மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

9.10.11

Short Story: எது பெரிய தண்டனை?

வார மலர்

இந்த வார வாரமலரை இரண்டு ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. முதலில் உள்ளது நம் வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவர் எழுதியது.
அடுத்து உள்ளது, வாத்தியார் உங்களுக்காக வலையேற்றியுள்ள அவருடைய சிறுகதைகளில் ஒன்று. இரண்டையும் படித்து மகிழுங்கள். உங்கள் கருத்தை மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------------------------------------
ஆக்கம் ஒன்று By KMRK

------------------------------------------------------------------------- 
இன்னும் வரவில்லை அவர்!

இரவு மணி 8:30 இருக்கும்.

சமையல் அறையில் அப்பள‌ம் பொரித்துக் கொண்டு இருந்த நீலா அந்த சத்தத்தைக் கேட்டு திடுக்கிட்டாள். யாரையோ யாரோ கழுத்தைப் பிடித்து அழுத்துவதைப் போல ஒரு அசாதாரண ஒலி! 

அவசரமாக சமையல் அறையை விட்டு வெளியில் வந்து கூடத்தை எட்டிப் பார்த்தாள்.அக்கா, கழுத்தைப் பிடித்துக் கொண்டு 'ஊ ஊ ஊ' என்று பேச முடியாமல் கத்திக் கொண்டு இருந்தாள்.

அக்காவின் சங்கிலியைப் பிடித்து இழுத்தவாறு யாரோ ஒருவன் சோபாவிற்குப் பின்னால் நின்று கொண்டிருந்தான்.அக்கா கழுத்து இறுக்கப்பட்டதால் ஓங்கிக்குரல் கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டு இருந்தாள்.

இத்தனைக்கும் அக்காவின் கணவரும் அக்காவுடனேயே அதே சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.அவருக்கு நடப்பது ஒன்றும் தெரியவில்லை.

காரணம்?

அவருக்கு சுத்தமாகக் காது கேட்காது.காதொலிக் கருவி அணிந்து கொள்வது அவருக்கு கூச்சமாக இருக்கிறதாம். தன்னை மறந்து தொலைக்காட்சி பார்ப்பார்.வாய் அசைவுகளை வைத்து கதையெல்லாம் சரியாகச் சொல்லுவார்.

நீலா சட்டென்று கொதிக்கும் எண்ணையுடன் வாணலியைத் தூக்கிக் கொண்டு கூடத்திற்கு வந்தாள்.

"டேய்! சங்கிலியை விடு. இல்லாவிட்டால் கொதிக்கும் எண்ணயைத் தலையில் கவிழ்த்து விடுவேன்"என்று சத்தம் போட்டாள்.

திருடன் பயந்து போனான்.'வெடுக்'கென்று சங்கிலியை இழுத்துக் கொண்டு தோட்டத்துப் பக்கமாக ஓடினான். கால் பாகம் சங்கிலி அறுந்து அவனிடம் போய்விட்டது. முக்கால் பாகம் அக்கா கையில் தங்கியது.

திருடன் சுவறேறிக் குதித்து இருளில் மறைந்து போனான்.

கணவரை உலுக்கி செய்தியைச் சொன்னாள் அக்கா.

"ஒகோ!அப்படியா?இதோ போய் பார்க்கிறேன். ம்ம்ம். அந்த டார்ச்சை எடு. ஒரு தடியைக்கொடு....." என்று எழுந்தார் குடும்பத் தலைவர்.

"திருடன் இந்த திறந்திருந்த பின் கதவு வழியாகத்தான் வந்து இருக்கணும்.நாம் அவனுக்கு முதுகைக் காண்பித்து உட்கார்ந்து இருந்ததால் நமக்குத் தெரியவில்லை. ஏற்கனவே நீ கனத்த சங்கிலியைப் போட்டு இருப்பதை அறிந்தவனாகத்தான் இருக்கணும்.நம் வீட்டினை எட்டி இருந்து நன்கு நோட்டம் விட்டு, நமது நடைமுறையெல்லாம் அறிந்து கொண்டு திட்டமிட்டுத்தான் வந்து இருக்கிறான்......"

'பெரிய ஷெர்லாக் ஹோம்ஸ்! துப்பறிகிறார் பாரு'அக்கா முணுமுணுத்தாள்.

"அயித்தான்!இப்படி அத்வான காட்டிலே கொண்டு வீட்டைக் கட்டாதீர்கள் என்று
படித்துப் படித்துச் சொன்னேனே.. என் பேச்சைக் கேட்டீர்களா?!"நீலா உரக்கச் சொன்னாள்.

"ஆமாம்!ரொம்ப இருட்டாகத்தான் இருக்கு. மழை வேற வராப்பல இருக்கு"
என்றார் ஷெர்லாக் ஹோம்ஸ்.

"கெட்டுது போ. வாழ்ந்தாப்பல‌தான்..."என்று நொடித்தாள் அக்கா.

அப்போதுதான் புழக்கடையில் நான்குபுறமும் 'டார்ச்' ஒளியை பாய்ச்சினார் ஷெர்லாக். சுற்றுச்சுவர் மூலையில் ஏதோ ஒரு பொருள் கருப்பாக உருண்டையாகக் கிடந்தது.அதன் மீதே ஒளியை நிலையாக நிறுத்தி,

"அதோ பாருங்கள். அது என்னவாக இருக்கும்? உற்றுப்பாருங்கள்."என்றார்.

"என்ன ஏதாவது காய்ந்த பழக்கொட்டையாக இருக்கும்" என்றாள் நீலா!

"எனக்கு ஒன்றுமே தெரியவில்லை" என்றாள் அக்கா!

"எனக்கென்னமோ அது கை எறி குண்டாக இருக்கும் என்று தோன்றுகிறது.அந்தத் திருடன் தான் போட்டு இருக்க வேண்டும்." இது ஷெர்லாக்.

அதற்குமேல் அவர்களை அங்கே நிற்க விடவில்லை நமது துப்பறியும் நிபுணர்.
வீட்டிற்குள் துரத்திவிட்டார். தானும் வந்து வீட்டிற்குள் பதுங்கிக் கொண்டார்.

'என்ன செய்வது காவல்துறைக்கு இப்பவே தெரிவிக்கலாமா காலையில் தெரிவிக்கலாமா' என்றெலாம் தானும் குழம்பிக் கொண்டு, மனைவியையும் மைத்துனியையும் நன்றாகக் கலக்கினார் ஷெர்லாக்.

அப்போது வாசல் கதவை யாரோ தட்டினார்கள்.

'திக்' என்றது ஷெர்லாக்கிற்கு.

இவர் ஒன்றும் சலனம் காட்டாததால் மேலும் ஓங்கித்தட்டி 'சார் சார்' என்று குரலும் கேட்டது.

தயங்கித் தயங்கிக் கதவருகில் சென்றார்.

"சார்! நாங்கள் காவல் துறை! போலிஸ்! கதவைத் திறவுங்கள்."

'அட!இங்கே நடந்தது எல்லாம் எப்படி உடனே போலீசுக்குத் தெரிந்தது?!'

