மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

7.4.11

Short Story மதிப்பும் மரியாதையும்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Short Story மதிப்பும் மரியாதையும்

பழநியப்ப செட்டியார் இப்படிச் செய்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அதிகாலை நேரம். என் வீட்டின் ஸிட் அவுட்டில் உட்கார்ந்துகொண்டு ‘இந்து’ நாளிதழைப் புரட்டிக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் கார் ஒன்று நுழையும் ஓசை கேட்டுத் தலை நிமிர்ந்து பார்த்தேன்.

பழநியப்ப செட்டியாரின் மூத்த புதல்வன் செந்திலும், அவன் மனைவி சேதுக்கரசியும் இறங்கி வந்தவர்கள்- வந்ததும் வராததுமாக அந்தச் செய்தியைத்தான் சொன்னார்கள்.

செட்டியார் தன் மனைவி மக்களுடன் கோபித்துக் கொண்டு போய்
விட்டாராம். போனவர் பெரியநாயக்கன் பாளையத்திலுள்ள
முதியோர் இல்லம் ஒன்றில் சேர்ந்து விட்டாராம். “ இங்கே
இருக்கிறேன். என்னைத் தேடி வந்துமானத்தை வாங்க வேண்டாம் என்பதற்காகத் தகவல் மட்டும் சொல்கிறேன்’ என்றும் சொன்னாராம்.

வந்தவர்களை நோக்கி நான் கேட்டேன்.

“இப்போது நான் என்ன செய்ய வேண்டும்......?”

“அவர்களைத் திரும்ப வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு வர வேண்டும்- அது உங்களால் தான் முடியும்!”  நம்பிக்கையோடு சொன்னார்கள்.

“சரி, வாருங்கள் போகலாம்” என்று சொல்லி உடைகளை மாற்றிக் கொண்டு அவர்களோடு கிளம்பி விட்டேன்.

+++++++++++++++++++++++++++++++++++++++++        
பழநியப்ப செட்டியாருக்கும் எனக்கும் உள்ள நட்பு இளையராஜாவிற்கும் இசைக்கும் உள்ளது போன்று  எதார்த்மார்த்தமானது.

அவருக்கு வயது அறுபத்தைந்து. எனக்கு ஐம்பது. இருந்தாலும் வயது வித்தியாசம் பார்க்காத அப்படியொரு நட்பு.

வாரம் இரண்டு முறையாவது அவர் என்னை வந்து பார்க்காமல்
இருக்க மாட்டார். அவர் எப்போதாவது தன்  மனக் குறைகளைச் சொல்லும்போது நான் சமாதானம் சொல்லி அனுப்பி வைப்பேன்.

“அண்ணே ராஜாவாக இருந்தால் கண்களை மூடிக்கொள்ள வேண்டும்- வேலைக்காரனாக இருந்தால் காதுகளை  மூடிக்கொள்ள வேண்டும்
வயதாகி விட்டால் இரண்டையும் மூடிக்கொள்ள வேண்டும்- 
அப்போதுதான் நிம்மதியாக இருக்கமுடியும்”  என்பேன்.

“ உன்னால் முடியும் முருகப்பா என்னால் முடியவில்லையே! ” என்பார்.

“நீங்கள் அந்தக் காலத்தில் சைக்கிளில் போய்ச் சம்பாதித்ததை உங்கள் பிள்ளைகள் இப்போது காரில்  போய்-செல்போன்களில் பேசிச் சம்பாதிக்கிறார்கள். அவர்கள் செய்யும் செலவுகள் எல்லாம்
அவர்களுக்கு நியாயமாகத் தெரியும். அதுவே உங்களுக்கு வீணானது
எனத் தெரியும். எடுத்துச் சொன்னால் கேட்டுக் கொள்ள  மாட்டார்கள்.
மன வருத்தம்தான் வரும். ஆகவே கண்டு கொள்ளாமல் இருங்கள்”
என்பேன்.

