மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

3.9.12

Short Story: தெய்வ உத்தரவுஅடியவன் எழுதி, சென்ற மாதம், மாத இதழ் ஒன்றில் வெளியான சிறுகதை ஒன்றை, நீங்கள் அனைவரும் படித்து மகிழ்வதற்காக இன்று  அதை வலை ஏற்றியுள்ளேன். படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------------
சிறுகதை:  தெய்வ உத்தரவு

சென்ற நந்தன வருடம் கார்த்திகை மாதம் திருக்கார்த்திகையன்றுதான் அண்ணாமலை பிறந்தாராம். அதனால் அவருடைய தாயார் சீதை
ஆச்சியும் தன் மகனுக்கு அண்ணாமலை என்று பெயரிட்டாராம்.

இன்னும் நான்கு மாத காலத்தில் அண்ணாமலைக்கு அறுபது வயது நிறைவடையப் போகிறது. அதற்குப் பிறகு அவருடைய பங்காளிகளின்
முகவரிப் புத்தகத்திலும், பணத்திருப்பு ஏட்டிலும் அவருடைய பெயர் அண்ணாமலை செட்டியார் என்று மாறிவிடும்.

அண்ணாமலைக்கு அதெல்லாம் மகிழ்ச்சியைத் தரவில்லை. இப்போதைய பிரச்சினை அறுபது நிறைவு விழாவைக் கொண்டாடுவதா அல்லது வேண்டாமா?

கொண்டாடலாம் என்றால் எங்கே கொண்டாடுவது? சிக்கனமாகக் கொண்டாட வேண்டுமென்றால், அவர் வசிக்கும் ஊரான கும்பகோணத்திற்கு அருகில் உள்ள சுவாமிமலையில் நிகழ்வை வைத்துக்கொள்ளலாம். எப்படியும் ஒரு லட்ச ரூபாய் பணம் வேண்டும். பணத்திற்கு எங்கே போவது?

அவருடைய இரண்டு பெண் குழந்தைகளில், மூத்தவள் சிகப்பிக்கு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு செய்த திருமணத்திற்காக வாங்கிய  கடனை இப்போதுதான் அவர் நேர் செய்துள்ளார். அடுத்தவள் சீதாவும், மேல்நிலைப் பட்டப் படிப்பை இந்த ஆண்டு முடித்து விடுவாள். அடுத்த ஆண்டு அவளுக்கு வரன் பார்த்துச் செய்ய வேண்டும்.

அண்ணாமலைக்கே காலசர்ப்ப தோஷம், மற்றும் ராகு திசை என்று 32
வயதிற்கு மேல்தான் திருமணம் ஆனது.  அதனால் வயதான காலத்தில் வீட்டில் கல்யாணம் செய்ய வேண்டிய பெண்ணை வைத்திருக்கும்
நிலைமையும் உள்ளது.

சாந்தி செய்து கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்திருந்தார். ஆனால் அவருடைய மனைவி ஏகம்மை ஆச்சி விடவில்லை.

“புரியாமல் பேசாதீர்கள். நீங்கள் சஷ்டியப்த பூர்த்தி சாந்தியைச் செய்து கொள்ள வேண்டும். பணம் இல்லையென்ற காரணத்தைக் காட்டாதீர்கள். நான் என் கழுத்தில் கிடக்கும் சங்கிலிகளில் ஒன்றைக் கழற்றித் தருகிறேன். அடகு வைத்து, அதில் கிடைக்கும் பணத்தை  வைத்துச் செய்து கொள்வோம். எங்கள் ஆத்தா வீட்டில் நான்தான் கடைசிப்பெண். வழிச்சு ஊத்தின தோசை என்பார்கள். வாழ்க்கையும்  வழிச்சு ஊத்தினதாக ஆகிவிடக்கூடது. என் ஆத்தாவீட்டு ஜனங்களெல்லாம் எப்போ எப்போ என்று காத்துக் கிடக்கின்றார்கள்”

”அவர்களுக்கெல்லாம் சேலை துணிமணிகள் எடுக்க வேண்டாமா?”

”நீங்கள் சோற்றை மட்டும் நன்றாகப் போட்டால் போதும். கூப்பிடுகிற ஊருக்கு அவர்கள் வருவார்கள்”

”சரி எங்கே வைத்துக்கொள்வது?”

”வைரவன்பட்டியில் வைத்துகொள்வோம். கோவிலும், விடுதியும் சூப்பராக உள்ளன. அதுதானே நம் கோவில்!”

”அங்கே வைத்தால் செலவு இரட்டிப்பாகிவிடும். தாயபிள்ளைகளையும், பங்காளிகளையும் பஸ் வைத்துக் கூட்டிக்கொண்டு போக வேண்டாமா?”

“அதெல்லாம் வேண்டாம். நாம் அழைப்பிதழை மட்டும் கொடுப்போம். வருகிறவர்கள் அவர்களாகவே வந்துவிடுவார்கள்”

”சரி, இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கிறது. வழக்கம்போல கும்பேஷ்வரனிடம் பூக்கட்டி உத்தரவு கேட்போம். உத்தரவு  வந்தால்தான் செய்துகொள்ள வேண்டும்.”

”அதெல்லாம் அவர் உத்தரவு தருவார். நான் மங்களாம்பிகையிடமும் மனுப்போடுகிறேன்”

அவர்களுடைய உரையாடல் அத்துடன் முடிந்தது. தன் அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டதால் அண்ணாமலையும் எழுந்துவிட்டார்.

                                   +++++++++++++++++++++++++++++++++++++++

அண்ணாமலை  தீவிர சிவபக்தர். தெய்வ உத்தரவு இல்லாமல் எதையும் செய்யமாட்டார். எல்லா முக்கிய முடிவுகளையும் தெய்வத்திடம்
விட்டுவிடுவார். தெய்வ உத்தரவு, செய்யலாம் என்று வந்தால் செய்வார், வேண்டாம் என்று உத்தரவு வந்தால் செய்யமாட்டார்.

தேர்ந்தெடுப்பதை இறைவனிடம் விட்டுவிடு. உனக்கு எது நல்லதோ அதையே அவர் தெரிவு செய்து கொடுப்பார் என்று தன்னுடைய செயல்களுக்கு அவர் விளக்கமும் கொடுப்பார். அதாவது God always gives the very best to those who leave the choice to Him என்று ஆங்கிலத்திலும் சுருக்கமாகச் சொல்வார்.

அன்று ஆவணி அவிட்டம். பெளர்ணமி திதி. காலையிலேயே ஆதிகும்பேஷ்வரர் கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. முப்பதாயிரம்
சதுர அடியில் சோழ மன்னர்களால் ஏழாம் நூற்றண்டில் கட்டப்பெற்ற கோவில். கும்பேஷ்வரனையும் அன்னை மங்களாம்பிகையையும்
வணங்காமல் அண்ணாமலைக்கு அன்றையப் பொழுது துவங்காது.

சாரங்கபாணி கோவில் தெற்குத் தெருவில் தான் அண்ணாமலையின் வீடும் அலுவலகமும் உள்ளது. முன்பக்கம் அலுவலகம். பின்பக்கம்  வீடு. பக்கத்தில்தான் கும்பேஷ்வரன் கோவில். அண்ணாமலை பிறந்து, படித்தது, வளர்ந்தது எல்லாம் கும்பகோணத்தில்தான். கோவிலில் உள்ள
எல்லா அர்ச்சகர்களையும் அவருக்கு நன்றாகத் தெரியும்.

சுவாமிக்கு அர்ச்சனை செய்து, பிரசாதத்தட்டை, பூக்கட்டில் இரண்டில் ஒன்றுடன் கொண்டு வந்து சுவாமிநாத குருக்கள் கொடுத்தவுடன்,
அண்ணாமலை வாங்கிக்கொண்டு தன் மனைவியிடம் கொடுக்க, அவருடைய மனைவி ஏகம்மை ஆச்சி சற்றுத் தள்ளிச் சென்று, அமர்ந்து, தட்டில் இருந்த பூக்கட்டைப் பரபரப்புடன் பிரித்துப் பார்த்தார். வெள்ளை நிறப் பூக்கள் வந்திருந்தன. ஆச்சி முகம் மலர செட்டியாரிடம்  கூறினார்:

”ஈசன் செய்யலாமென்று உத்தரவு கொடுத்திருக்கிறார்”

அண்ணாமலையின் முகத்தில் கவலை சூழ்ந்தது.

”உத்தரவு கொடுத்திருக்கிறார், சரி, பணத்திற்கு என்ன செய்வதாம்?”

