மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

10.12.13

Short Story: சிறுகதை: தலைப்பு: சபையறிந்து பேச வேண்டும்!

 
Short Story: சிறுகதை: தலைப்பு: சபையறிந்து பேச வேண்டும்!

(எங்கள் அப்பச்சி - My father - சொன்ன கதைகள் வரிசையில் இது நான்காவது கதை. மாத இதழ் ஒன்றிற்காக அடியேன் எழுதிக்கொடுத்து வெளிவந்த கதையை நீங்கள் அறிந்து கொள்வதற்காக இன்று பதிவில் ஏற்றியுள்ளேன்! கதையின் கரு மட்டும் என் தந்தையாருடையது. கருவிற்கு உருவம் கொடுத்து விரிவாக்கம் செய்து,  எழுத்தில்  வடிவமைத்தது எல்லாம் என்னுடைய கைவண்ணம்)

“காற்றினிலே வரும் கீதம்:
கண்கள் பனித்திடும் கீதம்.
கல்லும் கனியும் கீதம்:
காற்றினிலே வரும் கீதம்”

என்று அசத்தலாகத் துவங்கும் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி, அதாங்க எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் பாடல் பட்டி தொட்டி எல்லாம் ஒலித்துக்கொண்டிருந்த காலத்தில் நடந்த கதை இது. 1945ஆம் ஆண்டு என்று வைத்துக்கொள்ளுங்கள்.

அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த, விரல் விட்டு எண்ணக்கூடிய மிகப் பெரும் செல்வந்தர்களில் சின்னைய்யா செட்டியாரும் ஒருவர். அவர் ஊர் இருக்கும் வட்டகையில் மொத்தம் 19 ஊர்கள். அந்தப் பத்தொன்பது ஊர் மக்களும் அறிந்த செல்வந்தர் அவர். கோவில் திருப்பணிகள் என்றால் யோசிக்காமல் கொட்டிக் கொடுப்பார்.

ஊர் மக்கள் ’திருப்பணிச் செம்மல்’ என்று பட்டம் கொடுத்து அவரைச் சிறப்பிக்க முயன்றபோது, மறுத்துவிட்டார். ‘இறைவன் படி அளக்கிறான். அதில் ஒரு பகுதியை நான் திருப்பணிகளுக்குச் செலவழிக்கிறேன். எல்லாம் அவன் அளிக்கும் கொடை. என் பங்காற்றல் ஒன்றுமில்லை” என்று கூறிவிடுவார்.

காவேரி செழிப்பாக ஓடிக்கொண்டிருந்த காலம் அது. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் அவருக்கு, ஆறாயிரம் ஏக்கர் விளை நிலங்கள் இருந்தன.
திருச்சிராப்பப்ள்ளி மாவட்டத்தில், குளித்தளை, தொட்டியம், முசிறி பகுதிகளில் சுமார் நான்காயிரம் ஏக்கர் விளை நிலங்கள் இருந்தன. இன்னும் பல ஊர்களில் விவசாய நிலங்கள் இருந்தன. நில உச்சவரம்பு சட்டம் இல்லாத காலம் அது.

அத்துடன் அவருடைய அப்பச்சி காலத்தில் இருந்தே மலேசியாவில் பெரும் வரவு-செலவு.  பினாங்கு, சிரம்பான், கிள்ளாங், கம்பார், ஈப்போ என்று பல ஊர்களில் கொடுக்கல், வாங்கல் தொழில்கள்.  அவற்றை எல்லாம் ஏஜன்ட் செட்டியார்கள் மூலம் நிர்வகித்துக் கொண்டிருந்தார்.

வீட்டில், தங்கம், வெள்ளி, வைரம் என்று ஏராளமான அசையும் சொத்துக்கள்.