“ இல்லை, முருகப்பா! வயதானால்- அதுவும் வீட்டில் சும்மா
இருந்தால்- மதிப்பும் மரியாதையும் இல்லை- எங்காவது போய்
விட வேண்டும்” என்பார்.

“ எல்லாவற்ரையும் உங்களைக் கேட்டுச் செய்ய வேண்டும்.
நடந்தவற்றை எல்லாம் உங்களிடம் கூற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள். காலத்தின் பரிணாம வளர்ச்சியில் வேகமான
இன்றைய யுகத்தில்- அதெல்லாம் சாத்தியமில்லை. உங்களுக்கு
பெர்சனலாக ஏதாவது குறை வைத்தார்களா சொல்லுங்கள்?
அதாவது உண்ணும்  உணவு, உடுத்தும் உடைகள், இருக்கும் இடம்-
இதில் ஏதாவது குறையுள்ளதா- சொல்லுங்கள். சரி பண்ணுவோம்”
என்பேன்.

“எந்தச் சூழ்நிலையிலும் உன் சுதந்திரத்தையும், தன்மானத்தையும்
விட்டுக் கொடுக்காதே’ என்று விவேகானந்தர்  கூறியிருப்பதாகச்
சொல்வாயே- அது இரண்டும் இல்லை என்றால் பரவாயில்லை
என்கிறாயா?”

“குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை’ யென்று ஒளவையார் சொன்னதையும் சொல்லியிருக்கிறேன். அதை மறந்து  விட்டீர்களே” என்று இடைமறிப்பேன்

“உன்னோடு பேசி வெற்றி பெற முடியாது!” என்று எழுந்து விடுவார்.

பிறகு அடுத்தமுறை வரும்போது சரியாகி விடுவார். இதுதான் நடந்து கொண்டிருந்தது. மன உளைச்சல் அதிகமாகி விட்டதோ என்னவோ- வடிகால் தேடி இப்போது வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார்.

காரில் போகும்போது சிந்தித்துக் கொண்டே போனேன். அவரிடம் இப்போது என்ன பேச வேண்டும்- என்ன  பேசக்கூடாது என்பதைத் தெளிவு படுத்திக் கொண்டேன்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பத்து ஏக்கர் பரப்பளவில் அந்த முதியோர் இல்லம் இருந்தது. ஒழுங்காக முறையாகக் கட்டப்பட்ட கட்டிடங்கள். உடன் வந்த இருவரையும் காரிலேயே இருக்கச் சொல்லிவிட்டு நான் மட்டும் உள்ளே போனேன்.

விசாரித்துத் தெரிந்து கொண்டு பழநியப்ப செட்டியாரின் அறைக்குள் நான் சென்ற போது அவர் காலைச் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்
.
“வா, முருகப்பா,..சாப்பிடுகிறாயா?’ என்றார்

“ இல்லை அண்ணே, நீங்கள் முடித்துவிட்டு வாருங்கள். நான் காத்திருக்கிறேன், என்று கூறிவிட்டுக் கையில்  கொண்டு போயிருந்த நாளிதழில் மூழ்கினேன்.

பத்து நிமிடங்களில் கையைக் கழுவிக் கொண்டு அவர் வந்தார். வந்தவர் சொன்னார். “உன்னை எதிர்பார்த்தேன்!”

“என்ன எதிபார்த்தீர்கள்?’ என்றேன்.

“ எங்கள் வீட்டில் பஞ்சாயத்திற்கு உன்னைத்தான் அனுப்புவார்கள் என்று எனக்குத் தெரியும்” என்றார்.

“நான் அதற்கு வரவில்லை!” என்று அதிரடியாகச் சொன்னேன். நான்
மேலே பேசட்டும் என்று ஒன்றும் பதில் சொல்லாமல் அவர் என்னையே நோக்கினார். அதிரடிப் பேச்சைத் தொடர்ந்தேன்.

