மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

13.7.12

கவிதைச் சோலை: இடது கண் ஒரு சொல்; வலது கண் ஒரு சொல்!

கவிதைச் சோலை: இடது கண் ஒரு சொல்; வலது கண் ஒரு சொல்!

குருவின்றி வித்தையைக் கற்றவன் நெஞ்சிலே
      குடிகொள்ள அமைதி யிலையே
குழைகின்ற கையிலும் வளைகின்ற மெய்யிலும்
      குணங்காண ஒருவ ரில்லையே
இருவென்று சொல்லாமல் இருப்பதைத் தந்தாலும்
      எவர்பாலும் நன்றி யிலையே;
இடதுகண் ஓர்சொலும் வலதுகண் ஓர்சொலும்
      எடுத்துரைக் கின்ற உலகில்
மருவொன்று மில்லாத வாழ்க்கை அறியாத
      மனிதனைப் படைத்த சிலையே
மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்
      மதுரைமீ னாட்சி உமையே!
                                       - கவியரசர் கண்ணதாசன்
+++++++++++++++++++++++++++++++++++++++++++
2

Mental health கனிவான பேச்சு!

மனவளக் கட்டுரை

கனிவான பேச்சும், புன்னகையும் உளவியல் ரீதியாக  எதையும் சாதிக்க வல்லது!  எப்படிப்பட்ட இறுக்கமான சூழ்நிலையையும் அவை இரண்டும் மாற்றி விடும்.

கணவர் வேலைக்குக் கிளம்புகின்றார். சென்னை அம்பத்தூரில் வீடு என்றும், அவர்  தாம்பரம் எக்ஸ்போர்ட் ஜோனில் உள்ள கணினி மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலை  செய்கின்றார் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். வீட்டிலிருந்து நாற்பது கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டிய கவலை அவருக்கு இருக்கும்.  அந்த நேரத்தில் மாலையில் நடைபெறவுள்ள திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றிற்கு அவருடன் நீங்களும் கலந்து கொள்ள வேண்டியதிருப்பதை அவருக்கு நினைவு படுத்த விரும்புகின்றீர்கள் என்றும்  வைத்துக் கொள்ளுங்கள். அதை எப்படி நினைவுபடுத்த வேண்டும்?

"வழக்கம்போல ஆபீஸைக் காரணம் காட்டி லேட்டாக வராம, இன்னிக்குக் கொஞ்சம் சீக்கிரம் வாங்க, ரிசப்சனுக்குப் போக வேண்டும்" என்று சொல்வதை விட,

"என்னங்க வீடு தேடி வந்து நம்மைக் கூப்பிட்டுவிட்டுப்போன இரண்டு நல்ல உள்ளங்களைச் சந்தோஷப்படுத்தின புண்ணியம் நமக்குக் கிடைக்கும், சாயந்திரம் ரிசப்சனுக்குப் போகவேண்டும், அதனால சிரமம் பார்க்காமல்.... கொஞ்சம் சீக்கிரமாக வந்தீங்கன்னா, நல்லாயியிருக்கும்" என்று கனிவாகச் சொன்னீர்களென்றால் அதன் விளைவே தனியாக இருக்கும்

அதை வலியுறுத்தும் விதமாகத்தான் வள்ளுவர் பெருந்தகையும்,

"இனிய   உளவாக   இன்னாத   கூறல்
கனியிருப்பக்  காய்கவர்ந்  தற்று" என்றார்

இனிய சொல் பழத்திற்கு சமமானது. கடுஞ்சொல் காய் போன்றது. கனியிருக்கும்போது  காயைச் சுவவைக்காதீர்கள் என்றார் அவர்.

கணவர் அல்லது மனைவி, மாமனார், மாமியார், வயதில் பெரியவர்கள் என்று மற்றுமின்றி குழந்தைகளிடமும் நாம் கனிவாகப் பேசுவது மிகமிக அவசியம்.

தொலைக்காட்சியை விரும்பிப் பார்க்கும் குழந்தையைக் கடிந்து கொண்டு, "Bogo TV பார்க்காதே! Cartoon Channel பார்க்காதே என்று எததனை தடவை சொல்வது? இரு இந்தமாதத்தோடு கேபிள் இணைப்பைக் கட் பண்ணி விடுகிறேன், உன் தொல்லை பெரிய தொல்லையாக இருக்கிறது!"  என்று கத்திச் சொல்வதைவிட,

“கண்ணா வா, முதல்ல   Home Workஐ எல்லாம் செய்து முடி, பிறகு நானும் வந்து உட்கார்ந்து கொள்கிறேன். இரண்டு பேருமா சேர்ந்து டி.வி பார்க்கலாம், என்ன சரியா?" என்று கனிவாகச் சொல்லுங்கள், குழந்தை கேட்டுக் கொள்ளும்.

உங்கள் குழந்தையைக்,"கெட்டிக்காரன்டா நீ" ,  "சமர்த்துடா கண்ணா!"  என்று அடிக்கடி புகழுங்கள். ஏதேனும்  தவறு  செய்தால் கண்டிப்பதைவிடக், "கெட்டிக்காரனனான  நீயா இப்படி செய்தாய்?" என்று ஆச்சரியப்படுவதைப் போல கேளுங்கள். அதன் விளைவுகள் அற்புதமாக இருக்கும்

ஜப்பான் நாட்டுப் பெண்களின் குழந்தை வளர்ப்பைப் பற்றிச் சிலாக்கியமாகச் சொல்வார்கள். அதாவது சிறப்பாகச் சொல்வார்கள். தன் குழந்தை ஏதாவது தவறு செய்யும்போது ஜப்பான் நாட்டுத்தாய் இப்படிச் சொல்வாளாம்:

"ஜப்பான்  நாட்டுப் பையன்கள் இதுபோன்ற புத்திசாலித் தனமில்லாத காரியத்தைச் செய்ய மாட்டார்களே, கண்ணா! நீயும் ஜப்பான் நாட்டுச் செல்வமாயிற்றே எப்படி செய்தாய்?"

