மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

27.2.11

பாரதியை எடைபோட முதலில் நமக்கு என்ன வேண்டும்?


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பாரதியை எடைபோட முதலில் நமக்கு என்ன வேண்டும்?

இன்றைய வாரமலரை தஞ்சைப் பெரியவரின் ஆக்கம் ஒன்று அலங்கரிக்கின்றது. படித்து மகிழுங்கள்

அன்புடன்,
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++           
    மகாகவி பாரதியும் ஷெல்லியும் என்றொரு கட்டுரையை நண்பர் சிங்கப்பூர் ஆலாசியம் எழுதியிருந்தார். பாரதியிடம் பன்னாட்டுக் கவிஞர்களின் தாக்கம் இருந்தது என்பது நாடறிந்த உண்மை. அவன் இயற்கையிலேயே கவிஞனாகப் பிறந்த காரணத்தால் அவன் காலத்துக்கு முற்பட்டு எழுதிச் சென்ற பல மாக்கவிஞர்களின் கருத்துக்களும், அவற்றைப் படிக்காமலேயே அவன் கவிதைகளில் சிந்திக்கிடப்பதைக் காணமுடியும். அவன் படித்து
உள்வாங்கிக் கொண்ட பல அயல்நாட்டுக் கவிஞர்கள், வேத உபநிஷத் கருத்துக்கள் இவைகளெல்லாம் கூட பல சந்தர்ப்பங்களில் அவன் கவிதைகளில் இழையோடியிருப்பதை ஆழ்ந்து படிப்பவர்கள் உணர்ந்து கொள்ள முடியும். நுனிப்புல் மேய்ந்து படிக்கவேண்டிய கவிஞன் அல்ல பாரதி. வானத்துச் சூரியன்போல் உலகத்து ஜீவராசிகள் அனைத்துக்காகவும் ஒளிர்விட்டுப் பிரகாசித்தவன் பாரதி. அவனை எடைபோடக்கூட ஒரு தகுதி வேண்டும்  என்பது என் கருத்து.

    பிரெஞ்சு மொழியில் எழுதிப் புகழ்பெற்ற கவிஞன் பெல்ஜியம் நாட்டுக் கவிஞன் வெர்ஹேரன் என்பவர். இவரை பெல்ஜியத்தின் கவிச்சக்கரவர்த்தி என்று புகழ்கிறார் பாரதி. இவரது காலம் 1855 முதல் 1916 வரை. இலக்கியம் பத்திரிகை இவற்றை வாழ்க்கைக்கு ஆதாரமாக ஏற்றுக் கொண்ட வெர்ஹேரன் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தோன்றிய கவிதை மறுமலர்ச்சி இயக்கத்தில் பங்கு கொண்டார். அந்தக் காலத்தில் இயற்கையோடு தொடர்புடைய கவிதைகளைக் குறிப்பாக ஓவியக் கலையோடு தொடர்புடைய கவிதைகள் போன்ற வற்றை இவர் எழுதி புகழ்பெற்றார்.

    முதல் உலகப் போரில் பெல்ஜியம் நாட்டை ஜெர்மனி ஆக்கிரமித்துக் கொண்டது. பெல்ஜியத்தின் வீழ்ச்சி கண்டு கவிஞர் வெர்ஹேரன் வருந்தினார். 1916இல் அது குறித்து அவர் ஒரு கவிதையை இயற்றினார். அதன்
தமிழ் மொழி பெயர்ப்பை அறிஞர் பெ.சு.மணி அவர்கள் தன்னுடைய நூலில் கொடுத்திருக்கிறார். மொழிபெயர்ப்பு: பேராசிரியர் முனைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி. அது இதோ:

     "உச்சகட்ட போர் மூண்ட நாள் முதலாய், ஐயகோ!
    உனக்கு உறுதுணையாக நின்றவை
    அச்சமும் அதிர்ஷ்ட மின்மையுமே
    உன் தேசத்தில் இன்று எஞ்சி நிற்பவை
    மணற்குன்றுகளும், தூரத்தில்
    எரிந்து சாம்பலாகும் சமவெளிகளுமே.