“ என்னையும் இங்கே சேர்த்துக் கொள்ளச் சொல்லுங்கள். எவ்வளவு பணம் கட்ட வேண்டும் என்று கேட்டுச் சொல்லுங்கள்”

“ நீ எதற்காகச் சேர வேண்டும்?” அவர் குறுக்கே கேட்டார்.

“ நிரந்தரமாக இல்லை. ஒரு பதினைந்து நாட்கள் மட்டும் தங்க வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்.” என்றேன்.

“அது தான் எதற்கு?” என்றார்

நான் சற்று குரலைத் தாழ்த்தி- அழுத்தந் திருத்தமாகச் சொன்னேன்.

“ உங்களுக்கு வீட்டில் கிடைக்காத மதிப்பும் மரியாதையும் இங்கே கிடைக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டும். இங்கே தினமும்
உங்களைக் கேட்டுத்தான் சமையல் செய்கிறார்களா- சாப்பாடு போடுகிறார்களா என்று  தெரிந்து கொள்ள வேண்டும். இங்கே நடக்கும்
எல்லா நிகழ்ச்சிகளையும் உங்களுக்குத் தொகுத்துச் சொல்கின்றார்களா 
என்று தெரிந்து கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் விட முக்கியமாக உங்களுக்கு என்னைப்  போன்று ஒரு ஆத்மார்ந்தமான நண்பன் கிடைக்கிறானாவென்றும் தெரிந்து கொள்ள வேண்டும்”

சம்மட்டியால் அடித்ததுபோல் இருந்ததோ என்னவோ செட்டியார் மனதால் நொருங்கிப் போய் விட்டார்.என் கைகளைப் பிடித்துக் கொண்டு அழத் தொடங்கிவிட்டார். உணர்ச்சிப் பிழம்பாகி விட்டார். வழக்கம்போல சமாதானப்படுத்தினேன்.

அடுத்த முப்பது நிமிடங்களில் அந்த அறையைக் காலி செய்துவிட்டு- அவர் செலுத்தியிருந்த பணத்தை அந்த விடுதிக்கே தர்மமாக வைத்துக் கொள்ளச் சொல்லி எழுதிக் கொடுத்து விட்டுப் புறப்பட்டார். எல்லோரும்
கோவைக்குத் திரும்பி வந்து சேர்ந்தோம்.

வந்த கையோடு அவரை நன்னெறிக்கழகம், சன்மார்க்க சங்கம், கம்பன் கழகம், கவிஞர் கண்ணதாசன் நற்பணி  மன்றம், வைரமுத்து பேரவை போன்ற பல இலக்கிய, ஆன்மீக அமைப்புக்களில் உறுப்பினராகச் சேர்த்துவிட்டேன்.

அவரும் இப்போது உற்சாகமாகப் போய் வந்து கொண்டிருக்கிறார். அவர் தேடிய மதிப்பும் மரியாதையும்  இப்போது அவரைத் தேடி வந்து கொண்டிருக்கின்றன!

*********************************************************
வாழ்க வளமுடன்!

15 comments:

  1. /////“அண்ணே ராஜாவாக இருந்தால் கண்களை மூடிக்கொள்ள வேண்டும்- வேலைக்காரனாக இருந்தால் காதுகளை மூடிக்கொள்ள வேண்டும்
    வயதாகி விட்டால் இரண்டையும் மூடிக்கொள்ள வேண்டும்-
    அப்போதுதான் நிம்மதியாக இருக்கமுடியும்” /////

    இது அருமை... உண்மை... அவசியமும் கூட...

    ஐயா இதில் இன்னொன்னையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்....
    பிள்ளைகளுக்கு பணம் காசு சேர்த்து வைக்க முடியாத நிலையில்
    இருந்தவர்களாக இருந்தால் வாயையும் மூடிக்கொள்ளவேண்டும்.