வியப்புடன் கதவைத் திறந்தார் ஷெர்லாக்.

ஒரு அதிகாரியும், இரண்டு காவலர்களும் சீருடையில் வெளியில் நின்று கொண்டிருந்தனர்.

"சார்! இந்தப்பக்கம் யாராவது சந்தேகத்திற்கு இடமாக நடமாடினால் உடனே எங்களுக்குத் தெரியப்படுத்துங்க. வீட்டு முன்னும் பின்னும் இரவு முழுதும் விளக்கு எரிய விடுங்க.கொஞ்சம் திருட்டுப் பசங்க இந்தப் பக்கம் நடமாடுவதா எங்களுக்குத் தகவல். உங்க வீடு வேற தனியா நிக்குதா, நீங்க ரொம்ப உஷாரா இருக்கணும் சார்!" என்றனர்.

"ஆமாம்! உஷா கூட ஊருக்குப் போயிருக்கா" என்றார்  ஷெர்லாக்.

நீலாவுக்குப் பொறுக்கவில்லை. முன்னால் வந்து நின்று நடந்ததையெல்லாம்
விலாவாரியாகச் சொன்னாள்.

"பாத்தீங்களா! அந்தப் பய இந்தப்பக்கம் வரதைப் பார்த்து எங்க‌ளுக்கு தகவல் வந்ததால்தான் வந்தோம்.சரி காலையிலே ஒரு புகார் எழுதிக் கொடுங்க."

நடப்பதை ஒருவாறு புரிந்து கொண்ட ஷெர்லாக், மிகவும் கீழ்க் குரலில்
'இங்கன வாங்க சார்'என்று பதுங்கிப் பதுங்கி அழைத்துச் சென்று "குண்டை"க் காண்பித்தார்.

"அது குண்டு மாதிரி இல்லையே" என்றார் அதிகாரி.

"இல்ல சார் அது குண்டுதான் சார்" என்றார் ஷெலாக்.

"சரி எதுக்கு ரிஸ்க்?! யோவ் 321! நாளைக்குக் காலையில் பாம் ஸ்குவாடைக் கூட்டி வந்து பாத்துடு! சரி சார்! குண்டு கிட்ட போகாதீங்க. இந்த ஒரு ராத்திரி ஜாக்கிரதையாக இருங்க" அதிகாரி மிடுக்காக வெளியேறிவிட்டார்.

321 தயங்கி நின்றார். ஷெர்லாக்கின் முகத்தை மாற்றி மாற்றிப் பார்த்தார்.

"அது ஒண்ணும் இல்லை சார்,ஸ்குவாடுக்கு வேன் வைக்கணும் காலைல டிபன் வாங்கித் தரணும். செலவுக்கு......!"

ஒரு வழியாகப் புரிந்து கொண்ட ஷெர்லாக் ரூ 500/‍= கொடுத்தார்.

"பத்தாது சார் இன்னொரு 500/=கொடுங்க" என்றது  321!

கொடுத்தார் ஷெர்லாக்.

சொன்ன சொல் தவறாமல் காலையில் ஒரு 7,8 பேர்கள் ஒரு வாடகை வேனில் வந்து இறங்கினார்கள். வீட்டை விட்டு வெளியேறித் தள்ளிப் போய்விடும்படி ஷெர்லாக்கையும் குடும்பத்தாரையும் அனுப்பி வைத்தார்கள்.

சிறிது நேரத்தில் திரும்ப அழைத்தார்கள்.

"குண்டுதான் சார். நல்ல வேளை வெடிக்கலை. நாங்க அதை செயலிழக்கச்செய்து விட்டோம்.தப்பித்தீர்கள்!"

321 இன்னும் கொஞ்ச‌ம் செலவுக்கு என்று கேட்டு வாங்கிக் கொண்டார்.

காவல் நிலைய‌த்துக்குப் போய் ஒரு புகார் எழுதிக்கொடுத்தார் ஷெர்லாக்.

ஒரு வாரம் சென்று 321 வந்தார்.

"சார் சங்கிலித்திருடன் இருக்கிற இடம் தெரிந்து விட்டது எப்படியும் பிடித்து விடுவோம். அவனைப் பிடித்தால், அவங்கிட்ட இருக்கிற உங்க மனைவியின் அறுந்த சங்கிலியோடு ஒத்துப் பார்க்க ஒரு துண்டு சங்கிலி கொடுங்க சார்!"
என்றார்.

நீலா இப்போது தலையிட்டாள். "ஏன் கான்ஸ்டேபிள் சார்! திருடனைப் பிடித்த பிற‌கு துண்டுச் சங்கிலி அவனிடம் இருக்குமா என்பதே சந்தேகம். அதற்கு எதற்கு இப்பவே சங்கிலி மாதிரி கேட்கிறீர்கள்? முதலில் திருடன் கிடைக்கட்டும். சங்கிலி அவன் வசம் இருக்கிறதா என்று பார்ப்போம்.இருந்தால் எங்கள் சங்கிலியைக் கொண்டு ஒப்பு நோக்குவோம்...."

"சரி இந்தப்பெண்ணுக்கு என் மேல நம்பிக்கை இல்லை போல ... சரிசார் ... உங்களுக்காக 'பாம் ரிஸ்க்' எல்லாம் எடுத்து உள்ளோம்.....சரி விடுங்க.வரேன்..." கோவமாகக்கிளம்பினார் 321!

ஷெர்லாக் அவரை சமாதனப் படுத்தி கைவசம் இருந்த அறுந்த சங்கிலியில் 2 கிராம் அளவு குறட்டை வைத்து வெட்டி எடுத்துக் கொடுத்தார்.

"ஓகே சார்! திருடன் கிடைத்த உடன் வந்து கூப்பிடறேன். அதுவரைக்கும் ஸ்டேஷன் பக்கமே வராதீங்க."

கடந்த 20 வருடங்களாக 321 வந்து கூப்பிடுவார் என்று ஷெர்லாக் வாசலைப்பார்த்துக் கொண்டு அமர்ந்து இருக்கிறார்.

என்றாவது ஒரு நாள் 321 வருவார்.

நம்பிக்கைதானே சார் உலகம்?

(இது ஓர் உண்மைச் சம்பவம். மிகைப்படுத்தல் இல்லாமல் சொல்லியுள்ளேன்.
சிறிது கூட கற்பனை,புனைவு கிடையாது.)

வாழ்க வளமுடன்!
ஆக்கியோன்:கே.முத்துராம கிருஷ்ணன்(லால்குடி)
--------------------------------------------------------------------------------------------------- 

ஆக்கம் 2  By வாத்தியார்

----------------------------------------------------------------------------------
 Short Story: எது பெரிய தண்டனை? 

சாயப்பட்டறையின் ஸ்டாக் அறைக்குள், சாப்பிட்டு முடித்த பாத்திரங்களையும், கைகளையும் கழுவிக் கொண்டு திரும்பிய மேஸ்திரி சாமிக் கண்ணு, அங்கே தன் முதலாளி பழநியப்ப செட்டியார் உட்கார்ந்திருந்ததைப் பார்த்தவுடன் திடுக்கிட்டுப் போனான்.

