மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

Galaxy2007 Classroom

Galaxy2007 Classroom

அறிவிப்பு!!!

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை
28-10-2016 தீபாவளி நாள் முதல் மீண்டும்
திறந்து விடப்படுகிறது.
168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு
மின்னஞ்சல் அனுப்புங்கள்
அன்புடன்
வாத்தியார்

14.3.13

கவிதை நயம்: சோறிட்டு, பாயாசத்தால் சொக்கவைத்தான் அவன்!

 கவிதை நயம்: சோறிட்டு, பாயாசத்தால் சொக்கவைத்தான் அவன்!

"நல்ல கவிதைக்கு அடையாளம் அது படித்தவுடன் இதயத்திலும், கண்களிலும் அப்படியே நின்று கொண்டிருக்க வேண்டும்" என்று கவியரசர் கண்ணதாசன்
அவர்கள் அடிக்கடி சொல்வார்கள்.

அதற்கு அடையாளமாக கவியரசர் அவர்களே குறிப்பிட்டு எழுதியிருந்த கவிதை ஒன்றைக் கீழே கொடுத்துள்ளேன்: அது தென்றல் பத்திரிக்கையின் வாசகர் ஒருவர்
அந்தக் காலத்தில் எழுதியிருந்ததாகும்.

"அந்தி வரைஇரந்தேன், அன்பே! பிடியரிசி
தந்தார்; உணவு சமைத்திடுவாய்! - இன்றேனும்
உண்டிடட்டும் நம்சேய்கள்; ஓடிப்போய் காய்சருகைக்
கொண்டுவந்து போட்டுக் கொளுத்து!"

வேலை கிடைக்கவில்லை. வறுமை. காலையிலிருந்து சுற்றினான். கதறி அழுதான்.மாலையில்தான் கிடைத்தது. அதுவும் ஒருபிடி அரிசி. அதைச் சோறாக்கி தன் பசியைத்தீர்க்கவோ அல்லது தன் மனைவியின் பசியைத் தீர்க்கவோ அவன் முயலவில்லை. தன் குழந்தைகளின் பசியைப் போக்கவே அவன் விரும்புகிறான். "ஓடிப்போய்க் கொண்டுவா" என்று சொல்கிறானே - எதை! விறகையா? அவனிடம் ஏது விறகு வாங்கப்பணம்? காய்ந்த சருகுகளைக் கொண்டுவரச் சொல்லுகின்றான் அவன்.  வறுமையின் கொடுமையும், பாசத்தின் தவிப்பும் இந்த வெண்பாவில் பொங்கி வழிவதைப் பாருங்கள்.

இதுபோன்ற கவிதை வரிகள் எப்படி மனதில் நிற்காமல் போகும்?

அது வருத்ததின் வெளிப்பாடு என்றால், மகிழ்சியின் வெளிப்பாட்டைச் சுட்டிக்காட்ட மற்றுமொரு கவிதையைக் கொடுத்துள்ளேன். முன்பு படித்தது. எழுதிய  அன்பர் பெயர் நினைவிலில்லை.

"இஞ்சி முருங்கை இனியதோர் நெல்லிக்காய்
கொஞ்சம் உருளையதும் கூட்டிவர - பஞ்சனைய
சோறிட்டான் பாயாசத்தால் சொக்கவைத்தான் சண்முகனைப்போல்
வேறெவர்தாம் செய்வார் விருந்து!"

அப்படிக் கவிதை என்பது நம்மை உணர்வுபூர்வமாகக் கட்டிப்போட வேண்டும்.

முன்பு ஒருமுறை மக்கள் கவிஞர் திரு.அரு நாகப்பன் அவர்கள் நகரத்தார் வீட்டு விருந்தோம்பலைப் பற்றி எழுதியிருந்த சுவையான கவிதை வரிகளைக்
கொடுத்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக இப்போது அப்பகுதி வீட்டு விசேடங்களில் நடக்கும் விருந்துகளைப் பற்றிக் கவிஞர் பெருமகனார் எழுதிய வரிகளைக் கீழே கொடுத்துள்ளேன். விளக்கம் எதுவும் தேவையின்றி எளிய நடையில் இருப்பதால் அப்படியே கொடுத்துள்ளேன். சுவைத்து மகிழுங்கள்
-----------------------------------------------------------------
"மாப்பிள்ளை பார்த்தாலும் மருந்து குடிச்சாலும்
பூப்பிள்ளை பிறந்தாலும் புதுமனைதான் புகுந்தாலும்

பேசி முடிச்சாலும் புதுமை நடந்தாலும்
சடங்கு கழிச்சாலும் சாந்திமணம் என்றாலும்

ஐயாவீட்டுப் பங்காளி அனைவருமே வருகின்ற
மெய்யாத்தா படைப்பினிலும் மேலான குலதெய்வக்

கொரட்டிப் பூசையிலும் கொப்பாத்தா தேரினிலும்
அடைக்காத்தா படைப்பினிலும் அழகழகாய் விருந்துவைப்பார்