    கொடுக்கும் வரை மரியாதை...
    காட்டும் வரை அன்பு....
    இவைகள் கிடைக்காது என்பதை
    அறியும் போது நாமாகவே அவைகளை
    எதிர்பார்க்காதது போல்
    (தாங்கள் கூறியது போல் கண்ணையும், காதையும் மூடி)
    நடித்து விட வேண்டியது தான்.

    நம் பிள்ளை நம்மை விட சமத்து என்று ஒத்துக்
    கொள்பவர்கள் மிகவும் குறைவு என்றே தோன்றுகிறது....
    அப்படி இருப்பதாக தெரிந்தால் பொறுப்புகளை
    அந்த பொறுப்பான பிள்ளைகளிடம் தந்து விட்டு
    தூரமாக நின்று ரசிப்பது / கண்காணிப்பது நல்லது....

    எவ்வளவு வயதானாலும் தனது பிள்ளைகளை
    வளர்ந்தவர்களாக எண்ணுவதற்கு பெரும்பாலும் மனம் தயாரகுவதில்லை போலும்.....

    ////“ எல்லாவற்ரையும் உங்களைக் கேட்டுச் செய்ய வேண்டும்.
    நடந்தவற்றை எல்லாம் உங்களிடம் கூற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள். காலத்தின் பரிணாம வளர்ச்சியில் வேகமான
    இன்றைய யுகத்தில்- அதெல்லாம் சாத்தியமில்லை. உங்களுக்கு
    பெர்சனலாக ஏதாவது குறை வைத்தார்களா சொல்லுங்கள்?
    அதாவது உண்ணும் உணவு, உடுத்தும் உடைகள், இருக்கும் இடம்-
    இதில் ஏதாவது குறையுள்ளதா- சொல்லுங்கள். சரி பண்ணுவோம்”
    என்பேன்////

    VRS...இல்லாவிட்டாலும்... வேலை நீட்டிப்பு செய்து சில காலம் சென்ற பின்பும் கூட
    இது போன்ற பொறுப்புகளை குழந்தைகளாகத் தெரியும் நம் பிள்ளைகளிடம்
    தந்து வயது தகுந்தாற் போல் செயல்களை மாற்றிக் கொண்டால் நல்லது!!!!
    காலம் மாறும் பொது நாமும் மாறித்தானே ஆக வேண்டும்....
    என்ற உங்களின் கருத்து...யாவரும் மனதில் இருத்த வேண்டியக் கருத்து...
    மொத்தத்தில் கதை அருமை... இதை SIMPLY SUPERB என்பேன். நன்றி.

    ReplyDelete
  2. சென்ற முதியோர் இல்லம் பற்றிய கடிதக் கதையில் உமாஜி கேட்ட கேள்வி"முதியோர் இல்லத்தில் சரிகட்டிப் போக முடிந்தவர்களுக்கு ஏன் வீட்டில் ஒத்துப் போக முடியவில்லை?"என்பதற்குச் சரியான பதிலாக உங்கள் கதை அமைந்து விட்டது ஐயா!

    ஏற்கனவே வாசித்து இருப்பது போலத்தான் உள்ளது. இருந்தாலும் மீள் வாசிப்பும் சுவாரஸ்யத்தைக் குறைக்கவில்லை. கதைகளை 'பாஸிடிவ் நோட்'டில்
    முடிக்கும் ஆசிரியர்களில் உங்க‌ளுக்குத்தான் முதலிடம் ஐயா!நல்ல கதை ஐயா!நனறி!

    ReplyDelete
  3. வாத்தியார் ஐயா வணக்கங்கள் பல...

    அற்புதமான சிந்தனைகள் சார் தங்களுடையது ...

    //“அண்ணே ராஜாவாக இருந்தால் கண்களை மூடிக்கொள்ள வேண்டும்- வேலைக்காரனாக இருந்தால் காதுகளை மூடிக்கொள்ள வேண்டும்
    வயதாகி விட்டால் இரண்டையும் மூடிக்கொள்ள வேண்டும்-
    அப்போதுதான் நிம்மதியாக இருக்கமுடியும்” என்பேன்.//

    இன்றைய மனித சமுதாயம் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயமான உண்மைகள்

    ReplyDelete
  4. ஐயா, தங்களுடைய சிந்தனையும் எழுத்தும் வியப்பாக இருக்கிறது .. எவ்வளவு அற்புதமான அனுபவங்கள் அல்லது கற்பனைகள் ...

