மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

3.4.17

காதலின் உண்மை வடிவத்தைப் பற்றி கவியரசர் கண்ணதாசன் சொன்னது!


காதலின் உண்மை வடிவத்தைப் பற்றி கவியரசர் கண்ணதாசன் சொன்னது!

கண்ணதாசன் அவர்கள் சொன்னது:

எனக்கு வரும் கடிதங்களில் காதல் தோல்வி பற்றிய கடிதங்கள் அதிகம்.

காதலைப் பற்றிக் காந்தியடிகளும் கூடச் சொல்லி இருக்கிறார்.

`அது தேவையானது; தவிர்க்க முடியாதது; ஆனால் அது வேறொரு பிறப்புக்கான காரியம்தான்’ என்று கூறி இருக்கிறார்.

அந்நாளிலெல்லாம் பெண் பருவம் அடைவதே, பதினெட்டு வயதுக்கு மேல்தான்.

ஆணுக்கும், பெண்ணுக்கும் காதல் என்பது உள்ளுக்குள்ளேயே தோன்றி, உள்ளுக்குள்ளேயே அடங்கிவிடும் ஒன்றாக இருந்தது.

நாகரிக உலகில் அது கடிதங்களாக விளையாடுகிறது.

பருவத்தின் உணர்ச்சி `இவள் இல்லாவிட்டால் உலகமே இல்லை’ என்று முடிவு கட்டிவிடுகிறது. அதற்காகவே மருகுகிறது; உருகுகிறது. அது நிறைவேறாமல் போனால் துன்பம் பெருகுகிறது.

உஷாவைச் சிறை எடுத்த அநிருத்தன் போலவும், சுபத்திரையை மணந்த அர்ஜுனன் போலவும், எந்தத் தடைகளையும் வென்று ஒரு பெண்ணை மணம் முடித்துக் கொள்ள முடியுமானால், நீ துணிந்து அவளைக் காதலிக்கலாம். இல்லையேல், `இவளைத்தான் மணக்கப்போகிறோம்’ என்று தெரிந்து சீதையைக் காதலித்த ராமனைப் போல், உன் காதலும் இருக்க வேண்டும்.

எனக்கும் வாழ்க்கையில் ஒரு தோல்வி உண்டு.

தங்கம் ஏற்றி வந்த நான்கு கப்பல் கவிழ்ந்து போனால் கூட அவ்வளவு துயரம் இருக்காது.

முதல் காதலின் தோல்வியில் அவ்வளவு துயரம். ஆனால், அந்தக் காதலே ஒரு மடத்தனம் என்பது இப்போதுதான் எனக்குப் புரிகிறது.

முதலில்- என்னைவிட அந்தப் பெண்ணுக்கு ஒரு வயது அதிகம். இரண்டாவது, எனக்கு முன்னால் திருமணம் செய்ய வேண்டிய ஒரு சகோதரரும், ஒரு சகோதரியும் இருந்தார்கள். எங்களிடம் வசதி இல்லை.

இந்தக் காதல் எப்படிக் கைகூடும்?

அவளும் என்னை விரும்பினாள். நானும் அவளை விரும்பினேன் என்பதைத் தவிர, மணம் முடிக்கும் வாய்ப்பே இல்லாத ஒரு காதல் என்ன ஆகும்?

குளிக்கிறேன் என்று கல்லிலே விழுந்து விட்டுத் தண்ணீர் இல்லையே என்றால், கல்லிலே தண்ணீர் எங்கிருக்கும்?

குளிப்பதற்காக விழுவதென்றால், குளத்தில் விழ வேண்டும்.

காதலிக்கிறேன் என்றால், கல்யாணத்திற்கு வாய்ப்பு உண்டா என்று பார்த்துத்தான் காதலிக்க வேண்டும்.

குருடன், கையிலுள்ள கோலைத் தரையிலே தட்டிப் பார்க்கிறான்; அது தரையில் படாமல் போனால், பள்ளம் என்று தெரிந்து கொள்கிறான். பிறகு தரையிருக்கும் பக்கம் தட்டிப் பார்த்துத் திரும்பி நடக்கிறான்.

`காதலுக்கு கண் இல்லை’ என்பது உண்மைதான். ஆனால் அந்தக் குருடனுக்கு இருக்கும் விவஸ்தை கூடவா இல்லாமல் போயிற்று?

சூர்ப்பனகை ராமனை விரும்பியதற்குப் பெயரும் காதல்தான்; இராவணன் சீதையை விரும்பியதற்குப் பெயரும் காதல்தான்; கோவலன் மாதவியை நாடியதற்குப் பெயரும் காதல்தான்; சீதா-ராம, ராதா-கிருஷ்ண காதலர்களும் காதலர்கள்தான்.

இவற்றில் உன் காதல் எந்த ரகம்?

எந்த ரகமும் இல்லை. கண் போன போக்கிலே மனம் போய்விட்டது. அவ்வளவுதான்!

ஜெயித்து வந்த குதிரை என் குதிரை என்று நினைப்பது போல், கல்யாணம் செய்து காதலிப்பதைப் போன்ற வம்பில்லாத வேலை வேறெதுவும் இல்லை.