“உத்தரவு கொடுத்தவருக்குப் பணத்தைக் கொடுக்கத் தெரியாதா? அதற்கும் அவரே வழி செய்வார். நம்பிக்கையோடு இருங்கள்”

ஆச்சியின் தெய்வ நம்பிக்கையைப் பார்த்து வியந்த அண்ணாமலை, ஒன்றும் சொல்லாமல் மங்களாம்பிகையையும் வணங்கும் முகமாக அம்மனின் சன்னதியை நோக்கி நடக்கத் துவங்கினார்.

உத்தரவு கொடுத்த இறைவன் பணத்திற்கு வழி செய்தாரா?

செய்யாமல் இருப்பாரா? ஆனால், அற்புதமாகத் தன் பக்தனுக்கு வேறு ஒரு வழியில் அவர் உதவி செய்தார்!

தொடர்ந்து படியுங்கள்
                   
                        +++++++++++++++++++++++++++++++++++++++++++++

அன்று மாலை, அண்ணாமலை, காந்தியடிகள் சாலையில் இருக்கும் தன் தாயார் சீதை ஆச்சி அவர்களைப் பார்த்துவரச் சென்றார். அது  வழக்கமாகத் தினமும் அவர் செய்வதென்றாலும், அன்று தன் முகத்தில் கவலை சூழ அவர் சென்றார்.

சீதை ஆச்சிக்கு 82 வயது. அவரது கணவர் ராமநாதன் செட்டியாருக்கு 84 வயது. சொந்த வீடு. இருவரும் அங்கேதான் இருக்கிறார்கள். பெரிய செட்டியாரும் ஆச்சியும் இந்த வயதிலும் ஆரோக்கியமாக, நடை உடையுடன்  இருக்கிறார்கள். ராமநாதன் செட்டியார் ஒரு தனியார் வங்கியில் இருந்து ஓய்வு பெற்றதுடன் கடந்த 24 வருடங்களாக, இரண்டு, மூன்று நிறுவனங்களுக்கு, நிதி ஆலோசராகப் பணி செய்து கொண்டிருக்கிறார். வீட்டில் கணினி வைத்து, அந்த நிறுவனங்களின் கணக்கு வழக்குகளையும் மேற்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

தினமும் சாயங்காலம் பக்கத்தில் உள்ள கோவில்களுக்கெல்லாம் சென்று விட்டு இரவு எட்டு மணிக்குத்தான் வீட்டிற்குத் திரும்பி வருவார்.
அண்ணாமலை சென்ற நேரத்தில் அவர் வீட்டில் இல்லை.

தன் மகனைப் பார்த்தவுடன், ஃபில்டர் காப்பியைப் போட்டு எடுத்துக் கொண்டு வந்த பெரிய ஆச்சி, மெல்லப் பேச்சுக்கொடுத்தார்.

“என்ன அப்பச்சி, கவலையோடு இருக்கிறாய்?”

அண்ணாமலை தன்னுடைய வீட்டில் முன்தினம் மாலை நடந்ததையும், இன்று காலை கோவிலில் நடந்ததையும் விவரமாகத் தன் தாயாரிடம்
கூறினார்.

தாயார் ஆறுதலாகக் கூறினார்: “செய்துகொள் அப்பச்சி. பணத்தைப் பற்றிக் கவலைப் படாதே! எவ்வளவு செலவாகும் என்று  நினைக்கிறாய்?”

”வைரவன்பட்டியில் செய்துகொண்டால் இரண்டு லட்சம் ஆகும் ஆத்தா?”

“அவ்வளவுதானே! அந்தப் பணத்தை நான் தருகிறேன். நீ யாரிடமும் கேட்க வேண்டாம்!”

“நீ தருகிறாயா? இருந்த பணத்தைத்தான் என் மகள் சிகப்பியின் கல்யாணத்தின் போது கொடுத்து விட்டாயே!”

“ஒரு லட்சம்தானே கொடுத்தேன். சிறுவாடு என்று மற்றவர்கள் கேலி பேசுவார்கள் என்று எந்தப் பெண்ணும் தன் கையில் சேர்த்து  வைத்திருக்கும் பணத்தைச் சொல்வதில்லை. சிக்கனமாக இருந்து அவ்வப்போது சேரும் பணத்தை வங்கியில் போட்டுக்கொண்டே வந்திருக்கிறேன். அந்தப் பணத்தில் இருந்துதான் தருகிறேன் என்று சொல்கிறேன்!”

”இல்லை ஆத்தா, இப்போது வேண்டாம். என் சின்ன மகள் சீதாவின் கல்யாணத்தின் போது கொடுங்கள். இப்போது நான் எப்படியாவது சரி
பண்ணிக்கொள்கிறேன்”

”எப்படிச் சரி பண்ணுவாய்? கடன்தானே வாங்க வேண்டும். அதெல்லாம் செய்யாதே. கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு
எதற்காக அலைய வேண்டும்?”

“உங்கள் பேத்தி சீதாவின் கல்யாணத்துக்கு உதவட்டுமே என்றுதான் சொல்கிறேன்”

“சீதாவின் கல்யாணத்தைப் பற்றி நீ கவலைப் படாதே! முழுச் செலவையும் நான் தருகிறேன்.

அண்ணாமலை திகைத்துப் போய் விட்டார்.

“என்ன ஆத்தா சொல்கிறீர்கள்?”

“சீதா மேல் எனக்கு அலாதிப் பிரியம். அவளுக்கு என் பெயரை
நீ வைத்த காலத்தில் இருந்தே அவள் மீது ஒரு பிரியம். அத்துடன்
அவளும்மிகவும் பாசமானவள். எப்போது என்னைப் பார்த்தாலும்
அப்பத்தா என்று வாஞ்சையுடன் ஓடிவந்து கட்டிக்கொண்டு
விடுவாள். வீடு, தெரு என்று நான் நிற்கும் இடத்தை எல்லாம்
பார்க்க மாட்டாள். நகரத்தார் வீடுகளில், நடுத்தரக் குடும்பங்களில்
முதல் பெண்ணிற்கு எல்லோருமாகச் சேர்ந்து எப்படியாவது
கல்யாணத்தைப்  பண்ணிவிடுவார்கள். இரண்டாவது பெண்ணின் கல்யாணம்தான் தள்ளிக்கொண்டு  போகும். சீதாவின் கல்யாணம்
அப்படிப் போகக்கூடாது என்பதற்காக, அவள் பிறந்த நாள் முதலாகவே வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு பவுன் காசுகளை வாங்கிச் சேர்த்துக்கொண்டே வந்திருக்கிறேன். என்னுடைய பிறந்த நாளிலும், அவளுடைய பிறந்த நாளிலுமாக அதைச் செய்து வந்தேன். அந்தந்த
வருட விலை நிலவரப்படி தங்கக் காசுகளை வாங்கிச் சேர்த்துக்
கொண்டே வந்ததால், என்னால்  சேர்க்க முடிந்தது. உன் ஆயாவீட்டு
அய்யா அப்படிச் சேர்த்துத்தான் எனக்குத் திருமணம் செய்து
வைத்தாராம். அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டதுதான் அந்தப்
பழக்கம். இப்போது 120 பவுன் காசுகளுக்கு மேல் சேர்ந்துள்ளது.
இன்றைக்கு அதன் மதிப்பு 25 லட்ச ரூபாய்களாகும். நீ நல்ல
மாப்பிள்ளையாக மட்டும் பார். செலவு மொத்தத்தையும் நான்
பார்த்துக் கொள்கிறேன்.”

தன் தாயார் சொல்லச் சொல்லச் சொல்ல திகைப்பின் எல்லைக்கே அண்ணாமலை சென்று விட்டார்.

நகரத்தார் வீடுகளில், இது போன்று இருக்கும் கெட்டிக்கார ஆச்சிமார்களின் மேன்மையையும், அவர்களுடைய சேமிக்கும்  பழக்கத்தையும் எடுத்துச் சொல்ல வார்த்தைகள் ஏது? என்று நினைத்தவரின் கண்கள் பனித்துவிட்டன.

தன் தாயார் அவருக்கு சாட்சாத் கோவிலில் உறையும் அந்த மங்களாம்பிகை யாகவே காட்சியளித்தார்

சட்டென்று தன் தாயாரின் காலகளில் விழுந்து வணங்கியவர், உணர்ச்சி மேலிட இப்படி சொன்னார்:

”ஆத்தா, இனி நான் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் பரவாயில்லை. அத்தனை ஜென்மங்களிலும், நீங்கள்தான் எனக்குத் தாயாராக  வரவேண்டும்!”