    ஒவ்வொரு ஊரிலும் பழநியப்ப செட்டியார்கள் இருக்கிறார்கள் ... ஆனால் பாவம் அவர்களுக்கு ஒரு நல்ல முருகப்பன் இருக்கிறாரா என்றுதான் தெரியவில்லை ..

    ஆழமாக மனதை வருடுடிய ஆன்மார்த்தமான உண்மை ..

    ReplyDelete
  5. அடியேன் நமஸ்காரம்

    வழக்கம் போல் பதிவில் மூழ்கினேன்,
    எனது மனப்பாங்கு "பழநியப்ப செட்டியார்" ஐயாவைப்போன்று இருக்குமென்று உணர்ந்தேன்,(எனது முதிர் காலத்தில் ).
    நெகிழ்ந்து போனேன் .ஆனால், அவருக்கு கிட்டிய "ஆத்ம நண்பரை " போல் எமக்கு அமையுமா ? அந்த இறைவனுக்கே வெளிச்சம்.

    ReplyDelete
  6. அற்புதம்.. அற்புதம்..

    தற்போதைய சூழலுக்கு மிகத் தேவையான கதை.

    அய்யாவின் நடையே நடை.

    அய்யா நலமுடன் நீடு வாழ பழனியப்பனை பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  7. /// உங்களுக்கு வீட்டில் கிடைக்காத மதிப்பும் மரியாதையும் இங்கே கிடைக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டும். இங்கே தினமும்
    உங்களைக் கேட்டுத்தான் சமையல் செய்கிறார்களா- சாப்பாடு போடுகிறார்களா என்று தெரிந்து கொள்ள வேண்டும். இங்கே நடக்கும்
    எல்லா நிகழ்ச்சிகளையும் உங்களுக்குத் தொகுத்துச் சொல்கின்றார்களா
    என்று தெரிந்து கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் விட முக்கியமாக உங்களுக்கு என்னைப் போன்று ஒரு ஆத்மார்ந்தமான நண்பன் கிடைக்கிறானாவென்றும் தெரிந்து கொள்ள வேண்டும்///

    மனதை தொட்ட வரிகள் இது தான்
    மண்டையில் அடித்தது படிப்பவரையும்


    மற்றவர்களின் போக்கை பார்ப்பவர்கள்
    மனதிற்குள் தன்னை பார்ப்பதில்லை


    விருத்தர்களுக்கு எப்போதும்
    விருந்தோம்பல் கிடைக்காது


    வீட்டிலும் சரி.. சென்றுசேரும் அந்த
    வீட்டிலும் சரி.. இது தான் நிலை


    கறுப்பு பூனையை
    அது இல்லாதபோது
    இருட்டு அறையில்
    தேடிக் கொண்டிருக்கும் சிலர்


    இதையும் நாகரிகமாக கொள்கிறார்களோ என்னவோ..

    ReplyDelete
  8. இந்த கதை அருமை. இடையிடையில் உங்கள் 'பன்ச்' சுபெர்ப்.

    ReplyDelete
  9. "இது எப்படி இருக்கு" முதல் வாசிப்பில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.ஆனால்
    சிறிது கணக்குப் போட்டால் அதிசயிக்க ஒன்றும் இல்லை என்பது புலனாகியது.
    பிறந்த வருடத்துடன் நமக்கு இப்போது நடக்கும் வயதைக் கூட்டினால் நாம் இப்போது நடப்பில் இருக்கும் வருடம் வராதா?
    உதாரணமாக நான் பிறந்தது 1949. 1990ல் எனக்கு 41 வயது.ஆகவே
    49+41=90.அது போலத்தான் 49+62=111.மிகவும் சிறிய செய்தியை விடுகதை போலாக்கி அலப்பரை பண்ணுகிறார்கள்.இந்த மின் அஞ்சல் ஏப்ர‌ல் முதல் நாள் வந்திருக்கலாம். சில சமயம் வாத்தியாரையும் பையன்க‌ள் குழப்பி விடுவதில்லையா? அது போலத்தான் இதுவும்.