அத்தனை பெரிய செல்வந்தருக்கு ஒரே ஒரு மனக்குறை இருந்தது. அவருக்கு இரண்டே இரண்டு பெண் குழந்தைகள். அந்தப் பெண் மக்களை உரிய வயதில் நல்ல இடங்களில் கட்டிக் கொடுத்துவிட்டார். வம்சத்தின் பெயரைச் சொல்வதற்கும், வம்சம் வளர்வதற்கும், அத்தனை செல்வங்களை கட்டிக் காப்பதற்கும் ஒரு ஆண் வாரிசு இல்லையே என்பதுதான் அவருடைய மனதை அரித்துக்கொண்டிருந்த பெரும் மனக்குறை.

அவருக்கும் வயது அறுபதை நெருங்கிக் கொண்டிருந்தது.  உறவினர்களின் வற்புறுத்தலால் சுவீகாரம் கொள்வதென முடிவு செய்தார். சுவீகாரத்திற்குப்பின் தன் மூத்தமகள் வழிப் பேர்த்தியையே சுவீகாரம் கொள்ளும் பையனுக்குத் திருமணம் செய்து வைத்து விடுவது என்றும் முடிவுசெய்தார்.

அவருடைய அன்பு மனைவி சிகப்பி ஆச்சி அவர்களும்  சுவீகாரத்தில் மிகவும் விருப்பத்தோடு இருந்தார்கள். முதலில் நல்ல பையன் கிடைக்க வேண்டுமே என்று தேடுதலைத் தவிர்த்துக்கொண்டே வந்த சின்னைய்யா செட்டியாரும், இனி நாளைக் கடத்தாமல், அதற்கு முயற்சி செய்வோம் என்று களத்தில் இறங்கி வேலை செய்ய ஆரம்பித்தார். தெரிந்த இடங்களில் எல்லாம் விசாரிக்கத் துவங்கினார்.

செட்டியாரின் நெருங்கிய நண்பரான கருப்பையா செட்டியார், ஒரு நாள், ஒரு நல்ல தகவலோடு வந்தார்.

தங்கள் வட்டகையில் உள்ள ஊர் ஒன்றில் பத்தாம் வகுப்புவரை படித்த 17 வயது இளைஞன் ஒருவன் இருப்பதாகவும், நல்ல அம்சத்தோடு இருக்கிறான் என்றும், அவனுடைய பெற்றோர்களிடம் பேசி விட்டதாகவும், போய்ப் பார்த்துப் பிடித்துப்போனால், அவனையே கூட்டிக் கொள்ளலாம் என்று சொன்னார். சொன்னது மட்டும் இல்லாமல், அடுத்துவந்த மூகூர்த்தநாளில், சென்று பார்ப்பதற்கும் ஏற்பாடு செய்திருந்தார்.

முதலில் நாம் பார்ப்போம், பிறகு மற்றவர்களை அழைத்துக்கொண்டு செல்வோம் என்று முடிவு செய்த சின்னய்யா செட்டியார், தன் நண்பர் கருப்பையா செட்டியாரைக் கூட்டிகொண்டு அந்த ஊருக்குப்  புறப்பட்டுச் சென்றார்.

பையனின் வீட்டில் செட்டியாரைத் தடபுடலாக வரவேற்றார்கள்.

பையன் நல்ல சிவந்த நிறம், லட்சணமாக இருந்தான்.  செட்டியாருக்கு மிகவும் மகிழ்ச்சி.

அழகாய் இருந்தால் போதுமா? அறிவாக, கெட்டிக்காரத்தனமாக இருப்பது அல்லவா அதைவிட முக்கியம். அதைத் தெரிந்து கொள்ள விரும்பிய சின்னய்யா செட்டியார் இப்படிச் சொன்னார்.

“தம்பியுடைய கையெழுத்தைப் பார்க்க வேண்டும். தாளும் பேனாவும் கொண்டு வந்து கொடுங்கள்” என்றார்.

எழுதும் சாய்வு மேஜை, தாள், பேனா எல்லாம் கண் இமைக்கும் நேரத்தில் வந்து சேர்ந்தன.

”தம்பி, எழுதுங்கள்!” என்றார்.