சுட்டெரிக்கும் வெய்யில். ஈரோடு நகருக்கே உரிய மனிதனை வறுத்தெடுக்கும் ஈரப்பதம் குறைவானகாற்று. மணி மதியம் இரண்டிருக்கும். இந்த நேரம் அவர் தன் வீட்டில் ஏஸி அறையில் கோழித்தூக்கம் போடும் நேரம். நான்கு மணிக்கு எழுந்து, கால் முகம் கழுவி, இடைப் பலகாரம் சாப்பிட்டுவிட்டு, ஐந்து மணிக்குத்தான் அவர் வருவது பழக்கம். வந்தால் இரவு ஒன்பது மணி வரைக்கும் இருப்பார்.

முழுநேரமும் பட்டறையின் முன் பக்கக் கட்டிடத்திலுள்ள தன் அறையில்தான் இருப்பார். இங்கே ஸ்டாக் அறைக்கெல்லாம் எப்போதாவதுதான் வருவார்.

இன்று இந்த நேரத்தில் வந்திருப்பதன் நோக்கம் புரியாமல் விழித்த சாமிக்கண்ணு, வார்த்தைகளைப் பாதி மென்றவாறு மெல்லிய குரலில் கேட்டான்.

“என்ன முதலாளி திடீரென்று வந்திருக்கிறீர்கள்? ஏதாவது அவசர வேலையா?”

“இல்லை சாமிக்கண்ணு!”

“பொல்யூஷன் கண்ட்ரோல் (Pollution Control) ஆட்கள் வரப்போவதாகத் தகவல் வந்ததா முதலாளி?

“சென்ற மாதம்தானே வந்து, எல்லாம் சரியாக இருக்கிறது என்று சர்ட்டிஃபிகேட் கொடுத்துவிட்டுப் போனார்கள். மாதா மாதம் வருவதற்கு அவர்களுக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது?”

அவர் குரலில் கோபம் தெரிந்தது. சாமிக்கண்ணு அரண்டு போனான். ஒன்றும் பேசாமல் மெளனமாக நின்றான். செட்டியார் தொடர்ந்தார்.

“உட்காரு.” என்று அவர் அழுத்தமாக, கோபமாகச் சொல்ல, எதிரில் இருந்த ஸ்டுலின் விளிம்பில் அமர்ந்தான்.

“நிசமாகச் சொல்லு, எதுக்கு நான் வந்திருப்பேன்னு உனக்குத் தெரியாதா?”

“தெரியாது முதலாளி.”

பழநியப்ப செட்டியார் சற்று நேரம் அவனை நிதானமாக உற்றுப் பார்த்தார்.

“பூவாத்தாள் என்ற பெண்னைத் தெரியுமா உனக்கு?”

அவன் முகம் பேயறைந்ததைப் போல ஆகிவிட்டது.

“எனக்குத் தெரியாது முதலாளி”

தன் சட்டைப் பையில் இருந்து ஒரு சீட்டை எடுத்துப் படித்தார்.

“பூவாத்தாள், அய்யனார் குடியிருப்பு, பூசாரி சென்னிமலை சந்து, சூரம்பட்டி நான்காவது சாலை, ஈரோடு 638 009 ”

“எனக்கு எந்தப் பெண்னையும் தெரியாது முதலாளி”

“பொய் சொல்லாதே! எனக்குப் பொய் சொல்றவங்களைச் சுத்தமாப் பிடிக்காதென்று உனக்குத் தெரியாதா சாமிக்கண்ணு?”

“இல்லை முதலாளி, தெரிஞ்சிருந்தா எதுக்குப் பொய் சொல்லப் போறேன்?”

“ஆனால், அவள் உன்னை நன்றாகத் தெரியும் என்கிறாள். அதற்கு என்ன சொல்கிறாய்?”

“அவள் அடையாளம் தவறி என்னைச் சொல்கிறாள் என்று நினைக்கிறேன் முதலாளி. நேரில் பார்த்தால் அவள் எனக்குத் தெரிந்தவளா அல்லது தெரியாதவளா என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும்.”

பழநியப்ப செட்டியார் அடுத்த குண்டைப் போட்டார்.

“நீ இப்போது அவளை நேரில் பார்க்க முடியாது. அவள் போலீஸ் கஸ்டடியில் இருக்கிறாள்”

செட்டியாரின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் சாமிக்கண்ணு நிலை குலைந்து போய் விட்டான். மின்னல் தாக்கியதைப் போல இருந்தது. செட்டியாரின் செல்வாக்கெல்லாம் அவனுக்குத் தெரியும். இனிமேலும் பொய் சொன்னால் விவகாரம் பெரிதாகி விடுமென்று, மெதுவாக உண்மையை ஒப்புக் கொண்டான்.

“தெரியும் முதலாளி! பயத்தில் பொய் சொல்லி விட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள்!”

“எப்படித் தெரியும்? எத்தனை நாட்களாகத் தெரியும்?”

“அவள் முன்பு நமது பட்டறையில் வேலை பார்த்தவள். அப்போதிருந்து தெரியும்”

“அவளுக்கு என்ன வயது?”

“இருபத்தைந்து வயது.”

“உனக்கு என்ன வயது?”

“இந்தச் சித்திரையோடு நாற்பத்தைந்து முடிகிறது முதலாளி”

“நாற்பத்தைந்து வயசு ஆசாமிக்கு, இருபத்தைந்து வயசுப் பெண்ணின் தொடுப்பு எதற்காக? நாசமாகப் போவதற்கா? சரி, அதை எதற்காகப் பேச வேண்டும்? அது உன் சொந்த விவகாரம். பட்டறைக்கு வெளியே நீ செய்யும் பாதகச்செயல்! அதில் உன் குடும்பம் வேண்டுமென்றால் பாதிக்கப் படலாம். எனக்கு என்ன வந்தது? தொடுப்பு சங்கதியை விட்டு விடுவோம். நீ அவளுக்கு மாதா மாதம் எவ்வளவு பணம் கொடுக்கிறாய்? அதற்கு ஏது பணம்? மறைக்காமல் அதை மட்டும் சொல்!”

“மாதம் முவாயிரம் ரூபாய் கொடுக்கிறேன் முதலாளி.”

“மீண்டும் பொய் சொல்கிறாய். உன் வீட்டிற்குப் போய் விசாரித்து விட்டுத்தான் வருகிறேன். உன் சம்பளப்பணம் மொத்தமும் - அதாவது பதினைந்தாயிரம் ரூபாயும் அப்படியே உன் மனைவியின் கைக்குப் போய்க் கொண்டிருக்கிறது. அதில் நீ ஒரு பைசாவைக்கூட எடுப்பதில்லை! இந்த மூவாயிரம் எங்கிருந்து வருகிறது?”

“நீங்கள் தினப்படியாகக் கொடுக்கும் நூறு ரூபாயைத்தான் சேர்த்துவைத்து அவளுக்குக் கொடுக்கிறேன் முதலாளி!”