அந்தக் குழந்தை அதைக் கேட்டுத் தன் தவறைத் திருத்திக் கொள்வதோடு, அடிக்கடி தன் தாயிடமிருந்து வரும் அத்தகைய கனிவான சொற்களால், கொஞ்ச நாட்களில், அதுவே சொல்ல ஆரம்பிக்குமாம். "அம்மா, நான் ஜப்பான் நாட்டுப் பையன் இது போன்ற சில்லி மிஸ்டேக் எல்லாம் செய்ய மாட்டேன்"

ஒரே செயலால் மூன்று பலன்கள். அந்தக் குழந்தைக்கு தன்னம்பிக்கை ஏற்படும், நாட்டுப் பற்று ஏற்படும். தவறு செய்யக் கூடாது என்ற முனைப்பும் ஏற்படும்.

அதுபோல  குழந்தைகளைக் கண்டிக்கும்போது எதிர்மறையான  அணுகுமுறைகளைக் கையாளாதீர்கள்.. அவர்களூடைய பல‎ங்களை எடுத்து சொல்லி, இன்னும் சிறப்பாக  எப்படி செய்யலாம் என்று கனிவாகச் சொல்லுங்கள்.

உங்களுடைய கனிவான பேச்சின் விளைவால் அவர்களுக்குத் தன்னம்பிக்கையும், ஊக்கமும் ஏற்பட வேண்டும்.

அதே நேரத்தில் ஊக்கம் கொடுக்கிறேன் பேர்வழி,  எ‎ன்று  சின்ன சின்ன விஷயங்களைக் கூட ஏதோ உலக சாதனை செய்து விட்டதைப் போல அனாவசியமாகப்  புகழ்ந்து  தள்ளாதீர்கள்.  உங்கள் பாராட்டு என்பது, தேவையான அளவில் - அதுவும்  நிஜமான பாராட்டாக இருக்க வேண்டும்.. அதை  நினைவில்  கொள்ளுங்கள்.

நீங்கள் வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறீர்கள். தெருவில் ஒருவன் உங்களை மடக்கி நிறுத்துகிறான். என்ன என்று கேட்கும்போது, “அவசரமாகப் போக வேண்டும். கொஞ்சம் லிஃப்ட் கொடுக்கிறீர்களா? என்று கேட்டால், எப்படி நடந்து கொள்வீர்கள்? உங்களுக்குக் கோபம் வருமா, வராதா?

அதே நிலையில், உங்களை மடக்கி நிறுத்தியது, ஒரு காவல்துறை அதிகாரி என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது உங்களுக்குக் கோபம் வருமா? நிச்சயம் வராது. வண்டியை விட்டு இறங்கி, அவர் கேட்கும் கேள்விகளுக் கெல்லாம் பதில் சொல்லத் தயாராகி விடுவீர்கள். அங்கே  தன்னிச்சையாக  உங்கள் பேச்சில் ஒரு கனிவு வந்து விடும்.

ஒரு அரசு அலுவலகம், அல்லது ஒரு பொது இடம் அல்லது உங்கள் அலுவலகம் என்று எந்த இடத்திலுமே, கனிவாகப் பேசிப் பாருங்கள். விளைவுகள் உங்களுக்குச் சாதகமாக இருக்கும். நீங்கள் நினைப்பதைவிட எளிதாக இருக்கும்.

"கடவுள்   எல்லா இடங்களிலும் இருக்க முடியாது. அதனால்தான் தாயைப் படைத்தார்" என்று  தாயின் உயர்வைக் கடவுளின் உயரத்திற்கு உயர்த்திச் சொன்னான் ஒரு ஞானி!

கருணை மிக்கவர்  கடவுள்  மட்டுமல்ல  தாயும்தான்  என்றான் அதே ஞானி!

கருணையின் முதல் வெளிப்பாடு கனிவு தானே!  தாயின் முதல் பண்பும் தன் குழந்தைகளிடத்துக் கனிவோடு  இருப்பதுதானே!

அதனால் ஒரு தாயைப் போலவே நாமும் இன்று முதல் அனைவரிடமும் கனிவாகப் பேசுவோம்

அன்புடன்,
வாத்தியார்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

36 comments:

kmr.krishnan said...

கண்கள் எப்படி சொல் சொல்லும் என்று கவிஞரைக்கேட்டால், அதற்கும் கவிதை ஒன்றைச் சொல்லுவார். நாக்கைவிட கண்களே நல்ல 'கம்யூனிகேட்டர்'.கண்கள்தான் மனத்தின் ஜன்னல்.ஒருவரிடம் ஒரு செய்தியைச்சொல்லும் போது அவருடைய எண்ணவோட்டத்தை அறியக் கண்களை கவனித்தாலே போதும்.கவிஞரின் நல்ல கவிதையைத் தந்தமைக்கு நன்றி அய்யா!

சுபாஷிணி என்றால் இனிமையாகப் பேசுபவள் என்று பொருள்.தேன்மோழி,
கனிமொழி என்பதெல்லாம் அவர்கள் பேச்சு அவ்வாறு இனிமையுடன் அமைய வேண்டும் என்று எதிபார்த்தே. கனிவான பேச்சு இயல்பாகக் கொண்டவர்கள் மிகக் குறைவே.மனவளக்கட்டுரையெல்லாம் வாசித்து எவ்வளவுதான் பயிற்சி எடுத்தாலும்,இயல்புதான் மேலே மிதந்துவரும்.