    உன்னிடமிருந்து பறிக்கப்பட்ட
    ஆண்ட்வெர்ப் கெணட் லியோன் புருசெல்ஸ் எல்லாம்
    வெகுதூரத்தில் வேதனைக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றன
    சூழும் கடலோடு சோகத்தில் உறைந்த நீ - அதனிடமிருந்து
    புயலை எதிர்கொள்ள போதனை பெறுகின்றாய்
    நினைத்து நினைத்து நீ அழுதாலும் திகிலாலும் தோல்வியிலும் நீ
    தலை நிமிர்ந்து நிற்கின்றாய்!

    வீழ்ந்த போதும் நீ பெரிதும் உயர்ந்தவன்
    என்பதை நீயே உணர்வாய்
    நாற்புறங்களிலும் நீ ஒளிபரப்பி
    உயர்கீர்த்தி பெற்ற காலம் போல்
    இன்றும் நீ காட்டும் தெளிவு, ஆர்வம்
    உறுதி எள்ளளவும் குறையவில்லை.

    உன் மண்ணில் ஒரு மன்னன் மனம் தளராமல்
    ஆயுதம் ஏந்தி புயலை எதிர்கொள்ளும் இந்த வேளையில்
    அவனுக்கு நீ
    படையும் பீரங்கியும் தந்து, சோகத்திலும்
    இறுதிவரை செல்ல உறுதுணையாய் நிற்கின்றாய்!
    புகழிலும், அழகிலும் ஆழ்ந்த துயரிலும் நீ
    உயர்ந்து நிற்பதால் தனித்து நிற்கின்றாய், அதனால்
    உன் மக்களைப் போல் உலகில் வேறெங்கும் கண்டதில்லை
    உள்ளுக்குள் வியக்கின்றார்! வியந்து பாராட்டுகின்றார்!!
    இந்த அன்புக்கு முன் உன் விதியைப் பற்றிய
    எண்ணம் பாலைவனமானால் என்ன? அழிந்து போனால் என்ன?
    அந்திப் பொழுதில் ஒலிக்கும் சாவு மணி ஓர் இருண்ட
    இதயம் போல்
    வெறுமையாக, ஆழமாக ஒலித்துவிட்டுப் போகட்டுமே!

    தீக்கு இறையான இத் தாய்நாட்டை நாங்கள்
    மண்டியிட்டு வணங்கும்போது
    அடித்து நொறுக்கப்பட்டு ஆட்டம் கண்டிருக்கும்
    சுவர்களில் உடைந்து உருக்குலைந்திருக்கும்
    ஒவ்வொரு கல்லையும் உணர்ச்சிப் பெருக்கால் முத்தமிட்டு
    மகிழ்வோம்!

    நாளையே நயவஞ்சகமும் வெறித்தனமும்
    கொண்ட ஜெர்மானியர் வந்து
    உன் குரல் வளையை நெரித்துக் கடித்துக்
    குதறிவிட்டாலும், எங்கள்
    அன்பின் வடிவான பெல்ஜியமே! உன்
    நம்பிக்கையைத் தளரவிடாதே. சாகடிக்கப்படும்
    உன் தேசம், எங்களுக்குள் சாகாவரம் பெற்றிருக்கும்."


