்ற‌
    கணிணி அறிவு குறைவாக உள்ளவர்களூக்கு
    பயன்படும்.
    நன்றி ஆனந்த்./////

    இல்லை. நான் சென்று பார்த்தேன். ஒழுங்காகத்தான் இருக்கிறது. நீங்கள் உங்கள் உலாவியைச் சோதனை செய்யுங்கள்

    ReplyDelete
  33. /////nithya said...
    நித்தியானந்தம்
    கரையாம்பாளையம்
    பல்லடம்
    ஆககம் மிக அருமை
    வறுமையிலும் திறமைசாலியான செல்வக்குமாருக்கு கிடைக்க வேண்டிய ஆயிரம் ரூபாய் ஜோதிக்குக் கிடைத்திருக்கிறது. காரணம் தன்னுடைய மாணவனுக்கு வாத்தியார் செய்த துரோகம் இளமையில் வறுமை கொடுமைதான் அந்த வறுமையிலும் படித்து வாங்கிய மதிப்பெண்ணுக்கு மதிப்பில்லை ஊழலுக்கு மதிப்பு இன்றைய நாட்டு நடப்பும் அதுதான்
    அந்த மாணவனுக்கு வாத்தியார் செய்த துரோகத்திற்கு விலைதான் மகளின் வாழ்வில் அவளுடைய கணவனின் துரோகம் தற்கொலை வரை கொண்டுபோய் விட்டுவிட்டது இன்று நீங்கள் அனைவரும் நல்ல நிலையில் ஆனால் ஜோதி?
    அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்றுகொல்லும் இது வாத்தியாருக்கு புரிந்திருக்கும் அவர் வாழ்ந்து முடித்திருப்ப்பார் வாழ்ந்துகொண்டு இருப்பவர்களுக்கு வாழப்போகிறவர்களுக்கு புரிந்தால் சரி//////

    தந்தையின் செயல் மட்டும் ஜோதியின் வாழ்க்கையில் சுனாமி ஏற்படக் காரணமாகக் கொள்ளமுடியாது. அவளுடைய கர்ம வினைப்பயன்களும், ஜாதக அமைப்பும் முக்கியமான பங்கை வகிக்கும்!

    ReplyDelete
  34. ஆலாசியம் அவர்களின்
    மலரும் நினைவுகள் அருமை
    அவர்களின் நட்பு என்னை வியக்க வைத்தது.அருமை
    வாழ்த்துக்கள் ஆலாசியம்!

    ReplyDelete
  35. /////INDIA 2121 said...
    ஆலாசியம் அவர்களின் மலரும் நினைவுகள் அருமை
    அவர்களின் நட்பு என்னை வியக்க வைத்தது.அருமை
    வாழ்த்துக்கள் ஆலாசியம்! //////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  36. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    வாரமலர் -பகுதியில் திரு.ஹாலாஸ்யம் அவர்களின் ஆக்கம்
    சிறப்பாக உள்ளது
    நன்றி
    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    ReplyDelete
  37. ////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    வாரமலர் -பகுதியில் திரு.ஹாலாஸ்யம் அவர்களின் ஆக்கம்
    சிறப்பாக உள்ளது
    நன்றி
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி//////

    உங்களின் பாராட்டுக்களால் அவர் உற்சாகமடைந்து மேலும் பல ஆக்கங்களைத் தருவார்! நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com