தமிழில் இப்போதெல்லாம் மனநோயாளிகளைக் குறிப்பிட பைத்தியம், 'லூசு' என்பதை விட "ரீஜெண்டா"(டீஸென்டா) 'மென்டல்' என்கிறார்கள் அய்யா!
எனவே 'மென்டல் ஹெல்த்' என்பதைத் தூக்கிவிடுங்கள் அய்யா! 'மனவளம்' மட்டும் போதும்.இது எனது வேண்டுகோள்.

சரண் said...

பல இடங்களில் ஒரு தவறு செய்து விட்டார் என்று ஒருவர் மீது கோபம் வருவதை விட, செய்யுறதையும் செஞ்சுட்டு திமிரா பேசுறான் பாரு என்ற வேகம்தான் அதிகம் இருக்கும். ஒருவர் ஒரு காரியத்தை செய்ய வில்லை என்றால் கூட அதை அவர் (அல்லது நாம்) கனிவுடன் மறுத்தால் அல்லது எடுத்துச்சொன்னால் நிச்சயம் தவறாக எண்ணத் தோன்றாது. ஆனால் எல்லா இடங்களிலும் கனிவு வேலைக்கு ஆகாது. எல்லா இடங்களிலும் கனிவாக பேசிக்கொண்டே இருந்தால் நாம் ஏமாளிகளாக கருதப்பட்டு மற்றவர்கள் சவாரி செய்யும் குதிரைகளாக நாம் ஆக்கப்படுவோம். அதற்காக சுடு சொற்களை உபயோகிக்க வேண்டியதில்லை. அதுவும் பூமராங் மாதிரி நம்மை திருப்பித்தாக்கும். நம் நிலையை உறுதியாக சொல்லி கண்டிப்பு காட்ட வேண்டிய இடமும் உண்டு.

ஸ்ரீராம். said...

கனிவாகப் பேசுவதும் புன்னகை முகத்துடன் இருப்பதும் ஒரு கலை. இப்படிப் புன்னகை முகத்துடன் இருப்பவர்களை 'இளிச்சவாயர்கள்' ஆக்கும் நம் சமூகம்! சிற்சில இடங்களில் நாள் முழுவதும் இப்படிக் கனிவுடன் இருக்க வேண்டிய இடங்கள் உள்ளன. ரொம்பச் சிரமமான விஷயம். உதாரணமாக பேருந்து நடத்துனர்கள், சமையல் வாயு நிறுவனத்தில் பேசுபவர்களும், அதை வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்பவர்களும் இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே இனிமையாக இருக்கிறது!

திருநெல்வேலி கார்த்திக் said...

courtesy opens all the doors in this world

kmr.krishnan said...

மக்கள் அவைத் தலைவர் திருமதி மீராகுமாருக்கு எப்போதும் புன்னகை சிந்தும் உதடும், கனிவை, கனவைக் காட்டும் கண்களும் இயற்கையாக அமைந்துள்ளன‌.
சில சமயம் நினைவு இடங்களில் மலர் வளையம் வைக்கும் போதும் முகம் மாறாமல் அப்படியே இருக்கிறது.

முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு இதற்கு நேர் மாறாக முக அமைப்பு கடு கடுப்பாக இருக்கும்.அதுவும் இயற்கைதான்.

Anonymous said...

அழகான பயனுள்ள கட்டுரை.
பொறுமையுடன் இந்த சரியான அணுகுமுறையைக்
கடைபிடித்தால் பலன் நிச்சயம்.

அய்யர் said...

முகத்திரண்டு புண் உடையார் என்பார் வள்ளுவர்..

கண்களை நம்பாதே என்றொர் பாடல் நினைவுக்கு வருகிறது..

கவிஞர் பாடல் என்றால் சுவையில்லாமலா.. நம்ம ஊர்
கருப்பட்டி கசக்கவா செய்யும்?

இது தனிப்பாடல் தான் என்றாலும்
கடவுள் தொடர்பான பாடலா தெரியவில்லை

....

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயனில்லா சொல்
என்கிறது வள்ளுவம்
எதை பேசவேண்டும், எப்படி பேசவேண்டும், எங்கு பேசவேண்டும், ஏன் பேசவேண்டும், எதற்காக பேசவேண்டும் என குறிக்கவே இந்த குறளில் 5 முறை சொல் வருவதாக சொல்லுவர்..

பேச்சு பேச்சாக இருந்தால் சரி
கூச்ச(லாக) இருந்தால்
நல்ல கட்டுரைக்கு
நன்றி.. நல்வாழ்த்துக்களுடன்..

Bhuvaneshwar said...

Present Sir!

Bhuvaneshwar said...

Superb post. Loved it, Sir.

இனியன கூறல் நம் பண்பாட்டுக்கு இசைந்த ஒன்று.

"இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று"

எத்துணை உண்மையான வார்த்தைகள். மனத்தில் அன்பு இருந்தால் வார்த்தையில் கனிவு இருக்கும். வார்த்தையில் கனிவு இருந்தால் இனிய பேச்சு அமையும். அப்படி அமைந்தவனுக்கு எதிரிகள் தான் யார்? யாரும் இருக்க முடியாது. அப்படியே இருந்தாலும் அவனை ஒன்றும் பண்ண முடியாது. எல்லாரிடமும் குணவான் என பெயர் எடுத்த ஒரு பண்பாளனை ஓரிரு எதிரிகள் என்ன புரட்டி விட முடியும்?

சொற்கள் நம் வசம் உள்ள கருவிகள். எந்த நேரத்தில் எப்படி உபயோகிக்க வேண்டும் என தீர்மானிப்பது ஒருத்தனின் PR skills பொறுத்த விஷயம்.