“எத்தனை மாதங்களாகக் கொடுத்து வருகிறாய்?”

“ஆறு மாதமாகத்தான் பழக்கம். அவளைக் கை கழுவி விடுகிறேன். பெரிய மனசு பண்ணி என்னை மன்னித்து விடுங்கள் முதலாளி.”

செட்டியார் சட்டைப் பையிலிருந்து வேறு ஒரு சீட்டை எடுத்தார்.

“என்னிடம் கணக்கு இருக்கிறது. அவளுடன் உனக்கு இரண்டாண்டுகளாகத் தொடர்பு. மாதம்  பத்திலிருந்து, பன்னிரெண்டாயிரம்வரை கொடுத்து வந்திருக்கிறாய். இதுவரை கொடுத்தது உத்தேசமாக மூன்று லட்ச ரூபாய்.”

“இல்லைவே இல்லை முதலாளி, இந்தக் கணக்கை யார் சொன்னது? அந்தச் சண்டாளி சொன்னாளா?”

“சண்டாளத்தனம் பண்ணியதெல்லாம் நீ! அவளை எதுக்காகச் சண்டாளி என்கிறாய்?”

சாமிக்கண்ணு வாய் மூடி மெளனியாக இருந்தான். உடம்பு படபடத்தது. அவனால் ஒன்றும் பேச முடியவில்லை.

செட்டியார் தொடர்ந்தார்.

”ஒரு பெண் தன் பங்கைக் குறைத்துச் சொன்னாலும் சொல்வாளே தவிர, கூட்டிச் சொல்ல மாட்டாள். தொகையில் தப்பு இல்லை. இப்போது கேள்வி ஒன்றுதான் பாக்கியுள்ளது. இந்தப் பணம் ஏது உனக்கு?”

”அந்த ராட்சசி பொய் சொல்கிறாள். அவ்வளவு பணம் என்னிடம் ஏது முதலாளி?”

“என்னையே திருப்பிக் கேட்கிறாயா? அதுதான் நான் கேட்கும் கேள்வி! எப்படிக் கிடைத்தது அந்தப் பணம்?”

“இல்லை முதலாளி திண்டல்மலை முருகன் சத்தியமா அவ்வளவு பணம் நான் கொடுக்கவில்லை முதலாளி!”

“ஆகா, ஒன்றை மறைக்க ஒன்பது பொய் சொல்கிறாய். அதோடு உனக்குப் பொய் சாட்சி சொல்ல முருகப்பெருமானை வேறு கூப்பிடுகிறாயா? சரி, வேறு வழியில்லை. இப்படிக் கேட்டால் நீ ஒழுங்காகப் பதில் சொல்ல மாட்டாய். இரு, கூப்பிட வேண்டியவர்களைக் கூப்பிடுகிறேன்” என்று சொல்லியவாறு செட்டியார் தன் சட்டைப் பையிலிருந்த செல்போனை எடுக்கவும், அரண்டு போய், பயத்தின் எல்லைக்கே போய் விட்டான் சாமிக்கண்ணு.

“முதலாளி, என்னைக் காப்பாத்துங்க! ஒன்னும் பண்ணிடாதீங்க!” என்று கத்திக் கதறியவாறு நெடுஞ்சான் கிடையாக அவர் காலில் விழுந்தான். கதறியழுதான்.

அந்த சத்தத்தில், ஸ்டாக் அறை என்று சொல்லப்படும் அந்தப் பெரிய அறையின் வாசலில் கூட்டம் கூடி விட்டது. பட்டறையின் பின் பகுதியில் உள்ள ஷெட்டில் அமர்ந்து, தங்கள் மதிய உணவை முடித்துக் கொண்டு பணிக்குத் திரும்பி யிருந்த தொழிலாளிகள்தான் அவர்கள்.

“முதலில் எழுந்திரு!” என்று அவர் கனத்த குரலில் சொல்ல எழுந்து நின்றான்.

வாசலில் நின்றிருந்தவர்களில் வயதில் மூத்தவரும், பட்டறையின் ஆரம்ப காலத்திலிருந்து வேலை பார்த்து வருபவருமான நல்லப்பனை மட்டும் உள்ளே வரச் சொல்லி விட்டு, மற்றவர்களைச் சைகை மூலம் தள்ளியிருக்கச் சொன்னார்.

“சரி, ஒன்றும் செய்யமாட்டேன். பயப்படாதே! அனால் உண்மை அத்தனையும் வெளியே வரவேண்டும். என்ன செய்தாய் சொல்.”

நடுங்கும் குரலில் அவன் சொன்னான். “சாயப் பவுடரை திருடிக்கொண்டு போனேன். தினமும் ஒரு கிலோ அளவு”

“அதாவது தினமும் அறுநூறு மதிப்புள்ள சாயத்தைக் கொண்டு போனாய், இல்லையா?”

“ஆமாம். சாப்பிடக் கொண்டு வரும் டிஃபன் கேரியரில் கொட்டிக் கொண்டு போனேன்.”

”அதனால்தான் வெளியே நின்று கொண்டிருக்கும் வாட்ச்மேன்களுக்குத் தெரியாமல் போய் விட்டது. என்ன விலைக்கு விற்றாய்?”

“பாதி விலைக்கு விற்றேன்.”

“அதுவும் நீ கொண்டு போய் விற்கவில்லை. திருட்டு சாயம் வாங்கும் கடைக்கு உன்னைத் தெரிந்து விடும் என்பதால் உன் தொடுப்புக்காரி மூலமாகவே விற்றாய் இல்லையா?”

“ஆமாம் முதலாளி”

”உன்னை நான் எவ்வளவு நம்பிக்கையோடு வைத்திருக்கிறேன். எனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்ய உனக்கு எப்படி மனசு வந்தது?”

“வேணும்னு செய்யல முதலாளி. சூழ்நிலை அப்படி ஆயிட்டுது! எல்லாத்துக்கும் காரணம் அந்தக் கெட்ட சகவாசம்தான். அதை இன்னியோட விட்டுடறேன் முதலாளி”

“சரி, வேறு எதைத் திருடிக் கொண்டு போனாய் சொல்! அந்தச் சாயப்பவுடர் கடைக்காரனும் இப்போது போலீஸ் கஸ்டடியில் தான் இருக்கிறான். உண்மையைச் சொல்”

“வேறு எதையும் கொண்டு போகவில்லை முதலாளி! என்னைப் போலீஸில் பிடித்துக் கொடுத்து விடாதீர்கள் முதலாளி. நான் குடும்பஸ்தன். உங்கள் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்'

”எப்படிக் கொடுப்பாய்?”

“என் பெண்டாட்டி கழுத்திலும் கைகளிலும் போட்டிருக்கும் நகைகள் இருபத்தைந்து பவுன்கள் இருக்கும் அதைக் கொண்டு வந்து கொடுத்து விடுகிறேன். என்னைக் காப்பாற்றுங்கள் முதலாளி”

“அவளுடைய நகைகள் உனக்கு எப்படிச் சொந்தமாகும்? அது அவளுடைய தாய் வீட்டுச் சீதனமல்லவா? அதில் உனக்கு என்ன உரிமை இருக்கிறது?”