    இதே காலகட்டத்தில் இதே காட்சியை, அதாவது ஜெர்மானியர் பெல்ஜியத்தைப் போரில் விழுங்கிய செய்தி கேட்டு பாரதியார் மனதில் தோன்றிய கருத்தையும் தெரிந்து கொள்ளவேண்டும். இதில் குறிப்பிட வேண்டிய முக்கியமான செய்தியொன்று உண்டு. பாரதியைக் குறைத்து மதிப்பிடும் பெருமக்களுக்காகச் சொல்லுகிறேன். முதல் உலகப் போரில் நடந்த இந்த நிகழ்ச்சி குறித்து வெர்ஹேரன் எழுதிய அந்தக் கவிதை எழுதப் படுவதற்கு முன்னதாகவே பாரதி ஒரு பாட்டை எழுதிவிட்டார். வெர்ஹேரன் கவிதை 1916இல் வெளிவந்தது. அதற்கு ஓராண்டுக்கு முன்பே பாரதியின் கவிதை 1915இல் வெளிவந்துவிட்டது. (பாருங்கள்: அறிஞர் பெ.சு.மணி எழுதிய நூல்: "பாரதியார் பார்வையில் வெர்ஹேரன், விட்மன், நீட்சே", பக்கம் 48, 49.) பாரதியார் எழுதிய அந்தக் கவிதையின்  தலைப்பு "பெல்ஜியம் நாட்டிற்கு வாழ்த்து". இது எழுதப்பெற்ற காலத்தைக் குறித்து பாரதியே அக்கவிதையின் முடிவில் இவ்வாறு எழுதுகிறார். "புதுச்சேரி, 3-2-1915 ஸி.சுப்பிரமணிய பாரதி" என்று. இப்போது பாரதியாரின் பாடலையும் தருகிறேன். இரண்டையும் சற்று ஒப்பிட்டுப் பாருங்கள்.

    பெல்ஜியம் நாட்டிற்கு வாழ்த்து

     "அறத்தினால் வீழ்ந்துவிட்டாய்
    அன்னியன் வலியனாகி
    மறத்தினால் வந்து செய்த
    வன்மையைப் பொறுத்தல் செய்யாய்
    முறத்தினால் புலியைக் காக்கு
    மொய்வரைக் குறப்பெண் போல
    திறத்தினால் எளியையாகிச்
    செய்கையால் உயர்ந்து நின்றாய்.

    வண்மையால் வீழ்ந்து விட்டாய்
    வாரிபோற் பகைவன் சேனை
    திண்மையோடு அடர்க்கும் போதில்
    சிந்தனை மெலிதலின்றி
    ஒண்மைசேர் புகழே மேலென்று
    உளத்திலே உறுதி கொண்டாய்
    உண்மைதேர் கோல நாட்டார்
    உரிமையைக் காத்து நின்றாய்.

    மானத்தால் வீழ்ந்து விட்டாய்
    மதிப்பிலாப் பகைவர் வேந்தன்
    வானத்தாற் பெருமை கொண்ட
    வலிமைதான் உடைய னேனும்
    ஊனத்தால் உள்ள மஞ்சி
    ஒதுங்கிட மனம் ஒவ்வாமல்
    ஆனத்தைச் செய்வோம் என்றே
    அவன் வழி எதிர்த்து நின்றாய்.

    வீரத்தால் வீழ்ந்து விட்டாய்
    மேல்வரை உருளும் காலை
    ஓரத்தே ஒதுங்கித் தன்னை
    ஒளித்திட மனம் ஒவ்வாமல்
    பாரத்தை எளிதாக் கொண்டாய்
    பாம்பினைப் புழுவே என்றாய்
    நேரத்தே பகைவன் தன்னை
    நில்லென முனைந்து நின்றாய்.

    துணிவினால் வீழ்ந்து விட்டாய்
    தொகையிலாப் படைகளோடும்
    பிணிவளர் செருக்கி னோடும்
    பெரும்பகை எதிர்த்த போது
    பணிவது கருத மாட்டாய்
    பதுங்குதல் பயனென் றெண்ணாய்
    தணிவதை நினைக்க மாட்டாய்
    'நில்'லெனத் தடுத்தல் செய்தாய்.

    வெருளதல் அறிவென் றெண்ணாய்
    விபத்தையோர் பொருட்டாக் கொள்ளாய்
    சுருளலை வெள்ளம் போலத்
    தொகையிலாப் படைகள் கொண்டே
    மருளுறு பகைவர் வேந்தன்
    வலிமையால் புகுந்த வேளை
    'உருளுக தலைகள், மானம்
    ஓங்குக' என்றெதிர்த்து நின்றாய்.