எந்நேரமும் இனிமையாக பேசுவதும் impractical- சில இடங்களில் கோபம் போல காட்டினால் தான் கார்யம் நடக்கும். சிவ பெருமான் முருகனை கோபித்து போல நடித்தார் - "மைந்தனை வெகுள்வான் போல" என்று என சொல்லும் இலக்கியம். மயிலே மயிலே என்றால் இறகு போடாது!

அதே சமயம் எந்நேரமும் சிடு சிடு என்று இருந்தால் அவன் கோபத்துக்கு மதிப்பு இல்லாமல் போய் விடும். அவன் கோபமும் இயல்பான ஒன்றாக ஆகி, யாரும் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார்கள்.

சாது கோபித்தால் ஏதோ விஷயம் இருக்கு போலயே என என்னும் மக்கள் முன் கோபி கோபித்தால், "அதுக்கு (!!!) அது தான் வேலை, புத்தி அப்படி தான் விட்டு தள்ளு" என்று சொல்லும் அல்லவா?

நீதி சாஸ்திரத்தில் ஒப்பற்ற நிபுணர் அசுர குரு சுக்ராச்சார்யார் (நமது சுக்கிரன் தான்).

அவர் ஒரு சந்தர்ப்பத்தில், கோபம் கொண்ட தன் மகள் (சிறு குழந்தை) தேவயானிக்கு சுக்ராச்சார்யார் உபதேசிக்கிறார்:

"எவன் ஒருவன் பாம்பு சட்டையை உரிப்பது போல கோபத்தை உரித்து அகற்றுகிறானோ, அனவே தீரன். கோபத்தை அடக்கியாளுபவனே தீரன். கோபத்தை அடக்கி ஆளுபவனே கார்ய சித்தி அடைகிறான். கோபம் உடையவனை பெற்றோரும், கட்டிய மனையாளும், குழந்தைகளும், பணியாட்களும், நண்பர்களும் உறவினர்களும் வெறுத்து விலகுவர்" என்று சொல்லுகிறார்.

ரிக், யஜுர், சாம உபாகர்மாக்களில் ஒரு மந்தரப் பிரயோகம் வரும்: பதிவுக்கு சம்பந்தம் உடையது என்பதால் இங்கே கூறுகிறேன்.

"காமோ அகார்ஷீன்னமோ நம:
காமோ கார்ஷீத் காம: கரோதி நாஹம் கரோமி
காம: கர்த்தா நாஹம் கர்த்தா
காம: காரயிதா நாஹம் காரயிதா
ஏஷ தே காம காமாய ஸ்வாஹா|
மன்யுரகார்ஷீன்னமோ நம:
மன்யுரகார்ஷீன்மன்யு: கரோதி நாஹம் கரோமி
மன்யு: கர்த்தா நாஹம் கர்த்தா
மன்யு: காரயிதா நாஹம் காரயிதா
ஏஷ தே மன்யோ மன்யவே ஸ்வாஹா||"

சுருக்கமாக சொல்வதென்றால் இதன் பொருள் "காமம் தான் பாபம் பண்ணியது, கோபம் தான் பாபம் பண்ணியது" என்று வரும்.

இதையே இன்னும் பலருக்கும் தெரிந்த பழமொழியாக சொல்லுவதென்றால் "கோபம் பாபம் சண்டாளம்" என்போம்.

ஜி ஆலாசியம் said...

இருவிழிகளில் இருவேறு மொழிகள்
இடது ஆமாம், ஆமாம் என்றும் அதேவேளை
வலதோ இல்லை எல்லாம் சும்மா என்ற
செய்கையும் காட்டும் என்று அழகாய்
கவிதை செதுக்கியுள்ளார்.
நமது கவியரசர் அமரர் கண்ணதாசனார்.

*********************************************************
சொல் என்பது எத்தனை பலமானது என்பதை நமது முன்னோர்கள் பலவாறு விளக்கி இருக்கிறார்கள்.
கம்ப ராமாயணத்திலே அந்தப் பெருமைக்கு முதலிடம் கிடைத்தது அனுமனுக்கே! செஞ்சொல் வேந்தன் என்பார்கள்.

''கண்டே சீதையை'' என்பான் அனுமன். சீதையை.... என்று ஆரம்பிக்கும் போது அடுத்த வார்த்தை எப்படி இருக்குமோ என்று அந்த வார்த்தை பிரயோகமாகும் முன் அந்த ஒரு கணம் கூட நமது பிரபு துயருரக் கூடாது என்று மிகவும் கவனமாக அனுமன் உரைத்தான் என்று பெரிய மனவியழ்த் தத்துவத்தை மிகவும் அழகாக.. அந்தக் காட்சியை படம் பிடித்துக் காட்டி இருப்பான் கவிச்சக்ரவர்த்தி... கம்பன் அதனாலே அவன் கவிச் சக்ரவர்த்தி...

இங்கே தங்களின் கட்ட்ருரையிலும் ஒரு சிறிய உதாரணம் தந்து மிகவும் அழகாக...
இனிய சொல்லுக்கு எமலோகம் அனுப்ப வரும் எதிரியையும்
கனிவானவனாக்கும் வல்லமை உண்டு சொல்வதைப் போல...

அருமையானக் கருத்துக்களை உதாரணத்தோடு புதியப் படம் பிடித்துக் காட்டி இருக்கிறீர்கள்.
இனிமையான சொற்கள் தாமே இறைவனையும் கண்டுணரச் செய்கிறது எனலாம்..

மிகவும் அருமையான பதிவு பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!

Bhuvaneshwar said...

அன்புக்கும் மதிப்புக்கும் உரிய சகோதரர் ஆலாசியம் அவர்களின் பின்னூட்டத்தை நான் வழி மொழிகிறேன்.