இதுவரை மறைவாக வெளியே நின்று எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த சாமிக்கண்ணுவின் மனைவி சரோஜா, அதிரடியாக உள்ளே நுழைந்தவள், செட்டியாரின் காலில் விழுந்து, குரல் கொடுத்து அழ ஆரம்பித்தாள்.

அவளுடைய மகனும், மகளும் வெளிறிய முகத்துடன் உள்ளே வந்து நின்றார்கள். மகளுக்குப் பதினேழு வயது இருக்கும். மகனுக்குப் பத்தொன்பது வயது இருக்கும். பையன் உணர்வைக் காட்டிகொள்ளாமல் அதே நேரத்தில் கலக்கத்துடன் நின்றான். பெண் மட்டும் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள்.

அவர்கள் மூவரையும் அங்கே பார்த்த சாமிக்கண்ணு சொல்ல முடியாத அதிர்ச்சிக்கு ஆளாகினான்.

செட்டியார்தான் இறுக்கத்தைப் போக்கும் விதமாகப் பேசத் துவங்கினார்.

“எழுந்திரம்மா! உங்களை யாரம்மா இங்கே வரச்சொன்னது?”

“இல்லை அய்யா! வராத மனிதர் நீங்கள், வீடு வரை வந்து விசாரித்து விட்டுத் திரும்பியதும், நான் பொறி கலங்கிப் போனேன். ஏதோ தப்புத் தண்டா நடந்திருக்கு. என்னாகுமோன்னு பயந்துபோய் பின்னாடியே ஓடியாந்தேன். பிள்ளைகளும் தனியாகப் போகாதேன்னு சொல்லிக் கூடவே வந்திரிச்சுங்க. இவருடைய நடவடிக்கையில் எனக்கு ஒரு வருடமாகவே சந்தேகம். ஆனா பாவிமகஎன்னால ஒன்னும் கண்டுபிடிக்க முடியலை! இப்ப நீங்க வகையா பிடிச்சிட்டீங்க! எனக்குத் துரோகம் பண்ணினது கூடப் பரவாயில்லை. ஆனா உங்களுக்குத் துரோகம் பண்ணினதை மன்னிக்கவே கூடாது அய்யா! அந்தச் சிறுக்கியோட சேர்த்து இவரையும் உள்ளே போடுங்க.அதுக்காக நாங்க யாரும் வருத்தப் பட மாட்டோம்!”

“உள்ள போடுறதுக்கு ஒரு நிமிடம் ஆகாதும்மா! இரண்டு பிள்ளைகளை வைத்துக் கொண்டு நீ ஜீவனத்து என்னம்மா செய்வாய்?”

“இந்த ஊர்ல கிடைக்காத வேலையா? எங்கயாவது கூலி வேலை பார்த்து என் இரண்டு பிள்ளைகளையும் நான் ஆளாக்கியிருவேன். அதுக படிக்கிறதுக்கு மட்டும் எப்போதும் போல நீங்க பண உதவி செய்ங்க அது போதும் எனக்கு!”

அவள் இப்படிப் பேசியதும் செட்டியார் அசந்து விட்டார். என்ன தெளிவான சிந்தனை இந்தப் பெண்ணிற்கு!

செட்டியார் தீர்க்கமாகச் சொல்ல ஆரம்பித்தார்.

“சாமிக்கண்ணு! எதை வேண்டுமென்றாலும் மன்னிக்கலாம்.ஆனால் துரோகத்தை மட்டும் மன்னிக்கக் கூடாது. உன் மனைவி பிள்ளைகளுக்காக உன்னைச் சும்மா விடுகிறேன். நீ போகலாம். ஆனால் உனக்கு இந்த நிமிடம் முதல் இங்கே வேலையில்லை. எங்காவது சென்று பிழைத்துக்
கொள். ஆனால் அங்கே ஒழுங்காக இரு!”

இதைச் சொல்லியவுடன், செட்டியார் தன் இருக்கையை விட்டு எழுந்தார்.

சாமிக்கண்னு அவரைச் சாஷ்டாங்கமாக விழுந்து மீண்டும் ஒருமுறை வணங்கியவன், அங்கே மேலும் நிற்க வெட்கப்பட்டு, வேதனைப்பட்டு, விறுவிறுவென்று நடந்து வெளியேறி விட்டான். செட்டியாரை வணங்கிவிட்டு அவன் மனைவி, தன் பிள்ளைகளுடன் வெளியேறினாள்.

வெளியே நின்றிருந்த தொழிலாளர்களில் நான்கைந்து பேர்கள் உள்ளே வந்து நிற்க, மூத்த தொழிலாளி நல்லப்பன் பேசினார்.

“எசமான், அவனை நீங்க விட்டது தப்பு! போலீஸில் ஒப்படைத்திருக்க வேண்டும்!”

“இத்தனை ஆண்டுகளாக என்னிடம் வேலை பார்த்தவனைப் போலீஸில் பிடித்துக் கொடுக்க மனம் வரவில்லை. அதனால்தான் தொலைந்து போகட்டும் என்று விட்டேன்.”

“அவன் திருடிக் கொண்டு போனது உங்களுக்கு நஷ்டம் என்று பட வில்லையா? அந்த நஷ்டம் நஷ்டம்தானே!”

“நான் லாபத்தையும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. நஷ்டத்தையும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அவற்றை பெரிதாக எடுத்துக் கொண்டால் மனிதநேயம் இல்லாமல் போய் விடும். மனிதநேயத்தை விடப் பெரிய லாபம் என்ன இருக்கிறது சொல் நல்லப்பா?”

“நீங்க சொல்றதெல்லாம் பெரிய விஷயங்க. எங்க அறிவிற்கு அதெல்லாம் பிடிபடாது. ஆனாலும் ஒன்னு சொல்றேன் எசமான். இவ்வளவு கஷ்டப்பட்டுக் கையும் களவுமா அவனைப் பிடித்த நீங்கள், அவனைத் தண்டிக்காமல் விட்டது தப்பு!”

செட்டியார் புன்னகைத்தார்.

“தண்டிக்காமல் விட்டேனா? தண்டித்துத்தான் அனுப்பியிருக்கிறேன் நல்லப்பா!”

இந்த இடத்தில் அறையில் இருந்த அனைவரும் ஒருசேர வியப்புடன் கேட்டார்கள்.

“தண்டித்து அனுப்பியிருக்கிறீர்களா? எப்படிச் சொல்கிறீர்கள் முதலாளி?”

“இங்கே நடந்ததையெல்லாம் அவனுடைய மனைவியும், பிள்ளைகளும் பார்த்துவிட்டுப் போயிருக்கிறார்கள் இல்லையா? இனிமேல் அவர்களிடம் என்ன மதிப்பு இருக்கப் போகிறது அவனுக்கு? அதைவிடப் பெரிய தண்டனை ஒரு மனிதனுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள்?”

அனைவரும் அதிர்ந்து போய் நின்றார்கள்.

செட்டியார் எழுந்தவர் போய் விட்டார்.