                              +++++++++++++++++++++++++++++++++++++++++                              

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

48 comments:

kmr.krishnan said...

வழக்கம் போல நல்ல‌ பாஸிடிவ் நோட்டில் பாட‌ப்பெற்ற சங்கீதம் இந்தக் கதை.
உங்கள் கதைகளில் துர்குணம் உள்ளவர்களுக்கு வேலையே இல்லை.

84 வயதில் கணினிப் பயன்பாட்டைத் தெரிந்து வைத்துக்கொண்டு கண‌க்குப் பார்க்கும் வேலையைச் செய்துவரும் ராமனாதன் செட்டியார் ஆச்சரியப் படுத்துகிறார்.

அண்ணமலை செட்டியாராக மாறப்போகும் அண்ணாமலையின் தாயாரைப் போலவே என் தாயாரும் எதிர்காலத்தில் வரப்போகும் செலவுகளை கணித்து,
அதற்காகத் தொடர்ந்து சேமித்து, அந்த சந்தர்ப்பம் வரும் போது சேமிப்பை அன்பளிப்பாகக் கொடுப்பார்.அந்த பெரிய ஆச்சியைப் படிக்கும் போது என் தாயாரை மீண்டும் கண்டது போல உணர்ந்தேன். கண்களில் நீர் நிறைந்தது.

தங்கக்காசு சேமித்து வந்த ஆச்சியைப் போல என் மனைவியாரும் தங்கத்திலேயே தன் சேமிப்பு முழுவதையும் போடுவார். மூன்று பெண்களுக்கும் திருமணத்தின் போது கணிசமாக நகைகள் அளிக்க உதவியாக இருந்தது.

உள்ளூரிலேயே பெற்றோரும் மகனும் தனித்தனிக் குடித்தனம் என்பது சரியான எதார்த்தம்.முதியவர்களே தங்களால் நடமாட முடியும் வரை தனியாக வாழவே விரும்புகின்றனர்.

நல்ல கதையை காலையிலேயே படித்தது வாழ்க்கையின் மீது வெளிச்சம் பாய்ச்சியது போல தன்னம்பிக்கை அளித்தது.மிக்க நன்றி ஐயா!

kmr.krishnan said...

கும்பேஸ்வரர் கோவில் கோபுரத்தின் கம்பீர போஸ் அருமை.

சரண் said...

விலைவாசி உயர்வால் நடுத்தர மக்கள் விழிபிதுங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் மனதுக்கு தெம்பூட்டும் விதத்தில் சேமிப்பின் மேன்மையை கருவாக கொண்ட அழகான சிறுகதை.

கடந்த ஒண்ணேகால் வருடமாக சொந்த தொழில் செய்து வரும் எனக்கு இருக்கும் கடன் தொகை மிகவும் சுமையாக தெரிந்தது. ஒவ்வொருவரிடமும் மொத்தமாக இவ்வளவு கொடுக்க வேண்டுமே. இந்த வங்கியில் அவ்வளவு திருப்பி செலுத்த வேண்டுமே என்று ஆறு மாத காலமாக மிகவும் திகைத்திருந்தேன்.

ஆனால் சமீப காலமாக என்னுடைய இரு வங்கிக்கணக்குகளில் ஒன்றில் இப்படி திருப்பி செலுத்த வேண்டிய தொகைக்காக சிறு சிறு தொகைகளை போட்டு வைத்து விட்டு அந்த பணம் என்னுது இல்லை என்று பல்லைக்கடித்துக்கொண்டு செயல்பட்டு வந்தேன். என்ன ஆச்சரியம் நாலு மாதங்களில் வழக்கமான செலவு போக 10 சதவீத கடன் அடைபட்டு விட்டது. நான் சேமிப்பின் பலனை நேரடியாக உணர்ந்த தருணம் அதுதான்.

இந்த கதையும் பலருக்கு இது போன்ற தருணங்களை நினைவூட்டும்.

renga said...

அய்யாவுக்கு,
பணிவான வணக்கங்கள். சேமிப்பின் அருமையை உணர்த்தும் மிக நல்ல சிறுகதை. மிக்க நன்றி.
தங்கள் மாணவன், ரெங்கா.

ஸ்ரீராம். said...

சிறு சேமிப்பு இந்தியாவின் தனிப் பெரும் சொத்து. குடும்ப அமைப்புகளும்தான். அதனால்தான் பாசமும் பாசத்தில் சிறுவாடும் சேர்க்க முடிகிறது. அருமையான கதை. கடவுள் வழி வைத்துக் கொண்டுதான் அனுமதி வழங்கி இருக்கிறார்!

eswari sekar said...

story nanrga ..erunthu

ஜி ஆலாசியம் said...

கண்களை பனிக்க வைத்தது ஐயா!

////“சீதா மேல் எனக்கு அலாதிப் பிரியம். அவளுக்கு என் பெயரை
நீ வைத்த காலத்தில் இருந்தே அவள் மீது ஒரு பிரியம். அத்துடன்
அவளும்மிகவும் பாசமானவள்.////

மிகவும் அழகானக் கதை... இங்கே எங்கள் வீட்டில் நடந்த நிகழ்வொன்றை நினைவுக்கு கொண்டுவருகிறது... எனது தந்தையாரும் எனது மூத்த சகோதரிக்கு அவரின் தாயாரின் பெயரை வைத்திருந்ததோடு மட்டும் அல்லாமல், அவரின் தாயின் காதில் விழும்படியாகவே எனது சகோதரியின் பெயரைச் சொல்லி அழைப்பாராம். அதாவது தனது தாய் ''நான் இருக்கும் போதே எனது பெயர் விளங்குது'' என்று நினைத்துக் கொள்வார் என்று... அப்படி இருக்க ஒரு சுவாரஸ்யமான விஷயம்; எனது சகோதரியின் முதல் பிரசவத்தின் போது எங்க அப்பத்தா நல்லபடியாக பிரசவம் நடக்கணும் என்று கோவிலுக்கும் ஆஸ்பத்திரிக்குமாக நடந்தார்கலாம். தனது எண்பது வயதிலும் ஆஸ்பத்திரியில் பேத்தி அருகிலே இருந்தார்களாம்!

தனது பெயர் கொண்டு இருக்கும் பேரன் பேத்திகளினிடம் பாசத்தோடு இருப்பதோடு அவர்களின் வாழ்வின் அனைத்தும் நல்லதாகவே நடக்க வேண்டும் என்று அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் தான் எத்தனை வியப்பிற்குரியது.

கதையிலே வரும் சீதா ஆச்சியும் அதைத் தான் செய்து இருக்கிறார்கள்.

இது கதை அல்ல நிஜம்!!! அருமை! பகிர்விற்கு நன்றிகள் ஐயா!

Gnanam Sekar said...

அய்யா காலைவணக்கம் . சேமிக்கும் முறைகளை இன்றும் , நான் பழகும் நகராத்தார் வசம் தான் கற்றுக்கொண்டேன் . அருமை

அய்யர் said...

கதை விமர்சனம் தானே..
அது இப்படி இருக்கட்டுமே.. என...

1) 60வயது பிறந்தநாள் தானே அதற்கு எதற்கு கல்யாணம்...? logic இடிக்கவில்லை..?

2) சிறுவாடு என்பது பழக்க சொல் அதன் பொருள் சிறுக (பணம்) போடு மருவி சிறுவாடானது.. (மாற்றுக் கருத்தாளர்கள் மனம் திறக்கலாம்)

3)அடுத்த ஜென்மத்திலும் பெரிய ஆச்சிக்கு மகனாக பிறக்க நினைக்கும் அண்ணா...
இன்னமும் எத்தனை சென்மத்தில் தான் ஆச்சியின் சேமிப்பை கரைப்பாரோ? (அவரை நெகடிவ் ரோலில் காட்டியது நெருடலாக இருக்கிறது)

4) சேமிக்கும் நோக்கமே செலவழிக்கத்தான் என்றால் ..
முதலீடும் முன்னேற்றமும் எப்போது?

5)(60ம் கல்யாணம் போன்ற) அனாவசிய செலவுகளை குறைத்துக் கொண்டால் சேமிப்பு "தானே" சேரும் தானே

6) உதவுவதற்கு ஆட்கள் இருப்பதால் தான் சேமிக்க நினைப்பவர்கள் குறைந்து இருக்கிறார்கள்..

Udhaya Kumar said...

குருவிற்கு வணக்கம்
நல்ல கதை
நன்றி

arul said...

superb story

Thanjavooraan said...