வால்மீகி சொல்வார் ஹனுமான் வாய்மொழியாக "த்ருஷ்டா தேவி" என்று. "தேவி த்ருஷ்டா" என்று சொல்லவில்லை. For the same reason.

அதையே கம்பர் பின்பற்றி கண்டேன் சீதையை என்று போட்டிருக்கிறார்.
மகான்களுக்குள் மொழி பேதம் கிடையாது என்பதற்கு சான்று இது!

"புத்திமதாம் வரிஷ்டம்" (அறிவாளிகளுக்குள் தலையாயவன்) என்ற பெயர் உடைய ஹனுமான் "நவ வியாகரண வேத்தா", சொல்லின் செல்வன், இப்படி பேசியதில் வியப்பில்லை!

Udhaya Kumar said...

குருவிற்கு வணக்கம்,
கனிவு வேண்டும், எல்லேர்யிடத்திலும்.
தாய் தான் நம்மிடத்தில் கனிவுடன் நடந்து கொள்வாள், அதன்னலலோ
"தாயை" கடவுளின் உயரத்திற்கு உயர்த்திச் சொன்னாரோ ஒரு ஞானி!
இன்றைய மனவளக் கட்டுரை
கனிவுடன் நடப்பது பற்றி தந்தமைக்கு
நன்றி குருவே|

arul said...

nalla karuthu

Parvathy Ramachandran said...

கவியரசரின் அற்புதப் பாடலைப் படிக்கத் தந்தமைக்கு நன்றி.

'மருவொன்று மில்லாத வாழ்க்கை அறியாத
மனிதனைப் படைத்த சிலையே'

எத்தனை அருமையான வரிகள். என்ன ஆழமான பொருள்!!

மனவளக் கட்டுரை, இக்காலக் கட்டத்தில் மிக அவசியமான ஒன்று.

//கணவர் அல்லது மனைவி, மாமனார், மாமியார், வயதில் பெரியவர்கள் என்று மற்றுமின்றி குழந்தைகளிடமும் நாம் கனிவாகப் பேசுவது மிகமிக அவசியம்.//
வயதில் பெரியவர்களிடம் பேசும்போது,

'செல்லா இடத்துச் சினந் தீது' என்பதையும்,

குழந்தைகளிடத்துப் பேசும்போது, 'செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான்'
என்பதையும் நினைவில் கொள்வது நமக்கும் அவர்களுக்கும் நல்லது. பதில் பேசமாட்டார்கள் என்பதால், நம் கோபத்தைக் குழந்தைகளிடம் காட்டினால் அவர்கள் எதிர்காலம் என்னாவது?

கவியரசர், அர்த்தமுள்ள இந்து மதத்தில், சொல் மங்கலம், பொருள் மங்கலம்
குறித்து, நாச்சியார் திருமொழியை உதாரணம் கொண்டு மிகச் சிறப்பாக விளக்கியிருப்பார். ஆன்மீக சம்பந்தமாக எழுதும் போது ஒவ்வொரு முறையும் அவரது அறிவுரையை நினைவில் கொண்டே எழுதுகிறேன்.

'இறைவனுக்கு அளிக்கிறேன்' என்பதை, 'இறைவனுக்கு சமர்ப்பிக்கிறேன்' என்று எழுதுவது மானசீகமாகவும் ஒருவித அமைதியை, பணிவை ஏற்படுத்துவதை உணர்ந்திருக்கிறேன்.

அருமையான பதிவை அழகான உதாரணங்களுடன் நிறைவாக விளக்கிக் கொடுத்திருக்கிறீர்கள். தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

SP.VR. SUBBAIYA said...

//////Blogger kmr.krishnan said...
கண்கள் எப்படி சொல் சொல்லும் என்று கவிஞரைக்கேட்டால், அதற்கும் கவிதை ஒன்றைச் சொல்லுவார். நாக்கைவிட கண்களே நல்ல 'கம்யூனிகேட்டர்'.கண்கள்தான் மனத்தின் ஜன்னல்.ஒருவரிடம் ஒரு செய்தியைச்சொல்லும் போது அவருடைய எண்ணவோட்டத்தை அறியக் கண்களை கவனித்தாலே போதும்.கவிஞரின் நல்ல கவிதையைத் தந்தமைக்கு நன்றி அய்யா!
சுபாஷிணி என்றால் இனிமையாகப் பேசுபவள் என்று பொருள்.தேன்மோழி,
கனிமொழி என்பதெல்லாம் அவர்கள் பேச்சு அவ்வாறு இனிமையுடன் அமைய வேண்டும் என்று எதிபார்த்தே. கனிவான பேச்சு
இயல்பாகக் கொண்டவர்கள் மிகக் குறைவே.மனவளக்கட்டுரையெல்லாம் வாசித்து எவ்வளவுதான் பயிற்சி எடுத்தாலும்,இயல்புதான் மேலே
மிதந்துவரும்.
தமிழில் இப்போதெல்லாம் மனநோயாளிகளைக் குறிப்பிட பைத்தியம், 'லூசு' என்பதை விட "ரீஜெண்டா"(டீஸென்டா) 'மென்டல்' என்கிறார்கள் அய்யா!
எனவே 'மென்டல் ஹெல்த்' என்பதைத் தூக்கிவிடுங்கள் அய்யா! 'மனவளம்' மட்டும் போதும்.இது எனது வேண்டுகோள்./////