சற்று நேரத்தில் அவருடைய கார் புறப்பட்டுச் செல்லும் ஓசை கேட்டபின்தான் அவர்களுடைய மெளனம் கலைந்தது!

- மூன்று ஆண்டுகட்கு முன்பு அடியவன் எழுதி ஒரு மாத இதழில் வெளிவந்த சிறுகதை இது. நீங்கள் அனைவரும் படித்து மகிழ அதை இன்று வலை ஏற்றியுள்ளேன்!
    ***************************************************************************

வாழ்க வளமுடன்!

26 comments:

  1. என் ஆக்கத்தை வெளியிட்டமைக்கு நன்றி ஐயா.என்னுடையதை இர‌ண்டாவதாக வெளியிட்டு இருக்கலாம்.என்னுடையதை முன்னால் வெளியிட்டது உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது.

    'டிபன் பாக்'ஸில் பொருள் கடத்தும் அந்த 'டெக்னிக்'கிற்கும், நான் எழுதியுள்ள சம்பவத்திற்கும் ஒரு தொடர்பு உள்ளது. அதனை நான் சொன்னால் தஞ்சாவூரில் பலரும் நான் யாரைப்பற்றி எழுதியுள்ளேன் என்று சட்டென்று புரிந்து கொள்வார்கள்.

    ஆம்! இது போன்ற தவறு செய்பவர்களுக்கு வீட்டில் ஏற்படும் அவமானம் பெரிய தண்டனைதான்.

    தேர்ந்த கதை சொல்லி தாங்கள் என்பதற்கு இந்த ஆக்கம் நல்லதோர் எடுத்துக்காட்டு.நன்றி ஐயா!

    ReplyDelete
  2. /////
    நம்பிக்கைதானே சார் உலகம்?//////

    'நம்பிக்கைதானே சார் இந்தியா?'ன்னு எழுதுறது நல்லா இருக்கும்..

    உலகம் எங்குமே இதே நிலை இல்லையே..

    நல்லா எழுதியிருக்கீங்கோ..KMRK சார்..

    இப்படிக் காமெடி கதாநாயகர்கள் ஆங்காங்கே இருக்கவே செய்கிறார்கள்..

    ReplyDelete
  3. செட்டியார் கதை கலக்கல்..

    நல்லப்பனோடு அங்கேயிருந்து பட்டறையிலே செட்டியார் குறுக்கு விசாரணையைப் நேரிலே பார்த்தது போல ஒரு உணர்வு..

    செட்டியார் கொஞ்சம் கொஞ்சமாக தொடுப்பு மேட்டரிலிருந்து தாவி பண மேட்டருக்கு வந்த பொது எங்கள் பகுதிச் செட்டியார்களுக்கு என்று பணவிஷயத்தில் உஷார்,கறார் என்ற வகையில் 'சோழியன் குடுமி சும்மா ஆடுமா?' என்று நினைத்துப் படித்தேன்..

    வழக்கம்போல கடைசியில் சில நகாசு வேலையெல்லாம் பண்ணி செட்டியாரை ஹீரோ ரேஞ்சிலேருந்து தூக்கி

    தெய்வத்திண்ட தெய்வமா ஆக்கிட்டீங்க..

    'கதை,வசனம்,டிரெக்ஷன்' ன்னு எல்லாமே அசத்தல் சார்..

    ReplyDelete
  4. //////Blogger kmr.krishnan said...
    என் ஆக்கத்தை வெளியிட்டமைக்கு நன்றி ஐயா.என்னுடையதை இர‌ண்டாவதாக வெளியிட்டு இருக்கலாம்.என்னுடையதை முன்னால் வெளியிட்டது உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது.
    'டிபன் பாக்'ஸில் பொருள் கடத்தும் அந்த 'டெக்னிக்'கிற்கும், நான் எழுதியுள்ள சம்பவத்திற்கும் ஒரு தொடர்பு உள்ளது. அதனை நான் சொன்னால் தஞ்சாவூரில் பலரும் நான் யாரைப்பற்றி எழுதியுள்ளேன் என்று சட்டென்று புரிந்து கொள்வார்கள்.
    ஆம்! இது போன்ற தவறு செய்பவர்களுக்கு வீட்டில் ஏற்படும் அவமானம் பெரிய தண்டனைதான்.
    தேர்ந்த கதை சொல்லி தாங்கள் என்பதற்கு இந்த ஆக்கம் நல்லதோர் எடுத்துக்காட்டு.நன்றி ஐயா!/////

    உங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  5. //////Blogger minorwall said...
    செட்டியார் கதை கலக்கல்..
    நல்லப்பனோடு அங்கேயிருந்து பட்டறையிலே செட்டியார் குறுக்கு விசாரணையைப் நேரிலே பார்த்தது போல ஒரு உணர்வு..
    செட்டியார் கொஞ்சம் கொஞ்சமாக தொடுப்பு மேட்டரிலிருந்து தாவி பண மேட்டருக்கு வந்த பொது எங்கள் பகுதிச் செட்டியார்களுக்கு என்று பணவிஷயத்தில் உஷார்,கறார் என்ற வகையில் 'சோழியன் குடுமி சும்மா ஆடுமா?' என்று நினைத்துப் படித்தேன்..
    வழக்கம்போல கடைசியில் சில நகாசு வேலையெல்லாம் பண்ணி செட்டியாரை ஹீரோ ரேஞ்சிலேருந்து தூக்கி
    தெய்வத்திண்ட தெய்வமா ஆக்கிட்டீங்க..
    'கதை,வசனம்,டிரெக்ஷன்' ன்னு எல்லாமே அசத்தல் சார்../////

    உங்களின் பாராட்டுக்களால், படத்திற்காக செலவழித்த மொத்த தொகையும் வந்து விட்டது மைனர். இனிமேல் ஓடி வருவதெல்லாம் உபரிப்பணம்!

    ReplyDelete
  6. /////SP.VR. SUBBAIYA said...
    உங்களின் பாராட்டுக்களால், படத்திற்காக செலவழித்த மொத்த தொகையும் வந்து விட்டது மைனர்.
    இனிமேல் ஓடி வருவதெல்லாம் உபரிப்பணம்!//////

    உண்ண்மையச் சொன்னேன்..

    ReplyDelete
  7. உபரிப்பணம்:
    ஐயா, இன்று களவாணிப் பசங்க சிறப்பு பதிப்பா? ஹையா, இரண்டு கதைகளுமே நன்றாக இருந்தது.

    முதல் கதையில் கடமையைச் செய்ய கையூட்டு வாங்கியவர்கள்தான் உண்மையில் கள்வர்கள் என்று KmrK அவர்கள் மறைமுகமாக சொல்லிவிட்டார்.

    இரண்டாவது கதையில் இருந்த "லாபத்தையும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. நஷ்டத்தையும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அவற்றை பெரிதாக எடுத்துக் கொண்டால் மனிதநேயம் இல்லாமல் போய் விடும். மனிதநேயத்தை விடப் பெரிய லாபம் என்ன இருக்கிறது" என்ற கருத்தை திருடிச் சென்று பத்திரமாக மனதில் பதுக்கி வைக்க வேண்டும்.