நல்ல கதை. பொழுது போக்குக்காக இல்லாமல் எதார்த்தத்தை எடுத்துச் சொல்லும் நகரத்தார் வீட்டுக் கதை. சேமிப்பு எப்படி சமயத்தில் கை கொடுக்கும் என்பது அவர்களுக்குத்தான் அதிகம் தெரியும். நான் வேலைக்கு சேர்ந்த புதிதில் என் மாத ஊதியம் 130 ரூபாய். ஒரு வருட போனஸ் கிட்டத்தட்ட ஒரு மாத ஊதியத்துக்கு நிகரானது. அப்போது சவரன் ரூ.110. அரை பவுனுக்கு ஒரு மோதிரம் வாங்கினேன். இன்று நினைத்தால் மயக்கம் வருகிறது பவுனின் விலை. அப்போது புத்தி இருந்து சேமித்திருந்தால் இப்போது எப்படி இருந்திருக்கும் என்று நான் விடும் பெருமூச்சு உங்களுக்கும் கேட்கும் என நினைக்கிறேன். நண்பர் ஆலாசியம் அவர்களுக்கு ஏற்பட்ட குடும்ப அனுபவம் இந்த கதை நிகழ்ச்சியை நன்றாக அனுபவிக்க வைத்திருக்கிறது. அய்யர் அவர்கள் தனி கோணத்தில் ஆய்வு செய்திருக்கிறார்; அதுவும் சரிதான். இந்துக்களின் நம்பிக்கை 60, 70, 80 (ஆயிரம் பிறை கண்டபின்) சாந்தி செய்து கொள்வது என்பது. அது வீண் செலவு என்று கருதுவதற்கில்லை. எளிமையாகச் செய்து கொள்ளலாம். நம் சடங்குகள் அனைத்துமே நம்பிக்கையின் அடிப்படையிலானது என்பதுதான் தெரியுமே. ஆசிரியர் ஐயாவின் கதைகளில் சொந்த அனுபவங்கள் அதிகமாக இருக்குமென எண்ணுகிறேன். வாழ்க!

A.Ramakrishnan said...

People those who read the story should feel the importance of "Savings" and implement in their personal life. Excellent Excellent Sir - Thank you Your student A.Ramakrishnan, Kolkata

kmr.krishnan said...

1) 60வயது பிறந்தநாள் தானே அதற்கு எதற்கு கல்யாணம்...? logic இடிக்கவில்லை..?

அவ்வாறாயின் எந்த ஒரு விழாவுமே தேவையில்லைதான்.

சிந்தித்துப் பேசத் துவங்கிய குழந்தை "உன் திருமண புகைப்படத்தில்/காணொலியில் நான் ஏன் இல்லை?" என்று தன் தாயாரை 5 வயதில் கேட்கிறது.என் பேரனும் பேத்தியும் என் மகள்களிடம் இப்படிக் கேட்ட அனுபவம் உள்ளது.

என் திருமணததினை ஒரு ஃபிளேஷ் இல்லாத புகைப்படக் கருவியில் (பெட்டிக்கேமரா)படமெடுத்தார் ஒரு நண்பர். அந்தப் படங்களை தொகுக்காமல் உதிரியாக மூலையில் கடாசியிருந்தேன். அவற்றைக் கண்டெடுத்த என் 3வது மகள் இப்போது அவற்றையெல்லாம் பெரிதாக்கி ஒரு தொகுப்பாகச் செய்து தன் சகோதரிகளுக்கும் அளித்துள்ளாள். படங்கள் எல்லாம் ஷேக் ஆகியும் கருமை படிந்தும் இருந்தாலும் அவற்றினை பாதுகாக்க விரும்புகிறார்கள். இது ஒர் அன்பின் வெளிப்பாடு.

தமிழ் ஆண்டுகள் 60. முன்னர் ஆய்ர்வேத/சித்த‌ மருத்துவ அறிவு மிகுந்து இருந்தும் போக்கு வரத்து சாதனங்கள் குறைவால் நேரத்திற்கு மருத்துவ‌ உதவி கிடைக்காமல் பலரும் 60 வய‌தினை எட்ட முடியவில்லை.அப்போது 60 வயதினைக் கடந்த ஒரு பெரியவரும் மனைவியும் நலமுடன் இருந்தால்,
இல்லறம் என்ற நல்லறம் ஆற்றிய மூத்தவர்களுக்கு இளையவர்கள் கூடி விழா எடுத்தனர். அவ்விழாவை தங்கள் பெற்றொர்களின் மணக் கோலத்தைக் காண விரும்பி திருமண விழாவாகக் கொண்டாடினர்.

திருமணத்தின் அனைத்துச் சடங்குகளும் 60 அன்று நடைபெறுவதில்லை. ஆயுஷ் ஹோமம், மிருத்யுஞ்ஜெய ஹோமம் போன்றவையே பிராதான்யமாக நடைபெறும்.தாலி கட்டும் சடங்கு, மாலை மாற்றுதல் போன்றவையே திருமண நினைவை ஊட்டும்.

நம் மரபு கூடி இருந்து குளிர்வது. எனவே உறவும் நட்பும் சேர்ந்து மகிழ்ச்சி அடையும் ஒரு நிகழ்ச்சி இது. பரிசளிப்பாக விழா முதியவர்களுக்குப் பெரும்பாலும் ஆடைக‌ளே அளிக்கப்படும். விரக்தி நிலையில் நல்லாடை அணியாமல் இருந்துவிடக்கூடாது, புத்தாடைகள் புத்துணர்ச்சி அளிக்கும் என்ற நல்லெண்ணத்திலேயே அவ்வாறு அளிக்கப்படும்.

kmr.krishnan said...

2) சிறுவாடு என்பது பழக்க சொல் அதன் பொருள் சிறுக (பணம்) போடு மருவி சிறுவாடானது.. (மாற்றுக் கருத்தாளர்கள் மனம் திறக்கலாம்)

நீங்கள் சொல்லியபடியும் இருக்கலாம்.

என் சிந்தனை இப்படி ஓடுகிறது: சிறுவாடு, கருவாடு ஒப்பிடுக.

மாங்காய், நெல்லிக்காய், கொத்தவர‌ங்காய், நாரத்தங்காய்,கிடாரங்காய், எலுமிச்சம் பழம் ஆகியவை வெய்யிலில் காய வைக்கப்பட்டு ஜாடியில் காப்பாற்றி வைக்கப்படுகின்றன.ஏன் வெண்டை ,கத்தரிக்காய் கூட வற்றல் ஆக்கப்படுகின்றன. மழைக்காலத்திற்கான முனேற்பாடு இது.
நாம் வற்றல் என்கிறோம்.

அசைவ உணவினர் மிருக, மீன் சதைகளை வெய்யிலில் காயவைத்து ஜாடியில் பொதிந்து வைத்து நீண்ட நாட்களுக்குப் பயன் படுத்துகின்ற‌னர் அவர்கள் அதனை கறுவாடு என்கின்றனர்.

சமையல் அறையில் சிற்கச்சிறுகச் சேமிக்கும் பணம் சிறுவாடு. உணவுப்பண்டங்கள் மழைக்காலத்திற்காக கருவாடாக்கி சேமிக்கப்படுவது போல‌
எதிகால எதிர்பாரா செல்வுகளுக்காக அஞ்சரைப்பெட்டி, ஊறுகாய் ஜாடி ஆகியவைகளில் சேமிப்பதால் சிறுவாடு. ப‌ணம் பயனின்றி வாட விடப்பட்டு, தேவையான போது மலர்த்தப் படுவதால் சிறு வாடு.

kmr.krishnan said...

//3)அடுத்த ஜென்மத்திலும் பெரிய ஆச்சிக்கு மகனாக பிறக்க நினைக்கும் அண்ணா...இன்னமும் எத்தனை சென்மத்தில் தான் ஆச்சியின் சேமிப்பை கரைப்பாரோ? (அவரை நெகடிவ் ரோலில் காட்டியது நெருடலாக இருக்கிறது)//

என்ன செய்வது? சிலருடைய கிரகக் கோளாறு அவர்களை வாழ் நாள் முழுவதும் பெற்றோரையோ, உடன் பிறந்தோரையோ, உற்றாரையோ அண்டிப் பிழைக்கும் படி செய்து விடுகிறது.

அண்ணாமலையும் ஏதோ அலுவலகப்பணி செய்கிறார். ஆனால் அவருடைய வருமானம் அடிப்படை தேவைகளுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது போலும். ஏழையாக இருந்தாலும் உலக நடைமுறை, சம்பிரதாயங்களை
விடாமல், கடன் வாங்கியாவது செய்யும் மனோபாவம் பலருக்கும் உள்ளது. அண்ணாமலை விரும்பாவிட்டாலும் அவருடைய மனைவி தன் சொந்த பந்தங்களை அழைத்து மகிழ்ச்சியுடன் உணவளிக்க விரும்புகிறார்.மற்ற செலவுகளை கட்டுப்படுத்திவிடலாம் என்றும் கூறுகிறார்.