சரி, செய்துவிடுகிறேன்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger சரண் said...
பல இடங்களில் ஒரு தவறு செய்து விட்டார் என்று ஒருவர் மீது கோபம் வருவதை விட, செய்யுறதையும் செஞ்சுட்டு திமிரா பேசுறான் பாரு என்ற வேகம்தான் அதிகம் இருக்கும். ஒருவர் ஒரு காரியத்தை செய்ய வில்லை என்றால் கூட அதை அவர் (அல்லது நாம்) கனிவுடன்
மறுத்தால் அல்லது எடுத்துச்சொன்னால் நிச்சயம் தவறாக எண்ணத் தோன்றாது. ஆனால் எல்லா இடங்களிலும் கனிவு வேலைக்கு ஆகாது.
எல்லா இடங்களிலும் கனிவாக பேசிக்கொண்டே இருந்தால் நாம் ஏமாளிகளாக கருதப்பட்டு மற்றவர்கள் சவாரி செய்யும் குதிரைகளாக நாம்
ஆக்கப்படுவோம். அதற்காக சுடு சொற்களை உபயோகிக்க வேண்டியதில்லை. அதுவும் பூமராங் மாதிரி நம்மை திருப்பித்தாக்கும். நம்
நிலையை உறுதியாக சொல்லி கண்டிப்பு காட்ட வேண்டிய இடமும் உண்டு.//////

உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி சரண்!!!

SP.VR. SUBBAIYA said...

////Blogger ஸ்ரீராம். said...
கனிவாகப் பேசுவதும் புன்னகை முகத்துடன் இருப்பதும் ஒரு கலை. இப்படிப் புன்னகை முகத்துடன் இருப்பவர்களை 'இளிச்சவாயர்கள்'
ஆக்கும் நம் சமூகம்! சிற்சில இடங்களில் நாள் முழுவதும் இப்படிக் கனிவுடன் இருக்க வேண்டிய இடங்கள் உள்ளன. ரொம்பச் சிரமமான விஷயம். உதாரணமாக பேருந்து நடத்துனர்கள், சமையல் வாயு நிறுவனத்தில் பேசுபவர்களும், அதை வாடிக்கையாளர்களுக்கு விநியோகம்
செய்பவர்களும் இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே இனிமையாக இருக்கிறது!////

நம் சமூகம்தான் கெட்டுப்போய் ஆண்டுகளாகிவிட்டனவே! அதனால் சமூகத்தைப் பற்றி நாம் அதிகம் கவலைப்படத் தேவையில்லை
நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

///Blogger திருநெல்வேலி கார்த்திக் said...
courtesy opens all the doors in this world/////

It is also the best key to open all the doors! நன்றி திருநெல்வேலி கார்த்திக்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger kmr.krishnan said...
மக்கள் அவைத் தலைவர் திருமதி மீராகுமாருக்கு எப்போதும் புன்னகை சிந்தும் உதடும், கனிவை, கனவைக் காட்டும் கண்களும்
இயற்கையாக அமைந்துள்ளன‌.
சில சமயம் நினைவு இடங்களில் மலர் வளையம் வைக்கும் போதும் முகம் மாறாமல் அப்படியே இருக்கிறது.
முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு இதற்கு நேர் மாறாக முக அமைப்பு கடு கடுப்பாக இருக்கும்.அதுவும் இயற்கைதான்./////

ஆமாம். படைப்பே அப்படி என்னும்போது என்ன செய்ய முடியும்? நன்றி கிருஷ்ணன் சார்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger ஸ்ரவாணி said...
அழகான பயனுள்ள கட்டுரை.
பொறுமையுடன் இந்த சரியான அணுகுமுறையைக்
கடைபிடித்தால் பலன் நிச்சயம்.////

உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger அய்யர் said...
முகத்திரண்டு புண் உடையார் என்பார் வள்ளுவர்..
கண்களை நம்பாதே என்றோர் பாடல் நினைவுக்கு வருகிறது..
கவிஞர் பாடல் என்றால் சுவையில்லாமலா.. நம்ம ஊர்
கருப்பட்டி கசக்கவா செய்யும்?
இது தனிப்பாடல் தான் என்றாலும்
கடவுள் தொடர்பான பாடலா தெரியவில்லை ....
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயனில்லா சொல்
என்கிறது வள்ளுவம்
எதை பேசவேண்டும், எப்படி பேசவேண்டும், எங்கு பேசவேண்டும், ஏன் பேசவேண்டும், எதற்காக பேசவேண்டும் என குறிக்கவே இந்த
குறளில் 5 முறை சொல் வருவதாக சொல்லுவர்..
பேச்சு பேச்சாக இருந்தால் சரி
கூச்ச(லாக) இருந்தால்
நல்ல கட்டுரைக்கு
நன்றி.. நல்வாழ்த்துக்களுடன்..////

உங்களின் பாராட்டிற்கு நன்றி விசுவநாதன்!!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Bhuvaneshwar said...
Present Sir!////

உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

SP.VR. SUBBAIYA said...