இல்லையென்றால், இது நிறைவேறும் என்று நன்றாகத் தெரிந்து கொண்டு, காதலைத் தொடங்கினால் தோல்வி இல்லை.

இன்னொன்றும் துணிந்து சொல்வேன்.

ஐம்பத்தாறு தேசத்து ராஜாக்களும் தமயந்தியை விரும்பினார்கள். அவள் கையிலே ஐம்பத்தாறு மாலைகள் இல்லை. நளனை எதிர்பார்த்தாள்; வந்தான்; மாலையிட்டாள்.

பிருதிவிராஜன்-சம்யுக்தை கதையும் இதுதான்.

அம்பிகாபதியும், அமராவதியும் கொலைக் களத்திற்கே தயாரானார்கள்.

ரோமியோவும், ஜுலியட்டும் மரணத்திற்கே துணிந்தார்கள்.

இந்தத் துணிச்சல் எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டாய்; நீ யாரைக் காதலிக்கிறாயோ அவள் உன் வீடு தேடி வந்து விட வேண்டும்;
இல்லையா? நீயாக நினைப்பது, நீயாக ஏங்குவது, பிறகு நீயாக அழுவது! என்ன கூத்து இது?

ஆகவே, திட்டம் தெரிந்து காதலி ; தோல்வி இல்லை.

அப்படியும் தோல்வி வந்தால், கல்யாணம் செய்து காதலி ; தோல்வி வராது.

வெறும் கற்பனா வாசகங்களையும், காவியங்களையும் படித்துவிட்டு உடம்பை அலட்டிக் கொள்வதில் என்ன லாபம்?

ஒரு ஆணுக்கு ஒரு நல்ல பெண் துணை வேண்டும். அதை நீயாகப் பார்ப்பதை விடத் தாய்-தந்தையர் பார்த்தாலென்ன?

ராமன்-சீதை திருமணத்தை வசிஷ்டரும், ஜனகரும் தான் பேசி முடித்தார்களே தவிர, அவர்களே பேசி முடிக்கவில்லை.

ஆகவே, காதல் தோல்வி என்பது மறக்கக்கூடிய துன்பம்தான் என்பது என்னுடைய கருத்து, சொல்லப்போனால் அதைத் துன்பக் கணக்கிலேயே நான் சேர்த்ததில்லை.

வேறு பெண்ணே இல்லாத உலகத்தில்தானே, நீ ஒருத்திக்காக ஏங்க வேண்டும்?

மதுரையில் இருந்து திருப்பதிக்குப் போக முடியவில்லையென்றால், அழகர் கோயிலுக்குப் போ. அதை விடுத்துத் திருப்பதியை நினைத்து அழுதால் திருமால் என்ன இறங்கி வரப் போகிறாரா?

காதல் புனிதமானது! வீணாக அதை நீ களங்கப்படுத்தாதே; பேசாமல் கல்யாணம் செய்து கொள்.
----------------------------------------------------------------------------
படித்ததில் என்னைக் கவர்ந்து: உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!!!
அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15 comments:

  1. Respected sir,

    Pleasant morning... Its fact.

    Thanks for sharing...

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  2. வாழ்க்கையின் யதார்த்தம் இதுதான்!

    ReplyDelete
  3. Ayya Vanankam,

    Nalla vadiavam... Nandri,

    Anbudan,
    S.Kumanan.

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா
    மிகவும் சிறந்த தேவையான தகவல்
    நன்றி
    முர்த்தி

    ReplyDelete
  5. எல்லோருக்கும் இந்த உண்மை புரிந்தால், கூட இருக்கும் நண்பர்கள் தப்பித்துக் கொள்ள முடியும்.

    ReplyDelete
  6. /////Blogger kmr.krishnan said...
    I also like this,Sir/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!

    ReplyDelete
  7. ////Blogger mohan said...
    Arumai Iyya./////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  8. ////Blogger ravichandran said...
    Respected sir,
    Pleasant morning... Its fact.
    Thanks for sharing...
    Thanks & Regards,
    Ravi-avn////

    நல்லது. நன்றி ரவிச்சந்திரன்!!!!

    ReplyDelete
  9. ////Blogger Imayavaramban said...
    வாழ்க்கையின் யதார்த்தம் இதுதான்!////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!

    ReplyDelete
  10. ///Blogger Kumanan Samidurai said...
    Ayya Vanankam,
    Nalla vadivam... Nandri,
    Anbudan,
    S.Kumanan./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  11. /////Blogger moorthy krishnan said...
    வணக்கம் ஐயா
    மிகவும் சிறந்த தேவையான தகவல்
    நன்றி
    முர்த்தி/////

    நல்லது. நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  12. /////Blogger selvaspk said...
    எல்லோருக்கும் இந்த உண்மை புரிந்தால், கூட இருக்கும் நண்பர்கள் தப்பித்துக் கொள்ள முடியும்./////

    உண்மை! புரிந்து கொண்டவர்கள் தப்பித்துக் கொள்ளலாம். நன்றி செல்வா!!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com