கதை 'பணத்திருப்பு' புத்தகத்தைப் பற்றிச் சொல்கிறது. இவர்கள் ஏற்கனவே எழுதிய மொய்ப்பு (மொழி எழுதிய் பணம்)இப்படி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தால் திரும்பிவரும் என்ற ஒரு மனக்கணக்கும் சின்ன ஆச்சிக்கு உள்ளது என்ற குறிப்பு சொல்லாமல் புரிந்து கொள்ள விடப்பட்டுள்ளது.

kmr.krishnan said...

//4) சேமிக்கும் நோக்கமே செலவழிக்கத்தான் என்றால் ..
முதலீடும் முன்னேற்றமும் எப்போது?//

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்த
கேடு கெட்ட மானுடரே கேளுங்கள் கூடுவிட்டு
ஆவிதான் போன பின்பு ஆரே
அனுபவிப்பார் அந்தப் பணம்?

சேமிப்பதே செலவழிக்கத்தான்.செலவழிக்காமல் ஓர் இடத்தில் தங்குமானால் பொது முன்னேற்றம் கிடைக்காது.

ரூபாய் நோட்டு அல்ல சேமிப்பு‍/சொத்து.அதனால் கிடைக்கும் பலன்களே உண்மையான சேமிப்பு.

தேனீயின் உதாரணம் போதும். சேமித்து வைத்துத் தான் அனுபவிகாமல் மனிதன் என்ற கள்வனிடம் கொடுக்கிறது.

நகரத்தார்கள் பெரும்பாலும் தங்கள் சேமிப்புகளை சிவாலய கும்பாபிஷேகம் செய்யவே பயன் படுத்துவார்கள்.

என் பெற்றோர் அறிவுரை அதிக‌பட்சம் வருமானத்தில் 33% சேமிக்கலாம். மீதி67% உடனுக்குடன் செலவழி.சேமித்த 33% ல் பாதி அவசர காலத்துக்கு; மீதிப்பாதி நீண்டகாலத் தேவைகள்.

kmr.krishnan said...

/5)(60ம் கல்யாணம் போன்ற) அனாவசிய செலவுகளை குறைத்துக் கொண்டால் சேமிப்பு "தானே" சேரும் தானே//

விழாக்கள் தேவையில்லை என்று கூறமுடியாது. அதுவும் மேற்கத்திய நாகரிகம் விரைவாகப் பரவி வரும் சூழலில், நட்பு என்பதே முகம் தெரியாத வலையுலக நட்பு என்று ஆகிவிட்ட சூழலில் (குடும்ப) உறவுகள் மேம்பட
விழாக்கள் வேண்டும் என்ப‌தே என் விருப்பம். வேண்டுமானால் இந்த நிகழ்ச்சிகளைக் கடன் வாங்கிச் செய்யக் கூடாது என்று அறிவுறுத்தலாம்.

விழாக்கள் மூலம் பல தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கிறது.

kmr.krishnan said...

/உதவுவதற்கு ஆட்கள் இருப்பதால் தான் சேமிக்க நினைப்பவர்கள் குறைந்து இருக்கிறார்கள்..//

இருக்கலாம்.

எப்படி உதவி பெறவேண்டும் எண்ணம் சிலரிடம் உள்ளதோ, அதேபோல உதவி செய்ய வேண்டும் என்ற மனோபாவம் உள்ளவர்களும் இருக்கிறார்கள்.

"கொள்வார் இலாமையால் கொடுப்பாரும் இல்லை மாதோ" என்ற நிலை வந்தால் நீங்கள் சொலவது சாத்தியமாகலாம்.

இலண்டன் மாநகரில் வீதியில் கிடாரையும் சைலபோனையும் வாசித்து துண்டை விரித்து பிச்சை எடுக்கும் இளைஞர்கள் உள்ளார்கள். அவர்களுக்கு உணவளித்துவிட்டு அப்புறம் வேலைக்குபோ என்று சொல்வதே முறை.சும்மா அட்வைஸ் உதவும் என்று நான் நினைக்கவில்லை.

ஜி ஆலாசியம் said...

நான் கேள்விப் பட்டவரை நகரத்தார் வீட்டு விசேசங்களில் உறவுக்காரர்கள் வருகைப்பதிவாக கால் ரூபாயை மாத்திரமே மொய் பணமாக எழுதுவார்கள் என்று... அதற்கு மேல் வாங்குவதும் வழக்கமில்லை என்று அதைப் பற்றிய விவரங்களை வாத்தியார் ஐயா விளக்க வேண்டும்.

நன்றிகள் ஐயா!

SP.VR. SUBBAIYA said...

////Blogger kmr.krishnan said...
வழக்கம் போல நல்ல‌ பாஸிடிவ் நோட்டில் பாட‌ப்பெற்ற சங்கீதம் இந்தக் கதை.
உங்கள் கதைகளில் துர்குணம் உள்ளவர்களுக்கு வேலையே இல்லை.
84 வயதில் கணினிப் பயன்பாட்டைத் தெரிந்து வைத்துக்கொண்டு கண‌க்குப் பார்க்கும் வேலையைச் செய்துவரும் ராமனாதன் செட்டியார் ஆச்சரியப் படுத்துகிறார்.
அண்ணமலை செட்டியாராக மாறப்போகும் அண்ணாமலையின் தாயாரைப் போலவே என் தாயாரும் எதிர்காலத்தில் வரப்போகும் செலவுகளை கணித்து,
அதற்காகத் தொடர்ந்து சேமித்து, அந்த சந்தர்ப்பம் வரும் போது சேமிப்பை அன்பளிப்பாகக் கொடுப்பார்.அந்த பெரிய ஆச்சியைப் படிக்கும் போது என் தாயாரை மீண்டும் கண்டது போல உணர்ந்தேன். கண்களில் நீர் நிறைந்தது.
தங்கக்காசு சேமித்து வந்த ஆச்சியைப் போல என் மனைவியாரும் தங்கத்திலேயே தன் சேமிப்பு முழுவதையும் போடுவார். மூன்று பெண்களுக்கும் திருமணத்தின் போது கணிசமாக நகைகள் அளிக்க உதவியாக இருந்தது.
உள்ளூரிலேயே பெற்றோரும் மகனும் தனித்தனிக் குடித்தனம் என்பது சரியான எதார்த்தம்.முதியவர்களே தங்களால் நடமாட முடியும் வரை தனியாக வாழவே விரும்புகின்றனர்.
நல்ல கதையை காலையிலேயே படித்தது வாழ்க்கையின் மீது வெளிச்சம் பாய்ச்சியது போல தன்னம்பிக்கை அளித்தது.மிக்க நன்றி ஐயா!//////

எழுதுபவனின் முதல் கடமை நல்ல பாஸிடிவான கருத்துக்களைச் சொல்வதுதான். நெகட்டிவான மேட்டர்களைச் சொல்வதற்கு நாட்டில் ஏராளமான (ஆ)சாமிகள் இருக்கிறார்கள். அவர்களை விட்டு விடுவோம். நெகிழ்ச்சியான உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger kmr.krishnan said...
கும்பேஸ்வரர் கோவில் கோபுரத்தின் கம்பீர போஸ் அருமை.////

கோபுரங்கள் எப்போதுமே கம்பீரமாகவே இருக்கும். இறைவன் உறையும் இடங்களின் நுழைவாயில்கள் அல்லவா அவைகள்! நன்றி!!!

SP.VR. SUBBAIYA said...