Blogger Bhuvaneshwar said...
Superb post. Loved it, Sir.
இனியன கூறல் நம் பண்பாட்டுக்கு இசைந்த ஒன்று.
"இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று"
எத்துணை உண்மையான வார்த்தைகள். மனத்தில் அன்பு இருந்தால் வார்த்தையில் கனிவு இருக்கும். வார்த்தையில் கனிவு இருந்தால் இனிய பேச்சு அமையும். அப்படி அமைந்தவனுக்கு எதிரிகள் தான் யார்? யாரும் இருக்க முடியாது. அப்படியே இருந்தாலும் அவனை ஒன்றும் பண்ண முடியாது. எல்லாரிடமும் குணவான் என பெயர் எடுத்த ஒரு பண்பாளனை ஓரிரு எதிரிகள் என்ன புரட்டி விட முடியும்?
சொற்கள் நம் வசம் உள்ள கருவிகள். எந்த நேரத்தில் எப்படி உபயோகிக்க வேண்டும் என தீர்மானிப்பது ஒருத்தனின் PR skills பொறுத்த விஷயம்.
எந்நேரமும் இனிமையாக பேசுவதும் impractical- சில இடங்களில் கோபம் போல காட்டினால் தான் கார்யம் நடக்கும். சிவ பெருமான்முருகனை கோபித்து போல நடித்தார் - "மைந்தனை வெகுள்வான் போல" என்று என சொல்லும் இலக்கியம். மயிலே மயிலே என்றால் இறகு
போடாது!
அதே சமயம் எந்நேரமும் சிடு சிடு என்று இருந்தால் அவன் கோபத்துக்கு மதிப்பு இல்லாமல் போய் விடும். அவன் கோபமும் இயல்பான ஒன்றாக ஆகி, யாரும் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார்கள்.
சாது கோபித்தால் ஏதோ விஷயம் இருக்கு போலயே என என்னும் மக்கள் முன் கோபி கோபித்தால், "அதுக்கு (!!!) அது தான் வேலை, புத்தி அப்படி தான் விட்டு தள்ளு" என்று சொல்லும் அல்லவா?
நீதி சாஸ்திரத்தில் ஒப்பற்ற நிபுணர் அசுர குரு சுக்ராச்சார்யார் (நமது சுக்கிரன் தான்).
அவர் ஒரு சந்தர்ப்பத்தில், கோபம் கொண்ட தன் மகள் (சிறு குழந்தை) தேவயானிக்கு சுக்ராச்சார்யார் உபதேசிக்கிறார்:
"எவன் ஒருவன் பாம்பு சட்டையை உரிப்பது போல கோபத்தை உரித்து அகற்றுகிறானோ, அனவே தீரன். கோபத்தை
அடக்கியாளுபவனே தீரன். கோபத்தை அடக்கி ஆளுபவனே கார்ய சித்தி அடைகிறான். கோபம் உடையவனை பெற்றோரும், கட்டிய மனையாளும், குழந்தைகளும், பணியாட்களும், நண்பர்களும் உறவினர்களும் வெறுத்து விலகுவர்" என்று சொல்லுகிறார்.
ரிக், யஜுர், சாம உபாகர்மாக்களில் ஒரு மந்தரப் பிரயோகம் வரும்: பதிவுக்கு சம்பந்தம் உடையது என்பதால் இங்கே கூறுகிறேன்.
"காமோ அகார்ஷீன்னமோ நம:
காமோ கார்ஷீத் காம: கரோதி நாஹம் கரோமி
காம: கர்த்தா நாஹம் கர்த்தா
காம: காரயிதா நாஹம் காரயிதா
ஏஷ தே காம காமாய ஸ்வாஹா|
மன்யுரகார்ஷீன்னமோ நம:
மன்யுரகார்ஷீன்மன்யு: கரோதி நாஹம் கரோமி
மன்யு: கர்த்தா நாஹம் கர்த்தா
மன்யு: காரயிதா நாஹம் காரயிதா
ஏஷ தே மன்யோ மன்யவே ஸ்வாஹா||"
சுருக்கமாக சொல்வதென்றால் இதன் பொருள் "காமம் தான் பாபம் பண்ணியது, கோபம் தான் பாபம் பண்ணியது" என்று வரும்.
இதையே இன்னும் பலருக்கும் தெரிந்த பழமொழியாக சொல்லுவதென்றால் "கோபம் பாபம் சண்டாளம்" என்போம்./////

உங்களுடைய நீண்ட பின்னூட்டத்திற்கும், கருத்துப் பகிர்விற்கும் நன்றி புவனேஷ்வர்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger ஜி ஆலாசியம் said...
இருவிழிகளில் இருவேறு மொழிகள்
இடது ஆமாம், ஆமாம் என்றும் அதேவேளை
வலதோ இல்லை எல்லாம் சும்மா என்ற
செய்கையும் காட்டும் என்று அழகாய்
கவிதை செதுக்கியுள்ளார்.
நமது கவியரசர் அமரர் கண்ணதாசனார். -----------------------------------------
சொல் என்பது எத்தனை பலமானது என்பதை நமது முன்னோர்கள் பலவாறு விளக்கி இருக்கிறார்கள்.
கம்ப ராமாயணத்திலே அந்தப் பெருமைக்கு முதலிடம் கிடைத்தது அனுமனுக்கே! செஞ்சொல் வேந்தன் என்பார்கள்.
''கண்டே சீதையை'' என்பான் அனுமன். சீதையை.... என்று ஆரம்பிக்கும் போது அடுத்த வார்த்தை எப்படி இருக்குமோ என்று அந்த வார்த்தை பிரயோகமாகும் முன் அந்த ஒரு கணம் கூட நமது பிரபு துயருரக் கூடாது என்று மிகவும் கவனமாக அனுமன் உரைத்தான் என்று பெரிய மனவியழ்த் தத்துவத்தை மிகவும் அழகாக.. அந்தக் காட்சியை படம் பிடித்துக் காட்டி இருப்பான் கவிச்சக்ரவர்த்தி... கம்பன் அதனாலே அவன் கவிச் சக்ரவர்த்தி...
இங்கே தங்களின் கட்டுரையிலும் ஒரு சிறிய உதாரணம் தந்து மிகவும் அழகாக...
இனிய சொல்லுக்கு எமலோகம் அனுப்ப வரும் எதிரியையும்
கனிவானவனாக்கும் வல்லமை உண்டு சொல்வதைப் போல...
அருமையானக் கருத்துக்களை உதாரணத்தோடு புதியப் படம் பிடித்துக் காட்டி இருக்கிறீர்கள்.
இனிமையான சொற்கள் தாமே இறைவனையும் கண்டுணரச் செய்கிறது எனலாம்..
மிகவும் அருமையான பதிவு பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!/////

உங்களுடைய மனம் நிறைவான, சிறப்பான பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்1!

SP.VR. SUBBAIYA said...

