பூனைக்கும் ருத்திராட்சத்திற்கும் என்ன ராசா சம்பந்தம்?
மாதப் பத்திரிக்கை ஆசிரியர் ஒருவர் சிறுவர்களுக்காக ஒரு குட்டிக்கதை எழுதிக்கொடுங்கள் என்றார். எழுத்தில் எதுதான் சாத்தியமில்லை? எழுதிக்கொடுத்தேன் சென்ற மாதம் அவர்களுடைய இதழில் அதை வெளியிட்டார்கள். அதை உங்களுக்கும் படிக்கக் கொடுக்க எண்ணி இன்று பதிவிட்டுள்ளேன். படித்துப் பாருங்கள்.
அடுத்து உள்ள மூன்று நாட்களுக்கு, சொந்த வேலைகள் காரணமாக புதிதாகப் பாடங்களை எதையும் எழுத நேரமில்லை. ஜோதிடப் பாடங்கள் எல்லாம் அடுத்தவாரம் வரும். இந்த வாரம் இன்னும் உள்ள 3 நாட்களுக்குப் பதிவுகள் உண்டு. அவைகள் எல்லாம் இதுபோன்ற உதிரிப்பூக்கள். ஆனால் சுவாரசியம் குறையாமல் இருக்கும். ஒரு மாறுதலுக்காக அவற்றையும் படியுங்கள்
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------------------------------------
சிறுவர்களுக்கான குட்டிக் கதை
தலைப்பு: பூனையும் ருத்திராட்சமும்
மீனாட்சி பாட்டி வீடு அந்தத் தெருவில் பிரசித்தம். அனைவருக்கும் தெரியும். அதை விட அதிகமாக மீனாட்சிப் பாட்டி வீட்டில் இருக்கும் பூனையை அனைவருக்கும் தெரியும். பூனை நன்றாக வளர்ந்து பொமெரேனியன் நாய் போல இருக்கும். அதாவது பொமெரேனியன் நாயின் சைஸிலும் உருவத்திலும் இருக்கும். அதற்குக் காரணம் மீனாட்சிப் பாட்டியின் செல்லப் பிராணி அது.
“மணி.........மணி...........அடேய் மணீ” என்று மீனாட்சிப் பாட்டி நம் பூனையை அழைக்கும் அழகே அழ்கு!
மீனாட்சிப் பாட்டிக்கு ஏகப்பட்ட சொத்து, மாதம்பட்டியில் மாட்டுப்பண்ணை, தொண்டாமுத்தூரில் தோட்டம், கூடலூரில் தேயிலைத் தோட்டம் என்று ஏகத்தும் செல்வம். வீட்டில் பால், தயிர், வெண்ணை என்று கணக்கு வழக்கில்லாமல் எல்லாம் வழிந்தோடும். அதோடு தின்பதற்கு முடையில்லாமல் எல்லாம் கிடைக்கும். அதனால் நம் மணிப் பூனையின் வாழ்க்கையில் தினமும் திருவிழாதான்!
அத்துடன் மணிக்கு பக்கத்து வீட்டு எலியுடன் அன்பான நட்பும் உண்டு. என்ன நம்பமுடியவில்லையா? அந்த எலியும், நம்ம மணியும் நட்பானதே ஒரு பெரிய கதை. ஒருமுறை மணி பக்கத்துவீட்டுச் சுவரில் ஏறி, அந்த வீட்டுத் தோட்டத்தில் குதித்தபோது, அங்கே ஒரு செடியின் மறைவில் இருந்த எலி மணியை எச்சரித்து அனுப்பியது. அந்த வீட்டில் இரண்டு அல்சேஷன் நாய்கள் இருப்பதாகவும், அவைகளின் கையில் மாட்டினால் சட்னிதான் என்று எச்சரித்தது. அது உண்மைதான் என்று அடுத்த சில நிமிடங்களில் மணியும் உணர்ந்து கொண்டது.
நாய்களா அவைகள்? இரண்டும் கன்றுக்குட்டி சைஸில் இருந்தன. தப்பித்தோம், பிழைத்தோம் என்று மணியும் தாவிக்குதித்து ஓடி வந்து விட்டது. அன்றிலிருந்து அந்த எலியுடன் மணி நட்புப் பாராட்டி நடந்து கொண்டது. மீனாட்சி பாட்டிக்கு தினமும் மீன் வியாபரி ஒருவர் மீன் விற்க மொபட்டில் வருவார். அவர் பாட்டியுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, அல்லது அவர் அசந்து மீன்களை தராசில் எடை போட்டுக் கொண்டிருக்கும்போது, மணி அவருடைய மொபட்டின் பின்புறம் கட்டப் பெற்றிருக்கும் பெட்டியில் இருந்து ஒன்று அல்லது இரண்டு மீன்களை லவட்டிக் கொண்டு வருவது வழக்கம். அதாவது கவ்வி எடுத்துக்கொண்டு வருவது வழக்கம். அவ்வாறு பிடித்துக்கொண்டு வரும் மீன்களில் ஒன்றை தன் நண்பனான எலிக்கும் கொடுப்பது வழக்கம்.