////Blogger சரண் said...
விலைவாசி உயர்வால் நடுத்தர மக்கள் விழிபிதுங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் மனதுக்கு தெம்பூட்டும் விதத்தில் சேமிப்பின் மேன்மையை கருவாக கொண்ட அழகான சிறுகதை.
கடந்த ஒண்ணேகால் வருடமாக சொந்த தொழில் செய்து வரும் எனக்கு இருக்கும் கடன் தொகை மிகவும் சுமையாக தெரிந்தது. ஒவ்வொருவரிடமும் மொத்தமாக இவ்வளவு கொடுக்க வேண்டுமே. இந்த வங்கியில் அவ்வளவு திருப்பி செலுத்த வேண்டுமே என்று ஆறு மாத காலமாக மிகவும் திகைத்திருந்தேன்.
ஆனால் சமீப காலமாக என்னுடைய இரு வங்கிக்கணக்குகளில் ஒன்றில் இப்படி திருப்பி செலுத்த வேண்டிய தொகைக்காக சிறு சிறு தொகைகளை போட்டு வைத்து விட்டு அந்த பணம் என்னுது இல்லை என்று பல்லைக்கடித்துக்கொண்டு செயல்பட்டு வந்தேன். என்ன ஆச்சரியம் நாலு மாதங்களில் வழக்கமான செலவு போக 10 சதவீத கடன் அடைபட்டு விட்டது. நான் சேமிப்பின் பலனை நேரடியாக உணர்ந்த தருணம் அதுதான்.
இந்த கதையும் பலருக்கு இது போன்ற தருணங்களை நினைவூட்டும்.////

ஒrரு தடவைக்கு, இரண்டு தடவை யோசித்து செலவு செய்தால், அதாவது செலவைக் குறைத்துக் கொண்டால், சேமிக்கத் தானாகப் பணம் கிடைக்கும்! நன்றி சரண்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger renga said...
அய்யாவுக்கு,
பணிவான வணக்கங்கள். சேமிப்பின் அருமையை உணர்த்தும் மிக நல்ல சிறுகதை. மிக்க நன்றி.
தங்கள் மாணவன், ரெங்கா.////

உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

////Blogger ஸ்ரீராம். said...
சிறு சேமிப்பு இந்தியாவின் தனிப் பெரும் சொத்து. குடும்ப அமைப்புகளும்தான். அதனால்தான் பாசமும் பாசத்தில் சிறுவாடும் சேர்க்க முடிகிறது. அருமையான கதை. கடவுள் வழி வைத்துக் கொண்டுதான் அனுமதி வழங்கி இருக்கிறார்!/////

உண்மைதான்! உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!

SP.VR. SUBBAIYA said...

////Blogger eswari sekar said...
story nanrga ..erunthu////

நல்லது. நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger ஜி ஆலாசியம் said...
கண்களை பனிக்க வைத்தது ஐயா!
////“சீதா மேல் எனக்கு அலாதிப் பிரியம். அவளுக்கு என் பெயரை
நீ வைத்த காலத்தில் இருந்தே அவள் மீது ஒரு பிரியம். அத்துடன்
அவளும்மிகவும் பாசமானவள்.////
மிகவும் அழகானக் கதை... இங்கே எங்கள் வீட்டில் நடந்த நிகழ்வொன்றை நினைவுக்கு கொண்டுவருகிறது... எனது தந்தையாரும் எனது மூத்த சகோதரிக்கு அவரின் தாயாரின் பெயரை வைத்திருந்ததோடு மட்டும் அல்லாமல், அவரின் தாயின் காதில் விழும்படியாகவே எனது சகோதரியின் பெயரைச் சொல்லி அழைப்பாராம். அதாவது தனது தாய் ''நான் இருக்கும் போதே எனது பெயர் விளங்குது'' என்று நினைத்துக் கொள்வார் என்று... அப்படி இருக்க ஒரு சுவாரஸ்யமான விஷயம்; எனது சகோதரியின் முதல் பிரசவத்தின் போது எங்க அப்பத்தா நல்லபடியாக பிரசவம் நடக்கணும் என்று கோவிலுக்கும் ஆஸ்பத்திரிக்குமாக நடந்தார்கலாம். தனது எண்பது வயதிலும் ஆஸ்பத்திரியில் பேத்தி அருகிலே இருந்தார்களாம்!
தனது பெயர் கொண்டு இருக்கும் பேரன் பேத்திகளினிடம் பாசத்தோடு இருப்பதோடு அவர்களின் வாழ்வின் அனைத்தும் நல்லதாகவே நடக்க வேண்டும் என்று அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் தான் எத்தனை வியப்பிற்குரியது.
கதையிலே வரும் சீதா ஆச்சியும் அதைத் தான் செய்து இருக்கிறார்கள்.
இது கதை அல்ல நிஜம்!!! அருமை! பகிர்விற்கு நன்றிகள் ஐயா!////

வாசகரின் கண்களைப் பனிக்க வைப்பது என்பது எழுத்திற்குக் கிடைக்கும் வெற்றியாகும். உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி ஆலாசியம்!!!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Gnanam Sekar said...
அய்யா காலைவணக்கம் . சேமிக்கும் முறைகளை இன்றும் , நான் பழகும் நகராத்தார் வசம் தான் கற்றுக்கொண்டேன் . அருமை////

உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!

SP.VR. SUBBAIYA said...

////Blogger அய்யர் said...
கதை விமர்சனம் தானே..
அது இப்படி இருக்கட்டுமே.. என...
1) 60வயது பிறந்தநாள் தானே அதற்கு எதற்கு கல்யாணம்...? logic இடிக்கவில்லை..?
2) சிறுவாடு என்பது பழக்க சொல் அதன் பொருள் சிறுக (பணம்) போடு மருவி சிறுவாடானது.. (மாற்றுக் கருத்தாளர்கள் மனம் திறக்கலாம்)
3)அடுத்த ஜென்மத்திலும் பெரிய ஆச்சிக்கு மகனாக பிறக்க நினைக்கும் அண்ணா...
இன்னமும் எத்தனை சென்மத்தில் தான் ஆச்சியின் சேமிப்பை கரைப்பாரோ? (அவரை நெகடிவ் ரோலில் காட்டியது நெருடலாக இருக்கிறது)
4) சேமிக்கும் நோக்கமே செலவழிக்கத்தான் என்றால் ..
முதலீடும் முன்னேற்றமும் எப்போது?
5)(60ம் கல்யாணம் போன்ற) அனாவசிய செலவுகளை குறைத்துக் கொண்டால் சேமிப்பு "தானே" சேரும் தானே
6) உதவுவதற்கு ஆட்கள் இருப்பதால் தான் சேமிக்க நினைப்பவர்கள் குறைந்து இருக்கிறார்கள்../////

இதுவும் விமர்சனம்தான்: நீங்கள் இன்னும் பக்குவப்பட வேண்டும்! அதற்குரிய வாய்ப்பை இறைவன் உங்களுக்கு நல்குவாராக!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Udhaya Kumar said...
குருவிற்கு வணக்கம்
நல்ல கதை
நன்றி////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

////Blogger arul said...
superb story/////

உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Thanjavooraan said...
நல்ல கதை. பொழுது போக்குக்காக இல்லாமல் எதார்த்தத்தை எடுத்துச் சொல்லும் நகரத்தார் வீட்டுக் கதை. சேமிப்பு எப்படி சமயத்தில் கை கொடுக்கும் என்பது அவர்களுக்குத்தான் அதிகம் தெரியும். நான் வேலைக்கு சேர்ந்த புதிதில் என் மாத ஊதியம் 130 ரூபாய். ஒரு வருட போனஸ் கிட்டத்தட்ட ஒரு மாத ஊதியத்துக்கு நிகரானது. அப்போது சவரன் ரூ.110. அரை பவுனுக்கு ஒரு மோதிரம் வாங்கினேன். இன்று நினைத்தால் மயக்கம் வருகிறது பவுனின் விலை. அப்போது புத்தி இருந்து சேமித்திருந்தால் இப்போது எப்படி இருந்திருக்கும் என்று நான் விடும் பெருமூச்சு உங்களுக்கும் கேட்கும் என நினைக்கிறேன். நண்பர் ஆலாசியம் அவர்களுக்கு ஏற்பட்ட குடும்ப அனுபவம் இந்த கதை நிகழ்ச்சியை நன்றாக அனுபவிக்க வைத்திருக்கிறது. அய்யர் அவர்கள் தனி கோணத்தில் ஆய்வு செய்திருக்கிறார்; அதுவும் சரிதான். இந்துக்களின் நம்பிக்கை 60, 70, 80 (ஆயிரம் பிறை கண்டபின்) சாந்தி செய்து கொள்வது என்பது. அது வீண் செலவு என்று கருதுவதற்கில்லை. எளிமையாகச் செய்து கொள்ளலாம். நம் சடங்குகள் அனைத்துமே நம்பிக்கையின் அடிப்படையிலானது என்பதுதான் தெரியுமே. ஆசிரியர் ஐயாவின் கதைகளில் சொந்த அனுபவங்கள் அதிகமாக இருக்குமென எண்ணுகிறேன். வாழ்க!////

சடங்குகள், சம்பிரதாயங்கள் வழக்கொழிந்து போகக்கூடாது என்பதையும் பார்க்க வேண்டும். நீங்கள் சொல்வது போல அவைகள் நம்பிக்கையின் அடிப்படையில் மக்களின் வாழ்வில் கலந்துள்ளது. உங்கள் பின்னூட்டத்திற்கும், கருத்துப் பகிர்விற்கும் நன்றி கொபாலன் சார்!

praveen'z blog said...