பையன் உடனே பிள்ளையார் சுழி, சிவமயம் என்று தாளில் எழுதியிருக்க வேண்டும்.  அதைச் செய்யாமல் அவன் இப்படிக் கேட்டான்:

“என்ன எழுத?”

செட்டியார் உடனே, ”பிள்ளையார் சுழி, சிவமயம் போடுங்கள்!” என்றார்.

உடனே அவன் அதைச் செய்திருக்க வேண்டாமா?

செய்யாமல், அதாவது அதை எழுதாமல் அவன் திரும்பவும் கேட்டான்.

”உனா, சிவமயம் தானே?”

செட்டியாருக்குச் ‘ச்சீ’ என்றாகி விட்டது.

பிள்ளையார் சுழி, சிவமயம் கூட எழுதத் தெரியவில்லை. அத்துடன் அதை உனா, சிவமயமா என்று மக்குத்தனமாக வேறு கேட்கின்றான். இவன் வந்தா நமது சொத்துக்களை காப்பாற்றப் போகிறான்? என்று மனதிற்குள் மின்னலாக நினைத்தவர், சட்டென்று எழுந்துவிட்டார். அத்துடன், தன் நண்பரைப் பார்த்துக் கண்ணால் சைகை செய்துவிட்டு,  அந்த இடத்தை விட்டுக் கிளம்பி விட்டார்.

உடன் எழுந்த கருப்பையா செட்டியார், பையனின் பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு, சின்னய்யா செட்டியாரைப் பின் தொடர்ந்து வீட்டை விட்டு வெளியே வந்தார்

வீட்டிற்கு அருகில் நின்றிருந்த காரில், அவருடன் ஏறி அமர்ந்த சின்னைய்யா செட்டியார் கார் புறப்பட்டவுடன் சொன்னார். “பிள்ளையார் சுழி சிவமயம் கூடத் தெரியாத தோசிப் பயல். இவனைக் கூட்டிக்கொண்டு வந்து நாம் என்ன செய்வது? வேறு இடம் பார்ப்போம் என்றுதான் எழுந்து வந்துவிட்டேன்.”

பிள்ளையார் சுழி, சிவமயம் என்று எழுதிவிட்டுத்தான் எதையுமே எழுதத் தொடங்குவது நகரத்தார்களின் வழக்கம்.  அதைப் பழகிக் கொள்ளாத ஓரு நகரத்தார் இளைஞனின் வாழ்க்கை எப்படித் திசைமாறிப் போனது,  எவ்வளவு பெரிய வாய்ப்பை அவன் இழந்து விட்டான் என்பதற்கு இதை எடுத்துக் காட்டாக எங்கள் அப்பச்சி சொல்வார்கள்.

”வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல், உனா, சிவமயம் தானே என்று கேட்டான் பாரு அதுதான் கோளாறு. அங்கேதான் அடி விழுந்தது.
ஆகவே எதையும் சபை அறிந்து பேச வேண்டும்!” என்று முத்தாய்ப்பாக வேறு எங்கள் அப்பச்சி சொல்வார்கள்
 =========================================================
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
===============================================================

10 comments:

  1. Respected Sir,

    Nice posting and we are missing your popcorn post sir. Please try to post some Popcorn Post.

    Thank You.

    ReplyDelete
  2. Respected sir,

    Good morning. Nice postings on life management.

    thank you sir.

    ReplyDelete
  3. அன்புடன் வணக்கம் வாத்தியார் அய்யா !!
    தற்காலத்தில் பிள்ளையார் சுழி போடுவதே பெரிய விஷயம் !!
    பள்ளி பாடங்கள் தவிர்த்த ஏனைய அனைத்து விஷயங்களிலும் பிள்ளையார் சுழி சிவமயம் இல்லை என்றால் ??அதற்கு என தனியாக ஒரு அடி விழும் பாருங்க !!!
    இன்று நினத்தாலும் வலது புறங்கை வலிக்கிறது ??ஒரு முறைதான் ..அடுத்து தானே எழுதும் தாளின் மேல்புறம் ஆரம்பம் ஆகிவிடும்..
    சிறிய வயது ஞாபகம்
    பால பருவத்தை ஞாபகபடுத்தியமைக்கு நன்றி. ..