அது மட்டுமில்லால் மீனாட்சிப் பாட்டியின் வீட்டிலிருந்து வேறு பல திண்பண்டங்களையும் எலிக்குக் கொடுப்பது வழக்கம். இவ்வாறு நாளது ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இருவரின் நட்பும் வலுப்பட்டது.
ஒரு சமயம், மணியைப் பத்து நாட்களுக்கு மேலாகக் காணாமல் எலி கவலை கொண்டதோடு, தவித்தும் போய்விட்டது.
பன்னிரெண்டு நாட்கள் கழித்து மணியைப் பார்த்தவுடன்தான், எலிக்கு மீண்டும் புத்துணர்வு வந்தது.
மணியைப் பார்த்து எலி கேட்டது: “என்ன நணபா, எங்கே போய் விட்டாய்? உன்னைக் காணாமல் பத்து நாட்களாகத் தவித்துப் போய்விட்டேன்”
“நானும்தான் நீயில்லாமல் தவித்துப் போய் விட்டேன். பாட்டி வாரணாசிக்குப் போயிருந்தார்களா? என்னைக் கொண்டுபோய் மாதம்பட்டிப் பண்ணையில் விட்டுவிட்டுப் போயிருந்தார்கள்”
“அப்படியா? கழுத்தில் ஏதோ புதிதாகக் கட்டியிருக்கிறாயே....... அதென்ன?”
“அதுவா? அது ருத்திராட்சமாம். பாட்டி வாரணாசியில் இருந்து தனக்கு ஒரு ருத்திராட்ச மாலை வாங்கியபோது, எனக்கும் ஒரு பெரிய ருத்திராட்சம் வாங்கிக் கொண்டு வந்து, என் கழுத்தில் கட்டிவிட்டார்கள். அது மட்டுமில்லை. ருத்திராட்சம் கட்டிக் கொண்டால் சைவமாக இருக்க வேண்டுமாம். என்னையும் கண்டித்து வைத்திருக்கிறார்கள். நானும் சைவத்திற்கு மாறிவிட்டேன்.”
“ஓஹோ....அதெப்படி முடியும்?”
"பாட்டியின் கதைகளைக் கேட்டால் எல்லாம் முடியும். வருகிறவர்களிடம் எல்லாம் பாட்டி இதையே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். வள்ளுவராமே - அவருடைய குறளையும் சொல்லி வருகிறவர்களை அசரவைத்து விடுகிறார்கள்
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.
என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறாராமே. மற்ற உயிரனங்கள் அனைத்தும் நம்மை வணங்குவது எவ்வளவு பெரிய விஷயம். அதோடு புண்ணியமும் கூடுமாம்”
“புண்ணியம்னா என்ன?”
“அதெல்லாம் எனக்குத் தெரியாது. பாட்டிதான் சொல்வாங்க - போற வழிக்குப் புண்ணியம் பண்ணனும்னு சொல்வாங்க!”
“அதிகமாப் புண்ணியம் பண்ணீனா என்ன ஆகும்?”
“செத்துப்போன பிறகு சொர்க்கத்திற்குப் போகலாமாம்”
“சொர்க்கம்னா என்ன?”
“அதுவும் எனக்குத் தெரியாது. மீனாட்சிப் பாட்டி வீடு மாதிரி ஒரு இடம்னு வச்சுக்கயேன். பாட்டி போறபோது நானும் பாட்டியோட் அங்கே போயிடலாம்னு இருக்கேன்”
“என்னையும் அங்கே கூட்டிக்கிட்டுப் போறியா, நானும் இன்று முதல் சைவத்துக்கு மாறிடுறேன்”
“ஆகா, நீயில்லாமலா, உன்னையும் கூட்டிக்கிட்டுப்போறேன். பாட்டி போறபோது, நாமும் அவங்களோட போயிருவோம்!”
இதைக் கேட்டவுடன் எலியின் கண்கள் பனித்து விட்டன. அதாவது அதன் கண்களில் நீர் தழும்பி நின்றது. இதல்லவா நட்பு என்ற எண்ணமும் அதன் மனதில் மேலோங்கி நின்றது!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
அய்யா வணக்கம்
ReplyDeleteVanakkam sir
ReplyDeleteவருகை பதிவு..
ReplyDeleteNalla kutties story
ReplyDelete