    ReplyDelete
  10. அன்புடன் வணக்கம் ."""கதைகளை 'பாஸிடிவ் நோட்'டில்
    முடிக்கும் ஆசிரியர்களில் உங்க‌ளுக்குத்தான் முதலிடம் ஐயா!நல்ல கதை ஐயா!நனறி!""<<<<<<""கொடுக்கும் வரை மரியாதை...
    காட்டும் வரை அன்பு....
    இவைகள் கிடைக்காது என்பதை
    அறியும் போது நாமாகவே அவைகளை
    எதிர்பார்க்காதது போல்
    (தாங்கள் கூறியது போல் கண்ணையும், காதையும் மூடி)
    நடித்து விட வேண்டியது தான்""".>>>

    கதை மிக அருமை!! வளரும் என போன்ற இளைஞர்களுக்கு???? மிக அவசியமான்து
    நன்றி !!!

    ReplyDelete
  11. வழக்கம்போல் அருமையான படைப்பு..
    முருகப்பா செட்டியாரின் ஆயுதம் சம்மட்டியை போல பவரானது என்று உணர வைத்தீர்கள்..
    சென்ற முதியோர் பற்றிய கதையில் வந்த பெரியம்மாவின் உணர்வுக் குமுறலின் கடிதங்களைப் படித்து முடித்தபோது அந்த அம்மையார்தான் மனதில் நின்றார்..
    இன்றைய கதையில் பழனியப்பா செட்டியாரை ஓவர்டேக் பண்ணிவிட்டு முருகப்பா செட்டியார் முன்னிலை வகித்து அனைத்து வாக்காளப் பெருங்குடி மக்களின் ஓட்டுக்களையும் வாரிச் சென்று விட்டார்.
    பிரச்சாரங்களில் கொடுக்கப்பட்ட குறுகிய நேரத்துக்குள் பேச நினைத்ததை பேசாமல் ஏதாவதொன்று பேசி உளறிக் கொட்டி சிக்கலில் மாட்டிக் கொள்பவர்களுக்கு முருகப்பா செட்டியார் ட்ரைனிங் கொடுக்கலாம்..
    "முருகப்பா செட்டியார்...எந்தா ஒரு வல்லிய ஆளானு.. ஆ கேரெக்டர் எண்ட மனசுலே நிக்கிந்து சாரே.."

    ReplyDelete
  12. ////////
    hamaragana said... வளரும் என போன்ற இளைஞர்களுக்கு????///////

    சந்தடி சாக்குலே ஏதோ சொல்லிட்டுப் போனது மாதிரி செட் அப் பண்ணிடலாம்னு நினச்சீங்கன்னா
    அது நடக்காது..
    "வளரும்"ங்குறதை "வளர்ந்த" ன்னு மாத்தி எழுதோணும்..
    சொல்லிப்புட்டேன்..

    ReplyDelete
  13. நான் உங்க கதையை படிக்கிறதே மனதை நெறிப்படுத்தும் சில வரிகளுக்காக...இந்த முறையும் நீங்கள் ஏமாற்றவில்லை...நன்றி ஐயா...

    ReplyDelete
  14. அன்புடன் வணக்கம் மைனர்வாள்"வளரும்"ங்குறதை "வளர்ந்த" ன்னு மாத்தி எழுதோணும்..
    சொல்லிப்புட்டேன்""'.
    கண்டு புடிச்சிட்டீங்களே???
    ஹி ஹீ ஹீ

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com