    யாருக்கே பகை யென்றாலும்
    யார்மிசை இவன் சென்றாலும்
    ஊருக்குள் எல்லை தாண்டி
    உத்தரவு எண்ணிடாமல்
    போருக்குக் கோலம் பூண்டு
    புகுந்தவன் செருக்குக் காட்டை
    வேருக்கும் இடமில்லாமல்
    வெட்டுவேன் என்று நின்றாய்.

    வேள்வியில் வீழ்வதெல்லாம்
    வீரமும் புகழும் மிக்கு
    மீள்வது உண்டு உலகிற்கு என்றே
    வேதங்கள் விதிக்கும் என்பர்;
    ஆள்வினை செய்யும் போதில்
    அறத்திலே இளைத்து வீழ்ந்தார்
    கேள்வியுண் டுடனே மீளக்
    கிளர்ச்சி கொண்டு உயிர்த்து வாழ்தல்.

    விளக்கொளி மழுங்கிப் போக
    வெயிலொளி தோன்றும் மட்டும்
    களக்கமார் இருளின் மூழ்கும்
    கனக மாளிகையும் உண்டாம்
    அளக்கரும் தீதுற்றாலும்
    அச்சமே உளத்துக் கொள்ளார்
    துளக்கற ஓங்கி நிற்பர்;
    துயருண்டோ துளிவுள் ளோர்க்கே?

    இவ்விரு பாடல்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள். கருத்துக்கள் எப்படி ஒத்துப் போகின்றன என்று.  நிறைவில் பாரதி பெல்ஜியம் நாட்டைப் பார்த்து "வீழ்ந்த போதும் நீ பெரிதும் உயர்ந்தவன் என்பதை நீயே உணர்வாய்" எனும் கருத்தை எண்ணிப் பாருங்கள். பாரத நாட்டுப் புதல்வன் பாரதி, வேதத்தையும் வேதத்தின் சாரத்தையும் நம்பியவன். அதனால் சொல்கிறான், "வேள்வியில் வீழ்வதெல்லாம் வீரமும் புகழும் மிக்கு மீள்வது  போன்று, பெல்ஜியம் மீண்டும் துளக்கற ஓங்கி நிற்கும்" என்று நம்புகிறான். அவன் நம்பிக்கை வீண் போகவில்லை. ஜெர்மனி வீழ்ந்தது. பெல்ஜியம் மீண்டும் புத்துயிர் பெற்றது. பாரதியின் வாக்கு, அல்ல அல்ல, வேதசாரத்தின்  கருத்து  நிலை பெற்றது.
   
    மீண்டும் ஒருமுறை வலியுறுத்திச் சொல்கிறேன்: பாரதியை எடை போடக்கூட ஒரு தகுதி வேண்டும்!  இது என் கருத்து.

    ஆக்கம்: வி.கோபாலன், தஞ்சாவூர்
  


திருவாளர் வி.கோபாலன் அவர்களின் எழில்மிகு தோற்றம்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

7 comments:

Alasiam G said...

இடமும் காலமும் வேறுபட்டாலும் சிந்தனையால் ஒன்று பட்டார்கள் இரு மகாகவிகளும்...
இருந்தும் யாவரினும் சற்று உயர்ந்தே நிற்கிறான் நம் பாரதி அதனால் அவன் "உலக மஹாகவி" என்னும் சிறப்புத் தகுதியும் பெறுகிறான்... அது அவனின் கவிதைகளில் சிந்தனைகளில் வேதத்தின் சாரம் வேரூன்றி இருப்பதன் அர்த்தம் என்பதை அவனைக் கற்று காமுற்றோரே கண்டுணர்வர் என்பது உண்மையே....
//// மீண்டும் ஒருமுறை வலியுறுத்திச் சொல்கிறேன்: பாரதியை எடை போடக்கூட ஒரு தகுதி வேண்டும்! இது என் கருத்து.////
இதை நானும் வழி மொழிகிறேன்....
ஆக்கம் அருமை நன்றிகள் ஐயா!

dorairaj said...