Anbulla Vathiyar avargale. Vanakkam.

Popcorn post endru solli padangalai ipothalem suriki vitirgal. Anal Nalla karuthukalai virivaaga eluthugirirgal. Athapol padangalayum virivaga sonnal innum niraivudan irukum aiyaa:)

SP.VR. SUBBAIYA said...

/////Blogger A.Ramakrishnan said...
People those who read the story should feel the importance of "Savings" and implement in their personal life. Excellent Excellent Sir - Thank you Your student A.Ramakrishnan, Kolkata/////

உங்களின் சிறப்பான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

Blogger kmr.krishnan said...
1) 60வயது பிறந்தநாள் தானே அதற்கு எதற்கு கல்யாணம்...? logic இடிக்கவில்லை..?
அவ்வாறாயின் எந்த ஒரு விழாவுமே தேவையில்லைதான்.
சிந்தித்துப் பேசத் துவங்கிய குழந்தை "உன் திருமண புகைப்படத்தில்/காணொலியில் நான் ஏன் இல்லை?" என்று தன் தாயாரை 5 வயதில் கேட்கிறது.என் பேரனும் பேத்தியும் என் மகள்களிடம் இப்படிக் கேட்ட அனுபவம் உள்ளது.
என் திருமணததினை ஒரு ஃபிளேஷ் இல்லாத புகைப்படக் கருவியில் (பெட்டிக்கேமரா)படமெடுத்தார் ஒரு நண்பர். அந்தப் படங்களை தொகுக்காமல் உதிரியாக மூலையில் கடாசியிருந்தேன். அவற்றைக் கண்டெடுத்த என் 3வது மகள் இப்போது அவற்றையெல்லாம் பெரிதாக்கி ஒரு தொகுப்பாகச் செய்து தன் சகோதரிகளுக்கும் அளித்துள்ளாள். படங்கள் எல்லாம் ஷேக் ஆகியும் கருமை படிந்தும் இருந்தாலும் அவற்றினை பாதுகாக்க விரும்புகிறார்கள். இது ஒர் அன்பின் வெளிப்பாடு.
தமிழ் ஆண்டுகள் 60. முன்னர் ஆய்ர்வேத/சித்த‌ மருத்துவ அறிவு மிகுந்து இருந்தும் போக்கு வரத்து சாதனங்கள் குறைவால் நேரத்திற்கு மருத்துவ‌ உதவி கிடைக்காமல் பலரும் 60 வய‌தினை எட்ட முடியவில்லை.அப்போது 60 வயதினைக் கடந்த ஒரு பெரியவரும் மனைவியும் நலமுடன் இருந்தால்,
இல்லறம் என்ற நல்லறம் ஆற்றிய மூத்தவர்களுக்கு இளையவர்கள் கூடி விழா எடுத்தனர். அவ்விழாவை தங்கள் பெற்றொர்களின் மணக் கோலத்தைக் காண விரும்பி திருமண விழாவாகக் கொண்டாடினர்.
திருமணத்தின் அனைத்துச் சடங்குகளும் 60 அன்று நடைபெறுவதில்லை. ஆயுஷ் ஹோமம், மிருத்யுஞ்ஜெய ஹோமம் போன்றவையே பிராதான்யமாக நடைபெறும்.தாலி கட்டும் சடங்கு, மாலை மாற்றுதல் போன்றவையே திருமண நினைவை ஊட்டும்.
நம் மரபு கூடி இருந்து குளிர்வது. எனவே உறவும் நட்பும் சேர்ந்து மகிழ்ச்சி அடையும் ஒரு நிகழ்ச்சி இது. பரிசளிப்பாக விழா முதியவர்களுக்குப் பெரும்பாலும் ஆடைக‌ளே அளிக்கப்படும். விரக்தி நிலையில் நல்லாடை அணியாமல் இருந்துவிடக்கூடாது, புத்தாடைகள் புத்துணர்ச்சி அளிக்கும் என்ற நல்லெண்ணத்திலேயே அவ்வாறு அளிக்கப்படும்.////

உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!

SP.VR. SUBBAIYA said...

////Blogger kmr.krishnan said...
2) சிறுவாடு என்பது பழக்க சொல் அதன் பொருள் சிறுக (பணம்) போடு மருவி சிறுவாடானது.. (மாற்றுக் கருத்தாளர்கள் மனம் திறக்கலாம்)
நீங்கள் சொல்லியபடியும் இருக்கலாம்.
என் சிந்தனை இப்படி ஓடுகிறது: சிறுவாடு, கருவாடு ஒப்பிடுக.
மாங்காய், நெல்லிக்காய், கொத்தவர‌ங்காய், நாரத்தங்காய்,கிடாரங்காய், எலுமிச்சம் பழம் ஆகியவை வெய்யிலில் காய வைக்கப்பட்டு ஜாடியில் காப்பாற்றி வைக்கப்படுகின்றன.ஏன் வெண்டை ,கத்தரிக்காய் கூட வற்றல் ஆக்கப்படுகின்றன. மழைக்காலத்திற்கான முனேற்பாடு இது.
நாம் வற்றல் என்கிறோம்.
அசைவ உணவினர் மிருக, மீன் சதைகளை வெய்யிலில் காயவைத்து ஜாடியில் பொதிந்து வைத்து நீண்ட நாட்களுக்குப் பயன் படுத்துகின்ற‌னர் அவர்கள் அதனை கறுவாடு என்கின்றனர்.
சமையல் அறையில் சிற்கச்சிறுகச் சேமிக்கும் பணம் சிறுவாடு. உணவுப்பண்டங்கள் மழைக்காலத்திற்காக கருவாடாக்கி சேமிக்கப்படுவது போல‌
எதிகால எதிர்பாரா செல்வுகளுக்காக அஞ்சரைப்பெட்டி, ஊறுகாய் ஜாடி ஆகியவைகளில் சேமிப்பதால் சிறுவாடு. ப‌ணம் பயனின்றி வாட விடப்பட்டு, தேவையான போது மலர்த்தப் படுவதால் சிறு வாடு./////

சிறுவாடு என்பது வீட்டை நிர்வகிக்கும் பெண் வீட்டு செலவிற்கான பணத்தில் தேவைக்கு உள்ளதுபோக மிச்சத்தைத் சேமிப்பது என்று பொருள்படும்! உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!

SP.VR. SUBBAIYA said...

////Blogger kmr.krishnan said...
//3)அடுத்த ஜென்மத்திலும் பெரிய ஆச்சிக்கு மகனாக பிறக்க நினைக்கும் அண்ணா...இன்னமும் எத்தனை சென்மத்தில் தான் ஆச்சியின் சேமிப்பை கரைப்பாரோ? (அவரை நெகடிவ் ரோலில் காட்டியது நெருடலாக இருக்கிறது)//
என்ன செய்வது? சிலருடைய கிரகக் கோளாறு அவர்களை வாழ் நாள் முழுவதும் பெற்றோரையோ, உடன் பிறந்தோரையோ, உற்றாரையோ அண்டிப் பிழைக்கும் படி செய்து விடுகிறது.
அண்ணாமலையும் ஏதோ அலுவலகப்பணி செய்கிறார். ஆனால் அவருடைய வருமானம் அடிப்படை தேவைகளுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது போலும். ஏழையாக இருந்தாலும் உலக நடைமுறை, சம்பிரதாயங்களை
விடாமல், கடன் வாங்கியாவது செய்யும் மனோபாவம் பலருக்கும் உள்ளது. அண்ணாமலை விரும்பாவிட்டாலும் அவருடைய மனைவி தன் சொந்த பந்தங்களை அழைத்து மகிழ்ச்சியுடன் உணவளிக்க விரும்புகிறார்.மற்ற செலவுகளை கட்டுப்படுத்திவிடலாம் என்றும் கூறுகிறார்.
கதை 'பணத்திருப்பு' புத்தகத்தைப் பற்றிச் சொல்கிறது. இவர்கள் ஏற்கனவே எழுதிய மொய்ப்பு (மொழி எழுதிய் பணம்)இப்படி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தால் திரும்பிவரும் என்ற ஒரு மனக்கணக்கும் சின்ன ஆச்சிக்கு உள்ளது என்ற குறிப்பு சொல்லாமல் புரிந்து கொள்ள விடப்பட்டுள்ளது.////

புரிந்து கொள்ளல்லில்தான் எத்தனை கோளாறுகள்? தாயின் மேன்மைக்காத்தான் மகன் அப்படிச் சொன்னார். தாயை மேன்மைப் படுத்துவது எப்படி நெகட்டிவாகும்?