அச்சமின்றி விருந்துவைக்க ஆர்வமுள்ள காரணத்தால்
எச்சிவாளி பெரிதாக எல்லோரும் வைத்துள்ளோம்

அமெரிக்க நடேசன் அரிமளம் பொன்னைய்யா
நெடுங்குடி சின்னைய்யா சிறுவயச் சுப்பையா

மீசைக் கருப்பையா மேலாவட்டை முத்தய்யா
செட்டுச் சமையலுக்கு சீரான மேஸ்திரிகள்

கொக்காய்ப் பறந்தாலும் கொட்டிக் கொடுக்காத
உக்கிரண வள்ளியக்கா ஒழுங்கான நிர்வாகம்

வெத்திலை பாக்கென்றும் வேட்டிக்குச் சோப்பென்றும்
கத்தினாலும் அளவோடு கச்சிதமாயக் கொடுத்திடுவார்

பந்தி விசாரணைக்கு பாகனேரிப் பானாழானா
முந்திவந்து அனைத்தையுமே மோந்துமோந்து ருசிபார்க்க

புலவு சாதத்தைப் போட்டிடுவான் நடேசன்
வளவுவரை பிரியாணி வாசம்தான் கமகமக்கும்

சிப்பாய்கள் அணிவகுத்துச் செல்வதைப்போல் பந்தியிலே
தப்பாமல் கடகாவாளி தானேந்தி வந்திடுவார்

சீப்புச் சட்டியிலே சீரகச் சம்பாவின்
பூப்போன்ற சாதத்தைப் புதுஇட்டு வட்டியினால்

வெள்ளையன் இலையினிலே விறுவிறுப்பாய்ப் போட்டிடுவார்
செல்லாயி பருப்பூற்ற சிகப்பியுமே நெய்யூற்ற

என்ன கறியென்றே எண்ணுகிற வேளையிலே
அன்னக் கிளிபோல அடுத்தவளும் பறந்தோட

பக்கவடாக் குழம்பு பக்கத்திலே வந்துநிற்கத்
தக்கபடி மோர்க்குழம்பு தகதகக்கும் உடல்காட்ட

அன்னியர்கள் யாரும் அறியாத சிறப்புடைய
தண்ணிக் குழம்பதுவும் தக்காளி சூப்பதுவும்

சட்டியிலே ஊற்றிவைத்த கட்டித் தயிரையுமே
விட்டு முடித்தவுடன் விறுவிறுப்பாய்ப் பந்தியிலே

தண்ணீரைக் குடுக்கிற சின்னப் பயல்கூட
ஒண்ணுக்கும் லாயக்கில்லை; உதவாக் கரையென்று

பலபடியாய்ச் சத்தம் பயங்கரமாய் வந்தாலும்
பழப்பாயா சத்துடனே பந்தியினை முடித்திடுவார்

பந்தியிலே விருந்துவைக்கும் பண்பாட்டைத் தனியாகச்
சிந்தித்தால் நாம்தானே சீரோங்கி நிற்கின்றோம்

---------------------------------
கவிஞர் அவர்கள் எழுதியிருந்த வரிகளில் அத்தனை வரிகளுமே சுவையானததுதான் என்றாலும் கட்டுரையின் நீளம் கருதி சிலவரிகளை மட்டுமே கொடுத்துள்ளேன்.

எப்படி இருந்தது விசேடத்தில் விருந்தோம்பல்? சுவையாக இருந்ததல்லவா?

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++==

14 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... சுவைத்தேன் ஐயா...

அய்யர் said...

உணவை சுவைக்க தந்தீரா
உள்ளபடியே சொல்லுங்கள் - கவிதை

உணர்வை சுவைக்க தந்தீரா
உங்களுக்கு நன்றி தவிர - இந்

நா உங்களுக்கு
நன்றியை தானே சொல்லும்

வாழ்க பலமுடன்
வளர்க நலமுடன்

SP.VR. SUBBAIYA said...

////Blogger திண்டுக்கல் தனபாலன் said...
அருமை... சுவைத்தேன் ஐயா...////

சுவைத்ததைத் தெரியப்படுத்திய மேன்மைக்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger அய்யர் said...
உணவை சுவைக்க தந்தீரா
உள்ளபடியே சொல்லுங்கள் - கவிதை
உணர்வை சுவைக்க தந்தீரா
உங்களுக்கு நன்றி தவிர - இந்
நா உங்களுக்கு
நன்றியை தானே சொல்லும்
வாழ்க பலமுடன்
வளர்க நலமுடன்/////

எழுத்தில் எதைத் தர முடியுமோ அதைத் தந்தேன். விசுவநாதன். தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

GOWDA PONNUSAMY said...

அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
இன்றைய பதிவு பங்குனி மாத பிறப்பு என்பதால் படைக்கப் பட்ட விருந்து என எடுத்துக் கொள்ளலாமா?.சுவையான விருந்து,அதுவும் நகரத்தார் விருந்து எனில் சொல்லவும் வேண்டுமோ.வயிறு நிரம்பியது.ஆயினும்,முதல் கவிதையில் பிடி அரிசியை சேய்களுக்கென சமைப்பதற்க்கு காய்ந்த சருகு தேடுவதை படித்த போது மனம் நொந்தது.நெகிழ்வான கவிதை.
நன்றியுடன்,
-Peeyes.

GOWDA PONNUSAMY said...

அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.இன்றைய ஒரு சூடான செய்தி.நிலமற்ற ஏழைகளுக்கு பண்ணை வீடு இலவசம்-மத்திய அரசு திட்டம்.செய்தி வெளியான நேரம் 12-25 மணி.இது நடைமுறைக்கு வருமா என்பது பிரசன்ன ஜோதிடத்தில் தெரிய வருமே.உஷ்ஷ்ஷ்...இது ரகசியம்.
நன்றியுடன்,
-Peeyes.

சர்மா said...

அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்
கவிதையின் இனிமை விருந்தைவிட ப்பிரமாதம் இந்த இனிமை இனிவரும் காலத்தில் வரும் சந்ததியினருக்கு கிடைக்குமா

Bhuvaneshwar said...

அன்புள்ள வாத்தியாரே,
வணக்கம்.

இன்றைய பாட ஹைலைட் இது தான்.

"அந்தி வரைஇரந்தேன், அன்பே! பிடியரிசி
தந்தார்; உணவு சமைத்திடுவாய்! - இன்றேனும்
உண்டிடட்டும் நம்சேய்கள்; ஓடிப்போய் காய்சருகைக்
கொண்டுவந்து போட்டுக் கொளுத்து!"

இந்தப்பாடலில், மாலை வரை வேலையில்லாமல் பிச்சை எடுப்பவனாக இருந்தாலும், உரிமையுடன் அன்பே என்று அழைக்கவும், பிள்ளைகளுக்கு சோறு சமை என கட்டளை இட்டால் பணியவும் கூடிய ஒரு மனைவி அவனுக்கு வாய்த்தாளே அனைவருக்கும் 337!

உண்மையிலேயே மிகக்கொடுத்து வைத்தவன் தான். எத்துனை வறுமை இருந்தாலும் நம்மேல் அன்பு காட்ட ஒரு துணையாக ஒரு ஜீவன் இருக்குமேயானால் அது வரம் தான்.

காலகாலதாசன்
புவனேஷ்

kmr.krishnan said...

//"பந்தி விசாரணைக்குப் பாகனேரி பானாழானா"//

இந்த பாகனேரி என்ற ஊருக்கு ஒரு நகரத்தார் வீட்டுக் கலயாணத்திற்குச் சென்ற‌
அனுபவம் உண்டு.ஆமாம் நல்ல பந்தி விசாரணைதான்.

தஞ்சாவூர் பக்கம் 'திருப்பூந்துருத்தி உபசாரம்' என்ற சொல்லடை உண்டு.
வெறும் வாய்ப்பந்தலாக இருக்கும் செயலில் ஒன்றும் வராது என்பதற்கு அப்படி நக்கலாகச் சொல்லுவார்கள்.

""ஐயா நம்ம வீட்டுக்கு வரமாட்டீக! வந்தாலும் காப்பி சாப்பிட மாட்டீக!காப்பிய ஒரு வேளை சாப்பிட்டாலும் கை நனைக்க மாட்டீக!கை நனைச்சாலும் இலைக்கடியில காசு வைக்காம போக மாட்டீக!"என்பதாக ஒரு உபசாரம்.

ஐயாவும் நானும் சாப்பாடு விஷயமாக முன்பொரு காலத்தில் அதிகம் உரையாடுவோம்.அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது.

புதிதாக சேர்ந்துள்ள நண்பர்கள் இதே வலை தளத்தில் 13 பிப்ரவரி 2011 ல்
அடியேன் கொடுத்துள்ள திருமண சமையல் மெனுவை வாசித்து ருசிக்கவும்.

SP.VR. SUBBAIYA said...