///Blogger Bhuvaneshwar said...
அன்புக்கும் மதிப்புக்கும் உரிய சகோதரர் ஆலாசியம் அவர்களின் பின்னூட்டத்தை நான் வழி மொழிகிறேன்.
வால்மீகி சொல்வார் ஹனுமான் வாய்மொழியாக "த்ருஷ்டா தேவி" என்று. "தேவி த்ருஷ்டா" என்று சொல்லவில்லை. For the same reason.
அதையே கம்பர் பின்பற்றி கண்டேன் சீதையை என்று போட்டிருக்கிறார்.
மகான்களுக்குள் மொழி பேதம் கிடையாது என்பதற்கு சான்று இது!
"புத்திமதாம் வரிஷ்டம்" (அறிவாளிகளுக்குள் தலையாயவன்) என்ற பெயர் உடைய ஹனுமான் "நவ வியாகரண வேத்தா", சொல்லின் செல்வன், இப்படி பேசியதில் வியப்பில்லை!////

நல்லது. நன்றி புவனேஷ்வர்!

SP.VR. SUBBAIYA said...

///Blogger Udhaya Kumar said...
குருவிற்கு வணக்கம்,
கனிவு வேண்டும், எல்லேர்யிடத்திலும்.
தாய் தான் நம்மிடத்தில் கனிவுடன் நடந்து கொள்வாள், அதன்னலலோ
"தாயை" கடவுளின் உயரத்திற்கு உயர்த்திச் சொன்னாரோ ஒரு ஞானி!
இன்றைய மனவளக் கட்டுரை
கனிவுடன் நடப்பது பற்றி தந்தமைக்கு
நன்றி குருவே|/////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger arul said...
nalla karuthu////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Parvathy Ramachandran said...
கவியரசரின் அற்புதப் பாடலைப் படிக்கத் தந்தமைக்கு நன்றி.
'மருவொன்று மில்லாத வாழ்க்கை அறியாத
மனிதனைப் படைத்த சிலையே'
எத்தனை அருமையான வரிகள். என்ன ஆழமான பொருள்!!
மனவளக் கட்டுரை, இக்காலக் கட்டத்தில் மிக அவசியமான ஒன்று.
//கணவர் அல்லது மனைவி, மாமனார், மாமியார், வயதில் பெரியவர்கள் என்று மற்றுமின்றி குழந்தைகளிடமும் நாம் கனிவாகப் பேசுவது மிகமிக அவசியம்.//
வயதில் பெரியவர்களிடம் பேசும்போது,
'செல்லா இடத்துச் சினந் தீது' என்பதையும்,
குழந்தைகளிடத்துப் பேசும்போது, 'செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான்'
என்பதையும் நினைவில் கொள்வது நமக்கும் அவர்களுக்கும் நல்லது. பதில் பேசமாட்டார்கள் என்பதால், நம் கோபத்தைக்
குழந்தைகளிடம் காட்டினால் அவர்கள் எதிர்காலம் என்னாவது?
கவியரசர், அர்த்தமுள்ள இந்து மதத்தில், சொல் மங்கலம், பொருள் மங்கலம்
குறித்து, நாச்சியார் திருமொழியை உதாரணம் கொண்டு மிகச் சிறப்பாக விளக்கியிருப்பார். ஆன்மீக சம்பந்தமாக எழுதும் போது
ஒவ்வொரு முறையும் அவரது அறிவுரையை நினைவில் கொண்டே எழுதுகிறேன்.
'இறைவனுக்கு அளிக்கிறேன்' என்பதை, 'இறைவனுக்கு சமர்ப்பிக்கிறேன்' என்று எழுதுவது மானசீகமாகவும் ஒருவித அமைதியை, பணிவை ஏற்படுத்துவதை உணர்ந்திருக்கிறேன்.
அருமையான பதிவை அழகான உதாரணங்களுடன் நிறைவாக விளக்கிக் கொடுத்திருக்கிறீர்கள். தங்களுக்கு என் நெஞ்சார்ந்த
நன்றி./////

உங்களுடைய மனம் நிறைவான, சிறப்பான பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

eswari sekar said...

.vannakm .sir nanrga erunthu katturi.

அய்யர் said...
This comment has been removed by a blog administrator.
இராஜராஜேஸ்வரி said...

பாராட்டு என்பது, தேவையான அளவில் - அதுவும் நிஜமான பாராட்டாக இருக்க வேண்டும்.

கனிவான பகிர்வுகள்.. பாராட்டுக்கள் ..

மிகவும் பயனுள்ள வாழ்வியல் தத்துவம் பகிர்வாக அளித்தமைக்கு நிறைவான நன்றிகள்..

sundari said...

vanakkam sir,
present sir.

SP.VR. SUBBAIYA said...

/////Blogger eswari sekar said...
.vannakm .sir nanrga erunthu katturi./////

உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!!

SP.VR. SUBBAIYA said...

Blogger இராஜராஜேஸ்வரி said...
பாராட்டு என்பது, தேவையான அளவில் - அதுவும் நிஜமான பாராட்டாக இருக்க வேண்டும்.
கனிவான பகிர்வுகள்.. பாராட்டுக்கள் ..
மிகவும் பயனுள்ள வாழ்வியல் தத்துவம் பகிர்வாக அளித்தமைக்கு நிறைவான நன்றிகள்../////

உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!!

SP.VR. SUBBAIYA said...

////Blogger sundari said...
vanakkam sir,
present sir./////

நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

saravanan said...

அன்புள்ள அய்யா
வலைதளத்தின் முகப்பில் நவக்ரகங்கள் வந்து குடிகொண்டுள்ளனவே ....
நன்றாக இருக்கிறது....
நன்றியுடன்
ரா.சரவணன்