    சில சமயம் சிலர் திருடர்களாக இருந்தாலும் அவர்கள் நோக்கத்தினால் அவர்கள் சென்ற தவறான வழியினால் அவர்கள் மீது பரிதாபமும், அவர்களை அந்த நிலைக்கு தள்ளிய சமுதாயத்தின் மீதும் கோபம் வரும்; உதாரணம் காஞ்சீவரம் படத்தில் பெண்ணுக்கு பட்டுப் புடவை கொடுக்க நினைத்த பேராசை(?) அப்பாவும், பசியால் திருடிவிட்ட, தன் குடும்ப உறுப்பினரின் உயிரைக் காக்க அவசர மருத்துவ செலவுக்கு திருடுபர்கள் என்ற வகையை சேர்ந்தவர்கள். ஆனால் இன்றைய கதைகளின் திருடர்கள் அந்த கூட்டத்தை சேர்ந்தவர்கள் அல்ல, அவர்கள் தண்டனையை அனுபவிக்க வேண்டியவர்கள். முதலாளி கொடுத்த தண்டனையும் இ.பீ.கோ. வில் இல்லாவிட்டாலும் நல்ல தண்டனையே. நல்ல கதைகளுக்கு நன்றி.

    ReplyDelete
  8. /////Blogger minorwall said...
    /////SP.VR. SUBBAIYA said...
    உங்களின் பாராட்டுக்களால், படத்திற்காக செலவழித்த மொத்த தொகையும் வந்து விட்டது மைனர்.
    இனிமேல் ஓடி வருவதெல்லாம் உபரிப்பணம்!//////
    உண்ண்மையச் சொன்னேன்..//////

    நானும் உண்மையைத்தான் சொன்னேன் மைனர். உபரிப் பணம் என்பதை உபரியான மகிழ்ச்சி என்று கொள்க!

    ReplyDelete
  9. //////Blogger தேமொழி said...
    உபரிப்பணம்:
    ஐயா, இன்று களவாணிப் பசங்க சிறப்பு பதிப்பா? ஹையா, இரண்டு கதைகளுமே நன்றாக இருந்தது.
    முதல் கதையில் கடமையைச் செய்ய கையூட்டு வாங்கியவர்கள்தான் உண்மையில் கள்வர்கள் என்று KmrK அவர்கள் மறைமுகமாக சொல்லிவிட்டார்.
    இரண்டாவது கதையில் இருந்த "லாபத்தையும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. நஷ்டத்தையும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அவற்றை பெரிதாக எடுத்துக் கொண்டால் மனிதநேயம் இல்லாமல் போய் விடும். மனிதநேயத்தை விடப் பெரிய லாபம் என்ன இருக்கிறது" என்ற கருத்தை திருடிச் சென்று பத்திரமாக மனதில் பதுக்கி வைக்க வேண்டும்.
    சில சமயம் சிலர் திருடர்களாக இருந்தாலும் அவர்கள் நோக்கத்தினால் அவர்கள் சென்ற தவறான வழியினால் அவர்கள் மீது பரிதாபமும், அவர்களை அந்த நிலைக்கு தள்ளிய சமுதாயத்தின் மீதும் கோபம் வரும்; உதாரணம் காஞ்சீவரம் படத்தில் பெண்ணுக்கு பட்டுப் புடவை கொடுக்க நினைத்த பேராசை(?) அப்பாவும், பசியால் திருடிவிட்ட, தன் குடும்ப உறுப்பினரின் உயிரைக் காக்க அவசர மருத்துவ செலவுக்கு திருடுபர்கள் என்ற வகையை சேர்ந்தவர்கள். ஆனால் இன்றைய கதைகளின் திருடர்கள் அந்த கூட்டத்தை சேர்ந்தவர்கள் அல்ல, அவர்கள் தண்டனையை அனுபவிக்க வேண்டியவர்கள். முதலாளி கொடுத்த தண்டனையும் இ.பீ.கோ. வில் இல்லாவிட்டாலும் நல்ல தண்டனையே. நல்ல கதைகளுக்கு நன்றி.////

    ப்ரொஃபலில் உள்ள ராணி வேலு நாச்சியாரின் படம் நன்றாக உள்ளது. அதையே உங்கள் காப்புரிமைப் படமாக நீங்கள் வைத்துக்கொள்ளலாம்!

    ReplyDelete
  10. ///ப்ரொஃபலில் உள்ள ராணி வேலு நாச்சியாரின் படம் நன்றாக உள்ளது. அதையே உங்கள் காப்புரிமைப் படமாக நீங்கள் வைத்துக்கொள்ளலாம்!///

    ஐயாவின் ஆசீர்வாதம் ...நன்றி.... அப்படியே செய்கிறேன் ஐயா

    ReplyDelete
  11. ////சில சமயம் சிலர் திருடர்களாக இருந்தாலும் அவர்கள் நோக்கத்தினால் அவர்கள் சென்ற தவறான வழியினால் அவர்கள் மீது பரிதாபமும், அவர்களை அந்த நிலைக்கு தள்ளிய சமுதாயத்தின் மீதும் கோபம் வரும்;//////

    'களவாணி' படத்தில் உரமூட்டையை லாரியிலிருந்து 'லபக்' பண்ணும்போது 'பஞ்சாயத்து' கஞ்சா கருப்பால் பார்த்துத் தொலைக்கப்படும் திருட்டைப் பற்றித்தானே சொல்லவருகிறீர் ராணி?

    ReplyDelete
  12. வேலிக்கு கூலி தந்தே மீதியும் போச்சு!
    வருத்தமளிக்கும் கதை தான்...

    பொதுவாக காது மந்தமானவர்கள் மற்ற விசயங்களில்
    கொஞ்சம் சுதாரிப்பாக இருப்பார்கள்...
    இங்கே அதுவும் இல்லை என்றால்....
    பாவம் அவர்கள் யாவருமே தான்.

    பதிவுக்கு நன்றிகள் சார்.

    ReplyDelete
  13. ////“இங்கே நடந்ததையெல்லாம் அவனுடைய மனைவியும், பிள்ளைகளும் பார்த்துவிட்டுப் போயிருக்கிறார்கள் இல்லையா? இனிமேல் அவர்களிடம் என்ன மதிப்பு இருக்கப் போகிறது அவனுக்கு? அதைவிடப் பெரிய தண்டனை ஒரு மனிதனுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள்?”////

    நச்சுன்னு சொல்லி இருக்கிறீங்க...
    ஒரு மனிதனுக்கு தனது மனைவியோடு பெற்றப் பிள்ளைகளே அதுவும் து போன்ற செய்கைகளுக்காக மதிப்புத் தரவில்லை என்றால் அதைவிட கேவலம் அவமானம் வேறொன்றும் இருக்க முடியாது....

    ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
    எய்துவர் எய்தாப் பழி.

    நன்றிகள் சார்.