    ReplyDelete
  4. அன்று-அறிவுதான் அழகு (புத்திசாலி)

    இன்று-அழகுதான் அறிவு (கோமாளி)

    அறிவால் அழகு ஆகலாம்.

    அழகால் அறிவை பெற முடியாது.

    என்றும்

    மிடில் பெஞ்ச் மகேஷ்

    ReplyDelete
  5. கதையுடன் இந்த தத்து எடுப்பவர்/கொடுப்பவர் மற்றும் தத்து எடுக்கபடும் பிள்ளை மற்றும் பெண் ஜாதக அமைப்புகள் எவ்வாறு பொருந்தும் என்று விவரங்களை வெளியிட்டால் நல்லதுதானே!

    ReplyDelete
  6. ////Blogger Chandrasekharan said...
    Respected Sir,
    Nice posting and we are missing your popcorn post sir. Please try to post some Popcorn Post.
    Thank You./////

    சரி. உங்கள் விருப்பத்தை அடுத்த வாரம் நிறைவேற்றுகிறேன். நன்றி!

    ReplyDelete
  7. ////Blogger Lakhsmi Nagaraj said...
    Respected sir,
    Good morning. Nice postings on life management.
    thank you sir./////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!!

    ReplyDelete
  8. Blogger hamaragana said...
    அன்புடன் வணக்கம் வாத்தியார் அய்யா !!
    தற்காலத்தில் பிள்ளையார் சுழி போடுவதே பெரிய விஷயம் !!
    பள்ளி பாடங்கள் தவிர்த்த ஏனைய அனைத்து விஷயங்களிலும் பிள்ளையார் சுழி சிவமயம் இல்லை என்றால் ??அதற்கு என தனியாக ஒரு அடி விழும் பாருங்க !!!
    இன்று நினத்தாலும் வலது புறங்கை வலிக்கிறது ??ஒரு முறைதான் ..அடுத்து தானே எழுதும் தாளின் மேல்புறம் ஆரம்பம் ஆகிவிடும்..
    சிறிய வயது ஞாபகம்
    பால பருவத்தை ஞாபகபடுத்தியமைக்கு நன்றி. ../////

    ஆமாம். படிக்கும்போது நமது வயதுக்காரர்களுக்கு அந்தக் கால நினைவுகள் வந்து கண்களைப் பனிக்க வைப்பதென்னவோ நிஜம்தான்! நன்றி கணபதி சார்!

    ReplyDelete
  9. /////Blogger Mahesh Dhivakar said...
    அன்று-அறிவுதான் அழகு (புத்திசாலி)
    இன்று-அழகுதான் அறிவு (கோமாளி)
    அறிவால் அழகு ஆகலாம்.
    அழகால் அறிவை பெற முடியாது.
    என்றும்
    மிடில் பெஞ்ச் மகேஷ்////

    உங்களுக்குத் தெரியுமா? நல்ல குணம்தான் உண்மையான அழகு. என்றும் மாறாத அழகு!

    ReplyDelete
  10. /////Blogger venkatesh r said...
    கதையுடன் இந்த தத்து எடுப்பவர்/கொடுப்பவர் மற்றும் தத்து எடுக்கப்படும் பிள்ளை மற்றும் பெண் ஜாதக அமைப்புகள் எவ்வாறு பொருந்தும் என்று விவரங்களை வெளியிட்டால் நல்லதுதானே!////

    வெறும் ஜோதிடத்தையே எழுதிக்கொண்டிருக்காமல் ஒரு மாறுதலுக்காகத்தான் கதைகளைப் பதிவிடுகிறேன். அதிலும் ஜோதிடத்தைக் கலக்கச் சொல்கிறீர்களே - நியாயமா?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com