பாரதியார் தீர்க்கதரிசனம் வியக்க வைக்கிறது

kannan said...

ஐயா வணக்கம்.

தஞ்சை பெரியவர் என்று கூறுவதை காட்டிலும்

" தஞ்சாவூர் பாரதி தாசன் ", என்று கூறுவது தான் சால சிறந்தது .

தஞ்சாவூர் பாரதி தாசனின் படைப்புகள் ஒவ்வொன்றும் முத்து மணிகளின் மலையாக ஜொலிக்கின்றன என்பது தான் உண்மை.

Thanjavooraan said...

பாரதி கவிஞர்‍‍‍‍ வெர்ஹேரன் ஒப்பீட்டுக் கட்டுரையை வெளியிட்ட ஆசிரியர் ஐயா அவர்களுக்கும், பாராட்டி பின்னூட்டமிட்டுள்ள என் அன்புச் சகோதரர்கள் சிங்கப்பூர் ஆலாசியம், கண்ணன் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றி. பாரதியை நான் பொழுதுபோக்காகக் கருதவில்லை, உயிர்மூச்சாக நினைக்கிறேன். வெளிநாட்டு மண்ணில் வாழ்ந்த போதும், உங்கள் வேர் பாய்ந்த இந்த தமிழ்நாட்டு மண்ணையும், அதன் மாண்பமை புதல்வர்களையும் போற்றும் உங்கள் பண்பினை வணங்குகின்றேன்.

Shanti said...

பாரதியின் தீர்கதரிசனமும் , அப்பா அதை உலகிற்கு எடுத்து காட்டியவிதமும் மிக அருமை.,பாரதியை எடை போட தகுதி வேண்டும் என்பது சத்தியமான உண்மை.

Uma said...

உங்கள் ஆக்கம் அருமை.

பாரதியின் பாடல்களில் சில எளிய பாடல்களைத்தான் இதுவரை படித்திருக்கிறேன். நிறைய பாடல்கள் எனக்கு விளங்கிக்கொள்ள கடினமாகவே இருக்கிறது. எனது தமிழ் அறிவு அவ்வளவுதான். உங்களின் ஆக்கங்கள் மூலம் நன்கு விளங்கிக்கொள்ள முயற்சிக்கிறேன்.

kmr.krishnan said...

From browsing centre
---------------------
பாரதியைப் புரிந்து கொள்வது அவ்வளவு சுலபமல்ல.சென்ற புதன் அன்று தஞ்சைப் பெரியவரை அவர் இல்லத்தில் சந்தித்தேன். அப்போது அவருடய கணினியில் இப்பதிவை வாசிக்கத் தந்தார். என்னுடைய நீண்ட நாள் சந்தேகமான‌
"மொய்வரைக் குறப்பெண்" என்பதற்குப்பொருள் கேட்டேன்.பெரியவருக்கும் சந்தேகம் வந்து தமிழ் அகராதியை எடுத்து "மொய்வரை" என்றால் 'திண்தோள்'
என்று சந்தேகம் தீர்த்தார்.'அதாவது திண்மையான தோளுடைய, வலிமையான
உடல அமைப்புக்கொண்ட குறப்பெண்' என்று பொருள் என்றார். "முறட்டுக் குறத்தியா?"என்றேன். மனமகிழ்ந்து வாய்விட்டுச் சிரித்தார்.75 வயதான, தமிழில் நல்ல பரிச்சயமுள்ள பெரியவரையே மஹாகவி அகராதியைத் தூக்க வைக்கிறார்.
அந்த பாரதிக்கு 'தமிழ்க் கவிஞன் இல்லை' என்று பட்டமளிக்கும் விசு அய்யர்
போன்றவர்களை தமிழ் அன்னை மன்னிக்க மாட்டாள்.