/////Blogger GOWDA PONNUSAMY said...
அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
இன்றைய பதிவு பங்குனி மாத பிறப்பு என்பதால் படைக்கப் பட்ட விருந்து என எடுத்துக் கொள்ளலாமா?.சுவையான விருந்து,அதுவும் நகரத்தார் விருந்து எனில் சொல்லவும் வேண்டுமோ.வயிறு நிரம்பியது.ஆயினும்,முதல் கவிதையில் பிடி அரிசியை சேய்களுக்கென சமைப்பதற்க்கு காய்ந்த சருகு தேடுவதை படித்த போது மனம் நொந்தது.நெகிழ்வான கவிதை.
நன்றியுடன்,
-Peeyes./////

நல்லது. உங்கள் நெகிழ்ச்சிக்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger GOWDA PONNUSAMY said...
அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.இன்றைய ஒரு சூடான செய்தி.நிலமற்ற ஏழைகளுக்கு பண்ணை வீடு இலவசம்-மத்திய அரசு திட்டம்.செய்தி வெளியான நேரம் 12-25 மணி.இது நடைமுறைக்கு வருமா என்பது பிரசன்ன ஜோதிடத்தில் தெரிய வருமே.உஷ்ஷ்ஷ்...இது ரகசியம்.
நன்றியுடன்,
-Peeyes./////

காலத்தால் அது கனியட்டும். அதுவாகக் கனிந்தால்தான் ருசி!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger சர்மா said...
அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்
கவிதையின் இனிமை விருந்தைவிட ப்பிரமாதம் இந்த இனிமை இனிவரும் காலத்தில் வரும் சந்ததியினருக்கு கிடைக்குமா/////

கிடைக்கும். கிடைக்க வாழ்த்துவோம்! டெக்னாலஜி அதற்கு உதவும்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Bhuvaneshwar said...
அன்புள்ள வாத்தியாரே,
வணக்கம்.
இன்றைய பாட ஹைலைட் இது தான்.
"அந்தி வரைஇரந்தேன், அன்பே! பிடியரிசி
தந்தார்; உணவு சமைத்திடுவாய்! - இன்றேனும்
உண்டிடட்டும் நம்சேய்கள்; ஓடிப்போய் காய்சருகைக்
கொண்டுவந்து போட்டுக் கொளுத்து!"
இந்தப்பாடலில், மாலை வரை வேலையில்லாமல் பிச்சை எடுப்பவனாக இருந்தாலும், உரிமையுடன் அன்பே என்று அழைக்கவும், பிள்ளைகளுக்கு சோறு சமை என கட்டளை இட்டால் பணியவும் கூடிய ஒரு மனைவி அவனுக்கு வாய்த்தாளே அனைவருக்கும் 337!
உண்மையிலேயே மிகக்கொடுத்து வைத்தவன் தான். எத்துனை வறுமை இருந்தாலும் நம்மேல் அன்பு காட்ட ஒரு துணையாக ஒரு ஜீவன் இருக்குமேயானால் அது வரம் தான்.
காலகாலதாசன்
புவனேஷ்///////

கடவுள் எல்லாக் கதவுகளையும் அடைப்பதில்லை. இது போன்று சில கதவுகள் திறந்திருக்கும்! (வறுமையிலும் அன்பு செலுத்தும் மனைவி)

SP.VR. SUBBAIYA said...

//////Blogger kmr.krishnan said...
//"பந்தி விசாரணைக்குப் பாகனேரி பானாழானா"//
இந்த பாகனேரி என்ற ஊருக்கு ஒரு நகரத்தார் வீட்டுக் கலயாணத்திற்குச் சென்ற‌
அனுபவம் உண்டு.ஆமாம் நல்ல பந்தி விசாரணைதான்.
தஞ்சாவூர் பக்கம் 'திருப்பூந்துருத்தி உபசாரம்' என்ற சொல்லடை உண்டு.
வெறும் வாய்ப்பந்தலாக இருக்கும் செயலில் ஒன்றும் வராது என்பதற்கு அப்படி நக்கலாகச் சொல்லுவார்கள்.
""ஐயா நம்ம வீட்டுக்கு வரமாட்டீக! வந்தாலும் காப்பி சாப்பிட மாட்டீக!காப்பிய ஒரு வேளை சாப்பிட்டாலும் கை நனைக்க மாட்டீக!கை நனைச்சாலும் இலைக்கடியில காசு வைக்காம போக மாட்டீக!"என்பதாக ஒரு உபசாரம்.
ஐயாவும் நானும் சாப்பாடு விஷயமாக முன்பொரு காலத்தில் அதிகம் உரையாடுவோம்.அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது.
புதிதாக சேர்ந்துள்ள நண்பர்கள் இதே வலை தளத்தில் 13 பிப்ரவரி 2011 ல்
அடியேன் கொடுத்துள்ள திருமண சமையல் மெனுவை வாசித்து ருசிக்கவும்.//////

விருந்தோம்பலில், பந்தி விசாரணையும் ஒரு முக்கிய அங்கம். எங்கள் பகுதியில், எல்லா விஷேசங்களிலும் விருந்துடன், பந்தி விசாரணையும் இருக்கும். நன்றி!