    ReplyDelete
  14. ///'களவாணி' படத்தில் உரமூட்டையை லாரியிலிருந்து 'லபக்' பண்ணும்போது 'பஞ்சாயத்து' கஞ்சா கருப்பால் பார்த்துத் தொலைக்கப்படும் திருட்டைப் பற்றித்தானே சொல்லவருகிறீர் ராணி? ///
    செங்கமலத் தாயாரே, நான் களவாணின்னு சொன்னத மைனர்வாள் சரியா புரிஞ்சுகிட்டாரான்னு தெரியல்லியே.

    ReplyDelete
  15. இரண்டு ஆக்கமும் மிகவும் நன்றாக உள்ளது. அதிலும் உங்கள் கதை அருமையிலும் அருமை ஐயா..

    ReplyDelete
  16. //////தேமொழி said...


    ///'களவாணி' படத்தில் உரமூட்டையை லாரியிலிருந்து 'லபக்' பண்ணும்போது 'பஞ்சாயத்து' கஞ்சா கருப்பால் பார்த்துத் தொலைக்கப்படும் திருட்டைப் பற்றித்தானே சொல்லவருகிறீர் ராணி? ///
    செங்கமலத் தாயாரே, நான் களவாணின்னு சொன்னத மைனர்வாள் சரியா புரிஞ்சுகிட்டாரான்னு தெரியல்லியே.///////////


    ராணி ரொம்ப சீரியஸ் மூடுலே இருந்ததாலே கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம்ன்னு இப்படி சொன்னேன்..


    மத்தபடி தெளிவாப் புரிஞ்சுது..

    ReplyDelete
  17. k.prema.erode.அய்யா வணக்கம்.
    இரு சிறுகதைகள் மிக அருமை.sidebar-இல் உள்ள பதிவுகள் படித்தேன்.நன்றாக உள்ளது.

    ReplyDelete
  18. Vanakkam Ayya,
    Both stories are very nice.But Story 2 was really touching and i could see gandhian tinch in it.forgiving is a Biggest weapon than a sword.Excellent punch at the End.I liked KMRK sir story too coz it has my favourite Sherlock Holmes playing a lead role in the movie today!!!But the Ending here seems to have "Sethu" movie Climax.our Thanx for both the Good writers...

    ReplyDelete
  19. முதல் கதை நல்ல காமெடியா இருக்கிறது. நடந்த உண்மை சம்பவம் என்று வேறு குறிப்பிட்டிருக்கிறார். அதிலும் அந்த பெண் கொதிக்கும் எண்ணெய் சட்டியைத் தூக்கிக்கொண்டு வந்து மிரட்டுவது, என்ன ஒரு சமயோசிதம். அசத்தல்! நானாக இருந்தால் அந்த நேரத்தில் என்ன செய்வேன் என்று ஒரு நிமிடம் யோசித்துப்பார்த்தேன். என்ன இது நம் ஊரில் போலிஸ் தானாகவே வந்து உதவிக்கு நிற்கிறார்களே என்று ஆச்சரியமாக இருந்தது. 321 அவ்வளவு சீக்கிரமெல்லாம் நாங்கள் திருந்திவிடமாட்டோம் என்று உணர்த்தியிருக்கிறார். 'நம்பிக்கைதானே சார் உலகம்?' என்று முடித்திருப்பது யாரோ ஒரு எழுத்தாளரை நினைவுபடுத்தியது. யாரென்று நினைவில் வரவில்லை. இந்த சம்பவத்தில் வரும் நபர்கள் யார்? முடிந்தால் மின்னஞ்சலில் தெரிவிக்கவும்.

    ReplyDelete
  20. இரண்டாவது கதை சூபெரோ சூபர். ஐ லவ் பழனியப்ப செட்டியார் கேரக்டர். சி. ஐ. டி. யில் இருந்திருக்க வேண்டிய ஆள்.

    நான் லாபத்தையும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. நஷ்டத்தையும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அவற்றை பெரிதாக எடுத்துக் கொண்டால் மனிதநேயம் இல்லாமல் போய் விடும். மனிதநேயத்தை விடப் பெரிய லாபம் என்ன இருக்கிறது சொல் நல்லப்பா?”//

    கதையின் ஹைலைட் இந்த வரிகள்தான்.

    ReplyDelete
  21. /////Blogger தமிழ் விரும்பி said...
    ////“இங்கே நடந்ததையெல்லாம் அவனுடைய மனைவியும், பிள்ளைகளும் பார்த்துவிட்டுப் போயிருக்கிறார்கள் இல்லையா? இனிமேல் அவர்களிடம் என்ன மதிப்பு இருக்கப் போகிறது அவனுக்கு? அதைவிடப் பெரிய தண்டனை ஒரு மனிதனுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள்?”////
    நச்சுன்னு சொல்லி இருக்கிறீங்க...
    ஒரு மனிதனுக்கு தனது மனைவியோடு பெற்றப் பிள்ளைகளே அதுவும் து போன்ற செய்கைகளுக்காக மதிப்புத் தரவில்லை என்றால் அதைவிட கேவலம் அவமானம் வேறொன்றும் இருக்க முடியாது....
    ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
    எய்துவர் எய்தாப் பழி.
    நன்றிகள் சார்./////

    உங்களின் விமர்சனத்திற்கு நன்றி ஆலாசியம்!!

    ReplyDelete
  22. ////Blogger sasi said...
    இரண்டு ஆக்கமும் மிகவும் நன்றாக உள்ளது. அதிலும் உங்கள் கதை அருமையிலும் அருமை ஐயா../////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி

    ReplyDelete
  23. /////Blogger k.prema said...
    k.prema.erode.அய்யா வணக்கம்.
    இரு சிறுகதைகள் மிக அருமை.sidebar-இல் உள்ள பதிவுகள் படித்தேன்.நன்றாக உள்ளது.////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி

    ReplyDelete
  24. /////Blogger R.Srishobana said...
    Vanakkam Ayya,
    Both stories are very nice.But Story 2 was really touching and i could see gandhian tinch in it.forgiving is a Biggest weapon than a sword.Excellent punch at the End.I liked KMRK sir story too coz it has my favourite Sherlock Holmes playing a lead role in the movie today!!!But the Ending here seems to have "Sethu" movie Climax.our Thanx for both the Good writers.../////

    உங்களின் விமர்சனத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  25. /////Blogger Uma said...
    இரண்டாவது கதை சூப்பரோ சூப்பர். ஐ லவ் பழனியப்ப செட்டியார் கேரக்டர். சி. ஐ. டி. யில் இருந்திருக்க வேண்டிய ஆள்.
    நான் லாபத்தையும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. நஷ்டத்தையும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அவற்றை பெரிதாக எடுத்துக் கொண்டால் மனிதநேயம் இல்லாமல் போய் விடும். மனிதநேயத்தை விடப் பெரிய லாபம் என்ன இருக்கிறது சொல் நல்லப்பா?”//
    கதையின் ஹைலைட் இந்த வரிகள்தான்.///////

    உங்களின் விமர்சனத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  26. Guur Vanakkam,

    I am back after 2 days leave.

    Superb story. A very good knot. you should keep writing stories in a big way.

    Regards
    Sri

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com