SP.VR. SUBBAIYA said...

/////Blogger kmr.krishnan said...
//4) சேமிக்கும் நோக்கமே செலவழிக்கத்தான் என்றால் ..
முதலீடும் முன்னேற்றமும் எப்போது?//
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்த
கேடு கெட்ட மானுடரே கேளுங்கள் கூடுவிட்டு
ஆவிதான் போன பின்பு ஆரே
அனுபவிப்பார் அந்தப் பணம்?
சேமிப்பதே செலவழிக்கத்தான்.செலவழிக்காமல் ஓர் இடத்தில் தங்குமானால் பொது முன்னேற்றம் கிடைக்காது.
ரூபாய் நோட்டு அல்ல சேமிப்பு‍/சொத்து.அதனால் கிடைக்கும் பலன்களே உண்மையான சேமிப்பு.
தேனீயின் உதாரணம் போதும். சேமித்து வைத்துத் தான் அனுபவிகாமல் மனிதன் என்ற கள்வனிடம் கொடுக்கிறது.
நகரத்தார்கள் பெரும்பாலும் தங்கள் சேமிப்புகளை சிவாலய கும்பாபிஷேகம் செய்யவே பயன் படுத்துவார்கள்.
என் பெற்றோர் அறிவுரை அதிக‌பட்சம் வருமானத்தில் 33% சேமிக்கலாம். மீதி67% உடனுக்குடன் செலவழி.சேமித்த 33% ல் பாதி அவசர காலத்துக்கு; மீதிப்பாதி நீண்டகாலத் தேவைகள்.//////

சேமிக்கும் நோக்கமே செலவழிப்பதற்கல்ல! அதிகப்படியான செலவுகளுக்கு உபரியாக சம்பாதிக்க வேண்டும். சேமிப்பு என்பது கஷ்டங்களில் கை கொடுப்பதற்கு!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger kmr.krishnan said...
/5)(60ம் கல்யாணம் போன்ற) அனாவசிய செலவுகளை குறைத்துக் கொண்டால் சேமிப்பு "தானே" சேரும் தானே//
விழாக்கள் தேவையில்லை என்று கூறமுடியாது. அதுவும் மேற்கத்திய நாகரிகம் விரைவாகப் பரவி வரும் சூழலில், நட்பு என்பதே முகம் தெரியாத வலையுலக நட்பு என்று ஆகிவிட்ட சூழலில் (குடும்ப) உறவுகள் மேம்பட
விழாக்கள் வேண்டும் என்ப‌தே என் விருப்பம். வேண்டுமானால் இந்த நிகழ்ச்சிகளைக் கடன் வாங்கிச் செய்யக் கூடாது என்று உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!றிவுறுத்தலாம்.
விழாக்கள் மூலம் பல தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கிறது./////

விழாக்களில்தான் உறவினர்களும், நண்பர்களும் ஒன்று கூடி மகிழ வாய்ப்புக் கிடைக்கும்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger kmr.krishnan said...
/உதவுவதற்கு ஆட்கள் இருப்பதால் தான் சேமிக்க நினைப்பவர்கள் குறைந்து இருக்கிறார்கள்..//
இருக்கலாம்.
எப்படி உதவி பெறவேண்டும் எண்ணம் சிலரிடம் உள்ளதோ, அதேபோல உதவி செய்ய வேண்டும் என்ற மனோபாவம் உள்ளவர்களும் இருக்கிறார்கள்.
"கொள்வார் இலாமையால் கொடுப்பாரும் இல்லை மாதோ" என்ற நிலை வந்தால் நீங்கள் சொலவது சாத்தியமாகலாம்.
இலண்டன் மாநகரில் வீதியில் கிடாரையும் சைலபோனையும் வாசித்து துண்டை விரித்து பிச்சை எடுக்கும் இளைஞர்கள் உள்ளார்கள். அவர்களுக்கு உணவளித்துவிட்டு அப்புறம் வேலைக்குபோ என்று சொல்வதே முறை.சும்மா அட்வைஸ் உதவும் என்று நான் நினைக்கவில்லை/////.

தர்ம சிந்தனை உள்ளவர்களையும் இறைவன் படைத்துள்ளார்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger ஜி ஆலாசியம் said...
நான் கேள்விப் பட்டவரை நகரத்தார் வீட்டு விசேசங்களில் உறவுக்காரர்கள் வருகைப்பதிவாக கால் ரூபாயை மாத்திரமே மொய் பணமாக எழுதுவார்கள் என்று... அதற்கு மேல் வாங்குவதும் வழக்கமில்லை என்று அதைப் பற்றிய விவரங்களை வாத்தியார் ஐயா விளக்க வேண்டும்.
நன்றிகள் ஐயா!///////

நீங்கள் சொல்வது உண்மைதான். 100 ஆண்டுகளுக்கும் மேலாக நாலணாதான் (0.25 பைசா) மொய்ப்பணமாக இருந்தது. சில்லறைத்தட்டுப்பாடு நிலவுவதால், ஒற்றுமையாக அனைவரும் அதை, ஒரு ரூபாய் என்று மாற்றி விட்டார்கள். மொய்ப்பண ஏடு என்பது வருகைப் பதிவு ஏடு. நீதி மன்றத்திலும் அது செல்லும். ஒரு வழக்கில், அது சாட்சியாக வெளிப்பட்டு, சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கு வெற்றியை வாங்கிக் கொடுத்திருக்கிறது.

SP.VR. SUBBAIYA said...

////Blogger praveen'z blog said...
Anbulla Vathiyar avargale. Vanakkam.
Popcorn post endru solli padangalai ipothalem suriki vitirgal. Anal Nalla karuthukalai virivaaga eluthugirirgal. Athapol padangalayum virivaga sonnal innum niraivudan irukum aiyaa:)////

அன்புள்ள மாணவக் கண்மணிக்கு. கடந்த ஐந்தரை ஆண்டுகளாக சுமார் 574 பாடங்களை எழுதியுள்ளேன். அவற்றுள் 500ற்கும் மேற்பட்ட பாடங்கள் விரிவான பாடங்களே! இப்போதும் விரிவான பாடங்களை எழுதிக்கொண்டிருக்கிறேன். இங்கே எழுதினால் உடனே திருட்டுப்போகிறது. ஆகவே மேல் நிலை வகுப்பில் (தனி இணைய தளத்தில்) அவற்றை எழுதிக்கொண்டிருக்கிறேன். அந்தப் பாடங்கள் எல்லாம் பின்னால் புத்தகமாக வரவுள்ளது. அப்போது அனைவரும் அவற்றைப் படிக்கலாம். பொறுத்திருங்கள்

Ashok said...

Dear Sir,
Just returned from Kumbakonam after visiting all the deities mentioned in the Nice little positive story. Thanks for That.
Regards
Ashok

s.sitaraman said...

Dear Sir
So many persons In karaikudi area .The great great person vallal dedicated for education - VALLAL ALAGAPPA CHETTIAR.I camr a small hamlet in chingle put district near Maduranthakam got education from his college in the year 1982-85

Ramki said...

மிகவும் நல்ல கதை, கண்னில் தண்ணிர் வந்து விட்டது. மிகவும் நன்றி

SP.VR. SUBBAIYA said...

////Blogger Ashok said...
Dear Sir,
Just returned from Kumbakonam after visiting all the deities mentioned in the Nice little positive story. Thanks for That.
Regards
Ashok////

உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

////Blogger s.sitaraman said...
Dear Sir
So many persons In karaikudi area .The great great person vallal dedicated for education - VALLAL ALAGAPPA CHETTIAR.I camr a small hamlet in chingle put district near Maduranthakam got education from his college in the year 1982-85////

உண்மைதான் தன் சொத்துக்கள் அனைத்தையுமே கல்விக் கொடையாகக் கொடுத்துவிட்டுப்போன வித்தியாசமான செல்வந்தர் அவர்!
அவர் பெயர் என்று இருக்கும்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Ramki said...
மிகவும் நல்ல கதை, கண்ணில் தண்ணிர் வந்து விட்டது. மிகவும் நன்றி////

இதுபொன்ற பாராட்டுக்கள் எழுதுபவர்களுக்கு ஊக்க மருந்தாகும். (Tonic) திரும்பத் திரும்ப அவர்கள் எழுதுவதற்குக் காரணம் உங்களைப் போன்ற மேன்மையான வாசகர்கள்தான். நன்றி நண்பரே!